Thursday, November 10, 2011

நானும் சினிமாவும் பாகம் - 2





முதல் பதிவில் விஜய் பற்றி எழுதியுள்ளதால் இந்த பதிவை அஜித்தில் இருந்து ஆரம்பிக்கிறேன். நான் முன்னர் குறிப்பிட்டது போலவே நாட்டின் போர் காரணமாக 1996 க்கு பின்னர்தான் அடுத்த தலைமுறை நடிகர்களின் முகத்தையே காணும் வாய்ப்பு கிடைத்து. அப்படி அஜித்தை முதல் முதலில் பார்த்தது ஒரு ஒலியும் ஒளியும் பாடலில்த்தான். 1996 இல் பல்கலைக்கலகத்திற்கே யாழ்நகரில் முதல் முறையாக மின்சாரம் வழங்கப்பட்டது (6 ஆண்டுகளின் பின்னர்) அதுகூட மாலை 6 மணி முதல் இரவு 12 மணிவரைதான்! பல்கலைக்கழகத்திற்கு வழங்கப்பட்ட மின்சாரம் அந்த அயலில் உள்ள வீடுகளுக்கும் கிடைத்தது. குறிப்பிட்ட பகுதியில் அண்ணா ஒருவரின் வீடு இருந்ததால் ஒவ்வொரு வெள்ளியும் இரவு தங்குவது அங்குதான்; காரணம் 8 மணிக்கெல்லாம் ஊரடங்குசட்டம், வீதியில் நடமாடமுடியாது.

இரவு 7.30 மணிக்கு ஒலியும் ஒளியும் பார்த்துவிட்டு இரவு 9.30 மணிக்கு டூடடர்சனில் ஒளிபரப்பப்படும் திரைப்படத்தினை 12 மணிவரை பார்ப்போம்; மின்சார நிறுத்தத்தால் படம் அரைகுறையில் தடைப்படும்போது வரும் ஏக்கமும், கோபமும், ஏமாற்றமும் சொல்லில் கூறமுடியாதவை. சில நேரங்களில் 10 நிமிடங்கள் அதிகமாக மின்சாரம் தொடர்ந்திருக்கும், எங்களுக்கும் இன்று மின்சாரம் தொடர்ந்து இருக்குமோ என்று ஒரு நப்பாசை !! அடுத்த கணமே மின்சாரம் தடைப்பட்டு எமக்கு மிகுந்த ஏமாற்றம் கிடைக்கும். அப்படி மின்சாரம் தடைப்படாமல் பார்த்தது இரண்டு திரைப்படங்கள்; திருமலை தென் குமரி, வேலைக்காரன்; இவை இரண்டும்தான் அன்று முழுமையாக பார்த்த இரண்டு திரைப்படங்கள்; வேலைக்காரன் முழுமையாக பார்த்து முடித்தபோது இருந்த மனநிலை சொல்லி புரிய வைக்க முடியாதது!



அப்படி அங்கு ஒருநாள் ஒளியும் ஒளியும் பார்க்கும்போது அறிமுகமாகிய நடிகர்தான் அஜித்குமார்; என்ன பாடல் என்று தெரியவில்லை, "யார் இந்த பையன்" என்ற ஒருவரின் கேள்விக்கு "அஜித் என்று ஒரு பையன் புதுசா நடிக்கிறான்" என்பதுதான் நான் அஜித் பெயரையும், அஜித்தின் உருவத்தையும் கேட்ட, பார்த்த கணம். ஆனாலும் எனக்கு எந்த விதமான ஈர்ப்பும் அப்போது ஏற்ப்படவில்லை. அதன் பின்னர் நான் பார்த்த முதல் அஜித் திரைப்படம் 'வான்மதி'; 'பூவே உனக்காக' முன்னமே பார்த்ததாலோ என்னமோ எனக்கு அஜித் மீது அப்போதும் ஈர்ப்பு வரவில்லை. தொடர்ந்து காதல்க்கோட்டை, நேசம், ஆசை என பல அஜித் படங்களை பார்த்திருந்தாலும் அஜித் அன்று எனக்கு பத்தோடு பதினொன்றாகத்தான் தெரிந்தார். மீடியா வசதிகள் எதுக்குமே இல்லாத காரணத்தால் சினிமாவின் தாக்கம் திரைப்படங்களை ரசிப்பதில் மட்டும்தான் அன்றிருந்தது; இன்றுபோல் நடிகர்களுக்காக ரசிகர்கள் நண்பர்களுடன் மோதியதில்லை.

இந்நிலையில் அஜித்தை எனக்கு பிடிக்க ஆரம்பித்த திரைப்படம் சரண் இயக்குனராக அறிமுகமாகி அதகளப்படுத்திய காதல் மன்னன்; இந்த திரைப்படம் நான் பார்க்கும்போது திரைப்படம் வெளியாகி நீண்ட நாட்கள் இருக்குமென்று நினைக்கின்றேன்; ஒரு ரூபாயில் சவால் விடுவது, சொடுக்கு போடுவது, 'மெட்டுத்தேடி தவிக்கிது ஒரு பாட்டு' பாடல் என காதல் மன்னனும்; காதல் மன்னனால் அஜித்தும் பிடித்துப்போயிற்று. அடுத்து அமர்க்களம், தீனா என அஜித் படத்திற்கு படம் என்னை அதிகமாக இம்ப்ரெஸ் செய்ய ஆரம்பித்தார். அந்த காலப்பகுதியில் வெளிவந்த அனைத்து அஜித் திரைப்படங்களையும் பார்த்திருக்கின்றேன்; அந்த நேரத்தில்த்தான் அஜித்தின் 'நான்தான் சூப்பர் ஸ்டார்' ஸ்டேட்டஸ் பத்திரிகைகளில் வெளிவந்தது; அன்றிலிருந்து அஜித்மீதிருந்த ஈர்ப்பு குறைய ஆரம்பித்தது. அடுத்த தலைமுறை நடிகர்களில் விஜய், அஜித் இருவருமே அந்த காலப்பகுதியில் எனக்கு பிடித்தமானவர்கள்தான்; ஆனால் அன்றைய அஜித் மற்றும் விஜய் ரசிகர்கள் ரிரஜினியுடன் இவ்விருவரையும் ஏட்டிக்கு போட்டியாக வைத்து பேசியதுதான் நான் விக்ரமின் தீவிர ரசிகரான மாற காரணமாக அமைந்தது.



விக்ரம் பற்றி பின்னர் பார்ப்போம்; தீனா திரைப்படத்தை தொடர்ந்து வெளிவந்த அஜித்தின் திரைப்படங்களில் 'வில்லன்' தவிர்த்து ஆறு திரைப்படங்கள் தோல்வியடைந்தன! இந்த நிலையில் விஜயின் திருமலை, கில்லி வெற்றி விஜய் ரசிகர்களை அஜித்தை கிண்டல் செய்யும் அளவிற்கு வளர்ந்திருந்தன. கில்லி வெற்றியின் பின்னர் கூட இருந்த சில விஜய் ரசிகர்கள் பண்ணிய ரகளைதான் அடுத்து வெளிவந்த அஜித்தின் 'அட்டகாசம்' திரைப்படத்தை மிகுந்த ஆவலுடன் பார்க்க தூண்டியது; அதுவரை அஜித் மீதிருந்த வெறுப்பும் குறைந்திருந்தது, கூடவே அஜித்தும் மிகவும் மாறியிருந்தார். 'அட்டகாசம்' திரைப்படம் பார்த்த பின்னர்தான் மீண்டும் அஜித்தை பிடிக்க ஆரம்பித்தது. தொடர்ந்து 'ஜீ' திரைப்படத்திற்கு முதல்க்காட்சி சென்றாலும் லிங்குசாமி ஏமாற்றியிருந்தார்!

அடுத்து வெளிவந்த பரமசிவன் திரைப்படம்தான் அஜித்மீது மிகப்பெரும் ஈர்ப்பை கொண்டு வந்தது, அது மரியாதை கலந்த ஈர்ப்பு. யாருமே நினைத்துக்கூட பார்க்க முடியாதளவிற்கு தன் உடல் எடையை குறைத்திருந்தார். யாழ்ப்பாணத்தில் குண்டு எறியும் கலாச்சாரம் அதிகமாக இருந்த காரணத்தால் திரையரங்கிற்கு செல்வதில்லை என்றிருந்தோம்; ஆனால் சண் டிவியில் புதிய பாடல்களை ஒளிபரப்பிய அடுத்த 15 நிமிடங்களுக்குள் நாம் திரையரங்கில் நின்றோம்; காரணம் அஜித்தின் தோற்றம்!! வாசு படத்தை சொதப்பினாலும் அஜித் என்னை ஏமாற்றவில்லை! படம் சரியாக போகாவிட்டாலும் கூடவந்த ஆதி, சரவணா திரைப்படங்களைவிட அதிகம் வசூலித்தது. அதற்க்கு அடுத்து வெளிவந்த திருப்பதி திரைப்படத்தை முதல்நாள் முதல் காட்சியில் பார்த்தேன்; ரஜினியை வைத்து பேரரசு படமெடுத்தாலும் திரையரங்கில் போய் பார்ப்பதில்லை என்பது அன்று எடுத்த முடிவுதான்:-)



அடுத்து வரலாறு திரைப்படம் நாட்டு பிரச்சனை காரணமாக யாழ்ப்பாணத்தில் வெளியாகவில்லை; அதன் பின்னர் இன்றுவரை எந்த அஜித் திரைப்படத்தையும் திரையரங்கில் பார்க்கும் சந்தர்ப்பம் அமையவில்லை. நேரம், பணம், கூடவரும் நண்பர்கள் என ஈதோ ஒரு காரணத்திற்க்காக ஒவ்வொரு தடவையும் அஜித் படங்களை திரையரங்கில் பார்ப்பதற்கு முட்டுக்கட்டை விழுந்தது. இறுதியாக மங்காத்தா பார்ப்பதற்கு குறைந்தது 4 தடவைகள் திட்டமிட்டிருப்போம், ஆனால் அது கடைசிவரை கைகூடவில்லை; இறுதியில் வழமைபோல DVD தான்!!! இறுதி ஐந்து ஆண்டுகளில் ரஜினி, விக்ரம் திரைப்படங்கள் தவிர்த்து திரையரங்கில் நான் பார்த்த திரைப்படங்கள் என்றால் 5 திரைப்படங்கள்தான்; மொழி, தீபாவளி, நான்கடவுள், பையா, நந்தலாலா என்பவைதான் அந்த ஐந்தும்!!!!

மங்காத்தா எனக்கு மிகவும் பிடித்திருந்தது, இப்போது அஜித்தையும் அதிகமாகவே பிடிக்கின்றது; காரணம் ரஜினியா! இல்லை எமது சமூக தளங்களில் உள்ள விஜய் ரசிகர்களா! அல்லது அஜித்தை புறக்கணிக்கும் ஊடகங்களா! அல்லது அஜித்தின் அண்மைக்கால வெளிப்படையான நடவடிக்கைகளா! காரணம் இவை அனைத்தும் சேர்ந்ததுதான் என்றாலும்; அஜித் இப்போது எனக்கு மிகவும் பிடித்தமானவர்களில் ஒருவர்.

சாவியைபிரித்தல் (Dis Key அதாவது டிஸ்கி )

அடுத்த பதிவுகளில் விக்ரம், சூர்யா, தனுஸ், சிம்பு மற்றும் ஹீரோயின்ஸ் பற்றியும் பார்க்கலாம் :-) பலருக்கும் இந்த பதிவு போரடிக்கும் என்பது புரிகிறது; காரணம் இது எனது சுய சொறிதல், இருந்தும் ஏன் எழுதுகின்றேன் என்றால் பின்னொருநாளில் குறைந்தபட்சம் எனக்காவது படிப்பதற்கு சுயாரசியமாக இருக்கும் என்பதால்த்தான், "அட நாதாரி இதை டயரியில எழுதவேண்டியதுதானே" என்கிற உங்க மைன்ட் வாய்ஸ் கேக்கிது, ஆனா எனக்கு அந்த கெட்ட பழக்கமெல்லாம் இல்லை :-)

முதல் பதிவு -> நானும் சினிமாவும் - பாகம் 1

7 வாசகர் எண்ணங்கள்:

பாலா said...

எந்த விட மாற்றமும் இல்லாமல் மிக இயல்பாகவே எழுதி இருக்கிறீர்கள். தொடர்ந்து எழுதுங்கள். அப்புறம் வாலி பற்றி சொல்லவே இல்லையே. வாலி படத்தை பார்த்த பின்தான் என் மனதில் அஜீத் முழுவதும் ஆக்கிரமித்தார். நன்றி தலைவரே.

N.H. Narasimma Prasad said...

உங்கள் சினிமா அனுபவப்பதிவு நன்றாக இருக்கிறது. பகிர்வுக்கு நன்றி.

கார்த்தி said...

சார் இது எமது அந்தக்கால சூழ்நிலைகளோட தொடர்புபடுத்தி போடுற சுப்பர் பதிவு. நல்லாயிருக்கு!
அந்தக்காலத்தில துார்தர்ஷனில வெள்ளி 10மணிக்கு தொடங்கிற சனி இன்னும் பிந்தி தொடங்கிற படங்கள முழிச்சி இருந்து பாத்த ஆக்களில நாங்களும் இருக்கம். இப்பிடி பாக்க தொடங்கினது 1997க்கு பிறகுதான் என நினைக்கிறன். அப்பதான் கொஞ்சம் ஒழுங்காக கரண்ட் வர வெளிக்கிட்டிச்சு.
நான் கொழும்புக்கு வந்து தியட்டரில முதல்பாத்த படம் அஜித்தின்ர வரலாறுதான். நானும் மதனும் சென்று பார்த்தோம்.

கிரி said...

// அடுத்து வெளிவந்த திருப்பதி திரைப்படத்தை முதல்நாள் முதல் காட்சியில் பார்த்தேன்; ரஜினியை வைத்து பேரரசு படமெடுத்தாலும் திரையரங்கில் போய் பார்ப்பதில்லை என்பது அன்று எடுத்த முடிவுதான்:-)//

என்னோட வாழ்க்கையிலேயே பொறுக்க முடியாம எழுந்து போகலாம் என்று நினைத்த இரு படங்கள் ஜெய் மற்றும் திருப்பதி. திருப்பதி முதல் அரை மணி நேரம் மாதிரி ஒரு கொடுமையான தண்டனையை அனுபவித்தது இல்லை அதன் பிறகு ஓகே.

// இதை டயரியில எழுதவேண்டியதுதானே" என்கிற உங்க மைன்ட் வாய்ஸ் கேக்கிது, ஆனா எனக்கு அந்த கெட்ட பழக்கமெல்லாம் இல்லை :-)//

ப்ளாகே ஒரு டயரி தான் :-)

Unknown said...

பதிவ போட்டா பேஸ்புக்கில போட வேண்டியது தானே :(

Jayadev Das said...

எப்போது என்ன ஆபத்து வருமோ என்ற ஒரு நாட்டில் நீங்கள் வாழ்வது நெருடலாக இருக்கிறது. நேரிலேயே பார்க்காத ஒருத்தர் மீது நீங்கள் கொண்டிருக்கும் மிக அதீதமான அன்பு, அவரது பட்டத்தை இன்னொருத்தர் பயன்படுத்துவதைக் கூட ஏற்காத அளவுக்கு அவர் மீதுள்ள நேசம் இவை எல்லாவற்றிற்கும் Hats Off!!

அஜீத் நடித்ததில் கண்டுகொண்டேன்.. கண்டுகொண்டேன்..போல அவர் ஒரு நடிகராக நடித்த ஆரம்ப காலப் படங்கள் நன்றாக இருந்தன. அவர் எப்போ ஹீரோயிசம் காட்ட ஆரம்பித்தாரோ அதுக்கப்புறம் அவரை என்னால் ரசிக்க முடியவில்லை.
[தமிழ் மனத்தில் ஓட்டு போட்டு வருகிறேன், எப்படி போடுவது என்று தெரியவில்லை. Thumbs up மீது தான் click செய்கிறேன், இது சரியா? ஒருவேளை தவறாகி நெகடிவ் வோட்டாகி போயிருந்தால் பொறுத்தருளவும்!!]

எப்பூடி.. said...

@ பாலா

//அப்புறம் வாலி பற்றி சொல்லவே இல்லையே. வாலி படத்தை பார்த்த பின்தான் என் மனதில் அஜீத் முழுவதும் ஆக்கிரமித்தார். //

வாலி வந்த நேரத்தில் திரையரங்கிற்கு இங்கு திரைப்படங்கள் வருவதில்லை, வீடியோ கேசட்தான்; வாலி திரைப்படம் இங்கு மோசமான திரைப்படாக (18 +) சித்தரிக்கப்பட்டதால் வீட்டில் பார்க்கவில்லை. கேபிள் இணைப்பு கிடைத்த பின்னர்ர் 2005 க்கு பின்னர்தான் பார்த்தேன்; அஜித்தின் நடிப்பு பிரமாதம், கூடவே சிம்ரனும் :-)

..................................

@ N.H.பிரசாத்

@ கார்த்தி

@ மைந்தன் சிவா

உங்கள் வருகைக்கும் கருத்திற்கு மிக்க நன்றி.

...................................

@ கிரி

//ப்ளாகே ஒரு டயரி தான் :-)//

உண்மைதான் :-)

....................................

@ Jayadev Das

தங்கள் ஓட்டு பாசிட்டிவ் ஓட்டுத்தான்.

Post a Comment

"கருத்துக்கள், நிறைகுறைகள், திட்டுக்கள், பாராட்டுக்கள் போன்றவற்றை கூற விரும்புபவர்கள் கீழுள்ள பின்னூட்ட பெட்டியில் பின்னூட்டலாம்; பதிவுகளை வாசிக்காமல் இடப்படும் டெம்பிளேட் பின்னூட்டங்கள் வேண்டாம் நண்பர்களே."

*******************

வடை, வாழைப்பழம், சூப்பர், கலக்கல் என மொய் வைக்க வரும் நண்பர்களுக்கு; நான் யாருக்கும் பதிலுக்கு மொய் வைக்க மாட்டேன்.(இதனால் ஏற்ப்படும் தர்ம சங்கடத்திற்கு வருந்துகின்றேன்)