Wednesday, September 28, 2011

லசித் மலிங்க என்னும் நாகாஸ்திரம்

மகாபாரதக் கதையில் கர்ணன் கையில் இருந்த நாகாஸ்திரம் ஒரு தடவைதான் கர்ணனுக்கு பயன்பட்டது. ஆனால் இன்று மலிங்க இருக்கும் அணியின் தலைவருக்கு மலிங்க என்னும் நாகாஸ்திரம் தேவைக்கேற்ப பயன்படுத்த உதவுகின்றது என்றால் அது மிகையான வார்த்தை இல்லை. எனக்கு தெரிந்து ஆரம்பகால ஷொஹைப் அக்தருக்கு பின்னர் ரசிகர்கள் காணும்போதெல்லாம் ஆர்ப்பரிக்கும் ஒரே பதுவீச்சாளர் மலிங்கதான். மலிங்க Run-up இல் பந்துவீச தயாராக இருக்கும்போது ஏற்ப்படுத்தப்படும் ரசிகர்களின் ஆரவாரம்கூட ஆரம்பகால ஷொஹைப் அக்தரை ஞாபகப்படுத்தும். என்னைக் கேட்டால் அக்தரின் வேஷன்-2 தான் மலிங்க என்பேன்.

அக்தர் அளவிற்கு வேகம் இல்லாவிட்டாலும்; விவேகத்தில் அக்தருக்கு மலிங்க எந்த விதத்திலும் குறைந்தவரில்லை. வக்கார்,வசீம்,அக்தர் வரிசையில் நான்காவது 'ஜோக்கர்' மன்னன் மலிங்கதான் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்காதென்று நம்புகின்றேன். புதிய பந்தில் (New Ball) ஜோக்கர்களை வீசுவது சாதாரண விடயமல்ல; ஒரு சில பந்து வீச்சாளர்களால் ஆரம்ப ஓவர்களிலும் சிறப்பாக யோக்கர் வீச முடியுமாயினும், மலிங்க அளவிற்கு ஆரம்ப ஓவர்களில் யாராலும் ஜோக்கர்களை நேர்த்தியாக வீச முடியாது (இங்கிலாந்தின் 'டரன் கவ்' கூட இதில் கில்லாடி)ஒருநாள் போட்டிகளின் இறுதி பத்து ஓவர்களும், T/20 போட்டிகளின் இறுதி நான்கு ஓவர்களும் பந்து வீசுவதற்கு இன்றைய தேதியில் சிறந்த தெரிவாக மலிங்கவைவிட வேறு யாராகவும் இருக்க முடியாது. Full A Length Delivery (Blochold Arias), Yorker, Low Full Toss, Slow Delivery, Bouncer, Slow Ball Bouncer என பத்துவீச்சின் அத்தனை உக்திகளையும் பயன்படுத்தி இறுதி ஓவர்களில் மலிங்க ஆடும் கதகளியில் தப்பித்து ஓட்டங்களை குவிப்பதென்பது எதிரணியினருக்கு சாதாரண விடயமல்ல. பிரபலமான தொழில்சார் துடுப்பாட்ட வீரர்களே இறுதிநேரத்தில் மலிங்கவிற்கு திணறும்போது; பின்வரிசை துடுப்பாட்ட வீரர்களின் நிலை எப்படி இருக்கும்? அதிலும் பின்வரிசை 'இடதுகை' துடுப்பாட்ட வீரர்களின் நிலை ரொம்பவும் பரிதாபகரமாக இருக்கும்.

மலிங்காவின் சக வீரர்களும், இன்றைய சர்வதேச கிரிக்கட்டின் மிகச்சிறந்த துடுப்பாட்ட வீரர்களும், மலிங்கவிற்கு அணித்தலைவர்களாக இருந்தவர்களுமான மஹேல ஜெயவர்த்தன, குமார் சங்ககார போன்றவர்களே மலிங்காவின் ஜோக்கருக்கு பதிலளிக்க முடியாதபோது; பாவம் பின்வரிசை துடுப்பாட்ட வீரர்களால் என்னதான் செய்யமுடியும்? இறுதி நேரங்களில் மட்டுமல்ல, ஆரம்ப ஓவர்களிலும் மலிங்காவின் சிறந்த பந்துவீச்சு பல தடவை அணியின் வெற்றிக்கு வழிசமைத்துள்ளது. ஆனாலும் ஆரம்ப ஓவர்களிலும் பார்க்க இறுதி ஓவர்களில்த்தான் மலிங்க ஸ்பெஷலிஸ்ட்.எப்போதுமே பந்துவீச்சில் கலக்கிவரும் மலிங்க கடந்த 2 சாம்பியன் லீக் போட்டிகளில் துடுப்பாட்டத்தில் பிரகாசித்தது அவர் சார்ந்த மும்பை அணிக்கு அவ்விரு போட்டியையும் வெற்றியாக மாற்றியது. இதற்கு முன்னர் அவுஸ்திரேலியாவில் வைத்து 50 ஓட்டங்களை பெற்று இலங்கைக்காக ஒரு போட்டியையும் மலிங்க வென்று கொடுத்துள்ளார். இதில் குறிப்பட்டு சொல்லவேண்டிய முக்கியவிடயம் என்னவெனின் சென்னையுடனான போட்டியில் மலிங்காவின் துடுப்பாட்டத்தை 'மாஸ்டர் பாட்ஸ்மன்' சச்சின் மிகவும் விரும்பி ரசித்ததுதான். இதற்கு முன்னர் வேறு எந்த வீரரது துடுப்பாட்டத்தையும் சச்சின் அந்தளவிற்கு ரசித்து நான் பார்த்ததில்லை; சச்சினையே இம்ப்ரஸ் செய்த மலிங்கவிற்கு சராசரி ரசிகர்களை இம்ப்ரெஸ் செய்வது கடினமா என்ன?

அப்படி மலிங்கவினால் இம்ப்ரெஸ் ஆனவர்களில் நானும் ஒருவன், ஆனால் இப்போதல்ல; மலிங்காவின் முதல்ப் போட்டியிலிருந்தே!!! 2004 ஆம் ஆண்டு அவுஸ்திரேலியாவின் டார்வின் நகரத்தில் அறிமுக டெஸ்ட் போட்டியில் 6 விக்கட்டுகளை வீழ்த்தி அன்று மலிங்க இலங்கை ரசிகர்களை திரும்பிப் பார்க்க வைத்தார். வழமைக்கு மாறான ஆக்ஷன், இலங்கையில் வேறெந்த பந்துவீச்சாளருக்குமில்லாத பந்து வீச்சு வேகமென மலிங்க புதிதாக தெரிந்தாலும் அடுத்தடுத்த போட்டிகளில் மலிங்கவால் சொல்லிக்கொள்ளும்படியாக பிரகாசிக்க முடியவில்லை. இன்னும் சொல்லப்போனால் மலிங்கவை அன்றைய இலங்கையின் அணித்தலைவர் மார்வன் அத்தப்பத்து சரியாக பயன்படுத்தவில்லை என்றே சொல்லலாம். அத்தப்பத்து பர்வீஸ் மஹரூபை நம்பிய அளவிற்கு மலிங்கவை நம்பவில்லை என்பதே உண்மை.மார்வனுக்கு பின்னர் மஹேல தலைமை ஏற்ற சிறிது காலத்தில் இங்கிலாந்தில் இடம்பெற்ற ஒருநாள் போட்டித்தொடரில் மீண்டும் கலக்க ஆரம்பித்த மலிங்க அடுத்து இடம்பெற்ற நியூசிலாந்து தொடரின் டெஸ்ட் வெற்றிக்கு சிறப்பான பங்களிப்பை செய்திருந்தார். ஆனாலும் அடுத்து சில மாதங்களில் இடம்பெற்ற 2007 உலகக்கிண்ணப் போட்டிகள்தான் மலிங்கவை மிகப் பிரபலமாக்கியது. தென்னாபிரிக்காவிற் கெதிராக மலிங்க தொடர்ச்சியாக வீழ்த்திய 4 விக்கட்டுகள் (Double Hat-Trick) மலிங்கவை மிகவும் பிரபலாமாக்கிற்று; ஆனாலும் மலிங்காவின் புகழ் உச்சத்தை அடைந்தது என்னமோ IPL போட்டிகளால்த்தான் என்பதை மறுக்க இயலாது.

மும்பை இந்தியன்ஸ் அணியில் சச்சினுக்கு அடுத்து அதிக ரசிகர்களின் ஆதரவையும் எதிர்பார்ப்பையும் பெற்ற லசித் மலிங்க; சொந்த நாட்டு அணிக்காக டெஸ்ட் கிரிக்கட் போட்டிகளில் விளையாடாமல் ஓய்வை அறிவித்தபோது பலத்த சர்ச்சையும், மாற்றுக் கருத்தும் எழுந்தன. சொந்த நாட்டுக்காக ஆடுவதிலும் பார்க்க பணத்திற்கு மலிங்க முன்னுரிமை கொடுத்துள்ளதாக இலங்கையின் தீவிர விசுவாசிகளும், மலிங்கவை பிடிக்காமல் கடுப்பில் இருந்தவர்களும் மலிங்கவிற் கெதிராக குற்றச்சாட்டுக்களை அள்ளி வீசினர்.அந்த நேரத்தில் இலங்கையின் சமகால தூண்களும், மலிங்காவின் அணித்தலைவர்களாக இருந்தவர்க்களுமான மஹேல ஜெயவர்த்தனாவும் குமார் சங்கக்காரவும் மலிங்கவிற்கு ஆதரவாக தம் கருத்துக்களை முன்வைத்தனர். டெஸ்ட் போட்டிகளில் மலிங்க ஆடுவதால் ஏற்ப்படும் உபாதை மலிங்கவை பல மாதங்களுக்கு கிரிக்கட்டில் இருந்து தள்ளி வைப்பதாகவும்; இதற்கு டெஸ்ட் கிரிக்கட்டின் ஓய்வு சரியான முடிவே என்பதும் அவர்களது கூற்று.

மலிங்க டெஸ்ட் போட்டிகளின்போது ஏற்ப்பட்ட காயம் காரணமாக பல தடவைகள் மாதக்கணக்கில் கிரிக்கட் விளையாடாமல் இருந்தது என்னமோ உண்மைதான்; ஆனால் IPL போட்டியென்று ஒன்று இல்லாமல் இருந்திருந்தால் இதே காயத்தை காரணம் காட்டி டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்திருப்பாரா என்பது மிகப்பெரும் சந்தேகம்தான். உண்மையை சொல்வதென்றால் IPL என்னும் பணம் கொட்டும் பூதத்திடம் செல்வதற்கு மலிங்க தன் உபாதையை நன்றாக பயன்படுத்தி இருந்தார். நாட்கணக்கில் வெய்யிலில் நின்று குறைந்த சம்பளத்திற்கு உடல் உபாதையை வாங்குவதற்கு; வெறும் நான்கு ஓவர்கள் பந்துவீசி கோடிக்கணக்கில் பணத்தை அள்ளுவதற்கு யாருக்குத்தான் கசக்கும்!!!!இலங்கை ரசிகர்கள் மற்றும் கிரிக்கட் ஆர்வலர்கள் பக்கம் நின்று பார்த்தால் மலிங்க செய்தது மிகப்பெரும் தவறுபோல் தோன்றினாலும் மலிங்கவை பொறுத்தவரை அது சரியான முடிவே. மலிங்க பணத்திற்காக இந்த முடிவை எடுத்துக் கொண்டதாகவே வைத்துக்கொண்டாலும்; டெஸ்ட் போட்டிகளின் உபாதை காரணமாக மலிங்க மாதக்கணக்கில் ஆடாதபோது இலங்கைக்காக பல ஒருநாள், T/20 போட்டிகளிலும் விளையாட முடியாமல் போனது; அந்தக்குறை இப்போது இல்லை. மலிங்க டெஸ்ட் கிரிக்கட்டில் இல்லாத போதும்; ஒருநாள், T/20 போட்டிகளில் தன்னாலான முழுப் பங்களிப்பையும் தன் நாட்டிற்காக கொடுக்கிறார்; சமீபகாலத்து இலங்கையின் ஒருநாள், T/20 வெற்றிகளை பார்த்தால் இதை புரிந்து கொள்ளலாம். அதே சமயம் மலிங்க இல்லாத குறை சமீபத்தைய டெஸ்ட் போட்டி முடிவுகளில் நன்கு புலப்படுகின்றதையும் மறுக்க முடியாது.

மலிங்கவின் பந்துவீச்சு எப்படி சிறப்பானதோ அதைவிட ஒருபடி அதிகம் சிறப்பானது மைதானத்தில் அவரது நடத்தை. இதுவரை எந்த துடுப்பாட்ட வீரருடனும் மலிங்க முறைத்தோ, தர்க்கம் பண்ணியோ பார்த்ததில்லை; ஒரு விக்கட்டை வீழ்த்திய பின்னர் குறிப்பிட்ட துடுப்பாட்ட வீரரை முகம் பார்த்து கேலிபண்ணி மலிங்க தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியதில்லை; தன் பந்திற்கு ஆறு, நான்கு என துடுப்பாட்ட வீரர்கள் விளாசியபோதுகூட மலிங்க புன்னகையைத்தான் உதிர்ப்பவர்; எந்த அணிக்காக ஆடியபோதும் தன் அணித்தலைவருடனோ, சக வீரர்களுடனோ இதுவரை எந்த பிணக்கிலும் மலிங்க ஈடுபட்டதில்லை; எந்தப்பொழுதிலும் நடுவருடன் அவரது தீர்ப்பை எதிர்த்து மலிங்க விவாதித்ததில்லை; இப்படியான உயரிய பண்புகளுடன் எத்தனை வேகப்பந்து வீச்சாளர்கள் இருக்கிறார்கள் என்பதை எண்ணிப்பாருங்கள்!!!ஆனால் இதே லசித் மலிங்காவை 4 ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு நேர்முக வர்ணனையில் கேவலப்படுத்திய பெருந்தகை ஒருவர் இருக்கிறார்; அவர்தான் அர்ஜுன ரணதுங்க. மலிங்கவின் தலைமுடியையும், அவரது இமையில் குத்தப்பட்ட தோட்டினையும் சுட்டிக்காட்டிய அர்ஜுனா மலிங்கவை ஒரு ஒழுக்கமில்லாதவர் என்று கூறியிருந்தார். ஒரு பாடசாலைக்கு சிறப்பு விருந்தினராக மகேலா, சங்கா, முரளி, வாஸ் இப்படியானவர்களை கூட்டிச்செல்லலாம்; மலிங்காவை கூட்டிச்செல்ல முடியுமா? என்று அன்று அர்ஜுனா கேள்வி எழுப்பினார். ஒரு உயரிய பண்புள்ள ஒரு கிரிக்கட் வீரரை அவரது புறத்தோற்றத்தில் வைத்து எடைபோட்டமை அர்ஜுனா போன்ற மிச்சிறந்த வீரருக்கு அழகாக இல்லை.

மலிங்காவின் புறத்தோற்றம் அவரது மனதுக்கு பிடித்தமானது, ஒருவரது புறத்தோற்றம்தான் அவரது ஒழுக்கத்தை தீர்மானிக்கின்றது என்கின்ற அர்ஜுனாவின் அன்றைய கூற்று அபத்தமான ஒன்று. எந்த மாணவனும் மலிங்காவின் புறத்தோற்றத்தில் இம்ப்ரெஸ் ஆகப்போவதில்லை, அப்படி ஆனாலும் அதிலென்ன தவறு? தலை முடியை வளர்த்து, கலர் அடிப்பது ஒழுக்கம் கெட்ட செயலா? அதிகமான சிறுவர்கள் இன்று மலிங்கவை முன்னுதாரணமாக கொண்டு பந்துவீசவே எத்தனிக்கிறார்கள், தலைமுடியை வளர்ப்பதில் அல்ல என்கின்ற கூற்றில் எந்த மிகைப்படுத்தலும் இல்லை; சிறுவர்கள் விளயாடும்போதுகூட போல்ட் முறையில் விக்கட்டை வீழ்த்தினால் 'மலிங்க ஸ்டையில்' என்றுதான் சொல்கிறார்கள். மலிங்காவின் தலைமுடியைவிட மிகமிக அதிகமாக இம்ப்ரெஸ் செய்வது அவரது 'ஜோக்கர்'கள்தான்.உடல்நிலை ஒத்துளைக்குவரை, உடல் உபாதைகள் தொந்தரவின்றி தான் சார்ந்த அணியினருக்கு மலிங்கவும், மலிங்கவின் ஜோக்கர்களும் எப்போதும் விக்கட்டுகளை அள்ளிக்கொடுக்கும் என்கின்ற நம்பிக்கையில் சமகால கிரிக்கட்டின் எனக்கு பிடித்த ஒரே வேகப்பந்து வீச்சாளருக்கு இன்னுமின்னும் பல விக்கட்டுகளை தகர்க்க அவரது லட்சக்கணக்கான ரசிகர்களில் ஒருவனாக நானுன் வாழ்த்துக் கூறுகின்றேன்.............

Wednesday, September 21, 2011

ரா-ஒன்னில் ரஜினி நடிக்க வேண்டாமே!!!!!!

ஷாருக்கானின் ரா-ஒன் திரைப்படத்தில் ரஜினிகாந்த் நடிக்கப்போவதாக ஒரு செய்தி உலாவி வருவது எல்லோரும் அறிந்தது. குறிப்பிட்ட திரைப்படத்தில் ஆபத்தில் இருக்கும் ஷாருக்கை ரஜினி காப்பாற்றுவது போல் ஒரு சிறு வேடத்தில் ரஜினி நடிக்கவுள்ளதாகவே அந்த செய்தி. இந்த செய்தி உண்மையாகும் சந்தர்ப்பம் உண்டெனின் படத்தின் மிகப்பெரும் மாஸ் ரஜினி அன்றி ஷாருக் அல்லவே; இதனால் இப்படியொரு காட்சியில் ரஜினி நடிப்பதை ஷாருக்கான் விரும்புவாரா என்பது மிகப்பெரும் சந்தேகமே. ஷாருக் விரும்புவது இருக்கட்டும் இந்த திரைப்படத்தில் நடிக்க ரஜினி ஒத்துக்கொள்வாரா? ரஜினி ரசிகர்கள் ரா-ஒன்னில் ரஜினி நடிப்பதை விரும்புவார்களா?

NDTV யின் INDIAN OF THE YEAR விருது நிகழ்ச்சியில் ரஜினிக்கு விருது வழங்கப்பட்டபோது ஷாருக்கான் முகம் வாடி இருந்ததையும்; அங்கு பேசிய ரஜினி "அமிதாப் Emperor, நானும் ஷாருக்கும் king" என்று கூறிய சிறிது நேரத்தில் ரஜினியிடம் கேள்வி கேட்கும் சந்தர்ப்பம் அமையவே "Empherer ஆகுவதற்கு என்ன செய்யவேண்டும்" என்று கேட்டதனையும் பார்த்தவர்களுக்கு ஷாருக் எப்படிப்பட்டவர் என்று தெரிந்திருக்கும். ரஜினிமீது பெரிதாக அபிப்பிராயம் கொண்டிராத ஷாருக் இறங்கி வருகிறார் என்றால் நிச்சயம் இதுவொரு ஷாருக்கானின் வியாபாரத்தந்திரம் என்றே எண்ணத் தோன்றுகின்றது. எந்திரன் ஆடியோ ரிலீசில் இருந்து பிரீமியர் ஷோ வரைக்கும் எதனையுமே கண்டுகொள்ளாத ஷாருக் இப்போது ரா-ஒன் மூலம் ரஜினியை கௌரவிக்கிறேன் என்று கூறுவது நம்பத் தகுந்தாற்போல் இல்லை!!!!ரஜினி நடிக்க மாட்டார் என்கின்ற நம்பிக்கையிலோ!! அல்லது ரஜினி நடித்தாற்கூட பரவாயில்லை படம் வசூலை அள்ளிக்கொட்டும் என்கின்ற திருப்தியுடனோ ஷாருக்கின் ஒப்புதலை வாங்கிய ரா-ஒன் படக்குழுவினர் ரஜினியை ரா-ஒன்னில் நடிக்கவைக்க அணுகியுள்ளனர். ரா-ஒன்னில் ரஜினி நடிக்காவிட்டாலும் இந்த செய்தி ஒன்றே ரா-ஒன் திரைப்படத்தின் ப்ரமோஷனுக்கு போதும், அதிலும் குறிப்பாக தென்னிந்தியாவில் ரா-ஒன்ற்கு இதுவொரு மிகப்பெரும் ப்ரொமோஷன். சக் டே இந்தியா, ஓம் சாந்தி ஓம் திரைப்படங்களை ஓட்டவைக்க ஷாருக் இந்திய கிரிக்கட் அணிகூட சுற்றித்திரிந்து கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டது நினைவிருக்கலாம். ஷாருக் மட்டுமல்ல பல ஹிந்தி நடிகர்கள் தங்கள் படங்களை ப்ரோமோ பண்ணுவதற்கு கிரிக்கட்டை பயன்படுத்துவது ILP பார்த்தால் நன்றாக புரியும்.

ரா-ஒன்னில் ரஜினி நடித்தால் நிச்சயம் ரஜினி ரசிகர்களுக்கு அது மாபெரும் கொண்டாட்டம்தான், அதேநேரம் ரா-ஒன்னின் வசூலுக்கும் மிகப்பெரும் பலம் (இதை வட இந்திய ஊடகங்களே குறிப்பிட்டுள்ளது). உடல்நலம் திரும்பிய ரஜினியை திரையில்க்காண எந்த ரஜினி ரசிகனுக்கு கசக்கும்? ஒவ்வொரு ரஜினி ரசிகனும் ரஜினியை காண (தரிசிக்க) ரா-ஒன் திரையிடப்படும் திரையரங்கிற்கு ஒரு தடவையேனும் நிச்சயம் செல்வான். தெற்கிலே மிகப்பெரும் வசூலை பெற்றால் ரா-ஒன்னால் இந்திய சினிமாவின் இன்றைய சாதனையான எந்திரனின் வசூலினை முறியடிக்கவும் வாய்ப்புண்டு; ரஜினியை வைத்தே ரஜினி படத்தின் வசூலை முறியடிக்க திட்டமிட்டிருக்கும் ரா-ஒன் படக்குழுவினரின் மிகப்பெரும் வியாபாரதந்திரமிது. இதனால்த்தான் தன் இமேஜையும் விட்டுக்கொடுக்க ஷாருக் சம்மதித்திருப்பார், இப்போது ரஜினி நடித்தாலும் நடிக்காவிட்டாலும் அது ரா-ஒன்னிக்கு பலம்தான்.ரஜினியை ஒவ்வொரு படத்திலும் புதுமையாய் பார்க்கும் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு; இப்போது உடல்நலக் குறைவிலிருந்து மறுபிறவி எடுத்திருக்கும் ரஜினியை பார்ப்பதற்கு எவ்வளவு ஆர்வம் இருக்கும்? அந்த ஆர்வத்தை ஏன் இன்னொருவர் படத்திலே, அதிலும் சிறு வேடத்திற்கு வீணடிக்கவேண்டும்? எதற்கு ஷாருக்கிற்கு மாபெரும் ஓப்பினிங்கை ஏற்ப்படுத்திக் கொடுக்க வேண்டும்? முதல்முதலில் ராணாவில் ரஜினி திரையில் தோன்றினால் எத்தனை பெரிய ஓப்பினிங் கிடைக்கும்? படம் முழுவதும் எவ்வளவு பரவசம் கிடைக்கும்? ஷாருக் போன்ற ஒருவரின் சுயநலத்திற்காக ஏன் ரஜினி தனது விம்பத்தின் பெறுமதியை கொடுக்க வேண்டும்? என்னைக் கேட்டால் ரஜினி ஒருபோதும் இதற்கு சம்மதிக்க மாட்டார் என்றே தோன்றுகிறது, "ஏணியை நானிருந்து ஏமாற மாட்டேன்" என்கின்ற பாடல்வரியை தலைவர் பொய்யாக்கமாட்டார் என்றே நினைக்கின்றேன்; எனது விருப்பம்கூட அதுதான்.

ராணா இருக்க ரா-ஒன் எதற்கு ?


Sunday, September 18, 2011

இங்கிலாந்தில் இந்தியா - என் பார்வையில்

இந்திய கிரிக்கட் அணியினருக்கும், இந்திய கிரிக்கட் ரசிகர்களுக்கும், பொதுவான கிரிக்கட் ஆர்வலர்களுக்கும் எப்போதுமே மறக்கமுடியாத ஒரு தொடராக இங்கிலாந்து - இந்திய அணிகளுக்கிடையிலான போட்டித்தொடர் அமைந்தது என்றால் அது மிகையில்லை. டெஸ்ட் போட்டியில் 4:0, T/20 யில் 1:0, ஒருநாள் போட்டியில் 3:0 என இங்கிலாந்து அனைத்து போட்டித் தொடர்களையும் இலகுவாக கைப்பற்றியுள்ளது. இந்திய அணிக்கு இந்த தொடரின் 10 போட்டிகளில் ஒரு போட்டியிலேனும் வெற்றி கிட்டாதது யாருமே எதிர்பாராதது; சர்வதேச கிரிக்கட்டிற்கு இது ஒரு பேரதிர்ச்சி, இந்திய கிரிக்கட்டில் இது ஒரு கறுப்புப் புள்ளி.

டெஸ்ட் தரவரிசையில் முதலிடம், ஒருநாள் போட்டிகளில் உலக சாம்பியன், மிகப் பலமான துடுப்பாட்ட வரிசை, இதற்கு முன்னைய இங்கிலாந்து தொடர்களின் சிறப்புப் பெறுதி என மிகவும் சாதகமான விடயங்களை தம்மகத்தே கொண்டு இங்கிலாந்துக்குள் காலடி வைத்த இந்திய அணியின் இந்த படுதோல்விக்கு காரணம் என்ன? இந்த தோல்வி இந்திய அணியை எவ்விதத்தில் பாதிக்கும்? இந்த தோல்வியில் இருந்து இந்தியா மீண்டு வருமா?

டெஸ்ட் போட்டித் தொடர்
இந்தியா இந்த தொடர் முழுவதும் எதிர்கொண்ட மிகப்பெரும் பிரச்சனை உடல் உபாதைகள் (காயங்கள்). டெஸ்ட் போட்டிகளின் ஆரம்பம் முதல் ஒருநாள் போட்டிகளின் இறுதிவரை வீரர்களின் உடல் உபாதைகள் இந்தியாவை திணற வைத்தது இந்தியாவின் மிகப்பெரும் துரதிஸ்டம். உபாதைகளால் வீரர்கள் ஆடமுடியாமல் போனது இந்தியாவிற்கு பாதகமென்றால் உபாதையான வீர்ர்களை ஆடவைத்த தெரிவுக் குழுவினரதும், அணியின் தலைவர் டோனியினதும் முடிவு மிகவும் மோசமானது. டெஸ்ட் போட்டிகளில் முழுமையாக உடற்த்தகுதிக்கு திரும்பாத ஷேவாக், கம்பீர், சஹீர்கான் மூவரையும் அணியில் இணைத்தது டெஸ்ட் போட்டிகளின் பின்னடைவிற்கு முக்கிய காரணங்களில் ஒன்று.

ஒரு டெஸ்ட் போட்டியை வெல்வதாயின் எதிரணியினரின் இருபது விக்கட்டுகளை வீழ்த்தியாகவேண்டும்; வெளிநாடுகளில் 20 விக்கட்டுகளை வீழ்த்துமளவிற்கு முழுமையான உடற்த்தகுதியுள்ள சஹீர் தவிர்த்து வேறு எந்த நம்பிக்கையான பந்து வீச்சாளர்களும் இன்றைய இந்திய அணியில் இல்லை. இங்கே சஹீரின் உடற் தகுதியே தள்ளாடுகிறது, இந்த லட்சணத்தில் 20 விக்கட்டுகளை சரிப்பது எவ்வகையில் சாத்தியம்? ஆடுகளத்தின் தன்மைக்கேற்ப (condition) அப்பப்போ இசாந்த் சர்மாவின் வேகம் மற்றும் ஸ்விங் ஓரளவிற்கு இந்தியாவிற்கு நம்பிக்கை கொடுத்தாலும் அதனை தொடர்ந்து கொண்டு செல்ல இசாந்த் சர்மாவிற்கு எந்த துணையுமில்லை. முக்கியமாக அணில் கும்ளேயின் இடம் மிகப்பெரும் காலியாக உள்ளது; கும்ளே இருக்கும் போது சிறப்பாக பந்து வீசிய ஹர்பஜன் இன்றைய நிலையில் அகமதாபாத், நாக்பூரை மட்டுமே நம்பி இருக்கும் நிலையில் உள்ளது இந்திய பந்துவீச்சு வரிசையின் மிகப்பெரும் பலவீனம்.பலவீனமான பந்துவீச்சு வரிசையை வைத்துக் கொண்டு ஆஸ்திரேலியாவில் வைத்து ஆசஸ் கிண்ணத்தை கைப்பற்றிய மிகப்பலமான இங்கிலாந்து துடுப்பாட்ட வரிசையை தகர்ப்பதென்பது இலகுவான விடயமல்ல. ஆனால் போட்டிகளை சமநிலைப் படுத்துமளவிற்கு தகுதியான சிறப்பான துடுப்பாட்ட வரிசையை இந்தியா கொண்டிருந்தது! நான்கு போட்டிகளிலும் 20 இந்திய விக்கட்டுகளை வீழ்த்துவதென்பது இங்கிலாந்து பந்து வீச்சாளர்களை பொறுத்தவரை இலகுவான விடயமல்ல; ஆனால் அது எப்படி சாத்தியமாயிற்று? இந்தியாவின் மிகப்பெரும் துடுப்பாட்ட குறையான 'பவுன்சர்'களை ஆயுதமாக பயன்படுத்தியே இங்கிலாந்து பந்து வீச்சாளர்கள் இந்தியாவை சுருட்டினர். முட்டிக்கு கீழே வரும் பந்துகளை உள்ளூரிலே போட்டுத்தள்ளிய சிங்கக்குட்டிகளுக்கு சீறிவரும் பவுன்சரை சமாளிப்பது சிரமம் என்பதை புரிந்துகொண்ட இங்கிலாந்து பந்துவீச்சாளர்கள் short pitch பந்துகளை போட்டே பாதிக்கும் மேலான இந்திய விக்கட்டுகளை தகர்த்தனர்.

டிராவிட் தவிர வேறெந்த இந்திய துடுப்பாட்ட வீரரும் இயல்பினிலேயே short pitch பந்துகளுக்கு விளையாடுவதற்கு சிரமப்படுவார்கள், இந்த தொடரிலும் அதேதான் நடந்தது. தனி மனிதனாக போராடிய டிராவிட் தவிர்த்து இந்தியாவின் துடுப்பாட்டம் இந்த தொடரில் கை கொடுக்காததே இந்த பாரிய தோல்வியின் முக்கிய காரணம். அதுதவிர off stump & out side the off stump இல் out swinger பந்துகளை அதிகமாக வீசி caught behind இலும் அப்பப்போ in swing பந்துகளை நேர்த்தியாக வீசி lbw முறையிலும் சச்சினை திட்டமிட்டபடி ஆட்டமிழக்க செய்தமை இங்கிலாந்தின் புத்தி சாதுரியமான திட்டமிடல். மிகவும் அற்ப்புதமாக திட்டமிட்டு விளையாடிய இங்கிலாந்திற்கு பதிலளிக்க இந்தியா எந்தவித திட்டமிடலையும் மேற்கொள்ளாமல் எப்படி சிறப்பாக ஆடமுடியும்?தொடர்ந்து சர்வதேச போட்டிகள் மற்றும் IPL போட்டிகளால் வீரர்கள் களைப்படைந்தனர் என்பதெல்லாம் வெறும் ஒப்புக்கு சொல்லும் காரணங்கள். இந்திய வீரர்களை விட அதிக முதல்த்தர போட்டிகளில் இங்கிலாந்து வீரர்கள் ஆடுகின்றனர். உதாரணமாக சொல்வதானால் நேற்றைய போட்டியில் இந்தியாவுடன் ஆடிய கீஷ்வேட்டர், டென்பெர்ஜ் இருவரும் இன்று இடம்பெற்ற 40 ஓவர்கள் கொண்ட முதல்த்தர போட்டித்தொடரின் இறுதிப்போட்டியில் விளையாடியுள்ளனர். 40 ஓவர்கள், T/20, நான்குநாள் போட்டிகள் என இங்கிலாந்து, அவுஸ்திரேலியா,தென்னாபிரிக்க வீரர்களும் சர்வேதேச போட்டிகளுக்கு இடையே தொடர்ந்து கிரிக்கட் ஆடி வருகிறார்கள் என்பதை நினைவிற் கொண்டால் எடுத்ததற்கும் IPL இனை சாட்டுக்கு இழுப்பதை தவிர்க்கலாம்.

இந்த தொடரில் இந்தியா மோசமாக ஆடியுள்ளதால் இந்திய அணி வீழ்ச்சி அடைந்துள்ளதாக யாராவது எண்ணினால் அது மிகவும் முட்டாள்த்தனமான எண்ணம். இந்தியா உள்ளூரிலும், ஆசிய கண்டத்திலும் தொடர்ந்து தனது ஆதிக்கத்தை செலுத்தும். ஆனால் சிறப்பான பந்து வீச்சாளர்களை கண்டுபிடிக்காவிட்டால் இங்கிலாந்து, அவுஸ்திரேலியா, தென்னாபிரிக்கா போன்ற நாடுகளில் டெஸ்ட் போட்டிகளை சமப்படுத்தாவே இந்தியா போராடவேண்டி இருக்கும். அதுகூட சச்சின், டிராவிட், லக்ஸ்மன, சேவாக் இல்லாத காலத்தில் சாத்தியமா என்று சொல்லமுடியாது. கோலி, ரெய்னா, ரோஹித் சர்மா போன்ற சிறந்த ஒருநாள் மற்றும் T/20 வீர்ர்களை கொண்டுள்ள இந்திய அணி; டெஸ்ட் போட்டிகளுக்கு மிகச்சிறந்த இளம் திறமைகளை அடையாளம் காணவேண்டிய நேரமிது!!!

ஒருநாள் போட்டி மற்றும் T/20
சச்சின், சேவாக், கம்பீர், யுவராஜ், சஹீர், நெஹரா, ஹர்பஜன் என உலகக்கிண்ண அணியின் முக்கிய வீர்ர்கள் 7 பேருடன் ரோஹித் சர்மாவும் உபாதைக்கு உள்ளாகியிருக்காமல் இந்திய அணியில் இருந்திருந்தால் இந்த தொடரின் முடிவு என்னவாக இருந்திருக்கும் என்பது இங்கிலாந்து வீரர்களுக்கும், இங்கிலாந்து ஊடகங்களுக்கும் நன்கு தெரிந்திருக்கும். ஆனாலும் இந்த தொடரில் குறிப்பிட்டு சொல்லவேண்டிய விடயம் இந்தியாவின் களத்தடுப்பு. கோலி, ரெய்னா தவிர்த்து மிகுதி அனைத்து வீரர்களுமே மிகவும் மோசமான களத்தடுப்பையே இத்தொடரில் முழுவதும் மேற்கொண்டனர்; அதிலும் குறிப்பாக முனாப் பட்டேல் மற்றும் பார்த்தீவ் பட்டேல் இருவரும் மிக மோசமான களத்தடுப்பு. இன்றைய ஒருநாள், T/20 போட்டிகளை பொறுத்தவரை பந்துவீச்சு, துடுப்பாட்டம் போல் களத்தடுப்பும் மிகமிக முக்கியமானது; பல போட்டிகளை இன்று களத்தடுப்பே தீர்மானிக்கின்றது.

ஒவ்வொரு ஓட்டமும் களத்தடுப்பால் சேமிப்பது மிகவும் அவசியம், இந்திய பந்து வீச்சாளர்களை பொறுத்தவரை களத்தடுப்பு என்பது வெறும் வாய் வார்த்தைதான். முனாப், பிரவீன், இசாந்த், சஹீர், நெஹெரா, அஷ்வின், மிஸ்ரா என ஒட்டுமொத்த இந்திய பந்துவீச்சாளர்களுமே Ground Fielding இல் சூரக்கோட்டை சிங்கக்குட்டிகள். இவர்களால் எந்த இலக்கையும் எதிரணியினரை துரத்தியடிக்க வைக்கமுடியும்; களத்தடுப்பால் மட்டுமல்ல பந்து வீச்சால்கூடத்தான்; இந்த தொடரிலும் அதுதான் நடந்தது. அனைத்து ஒருநாள் போட்டிகளும் இந்தியாவின் கைகளுக்குள் வந்தே பின்னரே இங்கிலாந்து கைகளுக்கு மாறியது. அதற்க்கு முழுக்காரணமும் இந்தியாவின் மோசமான களத்தடுப்பும் விவேகமற்ற பந்துவீச்சும் தான். மழை குறுக்கிட்டது இந்திய அணிக்கு பாதகமான காரணியாக விளங்கினாலும் இந்திய பந்துவீச்சு, களத்தடுப்பை வைத்து இந்தியாவிற்கு சாதகாமாக எதுவும் கூறமுடியாது.மற்றும் இந்தத் தொடரில் வெளிப்பட்ட இன்னுமொரு முக்கிய விடயம் டோனியின் விவேகமற்ற அணித்தலைமை. உலககிண்ணம், T/20 உலகக்கிண்ணம், 2 IPl, சாம்பியன்ஸ் கிண்ணம், ஆசிய கிண்ணம் என அடுக்கடுக்கான சாதனைகளை தனது தலைமையில் கொண்டிருந்தாலும் நான் சொல்வேன் "டோனி நிச்சயம் ஒரு Ideal Captain அல்ல" மிகச்சிறந்த அணியை சரியான முறையில் கொண்டு நடாத்தும் முன்னாள் அவுஸ்திரேலிய தலைமைகள் (ஸ்டீவ் வோ, பாண்டிங்) போலத்தான் என் பார்வையில் டோனியும். களத்தடுப்பு வியூகங்கள், பந்துவீச்சாளருடனான co-ordination போன்ற விடயங்களில் டோனிமீது உடன்பாடில்லை. முக்கியமான நேரங்களில் யாருமே எதிர்பார்க்காத சில முடிவுகளை எடுப்பதுதான் டோனியின் சிறப்பாக (அதிஸ்டம் என்றும் சொல்லலாம்) இருந்தது, ஆனால் இந்த தடவை இங்கிலாந்தில் டோனியின் திடீர் முடிவுகள் இந்தியாவிற்கு கை கொடுக்கவில்லை; இதுகூட இந்த தொடரின் தோல்விக்கு ஒருவகை காரணம்தான்.

இந்தியாவிற்கு இங்கிலாந்து வரும்போது இந்தியா பழிவாங்கும் என பலரும் (இந்திய ரசிகர் அல்லாதோரும்) நம்புகிறார்கள். இந்தியா ஒருநாள் போட்டிகளில் இந்தியாவில் வைத்து இங்கிலாந்திற்கு தர்ம அடி கொடுக்கும் சந்தர்ப்பம் உண்டு; ஆனால் டெஸ்ட் போட்டிகளில் அது சாத்தியமா என்பது என்னை பொறுத்தவரை சந்தேகம்தான்;பொறுத்திருந்து பார்க்கலாம்!!!!!!!

இந்திய ரசிகர்கள்
எனது நண்பன் ஒருவன் ஒரு குறிப்பிட்ட நடிகரின் ரசிகன், அந்த நடிகனின் படம் சூப்பர் ஹிட்டானால் அவனை கையில் பிடிக்க முடியாது, அவன் பேச்சை கேட்டால் அம்மிக்கல்லை தூக்கி தலையில் போடத்தான் மனம் வரும். ஆனால் அந்த நடிகனின் படம் பிளாப் ஆனால் எங்களுக்கு முன்னாடி அந்த நடிகனை அவனே கேவலப்படுத்துவான், திட்டுவான்; ஒருசில இந்திய ரசிகர்களின் நிலையும் இதுதான். இந்தியா ஜெயிக்கும்போது தலையில் வைத்து கொண்டாடுவது, அதே இந்தியா சொதப்பும்போது எவ்வளவு முடியுமோ அவ்வளவுக்கு கேவலப்படுத்துவது. இது ஒருவித 'எஸ்கேப்'பாபோபியா :-)இந்த 'எஸ்கேப்'பாபோபியா பல இடங்களில் பல பரிமாணங்களில் சுற்றிக்கொண்டு திரிந்தாலும் இந்திய ரசிகர்களிடையில் சற்று அதிகமாகவே உள்ளது :-)

Thursday, September 15, 2011

சந்தானம் கைகளில் தமிழ்சினிமாவின் நகைச்சுவை....

தமிழ் சினிமாவிடமிருந்து பிரிக்கமுடியாத, பிரித்துப்பார்க்க முடியாத, எதிர்பார்க்கப்படுகின்ற மிக முக்கியமான அம்சம் நகைச்சுவை. என்.எஸ்.கிருஷ்ணன் & மதுரம், சந்திரபாபு, பாலையா, நாகேஷ், தங்கவேலு, மனோரமா, தேங்காய் சீனிவாசன், சுருளி ராஜன், கவுண்டமணி, செந்தில், ஜனகராஜ், எஸ்.எஸ்.சந்திரன், வை.ஜி.மகேந்திரன், கோவை சரளா, சார்லி, வடிவேலு, விவேக், கருணாஸ், கஞ்சாகருப்பு, சந்தானம் போன்ற நகைச்சுவையில் தனிப்பெரும் பெயர்பெற்ற நகைச்சுவையாளர்களும் மேலே பெயர் குறிப்பிடாத குறைவான பாத்திரங்களில் நிறைவாக நகைச்சுவையை அள்ளித்தந்த வெண்ணிற ஆடை மூர்த்தி, டெல்லி கணேஷ், எஸ்.வி .சேகர், தியாகு, பாண்டு, சின்னி ஜெயந்த், தாமு, வையாபுரி போன்றோரும் இத்தனை நாட்களாக தமிழ் சினிமாவை தாங்கிப்பிடித்த நகைச்சுவை தூண்கள் என்றால் அது மிகையான வார்த்தைகள் இல்லை.

எம்.ஜி.ஆர் காலம் முதல் இன்றைய தனுஸ் காலம்வரை தன்கூட ஒரு நகைச்சுவை நடிகரை துணை கொள்ளாத ஒரு பிரபல நடிகரை காட்ட முடியுமா? தமிழ் சினிமாவின் ஜனரஞ்சக திரைப்படங்களாக காலத்தால்மறக்க முடியாத எங்க வீட்டுப்பிள்ளையின் வெற்றிக்கு நாகேஷும், தில்லானா மோகனம்பாள் வெற்றிக்கு பாலையாவும், சந்திரமுகியின் வெற்றிக்கு வடிவேலுவும் முக்கியமான காரணகர்த்தாக்கள் என்பதை எம்.ஜி.ஆரோ, சிவாஜியோ, ரஜினியோ மறுக்கமுடியுமா? இத்தனைக்கும் மேலாக ஜனரஞ்சக சினிமாவின் அடையாளமாக வர்ணிக்கப்படும் 'காதலிக்க நேரமில்லை' திரைப்படம் பிரபல நட்சத்திர பட்டாளமில்லாமல் வெளிவந்து வெள்ளிவிழா கொண்டாடிய மாபெரும் வெற்றிபெற்ற திரைப்படம்; இதன் மாபெரும் வெற்றியின் மூலகர்த்தாக்கள் யார்? நாகேஷும் பாலையாவும்தான் என்பதை மறுக்கமுடியுமா?நடிகர்களை விடுத்து இயக்குனர்களை நோக்கினால்; ஒவ்வொரு காலகட்டத்திலும் வேறுபட்ட இயக்குனர்களின் எண்ணங்களுக்கேற்ப நகைச்சுவை நடிகர்களும், நகைச்சுவையின் வடிவமும் மாறிக்கொண்டு போனதேயன்றி நகைச்சுவை நடிகர்களின் தேவை இல்லாது போகவில்லை. ஸ்ரீதர், பாலச்சந்தர், பாரதிராஜா, மகேந்திரன், மணிரத்தினம், ஷங்கர், பாலா, அமீர், சசிக்குமார் என தமிழ் சினிமாவில் புதுமைகளை நிகழ்த்திய அத்தனை இயக்குனர்களும் நம்பிய பொதுவான ஆயுதம் நகைச்சுவை/நகைச்சுவை நடிகர்கள். மேற்ப்படி இயக்குனர்களின் திரைவடிவம் அந்தந்த காலங்களில் புதுமையை ஏற்ப்படுத்தியது எவ்வளவு உண்மையோ; அவ்வளவுக் கவ்வளவு தமது படைப்புக்களை வெற்றியாக்க அவர்களுக்கு ஒரு நகைச்சுவை நடிகர் தேவைப்பட்டார் என்பதும் உண்மை.

60/70 களில் படத்தின் டைட்டில் போடப்படும்போது நாயகன், நாயகியின் பெயருக்கு அடுத்து 'சராசரி' சினிமா ரசிகர்கள் ஒவ்வொருவரும் ஆவலுடன் எதிர்பார்த்த பெயர் நாகேஷ்; அதேபோலவே 80/90 களில் கவுண்டமணி செந்திலின் பெயர்களையும், 90 களின் பிற்பகுதிமுதல் கடந்த ஆண்டுவரை விவேக் அல்லது வடிவேல் பெயரையும், இப்போது சந்தானத்தின் பெயரையுமே 'சராசரி' சினிமா ரசிகர்கள் ஒவ்வொருவரும் எதிர்பார்க்கிறார்கள். தனது திரைநாயகனுக்கு பாலாபிசேகம் செய்யும் ரசிகனும் தன் நாயகன் படத்தில் நகைச்சுவையை எதிர்பார்க்காமல் இருக்கமாட்டான்; ஒரு நகைச்சுவை நடிகன் தன் தலைவனுக்கு துணையாக திரைப்படத்தில் வேண்டும் என்பது அவனையும் அறியாமல் அவனுக்குள் இருக்கும் உணர்வு.ஒரு மாஸ் ஹீரோ என்பவனது பாத்திர விரிவாக்கம் என்ன? யாரும் செய்யாததை, எவரும் செய்ய முடியாததை செய்து முடிக்கும் அசகாய சூரன் என்று சொல்லலாமா? அந்த நாயகன் எது செய்தாலும் எதை பேசினாலும் அது வரவேற்ப்பை பெறும் என்று சொல்லலாமா? ஆமென்றால், குறிப்பிட்ட மாஸ் ஹீரோ என்கின்ற பட்டியலில் உச்சத்தில்ருக்கும் எம்.ஜி.ஆர், ரஜினி பெயருக்கு பக்கத்தில் கவுண்டமணியின் பெயரையும் சேர்த்துக் கொள்ளலாம்; இப்படி சொல்வதால் எம்.ஜி.ஆர், ரஜினியை தரம் குறைப்பதாக என்ன வேண்டாம், இது கவுண்டருக்கு கொடுக்கும் உயர்ந்த அங்கீகாரம். இப்போது கவுண்டர் இண்டஸ்ரியில் இல்லை, அவரது form இல்லாமல்போய் கிட்டத்தட்ட 15 ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆனால் இன்னமும் மனிதர் தமிழ் சினிமா ரசிகர்களுடைய இதயங்களில் சிம்மாசனம் போட்டு உட்கார்ந்திருக்கின்றார்.

இன்று ஒருவரை திட்ட வேண்டுமானால் கூட கவுண்டர் பின்னால் பதுங்கியிருந்து திட்டலாம், ஏனென்றால் கவுண்டர் திட்டினால் தப்பில்லை என்கின்ற அளவிற்கு கவுண்டருக்கு கிடைத்த அங்கீகாரம். கவுண்டரிடம் திட்டு அல்லது நக்கல் வாங்காத கவுண்டர் கூட நடித்த ஒரு நடிகரை சொல்ல முடியுமா? ரஜினி, கமல், மனோரமா, சிவகுமார், விஜயகுமார் போன்ற மூத்த நடிகர்களே கவுண்டருக்கு விதிவிலக்காக இல்லாதபோது ஏனையவர்களை சும்மாவா விட்டு வைத்திருப்பார் கவுண்டர்!!!! அடுத்தவங்களை அடித்தும் உதைத்தும் சிரிக்கவைத்தவர் கவுண்டர் என்றால்; அடுத்தவர்களிடம் அடி உதை வாங்கி சிரிக்கவைத்தவர் வடிவேல். கவுண்டரை எப்படி இளைஞர்களுக்கும் பெரியோவர்களுக்கும் பிடிக்குமோ அதேபோல வடிவேலை பிடிக்காத குழந்தைகளையும் வயதானவர்களையும் காண்பதரிது.இவர்கள் இருவரையும் பிடிக்காதவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள், அதனை மறுப்பதற்கில்லை அதற்க்கு அவர்கள் கூறும் முக்கிய காரணம்; கவுண்டர் எல்லோரையும் அடிக்கிறார், வடிவேல் எல்லோரிடமும் அடிவாங்குகிறார் என்பதுதான். இவர்களை பிடிக்காததால் அவர்களுக்கு நகைச்சுவை பிடிக்கவில்லை என்று அர்த்தமில்லை; அவர்களுக்கான வேறுபட்ட நகைச்சுவை தெரிவுகளாகத்தான் ஜனகராஜ், விவேக்...... வரிசையில் சக நகைச்சுவை நடிகர்கள் இருந்துள்ளார்கள். ஆனால் நாகேஷின் காலத்தின் பின்னர் கவுண்டமணி செந்திலும், அதன் பின்னர் வடிவேலுவும் ஆட்சி செய்ததுபோல வேறெந்த நகைச்சுவை நடிகரும் தமிழ் சினிமாவில் ஆதிக்கம் செலுத்தவில்லை என்பதை மறுக்க முடியாது.

இதுநாள்வரை நகைச்சுவைக்கும் நகைச்சுவை நடிகர்களுக்கு தமிழ் சினிமாவில் எப்போதுமே பஞ்சம் ஏற்ப்படவில்லை என்பது ஆரோக்கியமான விடயமே; ஆனால் இது இனிவரும் காலங்களில் தொடருமா என்பதை மிகப்பெரும் சந்தேகமாகவே நோக்கவேண்டியுள்ளது!!! காரணம் வடிவேலுவினுடைய வாய்ப்புகள் அரசியலால் மழுங்கடிக்கப்பட்ட பின்னர் தமிழ் சினிமாவில் நகைச்சுவையின் வீச்சு மிகப்பெருமளவில் வீழ்ச்சியடைந்துள்ளது. சந்தானம் தவிர வேறெந்த நகைச்சுவை நடிகரும் போமில் இல்லை; அதேநேரம் சந்தானம் தவிர வேறு யாரும் இனிவரும் காலங்களில் தமிழ் சினிமாவின் நகைச்சுவை பிரிவை கொண்டுசெல்லும் நிலையிலும் இல்லை!!!!!!அதேநேரம் சந்தானத்தால் எதிர்காலங்களில் தமிழம் சினிமாவின் நகைச்சுவையை முழுமையாக திருப்திப்படுத்த முடியுமா? என்றால் அது சந்தேகம்தான். வளர்ந்துவரும் ஒரு நடிகரை அதைரியப்படுத்துவதாக எண்ணவேண்டாம். சந்தானத்தின் டைமிங் நகைச்சுவைகள் அபாரமானவை, அவரது உடல்மொழி, வசன உச்சரிப்பு, முகபாவம் அனைத்துமே பிரமாதம்தான்; லொள்ளுசபாவின் அனுபவத்தையும் கவுண்டமணியில் பாதியையும் தன்னக்கத்தே கொண்டிருந்தாலும் சந்தானத்தின் நகைச்சுவைகள் 'அட' போட வைப்பவைதான். ஆனால் இளைஞர்களை தவிர சந்தானத்தின் நகைச்சுவைகளை புரிந்துகொள்ளும் தன்மை ஏனைய மட்டத்தினருக்கு இல்லை என்பதனையும் மறுக்க இயலாது.

எனக்கு புரிந்த, புரிகின்ற சந்தானத்தின் நகைச்சுவைகள் என் அம்மாவிற்கும், என் பாட்டிக்கும், சிறுவர்களுக்கும் புரியுமா என்றால் சந்தேகம்தான்!!!! இதனைத்தான் சந்தானத்திற்கும் கவுண்டமணி, வடிவேல் போன்றவர்களுக்குமிடையில் உள்ள வித்தியாசமாக குறிப்பிடவேண்டியுள்ளது. இதன்மூலம் சந்தானதினால் எல்லா மட்டத்தினரையும் திருப்திப்படுத்த முடியாது என்று சொல்லவரவில்லை; இனிவரும்காலங்களில் சந்தானம் எல்லா மட்டத்தினரையும் திருப்திப்படுத்த முயற்ச்சிக்கவேண்டும் என்பதற்காகவே இதை சொல்லவேண்டியுள்ளது. இல்லாவிட்டால் சிறுசுகளும் பெருசுகளும் வடிவேலு நகைச்சுவையினை சிரிப்பொலியில் பார்த்து ரசிக்கவேண்டிய நிலைதான் எதிர்காலத்தில் உருவாகும்.வடிவேல் இல்லாத தமிழ் சினிமாவில் இன்மேல் சிரிப்பு சரவெடியை கொளுத்தவேண்டிய பொறுப்பு சந்தானம் கைகளில் மட்டும்தான் இப்போதைக்கு உள்ளது, அடுத்த ஒருவரினை தமிழ்சினிமா நகைச்சுவைக்கென அடையாளம் காணும்வரை வரை தமிழ் சினிமாவின் நகைச்சுவையை தாங்கிப்பிடிக்கும் பொறுப்பு சந்தானத்திடமே. உதாரணமாக சொல்வதானால் ஒரு தொடர் ஓட்டப் போட்டியினை குறிப்பிடலாம்; அதாவது நாகேஷ் கவுண்டமணியிடம் கொடுத்த நகைச்சுவை என்னும் குச்சியை கவுண்டமணி வடிவேலிடம் கொடுத்தார், இப்போது வடிவேலு அதனை இப்போது சந்தானத்திடம் கொடுத்துள்ளார், அந்த குச்சியை இன்னொருவர் கைகளில் ஒப்படைக்கும்வரை அது சந்தானத்தின் கைகளில்த்தான் இருக்கப்போகின்றது!!!

அடுத்தவர் கைகளுக்கு குச்சி போகும்வரை அந்த குச்சியை பாதுகாப்பது சந்தானத்தின் கடமை, அதனை அவர் திறம்பட செய்வார் என்றே நம்புவோம்; அதற்காக அவர் இனிமேல் சில புதுமைகளை செய்யவேண்டியிருக்கும், அதனையும் அவர் செய்வார் என்றே நம்புவோம். 80 வருடங்களாக தமிழ் சினிமாவுடன் பின்னப்பட்டு கூடவே வந்துகொண்டிருக்கும் நகைச்சுவை என்கின்ற சிரிப்பு மந்திரம் இன்னும் 600 ஆண்டுகள் ஆனபின்னரும் தொடரவேண்டும். அதற்க்கு இன்னுமின்னும் புதிய இழந்த்தலைமுறை நகைச்சுவையாளர்கள் உருவாக/உருவாக்கப்பட வேண்டும்; நிச்சயமாக தமிழ் சினிமாவின் இன்றைய, நாளைய இயக்குனர்கள் இதனை செய்வார்கள் என்கின்ற நம்பிக்கை தமிழ்சினிமாவில் நகைச்சுவையை நேசிக்கும் ஒவ்வொருவருக்கும் உண்டு.

Wednesday, September 14, 2011

எனக்குப் பிடித்த விஜய் தொலைக்காட்சி

"I Am Back" அப்டின்னு நான் சொன்னாக்கா; "கொய்யால இதையே எத்தனை தடவடா சொல்லுவா(ய்)" என்பதுதான் உங்க உடனடி ரியாக்ஷனா இருக்கும் என்கிறது எனக்கு நல்லாவே புரியுது. ஆனா இந்த வாட்டி ஒண்ணு ரெண்டு பதிவோட எஸ் ஆகாம வாரம் இரண்டு மூணு பதிவாவது எழுதணும் என்கிறது எண்ணம். அதனால ஏற்க்கனவே எழுதிய இந்தவார இருவர், ஹோலிவூட் ரவுண்டப், ஸ்போர்ட்ஸ் ஸ்பெஷல் போன்ற டெம்ளேட் பதிவுகளை வாராவாரம் எழுதலாமென்று நினைத்துள்ளேன்.

நேரம் போதாது என்பது ஒரு பிரச்சனை இல்லாவிட்டாலும்; தினமும் மாலையில் கிரிக்கட் விளையாடுவதால் உண்டாகும் உடற்க்களை மற்றும் பஞ்சி(சோம்பல்) பதிவெழுதும் ஆர்வத்தை இத்தனை நாளும் ஏற்ப்படுத்தவில்லை. ஆயினும் ஒரு சில நண்பர்களது பாசமான வேண்டுகோளுக்கிணங்க மீண்டும் பதிவுகளை எழுதலாமென்று எண்ணியுள்ளேன்; என்னை மீண்டும் ஒருதடவை "I Am Back" சொல்ல வைக்காமல் எனது சோம்பேறித்தனம் எனக்கு ஒத்துழைக்கும் என்கின்ற நம்பிக்கையில் தொடர்கின்றேன்........................you know i don't watch any Tamil channels; i watch only Discovery, national geography, Animal planet, BBC, CNN, MTV, ...... & sports channels அப்டிங்கிறவங்க அப்டியே அப்பீற்றாகிக்கோங்க, இந்த பதிவு தமிழ் சானல் பார்க்கும் என்னை மாதிரி ஆளுங்களுக்கானது.........

விளையாட்டு அலைவரிசைகள் மற்றும் பாடல் அலைவரிசைகள் தவிர்த்து நான் அதிகமாக பார்க்கும் தொலைக்காட்சி அலைவரிசை 'விஜய் தொலைக்காட்சி' எனப்படும் STAR VIJAY தொலைக்காட்சிதான்; விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் போல வேறெந்த தமிழ் அலைவரிசையிலும் வேறெந்த நிகழ்ச்சியையும் நான் இதுவரை ரசித்து பார்த்ததில்லை. தமிழ் பேச்சு எங்கள் மூச்சு, சுப்பர் சிங்கர், ஜோடி NO 1 (சீசன் 1 & 2), லொள்ளு சபா, கனாக்காணும் காலங்கள், Coffee With Anu, கலக்கப் போவது யாரு, நீயா நானா, ரீல் பாதி ரியல் பாதி, அது இது எது என பல நிகழ்ச்சிகள் விஜய் தொலைக்காட்சியில் நான் மிகவும் ரசித்து பார்த்த, பார்த்துக் கொண்டிருக்கும் நிகழ்ச்சிகள்.

இவற்றில் சில ரியாலிட்டி ஷோக்களின் நடவில் வரும் நாடகத்தன்மையான சர்ச்சைகள் (நடுவர்கள் vs போட்டியாளர்கள், போட்டியாளர்கள் vs போட்டியாளர்கள், நடுவர்கள் vs நடுவர்கள்) மற்றும் வெற்றியாளரை தேர்ந்தெடுக்க SMS அனுப்பச்சொல்லி மக்களை ஏமாற்றும் தில்லாலங்கடி வேலைகள் என்பன வெறுப்பை உண்டாக்கினாலும் மேற்குறிப்பிட்ட நிகழ்ச்சிகள் அனைத்தையும் நன்கு ரசித்திருக்கின்றேன், இப்போதும் ரசித்துக் கொண்டிருக்கின்றேன்.இவற்றைவிட விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சில சீரியல்கள் கூட நான் ரசித்து பார்த்திருக்கின்றேன். மெகா சீரியல் என்றாலே கிலியை ஏற்ப்படுத்திய காலப்பகுதியில் மதுரை, காதலிக்க நேரமில்லை என இரு தொடர்களை புதிய பரிமாணத்தில் மெகா சீரியலின் இலக்கணங்களை தகர்த்து விஜய் தொலைக்காட்சி ஒளிபரப்பாகியது, ஆனால் காலப்போக்கில் மெகா சீரியலின் அடிப்படை குணாதிசயங்கள் உட்புகவே அந்த சீரியல்களின் தனித்தன்மை இல்லாது போய் அவையும் பத்தோடு பதினொன்றாகின.

அதன் பின்னரும் ஒரு நான்கைந்து சீரியல்கள் ஆரம்பத்தில் புதுமையாகவும் போகப்போக வளமான சீரியல்கல்போல வெறுமையாகவும் மாறின. இப்போதுகூட 'சரவணன் மீனாட்சி' என்கின்ற புதிய தொடர் ஒளிபரப்பாகின்றது, ஆரம்பம் அதகளமாகத்தான் இருக்கின்றது, ஆனால் போகப்போக 'வரவர மாமியார் கழுதைபோல' கதைபோலத்தான் இருக்கும் என்கின்றது எனது நம்பிக்கை. (விஜய் தொலைக்காட்சியின் சீரியல்களிலேயே மிகக் கேவலமான ஒன்று இப்போது ஒளிபரப்பப்பட்டுவரும் 'மகாராணி' தொடர்)

மேலே குறிப்பிட்ட நிகழ்ச்சிகள், சீரியல்கள் போன்றவை பொழுதுபோக்கிற்காகவும் மகிழ்ச்சிக்காகவும் பார்க்கப்பட்ட, பார்க்கப் படுகின்ற போதிலும் அவற்றில் வரும் சில மனிதர்கள் (போட்டியாளர்கள், கேரக்டர்கள், தொகுப்பாளர்கள்) மனதோடு ஒன்றித்து விடுகிறார்கள். குறிப்பிட்ட நிகழ்ச்சிகள் அல்லது சீரியல்கள் முடிவடைந்து சில ஆண்டுகள் கழித்து பிறிதொரு சந்தர்ப்பத்தில் எமக்கு அன்று பிடித்த மனிதர்களை பார்க்கும் போது ஒரு புரியாத மகிழ்ச்சி ஏற்ப்படுகின்றது.இத்தனைக்கும் அவர்களை வெறித்தனாமாக நேசித்ததில்லை, ஆனால் நம் குடும்பத்தில் உள்ள ஒருவரை நீண்ட நாட்களின் பின்னர் சந்தித்தது போன்ற உணர்வு!!!! இது சரியா தவறா ? ஏன் எதற்கு? எப்படி? எதனால்? என்கின்ற கேள்விகளுக்கு பதிலை இதுவரை ஆராய்ந்ததில்லை, ஆராயவேண்டிய தேவையும் ஏற்ப்படவில்லை; காரணம் அந்த உணர்வு பிடித்திருந்தது, அவளவுதான்.

லொள்ளுசபா- ஜீவா, சுவாமிநாதன், மனோகர்
கலக்கப்போவது யாரு- சிவகார்த்திகேயன், கோகுல்நாத், உமா(கட்டதுரை சம்சாரம்:-))
ரீல் பாதி ரியல் பாதி- ஜெகன்
கனாக்காணும் காலங்கள்- பாண்டி, பச்சை, பாலா,ஜோ, வினித், ராகவி, சங்கவி
சூப்பர் சிங்கர்- விக்னேஷ், கிருஷ்ணமூர்த்தி, சாய் சரண், ராகினி ஸ்ரீ, பிரசன்னா, ஸ்ரீகாந்த், நித்ய ஸ்ரீ, பிரியங்கா, அல்கா, ஸ்ரீ நிஷா, பூஜா, சந்தோஷ்
ஜோடி NO 1- பிரேம், பூஜா;
இப்போதைய கனாக்காணும் காலங்களில் - பலர் (கிட்டத்தட்ட எல்லோருமே)
மதுரை(சீரியல்)- சரவணன், மீனாட்சி
தமிழ் பேச்சு எங்கள் மூச்சு - விஜயன்

இப்படியாக பலரை விஜய் தொலைக்காட்சி ரசிக்க வைத்துள்ளது, இவர்களில் அதிகமானவர்களது விம்பம் நெடுநாட்கள் என்னுடன் பயணிக்கும் என்று எண்ணுகின்றேன். சினிமா நட்ச்சத்திரங்கள், விளையாட்டுவீரர்கள், அரசியல் தலைவர்கள் என பலருமறிந்த பிரபலங்களின் ஞாபகங்களுடன் ஒரு தொலைக்காட்சியில் நிகழ்ச்சிகளில், சீரியல்களில் தோன்றியவர்களது ஞாபகங்களும் சேர்ந்து வருவதென்பது அந்த நபர்களது வெற்றி என்பதையும் தாண்டி இது விஜய் தொலைக்காட்சியின் வெற்றி என்று சொன்னால் அது மிகையில்லை. பல இளம் திறமைகளை வெளிக்கொண்டுவருவதில் விஜய் தொலைக்காட்சிக்கு நிகராக வேறெந்த தமிழ் தொலைக்காட்சியுமில்லை என்று அடித்துக் கூறலாம்.தமிழ்த் திரைப்படங்களை பொறுத்தவரை மகா மொக்கையான திரைப்படங்களை அவ்வப்போது சிறப்பு நிகழ்ச்சிகளில் ஒளிபரப்பினாலும் தமிழ் டப்பிங் செய்யப்பட்ட ஆங்கில மற்றும் சீனத் திரைப்படங்களை ஒளிபரப்பி அப்பப்போ ஒலக சினிமாவை பார்க்கும் வசதியையும் விஜய் தொலைக்காட்சி ஏற்ப்படுத்திக் கொடுத்ததுள்ளது. ஜாக்கிசான், புரூஸ்லி போன்றோரை போட்டோவில் மட்டுமே பார்த்திருந்த என்னை ஜாக்கிச்சான், புரூஸ்லி நடித்த படங்களில் பெரும்பாலான திரைப்படங்களை பார்க்கவைத்தது விஜய் தொலைக்காட்சிதான். விஜயில் எனக்கு பிடித்த இன்னுமொரு நிகழ்ச்சி 'நீயா நானா'; கோபிநாத்தை சில இடங்களில் பிடிக்காமல்போனாலும் அங்கு வரும் பலதரப்பட்ட மக்களின் பலவிதமான எண்ணங்களும், உணர்வுகளும் நடைமுறை வாழ்வின் ஜதார்த்தங்க்களை நிறையவே கற்றுக்கொடுக்கும்.

பலவிதமான நேர்மறையான விடயங்கள் விஜய் தொலைக்காட்சியில் எனக்கு பிடித்திருந்தாலும் ஒருசில எதிர்மறையான விடயங்களும் உள்ளதை மறுக்கவில்லை. அவற்றில் முக்கியமானது ஏற்க்கனவே ஒளிபரப்பிய நிகழ்ச்சிகள், திரைப்படங்களை மீண்டும் மீண்டும் ஒளிபரப்பி கழுத்தறுப்பது; சில திரைப்படங்கள் திரையரங்கில் ஓடியதிலும் பார்க்க விஜய் தொலைக்காட்சியில் அதிகநாட்கள் ஒளிபரப்பாகியுள்ளது. அடுத்து கலையரங்கிற்க்கு வரும் டம்மி பீசுகளையும் சூப்பர் ஸ்டார் ரேஞ்சிற்கு பில்டப் கொடுப்பது; ஒரு நடிகரை பற்றி நிகழ்ச்சி செய்வதென்றால் நிமிடத்திற்க்கொரு தடவை குறிப்பிட்ட நடிகரைப்பற்றி ஓவர் பில்டப் செய்து எரிச்சலை உண்டாக்குவது என சிலநேரங்களில் விஜய் தொலைக்காட்சி கடுப்பையும் ஏற்ப்படுத்துவதுண்டு. திரையிசைப் பாடல்கள், காமடி சீன்கள், சினிமா காட்சிகள் போன்றவற்றை விஜய் தொலைக்காட்சியில் காண்பது அரிதிலும் அரிது.

ஒருசில விடயங்கள் பிடிக்காவிட்டாலும் விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் ஏனைய தமிழ் தொலைக்காட்சிகளுடன் ஒப்பிடுகையில் பலபடி மேலே உள்ளது என்று சொல்வதில் எனக்கு எந்த தயக்கமும் இல்லை, சிலருக்கு இதில் மாற்றுக்கருத்து இருக்கலாம். இப்போது சூப்பர் சிங்கர், கனாக்காணும் காலங்கள், அது இது எது என மூன்று நிகழ்ச்சிகள் மட்டுமே விஜயில் என்னுடைய பேவரிட்; முன்புடன் ஒப்பிடும்போது இப்போது விஜய் தொலைக்காட்சியில் நிகழ்ச்சிகளின் தரமும், புதுமையும் குறைவடைந்து கொண்டு செல்வது மறுக்க முடியாதது. ஆனாலும் எதிர்வரும் காலங்களில் மக்களுக்கு பிடித்தமான புதுமைகளை விஜய் தொலைக்காட்சியிடமிருந்து எதிர்பார்க்கலாம்.சூப்பர் சிங்கர் இறுதிப் போட்டிக்கு சந்தோஷ் தெரிவாகிய மகிழ்ச்சியுடன் எழுதிய பதிவுதான் இது :-) , சந்தோஷ் இறுதிப் போட்டியில் ஜெயிக்காவிட்டாலும் அவரது உழைப்பிற்கு கிடைத்த அங்கீகாரமாக அவரை இறுதிப் போட்டிக்கு தெரிவு செய்ததை எடுத்துக் கொள்ளலாம். யார் ஜெயித்தாலும் பரவாயில்லை, ஆனால் எனக்கு பிடித்த பெண் குரல் - பூஜா, ஆண் குரல் - சந்தோஷ்; இருவரும் இணைந்து மெலடி பாடினால் நன்றாக இருக்கும். இயக்குனர் பாலா மிகப்பெரிய 'சூப்பர் சிங்கர்' ரசிகர் என்பதால் அவரது அடுத்த திரைப்படத்தில் இந்த 'சூப்பர் சிங்கர்'களின் ஏதாவதொரு குரலையாவது எதிர்பார்க்கலாம்!!!!!