Friday, September 21, 2012

ஒரு கூமுட்டையின் நீதிமன்ற அரைநாள் அனுபவம்!!
ஹிஸ்றீரியா என்னும் ஒரு நாட்டில் கூமுட்டை  என்கின்ற ஒரு சாதாரண பிரஜை போக்குவரத்து பொலிசாரால் வாகனத்தின் சமிக்ஞை விளக்கு வேலை செய்யவில்லை என்கின்ற காரணத்திற்காகவும், குறிப்பிட்ட தவணையில் போலீசில் கொடுத்த சாரதி அனுமதிப்பத்திரத்தை மீளப்பெறப்படவில்லை என்கின்ற காரணத்திறக்காகவும் நீதிமன்றத்திற்கு  அழைக்கப்பட்டிருந்தான்!!  ஆம் அலைக்கழிக்கப் பட்டிருந்தான்!!  காலை எட்டு மணிக்கு பொலிசாரால் நீதிமன்றுக்கு அழைக்கப்பட்டிருந்த அவனுக்கு 2.30  கடந்துதான் வழக்கு முடிந்தது!! முதல் முறையாக நீதிமன்றம் சென்ற கூமுட்டைக்கு பல சந்தேகங்கள் மனதில் பிறந்தன!! அந்த சந்தேகங்களை கூமுட்டை  விடயம் தெரிந்தவர்களிடம் அறிந்துகொள்ள முயற்சித்து தன் சந்தேகங்களை கேட்க ஆரம்பிக்கின்றான்!!

காலை எட்டு மணிக்கு நீதிமன்று வந்தவனுக்கு முதல் அதிர்ச்சி காத்திருந்தது; ஆம் நீதிமன்றிற்கு 'காலர்' இல்லாத மேற்சட்டை அணியக்கூடாது என்பதுதான் அது!! வாயிற்காவலனால் மேற்சட்டையை மாற்றிவிட்டு வரும்படி திரும்ப அனுப்பிவைக்கப்படுகின்றான்!!  அடிப்படை சட்டங்கள் எதனையும் பாடப்புத்தகங்களும், பாடசாலைகளும் போதிக்காதவிடத்து முன்னனுபவம் இல்லாத ஒருவனுக்கு இந்த சட்டம் எப்படி தெரிந்திருக்க வாய்ப்புள்ளது என்பதை சட்ட வல்லுனர்கள்தான் சொல்லவேண்டும்!!!  அவன் அருகில் தெரிந்தவர்கள்  வீடு இருந்ததால் அங்கு சென்று வேறொரு சட்டையை மாற்றிவிட்டு வந்தான்; அதுவே  அங்கு யாரையும் தெரியாமல் பலமைல் கடந்து வந்திருந்தால் அவன் நிலைதான் என்ன? புதுச்சட்டை வாங்குவதா?!!!   அடுத்து உள்ளே சென்றவனை வழிமறித்த வாயிற்காவலர் டீஷெட்டை  காற்சட்டைக்குள் உள்ளே விடும்படி உத்தரவிட்டார், சட்டமாம்!! அப்படியானால் லுங்கி, வேஷ்டி கட்டுபவர்கள் மட்டும் வெளியில் விடலாமா?

இப்படியாக ஒருவழியாக உள்ளே நுழைந்தவனுக்கு காலை 9.15 மணிக்கு மன்று ஆரம்பிக்கப்படும் என்று உள்ளிருந்த காவலர்களால் தகவல் கொடுக்கப்பட்டது!!  25 நிமிடங்கள் தாமதமாக நீதிபதி உள்ளேவர மன்று ஆரம்பிக்கப்பட்டது!!  "ஒருநாள்தானே தாமதம் பணத்தை கட்டிவிடுகிறேன் சாரதி அனுமதி பத்திரத்தை கொடுத்துவிடுங்கள்" என கூமுட்டை கேட்டதற்கு போலீசார் "ஒருநாளோ, பாதிநாளோ தாமதம் தாமதம்தான்" என கூறியது நினைவுக்குவர சிரிப்பும் கடுப்பும் வந்து தொலைத்தது!!  நீதி கொடுப்பவர்கள்  தாமதிக்கலாம் என்று சட்டத்தில் இருக்கின்றதோ என்னமோ!! வழக்குகள் ஆரம்பிக்கப்பட்டன; கிரைம் விசாரணைகள், காணாமல் போனவர்கள் சாட்சியம், விவாகரத்து பெற்றவர்களின் பணக் கொடுக்கல் வாங்கல்கள், நகரசபை மற்றும் பிரதேச சபையின் குத்தகை வழக்குகள், சுகாதார கட்டுப்பாட்டு சபையின் வழக்குகள், வயது குறைந்தவருக்கான புகையிலை விற்பனை வழக்கு, போக்குவரத்து பிரிவு வழக்கு என அனைத்தும் கலந்து விசாரணைகள் இடம்பெற ஆரம்பித்தன!!

பார்வையாளர் பகுதியில் வழக்காளிகளும், பார்வையாளர்களும் உட்கார்ந்திருக்க அங்கிருந்த இரண்டு போலிஸ் காவலர்கள்  வாங்கிலில்(உட்காரும் நீண்ட கதிரை) நிமிர்ந்து உட்க்காரும்படியும், கைகளை கட்டியோ, முன்னால் இருக்கும் கதிரையில் பிடித்துக்கொண்டோ இருக்ககூடாது என்றும், கைகள் கீழே இருக்கவேண்டும் என்று சொல்லிக்கொடுத்துக்கொண்டு இருந்தார்கள்; அப்பப்போ மறந்து கைகளை கட்டுபவர்கள் மீண்டும் மீண்டும் கைகளை கீழே விடும்படி பணிக்கப்பட்டுக் கொண்டிருந்தனர்; அந்த நேரத்தில் நீதிபதி அவர்கள் சாட்சிகளின் விசாரணையை சாயமனை கதிரையில் பக்கவாட்டில் சாய்ந்திருந்து அவதானித்துக்கொண்டிருந்தார்!! இது முரண்பாடா இல்லை பாகுபாடா அல்லது சட்டம் கொடுக்கும் சலுகையா அல்லது அடக்குமுறையா என்னவென்று தெரியாது மனம் அலைபாய்ந்தது. ஒரு மனிதனால் முள்ளந்தண்டை நிமிர்த்தி, முழங்கை மூட்டை மடிக்காமல் மணிக்கணக்கில் இருக்கசொல்லி சட்டம் சொல்கின்றதா? ஆமென்றால் அது மருத்துவரீதியில் எல்லோர்க்கும் சாத்தியமா? 


அங்கிருந்த குற்றவாளிகளில் பாதிக்குமேல் போக்குவரத்து குற்றங்களும், ஜீவனாம்சம் பெறவந்த பிரிந்த ஜோடிக்களும்தான்; அதிகம்பேர் தம்மை 'குற்றவாளிகள்' என ஒப்புக்கொண்டு நாட்டுக்கும், கோட்டுக்கும் தண்டப்பணத்தை இலட்சக்கணக்காக தினம்தினம்  அள்ளியள்ளிக் கொடுக்கும் போக்குவரத்துப் பிரிவுக்கு நிச்சயம் தனியாக ஒரு மன்றம் அவசியம் என்பதை ஏன் நீதிமன்றம்  புரிந்துகொள்ளவில்லையோ என்கின்ற சந்தேகம் கூமுட்டைக்கு மட்டுமல்ல அங்கிருந்த பலருக்கும் இருந்தது!!  குற்றவாளிகளை அழைத்துவரும் 'மேன்மைமிகு' போக்குவரத்துபிரிவு பொலிசாருக்குகூட  தினமும் முழுநாள்  காத்திருப்பும், அலைச்சலும், வீண் நேரவிரயமும் என்பதைகூட மன்றம் புரிந்துகொள்ளவில்லை போலும்! இடப்பற்றாக்குறை (இப்போது அதை சொல்ல முடியாது), நீதிபதிகள் பற்றாக்குறை போன்ற ஒப்புச் சாட்டுக்களை தவிர உருப்படியான பதிகள் எதுவும் கிடைக்கும் என்கின்ற நம்பிக்கை இல்லை!! 

பொலிசாரால் காலை எட்டு முப்பதுக்கு அழைத்துவரப்பட்டிருந்த கூமுட்டைக்கு மதிய உணவு இடைவேளையில் சிலருடன் பேசவும் சந்தர்ப்பம் கிடைத்தது!! அவர்களில் முக்கியமானவர்கள் ஜீவனாம்சமாக மாதாமாதம் குறிப்பிட்ட பணத்தொகையை மன்றத்திற்கு செலுத்தும் ஆண்களில் ஒருவர்; பருமனான தோற்றம்  உடல் உழைப்பால் ஜீவனாம்சம் செலுத்துபவர் அவர்; 16 வருடங்களுக்கு மேலாக பணம் செலுத்திக் கொண்டிருக்கின்றார்!  இதில் என்ன கொடுமை என்றால் அவர் மாதமாதம் இதற்கென கிட்டத்தட்ட முழுநாளை செலவழித்து நீதிமன்றம் வரவேண்டி உள்ளது!! இப்படியானவர்களது எண்ணிக்கை அதிகம், இவர்களுக்கு தனியான பிரிவில் அல்லது போலிஸ் பிரிவில் வைத்து பணத்தை பெற்றுக் கொடுத்தால் எவ்வளவு நேரம்/அலைச்சல்  மிச்சமாகும்?

அத்துடன் இவர்களில் பெரும்பாலானவர்கள் மிகவும் வறியவர்கள்; குடும்பத்துடன்  சேர்ந்து குடும்பம் நடத்தும்போது தினமும் வரும் பணத்தை கொண்டுதான் குடும்பத்தை ஓட்டுவார்கள்; அதனால் மாதம் போகும் செலவு பெரிதாக தோற்றாது!! ஆனால் மொத்தமாக ஒரு முழுத் தொகையை ஜீவனாம்சமாக மாதாமாதம் கொடுப்பதென்பது இவர்களுக்கு மிகுந்த சிரமமானது!! அதேநேரம் இந்த பணமில்லாமல் பிள்ளைகளை வளர்ப்பதென்பது மனைவிகளுக்கும் மிகவும் சிரமமானது என்பதையும் சற்றும் மறுப்பதற்கில்லை; அந்த இடத்தித்தான் விவாகரத்து நடைமுறை ரீதியில் எவ்வளவு  அலைச்சலையும் விரக்தியையும் கொடுக்கும் என்பதை புரிந்துகொள்ள முடியும்!!  உடல்நிலை சரியில்லாவிட்டால் கூட பணத்தை கொடுக்கவேண்டும் என்னும் நிலையில் பல அன்றாடம் காய்ச்சி ஆண்கள் மிகவும் சிரமப்படுவதுவும் உண்மை!! ஆணுக்கு சமனான  பெண் விடுதலை பற்றி பேசும் புதுமைப் பெண்களின் ஜீவனாம்சம் பற்றிய நிலைப்பாடுதான் என்ன? என்பதையும் அறியும் ஆவலும் அங்கே தோன்றியது!

அடுத்து கூமுட்டை வியந்த மற்றொரு விடயம் வக்கீல்கள் மன்றுக்குள்  வரும்போதும், வெளியே போகும்போதும் நீதிபதியை நோக்கி கூளக்கும்பிடு போடுவதுதான்!! ஒருநாளைக்கு ஒருதடவை விஷ் பண்ணினால் போதாதா? என்றோ எவரோ கொண்டுவந்த அடிமைத்தனம் போன்ற செயற்கையான மரியாதை கொடுக்கும் சட்டத்தை 2012 இலும் மறுபரீசலனை செய்யாமல் ஒருநாளைக்கு 50 தடவை கூளக்கும்பிடு பூத்தல் கொலஸ்ரோலை குறைக்க நல்ல உடற்ப்பயிர்ச்சியாக நல்லவிடயமன்றி  சாதாரண மனிதத்தன்மைக்கு அப்பாற்பட்ட  தேவையற்ற செயற்பாடோ என்கின்ற தோற்றத்தை ஏற்படுத்துகின்றது!! தான் படித்த விடயங்களை சரியானமுறையில் தீர்ப்பாக வெளிப்படுத்தவேண்டிய பொறுப்பில் உள்ள  நீதிபதியும் மனிதர்தானே!! மனித உயர்களை பாதுகாக்கும், இவர்களைவிட அதிகமான கல்விச்சுமையை தன் மேல் ஏற்றிக்கொண்ட வைத்தியருக்குகூட இப்படியான கூளக்கும்பிடுக்கள் விழுவதில்லை; அடிமைத்தனம் நீதிமன்றில் இருந்தே ஆரம்பிப்பது வேதனை!!


வாய்தா!!!!!  குற்றவாளி என ஒப்புக்கொண்டால்  தண்டப்பணம்/சிறைத்தடனை; மற்றையபடி வாய்தா வாய்தா வாய்தா....  20 லட்சம் பெறுமதியான நகை களவுசெய்த திருடனை சாட்சிகளோடு பிடித்துக்கொடுத்தும் குற்றம் நிரூபிக்கப்படாமல் வாய்தா கொடுத்து கொடுத்து  வழக்கை மாதக்கணக்கில் இழுத்தடித்தமையால்  தாமாகவே வழக்கிலிருந்து விலக்கிக்கொண்ட குடும்பமும் நிஜத்தில் உண்டு!!  வழக்குகள்  மாதக்கணக்கில், வருடக்கணக்கில் நிலுவையில் தேம்புவதாலும், வாய்தாக்களாலும்தான் மக்கள் நீதிமன்றை நாடவே பயப்படுகின்றார்கள்!! சமரசத்தில் பிரச்சனைகளை முடித்து நீதி பெறாமலே  பெரும்பாலான வழக்குகள் முடிக்கப்படுகின்றன! வக்கீல்கள் தமது கட்சிக்காரருடன் வெளியில் பேசும் பேச்சுக்கள் கொடுக்கும் நம்பிக்கையை பெரும்பாலும் வாய்தாக்கள் தகர்த்துவிடுகின்றன!! வக்கீலுக்கு கட்சிக்காரர் மூலம் ஒவ்வொரு அமர்வுக்கும் கட்டணம் கிடைக்கின்றது, ஆனால் கட்சிக்காரருக்கு?

வக்கீல்களும் சும்மா அல்ல!!  இரு தரப்பிலும் முதல் நான்கு, ஐந்து  வாய்தாக்களுக்கும் வழக்காட கட்டணம் வாங்கிவிட்டு இறுதியில் இரண்டு கட்சிக்காரர்  பக்கத்து வக்கீல்களும் இரு கட்சிக்காரரையும் சமாதானப்படுத்தி  அனுப்புவது மிகப்பெருமளவான வழக்குகளில் இடம்பெறும் சம்பவம்!!  நேரவிரயம், பணவிரயம், மன உளைச்சல் போன்றவைதான் நீதிமன்றங்களில் நீதியைவிட அதிகமாக கிடைக்கின்றன!!! அதைவிட கொடுமையானது வக்கீல்களின் ஆங்கில மொழியிலான  வாதாட்டம்!! வராத இங்கிலீசை வா வா என்று அவர்கள் செய்யும் அலப்பறை பார்க்கவே சகிக்கமுடியாத ஒன்று!!  குறித்த மொழிப்பிரதேசத்தில் வேற்றுமொழி போலீஸ்காரன் தன் மொழியில் குற்றத்தை பதிவுசெய்து கொள்ளும்போது; தனது பிரதேசத்தில், தனது கட்சிக்காரருக்கு முன்னால், தன்மொழி பேசும் நீதிபதி முன்னிலையில் எதற்கு வலிந்த ஆங்கிலம் பேசவேண்டும்?

அடுத்து முக்கியமான விடயம் சுகாதாரம்!!! சாதாரண இடங்களில் இருக்கும் உணவகங்களுக்கு சுகாதார உத்தியோகஸ்தர்கள் விதிக்கும் சுகாதார அழுத்தங்களும் தண்டனைகளும்  நீதிமன்றத்தில் உள்ள தேனீர் விடுதிக்கு  பொருந்தாதா?  உணவுகளை கைகளால் எடுத்துக்கொடுக்கும் பழக்கம் தண்டனைக்குரியதாக இருக்கும் பட்சத்திலும் அவை நீதிமன்றில்  நடைமுறைப்படுத்தப்படுவதில்லை!! அடுத்து மலசலகூடம் தேநீர் விடுதிக்கு 10 அடி தூரத்தில் உள்ளது!!! அங்கு நிலமட்டத்தில் இருந்து 5cm அளவு உயரத்திற்கு நீர் தேங்கியுள்ளது; நீளக்காற்சட்டையை மதித்துத்தான் உட்செள்ளவேண்டும்; பொது இடங்களில் உள்ளவைபோல  கதவு தாழ்ப்பாளும் அவுட்!!! அடிப்படை சுகாதாரமே நீதிமன்றில் காற்றில் பறக்கின்றது வேதனை!!!

இங்குதான் இப்படியென்றால் விளக்கமறியல்களின்  கொடுமையை கேட்கவே வேண்டாம்!! போலிஸ் ஸ்டேசனிலும், நீதிமன்றிலும்  இருக்கும் 10 க்கு 10 அறையில் 15 பேரை ஒன்றாக பூட்டிவைப்பது என்பது மிகவும் கொடுமையானது!! அதிலும் போலிஸ் ஸ்டேஷன்களில் மலசலம்  கழிப்பதும் அதே அறையில்த்தான், அனைவர் முன்னிலையில்!!  சந்தேக நபர்களை, குற்றம் நிரூபிக்கப்படாதவர்களை எப்படி இப்படியான ஒரு மனவுளைச்சலுக்கும், மனநோய்க்கும் ஆளாக்ககூடிய  சூழலில் அடைத்து  அடிப்படை சுகாதாரம்/மனித உரிமைகளை மீறவேண்டும்!!  ஏன் அவர்களை மிருகங்களைப்போல நடத்த வேண்டும்!!  நாளை அவன் சுற்றவாளி என நிரூபிக்கப்பட்டால் அவன் அனுபவித்த நரகவேதனைக்கு சட்டமோ, அரசோ என்ன பதில் சொல்லப்போகின்றது?  எந்த குற்றமும் செய்யாதவன் மனநிலையை நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை!!   தண்டனைகள் வழங்கப்படும்வரை  இப்படியான கைதிகளுக்கு அடிப்படை சுகாதாரம், காற்றோட்டம், தூய்மையான உறைவிடம் அவசியமானதா? இல்லையா? கைதிகளும் மனிதர்கள்தானே!!


மனிதமனம் ஒவ்வொருவருக்கும் மாறுபட்டது, இந்த விடயத்தால் மனதின் வலிமையை இழக்கும், மன உளைச்சலுக்கு உள்ளாகும்  ஒருவருக்கு என்ன நஷ்டஈடு கொடுத்தாலும் ஈடுசெய்யமுடியாது!!  இங்கே இப்படியென்றால் சிறைச்சாலைகளில் நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை!! குற்றம் செய்பவனை தண்டிக்க மட்டுமா சட்டம்? அவனை நல்வழிப்படுத்துவது, மறுசீரமைப்பது சட்டத்தின் வேலை இல்லையா? அடிப்படை  மனிதவசதிகள், சுகாதாரம் இல்லாத ஒரு தண்டனையை கொடுக்கச் சொல்லியா சட்டம் சொல்கின்றது? அல்லது  சட்டம் இவற்றை ஒரு பொருட்டாக  எடுத்துக்கொள்ளவில்லையா? 

அடுத்த மிகப்பெரும் சந்தேகம் என்னவென்றால் நீதிமன்றங்கள் நீதிகளை கொடுக்கவா? அல்லது வக்கீல்களின் திறமையான வாதத்திற்கு அங்கீகாரம் கொடுக்கவா?  எந்த வழக்காக இருந்தாலும் இவர் இலகுவாக வெளியே எடுத்துவிடுவதாக ஓரிரு வக்கீல்களின் பெயரை  சொல்கின்றார்கள்; அப்படியானால் சட்டம் சார்ந்திருப்பது எதனில்? மருத்துவம் ஒருவரின் உயிர் சம்பந்தப்பட்டதென்றால்  சட்டம் வாழ்க்கை சம்பந்தப்பட்டது; தவறான ஒருவருக்கு பணத்திற்காக வக்கீல்கள் தம் திறமையை காட்டும்போது  எப்படி நீதி தழைக்கும், சமூகம் சிறக்கும்? கொள்ளைக்காரரும், கொலைகாரரும், ரௌடிகளும், லஞ்சப்பேர்வழிகள்  தாம் மாட்டினாலும் தப்பித்துக் கொள்ளலாம் என்கின்ற நம்பிக்கையில் தவறு செய்வதற்கு தூண்டும்  மறைமுகமான மூலகாரணிகளே  திறமையான வக்கீல்கள்தான் என்பதை மறுக்க முடியுமா?

அரச மருத்துவமனை, தபால் நிலையம், கச்சேரி, வங்கிகள் எப்படி அசட்டையீனமாக  இயங்குகின்றனவோ அதற்கு சற்றும் குறைவில்லாமல் இயங்குகின்றன நீதிமன்றங்கள்!! ஒரு முக்கியமான தேவையின் நிமித்தம் ஒரு கேள்வியை கேட்டு அங்கிருக்கும் ஊழியரிடமிருந்து பதிலை பெறுவதென்பது கல்லில் நார் உரிப்பதை போன்றது; காரணம் அவர் ஒரு அரச ஊழியர்!!!  இவர்களுக்கு எங்கிருந்து இந்த ஆணவமும், அசட்டையீனமும் பிறக்கின்றனவோ தெரியவில்லை!!   இங்கு வேலைசெய்யும் ஊழியர்களை (போலீசார் உட்பட) பார்க்கும்போது தனியார் வங்கி, தனியார் மருத்துவமனை போன்று நீதிமன்றங்களையும் தனியார் மயப்படுத்தினால்  பரவாயில்லையோ என  கேவலமாக எண்ணத் தோன்றுகின்றது!!

ஒரு நாட்டின் வளர்ச்சி என்பது தனி மனிதர்களிடமும், சமூகத்திடமும் தங்கியுள்ளது எவ்வளவு  உண்மையோ; அதேயளவிற்கு அரசிலும், அரசுசார்ந்த நிர்வாகங்களிலும்  தங்கியுள்ளது!!! அரச திணைக்களகங்கள், நிறுவனங்கள், கூட்டுத்தாபனங்கள் சரியாக, சற்று வேகமாக இயங்க தொடங்கினாலே மாற்றம் அசுரவேகத்தில் இடம்பெறும்!! ஆனால் இங்கு இவை  இருக்கும் நிலைகளை பார்க்கும்போது 3000 ஆம் ஆண்டிலும் சாத்தியமாகுமா என்று தோன்றவில்லை!!


குறிப்பு -: நீதிமன்றில் கூமுட்டை பார்த்த ஒரே நல்ல விடயம்;  உடல்வளர்ச்சி அடைந்த 18 வயது நிரம்பாத ஒரு சிறுவனை திட்டமிட்டு அனுப்பி ஒரு கடையில் சிகரெட் வாங்குவித்து குறிப்பிட்ட கடை உரிமையாளரை மன்றுக்கு அழைத்துவந்த போலிஸ்காரருக்கு விழுந்த டோஸ்தான்; அதிலும் இனிமேல் "டாக்கேட் காட்டணும் என்கிறதுக்காக  இப்படியான சீப்பான வேலைகள் செய்யவேண்டாம்"  என போலீசாரை அதட்டி சொன்னது சற்று ஆறுதல்; ஆனாலும் சட்டம் தன் கடமையை செய்து அந்த நபரிடமிருந்து  1000 ரூபாவை தண்டமாக பெற்று  நாட்டின் வளர்ச்சிக்கு பெருந்துணையாற்றியது :-))

குறை சொல்லவேண்டும் என்பது கூமுட்டையின் நோக்கமல்ல; சிலவிடயங்கள் பார்க்கும்போது சரியாகப்படவில்லை; தனக்கு ஏற்பட்ட விரக்தியை, கோபத்தை, வெறுப்பை; அதற்கான தீர்வை பொதுவில் முன்வைப்பதே அவனின் நோக்கம்!! அரை நாளிலே இவளவு என்றால் தினமும் அங்கு இருப்பவர்களுக்கு  இன்னும் எத்தனையோ அடிப்படை பிரச்சனைகள் தவறென  கண்முன் தெரியும்; அவர்களுக்கும்  இதே உணர்வு வருமா? அப்படி வந்தால்இனிமேலும் அவற்றை  காற்றில் விடாமல் அவர்களுக்கென்று உரிய நேரம்/பதவி வரும்போதே ஏதாவதொரு  ஒரு விடயத்தை ஒருவர் சீர் செய்தாலே மாற்றங்களை கொண்டு வரலாம்!! மாற்றம் ஒன்றுதானே மாறாதது :-))

முக்கிய குறிப்பு -: சட்டவல்லுனர்களே நோட் பண்ணிக்கோங்க; இது கூமுட்டை என்பவன் ஹிஸ்றீரியா என்னும் நாட்டில் தனது அரைநாள் நீதிமன்ற அனுபவத்தை சொல்வதுபோல சித்தரிக்கப்பட்ட கற்பனை பதிவு!!  ஆமா எங்க நாட்டில எப்படி நீதிமன்றங்கள் இயங்குகின்றன?!!!

*...............*

6 வாசகர் எண்ணங்கள்:

Unknown said...

முடியல.... :D

இவ்ளோ அக்கப்போருக்கு பயந்து தான் ஆன் த ஸ்பாட் கையூட்டு கொடுத்துவிட்டு தப்பிக்கின்றார்கள் போலும்!

அந்த ஒரே ஜெயிலில் பலரை அடைத்து வைப்பது,கழிவறையும் அதனுள் தான் என்கின்ற விடயம் அனுபவித்தால் தான் புரியும் சகோ!
நான் ஒரு 12 மணி நேரம் அதனை அனுபவித்தேன் கொழும்பில் வந்த புதிதில்.
நல்ல காலம் அது இரவு என்கின்றதால் தூக்கத்துடன் கழிந்தது.அல்லாவிட்டால் அதுவே ஒரு மனதளவிலான விரக்தியை தருகின்ற சம்பவம்.

Unknown said...

//வாங்கிலில்(உட்காரும் நீண்ட கதிரை) நிமிர்ந்து உட்க்காரும்படியும், கைகளை கட்டியோ, முன்னால் இருக்கும் கதிரையில் பிடித்துக்கொண்டோ இருக்ககூடாது என்றும், கைகள் கீழே இருக்கவேண்டும் என்று சொல்லிக்கொடுத்துக்கொண்டு இருந்தார்கள்; அப்பப்போ மறந்து கைகளை கட்டுபவர்கள் மீண்டும் மீண்டும் கைகளை கீழே விடும்படி பணிக்கப்பட்டுக் கொண்டிருந்தனர்; அந்த நேரத்தில் நீதிபதி அவர்கள் சாட்சிகளின் விசாரணையை சாயமனை கதிரையில் பக்கவாட்டில் சாய்ந்திருந்து அவதானித்துக்கொண்டிருந்தார்!! //

எங்க நாட்டில, நாங்க படங்கள்ல எல்லாம் சட்டத்துக்கு முன்னாள் அனைவரும் சமம்னு சொல்றதை பாத்திருக்கோம்! ஒருவேளை ஹிஸ்டீரியா நாட்டில அப்பிடி இல்லையோ?

Unknown said...

'கும்பிடு கள்ளன்' என்றொரு சொலவடை எங்கள் நாட்டில் பாவிக்கப்படுவதுண்டு! அதுகூட நீதிமன்றங்களில் இருந்துதான் தோற்றம் பெற்றதோ என்னமோ!
மற்றபடி வக்கீல்கள் கும்பிடுவது பற்றி என்னிடம் கருத்து ஏதுமில்லை.

Unknown said...

//ஆணுக்கு சமனான பெண் விடுதலை பற்றி பேசும் புதுமைப் பெண்களின் ஜீவனாம்சம் பற்றிய நிலைப்பாடுதான் என்ன? என்பதையும் அறியும் ஆவலும் அங்கே தோன்றியது!//

அவ்வளவு நாளும் அடிமைப்படுத்தியதற்கு நஷ்ட ஈடுன்னு புரச்சிகரமா திங் பண்ணனும் பாஸ்!

சம்பந்தப்பட்ட ஆணிடம் நேரடியாக, நேர்மையாகக் கேட்டால் அது அடிமைத்தனம்!

"அவன்கிட்ட கேட்டு, அவன் தந்து, நாம் என்ன வாங்கி" அப்பிடின்னு புரச்சிகரமா திங் பண்ணி நீதிமன்றம் போய் வாங்கினா அதுதான் பெண்ணுரிமை! அவர்தான் புர்ச்சிப் பெண்!

"ராஜா" said...

ஹிச்டீரியாள மட்டும் இல்லை மேப்பிள ஹிச்டீரியாக்கு மேல இருக்கிற நாட்டுலையும் நீதிமன்றம் இப்படிதான் இருக்கும்

அகலிக‌ன் said...

"மருத்துவம் மனிதஉடலுக்குசட்டம் வாழ்க்கைக்கு"
சூப்பர்.
நீதித்துறையும், நீதிபதிகளூம் விமர்சனங்களுக்கு அப்பார்பட்டவர்கள் என்றநிலையில் புலம்புவதைத்த‌விர என்ன செய்துவிட முடியும் சாமானியன். ஆனா எங்க நாட்டுல கதாநாயகர்கள் நீதிமன்றத்தில பக்கம் பக்கமா வசனம் பேசுவாங்க, சில சமயம் நீதிபதியே எழுந்துநின்னு கைதட்டுவார்னா பாத்துகங்களே. ஆடியன்ஸ் எதிர்கட்சி வக்கீளை கிண்டல்கூட பண்னுவாங்க.

Post a Comment

"கருத்துக்கள், நிறைகுறைகள், திட்டுக்கள், பாராட்டுக்கள் போன்றவற்றை கூற விரும்புபவர்கள் கீழுள்ள பின்னூட்ட பெட்டியில் பின்னூட்டலாம்; பதிவுகளை வாசிக்காமல் இடப்படும் டெம்பிளேட் பின்னூட்டங்கள் வேண்டாம் நண்பர்களே."

*******************

வடை, வாழைப்பழம், சூப்பர், கலக்கல் என மொய் வைக்க வரும் நண்பர்களுக்கு; நான் யாருக்கும் பதிலுக்கு மொய் வைக்க மாட்டேன்.(இதனால் ஏற்ப்படும் தர்ம சங்கடத்திற்கு வருந்துகின்றேன்)