Saturday, July 23, 2011

மனதை கனக்க வைத்த கிளைமாக்ஸ்கள்.

தெய்வத்திருமகள் திரைப்படம் பார்த்து ஒரு வாரமாகியும் அதன் கிளைமாக்ஸ்சின் பாதிப்பில் இருந்து வெளிவர முடியவில்லை; இந்நிலையில் என்னை பாதித்த, என் மனதில் ஏதோ ஒருவகையில் பாரத்தை விதைத்த ஐந்து கிளைமாக்ஸ்களை பதிவிடுகின்றேன் (தெய்வத்திருமகள் தவிர்த்து). நீண்டகால அவகாசம் எடுத்து யோசிக்காது ஐந்து நிமிடங்களுக்குள் மனதில் தோன்றிய திரைப்படங்கள்தான் இவை. ஒவ்வொருத்தருக்கும் இந்த பட்டியல் மாறுபடலாம், இஸ்டமிருந்தால் யார் வேண்டுமானாலும் தங்கள் மனதை கனக்க வைத்த கிளைமாக்ஸ்களை எழுதலாம்.

(தொடர பிடிக்குமென்றால் இரவுவானம் சுரேஷ், பாலாவின் பக்கங்கள் பாலா,பொட்டலம் கார்த்தி, கவியுலகம் மைந்தன் போன்றோரை எழுத அழைக்கின்றேன்)

பூவே பூச்சூடவா


எனக்கு மிகவும் பிடித்த இயக்குனர்களில் ஒருவரான பாசிலின் இயக்கத்தில் 1985 ஆம் ஆண்டு நதியா, ஜெயசங்கர், பத்மினி, எஸ்.வி.சேகர் முக்கிய வேடங்களில் நடிக்க இளையராஜாவின் இசையில் P.C.ஸ்ரீராமின் ஒளிப்பதிவில் வெளிவந்த திரைப்படம் பூவே பூச்சூடவா. இந்த திரைப்படத்தில் நதியா, பத்மினி இடையிலான பேர்த்தி, பாட்டி உறவினை சித்தரிக்கும் முகமாக திரைக்கதையை அமைத்திருபார் இயக்குனர் பாசில். நீண்ட நாட்களாக தன் பேர்த்தி வருவார் என்கின்ற நம்பிக்கையில் அழைப்புமணியை எதிர்பார்த்து காத்திருக்கும் பாட்டிக்கு ஒருநாள் இன்ப அதிர்ச்சி கொடுக்கும் பேர்த்தி, பாட்டியிடம் அவரை விட்டு போகமாட்டேன் என்று சத்தியம் செய்து கொடுக்கிறார்.ஆனால் நதியா ஆபத்தான ஒரு நோயினால் பாதிக்கப்பட்டுத்தான் தன் இறுதிக்காலத்தை கழிக்க பாட்டியிடம் வந்தது பாட்டிக்கு தெரிகிறது; பேர்த்தியை குணப்படுத்து முகமாக பட்டணம் கொண்டுசெல்ல பாட்டி வீட்டிற்கு வந்த தந்தையுடன் செல்ல மறுக்கும் பேர்த்தியை பாட்டியின் சம்மதத்துடன் தூக்கமாத்திரை கொடுத்து தூக்கத்தில் ஒரு வண்டியில் ஏற்றி பட்டணம் கொண்டு செல்கின்றனர். வண்டி வீட்டு வாசலை கடந்த பின்னர் பாட்டி மீண்டும் அழைப்புமணியை எடுத்து வாசலில் பொருத்தும்போது திரைப்படம் நிறைவடைகின்றது. நதியா குணமானாரா? மீண்டும் பாட்டியை சந்தித்தாரா? போன்ற கேள்விகள் ரசிகர்களின் ஏக்கமாக தொக்கி நிற்க திரைப்படத்திற்கு முற்றுப்புள்ளி வைத்த பசில்; இன்றுவரை என் மனதில் பூவே பூச்சூடவாவை அழுத்தமாக பதித்துள்ளார்.

சின்னக் கண்ணம்மா


ஆர்.ரகு இயக்கத்தில் 1993 ஆம் ஆண்டு கார்த்திக், கௌதமி, சுஹாசினி, நாசர் முக்கிய வேடங்களில் நடிக்க இசைஞானி இசையமைத்த திரைப்படம் சின்னக் கண்ணம்மா. கார்த்திக், கௌதமி தம்பதியினருக்கு குழந்தை பிறக்கின்றது; மகிழ்ச்சியான அவர்கள் வாழ்வில் கௌதமி இறந்துவிடுகின்றார். தன் குழந்தையுடன் ஊட்டி சென்று வசிக்கும் கார்த்திக்கிற்கு குழந்தைதான் எல்லாமே, தன் வாழ்வை குழந்தைக்காகவே வாழ்கின்றார். அங்கு அவர்களுக்கு நாசர், சுஹாசினி நட்பு கிடைக்கிறது. அவர்களுக்கு இரு குழந்தைகள்; ஆண் குழந்தை ஒன்று, பெண் குழந்தை ஒன்று. சுஹாசினியின் குழந்தைகளில் சிறிய குழந்தை (பெண்குழந்தை) இறந்து விடுகிறது.அவர்களது சோகத்தை கார்த்திக்கின் குழந்தை தணித்துவரும் நிலையில்; கார்த்திக்கின் குழந்தைதான் தங்கள் குழந்தை என்றும், இறந்த குழந்தைதான் கார்த்திக்கின் குழந்தை என்றும், மருத்துவமனை தீ விபத்தில் குழந்தைகள் மாறியதாகவும் தெரியவருகிறது. குழந்தைக்காக நீதிமன்றம் செல்லும் நாசர், சுஹாசினிக்கு சார்பாக தீர்ப்பு வருகிறது. குழந்தை இல்லாமல் கார்த்திக் ரயில் நிலையத்தில் ஊருக்கு திரும்ப காத்திருக்கும் வேளையில் நாசர் சுஹாசினியின் மகனாக வரும் சிறுவன் கார்த்திக்கின் குழந்தையை ரயில் நிலையம் அழைத்து வருகிறான்.

கார்த்திக்கின் குழந்தையை தோழியாக ஏற்றுக்கொண்ட அவனுக்கு இறந்துபோன தன் தங்கையின் இடத்தில் வைத்து பார்க்க முடியவில்லை. இதை புரிந்துகொண்ட நாசர் சுஹாசினி தம்பதியினர் குழந்தையை கார்த்திக்கிடமே விட்டுவிடுகிறார்கள். கார்த்திக்கை நோக்கி குழந்தையும், குழந்தையை நோக்கி கார்த்திக்கும் ஓடி வரும்போது ஒலிக்கும் 'எந்தன் வாழ்க்கையின் அர்த்தம் சொல்ல' பாடல் அந்த இறுதிக் காட்சியை வேறு ஒரு இடத்திற்கே கொண்டு சென்றுவிடுகிறது. எத்தனை தடவை பார்த்தாலும் சலிக்காத நடிப்பும், பின்னணியில் ஒலிக்கும் பாடலிசையுடன் நிறைவடையும் சின்ன கண்ணம்மா என் மனதை கனக்க வைத்த, என் மனதுக்கு பிடித்த திரைப்படம்.

அன்புள்ள ரஜினிகாந்த்


1984 ஆம் ஆண்டு குழந்தை நட்சத்திரம் மீனாவை மையமாக கொண்டு கே.நடராஜ் இயக்கத்தில் திரைப்பட நடிகராகவே ரஜினிகாந்த், அம்பிகா நடிக்க; இசைஞானி இசையமைத்த மனதை உருக்கிய மற்றுமொரு திரைப்படம் அன்புள்ள ரஜினிகாந்த். ஒரு ரஜினி படத்தில் ரஜினியை தாண்டி இன்னுமொரு கேரக்டர் என்னை பாத்தித்ததென்றால் அது அன்புள்ள ரஜினிகாந்த் மீனா கதாபாத்திரம்தான். இறக்கும் நாட்களை எண்ணிக் கொண்டிருக்கும் குழந்தையை அருட்சகோதரியும், நடிகர் ரஜினிகாந்தும், தாயாக இருந்தும் சொல்லமுடியாது தவிக்கும் அம்பிகாவும் கவனாமாக பார்த்துக் கொள்கிறார்கள். இறுதியில் நோயின் பிடியில் சிக்கி அந்த குழந்தை இறந்துபோகிறது.இந்த திரைப்படத்தில் பல இடங்கள் மனதை கட்டிப்போட்டாலும் இறுதிக்காட்சியில் குழந்தை மீனா இறக்கும் காட்சி இதயத்தில் கல்லை கட்டிபோட்டது போன்ற உணர்வை கொடுத்தது. இறக்கும் தறுவாயில் குழந்தையாக நடித்த மீனாவினதும், ரஜினி, அம்பிகாவினதும் நடிப்பு காட்சிகளின் கனத்தை அதிகரித்து மனதில் பாரத்தை விதைத்தது. மனதில் ஏக்கத்துடன் திரைப்படம் நிறைவடைந்தாலும்; திரைப்படத்தின் தாக்கம் பார்த்த ஒவ்வொருவரையும் விட்டு அவ்வளவு இலகுவில் மறைந்துபோகாது!!!!

பூவே உனக்காக


1996 இல் விஜய், சங்கீதா, அஞ்சு அரவிந்த், சார்லி, நம்பியார், நாகேஷ் நடிக்க எஸ்.ஏ.ராஜ்குமார் இசையமைக்க பூவே உனக்காக திரைப்படத்தை விக்கிரமன் இயக்கியிருப்பார். அதிகமானவர்கள் இந்த திரைப்படத்தை பார்த்திருப்பார்கள் என்றாலும் கதையை சுருக்கமாக சொல்வதானால்; தான் ஒருதலைப்பட்சமாக காதலித்த காதலியை அவளது காதலனுடன் சேர்த்து வைப்பதுதான் கதை.கதை என்னமோ ஒற்றை வரிதான், ஆனால் அதற்க்கு விக்கிரமன் அமைத்த திரைக்கதை அபாரம். நகைச்சுவை, குடும்ப சென்டிமென்ட் என்று நகர்ந்த திரைக்கதையின் கிளைமாக்ஸ்சில் 'ஆனந்தம் ஆனந்தம் பாடும் பாடலும்' அதனை தொடர்ந்து விஜய் காதல் பற்றி பேசும் விக்கிரமனின் வசனங்களும், இறுதியாக விஜய் அனைவரையும் பிரிந்து தனித்து செல்வதுபோல் அமைக்கப்பட்ட இறுதிக் காட்சியும் எப்படிப்பட்ட கல் நெஞ்சக்காரனது இதயத்திலும் கனத்தை உண்டு பன்ணாமல் இருந்திருக்காது!!

சேது


பலநாள் தூக்கத்தை கெடுத்த மற்றுமொரு கிளைமாக்ஸ்; விக்ரம், அபிதா, ஸ்ரீமன், சிவகுமார் நடிப்பில் இளையராஜா இசையில், இரத்தினவேலு ஒளிப்பதிவில் பாலா இயக்கிய தமிழ் சினிமாவின் ஒரு மைல்கள் திரைப்படம் சேது. எதைப்பற்றியும் கவலைப்படாமல் ஜாலியாக இருக்கும் கல்லூரி மாணவனான முரட்டு சீயானுக்கும் ஐயராத்து மாமி அபிதாவிற்க்கும் காதல்; கனியாத காதலை கனிய வைக்கும் சீயானுக்கு காதலில் வெற்றி கிடைத்தாலும் சில சமூக விரோதிகளால் தாக்கப்பட்டு புத்தி சுவாதீனமற்றவராக மாறுகிறார். இந்நிலையில் அபிதாவிற்கு வேறொருவருடன் திருமண ஏற்பாடு நடைபெறுகிறது. புத்தி சுவாதீனமற்றிருந்த சீயான் தெளிவடைந்து காப்பகத்தில் இருந்து தப்பித்து அபிதாவின் வீட்டிற்கு வருகிறார்.அங்கு மணக்கோலத்தில் இருக்க வேண்டிய அபிதா பிணக்கோலத்தில்!!! அந்த காட்சியை கண்ட பின்னர் நொருங்கிப்போன சீயான் மீண்டும் காப்பகத்தின் வண்டியில் ஏற்றப்பட(ஏற) வண்டி புறப்பட்டு செல்கின்றது; திரைப்படமும் நிறைவடைகின்றது. இறுதி நேரத்தில் விக்ரமினது மிரட்டல் நடிப்பும், உடனிருப்பவர்களது ஏக்கமான சோகமான நடிப்பும்; இவை அனைத்திற்கும் கிரீடம் வைத்தாற்போல் பின்னணியில் இளையராயாவின் குரலில் ஒலித்த 'வார்த்தை தவறிவிட்டாய்' பாடலும் சேது திரைப்படத்தை வேறு ஒரு உயரத்திற்கு கொண்டுபோனதுடன், இன்றுவரை மனதையும் கட்டிப்போட்டுள்ளது!!!!

Wednesday, July 20, 2011

தெய்வத்திருமகளை திருடிய விஜய்க்கு.........

இயக்குனர் விஜய் அவர்களுக்கு............

முதலில் தெய்வத்திருமகள் திரைப்படத்தை தித்திக்க தித்திக்க கொடுத்ததற்கு தங்களுக்கு மிக்க நன்றி. தாங்கள் இயக்கிய 'கிரீடம்' முதல் தெய்வத்திருமகள் வரையான நான்கு திரைப்படங்களுமே எனக்கு மிகவும் பிடித்தவை. கிரீடம் மலையாளத் திரைப்படத்தின் ரீமேக்காகவும், பொய்சொல்லப் போறோம் ஹிந்தி திரைப்படத்தின் ரீமேக்காகவும், மதராசப்பட்டினம் Titanic திரைப்படத்தின் தழுவலாகவும், தற்போது தெய்வத்திருமகள் i am sam திரைப்படத்தின் தழுவலாகவும் கொடுத்துள்ளீர்கள். இந்தக் காரணங்களால் தங்களை சொந்த சரக்கில்லாதவன் என்றும், மூலத் திரைப்படங்களுக்கு நன்றி போடாததால் திருடன் என்றும் எம்மில் சிலர் முத்திரை குத்துகிறார்கள். இவர்களுக்கு நிச்சயமாக உங்களால் பதில்கூற முடியாது, ஏனெனின் இவர்கள் பக்கம் நியாயம் உள்ளது.

ஆனால் பிற வெளிநாட்டு திரைப்படங்களை தழுவி திரைப்படம் இயக்கம் போது குறிப்பிட்ட திரைப்படத்தின் பெயரையோ அல்லது குறிப்பிட்ட திரைப்படத்தின் இயக்குனரின் பெயரையோ டைட்டிலில் 'நன்றி' எனப் போடுவதால் படத்தின் உரிமை சம்பந்தமாக சில பல பிரச்சனைகள் ஏற்ப்படும் என்பதால் அதனை தாங்களும் சக 'தழுவல்' இயக்குனர்களும் செய்யாமல் இருந்திருக்கலாம். வெளிநாட்டு திரைப்படங்களின் உரிமையை வாங்கி தமிழில் ரீமேக் செய்வது தமிழ் சினிமாவில் வணிகரீதியாக சாத்தியமில்இல்லை என்பது 100 சதவீதம் உண்மை. அப்படியானால் இதற்கு ஒரே வழிதான்; அதாவது வெளிநாட்டு திரைப்படங்களை தழுவி திரைப்படங்களை தமிழில் இனிவரும்காலங்களில் யாருமே கொடுக்கக் கூடாது என்பதுதான். ஆனால் இதில் எனக்கு சம்மதமில்லை, எனக்குமட்டுமல்ல பலருக்கும் இதில் சம்மதமில்லை.

தமிழ் சினிமா ரசிகர்களில் 95 சதவீதமானவர்கள் (என்னையும் சேர்த்து) உலக சினிமாக்களை பார்ப்பவர்கள் அல்ல; நாங்கள் பார்க்கும் உலக சினிமா விஜய், சன், கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் தமிழ் டப் செய்யப்பட்ட உலக சினிமாக்கள்தான். இலட்சத்தில் ஒரு வெளிநாட்டுத் திரைப்படம்தான் இவ்வாறு தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்படுபவை!! இந்த நிலையில் உலகின் மிகச்சிறந்த திரைப்படங்களை நாங்கள் எப்படி பார்ப்பது? எங்களால் உலக சினிமாவை நேரடியாக பார்த்து புரிந்துகொள்ள இயலாது, அந்தளவிற்கு நாங்கள் இன்னமும் வளர்ச்சி அடையவில்லை; புத்திசாலிகளின் வார்த்தையில் சொல்வதானால் நாங்கள் முட்டாள்கள். ஆனால் நல்ல சினிமாவை பார்க்க வேண்டும் என்கின்ற தவிப்பு எங்களிடம் உள்ளது, அதனால்த்தான் பாரதிராராஜா முதல் சசிகுமார் வரை புதுமைகளை நாங்கள் வரவேற்றோம்.எங்களின் திரைப்பட பசிக்கு பாலா, அமீர், ராதாமோகன், ஜெகநாதன், சசிக்குமார் என சில இயக்குனர்கள் நேரடியாக தீனி போடுகிறார்கள்; செல்வராகவன், கவுதம் மேனன் மற்றும் தாங்கள் வெளிநாட்டு திரைப்படங்களை தழுவி தீனி போடுகிறீர்கள். உங்களைத்தவிர ரவிக்குமார்,லிங்குசாமி,ஹரி போன்றவர்கள் அரைத்த மசாலாவையே வேறு வேறு பாத்திரங்களில் நிரப்பி தீனி போடுகிறார்கள். ஒவ்வொரு சினிமா ரசிகனுக்கும் ஒவ்வொருவகை பசி, தனக்கு பிடித்ததை அவன் எடுத்துக் கொள்கிறான். அதனால்த்தான் மேல்க்குறிப்பிட்ட அனைவரும் இன்னமும் இண்டஸ்ரியில் இருக்கின்றீர்கள்.

உங்களை இன்ஸ்பிரேஷனாக இளம் சமுதாயம் எடுத்துக் கொள்ளாதா? என்று சிலர் கேட்கலாம். மணிரத்தினத்தின் இன்ஸ்பிரேஷன்தான் தாங்களும் சக 'தழுவல்' இயக்குனர்களும்; பாரதிராஜாவின் இன்ஸ்பிரேஷன்தான் பாலாவும் அமீரும் சசிகுமாரும், எஸ்.பி.முத்துராமனின் இன்ஸ்பிரேஷன்தான் ரவிக்குமாரும், ஹரியும். ஆகையால் உங்களை சிலர் இன்ஸ்பிரேஷனாக எடுத்துக்கொள்வதை போலவே பாலாவையும், அமீரையும் சிலர் இன்ஸ்பிரேஷனாக எடுத்துக் கொள்வார்கள் அதேபோலத்தான் சிலர் ரவிக்குமார், ஹரியையும் இன்ஸ்பிரேஷனாக எடுத்துக் கொள்வார்கள். எங்களுக்கு இம்மூன்று வகை இயக்குனர்களும் தேவை.

உங்களின் தேவை எப்போது எங்களுக்கு தேவையற்றுப் போகுமென்றால்; என்று எம்மவர்கள் 95 சதவீதம் பேரும் உலக சினிமாவை நேரடியாக ரசிக்கும் நிலைக்கு வருகிறோமோ அன்றுதான். அதுவரை நீங்களும், உலக சினிமாவை தமிழுக்கு தமிழ் ரசிகர்கள் புரியும்படி அழகாக வழங்கும் ஏனைய இயக்குனர்களும் நிச்சயம் தேவை. உலகின் சிறந்த சினிமாக்களில் எம்மக்களுக்கு புரியும்படி கொடுக்கக் கூடிய திரைப்படங்களை தேர்ந்தெடுத்து, அவற்றை எமக்கு ஏற்றால்ப்போல மாற்றியமைத்து, அவற்றிற்கு நேர்த்தியான திரைக்கதை கொடுத்து, சிறந்த டெக்னீசியன்கள் உதவியுடன் சிறந்த குவாலிட்டியில் கொடுப்பதென்பது சாதாரண விடயமல்ல.மொழி மாற்றம் செய்யும் போதும்சரி, தழுவலாக இருக்கும் போதும்சரி ஒரிஜினல் சினிமாவின் காட்சிகளை , நடிகர்களின் திறன் வெளிப்பாட்டை எம் ரசனைக்கு ஏற்றால்போல மாற்றும்போது கொஞ்சம் தடக்கினாலே அது வேறுமாதிரி ஆகிவிடும். நூலளவு பிசகில்லாமல் ஒரு வெளிநாட்டு படத்தினை தழுவி எமக்கு எம் சினிமாவின் சாயலில் புதிதாக தரும் உங்களை என்றும் நாங்கள் வரவேற்ப்போம். இன்னுமின்னும் சிறந்த வெளிநாட்டு திரைப்படங்களை தேடி எம் ரசனைக்கு ஏற்றால்ப்போல மாற்றித் தருவதில் தங்களுக்கு எந்த தயக்கமும் வேண்டாம்.

இன்று i am sam என்று கூப்பாடு போடுபவர்களில் பலருக்கு தெய்வத்திருமகள் வந்த பின்னர்தான் i am sam என்று ஒரு திரைப்படம் வந்ததே தெரியும். கொலைப்பசியோடு இருப்பவனுக்கு சிக்கன் புரியாணியை கொடுத்தால் வாங்கி ஒரு பிடி பிடிப்பானா? இல்லை கேள்வி மேல கேள்வி கேப்பானா? சற்று பழைய புரியாணி ஆயினும் திருட்டு புரியாணிதான்; மிகுந்த வசதியான இடத்தில் இருந்து திருடப்பட்டதால் திருட்டு கொடுத்தவனுக்கு இதனால் நஷ்டமும் அல்ல. திருடியவன் பழைய புரியாணியை புதுப்பித்து எங்களுக்கு பிடித்த மாதிரி மனத்தை, நிறத்தை, சுவையை மாற்றி கொடுப்பதில் என்னை பொறுத்தவரை எந்த தவறுமில்லை, அதைத்தான் தாங்களும் செய்திருக்கிறீர்கள்.

இருப்பவனிடம் இருந்து புடுங்கி இல்லாதவனுக்கு கொடுக்கிறீர்கள், எவனிடம் இருந்து எடுத்தேன் என்று சொன்னால் பிரச்சினை வரும் என்பதால் சொல்லவில்லை, அவளவுதான். இதில் தங்கள் மீது மீது வருத்தப்பட ஒன்றுமில்லை. சில அதிமேதாவி ஒலக சினிமா பார்க்கும் மேதாவிகள் தங்களை குறை சொல்வதை தயவு செய்து காதில் வாங்கிக்கொள்ள வேண்டாம், குறை சொல்வது அவர்களது பொழுதுபோக்கு மற்றும் மேதாவித்தனம்.

எங்களுக்கு நல்ல சினிமா பார்க்கவேண்டும், அது ஒரிஜினலோ திருட்டோ என்பது எமக்கு முக்கியமல்ல; இதை திருட்டுக்கு ஆதரவென்றோ, திருட்டை ஊக்கிவிப்பதென்றோ சொல்பவர்கள் தாரளமாக சொல்லலாம்; எமக்கு அதைப்பற்றி கவலை இல்லை. தங்களது i am sam தழுவல்தான்(திருட்டு) எங்களுக்கு மறக்க முடியாத தெய்வத்திருமகளை கொடுத்தது. இன்னுமொரு திருட்டுத் திரைப்படத்தில் வரும் வாசகம் "நாலு பேருக்கு நல்லது நடக்குமிண்ணா எதுவும் தப்பில்ல"; இத்தால் தங்களுக்கு தெரிவிப்பது என்னவெனின் "நாங்கள் தங்களுடைய அடுத்த திரைப்படத்திற்கு காத்திருக்கின்றோம்" என்பதுதான், அது ஒரு வெளிநாட்டுப்பட தழுவலாக இருந்தாலும் கூட!!!!

இப்படிக்கு ஒலக சினிமான்னா கிலோ என்ன விலை என கேட்கும்,
தமிழ்சினிமா ரசிகன்.

எக்ஸ்ட்ரா மேட்டர்

மனநலம் குன்றிய விக்ரமிற்கு எப்படி குழந்தை பிறந்தது? என்று நிறையபேர் பதிவுலகில் கேட்ட கேள்விகளுக்கு Facebook இல் நானளித்த பதில்;

மன நலம் குன்றிய என்கின்ற சொற்பதமே தவறு, சிந்தனை வளர்ச்சி குன்றிய என்பதே சரியான பதம்; அத்துடன் சிந்தனை வளர்ச்சி குன்றிய ஒருவரால் குழந்தை பெற்றுக்க முடியாதின்னு எதை வச்சு சொல்றாங்க? இயக்குனர் "இருவரில் ஒருவருக்கு விஷயம் தெரிந்தால் போதாதான்னு" இரண்டு மூன்று இடங்களில் வசனத்தை திணித்ததையே புரிந்துகொள்ள இயலாத இவர்களை சொல்லி என்னவாகப்போகிறது!!!

Monday, July 18, 2011

நானும் சினிமாவும் - பாகம் 1

நிறைய விசயம் எழுதணுமின்னு தோணுது, எந்த வகையில் வகைப்படுத்தி எழுதுவதென்று தெரியல!! மனதில் உள்ளவற்றை அப்படியே எழுதுவதால் பதிவில் தொடர்ச்சி இருக்காது. குறிப்பிட்ட ஒவ்வொரு விடயங்களையும் பற்றி எழுதும்போது ஆண்டுகள் கிராமமாக வராமல் சுழற்ச்சியில் வரும். இது எனது எண்ணங்களின் பதிவு என்பதால் போரடிக்குமென நினைப்பவர்கள் வேறொரு பதிவில் சந்திக்கலாம். பாலாவின் பக்கங்கள் பாலா கிரிக்கட் தொடரை எழுதுவதுதான் எனது இந்த பதிவின் இன்ஸ்பிரேஷன். இது பெருந்தொடர் என்று என்ன வேண்டாம், ஜஸ்டு 4 அல்லது 5 பதிவுகள்தான், யாராவது இந்த பதிவை தொடரவிரும்பினாலும் தொடரலாம்.

மனிதன்; இது நான்பார்த்த முதல்த் திரைப்படம். அன்று ஆரம்பித்த ரஜினி மற்றும் சினிமா மீதான காதல்(மோகமல்ல) இன்றுவரை தணியவில்லை, இனிமேலும் தணிய வாய்ப்பில்லை :-) 1991 ஆம் ஆண்டுவரை நான் பார்த்த திரைப்படங்களில் 90 சதவீதமானவை ரஜினிகாந்த், மற்றும் விஜயகாந் நடித்த திரைப்படங்கள்தான். இவர்கள் இருவருக்குமடுத்து அன்று கார்த்திக், பிரபு திரைப்படங்களை விரும்பி பார்த்திருக்கிறேன்.

ஏனைய திரைப்படங்களில் சண்டைக்காட்சிகளை மட்டும் பார்த்தவிட்டு மீதி நேரங்களில் முற்றத்தில்; கிரிக்கட் அடித்ததுதான் ஞாபகத்தில் உள்ளது. அன்றைய நாட்களில் என் மனதில் ஹீரோன்னா அது ரஜினிதான்(இன்று வரைக்கும், எப்போதுமே). அன்று எனக்கு கமல், மோகன் இருவருக்குமிடையில் உருவத்தில் பெரிதாக வித்தியாசம் தெரியாது; இருவரையும் அழுகுணி நடிகர்கள் என்று சொல்லி இவர்கள் படங்களை சிறுவயதில் பார்ப்பதில்லை. பின்னாட்களில் மோகனின் திரைப்படங்களை பாடல்களுக்காக தேடித்தேடி பார்த்துள்ளேன்.90 களில் ஆரம்பத்தில் ஈழப்போர் யாழ்ப்பாணத்தில் உக்கிரமடைந்த நிலையில் புதிய திரைப்படங்களை பார்ப்பது சாத்தியமில்லாமல் போயிற்று, அக்காலப்பகுதியில் வெளிவந்த திரைப்படங்களில் ஓரிரண்டு திரைப்படங்கள்தான் யாழ்ப்பாணத்திற்கு கேசட்டாக வந்தன; அவற்றில் வீரா, வள்ளி, சின்னத்தம்பி, கார்த்திக் நடித்த சீமான், சரத்குமார் பிரபுதேவாவின் 'இந்து' போன்றவை அன்று புதிய திரைப்படங்கள் என்று சொல்லப்பட்ட திரைப்படங்கள். வேறு புதிய திரைப்படங்கள் கேசட்டாக வந்தது ஞாபகத்தில் இல்லை. அக்காலப்பகுதியில் நான் அதிக தடவைகள் பார்த்த திரைப்படங்கள் என்றால் அவை ரஜினியின் சிவா மற்றும் விஜயகாந்தின் ராஜநடை.

ஈழப்போரின் உக்கிரம் அதிகரித்திருந்த நிலையில் இந்த காலப்பகுதியில் அறிமுகமாகிய அஜித், விஜய், பிரஷாந்த் போன்ற நடிகர்களையோ; அவர்களின் திரைப்படம், ஏன் புகைப்படத்தை கூட 1996 வரை பார்க்கும் சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. ஒரு மிகப்பெரும் இடம்பெயர்வின் பின்னர் 1996 இல்தான் அன்றைய புதிய தலைமுறை நடிகர்களின் திரைப்படங்களை முதல் முதலாக பார்க்கும் சந்தர்ப்பம் அமைந்தது. அப்படியாக அடுத்த தலைமுறை நடிகர்களின் திரைப்படங்களில் நான் பார்த்த முதல் திரைப்படம் 'பூவே உனக்காக'.அன்று என்னை மிகவும் பாத்தித்த, எனக்கு மிகவும் பிடித்த திரைப்படமாக அமைந்தது. அந்த காலப்பகுதியில் மின்சாரம் இல்லாத காரணத்தால் டீவி,டேக்,ஜெனரேட்டர் வாடகைக்கு எடுத்து ஒரேநாளில் நான்கு திரைப்படங்களை மாலை 6 மணி முதல் மறுநாள் காலை வரை போட்டு பார்ப்பது வழக்கம். ஞயிறு இரவு முழுவதும் திரைப்படங்களை பார்த்துவிட்டு காலையில் பாடசாலை சென்ற நாட்களும் உண்டு, சிவராத்திரி என்றால் மாலை 6 மணி முதல் மறுநாள் மாலைவரை 7 அல்லது 8 திரைப்படங்களை தொடர்ந்து பார்த்த சம்பவமும் உண்டு. கடைசியில் எல்லா படமும் ஒன்றோடு ஒன்று மிக்ஸ்ஆகி மண்டையைப் பிச்சுக்கிட்டதும் உண்டு.

ஒரே அயலில், வாரம் ஒரு வீட்டில் இவ்வாறு திரைப்படங்கள் போடப்படுவது வழக்கம்; அவ்வாறு போடப்படும் திரைப்படங்களில் பாட்ஷா, முத்து, இந்தியன், பூவே உனக்காக, காதல் கோட்டை, உள்ளத்தை அள்ளித்தா போன்ற திரைப்படங்கள் அதிகமாக பார்க்கப்படும் திரைப்படங்கள். அப்போது சிலகாலம் வாரம் ஒரு வீட்டில் திரைப்படங்களின் தீபாவளியாக இருந்தது. இப்போது நினைத்தாலும் பசுமையான அழகிய காலமது..............

அன்று (15 ஆண்டுகளுக்கு முன்னர்) யாழ்ப்பாணத்தில் 'காதல் கோட்டை' திரைப்படத்தை முதலில் பார்த்தவர்கள் அஜித் ரசிகர்களாகவும்; 'பூவே உனக்காக' திரைப்படத்தை முதலில் பார்த்தவர்கள் விஜய் ரசிகர்களாகவும் தங்களை வெளிக்காட்டிக் கொண்டார்கள்; இன்றுவரை இங்கு பலர் அஜித்,விஜய் ரசிகர்களாக இருக்க இவ்விரு திரைப்படங்களும்தான் முக்கிய காரணம் (தீனா, கில்லி அப்புறம்தான்). ஒருவேளை அஜித் ரசிகன் 'பூவே உனக்காக'வையும், விஜய் ரசிகன் 'காதல்க் கோட்டை'யையும் முதலில் பார்த்திருந்தால் அஜித் ரசிகர்கள் விஜய் ரசிகர்களாகவும், விஜய் ரசிகர்கள் அஜித் ரசிகர்களாகவும் இருந்திருப்பார்கள்!!!நான் பூவே உனக்காக முதலில் பார்த்ததால் எனக்கு விஜயை அப்போது பிடித்திருந்தது, சினிமா பற்றி விவாதிப்பவவர்கள் அருகில் இல்லாததால் நல்லவேளை அன்று அஜித்தில் வெறுப்பு ஏற்படவில்லை. விஜயின் அத்தனை திரைப்படங்களையும் அன்று ரசித்துப் பார்ப்பது வழக்கம், விஜயின் அட்டர் பிளாப் திரைப்படங்களையும் ரசித்துள்ளேன்; அதேநேரம் அஜித், பிரஷாந்த் திரைப்படங்களையும் பார்க்கத் தவறியதில்லை. அஜித் திரைப்படங்களில் காதல் கோட்டை, வான்மதி, பவித்திரா, நேசம், ஆசை திரைப்படங்களும் பிரஷாந்தின் மன்னவா, ஆணழகன், திருடா திருடா திரைப்படங்களையும் பல தடவைகள் பார்த்திருக்கிறேன்.

சிலகாலங்களின் பின்னர் இந்தியாவில் படம் வெளியாகி ஒரு வாரத்தினுள் மினி திரையரங்குகளில் திரைப்படங்களை போட்டுவிடுவார்கள், அந்த காலப்பகுதியில் எந்த திரையரங்கும் யாழ்ப்பாணத்தில் இயங்கவில்லை. அதிகமான மினி திரையரங்குகளில் அந்தமாதிரி படங்கள் போடப்படுவதால் அதிகமான பெற்றோர் தம் பிள்ளைகள் மினி திரையரங்கிற்கு செல்ல விரும்புவதில்லை. ஆனால் எனக்கு மினி திரையரங்கில் சென்று படம் பார்க்க வீட்டில் எந்த தடையும் போடவில்லை, வீட்டிற்கு தெரிந்தே நான் திரையரங்கு சென்று பார்த்த முதல் திரைப்படம் நான் பல தடவைகள் மீண்டும் மீண்டும் பார்த்த 'உள்ளத்தை அள்ளித்தா'. 6 வயதில் இரு தடவைகள் (ராஜாதி ராஜா, பணக்காரன்) திரையரங்கிற்கு குடும்பத்துடன் சென்றிருந்தாலும் பெரியதிரை அதிகம் ஞாபகத்தில் இல்லை என்பதால் ஓரளவு பெரியதிரையில் மினியில் படம் பார்ப்பது புதிய அனுபவமாக இருந்தது.தொடர்ந்து சிலகாலம் மினி திரையரங்கில் புதிய திரைப்படங்கள் எது வந்தாலும் ஆஜராவது வழக்கம், டிக்கட் காசும் 10 ரூபாதான் என்பதால் பைனான்சியல் பிரச்சினைகளும் இருக்கவில்லை :-) அடுத்து மினி திரையரங்கில் நான் பார்த்து ரசித்த திரைப்படம் 'மினி'யாக ஷாலினியும் விஜயும் நடித்த பாசிலின் காதலுக்கு மரியாதை. காதலுக்கு மரியாதைக்கு பின்னர் விஜய் மீது சற்று அதிக ஈடுபாடு உண்டாயிற்று அந்த ஈடுபாடு 'யூத்' திரைப்படம்வரை வரை என்னை விஜய் திரைப்படங்களை தொடர்ந்து ரசிக்க வைத்தது. யூத் திரைப்படம் முதல்முதலாக என்னை விஜய்க்கு எதிராக மாற்றியது. காரணம் என்கூட இருந்த ஒரு விஜய் ரசிகர்!!!

எனக்கு என்னதான் விஜய் மீது அன்று ஈடுபாடு இருந்தாலும் ரஜினி எப்போதுமே என் மன சிம்மாசனத்தில் நிரந்தரமாக உட்கார்ந்திருந்தார். ரஜினியின் பாபா வெளிவரும் நேரத்தில்தான் விஜயின் யூத் திரைப்படமும் வெளிவர இருந்தது.பாபாவுக்கு போட்டியாக யூத்தினை கூட இருந்த குறிப்பிட்ட விஜய் ரசிகர் ஒப்பிட்டு விவாதித்து அந்த நொடியிலேயே விஜய் மீதிருந்த ஈடுபாடு துண்டுதுண்டாக்கியது!! பூவே உனக்காக, காதலுக்கு மரியாதை, துள்ளாத மனமும் துள்ளும், ஷாஜகான் என எனக்கு பிடித்த விஜய் படங்களையே பின்னர் பார்ப்பதற்கு சங்கடமாக இருந்தது(ஆனாலும் இப்போதும் அத்திரைப்படங்களை பார்க்கும்போது ஏதோ ஒன்று ஈர்ப்பது உண்மை). சில விஜய் ரசிகர்கள் என்னதான் விஜயை அன்று ரஜினியுடன் ஒப்பிட்டாலும் விஜய் ரஜினியை 'தலைவர்' என்று வாய்க்குவாய் சொல்லியதால் விஜய் மீது வெறுப்பு ஏற்ப்படவில்லை.தொடந்து தன் திரைப்படங்களில் ரஜினியின் பெயரையோ, ரஜினி படப்பெயரையோ உபயோகித்து வந்ததாலும். கில்லி வெற்றி விழாவில் ரஜினி காலில் வீழ்ந்து ஆசி பெற்றதாலும்; ரஜினியும் அமிதாப்பும் என் கடவுள்கள் என்று சஞ்சிகை ஒன்றுக்கு பேட்டி கொடுத்ததாலும் சச்சின் திரைப்படம் வெளிவரும்வரை விஜய்மீது வெறுப்பை ஏற்ப்படுத்தவில்லை. ஆனால் சச்சின் திரைப்படத்தை சந்திரமுகியுடன் விஜய் வெளியிட்டதன் நோக்கம் அடிப்படை அறிவுள்ள அனைத்து சினிமா ரசிகர்களுக்குமே நன்கு தெரியும். அந்த நிகழ்வின் பின்னர் எந்த ரஜினி ரசிகனுக்கும் விஜய் மீது வெறுப்பு ஏற்ப்படுவது ஆச்சரியமல்ல!!! ஆனாலும் விழுந்தும் மீசையில் மன் ஒட்டாதவாறு விஜய் சந்திரமுகி வெற்றிவிழாவில் ரஜினியை தலைவா, தலைவா என உருகினாலும் விஜய் மீதிருந்த கோபம் குறையவில்லை.

அந்த கோபம் லயோலாக்கலூரி வாக்கெடுப்பின் பின்னைய சம்பவங்களினால் பலமடங்கு அதிகமாகி இன்று விஜயை பரம எதிரி போல் பார்க்கவைத்து விட்டது. ஆரம்பத்தில் என் மனதிற்கு பிடித்த விஜய் இப்போ ரொம்ப தூரத்தில்!! ஆனாலும் இப்பவும் தொலைக்காட்சியில் 'பூவே உனக்காக' திரைப்படம் போனால் நிச்சயம் பார்ப்பேன், விஜயையும் தாண்டி அதில் ஏதோ ஒரு பீல் கிடைக்கறது............ இந்த விடயங்களை விஜயை சிறுமைப்படுத்தும் நோக்கில் நான் கூறவில்லை; நான் பார்த்த சினிமாவில் எனக்குள் விஜயின் பயணம்தான் நான் மேற்கூறியவை.

அஜித், விக்ரம், சூர்யா, சிம்பு, தனுஷ் பற்றியும், நம்ம ஹீரோயின்ஸ் பற்றியும், இன்னபிற விடயங்களையும் அடுத்தடுத்த பதிவுகளில் பார்க்கலாம் :-)

தொடரும்............

Friday, July 15, 2011

தெய்வத்திருமகள் - எனது பார்வையில்

சீயான் விக்ரம் கதையின் நாயகனாக நடிக்க, ஸ்ரீ ராஜகாளி அம்மன் மீடியாஸ் மோகன் நடராஜன் தயாரிக்க, இயக்குனர் விஜய் இயக்கிய தெய்வத்திருமகள் திரைப்படத்தின் ஒளிப்பதிவாளராக நீரவ்ஷாவும், இசையமைப்பாளராக ஜீ.வி.பிரகாஷும், படத்தொகுப்பாளராக ஆண்டனியும் பணியாற்றியுள்ளனர். விக்ரம் தவிர பேபி சாரா, அனுஷ்கா, அம்லா பால், சந்தானம், நாசர், எம்.எஸ்.பாஸ்கர் போன்றோரும் முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளார்கள்.

'படத்திற்கு படம் வித்தியாசமாக நடிக்கும் விக்ரம்' என்று சொல்வது சூரியன் கிழக்கில் உதிக்கும் என்பதை ஒத்தது என்பதை விக்ரம் மீண்டும் நிரூபித்திருக்கிறார். தேசிய விருது கிடைக்கும் என்று சொல்லி விக்ரமின் நடிப்பை சிறுமைப்படுத்த நான் விரும்பவில்லை; தெய்வதிருமகளில் விக்ரமின் நடிப்பு விருதுகளுக்கு அப்பாற்ப்பட்டது. என்னைக் கேட்டால் விக்ரமின் திரை வாழ்க்கையில் மிகச்சிறந்த பெர்போமன்ஸ் என்று தெய்வத்திருமகன் 'கிருஷ்ணா'வைத்தான் சொல்வேன்.

ஆம் தெய்வத்திருமகளில் கிருஷ்ணா கேரக்டரில் விக்ரம் வாழ்ந்திருக்கிறார், வார்த்தைகளால் சொல்லி விக்ரமின் நடிப்பினை விபரிப்பது சாத்தியமில்லை. என்னால் 'கிருஷ்ணா' பாத்திரத்திற்கு விக்ரம் தவிர்த்து வேறு எந்த நடிகரையும் கற்பனை பண்ணிக்கூட பார்க்க முடியவில்லை. விக்ரமால் மட்டுமே இது சாத்தியம் என்பதை உணர்ந்த இயக்குனர் விஜய் உண்மையிலே புத்திசாலிதான். படம் முழுவதும் தான் வரும் ஒவ்வொரு காட்சியிலும் தன் முத்திரையை பதித்துள்ள விக்ரம். நீதி மன்றில் கால் தடக்கி கீழே விழுந்த நிலையில் முகத்தில் கொடுக்கும் உணர்ச்சி சொல்லி புரியவைக்க முடியாது; அதுபோன்றே மன்றத்தின் உள்ளே இறுதிக் காட்சியிலும், திரைப்படத்தின் உச்சக்கட்ட காட்சியிலும் விக்ரமின் நடிப்பு சபாஷ் போட வைக்கிறது.'நிலா'வாக பேபி சாரா; விக்ரமிற்கு அடுத்து தெய்வத்திருமகளின் முக்கிய பாத்திரம் பேபி சாராதான். எப்படித்தான் இந்த சின்ன குழந்தைகள் இவ்வளவு திறமைகளை கொட்டி நடிக்கிறார்களோ என்று மீண்டும் ஒருதடவை எண்ண வைத்துள்ளார் பேபி சாரா. 'நிலா' வரும் ஒவ்வொரு காட்சிகளும் அழகியல்; விக்ரமுடன் போட்டிபோட்டு நடித்த அந்த சிறுமிக்கு எந்தப்பாராட்டும் தகும். பாசம், பரிவு, செல்லக் கோபம், தவிப்பு, ஏக்கம், அழுகை, சிரிப்பு என எல்லா இடங்களிலும் மிகச்சிறப்பாக ஜொலிக்கின்றார் பேபி சாரா.

படத்தின் நாயகிகளாக அனுஷ்கா மற்றும் அம்லாபால் நடித்திருந்தாலும் அதிகமான காட்சிகளில் நடித்திருப்பதென்னவோ அனுஷ்காதான். ஆகா ஓகோன்னு இல்லையின்னாலும் தனக்கு கொடுத்ததை அனுஷ்கா சிறப்பாக செய்த்துள்ளார். வக்கீல் ட்ரெஸ்ஸும் அம்மணிக்கு நல்லாத்தான் இருக்கு :-) அம்லாபாலுக்கு சொல்லிக்கொள்ளும்படியான வேடம் இல்லை, அழகாக இருக்கிறார், அவளவுதான். படத்தை போர் அடிக்காமல் கொண்டு செல்லும் பொறுப்பை சரியாக செய்த்திருக்கிறார் சந்தானம்; மனிதர் வரும் இடங்கள் ஒவ்வொன்றும் கலகலப்பாக இருக்கின்றது. அடுத்த சில ஆண்டுகளுக்கு தமிழ் சினிமாவின் நகைச்சுவை கல்லாச்சாவி சந்தானத்தின் கைகளில்த்தான்.நாசர் அப்பாட்டக்கர் வக்கீலாக வந்தாலும் ஏற்க்கனவே பல திரைப்படங்களில் பார்த்துப் பழகிய வக்கீல் கேரக்டர்தான். நாசர் தவிர வை.ஜி.மகேந்திரம், எம்.எஸ்.பாஸ்கர், 'கனாக்காணும் காலங்கள்' பாண்டி போன்றோரும் படத்தில் அப்பப்போ வந்து போனாலும் மனதில் ஒட்டவில்லை. அனுஷ்காவின் அசிஷ்டண்டாக வரும் பெண்ணும் அவரை ஜொள்ளுவிடும் நாசரின் அசிஷ்டண்டும் திரைக்கதையின் தேவைக்காக இயக்குனர் பயன்படுத்தியிருந்தாலும் அவர்களது பாத்திரங்கள் திரைக்கதைக்கு பெரிதாக ஒட்டவில்லை. அதேபோல அம்லா பாலின் தந்தை, சொக்கலேட் கம்பனி ஓனர், எம்.எஸ்.பாஸ்கரின் மனைவி பாத்திரங்கள் டெம்ளேட் பாத்திரங்கள்.

நீரவ்ஷாவின் கமெரா இதுவரை ஒருபோதும் ஏமாற்றியதில்லை, அது தெய்வத்திருமகளிலும் தொடர்ந்திருக்கிறது. தேவைக்கு ஏற்ப அழகான நேர்த்தியான ஒளிப்பதிவு. அதேபோல ஆண்டனியும் காட்சிகளை அழகாக கோர்த்திருக்கிறார், புதுமைகள் எதுவும் இல்லையெனினும் தேவைக்கு போதுமான படத்தொகுப்பு. பாடல்கள் அனைத்திலும் புகுந்து விளையாடியிருக்கும் ஜீ.வி.பிரகாஷ் பின்னணி இசையிலும் நன்றாகவே ஜொலித்திருக்கிறார். இந்த திரைப்படத்திற்கு எது வேண்டுமோ அதை அளவாக கொடுத்திருக்கிறார் ஜீ.வி.

அடுத்து திரைப்படத்தின் முக்கிய கர்த்தா இயக்குனர் விஜய்; நிச்சயம் இது 'மதராசப்பட்டினம்' போன்று விஜயின் முத்திரை குத்திய திரைப்படம் அன்று. விக்ரமின் கேரக்டரையும், கிருஷ்ணாவுக்கும் நிலாவுக்குமான உறவினையும் அடிப்படியாக கொண்டே திரைக்கதையை பின்னியிருப்பதால் இயக்குனர் சில இடங்களில் கம்பிரமயிஸ் ஆகவேண்டியிருப்பது தெரிகிறது. சில பாத்திரங்களும், காட்சிகளும் முன்னமே பார்த்தவை போன்று இருந்தாலும் கதையை பின்னுவதற்கு இயக்குனருக்கு வேறு வழி இல்லை என்பதால் அதை குறையாக எடுத்துக்கொள்ள வேண்டியதில்லை.அதிகமான இடங்களில் செண்டிமெண்ட் காட்சிகள் இருந்தாலும் எவையும் அலுப்படிக்கவில்லை, இறுதிக்காட்சி இயக்குனரின் தனக்கே உரிய முத்திரை. மனதை கனமாக்கி திரையரங்கை விட்டு ரசிகர்களை வெளியேற்றும் உக்தி தெரிந்த இயக்குனர்களில் விஜையும் ஒருவர் என்பதை மீண்டும் நிரூபித்திருக்கிறார். திரைக்கதையின் தொய்வை காமடியால் நிவர்த்திசெய்ய எத்தனித்த விஜய் அதில் வெற்றிகண்டுள்ளார் என்றே சொல்லலாம். ஆங்காங்கே சில காம்பிரமைஸ் செய்திருந்தாலும் (விழிகளில் ஒரு வானவில் பாடல் எதுக்கு விஜய் சார் ? )தெய்வத்திருமகளில் 'இயக்குனர்' விஜய் மீண்டும் தன்னை ஒரு சிறந்த இயக்குனர் என்பதை நிரூபித்திருக்கிறார்.

நிச்சயமாக தெய்வத்திருமகள் ஒரு பக்கா கமர்சியல் படமல்ல, அதேநேரம் ஒரு ஆர்ட் திரைப்படமும் அல்ல, முழுக்க முழுக்க குடும்பத்துடன் பார்க்ககூடிய ஒரு ஜனரஞ்சகமான திரைப்படம் என்று சொல்லலாம். விக்ரமிற்காகவும், அந்த குழந்தைக்காகவும் (பேபி சாரா) நிச்சயம் அனைவரும் திரையில் பார்க்க வேண்டிய திரைப்படம் தெய்வத்திருமகள்.

தெய்வத்திருமகள் - ஜனரஞ்சகம்

ரஜினிகாந்திடம் ரசிகர்கள் கேட்ட கேள்விகளும், பதில்களும்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ரசிகர்களை சந்திக்கும் சமயத்தில் ரசிகர்கள் அவரிடம் கேட்கும் கேள்விகளும் அதற்க்கு ரஜினிகாந்த் கொடுக்கும் பதில்களும் என் கற்பனையில். (ரஜினியை பிடிக்காதவங்க தயவு செய்து இப்பவே எஸ் ஆயிடுங்க, அப்புறம் உங்க வயிறு மற்றும் 'பிற' பாகங்களில் ஏற்ப்படும் எரிவுகளுக்கு கம்பனி பொறுப்பல்ல)

ரஜினி இரு கைகளையும் தலைமேல் கூப்பி வணங்கியபடி உள்ளே வருகிறார், ரசிகர்கள் உற்சாக மிகுதியில் ஆர்ப்பரிக்கிறார்கள், (சில நிமிடங்களில் அமைதி)

ரஜினி : எப்டி இருக்கிறீங்க ராஜாக்களா?

ரசிகன் : நீங்க எங்க முன்னாடி நேர்ல நிக்கிறதை பாக்கிறப்போ எங்களது இப்போதைய மனநிலை வார்த்தைகளுக்கு அப்பாற்ப்பட்டது, இப்ப உங்க உடல்நிலை எப்படி இருக்கு ?

ரஜினி : உங்க வேண்டுதலாலும், மருத்துவர்களின் அக்கறையாலும், குடும்பத்தவர்களின் அரவணைப்பினாலும், அந்த ஆண்டவனோட ஆசியினாலும் ரொம்ப நல்லாயிருக்கேன்.

ரசிகன் : சிங்கப்பூர்ல ஓய்வெடுத்ததையும், இப்போ சென்னைக்கு திரும்பியதையும் எப்பிடி பீல் பண்ணிறீங்க?

ரஜினி : ம்ம்ம்.. சிங்கப்பூர்ல ரெஸ்ட் (Rest) எடுத்தது அழகிய பூங்காவில ஓய்வெடுத்த மாதிரியும், இப்ப சென்னையில வந்திறங்கியது அம்மா மடியில தலைவைச்சு படுத்திருக்கிற மாதிரியும் தோணுது.

ரசிகன் : உங்களுக்கு உடம்புக்கு முடியாமல் போகுமின்னு எந்த ரசிகனுமே எதிர்பார்க்கல, எல்லோருமே உங்களை ஒரு Magic Man ஆகவே பார்க்கிறார்கள், யாராலும் அதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை; உங்களுக்கு உடம்புக்கு முடியாமல் போனதை நீங்கள் எப்படி எடுத்துக் கொண்டீர்கள்?

ரஜினி : ஹ.... ஹஹா...... இதுக்கு எப்டி பதில் சொல்றது, யெஸ்; இப்படி உடம்புக்கு முடியாம போகுமின்னு நான் நினைக்கல, பட் எது வந்தாலும் அதை தைரியமா பேஸ் பண்ணித்தானே ஆகணும் ஹ...ஹஹா....

ரசிகன் : சிங்கப்பூருக்கு போறதுக்கு முன்னாடி உங்க வாய்ஸை எங்களுக்காக ஆடியோவா கொடுத்தீங்க, அந்த வாய்ஸை கேட்டு கலங்காத எந்த ரசிகனுமே இருக்க மாட்டான்; அந்த நிலையிலயும் "பணம் வாங்கறேன் ஆக்ட் பண்றேன், அதுக்கே நீங்க இவ்ளோ அன்பு கொடுக்கறீங்கனா!!!!! உங்களுக்கு நான் என்னத்த கொடுக்கிறது" என்று சொன்னீங்களே சார், உங்களை மாதிரி ஒரு மனிதனுக்கு ரசிகனா இருக்க நாங்கதான் குடுத்துவைத்தவர்கள், நாங்க உங்க கிட்ட எதையுமே எதிர்பார்க்கல, நீங்க நல்லாயிருந்தா அதுவே போதும்.

ரஜினி : நோ.... நோ .... ஒரு வருசமா? இரண்டு வருசமா? 35 வருசமா என் கூடவே இருக்கிறீங்க, என் மேல நீங்க பிரியமா இருக்கிறது எனக்கு தெரிஞ்சதுதான், ஆனா எனக்கு உடம்புக்கு முடியாம போனப்போ நீங்க பட்ட அவஸ்தையை அறிந்தபோது என் மனதில தோன்றியதைத்தான் நான் சொன்னன். நிச்சயமா என் ரசிகர்கள் பெருமைப்படுறமாதிரி நான் நடந்துப்பேன்; கொஞ்சம் வெயிற் பண்ணுங்க ராஜாக்களா.

ரசிகன் : எங்களுக்கு எப்பவுமே உங்க ரசிகர்கள் என்கிறதில பெருமைதான், அதிலும் நாங்க உங்க கிட்ட வியந்து நோக்கும் ஒரு விடயம், உங்களை வலிந்து சிலர் சீண்டும்போதும் நீங்கள் அவர்களுக்கு வழங்கும் புன்னகைதான்!!!!!!!!!!!, எப்டி தலைவா உங்களால மட்டும் முடியிது ?

ரஜினி : ஹ.... ஹஹா..

ரசிகன் : நீங்க நோயில் இருந்து மீண்டதற்கு ரசிகர்களின் பிரார்த்தனைதான் முக்கிய காரணம் என்று கூறியதற்கு சில நாஸ்திகர்கள் அப்புறம் எதுக்கு மருத்துவமனைக்கு சென்றீர்கள் என்கிறார்கள்; அதற்க்கு உங்களுடைய பதில்தான் என்ன?

ரஜினி : ஒரு குட்டிக்கதை; ஒரு ஊர்ல ஒருத்தனுக்கு கடவுள் பேர்ல ரொம்ப பக்தி, எல்லாமே கடவுள் பாத்துக்குவாரெங்கிறது அவன் வாதம். ஒருநாள் மிகப்பெரிய வெள்ளம் ஊருக்க வந்திச்சு; ஊர்ல எல்லோருமே குடி பெயர்ந்தாங்க, இவன் மட்டும் கடவுள் காப்பாத்துவார் என்று சொல்லி அங்கேயே இருந்தான். அவன் காலளவில் வெள்ளம் வரும்போதும், இடுப்பளவில் வெள்ளம் வரும்போதும், கழுத்தளவில் வெள்ளம் வரும்போதும் பலபேர் அவனை தங்க கூட தப்பிச்சு வருமாறு கேட்டும் அவன் அசையவே இல்லை "என்னை கடவுள் காப்பாத்துவாரு" என்று சொல்லி சொல்லி கடைசியில இறந்தே போனான்.

இறந்தவன் நேரா கடவுள் கிட்ட போயி "உன்னை எவளவு நம்பினன் என்னை எமாத்தீட்டியே" என்று கேட்கிறான். அதுக்கு கடவுள் சொல்றாரு, பூமியில உள்ள எல்லாருக்குமே நான் நேரில் சென்று உதவுவது சாத்தியமா? உனது வேண்டுதலை ஏற்று உன்னை காப்பாற்றுவதற்காக நான் அனுப்பிய கருவிகள்தான் உன்னை காலளவு, இடுப்பளவு, கழுத்தளவு வெள்ளத்தில் மீட்க்கவந்த மனிதர்கள். நீ அவர்களை ஏற்றுக்கொள்ளாதது உன் தவறன்றி எனதல்ல என்றார்.

அதேபோலத்தான் உங்கள் பிரார்த்தனைகளுக்கு கடவுள் அனுப்பிய கருவிகள்தான் மருத்துவமனையும், டாக்டர்களும். உங்களது பிரார்த்தனை மட்டுமே என்னை காப்பாற்றும் என்று நான் வீட்டிலே இருப்பது வெள்ளத்தில் மூழ்கி இறந்தவனது செயலை போலல்லவா ஆகிவிடும்!!!!!!!!

ரசிகன் : ராணா?

ரஜினி : கண்டிப்பா ராணா வருவான், கொஞ்சம் லேட்டாகினாலும் லேட்டஸ்டா வருவான், ஹ.... ஹஹா......

ரசிகன் : அதிமான ரிஸ்க் எடுக்கும் காட்சிகளில் எங்களுக்காக நீங்க சிரமப்படவேண்டாம், நீங்க ஸ்கிரீன்ல வந்தாலே போதும், உங்க உடல்நிலை எங்களுக்கு 'ராணா'விற் பெரிது.

ரசிகன் : நீங்கள் எங்களிடம் ஏதாவது கேள்வி கேட்க விரும்புகிறீர்களா?

ரஜினி : கேள்வியல்ல ஒரு ஆச்சரியம்தான்; ஹ.... ஹஹா...... இவளவு கேள்வி கேட்டீங்க, அரசியலை பற்றி எதுவுமே கேட்கல; அதுதான் ஆச்சரியம்!!!!! ஹ.... ஹஹா.....

ரசிகன் : எங்களுக்கு இப்ப முக்கியம் உங்க உடல்நிலைதான், அரசியலுக்கு வருவது என்பது சாதாரண விடயமல்ல என்பது எமக்கு நன்கு தெரியும். எல்லாத்திற்க்குமே ஒரு நேரம் வரவேண்டும், நீங்கள் அரசியலிற்கு வந்தால் மகிழ்ச்சி அடைவோம், வாராவிட்டாலும் வருத்தமில்லை; காரணம், நாங்கள் 1995 முதல் உங்கள் ரசிகர்கள் அல்ல 1975 முதல் உங்கள் ரசிகர்கள்தான்.

ரசிகன் : இறுதியாக ரசிகர்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?

ரஜினி : உங்கள் அன்புக்கு நான் என்ன கைமாறு செய்யப்போறன் என்று தெரியல, ஆனா டெபினட்டா (Definite) நான் ஏற்க்கனவே சொன்ன மாதிரி நம்ம பான்ஸ் (Fans) எல்லோருமே தலை நிமிர்ந்து வாழ்ற மாதிரி ஏதாவது பண்ணுவன். எல்லாருமே பெஸ்ட்டு (First) உங்கள கவனியுங்க, அப்புறம் உங்க குடும்பத்தை கவனியுங்க, நல்லதே நினைங்க, நல்லதே செய்யுங்க எல்லாமே நல்லதா அமையும், ஆண்டவன் இருக்கான், God bless You.

(ரசிகர்கள் ரஜினியுடன் புகைப்படம் எடுத்துக்கொள்ள முண்டி அடிக்கிறார்கள்)


Wednesday, July 6, 2011

சீரழிந்து வரும் யாழ்ப்பாண கலாச்சாரம்......

யாழ்ப்பாணத்தையும், யாழ்ப்பாண இளைஞர்கள், யுவதிகளையும் எதிர்மறையாக மட்டுமே நோக்கப்போகிறேன் என்று நினைப்பவர்களுக்கு இந்தப் பதிவு ஏமாற்றத்தை 'மட்டுமே' தரும்.

இன்றைய திகதியில் புலம்பெயர் நாடுகளில் இருப்பவர்களில் பெரும்பான்மையானவர்களும் சரி, தம்மை கலாச்சாரக் காவலர்களாக காட்டிக்கொள்ள எத்தணிப்பவர்களும் சரி யாழ்ப்பாணத்தையும், யாழ் இளைஞர் யுவதிகளையும் அடையாளப்படுத்தும் விதமாக பயன்படுத்தும் முக்கிய சொல் 'சீரழிவு'. யுத்தம் முடிவுக்கு வந்ததன் பிற்ப்பாடு யாழ்ப்பாண கலாச்சாரம் சீரளிந்துள்ளதாகவும், இளைஞர்களும் யுவதிகளும் கெட்டுப்போவதாகவும் இவர்களது குற்றச்சாட்டு. உண்மைதான்; இவர்களால் யாழ்ப்பாண கலாச்சாரம் சீரழிந்து வருவதாக குற்றம் சாட்டப்படுவதில் எத்தனை சதவிகிதம் உண்மைத்தன்மை உள்ளதோ அதேபோல யாழ்ப்பாணம் வாழ்க்கைத்தரம், தொழில்நுட்பம், தொடர்பாடல், வசதி, வேலைவாய்ப்பு, போக்குவரத்து, அபிவிருத்தி போன்ற பல விடயங்களில் முன்னேற்றம் அடைந்து வருவதிலும் அத்தனை சதவிகிதம் உண்மை உள்ளது; இதை யாராவது மறுக்க முடியுமா?

ஒவ்வொரு விசைக்கும் சமனும் எதிருமான மறுதாக்கம் உண்டு என்கின்ற நியூட்டனின் மூன்றாம்விதி விஞ்ஞானம் மட்டுமல்ல; அது உண்மையில் வாழ்க்கைத்தத்துவம். இன்றைய யாழ்ப்பாணத்தின் நிலையும் நியூட்டனின் மூன்றாம் விதியை ஒத்ததுதான் என்பதை நாம் புரிந்துகொள்ளவேண்டும். வாழ்க்கைத்தரம், தொழில்நுட்பம், தொடர்பாடல், வசதி, வேலைவாய்ப்பு, போக்குவரத்து, அபிவிருத்தி என்பன அதிகரித்துவரும்போது அதன் பக்க விளைவுகளாக சில வேண்டத்தகாத மாற்றங்களும் இடம்பெறத்தான் செய்கின்றன, அதை யாரும் மறுக்க இயலாது; அப்படியான சில வேண்டத்தகாத நிகழ்வுகள் இடம்பெறுகின்றன என்பதனால் ஏற்ப்படும் முன்னேற்றகரமான விடயங்களை அப்படியே புறக்கணிக்க முடியுமா??ஆமென்று கூறும் பிற்போக்கான எண்ணம் கொண்டவர்களை நாம் குறைகூற முடியாது; அது அவர்களின் சொந்த உணர்வு. அனால் இந்த விடயத்தை நேர்மறையாக அணுகுமிடத்தில் தற்போது உண்டாகிவரும் வசதி வாய்ப்புக்கள்தான் தீய பக்கவிளைவுகளுக்கு காரணம் என்று நோக்காமல்; புதிய வசதி வாய்ப்புக்களால் ஏற்ப்படுகின்ற தீய பக்கவிளைவுகளை எவ்வளவுக்கு எவ்வளவு குறைக்க முடியுமோ அதற்கான வழியை ஆராய்வதுதான் புத்திசாலித்தனம்; அதுதான் இன்றைய தேவை. அதை விடுத்து குறை கூறுவதை மட்டுமே வேலையாக வைத்திருப்பவர்களை என்னதான் செய்யமுடியும்!

யாழ் இளைஞர்களும் யுவதிகளும் பண்பாடில்லாமல் முறைதவறி நடக்கின்றார்கள் என்பதுதான் இன்று முக்கியமாக யாழ்ப்பாணம் சீரழிவதாக கூறுபவர்களால் வைக்கப்படும் முக்கிய குற்றச்சாட்டு; இவைதவிர கல்விப் பெறுபேறுகளில் வீழ்ச்சியும் இன்னுமொரு முக்கிய குற்றச்சாட்டு. இவ்விரண்டு குட்டச்சாட்டுகளும் ஏற்பட காரணமாக குற்றம் சொல்பவர்களால் கூறப்படும் முக்கிய காரணிகளாக தொலைபேசி, தொலைக்காட்சி, இணையம், வெளிநாட்டுப்பணம், எ-9 பாதை திறப்பு, கட்டுப்பாடு இல்லாமை (புலிகளின் கட்டுப்பாடு) போன்றவை முக்கியமானவை. இக்குற்றச்சாட்டுகளிணை விரிவாக நோக்குவோமாயின்...1991 முதல் 1995 வரை யாழ் குடாநாட்டிலேயே மக்கள் பாவனைக்காக 'இயங்கும் நிலையில்' ஒன்றிரண்டு தொலைபேசிகள்தான் இருந்தன; அப்போதைய கட்டணங்களை கேட்டால் இப்போதும் தலை சுற்றும். அதிலும் வெளிநாடுகளுக்கு தொலைபேசியில் பேசுவதற்கு யாழிலிருந்து கொழும்பிற்கு செல்லவேண்டிய நிலை (அந்த காலப்பகுதியில் கொழும்பு செல்வது சாதாரண விடயமல்ல). 1995 க்கு பின்னர் மெல்லமெல்ல நிலையான தொலைபேசி (Land Line) இணைப்புக்கள் யாழ் குடாநாட்டிற்குள் அதிகரிக்க ஆரம்பித்தது; பெரும்புள்ளிகள், வசதியானவர்கள், தொலைத்தொடர்பு நிலையங்கள் போன்ற இடங்களில் நிலையான தொலைபேசி இணைப்புக்கள் இருந்தாலும் சாதாரண குடிமக்களால் அவற்றை சொந்தமாக பாவிக்க இயலவில்லை.

அதன் பின்னர் 2000 ஆம் ஆண்டளவில் அறிமுகமாகியதுதான் கைத்தொலைபேசி; ஆரம்பத்தில் கைத்தொலைபேசியின் தாக்கம் குறைவாக காணப்பட்டாலும் 2007 இற்கு பின்னர் வீட்டிற்கு ஒன்றாக அதிகரித்து இன்று ஒவ்வொருத்தரும் ஒரு கைத்தொலைபேசி பயன்படுத்துமளவிற்கு அதன் பாவனை அதிகரித்துள்ளது. இது ஆரோக்கியமான விடயமா என்பதில்த்தான் விவாதமே. எதையுமே நாம் பயன்படுத்தும் விதத்தில்த்தான் அதன் நன்மை, தீமை தீர்மானிக்கப்படுகிறது; ஒரு தீக்குச்சியால் தீபமும் ஏற்றலாம் தீயும் வைக்கலாம்; அது பயன்படுத்தும் முறை மற்றும் தேவையை பொறுத்தது.இன்று தொலைபேசி உள்ளதால் எத்தனை சௌகரியங்கள்!!! ஒரு சந்திப்பை எடுத்துக் கொண்டாலே ஒருவரை சந்திக்குமுன் தொலைபேசியில் அவர் சந்திப்புக்கு தயாராக உள்ளாரா என அறிந்த பின்னர் செல்வதால் வீண் அலைச்சல், பணம், நேரம் என்பன எவ்வளவு சேமிக்கப்படுகிறது! சரியான நேரத்திற்கு வீடிற்கோ அல்லது குறிப்பிட்ட ஓரிடத்திற்க்கோ செல்வதற்கு தாமதமாகினால் தாமதத்தை அறியப்படுத்தி ஏற்ப்படும் அசௌகரியங்களை தவிர்க்கிறோம். தூரதேச பிரிவின் இடைவெளி எத்தனை குடும்பங்களுக்கு தொலைபேசியில் இன்று ஆறுதலை வழங்குகின்றது!!!

வெளிநாடுகளில் உள்ளவர்களின் குரலையோ முகத்தையோ அன்று வருடக்கணக்கில் காணாத நாம் இன்று தினமும் பார்த்தும் கேட்டும் மனதிற்கு ஆறுதலை தேடுவது எதனால்? இவைதவிர வர்த்தகம், மருத்துவம் முதல் அத்தனை தொழில்களிலும், சேவைகளிலும் தொலைபேசியின் பங்கு என்ன என்பதை யாவருமே அறிவோம்! இத்தனை நன்மைகளை தன்னகத்தே கொண்ட தொலைபேசிதான் இன்றைய பல யாழ் இளைஞர்களினதும் யுவதிகளினதும் 'காம வேட்க்கைக்கு' பயன்படுகின்றது என்பதும் மறுக்க முடியாத உண்மை. 'பல'('சில' அல்ல) இளைஞர்கள் மற்றும் யுவதிகள் இன்று ஒன்றுக்கு மேற்ப்பட்ட (ஒரு சிலர் யாரென்றே தெரியாத) எதிர்ப்பாலருடன் தமது இச்சைகளை போக்கிக்கொள்ளும் ஒரு கருவியாக தொலைபேசியை பயன்படுத்துகிறார்கள் என்பது சோகமான விடயமே.

நிச்சயம் இது தொலைபேசியால் ஏற்ப்பட்ட சீரழிவுதான்; ஆனால் இந்த சீரழிவு யாழ்ப்பாணத்திற்கு மட்டுமே சொந்தம் என்று நினைத்தால் அதைவிட முட்டாள்த்தனம் வேறில்லை. இது உலகம் முழுவதிலும் உள்ள சீரழிவுதான், ஆனால் யாழ்ப்பாணம் எப்படி தனித்து காட்டுகின்றதென்றால்; இதுவரை காலமும் இருந்துவந்த கட்டுப்பாடான ஒழுக்கம்தான். உதாரணமாக கறுப்புடன் வேறெந்த நிறம் சேர்ந்தாலும் பெரிதாக வித்தியாசம் தெரியாது, ஆனால் வெள்ளையுடன் ஒரு துளி வேறு எந்த நிறம் சேர்ந்தாலும் அது மிகைப்படுத்திக் காட்டிக்கொடுக்கும்; அந்த நிலைதான் இன்றைய யாழின் நிலை.தொலைபேசிபோலத்தான் இணையந்தின் பங்கும்; இணையத்தால் ஏற்ப்பட்டிருக்கும் நன்மைகளை சொல்லித் தெரியவேண்டியதில்லை! வீட்டிலிருந்தே உலகத்தை புரட்டிப்பார்க்கும் நெம்புகோல் இணையம்; அதனை ஆக்கவழியில் பயன் படுத்துவதும் அழிவுப்பாதையில் பயன்படுத்துவதும் தனிமனித நிலைப்பாடு. ஒரு சிலர் தவறாக பயன் படுத்துகிறார்கள் என்பதற்காக இணையத்தை புறந்தள்ள முடியுமா? இல்லை இணையம் இல்லாமல் இனிவரும் காலங்களில் உலகத்துடன் இணைந்து வாளத்தான் முடியுமா?

Face Book; இது இன்று உலகம் முழுவதும் ஆட்கொண்டிருப்பதை மறுக்க முடியாது; அதன் தாக்கம் யாழிலும் இல்லாமல் இல்லை. கல்வி வீழ்ச்சிக்கு இன்றைய Face Book இன் தாக்கம் ஒரு காரணமாக கூறப்படுகிறது, உண்மைதான்; சில மாணவர்கள் Face Book தான் வாழ்க்கை என்கின்ற அளவில் உள்ளார்கள்; இவர்களின் வயதும் அதற்க்கு துணைபோகும் காரணிகளும் Face Book இல் உள்ளமைதான் இவர்களின் இந்த அதீத ஈடுபாட்டிற்கு காரணம். பொய்யான பெயர்களில் கணக்கு வைத்திருந்து வேண்டாத நட்புகளை உருவாக்கி வயதின் இச்சையை பூர்த்திசெய்யும் விடலைகள் சற்று அதிகமாகவே இருக்கத்தான் செய்கிறார்கள்!!! அப்படியானால் Face Book என்கின்ற சமூகத்தளம் தேவையற்றதா? நிச்சயமாக தேவையற்றது என்று கூற முடியாது; பல நல்ல விடயங்கள் Face Book இல் உள்ளதையும் மறுக்க முடியாது.இவற்றைப்போலவே எ-9 பாதை திறக்கப்பட்டதால் கலாச்சார சீரழிவுகள் அதிகரித்துள்ளது என்கின்ற வாதத்திலும் மறுப்பு ஏதும் கூறுவதற்கில்லை; பலதரப்பட்டவர்களும் வருகிறார்கள், தீய விளைவுகளை ஏற்படுத்தும் காரணிகளை ஊக்குவிக்கிறார்கள்; உண்மைதான், அதற்காக எ-9 பாதை பயன்பாட்டை நிறுத்த முடியுமா? இல்லை புறக்கணிக்கத்தான் முடியுமா? எ-9 பாதை இல்லாத காலங்களில் எம்மக்கள் பட்ட அவஸ்தையை எட்ட நின்று கருத்து கூறும் யாராலும் புரிந்து கொள்ள இயலாது. 1000 ரூபாயில் செய்ய வேண்டிய போக்குவரத்தை 30,000 ரூபாவில் கூட செய்யமுடியாத சூழலில் எத்தனை பேர் முக்கிய நிகழ்வுகளில் (மரணம், திருமணம்) கலந்துகொள்ளாமல் மனரீதியாக தாக்கப்பட்டார்கள் என்பதை 'எக்ஸ்போ' விமான சீட்டு அலுவலகத்திற்கு குறிப்பிட்ட காலப்பகுதிகளில் சென்றவர்களால் உணரமுடியும்.

எ-9 பாதை திறக்கப்பட்டதால் ஏற்ப்பட்ட இலகு மற்றும் குறைந்த செலவில் நினைத்தநேர பயணம், ஏறுமதி மற்றும் இறக்குமதி, பொருட்களின் விலை வீழ்ச்சி போன்ற சாதகமான காரணிகளுடன் ஒப்பிடும் பொழுது பாதகமான காரணிகள் மிகச்சொற்பமே. அதற்காக பாதகமான காரணிகளை வரவேற்பதாக அர்த்தமல்ல, அப்பாதகமான காரணிகளை எவ்வாறு நீக்கலாம் என்று சிந்திப்பதுதான் புத்திசாலித்தனம்; அதைவிடுத்து எ-9 பாதை திறந்ததுதான் இன்றைய யாழின் சீரழிவிற்கான காரணம் என்று கூறுவதல்ல!!அடுத்து வெளிநாட்டுப்பணம்; மேலதிகமாக கிடைக்கும் வெளிநாட்டுப் பணத்தினால் பள்ளி வயது முதல் பாடை வயதுவரை பீர் மழையும், மோட்டார் சைக்கிள்களும் (குறிப்பாக பள்சர்) யாழ்ப்பாணத்தில் குறைவில்லாமல் உள்ளன. வேலைக்கு போகும் பணியாளர்களுக்கும், மாணவர்களின் தேவைகளுக்கும், வியாபாரிகளின் பயன்பாட்டிற்கும் மோட்டார் சைக்கிள்களின் தேவை இன்றியமையாதது என்பது நிதர்சனம். அதேநேரம் பகட்டுக்காக மோட்டர் கைக்கிளை வைத்து 'படம்' காட்டும் இளைஞர்களும் அதிகமாகவே உள்ளனர்; இவர்கள்தான் இன்றைய வீதி விபத்துக்களின் ஏஜண்டுகள், மற்றும் பெண் செட்டைகளின் முக்கிய சூத்திரதாரிகள். இவர்களை கட்டுப்படுத்துவது அவரவர் குடும்பத்தினதும், வெளிநாடுகளில் இருந்து தேவைக்கதிகமாக பணம் அனுப்புபவர்களதும், சமூகத்தினதும், பொலிசாரினதும்(?) கைகளில்த்தான் உள்ளது.

அடுத்து கூறப்படும் இன்னுமொருவிடயம்; "புலிகள் காலத்தில் இளைஞர்கள் யுவதிகள் புலிகளின் கட்டுப்பாட்டிற்கு பயந்து ஒழுக்காமாக இருந்தனர், ஆனால் இன்று புலிகளின் தாக்கம் இல்லாததால் ஒழுக்கம் குறைவாக நடக்கின்றார்கள்" என்பதுதான். இங்கு ஒழுக்கம் என்று சொல்லப்படும் முக்கிய விடயங்களாக ரவுடித்தனம், பெண் சேட்டைகள், கள்ளத்தொடர்பு, விபச்சாரம், போதை போன்றன அடங்குகின்றன. இவ்வாறான ஒழுக்க மீறல்களினை காணும் அல்லது அறியும் சந்தர்ப்பங்களில் "இவங்களுக்கு அவங்கள்தான் சரி" என்பதே பலராலும் உச்சரிக்கப்படும் ஒரு வாக்கியம்!!!உண்மைதான் இதை நானும் பல இடங்களில் உணர்ந்திருக்கின்றேன்; அனால் இதில் இன்னுமொரு விடயத்தையும் உற்றுநோக்கவேண்டும், புலிகளின் கட்டுப்பாட்டுக்கு பயந்துதான் (மரண பயம்) இதுவரை காலமும் யாழ் இளைஞர்கள் யுவதிகள் ஒழுக்கமாக இருந்தார்களா? ஆம் என்றால் அந்த ஒழுக்கம் யாழ்ப்பாணத்தின் அடிப்படை ஒழுக்கமா? இல்லை கட்டுப்படுத்தியதால் ஏற்ப்பட்ட ஒழுக்கமா? இது எம்மக்களின் சுயமரியாதையை காயப்படுத்துவதாக இல்லையா?

அப்படியானால் கட்டுப்பாடு தேவை இல்லையா என நீங்கள் கேட்கலாம்! நிச்சயம் கட்டுப்பாடு தேவை, ஆனால் கட்டுப்பாடு மட்டுமே போதாது; கூடவே நல்ல சமூக கட்டுக்கோப்பும் தேவை; தனிமனிதனில் சமூகத்தினதும், சமூகத்தில் தனிமனிதனதும் ஒழுக்கம் தங்கியுள்ளது என்பதை நாம் அனைவரும் முதலில் புரிந்துகொள்ள வேண்டும். காவல்த்துறையும் நீதித்துறையும் மக்களுக்கும், மக்கள் காவல்த்துறைக்கும் நீதித்துறைக்கும் பூரணமான ஒத்துழைப்பையும் அர்ப்பணிப்பையும் இதய சுத்தியோடு வழங்கினால் வேண்டத்தகாத பல தீய விளைவுகளை அடியோடு ஒழிக்கலாம்; அனால் இன்றைய சூழலில் அது உடனடிச்சாத்தியம் இல்லை என்பதையும் மறுப்பதற்கில்லை.தொலைபேசி, தொலைக்காட்சி, இணையம், எ-9, வெளிநாட்டுப்பணம் போன்றன எந்தளவிற்கு யாழ்மக்களுக்கு இன்றியமையாத தேவைகளாக உள்ளதோ! அதேபோல இவற்றால் ஏற்ப்படும் 'சீரழிவு' என்று சொல்லப்படும் அசௌகரியங்கள் அதிகரித்துள்ளமை மிகவும் பாதகமான விடயமாகவே உள்ளது. தொலைபேசி, இணையம் போன்றவற்றால் இன்று ஒழுக்கத்திலும், கல்வியிலும் ஏற்ப்பட்டுள்ள தாக்கங்கள் காலப்போக்கில் குறைவடைந்து ஓர்நாள் இல்லாமலே போய்விடும் என்கின்ற நம்பிக்கை உண்டு.

உதாரணமாக சொல்வதானால் 1996 களில் யாழ்ப்பாணத்திற்கு மீண்டும் மின்சாரம் (6 ஆண்டுகளின் பின்னர்) வழங்க ஆரம்பித்த புதிதில் அன்று பொதிகை தொலைக்காட்சியில் ஒலியும் ஒளியும் முதற்கொண்டு வயலும் வாழ்வும் வரை முழுநேரமும் தொலைக்காட்சியுடன் தான் அன்றைய இளைஞர்கள் நேரத்தை செலவிட்டனர்; ஆனால் இன்று??? வேண்டியபோதுதான் தொலைக்காட்சி! அதேபோலத்தான் புதிதாக ஒரு தொலைபேசியை வாங்கிய முதல் இரண்டு வாரம் அதையே போட்டு நோண்டி நொங்கெடுப்போம் , பின்னர் ???? பாவனைக்கு மட்டும்தான் பயன்படுத்துவோம்! இது மனித இயல்பு, எதையும் புதிதாய் கண்டால் சிலகாலம் அதனுடன் ஒன்றிப்பது மனிதர்க்கு புதிதல்ல!!!

இந்த நிலைதான் இன்று எம்மவரில் சிலருக்கும் இருக்கும் பிரச்சனை!!! காணாததை கண்டதால் ஏற்ப்பட்ட விளைவு என்றுகூட இதை சொல்லலாம். எந்த புதிய அறிமுகமும் அறிமுகமான புதிதில் சில அசௌகரியங்களை கொடுக்கத்தான் செய்யும்; ஆனால் நாளடைவில் அவை தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தப்படும், இது உலக நியதி, யாழ்ப்பாணம் ஒன்றும் இதற்க்கு விதி விலக்கல்ல. அப்படித்தான் கூடிய சீக்கிரம் தொலைபேசியும், இணையமும் மாறும் என்கின்ற நம்பிக்கை உள்ளது.ஆனால் ரவுடீசம், பெண் சேட்டைகள், புதிதாக நுழைந்துள்ள போதை, விபச்சாரம் போன்றன கட்டுப்படுத்தப்பட வேண்டுமானால் அது நிச்சயம் சமூகத்தின் கைகளிலும், போலிஸ், மற்றும் நீதி துறையின் கைகளிலும்தான் தங்கியுள்ளது. போலீசார் நினைத்தால் இவற்றை அழிப்பது அவளவு கடினமல்ல; காரணம் இவையெல்லாம் இப்போதுதான் ஆரம்பக்கட்டத்தில் உள்ளது. எதையுமே ஆரம்பத்தில் அழிப்பது சுலபம் என்பதால் பணத்திற்கு முன்னுரிமை கொடுக்காது இதய சுத்தியோடு செயற்ப்பட்டால் போலிஸ் துறையால் நிச்சயம் இவற்றை கட்டுப்படுத்த முடியும்; ஆனால்???

யாழ்மக்களை குறை சொல்பவர்களே ஒன்றை மட்டும் ஞாபகம் வைத்திருங்கள், இங்குள்ளவர்களும் மனிதர்கள்தான்; தவறு செய்பவன்தான் மனிதன், அந்த தவறை சுட்டிக்காட்டி ஏளனப்படுத்தி கேவலப்படுத்துவதை கெட்டித்தனமென்று எண்ணாமல் தவறுகளை எப்படி தீர்க்கலாம் என்று சிந்தியுங்கள், அறிவுறுத்துங்கள். இன்னமும் பாவாடை தாவணி, சேலையில் பெண்களும்; வேட்டி சட்டைகளில் ஆண்களும் இருந்தால்த்தான் யாழ்ப்பாண கலாச்சாரம் காக்கப்படும் என நீங்களாகவே கற்பனை பண்ணிகொண்டு, அவ்வாறு இல்லாதவர்களை கலாச்சார சீர்கேட்டாளர்களாக எண்ணினால்; உங்களுக்கு நாங்கள் சொல்லாது ஒன்றே ஒன்றுதான் "VERY SORRY"

உலகம் போகிற வேகத்தில்த்தான் இனிவரும் காலங்களில் எங்களாலும் போக முடியும்; கலாச்சாரம் முக்கியம்தான்; அதற்காக கலாச்சாரத்தை மட்டுமே கட்டி பிடித்துக்கொண்டு இங்குள்ளவர்கள் 50 ஆண்டுகள் பின்நிற்க வேண்டும் என்று கலாச்சார காவலர்கள் நினைத்தால் அவர்களுக்கு AGAIN "VERY SORRY"தான். நான் ஒன்றும் முற்போக்கு வாதம் செய்யவில்லை, இதுதான் இன்றைய யதார்த்தம். உலகத்துடன் தன்னை இணைக்கும் முயற்ச்சியில் எல்லா துறைகளிலும் வேகமாக வளர்ந்து வரும் யாழ்ப்பாணத்தின் இன்றைய தளம்பல் நிலை தற்காலிகமானது; தளம்பல் நிலை சீரடைந்து உரிய வளர்ச்சியை எட்டும்போது இப்போது காணப்படும் சில வேண்டத்தகாத 'சீரழிவுகள்' நிச்சயமாக இல்லாதுபோகும், இல்லாது போக வேண்டும்!!!!!!!!!

அந்த நாளுக்காக காத்திருக்கும்,
யாழ் மக்களில் ஒருவன்.