Monday, March 5, 2012

இலங்கை கிறிக்கட் அணியை ரசிக்கும் தமிழர்கள் துரோகிகளா?!!!!





இலங்கை கிறிக்கட் அணியை ரசிக்கும் இலங்கை தமிழர்களை துரோகிகள், சிங்களவனுக்கு செம்பு தூக்குபவர்கள், தம் இனத்து மீது அக்கறை இல்லாதவர்கள் போன்ற சொற்களால் காயப்படுத்தும் தமிழ் உணர்வு மிக்க 'சில' ஆசாமிகளுக்காகவே இந்தப்பதிவு. இலங்கை அணி பற்றி நல்ல முறையில் ஒரு கருத்தை தனது முகநூலிலே ஒரு நண்பர் வெளியிட்டிருந்தார்!!! அவருக்கு அவருடைய நண்பர்களில் ஒருவரிடமிருந்து "இலங்கை அணிக்கு ஆதரவாக கருத்து தெரிவித்தால் நண்பர்கள் பட்டியலில் இருந்து தூக்கிவிடுவேன்" என்று மிரட்டல்; சில நேர விவாதத்தின் பின்னர் அவர் சொன்னதை செய்துவிட்டார்!!! இவர் மட்டுமல்ல, இவரை போன்ற இன்னும் சிலரும் சமூக தளங்களில், நண்பர்களில், சமூகத்தில் எம்முடன்தான் வசிக்கின்றார்கள். இவர்களது பேச்சுக்களை, செய்கைகளை சாதாரணமான விடயம் என்று ஒதுக்கிவைக்க முடியாது....

அதிலும் இவர்களுக்கு இனப்பற்று இலங்கை நன்றாக விளையாடும்போதுதான் அதிகரிக்கும்!!! இலங்கை உதை வாங்கும்போது நமட்டு சிரிப்பு சிரிக்கும் இவ்வகை ஆசாமிகளுக்கு இலங்கை வெற்றி பெறும்போதுதான் எம்மை பார்த்தால் தமிழ் இன உணர்வு மூக்கு, வாய், கண், காது, ..... என உடம்பின் ஒன்பது துவாரங்களின் ஊடாகவும் வழியும்!!!! இலங்கை அணிக்கு ஆதரவாக, இலங்கை அணியை ரசிப்பவர்கள் துரோகிகள் என்றால் இலங்கை தமிழர்களில்(கிறிக்கட் பார்ப்பவர்களில்) பாதிப்பேர் துரோகிகள்தான்!!!! டீ கடை முதல், பாடசாலை, பல்கலைகழகம், அலுவலகம் என கிறிக்கட் பற்றி இலங்கை தமிழர்கள் விவாதிக்கும் இடங்களில் எல்லாம் இலங்கை கிறிக்கட் அணியின் ரசிகர்கள் பாதிப்பேராவது இருப்பார்கள்!!!! அப்படியானால் அந்த பாதிப்பேரும் துரோகிகளா? இலங்கைக்கு அல்லாமல் வேறு அணிகளை ரசிப்பவர்கள் அனைவரும் தமிழ் இன உணர்வாளர்களா?

இலங்கை அரசை எதிர்க்கும் இலங்கை தமிழர்களில் பாதிப்பேர் எப்படி இலங்கை கிறிக்கட் அணிக்கு ரசிகர்களாக இருக்கின்றார்கள் என்கின்ற சந்தேகம் இந்திய நண்பர்கள் சிலருக்கும் ஏற்ப்படலாம்!!! ஆச்சரியமாக கூட இருக்கலாம்!!! சிலருக்கு கோபம்கூட வரலாம்!! இலங்கை கிறிக்கட் அணிக்கு பல இலங்கை தமிழர்கள் ரசிகர்களாகிய காலம் 1996 காலப்பகுதிதான்; அன்றைய நாட்களில் கிட்டத்தட்ட ஒட்டுமொத்த யாழ்ப்பாணமும் பாரிய இடம்பெயர்வை சந்தித்திருந்த நேரம்; உடைமைகள், சொத்துக்கள் போன்றவற்றை இழந்த நிலையிலும் அன்று பாதி இலங்கை தமிழர்கள் இலங்கை கிறிக்கட் அணிக்கு ரசிகர்களாக இருந்தார்கள் என்பது ஆச்சரியமான உண்மை. அதற்க்கு முக்கியகாரணம் இனப்பிரச்சனையையும் கிறிக்கட்டையும் அதிகமானவர்கள் ஒன்றுபடுத்திப் பார்க்கவில்லை என்பதுதான்.......



சர்வதேச கிறிக்கட் சாதரணமாக 10 - 12 வயதிலே அதிகமானவர்களுக்கு அறிமுகமாகிவிடும்; அப்போதைய நிலையில் எந்த அணி சிறப்பாக ஆடுகின்றதோ, எந்த வீரர் மனதை கவர்கிராரோ ; அந்த அணி, அந்த வீரர் சார்ந்த அணி பிடித்தமான அணியாக மனதில் பதிந்துவிடும்; அதனை அவ்வளவு சுலபமாக யாராலும் மாற்ற முடியாது. குறிப்பிட்ட அணி மோசமான நிலையில் இருக்கும்போதுகூட அதிகமானவர்கள் சிலகாலம் கிறிக்கட்டை பார்க்காமல் இருப்பார்களே அன்றி; அந்த அணியை விடுத்து வேறொரு அணிக்கு ரசிகர்களாக தம்மை மாற்றிக்கொள்ள மாட்டார்கள் (சில சந்தர்ப்பவாதிகளை தவிர்த்து)

இவை தவிர்த்து தமது நாட்டு அணி மீது அதிகமானவர்களுக்கு இயல்பிலேயே பிடிப்பு ஏற்படுவது இயற்கை; அதனால்த்தான் பங்களாதேசில் அவுஸ்திரேலியா ஆடும்போதும் அந்நாட்டு ரசிகர்கள் தங்கள் அணியினருக்கு ஆதரவாக மிகப்பெரும் ஊக்கத்தை கொடுக்கிறார்கள்!!! இலங்கை தமிழர்களும் அதற்கு விதிவிலக்கல்ல; என்னதான் அரசினால் பிரச்சனைகள் இருந்தாலும் சிறுவயதில் பாடசாலையில் தொடக்கம் ஒரு விண்ணப்பபடிவம் நிரப்புவது வரையில் எமதுநாடு - இலங்கை என்றே சொல்லி எழுதிப் பழகிவிட்டோம்!!!! வரலாறு, சமூககல்வி என சிறுவயது முதல் இலங்கைதான் எமதுநாடு என்பதை கல்வியும் அடிமனதில் ஏற்றிவிட்டது; அந்த வயது இனப்பிரச்சனை, நாட்டுப் பிரச்சனை எதுவும் புரிகிற வயதில்ல; ஆனால் அவற்றை புரியும் வயது வரும்போது கிறிக்கட்டையும், நாட்டுப்பிரச்சனையும் ஒன்றுபடுத்தி பார்த்தால்கூட அதிலிருந்து வெளிவர முடியாது!!!

என்னதான் கிறிக்கட் வேறு, நாட்டுப் பிரச்சனை வேறு என்று சொன்னாலும் ஒருசில மோசமான சம்பவங்கள் நிகழ்ந்தபோது இனிமேல் இலங்கை கிறிக்கட்டை ரசிப்பதில்லை என்று முடிவெடுத்து சிலகாலம் ஒதுங்கியிருந்தாலும், மனதளவில் ஒதுங்க முடியாது!! ஒரு சிறந்த போட்டி ஒன்றை வெற்றி பெறும்போதோ, அல்லது தனிமனித சாதனை நிகழும் போதோ மனம் அனைத்தையும் மறந்து மீண்டும் இலங்கை கிறிக்கட்டை வெளிப்படையாக ஆதரிக்கும்!!! மது, மாது மீதான காதல் போலத்தான் கிறிக்கட்டும்; பிரச்சனைகள் வரும்போது இனிமேல் அந்த பக்கமும் போவதில்லை என்று அந்த கணம் தோன்றும், சில நாட்களிலேயே மனதுக்குள் ஏக்கம் உண்டாகிவிடும்; ஆனால் வெளியில் காட்டிக்க முடியாது, பின்னர் ஒரு சந்தர்ப்பத்தில் எல்லாவற்றையும் மறந்து ஐக்கியமாகிவிடுவார்கள். (சூதாட்டம் பிடிபடும் சந்தர்ப்பங்கள்; மோசமான தோல்விகளில் பிடித்த அணி தவிக்கும்போது ஏனைய நாட்டு ரசிகர்களுக்கும் இதே மனநிலை வந்திருக்கலாம்)



ஒருசிலருக்கு கிறிக்கட் குடும்ப உறவுகள், நண்பர்கள், சமூகம் மூலமாகவும் அறிமுகமாகும்; உதாரணமாக சொல்வதானால் அப்பா, அண்ணன், நண்பன், அயலில் உள்ள பிடித்தமானவர் ஒருவர் எந்த அணிக்கு, வீரருக்கு அதரவாக ரசிக்கிறாரோ அதையே தனக்கு பிடித்ததாக சிறுவயதில் உருவாக்கி கொள்ளும் கிறிக்கட் ரசிகர்களும் இருக்கின்றார்கள். தாமக கிறிக்கட்டை அறிகிறார்கள! இன்னொருவரால் அறியப்படுத்தப் படுகிறார்களோ! அதிகமானவர்களுக்கு தமது முதல் பார்வையில் பிடிக்கும் அணிதான் அதிகமாக இறுதிவரை அபிமான அணியாக இருக்கும்!!! என்னுடைய நண்பர்களில் பல இந்திய, பாகிஸ்தான், தென்னாபிரிக்க, அவுஸ்திரேலிய, இங்கிலாந்து ரசிகர்கள் (வெறியர்கள்) இருக்கின்றார்கள்; இவர்களில் 90 % ஆனவர்கள் அந்த அணியின்மீது, அணிவீரர்கள்மீது ஏற்ப்பட்ட ஈர்ப்பினால் அந்த அணிகளை ரசிக்கின்றார்களே அன்றி நாட்டுப் பிரச்சனையால் அல்ல!!!!

அதிலும் இலங்கை அணிக்கு ரசிகர்களாக இருப்பவர்களை நாட்டு பிரச்சனையை சுட்டிக்காட்டி ஏளனம் செய்யும் சிலர் அதே காரணத்திற்காக இந்திய அணிக்கு ரசிகர்களாக இருப்பதுதான் காமடியின் உச்சம்!!! இந்தியா தமிழர்களின் அணியா? இல்லை இந்தியாவிற்கும் இலங்கை தமிழர்களின் பிரச்சனைகளுக்கும் சம்பந்தம்தான் இல்லையா? அரசியல், இனப்பிரச்சனை என்று பார்த்தால் இலங்கை தமிழர்களால் இலங்கை, இந்தியா என்று இரண்டு நாட்டு அணிகளுக்கும் ரசிகர்களாக இருக்க முடியாது!!! இன்றைக்கு இலங்கை தமிழர்களில் இந்திய ரசிகர்களாக இருப்பவர்களில் அதிகமானவர்கள் இந்திய அணியை நேசிக்க முக்கிய காரணம் இனப்பிரச்சனை அல்ல, சச்சின்!!!! இன்னும் சிலர் கிறிக்கட்டே தெரியாமல் இனப்பிரச்சனைக்கும் கிறிக்கட்டுக்கும் முடிச்சுப்போட்டு இந்தியாக்கு வலிந்து சென்று ஆதரவு அளிப்பதாக காட்டிக்கொள்கின்றார்கள்; அவர்களை பற்றி அலட்டிக்கொள்ளாமல் இருப்பதே சிறந்தது.....

இலங்கை கிறிக்கட் அணிக்கு ஆதரவாக இருப்பதால் "நாட்டு பற்று அதிகமாக உள்ளதோ"? என்று நண்பர் ஒருவர் கேட்டார்; அது நாட்டுப் பற்றல்ல, கிறிக்கட்மீதான பற்று, அது நான் சார்ந்த நாட்டு அணிமீதுள்ளதால் அப்படி தோன்றுகின்றது. உண்மையை சொல்வதானால் இலங்கை தமிழர்களில் பலருக்கு 'நாடுப்பற்று இல்லை என்று சொல்வதைவிட, பற்றுவைக்க ஒரு நாடு இல்லை' என்பதே உண்மையான ஏக்கம்!!! இனம், மதம், மொழி தாண்டி நேசித்தால்த்தான் கிறிக்கட்டை கிறிக்கட்டாய் ரசிக்க முடியும்... ஓரணியிலேயே முரளிதரன் என்னும் 'தமிழ்' பந்துவீச்சாளர் உலக சாதனைகளை நிகழ்த்தியபோதும்; முரளியைவிட அதே அணியின் 'சிங்கள; வீரர் சமிந்த வாஸை அதிகமாக நேசித்த தமிழர்களும் இருகின்றார்கள்! அதேநேரம் முரளியை கொண்டாடிய சிங்களவர்களும் இருக்கின்றார்கள்; அதேபோல ஜெயசூர்யாவை கொண்டாடிய முஸ்லிம்களும் இருக்கின்றார்கள். கிரிக்கட்டில் அரசியல் அப்பப்போ இருந்தாலும்; அதிகமான ரசிகர்கள் ரசித்தது கிறிக்கட்டை அன்றி, அரசியலை அல்ல!!!!!

எனக்கு இலங்கை அணியை எப்படி/ஏன்/எபோதிலிருந்து பிடித்தது......




10 வயதிலில் நண்பர்களுடன் ஊரிலே கிறிக்கட் விளையாட தொடங்கிய எனக்கு 13 வயதில்தான் சர்வதேச கிறிக்கட் ஓரளவுக்கு அறிமுகமாகியது; அதுவரை உள்ளூர் போட்டிகளில் ஆடும் வீரர்கள் பெயர்தான் பரிச்சியம், பிடித்த வீரர்களும் அவர்கள்தான் (இன்றும் அன்றைய வீரர்களின் பெயர்களும், சில போட்டிகளும் பசுமையாக ஞாபகத்திலே உள்ளது) சர்வதேச வீரர்களின் பெயர்களில் முதலில் நான் அறிந்த வீரர்கள் இலங்கை அணியினர்தான்!!! ஆனாலும் எந்த போட்டியும் பார்த்ததில்லை. 1996 ஆம் ஆண்டு நாட்டு பிரச்சனையால் இடம்பெயர்ந்து ஒரு குடிசை அமைத்து சாவகச்சேரியில் தங்கியிருந்த காலப்பகுதியில்த்தான் உலக கிண்ண போட்டிகள் ஆரம்பமானது!!

மின்சாரம், டிவி எதுவுமே இல்லாத காலப்பகுதி என்பதால் வானொலிதான் ஒரே பொழுதுபோக்கு!!! உலககிண்ண போட்டிகளின் வர்ணனையும் வானொலியில்த்தான் கேட்போம்; 5 ஓவர்கள் ஆங்கிலத்திலும், 5 ஓவர்கள் சிங்களத்திலும் வர்ணனை சொல்லப்படும்; சிங்களம் தெரியாததால் வர்ணனை சொல்லும் வர்ணனையாளரின் 'ஒலி'யின் அளவை வைத்துதான் சிலநேரங்களில் என்ன நடந்தது என்பதை அன்று ஊகிப்போம்; இந்நிலையில் இறுதிப்போட்டியில் இலங்கை விளையாடும் தகுதி பெற்றது, இறுதிப் போட்டி என்பதால் அருகில் இருந்த ஒரு வீட்டில் ஜெனரேட்டர் மூலம் மின்சாரம் உருவாக்கி டிவியில் மச் போடப்பட்டது; மிக அதிகமான ரசிகர்கள், கிட்டத்தட்ட அத்தனைபேரும் இலங்கைக்குத்தான் ஆதரவாக இருந்தார்கள்....

முதல் இன்னிங்க்ஸ் அவுஸ்திரேலியா பட்டிங் பெரிதாக ஆர்வமிருக்கவில்லை, இரண்டாவதாக இலங்கையின் இனிங்க்சை ஒரு பந்து விடாமல் பார்த்தேன்; அன்றுதான் எனக்கு தெரிந்த பெயர்களின் நிழலை தொலைக்காட்சியில் பார்த்தேன். 3 வயதில் மகாபாரத கதையை விரும்பி கேட்டதால் அர்ஜுனனின் அபிமானியான நான், 6 வயதில் 'மனிதன்' திரைப்படம் பார்த்ததில் இருந்து ரஜினியின் ரசிகனானேன், அன்றைய இலங்கை அணியின் போட்டி பார்த்தது முதல் அரவிந்த டீ சில்வாதான் என்னுடைய 'பேவரிட்' வீரர்!!! இன்றுவரை அரவிந்த மீதான மதிப்பு துளியளவும் குறையவில்லை; சனத், மஹேலா என்று பின்னர் பலரை ரசித்தாலும் எனக்கு எப்போதும் அரவிந்தா தான் ஸ்பெஷல். முதல் முதலில் எனக்கு தாக்கத்தை உண்டாக்கியவர்கள்தான் எனக்கும் எப்போதும் பேவரிட்டாக இருந்துள்ளார்கள்...



அன்று பிடித்த இலங்கை அணி இன்றும் பிடிக்கிறது; இன்று அணிகளை ரசிப்பதை தாண்டி கிறிக்கட்டை ரசிக்கலாம் என்று நினைத்தாலும் இலங்கை மீதான ஈடுபாடு குறையவில்லை!!! நான் இலங்கை கிரிக்கெட் அணியை ரசிப்பதால் இலங்கை விசுவாசி என்றால்; நான் உதைபந்தாட்டத்தில் ஜெர்மனியையும்; மோட்டார் கார் பந்தயத்தில் மைக்கல் ஷூமேக்கரையும் ரசிப்பதால் நான் ஜெர்மனி விசுவாசி!!! டெனிஸில் ரோஜர் பெடரரை ரசிப்பதால் சுவிட்சலாந்து விசுவாசி!!! மோட்டார்சைக்கிள் பந்தயத்தில் வாலன்சீனோ ரோஸியை ரசிப்பதால் இத்தாலிய விசுவாசி!!!! கோல்பில் டைகர் வூட்சை ரசிப்பதால் அமெரிக்க விசுவாசி!!!

இல்லப்பா இலங்கை கிறிக்கட் அணிக்கு நீங்க ரசிகர்களாக இருப்பதால் நீங்கள் எல்லோரும் தமிழ் இன துரோகிகள்தான், நீங்க சிங்களவனுக்கு கொடி பிடிக்கிறவங்கதான், உங்களுக்கு இனப்பற்றே இல்லை... இப்படி என்ன வேண்டுமென்றாலும் சொல்லிக்கோங்க; எங்களுக்கு கவலையில்லை!!! ஏன்னா எங்களுக்கு நாங்க யார்? நாங்க செய்யிறது சரியா? தவறா? என்கின்றதை சிந்தித்து பாக்கிற அளவுக்கு ஏதோ கொஞ்சமாச்சும் புத்தி இருக்கென்று நம்புகிறேன்; அதுவும் இல்லை என்று சொல்கிறீர்களா பரவாயில்லை, சொல்லீட்டு போங்க; உங்களுக்கு அப்படி சொல்வதில் ஒரு அற்ப சுகம் கிடைக்குமென்றால் அதை எதுக்கு நாம் தடுக்கணும்!!!! ஆனால் ஒன்று இதனால் நீங்கள் தமிழ் இன உணர்வாளர்கள் என்றோ, நாம் தமிழ் உணர்வில்லாதவர்கள் என்றோ நீங்க நினைத்தால் VERY SORRY....

18 வாசகர் எண்ணங்கள்:

Think Why Not said...

நடந்த சம்பவத்தை முகப்புத்தகத்தில் நானும் முகப்புத்தகத்தில் அவதானித்து கொண்டு இருந்ததால் இப்பதிவின் பின்னால் உள்ள உணர்வுகளை அறிவேன்...

உங்களைப் போலவே நானும் தீவிர கிரிக்கெட் ரசிகன்(ஒரு குறித்த கோப்பை நடக்கிறதென்றால், அதன் கடந்த சீசனில் அதே கோப்பைக்கு நடந்த போட்டிகளில் ஸ்கோர், யார் Man of the Match எல்லாம் மனப்பாடமாய் சொல்லும் அளவுக்கு, Internet என்பதை கேள்வியே படாத காலங்களில் 93 - 2000. வெறியன் என்பது பொருத்தம்). எப்போது கிரிக்கெட்டை ரசிக்க ஆரம்பித்தேனோ (93-94இல் இருந்தே) அப்போதிருந்தே இலங்கை அணியின் ரசிகன்... நீங்கள் சொன்ன அதே காரணமின்றி வேறில்லை...
/** இவை தவிர்த்து தமது நாட்டு அணி மீது அதிகமானவர்களுக்கு இயல்பிலேயே பிடிப்பு ஏற்படுவது இயற்கை; ........ அந்த வயது இனப்பிரச்சனை, நாட்டுப் பிரச்சனை எதுவும் புரிகிற வயதில்ல; **/
தொடர்ந்து இலங்கை அணி உலகக்கிண்ணத்தை கைப்பற்றவும் இன்னும் அதிகமாக பிடிப்பு ஏற்பட்டது.. அப்போதேற்பட்ட பிடிப்பு 2007 வரை சற்றும் குறையாமல் அதிகரித்து வந்தேயிருந்தது...

இருந்தும் இப்போதெல்லாம் இலங்கை அணிக்கு ஆதவரவளிக்க மனதளவில் ஒப்பாததால் கிரிக்கெட் மீதான பிடிப்பும் குறைந்தேயிருக்கிறது... நடந்த சம்பவங்களை தாண்டி கிரிக்கெட் வேறு அரசியல் வேறாய் பார்க்கும் பக்குவம் இருந்தாலும் அவ்வப்போது சகோதர மொழி மக்களின் உணர்வு வெளிப்பாடுகள், கிரிக்கெட்டில் நடக்கும் சம்பவங்கள் பல சமயங்களில் காயங்களை கீறுவதாகவே உணர்கிறேன்...

அண்மையில் ஒரு நண்பர் முகப்புத்தகத்தில் பகிர்ந்த ஒரு ஸ்டேடஸும் கூடவே வந்த கொமண்ட்டும் ஏனொ உன்மை போல் பட்டதால் இங்கே பகிர்கிறேன்..
"சிங்கையா வெறியர்கள் வெளிப்பாடுகள் மீண்டும் கிரிக்கெட் வெற்றியின் போது வெளிப்பட்டதை காண முடிந்தது . ஜீனில் இருக்கும் காட்டுமிராண்டித்தனம் . யுத்த வெற்றியாம் !!.அவர்கள் ஆர்மியாம் !! #இவ்வாறு வெளிப்படும் என்பது தெரிந்த விடயமே . கிரிக்கெட்டை கிரிக்கெட்டாக பாருங்கள் என்று அவர்களிடம் போய் சொல்லுங்கள் முதலில்..."

"இப்ப இவங்க கிட்டே ஒரு கேள்வி...இந்தியாலே இந்தியாக்கு சப்பொர்ட் பண்ணி...அவங்க வென்ற உடனே.. என்னோட நாடு வென்றிடிச்சுனு சொல்லி பாரு... கட்டி புடிச்சு பாராட்டுவாங்க... அதையே இலங்கையிலே இலங்கைக்கு சப்போர்ட் பண்ணி... இலங்கை என்னோட நாடுன்னு சொல்லிபாரு... துரத்தி துரத்தி அடிப்பானுங்க.."


என்ன தான் இருந்தாலும் கிரிக்கெட் மோகம் கொஞ்சம் குறைந்ததே தவிர இன்னொரு அணிக்கு ஆதரவளிக்க தோன்றவில்லை... அதற்காக இதை வைத்து கொண்டு இனப்பற்று, தேசப்பற்று என்பதையெல்லாம் அளவிடுவது முட்டாள்தனம்...

/*** தமிழர்களில் பலருக்கு 'நாடுப்பற்று இல்லை என்று சொல்வதைவிட, பற்றுவைக்க ஒரு நாடு இல்லை' என்பதே உண்மையான ஏக்கம்!!! **/
ஜீவதரசன் நீங்கள் குறிப்பிட்ட இந்த விடயம் தான் மீண்டும் எதிரொலிக்கிறது...

எப்பூடி.. said...

@ Think Why Not

2007 க்கு பின்னர் பல தடவைகள் நானும் இனிமேல் இலங்கை அணிக்கு சப்போட் பண்ணுவதில்லை என்னும் நிலையை எடுத்திருக்கிறேன்; அதிலும் குறிப்பாக 'அலை நான்கு' வீடியோ வெளிவந்த நேரத்தில்... ஆனால் அந்த ஆத்திரம், கோபம் அதிகநாள் நீடிக்கவில்லை; காரணம் கிரிக்கட் மட்டும்தான் (மேலே குறிப்பிட்டதுபோல கிரிக்கட்டும் மது, மாது மீதான காதல் போலவே)

சகோதர மொழியின் 'சில' வெறிப்பிடித்த ஆசாமிகளின் கருத்துக்களால் காயங்கள் கீறப்படுவது நிச்சயமாக நடக்கும் உண்மைதான்; அந்த முட்டாள்கள் நினைக்கிறார்கள் இலங்கை தமிழர்கள் அனைவரும் இந்திய ஆதரவாளர்கள் என்று!!! இந்தியாவை தோற்கடித்தால் தமிழரை தோர்க்கடித்ததாக ஒரு பூரிப்பு!!! நிச்சயமாக சொல்வேன் இவர்கள் கிரிக்கட்டை ரசிக்கவில்லை.... அந்த அரைவேக்காட்டு முட்டாள்களுக்காக எமக்கு பிடித்ததை நாம் ஏன் விட்டுக்கொடுக்கவேண்டும்!!!

அவர்கள் வழியிலே சொல்லப் போனால் இலங்கை வீரர்களுக்கு வழங்கப்படும் சம்பளத்திற்கு எமது வரிப்பணமும்தான் செல்கின்றது; இலங்கை வெற்றியில் எமக்கும் பங்கு உண்டு என்பதை அந்த 'சில' மூடர்கள் அறியாததற்கு நாம் பொறுப்பாளிகள் அல்ல......

பாலா said...

தலைவரே, உண்மையான உணர்வுகள். பெரும்பாலான இந்தியர்கள் பாகிஸ்தானை ஆதரிப்பதில்லை. அதே பாகிஸ்தான் ஆஸ்திரேலியாவுடன் ஆடும்போது ஆதரிப்பார்கள். இது மாதிரிதான் எல்லாமே. என்னதான் ஆதரிக்க கூடாது என்று முடிவெடுத்தாலும், ஒரு நல்ல ஆட்டத்தை பார்க்கும்போது உள்ளூர ரசிக்கவே செய்வோம். வெளிவேஷம் போடுவதற்கு பதில், வெளிப்படையாக ரசிப்பதில் தவறில்லை.

Anonymous said...

கலை, விளையாட்டு இரண்டிலும் அரசியலை கலப்பது தேவையற்றது. இலங்கை 2011 ஆம் ஆண்டு உலகக்கோப்பை நடத்தியபோது பாய்காட் ஸ்ரீலங்கா என்று தமிழகத்தில் குரல்கள் ஒலித்தன. அதிலும் எனக்கு உடன்பாடில்லை. அடிக்கடி இந்திய பாகிஸ்தான் பிரச்னை வருகையில் விளையாட்டு வீரர்கள் எதிரி நாட்டுக்கு பயணம் செய்யக்கூடாது என உத்தரவுகள் வரும். என்ன கொடுமையோ. எனக்கு பிடித்த கிரிக்கெட் அணிகள் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் பாகிஸ்தான். பல ஆண்டுகளாக பாகிஸ்தான் கிரிக்கெட் அணியை சப்போர்ட் செய்து வருவதற்கு வாங்காத திட்டில்லை நண்பர்களிடம்.

Jayadev Das said...

\\டீ கடை முதல், பாடசாலை, பல்கலைகழகம், அலுவலகம் என கிறிக்கட் பற்றி இலங்கை தமிழர்கள் விவாதிக்கும் இடங்களில் எல்லாம் இலங்கை கிறிக்கட் அணியின் ரசிகர்கள் பாதிப்பேராவது இருப்பார்கள்!!!!\\ எல்லா அணிகளிலும் சிறந்த வீரர்கள் இருக்கிறார்கள். கிரிக்கெட்டை மட்டுமே ரசிப்பதாக இருந்தால் எல்லா அணிகளுக்கும் சமமாக [கிட்டத் தட்ட] ரசிகர்கள் இருக்க வேண்டும். 50 % இலங்கை அணியை விரும்புகிறார்கள் என்றால் கிரிக்கெட்டையும் தாண்டி ஏதோ ஒன்று இலங்கை அணிமேல் அவர்களுக்கு இருக்கிறது, அது "நமது நாட்டின் அணி" என்ற எண்ணமாகக் கூட இருக்கலாம். அதை நான் தப்பு என்று சொல்ல மாட்டேன். இந்த விஷயத்தில் இந்தியர்கள் உங்களை விட ஒரு படி மேலே, அதாவது 50 % பேரு பாகிஸ்தான் ஜெயிக்கணும்னு கடவுளை வேண்டிக்குவோம், அப்படி ஜெயிச்சா பட்டாசு வெடிப்போம், பாகிஸ்தான் தோத்துப் போனா எதையோ பறிகொடுத்த மாதிரி உட்கார்ந்திருப்போம்.

Jayadev Das said...

\\நான் இலங்கை கிரிக்கெட் அணியை ரசிப்பதால் இலங்கை விசுவாசி என்றால்; நான் உதைபந்தாட்டத்தில் ஜெர்மனியையும்; மோட்டார் கார் பந்தயத்தில் மைக்கல் ஷூமேக்கரையும் ரசிப்பதால் நான் ஜெர்மனி விசுவாசி!!! டெனிஸில் ரோஜர் பெடரரை ரசிப்பதால் சுவிட்சலாந்து விசுவாசி!!! மோட்டார்சைக்கிள் பந்தயத்தில் வாலன்சீனோ ரோஸியை ரசிப்பதால் இத்தாலிய விசுவாசி!!!! கோல்பில் டைகர் வூட்சை ரசிப்பதால் அமெரிக்க விசுவாசி!!! \\ அது சரி, கிரிக்கெட்டை தவிர்த்து நீங்கள் சொல்லியுள்ள விளையாட்டுகளில் எவற்றில் இலங்கை விளையாடுது பாஸ்...????

Unknown said...

பாக்கிஸ்தான் இஸ்லாம் சகோதரர்களுக்கு என்ன செய்தது???... கிரிக்கட்டை மட்டும் ரசித்து வேறு நாடுகளுக்கு support பண்ணுபவர்களை இங்கு குறிப்பிடவில்லை....

மர்மயோகி said...

இலங்கை ஆஸ்திரேலிய அணிகளுக்கான இரண்டாம் இறுதிப்போட்டியில் இலங்கை அபார வெற்றி....

ஹாலிவுட்ரசிகன் said...

நீங்கள் இப்பதிவில் சொன்ன அத்தனை பாயிண்ட்டும் 100வீத உண்மை.

நானும் இலங்கை ரசிகன் தான். 1996ம் ஆண்டுக் காலப்பகுதிகளில் எல்லாம் எனக்கு கிரிக்கெட் பற்றிய ஞானம் எல்லாம் கிடையாது. 2003ம் ஆண்டு வேர்ல்ட் கப்பின் பின்னர் தான் கிரிக்கெட் மேல் ஒரு ஈடுபாடு வந்தது. அந்த டைமில் ஜயசூர்யா, மாவன் அதபத்து போன்றவர்களின் ஸ்டைலிஷ் ஷாட்களே எனக்கு இலங்கை அணி மேல் ஒரு ஈடுபாட்டை வளர்த்தது. ஆனால் இன்றும் இலங்கை அணி இந்தியாவிடம் தோற்றால் நம்மிடம் வந்து ஹு அடிக்கும் சிங்கள நண்பர்களைக் கண்டால் செம காண்டாகுவதுண்டு.

baleno said...

இலங்கை அணி விளையாடும் கிறிக்கெற்றை புறக்கணி அதை பார்ப்பது இலங்கை அணியை ஆதரிப்பது தமிழ் துரோகம் என்று வெளிநாடுகளிலும் சில தமிழர் சொல்வார்கள். இலங்கை தமிழ் கிறிக்கெற் இரசிகர்கள் இதை பொருட்படுத்தியதே இல்லை. பாக்கிஸ்தான் நண்பர்கள் கூட இலங்கை அணி நன்றாக விளையாடும் போது உங்கள் இலங்கை நல்லாக விளையாடுகிறது என்று பாராட்டுவார்கள்
ஜெயதேவ் தாஸ் கூறிய சரி.கார் பந்தயம், மோட்டார்சைக்கிள் பந்தயத்தில் இலங்கையர்கள் கலந்து கொள்வதில்லை.

இலங்கை ஆஸ்திரேலிய அணிகளுக்கான இரண்டாம் இறுதிப்போட்டியில் இலங்கை அபார வெற்றி....
மர்மயோகி @
இனிய தகவலுக்கு, உங்கள் தமிழ்நாட்டவருக்கு பிடிக்காத விடயமாயினும் அதை தெரிவித்ததிற்க்கு நன்றி நண்பரே!

கார்த்தி said...

அண்ணா வணக்கம். நான் எனக்கு மனதில் பட்டத இதில சொல்லப்போறன் உங்களுக்கோ இல்லாட்டி வேறஆக்களுக்கும் கோபம் வராதெண்டு நினைக்கிறன். நீங்க இதில சொன்ன கருத்துக்களில் கொஞ்சம் நீங்க சொல்லுறதுதான் சரியெண்டுற ஒரு தொனி தெரியுது. நீங்க சொன்னதுகளில் பலதில் உடன்பாடுதான் ஆனாலும் சிலசிலவற்றில் என்னால் ஒத்துக்கொள்ளவே முடியாது. உங்கள் frameல சரியானதொன்று இன்னொருவரின் frameல பிழையா இருக்கலாம். அவங்கள் அவங்களுக்கு அவங்கட அவங்கட சரியா இருக்கலாம். மேலும் Think Why Not என்னோட பல்கலைக்கழகத்தில் படித்த நண்பன். இவருடன் பெரும்பாலான இடங்களில் எனக்கு ஒத்த கருத்து இல்லை. வெளிப்படையாக FBகளில் ஆரோக்கியமாக விவாதித்திருக்கிறோம். அதுக்காக அவரின் விரோதி இல்லை. ஆனால் இந்த இடத்தில் அவரின் கருத்தும் என்ர கருத்தும் கொஞ்சம் ஒத்துப்போகிறது.

ஆரம்பத்திலிருந்தே வருறன். நானும் உங்களபோல கிரிக்கெட் TVல பாக்க தொடங்கினது இடம்பேர்ந்து கரவெட்டில இருக்கேக்கதான். அப்ப ஹாட்லியில போட்ட மட்ச நான் அப்பா அண்ணா போய் பாத்தம். எண்டாலும் பிறகு மட்ச் அடிக்கடி பாக்க தொடங்கினர் யாழ்ப்பாணத்துக்கு கரண்ட் வந்த பிறகுதான். அப்ப இருந்தே நானும் இலங்கை அணியின் ரசிகன்தான் 2003WCல இலங்கை அணிவீரர்கள் 50அடிக்கேக்க எல்லாம் வெடி கொழுத்தி போட்டு பாத்து மொக்கு ரசிகன். ஏன் அந்த ரசனை 2009வரை கூட இருந்தது. பிறகு அது கொஞ்சம் கொஞ்சம் மாறி சரியான மோசமா எதிர்மறையாக மாறியிருந்தது. அதற்கு முக்கிய காரணங்கள் சுற்றுசுழலில் நடந்த சம்பவங்கள் இலங்கை அணிவென்றவுடன் இந்திய அணி தோற்றவுடன் ஏற்படுத்திய கர்சனைகள் (விளங்குமெண்டு நினைக்கிறன்) இந்திய அணியை சில தமிழர்கள் நேசிக்கிறோமெங்கிறதுக்காக அவங்க அத ஒரு பெரிய்ய வெற்றியாக எடுத்தேதோட இல்லாம பெரிசா ஆர்ப்பாட்டமெல்லாமல் செஞ்சிருந்தாங்க. (இந்திய அணி தமிழர்களின் அணி என்று நாங்க நினைக்காட்டியும் அவங்கள் அப்பிடிதான் நினைக்கிறாங்க.)

ஏன் சரியான நெருங்கிய அந்தஇன நண்பர்களெல்லாம் நீ அவங்களுக்குதானே சப்போர்ட் எண்டு கேட்டு வேற இருக்காங்க. சோ அவங்க இந்தியா அணிதோத்தா சந்தோசப்படுறமாதிரி எனக்கு இந்தியா வெண்டா கடும் சந்தோசமா இருந்திச்சு. அதுவும் இவங்களோட எண்டா டபுளா இருக்கிறமாதிரி ஆகிடிச்சு. ஆக்கிட்டாங்க. இப்பிடி இப்பிடியும் இலங்கையின்ர வெறி ரசிகனா இருந்த நானும் இப்பிடியான காரணத்தாலயோ வேற வேற காரணத்திலயோ சரியா மாறிட்டன். இப்படியானவர்களை நீங்கள் இதில் சந்தர்ப்பவாதிகளென விழித்திருப்பது அலட்சியப்படுத்தி அவர்களை கருத்தில் எடுக்காது விட்டது போல ஒரு உணர்வை தருகிறது. அதுக்காக அவங்களை நாங்க சப்போர்ட் பண்ணுறது சரியெண்டில்லை. எங்களுக்கு ஒரு போக்கில்லை அவ்வளவும்தான். அதுக்காக இலங்கையை சப்போர்ட் பண்ணுறாக்களா அந்த நபர் சொல்லுறமாதிரி நான் நினைக்கிறேல. உங்களுக்கு விளங்கும் எண்டு நினைக்கிறன். அவங்கள் இந்தியாவை தமிழர்களின்ர ஆணி எண்டு சொல்லுற நினைப்பு இருக்கேக்க எங்களுக்கு அவங்கள ரசிக்கிறதில ஒரு பிரியம். எதிரிக்கு எதிரி நண்பன் எண்டு சொல்வாங்களே அப்பிடிதான். இது எனது நிலையில் நின்று பாக்க சரியா இருக்கும் மற்றவர்களின் நிலையில் பிழையா தெரியலாம். அதுக்காக நான் சரி நீ பிழை எண்டு சொல்லுறது முறையில்லை.

ஆதோட சில இலங்கை ரசிகர்கள் தங்கள் அணி வெண்டா பெரிசா ஆர்பரிக்காம அமைதியாக கருத்துக்களை வெளிப்படுத்துவார்கள். ஆனால் சலரோ லயன்ஸ் வீ எங்கள் நாடு எண்டு பெரிய்ய பீலாவிட்டு கொடியெல்லாம் போட்டு கடுப்பேத்துவாங்க. எனக்கு ஏனோ தெரியல அப்படியானத பாக்கேக்க எனக்கு கோபமும் கடுப்பும்தான் வருது. நான் இன்னும் பக்குவப்படாம இருக்கலாம் ஆனால் நான் செய்யுறது எனக்கும் சரியாதான் படுது.
எதாவது பிழையா சொல்லியிருந்தா லூசா விடுங்க.... எழுத்துப்பிழை பாக்காம டைப்பினது மோசமா இருந்தா மன்னிச்சுக்கோங்க

mariano said...

உண்மையா பாக்கபபோனா, நம்மட சனம் பெரிய அறிவாளித்தனமா சிந்திச்சு, இந்தியாவுக்கு சப்போட் பண்ணுறது தான் மொக்குத்தனம்.

இந்திய மக்களே இந்திய அரசோட சண்டை போட்டாலும், மற்ற பிரச்சனைகளுக்கெல்லாம் "இந்தியன்" எண்டு ஒண்டாத்தான் நிக்கிறானுகள். நம்ம சனம் கிரிக்கட், அரசியல், இனப்பிரச்சனை எண்டு எல்லாத்தையும் ஒண்டாப்போட்டு குழப்பிக்கொண்டு, குண்டு போட்டவன எதிர்க்கிறம் எண்டுட்டு குண்டு குடுத்தவனுக்கு சப்போட் பண்ணுதுகள். அறியாமை எண்டு கேள்விப்படிருப்பீங்கள. அதுதான் இது!

Think Why Not said...

என்னதான் கிரிக்கெட் மோகம் இருந்தாலும், அதையும் தாண்டி எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டு சும்மா தானே இருந்தேன் என்ற குற்ற உணர்ச்சி இருந்து கொண்டே இருக்கும்.

கார்த்தி கூறியது போல அல்லாமல் என்னைப் பொறுத்த வரையில் இலங்கை அணிக்கு ஆதரவளிப்பது என்பது என் தனிப்பட்ட கடுப்புக்களை தாண்டி, உயிர்கள் அழிக்கப்பட்ட போதும் சரி (இன்னும் முகாம்களில்) அல்லாடுகிற போதும் சரி நான் ஏதும் செய்யாமல் கிரிக்கெட் பார்த்துக் கொண்டு சும்மா இருக்கிறேனே என்கிற குற்ற உணர்வுதான் மிகுதியாக இருக்கிற விடயம்...

முதல் கொமண்டிலே கூறியது போல சில சகோதர மொழியினரின் நடத்தையால் காயங்கள் கீறப்படுதலும் மற்றுமொரு காரணம்.

ஆனால் இதற்காகவெல்லாம் இன்னொருவரை கிரிக்கெட் பார்க்காதே இந்த அணிக்கு ஆதரவளிக்காதே என்று சொல்ல தயாரில்லை. ஏனேன்றால் இவற்றால் எல்லாம் உருப்படியாக ஒன்றும் நடந்துவிட போவதில்லை என்பதையும் புரிந்திருக்கிறேன்...

நாச்சியாதீவு பர்வீன். said...

ஒவ்வொருவரின் மன ஆதங்ககளையும் வாசித்தேன், என்னைப்பொருத்த மாற்றில் கலையும் விளையாட்டும் இன மொழி நாடு கடந்து ரசிக்க வேண்டியவை, இதி மாற்றுக்கருத்துக்கள் இருக்கலாம், கடந்தகால சில கசப்பான நடைமுறைகள் சில வேலை நமது சுயாமான விருப்பு வெறுப்புக்களில் தாக்கத்தினை உண்டு பண்ணிய விளைவே சில தமிழ் நண்பர்கள் இந்தியாவுக்கும், சில முஸ்லிம் நண்பர்கள் பாகிஸ்தானுக்கும் கிரிக்கெட்டில் ஆதரவு தெரிவிப்பதற்கான காரணமாக நான் கருதுகிறேன், நான் கட்டார் நாட்டில் சுமார் ஐந்து வருடங்களுக்கு முன்னர் இருந்த பொது அங்கு அவதானித்த சில விடயங்களை வைத்து ஒரு புத்தகமே எழுதி வெளியிட்டேன் பேனாவால் பேசுகிறேன் என்ற அந்த பத்தியில் ஒரு பங்களதேஸ் நண்பரின் கிரிகட் பற்றிய அவதானமும், அவர் தனது அணி மீது வைத்துள்ள பற்றும் அதற்காக அவரிடம் உள்ள நியாயங்களும் என்னை அசர வைத்தது அவரை சந்திக்கும் மட்டுக்கும் ஏனென்று தெரியாமலேயே பாகிஸ்தான் அணியையாய் ஆதரித்த நான் அன்றிலிருந்து இலங்கை ரசிகராக மாறி விட்டேன்...நமது அடையாளம் தான் நமது நாடு, எங்கு சென்றாலும் வெளிநாடுகளில் நம்மை முஸ்லிமாகவோ அல்லது இந்துவாகவோ அல்லது பவுத்தனாகவோ ஆயயாலப்படுத்துவதில்லை எல்லாம் ஸ்ரீலங்கன் தான்..சில விதிவிலக்குகள் இருக்கலாம் நமக்குள் அடிப்படையான சில பிழையான கட்டமைப்புக்கள் ஏலவே உருவாக்கப்பட்டு விட்டதன் அடையாளம் தான் நாம் நமது இலங்கை அணியைத்டாண்டி.வேறு அணிகளின் மீது மோகம் வைப்பதற்கு காரணம் ...அது சரியா பிழையா என்கின்ற விவாதத்தை தாண்டி ...நாம் நமது இலங்கை அணியை ஆதரிப்பதே சரி ஏனென்றால் நாமெல்லாம் இலங்கையர்கள்.ஒரு நல்ல பதிவை தந்த நண்பருக்கு நன்றிகள்.

baleno said...

நமது அடையாளம் தான் நமது நாடு, எங்கு சென்றாலும் வெளிநாடுகளில் நம்மை முஸ்லிமாகவோ அல்லது இந்துவாகவோ அல்லது பவுத்தனாகவோ அடையாளபடுத்துவதில்லை எல்லாம் ஸ்ரீலங்கன் தான்.

நாச்சியாதீவு பர்வீன் கூறியது நூற்றுக்கு நூறு உண்மை.

கிஷோகர் said...

//அதிலும் இவர்களுக்கு இனப்பற்று இலங்கை நன்றாக விளையாடும்போதுதான் அதிகரிக்கும்!!! இலங்கை உதை வாங்கும்போது நமட்டு சிரிப்பு சிரிக்கும் இவ்வகை ஆசாமிகளுக்கு இலங்கை வெற்றி பெறும்போதுதான் எம்மை பார்த்தால் தமிழ் இன உணர்வு மூக்கு, வாய், கண், காது, ..... என உடம்பின் ஒன்பது துவாரங்களின் ஊடாகவும் வழியும்!!!! //

முற்றிலும் உண்மை நண்பரே! இது குறித்த பதிவு ஒன்றுக்கு நானே தயார் செய்துகொண்டிருந்தேன். இனி அதற்கு தேவை இல்லை என்று நினைக்கிறேன். கலை, விளையாட்டு என்பன அரசியலுக்கு அப்பாற்பட்டவை. அவற்றில் அரசியல் சாயம் பூசுவது ஒருவகையிலும் சரியென்றாகாது.

விளையாட்டு வீரர்களென்போர் தூதுவர்கல் என்றே காலம் காலமக கணிக்கப்பட்டு வருகிறார்கள். தூதுவர்களிடம் துவேசம் பார்ப்பது சரியான செயல் இல்லை. எனது ஃபேஸ் புக் தலத்தில் முள்ளிவாய்க்கால் துயரத்துக்கு அனுதாப பதிவிட்டேன். அப்போது என்னை உண்மைத்தமிழன் என் ஏற்றுக்கொண்ட சிலர், இலங்கை அணி ஆஸ்திரேலியாவுடன் ஆடி வெற்றி பெற வேண்டுமென நான் பதிவு போட்ட போது துரோகி என்றனர்.

இவர்களின் இந்த பசப்பலுக்கெல்லாம் நான் படிவதில்லை. எனது இன உணர்வு என்னை விட்டு போகாக்து, விளையாட்டை ரசிப்பதால் நான் தமிழின துரோகியும் ஆகிவிட மாட்டேன். அது போகட்டும் இலங்கை ராணுவத்திற்கு இந்தியா ஆயுத உதவி , ஆட்பல உதவி செய்தது. அப்படியானால் இந்தியன் என்பதால் ரகுமான், இளையராயாவின் பாடல்களையோ அல்லது தெனிந்திய திரைபடங்களையோ எத்தனை உண்மை தமிழர்கள் புறக்கணிக்கிறார்கள்?

கிரி said...

// இலங்கை உதை வாங்கும்போது நமட்டு சிரிப்பு சிரிக்கும் இவ்வகை ஆசாமிகளுக்கு இலங்கை வெற்றி பெறும்போதுதான் எம்மை பார்த்தால் தமிழ் இன உணர்வு மூக்கு, வாய், கண், காது, ..... என உடம்பின் ஒன்பது துவாரங்களின் ஊடாகவும் வழியும்!///

:-)

//அந்த வீரர் சார்ந்த அணி பிடித்தமான அணியாக மனதில் பதிந்துவிடும்; அதனை அவ்வளவு சுலபமாக யாராலும் மாற்ற முடியாது.//

நடிகருக்கு ரசிகராக இருப்பதை போன்று :-)

குறிப்பாக எந்த ஒரு கிரிக்கெட் ரசிகருக்கும் தான் விரும்பும் அணியைப் பற்றி யாராவது தவறாகக் கூறினாலே கிண்டலடித்தாலோ சண்டை வருவது நிச்சயம். நீங்கள் கூறியபடி நமக்கு முன்பு பிடித்த அணியை தற்போதைய காரணங்களால் அவ்வளோ சீக்கிரம் (மனதளவில்) வெறுக்க முடியாது என்பதே என்னுடைய கருத்தும்.

மற்றபடி பிடிக்கலைனா விலகி போய்ட வேண்டியது தான்.. சும்மா சண்டை போட்டுக்கொண்டு இருப்பதில் அர்த்தமில்லை.

Karthik said...

நெத்தியடி...... :) :)

Post a Comment

"கருத்துக்கள், நிறைகுறைகள், திட்டுக்கள், பாராட்டுக்கள் போன்றவற்றை கூற விரும்புபவர்கள் கீழுள்ள பின்னூட்ட பெட்டியில் பின்னூட்டலாம்; பதிவுகளை வாசிக்காமல் இடப்படும் டெம்பிளேட் பின்னூட்டங்கள் வேண்டாம் நண்பர்களே."

*******************

வடை, வாழைப்பழம், சூப்பர், கலக்கல் என மொய் வைக்க வரும் நண்பர்களுக்கு; நான் யாருக்கும் பதிலுக்கு மொய் வைக்க மாட்டேன்.(இதனால் ஏற்ப்படும் தர்ம சங்கடத்திற்கு வருந்துகின்றேன்)