Sunday, October 24, 2010

உலகப்பட விமர்சனம் - The Way To Bulgaria (1997)





இது எனது முதலாவது உலகப்பட விமர்சனம் என்கிறதால இதில இருக்கிற குறை நிறைகளை நீங்கதான் சுட்டிக்காட்டனும்.

எனக்கு அதிகமாக உலகப்படங்கள் பார்க்கும் சந்தர்ப்பங்கள் அமையவில்லை என்று சொல்வதைவிட நானாக அமைத்துக்கொள்ளவில்லை என்றே சொல்லலாம். மிகவும் பிரபலமான படங்கள் (டைடானிக், அவதார் மாதிரி) மற்றும் தமிழாக்கம் செய்யப்பட்ட சண், விஜய், கலைஞர் டிவிகளில் போடப்படும் படங்களைத்தான் இதுவரை காலமும் பார்த்திருக்கிறேன், அதுகூட திட்டமிட்டு பார்த்ததல்ல.

ஆனால் ஏதாவதொரு தமிழ்ப்படம் நல்லாயிருக்கின்னா உடனே அந்தப்படத்தை ஒரு உலகப்படத்தோட காப்பியின்னு சர்வசாதரணமா சொல்லிகிறாங்க. என்னாமா படமெடுத்திருக்கிறாங்க!! என்று நாங்க வாயை பிளக்கிற படத்தை பார்த்து இதெல்லாம் உலகப்படத்துக்கு கால்தூசிக்கு வருமான்னு சாவகாசமா கேக்கிறாங்க!!! சரி அப்பிடி என்னதான் உலக படங்கள்ல இருக்கின்னு பார்ப்பதற்கான முதல் முயற்ச்சியாக கூகிளாரின் உதவியுடன் நான் 'தேடித் பார்த்த' முதல் திரைப்படம்தான் The Way To Bulgaria (1997)



இது ஒரு இத்தாலிய திரைப்படமானாலும் படத்தின் கதை ஹங்கேரியில் (Hungary) இருந்து பல்கேரியா (Bulgaria) வரை பின்னப்பட்டிருக்கிறது. இத்தாலியின் பிரபல இயக்குனர் ஹன்வாரோ (Hanavaro) 1997 இல் இயக்கியிருக்கும் இந்த திரைப்படம் 14 சர்வதேச விருதுகளை வென்றிருக்கிறது. லூகாஸ் (Loogas) நாயகனாகவும் ஜெப்ரி கானர் (Jefri conor) நாயகியாகவும் நடித்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜிம்மி வோகஸ் (Jimy vogos) இசையமைத்துள்ளார். நதிக்கரையில் பச்சைபசேலென கண்ணைக்கவரும் விதமான ஒளிப்பதிவும், கண்ணை உறுத்தாத எடிட்டிங்கும், மனதை வருடும் இசையும், திகட்டாத திரைக்கதையும்தான் இந்தப்படத்தின் சிறப்பு.

1942 ஆம் ஆண்டு ஹிட்லரின் சர்வாதிகாரத்திலிருந்து தங்கள் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள ஹங்கேரியிலிருந்து டான்யூப் (Danube) நதிக்கரையூடாக பயணித்து பல்கேரியாவின் ரூசே (Rousse) பிரதேசத்திற்கு குடிபெயரும் யூதக்குடும்பமொன்றின் சிரமங்கள்தான் The Way To Bulgaria (1997) திரைப்படத்தின் திரைக்கதை. நடுத்தர வயதையுடைய நாயகனும் (லூகாஸ்) நாயகியும் (ஜெப்ரி கானர்) அவர்களது எட்டுவயது பையனும் மூன்றுவயது பொண்ணும்தான் இந்த திரைப்படத்தின் முக்கிய கதாபாத்திரங்கள்.

ஜேர்மன் படைவீரர்கள் ஹங்கேரியின் தலைநகரான புடாபெஸ்ட்டிலிருக்கும் (Budapest) யூதக்குடிகளை இரவோடிரவாக கைதுசெய்து போலாந்திற்கு (poland) அனுப்புவதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டுக்கொண்டிருக்க நகரமே அல்லோலகல்லோலப் பட்டுக்கொண்டிருக்கிறது; அந்தவேளையில் அதே நகரில் (புடாபெஸ்ட்டில்) டான்யூப் நதிக்கரையில் வசிக்கும் நடுத்தர விவசாய வர்க்கத்தை சேர்ந்த லூகாஸின் குடும்பத்தினரும் என்ன செய்வதென்று தெரியாமல் விழிபிதுங்குகிறார்கள் (அவ்வேளையில் பதட்டத்தில் பிள்ளைகளை தன்மாரோடு அணைத்துக்கொண்டு கண்களில் நீர்த்துளிகள் பணிக்க ஜெப்ரிகானர்அழும் காட்சி கல்நெஞ்சங்களையும் கரையவைக்கும்.)



பின்னர் ஒருவழியாக கட்டுமரம்போன்ற சிறியகடவை ஒன்றை உருவாக்கி அதில் ஒவ்வொருவராக நதியின் மறுகரைக்கு கொண்டு செல்லும் லூகாஸ் முதலில் தனது எட்டுவயது பையனை மறுகரையில் விட்டுவிட்டு திரும்பிவந்து மனைவியையும் மூன்றுவயது மகளையும் அழைத்துச்செல்வார். அவர் பையனை மறுகரையில் விட்டுவிட்டு மீண்டும் மனைவியையும் மகளையும் அழைக்கவரும் இடைப்பட்ட நேரத்தில் அந்த நடுநிசியில் எட்டுவயது சிறுவனது தனிமையையும், மறுகரையில் ஜெப்ரிகானரின் தவிப்பையும் செதுக்கியிருக்கும் இயக்குனரின் திறமையை வார்த்தைகளால் விபரிக்கமுடியாது.

அங்கிருந்து தப்பிக்கும் லூகாஸின் குடும்பத்தினர் 15 நாட்கள் பகலிரவாக பயணித்து அன்றைய யூகோசிலாவாக்கியா (Yugoslavia) ஊடாக ருமேனியா (romania) எல்லையை கடந்து ஒருவழியாக பல்கேரியாவின் ரூசே பிரதேசத்தை அடைகின்றனர், இதுதான் திரைக்கதை. புடாபெஸ்ட்டின் எல்லையை கடக்கும்வரை ஜெர்மனி வீரர்கள் கண்ணில் படாமல் தப்பித்துபோகும் காட்சிகள் விறுவிறுப்புடன் கூடிய திரில். அதை இயக்குனர் அருமையாக கையாண்டிருப்பார், அதிலும் குறிப்பாக திரிலிங்கிற்கு பாம்பை பயன்படுத்திய இடம் அருமை.

மூன்றாம்நாள் பயணத்தின்போது 3 வயதுசிறுமி பசியால் துடிக்கும் காட்சியும், தன் தங்கை பசியால் துடிப்பதை கண்வெட்டாமல் பார்த்துக்கொண்டிருந்த சிறுவன் கண்களில் நீர்கசிய தந்தையை நிமிர்ந்துபார்க்கும் காட்சியும், அப்போது லூகாஸ் மற்றும் ஜெப்ரிகானரின் முகபாவனையும் எழுத்தில் கூறமுடியாதது!!! பின்னர் ஆற்றில் துணியால் பிடிக்கும் ஒரேயொரு மீனை தன் பிள்ளைகளுக்கு பச்சையாக (சமைக்காமல்) ஊட்டும் ஜெப்ரிகானர் கண்ணீர்மல்க லூகாஸிற்கு நெற்றியில் கொடுக்கும் முத்தம் லூகாஸின் வயிற்றை மட்டுமல்ல படம் பார்ப்பவர்களது வயிற்றையும் நிறைத்தது.



அதேபோல யூகோசிலோவாக்கியாவில் தலைநகரான பெல்கிறேட்டில் (Belgrade) காட்டு எடுமைகளிடம் மாட்டிக்கொண்டு தப்பிக்கும் காட்சி, மற்றும் நேசப்படைகளது உளவுப்பிரிவு வீரர்கள் இருவரை ஜெர்மனி வீரர்கள் என நினைத்து ஒளிந்துகொள்ளும் காட்சி, பின்னர் அந்த வீரர்களிடம் அகப்பட்டு தாங்கள் யாரென அவர்களுக்கு புரியவைக்கும் காட்சி என்பன இயக்குனரின் சிறப்பான இயக்கத்துக்கு உதாரணங்கள். அதேபோல நேசப்படை வீரர்கள் இருவரும் தாங்கள் சாப்பிடுவதற்காக வைத்திருந்த இரண்டு பணிசையும் சிறுவர்களுக்கு கொடுக்கும் காட்சியும், அதில் அந்த சிறுவர்களது உணர்ச்சி வெளிப்பாடும் வார்த்தைகளில்லா மவுனங்கள். அந்த இடத்தில் வரும் மென்மையான பின்னணி இசையை விபரிக்கக்கூடியளவிற்கு என்னிடம் வார்த்தைகளில்லை.

The Way To Bulgaria (1997) -> மனதை கனக்க வைக்கும் ஓவியம்.
.
.
.
.
.
.
.
.
.


முக்கிய குறிப்பு

முறைக்க கூடாது, திட்டக்கூடாது, அடிக்ககூடாது --> நாடுகளதும் இடங்களதும் பெயர்களைத்தவிர படத்தின் பெயர், கதை, திரைக்கதை, காட்சிகள், அதிலுள்ள ஆட்களின் பெயர்கள் எல்லாமே கற்பனையானவை. என்னை ஏதாவது பண்ணனுமின்னு தோணினா மேற்படி கதையின் சாயலில் பலபடங்கள் வந்திருக்கலாம், அவற்றில் ஏதாவதொன்றின் லிங்கை தாருங்கள்; நாங்களும் உலகபடம் பாக்கனுமில்ல :-) அப்பதானே மணிரத்தினம், ஷங்கர், பாலா, அமீர், செல்வராகவன் போன்றவர்களை உண்டு இல்லையென்றாக்கலாம் :-)