Tuesday, August 19, 2014

மகேலவும், நானும், சில பசுமையான ஞாபகங்களும்!

1997 - பகல் நேரங்களில் மின்சாரம் அற்ற யாழ்ப்பாணம், இரவில் அள்ளித்தெளிக்கும் சொற்ப நேரத்து மின்சாரத்தின் தயவில் அன்றைய எமது இரண்டு அலைவரிசைகளில் ஒன்றான டூடடர்சன் தொலைக்காட்சியின் இரவுச் செய்திகளின் விளையாட்டுச் செய்தி "இலங்கை அணி 39 ஓட்டங்களுக்கு ஒரு இலக்கினை இழந்துள்ளது, இந்தியா முன்னதாக எட்டு இலக்குகளை இழந்து 537 ஓட்டங்களைப் பெற்று வலுவான நிலையில் உள்ளது" என்கின்ற செய்தியை சொன்னது, எனக்கு இது அன்று ஒரு சாதாரண செய்தி! டூடடர்சனின் தமிழ் செய்திகளில் கிரிக்கட் வீரர்களின் பெயர்களின் உச்சரிப்புக்கள் வேறுமாதிரியாக சொல்லப்படும், கேட்பதற்கு நகைச்சுவையாக இருக்கும் (உதாரணமாக மறவன் அட்டப்பட்டு, நாதன் ஆஸ்லே, மார்க் & ஸ்டீவ் வா)

மறுநாள் இரவுச் செய்திகளில் ஓட்ட எண்ணிக்கை சற்று கவனத்தை ஈர்த்தது, மேலதிக இலக்குகள் இழப்பின்றி அன்றைய நாளை இலங்கை 322 ஓட்டங்களைப் பெற்று நிறைவு செய்திருந்தது! ஆனால் மறுநாள் செய்திகள் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது; அந்தநாள் முடிவிலும் மேலதிக விக்கட்டுகள் வீழ்த்தப்படவில்லை. சனத் ஜெயசூர்யா 326 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார் , கூடவே ரொஷான் மகாநாம 225 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார், அப்போது இலங்கை 587 ஓட்டங்களை பெற்றிருந்தது! அனைத்து இலங்கை கிரிக்கட் ரசிகர்களின் அன்றைய நாளின் ஒரே எதிர்பார்ப்பு; சனத் ஜெயசூர்யா நாளை டெஸ்ட் போட்டிகளின் இன்னிங்க்ஸ் ஒன்றில் பெறப்பட்ட அதிகூடிய தனிமனித ஓட்ட சாதனையான பிரைன் லாராவின் 375 ஓட்டங்களை முறியடிப்பாரா என்பதுதான்!

காலைப் பொழுதும் புலர்ந்தது, மணி பத்தை எட்டியது. மின்சாரமற்ற நேரங்களில் டின்னரை மோர்ந்து பார்க்கக் கொடுத்து, ஏமாற்றி மண்ணெண்ணையில் இயங்க வைக்கப்பட்ட ஜெனரேட்டர் துணைகொண்டு; ஆங்காங்கே சில வீடுகளில் பல ரசிகர்கள் ஆவலோடு பாத்திருக்க சனத் 340 ஓட்டங்களில் பெரும் ஏமாற்றத்தைக் கொடுத்தார்! கூடவே பல ஜெனரேட்டர்களும் நிறுத்தப்பட்டுவிட்டன! மாலையில் இலங்கை பெற்ற இமாலய ஓட்டங்களான 952/6 சாதனை எண்ணிக்கை; நாம் ஊரில் விளையாடிக் கொண்டிருக்கும் மைதானத்தில் பேசப்படுகின்றது! கூடவே அரவிந்தவின் சதம், அர்ஜுனவின் அரைச்சதம், கூடவே ஒரு புதுப்பெயர் பெற்ற அரைச்சதம், அந்தப்பெயரை முதல் முதலில் கேட்ட தருணம் அதுதான்!! - மகேல ஜெயவர்த்தன

"19 வயது சின்னப் பெடியன் நல்லா விளையாடினான்" என்று அவர்கள் பேசும் போது; அன்று யாரவன் என ஏற்பட்ட எதிர்பார்ப்பு, இன்று 17 வருடங்கள் ஆகியும் ஒவ்வொரு தடவையும் மகேலவை கிரீசில் காணும்போதெல்லாம் இம்மியளவும் குறையவில்லை!! மகேல என்னும் சொல் வெறும் பெயராக அல்ல, 17 ஆண்டுகள் என்னோடு கைகோர்த்து, நீங்கா நினைவாக, பசுமையான பசுமரத்து ஆணிபோல் பயணித்த ஓர் அற்புத நிகழ்வு! அந்த நிகழ்வின் சில துளிகளையும், மெய் சிலிர்ப்புக்களையும், பெருமைகளையும் பகிரலாமென்று நினைக்கிறேன்!!

காயம் காரணமாக அணியில் இல்லாமல்போன ஹஷான் திலகரத்னாவுக்கு பதிலாக கிடைத்த வாய்ப்பில்; இலங்கையின் 69 ஆவது டெஸ்ட் வீரராக அறிமுகமாகி தனது முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளையும் இந்தியாவுக்கு எதிராக ஆடிய மகேலவுக்கு; மூன்றாவது போட்டியை ஆடும் வாய்ப்பு பத்து மாதங்களுக்கு பின்னரே மீண்டும் கிடைக்கப்பெற்றது, இம்முறை நியூசிலாந்துக்கு எதிராக. இந்த தொடரின் முதல் இரு போட்டிகளும் மகேலவின் கிரிக்கட் வாழ்வின் முக்கிய திருப்புமுனைகளாக அமைந்தன! இவ்விரு போட்டிகளுமே மகேலவின் மீதான நம்பிக்கையை தேர்வாளர்களுக்கும் , ரசிகர்களுக்கும் அதிகப்படுத்தியது. எதிர்கால இலங்கை கிரிக்கட்டைக் கலக்கப்போகும் நாயகனாக மகேலவின் பெயர் இலங்கை டெஸ்ட் அணியில் உறுதிசெய்யப்பட்டதும் இத்தொடரில்தான்.பகல் நேரத்திலும் மின்சாரம் வழங்கப்பட ஆரம்பித்த புதிது, முதல் முறையாக இலங்கையின் ஆசுவாசமாக ஒரு டெஸ்ட் போட்டியை பார்க்கக் கிடைத்தது! முதல் இன்னிங்சில் மகேல 52 ஓட்டங்களைப் பெற்றிருந்தாலும்; இலங்கை போட்டியின் தோல்வியைத் தவிர்க்க போராடிய வேளையில், அரவிந்த டீ சில்வாவுடன் இணைந்து தடுப்பாட்டம் ஆடிய மகேல 255 பந்துகளில் 54 ஓட்டங்களைப் பெற்றிருந்தார் (SR - 21.17), இலங்கைக்கு இந்தப்போட்டி தோல்வியில் முடிவடைந்திருந்தது!! அடுத்த டெஸ்ட் போட்டி காலி விளையாட்டரங்கில் இடம்பெற்றது, இலங்கையின் இன்றைய பிரபலமான அழகிய டெஸ்ட் மைதானமாக விளங்கும் காலி மைதானத்தின் முதல் சர்வதேசப்போட்டி அதுதான்!

முதல் போட்டியின் தோல்விக்கு பழிதீர்க்க காத்திருந்த இலங்கைக்கு அந்தப்போட்டியில் கிடைத்ததோ இன்னிங்ஸ் வெற்றி!! ஆட்ட நாயகன் வேறுயாருமல்ல, 20 வயதேயான இளம் நட்சத்திர வீரர் மகேல தான்!! சனத், மார்வன், அரவிந்த, அர்ஜுன, ஹஷான், களுவிதாரண என இலங்கையின் அனுபவ/பிரபல வீரர்கள் சரியச்சரிய, மூன்றாம் இலக்க வீரராக களமிறங்கிய மகேல மட்டும் நிலைத்து நின்று 278 பந்துகளில் 167 ஓட்டங்களை (SR - 60) குவித்திருந்தார், இலங்கை சார்பில் வேறு எந்த வீரரும் 40 ஓட்டங்களைக் கூட தாண்டவில்லை, நியூசிலாந்தின் நதன் அஸ்டில் பெற்ற 53 ஓட்டங்கள்தான் அந்தப்போட்டியில் பெறப்பட்ட ஒரே அரைச்சதம்! பந்துவீச்சுக்கு சாதகமான காலி ஆடுகளத்தில் மகேல பெற்ற இந்த 167 ஓட்டங்கள் மகேலவின் எதிர்காலத்தையும், இலங்கைக் கிரிக்கட்டின் எதிர்காலத்தையும் எதிர்வுகூறியது! அடுத்தடுத்த இரண்டு போட்டிகளிலும் முரண்பட்ட இனிங்ஸ்களை ஆடி இருபது வயதிலேயே தன்னை ஒரு முதிரிந்த நுணுக்கமான வீரராக வெளிக்காட்டியிருந்தார் மகேல!

மகேலவின் ஏழாவது டெஸ்ட் போட்டி, அது ஆசிய கிண்ணத்துக்கான டெஸ்ட் போட்டி. அப்போது பாடசாலையில் இலங்கை இந்திய கிரிக்கட் ரசிகர்களின் மோதல் உச்சத்தில் இருந்த நேரம்! இலங்கை தோற்றால் மறுநாள் பாடசாலையில் என்னைச் சுற்றி இந்திய ரசிகர் கூட்டம் சர்க்கரையை மொய்க்கும் ஈக்களாய் குழுமிவிடுவார்கள், எப்படி அவர்களின் வாயை அடைப்பது என்பதை சிந்திப்பதில் தூக்கம் தொலைத்த இரவுகள் பல! அதேநேரம் இந்தியா இலங்கையிடம் தோற்றுவிட்டால் புரட்டாதிச் சனிக் காக்கைகள் போல ஒரு இந்திய ரசிகனும் கண்ணில் அகப்படமாட்டார்கள், அகப்பட்டால் அன்று அவர்களுக்கு சனிதான்.


முதல் இரு நாட்களும் இந்தியா புரட்டிப்போட்டிருந்தது, 500 ஓட்டங்களுக்குமேல் குவித்த இந்தியாவின் ஓட்ட எண்ணிக்கையை தொடர்ந்த இலங்கையின் இலக்குகள் ஒரு முனையில் சாயச்சாய மறுமுனையில் 3 ஆம் இலக்கத்தில் களமிறங்கிய இளம் சிங்கம் மகேலவின் அற்புதமான இன்னிங்ஸ் ஒன்று நிகழ்ந்துகொண்டிருந்தது. சுழலுக்கு சாதகமான மைதானத்தில் இந்தியாவின் வரலாற்றுச் சுழல்பந்துவீச்சாளர்களான கும்ளேயும் ஹர்பஜனும் வீசிக்கொண்டிருக்க, மிகச் சிறப்பான நுணுக்கமான துடுப்பாட்டத்தின் மூலம் 242 ஓட்டங்களை மகேல குவித்தார். அனைத்து திசைகளிலும், அனைத்து விதமான கிரிக்கட் ஷொட்களையும் அழகாக விளையாடும் மகேலவின் ஒவ்வொரு அசைவிலும் ஒரு நளினம் இருந்தது!


ஒருசில வீரர்களுக்குத்தான் ஸ்டைல் இயல்பிலேயே இருக்கும்; உதாரணமாக சொல்வதானால் மார்க் வோ, அசாருதீன் போன்றோரை சொல்லலாம், மகேலவிடமும் ஸ்டையில் இயல்பிலேயே இருந்தது, அது துடுப்பாடும்போதும் சரி, களத்தடுப்பின் போதும்சரி அன்றிலிருந்து இன்றுவரை மாறாத அழகு! ஒவ்வொரு ஷொட்களையும் மகேல விளையாடும் நேர்த்தி கிரிக்கட்டை காதலிக்கும் எவருக்கும் சிலிர்ப்பைக் கொடுக்கும்; அதனால்தான் If Cricket is an Art, Mahela is Picasso என்று பெருமைப்படுத்தி சொல்வார்கள். அந்த சிலிர்ப்பை ஓட்டங்குவிக்கும் ஒவ்வொரு இன்னிங்ஸ்களிலும் மகேல உணரவைத்திருப்பார்.


1999 உலகக்கோப்பை போட்டிகளுக்கு முன்னதாக அவுஸ்திரேலியாவில் இலங்கை, அவுஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகள் ஆடும் VB முக்கோணத்தொடர் இடம்பெறவிருந்தது. டெஸ்ட் வீரராக மட்டும் கணிக்கப்பட மகெலவை ஒருநாள் போட்டிகளுக்கும் பொருத்தமான வீரராக அடையாளம் காட்டியது இந்தத் தொடர்தான். VB தொடருக்கான இலங்கைக்கான குழாமில் முதற்சில போட்டிகளில் அரவிந்த டீ சில்வா சில காரணங்களுக்காக ஆடமுடியாத நிலை ஏற்படவே; அரவிந்தவிற்கான மாற்றீடாக இறுதி நேரத்தில் அணியில் சேர்க்கப்பட்டார் மகேல! தொடரின் முதல் சில போட்டிகளில் சோபிக்காவிட்டாலும்; மகேலவின் கிரிக்கட் வாழ்வின் முக்கியமான ஒரு போட்டி மகேலவிற்காக இந்தத் தொடரில் காத்துக்கொண்டிருந்தது!

இலங்கை யின் ஓர் தனியார் தொலைக்காட்சி போட்டிகளை ஒளிபரப்பியது, அவற்றை நேரடியாக பார்க்கும் வசதிகள் அப்போதைய யாழ்ப்பாணத்தில் இல்லை! பலாலியை மையமாக கொண்டு இயங்கிய இராணுவத்தினரின் தொலைக்காட்சியில் முதல் நாள் போட்டிகள் ஒளிப்பதிவு செய்யப்பட்டு மறுநாள் ஒளிபரப்பப்பட்டது. ஆரம்பப் போட்டிகளின் தோல்வி VB தொடர்மீது ஆர்வத்தை குறைத்திருந்தது, இந்நிலையில் ஒருநாள் மாலை உறவினர் வீடு ஒன்றிற்கு நானும் தம்பியும் சைக்கிளை மிதித்தபடி சென்றுகொண்டிருந்தோம். அப்போது மனோகரன் அண்ணை மறித்தார். மனோகரன் அண்ணை - பாடசாலைக்கு பக்கத்தில் பெட்டிக்கடை வைத்திருப்பவர், எங்களுக்கு எட்னா (EDNA) சாக்லேட் விற்றே பணக்காரனாகியிருப்பார் :-) எட்னா கவருக்குள் வரும் கிரிக்கெட் வீரர்களது ஸ்டிக்கர்கள் அப்போது இங்கு மிகப்பிரபலம்! அதிலும் 20 ரூபா எட்னா ஸ்டிக்கர்தான்; ஸ்டிக்கர் சேர்க்கும் அனைவரும் விரும்புவது. சில நேரங்களில் ஸ்டிக்கரை செலக்ட் செய்யப்போவதாக சொக்லேட்களை வாங்கி; ஸ்டிக்கர் திருட்டுகளும், எங்களிடம் டபிளாக இருக்கும் ஸ்டிக்கர்களை மாற்றி வைக்கும் சம்பவங்களும் நடைபெறும் :-)

வழிமறித்த மனோகரன் அண்ணன் "எப்பிடி அடி? குடுத்து விட்டாங்கள், 300 ஐக் கலைச்சிட்டாங்கள்" என்றார். ஆர்வமும், மகிழ்ச்சியும் அதிகரிக்க யார் அடித்தது என்று ஒரே குரலில் நானும் தம்பியும் கேட்டோம், அவர் "மாக்கட ஜெயவர்த்தன" என்றார்! இன்றுவரை மகேலவை செல்லமாக 'மாக்கட' என்று எங்களுக்குள் அழைப்பதுண்டு :-) மனோகரன் அண்ணையிடம் விடைபெற்று வீடு திரும்பும் வரை எங்களுக்கிருந்த மகிழ்ச்சி, மறுநாள் ஒளிப்பதிவு ஒளிபரப்பப்படும்வரை காத்திருந்த நிமிடங்களின் நீளங்கள் என்பன சொல்லிப் புரியாதவை!

அன்று 1999 ஜனவரி 23 - இலங்கைக் கிரிக்கட்டின் மறக்கமுடியாத ஓர்நாள்! VB தொடரில் இலங்கை இங்கிலாந்துக்கு இடையிலான போட்டி அடிலைட் மைதானத்தில் நடைபெற்றுக் கொண்டிருந்தது. நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை பந்துவீசிக் கொண்டிருந்தது. போட்டியின் 18 ஆவது ஓவரின் நான்காவது பந்தை முரளிதரன் வீசிக்கொண்டிருந்தபோது; போட்டியின் இரண்டாம் நடுவராக (Square Leg Umpire) கடமையாற்றிக் கொண்டிருந்த 'ரோஸ் எமர்சன்' என்ன நினைத்தாரோ தெரியவில்லை, முரளி வீசிய அந்தப் பந்தை முறைதவறி வீசப்பட்டதாக அறிவித்தார், காரணம் முரளியின் பந்துவீசும் முறை என சொல்லப்பட்டது!

தலைமை என்றால் என்ன? ஒரு அணித் தலைவர் எப்படி இருக்க வேண்டும்? என்பதற்கான விடை அன்று கிடைத்தது! சில நொடிகளில் ரோஸ் எமர்சனுக்கும் அர்ஜுனவுக்கும் இடையில் கடுமையான வாக்குவாதம் இடம்பெற்றது. அர்ஜுனாவின் முகத்தில் கடும் கோபம் தெரிந்தது,சில நிமிட வாக்குவாதத்தின் பின்னர் அர்ஜுன இலங்கை அணியை கூட்டிக்கொண்டு எல்லைக்கோட்டுக்கு சென்றுவிட்டார். உடனடியாக இலங்கை அணியின் முகாமையாளரும், போட்டி மத்தியஸ்தரும் இலங்கைக் கிரிக்கட் சபையுடன் பேசி ஒருவழியாக சமரசம் ஏற்பட்டது. முரளி தொடர்ந்து பந்துவீசுவதாக முடிவெடுக்கப்பட்டது, ஆனால் ரோஸ் எமர்சன் முதல் நடுவராக இருக்கும் திசையிலிருந்தே பந்து வீசுவதென்று முடிவு செய்யப்பட்டது! (முதல் நடுவருக்கு பந்துவீசும் முறை பற்றி முடிவெடுக்க அதிகாரமில்லை) முரளி பந்து வீச வருகிறார் around Through வழியாக பந்துவீச ஆரம்பிக்கிறார், எமர்சன் விக்கட்டுக்கு சற்று பின்னே நிற்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார், அவர் முரண்டு பிடிக்கிறார், அர்ஜுன மீண்டும் சிங்கமாகிறார், இம்முறை எமர்சன் பின்வாங்குகிறார்.ஆனால் முரளியின் பந்தினை இங்கிலாந்தின் கிராம் ஹிக் பதம் பார்க்க தொடங்குகிறார், ஆட்டத்தின் போக்கு இங்கிலாந்தின் பக்கம் இலகுவில் திரும்புகிறது, 302 ஓட்டங்களை இங்கிலாந்து 50 ஓவர்கள் நிறைவில் பெற்றுக்கொள்கின்றது! அன்றைய தேதியில், அதிலும் அவுஸ்திரேலிய மண்ணில் இதுவொரு மிகப்பெரும் இலக்கு! இலக்கினை நோக்கி இலங்கை அடியெடுத்துவைக்க நினைக்கையில் ஓட்டம் பெறாமல் களுவிதாரண Run-out ஆகிறார், அடுத்துவந்த அத்தப்பத்துவும் உடன் வெளியேற, திலகரட்ணவின் ஆமைவேக ஆட்டத்தை தன் அதிரடியால் சமப்படுத்திய சனத்; வேகமாக 36 பந்துகளில் அரைச்சதம் கடந்து ஆட்டமிழக்கிறார்; அப்போது இலங்கையின் ஓட்ட எண்ணிக்கை 10 ஓவர்களில் 3 இலக்குகளை இழந்து 68 ஓட்டங்கள்!

நட்சத்திர வீரர் அரவிந்த டீ சில்வா இல்லாத நிலையில்; இந்தப் போட்டியில் இலங்கையின் வெற்றிக்கனி வாய்ப்பு எட்டாக்கனி என்பது உள்ளங்கை நெல்லிக்கனியாக தெரிந்தது. அப்போதுதான் மைதானம் நுழைந்தான் அந்த 20 வயது இளைஞன். ஹஷான், அர்ஜுன என இரு அனுபவங்களும் துணை நிற்க அற்புதமான சதத்தை கடந்தான் அந்த இளம் சிங்கம், எங்கள் மகேல! அனுபவ இங்கிலாந்தை அன்னியமண்ணில் ஒரு உணர்ச்சிமிக்க போட்டியில் பந்தாடிய மகேல 111 பந்துகளில் 120 ஓட்டங்களை குவித்து வெளியேறினார்! உப்பிள் சந்தனவின் அதிரடி கைகொடுக்க வெற்றிக்கான ஓட்டத்தை அன்றைய சர்ச்சை நாயகன் முரளிதரன் பெற்றுக்கொடுக்க இலங்கை உணர்ச்சிபூர்வமான வெற்றிக்கனியை பறித்தது, ஆட்டநாயகனாக 20 வயதான மகேல.

தொடர்ந்து வாசிம் அக்ரம், சொகைப் அக்தர், சக்லின் முஸ்டாக் என பலமான பாகிஸ்தான் பந்து வீச்சு வரிசையை எதிர்கொண்டு மகேல பெற்றுக்கொண்ட அவரது இரண்டாவது ஒருநாள் சதமும் மகேலாவின் முக்கியமான இனிங்ஸ்களில் ஒன்று! இந்தப்போட்டியைக் காண 10 Km வரை சைக்கிள் மிதித்து நண்பன் ஒருவர் வீட்டுக்கு சென்றிருந்தேன், மின்கலத்தில் இயங்கும் ஒரு சிறிய கறுப்பு வெள்ளைத் தொலைக்காட்சியில் பார்த்த அந்த இனிங்ஸ்சும், நினைவுகளும் இன்னமும் பசுமையாக உள்ளது, 99 ஓட்டங்களில் மகேல Run-Out இல் இருந்து மயிரிழையில் தப்பியதுகூட!

அடுத்து உலகக் கிண்ணம் 1999, நடப்பு சாம்பியனாக போட்டிகளில் பங்கேற்ற இலங்கைக்கு மிகப்பெரும் அடி காத்திருந்தது, முதற் சுற்றுடன் வெளியேறியது இலங்கை. அதிலும் இந்தியாவுடனான படுதோல்வி பாடசாலையில் இலங்கை ரசிகர்களான எமக்கு கடும் மன உளைச்சலை ஏற்படுத்தியிருந்தது!! உலகக் கிண்ண தோல்வியைத் தொடர்ந்து 1996 இல் கொண்டாடப்பட்ட நாயகர்கள்மீது கடும் விமர்சனங்களும் முன்வைக்கப்பட்டன. இலங்கை கிரிக்கட் தமது அடுத்த கட்டத்தை நோக்கி சிந்திக்கத் தொடங்கியது, முதற்கட்டமாக இலங்கைக் கிரிக்கட்டின் தூண்களான அரவிந்த, அர்ஜுன இருவரும் ஒருநாள் அணிகளில் இருந்து நீக்கப்பட்டனர். புதிய தலைவராக சனத் ஜெயசூர்யா தேர்ந்தெடுக்கப்பட்டார், உலகக்கிண்ணப் போட்டிகளில் ஓரளவேனும் ஓட்டம் குவித்திருந்த ரொஷான் மகாநாம கிரிக்கட்டில் இருந்து ஓய்வை அறிவித்தது அதிர்ச்சியாக இருந்தது, காரணம் தலைமைப் பதவி கிடைக்காதது என்று பேசப்பட்டது!


உலகக்கிண்ண போட்டிகளில் பெரிதளவில் சோபிக்காவிட்டாலும் இலங்கை சார்பாக கணிசமான ஓட்டங்களை பெற்றிருந்த மகேலவின் துடுப்பாட்டம் எல்லோரையும் கவர்ந்திருந்தது! இலங்கை கிரிக்கட்டும் எதிர்காலத்தை கருத்திற்கொண்டு மகேலவை அணியின் உபதலைவராக அறிவித்தது. 20 வயதில் இது மகேலவிற்கு ஒரு மிகப்பெரும் அங்கீகாரம். சனத் தலைமையிலான அணி; எடுத்த எடுப்பிலேயே இலங்கை, இந்தியா, அவுஸ்திரேலியா பங்குகொண்ட முக்கோணத் தொடரை சொந்தமண்ணில் வெற்றி கொண்டதோடல்லாமல், முதல்தர அணியான அவுஸ்திரேலியாவுடன் முதல் போட்டி மற்றும் போட்டித் தொடர் வெற்றியையும் பதிவு செய்தது!மகேலவின் டெஸ்ட் போட்டிகளின் மீதான ஆளுமை அதிகரித்துக்கொண்டு சென்றாலும் ஒருநாள் போட்டிகளில் மகேலவின் ஓட்டக்குவிப்பு சராசரியாகவே இருந்து வந்தது. தனது விக்கட்டை தானே தூக்கியெறியும் விதமாகவே பல ஒருநாள் போட்டிகளை மகேல ஆடிக்கொண்டிருந்தார்! முக்கிய தருணங்களில் நிதானமாக பொறுப்பாக ஆடும் திறன், சாதாரண நேரங்களில் மகேலவிடமிருந்து வெளிப்படுவதில்லை, நிலைத்து நிற்கும் இனிங்ஸ்களிலும், 40 ஓவர்களைக் கடந்துவிட்டால்; ஒவ்வொரு பந்தையும் அடித்தாட வேண்டும் என்கின்ற மனநிலையில் காணப்படுவார். தனது இந்த இயல்பை அவர் இறுதிவரை மாற்றவில்லை! அதனை மாற்ற முடியாதுள்ளதாக மகேலவே கூறியிருந்தார். மகேல ஆடியிருக்கும் ஒருநாள் போட்டிகளின் எண்ணிக்கைக்கும், அவர் திறனுக்கும் அவர் பெற்ற ஓட்டங்கள் குறைவானவையே!

இந்நிலையில் 2000 ஆம் ஆண்டு இலங்கையில் பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக இலங்கை கிரிக்கட்டால் மகேலவின் உபதலைவர் பதவி மீளப்பெறப்பட்டு, அத்தப்பத்து உபதலைவராக்கப்பட்டார். மகேலவின் துடுப்பாட்டத்தை சீர் செய்யவே இந்த முடிவு என்று சொல்லப்பட்டது. பதவி பறிக்கப்பட்ட அடுத்தடுத்த இரண்டு போட்டிகளிலும் தலா ஒரு அரைச்சதத்தை மகேல பெற்றிருந்தார். அடுத்து தென்னாபிரிக்காவுக்கு எதிரான தொடரின் முதல்ப் போட்டியில் மிகச் சிறப்பான இனிங்க்ஸ் ஒன்றை ஆடி மீண்டும் ஒரு 167 ஓட்டங்களை காலி மைதானத்தில் குவித்தார், 165,166,167 ஓட்டங்களில் மகேல 5 தடவைகள் ஆட்டமிழந்துள்ளார். தென்னாபிரிக்காவுடனான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் அர்ஜுனவின் இறுதி இனிங்ஸில்; அவருடன் இறுதிவரை களத்தில் இணைந்து ஆடி, மற்றொரு சதத்தையும் அதே தொடரில் பெற்றுக்கொண்டார்!

இலங்கையின் அடுத்த தொடரின் முதல் போட்டி தென்னாபிரிக்காவின் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான டேர்பன் மைதானத்தில் இடம்பெற்றது. இந்தப் போட்டியின் முதல் இனிங்ஸில் மகேல 98 ஓட்டங்களை பெற்றவேளையில் ஆட்டமிழந்தார், மகேலவின் கிரிக்கட் வாழ்க்கையில் மறக்கமுடியாத ஆட்டமிழப்பு இது. அனைத்து டெஸ்ட் விளையாடும் நாடுகளுடனும் சதமடித்துள்ள மகேலவிற்கு; வெறும் 2 ஓட்டங்களால் டெஸ்ட் விளையாடும் அனைத்து நாடுகளிலும் சதமடித்திருக்கும் வீரர்கள் பட்டியலில் இணையும் வாய்ப்பு இறுதிவரை அமையவில்லை.

தொடர்ந்து டெஸ்ட், ஒருநாள் போட்டிகளில் சதங்களுடன் ஓட்டங்களைக் குவித்துக்கொண்டிருந்த மகேலவிற்கு மற்றுமொரு மைல்கல் 2002 ஆம் ஆண்டு கடந்தது. கிரிக்கட்டின் தாய்வீடான இங்கிலாந்தின் லோட்ஸ் மைதானத்தில் சதமடித்து, டெஸ்ட் கிரிக்கட் விளையாடும் வீரர்களின் முக்கிய கனவுகளில் ஒன்றை நிறைவேற்றினார். பின்னர் 2006 இல் மீண்டும் ஒரு சதம் மகேலவால் லோட்சில் பெறப்பட்டது. போட்டியின் நான்காம், ஐந்தாம் நாட்களில் போட்டியை சமநிலையில் கொண்டு செல்ல, மகேல போராடியபோது கிடைத்த சதமது. மகேல மற்றும் பின்வரிசை வீரர்களால் போட்டியும் சமநிலையில் முடிவடைந்தது. ஆசிய வீரர்களில் வெங்காஸ்கர்(3 சதம்) தவிர்த்து மகேல மட்டுமே லோட்ஸ் மைதானத்தில் 2 சதங்கள் அடித்த வீரர் என்கின்ற பெருமையை பெற்றுள்ளார்.

2003 - உலகக் கிண்ணம் ஆரம்பமாகியது, பெரும்பாலான முக்கோணத் தொடர்களைக் கைப்பற்றி; சனத் தலைமையில் சாதித்துக் கொண்டிருந்த இலங்கை அணிமீதும் எதிர்பார்ப்பு ஏற்பட்டிருந்தது. இலங்கையைப் பொறுத்தவரை கென்யாவுடனான தோல்வியை விடுத்து பார்த்தால், அரையிறுதிவரை முன்னேறியது உலகக் கிண்ணத்தை பொறுத்தவரை கௌரவமான பெறுபேறுதான். ஆனால் அறையிறுதித் தோல்வி ஜீரணிக்க முடியாமல் போனது நிதர்சனம். 213 எனும் வெற்றி இலக்கு நிச்சயம் எட்டப்பட கூடியதே, ஆனால் இலங்கையால் போட்டியை வெற்றிகொள்ள முடியவில்லை. இந்த உலகக் கிண்ணம் மகேலவின் கிரிக்கட் வாழ்க்கையின் ஓர் மோசமான அத்தியாயம்.2003 உலகக் கிண்ணப் போட்டிகளில் மகேல எட்டு இனிங்ஸ்களில் ஆடி 22 ஓட்டங்களை மட்டுமே பெற்றிருந்தார், இது அந்தத் தொடரின் இரண்டாவது மோசமான ஓட்ட எண்ணிக்கை. பாகிஸ்தானின் இன்சமாம் உல் ஹாக் மகேலவை விட குறைவான எண்ணிக்கையில் 17 ஓட்டங்களைப் பெற்றிருந்தார். மகேலவின் மீது அதிருப்தி அடைந்த இலங்கைக் கிரிக்கட், அடுத்தசாஜா தொடருக்கான குழாமில் மகேலவை இணைக்கவில்லை! இது மகேலவிற்கு மட்டுமல்ல, அவர் ரசிகர்களான எமக்கும் ஏமாற்றத்தையும் வேதனையையும் கொடுத்தது. மகேலவை பிடிக்காதவர்கள், மகேலவின் கிரிக்கட் வாழ்க்கை அஸ்தமனம் என்றே பேசிக்கொண்டனர். நாமோ மகேலவை மீண்டும் காணும் நாளுக்காக காத்துக் கொண்டிருந்தோம்.

அடுத்த தொடராக இலங்கைக்கு நியூசிலாந்து பயணம் மேற்கொண்டிருந்தது. டெஸ்ட் போட்டிகளுக்கு முன்னதாக பயிற்சிப் போட்டியில் நியூசிலாந்துடன் ஆடும் இலங்கை 'கிரிக்கட்சபை அணி' அறிவிக்கப்பட்டது, அதில் மகேலவின் பெயரும் இடம்பெற்றிருந்தது. கூடவே நீண்ட நாட்களாக அணியில் இல்லாதிருந்த களுவிதாரணவின் பெயரும் இடம்பெற்றிருந்தது. அந்த நேரத்தில் நான் கொழும்பில் ஒர் அமைச்சில் பணியாற்றிக் கொண்டிருந்தேன், குறிப்பிட்ட பயிற்சிப் போட்டியன்று வேலைக்கு போக்குக் காட்டிவிட்டு, நண்பன் ஒருவனை வலிந்து அழைத்துக்கொண்டு, போட்டி நடைபெறும் NCC மைதானத்திற்கு சென்றோம், முழுக்க முழுக்க மகேலவிற்காக!

எமது ராசி நன்றாக இருந்திருக்கவேண்டும், ஏனெனில் இலங்கைதான் துடுபெடுத்தாட ஆரம்பித்திருந்தது. ரசல் ஆர்னோல்ட், டில்ஷான் என பிரபல வீரர்கள் ஆட்டமிழக்க, 4 ஆம் இலக்கத்தில் மகேல களமிறங்கினார். எனக்கு பயங்கரமான பதட்டம்! ஷேன் பொண்ட், ஜேகப் ஒராம் வீசிய வேகங்களுக்கு மகேல தடுத்தாடிய அவரது விருப்பத்துக்குரிய Forward Defense பார்ப்பதற்கு அற்புதமாக இருந்தது.

வைஸ்மனின் ஓவர் ஒன்றில் காலியாக இருந்த மிட் விக்கட் திசையை குறிவைத்த மகேலவின் முயற்சி பலனளிக்க, அங்கு அற்புதமான இனிங்க்ஸ் ஒன்று என் கண்களுக்கு முன்னால் நிகழ்ந்தேறியது. திருப்திகரமான சதம் ஒன்றை மகேல நிறைவு செய்துவிட்டு ஆட்டமிழந்தார். அன்றைய எல்லையற்ற என் மகிழ்ச்சி 10 ஆண்டுகள் கழித்து இப்போதும் உணரக்கூடியது, அந்தப்போட்டியில் 57 ஓட்டங்கள் பெற்று, மகேலவுடன் டெஸ்ட் அணியில் களுவிதாரண இடம்பிடித்தது மகிழ்ச்சியை இரட்டிப்பாக்கியது.

முதல் டெஸ்ட் போட்டி சரவணமுத்து மைதானத்தில் இடம்பெறவிருந்தது. முதலில் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து 515 ஓட்டங்களை குவித்திருந்தது. மூன்றாம்நாள் ஆட்டத்தைக் காண மைதானம் செல்ல முடிவெடுத்திருந்தேன், மைதானம் செல்ல பம்பலப்பிட்டியில் இருந்து 154 இலக்க பேரூந்தில் சென்று, பொரளை சந்தியிலிருந்து அடுத்த நிறுத்தத்தில் இறங்கி, முன்னால் உள்ள சிறிய வீதியில் செல்ல ஆட்டோவுக்கு 40 ரூபா கொடுத்தால் போதும், 40 ரூபாயை மிச்சப்படுத்த சில சமயம் நடத்தும் சென்றிருக்கிறோம்!அன்றையதினம் துடுப்பாட்டத்தில் இலங்கையும் நன்றாக ஆடியது, எதிர்பார்க்கப்பட்ட மகேலவும் களுவிதாரணவும் அரைச்சதம் கடந்தனர். போட்டி நிறைவடையும் நேரம் நெருங்க மழையும் ஆரம்பித்தது, அதிகமாக மைதானத்தில் தூங்கும் ஹஷான் திலகரட்ன; சதமடித்த பின்னர் வேகமாக ஓட்டங்குவிக்க, மைதானம் ஆரவார நிலையில் இருக்கும்போதே அன்றைய நாள் முடிவடைந்தது! மகேல ஓட்டங்களை குவித்ததால் மீண்டும் அணியில் தொடர்ந்து ஆடுவார் என்கின்ற நம்பிக்கையான மகிழ்ச்சியில் அந்தநாள் நிறைவடைந்தது.

அப்படியே ஆண்டுகள் நகர்ந்தன மகேலவின் துடுப்பாட்ட வரைபடம் சராசரியாக நகர்ந்துகொண்டிருந்தது. 2006 ஆம் ஆண்டு அணித்தலைவர் அத்தப்பத்துவிற்கு ஏற்பட்ட உபாதை காரணமாக மகேல தற்காலிக தலைவராக பங்களாதேஷ், பாகிஸ்தான் தொடர்களில் கடமையாற்றினார். பாகிஸ்தானுடனான சொந்தநாட்டு தொடர் தோல்வியில் முடிந்தாலும்; அடுத்ததாக இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட, அத்தப்பத்து இல்லாத இலங்கை அணிக்கு மீண்டும் மகேலவே பதில் தலைவராக அனுப்பிவைக்கப்பட்டார்.

மகேலவின் மட்டுமல்ல, இலங்கைக் கிரிக்கட்டின் எதிர்காலமும் இந்தத் தொடரில் தீர்மானிக்கப்பட்டது. 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை சமப்படுத்திய மகேல தலைமையிலான இலங்கை அணி; ஒரே T/20 போட்டியையும் வென்று, ஒருநாள் தொடரில் 5:0 என மிகப்பெரும் வெற்றி பெற்று இங்கிலாந்தை சொந்தமண்ணில் திணறச் செய்திருந்தது. டெஸ்ட் போட்டிகளில் ஒரு சதமும், ஒருநாள் போட்டிகளில் இரு சதமும் என மகேலவால் இந்தத் தொடரில் மூன்று சதங்கள் குவிக்கப்பட்டன. தொடர்ந்து ஹொலண்டுடனான ஒருநாள் தொடரின் ஓர் போட்டியில், ஒருநாள் போட்டிகளின் அதிகபட்ச ஒட்டமான 443 ஓட்டங்கள் இலங்கையால் குவிக்கப்பட்டது. பின்னர் 2007 இல் இடம்பெற்ற T/20 உலகக் கிண்ணப் போட்டிகளில் சாதனை ஓட்டங்களான 260 ஓட்டங்களையும் மகேல தலைமையிலான இலங்கை அணி குவித்திருந்தது. டெஸ்ட் கிரிக்கட்டின் அதிகூடிய ஓட்டமான 952 ஓட்டங்களை இலங்கை குவித்த போட்டிதான் மகேலவின் முதற் போட்டி என்பது கூடுதல் சிறப்பு.

அடுத்து இலங்கையில் இடம்பெற்ற தென்னாபிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடர் மகேலவிற்கு மறக்கமுடியாத மற்றுமொரு தொடர். இரு போட்டிகளைக் கொண்ட இந்த தொடரின் இரண்டு போட்டிகளும் மகேலவிற்கு சிறப்பான போட்டிகள். முதற் போட்டியில் சங்கக்காரவுடன் இணைந்து தென்னாபிரிக்க அணியின் முன்னணி பந்துவீச்சாளர்களான போலக், நிட்டினி, ஸ்டெயின் போன்றோரை திணறடித்து 624 ஓட்டங்களை இணைப்பாகமாக பெற்று உலகசாதனை படைத்தனர். இந்த போட்டியில் மகேல குவித்த 374 ஓட்டங்கள், ஆசியாவின் தனிமனித சாதனை எண்ணிக்கை, வலது கை வீரர் ஒருவர் பெற்ற அதிகபட்ச ஓட்டமும் இதுதான். என்னைப் பொறுத்தவரை இந்தப் போட்டியிலும் மின்சாரம் விளையாடியிருந்தது, 3 ஆம் நாள் ஆட்டத்தன்று எமது பகுதிக்கு பவர் கட். அக்கா ஒருவரின் வீட்டில் போட்டியை பார்க்க சென்றிருந்தேன், மகேல 370 ஓட்டங்களுக்குள் நுழைந்த நேரம் அங்கும் மின்தடை ஏற்பட்டது, பதட்டத்துடன் காத்திருந்த எனக்கு 10 நிமிடங்களில் மின்கலம் ஒளிர்ந்து மகிழ்ச்சியை ஏற்படுத்தியது, தொலைக்காட்சி திரை தோன்றும் அந்தக் கணம்வரை பரபரப்பு! ஆனால் அங்கே திரையில் மகேல ஆட்டமிழந்து வெளியேறிக் கொண்டிருந்தார்.

374 ஓட்டங்கள், தூக்குவாரிப்போட்டது, மிகப்பெரும் ஏமாற்றம், அன்ட்ரே நெல் வீசிய புதிய பந்தினாலான இன்ஸ்விங் பந்தொன்று மகேலவின் மட்டைக்கும் காலுக்கும் இடையிலான இடைவெளியில் புகுந்திருந்தது. "அட இன்னும் ஓர் ஓட்டம் எடுத்திருந்தால் லாராவின் 375, ஆறு ஓட்டம் எடுத்திருந்தால் ஹெய்டனின் 380" என அடுத்தடுத்த சில நாட்களுக்கு வெறுவாய் மென்று கொண்டிருந்தோம். ஆனாலும் மகேலவின் தனித்துவமான ஷொட்டான inside out பற்றி பேசி பெருமைப்பட்டுக்கொண்டும் இருந்தோம். மகேல அடிப்பது நான்கோ, ஆறோ; அவர் எதிர்முனையில் இருக்கும் கிரீஸ்வரை சென்று கிரீசை தொட்டுவிட்டுத்தான் திரும்புவார், இதை அவர் ஒரு அதிஷ்டமாக நினைப்பவர். எமக்கும் சில அதிஷ்டங்களை நம்பும் குணம் உண்டு! மகேல ஆடிக்கொண்டிருக்கும்போது என் தம்பி சோபாவில் இருந்து ஒரு கதிரைமேல் காலைப் போட்டுக்கொண்டிருப்பான், இடியே விழுந்தாலும் மகேல ஆட்டமிளக்கும்வரை .எழும்பவே மாட்டான். தொலைக்காட்சி சத்தம் மகேல நிற்கும்வரை 27 இல் இருக்கும், மின்சாரம் தடைப்பட்டால் மீண்டும் மின்சாரம் வரும்போது மகேல மைதானத்தில் ஆடிக்கொண்டிருக்க மாட்டார், என பல நம்பிக்கைகள். மகேலாவை ரசித்தோம் என்று சொல்ல முடியாது, தீவிரமாக காதலித்தோம்!
தென்னாபிரிக்காவுடனான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை வெற்றி பெற நான்காவது இனிங்ஸில் 352 ஓட்டங்களை இலங்கை பெற்றாக வேண்டும், இலங்கை ஆடுகளங்களில் நான்காம் ஐந்தாம் நாட்களில் இந்த ஓட்டங்களை பெறுவதென்பது மிகவும் கடினமான விடயம். சனத் கொடுத்த தொடக்கத்தை பயன்படுத்தி மகேல தனித்து நின்று போராடி 123 ஓட்டங்களைப் பெற்று, வெற்றிக்கு மேலும் 10 ஓட்டங்கள் மட்டுமே தேவையானபோது ஆட்டமிழந்தார், இறுதியில் இலங்கை 1 விக்கட்டினால் போட்டியையும், தொடரையும் கைப்பற்றியது! மகேலாவினது மட்டுமல்ல; இலங்கை வீரர் ஒருவர் பெற்ற மிகச்சிறந்த டெஸ்ட் சதமும் இதுவென்பேன்!

இங்கிலாந்து, மற்றும் இலங்கையில் தென்னாபிரிக்காவுடனான தொடர் வெற்றிக்கு பின்னர் இலங்கைக் கிரிக்கட் மகேலவே தொடர்ந்தும் தலைமைப்பதவி வகிக்க விரும்பியது. அடுத்த சாம்பியன்ஸ் ட்ரோபி, நியூசிலாந்துடனான ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடர்கள், இந்தியாவுடனான ஒருநாள் தொடர் போன்றவற்றிற்கு மகேலவே தலைமை தாங்கினார். ஆனால் மகேலவின் ஓட்டக்குவிப்பு மீண்டும் மோசமான நிலைக்கு சென்றுகொண்டிருந்தது. பெரியளவிலான ஓட்டங்கள் எவையும் மகேலவிடமிருந்து கிடைக்கவில்லை. இந்நிலையில் 2007 உலகக் கிண்ணப் போட்டிக்கான அணித் தலைவராக மகேலவையே இலங்கைக் கிரிக்கட் தேர்வு செய்திருந்தது. ஏற்கனவே 2003 உலகக்கிண்ணம் மகேலவிற்கு கொடுத்த அனுபவம் மறக்கப்படாமலிருக்க, 2007 உலகக் கிண்ணப் போட்டிகளில் இலங்கை ஆடத்தொடங்கியது. தனது அனைத்து விமர்சனங்களுக்கும் முற்றுப்புள்ளி வைத்த மகேல; அந்தத் தொடரில் அரையிறுதியில் பெற்ற அற்புதமான சதத்துடன் மொத்தமாக 548 ஓட்டங்களைக் குவித்து இலங்கையை இறுதிப் போட்டிவரை அழைத்துச் சென்றிருந்தார்.

2003 உலகக் கிண்ணப் போட்டித்தொடரில் இரண்டாவது மோசமான ஓட்டம் பெற்றிருந்த மகேல; இம்முறை இரண்டாவது அதிகபட்ச ஓட்டங்கள் குவித்த வீரர் என்கின்ற பெருமையைப் பெற்றார். இதுதான் போராட்ட குணம் மிக்க மகேலாவின் வெற்றி! அரையிறுதியில் நியூசிலாந்துக்கு எதிராக மகேல பெற்ற சதம் மறக்க முடியாத சதங்களில் ஒன்று. மிகுந்த பதட்டத்துடன் போட்டியை காணக் காத்திருந்த எங்களுக்கு சனத், சங்கா ஏமாற்றமளிக்க, நான்காம் இலக்கத்தில் மகேல களமிறங்கினார். உப்பில் தரங்க சற்று வேகமாக ஓட்டமெடுக்க, மறுமுனையில் நிதானமாக ஆடிய மகேல, அற்புதமான ஒரு நீண்ட இனிங்ஸ்சிற்கு தயாராகிக்கொண்டிருந்தார். நிதானமாக ஓட்டங்களைக் சேர்த்துக் கொண்டிருந்த மகேல இறுதி 5 ஓவர்களில் அதிரடியாக ஆடி ஆட்டமிளக்காமல் 115 ஓட்டங்களைக் குவித்தார். முக்கிய போட்டிகளில் நிலைத்து நின்று பொறுப்போடு ஆடும் மகேலாவின் போராட்டம் மிக்க இனிங்ஸ்களில் இதுவும் ஒன்று! அரையிறுதியில் பெற்ற வெற்றிக் கொண்டாட்டங்களை; இறுதிப்போட்டி புஸ்வானமாக்கிப்போனது. அடம் கில்கிறிஸ்டின் தனிமனித தாக்குதலை இலங்கையால் கட்டுப்படுத்த முடியாமல் போனதுதான்; உலகக் கிண்ண இறுதிப் போட்டித் தோல்விக்கும்,இலங்கையின் உலகக் கிண்ணம் மீதான கனவை மீண்டும் தள்ளிபோடவும் காரணமாயிற்று!

2007 உலகக் கிண்ணப் போட்டிகளின் பின்னர் பெரிதளவில் வெற்றிகளை இலங்கையால் பெற்றுக்கொள்ள முடியவில்லை. 2007 இன் T/20 உலககிண்ண வெளியேற்றம், இந்தியாவுடனான உள்நாட்டு ஒருநாள் போட்டித்தொடர் தோல்வி என்பன மகேலவை தலைமைப் பதவியில் இருந்து ராஜினாமா செய்ய காரணமாயிற்று. ஒரு தலைவராக மகேல கவர்ந்தளவிற்கு வேறெவரும் என்னைக் கவரவில்லை. இறுதிவரை போராடும் குணம், வீரர்களை ஒருங்கிணைக்கும் வல்லமை, பொறுப்பை தோளில் சுமக்கும் இயல்பு, புதுமையான திட்டங்கள், எதிரணி வீரர்களுக்கு ஏற்ப களத்தடுப்பு வியூகம், பந்துவீச்சாளர்களை பயன்படுத்தும் விதம் என மகேல ஒரு அணித்தலைவராக தன்னை வெளிக்காட்டினார்.

2006 இங்கிலாந்து மண்ணில் பீட்டர்சனுக்கு அமைத்த வியூகங்கள் பெரும்பாலும் வெற்றியைக் கொடுத்திருந்தன. 2007 உலகக் கிண்ணத்தில் ஒரு சிறப்பான தலைமைத்துவத்தை இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் மகேல வெளிக்காட்டியிருப்பார். 235 ஓட்டங்களுக்குள் இங்கிலாந்தைக் கட்டுப்படுத்த வேண்டிய நிலையில் 15 ஓவர்களில் இரண்டு விக்கட்டுகளை இழந்து இங்கிலாந்து 69 ஓட்டங்களைப் பெற்றிருந்த நிலையில்; எந்த அணித்தலைவரும் போலிங் பவர்பிளேயை எடுத்துக் கொள்வது சாதாரணம். ஆனால் மகேல பவர் பிளேயை எடுத்துக்கொள்ளாமல் தனது பகுதிநேரப் பந்துவீச்சாளர்களை பயன்படுத்த தொடங்கினார். ஜெயசூர்யா, டில்ஷான் இருவரும் வீசிய ஓவர்களில் தங்கள் விக்கட்டை இழக்காமல் நிதானமாக ஆடிய இங்கிலாந்து; 29 ஆவது ஓவரின் பின்னர் ஆரம்பிக்கப்பட்ட போலிங் பவர்பிளே ஓவர்களில் பலமான முரளியையும், மலிங்கவையும் எதிர்கொண்டு விக்கட்டுகளை இழக்க ஆரம்பித்தது, மகேலவின் திட்டம் எதிர்பார்த்ததுபோல் வெற்றியைக் கொடுத்தது. போட்டியை இங்கிலாந்தின் பின் மத்தியவரிசை வீரர்களான நிக்சனும், போப்பராவும் இறுதிவரை விறுவிறுப்பாக்கினாலும், இறுதியில் இலங்கை இரண்டு ஓட்டங்களால் போராடி வெற்றி பெற்றது!தமது அணி குறைந்த ஓட்டங்களை பெற்றிருப்பினும் இறுதிவரை போராடி வெற்றி பெற செய்வதில் மகேல கில்லாடி, வெற்றி கிடைக்காதவிடத்து கௌரவமான தோல்வியாவது மிஞ்சும். மகேலவின் தலைமைத்துவத்தின் சிறப்பை பெரும்பாலான கிரிக்கட் விற்பன்னர்கள் உணர்ந்திருந்தனர். 2007 உலகக் கிண்ண போட்டித்தொடரை அடுத்து, ஆசிய அணிக்கும் ஆபிரிக்க அணிக்குமான போட்டித் தொடரிலும் மகேல தலைமை ஏற்று தொடரை 3:0 என வென்று கொடுத்ததோடு, தொடரின் நாயகன் விருதையும் வென்றிருந்தார். மூன்றாவது போட்டியில் இந்திய நட்சத்திரம் டோனியுடன் இணைந்து ஆறாவது விக்கட்டுக்காக பெற்றுக்கொண்ட 218 ஓட்ட இணைப்பாட்டம் இன்றுவரை சாதனையாக உள்ளது. 2008 ஆசியக் கிண்ணப் போட்டிகளில் லீக் போட்டிகளில் இந்தியாவுடன் ஆடவிடால் வைத்திருந்துவிட்டு இறுதிப் போட்டியில் அஜந்த மெண்டிசை துரும்பு சீட்டாக பாவித்து, இலங்கைக்கு கிண்ணத்தைப் பெற்றுக் கொடுத்திருந்தார். பஞ்சாப், கொச்சி, டெல்லி என மகேல விளையாடிய மூன்று IPL அணிகளும் மகேலவின் தலைமைமீது நம்பிக்கை கொண்டு அவரை அணித் தலைவராக்கியிருந்தன!

தலைவராக மட்டுமல்ல ஒரு சிறந்த பண்பை வெளிப்படுத்தும் வீரராக மகேல தன்னை மைதானத்தில்;வெளிக்காட்டிருப்பார். 2007 உலக கிண்ணப் போட்டியின் இறுதிப் போட்டியில் இலங்கை;எட்டு விக்கட்டுகளை இழந்து மூன்று ஓவர்களில் மீதமிருக்க;தோல்வியின் விளம்பில் இருந்தது. ஆனால் மைதானத்தில் இருள் குழுமியிருந்தது, பந்து தெரியத அளவுக்கு இருள் சூழ்ந்துவிட்டது. நடுவராக இருந்த அலீம் டார் மிகுதி மூன்று ஓவர்களையும் மறுநாள் வைத்துக்கொள்ளாம் என முடிவெடுக்கிறார். கொண்டாட்ட மனநிலையில் இருந்த அவுஸ்திரேலியர்களுக்கு இது பேரதிர்ச்சியாக இருந்தது. அந்தநேரம் மைதானத்துள் வந்த இலங்கை தலைவர் மகேல, அணி வீரர்களிடம் கலந்து பேசி மீதி;மூன்று ஓவர்களையும் இலங்கை விளையாட பணித்தார், மிதமான வேகத்தில் மிகுதி மூன்று ஓவர்களும் பந்துவீச இலங்கை தோல்வியடைந்தது.

ஒரு வீரராக களத்தில் தன்னை;கனவானாக வெளிப்படுத்தும் மகேல; களத்துக்கு வெளியேயும் மிகச்சிறந்த சேவைகளை ஆற்றி வருபவர். சிறுவயதில் தனது ஆருயிர் தம்பியை புற்றுநோய்க்கு பறிகொடுத்த மகேல, நீண்ட நாட்களுக்கு அதனிலிருந்து மீள கஷ்டப்பட்டவர். தனக்கு வந்த துன்பத்தை அப்படியே விட்டுவிடாம்ல், தனது முயற்சியால் Hope Cancer Project க்கு பெரும் பங்களிப்பார்றினார். அத்தப்பத்து தலைமை ஏற்ற காலத்தில் இருந்து தமக்கு (சங்ககாரவும்) கிடைக்கும் ஆட்ட நாயகன், ஆட்டத் தொடர் நாயகன் விருதுக்கான பணத்தொகையை மருத்துவத்திற்கு தேவையானவர்களுக்கு அமைப்பு மூலமாக வழங்கிவருகின்றார்கள். எலோருடனும் சகஜமாக பேசக்கூடிய மகேலவின் பத்திரிக்கையாளர் சந்திப்பு பிரமிப்பாக இருக்கும். தனது அணியை, அணித்தேர்வை, வீரர்களை விட்டுக்கொடுக்காமல் பேசும் மகேல, அதனை பத்திரிகையாளர்கள் பகைத்துக்கொள்ளாமல் புரிந்துகொள்ளும்படி சொல்வதில் கில்லாடி. போட்டி வெற்றியோ தோல்வியோ, மகேலாவின் ஒவ்வொரு பத்திரிகையாளர் சந்திப்பும் அருமையாக இருக்கும்.

மகேலாவின் தலைமைப் பதவி ராஜினாமாவின் பின்னர் இலங்கையின் அடுத்த தலைவராக சங்ககார பொறுப்பேற்க; இலங்கை அணி மீண்டும் சராசரியாக சென்றுகொண்டிருந்தது. 2010 ஆம் ஆண்டு இடம்பெற்ற T/20 உலகக் கிண்ணப் போட்டித் தொடரில்; தனக்கு பிடித்தமான மேற்கிந்திய ஆடுகளங்களில், தொடர்ச்சியாக குறைந்த பந்துகளில் 81,100,98* ஓட்டங்களைக் குவித்த மகேல தன்னை T /20 போட்டிகளிலும் ஆடும் திறன் படைத்தவர் என்பதனை நிரூபித்தார். அடுத்த தடவை இடம்பெற்ற IPL வீரர்களுக்கான ஏலத்தில் அதிக விலைக்கு விற்கப்பட்ட வெளிநாட்டு வீரர் என்கின்ற பெருமையையும் மகேல பெற்றார்.

அடுத்து 2011 ஆம் ஆண்டு ஒருநாள் போட்டிகளுக்கான உலகக் கிண்ணதொடர் ஆரம்பிக்கவிருந்தது. இலங்கை அணியும் அறிவிக்கப்பட்டது, அதில் மகேல அணியின் உபதலைவர். தனக்கு கீழே உபதலைவராக இருந்தவரின் தலைமையின் கீழ், தான் உபதலைவராக இருக்க இலகுவில் எந்த பெயர் பெற்ற வீரரும் சம்மதிக்க மாட்டார்கள்! ஆனால் மகேல சம்மதித்தார், காரணம் அவர் ஒரு அணிக்கான வீரனாகவே தன்னை எப்போதும் எண்ணியிருந்தார். அதனால்தான் ஒருநாள் போட்டிகளில் தனது துடுப்பாட்ட வரிசை இலக்கத்தை அணியின் தேவைக்கு ஏற்ப மேல்நோக்கியும் கீழ்நோக்கியும் மாற்றி மாற்றி ஆடிக்கொடுத்தார், கொடுத்துக்கொண்டிருக்கிறார். டெஸ்ட் போட்டிகளில் அரவிந்தவின் ஓய்வால் வெற்றிடமான; டெஸ்ட் கிரிக்கட்டின் நங்கூரமான நான்காம் இலக்கத்தை ஸ்திரப்படுத்துவதற்காக தனது மூன்றாம் இலக்கத்தை இழந்திருந்தார்.

2011 உலகக் கிண்ணத்தை நோக்கி சங்கா தலைமையில் இலங்கை அணி தயாராகியிருந்தது. மிகச்சிறப்பாக ஆடிக்கொண்டிருந்த இலங்கை இறுதிப்போட்டிவரை முன்னேறியது. அடுத்தடுத்த இரண்டு உலகக் கிண்ணங்களில் இறுதிப்போட்டிக்கு தெரிவான இலங்கைக்கு, இம்முறையும் பெருத்த ஏமாற்றமே காத்திருந்தது. இந்திய அணியால் அவர்களது சொந்த மைதானத்தில் வைத்து இலங்கையின் கனவு மீண்டும் தகர்க்கப்பட்டது. ஆனால் அந்தப் போட்டியில் மகேல பெற்ற சதம் அந்தப் போட்டியை காணுற்ற ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்தது. மிக முக்கியமான, அழுத்தம் நிறைந்த போட்டியொன்றில் எத்தனை அழகாக தனது இனிங்ஸ்சை மகேல கொண்டு சென்றார்! மகேலவின் அற்புதமான இனிங்ஸால், இந்திய மைதானம் மூச்சிழந்து காணப்பட்டது! ஆனால் போட்டி முடிவு என்னவோ எம்மை மூர்ச்சையாக்கியிருந்தது :-(


2011 உலகக் கிண்ண இறுதிப் போட்டித் தோல்வியின் எதிரொலியாக சங்ககார தலைமைப் பதவியை ராஜினாமா செய்ய, மகேலவும் தனது உப தவைவர் பதவியை ராஜினாமா செய்தார். அடுத்த தலைவராக டில்ஷான் இலங்கைக் கிரிக்கட்டினால் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார். ஆனால் டில்ஷான் தலைமையில் இலங்கை தடுமாறிக்கொண்டிருந்தது, இந்நிலையில் மீண்டும் புதிய தலைவரை தேர்ந்தெடுக்க இலங்கைக் கிரிக்கட் விரும்பினாலும், யாரை தேர்ந்தெடுப்பது என தடுமாறியது. மீண்டும் மகேலவிடம் கோரிக்கை வைக்கப்படாது, இம்முறை மகேல தலைமைப் பதவியை ஏற்றுக்கொண்டார்.

மகேல தலைமைப் பொறுப்பை ஏற்ற பின்னர், முதல் தொடராக அவுஸ்திரேலியாவின் கொமன்வெல்த் பாங்க் சீரிஸ் அமைந்தது. இலங்கை அவுஸ்திரேலியாவில் ஒரு முக்கோணத் தொடரில் அதுவரை அசத்தாத அளவுக்கு அசத்தியது. இந்தியா வெளியேற, அவுஸ்திரேலியாவுடன் இறுதிப்போட்டிக்கு இலங்கை தகுதிபெற்றது. தொடர் முழுவதும் அவுஸ்திரேலியாவை அடக்கி வைத்திருந்த இலங்கைக்கு முதல் இறுதிப் போட்டியிலும் வெற்றி கிடைத்தது. இரண்டாம் இறுதிப் போட்டியில் அவுஸ்திரேலியா வெற்றிபெற, மூன்றாவது இறுதிப் போட்டி எதிர்பார்ப்பை தூண்டியிருந்தது. முதலில் ஆடிய அவுஸ்திரேலியாவை குறைந்த ஓட்டங்களுக்குள் கட்டுப்படுத்திய இலங்கை வெற்றிக்கனியை எட்டுவார்கள் என எதிர்பார்த்து காத்திருந்த எமக்கு மீண்டும் ஒரு இறுதிப்போட்டி தோல்வி. இம்முறையும் உடைந்தே போய்விட்டோம். இந்தத் தொடரில் இலங்கையின் வெற்றிகள் மகேலவின் துடுப்பினாலும், தமைத்துவ சிறப்பினாலும் பெரும்பாலும் பெறப்பட்டிருந்தன. ஆரம்ப துடுப்பாட்ட வரிசையின் சீரின்மையை ஈடுசெய்ய; மத்திய வரிசையில் ஆடிவந்த மகேல, தானே ஆரம்பவீரராக களமிறங்கி சிறப்பாக ஆடி இலங்கையை வெற்றிப் பாதையில் இட்டுச்சென்றிருந்தார்.

அடுத்து சொந்தநாட்டில் இடம்பெற்ற டெஸ்ட் போட்டியில் அன்றைய பலமான இங்கிலாந்து அணியை காலி மைதானத்தில் சந்தித்த மகேலவின் இலங்கை அணி, இங்கிலாந்தை காலி செய்தது. துடுப்பாட சிரமமான மைதானத்தில் இலங்கை பெற்ற 318 ஓட்டங்களில் தனித்து நின்று ஆடி மகேல 180 ஓட்டங்களை குவித்திருந்தார். இங்கிலாந்தின் ஜிம்மி அன்டர்சன் 'தான் பார்த்த இனிங்ஸ்களில் இதுதான் மிகச்சிறந்த இனிங்க்ஸ்' என்று அப்போது புகழ்ந்திருந்தார். இரண்டாவது போட்டியில் இலங்கையின் இரண்டு இனிங்க்ஸ்களிலும் மகேல 105,64 ஓட்டங்களை மகேல பெற்றிருந்தார். தன் தலையில் பொறுப்பு இருக்கும்போதும், முக்கியமான நேரங்களிலும் பொறுமையாக கவனத்துடன் ஆடும் மகேலவின் ஆட்டத்திறன் மீண்டும் இந்தத்தொடரிலும் வெளிப்பட்டிருந்தது!

அடுத்து 2012 ல் சொந்த மண்ணில் T/20 உலககிண்ணம் ஆரம்பமாயிற்று. பலமான அணிகள் பல விளையாடினாலும், சொந்தநாட்டு மைதானம் என்பதால், இலங்கைக்கும் வாய்ப்புக்கள் காணப்பட்டன. இலங்கையின் வாய்ப்பை மகேலவின் தலைமைத்துவம் சரியான முறையில் கையாண்டது! இறுதிப்போட்டிவரை முன்னேறிய இலங்கைக்கு, இலகுவான அணியான மேற்கிந்தய தீவுகளுடன் இறுதிப் போட்டி. அதுவரை எந்த T/20 போட்டியிலும் மேற்கிந்தியாவுடன் தோற்றிருக்காத இலங்கைமீது; மிகப்பெரும் நம்பிக்கை இருந்தது.

கிரிஸ் கெயில் மீது பயம் இருந்தாலும்; கெயிலை வெளியேற்றலாம் என்கின்ற நம்பிக்கையும் பலமாக .இருந்தது. எதிர்பார்த்தது போலவே கெயில் வெளியேற, 10 ஓவர்கள் முடிவில் இலங்கையின் கைப்பிடியில் இருந்த போட்டி; சாமுவேல்ஸின் அதிரடியில் அப்படியே மாறிப்போனது. மீண்டும் இறுதிப்போட்டியில் தோல்வி, இறுதிப்போட்டிகளில் இலங்கையின் தோல்விகள் உச்சக்கட்ட எரிச்சலை ஏற்படுத்திக் கொண்டிருந்தன. எதிர்பார்த்ததுபோல் மகேலவும் பதவியை ராஜினாமா செய்தார். அதேநேரம் இந்த தொடரின் அதிக ஓட்டங்குவித்தவர்கள் பட்டியலில் மகேல இரண்டாவது இடத்தில் இருந்தார். மகேலவின் ஓய்வுக்கு பின்னர் இலங்கை டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டி அணிகளுக்கு மத்தியூசஸும், T/20 அணிக்கு சந்டிமலும் தலைவராக்கப்பட்டனர்.


டெஸ்ட் கிரிக்கட் போட்டிகளில் சிலகாலம் மகேல சதமடிக்கவில்லை என்கின்ற விமர்சனம் எழுந்தபோது; மற்றுமொரு சிறப்பான சதத்தை (129) அபுதாபியில் பாகிஸ்தானுக்கு எதிராக மகேல குவித்திருந்தார். தன்மீது விமர்சனம் வரும்போதெல்லாம் முக்கியமான போட்டியொன்றில் தன்னை நிரூபித்து அணியை வெற்றிப் பாதையில் அழைத்துச் செல்வது மகேலவின் பாணி. டெஸ்ட் கிரிக்கட்டைப் போலவே ஒருநாள் போட்டிகளிலும் சில போட்டிகளில் பெரிதளவில் சோபிக்காத மகேல; தன்மீதான விமர்சனங்களுக்கு இவ்வாண்டு இடம்பெற்ற ஆசியக் கிண்ணத்தின் இறுதிப்போட்டியில் பதிலளித்தார். இக்கட்டான நேரத்தில் 75 ஓட்டங்களைக் குவித்து இலங்கையின் கிண்ண வெற்றிக்கு முக்கிய காரணமானார். தொடர்ந்து இங்கிலாந்துடனான ஒருநாள் தொடரின் வெற்றியை தீர்மானிக்கும் ஐந்தாவது போட்டியிலும்; மகேலவின் அரைச்சதத்தின் பங்களிப்பு இலங்கைக்கு வெற்றியை பெற்றுக் கொடுத்தது. மகேல தன்னை முக்கிய/பெரிய போட்டிகளில் ஓட்டங்குவிக்கும் வீரராக தொடர்ந்தும் முன்னிறுத்திக் கொண்டிருந்தார்.


2014 - T/20 போட்டிகள் ஆரம்பிக்க இருந்த நிலையில்; உலகக் கிண்ணத்துடன் T/20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெறப்போவதாக மகேலவும் சங்காவும் அறிவித்தனர். இம்முறை T/20 போட்டிகளில் இலங்கை கிண்ணத்தை வெல்லும் என்கின்ற எதிர்பார்ப்பு குறைந்தளவே காணப்பட்டது. மலிங்க தவிர்த்து T/20 போட்டிகளுக்கான விசேட வீரர்கள் இல்லாத நிலையிலும் இலங்கை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திக் கொண்டிருந்தது. அரையிறுதிக்கு தகுதிபெற்ற இலங்கை, கடந்த உலகக்கிண்ண இறுதிப் போட்டியில் தோல்வியைக் கொடுத்த மேற்கிந்திய தீவுகளுடன் மோதும் நிலை ஏற்பட்டது. பழிதீர்க்கும் ஆட்டமாக அமைந்த இந்தப் போட்டியில் அணித்தலைவர் சந்திமல் நீக்கப்பட்டு, மலிங்க தலைமை தங்கினார்.

முதலில் துடுப்பெடுத்தாடி 160 ஓட்டங்கள் குவித்த இலங்கையின் இலக்கை எட்ட எத்தனித்த மேற்கிந்தியாவை வெறும் 80 ஓட்டங்களுக்குள் இலங்கை சுருட்டியது. பெயருக்கு மலிங்க முன்னிற்க மகேலவே பின்னின்று அணியை வழிநடத்தினார். மீண்டும் மகேலவை தலைவராக ரசித்த திருப்தி கிடைத்தது. அடுத்து இறுதிப் போட்டி இந்தியாவுடன், எப்படியும் இலங்கைக்கு தோல்விதான் எண்ணத்திலேயே போட்டியை பார்க்க ஆரம்பித்தாலும், மனதில் வெற்றிக்கான அவா அழுத்தத்தைக் கொடுத்துக்கொண்டிருந்தது. இறுதி ஓவர்களில் இலங்கையின் வேகங்கள் கொடுத்த சவாலில், இந்தியாவின் அதிரடி மன்னர்களான யுவராஜ், டோனி, கோலி போன்றோரால் ஓட்டங்களைக் குவிக்க முடியாமல் போக; இலங்கை இந்தியாவை 130 ஓட்டங்களில் மட்டுப்படுத்தியது. துடுப்பாட்டத்திற்கு சாதகமான மைதானத்தில் 131 என்னும் இலக்கை, சங்காவின் அரைச்சதத்துடன் இலங்கை இலகுவாக எட்டியது. இலங்கை 2014 ஆம் ஆண்டின் T/20 சாம்பியன் - நம்ப முடியவில்லை, நாம் இறுதிப் போட்டியில் இறுதியாக வென்றே விட்டோம்!!!! மகேலவுக்கும் சங்காவுக்கும் மிகச்சிறந்த பிரியாவிடை இலங்கை அணியால் வழங்கப்பட்டது.

சில நாட்களின் பின்னர் இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்ட இலங்கை அணி அங்கு ஒருநாள் தொடர் மற்றும் டெஸ்ட் தொடர்களில் பெற்ற வெற்றியை தொடர்ந்து, மகேல தனது டெஸ்ட் கிரிக்கட் போட்டிகளின் ஓய்வு தினத்தை அறிவித்தார். சற்று அதிர்ச்சியாக இருந்தாலும், மிகச்சரியான முடிவு. இலங்கை மண்ணில் அடுத்து விளையாடும் தென்னாபிரிக்கா, பாகிஸ்தான் அணிகளுடனான தலா இரண்டு போட்டிகள் கொண்ட தொடர்களுடன் சொந்தமண்ணில் ஓய்வு பெறுவது என்பது மகேலவின் அறிவிப்பு. பெரும் பெரும் ஜாம்பவான்களெல்லாம் வயது அதிகரித்து, ஓட்டக்குவிப்பு நலிவடைந்த நிலையில் 'எப்படா போவாங்க' என கிரிக்கட் ரசிகர்களும், கிரிக்கட் சபைகளும் காத்திருந்த நிலையை மகேல தனக்கும் ஏற்படுத்திக்கொள்ள விரும்பவில்லை. நல்ல நிலையில் இருக்கும்போதே தனது ஓய்வை அறிவித்திருந்தார் மகேல, அதிலும் சொந்த நாடு, சொந்த மக்களுக்கு முன்னிலையில்!

ஓய்வை அறிவித்தபின்னர் தென்னாபிரிக்காவுடனான இரண்டாவது போட்டியில் 160 ஓட்டங்களையும், பாகிஸ்தானுடனான இறுதி இரு போட்டிகளிலும் தலா ஒரு அரைச்சதத்தையும் மகேல பெற்றிருந்தார். அதிலும் தனது இறுதி இனிங்க்சில் 54 ஓட்டங்களைப் பெற்றதுடன், தனது நண்பனும், டெஸ்ட் கிரிக்கட்டில் இணைப்பாட்ட சாதனைக்கு பங்குதாரருமான சங்காவுடன் இணைந்து 19 ஆவது தடவையாக 100 ஓட்டங்களுக்கு மேல் இணைப்பாட்டமாக பெற்றிருந்தார். முன்னதாக காலியில் மகேலவின் இறுதி இனிங்க்ஸ், பொழுது சாயும் நேரம், நன்றாக இருட்ட ஆரம்பித்துவிட்டது, மழை எந்நேரத்திலும் வரலாம் என்னும் நிலையில்; ஆட்டமிழந்த மகேல, அன்று தனக்காக திரண்டிருந்த ஆயிரக்கணக்கான ரசிகர்களுக்கும் தனது துடுப்பை காட்டி பிரியாவிடை பெறாது, வேகமாக ஓடிச்சென்று அடுத்த வீரருக்கு வழி விட்டார். இப்போட்டியில் இலங்கை வெற்றிபெற்று அடுத்த சில செக்கன்களில்; மழை சோவெனப் பொழிய ஆரம்பித்தது குறிப்பிடத்தக்கது. தனது இறுதி இரு போட்டிகளிலும் அணியின் வெற்றிக்கான தனது பங்களிப்பை மகேல வழங்கியிருக்கிறார். தனது சொந்த நாட்டில், சொந்த மைதானத்தில், ஆயிரக்கணக்கான ரசிகர்கள் முன்னிலையில், இறுதிப் போட்டி மற்றும் தொடர் வெற்றிபெற்ற மகிழ்வுடன் மகேல ஓய்வு பெற்றுக்கொண்டார். அற்புதமான பிரிவுபசாரம் ஒன்றை மகேல பெற்றிருந்தார், இது இலங்கையின் எந்த ஜாம்பவானுக்கும் வாய்த்திராத கொடை - சாதனையாளர்!

இலங்கை டெஸ்ட் அணியில் இனிமேல்.......

விபரம் தெரிந்த நாள் முதல் ரசித்துவந்த 69 ஆம் இலக்க ஜேர்சியை இனிமேல் காண இயலாது!

ஸ்கோர் போட்டில் 2 விக்கட்டுக்கு பின்னர், விக்கட் எண்ணிக்கை மாறாமல் இருக்க, ஓட்ட எண்ணிக்கை மட்டும் கிடுகிடுவென உயரும்போது; மைதானத்தின் நடுவே உணர்ச்சி பூர்வமாக தன் நண்பனை ஆரத்தழுவும் ஒரு உணர்ச்சிமிக்க வீரனை காண இயலாது!

புதிய இளம் வீரருடன் ஆடும்போது, ஒரு தந்தை தன் பிள்ளையை வழி நடத்துவதுபோல, கற்றுக்கொடுக்கும் ஆசானைக் காண இயலாது!

எவர் தலைவராக இருப்பினும், எந்தவித ஈகோவும் இல்லாமல்; இக்கட்டான நேரங்களில் தானே முன்வந்து ஆலோசனை சொல்லி வழிநடத்தும் தலைவனைக் காண இயலாது!

முதலாவது சிலிப்சில் பிடியை பிடித்துக்கொண்டு இடது கையை மடக்கி அசைத்தபடி சிங்கமென கர்ஜித்தபடி ஓடும் இளைஞனைக் காண இயலாது!

ஒவ்வொரு போட்டியிலும் அணியின் பொசிட்டிவ் எனர்ஜியாக இருந்து, இறுதிவரை அணியில் ஸ்திரத்தை குறையவிடாமல் வைத்திருக்கும் ஒரு சிறந்த அணி வீரனை இனி காண முடியாது!

ஆனால்....... அவன் விட்டுச்சென்ற நினைவுகளும், கொடுத்த அனுபவமும் வார்த்தைகளுக்கு அப்பாற்பட்டது! என்றும் நிலைத்திருக்கக்கூடியது

நிச்சயமாக மகேல ஒரு ஓட்டங் குவிக்கும் இயந்திரம் அல்ல, மகேலவின் ஓட்டக்குவிப்பு எப்போதும் தொடர்ச்சியாக இருந்ததுமில்லை; ஆனால் முக்கியமான போட்டிகளில், இக்கட்டான நேரங்களில் தன் கையைத் தூக்கி முன்வந்து போட்டியை வென்று கொடுக்கும் மகேல வரலாற்றின் ஒர் வெற்றியாளன்! மோசமான துடுப்பாட்ட நேரங்களில், தன்மீது விமர்சனங்கள் வரும்போதெல்லாம், அவற்றுக்கு தன் துடுப்பால் பதில் சொல்லும் ஓர் போராட்ட வீரன்!! மகேல முழுத்திறனுடன் ஆடும் இனிங்ஸ் ஒன்றின் அழகுக்கு இணையான இனிங்சை வெளிப்படுத்த வேறெந்த சமகால வீரரும் இல்லை!

Inside out, Foreword defense, Cover drive, squire drive, Late cut, cut, pull, glance, flick, down the wicket to long on & mid-wicket, sweep in font of the wicket, sweep behind the wicket, slog sweep, reverse sweep, paddle sweep, upper cut, improvisation in  behind the wicket of both side, soft hand touches, quick single in the gaps - என கிரிக்கட் ஷொட்களையும், நுணுக்கங்களையும், ஓட்டம்பெறும் முறைகளையும் நேர்த்தியுடன் பிரமிப்பாக செயற்படுத்தும் திறன்படைத்த முழுமையான துடுப்பாட்ட வீரர் மகேல!

மகேல இல்லாத இடைவெளி இலங்கை கிரிக்கட்டுக்கும், ரசிகர்களுக்கும் நிச்சயம் தாக்கத்தை ஏற்படுத்தும்! என்னைப் பொறுத்தவரை இதுவொரு மிகப்பெரும் தாக்கம். எனது 15 வயதில் உருவான பந்தமிது; பாடசாலை கல்வி, வெட்டியான காலம், அரச வேலை, தனியார் வேலை, சொந்த முயற்சி, சொந்த தொழில், திருமணம், குழந்தை என என் வாழ்க்கை ஓட்டத்துடனும், இடமாற்றங்களின் போதும், 17 ஆண்டுகளாக என்கூடவே பயணித்த மகிழ்ச்சியான பந்தம் இது! அற்புதமான நினைவலைகளை விட்டுச்சென்ற, வாழ்வின் இறுதி மூச்சுள்ளவரை மறக்கப்பட முடியா இணைப்பிது!!

மகேல - என் வாழ்வின் ஓர் அங்கம்!!


நன்றி மகேல!!!3 வாசகர் எண்ணங்கள்:

ஆத்மா said...

வாவ்... ரொம்ப நாளுக்குப் பிறகு முழுவதுமாய் படித்த ஒரு பதிவு. மீண்டுமொரு முறை மஹலவின் அனைத்து போட்டிகளையும் பார்த்த திருப்தி பதில்... உணமையில் மஹலவின் இழப்பு ஈடு செய்ய முடியாத ஒன்று. நான் கிரிகெட் விளையாடும் போது என்னை மஹலே என்றே சொல்லிக் கொள்வேன்.

இன்னுமொன்று அதிஷ்டம் பற்றி பதிவில் சொல்லிய போது மஹேலெ ஆட்டமிழக்கும் வரை ஒருக்களித்துப் படுக்கும் நான் என் நிலையை மாற்றுவதே கிடையாது :)
நல்ல பதிவு நல்ல விரிவு இன்னுமொன்றையும் சொல்லியிருந்தால் நன்றாகவிருக்கும் மஹல பேட்டி கொடுக்கும் போது பேசும் விதம்...

Kugan said...

மிகவும் அருமையாக இருந்தது. உணர்ச்சிபூர்வமாக எழுதியுள்ளீர்கள். நீங்கள் எழுதியதை வாசிக்கும்போது நேரடியாக மகேலவின்துடுப்பாட்டத்தை பார்த்து ரசித்ததுபோல இருந்தது.

Sajee said...

//நிச்சயமாக மகேல ஒரு ஓட்டங் குவிக்கும் இயந்திரம் அல்ல, மகேலவின் ஓட்டக்குவிப்பு எப்போதும் தொடர்ச்சியாக இருந்ததுமில்லை; ஆனால் முக்கியமான போட்டிகளில், இக்கட்டான நேரங்களில் தன் கையைத் தூக்கி முன்வந்து போட்டியை வென்று கொடுக்கும் மகேல வரலாற்றின் ஒர் வெற்றியாளன்! மோசமான துடுப்பாட்ட நேரங்களில், தன்மீது விமர்சனங்கள் வரும்போதெல்லாம், அவற்றுக்கு தன் துடுப்பால் பதில் சொல்லும் ஓர் போராட்ட வீரன்!! மகேல முழுத்திறனுடன் ஆடும் இனிங்ஸ் ஒன்றின் அழகுக்கு இணையான இனிங்சை வெளிப்படுத்த வேறெந்த சமகால வீரரும் இல்லை! // அருமையான பதிவு அண்ணா ! மிகவும் உணர்ச்சிகரமான பதிவு இது ஒவ்வொரு மஹேல ரசிகனுக்கும் , நன்றி அண்ணா ஒவ்வொரு போட்டியையும் மனக்கண்ணில் கொண்டுவந்ததற்கு :)

Post a Comment

"கருத்துக்கள், நிறைகுறைகள், திட்டுக்கள், பாராட்டுக்கள் போன்றவற்றை கூற விரும்புபவர்கள் கீழுள்ள பின்னூட்ட பெட்டியில் பின்னூட்டலாம்; பதிவுகளை வாசிக்காமல் இடப்படும் டெம்பிளேட் பின்னூட்டங்கள் வேண்டாம் நண்பர்களே."

*******************

வடை, வாழைப்பழம், சூப்பர், கலக்கல் என மொய் வைக்க வரும் நண்பர்களுக்கு; நான் யாருக்கும் பதிலுக்கு மொய் வைக்க மாட்டேன்.(இதனால் ஏற்ப்படும் தர்ம சங்கடத்திற்கு வருந்துகின்றேன்)