Friday, September 28, 2012

தாண்டவம் - என் பார்வையில்



எல்.விஜய் இயக்கத்தில், ஜி.வி.பிரகாஷ்குமார் இசையில், நீரவ்ஷா கேமராவில் சீயான் விக்ரம், அனுஷ்கா, எமி ஜாக்சன், சந்தானம், நாசர், ஜெகபதிபாபு, லக்ஷ்மிராய் போன்றோர் முக்கிய பாத்திரங்களிலும்; சரண்யா, எம்.எஸ்.பாஸ்கர், தம்பி ராமையா, டெல்லி கணேஷ் போன்றோர் குறிப்பிடத்தக்க வேடங்களிலும் நடித்து UTV Motion Picture தயாரிப்பில் வெளிவந்திருக்கும் திரைப்படம் தாண்டவம்!!

கதை - போலிஸ், கிரைம், கால்யாணம், காதல், நட்பு, குடும்பம், கிராமம், டெல்லி, லண்டன், குண்டுவெடிப்பு, தீவிரவாதம், இழப்பு என கதை சொல்லப்பட்டிருக்கின்றது!! புதுமையான கதை இல்லை என்றாலும் அதை புதுமையாக சொல்ல முயற்சித்திருக்கிறார் இயக்குனர், அதில் வெற்றியும் கண்டுள்ளார்!!

திரைக்கதை - முதல்பாதியில் வரும் பிளாஷ்பாக் கதையை அங்கேயே இடைநிறுத்தி, இரண்டாம் பாதியில் மீண்டும் இடையில் கொண்டுவந்திருப்பது திரைப்படத்தை தொய்வின்றியும் சலிக்காமலும் கொடுக்க உதவியிருக்கின்றது! வேகமான திரைக்கதை எல்லாம் இல்லை என்றாலும் வழமையான எல்.விஜயின் பாணியில் திரைக்கதை நேர்த்தியாக அமைக்கப்பட்டுள்ளது!!

வசனம் - குறிப்பிட்டு சொல்லும்படி பெரிதாக எழுதவில்லை எனினும், வசனம் எந்தவிதத்திலும் குறையாக தெரியவில்லை; கிராமத்து காட்சிகளில் வரும் வசனங்கள் ஜதார்த்தத்தை மீறி நகைச்சுவையாக அதிகம் இருந்தாலும் அவற்றுக்கு சபாஷ் போடலாம்!!


விக்ரம் - என்ன சொல்றது? 46 வயதிலும் இத்தனை கடின உழைப்பை ஒவ்வொரு படத்திற்கும் கொடுக்கணும் என நினைத்து அதை 100 சதவிகிதம் கடைப்பிடிக்கும் விக்ரமிற்கு சபாஷ்!! விக்ரம் படங்கள் அண்மைக்காலங்களில் சொதப்பினாலும் விக்ரமின் உழைப்பு ஒவ்வொரு திரைப்படத்திற்கும் சம அளவில் கடினமானதாக அமைந்திருக்கும்; தாண்டவமும் விதிவிலக்கல்ல!! உடல் எடையை ஏற்றுவதிலும், இறக்குவதிலும், உடலை தன் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதிலும் விக்ரமுக்கு நிகர் விக்ரம்தான்!! தில் திரைப்படத்தில் பார்த்து வியந்த அதே உடல் கட்டுப்பாடு!! முகத்தில் சற்று முதுமை தெரிந்தாலும் ஆக்ஷன் காட்சிகளிலும், விறுவிறுப்பிலும் விக்ரம் இன்னமும் இளைஞன்தான்!!

அனுஷ்கா - சற்று வயது அதிகமாக தோன்றினாலும் விக்ரமிற்கு மிகவும் கச்சிதமாக பொருந்தியிருக்கிறார்; இப்போதிருக்கும் நாயகிகளில் இயல்பான நடிப்பை வெளிப்படுத்தும் திறன் அதிகம் உடைய அனுஷ்கா தாண்டவத்திலும் அசத்தியிருக்கின்றார். எல்.விஜய் திரைப்படங்களுக்கு இயல்பான நாயகியாக அனுஷ்கா சிறப்பான தேர்வு!!

எமி.ஜாக்சன் - பெரிதாக கவரவில்லை; அழகிலும்!!

சந்தானம் - திரைப்படத்தை தொய்யவிடாமல் சந்தானம் அப்பப்போ திரைக்கதையில் உள்வாங்கப்பட்டிருந்தாலும் அவை கதையைவிட்டு தனியே இல்லாமல் திரைக்கதையின் தேவைக்காக அமைந்திருப்பது சிறப்பு!! ரஜினி என்ன செய்தாலும் ஸ்டைல் என்கின்ற ஒருநிலை உருவாகியதுபோல; சந்தானம் என்ன சொன்னாலும் அதை கவுண்டராக/காமடியாக எடுத்து ரசிகர்கள் விசிலடிக்கும் அளவிற்கு சந்தானத்தின் அசுரவளர்ச்சியை காணக்கூடியதாக உள்ளது!! ஒவ்வொரு கவுண்டருக்கும் கிளாப்ஸ்; கவுண்டர் கொடுப்பதுடன் இப்பெல்லாம் சந்தானம் எக்ஸ்ப்ரஷனிலும் வெளுத்து வாங்குகிறார், சின்ன சின்ன எக்ஸ்ப்ரஷனுக்குகூட செம ரெஸ்போன்ஸ், தாண்டவத்திலும்!!


நாசர் - இலங்கை தமிழ் பேசும் லண்டன் விசாரணைப் போலிஸ்; இதுவரை தமிழ் சினிமா கொடுத்த இலங்கை உச்சரிப்புக்களில் அதிகம் நெருக்கமாகவும் ஏற்றுக்கொள்ளக் கூடியளவிலும் உள்ள வசன உச்சரிப்பாக நாசரின் இந்த திரைப்பட உச்சரிப்பை கூறலாம்!! நாசர் கொடுத்ததை சிறப்பாக செய்யாவிட்டால்தான் ஆச்சரியம், இதிலும் சிறப்பாகவே தனது வெளிப்பாட்டை கொடுத்திருக்கின்றார்!!

லக்ஷ்மிராய் - நல்ல ஸ்கோப் உள்ள பாத்திரங்களை கொடுத்தால் சிறப்பாக வெளிப்படுத்தக்கூடியவர்; ஆனால் இவருக்கு சப்பை கேரக்டர்களே தொடர்ந்தும் கிடைக்கின்றமை அவரது துரதிஸ்டம்!!

சரண்யா, எம்.எஸ்.பாஸ்கர், தம்பி ராமையா, டெல்லி கணேஷ் - கிடைத்த சிறிது நேரத்தையும் தமது அனுபவத்தால் கலகலப்பாக்கி விடுகின்றார்கள்!!

எடிட்டிங் - காட்சிகளை சிறப்பாக கோர்த்திருக்கின்றார்; விறுவிறுப்பு குறையாமல் பார்த்துக்கொண்டமைக்கு ஆண்டனிக்கு சபாஸ் போடலாம்!!

ஒளிப்பதிவு -
நீரவ்ஷா கேமரா வழமைபோல சிறப்பு; லண்டன், டெல்லி, கிராமம் என மூன்று வித்தியாசமான பிரதேசங்களையும் அழகாக காட்சிப்படுத்திக் கொடுத்திருக்கிறார்; எமி ஜாக்சனை அழகாக காட்டுவதில் மட்டும் தோற்றுப் போய்விட்டாரோ என எண்ணத் தோன்றுகின்றது!!

இசை - ஜீ.வி.பிரகாஷ்குமார் பாடல்களில் ஸ்கோர் பண்ணியிருக்கின்றார்; அனிச்சம் பூவழகி, உயிரின் உயிரே, ஒருபாதி கதவு பாடல்களின் காட்சியமைப்புக்களும் பிரமாதம்!! பின்னணி இசையில் பெரிதாக சொல்லிக்கொள்ளும்படி சிறப்பாகவோ, மட்டமாகவோ தோணவில்லை!!


இயக்கம் - சென்னையில் இருந்து டெல்லிவரை எடுக்கக் கூடிய கதையை, டெல்லியில் இருந்து லண்டனுக்கு எடுத்திருக்கின்றார் இயக்குனர் எல்.விஜய்; திரைப்படத்தை அழகாகவும், ரிச்சாகவும் காட்டுவதற்கான புதிய வழிமுறை!! பெரிய ஹீரோக்கள் படமென்றால் இப்போதெல்லாம் இயக்குனர்கள் இதனையே அதிகம் செய்கின்றார்கள். ஸ்டுடியோவுக்குள் இருந்த கேமராவை கிராமங்களுக்கு கொண்டுவந்த பாரதிராஜாவின் புரட்சியை இன்றைய இயக்குனர்கள் வெளிநாடுகளுக்கு கொண்டுசெல்வது ஆரோக்கியமானதா? இல்லையா? என்று சொல்லமுடியவில்லை!! மற்றப்படி இயக்கத்தில் விஜய் வழமைபோல சிறப்பாக இயக்கியிருக்கின்றார்; பல திரைப்படங்களில் பார்த்த காட்சிகள்போல ஞாபகங்கள் ஆங்காங்கே வந்துபோனாலும் எடுத்த விடயத்தை ஆக்ஷன், காமடி, காதல், கிரைம் என மசாலாவாக சலிக்கவைக்காமல் கொடுத்திருக்கின்றார்!!

தாண்டவம் - தமிழ் சினிமாவின் மைல்கள் என்றோ, பக்கா கமர்சியல் விருந்தென்றோ சொல்லமுடியாது என்பது எத்தனை சதவிகிதம் உண்மையோ; அத்தனை சதவிகிதம் தாண்டவம் திரையரங்கில் சலிக்காமல் பார்க்கக்கூடிய பொழுதுபோக்கு திரைப்படம் என்பதும் உண்மை!! நிச்சயம் குடும்பத்தோடு சென்று பார்க்கலாம்!!!

குறிப்பு - இது விமர்சனமல்ல 'எனது பார்வையில்' தாண்டவம்! (குறிப்பாக பாலுமஹேந்திரா சார் அவர்களுக்கு)

*--------------*

5 வாசகர் எண்ணங்கள்:

r.v.saravanan said...

படம் பற்றிய பகிர்வுக்கு நன்றி
படம் நல்லாருக்கு என்பதால்
பார்த்து விடுகிறேன்

திண்டுக்கல் தனபாலன் said...

பார்க்க நினைத்த படம்...

நீங்களும் அதையே சொல்லி உள்ளீர்கள்...

நன்றி...

Anonymous said...

ஒரு தீவிர விக்ரம் ரசிகராவே இருந்தாலும் நேர்மையான விமர்சனம்..

Anonymous said...

//சந்தானம் - திரைப்படத்தை தொய்யவிடாமல் சந்தானம் அப்பப்போ திரைக்கதையில் உள்வாங்கப்பட்டிருந்தாலும் அவை கதையைவிட்டு தனியே இல்லாமல் திரைக்கதையின் தேவைக்காக அமைந்திருப்பது சிறப்பு!! ரஜினி என்ன செய்தாலும் ஸ்டைல் என்கின்ற ஒருநிலை உருவாகியதுபோல; சந்தானம் என்ன சொன்னாலும் அதை கவுண்டராக/காமடியாக எடுத்து ரசிகர்கள் விசிலடிக்கும் அளவிற்கு சந்தானத்தின் அசுரவளர்ச்சியை காணக்கூடியதாக உள்ளது!! ஒவ்வொரு கவுண்டருக்கும் கிளாப்ஸ்; கவுண்டர் கொடுப்பதுடன் இப்பெல்லாம் சந்தானம் எக்ஸ்ப்ரஷனிலும் வெளுத்து வாங்குகிறார், சின்ன சின்ன எக்ஸ்ப்ரஷனுக்குகூட செம ரெஸ்போன்ஸ், தாண்டவத்திலும்!! ///



நன்றி..நன்றி..நன்றி..நன்றி..நன்றி..நன்றி..நன்றி..நன்றி..நன்றி..நன்றி..நன்றி..நன்றி..நன்றி..நன்றி..நன்றியோ நன்றி...

Unknown said...

ஆக மொத்தத்துல தாண்டவம் ஒரு தடவைக்கு ஒர்த் இருக்கு:)

Post a Comment

"கருத்துக்கள், நிறைகுறைகள், திட்டுக்கள், பாராட்டுக்கள் போன்றவற்றை கூற விரும்புபவர்கள் கீழுள்ள பின்னூட்ட பெட்டியில் பின்னூட்டலாம்; பதிவுகளை வாசிக்காமல் இடப்படும் டெம்பிளேட் பின்னூட்டங்கள் வேண்டாம் நண்பர்களே."

*******************

வடை, வாழைப்பழம், சூப்பர், கலக்கல் என மொய் வைக்க வரும் நண்பர்களுக்கு; நான் யாருக்கும் பதிலுக்கு மொய் வைக்க மாட்டேன்.(இதனால் ஏற்ப்படும் தர்ம சங்கடத்திற்கு வருந்துகின்றேன்)