Wednesday, January 18, 2012

"விரும்பிய துறையை தேர்ந்தெடுத்துக்கோ" வாழ்க்கைக்கு சரிவருமா?





இங்கிலீஸ்காரன், Taare Zameen Par, 3 Idiots, நண்பன் திரைப்படங்களில் சொல்லப்பட்ட; இன்றைய இளைஞர்களால் அதிகம் ஏற்றுக்கொள்ளப்பட்ட கருத்துத்தான் "விரும்பிய துறையை தேர்ந்தேடுத்துக்கோ". பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு எந்ததுறை பிடிக்கிறதோ!! அதே துறையில் அவர்களது திறமையை வளர்க்க முன்வரவேண்டும் என்கின்றதுதான் இதன் சாரம். திரைப்படங்கள் மட்டுமல்ல சமூகத்திலும் இந்த விடயம் சம்பந்தமான பேச்சுக்கள், ஆலோசனைகள் அவ்வப்போது நடந்துகொண்டுதான் இருக்கின்றன.

கேட்ப்பதற்க்கும், ரசிப்பதற்கும் இந்த விடயம் நன்றாகத்தான் இருக்கின்றது; ஆனால் நடைமுறை வாழ்வில் சாத்தியமா என்பதில்த்தான் எனக்கு நிறைய சந்தேகங்கள்!!! மேற்குறிப்பிட்ட திரைப்படங்களை குறைசொல்வதோ, அந்த திரைப்படங்களில் சொல்லப்பட்ட மையக்கருவை குறை சொல்வதோ என் நோக்கமல்ல; அந்த கருத்தில் எனக்கு சில சந்தேகங்களும், உடன்பாடில்லாத நிலையும் உள்ளது; அதை தெளிவு படுத்தவே இந்த பதிவு!!!

ஒரு இளைஞனுக்கு, யுவதிக்கு அல்லது சிறுவர்களுக்கு தங்களுக்கு பிடித்த துறை எது என்பது எந்த வயதில் புலப்படும்? 15, 16 வயதுவரை பெரும்பாலும் அனைவருக்கும் கல்வி என்பது ஒன்றுதான். இந்த வயதுக்குட்ப்பட்ட காலப்பகுதியில் கல்வி தவிர்த்து வேறு துறைகளில் தமது எதிர்கால துறையை தேர்ந்தெடுக்க சிந்திப்பவர்கள் விளையாட்டு, கலை, தொழில்நுட்ப்பம், வியாபாரம் மற்றும் பரம்பரை சார்ந்த தொழில் போன்றவற்றில்த்தான் பெரும்பாலும் ஈடுபாட்டுடன் காணப்படுவார்கள்.

இதில் தொழில்நுட்ப்பம் என்று குறிப்பிடுவது மின்சாரம், மோட்டார்கள், வாகனங்கள் போன்றவற்றினை கையாளும் மற்றும் திருத்தம் திறன் படைத்தவர்களைத்தான். இவர்களில் தொழில்நுட்பம், வியாபாரம் மற்றும் பரம்பரை சார்ந்த தொழில்களில் ஈடுபாடு உடையவர்களுக்கு தாம் விரும்பினால் தமக்கு விருப்பமான துறையை 15,16 வயதுகளில் தேர்ந்தெடுப்பதில் பெரியளவில் பாதிப்புக்கள் இல்லை!!! இவர்களில் அதிகமானவர்கள் வாழ்க்கையில் எப்படியும் பிழைத்துக் கொள்வார்கள்!!! அனாலும் கல்வியை இடை நிறுத்தியதற்கு எப்போதாவது வருந்தவும் செய்வார்கள்!!



அதே நேரம் இந்த வயதில் விளையாட்டுத்துறை மற்றும் கலைத்துறையில் ஈடுபாடுடையவர்கள் கல்வியை நிறுத்திவிட்டு மேற்ப்படி துறைகளை தேர்ந்தெடுத்து தமது எதிர்காலத்தை நிர்ணயிப்பது சரியான முடிவா என்றால்; என்னை பொறுத்தவரை இல்லையென்றே தோன்றுகிறது!!! சச்சின் டெண்டுல்க்கர், லதா மங்கேஷ்கர், ஏ.ஆர்.ரஹுமான் எல்லோருமே சாதனையாளர்கள்தான், மறுக்கவில்லை; அதே நேரம் இதுதான் எனது கேரியர் என்று படிப்பை நிறுத்திவிட்டு விளையாட்டிலும் சினிமாவிலும் வாழ்வை தேடி காணாமல்போன பல ஏ.ஆர்.ரஹுமான்களும், சச்சின் டெண்டுல்க்கர்களும் எமது கண்ணுக்கு தெரிவதில்லை; எண்ணிக்கையில் மிக மிக அதிகமாய்!!! "வெற்றிகளுக்கு அதிக பெற்றோர்கள், தோல்விகள் அநாதை" என்கின்ற பழமொழியை மெய்ப்பிப்பதுபோல நாம் வென்றவர்களை இன்ஸ்பிரேஷனாக எடுத்துக் கொள்கின்றோம், தோற்றவர்களை பொருட்படுத்துவதில்லை!!

நீங்கள் கேட்க்கலாம் உங்களுக்கு நேர்மறையான எண்ணம் இல்லையா என்று; நேர்மறையாக சிந்தித்தால் மட்டுமே வாழ்வில் ஜெயிக்க முடியாது, எதையும் நடைமுறையில் சிந்திப்பது அவசியம்!!! கண்ணதாசனும், வாலியும், வைரமுத்துவும் இன்னும் சில கவிஞர்களும் எமக்கு வெற்றியாளர்கள்; அதேநேரம் கவிதையே வாழ்க்கை என்று வாய்ப்பில்லாமல் திரும்பியவர்கள் ஏராளம்!!! கவிதை மட்டுமல்ல பாடகன், இயக்குனர், போட்டோகிராபி, டான்ஸ் என எமக்கு தெரிந்த வெற்றியாளர்களைவிட தோல்வியாளர்களே அதிகம். அப்படியானால் விளையாட்டு, கலை துறைகளில் எதிர்காலத்தை தீர்மானிக்க கூடாதா? என நீங்கள கேட்க்கலாம்; நிச்சயமாக உங்களுக்கு பிடித்த துறையில் நீங்கள் முயற்சி செய்யலாம், கூடவே கல்வியுடன்!!!

அதாவது பிடித்த துறையில் முயற்சி செய்யும் அதே நேரம் கல்வியையும் நிச்சயம் சம அளவி முக்கியத்துவப் படுத்தல் வேண்டும்; குறிப்பிட்ட துறையில் முதற்படி வைக்கும் வரையாவது குறைந்தது கல்வியை தொடர வேண்டும். சச்சினை முன்மாதிரியாக பார்ப்பவர்கள்; சச்சினைவிட டிராவிட்டை முன்மாதிரியாக பார்ப்பது சிறந்தது. டிராவிட் ஒரு பட்டதாரி, ஒருவேளை கிரிக்கட் அவருக்கு கைகொடுக்காவிட்டால் அவருக்கு கேரியருக்கு அவருடைய டிகிரி உதவியிருக்கும். எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடகராகியிருக்காவிட்டால் அவர் ஒரு பொறியியலாளராக வேலை பார்த்திருப்பார். என்னதான் விடாது முயற்ச்சித்தாலும் முயற்ச்சிகள் அனைத்தும் வெற்றியளிப்பதில்லை; ஒரு துறையில் கடின முயற்சி வெற்றியளிக்காதபோது கைகளில் ஒரு டிகிரி இருந்தால்; கல்வி துணை இருக்கின்றது என்கின்ற நம்பிக்கையாவது மீதமிருக்கும்!!!!



இங்கே கல்வி தவிர்த்து வேறொரு துறை பிடிக்கின்றதென்றால் அது அநேகருக்கு பொழுதுபோக்கு சார்ந்தோ, கல்விமீதிருக்கும் பிடிப்பின்மை சார்ந்தோதான் பிடிக்க காரணமாக அமைகின்றது. இப்படியானவர்கள் குறிப்பிட்ட துறைகளில் இலக்கை அடைவார்கள் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை!! காரணம் இந்த துறைகளில் போட்டி மிகமிக அதிகம். இப்படி எதையும் சாராமல் உண்மையான திறமையுடன், கடின உழைப்பை கொடுத்தவர்களுக்கே இந்த துறைகளில் இலக்கை அடைவதற்கு சவால்கள் அதிகம்!! இந்த துறைகளில் முயற்ச்சிப்பவர்கள் மேலே சொன்னதுபோல கையில் துணைக்கு கல்வியாலான தகமையை வைத்திருத்தல் அவசியம்!!!

சரி இப்போது கல்வி சார்ந்த துறைகளிலேயே பிடித்ததை தேர்ந்தெடுப்பதை பற்றி ஆராய்வோம்; 16 வயதில் கிட்டத்தட்ட எமக்கு எந்த துறை சரிவரும் என்பது ஓரளவுக்கு எமக்கு தெரிந்திருக்கும். கணிதமா, விஞ்ஞானமா, வணிகமா, கலையா, தொழில் நுட்பமா தங்களுக்கு வரும் என்பது பலருக்கும் இந்த வயதில் தெரிந்திருக்கும். ஆனாலும் சிறுவயது கனவு ஒன்று சமூகத்தால், பெற்றோரால் விதைக்கப்பட்டிருக்கும்; இதனால் தனக்கு விஞ்ஞானம் சரிவராது என்று தெரிந்தும், டாக்டராகும் விருப்பத்தில் கடும் முயற்சி எடுத்தும்கூட தோற்றுப்போன பலர் இருக்கின்றார்கள்!!! அதே நேரம் நண்பன் படிக்கின்றான் என்பதற்காக தனக்கு சரிவராத துறையை விரும்பி தேர்ந்தெடுத்தவர்களும் இருக்கின்றார்கள்; அதே நேரம் பெற்றோரால் பலவந்தமாக ஒரு துறையில் தள்ளி விடப்பட்டவர்களும் இருக்கின்றார்கள். இவற்றை எல்லாம் கடந்து சரியான முடிவை எடுப்பவர்களும் இருக்கின்றார்கள், எண்ணிக்கையில் குறைவாய்!!!

பெற்றோர்கள் பலர் தங்கள் விருப்பத்தை திணிக்கின்றார்கள் (சில பெற்றோர் பிள்ளைகளை புரிந்து சரியான முடிவை எடுப்பதையும் குறிப்பிட்டாக வேண்டும்); மாணவர்கள் பலருக்கோ சொந்தமாக, சரியான முடிவெடுக்கும் வயதும் அனுபவமும் இல்லை; அப்படியானால் எப்படி துறையை சரிவர தேர்ந்தெடுப்பது? இந்த விடயத்தை சரியாக தீர்மானிப்பதற்கு நாடவேண்டிய முக்கிய நபர்கள் ஆசிரியர்கள். ஒரு மாணவனின் பிளஸ், மைனஸ் நன்கறிந்தவர்கள் அவர்கள்தான். மாணவனின் விருப்புக்கு அமைவான துறையை அவனால் தொடரமுடியுமா என்பதை ஆசிரியர் துணைக்கொண்டு அறிந்து, ஆமென்றால் அந்த துறையிலும், அந்த துறை சரியாக வராதென்றால் மாற்றுத் துறையையும் (மாணவனுக்கு புரியும்படி , விரும்பும்படி எடுத்துக் கூறி) தேர்ந்தெடுத்து கொடுப்பது பெற்றோர்களின் கடமை. அதாவது பிடித்த துறையை மாணவன் தேர்ந்தெடுப்பதிலும் சரியான துறையை தேர்ந்தெடுப்பதுதான் சால சிறந்தது!!!!

சிலருக்கு குறிப்பிட்ட வயதில் படிப்பு சுத்தமாக எடுபடவில்லை என்றால் அவர்களை மேலும் படிக்கத் தூண்டுவதில் பயனேதுமில்லை, காலமும், பணமும்தான் விரயம்!!! இவர்களுக்கு தொழில் முயற்சி ஒன்றை ஏற்படுத்திக் கொடுப்பது அவசியம். இவர்களில் அதிகமானவர்களுக்கு தமது எதிர்காலம் பற்றிய எந்த திட்டமும் இருக்காது, பணம் படைத்த குடும்பத்தை சார்ந்த இந்த வகையினர் சொந்த தொழில் அல்லது வெளிநாடு சென்று பிழைத்துக் கொள்வார்கள்; பணமில்லாமல் இந்த வகையில் சிக்கிக்கொள்ளும் பல இளைஞர்கள் மற்றும் யுவதிகள்தான் பாவம், பல முதலாளிகளுக்காக தம் வாழ்வை தொலைத்து தினமும் 10, 12 மணித்தியாலங்களுக்குமேல் குறைந்த சம்பளத்தில் அடிமாடுகள்போல உழைத்துக் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்!!!! இவர்களுக்கு என்ன வழி என்பதுதான் புரியவில்லை!!!!!



அடுத்து சிலருக்கு பிடித்த துறை என்பது அவ்வப்போது மாறிக்கொண்டிருக்கும்; சிலருக்கு பிடித்த துறை சம்பந்தமாக எந்தவித ஐடியாக்களுமே இல்லாமல் இருக்கும். சிலருக்கு சில துறைமீது அதிக ஈடுபாடிருக்கும், ஆனால் அதை அடைவது, எட்டுவது எட்டாக்கனியாக இருக்கும். எப்படி பார்த்தாலும் பிடித்த துறையினை சரியாக தேர்ந்தெடுத்து, அதில் பயணித்து வெற்றியடைந்தவர்கள் எண்ணிக்கை ஒப்பீட்டளவில் மிக மிக குறைவே!!! அதே நேரம் கிடைத்த துறையை பிடித்த துறையாக மாற்றி அதில் வெற்றி அடைந்தவர்கள் ஒப்பீட்டளவில் மிக மிக அதிகம்!!! பிடித்த துறையில் முயற்சி செய்வது தவறல்ல; அது அமையாவிட்டால் வேறு துறைகளிலும் செயற்ப்பட முடியும் என்கின்ற நம்பிக்கையும், தகுதியும் அவசியம், அதற்க்கு கல்வி அவசியம்!

இன்றைக்கு படித்த படிப்பிற்கும் செய்யும் வேலைக்கும் சம்பந்தமில்லாமல் எத்தனை பேர் இருக்கின்றார்கள்!!! ஒரு இலக்கை முன் வைத்துத்தான் எல்லோருமே ஒரு துறையில் கற்கின்றார்கள், ஆனால் அந்த துறையிலேயே எதிர்பார்த்த வெற்றியை பெற்று கற்கை சார்ந்த வேலை செய்பவர்களைவிட; இலக்கை அடையாமலும், இலக்கை அடைந்தும் சிலபல காரணங்களுக்காக வேறு துறையில் வேலை செய்பவர்களே அதிகம்!!! இவர்களும் மகிழ்ச்சியாகத்தான் இருக்கின்றார்கள். இதில் குறிப்பிட வேண்டிய மற்றொரு முக்கிய விடயம் பிடித்த துறை அமையாவிட்டால்கூட பரவாயில்லை; பிடிக்காத துறையை முடிந்தவரை தவிர்ப்பது நல்லது!!!! அது வாழ்வின் நின்மதியை குலைத்துவிடும்!!!!

"பிடித்த துறையை தேர்ந்தெடுத்துக்கோ" என்பதிலும் பார்க்க; "உனக்கு தகுதியான(Capacity) சரியான துறையை தேர்ந்தெடுத்துகோ; இல்லையா கிடைத்த துறையை பிடித்த துறையாக மாற்றிக்கோ; முடிந்தவரை பிடிக்காத துறையை தவிர்க்கப்பார்" என்பதித்தான் எனக்கு உடன்பாடு!!!

குறிப்பு 1 - பதிவிலே கல்வி முக்கியம் என்று பல தடவை குறிப்பிட காரணம்; இன்றைய வாழ்க்கை கல்வியை பின்னியே காணப்படுகின்றது. மற்றும் எமது கல்வி முறையில் (Education System) உள்ள தவறுகள், மற்றும் குறைபாடுகள் சம்பந்தமாக குறிப்பட்ட திரைப்படங்களில் சொல்லப்பட்ட கருத்துக்கள் இங்கு பதிவில் எடுத்துக்கொள்ளப் படவில்லை.

குறிப்பு 2 - இந்தப்பதிவுக்கான கருபொருளுக்கு சொந்தக்காரர் எனது தம்பிதான்; நாங்க ரெண்டு பெரும் பேசும்போது ஒரு விஷயம் புரிந்தது; இன்றைக்கு வரைக்கும் எங்க ரெண்டு பேருக்கும் இதுதான் எங்கள் துறை என்று ஒரு இலக்கும் நிலையாக இருக்கவே இல்லை; இது எங்க ரெண்டு பேருக்கும் மட்டும் தானா இல்லை மத்தவங்களுக்குமா என்கிறதை செக் பண்ணி பாத்ததில; பலபேரு நம்ம லிஸ்டில இருக்கிறாங்க :-)) எனக்கு அப்பப்ப பிடித்த துறை மாறிக்கிட்டே இருந்திருக்கு; நிலையாக எதுவுமே இருந்ததில்லை, அப்படி அப்பப்போ பிடித்த துறைகளில் ஒரு சிலவற்றை நான் முயற்ச்சித்திருந்தால் 99 சதவிகதம் நான் தோல்வியடைந்தவனாகத்தான் இருந்திருப்பேன் என்பது இப்போது எனக்கு புரிகிறது!!!! (முயற்ச்சிக்காமலும் அதே நிலைமைதான்; அது வேறு சொந்தக்கதை :p)

இந்த விடயத்தில் கருத்து வேறுபாடுகள் இருக்கலாம், இது என் சொந்தக்கருத்து; உங்கள் எண்ணம், கருத்துக்கள் வேறுபடலாம்!!!!! அதை நீங்கள் தாரளமாக பகிரலாம்!!!

13 வாசகர் எண்ணங்கள்:

SShathiesh-சதீஷ். said...

நல்ல அலசல் நண்பா

சிநேகிதன் அக்பர் said...

மிக அருமையான கருத்துப்பகிர்வு.

நீங்கள் குறிப்பிட்ட படங்களில் எல்லாமே பிடித்த துறையைத்தான் படிக்க வேண்டும் என்ற வற்புறுத்தலை விட நம் கல்வி முறையில் மாற்றம் வேண்டும் என்று சொன்னதாகத்தான் நினைக்கிறேன்.

இந்த கல்வி முறை வெறும் குமாஸ்தாக்களை மட்டுமே உருவாக்குகிறது என்பது அனுபவப்பூர்வமான உண்மை (டாக்டரும் , எஞ்ஜினியரும் 5 % தானே )

சமச்சீர் கல்வி ஒரு நல்ல ட்

நிரோஜ் said...

எனக்கு ஒன்டுமே எழுத தோணல ஜீவன் அண்ணா ...பட் நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை, மாறுபட்ட கருத்துக்கு இடமில்லை ..

இருந்த போதிலும் நீங்கள் சொல்வது போல நானும் கணணி துறையில் டிகிரி செய்து கொண்டு தான் இருக்கிறேன் என்ற பெயர் மட்டும் தான் .... வாழ்க்கையில் எந்த விதமான ஐடியா வும் இல்லாமலே போய் கொண்டு இருக்கிறது ....

நடப்பது நடக்கட்டும் ....

பின் குறிப்பு: ஒரு ப்ளாக் இல் முதன்முறை கமெண்ட் போடுகிறேன் ...அதுவும் உங்களது தான் முதலாவது :P

Unknown said...

நான் ஒரு துறையை தேர்ந்தெடுத்தேன் பதினெட்டு வயசில...சரியோ பிழையோ எனக்கு பிடித்தது,நான் தேர்ந்தெடுத்தது அதில எப்பாடுபட்டாவது முன்னேறனும்னு நினைக்கிறேன்,பார்ப்போம்.

ஹாலிவுட்ரசிகன் said...

மிகவும் அருமையான அலசல் ஜீவா. “வெற்றிகளுக்கு அதிக பெற்றோர்கள், தோல்விகள் அநாதை”

எனக்கும் இப்பொழுது இரண்டு துறைகளில் எதை தெரிந்தெடுத்து career ஒன்றை அமைத்துக்கொள்வது என்பதில் குழப்பம் உண்டு. பிடித்த துறையில் (ஐ.டி) செல்ல யோசித்தாலும் கைவசம் உள்ள தொழிலை (சற்று பிடித்திருக்கிறது) செய்வோமா என்ற குழப்பத்திற்கு விடை தேடுகிறேன்.

Jayadev Das said...

மிக அசாதாரமான ஒரு டாபிக்கை எடுத்திருக்கீங்க!! எளிதில் இதற்க்கு பதிலோ தீர்வோ சொல்லிவிட முடியாது. மிக விரிவாக அலச வேண்டிய விஷயம். 3 Idiots படத்தில் கல்வி தவிர வேறு விரும்பிய துறைகளில் விருப்பம் இருந்தால் தேர்ந்தேடுத்துக்கோ என்று சொல்ல வருகிறது. ஆனால் நடைமுறையில் நடப்பதே வேறு. கல்வி தேவை என்பதை யாரும் மறுக்கவே இல்லை, கல்வித் துறைகளிலேயே எந்தத் துறையில் பணம் சம்பாதிக்க முடியுமோ அதையே தேர்ந்தெடு என்று மாணவர்கள் வற்ப்புருத்தப் படுகிறார்கள் என்பதுதான் கொடுமை!! தற்போது கணினி சார்ந்த படிப்புகளுக்கு வேலை வாய்ப்பு அதிகம் என்பதால், எஞ்சினியரிங் கல்லூரிகளில் Mechanical, Civil போன்ற துறைகள் காலியாக கிடக்கின்றன, அதே மாதிரி கலைக் கல்லூரிகளில் Commerce படிப்புக்கு ஏகப் பட்ட கிராக்கி, ஆனால் கணிதம், அறிவியல், தமிழ், வரலாறு போன்ற துறைகளில் சேர ஆளில்லை. பிடிக்கிறதோ பிடிக்கவில்லையோ, எந்தத் துறையில் பணம் ஈட்ட முடியுமோ அங்கே போய்ச் சேர வேண்டிய நிர்பந்தத்தில் பெற்றோர்களும் மாணவர்களும் இருக்கிறார்கள்.

Jayadev Das said...

"நமக்கு விரும்பிய துறை எப்படின்னு நமக்கே எப்படி தெரியும், எப்போ தெரியும்"- இது நானும் ரொம்ப நாளாவே யோசித்துக் கொண்டிருக்கும் கேள்வி!! குருகுலங்களுக்கு மாணவர்கள் செல்லும்போது ஆசிரியர்களே யார் எந்தத் துறையில் சிறந்து வருவார்கள் என்று சொல்லி விடுவார்களாம். ஆனால் அப்போது இன்றைக்கு மாதிரி ஊருபட்ட துறைகள் இருக்க வில்லை. ஆசிரியர் தொழில், வைத்தியம் பார்ப்பது, அரசனிடம் படையில் சேர்வது, விவசாயம், வியாபாரம் இவை எதுவுமே இல்லையென்றால் கூலித் தொழில் என்று அன்றைய துறைகளை அடக்கி விடலாம். இன்றைக்கு நிலைமை வேறு. எல்லோரும் படித்தே தீர வேண்டும் என்ற கருத்தில் எனக்கு உடன்பாடில்லை. MSV, இளையராஜா, AR ரஹ்மான் போன்றவர்கள் படிக்க போயிருந்தால் நிச்சயம் நாசமாய் போயிருப்பார்கள், ஏனெனில் நமது கல்வித் திட்டம் அப்படி. இயல்பில் நமக்கிருக்கும் திறைமைகளை வெளிக்கொணரும் வகையில் அது அமைக்கப் படவில்லை. நம்முடைய தனித்துவத்தை சிதைத்து, தன்னம்பிக்கையை காலிசெய்து, எங்கேயாவது யாருக்காவது கைகட்டி வேலை செய்யும் அடிமைகளாகத்தான் நம்மை உருவாக்குகிறது. நாம் எதில் சிறந்து விளங்குவோம், எது மிகவும் பிடித்தது என்பது மில்லியன் டாலர் கேள்வி, ஆனால் சிலர் எப்படியோ இதை அறிந்து விரும்பிய துறையைத் தேர்ந்தெடுத்து அதில் சிறந்து விளங்குகிறார்கள், சிலரால் அதை அறிந்து கொள்ள முடியாமல் சந்தர்ப்ப சூழ்நிலை எங்கே கொண்டுபோய் விடுகிறதோ அங்கேயே இருந்து குப்பை கொட்டி கொண்டிருக்கிறார்கள்.

Jayadev Das said...

இங்கே நாம் ஒரு விஷயத்தை கவனிக்க வேண்டும். "கையில் ஐந்து விரல்களும் ஒரே மாதிரியா இருக்கிறது" என்று ஒரு பழமொழி சொல்வார்கள். மக்கள் எல்லோருக்கும் கல்வி கர்ப்பத்தில் திறமை/ஆர்வம் இருக்கும் என்று எதிர்பார்க்க முடியாது. ஒரு நல்ல அரசு மக்களிடம் பலதரப்பட்ட குணாதிசயங்கள்/திறமைகள் ஏற்றத் தாழ்வுகள் இருக்கும் என்பதைப் புரிந்து கொண்டு, யாருக்கு எதில் திறமை இருக்கிறதோ, அது எந்த அளவுக்கு இருக்கிறதோ அதற்குத் தகுந்த மாதிரி அவர்கள் உழைத்து தங்கள் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்ளலாம் என்ற சூழ்நிலையை உருவாக்கித் தந்து மக்களை காக்க வேண்டும். ஆனால் தற்போது அந்த நிலை இல்லை. "உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் மற்றெல்லாம் தொழுதுண்டு பின்செல்பவர்" என்ற வள்ளுவனின் வாக்கு பொய்யில்லை. ஆனால் விவசாயம் செய்தால் பூச்சி மருந்து குடித்துதான் சாக வேண்டும் என்ற நிலை இன்றைக்கு நிலவுகிறது. இது விவசாயிகளுக்கு மட்டுமல்ல மொத்த நாட்டுக்கே பேராபத்து. யாரும் இது குறித்து கவலைப் படுவதாகவே தெரியவில்லை. இன்றைய வேலை வாய்ப்புகள் எல்லாம் அமெரிக்காவின் பொருளாதாரத்தை நம்பியே இருக்கின்றன. ஆனால் அமெரிக்காவின் பொருளாதாரம் எப்பட்டிப் பட்டது? உலகிலேயே மிகப் பெரிய கடன்காரன் அவன், ஊரான் பணத்தில் சொகுசு வாழ்க்கை வாழ்வது அவர்கள் கொள்கை, அதை நம்பி நம்முடைய பிழைப்பு!! இது எங்கே உருப்படும்?

சின்னப்பயல் said...

இங்கே கல்வி தவிர்த்து வேறொரு துறை பிடிக்கின்றதென்றால் அது அநேகருக்கு பொழுதுபோக்கு சார்ந்தோ, கல்விமீதிருக்கும் பிடிப்பின்மை சார்ந்தோதான் பிடிக்க காரணமாக அமைகின்றது. ///

அடுத்து சிலருக்கு பிடித்த துறை என்பது அவ்வப்போது மாறிக்கொண்டிருக்கும்; சிலருக்கு பிடித்த துறை சம்பந்தமாக எந்தவித ஐடியாக்களுமே இல்லாமல் இருக்கும்.///

தர்ஷன் said...

பாஸ் எங்கள் ஏட்டுக் கல்வி முறை மீதான விமர்சனமே படம்னு நெனக்கிறேன். மனனம் செய்து பரீட்சை எழுதும் முறை மெல்லக் கற்பவனுக்கு உதவாது, மீள்திறனுள்ளவனுக்கோ அவன் மேலும் கற்கவும் வகை செய்யாது. மீள்திறனுள்ளவனை ஒரு மட்டத்திற்கு கட்டுப்படுத்துவதும் மெல்ல கற்பவனை அஞ்சியோடச் செய்வதுமாகவே நம் கல்வி முறை உள்ளது.
கற்றலை வினைத்திறனுள்ளதாயும் விருப்புக்குகந்த்தாயும் மாற்றுவோம் என்று கொண்டு வரப்படும் 5E போன்ற முறைகளும் கற்பவனுக்கும் கற்ப்பிபவனுக்கும் மேலும் சுமைகளையே தருகிறது.
எப்படியும் படிப்பு ஏறாதவன் இருக்கத்தானே பாஸ் செய்வான், அவன் மேலும் படி படி என துன்புறுத்டுவதை விட அவனுக்கு விருப்பமான துறையை தேர்ந்தெடுக்கச் செய்வது நல்லதல்லவா

தர்ஷன் said...

மார்க்கெட்டிங் ஃபீல்டிலோ அல்லது கணனித் துறையிலோ இங்கேயே ப்ரைவட் செக்டரில் அல்லது ஏதேனும் வெளிநாடு ஒன்றில் கை நிறைய சம்பளத்துக்கு வேலை பார்ப்பதை விடுத்து 20000 சம்பளத்துக்கு ஒரு ஆசிரியனாக நானெல்லாம் மாறடிக்க காரணம் ஒன்றே ஒன்று. சரி மெடிசின் எண்டர் பண்ண முடியாமற் போயிற்று ஆனால் நான் படித்த, என் காதலுக்குகந்த உயிரியலும், இரசாயனவியலும், பெளதிகவியலும் கடைசி வரை என் கூடவே வர வேண்டும் அவ்வளவே. அது போல செய்வதை இஷ்டப்பட்டு செய்யவேண்டுமே தவிர கஷ்ட்டப்பட்டு அல்ல என்பது என் எண்ணம்

கிரி said...

ஜீவதர்ஷன் சிறப்பான கட்டுரை.

நீங்க சொன்ன மாதிரி எனக்கு பள்ளிப்படிப்பு முடிக்கும் போது எந்த துறையை தேர்ந்தெடுப்பது எனக்கு புரியவில்லை. இருப்பதிலே எளிமையானது எடுத்துப் படிக்கலாம் என்று தான் தோன்றியது. அந்த சமயத்தில் கணினி பிரபலமாகிக்கொண்டு இருந்த நேரம்.. அப்போது என்னுடைய அப்பா இந்தத்துறையில் படிக்க அறிவுறுத்தினார் அப்போது தமிழ் வழியில் படித்து ஆங்கிலம் வர மிக சிரமமாக இருந்தது.. அது பற்றி எழுதினால் ஒரு பெரிய கதையே கூற வேண்டும். எப்படியோ அதில் ஒரு கோர்ஸ் படித்து வந்து விட்டேன்.. ஆனால் இன்றும் என்னுடைய டிகிரிக்கும் நான் வேலை பார்க்கும் துறைக்கும் சம்பந்தமில்லை.

நான் விரும்பாமலே வந்து பின் இதில் ஐக்கியமாகி விட்டேன் :-) ஜெயதேவ் தாஸ் சொன்ன மாதிரி இது மிகப்பெரிய சப்ஜெக்ட் ஒரு பதிவில் அடக்கி விட முடியாது.

கார்த்தி said...

100% agree with you. So i have shared in my பொட்டலம் page :)

Post a Comment

"கருத்துக்கள், நிறைகுறைகள், திட்டுக்கள், பாராட்டுக்கள் போன்றவற்றை கூற விரும்புபவர்கள் கீழுள்ள பின்னூட்ட பெட்டியில் பின்னூட்டலாம்; பதிவுகளை வாசிக்காமல் இடப்படும் டெம்பிளேட் பின்னூட்டங்கள் வேண்டாம் நண்பர்களே."

*******************

வடை, வாழைப்பழம், சூப்பர், கலக்கல் என மொய் வைக்க வரும் நண்பர்களுக்கு; நான் யாருக்கும் பதிலுக்கு மொய் வைக்க மாட்டேன்.(இதனால் ஏற்ப்படும் தர்ம சங்கடத்திற்கு வருந்துகின்றேன்)