Saturday, January 12, 2013

ஒருநாள் போட்டிகளின் பிதாமகன் சச்சின்...


இரு வாரங்களுக்கு முன்னர் ஒரு பத்திரிகைக்கு எழுதியது!!!


கிரிக்கட் என்கின்ற சொல்லையும் சச்சின் டெண்டுல்கர் என்கின்ற பெயரையும் பிரித்துப் பார்க்க முடியாது. மேலோட்டமாகவேனும் கிரிக்கெட்டை அறிந்திருக்கும் ஒருவருக்கு சச்சினை தெரியாதிருக்கும் வாய்ப்பு 0% தான்!! அந்தளவிற்கு சச்சினது பெயர் கிரிக்கட் உலகில் அனைவருக்கும் மிகவும் பரிச்சியமான ஒன்று!! மூன்று தலைமுறை கடந்து சச்சினை ரசிக்கின்றார்கள், மூன்று தலைமுறை பந்து வீச்சாளர்களை சச்சின் அடித்து நொருக்கியிருக்கின்றார், சச்சினுடன் ஒன்றாக ஆடியவர்களது பிள்ளைகள் சச்சினுடன் சேர்ந்து ஆடியிருக்கின்றார்கள், சச்சினுடன் ஆடியவர்களில் பலர் இன்று வர்ணனையாளர்கள், சச்சினுக்கு எதிராக ஆடியவர்கள் சச்சின் இருக்கும் அணிக்கு பயிற்சியாளர்கள், சச்சினுடன் ஆடிய வீரர்கள் இன்று சச்சினுக்கு நடுவர்களாக தீர்ப்பளிக்கின்றார்கள். எந்த நாட்டு ரசிகராக இருந்தாலும், தமது நாட்டு அணிக்கு எதிராக ஆடுகின்றார் என்கின்றபோதும் சச்சினது அழகான ஷாட்களுக்கு தம்மை மறந்து கைதட்டி ரசிக்கின்றார்கள். வெறும் 5 அடி 5 அங்குலம் உயரமுடைய சச்சின் மிகவும் உயரமான ஆஜானுபாகு தோற்றமுள்ள பந்துவீச்சாளர்களுக்கு தண்ணிகாட்டும் துடுப்பாட்ட கலையை வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது.

1989 களின் இறுதியில் பாகிஸ்தானுக்கு எதிராக தனது முதல் ஒருநாள் போட்டியை விளையாடிய சச்சின், 23 ஆண்டுகளுக்கு பின்னர் தற்போதுதான் (2012 இறுதியில்) தனது ஒருநாள் போட்டிகளின் நீண்ட பயணத்திற்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். ஆம், அவர் இறுதியாக ஆடியதும் ஆசிய கிண்ணத்தில் பாகிஸ்தானுக்கு எதிராகத்தான். 23 ஆண்டுகள் சர்வதேசப்போட்டிகளில் தொடர்ச்சியாக ஆடுவதென்பது சாதாரண விடயமல்ல! உபாதைகள், மோசமான ஓட்டக்குவிப்பு நிலை, கிரிக்கட்டில் அரசியல் என பல தடைக்கற்களில் சிக்காமல் இருந்தால் மாத்திரமே இது சாத்தியம், இந்த மூன்றும் சச்சினை அவ்வப்போது நெருங்கியிருப்பினும் சச்சின் அவற்றிலிருந்து மீண்டுவந்து தனது ஓட்டக்குவிப்பை அதிகப்படுத்தினாரேயன்றி தளர்ந்துவிடவில்லை. 40 வயது நெருங்கும் நிலையிலும் சச்சினது ஓய்வு பலருக்கும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றுதான், ஆனாலும் என்றோ ஒருநாள் இதை செய்துதானே ஆகவேண்டும்!! அண்மைக் காலங்களாக ஒருநாள் போட்டிகளில் சச்சினுக்கு தொடர்ச்சியான சந்தர்ப்பங்கள் வழங்கப்படவில்லை; உலகக்கிண்ண இறுதிப்போட்டிக்குப் பின்னர் கடந்த 20 மாதங்களில் சச்சின் வெறும் 10 போட்டிகளில் மாத்திரமே ஆடியுள்ளார். முதுமையும், ஓட்டக்குவிப்பின்மையால் வந்த விமர்சனங்களும்தான் அழுத்தமாக மாறி சச்சினை ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வுபெறத் தூண்டியிருப்பினும், அவர் ஓய்வுபெற்ற இத்தருணம் சரியான நேரம்தான்!!

சச்சினது முதல் இரண்டு ஒருநாள் போட்டிகளில் அவர் பெற்ற ஓட்டங்களின் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா? பூச்சியம். முதல் போட்டியே சச்சினுக்கு வித்தியாசமான போட்டிதான், பாகிஸ்தானுக்கு எதிராக பாகிஸ்தானில் நடைபெற்ற 16 ஓவர்களைக் கொண்ட (மழை காரணமாக) போட்டிதான் சச்சினின் முதலாவது ஒருநாள் போட்டி; சுவாரசியம் என்னவென்றால் சச்சினுக்கு அப்போது வயதும் 16 தான். இந்தப்போட்டியில் உலகின் முன்னணி பந்துவீச்சாளர்களில் ஒருவரான வக்கார் யூனிஸின் பந்துவீச்சில் சச்சின் ஆட்டமிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது. சில மாதங்களின் பின்னர் மீண்டும் அவர் ஆடிய நியூசிலாந்துக்கு எதிரான போட்டியிலும் ஓட்டங்கள் எதனையும் அவரால் குவிக்க முடியவில்லை. அதன் பின்னர் சில போட்டிகளில் சச்சின் ஆடியிருப்பினும் சொல்லிக்கொள்ளும்படியான ஓட்டக்குவிப்புக்கள் எவையும் இடம்பெறவில்லை. ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் அதிகூடிய அரைச்சதங்களாக 96 அரைச்சதங்களை குவித்துள்ள சச்சின் தனது ஒன்பதாவது போட்டியில்தான் தனது கன்னி அரைச்சதத்தை இலங்கைக்கு எதிராக பெற்றுக்கொண்டார். அந்தப் போட்டியில் 5 ஆம் இலக்கத்தில் களமிறங்கி 41 பந்துகளில் 53 ஓட்டங்களை பெற்று இந்தியாவின் வெற்றியை உறுதிசெய்த சச்சின், பந்துவீச்சிலும் இரண்டு விக்கட்டுகளை கைப்பற்றியிருந்ததால் ஆட்டநாயகனாகவும் தெரிவுசெய்யப்பட்டார்; ஒருநாள் போட்டிகளில் ஆகக்கூடியதாக 62 ஆட்டநாயகன் விருதுகளை தனது பெயரில் கொண்டுள்ள சச்சினின் முதல் ஒருநாள் போட்டிக்கான ஆட்டநாயகன் விருது இதுதான்.


சாதனை எண்ணிக்கையான 463 ஒருநாள் போட்டிகளில் விளையாடி, ஒருநாள் போட்டிகளின் அதிகபட்சமான யாரும் இலகுவில் எட்டமுடியாத 49 சதங்களை தன்னகத்தே கொண்டிருக்கும் சச்சின் தனது கன்னிச் சதத்தை தனது 79 ஆவது போட்டியில்தான் பெற்றுக்கொண்டார். 1994 ஆம் ஆண்டு இலங்கையில் இடம்பெற்ற 'சிங்கர் வேர்ல்ட் சீரிஸ்' தொடரில் அவுஸ்திரேலியாவுக்கு எதிராக ஆரம்ப துடுப்பாட்ட வீரராக களமிறங்கி 130 பந்துகளை எதிர்கொண்டு சச்சின் குவித்த 110 ஓட்டங்கள் அந்தப்போட்டியில் இந்தியாவிற்கு வெற்றியையும், சச்சினுக்கு ஆட்டநாயகன் விருதையும் பெற்றுக்கொடுத்தது. ஆரம்ப துடுப்பாட்ட வீரராக களமிறங்கி ஒரு வீரர் பெற்றுக்கொண்ட அதிக ஓட்டங்கள் என்னும் சாதனையாக 15310 ஓட்டங்களை குவித்துள்ள சச்சின்; முதன்முதலாக ஆரம்பத் துடுப்பாட்டவீரராக களமிறங்கிய போட்டி நியூசிலாந்துக்கு எதிராக நியூசிலாந்தின் அக்லண்ட் மைதானத்தில் இடம்பெற்ற போட்டிதான். 142 என்னும் இலகுவான ஓட்ட எண்ணிக்கையை எட்டிப்பிடிக்க வேண்டிய இந்தியா சச்சினை முதன் முதலாக ஆரம்ப துடுப்பாட்ட வீரராக களமிறக்கியது; காரணம், இந்தியாவின் ஆரம்ப துடுப்பாட்ட வீரரான நவ்ஜொட் சிங் சித்துவிற்கு ஏற்பட்ட உபாதை. கிடைத்த சந்தர்ப்பத்தை கெட்டியாக பிடித்துக்கொண்ட சச்சின்; யாரும் எதிர்பாராதவகையில் அதிரடியாக ஆடி 15 பவுண்டரிகள் 2 சிக்ஸர்கள் என வெறும் 49 பந்துகளில் 82 ஓட்டங்களை விளாசினார், கூடவே ஆட்டநாயகன் விருதையும் தட்டிக்கொண்டார். அன்றிலிருந்து சச்சின் இந்திய அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரராக மாபெரும் பங்களிப்பை இறுதிவரை கொடுத்துவந்துள்ளார்!!

ஒருநாள் போட்டிகளில் சச்சின் 49 சதங்களை பெற்றிருந்தாலும் 1998 ஆம் ஆண்டு அவுஸ்திரேலியா அணிக்கு எதிராக ஷார்ஜா மைதானத்தில் இறுதிப் போட்டியொன்றில் பெற்றுக்கொண்ட சதம்; சச்சினின் மிகச்சிறந்த சதங்களிலில் ஒன்றாக இன்றும் கருதப்படுகின்றது. அன்றைய காலப்பகுதியில் 272 என்னும் மிகப்பெரிய இலக்கை ஷார்ஜா மைதானத்தில் இரவுநேரம் இரண்டாவதாக துடுப்பெடுத்தாடி பெற்றுக்கொள்வதென்பது இலகுவான காரியமன்று!! பலம் பொருந்திய அவுஸ்திரேலிய பந்துவீச்சை அடித்து நொருக்கி சச்சின் பெற்றுக்கொண்ட அந்த 134 ஓட்டங்கள் இந்தியாவிற்கு கிண்ணத்தையும் சச்சினுக்கு ஆட்டநாயகன் விருதையும் பெற்றுக்கொடுத்தது. சச்சின் சதம் பெற்ற மற்றுமொரு முக்கிய போட்டி 1999 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற உலகக்கிண்ணப் போட்டித் தொடரில் கென்யாவுக்கு எதிராக பெறப்பட்டது; தனது தந்தையின் பிரிவின் மணித்துளிகள் கடக்கும் முன்னர், மனதின் பாரத்தை இறக்கிவைக்கும் அளவுக்கு கால அவகாசம் போதாத நிலையில்; சச்சின் 114 பந்துகளில் பெற்றுக்கொண்ட 140 ஓட்டங்கள் மிகவும் உணர்ச்சி பூர்வமானது. இப்படி சச்சின் பெற்ற சதங்களில் பல சதங்கள் சிறப்பு வாய்ந்தவை எனினும்; 2003 ஆம் ஆண்டு உலகக்கிண்ண போட்டிகளில் 273 என்னும் கடினமான இலக்கை பலமான பாகிஸ்தான் பந்து வீச்சை எதிர்கொண்டு, வெறும் 75 பந்துகளில் சச்சின் பெற்ற 98 ஓட்டங்கள் சச்சினின் மிகவும் முக்கியமான இனிங்ஸ்களில் ஒன்றாக கணிக்கப்படுகின்றது. பரம எதிரி நாடான பாகிஸ்தானுக்கு எதிராக வேகப் பந்துவீச்சாளர்களுக்குச் சாதகமான மைதானத்தில் பலமான பாகிஸ்தான் வேகங்களை சச்சின் அடித்து நொறுக்கிய இனிங்ஸது. அதேபோன்று மற்றுமொரு முக்கியமான இனிங்க்ஸ்; தென்னாபிரிக்காவுக்கு எதிராக 2010 ஆம் ஆண்டு குவாலியோர் மைதானத்தில் சச்சின் பெற்றுக்கொண்ட 200* ஓட்டங்கள்தான், ஒருநாள் போட்டிகளின் முதல் இரட்டை சதம் இதுதான்.

சச்சினை ஒரு துடுப்பாட்ட வீரராக மட்டுமே சாதனைகள் முன்னிறுத்தினாலும் பந்துவீச்சிலும் சச்சின் மறக்க முடியாத சில சம்பவங்களை கிரிக்கட் வரலாற்றில் நிகழ்த்தியுள்ளார். 1991 ஆம் ஆண்டு மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக அவுஸ்திரேலியாவின் பேத் மைதானத்தில் இடம்பெற்ற போட்டியில்; 6 ஓட்டங்களுக்குள் மேற்கிந்திய தீவுகள் அணியை கட்டுப்படுத்தவேண்டிய நிலையில் அன்றைய அணித்தலைவரான அசாருதீன் தனது முக்கிய பந்துவீச்சாளர்கள் நான்கு பேரினதும் 40 ஓவர்களும் நிறைவடைந்த நிலையில் வேறு வழியின்றி சச்சினை பந்து வீச அழைத்தார். ஒரு விக்கட் மீதமிருக்க இறுதி ஓவரில் 6 ஓட்டங்களுக்காக ஆடிய மேற்கிந்திய அணி முதல் 5 பந்துகளிலும் 5 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. போட்டி சமநிலையில் இருக்கும்போது அந்த ஓவரில் இறுதிப்பந்தை வீசிய சச்சின்; 24 ஓட்டங்களைப் பெற்று சிறப்பாக ஆடிக்கொண்டிருந்த கமின்ஸை சிலிப் திசையில் நின்றுகொண்டிருந்த அசாருதீனிடம் பிடி கொடுத்து ஆட்டமிழக்கச் செய்தார், போட்டி சமநிலையில் முடிவடைந்தது. அதேபோல் 1993 ஆம் ஆண்டு 'ஹீரோ கப்' அரையிறுதியில் தென்னாபிரிக்காவுடனான போட்டியில் இறுதி ஓவரில் தென்னாபிரிக்காவிற்கு 6 ஓட்டங்கள் தேவைப்பட்டது. அனுபவம் மிக்க கபில்தேவ், ஸ்ரீநாத், பிரபாகர் ஓவர்கள் மீதமிருக்க இம்முறை சச்சின் மீது நம்பிக்கை வைத்து பந்துவீச அழைத்தார் அசாருதீன். இறுதி ஓவரில் வெறும் 3 ஓட்டங்களை மட்டும் விட்டுக்கொடுத்து 2 ஓட்டங்களால் போட்டியை வெற்றி கொண்டதுடன், இந்தியாவை இறுதிப்போட்டிக்கும் அழைத்துச்சென்றார் சச்சின். இவற்றைவிட 1998 ஆம் ஆண்டு அவுஸ்திரேலியாவுடனும், 2005 ஆம் ஆண்டு பாகிஸ்தானுடனும் 5 இலக்குகளை சாய்த்து போட்டியை இந்தியாவின் கைகளுக்கு வெற்றிக்கனியாக மாற்றியிருக்கின்றார், இந்த இரு போட்டிகளும் இடம்பெற்றது கொச்சி மைதானத்தில் என்பது விசேட அம்சம்.


18426 ஓட்டங்களை உலகசாதனையாக தனது பெயரில் சச்சின் கொண்டிருந்தாலும் அதில் 4 ஓட்டங்கள் மிகவும் சிறப்பு வாய்ந்தவை. ஒரு போட்டியில் அவுஸ்திரேலியாவின் கிளேன் மக்ராத் தான் வீசிய பந்தை கையில் எடுத்து மீண்டும் சச்சினை நோக்கி விட்டெறிந்தார், தன்னை நோக்கிவந்த பந்தை பாதுகாப்பிற்காக தனது மட்டையால் சுழற்றி அடித்தார் சச்சின், அந்த பந்து எல்லைக்கோட்டை கடக்கவே அன்றைய விதிமுறைகளின்படி சச்சினுக்கு 4 ஓட்டங்கள் வழங்கப்பட்டது. 1998 ஆம் ஆண்டு மிகச்சிறந்த இனிங்ஸ் ஒன்று சச்சினால் ஆடப்பட்டபோதும் அந்த இன்னிங்க்ஸ் சர்வதேசப் போட்டிகளில் சேர்க்கபடாததால் எல்லோராலும் கவனிக்கப்படவில்லை. 18 ஆடி 1998 இல் இங்கிலாந்தின் புகழ்பெற்ற லோட்ஸ் மைதானத்தில் MCC அணிக்கும் உலக பதினொருவர் அணிக்கும் இடையில் இடம்பெற்ற போட்டியில் உலக பதினொருவர் அணிக்காக ஆடிய சச்சின் 262 என்னும் இலக்கை எட்டுவதற்கு 4 சிக்சர்கள் 15 பவுண்டரிகள் அடங்கலாக 114 பந்துகளில் 125 ஓட்டங்களை குவித்து தனது பங்களிப்பை கொடுத்திருந்தார். உலகின் முன்னணி பந்துவீச்சாளர்களான மக்ராத், டொனால்ட், ஸ்ரீநாத், கும்ளே அனைவரையும் சச்சின் ஒருகை பார்த்த ஆட்டமது. அன்று சச்சினும் அரவிந்த டீ சில்வாவும் (அரவிந்தா 82 ஓட்டங்கள்) 177 ஓட்டங்களை தங்களுக்குள் இணைப்பாட்டமாக பெற்றமை கிரிக்கட் ரசிகர்களுக்கு மிகப்பெரும் காணற்கரிய விருந்தாக அமைந்தது, சச்சினின் சிறந்த இனிங்கஸ்களில் ஒன்றாக இதையும் சொல்வார்கள்.

சச்சின் 23 வருடங்களாக கிரிக்கட் பயணத்தை வெற்றிகரமாக பயணித்ததில் அழுத்தங்களை அதிகம் எதிர்கொண்டவர்கள் என்னவோ எதிரணி தலைவர்களும் பந்துவீச்சாளர்களும்தான். சச்சினுக்கு வியூகங்கள் அமைப்பதிலும், எப்படி பந்துவீசி ஆட்டமிழக்க செய்வது என்பதிலும் எதிரணியினரின் கவனம் அதிகமாக இருந்தும் அவர்களால் சச்சினை பெரும்பாலும் கட்டுப்படுத்த முடிவதில்லை; சச்சின் அளவுக்கு உலகின் முன்னணி பந்துவீச்சாளர்கள் பலரையும் எதிர்கொண்டு ஓட்டங்களை வஞ்சனையில்லாமல் குவித்த வீரர்களை எங்கும் காணவியலாது; எந்த நாட்டுக்கு எதிராகவோ, எந்த நாட்டில் இடம்பெற்ற போட்டியாயினும் சச்சினின் ஆதிக்கம் பந்துவீச்சாளர்களுக்கு தலையிடிதான்!! சர்வதேச அரங்கில் அதிக விக்கட்டுகளை வீழ்த்திய முதல் 60 பந்துவீச்சாளர்களில் இந்திய பந்துவீச்சாளர்கள் தவிர்த்து மிகுதி அனைவருக்கும் எதிராக சச்சின் ஆடியிருக்கின்றார்; அதிலும் பெரும்பாலானவர்களுக்கு சச்சினின் துடுப்பு தலையிடியை கொடுத்திருகின்றமை வரலாறு. சச்சினுக்கு பந்துவீசிய ஓய்வுபெற்ற முன்னாள் பந்துவீச்சாளர்களில் சிலர்; பயிற்சியாளர்களாக இளம் பந்துவீச்சாளர்களை பயிற்றுவித்து சச்சினுக்கு எதிராக பந்துவீச உதவி செய்தபோதும் சச்சினின் துடுப்பின் பதில் ஓட்டக்குவிப்புத்தான்!! இப்படியாக ஒருநாள் போட்டிகளின்மீது தனது ஆதிக்கத்தை செலுத்திவந்த சச்சினுக்கு கிடைத்த மகுடந்தான் 2011 ஆம் ஆண்டு உலகக்கிண்ணம் வென்ற அணியின் வீரர் என்கின்ற பெருமை. சச்சினுக்காகவேனும் இந்தியா நிச்சயம் உலககிண்ணம் வெல்ல வேண்டும் என்று கூறிவந்த கிரிக்கட் ரசிகர்களின் கனவை மகேந்திர சிங் டோனி தலைமையிலான இந்திய அணி மெய்ப்பித்து சச்சினுக்கு கௌரவம் சேர்த்தது.

சச்சின் சதமடிக்கும் போட்டிகள் தோல்வியில் முடிவடையும் என்பதும், சச்சின் போட்டிகளை இறுதிவரை கொண்டுசென்று முடிப்பதில்லை என்பதும் சச்சின் மீது சொல்லப்படுகின்ற முக்கிய குற்றச்சாட்டுகள். சச்சின் சதமடித்த 49 போட்டிகளில் 33 போட்டிகள் இந்தியாவால் வெற்றி கொள்ளப்பட்டவை; இந்த 33 என்னும் எண்ணிக்கையில் இதுவரை வேறெந்த வீரரும் மொத்தமாகவேனும் சதங்களை எட்டவேயில்லை. வெற்றிபெற்ற போட்டிகளில் அதிக ஓட்டங்களை குவித்தவர்கள் பட்டியலிலும் சச்சின்தான் முதலிடம்; 56.63 என்னும் சராசரியில் 11157 ஓட்டங்களை வெற்றி ஓட்டங்களாக குவித்த சச்சின் 62 தடவைகள் ஆட்டநாயகனாகத் தெரிவு செய்யப்பட்டிருக்கின்றார். சதமடித்த எந்தப்போட்டியிலும் சச்சின் தேவைக்கு குறைவான ஓட்ட வேகத்தில் சுயநலமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதில்லை; தேவைகேற்ப ஆக்ரோஷமான் ஆட்டத்தை வெளிப்படுத்தி சச்சின் சதமடிக்கும் போட்டிகளில் பந்துவீச்சாளர்களும், சக துடுப்பாட்ட வீரர்களும் சொதப்புமிடத்தில் சச்சின் எப்படி அந்த தோல்விகளுக்கு பொறுப்பாக முடியும்? மற்றும் ஒரு ஆரம்ப துடுப்பாட்ட வீரராக தனது பணியை சரியாக செய்யும் சச்சினை 50 ஓவர்களின் இறுதிவரை நின்று போட்டியை முடித்து கொடுக்கவேண்டும் என எதிர்பார்ப்பது எவ்வளவு முட்டாள்தனம்! பின்னர் எதற்கு மத்தியவரிசை வீரர்கள் அணியில் இருக்கின்றார்கள்? இந்தக் குற்றச்சாட்டுக்கள் சச்சின் மீது சொல்லப்படுவது அறியாமையிலும் இயலாமையிலும் தானன்றி வேறில்லை!!


சச்சின் டெண்டுல்கர் - இந்தப் பெயர் கிரிக்கட் என்னும் சொல் நிலைத்திருக்கும் காலமளவுக்கும் நிலைத்திருக்கும். இவரது ஒருநாள் போட்டிகளினது சாதனைகளை இன்னொருவர் தாண்டுவாரா என்பதற்கான பதில் மிகமிக சாத்தியக்குறைவு என்பதுதான். சச்சினை பிடிக்காதவர் இருக்கலாம், சச்சினை விமர்சிக்கலாம், ஆனால் சச்சினை எவராலும் புறக்கணித்து கிரிக்கட்டை நேசிக்க முடியாது! இந்தியாவில் கிரிக்கட் ஒரு மதம், சச்சின் அதன் கடவுள் என்பார்கள்; உண்மைதான், ஒருநாள் போட்டிகளை பொறுத்தவரை துடுப்பாட்டத்தில் சச்சின் நிச்சயமாக பிதாமகன்தான் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. சச்சினின் டெஸ்ட் போட்டிகளின் ஒட்டக்குவிப்பு அண்மைக்காலங்களில் மந்தகதியில் இருப்பினும் சச்சினால் மீண்டு வரமுடியும் என சச்சினும் இந்திய கிரிக்கட் கட்டுப்பாட்டுசபையும் நம்புவதால் சச்சின் மேலும் சில காலம் டெஸ்ட் போட்டிகளில் ஆடுவார். டெஸ்ட் போட்டிகளில் சிறந்த ஓட்டக்குவிப்பு ஒன்றை நிகழ்த்தியவுடன் சச்சின் தனது ஓய்வை முழுமையாக அறிவிப்பார் என்று எதிர்பார்க்கலாம்; ஒருநாள் போட்டிகளில் சச்சின் ஓய்வை அறிவித்திருக்கும் இந்நேரத்தில் அவர் இறுதியாக ஆடிய இரண்டு ஒருநாள் போட்டிகளிலும் சதம் மற்றும் அரைச்சதம் குவித்திருக்கின்றமை குறிப்பிடத்தக்க விடயம். சச்சின் என்னும் ஜாம்பவான் வாழும் காலத்தில் அவர்கூட தாங்கள் விளையாடியதை பல வீரர்கள் பெரும் பாக்கியமாக கருதுகின்றார்கள்; அதேபோல ரசிகர்களாகிய நாம் கிரிக்கட்டை நேசித்து, ரசித்த காலத்தில் சச்சின் என்னும் மீபெரும் துடுப்பாட்ட வீரரை ரசித்தது எமக்கும் பெருமையான, மறக்க முடியாத, பசுமையான நினைவுகளாக எம்முடன் என்றென்றும் பயணிக்கும்......