Thursday, February 9, 2012

யுவராஜ் சிங் - The Fighter





ஒருவரை எமக்கு பிடிக்காமல் இருக்கும்போது அவர் பற்றிய எதிர்மறையான எண்ணங்கள், கருத்துக்கள்தான் எம்மிடமிருந்து வெளிப்படும்; அதே நபருக்கு எதிர்மறையான விடயம் ஒன்று நிகழ்ந்து பொதுப் பார்வையில் இரக்கம் உண்டாகும் போதுதான் அவர் பற்றிய நேர்மறையான எண்ணம் எமக்குள் உருவாகும். இது சாதாரண மனித இயல்பு!!!

அந்த வகையில் இந்தியாவிற்காக யுவராஜ்சிங் ஆடும்போதெல்லாம் அதிகமாக எனக்கு யுவராஜ் சிங்கை பிடித்ததில்லை; காரணம் ஆரம்பத்தில் நான் ஒரு இலங்கை ரசிகன், மற்றும் இந்திய அணியின் எதிரி; அதன் பிற்ப்பாடு நாடுகளை தாண்டி கிரிக்கெட்டை மட்டும் ரசிக்க ஆரம்பித்த காலங்களில் யுவராஜ்சின் மைதான நடத்தைகள் யுவராஜ்மீது அபிப்பிராயத்தை ஏற்ப்படுத்தவில்லை. ஆனால் யுவராஜ்சின் புற்றுநோய் செய்தி கேட்ட பிற்ப்பாடு மனதில் யுவராஜ் சிங் பற்றிய ஏதோ ஒரு இனம்புரியாத உணர்வு மனதை கனக்கச் செய்கின்றது!! இந்நேரத்தில் யுவராஜ் என்னும் இந்திய கிரிக்கட் ஆளுமை பற்றிய சிறு அலசலை பதிவாக எழுத முயற்ச்சிக்கின்றேன்......

யுவராஜ் சிங் - 2000 ஆம் ஆண்டு இடம்பெற்ற 19 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான உலகக்கிண்ண போட்டித் தொடரில்த்தான் யுவராஜ் சிங் முதல் முதலாக தன்னை வெளிக்காட்டி கொண்டார். இலங்கையில் இடம்பெற்ற இந்த தொடரில் இந்திய அணி கிண்ணத்தை கைப்பற்றியதற்கு யுவராஜ்சிங்தான் முக்கிய காரணம். ஆஜானுபாகு தோற்றத்தில், இடதுகை துடுப்பாட்ட வீரராக அறிமுகமான யுவராஜ்சிங் ஆரம்பம் முதலே அதிரடி ஆட்டக்காறராகத்தான் தன்னை வெளிக்காட்டி வந்தார். 19 வயதுக்கு உட்பட்ட அணியில் சிறப்பான வெளிப்பாட்டை காட்டியதன் பலனாக 2000 ஆம் ஆண்டு கென்யாவின் நைரோபியில் இடம்பெற்ற ICC Knock Out தொடரில் கென்யா அணியுடனான போட்டியில் இந்திய தேசிய அணியில் அறிமுகப்படுத்தப்பட்டார்!!!



மேற் சொன்ன அதே போட்டியில் யுவராஜ் சிங்குடன் அறிமுகப் படுத்தப்பட்ட மற்றுமொரு பிரபல இந்திய வீரர் சஹீர் ஹான்; மற்றொருவர் விஜய் டாஹியா. இந்த போட்டியில் சஹீர் ஹான் 3 விக்கட்டுகளை வீழ்த்தி தன்னை வெளிக்காட்டினார்; டாகியா விக்கட் காப்பாளராக 2 பிடிகளை பிடித்திருந்தார்; ஆனால் யுவராஜ்சிற்கு துடுப்பாட சந்தர்ப்பம் கிடைக்கவில்லை, 4 ஓவர்கள் பந்து வீசியும் விக்கட்டும் கிடைக்கவில்லை; மொத்தத்தில் முதல் போட்டி யுவராஜ் சிங்கிற்கு சாதகமாக அமையவில்லை என்றே சொல்லலாம்!!!

ஆனால் அடுத்த போட்டியே யுவராஜ்சை "யார் இந்த பையன்?" என அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தது!!! அன்றைய தேதியில் பலம் மிக்க அவுஸ்திரேலியா அணிக்கு எதிராக சச்சின், கங்குலி, டிராவிட் என இந்தியாவின் முக்கிய 3 விக்கட்டுகளும் 90 ஓட்டங்களுக்குள் சரிந்த நிலையில் களமிறங்கிய யுவராஜ்சிங்; 80 பந்துகளை எதிர்கொண்டு 84 ஓட்டங்களை குவித்து ஆஸ்திரேலியாவிற்கு வெற்றி இலக்காக 265 ஓட்டங்களை இந்தியா நிர்ணயிக்க உதவினார். அவுஸ்திரேலியா வெற்றி இலக்கை எட்டாமல் (245 ஓட்டங்கள்) அந்த தொடரில் இருந்து வெளியேறியது; ஆட்ட நாயகனாக யுவராஜ் தெரிவு செய்யப்பட்டார். தான் துடுப்பெடுத்தாடிய முதல் போட்டியிலேயே அரைச்சதமும், ஆட்ட நாயகன் விருதும் வென்றதுடன் அன்றைய உலக சாம்பியனின் கிண்ணக் கனவையும் பொய்யாக்கியிருந்தார் யுவராஜ் சிங்!

அந்த போட்டியின் பின்னர் பல போட்டிகளில் பிரகாசிக்க தவறிய யுவராஜ் அவ்வளவுதானா? என எண்ணிய வேளையில் அன்றைய பலம் மிக்க இலங்கை பந்து வீச்சாளர்களுக்கு எதிராக இலங்கையில் வைத்து யுவராஜ் பெற்ற 98* ஓட்டங்கள் மீண்டும் அவர் மீது நம்பிக்கையை ஏற்ப்படுத்தியது. அதன் பின்னர் தொடர்ச்சியாக பிரகாசிக்காது போனாலும் அப்பப்போ தனது அதிரடியால் அரைச்சதங்களை குவித்து இந்திய அணியின் வெற்றிக்கு துணை புரிந்த யுவராஜ் தனது கன்னி சதத்தை பங்களாதேஷ் அணிக்கு எதிராக பெற்றார். ஆனாலும் அடுத்ததாக சிட்னியில் வைத்து பெறப்பட்ட சதம்தான் யுவராஜ்சின் சதங்களிலேயே சிறப்பான சதமாக அமைந்தது!!! அவுஸ்திரேலியர்களுக்கு எதிராக அவர்களது சொந்த மண்ணில் வைத்து 122 பந்துகளில் யுவராஜ் பெற்ற 139 ஓட்டங்கள்தான் இன்றுவரை யுவராஜ்சின் ஒருநாள் போட்டிகளின் அதிக பட்ச ஓட்டங்கள்.



இந்த இரண்டு சதங்களும் பெறப்படுவதற்கு முன்னர் இங்கிலாந்தில் இந்திய அணி ஆடிய முக்கோணத் தொடரின் இறுதி ஆட்டத்தில்; 325 என்னும் கடினமான இலக்கை, 146 ஓட்டங்களுக்குள் மூத்த வீரர்கள் 5 பேரும் சுருண்ட நிலையில் முஹமட் கைப் உடன் இணைந்து எட்டுவதற்கு உதவினார் (கைப்தான் யுவியை விட இந்த போட்டியின் சிறப்பாட்டகாரர்) இறுதிப் போட்டிகளில் தொடர்ச்சியாக தோல்வி அடைந்துகொண்டிருந்த இந்திய அணி கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகளுக்கு பின்னர் வெற்றி பெற்ற இறுதிப் போட்டி இதுதான்!!!

இந்த போட்டியின் பின்னர் இந்திய கிரிக்கட்டின் தவிர்க்க முடியாத வீரராக யுவராஜ் சிங்கிற் கென்றொரு நிலையான இடம் இந்திய அணியிலே ஒதுக்கப்பட்டது !!! அன்று முதல் ஒருநாள் போட்டிகளில் இந்தியாவின் ஆதிக்கத்தில் யுவராஜ்சின் ஆதிக்கமும் சேர்ந்தே வெளிப்பட ஆரம்பித்தது. யுவராஜ்சின் சிறப்பான ஆட்டத்தால் 2008 ஆம் ஆண்டில் டோனி தலைமையிலான இந்திய அணிக்கு உபதலைவராக நியமிக்கப்பட்டார். ஆனால் அந்த காலப்பகுதியில் ஓட்டங்களை குவிக்க முடியாமல் சிரமப்பட்டதால் உபதலைவர் பதவியை இழக்கவேண்டி வந்தது!!

அதன் பின்னர் மீண்டும் சாதாரண வீரராக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய யுவராஜ்சிங் 2011 ஆம் ஆண்டு இடம்பெற்ற உலகக்கிண்ண போட்டித் தொடரில் 4 முறை ஆட்ட நாயகன் விருதையும், தொடரின் நாயகன் விருதையும் வென்று இந்திய அணியின் உலகக்கிண்ண வெற்றியில் முக்கிய பங்காற்றியிருந்தார். குறிப்பாக தொடர்ந்து 3 தடவைகள் தொடர்ச்சியாக உலகச் சாம்பியன் கிண்ணத்தை வென்ற அவுஸ்திரேலியாவை கால் இறுதிப் போட்டியில் தோற்கடிக்க முக்கிய காரணியாக யுவராஜ் விளங்கியிருந்தார். யுவராஜ் பெற்ற இரண்டு விக்கட்டுகள் மற்றும் ஆட்டமிழக்காமல் பெற்ற 57 ஓட்டங்கள் அந்த போட்டியை இந்தியா வசம் பெற்றுக் கொடுத்ததோடு அவுஸ்திரேலியாவின் தொடர் வெற்றிப் பயணத்திற்கு முற்றுப்புள்ளியும் வைத்தது. ஆஸ்திரேலியர்களுக்கு சச்சினுக்கு அடுத்து அதிக குடைச்சல் கொடுத்த இந்தியர் யுவராஜ்தான்!!!



ஒருநாள் போட்டிகளில் 274 போட்டிகளில், 37.62 சராசரியில், 87.58 Strike Rate இல், 13 சதங்கள், 49 அரைச் சதங்களுடன், 8051 ஓட்டங்களை குவித்துள்ள யுவராஜ் சிங்; ஒரு 5 விக்கட் அடங்கலாக 109 விக்கட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்; சிறந்த களத்தடுப்பு வீரரான யுவராஜ் 84 பிடிகளையும் பிடித்துள்ளார். 25 தடவைகள் ஆட்ட நாயகன் விருதை வென்றுள்ள யுவராஜ் சிங் 7 தடவைகள் தொடரின் நாயகனாகவும் தெரிவு செய்யப்பட்டுள்ளார். நடுவரிசை வீரராக ஒருநாள் போட்டிகளை பொறுத்தவரை இது ஒரு மிகச் சிறப்பான பெறுதி என்பதில் மாற்றுக்கருத்து இருக்காது என்று நம்பலாம்!!!!

டெஸ்ட் போட்டிகள் - ஒருநாள் போட்டிகளைபோல யுவராஜ் சிங்கால் டெஸ்ட் போட்டிகளில் அதிகம் பிரகாசிக்க முடியவில்லை!! 2003 வரை டெஸ்ட் போட்டிகளில் ஆடும் வாய்ப்பே யுவராஜ்சிற்க்கு கிடைக்கவில்லை. காரணம் 3, 4, 5, 6 ஆம் இலக்கங்களுக்கு டிராவிட், சச்சின், கங்குலி, லக்ஸ்மன் என நான்கு சுவர்களும் ஸ்திரமாகவும், நிலையாகவும் இருந்தமைதான். 2003 ஆம் ஆண்டில் கங்குலிக்கு பதிலாக மொகாலியில் நியூசிலாந்து அணியுடன் தனது கன்னி டெஸ்ட் போட்டியை விளையாடிய யுவராஜ்சிங் 2008 ஆம் ஆண்டு கங்குலி ஓய்வு பெறும்வரை அப்பப்போதான் இந்திய அணியில் இடம் பிடித்தார்.

2008 க்கு பின்னரும் யுவராஜ் தொடர்ச்சியாக ஆட முடியாத அளவிற்கு அவருக்கு உபாதை, Out of Form, புதிய திறமைகளின் வரவு என்பன ஆதிக்கம் செலுத்தின. தொடர்ச்சியாக சில போட்டிகளில் சாதித்திருந்தால் யுவராஜ்சிர்க்கு Test அணியில் நிரந்த இடம் கிடைக்கும் வாய்ப்பு இருந்தாலும் அவரது Game Style க்கு டெஸ்ட் போட்டிகள் சரியாக அமையுமா என்பது கேள்விக்குறிதான்!!!! அது தவிர அடிக்கடி உபாதைக்குள்ளாகும் யுவராஜ் சிங் டெஸ்ட் போட்டிகளை தவிர்ப்பதுதான் சிறப்பான முடிவும்கூட!! டெஸ்ட் போட்டிகளை பொறுத்தவரை 37 போட்டிகளில், 34.80 சராசரியில், 3 சதங்கள், 10௦ அரைச்சதங்களுடன் 1775 ஓட்டங்களை குவித்துள்ள யுவராஜ் சிங் தான் பெற்ற மூன்று சதங்களையும் இந்தியாவின் பரம எதிரி நாடான பாகிஸ்தானுக்கு எதிராக பெற்றது சிறப்பு.


மறக்க முடியாத ஓவர்


T/20 போட்டிகள் - முதலாவது T/20 உலகக்கிண்ணத்தை இந்தியா வெல்வதற்கு யுவராஜ் சிங்கின் துடுப்பாட்டம் மிக்கபெரும் பக்கபலமாக அமைந்தது என்றால் மிகையில்லை. அரையிறுதிப் போட்டியில் அவுஸ்திரேலியாவிற்கு எதிராக 30 பந்துகளில் தலா 5 சிக்ஸர்கள், பவுண்டரிகள் அடங்கலாக யுவராஜ் பெற்ற 70 ஓட்டங்கள் அவுஸ்திரேலியாவை முதல் T/20 போட்டித் தொடரில் இருந்து வெளியேற்றியது ( ICC போட்டித்தொடரில் 3 தடவைகள் யுவராஜ் சிங் அவுஸ்திரேலியாவை வெளியேற்ற காரணமாக அமைந்துள்ளார்)

இதற்கு முன்னதாக இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் 16 பந்துகளில் 58 ஓட்டங்களை பொழிந்ததை அந்த போட்டியை பார்த்த யாராலும் எப்போதும் மறக்க முடியாது!!! அதிலும் இங்கிலாந்து பந்து வீச்சாளர் ஸ்டுவட் புரோட் தன் வாழ்க்கையின் கடைசி நிமிடம் வரை யுவராஜ்சை மறக்கவே மாட்டார் :-) போட்டியின் 19 ஆவது ஓவரில் புரோட் வீசிய 6 பந்துகளையும் சிக்ஸர்களாக மாற்றிய யுவராஜ் ஆறாவது சிக்ஸரை அடித்த போது; ஒரு ஓவரில் பெறப்பட்ட அதிகபட்ச ஓட்டமான 36 ஓட்டங்களையும், குறைந்த பந்துகளில் (12 பந்துகள்) பெறப்பட்ட அரைச்சதத்தையும் உலக சாதனையாக தனது பெயரில் பதிவு செய்தார். 23 T/20 போட்டிகளில் விளையாடியுள்ள யுவராஜ் 31.5 சராசரியில் 151.6 ஸ்ரைக் ரேட்டில் 5 அரைச்சதங்கள் அடங்கலாக 567 ஓட்டங்களை பெற்றுள்ளார்.

அணித்தலைமை - யுவராஜ் சிங்கிற்கு அணித்தலைமை சரியாக இருக்குமா என்பது சந்தேகம்தான்!!! இந்திய அணிக்கு தலைமை தாங்கி வழிநடத்தும் சந்தர்ப்பம் அமையாவிட்டாலும் IPL போட்டிகளில் பஞ்சாப், பூனே அணிகளை தலைமை ஏற்று வழிநடத்தும் பொறுப்பு யுவராஜ்சிற்கு கிடைக்கப்பெற்றது; ஒரு துடுப்பாட்ட வீரராக பிரகாசித்த யுவராஜ் அணித்தலைவராக சிறப்பாக செயற்ப்படவில்லை என்பதுதான் உண்மை!! இந்திய அணிக்கு யுவராஜ் தலைமை ஏற்றால் அவர் ஒரு மோசமான அணித் தலைவராகத்தான் கணிக்கப்படுவார் என்பது எனது தனிப்பட்ட கருத்து! T/20 போட்டிக்களில் பிரகாசித்ததுபோல யுவராஜ் IPL போட்டிகளில் சிறப்பாக பிரகாசிக்கவில்லை என்பதும் மறுக்க முடியாத உண்மை!!

வலுவான புஜவலிமை மிக்க யுவராஜ் பந்தினை வேகமாக எல்லைக்கோட்டுக்கு அப்பால் விரட்டி அடிக்கும் ஆற்றல் உள்ளவர்; அதே நேரம் சிறப்பாக பந்தினை கணித்து (Timing & Placement) நேர்த்தியாக அடிக்கும் ஆற்றலும் உள்ளவர். Deep Mid wicket - Long on இடையிலான Gap, Deep Extra Cover - Long Off இடையிலான Gap என களத்தடுப்பு வகுக்கப்படாத பகுதிகளுக்கு பந்தினை On Drive, Off Drive மூலமும் Hard Hitting மூலமும் ஓட்டங்களை குவிப்பதில் யுவராஜ் கில்லாடி. Full Length Delivery களை Half Volley மூலம் சிக்சர்களாக மாற்றியமைக்கும் தந்திரம் யுவராஜ்சிற்கு தெரியும். துடுப்பாட வந்த முதல் சில ஓவர்களுக்கு சுழல் பந்துக்கு கொஞ்சம் தடுமாறினாலும் பின்னர் சிறப்பாக அடித்தாடக் கூடியவர் யுவராஜ்.



ஒருநாள் போட்டிகளை பொறுத்தவரை யுவராஜ் 20 ஓவர்கள் மைதானத்தில் துடுப்பெடுத்தாடினால் எதிரணி போட்டியை மறக்கவேண்டிய நிலைதான் ஏற்ப்படும்!! பந்து வீச்சை பொறுத்தவரை யுவராஜ் சிறப்பான பகுதிநேர பந்து வீச்சாளர் என தன்னை பல தடவைகள் நிரூபித்திருக்கிறார். Turning, slow pitch களில் யுவராஜ் மிக சிறப்பாக பந்து வீசக்கூடியவர். களத்தடுப்பை பொறுத்தவரை யுவராஜ் Short Fielding இல் சிறப்பானவர்; Point, Backward Point, Cover, Cover Point, Extra Cover Position களில் யுவராஜ் மிகச்சிறப்பான களத்தடுப்பாளர்; ஓட்டங்களை கட்டுப்படுத்தியும், கடினமான பிடிகளை பிடித்தும், சிறப்பான Run out மூலமும் பல தடவைகள் இந்தியாவின் வெற்றிக்கு யுவராஜ் தன் களத்தடுப்பால் வெற்றி தேடிக் கொடுத்திருக்கிறார்!!!!

ஏனோ இப்போதெல்லாம் யுவராஜ் இல்லாத இந்திய அணி(ODI) ஒரு முழுமையான அணியாக தெரிவதில்லை; உலகக்கிண்ண இறுதிப் போட்டியின் பின்னர் இந்தியாவிற்காக யுவராஜ் ஒருநாள் போட்டிகளில் இன்னமும் ஆடவில்லை; இங்கிலாந்து, மேற்கிந்திய அணிகளுடன் டெஸ்ட் போட்டிகளில் ஆடினாலும் உபாதை காரணமாக ஒருநாள் போட்டிகளில் ஆடும் சந்தர்ப்பம் அமையவில்லை!!! தற்போது இடம்பெறும் முக்கோணத் தொடரிலும் உபாதை காரணமாக யுவராஜ் பெயர் இடம்பெறவில்லை; இந்நிலையில்த்தான் யுவராஜ் புற்றுநோயால் பீடிக்கப்பட்டிருக்கும் செய்தி வெளியாகியது!!!

புற்றுநோய் ஆரம்ப கட்டத்தில்த்தான் உள்ளதென்பதால் குணமாக்க முடியும் என மருத்துவர்கள் சொன்னதால் பயப்படும்படி இல்லை என்றாலும் மனதில் ஏதோ கனம் இல்லாமல் இல்லை!! மேலே யுவராஜ் பற்றிய தரவுகள் அனைத்தும் யுவராஜ் கிரிக்கட்டுக்கு முற்றுப்புள்ளி வைத்ததாக எண்ணி எழுதப்படவில்லை; ஒரு சிறு ஞாபகப்படுத்தலுக்காக மட்டுமே; கூடிய சீக்கிரமே யுவராஜ் கிரிக்கட்டுக்கு தற்காலிகமாக போட்டுள்ள முற்றுப்புள்ளியை 'கம'வாக மாற்றி அடுத்த இன்னிங்க்சை ஆரம்பிப்பார். யுவராஜ் ஒரு Fighter, நிச்சயமாக அவர் இதிலிருந்து மீண்டு வருவார் என்கின்ற நம்பிக்கை எனக்கு நிறையவே உண்டு. மீண்டும் 12 ஆம் இலக்க இந்திய jersey யில் யுவராஜ்சை காண ஆவலுடன் காத்திருக்கும் கோடிக்கணக்கான கிரிக்கட் ரசிகர்களில் நானும் ஒருவனாக காத்திருக்கிறேன்.......

குறிப்பு :- கடந்த ஆண்டும், இந்த ஆண்டும் நோயினால் பீடிக்கப்பட்டு ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளக்கிய இரு பிரபலங்கள் - ரஜினிகாந்த் மற்றும் யுவராஜ்சிங் # இருவரும் பிறந்தது மார்கழி 12 !!! ஒரு Fighter மீண்டு வந்துள்ளார், மற்றைய Fighter ம் நிச்சயம் மீண்டு வருவார்.......

இது யுவராஜ் வழங்கியுள்ள நம்பிக்கை தரும் செய்தி- "I am a fighter and I will return stronger than ever. Initially, I was angry and confused. I was even repentant and kept thinking I could have done some things in life differently. However, I have a counsellor here who has helped me get over the initial shock of learning that I am suffering from cancer. I have come to terms with it now,"

3 வாசகர் எண்ணங்கள்:

Riyas said...

யுவராஜ் பற்றிய சிறப்பான அலசல்.. தனிப்பட்ட ரீதியில் அவரின் நடத்தைகள் பிடிக்காவிட்டாலும் ஒரு போராட்ட குனம்கொண்ட வீரராக அவரை பிடிக்கும்..

2011 இந்தியாவின் உலககிண்ண கனவை நிஜமாக்கியதில் இவரின் பங்கே அதிகம்..

மீண்டும் வருவார் என எதிர்பார்ப்போம்.

பாலா said...

யுவராஜ் இல்லாத அணி முழுமையாக தெரியவில்லை என்பதுதான் என் கருத்தும்.

போராடும் குணம் உடைய திறமையான ஒரு வீரர். மீண்டும் வருவார்.

Jayadev Das said...

மிக நுணுக்கமான தகவல்கள், எனக்கு கிரிக்கெட் ஆர்வம் குறைந்து போனதால் முழுவதும் படிக்க முடியவில்லை....ஹா..ஹா...ஹா...

By the by, உங்க தலைவர் ஒரு மேடையில் செஞ்சுரி அடிச்சிருக்கார், பார்த்தீர்களா?

http://www.youtube.com/watch?v=WtS-J5rFQCI&feature=related


ரஜினியை தாக்கும் சாரு நிவேதிதா
http://www.youtube.com/watch?v=OTeL9uvb1AA&feature=related
[முடிந்தால் இந்த கொசுவை விரட்டவும்.]

Post a Comment

"கருத்துக்கள், நிறைகுறைகள், திட்டுக்கள், பாராட்டுக்கள் போன்றவற்றை கூற விரும்புபவர்கள் கீழுள்ள பின்னூட்ட பெட்டியில் பின்னூட்டலாம்; பதிவுகளை வாசிக்காமல் இடப்படும் டெம்பிளேட் பின்னூட்டங்கள் வேண்டாம் நண்பர்களே."

*******************

வடை, வாழைப்பழம், சூப்பர், கலக்கல் என மொய் வைக்க வரும் நண்பர்களுக்கு; நான் யாருக்கும் பதிலுக்கு மொய் வைக்க மாட்டேன்.(இதனால் ஏற்ப்படும் தர்ம சங்கடத்திற்கு வருந்துகின்றேன்)