Sunday, November 14, 2010

சாப்பிட்டுப்பாத்திட்டு சொல்லுங்க!!!!





மனுஷன் கண்டுபிடிச்சதிலேயே அற்புதமான ரெண்டே விசயம்தான்; ஒன்னு- விதவிதமா சமைப்பது, ரெண்டு- அதை வித விதமா சாப்பிடுவது. எனக்கு உலகத்திலேயே பிடித்த முதல்விடயம் சாப்பாடுதான்; அதுக்கப்புறம்தான் சினிமா, ஸ்போர்ட்ஸ் எதுவானாலும். சிலபேரு பசிக்கு சாப்பிடுவாங்க, சிலபேரு ருசிக்கு சாப்பிடுவாங்க, சிலபேரு பெருமைக்கு சாப்பிடுவாங்க, சிலபேரு வெறித்தனமா சாப்பிடுவாங்க; இதில நான் நான்காவது வகை. நாங்கெல்லாம் முடிவுபண்ணி களத்தில இறங்கினா நமக்கு சாப்பாடு வைக்கிறவங்க பாடு திண்டாட்டம்தான், இது அம்மாவில இருந்து பீஸாகட் சப்லேயர்வரை பொருந்தும். ஓகே ஓகே நீங்க திட்டிறது புரிது, மேட்டருக்கு வாறன். இதுவரை பலவிதமான பலநாட்டு உணவு வகைகளை சாப்பிட்டிருந்தாலும் என்னோட ஆல் டைமே பேவரிட் பழைய சாதம்தான் (பழஞ்சோறு).

சாதம் மிஞ்சினா அடுத்தநாள் கலையில சாப்பிடதுக்கு எதுக்கிந்த பில்டப்பின்னு நீங்க நினைக்கலாம், இதற்கான பதிலை பழைய சாதத்தை ரசிச்சு ருச்சிச்சு சாப்பிட்ட அனுபவமுள்ளவங்க சொல்லுவாங்க, அனுபவ ரீதியா தெரியாதவங்க கீழே உள்ளமாதிரி டிரைபண்ணி பாருங்க.

தேவையானபொருட்கள்


நாட்டரிசிச் சோறு (முதல் நாள்)



நாட்டரிசியிலும் கைக்குத்தல் அரிசி என்றால் இன்னும் சிறப்பாக இருக்கும், அடுத்தநாள் காலையில் பழைய சாதம் சாப்பிடுவதென்றால் முதல்நாள் மதியம் சமைத்த சாதத்தில் இரவு தண்ணீர் ஊற்றிவிட வேண்டும் (பாத்திரத்தில் உள்ள சாதத்தின் மட்டம் வரைக்கும்). மறுநாள் காலையில் சுத்தமாக கையை கழுவிய பின்னர் நீரூற்றிய பழைய சாதத்திலிருந்து நீரை பிரித்து சாதத்தை மட்டும் வேறொரு பாத்திரத்தில் இடவேண்டும்.

உருளைகிழங்கு பிரட்டல் கறி (முதல் நாள்)



ஏனைய மரக்கறிகளிலும் பார்க்க உருளைக்கிழங்கு சிறந்த தெரிவு, காரணம் முதல்நாள் மதியம் சமைப்பது மறுநாள் காலைவரை இருப்பதால் அதிலேற்படும் புளிப்புத்தன்மை நன்றாக இருக்கும், மீன்/கருவாட்டு குழம்பு தண்ணிப் பற்றாக இருக்குமென்பதால் உருளைக்கிழங்கை நன்றாக பால்/நீர் வற்றும்வரை பிரட்டி சமைப்பது நல்லது.

மீன்/கருவாட்டுக் குழம்பு (முதல் நாள்)



எந்த மீன்/கருவாடு என்றதாலும் பரவாயில்லை, ஆனால் முள்ளு குறைவானதாக இருக்க வேண்டும். முதல்நாள் மதியம் நன்றாக தேங்காய்ப்பால் விட்டு உப்பு,புளி சற்று குறைவாக சமைக்கவேண்டும், அப்போதுதான் மறுநாள் காலையில் உப்பு,புளி நன்றாக சுவறியிருக்கும்.

மீன்/கருவாட்டு பொரியல் (முதல் நாள்)



இதற்கும் எந்த மீன்/கருவாடு என்றாலும் பரவாயில்லை, ஆனால் முள்ளு குறைவாக இருக்கவேண்டும், முதல்நாள் பொரிப்பதால் மீனிற்கு உப்பு சற்று குறைவாக போடுதல்வேண்டும், இல்லாவிட்டால் மறுநாள் உப்பு கரிக்கும். முதல்நாள் பொரித்த மீனை மறுநாள் காலைவரை ஒரு பேப்பரில் சுற்றி கிண்ணமொன்றில் வைத்து மூடிவைக்கவேண்டும்.

மிளகாய் சம்பல்/ மாசிச் சம்பல் (அன்றையதினம்)



செத்தல்மிளகாய், உப்பு, வெங்காயம், தேங்காய்ப்பூ, பழப்புளி சேர்த்து அம்மியில் அரைத்த சம்பல் மட்டும் பழைய சோற்றை உண்பதற்கு போதுமானது, இதில் கைப்பக்குவம் ரொம்ப ரொம்ப முக்கியம், வீட்டிலே வயது முதிர்ந்தவர்கள் அம்மியில் அரைக்கும் சம்பல் தனிச் சிறப்பாக இருக்கும். இல்லாவிட்டால் மாசிக் கருவாடு, செத்தல்மிளகாய், வெங்காயம், தேங்காய்ப்பூ, உப்பு, தேசிக்காய் புளி போன்றவற்றை கொண்ட இடித்த சம்பலும் நன்றாக இருக்கும். இந்த சம்பல்களில் ஒன்றை பழைய சாதத்தை சாப்பிடுவதற்கு சற்று முன்னர் செய்தல் வேண்டும்.

வெங்காயம், பச்சை மிளகாய் (அன்றையதினம்)



நன்றாக உரித்த வெங்காயம், காம்பு நீக்கிய பச்சை மிளகாய் என்பவற்றை சுத்தமான நீரில் கழுவி கடித்து சாப்பிடுவதற்கு ஏற்ற நிலையில் வைத்திருக்க வேண்டும்.

குறிப்பு

முதல்நாள் சமைத்த எவற்றையும் குளிர்சாதனப் பெட்டியில் வைத்தோ அல்லது மறுநாள் சூடாக்குதலோ கூடாது.

செய்முறை




ஒரு பெரிய பாத்திரத்தில் நீரை அகற்றிய சோற்றை கொட்டி, அதில் மீன்/கருவாட்டு குழம்பை (முட்கள் சேராதவாறு) சேர்த்து, பின்னர் மீன்/கருவாட்டின் முள்ளை நீக்கி சிறுசிறு துண்டுகளாக கலந்து, இவற்றுடன் உருளைக்கிழங்கு பிரட்டலையும், மிளகாய்/மாசி சம்பலையும் சேர்த்து நன்றாக குழைக்க வேண்டும். அனைத்து கறிகளும் சோற்றுடன் சேரும்வண்ணம் நன்றாக குழைத்து அதை ஒரு பந்து வடிவிலே கொண்டுவரவேண்டும்.

சாப்பிடும்முறை


மேசை, கதிரையிலும் பார்க்க வெறும் தரையில் உட்கார்ந்து சாப்பிடுவதே சிறப்பாக இருக்கும். அதேபோல கூடவே மூன்று நான்கு பேராவது சேர்ந்து சாப்பிட வேண்டும். குழையலை ஒருவர் (துப்பரவானவர் என சாப்பிடும் எல்லோரும் மனதளவில் நம்புபவராக இருக்கவேண்டும், அம்மாவாக இருந்தால் மிகவும் சிறப்பு) குழைத்துக்கொடுக்க அதை வலது கையிலே வாங்கி, இடது கையிலே வெங்காயம், பச்சைமிளகாய் அல்லது பொரித்த மீன்/கருவாடு இவற்றில் எதாவது ஒன்றை எடுத்து கடித்துக்கொண்டே சோற்று உருண்டையை கவ்வி சாப்பிட வேண்டும்.



சாப்பிடும்போது தண்ணீர் குடிப்பதற்கு பதிலாக சோற்றை பிழிந்த நீரிலே உப்பும், வெட்டிய வெங்காயமும், வெட்டிய பச்சைமிளகாயும் சேர்த்து குடித்தால் சுவையாகவும், குளிர்ச்சியாகவும் இருக்கும். கோடைகாலங்களில் வெப்பத்தால் வரும் நோய்களுக்கு இது சிறந்த நிவாரணி.

குறிப்புகள்



பழஞ்சோற்றிற்கு மேலுள்ள கறிகள்தான் வேண்டுமென்றில்லை, எந்த பழைய கறியாக இருந்தாலும் முதல்நாள் மிஞ்சும் சோற்றுடன் சேர்த்து உண்ணலாம், இதனால் இதை ஏழை பணக்காரன் என்று பாகுபாடின்றி யாரும் உண்ணலாம்.

அலுவலகங்களுக்கும், வெளியிடங்களுக்கும் வேலைக்கு போகிறவர்கள் விடுமுறை நாட்களில் உண்பது நல்லது; காரணம் பழக்கமில்லாதவர்களுக்கு வயிற்றில் பிரச்சினையை ஏற்ப்படுத்தலாம், முக்கியமாக நித்திரை தூக்கியடிக்கும்.



ஏனைய நாட்களைவிட திருமணவீடுகள், சடங்கு நிகழ்வுகள், கொண்டாட்டங்கள் என எப்போதாவது உங்கள் வீட்டில் விருந்து நடந்தால் எதை மறந்தாலும் மறவுங்கள், மறுநாள் பழஞ்சோற்றை சாப்பிட மட்டும் மறந்து விடாதீர்கள், அங்குதான் பல கறிகளும் நிறைய சோறும் மிஞ்சியிருக்கும், ஆட்களும் அதிகமாக இருப்பார்கள். எல்லோரும் சுற்றிவர இருந்து வெங்காயத்தை கடித்தபடி பழஞ்சோறு சாப்பிடும் அந்த சுவையும் மகிழ்ச்சியும் வார்த்தைகல்லால் சொல்லி விபரிக்க முடியாதவை.

ரொம்ப ஓவரு -முதல் மற்றும் கடைசி தவிந்த ஏனைய புகைப்படங்கள் பதிவு கொஞ்சம் லைவ்லியா இருக்கட்டுமேன்னு அம்மாகிட்ட திட்டு வாங்கி வாங்கி எடுத்த புகைப்படங்கள் :-)

Sunday, October 24, 2010

உலகப்பட விமர்சனம் - The Way To Bulgaria (1997)





இது எனது முதலாவது உலகப்பட விமர்சனம் என்கிறதால இதில இருக்கிற குறை நிறைகளை நீங்கதான் சுட்டிக்காட்டனும்.

எனக்கு அதிகமாக உலகப்படங்கள் பார்க்கும் சந்தர்ப்பங்கள் அமையவில்லை என்று சொல்வதைவிட நானாக அமைத்துக்கொள்ளவில்லை என்றே சொல்லலாம். மிகவும் பிரபலமான படங்கள் (டைடானிக், அவதார் மாதிரி) மற்றும் தமிழாக்கம் செய்யப்பட்ட சண், விஜய், கலைஞர் டிவிகளில் போடப்படும் படங்களைத்தான் இதுவரை காலமும் பார்த்திருக்கிறேன், அதுகூட திட்டமிட்டு பார்த்ததல்ல.

ஆனால் ஏதாவதொரு தமிழ்ப்படம் நல்லாயிருக்கின்னா உடனே அந்தப்படத்தை ஒரு உலகப்படத்தோட காப்பியின்னு சர்வசாதரணமா சொல்லிகிறாங்க. என்னாமா படமெடுத்திருக்கிறாங்க!! என்று நாங்க வாயை பிளக்கிற படத்தை பார்த்து இதெல்லாம் உலகப்படத்துக்கு கால்தூசிக்கு வருமான்னு சாவகாசமா கேக்கிறாங்க!!! சரி அப்பிடி என்னதான் உலக படங்கள்ல இருக்கின்னு பார்ப்பதற்கான முதல் முயற்ச்சியாக கூகிளாரின் உதவியுடன் நான் 'தேடித் பார்த்த' முதல் திரைப்படம்தான் The Way To Bulgaria (1997)



இது ஒரு இத்தாலிய திரைப்படமானாலும் படத்தின் கதை ஹங்கேரியில் (Hungary) இருந்து பல்கேரியா (Bulgaria) வரை பின்னப்பட்டிருக்கிறது. இத்தாலியின் பிரபல இயக்குனர் ஹன்வாரோ (Hanavaro) 1997 இல் இயக்கியிருக்கும் இந்த திரைப்படம் 14 சர்வதேச விருதுகளை வென்றிருக்கிறது. லூகாஸ் (Loogas) நாயகனாகவும் ஜெப்ரி கானர் (Jefri conor) நாயகியாகவும் நடித்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜிம்மி வோகஸ் (Jimy vogos) இசையமைத்துள்ளார். நதிக்கரையில் பச்சைபசேலென கண்ணைக்கவரும் விதமான ஒளிப்பதிவும், கண்ணை உறுத்தாத எடிட்டிங்கும், மனதை வருடும் இசையும், திகட்டாத திரைக்கதையும்தான் இந்தப்படத்தின் சிறப்பு.

1942 ஆம் ஆண்டு ஹிட்லரின் சர்வாதிகாரத்திலிருந்து தங்கள் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள ஹங்கேரியிலிருந்து டான்யூப் (Danube) நதிக்கரையூடாக பயணித்து பல்கேரியாவின் ரூசே (Rousse) பிரதேசத்திற்கு குடிபெயரும் யூதக்குடும்பமொன்றின் சிரமங்கள்தான் The Way To Bulgaria (1997) திரைப்படத்தின் திரைக்கதை. நடுத்தர வயதையுடைய நாயகனும் (லூகாஸ்) நாயகியும் (ஜெப்ரி கானர்) அவர்களது எட்டுவயது பையனும் மூன்றுவயது பொண்ணும்தான் இந்த திரைப்படத்தின் முக்கிய கதாபாத்திரங்கள்.

ஜேர்மன் படைவீரர்கள் ஹங்கேரியின் தலைநகரான புடாபெஸ்ட்டிலிருக்கும் (Budapest) யூதக்குடிகளை இரவோடிரவாக கைதுசெய்து போலாந்திற்கு (poland) அனுப்புவதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டுக்கொண்டிருக்க நகரமே அல்லோலகல்லோலப் பட்டுக்கொண்டிருக்கிறது; அந்தவேளையில் அதே நகரில் (புடாபெஸ்ட்டில்) டான்யூப் நதிக்கரையில் வசிக்கும் நடுத்தர விவசாய வர்க்கத்தை சேர்ந்த லூகாஸின் குடும்பத்தினரும் என்ன செய்வதென்று தெரியாமல் விழிபிதுங்குகிறார்கள் (அவ்வேளையில் பதட்டத்தில் பிள்ளைகளை தன்மாரோடு அணைத்துக்கொண்டு கண்களில் நீர்த்துளிகள் பணிக்க ஜெப்ரிகானர்அழும் காட்சி கல்நெஞ்சங்களையும் கரையவைக்கும்.)



பின்னர் ஒருவழியாக கட்டுமரம்போன்ற சிறியகடவை ஒன்றை உருவாக்கி அதில் ஒவ்வொருவராக நதியின் மறுகரைக்கு கொண்டு செல்லும் லூகாஸ் முதலில் தனது எட்டுவயது பையனை மறுகரையில் விட்டுவிட்டு திரும்பிவந்து மனைவியையும் மூன்றுவயது மகளையும் அழைத்துச்செல்வார். அவர் பையனை மறுகரையில் விட்டுவிட்டு மீண்டும் மனைவியையும் மகளையும் அழைக்கவரும் இடைப்பட்ட நேரத்தில் அந்த நடுநிசியில் எட்டுவயது சிறுவனது தனிமையையும், மறுகரையில் ஜெப்ரிகானரின் தவிப்பையும் செதுக்கியிருக்கும் இயக்குனரின் திறமையை வார்த்தைகளால் விபரிக்கமுடியாது.

அங்கிருந்து தப்பிக்கும் லூகாஸின் குடும்பத்தினர் 15 நாட்கள் பகலிரவாக பயணித்து அன்றைய யூகோசிலாவாக்கியா (Yugoslavia) ஊடாக ருமேனியா (romania) எல்லையை கடந்து ஒருவழியாக பல்கேரியாவின் ரூசே பிரதேசத்தை அடைகின்றனர், இதுதான் திரைக்கதை. புடாபெஸ்ட்டின் எல்லையை கடக்கும்வரை ஜெர்மனி வீரர்கள் கண்ணில் படாமல் தப்பித்துபோகும் காட்சிகள் விறுவிறுப்புடன் கூடிய திரில். அதை இயக்குனர் அருமையாக கையாண்டிருப்பார், அதிலும் குறிப்பாக திரிலிங்கிற்கு பாம்பை பயன்படுத்திய இடம் அருமை.

மூன்றாம்நாள் பயணத்தின்போது 3 வயதுசிறுமி பசியால் துடிக்கும் காட்சியும், தன் தங்கை பசியால் துடிப்பதை கண்வெட்டாமல் பார்த்துக்கொண்டிருந்த சிறுவன் கண்களில் நீர்கசிய தந்தையை நிமிர்ந்துபார்க்கும் காட்சியும், அப்போது லூகாஸ் மற்றும் ஜெப்ரிகானரின் முகபாவனையும் எழுத்தில் கூறமுடியாதது!!! பின்னர் ஆற்றில் துணியால் பிடிக்கும் ஒரேயொரு மீனை தன் பிள்ளைகளுக்கு பச்சையாக (சமைக்காமல்) ஊட்டும் ஜெப்ரிகானர் கண்ணீர்மல்க லூகாஸிற்கு நெற்றியில் கொடுக்கும் முத்தம் லூகாஸின் வயிற்றை மட்டுமல்ல படம் பார்ப்பவர்களது வயிற்றையும் நிறைத்தது.



அதேபோல யூகோசிலோவாக்கியாவில் தலைநகரான பெல்கிறேட்டில் (Belgrade) காட்டு எடுமைகளிடம் மாட்டிக்கொண்டு தப்பிக்கும் காட்சி, மற்றும் நேசப்படைகளது உளவுப்பிரிவு வீரர்கள் இருவரை ஜெர்மனி வீரர்கள் என நினைத்து ஒளிந்துகொள்ளும் காட்சி, பின்னர் அந்த வீரர்களிடம் அகப்பட்டு தாங்கள் யாரென அவர்களுக்கு புரியவைக்கும் காட்சி என்பன இயக்குனரின் சிறப்பான இயக்கத்துக்கு உதாரணங்கள். அதேபோல நேசப்படை வீரர்கள் இருவரும் தாங்கள் சாப்பிடுவதற்காக வைத்திருந்த இரண்டு பணிசையும் சிறுவர்களுக்கு கொடுக்கும் காட்சியும், அதில் அந்த சிறுவர்களது உணர்ச்சி வெளிப்பாடும் வார்த்தைகளில்லா மவுனங்கள். அந்த இடத்தில் வரும் மென்மையான பின்னணி இசையை விபரிக்கக்கூடியளவிற்கு என்னிடம் வார்த்தைகளில்லை.

The Way To Bulgaria (1997) -> மனதை கனக்க வைக்கும் ஓவியம்.
.
.
.
.
.
.
.
.
.


முக்கிய குறிப்பு

முறைக்க கூடாது, திட்டக்கூடாது, அடிக்ககூடாது --> நாடுகளதும் இடங்களதும் பெயர்களைத்தவிர படத்தின் பெயர், கதை, திரைக்கதை, காட்சிகள், அதிலுள்ள ஆட்களின் பெயர்கள் எல்லாமே கற்பனையானவை. என்னை ஏதாவது பண்ணனுமின்னு தோணினா மேற்படி கதையின் சாயலில் பலபடங்கள் வந்திருக்கலாம், அவற்றில் ஏதாவதொன்றின் லிங்கை தாருங்கள்; நாங்களும் உலகபடம் பாக்கனுமில்ல :-) அப்பதானே மணிரத்தினம், ஷங்கர், பாலா, அமீர், செல்வராகவன் போன்றவர்களை உண்டு இல்லையென்றாக்கலாம் :-)

Thursday, September 30, 2010

எந்திரன்-திரைவிமர்சனம்



(200 ஆவது பதிவு )




எந்திரன்- இந்த வார்த்தைதான் இன்றைய தேதியில் உலக தமிழர்களால் அதிகமாக உச்சரிக்கப்படும் வார்த்தையாக இருக்குமென்று அடித்து கூறலாம். கடந்த ஒரு வாரத்தில் பெரிசு முதல் சிறுசுவரை, பாமரன் முதல் படித்தவன்வரை, ஏழை முதல் பணக்காரன்வரை, ரஜினியை பிடித்தவர்கள் முதல் பிடிக்காதவர்கள்வரை, உலகின் பெரும்பான்மை தமிழர்களின் பேச்சும் எதிர்பார்ப்பும் எந்திரன்தான் என்றால் அது மிகையில்லை. இப்படியாக பலத்த எதிர்பார்ப்புகளுக்கு இடையில் வெளியாகிய எந்திரன் அதன் மிகை எதிர்பார்ப்பை பூர்த்தி செய்துள்ளதா என்றால் நிச்சயமாக பூர்த்தி செய்துள்ளதென்பதுதான் எனது பதில்(இவன் ரஜினி ரசிகன் என்பதால் இப்படி கூறுகிறான் என்று நீங்கள் நினைத்தால் அதற்க்கு நான் பொறுப்பல்ல, நிச்சயமாக நடுநிலை ரசிகர்களின் பதிலும் இதுவாகத்தான் இருக்கும்)

விஞ்ஞானபடாமாக இருந்தாலும் பக்கா ஜனரஞ்சகமான ஒரு காமர்சியல்படமாகதான் எந்திரன் தெரிகிறது. நிச்சயமாக பொழுதுபோக்கிற்காகவும் மகிழ்ச்சிக்காவும் திரையரங்கிற்கு வருபவர்களை எந்திரன் 100 % திருப்திப்படுத்தும் என்பதில் சந்தேகமேதும் இல்லை. ஒவ்வொரு ரஜினி ரசிகனும் பலதடவைகள் திரையங்குகளில் எந்திரனை தரிசிக்கபோவது உறுதி, இது நடுநிலை ரசிகர்களுக்கும் பொருந்தும்.



மூன்று விதமான வேடங்களில் நடித்திருக்கும் ரஜினி மூன்று வேடங்களுக்கும் உடல்மொழி, வசன உச்சரிப்பு,மானரிசம் போன்றவற்றில் சிறப்பானமுறையில் வேறுபாடிகாட்டி கலக்கியுள்ளார். விஞ்ஞானியாக வரும் ரஜினி (வசீகரன்) சீடியஸ் கேரக்டர் என்றால் சிட்டிரோபோ படத்தின் கலகலப்பு கேரக்டர். இறுதியாக மூன்றாவதாக வரும் ரோபோ ரஜினி (படத்தின் ஹீரோ) முதல் இரண்டு ரஜினியையும் தூக்கிச்சாப்பிடுமளவிற்கு தனது நடிப்பால் அசத்தியிருக்கிறார், குறிப்பாக வசீகரனை ரோபோ கூட்டத்தில் தேடும்போது மூன்றாவது ரஜினி நடிக்கும் நடிப்பை ரஜினியை பிடிக்காதவர்களும் ரசிக்காமல் இருக்கமுடியாது.

அப்பப்போ வசீகரனை டென்ஷன் ஆக்கும்போது சிட்டி ரோபோவின் வசன உச்சரிப்பு படு பிரமாதம். இறுதிகாட்சியில் சிட்டியின் நடிப்பும் வசனமும் நிச்சயம் ரசிகர்கள் மனதில் ஒருவித கனத்தை ஏற்படுத்தியிருக்கும் என்பதில் சந்தேகமில்லை. காதல்காட்சிகளில் ஒருவித தயக்கமும் இல்லாமல் இளைஞர்களைபோல கலக்கும் சூப்பர்ஸ்டார் பாடல்காட்சிகளில் வயது திறமைக்கு தடையல்ல என்பதை உணர்த்தியிருக்கிறார். ஐஸ்வர்ய்யாமீது சிட்டிக்கு காதல்வரும்போது ரஜினி கொடுக்கும் உணர்ச்சிகளை விபரிப்பதர்க்கு வார்த்தைகள் இல்லை. சிட்டியும் வசீகரனும் ஒன்றாகவரும் காட்சிகள் அனைத்தும் படு பிரமாதமாக வந்திருக்கிறது. ரஜினியின் நடிப்புக்கு நீண்டநாட்களுக்கு பின்னர் கிடைத்துள்ள தீனிதான் எந்திரன்.

ஐஸ்வர்யாராய் அதிகமான தமிழ்பட நாயகிகள் போலல்லாது படம் முழுவதும் வருகிறார். காதல், கோபம், மகிழ்ச்சி, பயம், கவலை என அனைத்து உணர்வுகளையும் நன்றாக வெளிக்காட்டி சிறப்பான முறையில் தனது பங்களிப்பை ஆற்றியுள்ளார். பாடல்காட்சிகளில் தனது பாணியில் வழமைபோல பட்டையை கிளப்ப்பியிருக்கும் ஐஸிற்கு 37 வயதென்றால் யாராவது நம்புவார்களா? சிட்டியின்நிலையை சிட்டிக்கு புரியவைக்க முயற்ச்சிக்கும் காட்சிகளில்(சிட்டி காதலை வெளிப்படுத்தியவுடன்) தான் ஒரு முதிர்ச்சியான(நடிப்பில்) நடிகை என்பதை எமக்கு உணர்த்துகிறார்.

வில்லனாக நடித்திருக்கும் டானிக்கு பெரிதாக திறமையை வெளிப்படுத்தும் சந்தர்ப்பம் இல்லாவிட்டாலும் கொடுத்ததை சிறப்பாக செய்துமுடித்துள்ளார். சந்தானம், கருணாசின் காமடி சில இடங்களில் ரசிக்கவைத்தாலும் சில இடங்களில் ரசிக்கமுடியவில்லை. ஒருகாட்சியில் வந்தாலும் கலாபவன்மணியும், ஹனிபாவும் மனதில் நிற்கிறார்கள், வேறு எந்த கேரக்டர்களும் மனதில் ஒட்டுமளவிற்கு படத்தில் இல்லை, இதற்கு காரணம் படம் முழுவதும் ரஜினியினதும், ஐஸ்வர்யாவினதும் ஆதிக்கம்தான்.



ரஜினி படத்தின் நாயகனாலும் உண்மையான எந்திரனின் நாயகன் ஷங்கர்தான், இதை ஒரு ரஜினி ரசிகனாக சொல்வதில் எனக்கு எந்தவித தயக்கமும் இல்லை, நிச்சயமாக இதுவொரு ஷங்கர் பாடம்தான், தளபதி எப்படி மணிரத்தினால் ரஜினிக்கு எடுக்கப்பட்ட திரைப்படமோ அதேபோல எந்திரன் ஷங்கரால் ரஜினிக்கு எடுக்கப்பட்ட திரைப்படம். இத்தனை பிரம்மாண்டத்தை ஒரு தமிழ்ப்படத்தில் வெறும் 150 கோடியில் கொடுக்கமுடியுமென்றால் அது ஷங்கரால் மட்டும்தான் முடியும். சிந்தித்து பார்க்கமுடியாத கற்பனை, திறமை. இறுதிகாட்சிகளை வாயைபிளந்தது பார்த்ததோடல்லாமல் இது "ஹோலிவூட் படமல்ல அதுக்கும்மேல்" என்பதுதான் பெரும்பாலானவர்களது திரையரங்க கருத்தாக இருந்தது.

ஆரம்பத்தில் காமடியாக நகர்ந்த ஷங்கரின் திரைக்கதை இடைவேளையின் பின்னர் சூடுபிடிக்க தொடக்கி இறுதி காட்சிகளில் சரவெடியாக மாறி படத்திற்கு பெரும்பலமாக அமைந்தது. சுஜாதாவின் கதைக்கு உயிர்கொடுத்த ஷங்கர் சுஜாதாவின் வசங்களுடன் மதன்கார்க்கியின் வசனங்களையும் தனது வசனங்களையும் படத்தின் தேவைக்கேற்றால்போல பயன்படுத்தியுள்ளார். சிட்டி ஐஸ்வர்யாவை விரும்புவதாக கூறுமிடத்தில் சிட்டியும் வசீகரனும் ஐஸ்வர்யாவும் பேசும் வசனங்கள், இறுதியாக சிட்டி பேசும் வசனங்கள்(குறிப்பாக கருணாஸ், சந்தானத்திடம் கூறும் வசனம்), கடைசியில் படம் முடியும்போது "சிந்திக்க தொடங்கியதால்" எனவரும் வசனம் உட்பட வசனங்கள் படத்தின் தரத்தை உயர்த்தியிருக்கின்றதென்றே சொல்லலாம்.

படத்தின் ஸ்பெஷல் எபக்ட் மற்றும் கிராபிக் காட்சிகள் என்பன இதற்க்கு முன்னர் எந்த இந்திய திரைப்படத்திலும் பார்க்காதது மட்டுமல்ல இனிமேலும் இது இந்திய திரைப்படங்களில் சாத்தியமா என்று நினைக்கவைக்கிறது. எவ்வளவு திட்டமிடல் இருந்தால் இது சாத்தியமாகும்? எது செட் எது கிராப்பிக்ஸ் என்று தெரியாத அளவிற்கு படு பிரமாதமாக வந்திருக்கிறது. ஸ்பெஷல் எபக்ட் மற்றும் கிராபிக் காட்சிகளின் உதவி இல்லாவிட்டால் ஷங்கரால் இப்படி ஒரு படத்தை நிச்சயமாக நினைத்துகூட பார்த்திருக்கமுடியாது.

ரஹுமானது இசையில் பாடல்கள் ஏற்கனவே பட்டி தொட்டியெல்லாம் பட்டையை கிளப்பியதால் பாடல்களை விடுத்து பின்னணி இசையை எடுத்துக்கொண்டால் ரஹுமானின் உழைப்பு நிச்சயம் வெற்றிபெற்றுள்ளதென்றே கூறலாம். இறுதிக்காட்சிகளில் ரகுமானின் பின்னணி இசை படத்திற்கு மிகப்பெரும் பலம். அதேபோல அடக்கி வாசிக்கவேண்டிய இடங்களையும் நன்கு உணர்ந்து அதற்கேற்றால்போல சிறப்பாக தனது பங்கை ரஹுமான் செய்துள்ளார்.

படத்தின் இன்னுமொரு மிகப்பெரும் பலம் ஒளிப்பதிவாளர் இரத்தினவேலு, 'கிளிமாஞ்சாரோ', 'காதல் அணுக்கள்' பாடல்களுக்கு கவிதை பேசிய இரத்தினவேலுவின் கமெரா 'அரிமா அரிமா'வில் தாண்டவமாடியுள்ளது, இறுதிக்காட்சிகளில் ஒளிப்பதிவு படத்தின் வேகத்திற்கு ஏற்றால்போல சிறப்பாக உள்ளது. ரஜினி மற்றும் ஐஸ்வர்யாவை இப்படி இளமையாக அழகாக காட்டியதற்கு இரத்தினவேல் அவர்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.

படத்தொகுப்பாளர் அன்டனி ஆரம்பத்தில் சீரானவேகத்தில் சென்று கொண்டிருந்த எந்திரனை இறுதி 30 நிமிடங்களுக்கும் மின்னல்வேகத்தில் நகர்த்தவும் ரசிகர்களை கதிரையின் நுனிவரை கொண்டுவரவும் உதவியிருக்கிறார். ஆனாலும் சிட்டி நுளம்புடன் பேசும் காட்சி, ரயில் சண்டை என்பவற்றில் இன்னும் கொஞ்சம் கத்திரி போட்டால் நன்றாக இருந்திருக்கும்.

அந்நியனுக்கு பின்னர் சிவாஜியில் ஒரு இடைவெளிவிட்டு மீண்டும் சங்கருடன் இணைந்த சாபுசிரில் சங்கரின் பிரம்மாண்டத்திற்கு தனது கைவண்ணத்தால் நியாயம் தேடியுள்ளார். இந்த படத்திற்கு 150 கோடி போதுமா என்கின்ற அளவில் சாபுவின் வேலைகள் படு பிரம்மாண்டமாக வந்துள்ளன. பிரம்மாண்டம் என்பதை வார்த்தையில் சொல்லி விபரிக்கமுடியாத அளவிற்கு சாபுவின் கலை அமைந்துள்ளது. படம் முழுவதும் இவரின் திறமை வியாபித்திருப்பதால் குறிப்பிட்டு இது நன்றாகவிருக்கிறது அது நன்றாகவிருக்கிறதேன்று சொல்லவேண்டிய வேலை எமக்கு இல்லை.



பீட்டர் கெயின்- படத்தின் இன்னுமொரு நாயகன், இவரது கைவண்ணத்தில் படத்தின் சண்டைகாட்சிகள் சர்வதேசதரத்துக்கு இணையாக படமாக்கப்பட்டிருக்கின்றன, அனைத்து சண்டைகாட்சிகலுமே சிறப்பாக வந்திருந்தாலும் இறுதிகாட்சிகளை என்னவென்று சொல்வது? அதேபோல நடன பயிற்சியாளர்களும் தங்கள் பங்கிற்கு பாடல்களுக்கு ஏற்றால்போல ரசிக்கும்படியான நடன அசைவுகளை வழங்கியிருக்கிறார்கள்.

இவ்வளவும் சொல்லிவிட்டு தயாரிப்பாளர் பற்றி ஒருவார்த்தை சொல்லவில்லை என்றால் நன்றாக இருக்காது, இப்படியொரு பிரம்மாண்டத்தை தயாரித்துமுடிக்கும்வரை பணத்தால் எந்த தடையும் வராமல் பார்த்துக்கொண்டதற்க்கு திரு.கலாநிதிமாறன் அவர்களுக்கு நன்றிகள்.

அப்படியானால் படத்தில் என்னதான் மைனஸ்?
ஐஸ்வர்யா காரில் இருக்கும்போது கூட இருக்கும் ரோபவை போலீசார் சரமாரியாக சுடுவது, அனைத்து வாகனங்களையும் மிதித்துத்தள்ளும் ரோபோகூட்டம் வசீகரனின் காரை மட்டும் மிதிக்காமல் துரத்துகிறது என ஓரிரு இடங்களில் லாஜிக் மீறல்கள் இருந்தாலும் கமர்சியல் படமொன்றை லாஜிக் மீறல்கள் இல்லாமல் எடுப்பது சாத்தியமில்லை என்பதால் இதுவொரு பெரியகுறையல்ல.

ரஜினி, ஷங்கர், ஐஸ்வர்யாராய், ரகுமான், ரத்தினவேலு, சாபுசிரில், அன்டனி, கலாநிதிமாறன் என பிரம்மாண்டமான இந்த கூட்டணியின் எந்திரன் நிச்சயமாக ஒரு ஜனரஞ்சகமான பக்கா பொழுதுபோக்குத் திரைப்படமென்பதில் எந்தவித சந்தேகமுமில்லை.

மொத்தத்தில் எந்திரன் - சூரியன்

Saturday, February 13, 2010

கல்யாணத்துக்கு அப்புறம் காதல மறந்துடாதீங்க!!!!



காதலர்தினத்துக்கு ஏதாவது பதிவப் போடுவம்னு பார்த்தா நமக்கு இதில முன்னனுபவம் பின்னனுபவம் சைடனுபவம்னு எதுவுமே இல்லையே.சரி நாமெல்லாம் எதுக்கு சொந்தமா யோசிச்சு மத்தவங்கள இந்த சந்தோஷமான நேரத்தில துக்கத்தில ஆழ்த்தனுமேன்னு ஒரு முடிவுக்கு வந்தேன்.சும்மா திரைப்படங்களிலும் பாடல்களிலும் எனக்குப் பிடித்த சிலவற்றைத் தொகுத்துள்ளேன்.எந்தெந்த படம்,பாட்டு என்பது நீங்களே கண்டு பிடிக்க வேண்டியது.கண்டுபிடிச்சா பின்னூட்டத்தில சொல்லுங்க.ரெடி

அதுக்கு முன்னாடி ஏன் காதலர் தினம் கொண்டாடப்படுகிறது என ஒருகுட்டி பிலாஷ்பக்:
 வலண்டைன் என்ற பாதிரியார் கல்லால் அடிக்கப்பட்டு சித்திரைவதை செய்யப்பட்டு தண்டிக்கப்பட்டு தலை துண்டிக்கப்பட்ட நாள் இது. அந்த நாள் கி.பி.270 வது வருடம் - பெப்ரவரி 14ந் திகதி(14.270). இந்தத் தினம்தான் காதலர்தினம். யாரும் காதலிக்கவோ திருமணம் செய்யவோ கூடாது என ரோமாபுரி சக்கரவர்த்தி கிளாடி2 விதித்த சட்டத்தை மீறி காதலர்களுக்கு திருமணம் நடத்தி வைத்ததற்காக வலண்டைனுக்கு இந்த தண்டனை வழங்கப்பட்டது .

இப்போ என்னை கவர்ந்த சில வசனங்கள் :

" காதல் ஒன்னும் மரத்தில காய்க்கிற விஷயம் இல்ல தட்டி பறிக்கிறதுக்கு அது மனதில பூக்கிற விஷயம் அமைதியா இருந்தா தானா நடக்கும்"

"காதலிக்க ஆரம்பிக்கும் போது பெத்தவங்கள மறந்திர்ரீங்க,காதலிக்கும் போது உங்களையே மறந்திர்ரீங்க கல்யாணத்துக்கு அப்புறம் காதல மறந்துடாதீங்க."

"நான்கூட நெனப்பன் ஏண்டா இந்த லவ்வையும் பண்ணிட்டு தற்கொல பண்ணிக்குராங்கன்னு,இப்போ தானே புரியுது உங்ககிட்ட மாட்டிகிட்டு அணுஅணுவா சாகிறதுக்கு அது எவ்வளவோ மேலுன்னு."


"காதல் தாய்மை இரண்டு மட்டும் பாரம் என்பது அறியாது ,உன் பளிங்கு முகத்தை பார்த்து கொண்டால் பசியோ வலியோ தெரியாது"

"வாலிபங்கள் ஓடும் வயதாகக் கூடும் ஆனாலும் அன்பு மாறாதது"


"செவ்வாயில் ஜீவராசி உண்டாவென்று தினந்தோறும் விஞ்ஞானம் தேடல் கொள்ளும் உன் செவ்வாயில் உள்ளதடி எனது ஜீவன் அது புரியாமல் விஞ்ஞானம் எதனை வெல்லும்"

"பிடித்ததெல்லாம் பிடிக்கவில்லை பிடிக்கிறதே உன்முகம்தான்"

"பாறையில் செய்தது எந்தன் மனமென்று தோழிக்கு சொல்லியிருந்தேன்,பாறையின் இடுக்கில் வேர் விட்ட செடியாய் நீ நெஞ்சில் முளைத்து விட்டாய்"

"உயிருக்குள் இன்னோர் உயிரை சுமக்கின்றேன் காதல் இதுவா !! "

"இருகண்கள் பேசும் வார்த்தைகளை இருநூறு மொழிகள் சொல்வதில்லை"

"காதல் என்னும் ஒன்று அது கடவுள் போல உணரத்தானே முடியும் ஒரு உருவம் இல்லை"

"கண்ணோடு கண் சேரும்போது வார்த்தைகள் எங்கே போகும்,கண்ணே உன் முன்னே வந்தால் என் நெஞ்சம் குழந்தை ஆகும்"

"என்னைக் கேட்டு காதல்அது வரவில்லையே,நான் சொல்லி அது போகக் கூடுமோ ?"

"பூஞ்சோலை அமர்ந்து சென்றாள் கொஞ்ச நேரமே,சொந்த வாசம் மறந்த பூவில் உந்தன் வாசமே"

"எங்கேயோ உன் முகம் நான் பார்த்த ஞாபகம், எப்போதோ உன்னோடு நான் வாழ்ந்த ஞாபகம்"

"யாரிடத்தில் யாருக்கிந்த காதல் வருமோ, என்ன அந்த காதல் அது சொல்லி வருமோ"


இறுதியாக

"இன்னார்க்கு இன்னாரென்று எழுதி வைத்தானே தேவன் அன்று "



 எது எப்படியோ ...... "எப்பூடியின் இனிய  காதலர் தின வாழ்த்துக்கள் "