Friday, March 30, 2012

'3' - எனது பார்வையில்..

கஸ்தூரிராஜா தனுஷ் கூட்டுத் தயாரிப்பில்; தனுஷ், ஸ்ருதிஹாசன், பிரபு, பானுபிரகாஷ், பானுபிரியா, ரோஹினி, சுந்தர், சிவகார்த்திகேயன் நடிப்பில்; அனிருத்தின் இசையில் வேல்ராஜ்சின் ஒளிப்பதிவில்; ஐஸ்வர்யா.R.தனுஷ் இயக்கிய திரைப்படம்தான் '3'. கொலைவெறி பாடல் மூலம் எதிர்பார்ப்பினை அதிகப்படுத்தியிருந்த '3' திரைப்படம் அதன் எதிர்பார்ப்பை வர்த்தக ரீதியாக பூர்த்தி செய்யுமோ இல்லையோ ஒரு அழகிய திரைப்படமாக பூர்த்தி செய்துள்ளது.

திரைப்படம் ஆரம்பிக்கும்போதே அமங்கலமாக ஆரம்பிக்கின்றது; சுருதி, சுந்தர் Point Of View வில் கதை பிளாஷ்பாக் மூலம் சொல்லப்படுகின்றது, குழப்பமான கதைக்கு குழப்பமில்லாத தெளிவான திரைக்கதை அமைத்துள்ள இயக்குனர்; இரண்டாம் பாதியை மிகவும் மெதுவாகவே நகர்த்தி இருக்கின்றார். முதல் பாதி இளமை, காதல், நகைச்சுவை, சென்டிமென்ட் என்று விறுவிறுப்பாக நகர்கின்றது; இரண்டாம் பாதியில் காட்சிகள் அனைத்தும் இறுக்கமாகவும் மெதுவாகவும் நகர்கின்றது. படம் ஆரம்பிக்கும்போதே இதுதான் கிளைமாக்ஸ் என்று சொல்லியிருந்தாலும் திடீரென படம் நிறைவடைகின்றது. படம் பார்த்து முடித்ததும் மனதில் ஏற்ப்பட்ட ஒரு கனம் இந்தக்கணம்வரை விலகவில்லை....

தனுஷ் - இந்த மாதிரி படங்களுக்கு கண்ணை மூடிக்கொண்டு தனுஷை ஹீரோவாக தெரிவு செய்யலாம், வேறு யாராலும் நினைத்துக் கூட பார்க்க முடியாத கேரக்டர். கெட்டப் போட்டால்த்தான் நடிப்பில் சிறப்பான வெளிப்பாட்டை காட்ட முடியும் என்பதை மீண்டும் ஒரு முறை தனுஷ் தவறென நிரூபித்திருக்கின்றார். இந்த மாதிரியான திரைப்படங்கள் வர்த்தக ரீதியாக நன்றாக போகவில்லை என்று தனுஸ் கவலைப்படத் தேவையில்லை; பதினைந்து, இருபது வருடம் கழித்து தனது கேரியரை திரும்பி பார்க்கும்போது இவைதான் தனுசின் கேரியரை பூரணப்படுத்தும்!!! பள்ளி மாணவனாகவும், இளைஞனாகவும், அசாதாரண நிலையிலும் தனுஷ் உடல்மொழி, வசன உச்சரிப்பு, முகபாவங்களில் காட்டும் வேறுபாட்டுக்கு ஒரு சபாஸ் போடலாம். அசாதாரண நிலைகளில் புதுப்பேட்டை, மயக்கம் என்ன தனுஷை நினவு படுத்துவதையும் குறிப்பிட்டுத்தான் ஆகவேண்டும்; ஆனாலும் அந்த கிளைமாக்ஸில் - Hats Off To U Danushஸ்ருதி - சிவகார்த்திகேயன் திரைப்படத்தில் "பெரிசா ஒண்ணுமே இல்லையேடா" என்று ஒரு வசனம் சொல்லுவார்; அது உண்மைதான்; ஆனால் அவரது பெர்போமான்ஸ் எதிர்பார்க்காத ஒன்று. 7 ஆம் அறிவில் அலுப்படித்த ஸ்ருதியா இதென்று ஆச்சரியப்பட வைத்திருக்கின்றார். ஒரு திரைப்படத்திற்குள் இத்தனை முதிர்ச்சியான நடிப்பு எதிர்பார்க்காத ஒன்று!! புலிக்கு பிறந்தது புலிக்குட்டிதான்!! காதல், பாசம், பிரிவு என எல்லா இடங்களிலும் ஸ்கோர் செய்திருக்கின்றார். பேரழிகியெல்லாம் இல்லை என்றாலும் அழகாகத்தான் இருக்கின்றார்!!!

பிரபு, பனுபிரகாஷ், பானுப்பிரியா, ரோஹினி போன்றவர்கள் தமக்கு கொடுத்த பாத்திரத்தை சிறப்பாகவும் நிறைவாகவும் செய்திருக்கின்றார்கள். சிவகார்த்திகேயன் முதல் பாதியை கலகலப்பாக்கினாலும் சிவகார்த்திகேயனிடமிருந்து ரசிகர்கள் இன்னமும் அதிகமாக எதிர்பார்க்கின்றார்கள் என்பதை டைட்டிலில் அவர் பெயர் வரும்போது திரையரங்கில் ரசிகர்கள் எழுப்பிய கரகோஷம் உணர்த்தியது!!! சுந்தர் 'மயக்கம் என்ன'வில் டம்மி அக்கப்பட்டவர், இங்கு முக்கிய பாத்திரத்தில் நடித்திருக்கின்றார். தனுஷ், சுருதிக்கு அடுத்து அதிக காட்சிகள் இவருக்குத்தான்; ஆகா ஓகோன்னு இல்லாவிட்டாலும் தன்னால் குடுக்ககூடிய அதிகபட்ச்சத்தை நிறைவாக கொடுத்திருக்கின்றார்.(சுந்தருக்கு முன்னாடி தனுஷ் ஹீரோயினை கட்டிப்பிடிக்கிற சீன் தொடர்ந்துகிட்டே இருக்கு :p)

அனிருத்தின் இசையில் மிகப்பெரும் ஹிட்டான கொலைவெறி பாடலை தவிர ஏனைய பாடல்களுக்கு கதையை ஒட்டியே காட்சி அமைக்கப்பட்டிருக்கின்றது; கொலைவெறி பாடல் எதிர்பார்க்கப்பட்டது போலவே திரைப்படத்தில் திணிக்கப்பட்டுள்ளது. பின்னணி இசையில் அதிகமான இடங்களில் நிசப்தத்தை பயன்படுத்தி இருக்கும் அனிருத் சில இடங்களில் சிறப்பான பின்னணியை வழங்கியிருக்கின்றார்; சில இடங்கள் சப்பென்றும் இருக்கின்றது. பொல்லாதவன், ஆடுகளம் புகழ் வேல்ராஜ்சின் ஒளிப்பதிவு படத்திற்கு மிகப்பெரும் பலம்; கதையின் தேவைக்கு, காட்சிகளின் தன்மைக்கு ஏற்ப இவர் கொடுத்த லைட்டிங் பிரமாதம். கோலா பாஸ்கரின் எடிடிங் Point Of View வில் சொல்லப்படும் கதை என்பதால் ஒரு சில இடங்களில் லாஜிக்கை உறுத்தினாலும், குழப்பமில்லாத, தெளிவான திரைக்கதைக்கு உதவியிருக்கின்றது.கொலைவெறி பாடல் என்னதான் பட்டையை கிளப்பி எதிர்பார்ப்பை உயர்த்தினாலும், ஐஸ்வர்யாவால் ஒரு படத்தை சிறப்பாக கொடுக்க முடியுமா என்கின்ற சந்தேகம் பலருக்கும் இருக்கத்தான் செய்தது. முதலில் வந்த ட்ரெயிலர்களும் அதை நிரூபிப்பதுபோலத்தான் இருந்தது. படம் சிறுபிள்ளை வேளாண்மை போலத்தான் இருக்கும் என்கின்ற நினைப்பை தகர்த்திருக்கின்றார் செல்வராகவனின் முன்னாள் உதவி இயக்குனர் ஐஸ்வர்யா; படம் முழுவதும் ஆங்காங்கே செல்வராகவன் டச்!! ஆனாலும் பல இடங்களில் ஐஸ்வர்யா 'அட' போட வைத்திருக்கின்றார். பல காட்சிகள் விறுவிறுப்பாகவும், சுவாரசியமாகவும் உள்ளது. ஒரு இயக்குனராக ஐஸ்வர்யா ஜெயித்திருக்கின்றார்!!! கதைக்கு தேவை என்றாலும் இரண்டாம் பாதியில் அதிகமான நேரம் நாயகனும், நாயகியும் அழுவது போன்ற காட்சிகள் சலிப்பையும், திரைக்கதையில் தொய்வையும் ஏற்ப்படுத்தியத்தையும் மறுப்பதற்கில்லை!!!

'3' பொழுதுபோக்கு அம்சங்களை மட்டும் விரும்புபவர்களுக்கு ஏற்ற திரைப்படம் இல்லை; இவர்கள் திரையரங்கு சென்றால் ஏமாற்றம்தான் மிஞ்சும். ஏனையவர்கள் '3' திரைப்படத்தை நிச்சயமாக ரசிக்கலாம்!!

'3' - 3 Out Of 5

Monday, March 12, 2012

முட்டாப் பயலுக்கு வந்த இரண்டு சந்தேகங்கள்......நீதிமன்றங்களில் எதற்கு வக்கீல்கள்?
மன்னர் ஆட்சி காலத்தில இரண்டு மனிதர்களுக்குள்ளே பிணக்கு ஏற்ப்பட்டால்; அவர்களில் யார் பக்கம் நியாயம் உள்ளது என்பதை மன்னன் விசாரித்து தீர்ப்பளித்ததாக கதைகளிலும், புத்தகங்களிலும் அறிந்திருக்கின்றோம். அதன் பின்னர் பஞ்சாயத்து, ஊர் பெரியவர்கள் சம்பந்தப்பட்ட இருவரையும் விசாரித்து தீர்ப்பை சொல்லும் வழக்கம் காணப்பட்டது. ஆனால் இன்று ஜனநாயக நாடுகளில் நீதிபதிகள் சம்பந்தப்பட்ட இருவரையும் விசாரித்து தீர்ப்பை சொல்வதற்கு எதற்கு வக்கீல்கள் என்கின்ற மூன்றாம் தரப்பை பயன்படுத்துகின்றார்கள்? தாமாக விசாரித்து நீதி யார்பக்கம் என்பதை அறியும் அளவுக்கு நீதிபதிகளுக்கு விபரம் போதாதா? மன்னனாலும், பஞ்சாயத்து பெரிசாலும் முடிந்தது ஏன் இன்று படித்த அனுபவம் வாய்ந்த நீதிபதிகளுக்கு முடிவதில்லை?

ஒருவேளை ஆயிரம் குற்றவாளி தப்பிக்கலாம் ஆனால் ஒரு நிரபராதி தண்டிக்க பட கூடாது என்கின்ற ஜனநாயக சிந்தாந்தத்தை காப்பாற்றவா வக்கீல்கள்? ஆம் என்றால் சிரிப்பதை தவிர வேறு வழியில்லை. வக்கீல்களை ஒட்டுமொத்தமாக குறை சொல்வதற்காக இதை சொல்லவில்லை, அடிப்பையில் கீழ்த்தட்டு, நடுத்தட்டு மக்கள் நீதிமன்றத்திற்கு சென்றால் எதிர் நோக்கும் முக்கிய பிரச்சனை வக்கீல் பீஸ்!! எதுக்கு குடுக்கிறம், ஏன் குடுக்கிறம் என்கிறது தெரியாமலே நிறையபேர் கடன் வாங்கி வக்கீலுக்கு படி அளக்கிறாங்க!! வக்கீல்களை குறை சொல்ல முடியாது, ஏன்னா அதுதான் அவங்க பொழைப்பு, எதுக்கு வக்கீலுங்க என்கிறதுதான் என்னோட சந்தேகமே!!!ஜீ.ஜீ. பொன்னம்பலம் என்று ஒரு வக்கீல் இருந்தாராம், அவர் எந்த வழக்கையும் வென்று கொடுப்பாராம், தனது கட்சிக்காரன் கொலையாளி என்றாலும் காப்பாறும் அளவுக்கு வாத திறமையும், சாட்சிகளை பார்வையாலேயே மிரட்டி குழப்பும் அளவிற்கு திரமயானவராம்!!! இவர் ஒரு உதாரணம், இப்படி ஒவ்வொரு நாட்டிலும், மாகாணத்திலும், மாவட்டத்திலும் சில, பல வக்கீல்கள் இருக்கத்தான் செய்கின்றார்கள். நியாயம் இல்லாத பணம், அதிகாரம் இருக்கிறவன் பக்கம் சிறப்பான வக்கீல்களும், நியாயம் இருக்கின்ற பணம் இல்லாத அன்றாடம் காய்ச்சி பக்கம் ஒப்புக்கு ஒரு வக்கீலும் நீதிக்காக முன்னிற்பது நீதியின் முன் எவ்வகையில் நியாப்படுத்தப்படுகின்றது!!!! அதிகாரம் உள்ளவன், அரசியல்வாதி, பணக்காரன் நீதியை வாங்குவதற்கும்; பணம், வசதி வாய்ப்பு இல்லாதவன் நியாயத்தை அதிகாரம், பணத்தின் முன் இழப்பதற்கும் சட்டத்தின் ஓட்டைகள்தான் காரணம் என்றால்; அந்த ஓட்டைகளை தேவைக்கு ஏற்ப பயன்படுத்தும் வக்கீல்கள் மக்களுக்கு நீதி சொல்ல எதுக்கு துணைக்கு வரணும்?

ஒரு நீதிபதிக்கு ஒரு வழக்கினை விசாரித்து தீர்ப்பளிக்க தடுமாற்றம், நம்பிக்கை இல்லை என்றால் இரண்டு மூன்று நீதிபதிகள் இணைந்தாவது ஒவ்வொரு வழக்கையும் விசாரித்து தீர்ப்பளிக்கலாமே! நேரம் போதாதா? வக்கீல்கள் வாய்தா வாங்கிற காலத்தைவிடவா நேரச்சிக்கல் ஏற்ப்படப் போகிறது!!! சம்பந்தப்பட இரு தரப்பையும், சாட்சிகளையும் ஒரே நபர் (நீதிபதி) விசாரித்து வழங்கும் தீர்ப்பைவிட; ஒருபக்கம் சிறந்த வக்கீலும், ஒரு பக்கம் சாதாரண வக்கீலும் துணைநிற்க இருதரப்பு நியாயங்களையும் கேட்டுவிட்டு வாத திறமைக்கு கிடைக்கும் தீர்ப்பா சிறந்தது? சட்ட ஆலோசனை வழங்கும் ஆலோசகர்களாக வக்கீல்களை ஏற்றுக்கொள்ளலாம், நீதியை கேட்டு நீதிமன்றை நாடும் மக்களின் துணையாக நின்று நீதியை பெற்றுக்கொடுக்கும் (?) ஒருவராக அவர்களை ஏற்றுக்கொள்ள முடியவில்லை!!!!

மறதி குற்றச்செயலா?
மோட்டார் வாகனம் ஒன்றை வீதியில் செலுத்தும்போது மூன்று முக்கிய ஆவணங்கள் எப்போதும் எம்முடன் எடுத்துச்செல்ல வேண்டும் என்கிறது போக்குவரத்துப் பிரிவு சட்டம். ஓட்டுனர் உரிமம், வரி கட்டிய பற்றுச்சீட்டு, காப்புறுதி கட்டிய பற்றுச்சீட்டு என்பவைதான் அந்த மூன்றும். இவை கையில் இல்லாத பொழுது போக்குவரத்து போலிஸ் இடைமறித்து சோதனை செய்தால், அந்த இடத்தில் வாகனம் பொலிசாரால் பறிமுதல் செய்யப்படும், பின்னர் தண்டப்பணம் செலுத்த வேண்டும். அதிகமானவர்கள் இவை அனைத்தையும் தமது பர்சில் தான் வைத்திருப்பார்கள். பர்சை மறந்துபோய் வீட்டில் வைத்துவிட்டு போகும் நாளில் போக்குவரத்து போலீஸின் கைகளில் சிக்கினால்; ஏகப்பட்ட நேர விரயம் மற்றும் தண்டப்பணமாக மாத வருமானத்தின் ஒரு பகுதியை கட்டவேண்டிய கட்டாயம், இது 1% - 50%வரை பலதரப்பட்ட மக்களின் மாத வருமானத் தொகையாக இருக்கின்றது!! இந்த இடத்தில் போக்குவரத்து பொலிசாருக்கு 500 ரூபாவை லஞ்சமாக கொடுப்பது சிறந்த முடிவென்று பலரும் செயற்படுவது குறிப்பிடத்தக்கது!!!

குறிப்பிட்ட ஆவணங்கள் இல்லாதவர்கள், திருடப்பட்ட வாகனங்கள் போன்றவற்றையும்; மறதியால் மேற்ப்படி ஆவணங்கள் தவறவிட்டு சென்றவர்களையும் கண்டறிவதில் இருக்கும் நடைமுறை சிக்கலையும் மறுப்பதற்கில்லை. அதே நரம் மறதி என்னும் ஒரு உளவியல் வியாதிக்கு இந்த தண்டனையை ஏற்றுக்கொள்ளவும் முடியவில்லை!!! இதற்கு எது சரியான தீர்வென்று எனக்கு சொல்லத் தெரியவில்லை, ஆனால் இவ்வகையில் சிலர் அவ்வப்போது பாதிக்கப்பட்டுக்கொண்டும், அதனால் லஞ்சம் கொடுத்து தப்பித்துக் கொண்டும்தான் இருக்கின்றார்கள் என்பதையும் மறுக்க முடியாது!!!

இந்த மறதிக்கான தண்டனை பொலிசாரால் மட்டுமல்ல; பெற்றோர், ஆசிரியர்கள் போன்றோராலும் சிறுவயதுமுதலே வழங்கப்பட்டுக் கொண்டுதான் இருக்கின்றது. கடைக்கு போகும்போது சொல்லிவிட்ட பொருட்களில் ஒன்றிரண்டை வாங்க மறந்து வந்து வீட்டில் திட்டு, அடி வாங்கிய பெருமக்கள் இதை அறிவார்கள் :-) அதேபோல பாடசாலையில் மறந்துபோய் சொன்ன பொருட்களை கொண்டு செல்லாமல், வீட்டு பாடத்தை செய்யாமல் போய் அடிவாங்கிய பலரும் அறிவார்கள்; ஆனாலென்ன பஞ்சியில், விளயாட்டுத்தனத்தில் வீட்டு பாடங்களை செய்யாமல் இருப்பவர்களும் மறதியை காரணம் காட்டுவதால் அங்கும் ஆசிரியர்களுக்கு பிரித்தறிவதில் சங்கடம் ஏற்ப்படலாம், ஆனால் நம்ம ஆசிரியர்கள் மறதிக்குத்தான் அதிக ஷொட் போடுவார்கள்; குறிப்பாக "இந்த வயதிலேயே உனக்கு மறதியா" என்று பஞ்சு டயலாக் பேசி மாணவர்களை வெளுத்து வாங்குவதையும் சொல்லியே ஆகவேண்டும் :-)

குறிப்பு :- நாலுநாள் இண்டர்நெட், கம்பியூட்டர் இல்லாம ப்ரீயா இருந்து பாருங்க, உங்களுக்கும் இதேபோல பல சந்தேகங்கள் கிளம்பும் :p

Monday, March 5, 2012

இலங்கை கிறிக்கட் அணியை ரசிக்கும் தமிழர்கள் துரோகிகளா?!!!!

இலங்கை கிறிக்கட் அணியை ரசிக்கும் இலங்கை தமிழர்களை துரோகிகள், சிங்களவனுக்கு செம்பு தூக்குபவர்கள், தம் இனத்து மீது அக்கறை இல்லாதவர்கள் போன்ற சொற்களால் காயப்படுத்தும் தமிழ் உணர்வு மிக்க 'சில' ஆசாமிகளுக்காகவே இந்தப்பதிவு. இலங்கை அணி பற்றி நல்ல முறையில் ஒரு கருத்தை தனது முகநூலிலே ஒரு நண்பர் வெளியிட்டிருந்தார்!!! அவருக்கு அவருடைய நண்பர்களில் ஒருவரிடமிருந்து "இலங்கை அணிக்கு ஆதரவாக கருத்து தெரிவித்தால் நண்பர்கள் பட்டியலில் இருந்து தூக்கிவிடுவேன்" என்று மிரட்டல்; சில நேர விவாதத்தின் பின்னர் அவர் சொன்னதை செய்துவிட்டார்!!! இவர் மட்டுமல்ல, இவரை போன்ற இன்னும் சிலரும் சமூக தளங்களில், நண்பர்களில், சமூகத்தில் எம்முடன்தான் வசிக்கின்றார்கள். இவர்களது பேச்சுக்களை, செய்கைகளை சாதாரணமான விடயம் என்று ஒதுக்கிவைக்க முடியாது....

அதிலும் இவர்களுக்கு இனப்பற்று இலங்கை நன்றாக விளையாடும்போதுதான் அதிகரிக்கும்!!! இலங்கை உதை வாங்கும்போது நமட்டு சிரிப்பு சிரிக்கும் இவ்வகை ஆசாமிகளுக்கு இலங்கை வெற்றி பெறும்போதுதான் எம்மை பார்த்தால் தமிழ் இன உணர்வு மூக்கு, வாய், கண், காது, ..... என உடம்பின் ஒன்பது துவாரங்களின் ஊடாகவும் வழியும்!!!! இலங்கை அணிக்கு ஆதரவாக, இலங்கை அணியை ரசிப்பவர்கள் துரோகிகள் என்றால் இலங்கை தமிழர்களில்(கிறிக்கட் பார்ப்பவர்களில்) பாதிப்பேர் துரோகிகள்தான்!!!! டீ கடை முதல், பாடசாலை, பல்கலைகழகம், அலுவலகம் என கிறிக்கட் பற்றி இலங்கை தமிழர்கள் விவாதிக்கும் இடங்களில் எல்லாம் இலங்கை கிறிக்கட் அணியின் ரசிகர்கள் பாதிப்பேராவது இருப்பார்கள்!!!! அப்படியானால் அந்த பாதிப்பேரும் துரோகிகளா? இலங்கைக்கு அல்லாமல் வேறு அணிகளை ரசிப்பவர்கள் அனைவரும் தமிழ் இன உணர்வாளர்களா?

இலங்கை அரசை எதிர்க்கும் இலங்கை தமிழர்களில் பாதிப்பேர் எப்படி இலங்கை கிறிக்கட் அணிக்கு ரசிகர்களாக இருக்கின்றார்கள் என்கின்ற சந்தேகம் இந்திய நண்பர்கள் சிலருக்கும் ஏற்ப்படலாம்!!! ஆச்சரியமாக கூட இருக்கலாம்!!! சிலருக்கு கோபம்கூட வரலாம்!! இலங்கை கிறிக்கட் அணிக்கு பல இலங்கை தமிழர்கள் ரசிகர்களாகிய காலம் 1996 காலப்பகுதிதான்; அன்றைய நாட்களில் கிட்டத்தட்ட ஒட்டுமொத்த யாழ்ப்பாணமும் பாரிய இடம்பெயர்வை சந்தித்திருந்த நேரம்; உடைமைகள், சொத்துக்கள் போன்றவற்றை இழந்த நிலையிலும் அன்று பாதி இலங்கை தமிழர்கள் இலங்கை கிறிக்கட் அணிக்கு ரசிகர்களாக இருந்தார்கள் என்பது ஆச்சரியமான உண்மை. அதற்க்கு முக்கியகாரணம் இனப்பிரச்சனையையும் கிறிக்கட்டையும் அதிகமானவர்கள் ஒன்றுபடுத்திப் பார்க்கவில்லை என்பதுதான்.......சர்வதேச கிறிக்கட் சாதரணமாக 10 - 12 வயதிலே அதிகமானவர்களுக்கு அறிமுகமாகிவிடும்; அப்போதைய நிலையில் எந்த அணி சிறப்பாக ஆடுகின்றதோ, எந்த வீரர் மனதை கவர்கிராரோ ; அந்த அணி, அந்த வீரர் சார்ந்த அணி பிடித்தமான அணியாக மனதில் பதிந்துவிடும்; அதனை அவ்வளவு சுலபமாக யாராலும் மாற்ற முடியாது. குறிப்பிட்ட அணி மோசமான நிலையில் இருக்கும்போதுகூட அதிகமானவர்கள் சிலகாலம் கிறிக்கட்டை பார்க்காமல் இருப்பார்களே அன்றி; அந்த அணியை விடுத்து வேறொரு அணிக்கு ரசிகர்களாக தம்மை மாற்றிக்கொள்ள மாட்டார்கள் (சில சந்தர்ப்பவாதிகளை தவிர்த்து)

இவை தவிர்த்து தமது நாட்டு அணி மீது அதிகமானவர்களுக்கு இயல்பிலேயே பிடிப்பு ஏற்படுவது இயற்கை; அதனால்த்தான் பங்களாதேசில் அவுஸ்திரேலியா ஆடும்போதும் அந்நாட்டு ரசிகர்கள் தங்கள் அணியினருக்கு ஆதரவாக மிகப்பெரும் ஊக்கத்தை கொடுக்கிறார்கள்!!! இலங்கை தமிழர்களும் அதற்கு விதிவிலக்கல்ல; என்னதான் அரசினால் பிரச்சனைகள் இருந்தாலும் சிறுவயதில் பாடசாலையில் தொடக்கம் ஒரு விண்ணப்பபடிவம் நிரப்புவது வரையில் எமதுநாடு - இலங்கை என்றே சொல்லி எழுதிப் பழகிவிட்டோம்!!!! வரலாறு, சமூககல்வி என சிறுவயது முதல் இலங்கைதான் எமதுநாடு என்பதை கல்வியும் அடிமனதில் ஏற்றிவிட்டது; அந்த வயது இனப்பிரச்சனை, நாட்டுப் பிரச்சனை எதுவும் புரிகிற வயதில்ல; ஆனால் அவற்றை புரியும் வயது வரும்போது கிறிக்கட்டையும், நாட்டுப்பிரச்சனையும் ஒன்றுபடுத்தி பார்த்தால்கூட அதிலிருந்து வெளிவர முடியாது!!!

என்னதான் கிறிக்கட் வேறு, நாட்டுப் பிரச்சனை வேறு என்று சொன்னாலும் ஒருசில மோசமான சம்பவங்கள் நிகழ்ந்தபோது இனிமேல் இலங்கை கிறிக்கட்டை ரசிப்பதில்லை என்று முடிவெடுத்து சிலகாலம் ஒதுங்கியிருந்தாலும், மனதளவில் ஒதுங்க முடியாது!! ஒரு சிறந்த போட்டி ஒன்றை வெற்றி பெறும்போதோ, அல்லது தனிமனித சாதனை நிகழும் போதோ மனம் அனைத்தையும் மறந்து மீண்டும் இலங்கை கிறிக்கட்டை வெளிப்படையாக ஆதரிக்கும்!!! மது, மாது மீதான காதல் போலத்தான் கிறிக்கட்டும்; பிரச்சனைகள் வரும்போது இனிமேல் அந்த பக்கமும் போவதில்லை என்று அந்த கணம் தோன்றும், சில நாட்களிலேயே மனதுக்குள் ஏக்கம் உண்டாகிவிடும்; ஆனால் வெளியில் காட்டிக்க முடியாது, பின்னர் ஒரு சந்தர்ப்பத்தில் எல்லாவற்றையும் மறந்து ஐக்கியமாகிவிடுவார்கள். (சூதாட்டம் பிடிபடும் சந்தர்ப்பங்கள்; மோசமான தோல்விகளில் பிடித்த அணி தவிக்கும்போது ஏனைய நாட்டு ரசிகர்களுக்கும் இதே மனநிலை வந்திருக்கலாம்)ஒருசிலருக்கு கிறிக்கட் குடும்ப உறவுகள், நண்பர்கள், சமூகம் மூலமாகவும் அறிமுகமாகும்; உதாரணமாக சொல்வதானால் அப்பா, அண்ணன், நண்பன், அயலில் உள்ள பிடித்தமானவர் ஒருவர் எந்த அணிக்கு, வீரருக்கு அதரவாக ரசிக்கிறாரோ அதையே தனக்கு பிடித்ததாக சிறுவயதில் உருவாக்கி கொள்ளும் கிறிக்கட் ரசிகர்களும் இருக்கின்றார்கள். தாமக கிறிக்கட்டை அறிகிறார்கள! இன்னொருவரால் அறியப்படுத்தப் படுகிறார்களோ! அதிகமானவர்களுக்கு தமது முதல் பார்வையில் பிடிக்கும் அணிதான் அதிகமாக இறுதிவரை அபிமான அணியாக இருக்கும்!!! என்னுடைய நண்பர்களில் பல இந்திய, பாகிஸ்தான், தென்னாபிரிக்க, அவுஸ்திரேலிய, இங்கிலாந்து ரசிகர்கள் (வெறியர்கள்) இருக்கின்றார்கள்; இவர்களில் 90 % ஆனவர்கள் அந்த அணியின்மீது, அணிவீரர்கள்மீது ஏற்ப்பட்ட ஈர்ப்பினால் அந்த அணிகளை ரசிக்கின்றார்களே அன்றி நாட்டுப் பிரச்சனையால் அல்ல!!!!

அதிலும் இலங்கை அணிக்கு ரசிகர்களாக இருப்பவர்களை நாட்டு பிரச்சனையை சுட்டிக்காட்டி ஏளனம் செய்யும் சிலர் அதே காரணத்திற்காக இந்திய அணிக்கு ரசிகர்களாக இருப்பதுதான் காமடியின் உச்சம்!!! இந்தியா தமிழர்களின் அணியா? இல்லை இந்தியாவிற்கும் இலங்கை தமிழர்களின் பிரச்சனைகளுக்கும் சம்பந்தம்தான் இல்லையா? அரசியல், இனப்பிரச்சனை என்று பார்த்தால் இலங்கை தமிழர்களால் இலங்கை, இந்தியா என்று இரண்டு நாட்டு அணிகளுக்கும் ரசிகர்களாக இருக்க முடியாது!!! இன்றைக்கு இலங்கை தமிழர்களில் இந்திய ரசிகர்களாக இருப்பவர்களில் அதிகமானவர்கள் இந்திய அணியை நேசிக்க முக்கிய காரணம் இனப்பிரச்சனை அல்ல, சச்சின்!!!! இன்னும் சிலர் கிறிக்கட்டே தெரியாமல் இனப்பிரச்சனைக்கும் கிறிக்கட்டுக்கும் முடிச்சுப்போட்டு இந்தியாக்கு வலிந்து சென்று ஆதரவு அளிப்பதாக காட்டிக்கொள்கின்றார்கள்; அவர்களை பற்றி அலட்டிக்கொள்ளாமல் இருப்பதே சிறந்தது.....

இலங்கை கிறிக்கட் அணிக்கு ஆதரவாக இருப்பதால் "நாட்டு பற்று அதிகமாக உள்ளதோ"? என்று நண்பர் ஒருவர் கேட்டார்; அது நாட்டுப் பற்றல்ல, கிறிக்கட்மீதான பற்று, அது நான் சார்ந்த நாட்டு அணிமீதுள்ளதால் அப்படி தோன்றுகின்றது. உண்மையை சொல்வதானால் இலங்கை தமிழர்களில் பலருக்கு 'நாடுப்பற்று இல்லை என்று சொல்வதைவிட, பற்றுவைக்க ஒரு நாடு இல்லை' என்பதே உண்மையான ஏக்கம்!!! இனம், மதம், மொழி தாண்டி நேசித்தால்த்தான் கிறிக்கட்டை கிறிக்கட்டாய் ரசிக்க முடியும்... ஓரணியிலேயே முரளிதரன் என்னும் 'தமிழ்' பந்துவீச்சாளர் உலக சாதனைகளை நிகழ்த்தியபோதும்; முரளியைவிட அதே அணியின் 'சிங்கள; வீரர் சமிந்த வாஸை அதிகமாக நேசித்த தமிழர்களும் இருகின்றார்கள்! அதேநேரம் முரளியை கொண்டாடிய சிங்களவர்களும் இருக்கின்றார்கள்; அதேபோல ஜெயசூர்யாவை கொண்டாடிய முஸ்லிம்களும் இருக்கின்றார்கள். கிரிக்கட்டில் அரசியல் அப்பப்போ இருந்தாலும்; அதிகமான ரசிகர்கள் ரசித்தது கிறிக்கட்டை அன்றி, அரசியலை அல்ல!!!!!

எனக்கு இலங்கை அணியை எப்படி/ஏன்/எபோதிலிருந்து பிடித்தது......
10 வயதிலில் நண்பர்களுடன் ஊரிலே கிறிக்கட் விளையாட தொடங்கிய எனக்கு 13 வயதில்தான் சர்வதேச கிறிக்கட் ஓரளவுக்கு அறிமுகமாகியது; அதுவரை உள்ளூர் போட்டிகளில் ஆடும் வீரர்கள் பெயர்தான் பரிச்சியம், பிடித்த வீரர்களும் அவர்கள்தான் (இன்றும் அன்றைய வீரர்களின் பெயர்களும், சில போட்டிகளும் பசுமையாக ஞாபகத்திலே உள்ளது) சர்வதேச வீரர்களின் பெயர்களில் முதலில் நான் அறிந்த வீரர்கள் இலங்கை அணியினர்தான்!!! ஆனாலும் எந்த போட்டியும் பார்த்ததில்லை. 1996 ஆம் ஆண்டு நாட்டு பிரச்சனையால் இடம்பெயர்ந்து ஒரு குடிசை அமைத்து சாவகச்சேரியில் தங்கியிருந்த காலப்பகுதியில்த்தான் உலக கிண்ண போட்டிகள் ஆரம்பமானது!!

மின்சாரம், டிவி எதுவுமே இல்லாத காலப்பகுதி என்பதால் வானொலிதான் ஒரே பொழுதுபோக்கு!!! உலககிண்ண போட்டிகளின் வர்ணனையும் வானொலியில்த்தான் கேட்போம்; 5 ஓவர்கள் ஆங்கிலத்திலும், 5 ஓவர்கள் சிங்களத்திலும் வர்ணனை சொல்லப்படும்; சிங்களம் தெரியாததால் வர்ணனை சொல்லும் வர்ணனையாளரின் 'ஒலி'யின் அளவை வைத்துதான் சிலநேரங்களில் என்ன நடந்தது என்பதை அன்று ஊகிப்போம்; இந்நிலையில் இறுதிப்போட்டியில் இலங்கை விளையாடும் தகுதி பெற்றது, இறுதிப் போட்டி என்பதால் அருகில் இருந்த ஒரு வீட்டில் ஜெனரேட்டர் மூலம் மின்சாரம் உருவாக்கி டிவியில் மச் போடப்பட்டது; மிக அதிகமான ரசிகர்கள், கிட்டத்தட்ட அத்தனைபேரும் இலங்கைக்குத்தான் ஆதரவாக இருந்தார்கள்....

முதல் இன்னிங்க்ஸ் அவுஸ்திரேலியா பட்டிங் பெரிதாக ஆர்வமிருக்கவில்லை, இரண்டாவதாக இலங்கையின் இனிங்க்சை ஒரு பந்து விடாமல் பார்த்தேன்; அன்றுதான் எனக்கு தெரிந்த பெயர்களின் நிழலை தொலைக்காட்சியில் பார்த்தேன். 3 வயதில் மகாபாரத கதையை விரும்பி கேட்டதால் அர்ஜுனனின் அபிமானியான நான், 6 வயதில் 'மனிதன்' திரைப்படம் பார்த்ததில் இருந்து ரஜினியின் ரசிகனானேன், அன்றைய இலங்கை அணியின் போட்டி பார்த்தது முதல் அரவிந்த டீ சில்வாதான் என்னுடைய 'பேவரிட்' வீரர்!!! இன்றுவரை அரவிந்த மீதான மதிப்பு துளியளவும் குறையவில்லை; சனத், மஹேலா என்று பின்னர் பலரை ரசித்தாலும் எனக்கு எப்போதும் அரவிந்தா தான் ஸ்பெஷல். முதல் முதலில் எனக்கு தாக்கத்தை உண்டாக்கியவர்கள்தான் எனக்கும் எப்போதும் பேவரிட்டாக இருந்துள்ளார்கள்...அன்று பிடித்த இலங்கை அணி இன்றும் பிடிக்கிறது; இன்று அணிகளை ரசிப்பதை தாண்டி கிறிக்கட்டை ரசிக்கலாம் என்று நினைத்தாலும் இலங்கை மீதான ஈடுபாடு குறையவில்லை!!! நான் இலங்கை கிரிக்கெட் அணியை ரசிப்பதால் இலங்கை விசுவாசி என்றால்; நான் உதைபந்தாட்டத்தில் ஜெர்மனியையும்; மோட்டார் கார் பந்தயத்தில் மைக்கல் ஷூமேக்கரையும் ரசிப்பதால் நான் ஜெர்மனி விசுவாசி!!! டெனிஸில் ரோஜர் பெடரரை ரசிப்பதால் சுவிட்சலாந்து விசுவாசி!!! மோட்டார்சைக்கிள் பந்தயத்தில் வாலன்சீனோ ரோஸியை ரசிப்பதால் இத்தாலிய விசுவாசி!!!! கோல்பில் டைகர் வூட்சை ரசிப்பதால் அமெரிக்க விசுவாசி!!!

இல்லப்பா இலங்கை கிறிக்கட் அணிக்கு நீங்க ரசிகர்களாக இருப்பதால் நீங்கள் எல்லோரும் தமிழ் இன துரோகிகள்தான், நீங்க சிங்களவனுக்கு கொடி பிடிக்கிறவங்கதான், உங்களுக்கு இனப்பற்றே இல்லை... இப்படி என்ன வேண்டுமென்றாலும் சொல்லிக்கோங்க; எங்களுக்கு கவலையில்லை!!! ஏன்னா எங்களுக்கு நாங்க யார்? நாங்க செய்யிறது சரியா? தவறா? என்கின்றதை சிந்தித்து பாக்கிற அளவுக்கு ஏதோ கொஞ்சமாச்சும் புத்தி இருக்கென்று நம்புகிறேன்; அதுவும் இல்லை என்று சொல்கிறீர்களா பரவாயில்லை, சொல்லீட்டு போங்க; உங்களுக்கு அப்படி சொல்வதில் ஒரு அற்ப சுகம் கிடைக்குமென்றால் அதை எதுக்கு நாம் தடுக்கணும்!!!! ஆனால் ஒன்று இதனால் நீங்கள் தமிழ் இன உணர்வாளர்கள் என்றோ, நாம் தமிழ் உணர்வில்லாதவர்கள் என்றோ நீங்க நினைத்தால் VERY SORRY....