Wednesday, February 1, 2023

இது கதையல்ல நிஜம்.





அப்போது அந்த சிறுமிக்கு ஐந்து வயதுக்கு உள்ளாகத்தான் இருக்கும், பட்டாம்பூச்சியாக பறக்க வேண்டியவயத்தில் தாய்,தந்தை இரண்டுபேரையும் இழந்து ஒரு கிறிஸ்தவ பாதிரியாரின் அரவணைப்பில் ஒரு 'சிறுவர்கள் இல்லத்தில்' சேர்க்கப்பட்டாள். சொந்தம் என்று சொல்வதற்கு உறவுகளென்று யாருமில்லை, அங்கிருந்தே தனது பாடசாலை கல்வியை பயின்ற அந்த சிறுமி காலத்தின் வேகத்திற்கு இணையாக திருமண வயதை அடைந்தாள். கன்னிப்பருவத்தில் எல்லோருக்கும் வரும் காதல் உணர்வு ஒரு வாலிபன்மீது அவளுக்கு ஏற்படவே தான் விரும்பியவினையே கைப்பிடித்தாள்.

அதுதான் அவளுக்கு வாழ்க்கையில் ஏற்ப்பட்ட முதல்ப்பிடிப்பு, இவர்களது காதலின் அடையாளமாக ஒரு குழந்தையும் பிறந்தது. அன்பான கணவன், புதிதாக மழலை செல்வம், பணவசதி குறைவு என்றாலும் மனநிறைவான தனது இளம் (மழலை, குழந்தை, கன்னி) பருவத்தின் வெறுமையை பூரணப்படுத்தும் விதமாக குடும்பவாழ்க்கை அவளுக்கு மகிழ்ச்சியாக அமைந்தது.

அப்போதுதான் அவளது வாழ்வில் மிகப்பெரும் பூகம்பம் வெடித்தது. சிலநாட்களாக காய்ச்சலால் அவதிப்பட்டுக்கொண்டிருந்த அவளது கணவர் காய்ச்சல் குறையாததால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு ஓரிருநாளில் இவ்வுலகை விட்டு பிரிந்துவிட்டார். அவளால் அந்த துயரத்தை தாங்க முடியவில்லை, கணவன் இறந்து 30 நாட்களுக்குள் தான் தனது கணவரிடம் போய்ச் சேர்ந்துவிடுவேன் அன்று கூறியபடியே அழுதுகொண்டிருந்த அந்த அபாக்கியவதி மூன்றுமுறை தற்கொலை முயற்சி செய்து காப்பாற்றப்பட்டு இறுதியாக ஒருநாள் நள்ளிரவில் நான்காவது தடவையாக தூக்கில் தொங்கி தற்கொலை செய்துவிட்டார். கணவன் பிரிந்து 30 நாட்களில் தன்னை மாய்த்தபோது தான் ஈன்ற மழலைக்கு வயது வெறும் 45 நாள்த்தான் என்பது அவருக்கு தெரியாததல்ல.

ஒருபக்கம் அவருக்காக அனுதாபப்பட்டாலும் அவரது தற்கொலையை சரியென்றும், தவறென்றும் இருவேறு பார்வையில் ஊர்மக்கள் விவாதித்தனர். தற்கொலை என்பது கோழைத்தனம், தனது குழந்தையை அவர் நினைத்து பார்த்திருக்கவேண்டும் என ஒரு பிரிவினரும், அவளும் என்னத்தை செய்வாள்? சிறுவயதில் இருந்து வெறுமையோடு வாழ்ந்தவளுக்கு கிடைத்த முதற்பிடிப்பு சொற்பநாளிலேயே தன்னைவிட்டு போனதை அவளால் எப்படி தாங்கமுடியும்? என்று இன்னொரு தரப்பும் தத்தமது தரப்பில் இருந்து நியாயத்தை பிளந்தாலும் அந்த பெண்ணின் மனநிலை எப்படி இருந்திருக்குமென்பது அவருக்கு மட்டும்தான் தெரியும். எது எப்பிடியோ இன்று அவளது குழந்தைக்கு அவளது நிலைதான், ஆம் பிறந்து 45 நாட்களில் அந்த குழந்தைக்கு கிடைத்த பெயர் அநாதை.

இந்த நிலைக்கு யார் காரணம்?(கடவுளா? இயற்கையா? விதியா?)

இவற்றில் உங்கள் நம்பிக்கைக்கு எது பொருந்துதோ அதை நீங்கள் எடுத்து கொள்ளலாம், ஆனால் இவை எல்லாவற்றிற்கும் மேலாக அவர்களின் கவனக்குறைவுதான் முக்கியகாரணம். அப்படி இவர்கள் கவனக்குறைவாக இருந்தது யாரிடம்?/எதில் ?



நுளம்பிடம் (வேடிக்கை அல்ல), ஆம் இவர்கள் கவலையீனமாக இருந்தது டெங்கு நோயை பரப்பும் Aedes albopictus என்கிற நுளம்பிடமும், காய்ச்சல் வந்ததும் உடனடியாக மருத்துவமனையை நாடாமல் தாங்களே மருந்துகளை வாங்கி உட்கொண்டு டெங்குநோய் கிருமிகளை வளரவிட்டதிலும்தான்.

காய்ச்சல் சாதரணமாக காய்ந்தாலே உடனடியாக மருத்துவரை நாடவேண்டும், இரண்டு நாட்களுக்குள் காய்ச்சல் விடாவிட்டால் இரத்த பரிசோதனை செய்யவேண்டும் என்று பலதடவைகள் பத்திரிக்கைகளில் எழுதியும் பலரும் இதை சாட்டை செய்யவில்லை. இதனால் கடந்த 6 மாதத்திற்குள் 25 இக்கும் மேற்பட்டவர்கள் டெங்கால் உயிரிழந்துள்ளனர், 4000 பேருக்குமேல் பாதிக்கப்பட்டுள்ளனர்.

வீடுகளில் வாய்க்கால்களில் நீரை தேங்கவிடவேண்டாம், நீர் தேங்கும் எந்த பொருட்களையும்(தேங்காய் சிரட்டைகள், யோக்கட் கிண்ணங்கள் போன்றன) தேக்கிவைக்கவேண்டாம், குப்பைகளை புதையுங்கள் அல்லது எரியுங்கள், அடர்த்தியான குரோட்டன் செடிகளின் இலைகளை கத்தரியுங்கள், புற்கள் வீட்டு முற்றத்திலோ வீட்டின் வெளிப்பகுதியிலோ இருந்தால் அவற்றை செருக்குங்கள் என சுகாதார உத்தியோகஸ்தர்களும் பொலிசாரும் இணைந்து ஒலிபெருக்கிகளில் வீதிகளில் பிரச்சாரம் செய்தபோது காதில் வாங்கிக்கொள்ளாத நம்மாளுகள் இப்போது சுகாதாரம் குறைவான வீடுகளை திடீரென சோதனைசெய்து அகப்படும் குடும்ப தலைவரை நீதிமன்றில் ஆஜர்செய்து குற்றப்பணம் அறவிடப்படுகின்றது என்றதும் ஓரளவு வீடுகளை சுத்தமாகவைத்திருக்க முயற்சிக்கின்றனர்.

இப்போது மழைகாலம் ஆரம்பித்திருப்பதால் தண்ணீர் தேங்குவதும், புற்கள் முளைப்பதும், குரோட்டன் செடிகள் வளர்வதும் முன்னைவிட அதிகமாக இருப்பதால் நுளம்புகள் அதிகரிக்க தொடங்கிவிட்டன. டெங்கு ஒரு தொற்றுநோய் அல்ல என்பதால் அனைவரும் முடிந்தவரை உங்கள் வீடுகளையும் வீதிகளையும் சுத்தமாக வைத்திருந்தாலே டெங்கை குறைக்கலாம். சாதாரண காய்ச்சல் அறிகுறிகள் ஏற்ப்பட்டாலே மருத்துவமனையை நாடுங்கள், நீங்களே வைத்தியராகாதீர்கள்.

இலங்கையின் வடபகுதியில் இயற்க்கை அழிவுகள் இல்லை, ஆயுதத்தாலான அழிவுகளும் இப்போது இல்லை என்பதால் இயற்கையை சமப்படுத்த ஏதாவதொரு ரூபத்தில் அழிவு வரத்தான் செய்யும். ஒருபக்கம் வீதிவிபத்துக்கள் ஆட்களை பதம் பார்த்தாலும்(இதுபற்றி ஒரு தனிப்பதிவு எழுதவேண்டும்) பெரும்பாலும் நோய்கள் வடிவிலே இயற்கை சமப்படுத்தப்படலாம் என்பதால் முடிந்தவரை துப்பரவாகவும் சுகாதாரமாகவும் இருக்கபாருங்கள்.

(மேலுள்ள சம்பவம் பதிவுக்காக எழுதப்பட்டதல்ல, அது ஒரு உண்மை சம்பவம்.)

5 வாசகர் எண்ணங்கள்:

ஹாய் அரும்பாவூர் said...

பெரும்பாலும் நோய்கள் வடிவிலே இயற்கை சமப்படுத்தப்படலாம் என்பதால் முடிந்தவரை துப்பரவாகவும் சுகாதாரமாகவும் இருக்கபாருங்கள்.

இப்போது இருக்கும் காலகட்டத்திற்கு ஏற்ற பதிவு
நன்றி நண்பா

நிலாமதி said...

கதை சோகத்தை சொல்லிச்செல்கிறது. பதிவு பொது மக்களுக்கு ஒரு விழிப்புணர்வு. பாராட்டுக்கள்

r.v.saravanan said...

நண்பா விழிப்புணர்வு தரும் பதிவு வாழ்த்துக்கள்

ம.தி.சுதா said...

நீண்ட நாளுக்கப்பின் ஒரு சமூகப்பிரச்சனையை ஆராய்ந்தள்ளிர்கள் மிக்க நன்றி சகோதரம்...

எப்பூடி.. said...

@ ஹாய் அரும்பாவூர்

@ நிலாமதி

@ r.v.saravananr

@ ம.தி.சுதா

உங்கள் அனைவரதும் வருகைக்கும் பின்னூட்டல்களுக்கும் நன்றிகள்.

Post a Comment

"கருத்துக்கள், நிறைகுறைகள், திட்டுக்கள், பாராட்டுக்கள் போன்றவற்றை கூற விரும்புபவர்கள் கீழுள்ள பின்னூட்ட பெட்டியில் பின்னூட்டலாம்; பதிவுகளை வாசிக்காமல் இடப்படும் டெம்பிளேட் பின்னூட்டங்கள் வேண்டாம் நண்பர்களே."

*******************

வடை, வாழைப்பழம், சூப்பர், கலக்கல் என மொய் வைக்க வரும் நண்பர்களுக்கு; நான் யாருக்கும் பதிலுக்கு மொய் வைக்க மாட்டேன்.(இதனால் ஏற்ப்படும் தர்ம சங்கடத்திற்கு வருந்துகின்றேன்)