Wednesday, December 28, 2011

2011 இல் எனக்குப் பிடித்த திரைப்படங்கள் & திரையிசைப் பாடல்கள்

இந்தாண்டு வெளிவந்த திரைப்படங்களில் நான் பார்த்ததில் எனக்கு மிகவும் பிடித்த திரைப்படங்களை வரிசைப்படுத்தியுள்ளேன். வசூல், படத்தின் தரம் இவை எதையும் கவனத்தில் கொண்டு இந்த வரிசைப்படுத்தல் இடம்பெறவில்லை; முழுக்க முழுக்க எனக்கு பிடித்த திரைப்படங்களின் வரிசைதான் இது. அதேபோல இந்த ஆண்டு வெளிவந்த பாடல்களில் என்னை அதிகம் ஈர்த்த பாடல்களில் பத்து பாடல்களை பகிர்கின்றேன். ஒவ்வொருவருக்கும் ரசனை மாறுபடலாம்; உங்கள் இரசனைகளை பகிர நினைப்பவர்கள் கீழுள்ள கமன்ட் பெட்டியில் தங்களுக்கு பிடித்த வரிசையை பகிர்ந்து கொள்ளுங்கள் :p

2011 இல் பிடித்த 10 திரைப்படங்கள்


(10) டூ
இதுவொரு லோ பட்ஜெட் திரைப்படம்; 'பொட்டலம்' கார்த்தி சொல்லியிருக்காவிட்டால் நிச்சயம் இந்த திரைப்படத்தை பார்த்திருக்க மாட்டேன். DVD இல்த்தான் பார்த்தேன், பெரிதாக புதுமை என்றெல்லாம் ஒன்றுமில்லை, வழமையான கதைதான்; ஆனால் சுவாரசியமான திரைக்கதை, அலட்டல் இல்லாத இயல்பான நடிப்பு, மிகச்சிறப்பான வசனங்கள் என நிறைவான திரைப்படம், பொழுதுபோக்கிற்கு திரைப்படம் பார்க்க நினைப்பவர்களுக்கு 'டூ' திரைப்படம் நிச்சயம் பிடிக்கும்.....

(9) குள்ளநரிக் கூட்டம்
'விழிகளிலே விழிகளிலே' பாடலுக்காக பார்த்த திரைப்படம், முதல்ப்பாதி விறுவிறுப்பு, இரண்டாம்பாது சுமாராக இருந்தாலும் சலிப்பை ஏற்ப்படுத்தவில்லை. விஸ்ணு மற்றும் ரம்யாவின் காதல்க் காட்சிகள் யாதார்த்தம் கலந்த கவிதை. அன்றாட வாழ்வின் நாம் சந்திக்கும் சில விடயங்களை சுவாரசியமாக திரைக்கதையில் நுளைத்திருப்பார் அறிமுக இயக்குனர் ஸ்ரீபால்ராஜ்.....

(8) காவலன்
2005 க்கு அப்புறம் எனக்கு எப்படி ஒரு விஜய் படம் பிடித்தது என்பது சத்தியமாக தெரியாது:p கிளைமாக்ஸ் தவிர்த்து மிகுதி எல்லாமே மிகவும் பிடித்திருந்தது. விஜயக்குள் இருக்கும் நடிகனை யாராவது எப்போதாவதுதான் தட்டி எழுப்புவார்கள் (விஜய்க்கு நடிக்கத் தெரியாது என்பதை நான் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டேன்) இந்தத்தடவை சித்திக்கின் முறை, விஜயை சரியாக பயன்படுத்தியிருந்தார். வடிவேல் - விஜய் காமடி பட்டாசு; அசினின் முகம் முதுமையினை தொட்டாலும் நடிப்பில் முதிர்ச்சி நன்றாக தெரிந்தது; விஜயை பிடிக்காதவர்களுக்கும் காவலன் நிச்சயம் பிடிக்கும்!!

(7) மங்காத்தா
'தலை' ஆடிய மங்காத்தா, 'தலை'யால் மட்டுமே ஆடக்கூடிய மங்காத்தா பிடிக்காமல் போயிருந்தால்த்தான் ஆச்சரியம்; மங்காத்தா - முழுக்க முழுக்க அஜித் ஆடிய 'ONE MAN SHOW'. நெகட்டிவ் ரோலுக்கு ரஜினிக்கு அப்புறம் அஜித்தான் என்பதை மீண்டுமொருதடவை மங்காத்தா உணர்த்தியது. லாஜிக் மறந்து பார்த்தால் மங்காத்தா ஒரு பக்கா கமர்சியல் விருந்து........

(6) கோ
கம்யூனிசம், ஈரவெங்காயம் என்று வெறுவாய் மெல்பவர்களை தவிர்த்து இந்தப்படம் யாருக்காவது பிடிக்காமல் போயிருந்தால்த்தான் ஆச்சரியம்!! மிகமிக நேர்த்தியான திரைக்கதை, ஜீவாவின் சிறந்த on Screen Present, பாடல்கள், ஒளிப்பதிவு, இயக்கம் என அனைத்தும் சிறப்பாக அமைந்த திரைப்படம். கே.வி.ஆனந்த் தன்னை ஒரு சிறந்த கமர்சியல் இயக்குனராக இரண்டாவது தடவையாக நிரூபித்திருக்கின்றார்......

(5) வானம்
விண்ணைத்தாண்டி வருவாயா சிம்புவைவிட வானம் சிம்பு என்னை அதிகமாக ஈர்த்துள்ளார்; ஐந்து கதைகளை குழப்பமில்லாமல் நேர்த்தியான திரைக்கதைமூலம் ஒன்று சேர்த்த இயக்குனர் க்ரிஷ் அடுத்த திரைப்படத்திற்க்கான எதிர்பார்ப்பை கூட்டியுள்ளார். சந்தானம் அப்பாவித்தன கேரக்டரில் சிம்புவுடன் சேர்ந்து காமடியில் கலக்கியிருப்பார்; சிம்புவிற்கு ஜோடியாக நடித்த ஜாஸ்மின் பாஸினிற்கு கொடுக்கப்பட்ட குரலில் வசன உச்சரிப்பு நன்றாக இருக்கும்.....

(4) பயணம்
ராதாமோகன்; எனக்கு பிடித்தமான இயக்குனர்களில் ஒருவர். விமர்சனங்கள் நேர்மறையாக வந்ததால் பார்க்கும் ஆர்வம் அதிகமாகி 'பயணம்' திரைப்படத்தை பார்த்தேன்; மிகவும் பிடித்துப்போனது. தன் திரைப்படத்தில் வரும் ஒவ்வொரு கேரக்டர்களுக்கும் தீனி போடுவதில் ராதாமோகனை அடிச்சிக்க முடியாது; பயணத்திலும் அதை நீங்கள் உணரலாம், வழமைபோலவே ஷார்ப்பான வசனங்கள், கதையுடன் இழையோடும் நகைச்சுவை என 'பயணம்' ஒரு வித்தியாசமான அனுபவம்......

(3) தெய்வத்திருமகள்
தெய்வதிருமகள் I Am Sam திரைப்படத்தின் copy என்பது எனக்கு படம் பார்த்துவிட்டு வெளியே வரும்போதெல்லாம் தெரியாது; ஒரு நாவலை சுவாரசியமாக படித்த திருப்தியை கொடுத்த தெய்வத்திருமகள் COPY ஆக இருந்தாலும் இப்போதும் எனக்கு பிடித்த திரைப்படம்தான். விக்ரம் ஒரிஜினலை இமிடேட் செய்ததாக கூறினார்கள்; எனக்கு விக்ரம் நடிப்பு ரொம்ப ரொம்ப பிடித்திருந்தது; சந்தானத்தின் காமடியும் செம டைமிங்; அப்புறம் 'நிலா'வாக பேபி சாரா, 'நிலா' கொள்ளை கொள்ளாத மனமேது? கிளைமாக்ஸ்சில் விக்ரம், சாராவின் எக்ஸ்பிறசனும், ஜி.வி.பிரகாஷ்குமாரின் பின்னணி இசையும் எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பை ஏற்ப்படுத்தாதவை......

(2) மயக்கம் என்ன
மயக்கம் என்ன; பக்கா செல்வராகவன் திரைப்படம், படம் பார்த்துவிட்டு திரையரங்கை விட்டு முழுத் திருப்தியோடு வீடு திரும்பிய திரைப்படம். செல்வராகவன்மீது எனக்கு மிக அதிக எதிர்பார்ப்பு எப்போதும் இருக்கும், அதை செல்வா 'மயக்கம் என்ன'வில் முழுமையாக நிவர்த்தி செய்திருந்தார். தனுஷ், ரிச்சா இருவரும் ஒருவருக்கொருவர் சளைக்காமல் நடிப்பில் திறமையை வெளிக்காடினார்கள் என்றால்; ஜி.வி.பிரகாஷும் ராம்ஜியும் இசையிலும் ஒளிப்பதிவிலும் மிகச்சிறந்த உழைப்பை கொட்டியிருந்தார்கள். வழமையான செல்வா படங்களைப்போல எதிர்மறை முடிவில்லாமல் நேர்மறை கிளைமாக்ஸ் இருந்தமை 'மயக்கம் என்ன'வின் சிறப்பு......

(1) ஆடுகளம்
ராதாமோகன் வரிசையில் எனக்கு பிடித்த மற்றுமொரு இயக்குனர் வெற்றிமாறனின் இயக்கத்தில் 'ஆடுகளம்' முழுத் திருப்தியை கொடுத்தது. தேசிய விருதுகளை அள்ளிக்கொட்டிய 'ஆடுகளம்'; விருதிற்கு முழுத் தகுதியானதே!!! படம் முழுவதும் வெற்றிமாறன் டச்; தனுஷ் - ஆண்டுக்கு ஆண்டு நடிப்பில் ஏற்ப்படும் வளர்ச்சி Power Play யில் ஷேவாக் அடிக்கும்போது இருக்கும் Run Rate Graph போன்றது, அசுர வளர்ச்சி!!! பாடல்கள், ஒளிப்பதிவு, பின்னணி இசை என அமர்க்களப்படுத்திய ஆடுகளத்தின் Interval Blog படு பிரமாதமாக இருக்கும். என்னை மிகவும் கவர்ந்த ஆடுகளத்தால் தமிழ் சினிமாவிற்கு பெருமை என்பது மகிழ்ச்சியே.

*---------------------*


2011 இல் பிடித்த பத்து பாடல்கள்


10) கன்னித்தீவு பொண்ணா
மிஸ்கின் திரைப்படங்களில் ஒரு பாட்டு (ஒரே பாணியில்த்தான்) எப்பவுமே அமர்க்களமாக நடன வடிவமைப்பு செய்யப்படுவது வழக்கம்; இம்முறையும் 'கன்னித்தீவு பொண்ணா' பாடலுக்கு அருமையான நடன வடிமைப்பை கொடுத்திருக்கிறார்கள்; இசையமைப்பாளர் யாரென்று தேடினால் வெறும் கே(K) என்றுதான் வருகிறது; பல குறும்படங்கள், டாக்குமெண்டரிகளுக்கு இசையமைத்தவராம், அவரது பெப்பியான இசையும் M.L.R.கார்த்த்கேயனின் குரலும் இந்த பாடலை முதல்த்தடவை கேட்டதுமுதல் முனுமுனுக்க வைத்தது......

(9) நங்காய் நிலாவின் தங்காய்
இந்த பாடலில் இசையையும் தாண்டி வெளிநாட்டு நடன கலைஞர்களின் நடனம் அட போட வைத்தது; இரண்டாவது சரணத்திற்கு ஜெயம் ரவி நடனமாடாமல் அதற்கும் வெளிநாட்டு கலைஞர்கள் ஆடியிருந்தால் இன்னமும் சிறப்பாக இருந்திருக்கும்; அப்புறம் ஹென்சிகா........

(8) என்னமோ ஏதோ
ஹாரிஸின் அட்டகாசமான மெலடி; ஜீவா, கார்த்திகா, ஒளிப்பதிவு, சிம்பிளான நடன அசைவு என இந்தப் பாடல் பிடித்ததற்கு பல காரணங்கள்.....

(7) ஆரிரோ ஆராரிரோ
சுமாரான பாடலையும் தன குரலால் சூப்பராக மாற்றும் தந்திரம் தெரிந்த பாடகர் வரிசையில் ஹரிச்சரனுக்கும் இடமுண்டு; இந்த பாடலின் மெட்டு அருமை, அதை தன குரலால் ஹரிச்சரண் இன்னமும் சிறப்பாகியிருக்கிறார். ஹரிச்சரனின் குரல், நா.முத்துக்குமாரின் பாடல் வரிகள், ஜி,வி.பிரகாஷ்குமாரின் இசை, விக்ரம் மற்றும் சாராவின் பெர்போமன்ஸ் போன்ற காரணங்களால் இந்த பாடல் மிகவும் பிடிக்கும்.

(6) பிறை தேடும் இரவிலே
ஜி.வி.பிரகாஷ்குமாரின் கரியரில் மிகச்சிறந்த படல்களின் வரிசையில் இந்தப்பாடல் எப்போது இடம்பெற்றிருக்கும்; அருமையான மெட்டுக்கு சைந்தவியின் குரல் பலாச்சுளை மேல் தேனிட்டது போல தித்திப்பாக இருக்கும். காட்சிகளின் பின்னணியில் இசைக்கும் இந்தப்பாடலுக்கு; தகுந்த காட்சிகளை சரியான முறையில் தேர்ந்து கோர்த்திருப்பார்கள்......

(5) உன் பெயரே தெரியாது
இந்த பாடலில் மதுசிறியின் குரல் சிறப்பாக இருக்கும்; எனக்கு மதுசிறியை பிடிக்கா விட்டாலும் (காரணம் சாதனா குரலை இமிட்டேட் செய்வதால்) இந்த பாடலில் அவர் குரலில் தோ ஒரு கிறக்கம் ஏற்ப்பட்டத்தை தவிர்க்க முடியவில்லை. அனன்யாவும், பின்னணியில் இசைத்த பாடலுக்கு அமைக்கப்பட்ட காட்சி அமைப்பும் இந்த பாடலுக்கு கூடுதல் பலம்.

(4) ஹையையோ நெஞ்சு....
ஆயிரம் கைகள் மறைத்தாலும் ஆதவன் மறைவதில்லை; எத்தனை பாடகர்கள் வந்தாலும் எஸ்.பி.பி எஸ்.பி.பிதான். தன் மகன் சரணுடன் இணைந்து எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடிய இந்த பாடலின் பலமே அவரது கொஞ்சலான குரல்தான். இந்த பாடல் ஆரம்பிக்குமுன் வரும் இசை பிரமாதம்; கட்டிப்போடும் இசை, மயக்கும் குரல் என தித்திப்பாட பாடலை வழங்கிய ஜி.வி.பிரகாஷ்குமாருக்கு Hats Off.......

(3) யாத்தே யாத்தே
ஆடுகளத்தில் இருந்து இரண்டாவது தெரிவிது; "உன்னை வெள்ளாவி வச்சித்தான் வெளுத்தாங்களா? இல்லை வெயிலுக்கு காட்டாம வளர்த்தாங்களா" வரிகளால் ஏற்ப்பட்ட ஈர்ப்பு, திரும்ப திரும்ப கேட்க்க கேட்க்க இசைமீதும் பிடிப்பை ஏற்ப்படுத்தியது; திரைப்படம் வந்த பின்னர் காட்சியமைப்பு பாடலுக்கு மேலும் பலத்தை உண்டாக்கியது; தனுசின் பெர்போமான்ஸ், வேல்றாஜ்சின் ஒளிப்பதிவு, அழகுப்பதுமையாய் தப்சி என இந்த பாடல் விஷுவலாகவும் கொள்ளை கொண்டது.......

(2) விழிகளிலே விழிகளிலே
'விழிகளிலே விழிகளிலே' பாடல் குள்ளநரிக்கூட்டம் திரைப்படத்தின் வெற்றிக்கான முக்கிய காரணிகளில் ஒன்று; கார்த்திக், சின்மயி குரல்களில் V.செல்வகணேஷ் இசையில் சிறப்பான மெலடியாக 2011 இல் எனக்கு மிகவும் பிடித்த பாடலிதுதான். நாயகன் விஷ்ணு மற்றும் நாயகி ரம்யா இருவரின் பங்களிப்பில் விஷுவல் கூட யதார்த்தமாக இயல்பாக அமைந்திருக்கும்.

(1) சர சர சாரகாத்து


ஒரு பாடலை அதிகதடவை you tube இல் பார்த்திருப்பேன் என்றால் அது நிச்சயம் 'சரசர' பாடல்தான். கரணம் ஒளிப்பதவு, இசை, குரல், செட் (கலை), காஸ்டியூம், லொகேஷன் மற்றும் இனியா; இனியா கண்களால் கொடுக்கும் எக்ஸ்பிரஷன்..... சான்சே இல்லை, இன்றைய தேதியில் என்னோட பேவரிட் ஹீரோயின் "சர சர" பாடல் காட்சி 'இனியா'தான். சின்மயியின் குரலும் கேட்ப்பதற்கு மிகவும் இனிமையாக இருக்கும்....(1*) கொலைவெறி


இந்தப் பாடலுக்குரிய திரைப்படம் இந்தாண்டு வெளிவரவில்லை, ஆனால் படக்குழுவினர் பாடலை உருவாக்குவது போன்று வெளியிடப்பட்ட இந்த பாடலின் வீடியோ உலகம் முழுவதும் அடைந்த பிரபலமும்; YouTube இல் பெற்ற நினைத்திக்கூட பார்க்கமுடியாத 'ஹிட்சும்', இந்த பாடலை தழுவி YouTube இல் வெளிவந்த ஏராளமான வேஷன்களும் அனைவரும் அறிந்ததே. இந்த வெற்றியால் தனுஷ் ரத்தன் டாடா, அமிதாப் வீடுகளில் விருந்திற்கு அழைக்கப்பட்டதும்; ஹிர்த்திக், அபிஷேக்கிற்கு கதை சொன்னதாகவும் கூறப்பட்டதும், இப்போது பிரதமர் வீட்டிலேயே விருந்திற்கு அழைக்கப்பட்டிருப்பதாக வரும் செய்தியும் இந்தப்பாடலால் தனுசிற்கு கிடைத்த மிகப்பெரிய லாட்ரி என்றே சொல்லலாம் :-))

பாடல் வரிகள், தனுசின் குரல் என்பவற்றையும் தாண்டி Making Of The Song - Video உண்மையிலேயே ரசிக்கும்படியாக உள்ளது; அனைத்தையும் தாண்டி இசையும் சிறப்பாக அமைந்தது இந்த பாடலின் வெற்றிக்கு முக்கிய காரணம், எல்லோருக்கும் (விதிவிலக்குகளைவிட) பிடித்த 'கொலைவெறி' எனக்கு பிடித்ததில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை :pMonday, December 26, 2011

2011 இல் தமிழ் சினிமா..

2010 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2011 இல் தமிழ் சினிமா வணிகரீதியாகவும், தரமான படைப்புக்களை கொடுத்த வகையிலும் சற்றே பின்தங்கி இருந்தாலும் 2011 இலும் பல தரமான மற்றும் வணிகரீதியான வெற்றிகள் தமிழ் சினிமாவில் கிடைக்கப் பெற்றதை மறுக்க முடியாது. 2012 இல் காலடி எடுத்துவைக்கும் இந்த நேரத்தில் இந்த ஆண்டு தமிழ் சினிமாவில் வெளிவந்த திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள், இயக்குனர்கள், இசையமைப்பாளர்கள் போன்றோரது பங்களிப்புக்கள் பற்றிய ஒரு சிறு அலசல்தான் இப்பதிவு........

* 2010 ஆம் ஆண்டிற்காக இவ்வாண்டின் ஆரம்பத்தில் 13 தேசிய விருதுகள் கிடைக்கப்பெற்றது மிகப்பெரும் சாதனை; இந்த சாதனை எதிர்காலத்திலும் தொடரும் என நம்பலாம்!!!

திரைப்படங்கள்
* 2011ஆம் ஆண்டு தை 1 முதல் தற்போதுவரை (மார்கழி 25 வரை) மொத்தமாக 126 திரைப்படங்கள் திரையிடப்பட்டுள்ளன; இவற்றில் அதிக பட்சமகாக ஆவணி மாதத்தில் 15 திரைப்படங்கள் திரையிடப்பட்டுள்ளன, குறைந்த பட்சமாக கார்த்திகை மாதம் 8 திரைப்படங்கள் திரையிடப்பட்டுள்ளன. தை, சித்திரை, புரட்டாதி, ஐப்பசி, கார்த்திகை மாதங்களில் தலா ஒரு கிழமை தவிர்த்து மிகுதி அனைத்து கிழமைகளிலும் குறைந்தது ஒரு திரைப்படமேனும் வெளிவந்தது.

* இந்த ஆண்டின் மிகப்பெரும் வெற்றித் திரைப்படம் 'மங்காத்தா'; வெங்கட் பிரபு இயக்கத்தில் அஜித்குமார் நடித்த 'மங்காத்தா' 2011 இல் வணிகரீதியில் வெற்றிபெற்ற முதன்மையான திரைப்படம். அதேபோல கே.வி.ஆனந்த் இயக்கத்தில் ஜீவா நடித்த 'கோ' திரைப்படம் இந்த ஆண்டின் அதிகப்படியான லாபம் கொடுத்த மற்றுமொரு மிகப்பெரிய வெற்றித் திரைப்படம். இவற்றுடன் கார்த்தியின் 'சிறுத்தை', லாரன்ஸ் இயக்கி நடித்த 'காஞ்சனா' இரண்டும் வணிகரீதியில் மிகச்சிறந்த வரவேற்ப்பை பெற்ற மற்றைய திரைப்படங்கள். இவை தவிர விமர்சன ரீதியில் சிறந்த வரவேற்ப்பை பெற்றுக்கொண்ட 'எங்கேயும் எப்போதும்' திரைப்படம் வணிகரீதியில் மிகச்சிறந்த வசூலை அள்ளிய முக்கிய திரைப்படம்.

* சூர்யாவின் 'ஏழாம் அறிவு', விஜயின் 'வேலாயுதம்' திரைப்படங்கள் விமர்சனரீதியிலும், வணிக ரீதியிலும் மிக்ஸ் ரிப்போட்டை கொடுத்தாலும் அந்ததந்த தரப்புக்களால் மட்டும் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்ட திரைப்படங்கள்; இவை இரண்டும் குறைந்தபட்சம் போட்ட பணத்தையும், விநியோகிஸ்தர்களது பணத்தையும் மீட்டுக்கொடுத்திருக்கும் என்று நம்பலாம்.

* இவை தவிர விமர்சனரீதியில் நல்ல வரவேற்ப்பை பெற்ற திரைப்படங்களான ஆடுகளம், தெய்வத்திருமகள், காவலன், வானம், மயக்கம் என்ன, பயணம், குள்ள நரிக் கூட்டம், யுத்தம் செய் போன்றவையும் அதிக லாபத்தை கொடுக்காவிட்டாலும் குறிப்பிடத்தக்க வசூலை பெற்ற திரைப்படங்கள். மற்றும் விமர்சன ரீதியில் நல்ல வரவேற்ப்பு பெற்ற 'ஆரண்ய காண்டம்', 'வாகை சூடவா' திரைப்படங்கள் வணிகரீதியில் வரவேற்ப்பை பெறாத திரைப்படங்கள்...

* நடுநிசி நாய்கள், அவன் இவன், ஒஸ்தி, ராஜபாட்டை, வேங்கை, மாப்பிள்ளை, வெடி, எங்கேயும் காதல் போன்ற திரைப்படங்கள் வணிக ரீதியிலும், விமர்சன ரீதியிலும் எதிர்பார்ப்புக்களை ஏமாற்றிய முக்கிய திரைப்படங்கள். (ராஜபாட்டை, ஒஸ்தி இரண்டும் தற்போது ஓட்டிக்கொண்டிருந்தாலும் எதிர்மறை விமர்சனங்களை வைத்தே இரண்டும் வணிக ரீதியில் ஏமாற்றியதாக குறிப்பிடப்பட்டுள்ளது)

நடிகர்கள்
* இந்த ஆண்டு தமிழ் சினிமாவின் உச்சங்களான ரஜினி, கமல் இருவரது திரைப்படங்களும் வெளிவரவில்லை; 1975 இல் இருந்து ரஜினி, கமல் இருவரில் குறைந்தபட்சம் ஒருவரது திரைப்படமேனும் வெளிவராத ஆண்டாக 2011 அமைந்துவிட்டது.

* 2011 ஐ பொறுத்தவரை அஜித்திற்கு இது ஒரு கனவு ஆண்டு; 2007 பில்லாவிற்கு பின்னர் ஸ்திரமான வெற்றியை தேடிக்கொண்டிருந்த அஜித்திற்கும், அவர் ரசிகர்களுக்கும் 'மங்காத்தா' மிகத்திருப்தியான திரைப்படமாக அமைந்ததுடன் மிகச்சிறப்பான வசூலையும் அள்ளிக் குவித்துள்ளது.

* விஜயை பொறுத்தவரை இதற்கு முன்னைய 3 ஆண்டுகளைவிட 2011 சிறப்பான ஆண்டாகவே அமைந்துள்ளது; காவலன் திரைப்படம் வழமைக்கு மாறான விஜய் திரைப்படமாக வெளிவந்து சுமாரான வசூலை பெற்றது; அடுத்து தீபாவளிக்கு வெளிவந்த வேலாயுதம் மிக்ஸ் ரிப்போட்டை பெற்றாலும் முதலுக்கும், விநியோகிச்தர்களுக்கும் மோசம் செய்திருக்காது என்று நம்பலாம் !!

* சூர்யாவிற்கு 7ஆம் அறிவு மட்டும்தான் 2011 இல் வெளிவந்த ஒரே திரைப்படம்; ஈழத்தமிழர் விடயத்தை கையிலெடுத்த விவகாரத்தால் சர்ச்சைகளும், மிக்ஸ் ரிப்போட் விமர்சனங்களும் 7ஆம் அறிவிற்கு எதிராக இருந்தாலும்; 7ஆம் அறிவு கணிசமான வசூலை வசூலித்தது; அதிகமான விலைக்கு விற்கப்பட்டதால் முதலை மீட்க்கும் அளவிற்கு வசூல் கிடைத்ததா என்பது கேள்விக்குறிதான்!! ஆனாலும் சென்னை பாக்ஸ் ஆபீசில் எந்திரன், சிவாஜி, தசாவதாரம் திரைப்படங்களுக்கு அடுத்து 9 கோடி இலக்கை தாண்டிய நான்காவது திரைப்படமாக 7ஆம் அறிவு தன்னை முன்னிறுத்தியுள்ளது.

* விக்ரமிற்கு அந்நியனுக்கு பின்னர் இன்னமும் ஒரு பெரிய ஹிட் கிடைத்தபாடில்லை; இருந்தாலும் விக்ரமிற்கு இந்தாண்டு ஓரளவு ஆறுதலாக 'தெய்வத்திருமகள்' மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்ப்பை பெற்றதோடு கணிசமான வசூலையும் குவித்தது. ஆனாலும் தற்போது வெளியாகி இருக்கும் 'ராஜபாட்டை' வெற்றி பெறவோ, கணிசமான வசூலை குவிக்கவோ சாத்தியம் மிகமிக குறைவே!!!!

* தனுசிற்கு இந்தாண்டு சிறப்பான ஆண்டு; ஆடுகளத்திற்கு தேசியவிருது (2010) கிடைத்தது ஒரு சிறப்பென்றால்; தனுஸ் எழுதிப் படிய 'கொலைவெறி' பாடல் உலகம் முழுவதும் ரீச் ஆகி இந்தியா இதுவரை காணாத வெற்றியை பெற்றது மிகப்பெரும் சாதனை. கூடவே 'மயக்கம் என்ன' திரைப்படத்தில் எல்லோராலும் பாராட்டப்பட்ட சிறப்பான நடிப்பும் தனுசிற்கு நல்ல பெயரை பெற்றுக் கொடுத்தது. ஆனாலும் வேங்கை, மாப்பிள்ளை என இரண்டு கமர்சியல் திரைப்படங்களும் தனுசிற்கு தோல்வியையே கொடுத்தன.

* 'கோ' என்னும் மிகப்பெரும் வெற்றித் திரைப்படத்தை கொடுத்த 'ஜீவா' இந்தாண்டு சிங்கம்புலி, வந்தான் வென்றான், ரௌத்திரம் என மூன்று தோல்விகளையும் கொடுத்துள்ளார்.

* 'வானம்' திரைப்படத்தில் கிடைத்த பெயரை 'ஒஸ்தி' திரைப்படத்தில் சிம்பு கோட்டைவிட்டிருந்தார்.

* 2006 ஆம் ஆண்டிற்கு பின்னர் இந்தாண்டு பிரஷாந்த் நடித்த 'பொன்னர் ஷங்கர்' மற்றும் 'மம்பட்டியான்' என இரு திரைப்படங்களும் ஓரளவு பெரும் பட்ஜெட்டிலேயே எடுக்கப்பட்டது; பொன்னர் ஷங்கர் புஸ்வானமாக போனாலும் மம்பட்டியான ஓரளவு சுமாராக போகின்றது......

* விஷாலுக்கு அவன் இவன், வெடி என நடித்த இரு திரைப்படங்களும் காலை வாரினாலும், அவன் இவனில் விஷாலின் நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டது.

* ஆரியா, ஜெயம்ரவி, பரத், விமல் போன்றோருக்கு 2011 கைகொடுக்கவில்லை; 2010 இல் அதிக திரைப்படங்களில் சொதப்பிய ஜெய் 2011 இல் நடித்த ஒரே திரைப்படமான எங்கேயும் எப்போதும் அவருக்கு நல்ல பெயரையும் வசூலையும் கொடுத்தது.

* விஜயகாந்த், சத்யராஜ், சரத்குமார், அர்ஜுன் போன்ற மூத்த நடிகர்களது திரைப்படங்கள் எவையும் (கதாநாயகர்களாக) வெளியாகவில்லை; நீண்ட நாட்களுக்கு பின்னர் பார்த்தீபன் நடித்த 'வித்தகன்' அவருக்கு கை கொடுக்கவில்லை.

நடிகைகள்
* திரிஷாக்கு ஒன்னே ஒன்னு கண்ணே கண்ணென்று 2011 இல் 'மங்காத்தா'மட்டும்தான்; படத்தில் திரிஷாவிற்கு அதிகம் வேலையில்லாவிட்டாலும் கிடைத்ததை நிறைவாக செய்திருந்தார்.

* அசின் நீண்ட இடைவெளிக்கு பின்னர் காவலனில் சிறப்பாக தனது திறமையை வெளிக்காட்டியிருப்பார்; ஆனாலும் அவரது முகத்தில் முதுமை இழையோடியது அதிகமானவர்கள் குறிப்பிட்ட விடயம்.

* அனுஷ்கா இந்தாண்டு நடித்த இரண்டு திரைப்படங்களும் அவருக்கு நல்ல பெயரை பெற்றுக் கொடுத்தது; 'வானம்' மற்றும் 'தெய்வதிருமகள்' திரைப்படங்கள்தான் அந்த இரு திரைப்படங்களும்.

* தமன்னாக்கு இந்தாண்டு நடித்த இரண்டு திரைப்படங்களில் சிறுத்தை ஹிட்டாகவும் வேங்கை பிளப்பாகவும் அமைந்தாலும் இரண்டிலும் அவருக்கு முக்கியத்துவம் குறைவே!!

* மூன்று நான்கு படங்களில் அஞ்சலி நடித்திருந்தாலும் 'எங்கேயும் எப்போதும்' இந்தாண்டின் சிறந்த நடிகைக்கான விருதை 'அஞ்சலிக்கு' ஆங்காங்கே பெற்றுக் கொடுக்கலாம்!!!

* 2011 இல் அதிகமான தமிழ் நெஞ்சங்களை கொள்ளை கொண்ட நாயகி பேபி 'சாரா', தெய்வதிருமகளில் நிலாவாக ஆண், பெண் பேதமில்லாமல் அனைவரையும் பித்துப் பிடிக்கவைத்த 'சாரா' இந்த ஆண்டுக்கான தேசியவிருதுப் பட்டியலில் நிச்சயம் இடம் பிடிப்பார்.

* ஹன்சிகா இந்தாண்டு அறிமுகமாகி 'அழகால்' மட்டும் இளசுகளை கொள்ளை கொண்டு உச்சத்தை அடைந்தவர்; எங்கேயும் காதல், மாப்பிள்ளை, வேலாயுதம் திரைப்படங்களில் நடித்த ஹன்சிகா அடுத்த ஆண்டு அதிக திரைப்படங்களில் நடிகர்களால் ரெக்கமன்ட் செய்யப்படலாம் :-))

* இவர் தவிர 'மயக்கமென்ன' வில் கலக்கிய ரிச்சா, 'வாகைசூடவா' இனியா, '7 ஆம் அறிவு' ஸ்ருதிஹாசன், 'கோ' கார்த்திகா, ஆடுகளம் 'தப்சி' என இந்தாண்டு இளசுகளை கொள்ளைகொண்ட புதிய அறிமுகங்கள் அதிகம்.

இயக்குனர்கள்
* 2011 இல் தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களான மணிரத்தினம், ஷங்கர் படங்கள் எவையும் வெளிவரவில்லை.

* இவர்களுக்கு அடுத்து மிகப்பெரும் எதிர்பார்ப்பை தன்னகத்தே கொண்ட இயக்குனர் பாலாவின் 'அவன் இவன்' திரைப்படம் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கிடையே வெளியாகினாலும் சரியாக போகாவில்லை.

* மற்றுமொரு முன்னணி இயக்குனர் A. R.முருகதாஸ் '7 ஆம் அறிவு' திரைப்படத்தை இயக்கியிருந்தார்; நிச்சயமாக அவர் எதிர்பார்ப்பை பூர்த்துசெயயவில்லை ஆயினும் திரைப்படம் தப்பித்துக்கொண்டது.

* ஆயிரத்தில் ஒருவன் சறுக்கலுக்கு பின்னர் செல்வராகவன் இயக்கிய மயக்கம் என்ன மிக்ஸ் ரிப்போட்டை விமர்சன ரீதியாக எதிர்கொண்டாலும் இளைஞர்களின் வரவேற்ப்பை பெற்றது; வசூலிலும் பரவாயில்லை ரகம்.

* வெங்கட்பிரபு, வெற்றிமாறன், கே.வி.ஆனந்த், லாரன்ஸ் நால்வரும் இந்தாண்டு முத்திரையை பதித்த முக்கிய இயக்குனர்கள்.

* இந்தாண்டு புதிய இயக்குனர்கள் அதிகம் ஆதிக்கம் செலுத்தவில்லை எனினும் 'எங்கேயும் எப்போதும்' திரைப்பட இயக்குனர் M.சரவணன் மிகச்சிறந்த புதிய இயக்குனராக அறியப்பட்டுள்ளார். தெலுங்கில் இரண்டு திரைப்படங்களை இயக்கியிருந்தாலும் தமிழில் முதல்முதலாக 'வானம்' திரைப்படத்தை இயக்கிய கிரிஷும் கவனிக்கத்தக்கவர்.

* சித்திக், ராதாமோகன், மிஸ்க்கின் ஆகியோர் தமக்கே யுரிய பாணியில் சிறப்பாக இயக்கியிருந்த அதே நேரம்; பழமையான இயக்குனர்களான எஸ்.எ.சந்திரசேகர், P.வாசு இருவரும் இயக்கத்தில் சொதப்பியிருந்தனர்.

* கமர்சியல் சினிமாவின் முன்னணி இயக்குனர்களான தரணி, ஹரி போன்றோருக்கு இந்தாண்டு சரியாக அமையவில்லை.

* அதேபோல இந்தாண்டின் மிகப்பெரும் சொதப்பல்கள் சுசீந்திரன் (ராஜபாட்டை) & கௌதம் மேனன் (நடுநிசி நாய்கள்)

* கே.எஸ்.ரவிக்குமார் திரைப்படங்கள் எவையும் வெளிவரவில்லை; 1990 இல் இயக்குனராக அறிமுகமாகியது தொடக்கம் 2011, 2007, 2005 ஆம் ஆண்டுகளில் மட்டும்தான் ரவிக்குமார் படங்கள் வெளிவரவில்லை.

* பிரபுதேவா இயக்கிய எங்கேயும் காதல், வெடி இரு திரைப்படங்களும் வணிக ரீதியாக தோல்வியை தழுவிய திரைப்படங்கள்

* அதிகம் விமர்சனத்தை சந்தித்த இயக்குனர் விஜய்; தெய்வத்திருமகனை I AM SAM திரைப்படத்தில் இருந்து ஆட்டையை போட்டதாக இவர்மீது சரமாரி தாக்குதல் இடம்பெற்றது குறிப்பிட்டது.

இசையமைப்பாளர்கள்
* A.R.ரஹுமான் இசையில் எந்த திரைப்படங்களும் இவ்வாண்டு வெளிவரவில்லை.

* இந்தாண்டின் இசையமைப்பாளர்களில் அதிகம் பிரகாசித்தவர் ஜீ.வி.பிராகாஷ்குமார்; 'ஆடுகளம்', 'தெய்வதிருமகள்', 'மயக்கம் என்ன' என இசையமைத்த மூன்று திரைப்படங்களிலும் பாடல்க்களும் சரி பின்னணி இசையும் சரி குறிப்பிட்ட திரைப்படங்களுக்கு மிகப்பெரும் பலம் சேர்த்தது.

* ஹாரிஸ் ஜெயராஜ் 'எங்கேயும் காதல்', 'கோ', '7 ஆம் அறிவு' என மூன்று திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார்; இவற்றில் அதிகமான பாடல்கள் பெரிதும் ரசிக்கப்பட்டவை; கோ திரைப்படத்தில் இடம்பெற்ற 'என்னமோ ஏதோ' இவ்வாண்டில் அதிகம் ரசிக்கப்பட்ட பாடல்களில் ஒன்று.

* யுவன்ஷங்கர் ராஜா வானம், அவன் இவன், மங்காத்தா, ஆரண்ய காண்டம், ராஜபாட்டை என ஐந்து திரைப்படங்களுக்கு 2011 இல் இசையமைத்திருந்தாலும் வழமையான யுவன் 2011 இல் மிஸ்ஸிங்.

* காவலன், சிறுத்தை, இளைஞன், சதுரங்கம் திரைப்படங்களுக்கு இச்யமைத்த வித்யாசாகர் இன்னமும் அவுட் ஒப் போம்தான்; இவற்றில் சதுரங்கம் பாடல்கள் 2006 இல் நல்ல வரவேற்ப்பை பெற்றபோதும் படம் வெளியாகியபோது கண்டுகொள்ளப்படவில்லை.

* வேலாயுதம் திரைப்படம் விஜய் ஆண்டனிக்கு ஹிட் பாடல்களை கொடுத்தாலும் யுவன்யுவதி, சட்டப்படி குற்றம் திரைப்படங்கள் கண்டுகொள்ளப்படவில்லை

* புதிய அறிமுகங்களான 'எங்கேயும் எப்போதும்' சத்யா, 'வாகை சூடவா' முகமட் கிப்ரான் இருவரும் சிறப்பான பாடல்களையும் பின்னணி இசையையும் வழங்கியிருந்தனர்.

'வெண்ணிலா கபடிக்குழு' திரைப்படத்திற்கு இசையமைத்த V.செல்வகணேஷ் 'குள்ளநரிக்கூட்டம்' திரைப்படத்திற்கும் சிறப்பான இசையை வழங்கியிருந்தார்

* மணிஷர்மா, தேவி ஸ்ரீ பிரசாத், ஸ்ரீகாந்த் தேவா, தினா, சுந்தர்.C .பாபு என பலரும் இந்தாண்டு இசையமைத்திருந்தாலும் பெரிதாக எடுபடவில்லை.

2011 இன் கௌரவம்
சிறந்த நடிகர்- தனுஷ் (ஆடுகளம் & மயக்கம் என்ன)
சிறப்பு பரிசு - ஜீவா (கோ)

சிறந்த நடிகை - சாரா (தெய்வத்திருமகள்)
சிறப்பு பரிசு - அஞ்சலி (எங்கேயும் எப்போதும்)

சிறந்த இயக்குனர் - வெற்றிமாறன் (ஆடுகளம்)
சிறப்பு பரிசு - ராதாமோகன் (பயணம்)

சிறந்த திரைப்படம் - எங்கேயும் எப்போதும் ( M.சரவணன்)
சிறப்பு பரிசு - வாகை சூடவா (A.சற்குணம்)

சிறந்த தயாரிப்பாளர் - A.R.முருகதாஸ் (எங்கேயும் எப்போதும்)
சிறப்பு பரிசு - எஸ்.பி.சரண் (ஆரண்யகாண்டம் )

சிறந்த இசையமைப்பாளர் - ஜீ.வி.பிராகாஷ் (மயக்கம் என்ன)
சிறப்பு பரிசு - எங்கேயும் எப்போதும் (C.சத்யா)

சிறந்த ஒளிப்பதிவாளர் - ஓம் பிரகாஷ் (வாகை சூடவா)
சிறப்பு பரிசு - ராம்ஜி (மயக்கம் என்ன)

சிறந்த பட தொகுப்பு - அந்தோணி கொன்சால்வேஸ் (வானம்)
சிறப்பு பரிசு - கிஷோர் (எங்கேயும் எப்போதும், ஆடுகளம் & பயணம் )

சிறந்த திரைக்கதை - கே.வி.ஆனந்த் (கோ)
சிறப்பு பரிசு - தியாகராஜன் குமாரராஜா (ஆரண்யகாண்டம் )

சிறந்த வசன கர்த்தா - ராதாமோகன் (பயணம்)
சிறப்பு பரிசு - எங்கேயும் எப்போதும் ( M.சரவணன்)

சிறந்த பாடலாசிரியர் - நா. முத்துக்குமார் ( ஆரிரோ ஆராரிரோ, தெய்வத்திருமகள்)
சிறப்பு பரிசு - சினேகன் (யாத்தே யாத்தே, ஆடுகளம்)

சிறந்த நகைச்சுவை நடிகர் - சந்தானம் (தெய்வதிருமகள், வானம்)
சிறப்பு பரிசு - சாம் (பயணம்)

சிறந்த வில்லன் நடிகர் - Johnny Tri Nguyen (7 ஆம் அறிவு )
சிறப்பு பரிசு - அஜ்மல் (கோ)

சிறந்த குணச்சித்திர நடிகர் - V. I. S. ஜெயபாலன் (ஆடுகளம்)
சிறப்பு பரிசு - கோவை சரளா (காஞ்சனா)

சிறந்த சண்டை பயிற்சியாளர் - பீட்டர் ஹெயின் (7 ஆம் அறிவு)
சிறப்பு பரிசு - சூப்பர் சுப்பிராயன் (அவன் இவன்)

சிறந்த பாடகர் - கார்த்திக் (விழிகளிலே விழிகளிலே, குள்ளநரி கூட்டம்)
சிறப்பு பரிசு - M.L.R.கார்த்திகேயன் (கன்னித்தீவு பெண்ணா, யுத்தம் செய்)

சிறந்த பாடகி- சின்மயி (சர சர சாரகாத்து, வாகை சூடவா)
சிறப்பு பரிசு- சைந்தவி (பிறை தேடும், மயக்கம் என்ன)

* சென்ற ஆண்டு எழுதிய 2010 க்கான அதே டெம்லேட்டை மாற்றி எழுதியதால் ஐந்து மணி நேரத்தில் எழுதி முடித்திட்டேன் :p

பிற்ச்சேர்க்கை


ஆண்டின் இறுதியில் வெளியாகிய 'மௌனகுரு' திரைப்படம் சிறந்த வரவேற்ப்பை பெற்று; விமர்சன ரீதியிலும் வணிகரீதியிலும் மிகப்பெரும் வெற்றியடைந்துள்ளது.....

Friday, November 25, 2011

மயக்கம் என்ன...

2006 ஆம் ஆண்டு செல்வராகவன் இயக்கத்தில் கார்த்தி, சந்தியா நடிக்க யுவன்ஷங்கர்ராஜா இசையமைக்க R.ரவீந்திரனுடன் இணைந்து நண்பர்களான செல்வராகவன், யுவன்ஷங்கர்ராஜா, ஒளிப்பதிவாளர் அரவிந்த் கிருஷ்ணா கூட்டமைப்பில் உருவாக்கிய White Elephant நிறுவனம் சேர்ந்து தயாரிப்பதாக இருந்த 'மாலை நேரத்து மயக்கம்' திரைப்படம்; நண்பர்களுக்கிடயிலான விரிசலால் கைவிடப்பட R.ரவீந்திரன், கார்த்தி கூட்டணியில் ஆயிரத்தில் ஒருவனை செல்வராகவன் இயக்கினார். அதன் பின்னர் மீண்டும் 'மாலை நேரத்து மயக்கம்' திரைப்படத்தில் தனுஷ், ஆண்ட்ரியா நடிக்க 'இரண்டாம் உலகம்' என பெயர் மாற்றி செல்வராகவன் இயக்கப் போவதாக கூறப்பட்டது. மீண்டும் செல்வா, ஆண்ட்ரியா பிணக்கினால் அது கைவிடப்பட; புதிய கதைக்களம், புதிய கூட்டணி என செல்வராகவன் தந்துள்ள திரைப்படம்தான் 'மயக்கம் என்ன'. ('இரண்டாம் உலகம்' ஆரியாவை வைத்து செல்வாவால் இயக்கப்படவுள்ளதாக கூறப்படுகின்றது)

'மயக்கம் என்ன' - எதிர்பார்ப்பை செல்வராகவன் ஏமாற்றவில்லை; எதிர்பார்ப்பை எகிறவைக்கும் இயக்குனர்கள் பட்டியலில் முன்னிலையில் இருக்கும் செல்வராகவன் தன் மீதிருந்த எதிர்பார்ப்பை மிகத் திருப்தியாக பூர்த்திசெய்துள்ளார். மாறுபட்ட கதைக்களம், நேர்த்தியான & குழப்பமில்லாத திரைக்கதை, செல்வாவின் டிப்பிக்கல் டச் என 'மயக்கம் என்ன' செல்வாவின் மற்றுமொரு திரைவிருந்து. திரைப்படத்தில் தனுஸ் கேரக்டரை அவ்வப்போது Genius என்று அழைப்பார்கள், மயக்கம் என்னவை பார்த்த பின்னர் எனக்கு தோன்றியது; செல்வராகவன் - Genius. ஆயிரத்தில் ஒருவனில் குழப்பமான திரைக்கதை மூலம் செல்வராகவன் விட்ட தவறை 'மயக்கம் என்ன'வில் சரிப்படுத்தியுள்ளார். படம் அதிக வேகம் என்று சொல்லமுடியாவிட்டாலும் மெதுவாக நகர்கின்றது என்றும் சொல்ல முடியாது, எந்த இடத்திலும் திரைக்கதையில் தொய்வில்லை.தனக்கு பிடித்த ஒரு துறையிலே தன் எதிர்காலம் அமைய வேண்டும் என ஆசைப்படும் ஒரு இளைஞன் தனது துறையினை எந்தளவிற்கு நேசிக்கின்றான் என்பதை காதல், காமம், துரோகம், நட்பு, தாய்மை, விரக்தி, மகிழ்ச்சி, ஏக்கம், இயலாமை என பல உணர்வுகளின் துணை கொண்டு சிறப்பாக கையாண்டிருக்கும் செல்வராகவனுக்கு மீண்டும் Hats Of. 'மயக்கம் என்ன'வில் நிறைய இடங்களில் செல்வராகவன் பிரமிப்பூட்டுகின்றார்; வசனங்கள் அனைத்தும் யதார்த்தமாகவும், அளவாகவும்; அதே நரம் ஆபாசமில்லாமலும் சில இடங்களில் பிரமிக்கதக்க வகையிலும் அமைந்தது திரைப்படத்திற்கு மேலும் பலம்; காருக்குள் தனுஸின் மனைவியும், தனுஸின் நண்பனும் பேசும் காட்சியும் வசனங்களும் பிரமாதம், அதிலும் "உன்மேல தப்பில்லை ஏன்னா நீ ஆம்பிளை" எனும் இந்த வசனம் எத்தனை உண்மை! உங்கள் திறமையை இன்னொருவன் தன் திறமை என்று சொல்லி பெயர் எடுத்த சம்பவம் உங்கள் வாழ்வில் எப்போதாவது ஏற்ப்பட்டுள்ளதா? அப்படி இருந்தால் அந்த வலியை 'மயக்கம் என்ன'விலும் நீங்கள் உணர்வீர்கள்.

தனுஷ் - படத்தில் கார்த்திக் + Genius கேரக்டரில் அதகளப்படுத்தியுள்ளார், தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத சக்தியாக தனுஸ் மாறிவருவது நன்றாக தெரிகின்றது. ஒவ்வொரு பிரேமிலும் தனுஷ் நடிப்பால் மிரட்டுகிறார்; உடல் மொழி, வசன உச்சரிப்பு, முகபாவம் என நடிப்பின் அத்தனை பரிமாணங்களிலும் வெளுத்து கட்டியிருக்கிறார்; தனுஸ் தவிர்த்து யாராலும் செய்ய முடியாத கேரக்டர் இது. அதென்னமோ தெரியல செல்வராகவன் படங்கள் என்றால் தனுஸ் வழமையைவிட பலமடங்கு அதிகமான output கொடுக்கிறார். தனுசிற்கு ஒரு பணிவான வேண்டுகோள்; தயவு செய்து வேங்கை, மாப்பிள்ளை போன்ற மொக்கை மசாலாப் படங்கள் வேண்டாமே!!!றிச்சா- யாமினி கேரக்டரில் வாழ்ந்திருக்கிறார், தமிழ் சினிமாவில் நடிகைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் இயக்குனர்களில் ஒருவரான செல்வராகவன் படத்தில் றிச்சாவிர்க்கு நடிக்க வாய்ப்பில்லை என்றால்த்தான் ஆச்சரியம்; அற்ப்புதமாக நடித்துள்ளார், சமீப காலங்களில் நடிகை ஒருவருக்கு இந்தளவு ஸ்கோப் உள்ள கேரக்டர் அமைத்ததில்லை; கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி சிறப்பாக நடித்துள்ளார். காதல், காமம், தாய்மை, பொறுப்பு, தைரியம், புரிதல் என பல பரிமாணங்களிலும் தேவைக்கேற்ப அழுத்தமான நடிப்பை கொடுத்துள்ளார். அசப்பில் பார்ப்பதற்கு நயன்தாரா + சோனியா அகர்வால் + பிரியங்கா சோப்ரா போலுள்ளார், தென்னிந்தியாவில் சிறப்பான எதிர்காலம் உண்டு. இவர்கள் இருவர் தவிர்த்து தனுஸின் நண்பர்கள், National Geographic Photographer ஆக வருபவர், நண்பர்களில் ஒருவரின் தந்தை என மிகக்குறைந்த கேரக்டர்களே 'மயக்கம் என்ன'வில் நடித்திருந்தாலும் தனுஷ், றிச்சா இருவரும்தான் படம் முழுவதும் தெரிகிறார்கள்.

தனுஷ் தவிர்த்து 'மயக்கம் என்ன'விர்க்கு இரண்டு கதாநாயகர்கள்; ஒருவர் ராம்ஜி - ஒளிப்பதிவாளர்; மற்றையவர் ஜீ.வி.பிரகாஷ்குமார் - இசையமைப்பாளர். இயக்குனர் அமீரின் ஆஸ்தான ஒளிப்பதிவாளரான ராம்ஜி 'ஆயிரத்தில் ஒருவன்' திரைப்படத்தில் செல்வராகவனுடன் முதல் முதலில் இணைந்தார், இப்போது மீண்டும் 'மயக்கம் என்ன' வில் இணைந்து விஷுவல் விருந்து படைத்திருக்கிறார். அரவிந்த் கிருஷ்ணா இல்லாத வெற்றிடம் செல்வராகவன் திரைப்படத்தில் இல்லவே இல்லை!! ஒரு Photography சம்பந்தமான ஒரு திரைப்படத்தை எவ்வளவு அழகாக படாமாக்க வேண்டுமோ அதைவிட பலமடங்கு சிறப்பாக படமாக்கியிருக்கிறார். லைட்டிங், ஆங்கிள், கமெரா மூவ் என ராம்ஜி சாம்ராட்சியம்தான் 'மயக்கம் என்ன'.சுட்டுக்குடுத்தாரோ, சுடாமல் குடுத்தாரோ ! அண்மைக்காலங்களில் பாடல்களில் ஜி.வி.பிரகாஷ்குமார் ஏமாற்றியதில்லை. மதராசப்பட்டினம், தெய்வ திருமகள் திரைப்படங்களுக்கு பின்னர் மீண்டும் பாடல்கள் அனைத்துமே அற்ப்புதமாக அமைந்துள்ளன. "நான் சொன்னதும் மழை வந்திச்சா", "ஓட ஓட" இரண்டு பாடல்களும் படமாக்கப்பட்டதும் சிறப்பாக உள்ளது. பின்னணி இசை படத்திற்கு மிகப்பெரும் பலம்; பல இடங்களின் மௌனத்தை ஜி.வியின் பின்னணி இசை சிறப்பாக ஈடுகட்டி இருக்கிறது, அதேநேரம் தேவையான இடங்களில் மௌனத்தையும் ஒலித்திருக்கிறது. ஜி.வி.பிரகாஷ் - தமிழ் சினிமாவின் மற்றுமொரு தவிர்க்க முடியாத சக்தி.

படத்தில் குறைகள் இல்லாமல் இல்லை, தனுஸின் நண்பனாக வரும் றிச்சாவின் Boy Friend கேரக்டர்; தனுஸ், றிச்சாவை அடிக்கடி சந்திக்கும் வாய்ப்பை உருவாக்குவது திரைக்கதைக்கு தேவை என்னினும் செயற்கையாக உள்ளது. ஒருவரை பார்த்தவுடன் or ஒருவர் கேரக்டரை புரிந்தவுடன் வரும் காதலுக்கு எதற்க்காக அந்த நண்பனை கொண்டு இருவரையும் தனிமைப்படுத்தியும், தொடுகைக்குட்படுத்தியும் செல்வா காட்சி அமைத்தார் என்று புரியவில்லை!! அந்த இடங்கள் அபத்தமாகவும், அருவருப்பாகவும் உள்ளதை மறுபதற்கில்லை. இதுதவிர ஒருசில குறைகள் ஆங்காங்கே இருந்தாலும் அவை மிகப்படுத்தப்பட வேண்டிய பாரிய தவறுகளோ லாஜிக் மீறல்களோ அல்ல.மாறுபட்ட சினிமாவை, தரமான சினிமாவை கொடுப்பதில் செல்வராகவன் வெற்றி கண்டுள்ளார்; உங்களுக்கும் மாறுபட்ட, தரமான சினிமாவை பார்க்க விருப்பமா? 'மயக்கம் என்ன' நிச்சயம் உங்களை திருப்திப்படுத்தும். "இல்லை நான் மசாலா மட்டும்தான் பார்ப்பேன்" என்பவரா நீங்கள்! தயவுசெய்து திரையரங்கு செல்லாதீர்கள்; அங்கு சென்று படம் பார்ப்பவர்களையும் சத்தம் போட்டு குழப்பாதீர்கள்(இன்றைய அனுபவம்). இது ஏதாவதொரு உலக சினிமாவின் சாயலா! என்றெல்லாம் எனக்கு தெரியாது, அப்படி இருந்தாலும் எனக்கு கவலை இல்லை; 'எனக்கு மயக்கம்' என்ன மிகவும் பிடித்துள்ளது. செல்வாவின் முன்னைய படங்கள் உங்களுக்கு பிடிக்குமென்றால் 'மயக்கம் என்ன'வும் உங்களுக்கு நிச்சயம் பிடிக்கும்.......

மயக்கம் என்ன - உணர்ச்சிக் குவியல்...

Saturday, November 19, 2011

சிவகார்த்திகேயனும் மெரினாவும்.....

சிவகாத்திகேயன்; இந்த பெயரை தெரியாத சின்னத்திரை பார்வையாளர்கள் இருக்க முடியாது. இன்றைய விஜய் TV யின் One Man Army இவர்தான்; ஒரு நிகழ்ச்சியை வெற்றியடைய செய்ய சிவகாத்திகேயனின் stage presence போதும் என்பதை அறிந்துள்ளதாலோ என்னமோ விஜய் TV யின் நிர்வாக இயக்குனர்கள் அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் சிவகார்த்திகேயனை களமிறக்கு கின்றார்கள். சாதாரண மிமிக்கிரி போட்டியாளராக 2008 இல் விஜய் Tv யின் 'கலக்கப்போவது யாரு' நிகழ்ச்சியில் பங்குபற்ற வந்த சிவகார்த்திகேயன் அந்தப்போட்டியின் இறுதியில் முதல்ப்பரிசை வென்று விஜய் Tv பார்வையாளர்களுக்கு நக்கு பரிச்சியமானார்.

அதன் பின்னர் 'ஜோடி நம்பர் வண்' நிகழ்ச்சியில் விஜய் Tv யின் 'லொள்ளுசபா' புகழ் ஜீவாவிற்கும் இயக்குனர்/நடிகர் S.J சூரியாவிற்கும் இடையிலான கருத்து வேறுபாட்டினால் போட்டியின் இடையிலேயே விலகிய ஜீவாவிற்கு பதிலாக களமிறக்கப்பட்டார். அதில் விஜய் TV யின் மற்றொமொரு தொகுப்பாளரான ஐஸ்வர்யாவுடன் ஜோடி சேர்ந்து 3 ஆம் இடத்தை பெற்றுக்கொண்டார். ஆரம்பத்தில் மிகவும் சிரமப்பட்டாலும் பின்னர் சிறப்பாக ஆடக் கற்றுக்கொண்ட சிவகார்த்திகேயன் விஜய் Tv யின் 'ஜோடி நம்பர் வண்'னிற்கு பதிலாக இரண்டு சீசன் நடாத்தப்பட்ட Boys VS Girls நிகழ்ச்சிலும் கலந்துகொண்டு பட்டையை கிளப்பியிருந்தார். அந்த நிகழ்ச்சியில் டான்ஸ் நன்றாக ஆடினாரோ இல்லையோ பாலாஜியுடன் சேர்ந்து இவர் பண்ணிய ரணகளத்தை அந்த சீசனை பார்த்த யாரும் மறந்திருக்க மாட்டார்கள்.அதன் பின்னர் விஜய் Tv சிவகார்த்திகேயனை முன்னிறுத்தி வழங்கிய 'அது இது எது' நிகழ்ச்சி இன்றுவரை மிகச்சிறப்பாக சென்றுகொண்டிருக்கின்றது. சனிக்கிழமை இரவு 7 மணிக்கு ஆரம்பமாகும் இந்நிகழ்ச்சியின் மூன்று சுற்றுக்களுமே சுவாரசியமானவை; அதிலும் சிவகார்த்திகேயனால் மூன்றாவது சுற்றில் கேட்க்கப்படும் 'மாற்றி யோசி' மிகவும் சுவாரசியமாக இருக்கும். இப்படி கொஞ்சம் கொஞ்சமாக விஜய் Tv இனுள் தனக்கென ஒரு இடத்தை ஏற்ப்படுத்திக்கொண்ட சிவகார்த்திகேயன் 'விஜய் அவாட்'சினை கோபிநாத்துடன் இணைந்து தொகுத்து வழங்கியதன் மூலம் விஜய் tv யின் தவிர்க்க முடியாத தொகுப்பாளராக மாறினார். அதன் பின்னர் சூப்பர் சிங்கர் சீனியர் நிகழ்ச்சியில் அவ்வப்போது தொகுப்பாளராக வந்து கலகலப்பூட்டினார். அதன் பின்னர் 'ஜோடி நம்பர் வண்' நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிநார்; ஒரு நடன நிகழ்ச்சியை நகைச்சுவை நிகழ்ச்சியோ என்று சொல்லுமளவிற்கு உடல் மொழியாலும், டைமிங் காமடியாலும் கிச்சு கிச்சு மூட்டினார்.

இறுதியாக நடந்த 'ஜோடி நம்பர் வண்' நிகழ்ச்சியை விட அதிகளவில் ரீச் ஆனதென்னமோ அதன் 'ப்ளு பேஸ்' தொகுப்புத்தான்; நிகழ்ச்சியின் தொடக்கம் முதல் இறுதிவரை இடம்பெற்ற இதுவரை ஒளிபரப்பப்படாத சுவாரசியமான நிகழ்வுகளில் தொகுப்பே இது. ஒரு தொலைக்காட்சியில் சாதாரண போட்டியாளராக நுழைந்து 4 ஆண்டுகளில் அந்த தொலைக்காட்சியின் முதல்த்தர தொகுப்பாளராக மாறியிருக்கின்றார் என்றால் சிவகார்த்திகேயனின் வளர்ச்சி அபரிமிதமானது! நகைச்சுவை உணர்வு (sense of humor), உடல் மொழி (Body Language), Timing sense, Voice Modulation போன்றவைதான் சிவகார்த்திகேயனின் இந்த அசுர வளர்ச்சியின் இரகயியம். சின்னத்திரையில் தொகுப்பாளராக எத்தனையோ பேர் வந்திருந்தாலும் ஒரு சிலரர்தான் மக்கள் மனதில் இடம்பிடித்துள்ளனர். 'பெப்சி' உமா, 'காமடி டைம்' அர்ச்சனா & சிட்டி பாபு, ஆனந்த கண்ணன், விஜயசாரதி, விஜய் ஆதிராஜ், 'நீயா நானா' கோபிநாத்,திவ்யதர்சினி, தேவதர்சினி என ஒரு சிலரே மக்களை அதிகம் ஈர்த்தவர்கள்; அந்த வரிசையில் இப்போது சிவகார்த்திகேயனும்........ஆனால் சிவகார்த்திகேயனுக்கு சின்னத்திரை மட்டுமல்ல; இப்போது வெள்ளித்திரையும் செங்கம்பளம் விரித்துள்ளது. 'பசங்க' புகழ் பாண்டியராஜ் இயக்கம் 'மெரீனா' திரைப்படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகி வெள்ளித்திரைக்கு பிள்ளையார் சுழி போட்டுள்ளார் சிவகார்த்திகேயன். பசங்க, வம்சம் திரைப்படங்களின் வரவேற்ப்பிற்க்கு பின்னர் பாண்டியராஜ்சும், சிவகார்த்திகேயனின் அறிமுகமும் உள்ளதால் மெரினாவிற்கு அதிக எதிர்ப்பார்ப்பு உள்ளது. சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக 'களவாணி' படத்தில் நடித்த ஓவியா நடிக்கிறார்; 1988 இல் மிரா நயிர் (Mira Nair) இயக்கிய 'சலாம் மும்பை' ஹிந்தி திரைப்படத்தின் இன்ஸ்பிரேஷன்தான் மெரீனா என்று சொல்லப்படுகின்றது. இந்த திரைப்படமும் பசங்க திரைப்படத்தை போன்றே குழந்தைகள் சம்மந்தப்பட்ட திரைப்படம்தான், மேரினாவில் சிறுவர்களும் முக்கிய பாத்திரங்களில் நடிக்கிறார்கள். சரியான முறையில் விளம்பரம் செய்யப்படும் பட்சத்தில் மெரீனா மிகப்பெரும் ஓப்பினிங்கை பெறும் சந்தர்ப்பம் உண்டு; மயக்கம் என்னவிர்க்கு அடுத்து நான் அதிகம் எதிர்பார்ப்பது மெரினாவைத்தான்...

மெரீனா தவிர்த்து R. ஐஸ்வர்யா தனுஸ் இயக்கத்தில் தனுஸ், சுருதிஹாசன் நடிக்கும் '3' திரைப்படத்தின் போஸ்டரிலும் தனுஷுடன் சிவகார்த்திகேயன் காணப்படுகின்றார். தனுஷுடன் குணச்சித்திர நடிகராக (Character artist) இல்லாமல் நகைச்சுவை நடிகராக (Comedy artist ) நடித்தால் சிறப்பாக இருக்கும்; இப்போதிருக்கும் தமிழ் சினிமாவின் நகைச்சுவையாளர்களின் வெற்றிடத்தை சிவகார்த்திகேயன் சரியாக பயன்படுத்திக்கொள்ளலாம். அடுத்து எழில் இயக்கம் திரைப்படமொன்றிலும் சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ளதாக சொல்லப்படுகின்றது. ஹீரோவாக வெற்றிபெற்றால் மகிழ்ச்சி, ஒருவேளை அது கைகூடவில்லை என்றால் இருக்கவே இருக்கு நகைச்சுவை; அது சிவகார்த்திகேயனுக்கு கை கொடுக்கும். சின்னத்திரையில் சாதிச்ச சிவகார்த்திகேயன் வெள்ளித்திரையிலும் சாதிப்பாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.......

Thursday, November 10, 2011

நானும் சினிமாவும் பாகம் - 2

முதல் பதிவில் விஜய் பற்றி எழுதியுள்ளதால் இந்த பதிவை அஜித்தில் இருந்து ஆரம்பிக்கிறேன். நான் முன்னர் குறிப்பிட்டது போலவே நாட்டின் போர் காரணமாக 1996 க்கு பின்னர்தான் அடுத்த தலைமுறை நடிகர்களின் முகத்தையே காணும் வாய்ப்பு கிடைத்து. அப்படி அஜித்தை முதல் முதலில் பார்த்தது ஒரு ஒலியும் ஒளியும் பாடலில்த்தான். 1996 இல் பல்கலைக்கலகத்திற்கே யாழ்நகரில் முதல் முறையாக மின்சாரம் வழங்கப்பட்டது (6 ஆண்டுகளின் பின்னர்) அதுகூட மாலை 6 மணி முதல் இரவு 12 மணிவரைதான்! பல்கலைக்கழகத்திற்கு வழங்கப்பட்ட மின்சாரம் அந்த அயலில் உள்ள வீடுகளுக்கும் கிடைத்தது. குறிப்பிட்ட பகுதியில் அண்ணா ஒருவரின் வீடு இருந்ததால் ஒவ்வொரு வெள்ளியும் இரவு தங்குவது அங்குதான்; காரணம் 8 மணிக்கெல்லாம் ஊரடங்குசட்டம், வீதியில் நடமாடமுடியாது.

இரவு 7.30 மணிக்கு ஒலியும் ஒளியும் பார்த்துவிட்டு இரவு 9.30 மணிக்கு டூடடர்சனில் ஒளிபரப்பப்படும் திரைப்படத்தினை 12 மணிவரை பார்ப்போம்; மின்சார நிறுத்தத்தால் படம் அரைகுறையில் தடைப்படும்போது வரும் ஏக்கமும், கோபமும், ஏமாற்றமும் சொல்லில் கூறமுடியாதவை. சில நேரங்களில் 10 நிமிடங்கள் அதிகமாக மின்சாரம் தொடர்ந்திருக்கும், எங்களுக்கும் இன்று மின்சாரம் தொடர்ந்து இருக்குமோ என்று ஒரு நப்பாசை !! அடுத்த கணமே மின்சாரம் தடைப்பட்டு எமக்கு மிகுந்த ஏமாற்றம் கிடைக்கும். அப்படி மின்சாரம் தடைப்படாமல் பார்த்தது இரண்டு திரைப்படங்கள்; திருமலை தென் குமரி, வேலைக்காரன்; இவை இரண்டும்தான் அன்று முழுமையாக பார்த்த இரண்டு திரைப்படங்கள்; வேலைக்காரன் முழுமையாக பார்த்து முடித்தபோது இருந்த மனநிலை சொல்லி புரிய வைக்க முடியாதது!அப்படி அங்கு ஒருநாள் ஒளியும் ஒளியும் பார்க்கும்போது அறிமுகமாகிய நடிகர்தான் அஜித்குமார்; என்ன பாடல் என்று தெரியவில்லை, "யார் இந்த பையன்" என்ற ஒருவரின் கேள்விக்கு "அஜித் என்று ஒரு பையன் புதுசா நடிக்கிறான்" என்பதுதான் நான் அஜித் பெயரையும், அஜித்தின் உருவத்தையும் கேட்ட, பார்த்த கணம். ஆனாலும் எனக்கு எந்த விதமான ஈர்ப்பும் அப்போது ஏற்ப்படவில்லை. அதன் பின்னர் நான் பார்த்த முதல் அஜித் திரைப்படம் 'வான்மதி'; 'பூவே உனக்காக' முன்னமே பார்த்ததாலோ என்னமோ எனக்கு அஜித் மீது அப்போதும் ஈர்ப்பு வரவில்லை. தொடர்ந்து காதல்க்கோட்டை, நேசம், ஆசை என பல அஜித் படங்களை பார்த்திருந்தாலும் அஜித் அன்று எனக்கு பத்தோடு பதினொன்றாகத்தான் தெரிந்தார். மீடியா வசதிகள் எதுக்குமே இல்லாத காரணத்தால் சினிமாவின் தாக்கம் திரைப்படங்களை ரசிப்பதில் மட்டும்தான் அன்றிருந்தது; இன்றுபோல் நடிகர்களுக்காக ரசிகர்கள் நண்பர்களுடன் மோதியதில்லை.

இந்நிலையில் அஜித்தை எனக்கு பிடிக்க ஆரம்பித்த திரைப்படம் சரண் இயக்குனராக அறிமுகமாகி அதகளப்படுத்திய காதல் மன்னன்; இந்த திரைப்படம் நான் பார்க்கும்போது திரைப்படம் வெளியாகி நீண்ட நாட்கள் இருக்குமென்று நினைக்கின்றேன்; ஒரு ரூபாயில் சவால் விடுவது, சொடுக்கு போடுவது, 'மெட்டுத்தேடி தவிக்கிது ஒரு பாட்டு' பாடல் என காதல் மன்னனும்; காதல் மன்னனால் அஜித்தும் பிடித்துப்போயிற்று. அடுத்து அமர்க்களம், தீனா என அஜித் படத்திற்கு படம் என்னை அதிகமாக இம்ப்ரெஸ் செய்ய ஆரம்பித்தார். அந்த காலப்பகுதியில் வெளிவந்த அனைத்து அஜித் திரைப்படங்களையும் பார்த்திருக்கின்றேன்; அந்த நேரத்தில்த்தான் அஜித்தின் 'நான்தான் சூப்பர் ஸ்டார்' ஸ்டேட்டஸ் பத்திரிகைகளில் வெளிவந்தது; அன்றிலிருந்து அஜித்மீதிருந்த ஈர்ப்பு குறைய ஆரம்பித்தது. அடுத்த தலைமுறை நடிகர்களில் விஜய், அஜித் இருவருமே அந்த காலப்பகுதியில் எனக்கு பிடித்தமானவர்கள்தான்; ஆனால் அன்றைய அஜித் மற்றும் விஜய் ரசிகர்கள் ரிரஜினியுடன் இவ்விருவரையும் ஏட்டிக்கு போட்டியாக வைத்து பேசியதுதான் நான் விக்ரமின் தீவிர ரசிகரான மாற காரணமாக அமைந்தது.விக்ரம் பற்றி பின்னர் பார்ப்போம்; தீனா திரைப்படத்தை தொடர்ந்து வெளிவந்த அஜித்தின் திரைப்படங்களில் 'வில்லன்' தவிர்த்து ஆறு திரைப்படங்கள் தோல்வியடைந்தன! இந்த நிலையில் விஜயின் திருமலை, கில்லி வெற்றி விஜய் ரசிகர்களை அஜித்தை கிண்டல் செய்யும் அளவிற்கு வளர்ந்திருந்தன. கில்லி வெற்றியின் பின்னர் கூட இருந்த சில விஜய் ரசிகர்கள் பண்ணிய ரகளைதான் அடுத்து வெளிவந்த அஜித்தின் 'அட்டகாசம்' திரைப்படத்தை மிகுந்த ஆவலுடன் பார்க்க தூண்டியது; அதுவரை அஜித் மீதிருந்த வெறுப்பும் குறைந்திருந்தது, கூடவே அஜித்தும் மிகவும் மாறியிருந்தார். 'அட்டகாசம்' திரைப்படம் பார்த்த பின்னர்தான் மீண்டும் அஜித்தை பிடிக்க ஆரம்பித்தது. தொடர்ந்து 'ஜீ' திரைப்படத்திற்கு முதல்க்காட்சி சென்றாலும் லிங்குசாமி ஏமாற்றியிருந்தார்!

அடுத்து வெளிவந்த பரமசிவன் திரைப்படம்தான் அஜித்மீது மிகப்பெரும் ஈர்ப்பை கொண்டு வந்தது, அது மரியாதை கலந்த ஈர்ப்பு. யாருமே நினைத்துக்கூட பார்க்க முடியாதளவிற்கு தன் உடல் எடையை குறைத்திருந்தார். யாழ்ப்பாணத்தில் குண்டு எறியும் கலாச்சாரம் அதிகமாக இருந்த காரணத்தால் திரையரங்கிற்கு செல்வதில்லை என்றிருந்தோம்; ஆனால் சண் டிவியில் புதிய பாடல்களை ஒளிபரப்பிய அடுத்த 15 நிமிடங்களுக்குள் நாம் திரையரங்கில் நின்றோம்; காரணம் அஜித்தின் தோற்றம்!! வாசு படத்தை சொதப்பினாலும் அஜித் என்னை ஏமாற்றவில்லை! படம் சரியாக போகாவிட்டாலும் கூடவந்த ஆதி, சரவணா திரைப்படங்களைவிட அதிகம் வசூலித்தது. அதற்க்கு அடுத்து வெளிவந்த திருப்பதி திரைப்படத்தை முதல்நாள் முதல் காட்சியில் பார்த்தேன்; ரஜினியை வைத்து பேரரசு படமெடுத்தாலும் திரையரங்கில் போய் பார்ப்பதில்லை என்பது அன்று எடுத்த முடிவுதான்:-)அடுத்து வரலாறு திரைப்படம் நாட்டு பிரச்சனை காரணமாக யாழ்ப்பாணத்தில் வெளியாகவில்லை; அதன் பின்னர் இன்றுவரை எந்த அஜித் திரைப்படத்தையும் திரையரங்கில் பார்க்கும் சந்தர்ப்பம் அமையவில்லை. நேரம், பணம், கூடவரும் நண்பர்கள் என ஈதோ ஒரு காரணத்திற்க்காக ஒவ்வொரு தடவையும் அஜித் படங்களை திரையரங்கில் பார்ப்பதற்கு முட்டுக்கட்டை விழுந்தது. இறுதியாக மங்காத்தா பார்ப்பதற்கு குறைந்தது 4 தடவைகள் திட்டமிட்டிருப்போம், ஆனால் அது கடைசிவரை கைகூடவில்லை; இறுதியில் வழமைபோல DVD தான்!!! இறுதி ஐந்து ஆண்டுகளில் ரஜினி, விக்ரம் திரைப்படங்கள் தவிர்த்து திரையரங்கில் நான் பார்த்த திரைப்படங்கள் என்றால் 5 திரைப்படங்கள்தான்; மொழி, தீபாவளி, நான்கடவுள், பையா, நந்தலாலா என்பவைதான் அந்த ஐந்தும்!!!!

மங்காத்தா எனக்கு மிகவும் பிடித்திருந்தது, இப்போது அஜித்தையும் அதிகமாகவே பிடிக்கின்றது; காரணம் ரஜினியா! இல்லை எமது சமூக தளங்களில் உள்ள விஜய் ரசிகர்களா! அல்லது அஜித்தை புறக்கணிக்கும் ஊடகங்களா! அல்லது அஜித்தின் அண்மைக்கால வெளிப்படையான நடவடிக்கைகளா! காரணம் இவை அனைத்தும் சேர்ந்ததுதான் என்றாலும்; அஜித் இப்போது எனக்கு மிகவும் பிடித்தமானவர்களில் ஒருவர்.

சாவியைபிரித்தல் (Dis Key அதாவது டிஸ்கி )

அடுத்த பதிவுகளில் விக்ரம், சூர்யா, தனுஸ், சிம்பு மற்றும் ஹீரோயின்ஸ் பற்றியும் பார்க்கலாம் :-) பலருக்கும் இந்த பதிவு போரடிக்கும் என்பது புரிகிறது; காரணம் இது எனது சுய சொறிதல், இருந்தும் ஏன் எழுதுகின்றேன் என்றால் பின்னொருநாளில் குறைந்தபட்சம் எனக்காவது படிப்பதற்கு சுயாரசியமாக இருக்கும் என்பதால்த்தான், "அட நாதாரி இதை டயரியில எழுதவேண்டியதுதானே" என்கிற உங்க மைன்ட் வாய்ஸ் கேக்கிது, ஆனா எனக்கு அந்த கெட்ட பழக்கமெல்லாம் இல்லை :-)

முதல் பதிவு -> நானும் சினிமாவும் - பாகம் 1

Thursday, November 3, 2011

தமிழை காப்போம் வாரீர்.......

மும்பை எக்ஸ்பிரஸ் என்றொரு படத்தை கமலஹாசன் வெளியிடும்போது தமிழில் பெயர் வைக்குமாறு தமிழ் உணர்வாளர்கள் என்கின்ற பெயரில் சிலர் கமலை மிரட்டினார்கள். அந்த நேரத்தில் கமலஹான் ஒரு நேர்காணலில் "கல்தோன்றி மண் தோன்றா காலத்து முன்தோன்றிய மூத்த தமிழை கமலஹாசன் அழித்து விடுவான் என்பது வேடிக்கையாக இல்லை" என்று கூறினார். இன்றைக்கு நாம் இருக்கும் நிலையில் எங்கே அது நடந்துவிடுமோ என்றே எண்ணத் தோன்றுகின்றது!!

உலகின் ஆதி மொழிகளில் ஒன்றான காலத்தால் அழிக்க முடியாத தமிழை தம் உதிரத்துடன் கலந்து உள்ளத்தில் சுமந்து தாயைவிட உயர்வாக பேணிய வரலாறு தமிழனுடயது. ஆனால் இன்று தமிழை ஒரு நடிகன் சினிமாவிலும், ஒரு அரசியல்வாதி மேடையிலும் பேசும்போதுதான் எம்மால் உணர முடிகின்றதென்றால் தமிழ் மொழி இன்று கடைகளில் வாங்கும் குளுக்கோஸ் போலாகிவிட்டதா என்றே எண்ணத் தோன்றுகின்றது!!!

திரைப்படங்களில் தமிழ், தமிழன் வரலாற்றை வெளிக்கொண்டு வருவதில் எனக்கு எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. காரணம் 65-70 சதவீதத்தை எழுத்தறிவாக கொண்ட எம்மில் வரலாற்றை பாடமாக படிப்பவர்கள் எத்தனைபேர்? கப்பலோட்டிய தமிழன், வீரபாண்டிய கட்ட பொம்மன், பாரதியார் போன்ற வரலாற்றின் நாயகர்களை பாமர மக்களுக்கு எடுத்து உரைத்தது திரைப்படங்கள்தான். அந்த வரிசையில் போதிதர்மன் வரலாற்றை மக்களிடம் கொண்டு சென்று சேர்த்த முருகதாஸிற்கு மனமார்ந்த நன்றிகள்.அதே நரம் போதிதர்மன் வரலாற்றை இதுவரை தமிழர்கள் அறிந்திராததை குறையாக காட்டியமைக்கு கண்டனங்கள்; போதிதர்மனை மக்கள் அறிந்து கொள்வதாயின் பாடப்புத்தகங்களில் போதிதர்மன் வரலாறு சேர்க்கப்பட்டிருக்க வேண்டும், இல்லை தாத்தா பாட்டி என முன்னோர்கள் கூறிய வரலாற்று கதைகள் மூலம் அறிந்திருக்க வேண்டும். இவ்விரண்டும் இல்லாமல் ஒரு வரலாற்றை எப்படி மக்கள் அறிந்து கொள்வார்கள்? அப்படி அறியாத மக்கள் மீது எப்படி குறைகாண முடியும்?

போதிதர்மன் வரலாறு தவிர்த்து முருகதாஸ் ஈழத்திற்க்கும், தமிழர்களுக்கும் ஆதரவாக எழுதிய வசனங்கள் திணிக்கப்பட்டவையாக இருந்தாலும் பார்ப்பதற்கும் கேட்ப்பதர்க்கும் நன்றாகவே உள்ளது. முருகதாஸ் தமிழை வியாபாரம் செய்து காசு பார்த்ததாக ஒருசாராரும்; முருகதாஸ் தமிழனின் பெருமையை பறை சாற்றியுள்ளார் என்று மற்றொரு சாராரும் சமூகத்தளங்களில் கூறி வருகின்றனர். இந்த இரண்டு விதமான கருத்து மோதலிலும் 'எடுத்தார் கைப்பிள்ளையாக' தமிழ் சிக்கி தவிக்கின்றது. திரைப்படத்தை திரைப்படமாக பார்த்தால் இது ஒரு விடயமே இல்லை; அதே நேரம் 7 ஆம் அறிவில் தமிழ் வியாபாரமா? பெருமையா? என்று விவாதித்தால் முடவு காண்பது முடியாதது; அதன் முடிவு முருகதாஸ் மற்றும் உதயநிதியின் மனச்சாட்சிகளுக்குத்தான் வெளிச்சம்.

எமது மொழியை இன்னுமொருவன் திரைப்படத்திலோ, அரசியல் மேடையிலோ உணர்ச்சி ததும்ப பேசும்போதுதான் எம்மொழியை நாம் உணர்கின்றோமேன்றால் நாம் உண்மையான தமிழர்களா? ஒரு கணம் சிந்தித்து பாருங்கள். அரசியல் மேடைகளிலும், சினிமா திரையரங்குகளிலும் கிடைக்கும் தமிழ் உணர்ச்சிதான் எமக்கு மொழிப்பற்றை உண்டாக்குமானால், இதுவரைநாள் எமது மொழி எது? எம் உள்ளத்தில் தமிழ் எப்போதுமே இரண்டற கலந்திருக்குமானால் எமக்கு இன்னொருவன் தமிழ் உணர்வை தூண்ட வேண்டிய அவசியமில்லை. இதனை பயன்படுத்தித்தான் பல திரைப்பட நடிகர்களும், இயக்குனர்களும் தம் திரைப்படங்களில் மொழிப்பற்றை காசாக்கியுள்ளார்கள், இன்னும் காசாக்குவார்கள். அது அவர்களது வியாபார உக்தி, இதில் அவர்களை குறை சொல்ல முடியாது.அதே நேரம் இதனை நாம் தமிழின், தமிழனின் பெருமையாக நினைத்தால் நம்மை விட அப்பாவிகள் வேறு யாருமில்லை. 7 ஆம் அறிவை மொழிகொண்டு விளம்பரப்படுத்தாமல், விமர்சிக்காமல் அணுகியிருந்தால் அதனை ஒரு சாதாரண திரைப்படமாக விமர்சித்தோ அணுகியோ இருக்கலாம். ஆனால் படத்தின் டிரெயிலர் வெளியீடு முதற்கொண்டு இன்றுவரை படத்திற்கு விளம்பரமே தமிழ்தான்! அப்படி இருக்கும்போது இவர்கள் எப்படி தமிழை வைத்து வியாபாரம் செய்யவில்லை என்றும்; தமிழை பெருமைப்படுத்துகிறார்கள் என்றும் கூறமுடியும்?

ஒரு சில ஆண்டுகளுக்கு முன்னால் தமிழில் பெயர் வைத்தால் வரிச்சலுகை என்றார்கள்; திரைப்படத்துக்கு தமிழில் பெயர் வைத்து வரிச்சலுகை பெற்ற திரைப்படங்களின் 50 சதவீதமானவை ஆங்கில உப தலைப்புக்களை கொண்டவைதான். சுய விருப்பம் இல்லாமல் பணத்தை காட்டி தமிழை டைட்டில்களில் வாங்கிய இந்த கேடுகெட்ட செயலுக்கும் விபச்சாரத்திற்க்கும் என்ன வித்தியாசம்!!! எல்லாவற்றுக்கும் தமிழில் பெயர் வைக்க வேண்டும் என்று கொதித்தெழுந்த டாக்டர் ஒருவர் தன் பட்டப்பெயரையே மருத்துவர் என்று மாற்றி புரட்சி செய்தார்; ஆனால் அவர் பேரப்பிள்ளைகள் கல்வி கற்பது டெல்லியிலுள்ள ஆங்கில மொழி பள்ளியில் ; இப்படியான சில அரசியல் சாணக்கியர்களும், சில சினிமா புரட்சிகளும் தமிழுக்கு அப்போ காவல்காப்பது வேடிக்கையான வினோதம்.

அதேபோல ஒருவன் ஈழத்தை வைத்து வியாபாரம் செய்கின்றான் என்று கூறினால்; "அவன் அதாவது செய்கின்றான் நீ என்ன செய்தாய்?" என்று புத்திசாலித்தனமாக பதிலுக்கு கேள்வி கேட்கின்றார்கள். உன் முகத்தில் ஒருவன் உமிழ்கிறான் என்று கூறும்போது "அவனாவது உமிழ்கிறான் நீ என்ன செய்தாய்" என்பதை போன்றது இவர்களது வினா!! நான் ஈழத்திற்காக எதுவும் செய்யவில்லை என்றே வைத்துக் கொள்ளுங்கள்; அதற்காக என்னை வைத்து ஒருவன் வியாபாரம் செய்கின்றான் என்று தெரிந்த பின்பும் அவனுக்கு 'ஈ'ன்னு பல்லை இளிக்க சொல்கிறார்களா? இப்படியான ஈழ வியாபாரிகளை பார்த்து கேள்விகேட்டால்; அவர்களின் ஆதரவாளர்கள் எமக்கு கேட்காமல் கொடுக்கும் பட்டம் 'துரோகி', கூடவே நாலு தலைமுறையையும் தோண்டி எடுத்து கேவலமாக திட்டுவார்கள்.திரைப்படங்களில், அரசியல் கூட்டங்களில், சினிமா தலைப்புக்களில், பிறமொழி கண்டு பிடிப்புக்களை தமிழ் மொழிமாற்றம் செய்வதில்தான் தமிழ் வாழும், வளரும் என்று நினைத்தால் 'எனது பார்வையில்' அது சுத்த முட்டாள்த்தனம். இசை முதல் இணையம் வரை இன்று உலகில் வியாபித்திருக்கும் தமிழை காலத்தாலும் அழிக்க முடியாது. இன்றைய வெளிநாடுகளில் உள்ள இளைஞர்களிடத்திலும், படித்த இளைஞர்களிடத்திலும் மொழி மீதான பற்று மிகவும் அதிகரித்து காணப்படுவது மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான விடயமே; அதே நேரம் அவர்களில் சிலர் மொழிப்பற்றை ஒரு நாகரீகமாக (Fashion) வெளிக்காட்டுவதற்கு எத்தனிப்பது எந்தளவிற்கு ஆரோக்கியமான விடயம் என்றும் தெரியவில்லை!!!

தமிழை நேசியுங்கள், சுவாசியுங்கள், கற்றுக்கொள்ளுங்கள், கற்றுக்கொடுங்கள்; தமிழன் என்பதில் பெருமை கொள்ளுங்கள், அதேநேரம் நீங்களும் மனிதர்கள்தான் என்பதை ஒருபோதும் மறந்துவிடாதீர்கள். உலகிற்கு அஷ்ட சாஸ்திரங்களையும், திருக்குறளையும் கற்றுக்கொடுத்த தமிழ் மொழியை வைத்து வியாபாரம் மட்டும் செய்யாதீர்கள்; அடுத்தவனையும் வியாபாரம் செய்ய அனுமதிக்காதீர்கள்......

Tuesday, October 25, 2011

யாழ் திரையரங்குகளும் திரைப்படங்களும்

1990க்கு முன்னர் யாழ்நகரில் திரையரங்குகளில் சினிமா பார்க்கும் மக்களின் எண்ணிக்கை மிகமிக அதிகம்; இத்தனைக்கும் அன்றைய தேதியில் தமிழகத்தில் ஒரு திரைப்படம் ரிலீஸ் ஆகி குறைந்தது ஒரு மாதத்தின் பின்புதான் இங்கு திரையிடப்படும் (இந்தியாவிலும் இலங்கையிலும் ஒரே நாளில் திரையிடப்பட்ட முதல் திரைப்படம் பாபா) ஆனாலும் அந்நாட்களில் யாழ்ப்பாணத்தில் திரையிடப்பட்ட பல எம்.ஜி.ஆர், சிவாஜி திரைப்படங்கள் 100 நாட்களை கடந்து திரையரங்க உரிமையாளர்களுக்கு மிகுந்த லாபத்தை அள்ளிக்கொட்டியது வரலாறு. ராஜா, வின்சர், ராணி, மனோகரா, ரீகல், நாகம்ஸ், சாந்தி, லிடோ, வெலிங்கடன், ஸ்ரீதர், லக்ஸ்மி என ஏகப்பட்ட திரையரங்குகள்; ஆனாலும் ஒவ்வொன்றும் லாபகரமாகவே அன்று இயங்கின.

ஆனால் இன்று முக்கியமான திரையரங்குகள் என்று பார்த்தால் ராஜா, மனோகரா, செல்லா, நாகம்ஸ் என நான்கு திரையரங்குகள்தான்; அதிலும் குறிப்பிட்டு சொல்வதென்றால் ராஜா, மனோகரா என இரண்டு திரையரங்குதான் பெரிய படங்களை திரையிடுபவை. தமிழகத்தில் திரையிடப்படும் நாளிலே இங்கும் திரைப்படங்கள் திரையிடப்படுகின்றன, இன்னும் சொல்லப்போனால் முதல்நாள் இரவுக்காட்சியே இங்கு திரையிடப்படுகின்றது. அப்படி இருந்தும் 30 நாட்கள் ஒரு திரைப்படத்தை ஓட்டுவதற்கு படாதபாடு படவேண்டி இருக்கின்றது; வரும் வசூலில் படப்பெட்டி வாங்கிய தொகை, திரையரங்க செலவுகள் போனால் கையில் எதுவுமே மிஞ்சுவதில்லை என்கின்றார்கள் யாழ்ப்பாண திரையரங்க உரிமையாளர்கள். இதனால் இப்போதெல்லாம் யாழ்நகர் வரும் புதுப்படங்கள் குறைவடைய தொடங்கியுள்ளன."விநியோகிஸ்தர்கள் லாபத்தை அள்ளிக்கொண்டுபோக கஷ்டப்பட்டு திரையரங்கை நடாத்தும் நாம் ஒன்றுமில்லாமல் வேடிக்கை பார்ப்பதா" என்பதே யாழ் நகரின் முக்கிய திரையரங்க உரிமையாளர் ஒருவரின் ஆதங்கம். யாழ்ப்பாணத்தை பொறுத்தவரை திரைப்படங்கள் மூன்று விதமாக திரையிடப்படுகின்றன.

1 ) படப்பெட்டிகளை குறிப்பிட்ட விலைக்கு வாங்குவது

2 ) விகிதாசார அடிப்படையில் வசூலை பங்கிடுவது

3 ) திரையரங்கை விநியோகிஸ்தருக்கு வாடகைக்கு கொடுத்தல்

இவற்றில் இதுவரை யாழ்நகரில் அதிகம் திரையிடப்படுவது முதல் முறையில்த்தான்; எந்த திரைப்படமானாலும் படப்பெட்டியை குறிப்பிட்ட தொகைக்கு வாங்கி அதனை திரையிடுவதுதான் இதுவரை யாழ்ப்பாணத்தில் நடைமுறையில் இருந்து வந்ததுள்ளது. இந்த முறையில் திரைப்படங்களை வாங்கி வெளியிடும்போது யாழ்ப்பாணத்தை பொறுத்தவரை இதுவரை வெளியான ரஜினி, விஜய் படங்கள் பெரும்பாலும் லாபத்தை அள்ளிக் கொடுத்திருக்கின்றன; தமிழகத்தில் அட்டர் பிளாப்பாகும் விஜய் படங்கள் யாழ்நகரில் சக்கை போடு போட்டிருக்கின்றன! ஏனைய நடிகர்களின் திரைப்படங்கள் சிறப்பாக இருந்தாலன்றி திரையரங்க உரிமையாளர்களுக்கு நஷ்டம்தான்.சுறா திரைப்படம் ராஜா திரையரங்கிற்கு நல்ல வசூலை கொடுத்துள்ளது. சச்சின், திருப்பாச்சி, சிவகாசி, வேட்டைக்காரன் திரைப்படங்கள் மனோகராவிலும்; கில்லி, மதுர, சுறா, காவலன் திரைப்படங்கள் ராஜாவிலும் போட்ட பணத்திற்கு மேலாக லாபத்தை அள்ளிக்கொடியிருக்கின்றன. மனோகராவில் சிவாஜிக்கு (51 லட்சம்) அடுத்து அதிக வசூல் வேட்டைக்காரன்(45 லட்சம்); ராஜாவில் எந்திரனுக்கு(86 லட்சம்) அடுத்த அதிக வசூல் காவலன் (62 லட்சம்) (ராஜாவில் டிக்கட் காசு மனோகராவைவிட 2 மடங்கு அதிகம்).

இதை ஏன் குறிப்பிட்டுள்ளேன் என்றால்; யாழ் நகரின் வசூல் இளவரசனாக விஜய் இருந்தும்; யாழ் நகரின் முன்னணி திரையரங்குகளான ராஜா, மனோகராவிற்கு இதுவரை விஜய் படங்கள் லாபத்தை அள்ளிக்கொடுத்திருந்தும் விஜயின் வேலாயுதத்தை மனோகரா, ராஜா என இரண்டு திரையரங்குகளும் எதற்க்காக கைவிட்டன? என்பதை கூறத்தான். வாகன பாக்கிங், இடவசதி போன்றவற்றை வைத்துப்பார்த்தால் மனோகராதான் யாழ் நகரின் சிறந்த திரையரங்கு; எந்த திரைப்படமாயினும் இங்கு திரையிட்டால் சற்றி அதிகமான பார்வையாளர்களை பெறமுடியும் (குறைந்த டிக்கட் கட்டணமும் இதற்க்கு ஒரு காரணம்) என்னதான் திரையரங்கு வசதியாக இருந்தாலும் இங்கு சவுண்ட் சிஸ்டம் மிகவும் மோசம். ஆனால் ராஜா திரையங்கில் சவுண்ட் சிஸ்டம் மனோகராவை விட சிறப்பு; இங்கு டிக்கட் கட்டணம் சற்று அதிகமாகையால் பார்வையாளர்கள் சற்று குறைந்தாலும் மனோகராவிற்கு குறைவில்லாத வசூல் இங்கு கிடைக்கும்.மனோகரா திரையரங்கின் சவுண்ட் சிஸ்டத்தை சீரமைத்து புதிய நாற்காலிகள் போட்டு திரையரங்கை வளப்படுத்த மேலதிகமாக ஒரு கோடி ரூபா போதும் என்றும்; அதனை போட்டு திரையரங்கை சீரமைப்பதில் தனக்கு எந்த சிக்கலும் இல்லை என்றும் கூறும் அதன் உரிமையாளர்; முதலிட்ட ஒரு கோடிக்கு லாபம் கிடைக்குமா என்பதிலுள்ள தயக்கம்தான் தன்னை முதலிடாமல் வைத்துள்ளதாகவும் கூறுகின்றார். சவுண்ட் சிஸ்டம் சீரமைக்கப்பட்டு, தரமான இருக்கைகள் இடப்பட்டு, குளிரூட்டப்பட்டால் இலங்கையின் முதல்த்தர திரையரங்கு மனோகராதான். அது தெரிந்திருந்தும், கையில் பணமிருந்தும் அதன் உரிமையாளருக்கு ஏன் இந்த தயக்கம்? காரணம் திரையரங்கிற்கு வரும் குறைந்தளவு பார்வையாளர்களும், விநியோகிஸ்தர்களின் பேராசையும்தான்.

1990க்கு முன்னதாக நீண்ட நாள் கழித்து வெளிவந்த திரைப்படம் 100 நாள் ஓடியதற்கும்; இன்றைய திரைப்படங்கள் 30 நாள் ஓடவே கஷ்டப்படுவதர்க்கும் காரணம் திரைப்படம் வெளியான மறுநாளே அருகிலுள்ள கடைகளில் கிடைக்கும் திருட்டு vcd யும்; வீட்டுக்கு வீடு உள்ள DVD Player, CD Player, கம்ப்யூட்டர் போன்ற இலத்திரனியல் சாதனங்களும்தான். அன்று 30 வீட்டுக்கு ஒரு வீட்டில் இருந்த இந்த சாதனங்கள் இன்று அதிகமாக ஒவ்வொரு வீடுகளிலும் இருக்கின்றன. இதையும் தாண்டி மக்கள் திரையரங்கிற்கு வந்து 30 நாட்கள் ஒரு திரைப்படம் ஓடுவதென்பது பெரிய விடயமே. இந்த 30 நாட்களும் திரைப்படம் ஓடினாலே யாழ்நகரை பொறுத்தவரை நல்ல வசூல் கிடைக்கும்; ஆனால் இதில் ரஜினி, விஜய் படம் தவிர வேறெந்த படத்திற்கும் மினிமம் கராண்டி இல்லை.


90 களுக்கு முன்னர் யாழ்நகரின் மிகப் பிரபலமான வின்சர் திரையரங்கு இன்று களஞ்சியமாக உள்ளது


தமிழகத்தில் சக்கை போடு போட்ட அஜித், சூர்யா, விக்ரம், தனுஸ் படங்கள் இரண்டாவது வாரமே இங்கு ஈ கலைக்கும் நிலையில்த்தான் உள்ளன. முன்னணி நடிகர்களின் திரைப்படங்களுக்கே இந்த நிலையென்றால் மற்றைய திரைப்படங்களின் நிலைமை??? இதனால்த்தான் எல்லோருமே கொண்டாடிய மிகச்சிறந்த திரைப்படங்கள் எவையும் (பெரிய நாயகர்கள் இல்லாத) யாழ் நகரில் வெளியாகவில்லை; எதிர்வரும் காலங்களில் பெரிய நடிகர்களின் திரைப்படங்களுக்கும் இந்த நிலை ஏற்ப்படாலாம். திருட்டு vcd களின் தாக்கம் திரையரங்கிற்கு பார்வையாளர்கள் வராதமைக்கு காரணம் என்பது எப்படி உண்மையோ அதேபோல திரையரங்கத்தினரின் விளம்பரங்கள் போதாமையும் மக்கள் திரையரங்கிற்கு வராமைக்கு முக்கியகாரணம்; விளம்பரத்தின் இன்றியமையாமையை இன்னமும் திரையரங்க உரிமையாளர்கள் யாரும் சரியாக உணராதது கவலையான விடயம்.

இப்போது மேட்டருக்கு வருவோம்; ஏன் வேலாயுதத்தை மனோகராவோ, ராஜாவோ வாங்கவில்லை? இம்முறை வேலாயுதத்தை விநியோகிக்க வந்தவர்கள் மிகவும் அதிக விலையை கூறியுள்ளார்கள்; எப்படி ஓடினாலும் கிட்டாத தொகை அது. அது விநியோகிஸ்தருக்கும் நன்கு தெரியும். அது தெரிந்தும் அவர்கள் அந்த ரேட்டை கூறியதற்கு காரணம் அவர்களே வேலாயுதத்தை நேரடியாக திரையிடுவதுதான்; திரையரங்கை வாடகைக்கு அமர்த்தி தாங்களே வசூலை அள்ளுவது அவர்களின் நோக்கம். விஜய் படத்திற்கு இங்குள்ள மாக்கெட் அவர்களுக்கே தெரிந்திருக்கும்போது இங்கு பழம் தின்று கொட்டை போட்ட ராஜா, மனோகர உரிமையாளர்களுக்கு தெரியாதா? அவர்கள் மறுக்கவே ஒரு மூத்திர சந்திலுள்ள செல்லா (நாதன்ஸ்) திரையரங்கை வாடகைக்கு அமர்த்தி விநியோகிஸ்தர்களே வேலாயுதத்தை யாழ்நகரில் வெளியிடுகின்றார்கள்.இப்படி யாப்பாணத்தில் வெளியிடப்படும் முதல் விஜயின் திரைப்படம் இதுதான். போதிய இடவசதி, வாகன பாக்கிங், சவுண்ட், விஷுவல் போன்றவற்றில் சிறப்பான தன்மை எதையும் கொண்டிராத செல்லா திரையரங்கால்; ராஜா அல்லது மனோகரா கொடுக்குமளவிற்கு வசூலை நிச்சயம் கொடுக்க முடியாது. ஆனாலும் விநியோகிஸ்தருக்கு கொள்ளை லாபம் உறுதி; அதேநேரம் இதுநாள்வரை ஈ கலைத்த செல்லா திரையரங்கிற்கும் குறிப்பிட்ட தொகை வாடகையாக கிடைக்க உள்ளது. மனோகராவும், ராஜாவும் அனைத்து பெரிய படங்களையும் வாங்கினால் மற்றவர்கள் என்ன செய்வது!! என செல்லா திரையங்கின் சார்பில் வாதிட்டாலும்; தமிழர்களின் 'ஒற்றுமையை' பயன்படுத்தி விநியோகிஸ்தர்கள் நல்ல காசு பார்க்கப் போகின்றார்கள் என்பது மட்டும் உறுதி.

செல்லா திரையரங்கு ராஜா, மனோகராவோடு போட்டி போடுவதென்றால் அதிக தொகை கொடுத்து போட்டிக்கு படத்தை வாங்கியிருக்கலாம்; ஆனால் இப்போது திரையரங்கை வாடகைக்கு கொடுத்திருப்பது விநியோகிஸ்தர்கள் எதிர்காலத்தில் இதே பாணியில் யாழ்நகரில் கொள்ளையடிக்க வழிசெய்ததை போலாகிடும். மனோகரா வேலாயுதம் திரைப்பத்தை திரையிட்டால் வேலாயுதம் திரைப்படத்தின் முதல் இரண்டு நாள் காட்சிகளில் குறிப்பிட்ட தொகை டிக்கட்டை தமது தொலைபேசி நிறுவனத்தின் விளம்பரம் மூலம் விநியோகிக்க ஹச் நிறுவனம் மனோகராவை அணுகியது; பின்னர் செல்லா திரையரங்கில் வேலாயுதம் வெளியாவதால் ஹச் நிறுவனம் வேலாயுதம் திரைப்படத்தை கைவிட்டுவிட்டு இப்போது ஏழாம் அறிவினை வெளியிடும் ராஜா திரையரங்கை அணுகியுள்ளார்கள்.ரா-ஒன் திரைப்படத்தை மனோகரா வெளியிட தயாராக இருந்தாலும், விநியோகிஸ்தர்கள் சொல்லும் தொகை மலைக்க வைக்கிறது; 20 லட்சம் கேட்கின்றார்கள்! ஒரு முழுமையான ரஜினி படம் ஒன்றை திரையிடும்போது கொடுக்கும் தொகையின் பாதி இது. இந்த தோகையை கொடுத்து ஒரு டப்பிங் படத்தை முதல் முறையாக யாழ்நகரில் வெளியிட்டு விஷப்பரீட்சை மேற்கொள்ள மனோகரா தயாரில்லை. விகிதாசாரப்படி விநியோகம் செய்ய வினியோகிஸ்தர் தயாராக உள்ளபோதும் 70:30 விகிதத்தில் கேட்ப்பதால் திரையரங்கத்திற்கு கட்டுப்படியாகாது என்று கூறுகின்றார்கள். ஊழியர் சம்பளம், மின்சாரம், பொருட்சேதம் என செலவை பார்க்கும்போது குறைந்தது 55:45 தந்தால்தான் ஓரளவேனும் ஓகே என்கின்றார்கள். இப்போது ரா- ஒன்ணிற்கு பேரம் நடக்கின்றது; சுமூகமாக முடிந்தால் மனோகராவில் தீபாவளி அன்று ரிலீசாகும் சாத்தியம் உண்டு, இல்லையேல் யாழ் நகரில் ரா-ஒன் இல்லை.

Tuesday, October 18, 2011

மெகா சீரியல் ஒன்றை இயக்குவது எப்படி?

இயக்குவதற்கு தேவையான தகமை


*நிறைய மெகா சீரியல்கள் பார்த்திருக்க வேண்டும்.

*சுயமாக சிந்திக்கும் திறன் இருக்கவே இருக்க கூடாது.

*பத்து எபிசோட்டுக்கப்புறம் என்ன நடக்கும் என்பது ஆடியன்சை போலவே இயக்கம் உங்களுக்கும் தெரிந்திருக்கக் கூடாது.

*நிறைய பொண்ணுங்களை ஒரே நேரத்தில் பிரச்சனை வராம ஹாண்டில் பண்ண தெரிஞ்சிருக்கணும் (ஷூட்டிங் ஸ்பொட்டில்).

கதை


கதை என்று இங்கு ஒன்றும் பெரிதாக சிந்திக்க தேவையில்லை; திரைக்கதையில் கூட ஒன்றும் புரட்டிப்போடவோ நிமித்திப்போடவோ வேண்டாம்; ஒரு அட்டவணை தயாரித்தால் போதும். உதாரணமாக சொல்வதென்றால் இரண்டு குடும்பம்; அதில் முதல் குடும்பத்தில் அம்மா, அப்பா, இரண்டு பையன், நான்கு பொண்ணு, மாமியார் அப்புறம் ஒரு வேலைக்காரன். இரண்டாவது குடும்பத்தில் அம்மா, (அப்பா இல்லை), மூணு பொண்ணுங்க, ஒரு பாட்டி. இதில் எது நம்ம ஹீரோயின் வீட்டு குடும்பமின்னு இப்ப உங்களுக்கே புரிஞ்சிருக்கும்; யெஸ், இரண்டாவது குடும்பம்தான் நம்ம ஹீரோயின் வீட்டு குடும்பம். அந்த மூணு பொண்ணுங்கள்ள முதல் பொண்ணுதான் ஹீரோயின்.நம்ம ஹீரோயின் குடும்பம் எவளவுக்கெவளவு வறுமையில் வாடுதோ, அதே நேரம் மற்றைய குடும்பம் செல்வக்கொளிப்பா இருக்கணும். செல்வந்த குடும்பத்தில் இருக்கின்ற அம்மா கேரக்டரோட சேர்த்து நாலு பேரு கெட்டவங்க; மிகுதி நான்கு பேரில் இரண்டு பேரு சும்மா உல்லுல்லாய்க்கு, மிகுதி இரண்டும் ரொம்ப நல்லவங்க!!!! ஹீரோயின் வீட்டில் எல்லோருமே நல்லவங்க, ஆனாலும் அப்பப்ப ஹீரோயினை வீட்டில உள்ள எல்லோருமே புரிஞ்சிக்காத மாதிரி சீன் எடுக்கணும் என்பதால் கொஞ்சம் அவிங்கள சுயநலகாரர்களா அப்பப்ப காட்ட வேண்டி வரும்; இவற்றைவிட ஹீரோயின் குடும்பத்தில் உள்ள கடைசிப் பொண்ணை ரொம்ப வாயாடியா, குறும்புகாரியா , வெகுளியா காட்டனும்; ஏன்னா நம்மகிட்ட சரக்கு கம்மியாகிட்டா அந்த வெகுளிப் பொண்ணை மம்மி ஆக்கி ஒரு ஆறு மாசத்தை ஓட்டிடலாம்.

திரைக்கதை


இப்ப நீங்க திரைக்கதையை பின்ன ஆரம்பிக்கிறீங்க; இந்த இரண்டு குடும்பங்களுக்குள்ளேயும் ஏதாவதொரு போராட்டம் என்று திரைக்கதையை நகர்த்தலாம்; அது பாசமோ, பழிவாங்கலோ, பகையோ, ஈகோவோ எதுவா வேணுமின்னாலும் இருக்கலாம். இதையே வச்சு ஒரு மூணு மாசமா கதையை ஆமை வேகத்தில் நகர்த்தலாம். அந்த காலப்பகுதியில் இந்த இரண்டு குடும்பத்தை இருபதாக்கணும்; அதாவது ஒவ்வொரு குடும்பத்திலும் இருக்கின்ற பசங்களுக்கும், பொண்ணுங்களுக்கும் ஜோடி பிடிக்கணும், அந்த ஜோடிகளுக்கு ஒரு குடும்பத்தை உருவாக்கணும், அந்த குடும்பத்தில் நான்கு பிள்ளைகள் உள்ளமாதிரி பண்ணனும், அப்புறம் அந்த அந்த பிள்ளைகளுக்கு ஜோடிகள் தேடனும், அதுக்கப்புறம் அந்த ஜோடிகளுக்கு குடும்பம் அமைக்கணும்; இப்பிடியே இரண்டு வருடத்தில் குறைந்தது நாற்பது குடும்பம் சேர்த்தாகனும்.

இப்ப திரைக்கதைக்கு என்ன கவலை!!! ஒரு ஹீரோயின், நாற்பது குடும்பம், இருநூறு கேரக்டர்; அடுத்த பத்து வருடத்திற்கு சீரியலை இழுக்க இது போதாதா? ஜவ்வுமாதிரி இழுத்தா இருபது வருசத்திர்க்கும் இழுக்கலாம். ஒரு கட்டத்தில நீங்களா சீரியலை முடிக்கலாமென்று பிளான் பண்ணினால்கூட பாதி கதையை முடிக்கவே ஒரு ஆறுமாசம் தேவைப்படும். தொடங்கின இடம் மறந்து போயிருக்கும். ஆனால் நீங்க ஒன்னும் சிரமப்பட தேவையில்லை கிளைக் கதைகளை அம்போன்னு விட்டுவிட்டு, ஹீரோயினுக்கு 'சுபம்' என்று முடித்தால் போதும், பாக்கிறவங்க புல்லரிச்சு போயிடுவாங்க!!!!இதில் உங்களுக்கு சில சிக்கல்கள் வரலாம், அதாவது யாராவதொரு நடிக/நடிகை திடீரென்று சீரியலை விட்டு விலகிவிடும் சந்தர்ப்பம் ஏற்ப்படுவதுண்டு. முன்பெல்லாம் அந்த கேரக்டரை சாகடித்து அவரின் புகைப்படத்திற்கு மாலை போடுவார்கள்; இப்போதெல்லாம் "இவருக்கு பதில் இவர்" என்று போட்டு இன்னொருவரை அறிமுகம் செய்யும் புதிய முறைதான் என்பதால் நோ டென்ஷன். அதேநேரம் அதே சீரியலிலேயே நீண்ட நாட்களுக்கு முன்னர் ஒருசில காட்சிகளில் சின்ன கேரக்டர் பண்ணின ஒருத்தரை மறந்துபோயும் "இவருக்கு பதில் இவர்" கேரக்டர்ல போட்டு மாட்டிக்க கூடாது.

அப்புறம் நீங்க செல்வியா அறிமுகப்படுத்திய உங்க ஹீரோயின் நிஜ வாழ்க்கையில் திருமதியாகி அம்மாவாகினா ஒரு நாலுமாசம் ஷூட்டிங் தடைப்படும். அந்த காலகட்டத்தில ஹீரோயின் வெளிநாட்டில பிஸ்னஸ் கொன்பிரென்ஸில் இருப்பதாக சொல்லி அவங்க தக்கச்சியை அந்த நாலு மாசமும் ஹீரோயினா மாத்திட்டா சீரியல் தடங்கள் இல்லாமல் சமத்தா போகும்.

வசனம்


*பாக்கிற ஒவ்வொரு குடும்ப பெண்களும் "இவள் நாசமாபோக" என்று திட்டுமளவிற்கு வில்லி கேரக்டர் பேசும் வசனங்கள் அத்தனையும் செதுக்கப்பட்டிருக்கணும்.

*பாக்கிறவங்க ஒவ்வொருத்தரும் "பாவம் இவள்(நம்ம ஹீரோயின் பெயர்) எவளவு கஷ்டம் வந்தாலும் பொறுப்பா, பொறுமையா பேசிறாள் பாருங்க" என்று சொல்லுமளவிற்கு ஹீரோயின் வசனத்தில் தேனும், பாலும் நிரம்பி வழியனும்.

*அப்பப்போ ஹீரோயின் பக்கத்தில நிக்கிற நல்ல கேரக்டர் ஒண்ணு "இவளுக்குத்தான் எவளவு கஷ்டம்!!, ஆண்டவா உனக்கு கருணையே இல்லையா?" என்கிற வசனத்தை வாரம் ஒரு தடவை பேசணும்.

*வில்லி கேரக்டர் " நான் உன்னை சும்மா விடமாட்டேன், போகப்போக பாரு நான் யாரின்னு காட்டிறன், என்னை பற்றி உனக்கு சரியா தெரியாது, உன் குடும்பத்தையே அழிக்காம விடமாட்டன், நான் ஒருநாளும் நினைச்சதை முடிக்காம விட்டதில்லை, உங்களுக்கொன்னும் புரியாது நீங்க பேசாம சும்மா இருங்க " போன்ற தேய்ந்துபோன வசனங்களை தினமொரு தடவையேனும் பயன்படுத்தவேண்டும்.

*ஹீரோயின் கேரக்டர் "அவங்க பாவம்,வேனுமின்னேயா செய்தாங்க, எங்களுக்கும் காலம் வரும், உனக்கு நான் இருக்கிறேன், நீதி, நீர்மை, நியாயம், மனசாட்சி, கடவுள், போராட்டம்" என்று வசனங்களை அள்ளிவுடனும்.

*முக்கியமா வில்லியோட புருஷரு "ஏன் இப்படி எல்லாம் பண்ணிறாய்?, நீ திருந்தவே மாட்டியா, எக்கேடென்டாலும் கெட்டுப்போ, ஆண்டவா இவளுக்கு நல்ல புத்தியை குடு, என்ன பாவம் செய்தானோ இவளுக்கு புருஷனா வந்து மாட்டிகிட்டன் " போன்ற வசனங்களை அப்பப்போ பேசலாம்.

*அப்புறம் மத்த மத்த கேரக்டர்கள் தேவைக்கு ஏற்ப வேண்டியபடி வசனம் பேசிக்கலாம், அதுக்கெல்லாம் ஒன்னும் ஸ்பெஷலா யாரும் மண்டையை போட்டு உடைக்க தேவையில்லை.

டைரக்ஷன் (இயக்கம்)
*இதில் பெரிதாக ஒன்றும் மினக்கெட தேவையில்லை; ஒவ்வொரு வெள்ளியும் எதிர்பார்ப்பை எகிறவைக்கிற மாதிரி Week End ப்ளாக் வைக்கணும். திரைக்கதை பிரகாரம் Week End ப்ளாக் சரியா அமையலைன்னாலும் அட்லீஸ்ட் கனவு காட்சியை வைத்தேன்றாலும் எதிர்பார்ப்பை எகிற வைக்கணும். திங்கக்கிழமை காட்சிகளில் Week End ப்ளாக்கிற்கு சம்பந்தமே இல்லாத காட்சிகளை எடுத்தாற்கூட நம்ம ஜனங்க ஏற்ருக்கொள்ளுவாங்க, அவங்கதான் ரொம்ப அப்பாவியாச்சே!!!

*அப்புறம் 100 எபிசோட்டுக்கு ஒருக்கா கொஞ்சம் பெரிய சீனியர் ஆட்டிச்டா சிபிஐ, போலிஸ் கேரக்டரின்னு இன்ரடியூஸ் பண்ணி மக்களை கன்பியூஸ் பண்ண வைக்கணும். முக்கியமா அவங்களுக்கு குடுக்கிற BGM சும்மா வேட்டையாடு விளையாடு ராகவனுக்கு கொடுத்ததை மிஞ்சணும்

* திடீறென்று ஒருநாள் "இன்று எடுக்கப்படும் தொடர் ஒரே தடவையில் எடுக்கப்பட்டது, விளம்பரமில்லாமல் ஒளிபரப்பாக போகிறது" என விளம்பரம் பண்ணி மக்களை வியப்பில் ஆழ்த்தணும்.

* ஒரு நல்லவன்(ள்) கேரக்டரை 200 எபிசோட்டுக்கப்புறம் கெட்டவனா(ளா)கவும், அதே கேரக்டரை அடுத்த 200 எபிசோட்டுக்கப்புறம் திரும்பவும் நல்லவனா(ளா)கவும் காட்டலாம், தேவைப்பட்டால் மீண்டும் கெட்டவனா(ளா)க்கலாம். இந்த முறையை ஒரு கேரக்டருக்குத்தான் செய்ய வேண்டுமென்றல்ல, நான்கைந்து கேரக்டர்களுக்கு செய்தால் இன்னுமொரு 500 எபிசோட்டை கரையேற்ரலாம் .

* சினிமாவில் தண்ணி, தம் அடித்தால்த்தான் ராமதாஸ் அங்கிள் சத்தம் போடுவாரு, இங்கெல்லாம் தண்ணி, தம் அடிக்கும் போது கீழே "குடிப்பழக்கம், புகைப்பழக்கம் உடல் நலத்திற்கு கேடு" என்று வாசகம் எழுதினால் சரி.

* முக்கியமாக ஒரு விடயத்தை ஞாபகத்தில வச்சிருக்கணும்; அதாவது ஒருபோதும் 500 எபிசோட் வரும்வரைக்கும் கதாநாயகியை(ஹீரோயினியை) கஷ்டப் படுறகேரக்டராவே காட்டனும்; அப்புறம் அவங்க நல்லா வந்த பிற்பாடு அவங்களை அடுத்தவங்களுக்கு தாராளமா உதவி செய்றவங்களா காட்டனும்; அவங்க கிட்ட உதவி பெற்றவங்க பின்னர் ஒரு நாளில் நன்றி மறக்கிற கேரக்டர்களா இருக்கிற மாதிரி கதையை பார்த்து பார்த்து செதுக்கணும்.

* இறுதியாக, எல்லா பண்டிகைக்கும் ஹீரோயின், வில்லி நடிகைகள் உட்பட அனைவரையும் தொலைக்காட்சி கலையகத்திற்கு வரவழைத்து கலகலப்பாக பண்டிகையை கொண்டாடனும் (அப்பத்தான் நம்ம மக்கள் "அங்கபாரு நம்ம ஹீரோயினியும் அந்த வில்லியும் எப்பிடி பிரெண்டா இருக்கிறாங்க " என்று பேசிக்குவாங்க)இப்போது சூடான மெகா சீரியல் ரெடி; அடுத்த பத்து வருசத்துக்கு இயக்குனருக்கு நிரந்தர வேலை, ஆட்சி மாற்றம் கூட அவரை ஒன்னும் பண்ணாது. அடடா.... கடைசியா சீரியலுக்கு ஒரு டைட்டில் தேவையே; அதிலொன்றும் சிரமமில்லை; ஒரு பொண்ணோட பெயரையோ அல்லது கல்யாணவீட்டில் பாக்கிற ஏதாவதொரு பொருளோட பெயரையோ வச்சிக்கலாம், உதாரணமா பாக்கு, வெத்திலை, சுண்ணாம்பு, மணவறை, சீப்பு, சோப்பு..............

வாழ்க மெகா சீரியல்கள், வளர்க ...... (நல்லா வாயில வருது)