Saturday, May 4, 2013

(மூட) நம்பிக்கையும் சமூகமும்!! 




நாகரிகம் வளர  வளர பண்டைய மனிதனின் நம்பிக்கைகளும் மாறிக்கொண்டே வர ஆரம்பித்தது; சில நாகரீக மனிதர்களால் பல நம்பிக்கைகள் மூட நம்பிக்கைகள் என்று வரையறுக்கப்படத் தொடங்கின!!  ஆனாலும் பலர் இன்றும் தொடர்ந்தும் அதே நம்பிக்கைகளை  நம்பிக்கையாக பின்பற்றிக் கொண்டுதான் இருக்கின்றார்கள். இங்கு நம்பிக்கைக்கும் மூடநம்பிக்கைக்கும் இடையிலான அளவுகோல் எனப்படுவது பார்ப்பவரது பார்வையில்தான் தீர்மானிக்கப்படுகின்றது!!  சில நம்பிக்கைகள் அரசாங்கங்களால் உத்தியோக பூர்வமாக நிராகரிக்கப்பட்டும், சில நம்பிக்கைகள் அரசாங்கத்தால் உத்தியோக பூர்வமாக ஏற்றுக் கொள்ளப்பட்டும் பின்பற்றப்படுகின்றன!! 

இன்று மூடநம்பிக்கைகள் என்று சொல்லப்படுபவற்றில் பல ஏதோ ஒரு காரணத்துக்காக ஆரம்பிக்கப்பட்டு; பின்னர் தொடர்ச்சியாக கடைப்பிடிக்கப்பட்டு வருபவைதான்!! அவற்றில்  பல  நம்பிக்கைகள்; ஏற்படுத்தப்பட்ட காரணங்களை விடுத்து தவறான புரிதலோடு இன்றுவரை வெவ்வேறு காரியங்களுக்கு பின்பற்றப்பட்டு வருகின்றது. இவற்றின் பாதகத்தன்மை, சாதகத்தன்மை என்பதெல்லாம் அவை கொடுக்கும் பலனில் வைத்து கணிக்கப்பட வேண்டியவை அல்ல!! அவற்றின் தாக்கம் அவற்றால் கிடைக்கப்பெறும் மன/உடற் தாக்கங்களில்தான் தங்கியுள்ளது. அன்றாட  மனிதப் பழக்கவழக்கங்களில் இருந்து மூடநம்பிக்கைகள் என்று சொல்லப்படுபவற்றை விமர்சிப்பது மிகச் சுலபமான காரியங்களில் ஒன்று; அப்படி செய்வதற்குப் பெயர்தான் பகுத்தறிவு என்றால் அது சுத்த முட்டாள்தனம்(என் பார்வையில்)

மேலே சொன்னதுபோல நம்பிக்கைக்கும் மூட நம்பிக்கைக்கும் இடையில்  இருக்கும் வித்தியாசம்  ஒவ்வொருவருக்கும்  மாறுபடுபவை. ஆனால் அந்த நம்பிக்கைகள் கொடுக்கும் தாக்கங்களின் சாதகத்தன்மை, பாதகத்தன்மை பொறுத்தே அவை வேண்டியவையா, வேண்டாதவையா, இருந்திட்டு போகட்டும் வகையறாக்களா என முடிவெடுக்க  முடியும். அதுகூட  அவரவர் வாழும் சமூகம், மொழி, மதம் என கலாச்சாரம் சார்ந்துதான் முடிவெடுக்கமுடியும். சிலருக்கு/ஒரு சமூகத்துக்கு  மூட நம்பிக்கையாக தோன்றும் விடயங்கள் பலருக்கு/இன்னொரு சமூகத்துக்கு அசைக்கமுடியாத நம்பிக்கையாக இருக்கலாம்! இந்த நம்பிக்கை மரபுவழியாக ஏற்பட்ட உளவியல் உறுதி என்றுகூட  சொல்லலாம். இதை விமர்சிப்பதென்பது அறியாமையின் வெளிப்பாடே!! 

சில நம்பிக்கைகள் அடிமைத்தனங்கள், உயிர்பாதிப்பு, உடற்பாதிப்பு, மனப்பாதிப்பு போன்ற பாரிய தாக்கங்களை இயன்றளவிலும் ஏற்படுத்திக் கொண்டுதான் இருக்கின்றது; இது பல சமூகங்களுக்கும் பொருந்தும். அவற்றை  இல்லாமல் செய்ய குரல் கொடுப்பது  நிச்சயம் ஏற்றுக் கொள்ளப்பட வேண்டிய செயல்தான். ஆனால் இங்கு மூடநம்பிக்கையாக சொல்லப்படுபவை; அதை ஒரு நம்பிக்கையாக ஏற்று  செயற்படும்  சமூகத்தில் நிகழ்கின்றது என்னும் பட்சத்தில் அவர்களை கண்டிப்பதோ, கிண்டல் செய்வதோ அவர்களை ஒருபோதும் மாற்றியமைக்காது என்பதை முதலில் புரிந்துகொள்ளவேண்டும். அது அவர்களுக்குள் மேலும் வன்மத்தையும், கோபத்தையும்தான் ஏற்படுத்தும். அவர்களை பொறுத்தவரை அவர்களாக புரிந்து, கலாச்சார மறுமலர்ச்சியால் மீண்டால்தான் அவற்றிலிருந்து விடுபடமுடியும்; புரியவைத்தால் என்பது சாத்தியமான வழியல்ல!! 

எல்லோரும் விமர்சகர்களாக இருக்கத்தான் ஆசைப்படுகின்றோம், அது மனிதனில் ஒன்றிப்போன ஒரு சுபாவம்!!!  ஆனால் மற்றவரை விமர்சிக்கும் நாம் அதே விடயத்தில் உறுதியாக இருக்கின்றோமா என்பதை சுயபரிசோதனை செய்து பார்ப்பதில்லை. உதாரணமாக சொல்வதானால், பர்தா அணியும் முஸ்லிம் சமூகத்துப் பெண்கள்  வெப்பமான காலப்பகுதியில் உடலை முழுமையாக மூடியிருப்பது  உடல் ஆரோக்கியத்திற்கு நல்லதில்லை என்று சொல்லும் கனவான்கள்; அதே  வெப்பமான காலப்பகுதியில் தங்கள் குடும்ப பெண்களை பிகினியில்/நிர்வாணமாக நடமாட விடுவார்களா?  குறைந்த பட்ச நாகரிக உடையை உடுத்துவது எப்படி அவர்களுக்கு அவசியமோ; அதேபோலத்தான் அவர்களது சமூகத்தின் நாகரீகம் அது, அவ்வளவுதான்! அவர்களது மாற்றத்தை அவர்களது நாகரீகம் தீர்மானிக்கட்டும்; அதில் எதற்கும் நாம் சொறிய வேண்டும்? 

மூடநம்பிக்கைகள்  என்று சொல்லப்படும் பல நம்பிக்கைகள் ஏதோ ஒருவகையில் ஆரோக்கியமானவை என்பதில் எனக்கு அசைக்க முடியாத நம்பிக்கை உண்டு!! எல்லோரும் பரந்த சிந்தனையாளர்கள் இல்லை; சிந்தனைத்  திறன் ஒவ்வொருவருக்கும் மாறுபடும். இந்நிலையில் இன்றும் பல நம்பிக்கைகள்தான்  பலருக்கும்  நம்பிக்கையை, தைரியத்தை கொடுக்கிறது; சிலரை தப்புச் செய்யவிடாமல் தடுக்கின்றது.  மூடநம்பிக்கைகள் என்று சில தசாப்தங்களுக்கு முன்னர் சொல்லப்பட்ட பல விடயங்கள்; அடிப்படையில் சுகாதார, மருத்துவ ரீதியில் சரியானவை என சொல்லப்பட்டிருக்கின்றன!!  பலருக்கு பல நம்பிக்கைகள் நிறைவேறும் போது திருப்தியை கொடுக்கின்றன!!  புரட்டாதிச் சனியானால் அம்மா காக்காவுக்கு சாதம் வைக்கும் சம்பவம்  விமர்சிக்கப்படும், காக்காக்கள் பிதுர்கள் இல்லாமல் இருக்கட்டும், அது மூடநம்பிக்கையாக இருக்கட்டும்; ஆனால் காக்காவுக்கு வைக்கும் சோறு அம்மா/அப்பா/தாத்தா/பாட்டியின் நம்பிக்கை, அவர்களுக்கு திருப்தி ஏற்படுத்தும் சம்பவம்!! 361 நாளும் வேளா வேளைக்கு சமைத்துக் கொட்டும் அம்மாவுக்காக 4 நாட்கள் சற்று பிந்தி சாப்பிட்டால் என்ன ஆகிவிடப்போகிறது? 

பல்லி  கத்தும்போது கைவிரலால் சுண்டுவது, பூனை குறுக்கே போனால் தண்ணீர் குடித்துவிட்டு போவது, சாப்பாட்டில் தலைமயிர் இருந்தால் தண்ணீர் தெளிப்பது, காலையில் வெளியே போகும்போது விளக்குமாறு/துடைப்பம் கண்ணில் படாமல் போவது, எங்கே போகின்றாய் என்று கேட்டால் ஓரிரு நிமிடங்கள் தாமதித்து செல்வது, ஊசியை கையில் கொடுப்பதில்லை, வாகன சாவியை கையில் வாங்குவதில்லை போன்று  நூற்றுக்கணக்கான நம்பிக்கைகள்  அன்றாட வாழ்விலும்; ஒவ்வொரு விசேட சம்பவத்தின் போதும் இப்படியான பல நூறுக்கணக்கான நம்பிகள் கடைப்பிடிக்கப்பட்டு வருவதும் வழமை!!  சிலவற்றுக்கு  காரணம் சொல்லப்படும், பலத்துக்கும்  காரணம் தெரியாமல் மரபுவழி பயன்படுத்தப்பட்டுவரும்!! இங்கு கடைப்பிடிக்கப்படும் அனைத்தும் மூடநம்பிக்கைகள் என்று கொண்டாலும்; அவற்றைக் கடைப்பிடிப்பதில் என்ன தவறு? இழப்பு என்று ஏதும் இல்லை, ஆனால் கிடைப்பது திருப்தி!! 

 Facebook இல் கூட  ஒரு கடவுள்  படத்தை போட்டு இதை  Share செய்தால் 7 செக்கனில் நல்லது நடக்கும் என்று போடப்பட்டிருக்கும்; அதை பலர் இன்னமும் share செய்து வருகின்றனர், சிலர் அவர்களை கேவலமாக விமர்சித்தும் வருகின்றனர். நன்மை கிடைக்கிதோ இல்லையோ அதை share செய்பவனுக்கு அதில் ஒரு நம்பிக்கை!! நாம் அரசியல், சினிமா, கிரிக்கட், பொது விடயங்களுக்கு போடும் கோபமான, ஆதங்கமான  விமர்சன Status கள் எல்லாம் சம்பந்தப்பட்ட தரப்பால்  பரிசீலிக்கப்பட்டு பலன் கொடுக்கின்றனவா? ரெண்டுபேரும் ஒரே வேலையைதான்  செய்கின்றோம், ஆனால் வேறு வேறு வழிகளில். இதில் ஒருவரை மட்டும் எப்படி நையாண்டி பண்ணமுடியும்?  

அடுத்தவர்களை விமர்சித்து, பகுத்தறிவு பேசுபவர்களுக்கு; அப்படி செய்வதில்  ஒரு சந்தோசம், மகிழ்ச்சி கிடைக்கும் என்றால் அதில் தவறில்லை! அதேநேரம் அடுத்தவர் நம்பிக்கையை சுரண்டி, அதை காயப்படுத்துவது ஆரோக்கியமான செயலா? சில ஆண்டுகளுக்கு முன்னர் கடவுளை மறுத்து, கடவுளை கேவலப்படுத்தி தன்னை நாத்திகராக காண்பித்த ஒருவர்; தன்  திருமணத்தில் கடவுள் படத்தை வைத்திருந்ததால் விமர்சிக்கப்பட்டார். அவர் தரப்பில் சொல்லப்பட்ட நியாயம், அவர் மனைவியின் குடும்பத்தின் நம்பிக்கை அது என்பதுதான்!!  தனக்கு என்று வந்தால், தன்  உறவென்று வந்தால் நம்பிக்கையை நிறைவேற்றுவதும்; அடுத்தவர்களது நம்பிக்கையை காயப்படுத்துவதும்தான் பகுத்தறிவா? 

தாலியை, கோவில்களை, பூசாரியை, ஜாதகத்தை,பஞ்சாங்கத்தை  கேவலமாக கருத்திடும் ஒவ்வொருவருக்கும் தன்  திருமணத்தை  மேற்சொன்ன எவையும் இல்லாமல் நிகழ்த்த தைரியம் இருக்கா? திருமணம் என்பது தனி நபர்  விருப்பு வெறுப்பல்ல; பெண்ணிற்கு மேற்சொன்ன சம்பிரதாயங்கள் அற்ற  திருமணத்தில்  விருப்பம் இல்லாத பட்சத்தில் இவர்கள் ஆணாதிக்கமாக தங்கள் எண்ணத்தை திணிக்கவேண்டும். தங்கள் பெற்றோரை, பெண்ணின் பெற்றோரை என பலரை காயப்படுத்தவேண்டும். சரி இப்படியான சூழ்நிலையில் பெண்ணுக்கு புரியவைத்து, பெற்றோரை சமாதனப்படுத்தி/காயப்படுத்தியேனும்  சம்பிரதாயம் அற்ற திருமணம் செய்துகொண்டால் விமர்சனம் ஏதுமில்லை. மாறாக பெண்ணின்(வருங்கால மனைவி), பெற்றோரின், மாமனார் குடும்ப  நம்பிக்கைக்காக என்று தங்கள் நாத்திக கொள்கையை இவர்கள் செருப்பைபோல கழட்டிவிட்டால்; இவர்கள் தங்களை செருப்பால் அடிக்க சம்மதிப்பார்களா?  உணர்வு என்பது தன் குடும்பத்திற்கு மட்டும்தான் இருக்குமா? அடுத்தவன் உணர்வை சொறிபவர்கள்; அதே உணர்வை தன்  சுற்றத்திற்காக  விட்டுக் கொடுப்பது மிகக் கேவலமான செயல். இதனால்தான் சொல்கிறேன் இவர்களில் மிகப்பெரும்பான்மை  போலிகள் என்று!!

கமல்ஹாசன்  பக்தியை உங்கள் படுக்கை அறையில் வைக்கச் சொன்னார். அதையேதான் நானும் சொல்கிறேன் உங்கள் நாத்திகம், பகுத்தறிவையும் உங்கள் படுக்கை அறையிலேயே வைத்துவிடுங்கள். மதம் மட்டும் ஆணுறுப்பு போன்றதல்ல, நாத்திகமும் கூட ஆணுறுப்பு போன்றதுதான்; அதை வெளியில் எடுத்துவிட்டு திரியாதீர்கள், குழந்தைகள்மேல் திணிக்காதீர்கள், எல்லாவற்றையும்  அதை வைத்தே சிந்திக்காதீர்கள். இவை எல்லாவற்றையும் தாண்டிய ஒரு உணர்வு பூர்வமான விடயம் இருக்கின்றது, அதுதான் நம்பிக்கை; அதில் கல்லைவிட்டு எறிந்து மற்றவர்களை காயப்படுத்தி உங்களுக்கு அடையாளம் தேடாதீர்கள். என் நண்பன் ஒருவர் சொன்னது 'தன்  நண்பன் ஒருவன் நாத்திகனாம், அவனுக்கு எந்த சம்பிரதாயங்களிலும் நம்பிக்கை இல்லை, சுவாமி அறைக்குள் செருப்போடு போவானாம்', அதை சொல்லும்போது அவனுக்கு அப்படி ஒரு பெருமையாம். பெற்றவர்களது நம்பிக்கையை காயப்படுத்தி தன்  நாத்திகத்தை வெளிப்படுத்தும் இந்த நண்பரின் நண்பர் செய்யும் செயலுக்குப்  பேர்தான் நாத்திகம்/பகுத்தறிவென்றால் அது என் பார்வையில் குப்பை!! 

நம்பிக்கை, மூட நம்பிக்கையை எதுவென்றாலும் அதை ஒவ்வொருவரும் தங்களிடத்தில் வைத்திருத்தல் நல்லது!!  அதே நேரம் அடுத்தவர்களது நம்பிக்கையில் (அது பார்ப்பவர் பார்வையில் மூட நம்பிக்கையாய் இருப்பினும்) சொறியாமல் இருப்பது இன்னமும் நல்லது!!!  

கொசிறு :-

இன்று இணையத்தில் நிறையவே  சமூகத்தள  புரட்சியாளர்கள்  தோன்றியுள்ளனர்; எங்கு அநியாயம் நடந்தாலும் தட்டிக் கேட்பார்கள், பிரபலங்களில் குறை தேடுவார்கள், எதையும்/எவற்றையும் விமர்சிப்பார்கள், பகுத்தறிவு பேசுவார்கள், (மூட) நம்பிக்கைகளை உடைத்தெறிவார்கள். இவர்களது நிஜமுகம் அங்கு தெரியப்போவதில்லை; பொதுவெளியில் முதிர்ச்சி அடைந்த மனநிலையாளர்களாக, சமூகத்தை நெறிப்படுத்தும் முன்னோடிகளாக தங்களை நிரூபிக்கும் ஒருவகை ஹீரோயிச எண்ணம்தான் இப்படியான இணையப் போராளிகளைத் தோற்றுவித்துக் கொண்டிருக்கின்றது!   ஏழை, தாழ்ந்த ஜாதி(அவர்களே சொல்வார்கள்), படிக்காதவன் போன்றோர்  மகா நல்லவர்கள் என்னும் மாயையையும்; பணக்காரன், உயர்ந்த ஜாதி(அவர்களே சொல்வார்கள்), படித்தவன் போன்றோர்  மகா கெட்டவர்கள் போன்ற மாயையையும் இணைய சமூகத்தளங்களில் காணலாம். மனித குணங்கள் என்பது ஒவ்வொரு தனி மனிதனிடமும் இருப்பது என்பதைகூட புரிந்துகொள்ள முடியாத போராளிகள் இவர்கள்!! இவர்களைவிட ஆபத்தானவர்கள் சமூக விடுதலைப் போராளிகள்; இவர்களால் எதிர்க்கருத்துக்கு துரோகிப்பட்டம் கூட இலவசமாக வழங்கப்படும்!!

Saturday, January 12, 2013

ஒருநாள் போட்டிகளின் பிதாமகன் சச்சின்...


இரு வாரங்களுக்கு முன்னர் ஒரு பத்திரிகைக்கு எழுதியது!!!


கிரிக்கட் என்கின்ற சொல்லையும் சச்சின் டெண்டுல்கர் என்கின்ற பெயரையும் பிரித்துப் பார்க்க முடியாது. மேலோட்டமாகவேனும் கிரிக்கெட்டை அறிந்திருக்கும் ஒருவருக்கு சச்சினை தெரியாதிருக்கும் வாய்ப்பு 0% தான்!! அந்தளவிற்கு சச்சினது பெயர் கிரிக்கட் உலகில் அனைவருக்கும் மிகவும் பரிச்சியமான ஒன்று!! மூன்று தலைமுறை கடந்து சச்சினை ரசிக்கின்றார்கள், மூன்று தலைமுறை பந்து வீச்சாளர்களை சச்சின் அடித்து நொருக்கியிருக்கின்றார், சச்சினுடன் ஒன்றாக ஆடியவர்களது பிள்ளைகள் சச்சினுடன் சேர்ந்து ஆடியிருக்கின்றார்கள், சச்சினுடன் ஆடியவர்களில் பலர் இன்று வர்ணனையாளர்கள், சச்சினுக்கு எதிராக ஆடியவர்கள் சச்சின் இருக்கும் அணிக்கு பயிற்சியாளர்கள், சச்சினுடன் ஆடிய வீரர்கள் இன்று சச்சினுக்கு நடுவர்களாக தீர்ப்பளிக்கின்றார்கள். எந்த நாட்டு ரசிகராக இருந்தாலும், தமது நாட்டு அணிக்கு எதிராக ஆடுகின்றார் என்கின்றபோதும் சச்சினது அழகான ஷாட்களுக்கு தம்மை மறந்து கைதட்டி ரசிக்கின்றார்கள். வெறும் 5 அடி 5 அங்குலம் உயரமுடைய சச்சின் மிகவும் உயரமான ஆஜானுபாகு தோற்றமுள்ள பந்துவீச்சாளர்களுக்கு தண்ணிகாட்டும் துடுப்பாட்ட கலையை வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது.

1989 களின் இறுதியில் பாகிஸ்தானுக்கு எதிராக தனது முதல் ஒருநாள் போட்டியை விளையாடிய சச்சின், 23 ஆண்டுகளுக்கு பின்னர் தற்போதுதான் (2012 இறுதியில்) தனது ஒருநாள் போட்டிகளின் நீண்ட பயணத்திற்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். ஆம், அவர் இறுதியாக ஆடியதும் ஆசிய கிண்ணத்தில் பாகிஸ்தானுக்கு எதிராகத்தான். 23 ஆண்டுகள் சர்வதேசப்போட்டிகளில் தொடர்ச்சியாக ஆடுவதென்பது சாதாரண விடயமல்ல! உபாதைகள், மோசமான ஓட்டக்குவிப்பு நிலை, கிரிக்கட்டில் அரசியல் என பல தடைக்கற்களில் சிக்காமல் இருந்தால் மாத்திரமே இது சாத்தியம், இந்த மூன்றும் சச்சினை அவ்வப்போது நெருங்கியிருப்பினும் சச்சின் அவற்றிலிருந்து மீண்டுவந்து தனது ஓட்டக்குவிப்பை அதிகப்படுத்தினாரேயன்றி தளர்ந்துவிடவில்லை. 40 வயது நெருங்கும் நிலையிலும் சச்சினது ஓய்வு பலருக்கும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றுதான், ஆனாலும் என்றோ ஒருநாள் இதை செய்துதானே ஆகவேண்டும்!! அண்மைக் காலங்களாக ஒருநாள் போட்டிகளில் சச்சினுக்கு தொடர்ச்சியான சந்தர்ப்பங்கள் வழங்கப்படவில்லை; உலகக்கிண்ண இறுதிப்போட்டிக்குப் பின்னர் கடந்த 20 மாதங்களில் சச்சின் வெறும் 10 போட்டிகளில் மாத்திரமே ஆடியுள்ளார். முதுமையும், ஓட்டக்குவிப்பின்மையால் வந்த விமர்சனங்களும்தான் அழுத்தமாக மாறி சச்சினை ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வுபெறத் தூண்டியிருப்பினும், அவர் ஓய்வுபெற்ற இத்தருணம் சரியான நேரம்தான்!!

சச்சினது முதல் இரண்டு ஒருநாள் போட்டிகளில் அவர் பெற்ற ஓட்டங்களின் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா? பூச்சியம். முதல் போட்டியே சச்சினுக்கு வித்தியாசமான போட்டிதான், பாகிஸ்தானுக்கு எதிராக பாகிஸ்தானில் நடைபெற்ற 16 ஓவர்களைக் கொண்ட (மழை காரணமாக) போட்டிதான் சச்சினின் முதலாவது ஒருநாள் போட்டி; சுவாரசியம் என்னவென்றால் சச்சினுக்கு அப்போது வயதும் 16 தான். இந்தப்போட்டியில் உலகின் முன்னணி பந்துவீச்சாளர்களில் ஒருவரான வக்கார் யூனிஸின் பந்துவீச்சில் சச்சின் ஆட்டமிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது. சில மாதங்களின் பின்னர் மீண்டும் அவர் ஆடிய நியூசிலாந்துக்கு எதிரான போட்டியிலும் ஓட்டங்கள் எதனையும் அவரால் குவிக்க முடியவில்லை. அதன் பின்னர் சில போட்டிகளில் சச்சின் ஆடியிருப்பினும் சொல்லிக்கொள்ளும்படியான ஓட்டக்குவிப்புக்கள் எவையும் இடம்பெறவில்லை. ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் அதிகூடிய அரைச்சதங்களாக 96 அரைச்சதங்களை குவித்துள்ள சச்சின் தனது ஒன்பதாவது போட்டியில்தான் தனது கன்னி அரைச்சதத்தை இலங்கைக்கு எதிராக பெற்றுக்கொண்டார். அந்தப் போட்டியில் 5 ஆம் இலக்கத்தில் களமிறங்கி 41 பந்துகளில் 53 ஓட்டங்களை பெற்று இந்தியாவின் வெற்றியை உறுதிசெய்த சச்சின், பந்துவீச்சிலும் இரண்டு விக்கட்டுகளை கைப்பற்றியிருந்ததால் ஆட்டநாயகனாகவும் தெரிவுசெய்யப்பட்டார்; ஒருநாள் போட்டிகளில் ஆகக்கூடியதாக 62 ஆட்டநாயகன் விருதுகளை தனது பெயரில் கொண்டுள்ள சச்சினின் முதல் ஒருநாள் போட்டிக்கான ஆட்டநாயகன் விருது இதுதான்.


சாதனை எண்ணிக்கையான 463 ஒருநாள் போட்டிகளில் விளையாடி, ஒருநாள் போட்டிகளின் அதிகபட்சமான யாரும் இலகுவில் எட்டமுடியாத 49 சதங்களை தன்னகத்தே கொண்டிருக்கும் சச்சின் தனது கன்னிச் சதத்தை தனது 79 ஆவது போட்டியில்தான் பெற்றுக்கொண்டார். 1994 ஆம் ஆண்டு இலங்கையில் இடம்பெற்ற 'சிங்கர் வேர்ல்ட் சீரிஸ்' தொடரில் அவுஸ்திரேலியாவுக்கு எதிராக ஆரம்ப துடுப்பாட்ட வீரராக களமிறங்கி 130 பந்துகளை எதிர்கொண்டு சச்சின் குவித்த 110 ஓட்டங்கள் அந்தப்போட்டியில் இந்தியாவிற்கு வெற்றியையும், சச்சினுக்கு ஆட்டநாயகன் விருதையும் பெற்றுக்கொடுத்தது. ஆரம்ப துடுப்பாட்ட வீரராக களமிறங்கி ஒரு வீரர் பெற்றுக்கொண்ட அதிக ஓட்டங்கள் என்னும் சாதனையாக 15310 ஓட்டங்களை குவித்துள்ள சச்சின்; முதன்முதலாக ஆரம்பத் துடுப்பாட்டவீரராக களமிறங்கிய போட்டி நியூசிலாந்துக்கு எதிராக நியூசிலாந்தின் அக்லண்ட் மைதானத்தில் இடம்பெற்ற போட்டிதான். 142 என்னும் இலகுவான ஓட்ட எண்ணிக்கையை எட்டிப்பிடிக்க வேண்டிய இந்தியா சச்சினை முதன் முதலாக ஆரம்ப துடுப்பாட்ட வீரராக களமிறக்கியது; காரணம், இந்தியாவின் ஆரம்ப துடுப்பாட்ட வீரரான நவ்ஜொட் சிங் சித்துவிற்கு ஏற்பட்ட உபாதை. கிடைத்த சந்தர்ப்பத்தை கெட்டியாக பிடித்துக்கொண்ட சச்சின்; யாரும் எதிர்பாராதவகையில் அதிரடியாக ஆடி 15 பவுண்டரிகள் 2 சிக்ஸர்கள் என வெறும் 49 பந்துகளில் 82 ஓட்டங்களை விளாசினார், கூடவே ஆட்டநாயகன் விருதையும் தட்டிக்கொண்டார். அன்றிலிருந்து சச்சின் இந்திய அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரராக மாபெரும் பங்களிப்பை இறுதிவரை கொடுத்துவந்துள்ளார்!!

ஒருநாள் போட்டிகளில் சச்சின் 49 சதங்களை பெற்றிருந்தாலும் 1998 ஆம் ஆண்டு அவுஸ்திரேலியா அணிக்கு எதிராக ஷார்ஜா மைதானத்தில் இறுதிப் போட்டியொன்றில் பெற்றுக்கொண்ட சதம்; சச்சினின் மிகச்சிறந்த சதங்களிலில் ஒன்றாக இன்றும் கருதப்படுகின்றது. அன்றைய காலப்பகுதியில் 272 என்னும் மிகப்பெரிய இலக்கை ஷார்ஜா மைதானத்தில் இரவுநேரம் இரண்டாவதாக துடுப்பெடுத்தாடி பெற்றுக்கொள்வதென்பது இலகுவான காரியமன்று!! பலம் பொருந்திய அவுஸ்திரேலிய பந்துவீச்சை அடித்து நொருக்கி சச்சின் பெற்றுக்கொண்ட அந்த 134 ஓட்டங்கள் இந்தியாவிற்கு கிண்ணத்தையும் சச்சினுக்கு ஆட்டநாயகன் விருதையும் பெற்றுக்கொடுத்தது. சச்சின் சதம் பெற்ற மற்றுமொரு முக்கிய போட்டி 1999 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற உலகக்கிண்ணப் போட்டித் தொடரில் கென்யாவுக்கு எதிராக பெறப்பட்டது; தனது தந்தையின் பிரிவின் மணித்துளிகள் கடக்கும் முன்னர், மனதின் பாரத்தை இறக்கிவைக்கும் அளவுக்கு கால அவகாசம் போதாத நிலையில்; சச்சின் 114 பந்துகளில் பெற்றுக்கொண்ட 140 ஓட்டங்கள் மிகவும் உணர்ச்சி பூர்வமானது. இப்படி சச்சின் பெற்ற சதங்களில் பல சதங்கள் சிறப்பு வாய்ந்தவை எனினும்; 2003 ஆம் ஆண்டு உலகக்கிண்ண போட்டிகளில் 273 என்னும் கடினமான இலக்கை பலமான பாகிஸ்தான் பந்து வீச்சை எதிர்கொண்டு, வெறும் 75 பந்துகளில் சச்சின் பெற்ற 98 ஓட்டங்கள் சச்சினின் மிகவும் முக்கியமான இனிங்ஸ்களில் ஒன்றாக கணிக்கப்படுகின்றது. பரம எதிரி நாடான பாகிஸ்தானுக்கு எதிராக வேகப் பந்துவீச்சாளர்களுக்குச் சாதகமான மைதானத்தில் பலமான பாகிஸ்தான் வேகங்களை சச்சின் அடித்து நொறுக்கிய இனிங்ஸது. அதேபோன்று மற்றுமொரு முக்கியமான இனிங்க்ஸ்; தென்னாபிரிக்காவுக்கு எதிராக 2010 ஆம் ஆண்டு குவாலியோர் மைதானத்தில் சச்சின் பெற்றுக்கொண்ட 200* ஓட்டங்கள்தான், ஒருநாள் போட்டிகளின் முதல் இரட்டை சதம் இதுதான்.

சச்சினை ஒரு துடுப்பாட்ட வீரராக மட்டுமே சாதனைகள் முன்னிறுத்தினாலும் பந்துவீச்சிலும் சச்சின் மறக்க முடியாத சில சம்பவங்களை கிரிக்கட் வரலாற்றில் நிகழ்த்தியுள்ளார். 1991 ஆம் ஆண்டு மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக அவுஸ்திரேலியாவின் பேத் மைதானத்தில் இடம்பெற்ற போட்டியில்; 6 ஓட்டங்களுக்குள் மேற்கிந்திய தீவுகள் அணியை கட்டுப்படுத்தவேண்டிய நிலையில் அன்றைய அணித்தலைவரான அசாருதீன் தனது முக்கிய பந்துவீச்சாளர்கள் நான்கு பேரினதும் 40 ஓவர்களும் நிறைவடைந்த நிலையில் வேறு வழியின்றி சச்சினை பந்து வீச அழைத்தார். ஒரு விக்கட் மீதமிருக்க இறுதி ஓவரில் 6 ஓட்டங்களுக்காக ஆடிய மேற்கிந்திய அணி முதல் 5 பந்துகளிலும் 5 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. போட்டி சமநிலையில் இருக்கும்போது அந்த ஓவரில் இறுதிப்பந்தை வீசிய சச்சின்; 24 ஓட்டங்களைப் பெற்று சிறப்பாக ஆடிக்கொண்டிருந்த கமின்ஸை சிலிப் திசையில் நின்றுகொண்டிருந்த அசாருதீனிடம் பிடி கொடுத்து ஆட்டமிழக்கச் செய்தார், போட்டி சமநிலையில் முடிவடைந்தது. அதேபோல் 1993 ஆம் ஆண்டு 'ஹீரோ கப்' அரையிறுதியில் தென்னாபிரிக்காவுடனான போட்டியில் இறுதி ஓவரில் தென்னாபிரிக்காவிற்கு 6 ஓட்டங்கள் தேவைப்பட்டது. அனுபவம் மிக்க கபில்தேவ், ஸ்ரீநாத், பிரபாகர் ஓவர்கள் மீதமிருக்க இம்முறை சச்சின் மீது நம்பிக்கை வைத்து பந்துவீச அழைத்தார் அசாருதீன். இறுதி ஓவரில் வெறும் 3 ஓட்டங்களை மட்டும் விட்டுக்கொடுத்து 2 ஓட்டங்களால் போட்டியை வெற்றி கொண்டதுடன், இந்தியாவை இறுதிப்போட்டிக்கும் அழைத்துச்சென்றார் சச்சின். இவற்றைவிட 1998 ஆம் ஆண்டு அவுஸ்திரேலியாவுடனும், 2005 ஆம் ஆண்டு பாகிஸ்தானுடனும் 5 இலக்குகளை சாய்த்து போட்டியை இந்தியாவின் கைகளுக்கு வெற்றிக்கனியாக மாற்றியிருக்கின்றார், இந்த இரு போட்டிகளும் இடம்பெற்றது கொச்சி மைதானத்தில் என்பது விசேட அம்சம்.


18426 ஓட்டங்களை உலகசாதனையாக தனது பெயரில் சச்சின் கொண்டிருந்தாலும் அதில் 4 ஓட்டங்கள் மிகவும் சிறப்பு வாய்ந்தவை. ஒரு போட்டியில் அவுஸ்திரேலியாவின் கிளேன் மக்ராத் தான் வீசிய பந்தை கையில் எடுத்து மீண்டும் சச்சினை நோக்கி விட்டெறிந்தார், தன்னை நோக்கிவந்த பந்தை பாதுகாப்பிற்காக தனது மட்டையால் சுழற்றி அடித்தார் சச்சின், அந்த பந்து எல்லைக்கோட்டை கடக்கவே அன்றைய விதிமுறைகளின்படி சச்சினுக்கு 4 ஓட்டங்கள் வழங்கப்பட்டது. 1998 ஆம் ஆண்டு மிகச்சிறந்த இனிங்ஸ் ஒன்று சச்சினால் ஆடப்பட்டபோதும் அந்த இன்னிங்க்ஸ் சர்வதேசப் போட்டிகளில் சேர்க்கபடாததால் எல்லோராலும் கவனிக்கப்படவில்லை. 18 ஆடி 1998 இல் இங்கிலாந்தின் புகழ்பெற்ற லோட்ஸ் மைதானத்தில் MCC அணிக்கும் உலக பதினொருவர் அணிக்கும் இடையில் இடம்பெற்ற போட்டியில் உலக பதினொருவர் அணிக்காக ஆடிய சச்சின் 262 என்னும் இலக்கை எட்டுவதற்கு 4 சிக்சர்கள் 15 பவுண்டரிகள் அடங்கலாக 114 பந்துகளில் 125 ஓட்டங்களை குவித்து தனது பங்களிப்பை கொடுத்திருந்தார். உலகின் முன்னணி பந்துவீச்சாளர்களான மக்ராத், டொனால்ட், ஸ்ரீநாத், கும்ளே அனைவரையும் சச்சின் ஒருகை பார்த்த ஆட்டமது. அன்று சச்சினும் அரவிந்த டீ சில்வாவும் (அரவிந்தா 82 ஓட்டங்கள்) 177 ஓட்டங்களை தங்களுக்குள் இணைப்பாட்டமாக பெற்றமை கிரிக்கட் ரசிகர்களுக்கு மிகப்பெரும் காணற்கரிய விருந்தாக அமைந்தது, சச்சினின் சிறந்த இனிங்கஸ்களில் ஒன்றாக இதையும் சொல்வார்கள்.

சச்சின் 23 வருடங்களாக கிரிக்கட் பயணத்தை வெற்றிகரமாக பயணித்ததில் அழுத்தங்களை அதிகம் எதிர்கொண்டவர்கள் என்னவோ எதிரணி தலைவர்களும் பந்துவீச்சாளர்களும்தான். சச்சினுக்கு வியூகங்கள் அமைப்பதிலும், எப்படி பந்துவீசி ஆட்டமிழக்க செய்வது என்பதிலும் எதிரணியினரின் கவனம் அதிகமாக இருந்தும் அவர்களால் சச்சினை பெரும்பாலும் கட்டுப்படுத்த முடிவதில்லை; சச்சின் அளவுக்கு உலகின் முன்னணி பந்துவீச்சாளர்கள் பலரையும் எதிர்கொண்டு ஓட்டங்களை வஞ்சனையில்லாமல் குவித்த வீரர்களை எங்கும் காணவியலாது; எந்த நாட்டுக்கு எதிராகவோ, எந்த நாட்டில் இடம்பெற்ற போட்டியாயினும் சச்சினின் ஆதிக்கம் பந்துவீச்சாளர்களுக்கு தலையிடிதான்!! சர்வதேச அரங்கில் அதிக விக்கட்டுகளை வீழ்த்திய முதல் 60 பந்துவீச்சாளர்களில் இந்திய பந்துவீச்சாளர்கள் தவிர்த்து மிகுதி அனைவருக்கும் எதிராக சச்சின் ஆடியிருக்கின்றார்; அதிலும் பெரும்பாலானவர்களுக்கு சச்சினின் துடுப்பு தலையிடியை கொடுத்திருகின்றமை வரலாறு. சச்சினுக்கு பந்துவீசிய ஓய்வுபெற்ற முன்னாள் பந்துவீச்சாளர்களில் சிலர்; பயிற்சியாளர்களாக இளம் பந்துவீச்சாளர்களை பயிற்றுவித்து சச்சினுக்கு எதிராக பந்துவீச உதவி செய்தபோதும் சச்சினின் துடுப்பின் பதில் ஓட்டக்குவிப்புத்தான்!! இப்படியாக ஒருநாள் போட்டிகளின்மீது தனது ஆதிக்கத்தை செலுத்திவந்த சச்சினுக்கு கிடைத்த மகுடந்தான் 2011 ஆம் ஆண்டு உலகக்கிண்ணம் வென்ற அணியின் வீரர் என்கின்ற பெருமை. சச்சினுக்காகவேனும் இந்தியா நிச்சயம் உலககிண்ணம் வெல்ல வேண்டும் என்று கூறிவந்த கிரிக்கட் ரசிகர்களின் கனவை மகேந்திர சிங் டோனி தலைமையிலான இந்திய அணி மெய்ப்பித்து சச்சினுக்கு கௌரவம் சேர்த்தது.

சச்சின் சதமடிக்கும் போட்டிகள் தோல்வியில் முடிவடையும் என்பதும், சச்சின் போட்டிகளை இறுதிவரை கொண்டுசென்று முடிப்பதில்லை என்பதும் சச்சின் மீது சொல்லப்படுகின்ற முக்கிய குற்றச்சாட்டுகள். சச்சின் சதமடித்த 49 போட்டிகளில் 33 போட்டிகள் இந்தியாவால் வெற்றி கொள்ளப்பட்டவை; இந்த 33 என்னும் எண்ணிக்கையில் இதுவரை வேறெந்த வீரரும் மொத்தமாகவேனும் சதங்களை எட்டவேயில்லை. வெற்றிபெற்ற போட்டிகளில் அதிக ஓட்டங்களை குவித்தவர்கள் பட்டியலிலும் சச்சின்தான் முதலிடம்; 56.63 என்னும் சராசரியில் 11157 ஓட்டங்களை வெற்றி ஓட்டங்களாக குவித்த சச்சின் 62 தடவைகள் ஆட்டநாயகனாகத் தெரிவு செய்யப்பட்டிருக்கின்றார். சதமடித்த எந்தப்போட்டியிலும் சச்சின் தேவைக்கு குறைவான ஓட்ட வேகத்தில் சுயநலமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதில்லை; தேவைகேற்ப ஆக்ரோஷமான் ஆட்டத்தை வெளிப்படுத்தி சச்சின் சதமடிக்கும் போட்டிகளில் பந்துவீச்சாளர்களும், சக துடுப்பாட்ட வீரர்களும் சொதப்புமிடத்தில் சச்சின் எப்படி அந்த தோல்விகளுக்கு பொறுப்பாக முடியும்? மற்றும் ஒரு ஆரம்ப துடுப்பாட்ட வீரராக தனது பணியை சரியாக செய்யும் சச்சினை 50 ஓவர்களின் இறுதிவரை நின்று போட்டியை முடித்து கொடுக்கவேண்டும் என எதிர்பார்ப்பது எவ்வளவு முட்டாள்தனம்! பின்னர் எதற்கு மத்தியவரிசை வீரர்கள் அணியில் இருக்கின்றார்கள்? இந்தக் குற்றச்சாட்டுக்கள் சச்சின் மீது சொல்லப்படுவது அறியாமையிலும் இயலாமையிலும் தானன்றி வேறில்லை!!


சச்சின் டெண்டுல்கர் - இந்தப் பெயர் கிரிக்கட் என்னும் சொல் நிலைத்திருக்கும் காலமளவுக்கும் நிலைத்திருக்கும். இவரது ஒருநாள் போட்டிகளினது சாதனைகளை இன்னொருவர் தாண்டுவாரா என்பதற்கான பதில் மிகமிக சாத்தியக்குறைவு என்பதுதான். சச்சினை பிடிக்காதவர் இருக்கலாம், சச்சினை விமர்சிக்கலாம், ஆனால் சச்சினை எவராலும் புறக்கணித்து கிரிக்கட்டை நேசிக்க முடியாது! இந்தியாவில் கிரிக்கட் ஒரு மதம், சச்சின் அதன் கடவுள் என்பார்கள்; உண்மைதான், ஒருநாள் போட்டிகளை பொறுத்தவரை துடுப்பாட்டத்தில் சச்சின் நிச்சயமாக பிதாமகன்தான் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. சச்சினின் டெஸ்ட் போட்டிகளின் ஒட்டக்குவிப்பு அண்மைக்காலங்களில் மந்தகதியில் இருப்பினும் சச்சினால் மீண்டு வரமுடியும் என சச்சினும் இந்திய கிரிக்கட் கட்டுப்பாட்டுசபையும் நம்புவதால் சச்சின் மேலும் சில காலம் டெஸ்ட் போட்டிகளில் ஆடுவார். டெஸ்ட் போட்டிகளில் சிறந்த ஓட்டக்குவிப்பு ஒன்றை நிகழ்த்தியவுடன் சச்சின் தனது ஓய்வை முழுமையாக அறிவிப்பார் என்று எதிர்பார்க்கலாம்; ஒருநாள் போட்டிகளில் சச்சின் ஓய்வை அறிவித்திருக்கும் இந்நேரத்தில் அவர் இறுதியாக ஆடிய இரண்டு ஒருநாள் போட்டிகளிலும் சதம் மற்றும் அரைச்சதம் குவித்திருக்கின்றமை குறிப்பிடத்தக்க விடயம். சச்சின் என்னும் ஜாம்பவான் வாழும் காலத்தில் அவர்கூட தாங்கள் விளையாடியதை பல வீரர்கள் பெரும் பாக்கியமாக கருதுகின்றார்கள்; அதேபோல ரசிகர்களாகிய நாம் கிரிக்கட்டை நேசித்து, ரசித்த காலத்தில் சச்சின் என்னும் மீபெரும் துடுப்பாட்ட வீரரை ரசித்தது எமக்கும் பெருமையான, மறக்க முடியாத, பசுமையான நினைவுகளாக எம்முடன் என்றென்றும் பயணிக்கும்......