Sunday, November 14, 2010

சாப்பிட்டுப்பாத்திட்டு சொல்லுங்க!!!!





மனுஷன் கண்டுபிடிச்சதிலேயே அற்புதமான ரெண்டே விசயம்தான்; ஒன்னு- விதவிதமா சமைப்பது, ரெண்டு- அதை வித விதமா சாப்பிடுவது. எனக்கு உலகத்திலேயே பிடித்த முதல்விடயம் சாப்பாடுதான்; அதுக்கப்புறம்தான் சினிமா, ஸ்போர்ட்ஸ் எதுவானாலும். சிலபேரு பசிக்கு சாப்பிடுவாங்க, சிலபேரு ருசிக்கு சாப்பிடுவாங்க, சிலபேரு பெருமைக்கு சாப்பிடுவாங்க, சிலபேரு வெறித்தனமா சாப்பிடுவாங்க; இதில நான் நான்காவது வகை. நாங்கெல்லாம் முடிவுபண்ணி களத்தில இறங்கினா நமக்கு சாப்பாடு வைக்கிறவங்க பாடு திண்டாட்டம்தான், இது அம்மாவில இருந்து பீஸாகட் சப்லேயர்வரை பொருந்தும். ஓகே ஓகே நீங்க திட்டிறது புரிது, மேட்டருக்கு வாறன். இதுவரை பலவிதமான பலநாட்டு உணவு வகைகளை சாப்பிட்டிருந்தாலும் என்னோட ஆல் டைமே பேவரிட் பழைய சாதம்தான் (பழஞ்சோறு).

சாதம் மிஞ்சினா அடுத்தநாள் கலையில சாப்பிடதுக்கு எதுக்கிந்த பில்டப்பின்னு நீங்க நினைக்கலாம், இதற்கான பதிலை பழைய சாதத்தை ரசிச்சு ருச்சிச்சு சாப்பிட்ட அனுபவமுள்ளவங்க சொல்லுவாங்க, அனுபவ ரீதியா தெரியாதவங்க கீழே உள்ளமாதிரி டிரைபண்ணி பாருங்க.

தேவையானபொருட்கள்


நாட்டரிசிச் சோறு (முதல் நாள்)



நாட்டரிசியிலும் கைக்குத்தல் அரிசி என்றால் இன்னும் சிறப்பாக இருக்கும், அடுத்தநாள் காலையில் பழைய சாதம் சாப்பிடுவதென்றால் முதல்நாள் மதியம் சமைத்த சாதத்தில் இரவு தண்ணீர் ஊற்றிவிட வேண்டும் (பாத்திரத்தில் உள்ள சாதத்தின் மட்டம் வரைக்கும்). மறுநாள் காலையில் சுத்தமாக கையை கழுவிய பின்னர் நீரூற்றிய பழைய சாதத்திலிருந்து நீரை பிரித்து சாதத்தை மட்டும் வேறொரு பாத்திரத்தில் இடவேண்டும்.

உருளைகிழங்கு பிரட்டல் கறி (முதல் நாள்)



ஏனைய மரக்கறிகளிலும் பார்க்க உருளைக்கிழங்கு சிறந்த தெரிவு, காரணம் முதல்நாள் மதியம் சமைப்பது மறுநாள் காலைவரை இருப்பதால் அதிலேற்படும் புளிப்புத்தன்மை நன்றாக இருக்கும், மீன்/கருவாட்டு குழம்பு தண்ணிப் பற்றாக இருக்குமென்பதால் உருளைக்கிழங்கை நன்றாக பால்/நீர் வற்றும்வரை பிரட்டி சமைப்பது நல்லது.

மீன்/கருவாட்டுக் குழம்பு (முதல் நாள்)



எந்த மீன்/கருவாடு என்றதாலும் பரவாயில்லை, ஆனால் முள்ளு குறைவானதாக இருக்க வேண்டும். முதல்நாள் மதியம் நன்றாக தேங்காய்ப்பால் விட்டு உப்பு,புளி சற்று குறைவாக சமைக்கவேண்டும், அப்போதுதான் மறுநாள் காலையில் உப்பு,புளி நன்றாக சுவறியிருக்கும்.

மீன்/கருவாட்டு பொரியல் (முதல் நாள்)



இதற்கும் எந்த மீன்/கருவாடு என்றாலும் பரவாயில்லை, ஆனால் முள்ளு குறைவாக இருக்கவேண்டும், முதல்நாள் பொரிப்பதால் மீனிற்கு உப்பு சற்று குறைவாக போடுதல்வேண்டும், இல்லாவிட்டால் மறுநாள் உப்பு கரிக்கும். முதல்நாள் பொரித்த மீனை மறுநாள் காலைவரை ஒரு பேப்பரில் சுற்றி கிண்ணமொன்றில் வைத்து மூடிவைக்கவேண்டும்.

மிளகாய் சம்பல்/ மாசிச் சம்பல் (அன்றையதினம்)



செத்தல்மிளகாய், உப்பு, வெங்காயம், தேங்காய்ப்பூ, பழப்புளி சேர்த்து அம்மியில் அரைத்த சம்பல் மட்டும் பழைய சோற்றை உண்பதற்கு போதுமானது, இதில் கைப்பக்குவம் ரொம்ப ரொம்ப முக்கியம், வீட்டிலே வயது முதிர்ந்தவர்கள் அம்மியில் அரைக்கும் சம்பல் தனிச் சிறப்பாக இருக்கும். இல்லாவிட்டால் மாசிக் கருவாடு, செத்தல்மிளகாய், வெங்காயம், தேங்காய்ப்பூ, உப்பு, தேசிக்காய் புளி போன்றவற்றை கொண்ட இடித்த சம்பலும் நன்றாக இருக்கும். இந்த சம்பல்களில் ஒன்றை பழைய சாதத்தை சாப்பிடுவதற்கு சற்று முன்னர் செய்தல் வேண்டும்.

வெங்காயம், பச்சை மிளகாய் (அன்றையதினம்)



நன்றாக உரித்த வெங்காயம், காம்பு நீக்கிய பச்சை மிளகாய் என்பவற்றை சுத்தமான நீரில் கழுவி கடித்து சாப்பிடுவதற்கு ஏற்ற நிலையில் வைத்திருக்க வேண்டும்.

குறிப்பு

முதல்நாள் சமைத்த எவற்றையும் குளிர்சாதனப் பெட்டியில் வைத்தோ அல்லது மறுநாள் சூடாக்குதலோ கூடாது.

செய்முறை




ஒரு பெரிய பாத்திரத்தில் நீரை அகற்றிய சோற்றை கொட்டி, அதில் மீன்/கருவாட்டு குழம்பை (முட்கள் சேராதவாறு) சேர்த்து, பின்னர் மீன்/கருவாட்டின் முள்ளை நீக்கி சிறுசிறு துண்டுகளாக கலந்து, இவற்றுடன் உருளைக்கிழங்கு பிரட்டலையும், மிளகாய்/மாசி சம்பலையும் சேர்த்து நன்றாக குழைக்க வேண்டும். அனைத்து கறிகளும் சோற்றுடன் சேரும்வண்ணம் நன்றாக குழைத்து அதை ஒரு பந்து வடிவிலே கொண்டுவரவேண்டும்.

சாப்பிடும்முறை


மேசை, கதிரையிலும் பார்க்க வெறும் தரையில் உட்கார்ந்து சாப்பிடுவதே சிறப்பாக இருக்கும். அதேபோல கூடவே மூன்று நான்கு பேராவது சேர்ந்து சாப்பிட வேண்டும். குழையலை ஒருவர் (துப்பரவானவர் என சாப்பிடும் எல்லோரும் மனதளவில் நம்புபவராக இருக்கவேண்டும், அம்மாவாக இருந்தால் மிகவும் சிறப்பு) குழைத்துக்கொடுக்க அதை வலது கையிலே வாங்கி, இடது கையிலே வெங்காயம், பச்சைமிளகாய் அல்லது பொரித்த மீன்/கருவாடு இவற்றில் எதாவது ஒன்றை எடுத்து கடித்துக்கொண்டே சோற்று உருண்டையை கவ்வி சாப்பிட வேண்டும்.



சாப்பிடும்போது தண்ணீர் குடிப்பதற்கு பதிலாக சோற்றை பிழிந்த நீரிலே உப்பும், வெட்டிய வெங்காயமும், வெட்டிய பச்சைமிளகாயும் சேர்த்து குடித்தால் சுவையாகவும், குளிர்ச்சியாகவும் இருக்கும். கோடைகாலங்களில் வெப்பத்தால் வரும் நோய்களுக்கு இது சிறந்த நிவாரணி.

குறிப்புகள்



பழஞ்சோற்றிற்கு மேலுள்ள கறிகள்தான் வேண்டுமென்றில்லை, எந்த பழைய கறியாக இருந்தாலும் முதல்நாள் மிஞ்சும் சோற்றுடன் சேர்த்து உண்ணலாம், இதனால் இதை ஏழை பணக்காரன் என்று பாகுபாடின்றி யாரும் உண்ணலாம்.

அலுவலகங்களுக்கும், வெளியிடங்களுக்கும் வேலைக்கு போகிறவர்கள் விடுமுறை நாட்களில் உண்பது நல்லது; காரணம் பழக்கமில்லாதவர்களுக்கு வயிற்றில் பிரச்சினையை ஏற்ப்படுத்தலாம், முக்கியமாக நித்திரை தூக்கியடிக்கும்.



ஏனைய நாட்களைவிட திருமணவீடுகள், சடங்கு நிகழ்வுகள், கொண்டாட்டங்கள் என எப்போதாவது உங்கள் வீட்டில் விருந்து நடந்தால் எதை மறந்தாலும் மறவுங்கள், மறுநாள் பழஞ்சோற்றை சாப்பிட மட்டும் மறந்து விடாதீர்கள், அங்குதான் பல கறிகளும் நிறைய சோறும் மிஞ்சியிருக்கும், ஆட்களும் அதிகமாக இருப்பார்கள். எல்லோரும் சுற்றிவர இருந்து வெங்காயத்தை கடித்தபடி பழஞ்சோறு சாப்பிடும் அந்த சுவையும் மகிழ்ச்சியும் வார்த்தைகல்லால் சொல்லி விபரிக்க முடியாதவை.

ரொம்ப ஓவரு -முதல் மற்றும் கடைசி தவிந்த ஏனைய புகைப்படங்கள் பதிவு கொஞ்சம் லைவ்லியா இருக்கட்டுமேன்னு அம்மாகிட்ட திட்டு வாங்கி வாங்கி எடுத்த புகைப்படங்கள் :-)