Tuesday, October 25, 2011

யாழ் திரையரங்குகளும் திரைப்படங்களும்





1990க்கு முன்னர் யாழ்நகரில் திரையரங்குகளில் சினிமா பார்க்கும் மக்களின் எண்ணிக்கை மிகமிக அதிகம்; இத்தனைக்கும் அன்றைய தேதியில் தமிழகத்தில் ஒரு திரைப்படம் ரிலீஸ் ஆகி குறைந்தது ஒரு மாதத்தின் பின்புதான் இங்கு திரையிடப்படும் (இந்தியாவிலும் இலங்கையிலும் ஒரே நாளில் திரையிடப்பட்ட முதல் திரைப்படம் பாபா) ஆனாலும் அந்நாட்களில் யாழ்ப்பாணத்தில் திரையிடப்பட்ட பல எம்.ஜி.ஆர், சிவாஜி திரைப்படங்கள் 100 நாட்களை கடந்து திரையரங்க உரிமையாளர்களுக்கு மிகுந்த லாபத்தை அள்ளிக்கொட்டியது வரலாறு. ராஜா, வின்சர், ராணி, மனோகரா, ரீகல், நாகம்ஸ், சாந்தி, லிடோ, வெலிங்கடன், ஸ்ரீதர், லக்ஸ்மி என ஏகப்பட்ட திரையரங்குகள்; ஆனாலும் ஒவ்வொன்றும் லாபகரமாகவே அன்று இயங்கின.

ஆனால் இன்று முக்கியமான திரையரங்குகள் என்று பார்த்தால் ராஜா, மனோகரா, செல்லா, நாகம்ஸ் என நான்கு திரையரங்குகள்தான்; அதிலும் குறிப்பிட்டு சொல்வதென்றால் ராஜா, மனோகரா என இரண்டு திரையரங்குதான் பெரிய படங்களை திரையிடுபவை. தமிழகத்தில் திரையிடப்படும் நாளிலே இங்கும் திரைப்படங்கள் திரையிடப்படுகின்றன, இன்னும் சொல்லப்போனால் முதல்நாள் இரவுக்காட்சியே இங்கு திரையிடப்படுகின்றது. அப்படி இருந்தும் 30 நாட்கள் ஒரு திரைப்படத்தை ஓட்டுவதற்கு படாதபாடு படவேண்டி இருக்கின்றது; வரும் வசூலில் படப்பெட்டி வாங்கிய தொகை, திரையரங்க செலவுகள் போனால் கையில் எதுவுமே மிஞ்சுவதில்லை என்கின்றார்கள் யாழ்ப்பாண திரையரங்க உரிமையாளர்கள். இதனால் இப்போதெல்லாம் யாழ்நகர் வரும் புதுப்படங்கள் குறைவடைய தொடங்கியுள்ளன.



"விநியோகிஸ்தர்கள் லாபத்தை அள்ளிக்கொண்டுபோக கஷ்டப்பட்டு திரையரங்கை நடாத்தும் நாம் ஒன்றுமில்லாமல் வேடிக்கை பார்ப்பதா" என்பதே யாழ் நகரின் முக்கிய திரையரங்க உரிமையாளர் ஒருவரின் ஆதங்கம். யாழ்ப்பாணத்தை பொறுத்தவரை திரைப்படங்கள் மூன்று விதமாக திரையிடப்படுகின்றன.

1 ) படப்பெட்டிகளை குறிப்பிட்ட விலைக்கு வாங்குவது

2 ) விகிதாசார அடிப்படையில் வசூலை பங்கிடுவது

3 ) திரையரங்கை விநியோகிஸ்தருக்கு வாடகைக்கு கொடுத்தல்

இவற்றில் இதுவரை யாழ்நகரில் அதிகம் திரையிடப்படுவது முதல் முறையில்த்தான்; எந்த திரைப்படமானாலும் படப்பெட்டியை குறிப்பிட்ட தொகைக்கு வாங்கி அதனை திரையிடுவதுதான் இதுவரை யாழ்ப்பாணத்தில் நடைமுறையில் இருந்து வந்ததுள்ளது. இந்த முறையில் திரைப்படங்களை வாங்கி வெளியிடும்போது யாழ்ப்பாணத்தை பொறுத்தவரை இதுவரை வெளியான ரஜினி, விஜய் படங்கள் பெரும்பாலும் லாபத்தை அள்ளிக் கொடுத்திருக்கின்றன; தமிழகத்தில் அட்டர் பிளாப்பாகும் விஜய் படங்கள் யாழ்நகரில் சக்கை போடு போட்டிருக்கின்றன! ஏனைய நடிகர்களின் திரைப்படங்கள் சிறப்பாக இருந்தாலன்றி திரையரங்க உரிமையாளர்களுக்கு நஷ்டம்தான்.



சுறா திரைப்படம் ராஜா திரையரங்கிற்கு நல்ல வசூலை கொடுத்துள்ளது. சச்சின், திருப்பாச்சி, சிவகாசி, வேட்டைக்காரன் திரைப்படங்கள் மனோகராவிலும்; கில்லி, மதுர, சுறா, காவலன் திரைப்படங்கள் ராஜாவிலும் போட்ட பணத்திற்கு மேலாக லாபத்தை அள்ளிக்கொடியிருக்கின்றன. மனோகராவில் சிவாஜிக்கு (51 லட்சம்) அடுத்து அதிக வசூல் வேட்டைக்காரன்(45 லட்சம்); ராஜாவில் எந்திரனுக்கு(86 லட்சம்) அடுத்த அதிக வசூல் காவலன் (62 லட்சம்) (ராஜாவில் டிக்கட் காசு மனோகராவைவிட 2 மடங்கு அதிகம்).

இதை ஏன் குறிப்பிட்டுள்ளேன் என்றால்; யாழ் நகரின் வசூல் இளவரசனாக விஜய் இருந்தும்; யாழ் நகரின் முன்னணி திரையரங்குகளான ராஜா, மனோகராவிற்கு இதுவரை விஜய் படங்கள் லாபத்தை அள்ளிக்கொடுத்திருந்தும் விஜயின் வேலாயுதத்தை மனோகரா, ராஜா என இரண்டு திரையரங்குகளும் எதற்க்காக கைவிட்டன? என்பதை கூறத்தான். வாகன பாக்கிங், இடவசதி போன்றவற்றை வைத்துப்பார்த்தால் மனோகராதான் யாழ் நகரின் சிறந்த திரையரங்கு; எந்த திரைப்படமாயினும் இங்கு திரையிட்டால் சற்றி அதிகமான பார்வையாளர்களை பெறமுடியும் (குறைந்த டிக்கட் கட்டணமும் இதற்க்கு ஒரு காரணம்) என்னதான் திரையரங்கு வசதியாக இருந்தாலும் இங்கு சவுண்ட் சிஸ்டம் மிகவும் மோசம். ஆனால் ராஜா திரையங்கில் சவுண்ட் சிஸ்டம் மனோகராவை விட சிறப்பு; இங்கு டிக்கட் கட்டணம் சற்று அதிகமாகையால் பார்வையாளர்கள் சற்று குறைந்தாலும் மனோகராவிற்கு குறைவில்லாத வசூல் இங்கு கிடைக்கும்.



மனோகரா திரையரங்கின் சவுண்ட் சிஸ்டத்தை சீரமைத்து புதிய நாற்காலிகள் போட்டு திரையரங்கை வளப்படுத்த மேலதிகமாக ஒரு கோடி ரூபா போதும் என்றும்; அதனை போட்டு திரையரங்கை சீரமைப்பதில் தனக்கு எந்த சிக்கலும் இல்லை என்றும் கூறும் அதன் உரிமையாளர்; முதலிட்ட ஒரு கோடிக்கு லாபம் கிடைக்குமா என்பதிலுள்ள தயக்கம்தான் தன்னை முதலிடாமல் வைத்துள்ளதாகவும் கூறுகின்றார். சவுண்ட் சிஸ்டம் சீரமைக்கப்பட்டு, தரமான இருக்கைகள் இடப்பட்டு, குளிரூட்டப்பட்டால் இலங்கையின் முதல்த்தர திரையரங்கு மனோகராதான். அது தெரிந்திருந்தும், கையில் பணமிருந்தும் அதன் உரிமையாளருக்கு ஏன் இந்த தயக்கம்? காரணம் திரையரங்கிற்கு வரும் குறைந்தளவு பார்வையாளர்களும், விநியோகிஸ்தர்களின் பேராசையும்தான்.

1990க்கு முன்னதாக நீண்ட நாள் கழித்து வெளிவந்த திரைப்படம் 100 நாள் ஓடியதற்கும்; இன்றைய திரைப்படங்கள் 30 நாள் ஓடவே கஷ்டப்படுவதர்க்கும் காரணம் திரைப்படம் வெளியான மறுநாளே அருகிலுள்ள கடைகளில் கிடைக்கும் திருட்டு vcd யும்; வீட்டுக்கு வீடு உள்ள DVD Player, CD Player, கம்ப்யூட்டர் போன்ற இலத்திரனியல் சாதனங்களும்தான். அன்று 30 வீட்டுக்கு ஒரு வீட்டில் இருந்த இந்த சாதனங்கள் இன்று அதிகமாக ஒவ்வொரு வீடுகளிலும் இருக்கின்றன. இதையும் தாண்டி மக்கள் திரையரங்கிற்கு வந்து 30 நாட்கள் ஒரு திரைப்படம் ஓடுவதென்பது பெரிய விடயமே. இந்த 30 நாட்களும் திரைப்படம் ஓடினாலே யாழ்நகரை பொறுத்தவரை நல்ல வசூல் கிடைக்கும்; ஆனால் இதில் ரஜினி, விஜய் படம் தவிர வேறெந்த படத்திற்கும் மினிமம் கராண்டி இல்லை.


90 களுக்கு முன்னர் யாழ்நகரின் மிகப் பிரபலமான வின்சர் திரையரங்கு இன்று களஞ்சியமாக உள்ளது


தமிழகத்தில் சக்கை போடு போட்ட அஜித், சூர்யா, விக்ரம், தனுஸ் படங்கள் இரண்டாவது வாரமே இங்கு ஈ கலைக்கும் நிலையில்த்தான் உள்ளன. முன்னணி நடிகர்களின் திரைப்படங்களுக்கே இந்த நிலையென்றால் மற்றைய திரைப்படங்களின் நிலைமை??? இதனால்த்தான் எல்லோருமே கொண்டாடிய மிகச்சிறந்த திரைப்படங்கள் எவையும் (பெரிய நாயகர்கள் இல்லாத) யாழ் நகரில் வெளியாகவில்லை; எதிர்வரும் காலங்களில் பெரிய நடிகர்களின் திரைப்படங்களுக்கும் இந்த நிலை ஏற்ப்படாலாம். திருட்டு vcd களின் தாக்கம் திரையரங்கிற்கு பார்வையாளர்கள் வராதமைக்கு காரணம் என்பது எப்படி உண்மையோ அதேபோல திரையரங்கத்தினரின் விளம்பரங்கள் போதாமையும் மக்கள் திரையரங்கிற்கு வராமைக்கு முக்கியகாரணம்; விளம்பரத்தின் இன்றியமையாமையை இன்னமும் திரையரங்க உரிமையாளர்கள் யாரும் சரியாக உணராதது கவலையான விடயம்.

இப்போது மேட்டருக்கு வருவோம்; ஏன் வேலாயுதத்தை மனோகராவோ, ராஜாவோ வாங்கவில்லை? இம்முறை வேலாயுதத்தை விநியோகிக்க வந்தவர்கள் மிகவும் அதிக விலையை கூறியுள்ளார்கள்; எப்படி ஓடினாலும் கிட்டாத தொகை அது. அது விநியோகிஸ்தருக்கும் நன்கு தெரியும். அது தெரிந்தும் அவர்கள் அந்த ரேட்டை கூறியதற்கு காரணம் அவர்களே வேலாயுதத்தை நேரடியாக திரையிடுவதுதான்; திரையரங்கை வாடகைக்கு அமர்த்தி தாங்களே வசூலை அள்ளுவது அவர்களின் நோக்கம். விஜய் படத்திற்கு இங்குள்ள மாக்கெட் அவர்களுக்கே தெரிந்திருக்கும்போது இங்கு பழம் தின்று கொட்டை போட்ட ராஜா, மனோகர உரிமையாளர்களுக்கு தெரியாதா? அவர்கள் மறுக்கவே ஒரு மூத்திர சந்திலுள்ள செல்லா (நாதன்ஸ்) திரையரங்கை வாடகைக்கு அமர்த்தி விநியோகிஸ்தர்களே வேலாயுதத்தை யாழ்நகரில் வெளியிடுகின்றார்கள்.



இப்படி யாப்பாணத்தில் வெளியிடப்படும் முதல் விஜயின் திரைப்படம் இதுதான். போதிய இடவசதி, வாகன பாக்கிங், சவுண்ட், விஷுவல் போன்றவற்றில் சிறப்பான தன்மை எதையும் கொண்டிராத செல்லா திரையரங்கால்; ராஜா அல்லது மனோகரா கொடுக்குமளவிற்கு வசூலை நிச்சயம் கொடுக்க முடியாது. ஆனாலும் விநியோகிஸ்தருக்கு கொள்ளை லாபம் உறுதி; அதேநேரம் இதுநாள்வரை ஈ கலைத்த செல்லா திரையரங்கிற்கும் குறிப்பிட்ட தொகை வாடகையாக கிடைக்க உள்ளது. மனோகராவும், ராஜாவும் அனைத்து பெரிய படங்களையும் வாங்கினால் மற்றவர்கள் என்ன செய்வது!! என செல்லா திரையங்கின் சார்பில் வாதிட்டாலும்; தமிழர்களின் 'ஒற்றுமையை' பயன்படுத்தி விநியோகிஸ்தர்கள் நல்ல காசு பார்க்கப் போகின்றார்கள் என்பது மட்டும் உறுதி.

செல்லா திரையரங்கு ராஜா, மனோகராவோடு போட்டி போடுவதென்றால் அதிக தொகை கொடுத்து போட்டிக்கு படத்தை வாங்கியிருக்கலாம்; ஆனால் இப்போது திரையரங்கை வாடகைக்கு கொடுத்திருப்பது விநியோகிஸ்தர்கள் எதிர்காலத்தில் இதே பாணியில் யாழ்நகரில் கொள்ளையடிக்க வழிசெய்ததை போலாகிடும். மனோகரா வேலாயுதம் திரைப்பத்தை திரையிட்டால் வேலாயுதம் திரைப்படத்தின் முதல் இரண்டு நாள் காட்சிகளில் குறிப்பிட்ட தொகை டிக்கட்டை தமது தொலைபேசி நிறுவனத்தின் விளம்பரம் மூலம் விநியோகிக்க ஹச் நிறுவனம் மனோகராவை அணுகியது; பின்னர் செல்லா திரையரங்கில் வேலாயுதம் வெளியாவதால் ஹச் நிறுவனம் வேலாயுதம் திரைப்படத்தை கைவிட்டுவிட்டு இப்போது ஏழாம் அறிவினை வெளியிடும் ராஜா திரையரங்கை அணுகியுள்ளார்கள்.



ரா-ஒன் திரைப்படத்தை மனோகரா வெளியிட தயாராக இருந்தாலும், விநியோகிஸ்தர்கள் சொல்லும் தொகை மலைக்க வைக்கிறது; 20 லட்சம் கேட்கின்றார்கள்! ஒரு முழுமையான ரஜினி படம் ஒன்றை திரையிடும்போது கொடுக்கும் தொகையின் பாதி இது. இந்த தோகையை கொடுத்து ஒரு டப்பிங் படத்தை முதல் முறையாக யாழ்நகரில் வெளியிட்டு விஷப்பரீட்சை மேற்கொள்ள மனோகரா தயாரில்லை. விகிதாசாரப்படி விநியோகம் செய்ய வினியோகிஸ்தர் தயாராக உள்ளபோதும் 70:30 விகிதத்தில் கேட்ப்பதால் திரையரங்கத்திற்கு கட்டுப்படியாகாது என்று கூறுகின்றார்கள். ஊழியர் சம்பளம், மின்சாரம், பொருட்சேதம் என செலவை பார்க்கும்போது குறைந்தது 55:45 தந்தால்தான் ஓரளவேனும் ஓகே என்கின்றார்கள். இப்போது ரா- ஒன்ணிற்கு பேரம் நடக்கின்றது; சுமூகமாக முடிந்தால் மனோகராவில் தீபாவளி அன்று ரிலீசாகும் சாத்தியம் உண்டு, இல்லையேல் யாழ் நகரில் ரா-ஒன் இல்லை.