Monday, April 4, 2016

பென் ஸ்ரோக்ஸ்ம் யோக்கரும்!யோக்கர்....குட் லென்த், சோர்ட், ஃபுல்  போல்கள் போல யோக்கருக்கு பந்தை பிட்ச் செய்யும் இடத்தை இதுதான் என  வரையறைப்படுத்த முடியாது!   போலரால் உண்மையில் யோக்கர் என்று ஒன்றை வீச முடியாது, பட்ஸ்மனை வேண்டுமானால் அந்தப்பந்தை யோக்கராக்கிக் கொள்ளும்படி செய்யமுடியும். பட்ஸ்மனின் ஸ்ரான்ஸ், மூவ்மண்ட் போன்றவற்றை வைத்து இந்தப்பந்தை பட்ஸ்மன் ஜோக்ட் ஆக்குவான் என்று எதிர்பார்த்து வீசுவதுதான் யோக்கரின் சிறப்பு!

 துடுப்பாட்ட  வீரரால் மேற்கொள்ளப்படும்  அசைவுகளாலும், வீசப்படும் பந்து சிறிது விலகினாலும் யோக்கர்கள் பரிதாபமாக்கப்பட்டுவிடும்! டெஸ்ட் மச்  யோக்கர்கள் லிமிட்டர் ஓவேர்சிலும் சிறப்பானவை, எதிர்பார்க்காத நேரத்தில் வீசப்படும் யோக்கர்கள் கொடுக்கும் விக்கட்டுகள் அலாதியானவை. லிமிட்டட் ஓவர்சை பொறுத்தவரை டெத் ஓவர்களிலேயே அதிகமான யோக்கர்கள் வீசப்படும். சில சமயங்களில் யோக்கர்தான் வீசப்படும் என்று எதிர்பார்த்து நின்றாலும் பட்ஸ்மனால் யோக்கர்களை ஓட்டங்களாக மாற்ற முடியாத அளவுக்கு போலேர்சின் துல்லியம் இருக்கும்.

எங்கள் காலங்களில்  வசீம், வக்கார், அக்தர் என பாகிஸ்தான் வேகங்கள் ரிவேஸ் ஸ்விங் யோக்கர்களில்  மிரட்டிய நாட்கள் மறக்க முடியாதவை, அதிலும் ட்டெயில் என்டேர்சுக்கு வசீம்  அடிக்கும் சொலிட் யோக்கர்கள் சான்சே இல்லை!  புதிய பந்தில் யோக்கரில் கலக்கியவர் இங்கிலாந்தின் டரன் கஃப்!, எனக்கு தெரிந்து  கஃப் போன்று புதிய பந்தில் யோக்கரில் மிரட்டியவர்கள் யாருமில்லை, குறிப்பாக லெப்ட் ஹான்ட் பட்ஸ்மனுக்கு கஃப் சிம்மசொப்பனம்.

இவங்களுக்கெல்லாம் அப்புறம்தான் வந்தான் மலிங்க! யோக்கர்களின் அத்தனை பரிமாணங்களையும் அலாதியாக கையாள்வதில் எனக்கு தெரிந்து மலிங்கவுக்கு  நிகர் வேறு யாரும் இல்லையென்பேன். இன் ஸ்விங், அவுட் ஸ்விங், ரிவேஸ்  ஸ்விங் , (F)ப்லைட்டட்  ஸ்லொவ், (F)ப்ளற் ஸ்லொவ் என யோக்கர்களை ஓப் ஸ்ரம், லெக் ஸ்ரம், மிடில் ஸ்ரம், 'அவுட் சைட் தி ஓப் ஸ்ரம்' என  தான்  நினைக்கும் ஏரியாவில் பந்தை வீசி  பட்ஸ்மனை  யோக்கராக்க வைக்க  மலிங்கபோல் வேறெவராலும் முடியாது!

மலிங்க - கோட் ஒஃப் யோக்கர்  !!


இப்பேர்ப்பட்ட  யோக்கர் ஸ்பெஷலிஸ்டான மலிங்கவையே யோக்கரை மறக்கும் அளவுக்கு அடித்து துவைத்த சாமுவேல்ஸின் இனிங்க்சை இலங்கை ரசிகர்கள் எவரும் இலகுவில்  மறந்துவிட முடியாது!  மலிங்க யோக்கர் எறியப்போகிறார் என்பதை  எதிர்பார்த்து, சொட்டை அஜெஸ்ட் பண்ணியும், இம்ப்ரவைஸ் செய்தும் பெரும்பாலான பட்ஸ்மன்ஸ் தோல்வியையே கண்டிருந்த நிலையில்; சாமுவேல்ஸ் மட்டும் மலிங்காவின் யோக்கர்களை ஃபுல்  லெந்தாக்கி வெட்டிய வெட்டுக்கள் அபாரம். சாமுவேல்ஸின் அந்த அஜஸ்மண்டுகள்தான் கிரிக்கட்டின் நுணுக்கங்கள்!

யோக்கர்கள் பட்ஸ்மனால் சரியான முறையில் அஜெஸ்ட் செய்யப்பட்டால் ஃபுல் லெந்தாகவும், லோ ஃபுல்டோசாகவும் ஆக்கமுடியும்; ஆம் யோக்கர்கள் பட்ஸ்மன் நினைத்தால்  இல்லாமல் செய்யப்படக் கூடியவையே! பல சமயங்களில் யோக்கர்கள் மிஸ் யோக்கர்கள் ஆகி ஃபுல்டோஸ் ஆகிவிடும்; சேட்டன் ஷர்மா யோக்கர் வீசப்போய் அது மிஸ்டாகி  அடிக்கப்பட்ட மியாண்டாட்டின் சிக்ஸர் சரித்திரம்.  யோக்கர்கள் இறுதி ஓவர்களுக்கு தேவையானவைதான், ஆனால் அது வீசப்படும் சூழ்நிலை, வீசப்படும் வீரர், எதிர்கொள்ளும் வீரர், அப்போதைய காலநிலை என பல விடயங்கள் சார்ந்துதான் சாதக/பாதக முடிவை கொடுக்கும்.


பென் ஸ்ரோக்ஸ் - : பைனல் ஓவர், இங்கிலாந்து யோக்கருக்கு திட்டமிட்டே தயாரானது, 19 ஓட்டங்களைக் கட்டுப்படுத்த யோக்கர் சிறந்த தெரிவுதான், ஆனால் காலநிலை பந்தை வழுக்கும் நிலையில் வைத்திருந்தது, முதல் பந்து மிஸ்ட்  யோக்கராகி லெக் சைட்டில் பட் ரேஞ்சில் விழுந்தது, அதை அடிக்க பரத்வைட் தான் தேவை இல்லை, ஸ்லொக் பண்ண தெரிந்த யாருக்குமே அது ஆறுதான்!  முதல் பந்து சிக்ஸ் ஆகியவுடன் நிச்சயம் லெந்தை மாற்ற யோசித்திருக்க வேண்டும், மாற்றவில்லை, இந்த தடவை யோக்கர் சரியாக விழுந்தது; ஆனால் அதை ஃபுல் லெந்தாக்கி பரத்வைட் வெளியே அனுப்பினார், இப்போது கூட ஸ்ரோக்கும் இங்கிலாந்தும் திட்டத்தை மாற்றவில்லை, மீண்டும் ஒரு யோக்கர், மீண்டும் பரத்வைட் அதை ஃபுல் லெந்தாக்கி  வெளியே அனுப்பினார்!

முதல் சிக்ஸ் உடன் நிச்சயம் லென்த் மாற்றம் அல்லது வேரியேஷன் நிகழ்த்தப்பட்டிருக்க வேண்டும், குறைந்த பட்சம் ஓஃப் ஸ்டம் யோக்கராவது ட்ரை பண்ணி இருக்கலாம், எல்லாம் முடிந்துவிட்டது!  பரத்வைட் ஹீரோவாகிவிட்டார், இனிமேல் அவர் T/20 தனியார் சந்தைகளில் நல்ல விலை போவார். ஸ்ரோக்ஸ் கூட மனக் காயத்தில் இருந்து  இலகுவில்  மீண்டு வருவார்! அதேநேரம்   மேற்கிந்திய தீவுகளின் இரு T/20 உலக கிண்ணமும் யோக்கர்களை சிதறடித்து பெறப்பட்டு வரலாறாகிவிட்டது :-)

Wednesday, March 25, 2015

கிரிக்கட்டும் காழ்ப்புணர்வும்!!
ஆங்கில ஏகாதிபத்தியம் வஞ்சகமில்லாமல் தான் அத்துமீறிய அத்தனை நாட்டுக்கும் விட்டு விட்டுப்போன சமத்துவம் கிரிக்கட்!  ஆங்கில ஆதிக்கம் தொடரும், ஆங்கில வம்சாவளிகள் வாழும்  நாடுகளில் கிரிக்கட் இன்னமும் கௌரவமாக பார்க்கப்படுகின்றது, ஆனால் ஆசியாவை பொறுத்தவரை  கௌரவம் என்பதற்கு மேலே போய் உணர்வாக பார்க்கப்படுகின்றது. எதிர் நாட்டுடன் நடக்கும் கிரிக்கட் போட்டியை இரு நாடுகளுக்கிடையிலான யுத்தமாகப் பார்க்கும் மனநிலை பலருக்கும் உண்டு! பலருக்கு தேசப்பற்று எப்பொழுதாவது  ஞாபகப்படுத்தப்படுவது கிரிக்கட்டால்தான். கிரிக்கட்டை பொழுதுபோக்கு, யுத்த மனநிலை, தேசப்பற்று என்பதையும் தாண்டி அதனுள் ஒன்றித்து அதன் அழகியலையும் நுட்பங்களையும் அக்குவேறு ஆணிவேறாக  ரசிக்கும் கிரிக்கட் காதலர்களும் உண்டு! துரதிஸ்ரம் என்னவென்றால்  இன்றைய இணையமும் சமூகத்தளங்களும் கிரிக்கட்டை  யுத்த   மனநிலையில்  சிந்திக்கவும், உறவுகளுக்குள் விரிசல் விழும் அளவுக்கு  கருத்து தெரிவிக்கவும்  வழிகோலியுள்ளன!  இந்த கிரிக்கட் யுத்தம் தவறான வழியில் எதிர்கால ரசிகர்களை  கொண்டு செல்லப்போகின்றது!

ஆசியக் கிரிக்கட் ரசிகர்களை எடுத்துக்கொண்டால்; மூன்று பிரிவாக பிரித்து நோக்கலாம்; 1) கிரிக்கட்டை ஆழமாக நேசித்து ரசிப்பவர்கள்... 2) கிரிக்கட்டை மேம்போக்காக ரசிப்பவர்கள்.... 3) நானும் கிரிக்கட் பார்க்கிறேன் என்று ரசிப்பவர்கள்.  இங்கு முதலாமவர்களில் அவர்களது நேசிப்புக்கான காரணம் கிரிக்கட் மட்டுமே! அவர்களது கிரிக்கட்டின் மீதான பார்வைகள், விருப்பு வெறுப்புகள் கிரிக்கட் சார்ந்துதான் இருக்கும். தங்களுக்கு பிடித்த அணி தான்; பிடிக்காத அணியை இவர்களுக்கு  நிர்ணயிக்கும். ஒரு வெற்றியின் உச்ச மகிழ்ச்சியையும், தோல்வியின் உச்ச கவலையையும் இவர்களால்தான் உணரமுடியும். வேலை, படிப்பு, அலுவல்கள் என கிரிக்கட் போட்டிக்காக தமது அன்றாட வேலைகளை இரண்டாம் பட்சமாக ஒதுக்கிவிட்டு தொலைக்காட்சி/வானொலிக்கு முன்னால்  தவமிருப்பவர்கள் இவர்கள். இந்த வகையிலான ரசிகர்கள் அருகிக்கொண்டு வருகிறார்கள்!  பொழுதுபோக்கிற்கான  தெரிவுகள் இப்போது எக்கச்சக்கமாக உள்ளது; ஒரு பொழுதுபோக்கு விடயத்தில் முழுமையாக ஈடுபடும் அளவிற்கு வாழ்க்கை வேகம் விட்டுக்கொடுக்கும் நிலை இன்றில்லை! இது கிரிக்கட்டுக்கு  மட்டும் என்றில்லை; ஏனைய  விளையாட்டுகளுக்கும், சினிமா, பாடல்கள், கவிதை என சில தசாப்தங்களுக்கு முன்னர் மிகப்பெரும் பொழுது போக்குகளாக, நுண்ணறிவுடன் நோக்கப்பட்ட பல அம்சங்களுக்கும்  பொருந்தும். 

அடுத்து மேம்போக்காக கிரிக்கட் பார்ப்பவர்கள், நேரம் கிடைக்கும்பொழுது கிரிக்கட் பார்க்கும் இவர்கள் பெரிதாக அலட்டிக்கொள்வதில்லை. இவர்களில்  பெரும்பாலானவர்களுக்கு கிரிக்கட்  பொழுதுபோக்கு மட்டும்தான், இவர்கள் தானுண்டு தம் வேலையுண்டு வகையறாக்கள். மூன்றாவது வகையினர்தான் திடீர் கிரிக்கட் ஆர்வலர்கள், இவர்களுக்கு சாதாரண தொடர்கள் எங்கு, எப்போது  நடக்கிறது எதுவுமே தெரிவதில்லை. ஆனால் உலகக் கிண்ணம், சாம்பியன் லீக்,  ஆசியக் கிண்ணம், ஐ.பி.எல் போன்ற பரபரப்பாக பேசப்படும் தொடர்களுக்கு மட்டும் ஆஜராவார்கள். இலங்கை மற்றும் தமிழகத்தைப் பொறுத்தவரை;  குறிப்பாக இலங்கை அணிக்கு  அரசியல் சார்பு எதிர்ப்பை பதிபவர்கள் இவர்கள்தான்.  இவர்களில் பலருக்கு அடிப்படை கிரிக்கட்டே தெரியாது என்பதுதான் உண்மை. தாங்களும் தேசியப்பற்று உள்ளதை வெளிக்காட்டுகிறேன் என்று  கிளம்பும் இந்த அரைகுறைகள் கிரிக்கட்டின் சாபம்! இவர்களுக்கு கிரிக்கட்டும் அரைகுறை, தேசியமும் அரைகுறை!

இவர்களைவிட இன்னுமொரு பிரிவினர் இருக்கின்றார்கள், இவர்கள் ஒப்பீட்டளவில் எண்ணிக்கையில் குறைவாக இருப்பினும்; மிகுந்த ஆபத்தானவர்கள். தமக்குத் தெரிந்த அரைகுறை  கிரிக்கட்டை; எழுத்துமூலம்  மேற்சொன்ன இரண்டாம் மூன்றாம் வகையறா ரசிகர்களுக்குள் திணித்து  தங்கள் காழ்ப்புணர்ச்சிகளை இவர்கள் தீர்த்துக் கொள்கின்றார்கள்!இங்கு ரசிகர்களின் ரசனை என்பது போட்டி என்பதையும் தாண்டி; பொறாமையைக் கடந்து  காழ்ப்புணர்ச்சியாக  வெளிப்படும் சம்பவங்களும், சந்தர்ப்பங்களும் சமூக தளங்களில் அதிகரித்துக் கொண்டிருக்கின்றது. இதற்கு அண்மையில் தமிழகத்தில் இருந்து  எழுதப்பட்ட ஒரு அரைவேக்காட்டுத்தனமான வினையூக்கியின் குப்பை ஒரு உதாரணம். இதனை ஒரு வெறும் பதிவாக எடுத்துக்கொள்ள முடியவில்லை; காரணம், அந்த வக்கிரத்தை ஏற்றுக் கொண்ட பல இந்திய தமிழர்கள்; அதனை பகிர்ந்து தங்கள் காழ்ப்புணர்ச்சியை  இலங்கைக் கிரிக்கட் மீதும், இலங்கை கிரிக்கட் தமிழ் ரசிகர்கள் மீதும்  காட்டியிருந்தனர். (இணைப்பு - வினையூக்கி)இலங்கை அணியையும், அதை ரசிக்கும் இலங்கை தமிழர்களையும் குறிவைத்து புனையப்பட்ட  ஒரு மூன்றாம்தர புனைவுதான் அங்கு வெளிப்பட்டது.  அத்துடன் மேலும் இலங்கை தமிழர்களை பாகம் பிரித்து கேவலம் செய்த பெருமையும் இவர்கட்கு சேரும். இங்குள்ள மக்களின் நிலை,  மனங்கள், அனுபவங்கள், எதிர்பார்ப்புக்கள், எதையும்  அறியாமல், உணராமல்; மேம்போக்கா ஒரு ட்ரீசர் பார்த்து விமர்சனம் சொல்லும் அரைகுறை சினிமா ரசிகனின் மனநிலையில் இவர்களது கருத்துக்கள் இருந்தது! இவர்களைச் சொல்லிக்  குற்றமில்லை, அவர்களை ஒரு வட்டத்துள் வைத்தே  சிந்திக்க வைக்கும்  ஊடகங்களும், அவர்கள் பின்பற்றும்; இலங்கை தமிழரை வைத்து பிழைக்கும் அரசியல் தலைமைகளும்  இருக்கும் மட்டும் அவர்களது சிந்தனை வெளிப்பாடு இப்படித்தானிருக்கும்!!

மனதில் பதிலிருந்தும் அதை வெளிப்படுத்த சந்தர்ப்பம் கிடைக்காத என் சக கிரிக்கட் ரசிகர்களுக்காக அங்கு கொட்டப்பட்ட கருத்துக் குப்பைகளில் சிலவற்றிற்கு பதில் அவசியமானது!. ஜெயவர்த்தன, சங்கக்கார  இருவரும் அதிககாலம் விளையாடியதால்தான் புள்ளிவிபரங்களில் முன்னிற்கின்றார்கள் என்கின்ற அபத்தமான வாதம் நகைப்பிற்குரியது. சச்சின், டிராவிட், கங்குலி, கும்ளே, இன்சமாம், வசீம், அரவிந்த, முரளி, வாஸ், சனத், மக்ரா, பொண்டிங், வோன், கலிஸ், லாரா என ஜாம்பவான்கள் அனைவரும் 36 வயது கடந்து விளையாடியவர்கள்தான். மேற்சொன்னவர்களில் மக்ரா, வோன் தவிர்த்து வேறு எவரும் மகேல, சங்கா போல நல்ல நிலையில் ஆடிக்கொண்டிருக்கும்போது ஓய்வு பெறவில்லை என்பதும் இங்கு கவனிக்கப் படவேண்டிய விடயம். எப்போது ஓய்வு பெறுவார்கள் என்னும் நிலையிலிருந்த  ஜாம்பவான்களை  பார்த்திருப்போம், போ என்றும் போகாமல் ஒட்டிக்கொண்டிருந்த ஜம்பவான்களையும்  பார்த்திருப்போம், ஆனால் அணித்தலைவர் உட்பட  அந்த நாட்டு ரசிகர்களே முட்டிக்காலிட்டு ஓய்வை தள்ளிப்போட சொல்லி  இறைஞ்சிய சம்பவம் சங்காவுக்கு மட்டுமே  நிகழ்ந்தது.  

சங்காவும் மகேலாவும் ஜாம்பவான்கள் என்றால்; எது ஏன்  இவர்களுக்கு எரிகிறது?  சச்சின், டிராவிட், கங்குலி, கும்ளே தவிர்த்து வேறு எவரையும்  ஜாம்பவான்களாக ஏற்றுக்கொள்ளும் அளவுக்கு அவர்களுக்கு மனம் இடம் இடம் கொடுக்கவில்லை; அந்தளவு குறுகிய மனப்பான்மையில், குறுகிய வட்டத்தில் அவர்களை 'மொக்கா மொக்கா' போன்ற ஊடகங்கள் தள்ளிவிட்டிருக்கின்றன!  ஜாம்பவான்கள் என்றால் எந்த வரையறைக்குள் உள்ளடக்கப் படுகின்றார்கள்? குறித்த  நாட்டில் பிறந்தவர்கள்தான் ஜாம்பவான்களாக  இருக்க முடியும் என்றில்லை, அல்லது  பெரிய நாடுகளுக்கு ஆடியவர்கள்தான் ஜாம்பவான்களாக இருக்கவேண்டும் என்றில்லை; ஒரு நாட்டுக் கிரிக்கட்டை  தங்களது திறனால் நீண்டகாலத்துக்கு போராடி  உயர்த்தியவர்கள், தாங்கியவர்கள் அனைவரும் ஜாம்பவான்கள்தான்! அந்தவகையில் சிம்பாவேயின் அன்டி  பிளவரும், ஹீத் ஸ்றீக்கும்  கூடத்தான்  ஜாம்பவான்கள்.  மகேலாவும்  சங்காவும்  ஜாம்பவாங்களா? 100 சதவிகிதம் சந்தேகமே இல்லாமல்.....

மகேலா -  19 வயதில் இலங்கையின் எதிர்காலமாக அணியில்  நுழைந்தவர். அர்ஜுன, அரவிந்த என்கின்ற இரு பெரும் நட்சத்திரங்களும்  இலங்கை அணியினை விட்டு செல்லும்போது அன்றைய இலங்கையின் எதிர்கால நம்பிக்கையாய் இலங்கை ரசிகர்களால் உணரப்பட்டவர். பின்னர் சனத், முரளி, வாஸ் என ஒவ்வொரு ஜாம்பவான்களும் செல்லும்போதும் இலங்கையை  தனது தலைமையிலும், துடுப்பாட்டத்திலும் தாங்கிப்பிடித்தவர். கிரிக்கட் வரலாற்றில் அத்தனை ஷொட்களையும் நேர்த்தியாக, அழகாக ஆடும் மிகச்சில வீரர்களில் ஒருவர். Cover Drive, Late Cut, Inside Out போன்ற மகேலாவின் Trade  mark short கள் இளைஞர்களுக்கான பாடம்!   தொடர்ச்சியான பெறுபேறுகள் மகேலாவிடம் இல்லாவிட்டாலும் முக்கிய போட்டிகளில் பொறுப்பை கையிலெடுத்து இலங்கைக்கு பல வெற்றிகளை  பெற்றுக்கொடுத்தவர். இரு தசாப்தங்களாக இலங்கை ரசிகர்கள் ஒவ்வொருவரும் எதிர்பார்த்த, உச்சரித்த பெயர் மகேலா! (மகெல  பற்றி மேலும் )

சங்கா - இன்றைய இலங்கையின் ஒவ்வொரு இளம் வீரர்களின் கனவு நாயகன்.  23 வயதில்தான் சங்காவுக்கு சர்வதேச அறிமுகம் கிடைத்தது; அன்றிலிருந்து ஓய்வுபெறும் இறுதிப்போட்டிவரை தனது துடுப்பாட்ட திறனை ஆர்முடுகளில் அதிகரிக்க செய்தவர். கிரிக்கட்டின்  கடும் உழைப்பாளி! சச்சின், திராவிட்,  அரவிந்த, மகேல, லாரா, இன்சமாம், பொண்டிங், கலிஸ் போன்ற ஜாம்பவான்களைப் பார்த்திருப்போம், இவர்கள் அனைவரும் Born cricketers!!  ஆனால் சங்கக்கார ஒரு Born cricketer அல்ல! சங்கக்கார தன்னை தனது பயிற்சியினால் தினம் தினம் செதுக்கியவர், ஒவ்வொரு ஆண்டும் தனது திறனை ஆர்முடுக்கியவர்!  தனது முயற்சியால், புத்திசாலித்தனத்தால், கடின உழைப்பால் தன்னை சச்சின், பிரட்மன்  போன்ற உச்ச வீரர்களுடன் ஒப்பீடு செய்யும் அளவுக்கு தன்னை வளர்த்தவர். அந்தவகையில் மேற்சொன்ன பெயர்களைவிட   சங்கக்கார ஒருபடி மேலே உயர்ந்து நிற்கிறார். 14 ஆண்டுகளாக இலங்கையின் வெற்றிக்கு காரணமான, சர்வதேசக் கிரிக்கட்டில் தவிர்க்கமுடியாத மிகப்பெரும் சக்தி சங்கக்கார!   சங்கக்கார, மகெலாவை  ஜாம்பவான் இல்லை என்று ஒருவர் சொன்னால்;  அது சொல்பவரது கிரிக்கட் பற்றிய புரிதலின் பூச்சிய வெளிப்பாடு! 


அடுத்து இலங்கை ரசிகர்களை  சீண்டிய மற்றுமொரு விடயம்; மது, மாதுக்களை வைத்து  இலங்கை டெஸ்ட் அந்தஸ்தை  பெற்றுக்கொண்டது என்பதுதான். கற்பனையான அபத்தத்தின் உச்சம்!  இலங்கைக்கு டெஸ்ட் அந்தஸ்து ஒன்றும் சும்மா கொடுக்கவில்லை. 1979 உலக கிண்ணத்தில் அனைத்துப் போட்டிகளிலும் தோற்ற இந்தியாவை இலங்கையும் தோற்கடித்திருந்தது. அடுத்து இலங்கையில் இங்கிலாந்துடனான  தொடரை சமன் செய்திருந்தது (1:1), பாகிஸ்தானுடன் 3 போட்டிகள் கொண்ட தொடரில் ஒரு போட்டியில் வெற்றி பெற்றிருந்தது. இதையடுத்தே 1982 ஆம் ஆண்டு இலங்கைக்கு டெஸ்ட் அந்தஸ்து கிடைக்கப்பெற்றது, அதேயாண்டு இலங்கை அவுஸ்திரேலிய அணியை ஒருநாள் தொடரில் இலங்கையில் வைத்து  2:0 என வெற்றி  பெற்று தாங்கள் டெஸ்ட் அந்தஸ்துக்கு தகுதியானவர்கள் என நிரூபித்தனர்.  

அடுத்த 3 ஆண்டுகளில் இந்தியா, பாகிஸ்தான் போன்ற சக ஆசிய நாடுகளை டெஸ்ட்  போட்டிகளில்  தோற்கடித்தனர், 12 ஆண்டுகளுக்குள் ஒரு வேகத்தரையில் அன்றைய முன்னணி அணியான நியூசிலாந்தை டெஸ்ட் போட்டி மற்றும் தொடரில் 1:0(2) என வெற்றி பெற்று தங்களை டெஸ்ட் அந்தஸ்துக்கு சரியானவர்கள்  என்று நிரூபித்தனர். அடுத்த 5 ஆண்டுகளுக்குள் இங்கிலாந்தின் ஓவல் டெஸ்ட் வெற்றி மூலம் தங்களை முழுமையான டெஸ்ட் அணியாக நிரூபித்தனர். தொடர்ந்து  நியூசிலாந்து, மேற்கிந்தியா, இங்கிலாந்து போன்ற வேகத் தரைகளிலும் இலங்கை டெஸ்ட்  தொடர்  வெற்றிகளை பதிவுசெய்து கொண்டது. தென்னாபிரிக்காவிலும்  டெஸ்ட் போட்டி வெற்றி  இலங்கையால்  பதிவு செய்யப்பட்டுவிட்டது!  மற்றும் சொந்த மண்ணில் வைத்து அத்தனை நாட்டுடனும் இலங்கை டெஸ்ட் தொடர் வெற்றியை பதிவு செய்துவிட்டது. இன்னமும் இலங்கை டெஸ்ட் அந்தஸ்தை விமர்சிப்பது காழ்ப்புணர்ச்சி அன்றி வேறில்லை. 

சரி அவர்கள் வழியிலே போய் பார்த்தால்; 1932 இல் இந்தியா டெஸ்ட் அந்தஸ்தை பெற்றது! உண்மையில் இதைத்தான் கையைக் காலைப்பிடித்து, அவர்கள்  சொன்னது போன்றவற்றைக் கொடுத்து வாங்கினார்களா என சந்தேகிக்க வேண்டும்!! ஏனெனில் முதல் டெஸ்ட் வெற்றியை பதிவு செய்ய இந்தியா  20 ஆண்டுகள் காத்திருக்க வேண்டி இருந்தது; கிடைத்த முதல் வெற்றி கூட தங்களைவிட பலம் குறைந்த பாகிஸ்தானுடன் பெறப்பட்டதுதான்!. 1932 முதல் 1946 வரை இங்கிலாந்து  டெஸ்ட் அந்தஸ்தை கொடுத்துவிட்டு;   இங்கும் அங்குமாக  மாறிமாறி நல்லாவே வைத்து செய்திருந்தார்கள். முதல் வெளிநாட்டுத் தொடர் வெற்றி   ஒன்றை பெறுவதற்கு  35 ஆண்டுகள் இந்தியா தவமிருந்தது.

ஒருநாள் போட்டிகளைப் பொறுத்தவரை  1980 க்கு முன்னரான இந்திய அணியினதும், அன்றைய இலங்கை அணியினதும்   நிலைமை மோசமானவைதான், இன்னும் சொல்லப்போனால் சந்தித்த ஒரே போட்டியிலும் இந்தியாவுக்கு இலங்கையிடம் தோல்வி! இத்தனைக்கும் அப்போது இந்தியா டெஸ்ட் அந்தஸ்து பெற்று 48 ஆண்டுகள்  ஆகிவிட்டது! இப்போது இன்றைய இந்திய ரசிகர் என்னும் போர்வையிலிருக்கும் சிலர் இலங்கையின் டெஸ்ட் அந்தஸ்து  பற்றி பேசக் கிளம்பியிருப்பது வேடிக்கையாக இருக்கிறது! 


1996 உலகக்கிண்ணத்தில்  மேற்கிந்தியாவும் அவுஸ்திரேலியாவும் இலங்கைக்கு வரவில்லையாம்,  அந்தப்புள்ளிகளால் இந்தியாவுடன் ஒரு போட்டியில் தவறி ஜெயித்ததால் இலங்கை கிண்ணம் பெற்றனராம். இந்த ஒன்று போதும் அவர்களது   அறிவை அறிந்துகொள்ள!. அரை இறுதியில் மட்டுமல்ல, லீக் போட்டிகளிலும் இலங்கை இந்தியாவை புரட்டி எடுத்திருந்தது. லீக் ஆட்டங்களில் சொந்த நாட்டுக்கு வராத அவுஸ்திரேலியாவை; இலங்கை பொது மைதானமான  கராச்சியில் வைத்து இறுதிப் போட்டியில் வெற்றி பெற்று கிண்ணத்தைப்  பெற்றுக்கொண்டது. தொடர்ந்து இலங்கையில்  இடம்பெற்ற  சிங்கர் வேல்ட் சீரிஸின்; லீக் மற்றும் இறுதிப் போட்டி இரண்டிலும் அவுஸ்திரேலியாவை இலங்கை புரட்டிப்  போட்டது. உலகக் கிண்ணத்தில் இலங்கைக்கு வராத மேற்கிந்தியாவுடனான அடுத்த சந்திப்பு  இலங்கைக்கு மேற்கிந்தியாவில்தான்  ஏற்பட்டது, அதிலும் இலங்கைதான் வெற்றி  பெற்றது! 

அடுத்து இந்தியாவை சந்தித்த இடமெல்லாம் சடங்கு செய்தது இலங்கை! சிங்கர் வேல்ட் சீரிஸ், இந்தியா இண்டிபெண்டன்ஸ்  கப், ஆசியக்கிண்ணம், இலங்கையுடனான முக்கோணத் தொடர் என 1996 உலகக் கிண்ணத்தில் இருந்து இந்தியாவுடனான  இடம்பெற்ற 10 போட்டிகளில் இலங்கை 9 போட்டிகளில் வெற்றி பெற்றிருந்தது, அதில் ஒரு தொடர்  தவிர்த்து ஏனைய அனைத்தும்; இலங்கை கிண்ணம் வென்றவைதான். இதில்  இலங்கையின் 1996 வெற்றி குறித்து விமர்சிப்பது நகைப்பிற்குரியது! 

கனவான் தன்மை - கனவான் தன்மை என்கின்ற சொல்லுக்கு 100 சதவிகிதம் பொருத்தமான வீரர்/அணி என்று  எந்த விளையாட்டிலும் யாரும் எங்கும் இருப்பதற்கான சந்தர்ப்பம் இல்லை! ஆனால் கிரிக்கட்டைப்  பொறுத்தவரை சில வீரர்களைக் குறித்து சொல்கின்றார்கள் என்றால்; அதில் ஏனையவர்களை விடுத்து அதிகமான சந்தர்ப்பங்களில் கனவான் தன்மையை அவர்கள் வெளிப்படுத்தி இருப்பதுதான் காரணம். கில்கிரிஸ்ட்  சங்கக்காராவுக்கு இந்தவிடயத்தில் ஏனையவர்களைவிட   முக்கியத்துவம் கிட்டக் காரணம்; தங்களது ஆட்டமிழப்பை  நடுவர் உறுதி செய்யுமுன்னர் களத்தைவிட்டு அகலும் செயற்பாடுதான். இது வேறெந்த ஜாம்பவான்களும் எம் சமகாலத்தில் செய்யாதது.  இது குறித்து பொண்டிங் கூறிய கருத்து வேறுவிதமானது, சில போட்டிகளில் நடுவர்கள் ஆட்டமிழப்பு இல்லாததை ஆட்டமிழந்ததாக அறிவிக்கின்றார்கள்; அதனை ஆட்டமிழப்பு ஒன்றினை  இல்லை என்று நடுவர் கூறும் சந்தர்ப்பம் ஒன்றினால்தான் சமன் செய்ய முடியும், ஆக வீரர்கள் நடுவர் ஆட்டமிழக்கவில்லை என்றால் வெளியேறத் தேவையில்லை என்று கூறியிருந்தார்; இதுகூட சரியான பார்வைதான். ! 

இலங்கையின் இனவெறி, தென்னாபிரிக்காவின்  நிறவெறி பற்றி பேசுவதற்கு தமிழகத்து இந்திய ரசிகர்களுக்கு கூச்சமாக இருக்கவில்லையா? தமிழக வீரர்களது அணித்தேர்வும்; பார்ப்பனமும் பற்றி ஜீவா திரைப்படம் கொடுத்த  செருப்படி அவ்வளவு சீக்கிரம் மறந்துபோச்சா? 1975 உலகக் கிண்ணத்தில் கிரிக்கட்டின் தாய்வீட்டில் (Lords, England)  தமிழகத்தை சேர்ந்த அணித்தலைவர் வெங்கட்ராகவனுக்கு கவாஸ்கர் செய்த அசிங்கம் மறந்துவிட்டதா? இலங்கைத் தமிழரை அடிப்படைப் புரிதலின்றி பாகம் பிரித்து  அபத்தம் செய்த இவர்கள் இனவாதம் பற்றி பேசுவது நகைச்சுவை! 

இந்தப் பதிவு  விரும்பி எழுதப்பட்டதல்ல; திட்டமிட்ட தாக்குதலுக்கான  அவசியமான எதிர்வினையின்  அவசியத்தால் இதை எழுதவேண்டிய சூழ்நிலை! கிரிக்கட்  இதுவரை பல சிறந்த   போட்டிகளையும், வீரர்களையும்,  நினைவுகளையும்  விட்டுச்   சென்றுள்ளது; இது இன்னமும் தொடரும்! அதற்கு ஆரோக்கியமான ரசிகர்கள் அவசியம். கிரிக்கட் வெறும் பொழுதுபோக்கல்ல, இதுவொரு அற்புதமான விளையாட்டு; 5  நாட்கள் 30 மணி நேரமாக  ஒரு விளையாட்டை  பொறுமையாக  ரசிக்க முடிகிறது என்றால்; அதில் எத்தனை நுட்பங்கள் இருக்க வேண்டும். அதனை முழுமையாக ஆத்மார்த்தமாக அனுபவித்து ரசிக்கும் தன்மை சொல்லலில் வடிக்க முடியாதது. இனவாதம், மதவாதம், அரசியல் போன்ற நிறக் கண்ணாடிகள்  போட்டால் கிரிக்கட்  தெரியாது!  கிரிக்கட்டில் போட்டி போடுங்கள், வெற்றியைக் கொண்டாடுங்கள், தோல்வியைக் கிண்டல் செய்யுங்கள்; தயவுசெய்து தங்கள் தனிப்பட்ட விருப்பு வெறுப்பை காழ்ப்புணர்வாக்கி ரசிகர்களை திசைதிருப்பி  விடாதீர்கள்!  
Tuesday, November 18, 2014

ரஜினிசம்..லிங்கா :-  அடுத்த  சில மாதங்களுக்கு தமிழ் திரையுலகை அதிரவைக்கப்போகும் பெயர்.  அடுத்த சில வருடங்களுக்கு பல திரைப்படங்களும் திரும்பத்திரும்ப  இதன் வசூல் சாதனையை முறியடித்து விட்டதாக சொல்ல வைக்கப்போகும் திரைப்படம். அடுத்த ரஜினி படம் வந்து சாதனைகளை அழித்து எழுதும் வரை வணிகரீதியான சாதனைகளை  தன்னகத்தே வைத்திருக்கப்போகும் திரைப்படம். ரஜினி பெயரைக் கேட்டாலே சிலாகிப்பவர்களுக்கு இதுவொரு ஊக்க மாத்திரை, ரஜினி என்றதும் வயிறு எரிபவர்களுக்கு இதுவொரு பேதி மாத்திரை, இணையப் போராளிகளுக்குத்  தங்களை சமூக சிந்தனைச்   சிற்பிகளாக்கிக்கொள்ள   இதுவொரு நல்ல சந்தர்ப்பம், மக்கள் மறந்த அரசியல் பெயர்களெல்லாம்; கருத்துச் சொல்லி தங்களை ஞாபகப்படுத்த ஒரு நல்ல களம், ஊடகங்களுக்கு  வியாபாரம் செய்ய நல்ல தீனி - இத்தனையும் நடக்கும்.

லிங்கா மீதான எனது எதிர்பார்ப்பை ட்ரெயிலர் பூர்த்தி செய்யவில்லை என்பதை முன்னமே சொல்லிக் கொள்கின்றேன், அது  என் தனிப்பட்ட எதிர்பார்ப்பு நிறைவேறாத ஏமாற்றம். கே.எஸ்.ரவிக்குமார் என்றதும் முத்துவும், படையப்பாவும் நிச்சயம் கண் முன்னே வந்துபோகும்; அந்த அடிப்படையில் லிங்கா கிராமம் சார்ந்த படமாக இருக்கும் என்கின்ற எனது எதிர்பார்ப்பை ட்ரெயிலர் ஏமாற்றியது, பெரும்பாலான காட்சிகள் ஷங்கர் படம்போல பிரமாண்டமாக இருக்கின்றது; அப்பாவியான, படிக்காத, வெகுளித்தனமான ரஜினியை பார்த்து எத்தனை நாளாகிற்று!! (அருணாச்சலத்திற்கு பின்னர் இல்லை) அப்படியொரு ரஜினியை கே.எஸ்.ஆர் தருவார் என்கின்ற எதிர்பார்ப்புத்தான் என்னை ஏமாற்றியது, அது என் தவறு :-)

ஆனால் படத்தின் தரத்தின் மீதோ, ரஜினி மீதோ, ரவிக்குமார் மீதோ துளியளவும் நம்பிக்கையின்மை இல்லை, அதனால்தான் மேலே "இத்தனையும் நடக்கும்" என்று சொன்னேன். அந்த சில செக்கண்டுகள் விளம்பரப்படுத்திய 'மோன கசோலினா' ட்ரீசர் போதும்; படத்தில் தலைவர் எப்டி பட்டையை கிளப்பியிருப்பார் என்று எண்ணிப்பார்க்க!. பாடல்கள் இன்னமும் எதிர்பார்ப்பை எகிற வைக்கிறது. ரஜினியின் குரலுக்காக கோச்சடையானுக்கு   ரசிகர்கள் கொடுத்த ஓப்பினிங் வரவேற்ப்பே மிரட்டியது, லிங்காவிற்கு ஓப்பினிங் எப்படி இருக்கும் என்பது சொல்லித் தெரியவேண்டியதில்லை. 12/12/2014 அன்று லிங்கா வெளியாகும் அத்தனை திரைகளும் அமர்க்களப் படப்போகின்றது. ரஜினி படங்கள் வெளியாகும் நாட்கள் எல்லா மதத்தவருக்கும் பொதுவான பண்டிகைநாள் என்பதை மீண்டும் ஒருதடவை லிங்காவும்   நிரூபிக்கப்போகிறது.

சரி இப்போ நம்ம பப்ளிசிட்டி/வயித்தெரிச்சல்  எலிக்குஞ்சுகளுக்கு  வருவோம். எந்திரன்  டைம்ல இந்த லூசுகளுக்கு போதும் போதும்கிற அளவில பிளக் எழுதி தொலைச்சாச்சி; இப்ப மறுபடியும் முதல்ல இருந்து ஆரம்பிக்க முடியாது, ஏன்னா இதுக திருந்தப் போறதும் இல்லை, இவங்க பிதற்றலால் சல்லி பிரயோசனமும் இல்லை; ஆனாலும்  சிந்தனை அற்ற, மற்றவன் எது சொன்னாலும் "ஆமாலே அதுதானே" என்கிற 'சில' பொது ஜனங்களுக்காக சிலதை திரும்ப சொல்லவேண்டிய நிலைமை.

வயசு வித்தியாசமான கதாநாயகி :- உண்மையில உங்களுக்கு என்னதான்  பிரச்சனை? அந்தளவு வயது வித்தியாசத்தில்  ஈ.வீ.ராமசாமி ஒருத்தியை கட்டிக்கிட்டார்; அவர் வாரிசுக என்னடான்னா  திரைப்படத்தில் நிழல் நாயகிக்கு வயசு கம்மியிம்னு பகுத்தறிவு பேசுதுக!  ஒரு வணிக சினிமாவுக்கு நாயகி யாரு? எப்டி இருக்கனும்கிறதை  அந்தக்காலகட்டத்தின் ரசிகர்களின் எதிர்பார்ப்பும், ஆங்காங்கே கொஞ்சம் ஸ்கிரிப்டும்  தீர்மானிக்கிறது. இவங்க சொல்றதை பார்த்தால் ஸ்ரீதேவி, ஸ்ரீ பிரியாதான் ரஜினி படத்தில ஜோடியா நடிக்கணும்!  "எம்.ஜி.,ஆர், சிவாஜி,கமல் எல்லாம் சம வயது ஹீரோயின் கூடத்தான்  நடிச்சிருக்காங்க, பாருங்க இவன் ரஜினி பண்றஅநியாயத்தை" எங்கிறதுபோல இருக்கு சில கோமாளிக் கருத்துக்கள்.

ரிக்ஷாக்காரன்  படத்தில  வாத்திக்கு  16 வயது  மஞ்சுளாதான்  ஜோடி. ஆமா விஸ்வரூபம் படத்தில கமலுக்கு ஜோடியா 50 வயசு ஆண்டியா நடிச்சிது!?  (ஆண்ட்ரியா அல்ல :p ) சரி அதை விடுங்க; 60 வயசுக்காரர் 25 வயசு ஹீரோயின் கூட ஜோடியா நடிக்கக் கூடாது, ஆனால் 40-50 வயதுக்காரங்க 20 வயது ஹீரோயின்கூட நடிக்கலாம்; ஆமா இந்த சினிமாவில ஜோடி சேர எவ்ளோ வயசு வித்தியாசம் தேவைங்கிறதையும் சொன்னா நல்லாயிருக்கும்! :-/ அப்டி பார்த்தா 60 தாண்டின எத்தனை பாடகர்/ பாடகிக; எதிர்ப் பாலரான  சின்ன வயதுக்காரருடன் டூயட் பாடுறாங்க, அதுகூடத்தான் தப்பு. இதில கொடுமை என்னவென்றால் பெத்த தாய்கூட சேர்ந்து கிளுகிளுப்பு டூயட் பாடிய நடிகரின் ரசிகன் எல்லாம் வயது வித்தியாசம் பற்றி விசனம் தெரிவிக்கிறாங்க :-) அந்தாளுக்கு மச்சம்யா, அதனால ஹீரோயினுக போட்டிபோட்டு நடிக்கிறாங்க, ரசிகர்கள் ரசிக்கிறாங்க, உங்களுக்கு இப்ப இதில என்ன வந்திச்சு?

வயதும் குரலும் -: ரஜினிக்கு வயது போனது தெரிகிறது, குரல் முதிர்ச்சி அடைந்துவிட்டது போன்ற விமர்சனங்களும் ஆங்காங்கே காணக்கூடியதாக இருக்கிறது. வயது ஆகாக உடலும், குரலும் முதிர்ச்சி அடையும்; ஆனால் இந்தாளுக்கு மனசு இன்னமும் அப்டியே பதினாறில் இருக்குமென்று நினைக்கிறேன். இல்லாவிட்டால் இந்த வயதிலும்  இவ்வளவு துறுதுறுப்பும், வேகமும்; குரலில் இத்தனை கம்பீரமும், வசீகரமும்; உடல்மொழியில்  என்றும் நாம் ரசிக்கும் அதே அக்மார்க் ரஜினி முத்திரையும், நளினமும்; அவருக்கேயுரிய  கேலியும், கிண்டலும்; இது போதும் ரசிகர்களுக்கு.  அதனால்தான் விநியோகிஸ்தர்கள் இந்திய வரலாற்றிலே இதுவரை கொடுக்காத தொகையை   கொடுத்து லிங்காவை  வாங்கியிருக்கிறார்கள்; காரணம்  ரஜினி  என்கிற அந்த ஒற்றை நாமம் மட்டுமே, அந்த நம்பிக்கை பொய்யாகாது. விநியோகிஸ்தர்கள், திரையரங்க  உரிமையாளர்கள் முதற்கொண்டு திரையரங்கிற்கு வெளியே பீடா விற்பவன் வரை எல்லோருமே பெரும்பாலும்  ரஜினியால் லாபத்தை மட்டுமே பார்த்தவர்கள், லிங்காவிலும் இந்த வரலாறு தொடரும்.

மேலே சொன்னதுபோல 'பொம்மைப்படம்' என்று கிண்டல் செய்யப்பட்ட கோச்சடையானுக்கு  கிடைத்த ஓப்பினிங்கே ஆச்சரியப்படுத்தியது; இப்போது  வர இருப்பதோ  ரஜினியே நடித்த படம், அதிலும் அக்மார்க் ரஜினி படம். விளம்பரங்களும், வெளியீடுகளும் சரியான நேரங்களில் மக்கள் மத்தியில் லிங்காவை கொண்டுசென்று  எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.  பாடல்களும், பாடல்  ப்ரோமோ வீடியோவும் எதிர்பார்ப்பை  இன்னமும்  எகிறவைக்கிறது. மோஷன் போஸ்டர், ட்ரீசர்,  பாடல்கள், ட்ரெயிலர் என வெளியிட்ட  ஒவ்வொன்றிலும் சாதனை படைத்துக் கொண்டிருக்கும் லிங்காவின் சாதனைகள்; வசூலில் எந்திரனின்  கதவைத்தட்ட  காத்திருக்கின்றது; அதுவரைக்கும் ஓரமா நின்னு வேடிக்கை மட்டும் பாருங்க குழந்தைகளா!

அரசியல் :- அவர்தான்  திரும்பத் திரும்ப ஆண்டவன் மேல கையை காட்டீற்று  நிக்கிறார்னு தெரியிதில்ல, அப்புறம் எதுக்கு திரும்பத் திரும்ப மைக்க நீட்டி கேட்டதையே கேட்கிறீங்க? அவர் வந்தால் ஆண்டவன் விரும்பிறான், வரலையின்னா விரும்பலயின்னு விட்டிட்டு போகவேண்டியதுதானே!. அதெப்டி போக முடியும், இந்தக் கேள்வியை கேட்டு அவர் வாயை கிளறினால்தானே  பத்திரிகை/தொலைக்காட்சிகளில் குப்பைகொட்டி  பணத்தை பார்க்க முடியும். அதிலும் நேத்து தந்தி டிவிக்காரன் பண்ணின கேவலத்தை எஸ்.வி.சேகர் அவர்கள் போட்டு உடைத்தது சபாஷ் போட  வைத்தது. ரஜினி அரசியல் பேச்சு அடிபட்டதும்; எங்கடான்னு பாத்துக்கிட்டிருக்கிற  விஷங்கள்  இதுதான்  சந்தர்ப்பம்னு ரஜினியை  மட்டம்தட்ட  கிளம்பிடும், இதெல்லாம் அவங்களுக்கு தங்கள் காழ்ப்புணர்வை கொட்டிக்கொள்ள கிடைக்கும் களங்கள். ஆடியோ வெளியீட்டில்கூட அமீர், சேரன் போன்றவர்களது நேரடியான அரசியல் பேச்சிற்கு பதிலாகத்தான் ரஜினியின்  அரசியல் சம்பந்தமான கருத்து இருந்தது.

லிங்கா வெளியீட்டிற்காக 'ஜே'க்கு பயந்து கடிதம் எழுதியதாக அப்போது சொன்னார்கள், இப்போதுதான் அவர் அரசியலுக்கு வருவது பற்றி பேசுகிறாரே, அப்டின்னா  ஜே மீது பயமில்லாமல் போய்விட்டதா? இப்போது அவர்கள் சொல்கிறார்கள் படத்தை  ஓடவைக்க ரஜினி அரசியல்  பேசுகிறாரென்று!. எலும்பில்லை என்பதற்காக நாக்கை சந்தர்ப்பத்திற்கு  ஏற்ப புரட்டாதீர்கள். ரஜினி அரசியல் பேச ஆரம்பித்த பிற்பாடு வெறும் 8 திரைப்படங்களில்தான் நடித்துள்ளார்; ஜேயின் ஆட்சியை பொதுவெளியில் அவரது  அமைச்சர் முன்னிலையிலேயே காரசாரமாக விமர்சித்து  பேசிவிட்டு; அதே ஆண்டு மிகப்பெரும் ஹிட்  கொடுத்தவர் ரஜினி. ரஜினி படங்கள் ஜெயிக்க  அவரது ரசிகர்கள் என்னும் 'நூல்' போதும்; அரசியல் என்னும் 'மாஞ்சா' தேவையில்லை!

 சிலர்  " அரசியலுக்கு வரலைன்னு ஒரே முடிவா சொல்லலாம்தானே" அப்டின்னு சொல்றாங்க; அம்புட்டு ஆசை,  தாம் சார்ந்த கட்சிக்கு பாதுகாப்பு தேடிட்டு நின்மதியா இருக்கலாம்னு நினைப்பு, அது மட்டும் நடக்காது மவனே, ஆண்டவன் எந்நேரமும் சொல்லலாம், எனக்கென்னவோ இப்ப சீக்கிரம் சொல்லிடுவார்ன்னு தோணுது :-)

ரஜினி என்கிற மீபெரும் விம்பம் :-  சிலர் தாம் நினைத்ததை  செய்யவேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள், சிலர் எதுசெய்தாலும் குறை சொல்கிறார்கள், சிலர்  பணம் சம்பாதிக்க முயல்கிறார்கள், சிலர் பயன்படுத்த எத்தனிக்கிறார்கள், சிலர் பயப்படுகிறார்கள், சிலர் தமக்கு பிடித்த விம்பங்களை அதனிலும் பெரிதாக்கி  பார்க்க எத்தனித்து ஏமாறுகிறார்கள், சிலர்  வளர்ச்சி கண்டு வயிறு எரிகிறார்கள், சிலர் உடைந்துவிடாதா  என ஏங்குகிறார்கள், சிலர் உடைக்க ஆயுதம் கொடுத்துவிட்டு மறைந்திருந்து வேடிக்கை பார்க்கிறார்கள், சிலர் கல்லைவிட்டு எறிந்து உடைக்கலாம் என்று கனவு காண்கிறார்கள்..

ஆனால் ரசிகர்கள்தான் அந்த விம்பத்தின் பலம்; அவர்கள் அந்த விம்பத்தை வெறித்தனமாக  ரசிக்கிறார்கள், இறைவனுக்கு நிகராக  ஆராதிக்கின்றார்கள், தங்கள் உயிருக்கு மேலாக நேசிக்கிறார்கள். தங்கள்  அன்பென்னும் கவசத்தால்  பாதுகாக்கிறார்கள். அந்த உயிர்ப்பான உறவுதான் அந்த விம்பத்தை இத்தனை ஆண்டுகளாக சிகரம்விட்டு இறங்காமல் சிம்மாசானத்தில் வைத்திருக்கின்றது. அந்த உறவுக்காக நிச்சயம் அந்த விம்பம் ஏதாவது செய்யணும், அது   அரசியல் சமிக்ஞையாய் இருந்தால்; அதுதான் அவர்களின் உச்ச பட்ச சந்தோசமாக இருக்கும்!!


லிங்கா & தலைவர் - see u soon....

Tuesday, August 19, 2014

மகேலவும், நானும், சில பசுமையான ஞாபகங்களும்!

1997 - பகல் நேரங்களில் மின்சாரம் அற்ற யாழ்ப்பாணம், இரவில் அள்ளித்தெளிக்கும் சொற்ப நேரத்து மின்சாரத்தின் தயவில் அன்றைய எமது இரண்டு அலைவரிசைகளில் ஒன்றான டூடடர்சன் தொலைக்காட்சியின் இரவுச் செய்திகளின் விளையாட்டுச் செய்தி "இலங்கை அணி 39 ஓட்டங்களுக்கு ஒரு இலக்கினை இழந்துள்ளது, இந்தியா முன்னதாக எட்டு இலக்குகளை இழந்து 537 ஓட்டங்களைப் பெற்று வலுவான நிலையில் உள்ளது" என்கின்ற செய்தியை சொன்னது, எனக்கு இது அன்று ஒரு சாதாரண செய்தி! டூடடர்சனின் தமிழ் செய்திகளில் கிரிக்கட் வீரர்களின் பெயர்களின் உச்சரிப்புக்கள் வேறுமாதிரியாக சொல்லப்படும், கேட்பதற்கு நகைச்சுவையாக இருக்கும் (உதாரணமாக மறவன் அட்டப்பட்டு, நாதன் ஆஸ்லே, மார்க் & ஸ்டீவ் வா)

மறுநாள் இரவுச் செய்திகளில் ஓட்ட எண்ணிக்கை சற்று கவனத்தை ஈர்த்தது, மேலதிக இலக்குகள் இழப்பின்றி அன்றைய நாளை இலங்கை 322 ஓட்டங்களைப் பெற்று நிறைவு செய்திருந்தது! ஆனால் மறுநாள் செய்திகள் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது; அந்தநாள் முடிவிலும் மேலதிக விக்கட்டுகள் வீழ்த்தப்படவில்லை. சனத் ஜெயசூர்யா 326 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார் , கூடவே ரொஷான் மகாநாம 225 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார், அப்போது இலங்கை 587 ஓட்டங்களை பெற்றிருந்தது! அனைத்து இலங்கை கிரிக்கட் ரசிகர்களின் அன்றைய நாளின் ஒரே எதிர்பார்ப்பு; சனத் ஜெயசூர்யா நாளை டெஸ்ட் போட்டிகளின் இன்னிங்க்ஸ் ஒன்றில் பெறப்பட்ட அதிகூடிய தனிமனித ஓட்ட சாதனையான பிரைன் லாராவின் 375 ஓட்டங்களை முறியடிப்பாரா என்பதுதான்!

காலைப் பொழுதும் புலர்ந்தது, மணி பத்தை எட்டியது. மின்சாரமற்ற நேரங்களில் டின்னரை மோர்ந்து பார்க்கக் கொடுத்து, ஏமாற்றி மண்ணெண்ணையில் இயங்க வைக்கப்பட்ட ஜெனரேட்டர் துணைகொண்டு; ஆங்காங்கே சில வீடுகளில் பல ரசிகர்கள் ஆவலோடு பாத்திருக்க சனத் 340 ஓட்டங்களில் பெரும் ஏமாற்றத்தைக் கொடுத்தார்! கூடவே பல ஜெனரேட்டர்களும் நிறுத்தப்பட்டுவிட்டன! மாலையில் இலங்கை பெற்ற இமாலய ஓட்டங்களான 952/6 சாதனை எண்ணிக்கை; நாம் ஊரில் விளையாடிக் கொண்டிருக்கும் மைதானத்தில் பேசப்படுகின்றது! கூடவே அரவிந்தவின் சதம், அர்ஜுனவின் அரைச்சதம், கூடவே ஒரு புதுப்பெயர் பெற்ற அரைச்சதம், அந்தப்பெயரை முதல் முதலில் கேட்ட தருணம் அதுதான்!! - மகேல ஜெயவர்த்தன

"19 வயது சின்னப் பெடியன் நல்லா விளையாடினான்" என்று அவர்கள் பேசும் போது; அன்று யாரவன் என ஏற்பட்ட எதிர்பார்ப்பு, இன்று 17 வருடங்கள் ஆகியும் ஒவ்வொரு தடவையும் மகேலவை கிரீசில் காணும்போதெல்லாம் இம்மியளவும் குறையவில்லை!! மகேல என்னும் சொல் வெறும் பெயராக அல்ல, 17 ஆண்டுகள் என்னோடு கைகோர்த்து, நீங்கா நினைவாக, பசுமையான பசுமரத்து ஆணிபோல் பயணித்த ஓர் அற்புத நிகழ்வு! அந்த நிகழ்வின் சில துளிகளையும், மெய் சிலிர்ப்புக்களையும், பெருமைகளையும் பகிரலாமென்று நினைக்கிறேன்!!

காயம் காரணமாக அணியில் இல்லாமல்போன ஹஷான் திலகரத்னாவுக்கு பதிலாக கிடைத்த வாய்ப்பில்; இலங்கையின் 69 ஆவது டெஸ்ட் வீரராக அறிமுகமாகி தனது முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளையும் இந்தியாவுக்கு எதிராக ஆடிய மகேலவுக்கு; மூன்றாவது போட்டியை ஆடும் வாய்ப்பு பத்து மாதங்களுக்கு பின்னரே மீண்டும் கிடைக்கப்பெற்றது, இம்முறை நியூசிலாந்துக்கு எதிராக. இந்த தொடரின் முதல் இரு போட்டிகளும் மகேலவின் கிரிக்கட் வாழ்வின் முக்கிய திருப்புமுனைகளாக அமைந்தன! இவ்விரு போட்டிகளுமே மகேலவின் மீதான நம்பிக்கையை தேர்வாளர்களுக்கும் , ரசிகர்களுக்கும் அதிகப்படுத்தியது. எதிர்கால இலங்கை கிரிக்கட்டைக் கலக்கப்போகும் நாயகனாக மகேலவின் பெயர் இலங்கை டெஸ்ட் அணியில் உறுதிசெய்யப்பட்டதும் இத்தொடரில்தான்.பகல் நேரத்திலும் மின்சாரம் வழங்கப்பட ஆரம்பித்த புதிது, முதல் முறையாக இலங்கையின் ஆசுவாசமாக ஒரு டெஸ்ட் போட்டியை பார்க்கக் கிடைத்தது! முதல் இன்னிங்சில் மகேல 52 ஓட்டங்களைப் பெற்றிருந்தாலும்; இலங்கை போட்டியின் தோல்வியைத் தவிர்க்க போராடிய வேளையில், அரவிந்த டீ சில்வாவுடன் இணைந்து தடுப்பாட்டம் ஆடிய மகேல 255 பந்துகளில் 54 ஓட்டங்களைப் பெற்றிருந்தார் (SR - 21.17), இலங்கைக்கு இந்தப்போட்டி தோல்வியில் முடிவடைந்திருந்தது!! அடுத்த டெஸ்ட் போட்டி காலி விளையாட்டரங்கில் இடம்பெற்றது, இலங்கையின் இன்றைய பிரபலமான அழகிய டெஸ்ட் மைதானமாக விளங்கும் காலி மைதானத்தின் முதல் சர்வதேசப்போட்டி அதுதான்!

முதல் போட்டியின் தோல்விக்கு பழிதீர்க்க காத்திருந்த இலங்கைக்கு அந்தப்போட்டியில் கிடைத்ததோ இன்னிங்ஸ் வெற்றி!! ஆட்ட நாயகன் வேறுயாருமல்ல, 20 வயதேயான இளம் நட்சத்திர வீரர் மகேல தான்!! சனத், மார்வன், அரவிந்த, அர்ஜுன, ஹஷான், களுவிதாரண என இலங்கையின் அனுபவ/பிரபல வீரர்கள் சரியச்சரிய, மூன்றாம் இலக்க வீரராக களமிறங்கிய மகேல மட்டும் நிலைத்து நின்று 278 பந்துகளில் 167 ஓட்டங்களை (SR - 60) குவித்திருந்தார், இலங்கை சார்பில் வேறு எந்த வீரரும் 40 ஓட்டங்களைக் கூட தாண்டவில்லை, நியூசிலாந்தின் நதன் அஸ்டில் பெற்ற 53 ஓட்டங்கள்தான் அந்தப்போட்டியில் பெறப்பட்ட ஒரே அரைச்சதம்! பந்துவீச்சுக்கு சாதகமான காலி ஆடுகளத்தில் மகேல பெற்ற இந்த 167 ஓட்டங்கள் மகேலவின் எதிர்காலத்தையும், இலங்கைக் கிரிக்கட்டின் எதிர்காலத்தையும் எதிர்வுகூறியது! அடுத்தடுத்த இரண்டு போட்டிகளிலும் முரண்பட்ட இனிங்ஸ்களை ஆடி இருபது வயதிலேயே தன்னை ஒரு முதிரிந்த நுணுக்கமான வீரராக வெளிக்காட்டியிருந்தார் மகேல!

மகேலவின் ஏழாவது டெஸ்ட் போட்டி, அது ஆசிய கிண்ணத்துக்கான டெஸ்ட் போட்டி. அப்போது பாடசாலையில் இலங்கை இந்திய கிரிக்கட் ரசிகர்களின் மோதல் உச்சத்தில் இருந்த நேரம்! இலங்கை தோற்றால் மறுநாள் பாடசாலையில் என்னைச் சுற்றி இந்திய ரசிகர் கூட்டம் சர்க்கரையை மொய்க்கும் ஈக்களாய் குழுமிவிடுவார்கள், எப்படி அவர்களின் வாயை அடைப்பது என்பதை சிந்திப்பதில் தூக்கம் தொலைத்த இரவுகள் பல! அதேநேரம் இந்தியா இலங்கையிடம் தோற்றுவிட்டால் புரட்டாதிச் சனிக் காக்கைகள் போல ஒரு இந்திய ரசிகனும் கண்ணில் அகப்படமாட்டார்கள், அகப்பட்டால் அன்று அவர்களுக்கு சனிதான்.


முதல் இரு நாட்களும் இந்தியா புரட்டிப்போட்டிருந்தது, 500 ஓட்டங்களுக்குமேல் குவித்த இந்தியாவின் ஓட்ட எண்ணிக்கையை தொடர்ந்த இலங்கையின் இலக்குகள் ஒரு முனையில் சாயச்சாய மறுமுனையில் 3 ஆம் இலக்கத்தில் களமிறங்கிய இளம் சிங்கம் மகேலவின் அற்புதமான இன்னிங்ஸ் ஒன்று நிகழ்ந்துகொண்டிருந்தது. சுழலுக்கு சாதகமான மைதானத்தில் இந்தியாவின் வரலாற்றுச் சுழல்பந்துவீச்சாளர்களான கும்ளேயும் ஹர்பஜனும் வீசிக்கொண்டிருக்க, மிகச் சிறப்பான நுணுக்கமான துடுப்பாட்டத்தின் மூலம் 242 ஓட்டங்களை மகேல குவித்தார். அனைத்து திசைகளிலும், அனைத்து விதமான கிரிக்கட் ஷொட்களையும் அழகாக விளையாடும் மகேலவின் ஒவ்வொரு அசைவிலும் ஒரு நளினம் இருந்தது!


ஒருசில வீரர்களுக்குத்தான் ஸ்டைல் இயல்பிலேயே இருக்கும்; உதாரணமாக சொல்வதானால் மார்க் வோ, அசாருதீன் போன்றோரை சொல்லலாம், மகேலவிடமும் ஸ்டையில் இயல்பிலேயே இருந்தது, அது துடுப்பாடும்போதும் சரி, களத்தடுப்பின் போதும்சரி அன்றிலிருந்து இன்றுவரை மாறாத அழகு! ஒவ்வொரு ஷொட்களையும் மகேல விளையாடும் நேர்த்தி கிரிக்கட்டை காதலிக்கும் எவருக்கும் சிலிர்ப்பைக் கொடுக்கும்; அதனால்தான் If Cricket is an Art, Mahela is Picasso என்று பெருமைப்படுத்தி சொல்வார்கள். அந்த சிலிர்ப்பை ஓட்டங்குவிக்கும் ஒவ்வொரு இன்னிங்ஸ்களிலும் மகேல உணரவைத்திருப்பார்.


1999 உலகக்கோப்பை போட்டிகளுக்கு முன்னதாக அவுஸ்திரேலியாவில் இலங்கை, அவுஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகள் ஆடும் VB முக்கோணத்தொடர் இடம்பெறவிருந்தது. டெஸ்ட் வீரராக மட்டும் கணிக்கப்பட மகெலவை ஒருநாள் போட்டிகளுக்கும் பொருத்தமான வீரராக அடையாளம் காட்டியது இந்தத் தொடர்தான். VB தொடருக்கான இலங்கைக்கான குழாமில் முதற்சில போட்டிகளில் அரவிந்த டீ சில்வா சில காரணங்களுக்காக ஆடமுடியாத நிலை ஏற்படவே; அரவிந்தவிற்கான மாற்றீடாக இறுதி நேரத்தில் அணியில் சேர்க்கப்பட்டார் மகேல! தொடரின் முதல் சில போட்டிகளில் சோபிக்காவிட்டாலும்; மகேலவின் கிரிக்கட் வாழ்வின் முக்கியமான ஒரு போட்டி மகேலவிற்காக இந்தத் தொடரில் காத்துக்கொண்டிருந்தது!

இலங்கை யின் ஓர் தனியார் தொலைக்காட்சி போட்டிகளை ஒளிபரப்பியது, அவற்றை நேரடியாக பார்க்கும் வசதிகள் அப்போதைய யாழ்ப்பாணத்தில் இல்லை! பலாலியை மையமாக கொண்டு இயங்கிய இராணுவத்தினரின் தொலைக்காட்சியில் முதல் நாள் போட்டிகள் ஒளிப்பதிவு செய்யப்பட்டு மறுநாள் ஒளிபரப்பப்பட்டது. ஆரம்பப் போட்டிகளின் தோல்வி VB தொடர்மீது ஆர்வத்தை குறைத்திருந்தது, இந்நிலையில் ஒருநாள் மாலை உறவினர் வீடு ஒன்றிற்கு நானும் தம்பியும் சைக்கிளை மிதித்தபடி சென்றுகொண்டிருந்தோம். அப்போது மனோகரன் அண்ணை மறித்தார். மனோகரன் அண்ணை - பாடசாலைக்கு பக்கத்தில் பெட்டிக்கடை வைத்திருப்பவர், எங்களுக்கு எட்னா (EDNA) சாக்லேட் விற்றே பணக்காரனாகியிருப்பார் :-) எட்னா கவருக்குள் வரும் கிரிக்கெட் வீரர்களது ஸ்டிக்கர்கள் அப்போது இங்கு மிகப்பிரபலம்! அதிலும் 20 ரூபா எட்னா ஸ்டிக்கர்தான்; ஸ்டிக்கர் சேர்க்கும் அனைவரும் விரும்புவது. சில நேரங்களில் ஸ்டிக்கரை செலக்ட் செய்யப்போவதாக சொக்லேட்களை வாங்கி; ஸ்டிக்கர் திருட்டுகளும், எங்களிடம் டபிளாக இருக்கும் ஸ்டிக்கர்களை மாற்றி வைக்கும் சம்பவங்களும் நடைபெறும் :-)

வழிமறித்த மனோகரன் அண்ணன் "எப்பிடி அடி? குடுத்து விட்டாங்கள், 300 ஐக் கலைச்சிட்டாங்கள்" என்றார். ஆர்வமும், மகிழ்ச்சியும் அதிகரிக்க யார் அடித்தது என்று ஒரே குரலில் நானும் தம்பியும் கேட்டோம், அவர் "மாக்கட ஜெயவர்த்தன" என்றார்! இன்றுவரை மகேலவை செல்லமாக 'மாக்கட' என்று எங்களுக்குள் அழைப்பதுண்டு :-) மனோகரன் அண்ணையிடம் விடைபெற்று வீடு திரும்பும் வரை எங்களுக்கிருந்த மகிழ்ச்சி, மறுநாள் ஒளிப்பதிவு ஒளிபரப்பப்படும்வரை காத்திருந்த நிமிடங்களின் நீளங்கள் என்பன சொல்லிப் புரியாதவை!

அன்று 1999 ஜனவரி 23 - இலங்கைக் கிரிக்கட்டின் மறக்கமுடியாத ஓர்நாள்! VB தொடரில் இலங்கை இங்கிலாந்துக்கு இடையிலான போட்டி அடிலைட் மைதானத்தில் நடைபெற்றுக் கொண்டிருந்தது. நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை பந்துவீசிக் கொண்டிருந்தது. போட்டியின் 18 ஆவது ஓவரின் நான்காவது பந்தை முரளிதரன் வீசிக்கொண்டிருந்தபோது; போட்டியின் இரண்டாம் நடுவராக (Square Leg Umpire) கடமையாற்றிக் கொண்டிருந்த 'ரோஸ் எமர்சன்' என்ன நினைத்தாரோ தெரியவில்லை, முரளி வீசிய அந்தப் பந்தை முறைதவறி வீசப்பட்டதாக அறிவித்தார், காரணம் முரளியின் பந்துவீசும் முறை என சொல்லப்பட்டது!

தலைமை என்றால் என்ன? ஒரு அணித் தலைவர் எப்படி இருக்க வேண்டும்? என்பதற்கான விடை அன்று கிடைத்தது! சில நொடிகளில் ரோஸ் எமர்சனுக்கும் அர்ஜுனவுக்கும் இடையில் கடுமையான வாக்குவாதம் இடம்பெற்றது. அர்ஜுனாவின் முகத்தில் கடும் கோபம் தெரிந்தது,சில நிமிட வாக்குவாதத்தின் பின்னர் அர்ஜுன இலங்கை அணியை கூட்டிக்கொண்டு எல்லைக்கோட்டுக்கு சென்றுவிட்டார். உடனடியாக இலங்கை அணியின் முகாமையாளரும், போட்டி மத்தியஸ்தரும் இலங்கைக் கிரிக்கட் சபையுடன் பேசி ஒருவழியாக சமரசம் ஏற்பட்டது. முரளி தொடர்ந்து பந்துவீசுவதாக முடிவெடுக்கப்பட்டது, ஆனால் ரோஸ் எமர்சன் முதல் நடுவராக இருக்கும் திசையிலிருந்தே பந்து வீசுவதென்று முடிவு செய்யப்பட்டது! (முதல் நடுவருக்கு பந்துவீசும் முறை பற்றி முடிவெடுக்க அதிகாரமில்லை) முரளி பந்து வீச வருகிறார் around Through வழியாக பந்துவீச ஆரம்பிக்கிறார், எமர்சன் விக்கட்டுக்கு சற்று பின்னே நிற்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார், அவர் முரண்டு பிடிக்கிறார், அர்ஜுன மீண்டும் சிங்கமாகிறார், இம்முறை எமர்சன் பின்வாங்குகிறார்.ஆனால் முரளியின் பந்தினை இங்கிலாந்தின் கிராம் ஹிக் பதம் பார்க்க தொடங்குகிறார், ஆட்டத்தின் போக்கு இங்கிலாந்தின் பக்கம் இலகுவில் திரும்புகிறது, 302 ஓட்டங்களை இங்கிலாந்து 50 ஓவர்கள் நிறைவில் பெற்றுக்கொள்கின்றது! அன்றைய தேதியில், அதிலும் அவுஸ்திரேலிய மண்ணில் இதுவொரு மிகப்பெரும் இலக்கு! இலக்கினை நோக்கி இலங்கை அடியெடுத்துவைக்க நினைக்கையில் ஓட்டம் பெறாமல் களுவிதாரண Run-out ஆகிறார், அடுத்துவந்த அத்தப்பத்துவும் உடன் வெளியேற, திலகரட்ணவின் ஆமைவேக ஆட்டத்தை தன் அதிரடியால் சமப்படுத்திய சனத்; வேகமாக 36 பந்துகளில் அரைச்சதம் கடந்து ஆட்டமிழக்கிறார்; அப்போது இலங்கையின் ஓட்ட எண்ணிக்கை 10 ஓவர்களில் 3 இலக்குகளை இழந்து 68 ஓட்டங்கள்!

நட்சத்திர வீரர் அரவிந்த டீ சில்வா இல்லாத நிலையில்; இந்தப் போட்டியில் இலங்கையின் வெற்றிக்கனி வாய்ப்பு எட்டாக்கனி என்பது உள்ளங்கை நெல்லிக்கனியாக தெரிந்தது. அப்போதுதான் மைதானம் நுழைந்தான் அந்த 20 வயது இளைஞன். ஹஷான், அர்ஜுன என இரு அனுபவங்களும் துணை நிற்க அற்புதமான சதத்தை கடந்தான் அந்த இளம் சிங்கம், எங்கள் மகேல! அனுபவ இங்கிலாந்தை அன்னியமண்ணில் ஒரு உணர்ச்சிமிக்க போட்டியில் பந்தாடிய மகேல 111 பந்துகளில் 120 ஓட்டங்களை குவித்து வெளியேறினார்! உப்பிள் சந்தனவின் அதிரடி கைகொடுக்க வெற்றிக்கான ஓட்டத்தை அன்றைய சர்ச்சை நாயகன் முரளிதரன் பெற்றுக்கொடுக்க இலங்கை உணர்ச்சிபூர்வமான வெற்றிக்கனியை பறித்தது, ஆட்டநாயகனாக 20 வயதான மகேல.

தொடர்ந்து வாசிம் அக்ரம், சொகைப் அக்தர், சக்லின் முஸ்டாக் என பலமான பாகிஸ்தான் பந்து வீச்சு வரிசையை எதிர்கொண்டு மகேல பெற்றுக்கொண்ட அவரது இரண்டாவது ஒருநாள் சதமும் மகேலாவின் முக்கியமான இனிங்ஸ்களில் ஒன்று! இந்தப்போட்டியைக் காண 10 Km வரை சைக்கிள் மிதித்து நண்பன் ஒருவர் வீட்டுக்கு சென்றிருந்தேன், மின்கலத்தில் இயங்கும் ஒரு சிறிய கறுப்பு வெள்ளைத் தொலைக்காட்சியில் பார்த்த அந்த இனிங்ஸ்சும், நினைவுகளும் இன்னமும் பசுமையாக உள்ளது, 99 ஓட்டங்களில் மகேல Run-Out இல் இருந்து மயிரிழையில் தப்பியதுகூட!

அடுத்து உலகக் கிண்ணம் 1999, நடப்பு சாம்பியனாக போட்டிகளில் பங்கேற்ற இலங்கைக்கு மிகப்பெரும் அடி காத்திருந்தது, முதற் சுற்றுடன் வெளியேறியது இலங்கை. அதிலும் இந்தியாவுடனான படுதோல்வி பாடசாலையில் இலங்கை ரசிகர்களான எமக்கு கடும் மன உளைச்சலை ஏற்படுத்தியிருந்தது!! உலகக் கிண்ண தோல்வியைத் தொடர்ந்து 1996 இல் கொண்டாடப்பட்ட நாயகர்கள்மீது கடும் விமர்சனங்களும் முன்வைக்கப்பட்டன. இலங்கை கிரிக்கட் தமது அடுத்த கட்டத்தை நோக்கி சிந்திக்கத் தொடங்கியது, முதற்கட்டமாக இலங்கைக் கிரிக்கட்டின் தூண்களான அரவிந்த, அர்ஜுன இருவரும் ஒருநாள் அணிகளில் இருந்து நீக்கப்பட்டனர். புதிய தலைவராக சனத் ஜெயசூர்யா தேர்ந்தெடுக்கப்பட்டார், உலகக்கிண்ணப் போட்டிகளில் ஓரளவேனும் ஓட்டம் குவித்திருந்த ரொஷான் மகாநாம கிரிக்கட்டில் இருந்து ஓய்வை அறிவித்தது அதிர்ச்சியாக இருந்தது, காரணம் தலைமைப் பதவி கிடைக்காதது என்று பேசப்பட்டது!


உலகக்கிண்ண போட்டிகளில் பெரிதளவில் சோபிக்காவிட்டாலும் இலங்கை சார்பாக கணிசமான ஓட்டங்களை பெற்றிருந்த மகேலவின் துடுப்பாட்டம் எல்லோரையும் கவர்ந்திருந்தது! இலங்கை கிரிக்கட்டும் எதிர்காலத்தை கருத்திற்கொண்டு மகேலவை அணியின் உபதலைவராக அறிவித்தது. 20 வயதில் இது மகேலவிற்கு ஒரு மிகப்பெரும் அங்கீகாரம். சனத் தலைமையிலான அணி; எடுத்த எடுப்பிலேயே இலங்கை, இந்தியா, அவுஸ்திரேலியா பங்குகொண்ட முக்கோணத் தொடரை சொந்தமண்ணில் வெற்றி கொண்டதோடல்லாமல், முதல்தர அணியான அவுஸ்திரேலியாவுடன் முதல் போட்டி மற்றும் போட்டித் தொடர் வெற்றியையும் பதிவு செய்தது!மகேலவின் டெஸ்ட் போட்டிகளின் மீதான ஆளுமை அதிகரித்துக்கொண்டு சென்றாலும் ஒருநாள் போட்டிகளில் மகேலவின் ஓட்டக்குவிப்பு சராசரியாகவே இருந்து வந்தது. தனது விக்கட்டை தானே தூக்கியெறியும் விதமாகவே பல ஒருநாள் போட்டிகளை மகேல ஆடிக்கொண்டிருந்தார்! முக்கிய தருணங்களில் நிதானமாக பொறுப்பாக ஆடும் திறன், சாதாரண நேரங்களில் மகேலவிடமிருந்து வெளிப்படுவதில்லை, நிலைத்து நிற்கும் இனிங்ஸ்களிலும், 40 ஓவர்களைக் கடந்துவிட்டால்; ஒவ்வொரு பந்தையும் அடித்தாட வேண்டும் என்கின்ற மனநிலையில் காணப்படுவார். தனது இந்த இயல்பை அவர் இறுதிவரை மாற்றவில்லை! அதனை மாற்ற முடியாதுள்ளதாக மகேலவே கூறியிருந்தார். மகேல ஆடியிருக்கும் ஒருநாள் போட்டிகளின் எண்ணிக்கைக்கும், அவர் திறனுக்கும் அவர் பெற்ற ஓட்டங்கள் குறைவானவையே!

இந்நிலையில் 2000 ஆம் ஆண்டு இலங்கையில் பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக இலங்கை கிரிக்கட்டால் மகேலவின் உபதலைவர் பதவி மீளப்பெறப்பட்டு, அத்தப்பத்து உபதலைவராக்கப்பட்டார். மகேலவின் துடுப்பாட்டத்தை சீர் செய்யவே இந்த முடிவு என்று சொல்லப்பட்டது. பதவி பறிக்கப்பட்ட அடுத்தடுத்த இரண்டு போட்டிகளிலும் தலா ஒரு அரைச்சதத்தை மகேல பெற்றிருந்தார். அடுத்து தென்னாபிரிக்காவுக்கு எதிரான தொடரின் முதல்ப் போட்டியில் மிகச் சிறப்பான இனிங்க்ஸ் ஒன்றை ஆடி மீண்டும் ஒரு 167 ஓட்டங்களை காலி மைதானத்தில் குவித்தார், 165,166,167 ஓட்டங்களில் மகேல 5 தடவைகள் ஆட்டமிழந்துள்ளார். தென்னாபிரிக்காவுடனான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் அர்ஜுனவின் இறுதி இனிங்ஸில்; அவருடன் இறுதிவரை களத்தில் இணைந்து ஆடி, மற்றொரு சதத்தையும் அதே தொடரில் பெற்றுக்கொண்டார்!

இலங்கையின் அடுத்த தொடரின் முதல் போட்டி தென்னாபிரிக்காவின் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான டேர்பன் மைதானத்தில் இடம்பெற்றது. இந்தப் போட்டியின் முதல் இனிங்ஸில் மகேல 98 ஓட்டங்களை பெற்றவேளையில் ஆட்டமிழந்தார், மகேலவின் கிரிக்கட் வாழ்க்கையில் மறக்கமுடியாத ஆட்டமிழப்பு இது. அனைத்து டெஸ்ட் விளையாடும் நாடுகளுடனும் சதமடித்துள்ள மகேலவிற்கு; வெறும் 2 ஓட்டங்களால் டெஸ்ட் விளையாடும் அனைத்து நாடுகளிலும் சதமடித்திருக்கும் வீரர்கள் பட்டியலில் இணையும் வாய்ப்பு இறுதிவரை அமையவில்லை.

தொடர்ந்து டெஸ்ட், ஒருநாள் போட்டிகளில் சதங்களுடன் ஓட்டங்களைக் குவித்துக்கொண்டிருந்த மகேலவிற்கு மற்றுமொரு மைல்கல் 2002 ஆம் ஆண்டு கடந்தது. கிரிக்கட்டின் தாய்வீடான இங்கிலாந்தின் லோட்ஸ் மைதானத்தில் சதமடித்து, டெஸ்ட் கிரிக்கட் விளையாடும் வீரர்களின் முக்கிய கனவுகளில் ஒன்றை நிறைவேற்றினார். பின்னர் 2006 இல் மீண்டும் ஒரு சதம் மகேலவால் லோட்சில் பெறப்பட்டது. போட்டியின் நான்காம், ஐந்தாம் நாட்களில் போட்டியை சமநிலையில் கொண்டு செல்ல, மகேல போராடியபோது கிடைத்த சதமது. மகேல மற்றும் பின்வரிசை வீரர்களால் போட்டியும் சமநிலையில் முடிவடைந்தது. ஆசிய வீரர்களில் வெங்காஸ்கர்(3 சதம்) தவிர்த்து மகேல மட்டுமே லோட்ஸ் மைதானத்தில் 2 சதங்கள் அடித்த வீரர் என்கின்ற பெருமையை பெற்றுள்ளார்.

2003 - உலகக் கிண்ணம் ஆரம்பமாகியது, பெரும்பாலான முக்கோணத் தொடர்களைக் கைப்பற்றி; சனத் தலைமையில் சாதித்துக் கொண்டிருந்த இலங்கை அணிமீதும் எதிர்பார்ப்பு ஏற்பட்டிருந்தது. இலங்கையைப் பொறுத்தவரை கென்யாவுடனான தோல்வியை விடுத்து பார்த்தால், அரையிறுதிவரை முன்னேறியது உலகக் கிண்ணத்தை பொறுத்தவரை கௌரவமான பெறுபேறுதான். ஆனால் அறையிறுதித் தோல்வி ஜீரணிக்க முடியாமல் போனது நிதர்சனம். 213 எனும் வெற்றி இலக்கு நிச்சயம் எட்டப்பட கூடியதே, ஆனால் இலங்கையால் போட்டியை வெற்றிகொள்ள முடியவில்லை. இந்த உலகக் கிண்ணம் மகேலவின் கிரிக்கட் வாழ்க்கையின் ஓர் மோசமான அத்தியாயம்.2003 உலகக் கிண்ணப் போட்டிகளில் மகேல எட்டு இனிங்ஸ்களில் ஆடி 22 ஓட்டங்களை மட்டுமே பெற்றிருந்தார், இது அந்தத் தொடரின் இரண்டாவது மோசமான ஓட்ட எண்ணிக்கை. பாகிஸ்தானின் இன்சமாம் உல் ஹாக் மகேலவை விட குறைவான எண்ணிக்கையில் 17 ஓட்டங்களைப் பெற்றிருந்தார். மகேலவின் மீது அதிருப்தி அடைந்த இலங்கைக் கிரிக்கட், அடுத்தசாஜா தொடருக்கான குழாமில் மகேலவை இணைக்கவில்லை! இது மகேலவிற்கு மட்டுமல்ல, அவர் ரசிகர்களான எமக்கும் ஏமாற்றத்தையும் வேதனையையும் கொடுத்தது. மகேலவை பிடிக்காதவர்கள், மகேலவின் கிரிக்கட் வாழ்க்கை அஸ்தமனம் என்றே பேசிக்கொண்டனர். நாமோ மகேலவை மீண்டும் காணும் நாளுக்காக காத்துக் கொண்டிருந்தோம்.

அடுத்த தொடராக இலங்கைக்கு நியூசிலாந்து பயணம் மேற்கொண்டிருந்தது. டெஸ்ட் போட்டிகளுக்கு முன்னதாக பயிற்சிப் போட்டியில் நியூசிலாந்துடன் ஆடும் இலங்கை 'கிரிக்கட்சபை அணி' அறிவிக்கப்பட்டது, அதில் மகேலவின் பெயரும் இடம்பெற்றிருந்தது. கூடவே நீண்ட நாட்களாக அணியில் இல்லாதிருந்த களுவிதாரணவின் பெயரும் இடம்பெற்றிருந்தது. அந்த நேரத்தில் நான் கொழும்பில் ஒர் அமைச்சில் பணியாற்றிக் கொண்டிருந்தேன், குறிப்பிட்ட பயிற்சிப் போட்டியன்று வேலைக்கு போக்குக் காட்டிவிட்டு, நண்பன் ஒருவனை வலிந்து அழைத்துக்கொண்டு, போட்டி நடைபெறும் NCC மைதானத்திற்கு சென்றோம், முழுக்க முழுக்க மகேலவிற்காக!

எமது ராசி நன்றாக இருந்திருக்கவேண்டும், ஏனெனில் இலங்கைதான் துடுபெடுத்தாட ஆரம்பித்திருந்தது. ரசல் ஆர்னோல்ட், டில்ஷான் என பிரபல வீரர்கள் ஆட்டமிழக்க, 4 ஆம் இலக்கத்தில் மகேல களமிறங்கினார். எனக்கு பயங்கரமான பதட்டம்! ஷேன் பொண்ட், ஜேகப் ஒராம் வீசிய வேகங்களுக்கு மகேல தடுத்தாடிய அவரது விருப்பத்துக்குரிய Forward Defense பார்ப்பதற்கு அற்புதமாக இருந்தது.

வைஸ்மனின் ஓவர் ஒன்றில் காலியாக இருந்த மிட் விக்கட் திசையை குறிவைத்த மகேலவின் முயற்சி பலனளிக்க, அங்கு அற்புதமான இனிங்க்ஸ் ஒன்று என் கண்களுக்கு முன்னால் நிகழ்ந்தேறியது. திருப்திகரமான சதம் ஒன்றை மகேல நிறைவு செய்துவிட்டு ஆட்டமிழந்தார். அன்றைய எல்லையற்ற என் மகிழ்ச்சி 10 ஆண்டுகள் கழித்து இப்போதும் உணரக்கூடியது, அந்தப்போட்டியில் 57 ஓட்டங்கள் பெற்று, மகேலவுடன் டெஸ்ட் அணியில் களுவிதாரண இடம்பிடித்தது மகிழ்ச்சியை இரட்டிப்பாக்கியது.

முதல் டெஸ்ட் போட்டி சரவணமுத்து மைதானத்தில் இடம்பெறவிருந்தது. முதலில் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து 515 ஓட்டங்களை குவித்திருந்தது. மூன்றாம்நாள் ஆட்டத்தைக் காண மைதானம் செல்ல முடிவெடுத்திருந்தேன், மைதானம் செல்ல பம்பலப்பிட்டியில் இருந்து 154 இலக்க பேரூந்தில் சென்று, பொரளை சந்தியிலிருந்து அடுத்த நிறுத்தத்தில் இறங்கி, முன்னால் உள்ள சிறிய வீதியில் செல்ல ஆட்டோவுக்கு 40 ரூபா கொடுத்தால் போதும், 40 ரூபாயை மிச்சப்படுத்த சில சமயம் நடத்தும் சென்றிருக்கிறோம்!அன்றையதினம் துடுப்பாட்டத்தில் இலங்கையும் நன்றாக ஆடியது, எதிர்பார்க்கப்பட்ட மகேலவும் களுவிதாரணவும் அரைச்சதம் கடந்தனர். போட்டி நிறைவடையும் நேரம் நெருங்க மழையும் ஆரம்பித்தது, அதிகமாக மைதானத்தில் தூங்கும் ஹஷான் திலகரட்ன; சதமடித்த பின்னர் வேகமாக ஓட்டங்குவிக்க, மைதானம் ஆரவார நிலையில் இருக்கும்போதே அன்றைய நாள் முடிவடைந்தது! மகேல ஓட்டங்களை குவித்ததால் மீண்டும் அணியில் தொடர்ந்து ஆடுவார் என்கின்ற நம்பிக்கையான மகிழ்ச்சியில் அந்தநாள் நிறைவடைந்தது.

அப்படியே ஆண்டுகள் நகர்ந்தன மகேலவின் துடுப்பாட்ட வரைபடம் சராசரியாக நகர்ந்துகொண்டிருந்தது. 2006 ஆம் ஆண்டு அணித்தலைவர் அத்தப்பத்துவிற்கு ஏற்பட்ட உபாதை காரணமாக மகேல தற்காலிக தலைவராக பங்களாதேஷ், பாகிஸ்தான் தொடர்களில் கடமையாற்றினார். பாகிஸ்தானுடனான சொந்தநாட்டு தொடர் தோல்வியில் முடிந்தாலும்; அடுத்ததாக இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட, அத்தப்பத்து இல்லாத இலங்கை அணிக்கு மீண்டும் மகேலவே பதில் தலைவராக அனுப்பிவைக்கப்பட்டார்.

மகேலவின் மட்டுமல்ல, இலங்கைக் கிரிக்கட்டின் எதிர்காலமும் இந்தத் தொடரில் தீர்மானிக்கப்பட்டது. 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை சமப்படுத்திய மகேல தலைமையிலான இலங்கை அணி; ஒரே T/20 போட்டியையும் வென்று, ஒருநாள் தொடரில் 5:0 என மிகப்பெரும் வெற்றி பெற்று இங்கிலாந்தை சொந்தமண்ணில் திணறச் செய்திருந்தது. டெஸ்ட் போட்டிகளில் ஒரு சதமும், ஒருநாள் போட்டிகளில் இரு சதமும் என மகேலவால் இந்தத் தொடரில் மூன்று சதங்கள் குவிக்கப்பட்டன. தொடர்ந்து ஹொலண்டுடனான ஒருநாள் தொடரின் ஓர் போட்டியில், ஒருநாள் போட்டிகளின் அதிகபட்ச ஒட்டமான 443 ஓட்டங்கள் இலங்கையால் குவிக்கப்பட்டது. பின்னர் 2007 இல் இடம்பெற்ற T/20 உலகக் கிண்ணப் போட்டிகளில் சாதனை ஓட்டங்களான 260 ஓட்டங்களையும் மகேல தலைமையிலான இலங்கை அணி குவித்திருந்தது. டெஸ்ட் கிரிக்கட்டின் அதிகூடிய ஓட்டமான 952 ஓட்டங்களை இலங்கை குவித்த போட்டிதான் மகேலவின் முதற் போட்டி என்பது கூடுதல் சிறப்பு.

அடுத்து இலங்கையில் இடம்பெற்ற தென்னாபிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடர் மகேலவிற்கு மறக்கமுடியாத மற்றுமொரு தொடர். இரு போட்டிகளைக் கொண்ட இந்த தொடரின் இரண்டு போட்டிகளும் மகேலவிற்கு சிறப்பான போட்டிகள். முதற் போட்டியில் சங்கக்காரவுடன் இணைந்து தென்னாபிரிக்க அணியின் முன்னணி பந்துவீச்சாளர்களான போலக், நிட்டினி, ஸ்டெயின் போன்றோரை திணறடித்து 624 ஓட்டங்களை இணைப்பாகமாக பெற்று உலகசாதனை படைத்தனர். இந்த போட்டியில் மகேல குவித்த 374 ஓட்டங்கள், ஆசியாவின் தனிமனித சாதனை எண்ணிக்கை, வலது கை வீரர் ஒருவர் பெற்ற அதிகபட்ச ஓட்டமும் இதுதான். என்னைப் பொறுத்தவரை இந்தப் போட்டியிலும் மின்சாரம் விளையாடியிருந்தது, 3 ஆம் நாள் ஆட்டத்தன்று எமது பகுதிக்கு பவர் கட். அக்கா ஒருவரின் வீட்டில் போட்டியை பார்க்க சென்றிருந்தேன், மகேல 370 ஓட்டங்களுக்குள் நுழைந்த நேரம் அங்கும் மின்தடை ஏற்பட்டது, பதட்டத்துடன் காத்திருந்த எனக்கு 10 நிமிடங்களில் மின்கலம் ஒளிர்ந்து மகிழ்ச்சியை ஏற்படுத்தியது, தொலைக்காட்சி திரை தோன்றும் அந்தக் கணம்வரை பரபரப்பு! ஆனால் அங்கே திரையில் மகேல ஆட்டமிழந்து வெளியேறிக் கொண்டிருந்தார்.

374 ஓட்டங்கள், தூக்குவாரிப்போட்டது, மிகப்பெரும் ஏமாற்றம், அன்ட்ரே நெல் வீசிய புதிய பந்தினாலான இன்ஸ்விங் பந்தொன்று மகேலவின் மட்டைக்கும் காலுக்கும் இடையிலான இடைவெளியில் புகுந்திருந்தது. "அட இன்னும் ஓர் ஓட்டம் எடுத்திருந்தால் லாராவின் 375, ஆறு ஓட்டம் எடுத்திருந்தால் ஹெய்டனின் 380" என அடுத்தடுத்த சில நாட்களுக்கு வெறுவாய் மென்று கொண்டிருந்தோம். ஆனாலும் மகேலவின் தனித்துவமான ஷொட்டான inside out பற்றி பேசி பெருமைப்பட்டுக்கொண்டும் இருந்தோம். மகேல அடிப்பது நான்கோ, ஆறோ; அவர் எதிர்முனையில் இருக்கும் கிரீஸ்வரை சென்று கிரீசை தொட்டுவிட்டுத்தான் திரும்புவார், இதை அவர் ஒரு அதிஷ்டமாக நினைப்பவர். எமக்கும் சில அதிஷ்டங்களை நம்பும் குணம் உண்டு! மகேல ஆடிக்கொண்டிருக்கும்போது என் தம்பி சோபாவில் இருந்து ஒரு கதிரைமேல் காலைப் போட்டுக்கொண்டிருப்பான், இடியே விழுந்தாலும் மகேல ஆட்டமிளக்கும்வரை .எழும்பவே மாட்டான். தொலைக்காட்சி சத்தம் மகேல நிற்கும்வரை 27 இல் இருக்கும், மின்சாரம் தடைப்பட்டால் மீண்டும் மின்சாரம் வரும்போது மகேல மைதானத்தில் ஆடிக்கொண்டிருக்க மாட்டார், என பல நம்பிக்கைகள். மகேலாவை ரசித்தோம் என்று சொல்ல முடியாது, தீவிரமாக காதலித்தோம்!
தென்னாபிரிக்காவுடனான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை வெற்றி பெற நான்காவது இனிங்ஸில் 352 ஓட்டங்களை இலங்கை பெற்றாக வேண்டும், இலங்கை ஆடுகளங்களில் நான்காம் ஐந்தாம் நாட்களில் இந்த ஓட்டங்களை பெறுவதென்பது மிகவும் கடினமான விடயம். சனத் கொடுத்த தொடக்கத்தை பயன்படுத்தி மகேல தனித்து நின்று போராடி 123 ஓட்டங்களைப் பெற்று, வெற்றிக்கு மேலும் 10 ஓட்டங்கள் மட்டுமே தேவையானபோது ஆட்டமிழந்தார், இறுதியில் இலங்கை 1 விக்கட்டினால் போட்டியையும், தொடரையும் கைப்பற்றியது! மகேலாவினது மட்டுமல்ல; இலங்கை வீரர் ஒருவர் பெற்ற மிகச்சிறந்த டெஸ்ட் சதமும் இதுவென்பேன்!

இங்கிலாந்து, மற்றும் இலங்கையில் தென்னாபிரிக்காவுடனான தொடர் வெற்றிக்கு பின்னர் இலங்கைக் கிரிக்கட் மகேலவே தொடர்ந்தும் தலைமைப்பதவி வகிக்க விரும்பியது. அடுத்த சாம்பியன்ஸ் ட்ரோபி, நியூசிலாந்துடனான ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடர்கள், இந்தியாவுடனான ஒருநாள் தொடர் போன்றவற்றிற்கு மகேலவே தலைமை தாங்கினார். ஆனால் மகேலவின் ஓட்டக்குவிப்பு மீண்டும் மோசமான நிலைக்கு சென்றுகொண்டிருந்தது. பெரியளவிலான ஓட்டங்கள் எவையும் மகேலவிடமிருந்து கிடைக்கவில்லை. இந்நிலையில் 2007 உலகக் கிண்ணப் போட்டிக்கான அணித் தலைவராக மகேலவையே இலங்கைக் கிரிக்கட் தேர்வு செய்திருந்தது. ஏற்கனவே 2003 உலகக்கிண்ணம் மகேலவிற்கு கொடுத்த அனுபவம் மறக்கப்படாமலிருக்க, 2007 உலகக் கிண்ணப் போட்டிகளில் இலங்கை ஆடத்தொடங்கியது. தனது அனைத்து விமர்சனங்களுக்கும் முற்றுப்புள்ளி வைத்த மகேல; அந்தத் தொடரில் அரையிறுதியில் பெற்ற அற்புதமான சதத்துடன் மொத்தமாக 548 ஓட்டங்களைக் குவித்து இலங்கையை இறுதிப் போட்டிவரை அழைத்துச் சென்றிருந்தார்.

2003 உலகக் கிண்ணப் போட்டித்தொடரில் இரண்டாவது மோசமான ஓட்டம் பெற்றிருந்த மகேல; இம்முறை இரண்டாவது அதிகபட்ச ஓட்டங்கள் குவித்த வீரர் என்கின்ற பெருமையைப் பெற்றார். இதுதான் போராட்ட குணம் மிக்க மகேலாவின் வெற்றி! அரையிறுதியில் நியூசிலாந்துக்கு எதிராக மகேல பெற்ற சதம் மறக்க முடியாத சதங்களில் ஒன்று. மிகுந்த பதட்டத்துடன் போட்டியை காணக் காத்திருந்த எங்களுக்கு சனத், சங்கா ஏமாற்றமளிக்க, நான்காம் இலக்கத்தில் மகேல களமிறங்கினார். உப்பில் தரங்க சற்று வேகமாக ஓட்டமெடுக்க, மறுமுனையில் நிதானமாக ஆடிய மகேல, அற்புதமான ஒரு நீண்ட இனிங்ஸ்சிற்கு தயாராகிக்கொண்டிருந்தார். நிதானமாக ஓட்டங்களைக் சேர்த்துக் கொண்டிருந்த மகேல இறுதி 5 ஓவர்களில் அதிரடியாக ஆடி ஆட்டமிளக்காமல் 115 ஓட்டங்களைக் குவித்தார். முக்கிய போட்டிகளில் நிலைத்து நின்று பொறுப்போடு ஆடும் மகேலாவின் போராட்டம் மிக்க இனிங்ஸ்களில் இதுவும் ஒன்று! அரையிறுதியில் பெற்ற வெற்றிக் கொண்டாட்டங்களை; இறுதிப்போட்டி புஸ்வானமாக்கிப்போனது. அடம் கில்கிறிஸ்டின் தனிமனித தாக்குதலை இலங்கையால் கட்டுப்படுத்த முடியாமல் போனதுதான்; உலகக் கிண்ண இறுதிப் போட்டித் தோல்விக்கும்,இலங்கையின் உலகக் கிண்ணம் மீதான கனவை மீண்டும் தள்ளிபோடவும் காரணமாயிற்று!

2007 உலகக் கிண்ணப் போட்டிகளின் பின்னர் பெரிதளவில் வெற்றிகளை இலங்கையால் பெற்றுக்கொள்ள முடியவில்லை. 2007 இன் T/20 உலககிண்ண வெளியேற்றம், இந்தியாவுடனான உள்நாட்டு ஒருநாள் போட்டித்தொடர் தோல்வி என்பன மகேலவை தலைமைப் பதவியில் இருந்து ராஜினாமா செய்ய காரணமாயிற்று. ஒரு தலைவராக மகேல கவர்ந்தளவிற்கு வேறெவரும் என்னைக் கவரவில்லை. இறுதிவரை போராடும் குணம், வீரர்களை ஒருங்கிணைக்கும் வல்லமை, பொறுப்பை தோளில் சுமக்கும் இயல்பு, புதுமையான திட்டங்கள், எதிரணி வீரர்களுக்கு ஏற்ப களத்தடுப்பு வியூகம், பந்துவீச்சாளர்களை பயன்படுத்தும் விதம் என மகேல ஒரு அணித்தலைவராக தன்னை வெளிக்காட்டினார்.

2006 இங்கிலாந்து மண்ணில் பீட்டர்சனுக்கு அமைத்த வியூகங்கள் பெரும்பாலும் வெற்றியைக் கொடுத்திருந்தன. 2007 உலகக் கிண்ணத்தில் ஒரு சிறப்பான தலைமைத்துவத்தை இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் மகேல வெளிக்காட்டியிருப்பார். 235 ஓட்டங்களுக்குள் இங்கிலாந்தைக் கட்டுப்படுத்த வேண்டிய நிலையில் 15 ஓவர்களில் இரண்டு விக்கட்டுகளை இழந்து இங்கிலாந்து 69 ஓட்டங்களைப் பெற்றிருந்த நிலையில்; எந்த அணித்தலைவரும் போலிங் பவர்பிளேயை எடுத்துக் கொள்வது சாதாரணம். ஆனால் மகேல பவர் பிளேயை எடுத்துக்கொள்ளாமல் தனது பகுதிநேரப் பந்துவீச்சாளர்களை பயன்படுத்த தொடங்கினார். ஜெயசூர்யா, டில்ஷான் இருவரும் வீசிய ஓவர்களில் தங்கள் விக்கட்டை இழக்காமல் நிதானமாக ஆடிய இங்கிலாந்து; 29 ஆவது ஓவரின் பின்னர் ஆரம்பிக்கப்பட்ட போலிங் பவர்பிளே ஓவர்களில் பலமான முரளியையும், மலிங்கவையும் எதிர்கொண்டு விக்கட்டுகளை இழக்க ஆரம்பித்தது, மகேலவின் திட்டம் எதிர்பார்த்ததுபோல் வெற்றியைக் கொடுத்தது. போட்டியை இங்கிலாந்தின் பின் மத்தியவரிசை வீரர்களான நிக்சனும், போப்பராவும் இறுதிவரை விறுவிறுப்பாக்கினாலும், இறுதியில் இலங்கை இரண்டு ஓட்டங்களால் போராடி வெற்றி பெற்றது!தமது அணி குறைந்த ஓட்டங்களை பெற்றிருப்பினும் இறுதிவரை போராடி வெற்றி பெற செய்வதில் மகேல கில்லாடி, வெற்றி கிடைக்காதவிடத்து கௌரவமான தோல்வியாவது மிஞ்சும். மகேலவின் தலைமைத்துவத்தின் சிறப்பை பெரும்பாலான கிரிக்கட் விற்பன்னர்கள் உணர்ந்திருந்தனர். 2007 உலகக் கிண்ண போட்டித்தொடரை அடுத்து, ஆசிய அணிக்கும் ஆபிரிக்க அணிக்குமான போட்டித் தொடரிலும் மகேல தலைமை ஏற்று தொடரை 3:0 என வென்று கொடுத்ததோடு, தொடரின் நாயகன் விருதையும் வென்றிருந்தார். மூன்றாவது போட்டியில் இந்திய நட்சத்திரம் டோனியுடன் இணைந்து ஆறாவது விக்கட்டுக்காக பெற்றுக்கொண்ட 218 ஓட்ட இணைப்பாட்டம் இன்றுவரை சாதனையாக உள்ளது. 2008 ஆசியக் கிண்ணப் போட்டிகளில் லீக் போட்டிகளில் இந்தியாவுடன் ஆடவிடால் வைத்திருந்துவிட்டு இறுதிப் போட்டியில் அஜந்த மெண்டிசை துரும்பு சீட்டாக பாவித்து, இலங்கைக்கு கிண்ணத்தைப் பெற்றுக் கொடுத்திருந்தார். பஞ்சாப், கொச்சி, டெல்லி என மகேல விளையாடிய மூன்று IPL அணிகளும் மகேலவின் தலைமைமீது நம்பிக்கை கொண்டு அவரை அணித் தலைவராக்கியிருந்தன!

தலைவராக மட்டுமல்ல ஒரு சிறந்த பண்பை வெளிப்படுத்தும் வீரராக மகேல தன்னை மைதானத்தில்;வெளிக்காட்டிருப்பார். 2007 உலக கிண்ணப் போட்டியின் இறுதிப் போட்டியில் இலங்கை;எட்டு விக்கட்டுகளை இழந்து மூன்று ஓவர்களில் மீதமிருக்க;தோல்வியின் விளம்பில் இருந்தது. ஆனால் மைதானத்தில் இருள் குழுமியிருந்தது, பந்து தெரியத அளவுக்கு இருள் சூழ்ந்துவிட்டது. நடுவராக இருந்த அலீம் டார் மிகுதி மூன்று ஓவர்களையும் மறுநாள் வைத்துக்கொள்ளாம் என முடிவெடுக்கிறார். கொண்டாட்ட மனநிலையில் இருந்த அவுஸ்திரேலியர்களுக்கு இது பேரதிர்ச்சியாக இருந்தது. அந்தநேரம் மைதானத்துள் வந்த இலங்கை தலைவர் மகேல, அணி வீரர்களிடம் கலந்து பேசி மீதி;மூன்று ஓவர்களையும் இலங்கை விளையாட பணித்தார், மிதமான வேகத்தில் மிகுதி மூன்று ஓவர்களும் பந்துவீச இலங்கை தோல்வியடைந்தது.

ஒரு வீரராக களத்தில் தன்னை;கனவானாக வெளிப்படுத்தும் மகேல; களத்துக்கு வெளியேயும் மிகச்சிறந்த சேவைகளை ஆற்றி வருபவர். சிறுவயதில் தனது ஆருயிர் தம்பியை புற்றுநோய்க்கு பறிகொடுத்த மகேல, நீண்ட நாட்களுக்கு அதனிலிருந்து மீள கஷ்டப்பட்டவர். தனக்கு வந்த துன்பத்தை அப்படியே விட்டுவிடாம்ல், தனது முயற்சியால் Hope Cancer Project க்கு பெரும் பங்களிப்பார்றினார். அத்தப்பத்து தலைமை ஏற்ற காலத்தில் இருந்து தமக்கு (சங்ககாரவும்) கிடைக்கும் ஆட்ட நாயகன், ஆட்டத் தொடர் நாயகன் விருதுக்கான பணத்தொகையை மருத்துவத்திற்கு தேவையானவர்களுக்கு அமைப்பு மூலமாக வழங்கிவருகின்றார்கள். எலோருடனும் சகஜமாக பேசக்கூடிய மகேலவின் பத்திரிக்கையாளர் சந்திப்பு பிரமிப்பாக இருக்கும். தனது அணியை, அணித்தேர்வை, வீரர்களை விட்டுக்கொடுக்காமல் பேசும் மகேல, அதனை பத்திரிகையாளர்கள் பகைத்துக்கொள்ளாமல் புரிந்துகொள்ளும்படி சொல்வதில் கில்லாடி. போட்டி வெற்றியோ தோல்வியோ, மகேலாவின் ஒவ்வொரு பத்திரிகையாளர் சந்திப்பும் அருமையாக இருக்கும்.

மகேலாவின் தலைமைப் பதவி ராஜினாமாவின் பின்னர் இலங்கையின் அடுத்த தலைவராக சங்ககார பொறுப்பேற்க; இலங்கை அணி மீண்டும் சராசரியாக சென்றுகொண்டிருந்தது. 2010 ஆம் ஆண்டு இடம்பெற்ற T/20 உலகக் கிண்ணப் போட்டித் தொடரில்; தனக்கு பிடித்தமான மேற்கிந்திய ஆடுகளங்களில், தொடர்ச்சியாக குறைந்த பந்துகளில் 81,100,98* ஓட்டங்களைக் குவித்த மகேல தன்னை T /20 போட்டிகளிலும் ஆடும் திறன் படைத்தவர் என்பதனை நிரூபித்தார். அடுத்த தடவை இடம்பெற்ற IPL வீரர்களுக்கான ஏலத்தில் அதிக விலைக்கு விற்கப்பட்ட வெளிநாட்டு வீரர் என்கின்ற பெருமையையும் மகேல பெற்றார்.

அடுத்து 2011 ஆம் ஆண்டு ஒருநாள் போட்டிகளுக்கான உலகக் கிண்ணதொடர் ஆரம்பிக்கவிருந்தது. இலங்கை அணியும் அறிவிக்கப்பட்டது, அதில் மகேல அணியின் உபதலைவர். தனக்கு கீழே உபதலைவராக இருந்தவரின் தலைமையின் கீழ், தான் உபதலைவராக இருக்க இலகுவில் எந்த பெயர் பெற்ற வீரரும் சம்மதிக்க மாட்டார்கள்! ஆனால் மகேல சம்மதித்தார், காரணம் அவர் ஒரு அணிக்கான வீரனாகவே தன்னை எப்போதும் எண்ணியிருந்தார். அதனால்தான் ஒருநாள் போட்டிகளில் தனது துடுப்பாட்ட வரிசை இலக்கத்தை அணியின் தேவைக்கு ஏற்ப மேல்நோக்கியும் கீழ்நோக்கியும் மாற்றி மாற்றி ஆடிக்கொடுத்தார், கொடுத்துக்கொண்டிருக்கிறார். டெஸ்ட் போட்டிகளில் அரவிந்தவின் ஓய்வால் வெற்றிடமான; டெஸ்ட் கிரிக்கட்டின் நங்கூரமான நான்காம் இலக்கத்தை ஸ்திரப்படுத்துவதற்காக தனது மூன்றாம் இலக்கத்தை இழந்திருந்தார்.

2011 உலகக் கிண்ணத்தை நோக்கி சங்கா தலைமையில் இலங்கை அணி தயாராகியிருந்தது. மிகச்சிறப்பாக ஆடிக்கொண்டிருந்த இலங்கை இறுதிப்போட்டிவரை முன்னேறியது. அடுத்தடுத்த இரண்டு உலகக் கிண்ணங்களில் இறுதிப்போட்டிக்கு தெரிவான இலங்கைக்கு, இம்முறையும் பெருத்த ஏமாற்றமே காத்திருந்தது. இந்திய அணியால் அவர்களது சொந்த மைதானத்தில் வைத்து இலங்கையின் கனவு மீண்டும் தகர்க்கப்பட்டது. ஆனால் அந்தப் போட்டியில் மகேல பெற்ற சதம் அந்தப் போட்டியை காணுற்ற ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்தது. மிக முக்கியமான, அழுத்தம் நிறைந்த போட்டியொன்றில் எத்தனை அழகாக தனது இனிங்ஸ்சை மகேல கொண்டு சென்றார்! மகேலவின் அற்புதமான இனிங்ஸால், இந்திய மைதானம் மூச்சிழந்து காணப்பட்டது! ஆனால் போட்டி முடிவு என்னவோ எம்மை மூர்ச்சையாக்கியிருந்தது :-(


2011 உலகக் கிண்ண இறுதிப் போட்டித் தோல்வியின் எதிரொலியாக சங்ககார தலைமைப் பதவியை ராஜினாமா செய்ய, மகேலவும் தனது உப தவைவர் பதவியை ராஜினாமா செய்தார். அடுத்த தலைவராக டில்ஷான் இலங்கைக் கிரிக்கட்டினால் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார். ஆனால் டில்ஷான் தலைமையில் இலங்கை தடுமாறிக்கொண்டிருந்தது, இந்நிலையில் மீண்டும் புதிய தலைவரை தேர்ந்தெடுக்க இலங்கைக் கிரிக்கட் விரும்பினாலும், யாரை தேர்ந்தெடுப்பது என தடுமாறியது. மீண்டும் மகேலவிடம் கோரிக்கை வைக்கப்படாது, இம்முறை மகேல தலைமைப் பதவியை ஏற்றுக்கொண்டார்.

மகேல தலைமைப் பொறுப்பை ஏற்ற பின்னர், முதல் தொடராக அவுஸ்திரேலியாவின் கொமன்வெல்த் பாங்க் சீரிஸ் அமைந்தது. இலங்கை அவுஸ்திரேலியாவில் ஒரு முக்கோணத் தொடரில் அதுவரை அசத்தாத அளவுக்கு அசத்தியது. இந்தியா வெளியேற, அவுஸ்திரேலியாவுடன் இறுதிப்போட்டிக்கு இலங்கை தகுதிபெற்றது. தொடர் முழுவதும் அவுஸ்திரேலியாவை அடக்கி வைத்திருந்த இலங்கைக்கு முதல் இறுதிப் போட்டியிலும் வெற்றி கிடைத்தது. இரண்டாம் இறுதிப் போட்டியில் அவுஸ்திரேலியா வெற்றிபெற, மூன்றாவது இறுதிப் போட்டி எதிர்பார்ப்பை தூண்டியிருந்தது. முதலில் ஆடிய அவுஸ்திரேலியாவை குறைந்த ஓட்டங்களுக்குள் கட்டுப்படுத்திய இலங்கை வெற்றிக்கனியை எட்டுவார்கள் என எதிர்பார்த்து காத்திருந்த எமக்கு மீண்டும் ஒரு இறுதிப்போட்டி தோல்வி. இம்முறையும் உடைந்தே போய்விட்டோம். இந்தத் தொடரில் இலங்கையின் வெற்றிகள் மகேலவின் துடுப்பினாலும், தமைத்துவ சிறப்பினாலும் பெரும்பாலும் பெறப்பட்டிருந்தன. ஆரம்ப துடுப்பாட்ட வரிசையின் சீரின்மையை ஈடுசெய்ய; மத்திய வரிசையில் ஆடிவந்த மகேல, தானே ஆரம்பவீரராக களமிறங்கி சிறப்பாக ஆடி இலங்கையை வெற்றிப் பாதையில் இட்டுச்சென்றிருந்தார்.

அடுத்து சொந்தநாட்டில் இடம்பெற்ற டெஸ்ட் போட்டியில் அன்றைய பலமான இங்கிலாந்து அணியை காலி மைதானத்தில் சந்தித்த மகேலவின் இலங்கை அணி, இங்கிலாந்தை காலி செய்தது. துடுப்பாட சிரமமான மைதானத்தில் இலங்கை பெற்ற 318 ஓட்டங்களில் தனித்து நின்று ஆடி மகேல 180 ஓட்டங்களை குவித்திருந்தார். இங்கிலாந்தின் ஜிம்மி அன்டர்சன் 'தான் பார்த்த இனிங்ஸ்களில் இதுதான் மிகச்சிறந்த இனிங்க்ஸ்' என்று அப்போது புகழ்ந்திருந்தார். இரண்டாவது போட்டியில் இலங்கையின் இரண்டு இனிங்க்ஸ்களிலும் மகேல 105,64 ஓட்டங்களை மகேல பெற்றிருந்தார். தன் தலையில் பொறுப்பு இருக்கும்போதும், முக்கியமான நேரங்களிலும் பொறுமையாக கவனத்துடன் ஆடும் மகேலவின் ஆட்டத்திறன் மீண்டும் இந்தத்தொடரிலும் வெளிப்பட்டிருந்தது!

அடுத்து 2012 ல் சொந்த மண்ணில் T/20 உலககிண்ணம் ஆரம்பமாயிற்று. பலமான அணிகள் பல விளையாடினாலும், சொந்தநாட்டு மைதானம் என்பதால், இலங்கைக்கும் வாய்ப்புக்கள் காணப்பட்டன. இலங்கையின் வாய்ப்பை மகேலவின் தலைமைத்துவம் சரியான முறையில் கையாண்டது! இறுதிப்போட்டிவரை முன்னேறிய இலங்கைக்கு, இலகுவான அணியான மேற்கிந்தய தீவுகளுடன் இறுதிப் போட்டி. அதுவரை எந்த T/20 போட்டியிலும் மேற்கிந்தியாவுடன் தோற்றிருக்காத இலங்கைமீது; மிகப்பெரும் நம்பிக்கை இருந்தது.

கிரிஸ் கெயில் மீது பயம் இருந்தாலும்; கெயிலை வெளியேற்றலாம் என்கின்ற நம்பிக்கையும் பலமாக .இருந்தது. எதிர்பார்த்தது போலவே கெயில் வெளியேற, 10 ஓவர்கள் முடிவில் இலங்கையின் கைப்பிடியில் இருந்த போட்டி; சாமுவேல்ஸின் அதிரடியில் அப்படியே மாறிப்போனது. மீண்டும் இறுதிப்போட்டியில் தோல்வி, இறுதிப்போட்டிகளில் இலங்கையின் தோல்விகள் உச்சக்கட்ட எரிச்சலை ஏற்படுத்திக் கொண்டிருந்தன. எதிர்பார்த்ததுபோல் மகேலவும் பதவியை ராஜினாமா செய்தார். அதேநேரம் இந்த தொடரின் அதிக ஓட்டங்குவித்தவர்கள் பட்டியலில் மகேல இரண்டாவது இடத்தில் இருந்தார். மகேலவின் ஓய்வுக்கு பின்னர் இலங்கை டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டி அணிகளுக்கு மத்தியூசஸும், T/20 அணிக்கு சந்டிமலும் தலைவராக்கப்பட்டனர்.


டெஸ்ட் கிரிக்கட் போட்டிகளில் சிலகாலம் மகேல சதமடிக்கவில்லை என்கின்ற விமர்சனம் எழுந்தபோது; மற்றுமொரு சிறப்பான சதத்தை (129) அபுதாபியில் பாகிஸ்தானுக்கு எதிராக மகேல குவித்திருந்தார். தன்மீது விமர்சனம் வரும்போதெல்லாம் முக்கியமான போட்டியொன்றில் தன்னை நிரூபித்து அணியை வெற்றிப் பாதையில் அழைத்துச் செல்வது மகேலவின் பாணி. டெஸ்ட் கிரிக்கட்டைப் போலவே ஒருநாள் போட்டிகளிலும் சில போட்டிகளில் பெரிதளவில் சோபிக்காத மகேல; தன்மீதான விமர்சனங்களுக்கு இவ்வாண்டு இடம்பெற்ற ஆசியக் கிண்ணத்தின் இறுதிப்போட்டியில் பதிலளித்தார். இக்கட்டான நேரத்தில் 75 ஓட்டங்களைக் குவித்து இலங்கையின் கிண்ண வெற்றிக்கு முக்கிய காரணமானார். தொடர்ந்து இங்கிலாந்துடனான ஒருநாள் தொடரின் வெற்றியை தீர்மானிக்கும் ஐந்தாவது போட்டியிலும்; மகேலவின் அரைச்சதத்தின் பங்களிப்பு இலங்கைக்கு வெற்றியை பெற்றுக் கொடுத்தது. மகேல தன்னை முக்கிய/பெரிய போட்டிகளில் ஓட்டங்குவிக்கும் வீரராக தொடர்ந்தும் முன்னிறுத்திக் கொண்டிருந்தார்.


2014 - T/20 போட்டிகள் ஆரம்பிக்க இருந்த நிலையில்; உலகக் கிண்ணத்துடன் T/20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெறப்போவதாக மகேலவும் சங்காவும் அறிவித்தனர். இம்முறை T/20 போட்டிகளில் இலங்கை கிண்ணத்தை வெல்லும் என்கின்ற எதிர்பார்ப்பு குறைந்தளவே காணப்பட்டது. மலிங்க தவிர்த்து T/20 போட்டிகளுக்கான விசேட வீரர்கள் இல்லாத நிலையிலும் இலங்கை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திக் கொண்டிருந்தது. அரையிறுதிக்கு தகுதிபெற்ற இலங்கை, கடந்த உலகக்கிண்ண இறுதிப் போட்டியில் தோல்வியைக் கொடுத்த மேற்கிந்திய தீவுகளுடன் மோதும் நிலை ஏற்பட்டது. பழிதீர்க்கும் ஆட்டமாக அமைந்த இந்தப் போட்டியில் அணித்தலைவர் சந்திமல் நீக்கப்பட்டு, மலிங்க தலைமை தங்கினார்.

முதலில் துடுப்பெடுத்தாடி 160 ஓட்டங்கள் குவித்த இலங்கையின் இலக்கை எட்ட எத்தனித்த மேற்கிந்தியாவை வெறும் 80 ஓட்டங்களுக்குள் இலங்கை சுருட்டியது. பெயருக்கு மலிங்க முன்னிற்க மகேலவே பின்னின்று அணியை வழிநடத்தினார். மீண்டும் மகேலவை தலைவராக ரசித்த திருப்தி கிடைத்தது. அடுத்து இறுதிப் போட்டி இந்தியாவுடன், எப்படியும் இலங்கைக்கு தோல்விதான் எண்ணத்திலேயே போட்டியை பார்க்க ஆரம்பித்தாலும், மனதில் வெற்றிக்கான அவா அழுத்தத்தைக் கொடுத்துக்கொண்டிருந்தது. இறுதி ஓவர்களில் இலங்கையின் வேகங்கள் கொடுத்த சவாலில், இந்தியாவின் அதிரடி மன்னர்களான யுவராஜ், டோனி, கோலி போன்றோரால் ஓட்டங்களைக் குவிக்க முடியாமல் போக; இலங்கை இந்தியாவை 130 ஓட்டங்களில் மட்டுப்படுத்தியது. துடுப்பாட்டத்திற்கு சாதகமான மைதானத்தில் 131 என்னும் இலக்கை, சங்காவின் அரைச்சதத்துடன் இலங்கை இலகுவாக எட்டியது. இலங்கை 2014 ஆம் ஆண்டின் T/20 சாம்பியன் - நம்ப முடியவில்லை, நாம் இறுதிப் போட்டியில் இறுதியாக வென்றே விட்டோம்!!!! மகேலவுக்கும் சங்காவுக்கும் மிகச்சிறந்த பிரியாவிடை இலங்கை அணியால் வழங்கப்பட்டது.

சில நாட்களின் பின்னர் இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்ட இலங்கை அணி அங்கு ஒருநாள் தொடர் மற்றும் டெஸ்ட் தொடர்களில் பெற்ற வெற்றியை தொடர்ந்து, மகேல தனது டெஸ்ட் கிரிக்கட் போட்டிகளின் ஓய்வு தினத்தை அறிவித்தார். சற்று அதிர்ச்சியாக இருந்தாலும், மிகச்சரியான முடிவு. இலங்கை மண்ணில் அடுத்து விளையாடும் தென்னாபிரிக்கா, பாகிஸ்தான் அணிகளுடனான தலா இரண்டு போட்டிகள் கொண்ட தொடர்களுடன் சொந்தமண்ணில் ஓய்வு பெறுவது என்பது மகேலவின் அறிவிப்பு. பெரும் பெரும் ஜாம்பவான்களெல்லாம் வயது அதிகரித்து, ஓட்டக்குவிப்பு நலிவடைந்த நிலையில் 'எப்படா போவாங்க' என கிரிக்கட் ரசிகர்களும், கிரிக்கட் சபைகளும் காத்திருந்த நிலையை மகேல தனக்கும் ஏற்படுத்திக்கொள்ள விரும்பவில்லை. நல்ல நிலையில் இருக்கும்போதே தனது ஓய்வை அறிவித்திருந்தார் மகேல, அதிலும் சொந்த நாடு, சொந்த மக்களுக்கு முன்னிலையில்!

ஓய்வை அறிவித்தபின்னர் தென்னாபிரிக்காவுடனான இரண்டாவது போட்டியில் 160 ஓட்டங்களையும், பாகிஸ்தானுடனான இறுதி இரு போட்டிகளிலும் தலா ஒரு அரைச்சதத்தையும் மகேல பெற்றிருந்தார். அதிலும் தனது இறுதி இனிங்க்சில் 54 ஓட்டங்களைப் பெற்றதுடன், தனது நண்பனும், டெஸ்ட் கிரிக்கட்டில் இணைப்பாட்ட சாதனைக்கு பங்குதாரருமான சங்காவுடன் இணைந்து 19 ஆவது தடவையாக 100 ஓட்டங்களுக்கு மேல் இணைப்பாட்டமாக பெற்றிருந்தார். முன்னதாக காலியில் மகேலவின் இறுதி இனிங்க்ஸ், பொழுது சாயும் நேரம், நன்றாக இருட்ட ஆரம்பித்துவிட்டது, மழை எந்நேரத்திலும் வரலாம் என்னும் நிலையில்; ஆட்டமிழந்த மகேல, அன்று தனக்காக திரண்டிருந்த ஆயிரக்கணக்கான ரசிகர்களுக்கும் தனது துடுப்பை காட்டி பிரியாவிடை பெறாது, வேகமாக ஓடிச்சென்று அடுத்த வீரருக்கு வழி விட்டார். இப்போட்டியில் இலங்கை வெற்றிபெற்று அடுத்த சில செக்கன்களில்; மழை சோவெனப் பொழிய ஆரம்பித்தது குறிப்பிடத்தக்கது. தனது இறுதி இரு போட்டிகளிலும் அணியின் வெற்றிக்கான தனது பங்களிப்பை மகேல வழங்கியிருக்கிறார். தனது சொந்த நாட்டில், சொந்த மைதானத்தில், ஆயிரக்கணக்கான ரசிகர்கள் முன்னிலையில், இறுதிப் போட்டி மற்றும் தொடர் வெற்றிபெற்ற மகிழ்வுடன் மகேல ஓய்வு பெற்றுக்கொண்டார். அற்புதமான பிரிவுபசாரம் ஒன்றை மகேல பெற்றிருந்தார், இது இலங்கையின் எந்த ஜாம்பவானுக்கும் வாய்த்திராத கொடை - சாதனையாளர்!

இலங்கை டெஸ்ட் அணியில் இனிமேல்.......

விபரம் தெரிந்த நாள் முதல் ரசித்துவந்த 69 ஆம் இலக்க ஜேர்சியை இனிமேல் காண இயலாது!

ஸ்கோர் போட்டில் 2 விக்கட்டுக்கு பின்னர், விக்கட் எண்ணிக்கை மாறாமல் இருக்க, ஓட்ட எண்ணிக்கை மட்டும் கிடுகிடுவென உயரும்போது; மைதானத்தின் நடுவே உணர்ச்சி பூர்வமாக தன் நண்பனை ஆரத்தழுவும் ஒரு உணர்ச்சிமிக்க வீரனை காண இயலாது!

புதிய இளம் வீரருடன் ஆடும்போது, ஒரு தந்தை தன் பிள்ளையை வழி நடத்துவதுபோல, கற்றுக்கொடுக்கும் ஆசானைக் காண இயலாது!

எவர் தலைவராக இருப்பினும், எந்தவித ஈகோவும் இல்லாமல்; இக்கட்டான நேரங்களில் தானே முன்வந்து ஆலோசனை சொல்லி வழிநடத்தும் தலைவனைக் காண இயலாது!

முதலாவது சிலிப்சில் பிடியை பிடித்துக்கொண்டு இடது கையை மடக்கி அசைத்தபடி சிங்கமென கர்ஜித்தபடி ஓடும் இளைஞனைக் காண இயலாது!

ஒவ்வொரு போட்டியிலும் அணியின் பொசிட்டிவ் எனர்ஜியாக இருந்து, இறுதிவரை அணியில் ஸ்திரத்தை குறையவிடாமல் வைத்திருக்கும் ஒரு சிறந்த அணி வீரனை இனி காண முடியாது!

ஆனால்....... அவன் விட்டுச்சென்ற நினைவுகளும், கொடுத்த அனுபவமும் வார்த்தைகளுக்கு அப்பாற்பட்டது! என்றும் நிலைத்திருக்கக்கூடியது

நிச்சயமாக மகேல ஒரு ஓட்டங் குவிக்கும் இயந்திரம் அல்ல, மகேலவின் ஓட்டக்குவிப்பு எப்போதும் தொடர்ச்சியாக இருந்ததுமில்லை; ஆனால் முக்கியமான போட்டிகளில், இக்கட்டான நேரங்களில் தன் கையைத் தூக்கி முன்வந்து போட்டியை வென்று கொடுக்கும் மகேல வரலாற்றின் ஒர் வெற்றியாளன்! மோசமான துடுப்பாட்ட நேரங்களில், தன்மீது விமர்சனங்கள் வரும்போதெல்லாம், அவற்றுக்கு தன் துடுப்பால் பதில் சொல்லும் ஓர் போராட்ட வீரன்!! மகேல முழுத்திறனுடன் ஆடும் இனிங்ஸ் ஒன்றின் அழகுக்கு இணையான இனிங்சை வெளிப்படுத்த வேறெந்த சமகால வீரரும் இல்லை!

Inside out, Foreword defense, Cover drive, squire drive, Late cut, cut, pull, glance, flick, down the wicket to long on & mid-wicket, sweep in font of the wicket, sweep behind the wicket, slog sweep, reverse sweep, paddle sweep, upper cut, improvisation in  behind the wicket of both side, soft hand touches, quick single in the gaps - என கிரிக்கட் ஷொட்களையும், நுணுக்கங்களையும், ஓட்டம்பெறும் முறைகளையும் நேர்த்தியுடன் பிரமிப்பாக செயற்படுத்தும் திறன்படைத்த முழுமையான துடுப்பாட்ட வீரர் மகேல!

மகேல இல்லாத இடைவெளி இலங்கை கிரிக்கட்டுக்கும், ரசிகர்களுக்கும் நிச்சயம் தாக்கத்தை ஏற்படுத்தும்! என்னைப் பொறுத்தவரை இதுவொரு மிகப்பெரும் தாக்கம். எனது 15 வயதில் உருவான பந்தமிது; பாடசாலை கல்வி, வெட்டியான காலம், அரச வேலை, தனியார் வேலை, சொந்த முயற்சி, சொந்த தொழில், திருமணம், குழந்தை என என் வாழ்க்கை ஓட்டத்துடனும், இடமாற்றங்களின் போதும், 17 ஆண்டுகளாக என்கூடவே பயணித்த மகிழ்ச்சியான பந்தம் இது! அற்புதமான நினைவலைகளை விட்டுச்சென்ற, வாழ்வின் இறுதி மூச்சுள்ளவரை மறக்கப்பட முடியா இணைப்பிது!!

மகேல - என் வாழ்வின் ஓர் அங்கம்!!


நன்றி மகேல!!!Thursday, October 24, 2013

தமிழ் சினிமா ரசிகனும், விமர்சனங்களும்.......உலகம் முழுவதும் உள்ள மக்கள் ரசிக்கும் பொழுதுபோக்கு கலை/தொழில் சினிமா!! சினிமாமீது ஆயிரம் விமர்சனங்கள் இருந்தாலும் சினிமா ஜதார்த்தத்தில் மக்களால் தவிர்க்கப்பட முடியாதது, இன்னும் சொல்லப்போனால் அழிவில்லாத அம்சமது. உலகம் முழுவதும் சினிமாவின் தாக்கம் வியாபித்திருந்தாலும் தமிழ் மக்களைப்   பொறுத்தவரை சினிமாவின்  தாக்கம் சற்று அதிகமாகவே  அன்றாட வாழ்வியலுடன் பின்னிப் பிணைந்துள்ளது. உடல்மொழி, வசனங்கள், உடை என  சினிமாவின் தாக்கம் இங்கு அதிகம்; அரசியல்வரை இந்த தாக்கம் கெட்டியாகப் பீடித்துள்ளது!!!  

பொழுதுபோக்கு  சினிமா, கலைப் படைப்புக்கள், மாறுபட்ட சினிமா என சினிமாவை  பிரித்துச் சொன்னாலும்; எல்லாமே வர்த்தகரீதியில் லாபத்தை நோக்கமாகக் கொண்டு எடுக்கப்படுபவைதான்! மொத்தத்தில் எல்லாமே வணிக சினிமாக்கள்தான். சில இயக்குனர்களும், சில விமர்சகர்களும், சில ரசிகர்களும் சினிமாவை நல்ல சினிமா, மோசமான சினிமா என்று இரு தட்டில் வைத்து நோக்குகின்றார்கள். இது சரியான பார்வையா? நல்ல சினிமா எது? மோசமான சினிமா எது ? என்பது பற்றிய என் எண்ணங்கள்தான் இந்தப் பதிவு!!  

ரசிகர்கள்.....

கதாநாயகர்களது  திரைப்படங்களுக்கு கொடுக்கும் முன்னுரிமையை  தமிழ் சினிமா ரசிகர்கள் மாற்றுச்  சினிமாக்களுக்கு கொடுப்பதில்லை என்கின்ற குற்றச்சாட்டும் உண்டு! கதாநாயக ரசனை என்பது ஒவ்வொருவரதும்  தனிப்பட்ட விருப்பு! இதில் தவறென்று உள்ளது?  அடுத்தவர் விருப்பு வெறுப்பில் கருத்துச்சொல்லும் உரிமை எவருக்கும் இல்லை !!  ஒரு திரையரங்கில் 300 ரூபாயை கொடுத்து எனக்கு பிடித்த சினிமாவைத்தான் நான் பார்க்க முடியும்; இதுதான் மிகப்பெரும்பாலான ரசிகர்களின் மனநிலை. இதைச் சொல்வதால் தமிழ் ரசிகர்கள் மாற்றுச் சினிமாவை ஏற்றுக்கொள்வதில்லை என்று அர்த்தமில்லை; தமிழ் ரசிகர்கள்தான் இதுவரை தமிழ் சினிமா கொடுத்த அத்தனை புதுமைகளையும் கொண்டாடியவர்கள்!

மிகப் பெரும்பாலான தமிழ்  சினிமா ரசிகர்களைப் பொறுத்தவரை  சினிமா என்பது பொழுதுபோக்கு சாதனமாகவே எடுத்துக்கொள்ளப் படுகின்றது! அவர்களைப் பொறுத்தவரை கொடுத்த பணத்திற்கு நிறைவான போகுதுபோக்கு கிடைப்பதுதான் முதற்தேவை!! அதனால்தான் இங்கு பொழுதுபோக்குத் திரைப்படங்களும், கதாநாயகனை முன்னிறுத்தி எடுக்கப்படும் அக்க்ஷன் திரைப்படங்களும் பெரும் வரவேற்பை பெறுகின்றது. மக்களின் இப்படியான போக்கால் தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் படைப்புக்களை துணிந்து எடுக்க முடிவதில்லை, அப்படி எடுக்கும் திரைப்படங்களை மக்கள் வரவேற்பதில்லை என்கின்ற குற்றச்சாட்டு சம்பந்தப்பட்ட திரைப்படத் தரப்புக்களிடமிருந்தும், சில விமர்சகர்களிடமிருந்தும், சில ரசிகர்களிடமிருந்தும் தொடர்ந்தும் வந்தவண்ணம் உள்ளது!! இவர்களது  கூற்று எந்தளவுக்கு உண்மையானது என்பதை அறிய  கடந்தகால தமிழ் சினிமா வரலாற்றை  மீட்டுப்பார்ப்பது அவசியம்! 

பராசக்தி  -: பாடல்கள் மூலம்  கதை சொல்லிக்கொண்டிருந்த சினிமாவை வசனங்களின்பால் ரசிகர்களை ஈர்த்த திரைப்படம்; தமிழ் சினிமாவின் முக்கிய படிக்கல். கலைஞர் கருணாநிதியின் தமிழுடன் சிம்மக்குரலோனின் கம்பீரமான உச்சரிப்பு  இணைந்து  தமிழ் சினிமாவுக்கு கொடுத்த முதல் மாற்றம் இந்த வசன நடை!   இந்தத் திரைப்படத்தை மாபெரும் வரவேற்புக் கொடுத்து வரவேற்றவர்கள் இதே தமிழ் ரசிகர்கள்தான்!! 

இயக்குனர் ஸ்ரீதர் :-  காப்பியங்கள்    புராணங்கள், இதிகாசங்கள், , திராவிடக் கொள்கைகள், நாடகங்கள், சுந்தந்திரப் போராட்டங்கள் என குறுகிய வட்டத்தில் சுற்றிக்கொண்டிருந்த தமிழ் சினிமாவிற்கு; 1959 இல் வெளிவந்த  ஸ்ரீதரின் முக்கோணக் காதல்கதையான  'காதல்ப்பரிசு' ஒரு மாறுபட்ட  சினிமா. காதல்ப் பரிசை மாபெரும் வெற்றியாக்கிய தமிழ் ரசிகர்கள்; ஏழு நாட்களில் மருத்துவமனையில்  நிகழ்வது போன்று ஸ்ரீதர்  இயக்கிய 'நெஞ்சில் ஓர் ஆலயம்' திரைப்படத்தையும் வணிகரீதியில் வெற்றியாக்கினர்.  

அடுத்து 1964 இல் எம்.ஜி.ஆர், சிவாஜி என்னும் இரு நட்சத்திரங்களின் உச்ச காலத்தில் ஜனரஞ்சக சினிமாவின் உச்சம் என சொல்லப்படும் 'காதலிக்க நேரமில்லை' வெளிவந்தது! புதுமுக நாயகனாக   ரவிச்சந்திரன் அறிமுகமாகிய இந்தத் திரைப்படம் அன்றைய தேதியில் மக்களால் மிகப்பெரியளவு வரவேற்பு கொடுக்கப்பட்டு அனைத்து  வசூல்களையும் முறியடித்து சாதனை செய்த திரைப்படம்! 

பாலச்சந்தர் :- 1960 களில்  அற்புதம் நிகழ்த்திய மற்றொரு இயக்குனர்! எம்.ஜி.ஆர், சிவாஜியின் நட்சத்திர  ஆதிக்கம் நிறைந்த இந்தக் காலப்பகுதியில்; அவர்கள் திரைப்படங்களில் காமடியனாக நடித்துவந்த நாகேஷை கதாநாயகனாக்கி பாலச்சந்தர் செய்த காவியங்கள் 'சர்வர் சுந்தரம்', 'நீர்க்குமிழி', 'எதிர் நீச்சல்' போன்றன மக்களால் மிகப்பெரும் வரவேற்புக் கொடுக்கப்பட்ட திரைப்படங்கள்!! 

இளையராஜா :- கர்நாடக சங்கீதத்தை அடிப்படையாகக் கொண்ட தமிழ் சினிமாவின் இசையில் மூழ்கியிருந்த ரசிகர்களை; தமிழ் மணம்  கமழும் நாட்டுப்புற பாடல்கள் மூலமும், மேற்கத்தைய இசையை/ இசைக்கருவிகளை தமிழ் இசையுடன்  இணைத்து ஏற்படுத்திய புரட்சிமூலமும் கட்டிப்போட்ட இளையராஜாவை  அன்னக்கிளியிலேயே வரவேற்று கொண்டாடியவர்கள் இதே தமிழ் ரசிகர்கள்தான்! 

ரஜினிகாந்த் :- வெண்ணிற மேனி, பென்சில் மீசை, அழகிய தலை முடி, கூரிய  கண்கள்,  நீட்டிய வசனம், நாடக நடிப்பு என்றிருந்த கதாநாயக இலக்கணங்களை உடைத்து கரிய மேனி, மிடுக்கான மீசை, பரட்டைத் தலைமுடி, சிறிய கண்கள், விறுவிறு வசன உச்சரிப்பு, இயல்பான நடப்பு என அறிமுகமாகிய ரஜினிகாந்தை  தமிழ் ரசிகர்கள்தான் தலையில் தூக்கிவைத்து கொண்டாடினார்கள், கொண்டாடுகின்றார்கள். 

பாரதிராஜா :- 1977 இல் '16 வயதினிலே' என்றொரு திரைப்படம்! ஸ்டூடியோவுக்குள் சுற்றிக்கொண்டிருந்த கேமராவை கிராமங்களின் பக்கம் திருப்பி  திரையில்  மண்வாசனை கமழும் வண்ணம் வெளிவந்த திரைப்டம். தமிழ் சினிமா கண்டிராத புது முயற்சி! அன்றைய தேதியில் மக்களால் மாபெரும் வரவேற்ப்பு கொடுக்கப்பட்டு 200 நாட்களை கடந்து ஓடிய மாபெரும் வெற்றிச் சித்திரமிது. 

1985  இல் பாரதிராஜா இயக்கத்தில் வெளிவந்த மற்றுமொரு மாறுபட்ட படைப்பு 'முதல் மரியாதை'  நடிகர் திலகத்தின் அற்புத நடிப்பில் வெளிவந்த இந்தத் திரைப்படம்  முதுமைக் காதலை அத்தனை அழகாக சொல்லிவிட்டுச் சென்றது. இந்தத் திரைப்படமும் மக்களால் மிகப் பெரும் வரவேற்பு பெற்று வணிகரீதியில் மாபெரும் வெற்றி பெற்றது!! 

மகேந்திரன் :-  'முள்ளும் மலரும்' - 1978 இல் மகேந்திரன் இயக்கிய திரைப்படம்! தமிழ் சினிமா அதுவரை  கண்டிராத சினிமா அது! மிகவும் இயல்பாக   வாழ்க்கையை படம் பிடித்துக் காட்டிய சினிமா, இன்றுவரை தமிழ் சினிமாவின் சிறப்பான சினிமாக்களில் உதாரணம் காட்டப்படும் சினிமா. அன்று தயாரிப்பாளரால் விளம்பரப்படுத்தப்படாமலேயே; மக்களின் வாய் வழியான பரப்புரையால் வெள்ளிவிழாக் கண்ட திரைப்படம்!!  

தொடர்ந்து மகேந்திரன் இயக்கிய உதிரிப்பூக்கள் மற்றுமொரு தமிழ் சினிமாவின் புதுமை! அதனைத் தொடர்ந்து ஜானி, நெஞ்சத்தை கிள்ளாதே  என மகேந்திரன் கொடுத்த மாறுபட்ட சினிமாக்கள் தமிழ் ரசிகர்களால் வெற்றியாக்கப்பட்டது! 

கே.பாக்யராஜ்  :-  இந்திய சினிமாவின் ஒப்பற்ற திரைக்கதையாளர். இவரது சினிமாக்கள் ஒவ்வொன்றும் அன்றைய நிகழ்கால வாழ்க்கையை தழுவி எடுக்கப்பட்டவை. நகைச்சிவை கலந்த   ஜனரன்சகமாக இவரது சினிமாக்களுக்கு தமிழ் ரசிகர்கள் காதலர்கள்!! 

மணிரத்தினம் :- இன்றுவரை புது இயக்குனர்கள் பலருக்கும் இன்ஸ்பிரேஷன், பல தமிழ் சினிமா ரசிகர்களின் பிடித்தமான இயக்குனர்.  வசன உச்சரிப்பு, நடிகர்களின்  உடல்மொழி, இசை, கேமரா, எடிட்டிங் என அத்தனையும் இவரது சினிமாவில் புதுமையாக காணப்பட்டது; அதுவரை தமிழ் சினிமா கண்டிராத சினிமா இவருடையது!  மணிரத்தினம் இன்று சொதப்பலான திரைப்படங்களை கொடுத்துக் கொண்டிருந்தாலும்; ரசிகர்கள் இன்னும் அவரை எதிர்பார்ப்பது 'நாயகன்', 'மௌனராகம்' போன்ற படங்களை மீண்டும் கொடுக்க மாட்டாரா என்கின்ற எதிர்பார்ப்பில்தான்!! அந்தளவிற்கு மக்கள்  மணிரத்தினத்தின் நல்ல சினிமாக்களை கொண்டாடியிருந்தார்கள் !! 

ஏ.ஆர்.ரஹ்மான்  :-  1992 இல் ரோஜா திரைப்படத்தில் தமிழ் சினிமா கண்டிராத ஒலியுடன் புதிய இசையை அறிமுகப்படுத்திய இளைஞன். முதற் திரைப்படத்திலேயே மக்கள் ரஹ்மானிற்கு அமோக வரவேற்பை கொடுத்தார்கள்!!  அவர் ஆஸ்கார்வரை  வளர்ந்த பின்னரும் அவர் கொடுக்கும் நவீன இசையை வரவேற்பவர்களும் இதே மக்கள்தான்!

பாலா :-  1999 இல் வெளிவந்த  தமிழ் சினிமாவின் மற்றுமொரு முக்கிய திரைப்படம்!  வாங்கி வெளியிட ஆளில்லாமல் காத்துக்கிடந்த சேது திரைப்படத்தை, வெளியிட்ட அனைத்து இடங்களிலும் வசூல் பார்க்க வைத்தவர்கள் தமிழ் சினிமா ரசிகர்கள்தான்! 

சேரனின் 'பாரதி கண்ணம்மா' &; 'ஆட்டோகிராப்' திரைப்படங்களும்,  தங்கர்பச்சானின் 'சொல்ல மறந்த கதை' & 'அழகி' திரைப்படங்களும், செல்வராகவனின் 'காதல்கொண்டேன்', '7G ரெயின்போ காலனி', பாலாஜி  சக்திவேலின் 'காதல்', 'வழக்கு எண் 18/9' திரைப்படங்களும், அமீரின்  'பருத்திவீரன்', சசிக்குமாரின்  'சுப்ரமணியபுரம்', பிரபுசாலமனின்  'மைனா' திரைப்படங்களும் புதிய முயற்சியாக வெளிவந்து தமிழ் ரசிகர்களால் வணிகரீதியில் வெற்றியாக்கப்பட்ட  சில முக்கிய திரைப்படங்கள்!! இவர்கள்தவிர  ஷங்கர், கவுதம் மேனன், சிம்பு தேவன்,  வெற்றிமாறன் என தமிழ் சினிமாவுக்கு புதிய முயற்சிகளைக் கொடுத்தவர்களது தரமான படைப்புக்கள் மக்களால் வரவேற்ப்புக் கொடுக்கப்பட்டவைதான்!  அண்மையில்கூட புது முயற்சிகளாக  வெளிவந்த  'பீட்சா', 'நடுவில கொஞ்சம் பக்கத்தை காணம்', 'சூது கவ்வும்' திரைப்படங்களும் தமிழ் ரசிகர்களால் புறக்கணிக்கப் படபடவில்லை!! 

1950 களின் ஆரம்பம் தொடக்கம், இன்றுவரை தமிழ் சினிமா ரசிகர்கள் புதிய முயற்சிகள், புதிய வடிவங்கள் போன்றவற்றை தொடர்ந்து வரவேற்றுக்கொண்டுதான் இருக்கின்றார்கள்!!  80 ஆண்டுகள் பழமைவாய்ந்த சினிமாவை இன்றுவரை வளர்த்துவிட்டவர்கள் ரசிகர்கள்தான்!! சிவாஜிகணேஷனின்  நடிப்பிற்கும், கமல்ஹாசனின் புதிய முயற்சிகளுக்கும் ஊக்கம் கொடுத்து வரவேற்றவர்கள் தமிழ் ரசிகர்கள்தான்!  

கமல்ஹாசனின்  80% ஆன புதிய முயற்சிகளுக்கு வரவேற்பளித்த ரசிகர்கள் அவரது 20 % ஆன முயற்சிகளை வரவேற்கவில்லை என்றதும் ரசிகனின் ரசனையை குறைசொல்வது அற்பத்தனமான!!! இந்தத் தவறை கமல்ஹாசன் என்றும் செய்ததில்லை; சில அரைகுறைகளின் அறிவுஜீவித்தனமான கருத்துக்கள்தான் இவை.  ஹேராம்  திரைப்படத்தை பல தடவைகள் பார்த்தும் புரியாமல் இருக்கும் கமல் ரசிகர்கள் இருக்கின்றார்கள்!! கையை பிடித்துக் கூட்டிக்கொண்டுபோன கமல்; திடீரென உயரத்தில் சென்று எட்ட முடியாத பள்ளத்தில் இருக்கும் ரசிகனுக்கு மேலே வா என்று கையைக் கொடுத்தால், அது ரசிகனின் தவறல்ல!! அதுதான் ஹேராம்.  

அன்பேசிவம்  ஒரு அழகிய திரைப்படம்தான்; ஆனால் அதில்வரும் முதலாளித்துவ பிரதிநிதியான நாசரின் நெற்றியில் நீறும், அவர் வாயில் "தென்னாடுடைய சிவனே போற்றி"யும் வலிந்து திணிக்கப்பட்டிருந்தது!!  90 சதவீதம் பேரின் நம்பிக்கையை சிதைத்துவிட்டு எப்படி வெற்றியை எதிர்பார்க்க முடியும்? 

அண்மையில் இயக்குனர் வசந்தபாலன் கூட  அதிகளவில் மட்டமான  நகைச்சுவை திரைப்படங்களே இப்போதேல்லாம் வெளிவருவதாக  விசனம் தெரிவித்திருந்தார்!  இந்த இடத்தில்  ஒரு  விடயத்தை நோக்கவேண்டும்; தமிழ் சினிமா ரசிகர்களில் 90 சதவிகிதம் மக்கள் பொழுதுபோக்கை விரும்பும்  பார்வையாளர்கள்தான்!!  அவர்களைப் பொறுத்தவரை கொடுக்கும் காசுக்கு ஏற்படும் மன நிறைவுதான் முதற்தேவை. அதைக் கொடுக்கும் திரைப்படங்களை அவர்கள் ரசிக்கின்றார்கள்; இதில் என்ன ரசனைக்குறைவு? உங்களுக்கு, ஏன் எனக்கும் கூட பிடிக்காத சில திரைப்படங்களை "செம படம்டா" என கொண்டாடும் பலரும் இருக்கத்தான் செய்கின்றார்கள்! அது அவர்களது ரசனை, அவர்களுக்காக எடுக்கப்படும் சினிமாக்களாக அந்த திரைப்படங்கள் இருந்துவிட்டு போகட்டுமே!

வருடத்தில் 100 க்கு மேற்பட்ட சினிமாக்கள் எடுக்கப்படும்போது 90 சதவிகிதம் எதிர்பார்ப்புடைய வணிக சினிமாவுக்கு 90 திரைப்படங்கள் வெளியாகுவதில் என்ன தவறு இருக்கிறது?  (இவை வர்த்தக நோக்கில்  எடுக்கப்பட்டிருந்தாலும் இவற்றில்  9 திரைப்படங்கள் கூட  வெற்றி பெறுவதில்லை)  100 திரைப்படங்களில்  மிகுதி 10 திரைப்படங்களும் மாறுபட்ட சிந்தனையில் இயக்கப்பட்டிருப்பின் அதுவே நல்ல விடயம்தானே!  இப்படியான புது  முயற்சிகள்  வருடாவருடம்   அதிகரித்துக்கொண்டு வருவது கூட ஆரோக்கியமான வளர்ச்சிதானே!  அதே நேரம் புதிய முயற்சிகளில் கூட  ஜனரஞ்சகம் என்பதை தவிர்த்து முழுக்க முழுக்க இயக்குனர் தன்  எண்ணங்களை மட்டும் திணித்துவிட்டு  மக்களை வரவேற்கவில்லை என்று திட்டுவதும் ஏற்புடையதல்ல! 

சித்திரம் பேசுதடி, அஞ்சாதே, யுத்தம் செய்  திரைப்படங்களை வரவேற்ற மக்கள் நந்தலாலாவை வரவேற்கவில்லை என்றால் தவறு மக்களிடமில்லை என்பதை புரிந்துகொள்ளுங்கள்! நந்தலாலா ஒரு டாக்குமென்டரி வகையான திரைப்படமாகவே இருந்தது, அதில் ஜனரஞ்சகம் இல்லாதவிடத்து இன்று அதை ஏற்றுக்கொள்ளும் நிலையில் மக்கள் இல்லை என்பதுதான் ஜதார்த்தம். நந்தலாலாவை ஏற்றுக்கொள்ள இன்னும் சில தசாப்தங்கள் எங்களுக்கு தேவை!   ஜப்பான் திரைப்படம் ஜப்பானுக்கு சரி, அதை உருவி தமிழில் வெளியிட்டுவிட்டு மக்களை குறைசொல்வது அபத்தம். 

"ஈரான், தென்னமெரிக்க திரைப்படங்களை பாருங்கள், எத்தனை அழகாக இருக்கும்" - இது தமிழ் சினிமாவை வேற்றுமொழி சினிமாவோடு  ஒப்பிட்டு மட்டம்தட்டும் வசனம். சினிமா என்பது மொழி, கலாச்சாரம், மக்களின் வாழ்க்கை முறை, வாழ்க்கைத் தரம், மனநிலை, பொருளாதாரம் என பல விடயங்கள் சார்ந்தது!  மேற்சொன்னவற்றில் தமிழ் நாட்டுடன்  ஈரான், தென்னமெரிக்கா எப்படி ஒருங்கிசையாதோ; அதேபோல சினிமாவும் ஒருங்கிசையாது, ஒப்பிட்டுப் பேசுவது முட்டாள்தனம். ஸ்பானிஸ், பிரெஞ்சிலே நிர்வாணம் என்பது திரைப்படங்களில் சாதாரணம், அவற்றை இங்கே திணிக்க முடியுமா? அங்கு பீச்களில் அரை நிர்வாணம் சாதாரணம், இங்கு ஜோடியுடன் சுற்றினாலே பார்வைகள் வேறுவிதமாக இருக்கும்! அங்குள்ள வாழ்கை முறைக்கு. மனநிலைக்கு  அவர்கள் சினிமா ஒத்துப்போகும், இங்கு அந்த சினிமா இன்றைய தேதியில் சாத்தியமில்லாத ஒன்று! (ஹன்சிகா எல்லாம்...... நல்லவேளை அது இதுவரை நடக்கல, இல்லையின்னா நம்ம பசங்க நிலைமை என்னவாகியிருக்கும் :p )

சேரனுக்கு  'ஆட்டோகிராப்', 'பாண்டவர் பூமி', 'பாரதி கண்ணம்மா', 'வெற்றிக்கொடிகட்டு' திரைப்படங்களை வரவேற்றபோது ரசனையாளர்களாக  தெரிந்த மக்கள்; 'தவமாய் தவமிருந்து', 'மாயக்கண்ணாடி' திரைப்படங்களை  ஏற்கவில்லை என்றதும் என்றதும் கோபம்!!! தங்கர் பச்சானுக்கு 'அழகி'யையும், 'சொல்ல மறந்த கதை'யையும்  ஏற்றுக்கொண்டபோது ரசனையாளர்களாக  தெரிந்த மக்கள்; 'தென்றலையும்', '9 ரூபா நோட்டையும்' ஏற்கவில்லை என்றதும் அப்படி ஒரு கோபம்!!  தவறை உங்கள் பக்கம் வைத்துக்கொண்டு மக்களை குறைசொல்லாதீர்கள்! 

நல்ல சினிமா? எது நல்ல சினிமா? என்னை எடுத்துக்கொண்டாலே என்  அப்பாவுக்கு 'எங்க வீட்டுப் பிள்ளை' நல்ல சினிமா, என் அம்மாவுக்கு 'படையப்பா' நல்ல சினிமா, மனைவிக்கு 'போக்கிரி'  நல்ல சினிமா, தங்கச்சிக்கு 'கில்லி' நல்ல சினிமா, தம்பிக்கு 'சேது' நல்ல சினிமா, நண்பனுக்கு 'ஆட்டோகிராப்'  நல்ல சினிமா.  எனக்கு  5 வயதில் ரஜினிகாந்தின் 'மனிதன்' நல்ல சினிமா!, 10 வயதில் 'உழைப்பாளி' நல்ல சினிமா, 15 வயதில் 'பாட்ஷா' நல்ல சினிமா, 20 வயது வரும்போது 'நாயகன்',  'தளபதி' நல்ல சினிமா, 25 வயதில் 'பருத்திவீரன்', 'சுப்ரமணியபுரம்' நல்ல சினிமா, இப்போது "நல்ல சினிமா என்பதெல்லாம் ஒன்றும் இல்லை, மனதுக்கு பிடித்த சினிமாக்கள் எல்லாமே நல்ல சினிமாக்கள்தான்"!!  நாளை இதுகூட மாறலாம்!ஒவ்வொருவருக்கும் அவரவர் பார்வையில் நல்ல சினிமா எனப்படுவது மாறிக்கொண்டே இருக்கும், இங்கு பொதுப்புத்தியில் நல்ல சினிமா என்பது எந்த வரையறைக்குள் உட்பட்டிருக்கும் என்று வரையறுக்க முடியாது!  ரசனை என்பது திறந்த வெளி, அவரவர் அவரவர்க்கு விருப்பமானதை ரசிக்கின்றார், இதில் குறை சொல்லவும், ஏளனப்படுத்தவும், விமர்சிக்கவும், கருத்துச் சொல்லவும் ஒன்றுமில்லை!! 

பேரரசு படங்களை வெற்றியாக்கிய  எம் மக்கள்தான் இன்றுவரை புதுமையை கொண்டுவந்த அத்தனை பேரையும் கொண்டாடியவர்கள்! எத்தனை புதுமைகளை கொடுத்தாலும் ஜனரஞ்சகத்தோடு கொடுத்தால் எந்த சினிமாவையும் மக்கள் வரவேற்பார்கள்! வேற்று மொழி சினிமாக்களை பார்த்துவிட்டு, அவற்றை மனதில் வைத்து கதை பண்ணிவிட்டு, மக்களை குற்றம் சொல்வது ஏற்புடையதல்ல! எம் மக்கள் பொழுதுபோக்கு சினிமாக்குத்தான் முன்னிரிமை கொடுப்பார்கள், காரணம் அவர்களது தேவை அதுதான், ஆனால் நல்ல சினிமாக்களையும் அவர்கள் எப்போதும் வரவேற்பார்கள், இது நடந்துள்ளது, இப்போது அதிகமாக நடக்கின்றது, இனிமேல் இன்னமும் அதிகமாக நடக்கும். நல்ல சினிமா எதுவென்பதை நீங்களே தீர்மானித்தால் எப்படி? நீங்கள் சினிமாவை மக்களிடம் கொண்டு செல்லுங்கள், அது நல்லதா, இல்லையா என்பதை அவர்கள் தீர்மானிப்பார்கள், மக்கள் தீர்ப்பு ஒருபோதும் தவறாக  இருக்காது!!! இயக்குனர்களே; தரமான சினிமாவை ஜனரஞ்சகமாக கொடுத்துவிட்டு மக்கள் முன்னால் நில்லுங்கள், மக்கள் ஒருபோதும் உங்களைக் கைவிடமாட்டார்கள்!      

Saturday, May 4, 2013

(மூட) நம்பிக்கையும் சமூகமும்!! 
நாகரிகம் வளர  வளர பண்டைய மனிதனின் நம்பிக்கைகளும் மாறிக்கொண்டே வர ஆரம்பித்தது; சில நாகரீக மனிதர்களால் பல நம்பிக்கைகள் மூட நம்பிக்கைகள் என்று வரையறுக்கப்படத் தொடங்கின!!  ஆனாலும் பலர் இன்றும் தொடர்ந்தும் அதே நம்பிக்கைகளை  நம்பிக்கையாக பின்பற்றிக் கொண்டுதான் இருக்கின்றார்கள். இங்கு நம்பிக்கைக்கும் மூடநம்பிக்கைக்கும் இடையிலான அளவுகோல் எனப்படுவது பார்ப்பவரது பார்வையில்தான் தீர்மானிக்கப்படுகின்றது!!  சில நம்பிக்கைகள் அரசாங்கங்களால் உத்தியோக பூர்வமாக நிராகரிக்கப்பட்டும், சில நம்பிக்கைகள் அரசாங்கத்தால் உத்தியோக பூர்வமாக ஏற்றுக் கொள்ளப்பட்டும் பின்பற்றப்படுகின்றன!! 

இன்று மூடநம்பிக்கைகள் என்று சொல்லப்படுபவற்றில் பல ஏதோ ஒரு காரணத்துக்காக ஆரம்பிக்கப்பட்டு; பின்னர் தொடர்ச்சியாக கடைப்பிடிக்கப்பட்டு வருபவைதான்!! அவற்றில்  பல  நம்பிக்கைகள்; ஏற்படுத்தப்பட்ட காரணங்களை விடுத்து தவறான புரிதலோடு இன்றுவரை வெவ்வேறு காரியங்களுக்கு பின்பற்றப்பட்டு வருகின்றது. இவற்றின் பாதகத்தன்மை, சாதகத்தன்மை என்பதெல்லாம் அவை கொடுக்கும் பலனில் வைத்து கணிக்கப்பட வேண்டியவை அல்ல!! அவற்றின் தாக்கம் அவற்றால் கிடைக்கப்பெறும் மன/உடற் தாக்கங்களில்தான் தங்கியுள்ளது. அன்றாட  மனிதப் பழக்கவழக்கங்களில் இருந்து மூடநம்பிக்கைகள் என்று சொல்லப்படுபவற்றை விமர்சிப்பது மிகச் சுலபமான காரியங்களில் ஒன்று; அப்படி செய்வதற்குப் பெயர்தான் பகுத்தறிவு என்றால் அது சுத்த முட்டாள்தனம்(என் பார்வையில்)

மேலே சொன்னதுபோல நம்பிக்கைக்கும் மூட நம்பிக்கைக்கும் இடையில்  இருக்கும் வித்தியாசம்  ஒவ்வொருவருக்கும்  மாறுபடுபவை. ஆனால் அந்த நம்பிக்கைகள் கொடுக்கும் தாக்கங்களின் சாதகத்தன்மை, பாதகத்தன்மை பொறுத்தே அவை வேண்டியவையா, வேண்டாதவையா, இருந்திட்டு போகட்டும் வகையறாக்களா என முடிவெடுக்க  முடியும். அதுகூட  அவரவர் வாழும் சமூகம், மொழி, மதம் என கலாச்சாரம் சார்ந்துதான் முடிவெடுக்கமுடியும். சிலருக்கு/ஒரு சமூகத்துக்கு  மூட நம்பிக்கையாக தோன்றும் விடயங்கள் பலருக்கு/இன்னொரு சமூகத்துக்கு அசைக்கமுடியாத நம்பிக்கையாக இருக்கலாம்! இந்த நம்பிக்கை மரபுவழியாக ஏற்பட்ட உளவியல் உறுதி என்றுகூட  சொல்லலாம். இதை விமர்சிப்பதென்பது அறியாமையின் வெளிப்பாடே!! 

சில நம்பிக்கைகள் அடிமைத்தனங்கள், உயிர்பாதிப்பு, உடற்பாதிப்பு, மனப்பாதிப்பு போன்ற பாரிய தாக்கங்களை இயன்றளவிலும் ஏற்படுத்திக் கொண்டுதான் இருக்கின்றது; இது பல சமூகங்களுக்கும் பொருந்தும். அவற்றை  இல்லாமல் செய்ய குரல் கொடுப்பது  நிச்சயம் ஏற்றுக் கொள்ளப்பட வேண்டிய செயல்தான். ஆனால் இங்கு மூடநம்பிக்கையாக சொல்லப்படுபவை; அதை ஒரு நம்பிக்கையாக ஏற்று  செயற்படும்  சமூகத்தில் நிகழ்கின்றது என்னும் பட்சத்தில் அவர்களை கண்டிப்பதோ, கிண்டல் செய்வதோ அவர்களை ஒருபோதும் மாற்றியமைக்காது என்பதை முதலில் புரிந்துகொள்ளவேண்டும். அது அவர்களுக்குள் மேலும் வன்மத்தையும், கோபத்தையும்தான் ஏற்படுத்தும். அவர்களை பொறுத்தவரை அவர்களாக புரிந்து, கலாச்சார மறுமலர்ச்சியால் மீண்டால்தான் அவற்றிலிருந்து விடுபடமுடியும்; புரியவைத்தால் என்பது சாத்தியமான வழியல்ல!! 

எல்லோரும் விமர்சகர்களாக இருக்கத்தான் ஆசைப்படுகின்றோம், அது மனிதனில் ஒன்றிப்போன ஒரு சுபாவம்!!!  ஆனால் மற்றவரை விமர்சிக்கும் நாம் அதே விடயத்தில் உறுதியாக இருக்கின்றோமா என்பதை சுயபரிசோதனை செய்து பார்ப்பதில்லை. உதாரணமாக சொல்வதானால், பர்தா அணியும் முஸ்லிம் சமூகத்துப் பெண்கள்  வெப்பமான காலப்பகுதியில் உடலை முழுமையாக மூடியிருப்பது  உடல் ஆரோக்கியத்திற்கு நல்லதில்லை என்று சொல்லும் கனவான்கள்; அதே  வெப்பமான காலப்பகுதியில் தங்கள் குடும்ப பெண்களை பிகினியில்/நிர்வாணமாக நடமாட விடுவார்களா?  குறைந்த பட்ச நாகரிக உடையை உடுத்துவது எப்படி அவர்களுக்கு அவசியமோ; அதேபோலத்தான் அவர்களது சமூகத்தின் நாகரீகம் அது, அவ்வளவுதான்! அவர்களது மாற்றத்தை அவர்களது நாகரீகம் தீர்மானிக்கட்டும்; அதில் எதற்கும் நாம் சொறிய வேண்டும்? 

மூடநம்பிக்கைகள்  என்று சொல்லப்படும் பல நம்பிக்கைகள் ஏதோ ஒருவகையில் ஆரோக்கியமானவை என்பதில் எனக்கு அசைக்க முடியாத நம்பிக்கை உண்டு!! எல்லோரும் பரந்த சிந்தனையாளர்கள் இல்லை; சிந்தனைத்  திறன் ஒவ்வொருவருக்கும் மாறுபடும். இந்நிலையில் இன்றும் பல நம்பிக்கைகள்தான்  பலருக்கும்  நம்பிக்கையை, தைரியத்தை கொடுக்கிறது; சிலரை தப்புச் செய்யவிடாமல் தடுக்கின்றது.  மூடநம்பிக்கைகள் என்று சில தசாப்தங்களுக்கு முன்னர் சொல்லப்பட்ட பல விடயங்கள்; அடிப்படையில் சுகாதார, மருத்துவ ரீதியில் சரியானவை என சொல்லப்பட்டிருக்கின்றன!!  பலருக்கு பல நம்பிக்கைகள் நிறைவேறும் போது திருப்தியை கொடுக்கின்றன!!  புரட்டாதிச் சனியானால் அம்மா காக்காவுக்கு சாதம் வைக்கும் சம்பவம்  விமர்சிக்கப்படும், காக்காக்கள் பிதுர்கள் இல்லாமல் இருக்கட்டும், அது மூடநம்பிக்கையாக இருக்கட்டும்; ஆனால் காக்காவுக்கு வைக்கும் சோறு அம்மா/அப்பா/தாத்தா/பாட்டியின் நம்பிக்கை, அவர்களுக்கு திருப்தி ஏற்படுத்தும் சம்பவம்!! 361 நாளும் வேளா வேளைக்கு சமைத்துக் கொட்டும் அம்மாவுக்காக 4 நாட்கள் சற்று பிந்தி சாப்பிட்டால் என்ன ஆகிவிடப்போகிறது? 

பல்லி  கத்தும்போது கைவிரலால் சுண்டுவது, பூனை குறுக்கே போனால் தண்ணீர் குடித்துவிட்டு போவது, சாப்பாட்டில் தலைமயிர் இருந்தால் தண்ணீர் தெளிப்பது, காலையில் வெளியே போகும்போது விளக்குமாறு/துடைப்பம் கண்ணில் படாமல் போவது, எங்கே போகின்றாய் என்று கேட்டால் ஓரிரு நிமிடங்கள் தாமதித்து செல்வது, ஊசியை கையில் கொடுப்பதில்லை, வாகன சாவியை கையில் வாங்குவதில்லை போன்று  நூற்றுக்கணக்கான நம்பிக்கைகள்  அன்றாட வாழ்விலும்; ஒவ்வொரு விசேட சம்பவத்தின் போதும் இப்படியான பல நூறுக்கணக்கான நம்பிகள் கடைப்பிடிக்கப்பட்டு வருவதும் வழமை!!  சிலவற்றுக்கு  காரணம் சொல்லப்படும், பலத்துக்கும்  காரணம் தெரியாமல் மரபுவழி பயன்படுத்தப்பட்டுவரும்!! இங்கு கடைப்பிடிக்கப்படும் அனைத்தும் மூடநம்பிக்கைகள் என்று கொண்டாலும்; அவற்றைக் கடைப்பிடிப்பதில் என்ன தவறு? இழப்பு என்று ஏதும் இல்லை, ஆனால் கிடைப்பது திருப்தி!! 

 Facebook இல் கூட  ஒரு கடவுள்  படத்தை போட்டு இதை  Share செய்தால் 7 செக்கனில் நல்லது நடக்கும் என்று போடப்பட்டிருக்கும்; அதை பலர் இன்னமும் share செய்து வருகின்றனர், சிலர் அவர்களை கேவலமாக விமர்சித்தும் வருகின்றனர். நன்மை கிடைக்கிதோ இல்லையோ அதை share செய்பவனுக்கு அதில் ஒரு நம்பிக்கை!! நாம் அரசியல், சினிமா, கிரிக்கட், பொது விடயங்களுக்கு போடும் கோபமான, ஆதங்கமான  விமர்சன Status கள் எல்லாம் சம்பந்தப்பட்ட தரப்பால்  பரிசீலிக்கப்பட்டு பலன் கொடுக்கின்றனவா? ரெண்டுபேரும் ஒரே வேலையைதான்  செய்கின்றோம், ஆனால் வேறு வேறு வழிகளில். இதில் ஒருவரை மட்டும் எப்படி நையாண்டி பண்ணமுடியும்?  

அடுத்தவர்களை விமர்சித்து, பகுத்தறிவு பேசுபவர்களுக்கு; அப்படி செய்வதில்  ஒரு சந்தோசம், மகிழ்ச்சி கிடைக்கும் என்றால் அதில் தவறில்லை! அதேநேரம் அடுத்தவர் நம்பிக்கையை சுரண்டி, அதை காயப்படுத்துவது ஆரோக்கியமான செயலா? சில ஆண்டுகளுக்கு முன்னர் கடவுளை மறுத்து, கடவுளை கேவலப்படுத்தி தன்னை நாத்திகராக காண்பித்த ஒருவர்; தன்  திருமணத்தில் கடவுள் படத்தை வைத்திருந்ததால் விமர்சிக்கப்பட்டார். அவர் தரப்பில் சொல்லப்பட்ட நியாயம், அவர் மனைவியின் குடும்பத்தின் நம்பிக்கை அது என்பதுதான்!!  தனக்கு என்று வந்தால், தன்  உறவென்று வந்தால் நம்பிக்கையை நிறைவேற்றுவதும்; அடுத்தவர்களது நம்பிக்கையை காயப்படுத்துவதும்தான் பகுத்தறிவா? 

தாலியை, கோவில்களை, பூசாரியை, ஜாதகத்தை,பஞ்சாங்கத்தை  கேவலமாக கருத்திடும் ஒவ்வொருவருக்கும் தன்  திருமணத்தை  மேற்சொன்ன எவையும் இல்லாமல் நிகழ்த்த தைரியம் இருக்கா? திருமணம் என்பது தனி நபர்  விருப்பு வெறுப்பல்ல; பெண்ணிற்கு மேற்சொன்ன சம்பிரதாயங்கள் அற்ற  திருமணத்தில்  விருப்பம் இல்லாத பட்சத்தில் இவர்கள் ஆணாதிக்கமாக தங்கள் எண்ணத்தை திணிக்கவேண்டும். தங்கள் பெற்றோரை, பெண்ணின் பெற்றோரை என பலரை காயப்படுத்தவேண்டும். சரி இப்படியான சூழ்நிலையில் பெண்ணுக்கு புரியவைத்து, பெற்றோரை சமாதனப்படுத்தி/காயப்படுத்தியேனும்  சம்பிரதாயம் அற்ற திருமணம் செய்துகொண்டால் விமர்சனம் ஏதுமில்லை. மாறாக பெண்ணின்(வருங்கால மனைவி), பெற்றோரின், மாமனார் குடும்ப  நம்பிக்கைக்காக என்று தங்கள் நாத்திக கொள்கையை இவர்கள் செருப்பைபோல கழட்டிவிட்டால்; இவர்கள் தங்களை செருப்பால் அடிக்க சம்மதிப்பார்களா?  உணர்வு என்பது தன் குடும்பத்திற்கு மட்டும்தான் இருக்குமா? அடுத்தவன் உணர்வை சொறிபவர்கள்; அதே உணர்வை தன்  சுற்றத்திற்காக  விட்டுக் கொடுப்பது மிகக் கேவலமான செயல். இதனால்தான் சொல்கிறேன் இவர்களில் மிகப்பெரும்பான்மை  போலிகள் என்று!!

கமல்ஹாசன்  பக்தியை உங்கள் படுக்கை அறையில் வைக்கச் சொன்னார். அதையேதான் நானும் சொல்கிறேன் உங்கள் நாத்திகம், பகுத்தறிவையும் உங்கள் படுக்கை அறையிலேயே வைத்துவிடுங்கள். மதம் மட்டும் ஆணுறுப்பு போன்றதல்ல, நாத்திகமும் கூட ஆணுறுப்பு போன்றதுதான்; அதை வெளியில் எடுத்துவிட்டு திரியாதீர்கள், குழந்தைகள்மேல் திணிக்காதீர்கள், எல்லாவற்றையும்  அதை வைத்தே சிந்திக்காதீர்கள். இவை எல்லாவற்றையும் தாண்டிய ஒரு உணர்வு பூர்வமான விடயம் இருக்கின்றது, அதுதான் நம்பிக்கை; அதில் கல்லைவிட்டு எறிந்து மற்றவர்களை காயப்படுத்தி உங்களுக்கு அடையாளம் தேடாதீர்கள். என் நண்பன் ஒருவர் சொன்னது 'தன்  நண்பன் ஒருவன் நாத்திகனாம், அவனுக்கு எந்த சம்பிரதாயங்களிலும் நம்பிக்கை இல்லை, சுவாமி அறைக்குள் செருப்போடு போவானாம்', அதை சொல்லும்போது அவனுக்கு அப்படி ஒரு பெருமையாம். பெற்றவர்களது நம்பிக்கையை காயப்படுத்தி தன்  நாத்திகத்தை வெளிப்படுத்தும் இந்த நண்பரின் நண்பர் செய்யும் செயலுக்குப்  பேர்தான் நாத்திகம்/பகுத்தறிவென்றால் அது என் பார்வையில் குப்பை!! 

நம்பிக்கை, மூட நம்பிக்கையை எதுவென்றாலும் அதை ஒவ்வொருவரும் தங்களிடத்தில் வைத்திருத்தல் நல்லது!!  அதே நேரம் அடுத்தவர்களது நம்பிக்கையில் (அது பார்ப்பவர் பார்வையில் மூட நம்பிக்கையாய் இருப்பினும்) சொறியாமல் இருப்பது இன்னமும் நல்லது!!!  

கொசிறு :-

இன்று இணையத்தில் நிறையவே  சமூகத்தள  புரட்சியாளர்கள்  தோன்றியுள்ளனர்; எங்கு அநியாயம் நடந்தாலும் தட்டிக் கேட்பார்கள், பிரபலங்களில் குறை தேடுவார்கள், எதையும்/எவற்றையும் விமர்சிப்பார்கள், பகுத்தறிவு பேசுவார்கள், (மூட) நம்பிக்கைகளை உடைத்தெறிவார்கள். இவர்களது நிஜமுகம் அங்கு தெரியப்போவதில்லை; பொதுவெளியில் முதிர்ச்சி அடைந்த மனநிலையாளர்களாக, சமூகத்தை நெறிப்படுத்தும் முன்னோடிகளாக தங்களை நிரூபிக்கும் ஒருவகை ஹீரோயிச எண்ணம்தான் இப்படியான இணையப் போராளிகளைத் தோற்றுவித்துக் கொண்டிருக்கின்றது!   ஏழை, தாழ்ந்த ஜாதி(அவர்களே சொல்வார்கள்), படிக்காதவன் போன்றோர்  மகா நல்லவர்கள் என்னும் மாயையையும்; பணக்காரன், உயர்ந்த ஜாதி(அவர்களே சொல்வார்கள்), படித்தவன் போன்றோர்  மகா கெட்டவர்கள் போன்ற மாயையையும் இணைய சமூகத்தளங்களில் காணலாம். மனித குணங்கள் என்பது ஒவ்வொரு தனி மனிதனிடமும் இருப்பது என்பதைகூட புரிந்துகொள்ள முடியாத போராளிகள் இவர்கள்!! இவர்களைவிட ஆபத்தானவர்கள் சமூக விடுதலைப் போராளிகள்; இவர்களால் எதிர்க்கருத்துக்கு துரோகிப்பட்டம் கூட இலவசமாக வழங்கப்படும்!!