Tuesday, September 25, 2012

நானும் சினிமாவும் பாகம் - 3 (சீயான் விக்ரம்)நீண்ட நாட்களுக்கு முன்னர் எழுதிய நானும் சினிமாவும் பாகம் இரண்டாவதின் தொடர்ச்சி!! விக்ரம் சம்பந்தப்பட்டது என்பதால் சற்று விரிவாக என்னுடைய அனுபவத்தில் விக்ரமையும் தாண்டி, விக்ரமை பற்றியும் எழுத வேண்டும் என நினைத்திருந்ததால் பல நாட்கள் தள்ளிப்போய்விட்டது. இந்தவார இறுதியில் தாண்டவம் வெளியாகும் நேரத்தில் இதனை எழுதுவது சரியென தோன்றியது! ரஜினிக்கு அடுத்து எனக்கு மிகவும் பிடித்த நடிகர் விக்ரம் என்பதனால் முடிந்தளவுக்கு திருப்தியாக, விரிவாக எழுதவேண்டும் என்று நினைக்கின்றேன்; எழுதினேனா இல்லையா என்பதை நானும் உங்களைபோல பதிவின் முடிவில் தெரிந்துகொள்கின்றேன் :-))


எனக்கு பிடித்த விக்ரம் - இந்த விம்பத்தை எனக்கு பொதிகை தொகைக்காட்சி முன்னரே ஒரு சில திரைப்படங்களில் அறிமுகப்படுத்தி இருந்தாலும்; அந்த விம்பத்தை எனக்கு இவர் பெயர் விக்ரம் என அறிமுகப்படுத்தியது 'தில்' திரைப்படம் தான்!! 'சேது' திரைப்படம் விக்ரமிற்கு மிகப்பெரும் திருப்புமுனையாக அமைந்திருந்தாலும் இங்கு யாழ்ப்பாணத்தில் ஓரிரு 'மினி' திரையரங்கில் மட்டுமே 'சேது' காண்பிக்கப்பட்டது! ஓரிருவர் "படம் நல்லாயிருக்கு" என்று சொன்னாலும் ஏனோ படம் பார்க்க பிடிக்கவில்லை!! சிலகாலம் கழிந்த பின்னர் மீண்டும் ஒரு நண்பனின் உதவியில் 'தில்' திரைப்பட VCD கிடைத்தது; மிகவும் தெளிவான copy வேறு!! படம் ரொம்பவே பிடித்துப்போக, பலதடவைகள் வேறு வேறு இடங்களில்(உறவினர், நண்பர்கள் வீடுகளில்) மீண்டும் மீண்டும் பார்த்ததாலோ என்னமோ அந்த திரைப்படத்தின் நாயகனும் மனதுக்கு நெருக்கமானான்!!

கூட இருந்த அஜித்,விஜய் ரசிகர்களான நண்பர்களின் அடுத்த சூப்பர்ஸ்டார் அலப்பறை; ரஜினிவேறு நீண்ட இடைவெளிகளில் படம் நடிப்பதால் இடைப்பட்ட காலத்தில் திரைப்படம் பார்ப்பதற்கு தேவயான ஒரு பிடிப்பு போன்றவை மறைமுக காரணங்களாக இருக்க தில், காசி, சேது என அடுத்தடுத்து நான் பார்த்த மூன்று திரைப்படங்களிலும் வித்தியாசம் + ஈர்ப்பை கொடுத்த விக்ரம் எனக்கு மனதுக்கு நெருக்கமான நாயகனானார்!! அடுத்தடுத்து விக்ரம் நடித்து வெளியாகும் அனைத்து திரைப்படங்களின் VCD களையும் தேடித் தேடி பார்ப்பது வழக்கம் (திரையரங்குகளுக்கு படங்கள் வந்ததில்லை) ஓரிரு திரைப்படங்கள் வெளிவந்தாலும் அந்த சமயங்களில் நான் ஊரில் இருந்ததில்லை. மிகவும் எதிர்பார்ப்புடன் திரையரங்கில் பார்வையிட எதிர்பார்த்திருந்த பிதாமகனும் கடைசி நேரத்தில் பார்க்க முடியாமல் போயிற்று!! First show மிஸ் பண்ணினால் ஏனோ அந்த படத்தை திரையில் பார்க்க பிடிப்பதில்லை; இன்றுவரை :-)

அதற்கிடையில் தூள், சாமி, ஜெமினி என விக்ரமின் மாஸ் திரைப்படங்கள் என்னை விக்ரமின் தீவிர ரசிகனாக மாற்றியது!! நான் மிகவும் எதிர்பார்த்து முதல் முதலில் திரையரங்கில் பார்த்த திரைப்படம்(கொழும்பில் நான் பார்த்த முதல் திரைப்படம்) 'அருள்' ஊத்திக்கொண்டது!! அடுத்து மிகப்பெரும் எதிர்பார்ப்பில் வெளிவந்த திரைப்படம் அந்நியன்; முதல்நாள் மற்றும் சில நாட்கள் திரையரங்கிலும், தொலைக்காட்சி மற்றும் DVD என பலநாட்கள் வீட்டிலுமாக, நான் அதிகதடவைகள் பார்த்த திரைப்படங்கள் வரையில் அந்நியனும் இடம்பிடித்துக்கொண்டது. அந்நியனுக்கு பின்னர் மஜா, பீமா, கந்தசாமி, ராவணன், தெய்வத்திருமகள், ராஜபாட்டை என எந்த திரைப்படத்தின் முதல்நாள் காட்சிகளையும் திரையில் காண தவறவிட்டதில்லை!! இப்போதும் தாண்டவம் முதல்நாள் காட்சிக்காக ஆவலுடன்!!வெற்றிப்படங்கள் மட்டுமென்றில்லாது விக்ரமின் சரியாக போகாத சில திரைப்படங்களும் எனக்கு மிக்கவும் பிடித்தவை; அவற்றில் பீமா, சாமுராய், இராவணன் போன்றவை முக்கியமானவை!! ஒவ்வொரு திரைப்படங்களுக்கும் மலையளவு எதிர்பார்ப்பு இருக்கும், ஆனால் அவற்றை கடந்த 7 வருடங்களில் தெய்வதிருமகள் மட்டும்தான் பூரணமாக திருப்திப்படுத்தியது; பீமா, ராவணன் திரைப்படங்கள் திருப்தியை கொடுத்தாலும், வணிகரீதியில் சரியாக போகாத குறை இருக்கத்தான் செய்தது. வயது ஏறிக்கொண்டே போகும் நேரத்தில் வீணாக பெரிய பட்ஜெட் என்று காலத்தை இழுத்தடிக்காமல் நல்ல ஸ்கிரிப்ட்களில் விக்ரம் ஆண்டுக்கு இரண்டு படங்களாவது கொடுக்கவேண்டும் என்பதே என் விருப்பம்; தாண்டவத்திற்கு அடுத்து ஷங்கரின் 'ஐ' திரைப்படம் என்பதால் அதற்கும் நீண்டகால அவகாசம் தேவை!!

நடிகர் விக்ரம் - சினிமாக் கனவு; அதற்கான முயற்சியாக படிப்பு, பயிற்சி என தன்னை தயார்ப்படுத்திக்கொண்டு தனது கனவு கோட்டைக்குள் காலடிவைத்த இளைஞன்!! 10 வருட போராட்டம், 20 க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நாயகனாக நடிக்க வாய்ப்பு; ஆனாலும் வெற்றியோ அடையாளமோ கண்ணுக்கெட்டிய தூரம்வரை இல்லை!! கல்லூரி காலத்தில் இருந்து விக்ரமிற்கு தடைக்கற்கள்தான் அதிகம்!! கல்லூரி காலத்தில் மிகவும் ஆபத்தான மோட்டார் சைக்கிள் விபத்தை சந்தித்து இருபதிற்கும் மேற்ப்பட்ட சத்திர சிகிச்சையால் பிழைத்த விக்ரமிற்கு கால்களில் இன்னமும் அதன் தாக்கம் உண்டு. அதன் பின்னர் சினிமாவில் நடிகனாக தோல்வி, தோல்வி, தோல்வி..... அப்பப்போ வேறு நடிகர்களுக்கு டப்பிங் பேசும் சந்தர்ப்பமும் கிடைக்கப்பெற்றது; குறிப்பாக பிரபுதேவாவிற்காக காதலன், மின்சாரகனவு போன்ற திரைப்படங்களிலும்; அப்பாசிற்காக கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், பூச்சூடவா திரைப்படங்களிலும்; அஜித்திற்கு அமராவதி திரைப்படத்திலும் பின்னணி குரல் கொடுத்தவர் விக்ரம்தான்!!

தனக்கும் சினிமாவுக்கும் எட்டாம் பொருத்தம் என நினைத்து சினிமாவைவிட்டு ஒதுங்கி வெளிநாட்டில் செட்டில் ஆக முடிவெடுத்திருந்த வேளையில் கிடைத்த ஒரு திரைப்பட வாய்ப்பை இறுதி வாய்ப்பாக பயன்படுத்தி மீண்டுமொருதடவை முயற்சி செய்தார் விக்ரம். பாலுமகேந்திரா பாசறையில் இருந்து புதுமுக இயக்குனராக வெளிவந்த பாலா இயக்குனர் அவதாரம் எடுக்க, விக்ரம் அரிதாரம் பூசிய அந்த திரைப்படம்தான் சேது!! சேதுவிற்கான பாலாவால் முதலில் கதை சொல்லப்பட்டது அஜித்குமாருக்குத்தான்!; முதலில் அஜித் நடிப்பதாக கூறப்பட்டு பின்னர் அஜித் விலகிவிட்டார் என அறிவிக்கப்பட்டது. மொட்டை போடும் காட்சியால் அந்த திரைப்படத்தில் இருந்து அஜித் விலகியதாக பேசப்பட்டது (பின்னர் கஜினியில் அஜித் நடிக்க முடியாமைக்கு போகவும் அதே மொட்டை காட்சிதான் காரணம்!) பாலாவிற்கு முதல் முயற்சியாகவும், விக்ரமிற்கு இறுதி முயற்சியாகவும் தயாரிக்கப்பட்ட 'சேது' திரைப்படத்தின் பிரிவியூஷோ மட்டும் 100 நாட்களுக்கு மேல் ஓடியதாக சொல்வார்கள்; யாரும் வாங்க முன்வரவில்லை!!

இறுதியில் ஒருவழியாக 1999 இல் வெளிவந்த சேது மிகப்பெரும் வரவேற்பை பெற்றது; இயக்குனர் பாலாவை தமிழ் சினிமா இருகரம் கொடுத்து வரவேற்று முதன்மை இயக்குனர்களுக்கு சமனான சிம்மாசனம் கொடுத்து அழகுபார்த்தது. தமிழ் சினிமாவிற்கு புதிய முகத்தை பாலா கொடுக்க, விக்ரமின் அபரிமிதமான நடிப்பாலும், இளையராஜா, இரத்தினவேல் போன்றோரின் தொழிநுட்பரீதியிலான பங்களிப்பாலும் சேது மிகப்பெரும் வெற்றி பெற்றது!! பல வருடத்து கனவு, 10 வருட உழைப்பு என விக்ரமிற்கு தமிழ் சினிமா வெற்றிக்கதவை மெல்லத் திறந்தது. ஸ்ரீதர், விக்ரமன், பி.சி.ஸ்ரீராம் இயக்கங்களில் கிடைக்காத வெற்றி பாலா என்னும் புதுமுகம் மூலம் விக்ரமிற்கு கிடைத்தது அதிஸ்டமா? நேரமா? உழைப்பிற்கும் இலட்சயத்திற்க்கும் கிடைத்த பிந்திய வெற்றியா? போன்ற கேள்விகளுக்கு வித்திட்டன.


சேதுவை தொடர்ந்து தனது கல்லூரிகால நண்பனான தரணி என்று சினிமா உலகில் அறியப்படும் ரமணியுடன் இணைந்து பணியாற்றிய 'தில்' திரைப்படம் வணிகரீதியில் பெரும் வெற்றி பெற்றது!! தில் திரைப்படம் விக்ரமிற்கு மட்டுமல்ல, எதிரும் புதிரும் திரைப்பட தோல்வியால் தளர்ந்திருந்த தரணிக்கும் 'வெற்றிப்பாதையை திறந்துவிட்டது!! அடிதடியில் மட்டும் ஓடிக்கொண்டிருந்த ஆக்ஷன் கமர்சியல் சினிமாவில் ஐடியா காட்சிகளை டசின் கணக்கில் புகுத்தியதும் தில் திரைப்படம்தான். தில் திரைப்படத்தை தொடர்ந்து வணிகரீதியில் மீண்டும் தரணியுடன் இணைந்து A.M.இரத்தினத்தின் ஸ்ரீசூர்யா மூவிஸுக்காக தூள், சரணுடன் இணைந்து ஏ.வி.எம்க்காக ஜெமினி, ஹரியுடன் இணைந்து கவிதாலயாவுக்காக சாமி என தொடர்ச்சியாக கமர்சியல் வெற்றிகள் விக்ரமிற்கு கிடைத்தன!! சமகாலத்திலேயே தன்னை வருத்தி சிறப்பான நடிப்பாற்றலை வெளிப்படுத்திய காசி திரைப்படமும் விக்ரமிற்கு மேலும் பெயரை பெற்றுக் கொடுத்தது!!

2001 - 2003 வரையான காலப்பகுதியில் தமிழ் சினிமாவின் உச்சநட்சத்திரம் விக்ரம் என்பது அன்றைய காலப்பகுதியில் விக்ரமிற்கு கிடைத்த மிகப்பெரும் வெற்றி, ஏன் சாதனை என்று கூட சொல்லலாம்!! சாமி வெற்றி விழாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந் அவர்களால் இன்றைய சூப்பர்ஸ்டார் விக்ரம்தான் என்கின்ற கூற்று விக்ரமை பொறுத்தவரை மிகப்பெரும் பாராட்டு!! அடுத்து மீண்டும் பாலாவுடன் கைகோர்த்து விக்ரம், சூர்யா கூட்டணியில் வெளிவந்த பிதாமகன் மிகப்பெரும் வரவேற்ப்பை வணிகரீதியிலும், விமர்சனரீதியிலும் பெற்றுக்கொடுத்தது. தனக்கு அங்கீகாரம் கொடுத்த தமிழ் சினிமாவிற்கு கைமாறாக விக்ரம் சிறந்த நடிகருக்கான தேசியவிருது பெற்றுகொடுத்து பெருமை சேர்த்தார்!! தமிழ் சினிமாவில் முழுமையான மாஸ் ஹீரோவாகவும், முழுமையான கிளாஸ் ஹீரோவாகவும் தனித்தனி திரைப்படங்களில் நடித்து இரண்டு வகையிலும் ரசிகர்களால் முழுமையாக அங்கீகாரம் பெற்ற முதல் நடிகன் என்கின்ற பெருமையை விக்ரம் பெற்றுக்கொண்டார்!!

இந்த வெற்றிப் பயணத்திற்கிடையே சாமுராய், காதல் சடுகுடு, கிங், விண்ணுக்கும் மண்ணும் என வணிக ரீதியில் சரியாக போகாத திரைப்படங்களும் அப்பப்போ வெளிவந்தன; ஆனலும் ஒவ்வொரு திரைப்படங்களிலும் விக்ரம் தனது அதிகபட்ச வெளிப்பாடை கொடுத்துக்கொண்டிருந்தார். உடல் எடையை கூட்டிக்குறைப்பதில் மாயாஜாலம் நிகழ்த்தினர்; படத்திற்கு படம் உடல்மொழி, வசன உச்சரிப்பு போன்றவற்றில் புதுப்புது பரிமாணங்களை வேறுபடுத்திக் காட்டத் தொடங்கினார்!! பிதாமகனுக்கு அடுத்து ஹீரியுடன் மீண்டும் இணைந்து நடித்த அருள் திரைப்படம் விக்ரமிற்கு மிகப்பெரும் அடியாக அமைந்தது!! விமர்சனங்கள், வசூல் மற்றும் விக்ரமினின் மாறுபட்ட பாத்திரங்கள் என அனைத்திலும் அருள் கைகொடுக்கவில்லை!!

அருள் திரைப்படத்தின் தோல்வியை ஈடுசெய்யும் வகையில் வெளிவந்த விக்ரமின் அடுத்த திரைப்படமான அந்நியன் திரைப்படம் அருளில் இருந்த அத்தனை குறைகளையும் போக்கியது; ஷங்கரின் இயக்கத்தில் அதிக பொருட்செலவில் தயாரிக்கப்பட்ட அந்நியன் மிகப்பெரும் வெற்றியை பெற்றுக்கொண்டது!! மூன்று வேறுபட்ட பாத்திரங்களை ஒரு உருவத்தில் கனகச்சிதமாக விக்ரம் கொடுத்திருந்தார்!! உடல்மொழி, வசன உச்சரிப்பு என ஒரு பாத்திரத்திற்கும் மற்றைய பாத்திரங்களுக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லாமல் அப்படியொரு சிறப்பான வெளிப்பாட்டை கொடுத்திருப்பார். அந்நியன் விக்ரமின் திரைவாழ்க்கையில் மிகப்பெரும் மைல்கல்! விக்ரமை மிகச்சிறந்த நடிகனாக ரசிகர்களும், திரையுலகமும் ஏற்றுக்கொன்டாலும் விக்ரமிற்கு காமடி சரியாக அமைவதில்லை என்பது ஒரு குறையாகவே இருந்தது; சிவாஜிகணேஷன் அவர்களுக்கும் கடைசிவரை இருந்த குறையது!!


குறுகியகாலத்தில் ஒருவரது வெற்றி நீண்டகாலமாக அதே துறையில் இருப்பவருடன் போட்டிக்கு கோர்த்துவிடுவது எல்லா இடங்களிலும் நடக்கும் சம்பவம்; இன்று வீராத் கோலியை சச்சினுடன் ஒப்பிடுவதுபோல அன்று விக்ரமை கமலுடன் ஒப்பீடுகளும் இடம்பெற்றன. கமலுக்கு காமடி காட்சிகள் அல்வா சாப்பிடுவது போன்றது, ஆனால் விக்ரமிற்கோ காமடி பெரிதாக எடுபடவில்லை என்கின்ற குறை; இந்நிலையில்தான் மலையாள இயக்குனர் ஷாபியின் துணையுடன் 'மஜா' என்கின்ற முழுநீள நகைச்சுவை(?) திரைப்படத்தில் விக்ரம் நடித்தார். கமலுடன் போட்டிக்காக விக்ரம் மஜாவிலும், அந்நியனின் மூன்று வேடங்களுக்கு போட்டியாக தன்னை மேலும் நிரூபிக்க கமல் பத்து வேடங்களில் தசாவதாரமும் நடிப்பதாக பேசப்பட்டது!! ஆனால் மஜாவில் விக்ரமிற்கு காமடியும், வணிக ரீதியில் மஜாவும் விக்ரமிற்கு கைகொடுக்கவில்லை!

அந்நியன் கொடுத்த வெற்றியும், புது மற்றும் பிரபலமில்லாத இயக்குனர்கள் கொடுத்த தோல்விகளுமோ என்னவோ விக்ரமை தனது திரைப்பட தெரிவுகளில் புதிய முடிவுகளை எடுக்க தூண்டியது; அந்த முடிவுகள்தான் விக்ரமின் திரைப்பயணத்தில் தொய்வையும், வீழ்ச்சியையும் ஏற்ப்படுத்தியது என்றால் மிகையல்ல. பெரிய பட்ஜெட் திரைப்படங்களில் நடிப்பது மற்றும் பிரபலமான இயக்குனர்களிடம்தான் நடிப்பது போன்றவைதான் அந்நியனுக்கு பின்னர் விக்ரமின் திரைப்படங்களை தெரிவு செய்வதில் எடுத்த தவறான முடிவுகளோ என்று என்ன தோன்றுகின்றது!! 2005 மஜாவிற்கு பின்னர் 2011 இல் தெய்வத்திருமகள் வெளிவரும்வரை ஆறு வருடங்களில் விக்ரம் நடித்தவை வெறும் மூன்று திரைப்படங்கள்தான். பீமா, கந்தசாமி, ராவணன் திரைப்படங்கள்தான் அந்த மூன்று திரைப்படங்களும்; இம் மூன்று திரைப்படங்களும் மிகப்பெரும் பொருட் செலவிலும், அதிக கால அவகாசங்களிலும் எடுக்கப்பட்டாலும் மூன்று திரைப்படங்களாலும் வணிகரீதியில் வெற்றியை பெறமுடியவில்லை!!

அதேநேரம் இந்த மூன்று திரைப்படங்களுக்கும் விக்ரம் கொடுத்த உடல் உழைப்பு அபரிமிதமானது; ஆனால் அவை விழலுக்கு இறைத்த நீராகியது என்பதுதான் உண்மை. பீமா திரைப்படத்தில் காட்சியமைப்புக்களை லிங்குசாமி சிறப்பாக கையாண்டிருந்தாலும் திரைக்கதையில்த்தான் சில தவறுகள்; ஆனாலும் தனிப்பட முறையில் எனக்கு பீமா இன்றும் மிகவும் பிடித்த திரைப்படம்!! கந்தசாமி திரைப்படம் மிகப்பெரும் பட்ஜெட்டில் அதிக காலத்தையும் இழுத்தடித்து ஏகப்பட்ட எதிர்பார்ப்பையும் ஏற்படுத்திவிட்டு மிகவும் ஏமாற்றத்தை கொடுத்த திரைப்படம்; சிறிய பட்ஜெட்டில் திருட்டுப்பயலேயை கொடுத்த சுசிகநேஷனால் மிகப்பெரும் பட்ஜெட்டில் கந்தசாமியை காப்பாற்ற முடியவில்லை. அடுத்து மணிரத்தினம் இயக்கத்தில் ராவணன் திரைப்படத்தின் தோல்வி விக்கிரம மீதான எதிர்பார்ப்புக்களை குறைக்க தொடங்கின; அதற்க்கு காரணம் விக்ரம் ஒவ்வொரு திரைப்படத்திற்கு எடுத்துக்கொள்ளும் காலமும், இறுதியில் அவற்றிற்கு கிடைக்கும் எதிர்மறையான முடிவுகளும்தான்!!

இந்நிலையில்தான் என்ன நினைத்தாரோ விக்ரம் தன் திரைப்படங்களின் பட்ஜெட்டை சக நடிகர்களது திரைப்படங்களின் செலவுக்கு இணையாக குறைத்துக்கொண்டார்; ஆனாலும் இன்னும் பிரபல இயக்குனர்களைதான் நம்பிவருகின்றார், இன்றைய தேதியில் விக்ரம் மட்டுமல்ல அனைத்து முன்னணி நடிகர்களும் இதற்கு விதிவிலக்கல்ல!! நீண்ட காலங்களுக்கு இழுத்தடிக்கப்பட்ட திரைப்படங்கள் கொடுத்த தோல்வியை குறுகிய காலத்தில் தயாரிக்கப்பட்ட தெய்வத்திருமகள் ஈடு செய்தது!! ஐ ஆம் சாம் திரைப்படத்தின் தழுவல் என பலரும் கூப்பாடு போட்டாலும் ஐ ஆம் சாம் என்றால் ஐ ஆம் சாரி என சொல்லும் பெரும்பான்மை மக்களால் இயக்குனர் விஜய் இயக்கிய தெய்வதிருமகள் ரசிக்கப்பட்டது!! வணிகரீதியிலும், விக்ரமிற்கு நடிப்பிலும் நல்லபெயரை பெற்றுக்கொடுத்தது. ஆனால் அடுத்துவந்த ராஜபாட்டை திரைப்படம் விக்ரமின் திரைவரலாற்றின் மிக மோசமான திரைப்படமாக அமைந்தது, பிரபல இயக்குனரை கண்ணைமூடிக்கொண்டு நம்பியதன் பலன்.


2005 ஆம் ஆண்டில் அந்நியனின் மிகப்பெரும் வெற்றிக்கு பின்னர் இந்த ஏழு ஆண்டுகளில் அதிக திரைப்படங்களில் நடிக்காவிட்டால்கூட தெய்வதிருமகள் தவிர்த்து வேறந்த திரைப்படமும் வணிகரீதியாக விக்ரமிற்கு வெற்றிபெறவில்லை; தெய்வத்திருமகள்கூட முதலுக்கு சற்று அதிகமாக வசூலித்ததே அன்றி சொல்லிக் கொள்ளும்படியான வெற்றியல்ல!! இந்த நிலையில் மிகவும் கடினாமாக உழைத்து தனக்கென ஒரு இடத்தை தமிழ் சினிமாவில் தக்கவைத்த நடிகர் விக்ரமிற்கு இப்போது தேவை ஒரு மிகப்பெரிய கமர்சியல் பிரேக்; அந்த பிரேக்கை தாண்டவம் பெற்றுக்கொடுத்தால் அடுத்த ஷங்கரின் 'ஐ' திரைப்படம் அதனை தக்கவைக்கும் என்கின்ற நம்பிக்கை உண்டு!! விக்ரம் come Back ஆவதற்கு தாண்டவத்தின் வெற்றி மிகமிக அவசியம். ஆட்டையை போட்டாலும் திரைப்படத்தை ஜனரஞ்சகமாக கொடுப்பதில் இயக்குனர் விஜய் கில்லாடி, எப்படி தாண்டவத்தை கொடுத்திருகின்றார் என்பதித்தான் விக்ரமின் மறுபிரவேசம் தங்கியுள்ளது!!

அதே நேரம் விக்ரம் இனிமேல் பெரிய இயக்குனர், பெரிய பட்ஜெட் என்று பார்க்காமல் நல்ல ஸ்கிரிப்ட், நல்ல ரோல் உள்ள திரைப்படங்களை எந்த இயக்குனராக இருப்பினும் தேடித், தேர்ந்து நடிப்பது அவசியம்!! ஏழு ஆண்டுகளில் விக்ரம் மிகப்பெரும் வெற்றிகள் எதையும் கொடுக்காவிட்டாலும் இன்றுவரை விக்ரம் திரைப்படங்களுக்கு கிடைக்கும் ஓப்பினிங் ஆச்சரியமானது!! வெற்றித் திரைப்படங்களை கொடுக்கும் சக நடிகர்களுக்கு சற்றும் குறைவில்லாத முதல்வார வசூல்கள் அவை; விக்ரமின் இன்றைய தேவை கிடைக்கும் ஓப்பினிங்கை வெற்றியாக மாற்றும் சிறந்த திரைக்கதைகளை தேர்ந்தெடுப்பதுதான். விக்ரம் என்னு அற்புதமான கலைஞன் இல்லாமல் போவதில் எனக்கு சம்மதமில்லை; சிறந்த இயக்குனர்கள், ஸ்கிரிப்டுகள் வந்துகொண்டிருக்கும் இன்றையதேதியில் விக்ரம் அவற்றை சரியாக தேர்ந்தெடுத்து பயன்படுத்தினால் சீயானால் தமிழ் சினிமா இன்னும் தலை நிமிரும்!!

குறிப்பு:- தனிப்பட்ட முறையில் சொல்வதானால் விக்ரம் டிவி ஷோக்களில் சிறுபிள்ளைபோல பழகிக்கொள்வதையும், ப்ரோமொஷங்களில் ஓவராக பில்டப் + பீட்டர் + பீலா விடுவதையும் குறைத்துக்கொண்டால் நல்லது:-)) ரெம்ப ஓவரா இருக்கு :p

தெரியாதவர்களுக்கு இன்னுமொரு எக்ஸ்ட்ரா தகவல் -: நடிகர் பிரஷாந்தின் தந்தையும் நடிகர் விக்ரமின் தாயாரும் உடன்பிறந்தவர்கள்!!

முன்னைய பதிவுகள் 


6 வாசகர் எண்ணங்கள்:

kobiraj said...

விக்ரம் பற்றிய சகல தகவல்களையும் அறிந்து கொண்டேன் .அப்புறம் சொன்ன விதம் சுவாரசியமாக உள்ளது .
''! First show மிஸ் பண்ணினால் ஏனோ அந்த படத்தை திரையில் பார்க்க பிடிப்பதில்லை; இன்றுவரை :-)''எனக்கும் தான் :P

Unknown said...

எவ்ளோ டீட்டெயிலு!
மஜா படத்தில் எனக்கும் குழப்பம் இருக்கு முழு நீள காமெடியா இல்லையா என்று :P

திண்டுக்கல் தனபாலன் said...

நம்ம சீயானைப் பற்றிய முழுத் தகவல்கள்... நன்றி...

கதாபாத்திரத்திற்கேற்றவாறு தன்னை மாற்றிக் கொள்வதில் இன்னொரு கமல்...

sellvaraj.blogspot.com said...

இது வரை தெரியாத தகவல் (நடிகர் பிரஷாந்தின் தந்தையும் நடிகர் விக்ரமின் தாயாரும் உடன்பிறந்தவர்கள்!! )

நன்றி!

Unknown said...

அருமை நன்றி சகோ

Anonymous said...

நீங்க சொல்ற அதே காலகட்டத்துல அதாவது 2001-2005 விக்ரம ரொம்பவே பிடிச்சிருந்துச்சு... ஆனா அதுக்கு பிறகு அவர நம்ம்ம்ம்பி FDFS பார்த்த கந்தசாமி, ராவணன் எல்லாம் எனக்கு படு திராபை.. ராஜபாட்டை இதுநாள் வரை பார்க்கல, இனிமேலும் பார்க்குற ஐடியாவே இல்ல... ஆனா தாண்டவம் முதல் வாரம் இல்லாகாட்டியும் ரெண்டு வாரம் கழிச்சி பார்க்கனும், சந்தானம் இருக்கருல்ல....
அப்புறம் விக்ரம் மீது பெரிதும் வெறுப்பு வர்றதுக்கு மிக முக்கிய காரணங்கள் // விக்ரம் டிவி ஷோக்களில் சிறுபிள்ளைபோல நடந்து கொல்வது, ப்ரோமொஷங்களில் ஓவராக பில்டப் + பீட்டர் + பீலா விடுவது///// இப்போகூட அந்த மாற்று திறனாளி டேனியல் கிஷ்ஷ பாரட்டுறதா நெனச்சி ரொம்பவே படுத்துராறுப்பா..

ஆனாலும் "ஐ" மேல நம்பிக்க இருக்கு....

Post a Comment

"கருத்துக்கள், நிறைகுறைகள், திட்டுக்கள், பாராட்டுக்கள் போன்றவற்றை கூற விரும்புபவர்கள் கீழுள்ள பின்னூட்ட பெட்டியில் பின்னூட்டலாம்; பதிவுகளை வாசிக்காமல் இடப்படும் டெம்பிளேட் பின்னூட்டங்கள் வேண்டாம் நண்பர்களே."

*******************

வடை, வாழைப்பழம், சூப்பர், கலக்கல் என மொய் வைக்க வரும் நண்பர்களுக்கு; நான் யாருக்கும் பதிலுக்கு மொய் வைக்க மாட்டேன்.(இதனால் ஏற்ப்படும் தர்ம சங்கடத்திற்கு வருந்துகின்றேன்)