Thursday, September 30, 2010

எந்திரன்-திரைவிமர்சனம்



(200 ஆவது பதிவு )




எந்திரன்- இந்த வார்த்தைதான் இன்றைய தேதியில் உலக தமிழர்களால் அதிகமாக உச்சரிக்கப்படும் வார்த்தையாக இருக்குமென்று அடித்து கூறலாம். கடந்த ஒரு வாரத்தில் பெரிசு முதல் சிறுசுவரை, பாமரன் முதல் படித்தவன்வரை, ஏழை முதல் பணக்காரன்வரை, ரஜினியை பிடித்தவர்கள் முதல் பிடிக்காதவர்கள்வரை, உலகின் பெரும்பான்மை தமிழர்களின் பேச்சும் எதிர்பார்ப்பும் எந்திரன்தான் என்றால் அது மிகையில்லை. இப்படியாக பலத்த எதிர்பார்ப்புகளுக்கு இடையில் வெளியாகிய எந்திரன் அதன் மிகை எதிர்பார்ப்பை பூர்த்தி செய்துள்ளதா என்றால் நிச்சயமாக பூர்த்தி செய்துள்ளதென்பதுதான் எனது பதில்(இவன் ரஜினி ரசிகன் என்பதால் இப்படி கூறுகிறான் என்று நீங்கள் நினைத்தால் அதற்க்கு நான் பொறுப்பல்ல, நிச்சயமாக நடுநிலை ரசிகர்களின் பதிலும் இதுவாகத்தான் இருக்கும்)

விஞ்ஞானபடாமாக இருந்தாலும் பக்கா ஜனரஞ்சகமான ஒரு காமர்சியல்படமாகதான் எந்திரன் தெரிகிறது. நிச்சயமாக பொழுதுபோக்கிற்காகவும் மகிழ்ச்சிக்காவும் திரையரங்கிற்கு வருபவர்களை எந்திரன் 100 % திருப்திப்படுத்தும் என்பதில் சந்தேகமேதும் இல்லை. ஒவ்வொரு ரஜினி ரசிகனும் பலதடவைகள் திரையங்குகளில் எந்திரனை தரிசிக்கபோவது உறுதி, இது நடுநிலை ரசிகர்களுக்கும் பொருந்தும்.



மூன்று விதமான வேடங்களில் நடித்திருக்கும் ரஜினி மூன்று வேடங்களுக்கும் உடல்மொழி, வசன உச்சரிப்பு,மானரிசம் போன்றவற்றில் சிறப்பானமுறையில் வேறுபாடிகாட்டி கலக்கியுள்ளார். விஞ்ஞானியாக வரும் ரஜினி (வசீகரன்) சீடியஸ் கேரக்டர் என்றால் சிட்டிரோபோ படத்தின் கலகலப்பு கேரக்டர். இறுதியாக மூன்றாவதாக வரும் ரோபோ ரஜினி (படத்தின் ஹீரோ) முதல் இரண்டு ரஜினியையும் தூக்கிச்சாப்பிடுமளவிற்கு தனது நடிப்பால் அசத்தியிருக்கிறார், குறிப்பாக வசீகரனை ரோபோ கூட்டத்தில் தேடும்போது மூன்றாவது ரஜினி நடிக்கும் நடிப்பை ரஜினியை பிடிக்காதவர்களும் ரசிக்காமல் இருக்கமுடியாது.

அப்பப்போ வசீகரனை டென்ஷன் ஆக்கும்போது சிட்டி ரோபோவின் வசன உச்சரிப்பு படு பிரமாதம். இறுதிகாட்சியில் சிட்டியின் நடிப்பும் வசனமும் நிச்சயம் ரசிகர்கள் மனதில் ஒருவித கனத்தை ஏற்படுத்தியிருக்கும் என்பதில் சந்தேகமில்லை. காதல்காட்சிகளில் ஒருவித தயக்கமும் இல்லாமல் இளைஞர்களைபோல கலக்கும் சூப்பர்ஸ்டார் பாடல்காட்சிகளில் வயது திறமைக்கு தடையல்ல என்பதை உணர்த்தியிருக்கிறார். ஐஸ்வர்ய்யாமீது சிட்டிக்கு காதல்வரும்போது ரஜினி கொடுக்கும் உணர்ச்சிகளை விபரிப்பதர்க்கு வார்த்தைகள் இல்லை. சிட்டியும் வசீகரனும் ஒன்றாகவரும் காட்சிகள் அனைத்தும் படு பிரமாதமாக வந்திருக்கிறது. ரஜினியின் நடிப்புக்கு நீண்டநாட்களுக்கு பின்னர் கிடைத்துள்ள தீனிதான் எந்திரன்.

ஐஸ்வர்யாராய் அதிகமான தமிழ்பட நாயகிகள் போலல்லாது படம் முழுவதும் வருகிறார். காதல், கோபம், மகிழ்ச்சி, பயம், கவலை என அனைத்து உணர்வுகளையும் நன்றாக வெளிக்காட்டி சிறப்பான முறையில் தனது பங்களிப்பை ஆற்றியுள்ளார். பாடல்காட்சிகளில் தனது பாணியில் வழமைபோல பட்டையை கிளப்ப்பியிருக்கும் ஐஸிற்கு 37 வயதென்றால் யாராவது நம்புவார்களா? சிட்டியின்நிலையை சிட்டிக்கு புரியவைக்க முயற்ச்சிக்கும் காட்சிகளில்(சிட்டி காதலை வெளிப்படுத்தியவுடன்) தான் ஒரு முதிர்ச்சியான(நடிப்பில்) நடிகை என்பதை எமக்கு உணர்த்துகிறார்.

வில்லனாக நடித்திருக்கும் டானிக்கு பெரிதாக திறமையை வெளிப்படுத்தும் சந்தர்ப்பம் இல்லாவிட்டாலும் கொடுத்ததை சிறப்பாக செய்துமுடித்துள்ளார். சந்தானம், கருணாசின் காமடி சில இடங்களில் ரசிக்கவைத்தாலும் சில இடங்களில் ரசிக்கமுடியவில்லை. ஒருகாட்சியில் வந்தாலும் கலாபவன்மணியும், ஹனிபாவும் மனதில் நிற்கிறார்கள், வேறு எந்த கேரக்டர்களும் மனதில் ஒட்டுமளவிற்கு படத்தில் இல்லை, இதற்கு காரணம் படம் முழுவதும் ரஜினியினதும், ஐஸ்வர்யாவினதும் ஆதிக்கம்தான்.



ரஜினி படத்தின் நாயகனாலும் உண்மையான எந்திரனின் நாயகன் ஷங்கர்தான், இதை ஒரு ரஜினி ரசிகனாக சொல்வதில் எனக்கு எந்தவித தயக்கமும் இல்லை, நிச்சயமாக இதுவொரு ஷங்கர் பாடம்தான், தளபதி எப்படி மணிரத்தினால் ரஜினிக்கு எடுக்கப்பட்ட திரைப்படமோ அதேபோல எந்திரன் ஷங்கரால் ரஜினிக்கு எடுக்கப்பட்ட திரைப்படம். இத்தனை பிரம்மாண்டத்தை ஒரு தமிழ்ப்படத்தில் வெறும் 150 கோடியில் கொடுக்கமுடியுமென்றால் அது ஷங்கரால் மட்டும்தான் முடியும். சிந்தித்து பார்க்கமுடியாத கற்பனை, திறமை. இறுதிகாட்சிகளை வாயைபிளந்தது பார்த்ததோடல்லாமல் இது "ஹோலிவூட் படமல்ல அதுக்கும்மேல்" என்பதுதான் பெரும்பாலானவர்களது திரையரங்க கருத்தாக இருந்தது.

ஆரம்பத்தில் காமடியாக நகர்ந்த ஷங்கரின் திரைக்கதை இடைவேளையின் பின்னர் சூடுபிடிக்க தொடக்கி இறுதி காட்சிகளில் சரவெடியாக மாறி படத்திற்கு பெரும்பலமாக அமைந்தது. சுஜாதாவின் கதைக்கு உயிர்கொடுத்த ஷங்கர் சுஜாதாவின் வசங்களுடன் மதன்கார்க்கியின் வசனங்களையும் தனது வசனங்களையும் படத்தின் தேவைக்கேற்றால்போல பயன்படுத்தியுள்ளார். சிட்டி ஐஸ்வர்யாவை விரும்புவதாக கூறுமிடத்தில் சிட்டியும் வசீகரனும் ஐஸ்வர்யாவும் பேசும் வசனங்கள், இறுதியாக சிட்டி பேசும் வசனங்கள்(குறிப்பாக கருணாஸ், சந்தானத்திடம் கூறும் வசனம்), கடைசியில் படம் முடியும்போது "சிந்திக்க தொடங்கியதால்" எனவரும் வசனம் உட்பட வசனங்கள் படத்தின் தரத்தை உயர்த்தியிருக்கின்றதென்றே சொல்லலாம்.

படத்தின் ஸ்பெஷல் எபக்ட் மற்றும் கிராபிக் காட்சிகள் என்பன இதற்க்கு முன்னர் எந்த இந்திய திரைப்படத்திலும் பார்க்காதது மட்டுமல்ல இனிமேலும் இது இந்திய திரைப்படங்களில் சாத்தியமா என்று நினைக்கவைக்கிறது. எவ்வளவு திட்டமிடல் இருந்தால் இது சாத்தியமாகும்? எது செட் எது கிராப்பிக்ஸ் என்று தெரியாத அளவிற்கு படு பிரமாதமாக வந்திருக்கிறது. ஸ்பெஷல் எபக்ட் மற்றும் கிராபிக் காட்சிகளின் உதவி இல்லாவிட்டால் ஷங்கரால் இப்படி ஒரு படத்தை நிச்சயமாக நினைத்துகூட பார்த்திருக்கமுடியாது.

ரஹுமானது இசையில் பாடல்கள் ஏற்கனவே பட்டி தொட்டியெல்லாம் பட்டையை கிளப்பியதால் பாடல்களை விடுத்து பின்னணி இசையை எடுத்துக்கொண்டால் ரஹுமானின் உழைப்பு நிச்சயம் வெற்றிபெற்றுள்ளதென்றே கூறலாம். இறுதிக்காட்சிகளில் ரகுமானின் பின்னணி இசை படத்திற்கு மிகப்பெரும் பலம். அதேபோல அடக்கி வாசிக்கவேண்டிய இடங்களையும் நன்கு உணர்ந்து அதற்கேற்றால்போல சிறப்பாக தனது பங்கை ரஹுமான் செய்துள்ளார்.

படத்தின் இன்னுமொரு மிகப்பெரும் பலம் ஒளிப்பதிவாளர் இரத்தினவேலு, 'கிளிமாஞ்சாரோ', 'காதல் அணுக்கள்' பாடல்களுக்கு கவிதை பேசிய இரத்தினவேலுவின் கமெரா 'அரிமா அரிமா'வில் தாண்டவமாடியுள்ளது, இறுதிக்காட்சிகளில் ஒளிப்பதிவு படத்தின் வேகத்திற்கு ஏற்றால்போல சிறப்பாக உள்ளது. ரஜினி மற்றும் ஐஸ்வர்யாவை இப்படி இளமையாக அழகாக காட்டியதற்கு இரத்தினவேல் அவர்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.

படத்தொகுப்பாளர் அன்டனி ஆரம்பத்தில் சீரானவேகத்தில் சென்று கொண்டிருந்த எந்திரனை இறுதி 30 நிமிடங்களுக்கும் மின்னல்வேகத்தில் நகர்த்தவும் ரசிகர்களை கதிரையின் நுனிவரை கொண்டுவரவும் உதவியிருக்கிறார். ஆனாலும் சிட்டி நுளம்புடன் பேசும் காட்சி, ரயில் சண்டை என்பவற்றில் இன்னும் கொஞ்சம் கத்திரி போட்டால் நன்றாக இருந்திருக்கும்.

அந்நியனுக்கு பின்னர் சிவாஜியில் ஒரு இடைவெளிவிட்டு மீண்டும் சங்கருடன் இணைந்த சாபுசிரில் சங்கரின் பிரம்மாண்டத்திற்கு தனது கைவண்ணத்தால் நியாயம் தேடியுள்ளார். இந்த படத்திற்கு 150 கோடி போதுமா என்கின்ற அளவில் சாபுவின் வேலைகள் படு பிரம்மாண்டமாக வந்துள்ளன. பிரம்மாண்டம் என்பதை வார்த்தையில் சொல்லி விபரிக்கமுடியாத அளவிற்கு சாபுவின் கலை அமைந்துள்ளது. படம் முழுவதும் இவரின் திறமை வியாபித்திருப்பதால் குறிப்பிட்டு இது நன்றாகவிருக்கிறது அது நன்றாகவிருக்கிறதேன்று சொல்லவேண்டிய வேலை எமக்கு இல்லை.



பீட்டர் கெயின்- படத்தின் இன்னுமொரு நாயகன், இவரது கைவண்ணத்தில் படத்தின் சண்டைகாட்சிகள் சர்வதேசதரத்துக்கு இணையாக படமாக்கப்பட்டிருக்கின்றன, அனைத்து சண்டைகாட்சிகலுமே சிறப்பாக வந்திருந்தாலும் இறுதிகாட்சிகளை என்னவென்று சொல்வது? அதேபோல நடன பயிற்சியாளர்களும் தங்கள் பங்கிற்கு பாடல்களுக்கு ஏற்றால்போல ரசிக்கும்படியான நடன அசைவுகளை வழங்கியிருக்கிறார்கள்.

இவ்வளவும் சொல்லிவிட்டு தயாரிப்பாளர் பற்றி ஒருவார்த்தை சொல்லவில்லை என்றால் நன்றாக இருக்காது, இப்படியொரு பிரம்மாண்டத்தை தயாரித்துமுடிக்கும்வரை பணத்தால் எந்த தடையும் வராமல் பார்த்துக்கொண்டதற்க்கு திரு.கலாநிதிமாறன் அவர்களுக்கு நன்றிகள்.

அப்படியானால் படத்தில் என்னதான் மைனஸ்?
ஐஸ்வர்யா காரில் இருக்கும்போது கூட இருக்கும் ரோபவை போலீசார் சரமாரியாக சுடுவது, அனைத்து வாகனங்களையும் மிதித்துத்தள்ளும் ரோபோகூட்டம் வசீகரனின் காரை மட்டும் மிதிக்காமல் துரத்துகிறது என ஓரிரு இடங்களில் லாஜிக் மீறல்கள் இருந்தாலும் கமர்சியல் படமொன்றை லாஜிக் மீறல்கள் இல்லாமல் எடுப்பது சாத்தியமில்லை என்பதால் இதுவொரு பெரியகுறையல்ல.

ரஜினி, ஷங்கர், ஐஸ்வர்யாராய், ரகுமான், ரத்தினவேலு, சாபுசிரில், அன்டனி, கலாநிதிமாறன் என பிரம்மாண்டமான இந்த கூட்டணியின் எந்திரன் நிச்சயமாக ஒரு ஜனரஞ்சகமான பக்கா பொழுதுபோக்குத் திரைப்படமென்பதில் எந்தவித சந்தேகமுமில்லை.

மொத்தத்தில் எந்திரன் - சூரியன்

20 வாசகர் எண்ணங்கள்:

Kiruthigan said...

அருமை

இன்னொரு விமர்சனம்
http://tamilpp.blogspot.com/2010/09/blog-post.html

என்னது நானு யாரா? said...

எல்லாம் நல்லாத்தான் இருக்கு. கதை என்னத் தல? அதை சொல்லாம விட்டுட்டீங்களே பாஸ்...

SUREஷ்(பழனியிலிருந்து) said...

கமல், ஷாருக் இவங்கெல்லாம் இப்ப என்ன சொல்றாங்க..,

வெற்றி நமதே said...

உங்கள் விமர்சனத்துக்காகத்தான் காத்துக்கொண்டு இருந்தேன் விமர்சனம் படிக்கும்போதே மனசுக்குள் ஒரு பட்டாம்பூச்சி. எனக்கு டிக்கெட் அடுத்த வாரம்தான் கிடைச்சுது.

Mrs. Krishnan said...

Thanks for dis review

தனி காட்டு ராஜா said...

:)

kailash,hyderabad said...

Thanks for speed and technically detail review. After studied your review I decided to see the movie in theater, in Tamil. Once again thanks for not leaking the whole story.

r.v.saravanan said...

thanks devadharshan

periyar said...

//தயாநிதிமாறன் //
அண்ணா அவர் தயாநிதி மாறன் இல்ல கலாநிதி மாறன்

எப்பூடி.. said...

@ periyar

சுட்டிக்காட்டியமைக்கு நன்றி.

கிரி said...

ரொம்ப சந்தோசமா இருக்கீங்க போல! :-) நானும் தான்.

படம் கலக்கலாக உள்ளது.. வேறு என்ன சொல்வது.. ;-)

நாளை மறுபடியும் செல்கிறேன் :-)

நண்பர்கள் உலகம் said...

மொத்தத்தில் படம் சொதப்பல் என்று தெரிய வருகிற்து நண்பா!

Tech Shankar said...

Thanks 4 sharing Your Review - உங்கள் விமர்சனத்திற்கு நன்றி

டாப் 60 ரோபோட் எந்திரன் ஸ்டில் படங்கள்

R.Gopi said...

எந்திரன் படம் உலகளவில் சாதனை படைத்து வருகிறது...

R.Gopi said...

200 வது பதிவிற்கு வாழ்த்துக்கள்....

அதுவும் தலைவரின் ”எந்திரன்” படத்திற்காக எனும் போது, கூடுதல் ஸ்பெஷல்...

Ramesh said...

200*

எப்பூடி.. said...

@ Cool Boy கிருத்திகன்

@ SUREஷ் (பழனியிலிருந்து)

@ PALANI

@ Mrs. Krishnan

@ தனி காட்டு ராஜா

@ kailash,hyderabad

@ r.v.saravanan

@ கிரி

@ Tech Shankar

@ R.Gopi

@ Ramesh


உங்கள் அனைவரதும் வருகைக்கும் பின்னூட்டல்களுக்கும் நன்றிகள், எந்திரன் மூன்று மொழிகளிலும் சூப்பர்டூப்பர் ஹிட் ஆகும் சாத்தியம் அதிகமாக உள்ளது, மகிழ்ச்சி.

................................

என்னது நானு யாரா?

//எல்லாம் நல்லாத்தான் இருக்கு. கதை என்னத் தல? அதை சொல்லாம விட்டுட்டீங்களே பாஸ்..//

கதையை சொன்னால் படத்தோட சஸ்பென்ஸ் போயிடுமென்பதால கதையை சொல்லல. உங்கள் வருகைக்கும் பின்னூட்டலுக்கும் நன்றி.

.....................................

sekar

//மொத்தத்தில் படம் சொதப்பல் என்று
தெரிய வருகிற்து நண்பா//

நீங்கதானா நண்பா அந்த கருப்பு ஆடு? மே...மே..மே....

r.v.saravanan said...

இருநூறாவது பதிவுக்கு வாழ்த்துக்கள் நண்பா அதுவும் எந்திரன் விமர்சனமாக

வந்தது மிகவும் சிறப்பு

எப்பூடி.. said...

r.v.saravanan

//இருநூறாவது பதிவுக்கு வாழ்த்துக்கள் நண்பா அதுவும் எந்திரன் விமர்சனமாகவந்தது மிகவும் சிறப்பு//


நன்றி நண்பரே.

Anonymous said...

இறுதிக்காட்சியில் வசீகரனின் காரை ஏன் அடித்து நொறுக்கவில்லை என கேடடீர்கள்
எனது கருத்தப்படி சிட்டியின் நோக்கம் சனாவை அடைவதுதான் எனவே காரை அடித்து நொறுக்கினால் சனாவும் இறப்பாள் என்பதற்காகவே

Post a Comment

"கருத்துக்கள், நிறைகுறைகள், திட்டுக்கள், பாராட்டுக்கள் போன்றவற்றை கூற விரும்புபவர்கள் கீழுள்ள பின்னூட்ட பெட்டியில் பின்னூட்டலாம்; பதிவுகளை வாசிக்காமல் இடப்படும் டெம்பிளேட் பின்னூட்டங்கள் வேண்டாம் நண்பர்களே."

*******************

வடை, வாழைப்பழம், சூப்பர், கலக்கல் என மொய் வைக்க வரும் நண்பர்களுக்கு; நான் யாருக்கும் பதிலுக்கு மொய் வைக்க மாட்டேன்.(இதனால் ஏற்ப்படும் தர்ம சங்கடத்திற்கு வருந்துகின்றேன்)