Monday, April 23, 2012

ரஜினியின் 'சிவாஜி'யும், தமிழ் சினிமாவின் சிறந்த ஓப்பினிங்கும்!!!



எச்சரிக்கை - பதிவின் நீளத்தை பார்த்துவிட்டு வாசிக்க தொடங்குங்கள்!

ஓப்பினிங்(Opening) - ஓப்பினிங் என்றால் என்ன? ஒரு திரைப்படம் எந்த நாளில் ரிலீஸ் ஆகின்றதோ, அன்றிலிருந்து முதலாவதாக வரும் ஞாயிற்றுக்கிழமை வரையான வசூல்தான் ஆரம்ப வசூல் அதாவது ஓப்பினிங் வசூல் என்று சொல்லப்படுகின்றது!! திங்கட்கிழமை ஒரு திரைப்படம் ரிலீஸ் ஆனாலும், சனிக்கிழமை ஒரு திரைப்படம் ரிலீஸ் ஆனாலும் ஞாயிறு வரையான வசூலையே முதல் வார ஓப்பினிங் வசூலாக எடுத்துக் கொள்கின்றனர்; ஆனால் திங்கள், செவ்வாய் கிழமைகளில் திரைப்படங்கள் பொதுவாக ரிலீஸ் ஆவதில்லை. பண்டிகை நாட்கள், விஷேட நாட்களில் மட்டும் சில நேரங்களில் புதன், வியாழன் ஆகிய நாட்க்களில் திரைப்படங்கள் ரிலீஸ் ஆகின்றன; மிகப்பெரும்பாலான திரைப்படங்கள் வார இறுதிநாளான வெள்ளிக்கிழமை களில்த்தான் வெளியிடப்படுகின்றன, சில தவிர்க்க முடியாத காரணங்களால் சனிக்கிழமைகளிலும் ஒருசில திரைப்படங்கள் வெளியிடப்படும்!!!

அந்த வகையில் பெரும்பாலான திரைப்படங்கள் வெளியிடப்படும் வெள்ளிக்கிழமையை எடுத்துக்கொண்டால்; முதல் மூன்று நாள் வசூல் ஓப்பினிங் வசூலாக கொள்ளப்படும்!! கிட்டத்தட்ட ஒரு திரையரங்கில் 12 - 15 வரையான ஷோக்கள் வார இறுதியில் காண்பிக்கப்படும். ஷோக்களின் எண்ணிக்கை, மக்களின் எண்ணிக்கை, டிக்கட்டின் பெறுமதி, ரிலீஸ் ஆகும் திரையரங்குகளின் எண்ணிக்கை போன்றவற்றை கொண்டே ஒரு திரைப்படத்தின் ஓப்பினிங் கணிக்கப்படுகின்றது!! ஒரு திரைப்படம் 30 திரையரங்குகளில் திரையிடப்பட்டு 360 காட்சிகளில் 90% மக்களின் பார்வையில் பெற்ற வசூலைவிட, 28 திரையரங்குகளில் திரையிட்டு 336 காட்சிகளில் 90% மக்கள் பார்வையில் வேறொரு திரைப்படம் அதிக ஓப்பினிங் வசூலை பெற்றிருக்கலாம்!!! அதற்க்கு காரணம் திரையரங்குகளின் கொள்ளளவு மற்றும் டிக்கட்டின் விலை வித்தியாசங்கள்தான் (மல்டி சென்டர்களில் அதிகம் ரிலீஸ் ஆனால் வசூல் அதிகம்).

ஒரு திரைப்படத்தின் வெற்றியை ஓப்பினிங் இன்றைக்கு எந்தளவிற்கு தீர்மானிக்கின்றது!!! இதை அலசுவதாயின் காலத்தை இரண்டாக பிரிப்பது தவிர்க்க முடியாதது!!! சிவாஜி (SIVAJI 'The Boss') திரைப்படத்திற்கு முன்னர், சிவாஜி திரைப்படத்திற்கு பின்னர் என இரண்டாக பிரித்துப் பார்ப்பது அவசியம்.

சிவாஜிக்கு முன் - ஒரு திரைப்படம் அதன் வெற்றியை தீர்மானிப்பதற்கு குறைந்த பட்சம் 30 நாட்களாவது காத்திருக்கவேண்டும், எத்தனை நாட்கள் அதிகமாக ஓடுகின்றதோ அத்தனை நாட்களை பொறுத்தே வெற்றியின் அளவு கணிக்கப்படும் (ஆளில்லா திரையரங்கில் சுய விளம்பரத்திற்கு ஓட்டப்படுபவை தவிர்த்து). இதற்கு நேர்மாறாக சில திரைப்படங்கள் ஆரம்ப நாட்க்களில் மந்த கதியில் நகர்ந்து தோல்விப்படம் என முத்திரை குத்தப்பட்ட பின்னர்கூட வாய்வழியாக ( Word of Mouth) மற்றும் ஊடகங்களின் விமர்சனங்கள் மூலம் Late pick up ஆகி நாட்கள் போகப்போக கூட்டம் அதிகமாகி வசூலை அள்ளிய வரலாறுகளும் உண்டு; மகேந்திரனின் முள்ளும் மலரும் முதல் மிஸ்கினின் சித்திரம்ம் பேசுதடி வரை பல உதாரணங்கள் ஆங்காங்கே உண்டு!!!


அதேபோல ஆரம்பத்தில் மந்தகதியில் புறப்பட்டு தயாரிப்பாளர்கள், விநியோகிஸ்தர்களின் விளம்பர உக்தியால் பின்னர் சிறந்த வசூலை பெற்றுத்தந்த திரைப்படங்களும் உண்டு, உதாரணமாக சொல்வதானால் எஜமான், வேட்டையாடு விளையாடு திரைப்படங்களை சொல்லலாம்!! முதல்வாரம் கடந்து அடுத்தநாள் (திங்கட்கிழமை) மக்கள் கூடம் திரையரங்கிற்கு வந்தால் "அப்பாடா திரைப்படம் தப்பித்து விட்டது" என ஓரளவிற்கு மனதிற்கு ஆறுதலாக இருக்கும், மக்களுக்கு பிடித்துப்போனால் மாத்திரமே வாய்வழியாக சொல்லப்பட்டு இரண்டாம்வாரம் கூட்டம் வரும் என்பது அன்றைய நிலை!!! இப்படியாக மக்களுக்கு பிடித்த திரைப்படங்கள் 175, 200 நாட்கள் என திரையிடப்பட்டது, அதனால் அன்றைய திரைப்படங்களின் வெற்றி 'நாட்களை' வைத்தே கணிக்கப்பட்டது!!! 100 நாள், 175 நாள் (வெள்ளிவிழா) 200 நாள் ஓடிய திரைப்படங்கள் என வெற்றியின் அளவுகோல் நிர்ணயிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில்த்தான் 90 களின் இறுதியில் தமிழ் சினிமா ஒரு மிகப்பெரும் சவாலை எதிர்கொள்ள வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டது, அதுதான் திருட்டு VCD!!! அதற்க்கு முன்னரான காலப்பகுதியில் VCR Player கள்தான் பாவனையில் இருந்தன, ஆனால் அவை ஒரு தெருவில் ஒன்றிரண்டு வீடுகளில் மட்டும்தான் இருந்தன; அவற்றுக்கு பயன்படுத்தப்படும் கேசட்டுக்கள் பாவனையும் அதிகளவில் இருக்கவில்லை, காரணம் VCD கள்போல இலகுவில் Copy பண்ண முடியாது, மற்றும் செலவும் ஜாஸ்தி!!! ஆனால் VCD கள் தாரளமாக குறைந்த விலையில், இலகுவாக Copy பண்ணப்பட்டு திருட்டுத்தனமாக விற்க ஆரம்பிக்கப்பட்டன. அவற்றுக்கான Player களும் குறைந்த விலை என்பதால் அதிகமான வீடுகளில் பாவனைக்கு வரத்தொடங்கியது!!!

திரைப்படம் வெளிவரும் அடுத்தடுத்த நாட்களில் திருட்டு VCD க்கள் வெளிவர தொடங்கியதும் மக்கள் திரையரங்கிற்கு செல்வது குறைய ஆரம்பித்தது. 100 ரூபா கொடுத்து ஒருவர் திரையரங்கில் பார்ப்பதைவிட, வீடிலிருந்து 30 ரூபாயில் குடும்பமாக VCD யில் பார்த்தால் பணமும், போக்குவரத்தும் விரயமாகாது என பலரும் எண்ணினர்; இதனால் திரையரங்கிற்கு வரும் மக்கள் தொகை திடீரென வீழ்ச்சியடைய ஆரம்பித்தது. முதல் பத்து, பதினைந்து நாட்களுக்கு பின்னர் திரையரங்குகள் காற்று வாங்க ஆரம்பித்தன!! இதனால் தோல்விப்படங்கள் ஆகவேண்டியவை படுதோல்வி ஆயின, வெற்றிப்படங்கள் ஆகவேண்டியவை சராசரி ஆகின, சூப்பர் ஹிட் ஆகவேண்டியவை ஹிட் ஆவதற்கே சிரமப்பட்டன!! தயாரிப்பாளர், விநியோகிஸ்தர்கள், திரையரங்க உரிமையாளர்கள் என அனைவரும் லாபம் பார்க்க சிரமப்பட்டனர்!! இந்நிலையில் 2007 ஆம் ஆண்டு சிவாஜி திரைப்படத்தின் உரிமையை AVM நிறுவனம் விற்க முடிவு செய்தது........

சென்னை நகருக்கான உரிமையை 'அபிராமி' ராமநாதன் கிட்டத்தட்ட 6.2 கோடிகளுக்கு வாங்கினர்; அதுவரை எந்த திரைப்படமும் சென்னையில் வசூலித்திராத தொகை அது!!! அதுவரை அதிக வசூலை சென்னையில் குவித்திருந்த சந்திரமுகிகூட தொடாத தொகை அது!!! எல்லோருக்குமே ஆச்சரியம், ஆனால் ராமநாதன் பயப்படவில்லை; தான் போட்ட காசை பிடிப்பதற்கு அவர் ஒரு புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தினார், அதுதான் அதிக திரையரங்குகளில் திரைப்படத்தை வெளியிடும் திட்டம். சென்னையில் ஒரு பெரிய நடிகரின் திரைப்படம் அதிகபட்சம் 10,15 திரையங்குகளில்த்தான் அப்போதெல்லாம் வெளியப்பட்டு வந்தது; ராமநாதன் 'சிவாஜி'யை கிட்டத்தட்ட 30 திரையரங்குகளில் ரிலீஸ் செய்தார், அத்துடன் இணையம் மூலமாகவும், நேரடியாகவும் முன்பதிவுகளை மேற்கொள்ளும் வசதியம் துணையிருக்க முதல் 10 நாட்க்களுக்கான டிக்கட்டுகள் அதிகமாக முற்பதிவு செய்யப்பட்டன!!


சிவாஜி பற்றிய விமர்சனங்கள் Mix Report ஆக வெளிவந்து கொண்டிருக்கும்போதே முதல் நான்கு நாட்களில் ஓப்பினிங் வசூலாக மிகப்பெரும் தொகையான 1 கோடி 34 இலட்சத்தை சிவாஜி வசூலித்து, மூன்றாம் வாரத்தில் போட்ட பணமான 6.2 கோடியை மீட்டெடுத்த 'அபிராமி' ராமநாதன் கிட்டத்தட்ட மொத்தமாக சென்னையில் 12 கோடியை வசூலாக பெற்றார்; இது அவருக்கு இரட்டிப்பு லாபம்!!! சிவாஜி திரைப்படம் வெளியாகிய ஐந்தாவது வார இறுதியில்(வெள்ளி. சனி, ஞாயிறு) பெற்ற வசூல் 48 இலட்சம்; அதே வாரம் வெளியாகிய அஜித்தின் 'கிரீடம்' வார இறுதியில் பெற்ற வசூல் 31 இலட்சம். அஜித்திற்கு கிடைத்த ஓப்பினிங் 98%, அப்படி இருந்தும் வசூலில் 5 ஆவது வாரத்து சிவாஜியை கிரீடம் நெருங்கவில்லை என்றால் என்ன காரணம்? வெளியாகிய திரையரங்குகளின் எண்ணிக்கைதான்; 5 ஆவது வார இறுதியில் சிவாஜி 243 காட்சிகள் ஓடியது, முதல் வார இறுதியில் கிரீடம் வெறும் 189 காட்சிகள்தான்!!!

இது தவிர்த்து அமேரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளிலும் அதிக திரையரங்குகளில் ரிலீஸ் செய்து ஐங்கரன் நிறுவனமும் புதிய வர்த்தகப்பாதையை தமிழ் சினிமாவுக்கு அறிமுகப்படுத்தியது!! இப்படியாக தமிழ் சினிமாவின் மாக்கேட்டிங் சிவாஜிக்கு பின்னர் புதிய வடிவில் எழுச்சி பெற ஆரம்பித்தது. ஆனாலும் இந்த மாற்றத்தை ஏனைய திரைப்பட விநியோகிஸ்தர்கள் உடனடியாக ஏற்றுக்கொள்ளவில்லை. தொடர்ந்தும் குறைந்த திரையரங்குகளிலேயே திரைப்படங்கள் வெளியிடப்பட்டுவந்தன. சிவாஜிக்கு அடுத்து அதே ஆண்டு மிகப்பெரும் வசூலை குவித்த திரைப்படம் பில்லா; சென்னையில் அதன் ஆரம்ப வசூல் மூன்று நாட்களில் 59 இலட்சம், மொத்தமாக பில்லா சென்னையில் கிட்டத்தட்ட 4.5 கோடிவரை வசூலித்தது; அன்றைய தேதியில் இதுவொரு மிகச்சிறந்த வசூல்!!! ( அதேநேரம் இன்றைய சராசரி படங்களின் வசூலைவிட இது குறைவே!!)

முதல் வார இறுதி வசூலாக விஜயின் 'அழகிய தமிழ்மகன்' நான்கு நாட்களில் 29 இலட்சம், சூர்யாவின் 'வேல்' நான்கு நாட்களில் 28 இலட்சம், தனுஸின் 'பொல்லாதவன்' நான்கு நாட்களில் 27 இலட்சம், விக்ரமின் 'பீமா' நான்கு நாட்களில் 58 இலட்சம், சிம்புவின் 'காளை' நான்கு நாட்களில் 36 இலட்சம், வடிவேலுவின் 'இந்திரலோகத்தில் நா அழகப்பன்' 3 நாட்க்களில் 40 இலட்சம் என 'தசாவதாரம்' வரும்வரை வேறெந்த திரைப்படமும் அதிக வசூலை ஓப்பினிங்காக பெறவில்லை; ஆனால் இவை அனைத்தையும் முதல் வாரத்தில் 90% க்கு அதிகமான மக்கள் பார்வையிட்டிருந்தனர்; அப்படி இருந்தும் ஓப்பினிங் குறைவாக உள்ளதென்றால்(இன்றோடு ஒப்பிடும்போது) அதற்க்கு முழுக்காரணமும் திரையரங்க எண்ணிக்கைதான்.

'சிவாஜி'க்கு பின்னர் கமலின் 'தசாவதாரம்' திரைப்படம் அதிக திரையரங்குகளில் வெளியிடப்பட்டு சிறப்பான வசூலை குவித்தது!! சென்னையில் ஓப்பினிங்காக மூன்று நாட்க்களில் 95 இலட்சம் வசூலித்த தசாவதாரம் மொத்தமாக சென்னையில் கிட்டத்தட்ட 11 கோடிகளை வசூலித்தது!!! வெளிநாடுகளிலும் அதிக திரைகளில் வெளியிடப்பட்டு கணிசமான வசூலை பெற்றது!!! தசாவதாரத்தை தொடர்ந்தும் அதிக திரையரங்கில் வெளியாகி அதிக ஓப்பினிங்கை பெற்ற திரைப்படம் 'குசேலன்', மூன்று நாட்களில் 84 இலட்சம்வரை வசூலித்தது. பின்னர் விக்ரமின் 'கந்தசாமி' திரைப்படத்தை பெரிய பட்ஜெட், எதிர்பார்ப்பு போன்ற காரணத்தால் அதிகளவு திரையில் திரையிட்டார்கள், எதிர்பார்த்ததுபோல மூன்று நாட்க்களில் 93 இலட்சம் வசூலாக கிடைத்தது!! அதனை தொடர்ந்து வேட்டைக்காரன் மூன்று நாட்க்களில் 89 இலட்சம், ராவணன் மூன்று நாட்க்களில் 88 இலட்சம் என சராசரியாக ஒரு நாளுக்கு கிட்டத்தட்ட 30 இலட்சங்களை அதிக திரையரங்குகளில் வெளியிடப்பட்ட திரைப்படங்கள் பெற்றுக்கொடுத்தன!


இந்த நிலையில் 2010 ஆம் ஆண்டு மீண்டும் ரஜினியின் 'எந்திரன்' திரைப்படத்தின் சென்னை உரிமையை கிட்டத்தட்ட 10 கோடிகளுக்கு வாங்கிய 'அபிராமி' ராமநாதன் இம்முறை திரையரங்குகளை இன்னமும் அதிகரித்தார்; 45 க்கும் அதிகமான திரையரங்குகளில் சென்னையில் வெளியாகிய எந்திரன் முதல் மூன்று நாட்க்களில் இரண்டு கோடி (202 இலட்சம்) வசூல் செய்தது; மொத்தமாக 17 கோடிகளை சென்னையில் வசூலித்தது!!! எந்திரனை தொடர்ந்து அதிகமான முன்னணி நடிகர்களது திரைப்படங்கள் அதிக திரையரங்குகளில் வெளியாக ஆரம்பித்தது!!! அஜித்தின் மங்காத்தா ஐந்து நாட்களில் 1 கோடி 80 இலட்சம்வரை வசூலித்தது!! மொத்தமாக 8 கோடிகளுக்குமேல் வசூல்!! மங்காத்தா ரஜினி, கமலுக்கு அடுத்து சென்னையில் 8 கோடியை தொட்ட நடிகர் என்கின்ற பெருமையை அஜித்திற்கு பெற்றுக் கொடுத்தது!.

அதன் பின்னர் சென்னையில் சூர்யாவின் 7 ஆம் அறிவு திரைப்படம் ஓப்பினிங்காக ஐந்து நாட்க்களில் 2 கோடி 20 இலட்சத்தையும், விஜயின் வேலாயுதம் ஐந்து நாட்களில் 1 கோடி 95 இலட்சத்தையும் வசூலித்தன. வேலாயுதம் சென்னையில் 8 கோடி கடந்த முதல் விஜய் படமாகவும்; 7 ஆம் அறிவு ரஜினி, கமலுக்கு அடுத்து 9 கோடியை கடந்த நடிகராக சூர்யாவிற்கு பெருமையை தேடிக்கொடுத்தது. அதன் பின்னர் வெளிவந்த விக்ரமின் 'ராஜபாட்டை' மூன்று நாட்க்களில் 96 இலட்சம், விஜயின் 'நண்பன்' நான்கு நாட்க்களில் 1 கோடி 37 இலட்சம், தனுஸின் 'மயக்கம் என்ன' மூன்று நாட்க்களில் 97 இலட்சம், சிம்புவின் 'ஒஸ்தி' நான்கு நாட்களில் 1 கோடி 33 இலட்சம், தனுஸின் '3' மூன்று நாட்க்களில் 1 கோடி 31 இலட்சமும், உதயநிதியின் 'ஒரு கல் ஒரு கண்ணாடி' மூன்று நாட்க்களில் 1 கோடி 73 இலட்சத்தையும் வசூலித்திருக்கின்றன!!!

இவை அனைத்தும் இரண்டு வாரங்கள் முடிவதற்குள் குறைந்தபட்சம் சென்னையில் மட்டும் 3 கோடியை தொட்ட திரைப்படங்கள், இவற்றில் படு தோல்விப்படங்களான ராஜபாட்டை, ஒஸ்தி போன்றன சென்னையில் மட்டும் 3 கோடிகள் என்றால் தமிழ் நாடு + தெலுங்கு + வெளிநாடு என முதல் மூன்று நாட்க்களில் 20 கோடிகளையாவது வசூலித்திருக்கும்!!! இந்த திரைப்படங்களின் விநியோகம் 40 கோடிகள் என்றால், கிட்டத்தட்ட அரைவாசிப் பணமாவது மீள பெறப்பட்டிருக்கும்!! இதே திரைப்படங்கள் முன்னர் வெளியாகுவதுபோல குறைந்த திரையரங்குகளில் வெளியாகி இருந்தால் 10 கோடிகள் கூட தேறியிருக்காது. பெரிய நடிகர்களது திரைப்படங்கள் இப்பொது அதிக திரையரங்குகளில் வெளியாவதால் எப்படிப்பட்ட மோசமான திரைப்படமாக இருந்தாலும் முன்பதிவு மற்றும் எதிர்பார்ப்பால் முதல் 10 நாட்களுக்குள் (மக்கள் படம் மோசம் என்று புறக்கணிப்பதற்குள்) பாதிப் பணத்தையாவது தேற்றி விடுகின்றார்கள்.

அதே நேரம் திரைப்படம் நன்றாக இருந்தால் மூன்று வாரங்களுக்குள் லாபம் பார்த்துவிடுகின்றார்கள், ஐந்து வாரம் சிறப்பாக ஓடினால் திரைப்படம் மிகப்பெரும் வெற்றியை பெறுகின்றது; முன்னர் 200 நாட்கள் ஓடி பெறப்பட்ட வசூலை இப்போது 40 நாட்களுக்குள் பெற்று விடுகின்றார்கள்!! 2007 ஆம் ஆண்டின் Blockbuster Hit ஆன பில்லாவின் முதல் நான்குநாள் வசூலை இன்று 'ஒரு கல் ஒரு கண்ணாடி' கிட்டத்தட்ட ஒரே நாளில் பெறுகின்றதென்றால் இந்த மாற்றம் சிவாஜியால் (அபிராமி ராமநாதனால்) ஏற்ப்படுத்தப்பட்டது!! சிவாஜியை 'கமர்சியல் குப்பை' என்பவர்களுக்கு சிவாஜி தமிழ் சினிமாவின் வர்த்தகத்தில் ஏற்ப்படுத்திய மாற்றம் புரிந்தாலும் புரியாதது போலத்தான் இருப்பார்கள்!!!


இன்றைய தேதியில் தமிழ் சினிமாவின் சிறந்த ஓப்பினிங் யாருக்கு - ஒரு திரைப்படத்தின் ஓப்பினிங்கில் நடிகர்கள் ஆதிக்கம் செலுத்தினாலும், நடிகர்களால் மட்டும் மிகச்சிறந்த ஒப்பினிங்கை பெற்றுக்கொடுக்க முடியாது. நடிகர்களையும் தாண்டி ஒரு திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்புத்தான் ஓப்பினிங்கை தீர்மானிக்கின்றது; அந்த எதிர்பார்ப்பு பெரும்பாலும் குறிப்பிட்ட ஒரு நடிகரும், குறிப்பிட்ட ஒரு இயக்குனரும் சேரும்போதுதான் அதிகமாக ஏற்ப்படுகின்றது, இயக்குனரும் இசையமைப்பாளரும் இணையும்போது கூட எதிர்பார்ப்புக்கள் அதிகரித்த சந்தர்ப்பங்களும் உண்டு!!! இவைதவிர மிகைப்படுத்தப்பட்ட விளம்பரங்கள், வெற்றிபெற்ற கூட்டணி போன்றனவும் எதிர்பார்ப்பை எகிறவைக்கும் ஏனைய காரணிகள்.

திரைப்படத்தின் எதிர்பார்ப்பு தவிர்த்து; திரைப்படம் வெளியாகும் காலப்பகுதி, திரையரங்குகளின் எண்ணிக்கை போன்றவையும் ஒரு திரைப்படத்தின் ஓப்பினிங்கில் முக்கியத்துவம் செலுத்தும் முக்கிய காரணிகள்.


திரைப்படம் வெளியாகும் காலப்பகுதி - பண்டிகை/விசேட தினங்களில் வெளியிடப்படும் திரைப்படங்களுக்கு பெரும்பாலும் போட்டி இருக்கும்! போட்டிக்கு வேறு எதிர்பார்ப்புள்ள திரைப்படங்களும், சில சிறு திரைப்படங்களும் வெளிவரும் சந்தர்ப்பம் உண்டு; அதனால் அதிகமான திரையரங்குகளில் திரையிட முடியாத நிலை தோன்றலாம், இது நிச்சயம் பாதகமான நிலைதான்!!! ஆனால் பண்டிகை/விசேட தினங்களில் அதிகளவான மக்கள் திரையரங்கை நாடிப்போவதும், பண்டிகை காலமாகையால் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் இலவச விளம்பரங்களாக உதவிசெய்வதும் இந்தக்காலப்பகுதியில் திரைப்படங்களை வெளியிடுவதால் கிடைக்கும் சாதகமான தன்மைகள்.

அத்துடன் இரண்டு பெரிய திரைப்படங்கள் ஒரேநேரத்தில் போட்டிக்கு வெளியாகினால், அவ்விரு திரைப்படங்களில் நடித்த நடிகர்களது ரசிகர்கள் இருபடத்தையும் ஒப்பிடும் நோக்கில் அவ்விரு திரைப்படங்களையும் பெரும்பாலும் பார்வையிடுவார்கள், இதுகூட பண்டிகை காலங்களில் திரைப்படங்களின் ஓப்பினிங்கிற்கு கிடைக்கும் சாதகம்தான். அதே நேரம் பிறிதொருநாளில் தனியாக ஒரு பெரிய திரைப்படம் வெளியிடப்படும்போது மேற்சொன்ன சாதகங்கள் பாதகமாகவும், பாதகங்கள் சாதகமாகவும் அமையும்!!! அனாலும் பலரும் பண்டிகைகாலங்களில் திரைப்படங்களை வெளியிடவே விரும்புகின்றனர்!!! இயக்குனர் ஹரி, சரண் போன்ற கமர்சியல் இயக்குனர்கள் தங்கள் திரைப்படங்களை அதிகமாக பண்டிகை நாட்களில் வெளியிட விரும்புவதே வழக்கம்; காரணம் கமர்சியல் திரைப்படங்கள் Festival mode இல் அதிகமாக மக்களிடம் எடுபடும் என்பதுதான்!!!

திரையரங்குகளின் எண்ணிக்கை - பெரிய திரைப்படங்களை பொறுத்தவரை எவ்வளவுக்கெவ்வளவு அதிக திரையில் வெளியிடுகின்றார்களோ அவ்வளவுக்கவ்வளவு அதிக ஒப்பினிங்கை பெறமுடியும், இது தயாரிப்பாளர், வினியோகிஸ்தர் கைகளில்த்தான் உண்டு. படத்தின் எதிர்பார்ப்பை பொறுத்தே திரையரங்கங்களின் எண்ணிக்கை தீர்மானிக்கப்பட்டாலும், பண்டிகை காலங்களில் பல திரைப்படங்கள் வருவதால் அதிகமான திரையரங்குகள் கிடைப்பதில்லை; அதிகமான மற்றும் சிறந்த திரையரங்கை பெற்றுக்கொள்ளும் புத்திசாலி விநியோகிஸ்தர் அதிக ஓப்பினிங்கை பெற்றுக்கொள்ளுவார்!!


ரஜினிகாந்த் - சிவாஜி வரும்வரை சந்திரமுகியின் ஓப்பினிங்கை எந்த திரைப்படமும் தாண்டவில்லை, எந்திரன் வரும்வரை சிவாஜியின் ஓப்பினிங்கை எந்த திரைப்படமும் தாண்டவில்லை, எந்திரன் வெளிவந்து 2 ஆண்டுகள் ஆகியும் எந்திரனின் ஓப்பினிங்கை எந்த திரைப்படமும் நெருங்கவில்லை, ரஜினியின் முழுநீளத் திரைப்படமல்லாத குசேலன் திரைப்படத்தின் சென்னை ஓப்பினிங் மூன்று நாட்களில் 84 இலட்சம்; அன்றைய தேதியில் இது சிவாஜி, தசாவதாரம் திரைப்படங்களுக்கு அடுத்து மூன்றாவது மிகப்பெரும் ஓப்பினிங்!! ஒவ்வொரு ரஜினியின் திரைப்படத்திற்கும் உள்ள அதிகபட்ச எதிர்பார்ப்புத்தான் ஓவ்வொரு தடவையும் மிகப்பெரிய ஓப்பினிங் அமைய காரணம். எந்திரனது மிகப்பெரும் ஓப்பினிங்கிற்கு ரஜினி தவிர இயக்குனர் ஷங்கர், ரஜினி & ஷங்கர் கூட்டணி, சண் பிக்சர்ஸின் மாக்கெட்டிங், அதிகளவு திரையரங்குகளில் வெளியிடப்பட்டமை போன்றவையும் முக்கிய காரணிகள்.

கமல் - கிட்டத்தட்ட சிவாஜிக்கு இணையான ஓப்பினிங்கை தசாவதாரம் பெற்றாலும் மிகப்பெரும் எதிர்பார்ப்புக்களுடன் வெளியிடப்பட்ட 'மன்மதன் அம்பு' சென்னையில் நான்கு நாட்க்களில் 94 இலட்சங்களை மாத்திரமே வசூலித்தது!!! இரண்டு திரைப்படங்களிலும் கமல்தான் நாயகன், ரவிக்குமார்தான் இயக்குனர், அசினுக்கு பதில் திரிஷா, மாதவன் வேறு நடித்திருந்தார், மற்றும் தசாவதாரத்திற்கு பின்னர் வருவதனால் கூடுதல் எதிர்பார்ப்பு வேறு!! அப்படி இருந்தும் தசாவதாரம் மூன்று நாட்க்களில் பெற்ற வசூலை மன்மதன் அம்பு நான்கு நாட்களில்கூட பெறவில்லை!! அதற்க்குக் காரணம் கமலின் 10 கெட்டப் என்பதால் தசாவதாரத்திற்கு இருந்த மலையளவு எதிர்பார்ப்பு, அந்த எதிர்பார்ப்பு அதன் பின்னரான மற்றைய கமல் படங்களுக்கு அமையவில்லை, விஸ்வரூபத்தில் அமைகிறதா என பார்ப்போம்!!

அஜித் - King of Opining, Gilli Of Kollywood போன்ற சொற்களால் ஆங்கில இலத்திரனியல் ஊடகங்களால் புகழப்படும் நடிகர். மிகக் குறைவான விளம்பரங்களுடன்; தொலைக்காட்சிகளுக்கு பேட்டிகள் கொடுக்காமல்; பெரிய பானர், பெரிய இயக்குனர் என பெரிய கூட்டணி இல்லாமல்; எத்தனை தோல்விகளை தொடர்ந்து கொடுத்தாலும் அடுத்துவரும் ஒவ்வொரு திரைப்படத்திற்கும் ரசிகர்கள் கொடுக்கும் மலையளவு வரவேற்ப்பை வைத்துத்தான் அஜித்திற்கு மேற்சொன்ன பட்டங்கள் அடைமொழியாக கொள்ளப்படுகின்றது!! அஜித்தை பொறுத்தவரை எந்த திரைப்படத்திற்கும் 95 % ஓப்பினிங் ரசிகர்களால் கொடுக்கப்படும்; ஆனாலும் அஜித் திரைப்படங்களில் அஜித்தின் பட்டப் பெயர்களை மெய்ப்பிக்கும் வகையில் அதிகம் ஓப்பினிங் வசூலை கொடுத்த திரைப்படங்கள் 'பில்லா' மற்றும் 'மங்காத்தா' திரைப்படங்கள்தான்; அன்றைய தேதியில் 'பில்லா' சிவாஜிக்கு அடுத்து மிகப்பெரிய ஓப்பினிங், 'மங்காத்தா' எந்திரனுக்கு அடுத்து மிகப்பெரிய ஓப்பினிங் !!!

விக்ரம் - 2005 ஆம் ஆண்டுக்கு பின்னர் சொல்லிக்கொள்ளும்படி பெரிதாக வெற்றித் திரைப்படங்கள் இல்லை, ஆனாலும் விக்ரமின் ஒவ்வொரு திரைப்படத்திற்கும் கிடைக்கும் ஓப்பினிங் மிக அதிகம்!! அதற்க்கு காரணம் விக்ரம் மாத்திரமன்னு!! அந்தந்த திரைப்படங்கள் மீதான அளவுக்கதிகமான எதிர்பார்ப்புக்கள்தான் (அதிகமான திரைப்படங்கள் தோற்க்கவும் அவைதான் காரணம்) அதிக ஓப்பினிங் கிடைக்க முக்கிய காரணம். விக்ரம், சுசிகணேசன் கூட்டணியில் மிகப்பெரும் எதிர்பார்ப்போடு வெளிவந்த கந்தசாமி திரைப்படத்தின் ஓப்பினிங் சென்னையில் மூன்று நாட்களில் 93 இலட்சங்கள்; இந்த தொகையை கடக்க அஜித் மங்காத்தாவரையிலும், விஜய் வேலாயுதம் வரையிலும், சூர்யா 7 ஆம் அறிவிவு வரையிலும் காத்திருக்கவேண்டி வந்தது!!! அதேபோல மணிரத்தினம், விக்ரம் கூட்டணியில் மிகப்பெரும் எதிர்பார்ப்பில் வெளிவந்த ராவணன் சென்னையில் மூன்று நாட்களில் 88 இலட்சங்களை வசூலித்தது!!! தெய்வத்திருமகள், ராஜபாட்டை போன்ற திரைப்படங்களும் மூன்று நாட்க்களில் முறையே 80, 95 இலட்சம்வரை வசூலித்திருந்தது!!



விஜய் - வேலாயுதம் திரைப்படம் வரை மிகப்பெரிய ஓப்பினிங் எதுவும் விஜய்க்கு அமையவில்லை! அதற்க்கு முந்தய திரைப்படங்களில் சண் பிக்சர்ஸின் விளம்பர உதவியுடன் 'வேட்டைக்காரன்' மூன்று நாட்களில் எட்டிய 89 இலட்சங்கள்தான் சென்னையில் விஜயின் அதிகபட்ச ஓப்பினிங். வேலாயுதம் விஜய்க்கு மிகப்பெரிய ஓப்பினிங்கை பெற்றுக் கொடுத்தாலும் அதிக திரையரங்குகளில், அதிக எதிர்பார்ப்போடு வெளியாகிய '7 ஆம் அறிவின்' ஓப்பினிங்கை தாண்டமுடியவில்லை!!! ஷங்கர், விஜய் கூட்டணியில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட 'நண்பன்' திரைப்படம் சிறப்பான ஓப்பினிங்கை பெற்றாலும் முன்னைய வேலாயுதத்தை கடக்கவில்லை!!

அதிகளவில் ரசிகர்கள் இருந்தாலும் ஒவ்வொரு காலகட்டத்திலும் போட்டி நடிகர்களைவிட குறைவான ஓப்பினிங்கை விஜய் பெற இரண்டு முக்கிய கரணங்கள் 1) பெரிய பானர், பெரிய இயக்குனர், பெரிய பட்ஜெட் என பொதுவான ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பை தூண்டும் பெரிய பட்ஜெட் திரைப்படங்கள் எதிலும் விஜய் நடிக்காமையும் 2) அதிகளவிலான விஜய் ரசிகர்கள் பெண்களாகவும், குழந்தைகளாகவும் இருப்பதால் முதல் வாரம் திரையரங்கு செல்வதற்கு சாத்தியகுறைவு உள்ளமையும் முக்கிய காரணங்கள். ஆனாலும் விஜய் ரசிகர்களால் கொடுக்கப்படும் ஓப்பினிங் அண்மைக்காலங்களில் முன்னரைவிட கணிசமான அளவு அதிகரித்து வருகின்றது!! முருகதாஸ், விஜய் இணையும் கமர்சியல் கூட்டணி என்பதால் விஜய் படங்களில் அதிகளவு ஓப்பினிங் பெற்ற திரைப்படமாக துப்பாக்கி அமையலாம்!!!

சூர்யா - இதுவரை சூர்யாவிற்கென்று தனிப்பட்ட ரீதியில் பெரியளவு ஓப்பினிங் கிடைக்கவில்லை ஆயினும் சூர்யா சேரும் கூட்டணியை பொறுத்து அவரது ஓப்பினிங் வசூல் மாறுபடும். சூர்யாவின் சிங்கம் திரைப்படத்தின் ஓப்பினிங் சென்னையில் மூன்று நாட்க்களில் 77 இலட்சம்தான், ஆதவனின் மூன்றுநாள் வசூல் சென்னையில் 54 இலட்சம்தான்; ஆனால் 7 ஆம் அறிவின் முதல் ஐந்துநாள் வசூல் 2 கோடி 20 இலட்சம்; இது '7 ஆம் அறிவு' திரைப்படத்தின் மீதான மிகப்பெரும் எதிர்பார்ப்புக்கு கிடைத்த ஓப்பினிங், 'ஒரு கல் ஒரு கண்ணாடி' வரும்வரை இதுதான் மிகப்பெரும் ஓப்பினிங்!!!(எந்திரன் தவிர்த்து) இதேபோல முன்னரும் ஒருதடவை 'வாரணம் ஆயிரம்' வரும்போது சூர்யாவிற்கு மிகப்பெரும் ஓப்பினிங் கிடைத்தது; சென்னையில் மூன்று நாட்க்களில் அன்று 75 இலட்சம்வரை வசூலானது; இது அன்று அஜித், விஜய் எட்டாத தொகை; காரணம் கௌதம் மேனன், சூர்யா கூட்டணிமீதான பெரும் எதிர்பார்ப்பு!!! இந்த தொகையை சூர்யாவின் மிகப்பெரும் வெற்றித் திரைப்படமான அயன்கூட எட்டவில்லை!!!!



தனுஷ், சிம்பு - மாறிமாறி இருவரும் தமது சாதனைகளை முறியடித்துக்கொண்டு வருகின்றார்கள்; கௌதம் மேனன், ஏ.ஆர்,ரகுமான் கூட்டணிமீதான எதிர்பார்ப்பால் 'விண்ணைத்தாண்டி வருவாயா' மூன்று நாட்களில் 64 இலட்சங்களை சென்னையில் வசூலித்தது. செல்வராகவன், தனுஸ் கூட்டணி மீதான எதிர்பார்ப்பில் 'மயக்கம் என்ன' மூன்று நாட்க்களில் 97 இலட்சங்களை வசூலித்தது. சிம்புவின் 'ஒஸ்தி' நான்கு நாட்களில் 1 கோடி 33 இலட்சங்களை வசூலித்தது. கொலைவெறி கொடுத்த எதிர்பார்ப்பால் தனுஸின் '3' திரைப்படம் மிகப்பெரும் ஓப்பினிங்கான ஒரு கோடி 31 இலட்சங்களை சென்னையில் வசூலித்திருக்கின்றது!!! இது ஒரு மிகப்பெரிய தொகை!!! இருவருக்கும் ஒவ்வொரு திரைப்படமும் ஏறுமுகத்தில் ஓப்பினிங்கை கொடுத்துக்கொண்டிருப்பது இருவருக்கு ஆரோக்கியமான விடயம்!!

கார்த்தி - முதல் திரைப்படமான பருத்தி வீரனுக்கு எதிராபார்க்காதளவிற்கு மிகப்பெரியளவில் ஓப்பினிங் கிடைத்தது; காரணம் இயக்குனர் அமீரா, சூர்யாவின் தம்பி என்கின்ற கார்த்தி மீதான எதிர்பார்ப்பா என்பது பதில் தெரியாத கேள்வி!! அதனை தொடர்ந்து கார்த்தியின் ஒவ்வொரு திரைப்படத்திற்கும் சிறந்த ஓப்பினிங் கிடைத்துக்கொண்டே இருக்கின்றது!!! கார்த்திக்கு அடுத்து நடிகர்களில் விஷால், ஜீவா, ஆர்யா போன்றோருக்கும் கணிசமான ஓப்பினிங் கிடைக்கின்றது!!!

நடிகர்களை தாண்டியும் ஒரு சில திரைப்படங்களுக்கு எதிர்பார்க்காதளவிற்கு ஓப்பினிங் கிடைத்திருக்கின்றது; அப்படியான இரு சந்தர்ப்பங்கள் சிலவருடங்களுக்குள் நிகழ்ந்துக்கான 1) வடிவேலுவின் 'இந்திரலோகத்தில் நா அழகப்பன்', 2) ராஜேஷ் சந்தானம் எதிர்பார்ப்பில் வெளிவந்த 'ஒரு கல் ஒரு கண்ணாடி'. 'இந்திரலோகத்தில் நா அழகப்பன்' முதல் மூன்று நாட்க்களில் சென்னையில் 40 இலட்சங்கள்வரை வசூலித்தது, இது அன்று எந்த விஜய், சூர்யா திரைப்படங்களும் வசூலிக்காத ஓப்பினிங்!! அதற்க்கு காரணம் 'இம்சை அரசன்' திரைப்படத்தால் வடிவேலுவுக்கு ஏற்ப்பட்ட எதிர்பார்ப்புத்தான்!!

இன்று ஒரு கல் ஒரு கண்ணாடி யாருமே எதிர்பார்க்காத அளவிற்கு முதல் மூன்று நாட்களில் சென்னையில் 1 கோடி 73 இலட்சம்வரை வசூலித்திருக்கின்றது; இது ஒரு மிகபெரும் தொகை!!! அஜித், விஜய், சூர்யா போன்ற மிக அதிகமான ரசிகர்களை கொண்ட நடிகர்களது திரைப்படங்களின் வசூலை அறிமுக நாயகன் உதயநிதியின் திரைப்படம் எப்படி கடந்து சென்றது!!! காரணம் உதயநிதி அல்ல என்பது உதயநிதிக்கும் தெரியும். அப்படிஎன்றால் இந்த ஓப்பினிங் யாருக்கு? சந்தானத்திற்க்கா? இல்லை இயக்குனர் ராஜேஷிற்கா? இருவரும் தனித்தனியாக இல்லை, இருவரும் ஒன்றாக சேர்ந்த கூட்டணிக்குத்தான் இந்த ஓப்பினிங்!!!


சந்தானம் இல்லாமல் ராஜேஷ் ஒரு படத்தை இயக்கினாலோ, ராஜேஷ் இல்லாமல் சந்தானம் வேறு திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்ததாலோ இந்த ஓப்பினிங் நிச்சயமாக சாத்தியமில்லை. இருவரும் சேரும்போது ஏற்ப்பட்ட எதிர்பார்ப்புத்தான் இந்த ஓப்பினிங்கின் இரகசியம்!!! மற்றும் விஷேடதினங்களிலேயே அதிக மக்கள் திரையரங்குவரும் சித்திரை புத்தாண்டு (காரணம் கோடைவிடுமுறை) தினத்தில் போட்டிக்கு வேறெந்த திரைப்படமும் வராமையும் இதன் பலம். டிரெயிலர் மற்றும் தமது முன்னைய திரைப்படங்கள் மூலம் இதுவொரு பக்கா காமடி பொழுதுபோக்கு திரைப்படம் என்பதை படக்குழு தெளிவாக மக்களுக்கு உணர்த்தி இருந்தமையால் எல்லா நடிகர்களின் ரசிகர்களும் இந்த திரைப்படத்தை விரும்பி எதிர்பார்த்திருந்தனர், அதுதான் இந்த திரைப்படம் அதிகளவு ஓப்பினிங் பெற முக்கிய காரணம்!!!

ஒரு ஹீரோதான் ஓப்பினிங்கின் காரணகர்த்தா என்றால் ரஜினிக்கு அடுத்து தமிழ் சினிமாவின் மிகப்பெரிய ஓப்பினிங் உதயநிதிக்குத்தான்!! இதை யாரவது ஒத்துக்கொள்வார்களா? ஓப்பினிங் என்பது ஹீரோவைவிட அந்த திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பில்த்தான் எப்போதும் தங்கி இருக்கின்றது; அதிகமாக ஹீரோக்கள்தான் அந்த எதிர்பார்ப்பிற்கு காரணமாக அமைவதால் ஹீரோக்களை முன்னிறுத்தி ஓப்பினிங் சொல்லப்படுகிறது. ஆனாலும் ஹீரோக்களைதாண்டி எதிர்பார்ப்புக்கள் அதிக ஓப்பினிங்கை பெறுவது அப்பப்போ இடம்பெற்றுக் கொண்டுதான் இருக்கின்றது, இனியும் இடம்பெறும்!!!

குறிப்பு :- 

* ஒரு திரைப்படத்தின் ஓப்பினிங்கிற்கும் அதன் வெற்றிக்கும் சம்பந்தமில்லை.

* பதிவில் சென்னை பாக்ஸ் ஆபீஸ் மட்டுமே பெறுமதிகளில் சொல்லப்பட்டுள்ளது.

* Behindwoods தளம் 2007 ஆம் ஆண்டுமுதல் வாரவாரம் தவறாமல் சென்னை பாக்ஸ் ஆபீஸ் ரிப்போட் கொடுத்துக்கொண்டு இருக்கின்றது, இங்கு சொல்லப்பட்ட விபரங்கள் அதன் அடிப்படையில்த்தான் சொல்லப்பட்டிருக்கின்றது!!! 100 % நம்பகத்தன்மை உண்டென்று சொல்லமுடியாவிட்டாலும் Behindwoods பக்கச்சார்பான தளமில்லை என்பதை அனைத்து நடிகர்களும் Behindwoods உடன் கொண்டிருக்கும் நெருக்கம் உணர்த்துகின்றது!!!

* ஒரு திரைப்படம் வெளியாகியவுடன் சொல்லப்படும் மொத்த, சில்லறை வசூல்கள் எவையும் ஆதாரம் இல்லாமல் குறிப்பிட்ட தரப்புக்களால் சொல்லப்படுபவை என்பதால் அவ்வாறு சொல்லப்பட்ட எந்த இலக்கங்களையும் இந்த பதிவில் சேர்த்துக்கொள்ளவில்லை.

* Official இல்லாவிட்டாலும் கடந்த 5 ஆண்டிகளாக மூன்று இடங்களுக்கு பாக்ஸ் ஆபீஸ் ரிப்போட் வாராவாரம் வெளிவந்துகொண்டிருக்கின்றன; சென்னை, UK, மலேசியா (இவை பக்கச்சார்ப்பில்லாத நம்பகமான தளங்கள்)

* இவ்வளவு தொளில்நுட்பம் வளர்ச்சி அடைந்த நிலையிலும் தமிழ் சினிமாவின் தயாரிப்பாளர், விநியோகிஸ்தர்கள் இதுவரை ஒரு திரைப்படத்தின் உண்மையான வசூலை வாரவாரம் வெளியிடுமளவிற்கு இன்னமும் தயாராகாதது ஏன் என்று புரியவில்லை!!! வருமானவரிக்காகவா ? இல்லை நடிகர்களின் இமேஜை காப்பாற்றவா? Official ஆக வாராவாரம் Box Office இனை அறிவித்தால் எல்லோருக்குமே நல்லது; குறிப்பாக சமூகத்தளங்களில் ரசிகர்களது சண்டையும் நேரமும் அதிகளவில் மிச்சமாகும், அத்துடன் போலியாக ஆளாளுக்கு கணக்கு காட்டி ரசிகர்களை ஏமாற்றி இணையத்தை ஓட்டுவதும் குறைவடையும்!! குறிப்பாக தொலைக்காட்சிகளில் தோன்றி அவ்வளவு வசூல், இவ்வளவு வசூல் என கதை அளந்து மக்களை ஏமாற்றும் படக்குளுவினர்களது நாடகங்களும் உடைபட்டுப் போகும்!!

*--------*

29 வாசகர் எண்ணங்கள்:

Unknown said...

ம்ம்ம்..நிறைய மினக்கெட்டிருக்கிறீங்க பாஸ்!

//ஒரு திரைப்படத்தின் ஓப்பினிங்கிற்கும் அதன் வெற்றிக்கும் சம்பந்தமில்லை//
இது மேட்டர்!!

Unknown said...

அப்புறம் எந்திரனை நண்பன் முந்தின விஷயத்தை மண்டைல ஏத்திறதா வேணாமான்னு டாக்டர் விஜய் ரொம்ப அவையடக்கத்தோட, பெருந்தன்மையோட குழம்பிட்டு இருந்தாருல்ல!

பாவங்க அவரு ரொம்ப நல்லவரு...சொந்தமா யோசிக்கவோ தெரியாத வெள்ளந்தி! எல்லாம் சந்துமாமா சொல்லிகுடுக்கிறது!

Unknown said...

//அஜித் - பெரிய பானர், பெரிய இயக்குனர் என பெரிய கூட்டணி இல்லாமல்//
ஆமா பாஸ்! நல்ல இயக்குனர், கதைகள் எல்லாத்தையும் கோட்டை விட்டுட்டு தேடித்தேடி மொக்கைப் படமா நடிச்சுக்கிட்டு (நடந்துக்கிட்டு) இருக்காப்ல!

பாலா said...

நட்சத்திர பதிவர் ஆனதற்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள். சிறப்பான பணியை வெளிப்படுத்துங்கள். பதிவை படித்து விட்டு வருகிறேன்

பாலா said...

மிக தெளிவாக, நேர்மையாக எழுதி இருக்கிறீகள். கடுமையாக உழைத்திருப்பது தெரிகிறது. சுறாவை விட்டு விட்டீர்களே?

Jayadev Das said...

ஓபினிங் என்பது குறித்து பதிவின் ஆரம்பத்தில் விளக்கமாகச் சொல்லி இருந்தது இந்தப் பதிவை படிப்பதற்கு மிகவும் உதவியாக இருந்தது. படம் வாரத்தின் எந்த நாள் ரிலீஸ் ஆனாலும் சரி, எத்தனை தியேட்டரில் ரிலீஸ் ஆனாலும் சரி, ஞாயிற்றுக்குக் கிழமையோடு கணக்கை குளோஸ் செய்து ஒபினிங்கை கணக்கிடுவதில் என்ன லாஜிக் என்று புரியவில்லை.

Jayadev Das said...

\\சில திரைப்படங்கள் ஆரம்ப நாட்க்களில் மந்த கதியில் நகர்ந்து தோல்விப்படம் என முத்திரை குத்தப்பட்ட பின்னர்கூட வாய்வழியாக ( Word of Mouth) மற்றும் ஊடகங்களின் விமர்சனங்கள் மூலம் Late pick up ஆகி நாட்கள் போகப்போக கூட்டம் அதிகமாகி வசூலை அள்ளிய வரலாறுகளும் உண்டு;\\ படம் பார்த்துவிட்டு ரசிகர்கள் படம் எப்படியிருக்கிறது என்று மற்றவர்களுக்குச் சொல்வதன் மூலம் மட்டுமே ஒரு படம் Late pick up ஆக முடியும் என நான் நினைக்கிறேன். விளம்பரங்கள் மூலம் கொஞ்சம் எபெக்ட் இருக்கலாம், ஆனால் அது சொல்லிகொள்ளும் அளவுக்கு ஒரு படத்தின் வசூலைத் தூக்கிவிடும் என்று நான் நினைக்கவில்லை.

Jayadev Das said...

தற்போது படம் வெளியான ஓரிரு நாட்களிலேயே இணையத்தில் நல்ல பிரின்ட் கிடைக்க ஆரம்பித்துவிடுகிறது, இது தயாரிப்பாளர்களுக்கு பெரிய இடிதான். அபிராமி ராமநாதன் இதைத் தவிர்க்க செய்த டெக்னிக்கை உற்று கவனித்திருக்கிறீர்கள், இணையத்தில் இதற்க்கு முன்னர் யாரும் இந்த அளவுக்கு விரிவாக இந்தத் தகவலைத் தந்து இருக்கிறார்களா என்று தெரியவில்லை. Good!!

Jayadev Das said...

\\சிவாஜியை 'கமர்சியல் குப்பை' என்பவர்களுக்கு சிவாஜி தமிழ் சினிமாவின் வர்த்தகத்தில் ஏற்ப்படுத்திய மாற்றம் புரிந்தாலும் புரியாதது போலத்தான் இருப்பார்கள்!!!\\ ரஜினியின் முத்து, அண்ணாமலை படங்களைப் பார்த்தால் சிவாஜி படத்தின் கதை, எடுத்திருந்த விதம் அவ்வளவாக சொல்லிக் கொள்ளும்படி இல்லை. முந்தைய ஷங்கர் படங்களையே கலந்துகட்டி அடிச்ச மாதிரிதான் இருந்தது. படத்தில் ரஜினியின் நடிப்பை எல்லோரும் பாராட்டினாலும், ஷங்கரை 'பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம்' என்று சொல்லி எல்லோருமே திட்டித் தீர்த்தார்கள்.

Jayadev Das said...

\\தசாவதாரத்தை தொடர்ந்தும் அதிக திரையரங்கில் வெளியாகி அதிக ஓப்பினிங்கை பெற்ற திரைப்படம் 'குசேலன்', மூன்று நாட்களில் 84 இலட்சம்வரை வசூலித்தது. பின்னர் விக்ரமின் 'கந்தசாமி' திரைப்படத்தை பெரிய பட்ஜெட், எதிர்பார்ப்பு போன்ற காரணத்தால் அதிகளவு திரையில் திரையிட்டார்கள், எதிர்பார்த்ததுபோல மூன்று நாட்க்களில் 93 இலட்சம் வசூலாக கிடைத்தது!! அதனை தொடர்ந்து வேட்டைக்காரன் மூன்று நாட்க்களில் 89 இலட்சம், ராவணன் மூன்று நாட்க்களில் 88 இலட்சம் என சராசரியாக ஒரு நாளுக்கு கிட்டத்தட்ட 30 இலட்சங்களை அதிக திரையரங்குகளில் வெளியிடப்பட்ட திரைப்படங்கள் பெற்றுக்கொடுத்தன!\\ படத்தை பார்த்துவிட்டு படம் எப்படி இருக்கிறது என்று வாய் வழியாக செய்தி பரவுவதற்கு முன்னால் காசை அள்ளி விடுவது - இது செம ஐடியா...!!

Jayadev Das said...

\\அதிகளவில் ரசிகர்கள் இருந்தாலும் ஒவ்வொரு காலகட்டத்திலும் போட்டி நடிகர்களைவிட குறைவான ஓப்பினிங்கை விஜய் பெற இரண்டு முக்கிய கரணங்கள் 1) பெரிய பானர், பெரிய இயக்குனர், பெரிய பட்ஜெட் என பொதுவான ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பை தூண்டும் பெரிய பட்ஜெட் திரைப்படங்கள் எதிலும் விஜய் நடிக்காமையும் 2) அதிகளவிலான விஜய் ரசிகர்கள் பெண்களாகவும், குழந்தைகளாகவும் இருப்பதால் முதல் வாரம் திரையரங்கு செல்வதற்கு சாத்தியகுறைவு உள்ளமையும் முக்கிய காரணங்கள். \\ விஜயை உங்களுக்கு பிடிக்காதுன்னு நினைக்கிறேன்!! ஹா...ஹா..ஹா.... விஜய் படங்கள் ஓபினிங் எப்படி இருந்தாலும், போட்ட பணத்துக்கு கியாரண்டி, பெரும்பாலும் லாபம் இருக்கும், குறைந்த செலவில் நிறைந்த வருமானம் என்று நம்பி வாங்கலாம் என்று சொல்லிக் கொள்கிறார்கள்.

Jayadev Das said...

\\ஒரு ஹீரோதான் ஓப்பினிங்கின் காரணகர்த்தா என்றால் ரஜினிக்கு அடுத்து தமிழ் சினிமாவின் மிகப்பெரிய ஓப்பினிங் உதயநிதிக்குத்தான்!! \\ OK...OK... படம் ஓடியது சந்தானத்துக்காகவும், இயக்குனருக்காகவும் தான் என்பதை உதயநிதியே வெளிப்படையாக ஒப்புக் கொள்கிறார். இவர் ஒரு வெற்றி நாயகனாக நிலைத்து நிர்ப்பாரா என்பதை காலம்தான் சொல்ல வேண்டும்!!

Jayadev Das said...

\\* இவ்வளவு தொளில்நுட்பம் வளர்ச்சி அடைந்த நிலையிலும் தமிழ் சினிமாவின் தயாரிப்பாளர், விநியோகிஸ்தர்கள் இதுவரை ஒரு திரைப்படத்தின் உண்மையான வசூலை வாரவாரம் வெளியிடுமளவிற்கு இன்னமும் தயாராகாதது ஏன் என்று புரியவில்லை!!!\\ படம் நன்றாக ஓடினால் பரவாயில்லை, ஒருவேளை டல்லடிக்குதுன்னு வச்சுக்குவோம், வசூல் நிலவரம் கேவலமாக இருக்கும், படத்துக்கு போகலாம்னு நினைக்கிறவனும் போக மாட்டான். படம் ஓடினால் இதை வெளியிடலாம், ஓடவில்லை என்றால் வெளியிட முடியாது. வசூல் நிலவரத்தை வெளியிட வில்லை என்றாலே, படம் ஊத்திகிச்சு என்பதை தயாரிப்பாளரே ஒப்புக் கொண்ட மாதிரி ஆகிவிடும். இது சொந்த செலவுலேயே சூனியம் வச்சுகிற மாதிரி ஆயிடுமே!!

Jayadev Das said...

ஓட்டுப் பட்டையெல்லாம் தூங்கிகிட்டே இருக்கே, என்ன சமாச்சாரம்!!

"ராஜா" said...

உங்கள் பதிவில் சென்னையை மட்டுமே சொல்லியுள்ளீர்கள்... தமிழகத்தின் குக்கிராமங்களையும் கணக்கில் எடுத்து கொண்டால் ரஜினிக்கு அடுத்து அஜீத் வந்துவிடுவார்... சுமார் பத்து வருடங்களுக்கு முன்னாள் ரெட் மற்றும் பம்மல் கே சம்பந்தம் இரண்டு படங்களும் எங்கள் ஊரில் ஒரே காம்ப்ளக்ஸ் அரங்குகளில் வெளியிடபட்டிருந்தன ... ரெட் படம் அரங்கம்நிறைந்து பாதி பேருக்குமேல் டிக்கெட் கிடைக்காமல் சென்றனர் ,ஆனால் பக்கத்தில் பம்மலுக்கு காத்து வாங்கி இருந்தது ...

அதே போல சென்னைக்கு அடுத்து திரைபடங்கள் அதிகம் வசூல்லிக்கும் இன்னொரு பகுதி மதுரை மற்றும் அதனை சுற்றி இருக்கும் பகுதிகள் , அங்கு மட்டும் பெரிய நடிகர்களின் படங்கள் குறைந்தது 40 திரையரங்குகளில் வெளியாகும்... மதுரை , விருதுநகர் , ராஜபாளையம் ,சிவகாசி , மேலூர் , அருப்புக்கோட்டை , காரைக்குடி , கம்பம் ,தேனி என்று அது ஒரு பெரிய மார்க்கெட் , ரஜினி , அஜித் , மற்றும் பெரிய இயக்குனர்களின் இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் படங்கள் மட்டுமே பெரிய அளவில் ஒபெனிங்க் கொடுக்கும் ... ரஜினி படங்கள் ஒவ்வொரு ஊரிலும் குறைந்தது இரண்டு அரங்குகளில் வெளியாகும் , முதல் நாள் 100 சதவீதத்துக்கும் அதிகமான ஒபெனிங்க் கிடைக்கும் , சமீபத்தில் மதுரை எரியாவில் மிகப்பெரிய ஒபெனிங்க் அமைந்தது மங்காத்தா படத்திற்க்குதான் , 200 சதவீத ஒபெனிங்க் அது ,

அதேபோல கேப்டன் படங்களுக்கும் இன்றுகூட நல்ல ஒபெனிங்க் உண்டு மதுரை எரியாவில் ...

மற்ற நடிகர்களின் படங்கள் நன்றாக இருந்தால் மட்டுமே அடுத்தடுத்த வாரங்களில் அரங்கம் நிறையும்

baleno said...

தமிழ்மண நட்சத்திரமானதிற்கு வாழத்துகள்.

N.H. Narasimma Prasad said...

நல்ல, அருமையான, விரிவான பதிவு. ஆனால் முதன் முதலில் அதிக தியேட்டர்களில் திரைப்படத்தை வெளியிட்டது நடிகர் கமல்ஹாசன் தான். படம் 'ஆளவந்தான்'. அதற்க்கு கமல் சொன்ன காரணம், 'நமக்கு வாழைப்பழம் வேண்டுமென்றால் அது பக்கத்து பெட்டிகடையிலேயே கிடைக்க வேண்டும். அதேபோல நாம் சினிமா பார்க்க வேண்டுமென்றால், அந்த படம் நம் அருகில் இருக்கும் தியேட்டரிலேயே வெளியிடப்பட்டிருக்க வேண்டும்' என்று. உபயம்: ஆனந்த விகடன். பகிர்வுக்கு நன்றி.

Unknown said...

உதயநிதி படத்துக்கு இவ்வளவு பெரிய ஓப்பெனிங்'ஆ'ன்னு வாயப் பொளக்குதாம் தமிழ் சினிமா....!!!
திமுக'ல 1 கோடி மக்கள் சினிமா பிரியர்கள் ஒரு 1 கோடி மக்கள் தலைக்கு 50 ரூபா கொடுத்தா ரூ.100 கோடி வசூல்...
#சிரிப்பு போலீஸ் மாதிரி #சிரிப்பு இன்கம் டேக்ஸ்'வாலாக்கள் இருக்கும் வரை - ஒரு கல்(லும்) ஒரு காமெடிதான்

SathyaPriyan said...

நல்ல பதிவு.

//
2007 ஆம் ஆண்டின் Blockbuster Hit ஆன பில்லாவின் முதல் நான்குநாள் வசூலை இன்று 'ஒரு கல் ஒரு கண்ணாடி' கிட்டத்தட்ட ஒரே நாளில் பெறுகின்றதென்றால் இந்த மாற்றம் சிவாஜியால் (அபிராமி ராமநாதனால்) ஏற்ப்படுத்தப்பட்டது.
//
ஒரு தகவலுக்காக இதை குறிப்பிடுகிறேன். இம்மாதிரி முதல் வார இறுதியிலேயே பெரும் வசூலை பெறலாம் என்று அறிந்து அதை தமிழில் தொடங்கியவர் கமல் தான். சிவாஜிக்கு ஆறு ஆண்டுகளுக்கு முன்பே வெளி வந்த ஆளவந்தான் அப்படி வெளியிடப்பட்டது தான். ஆனால் ஆளவந்தானின் படுதோல்வியினால் அது கவனிக்கப்படாமல் போய்விட்டது. அப்பொழுது பலரும் இந்த முயற்சி வேலைக்காகாது என்று கூறினார்கள். ஆனால் அதை தூசி தட்டி மீண்டும் கொண்டு வந்தது ஷங்கர்.

//
சிவாஜியை 'கமர்சியல் குப்பை' என்பவர்களுக்கு சிவாஜி தமிழ் சினிமாவின் வர்த்தகத்தில் ஏற்ப்படுத்திய மாற்றம் புரிந்தாலும் புரியாதது போலத்தான் இருப்பார்கள்!!!
//
கமர்ஷியலோ, குப்பையோ. ஆனால் ரஜினியின் முந்தைய படங்களான பாட்ஷா, அண்ணாமலை, முத்து, படையப்பா போன்றவற்றை ஒப்பிடும் பொழுது சிவாஜியை சிறிது குறைத்தே மதிப்பிட்டாக வேண்டி இருக்கிறது. அந்த பாவத்தை ஷங்கர் எந்திரன் படத்தை இயக்கி போக்கிக் கொண்டார் என்று தான் சொல்ல வேண்டும்.

anuthinan said...

காலையில் தொலைபேசியில் வாசிக்கும் போதே வீட்டுக்கு வந்து பின்னூடம் போட நினைத்து மறந்து விட்டேன் சகோ! அருமையான அலசல்! பட வெற்றிக்கும், ஒபீநிங்க்கும் தொடர்பு இல்லை என்பது 100% உண்மை!

வாழ்த்துக்கள்!

தர்ஷன் said...

ம்ம் மிகுந்த தேடலுடன் உருவாகியுள்ள பதிவு, பாஸ் விஜயை தாக்குவதை குறைத்துக் கொள்ளலாம். அப்புறம் விஜயை தலைவருடன் கம்பேர் பண்ணி ஆர்கியுமன்ட் செய்வார்கள். தலைவருக்கு தேவையா?

Karaikudiyaan said...

please note that Mankatha and OKOK did not get the tax benifit. If they got tax benifit, then they may beat enthiran's record...

m.saro said...

அந்த வீனா போன விஜய்க்கும் அவனோட மக்கள் தொடர்பு அதிகாரிக்கும் பொய் சொல்றதே வேலை தானும் திருந்த மடனுங்க சரியான மொக்க பசங்க பா

நிரோஜ் said...

விஜயை தாக்குவதில் உங்களுக்கு உள்ள சந்தோஷத்தை பாராட்டுகிறேன் ... அண்ணா நல்ல பதிவு... நிறைய கருத்து போட்டு இருக்கீங்க ... உங்களின் தமிழ் மணத்தில் நட்சத்திர பதிவர் ஆனதுக்கும் சேர்த்து வாழ்த்துக்கள்.

அன்புடன்,
நிரோஜ்

Unknown said...

என்ன சொல்வதென்றே தெரியவில்லை...... அருமை
அருமை....

கிரி said...

// அந்த எதிர்பார்ப்பு பெரும்பாலும் குறிப்பிட்ட ஒரு நடிகரும், குறிப்பிட்ட ஒரு இயக்குனரும் சேரும்போதுதான் அதிகமாக ஏற்ப்படுகின்றது,//

இது உண்மை தான். விஜயின் வேலாயுதம் படத்திற்கு இருக்கும் எதிர்பார்ப்பை விட துப்பாக்கி படத்திற்கு இருக்கும்.

//இருவரும் தனித்தனியாக இல்லை, இருவரும் ஒன்றாக சேர்ந்த கூட்டணிக்குத்தான் இந்த ஓப்பினிங்///

இதோடு இதற்கு முன்பு வந்த படங்கள் மொக்கையாக இருந்ததும் ஒரு பெரிய காரணம்.

ஜீவதர்ஷன் இதை எழுத ரொம்ப கஷ்டப்பட்டு தகவல்களை திரட்டி இருப்பீர்கள் என்று நினைக்கிறேன் :-) கோச்சடையானுக்கும் ஒப்பனிங் பக்காவா இருக்கும்.. பார்ப்போம்.

தமிழ்மண நட்சத்திரம் ஆனதிற்கு வாழ்த்துக்கள்.

கார்த்தி said...

ஒரு படம் பாத்த திருப்தி. சுப்பர் பதிவு. ஒழுங்கான வசுல் விபரம் வெளியிட்டா நீங்க சொன்ன மாதிரி நடிகர்களின்ர Image பாதிக்கப்படுறதோட எதிர்கால வசுலும் அந்த அடிப்படையில் பாதிக்கப்படலாம் எண்டுறதால ஒரு காலமும் அதை ஒழுங்காக ஒவ்வொரு முறையும் வெளிட மாட்டார்கள்.

JR Benedict II said...

சூப்பர் பாஸ்

ராஜ் said...

ரொம்ப நல்ல கட்டுரை பாஸ்....
ரொம்ப உழைப்பை செலவு செய்து இருகிறேர்கள்... Hats off..

Post a Comment

"கருத்துக்கள், நிறைகுறைகள், திட்டுக்கள், பாராட்டுக்கள் போன்றவற்றை கூற விரும்புபவர்கள் கீழுள்ள பின்னூட்ட பெட்டியில் பின்னூட்டலாம்; பதிவுகளை வாசிக்காமல் இடப்படும் டெம்பிளேட் பின்னூட்டங்கள் வேண்டாம் நண்பர்களே."

*******************

வடை, வாழைப்பழம், சூப்பர், கலக்கல் என மொய் வைக்க வரும் நண்பர்களுக்கு; நான் யாருக்கும் பதிலுக்கு மொய் வைக்க மாட்டேன்.(இதனால் ஏற்ப்படும் தர்ம சங்கடத்திற்கு வருந்துகின்றேன்)