Friday, November 25, 2011

மயக்கம் என்ன...

2006 ஆம் ஆண்டு செல்வராகவன் இயக்கத்தில் கார்த்தி, சந்தியா நடிக்க யுவன்ஷங்கர்ராஜா இசையமைக்க R.ரவீந்திரனுடன் இணைந்து நண்பர்களான செல்வராகவன், யுவன்ஷங்கர்ராஜா, ஒளிப்பதிவாளர் அரவிந்த் கிருஷ்ணா கூட்டமைப்பில் உருவாக்கிய White Elephant நிறுவனம் சேர்ந்து தயாரிப்பதாக இருந்த 'மாலை நேரத்து மயக்கம்' திரைப்படம்; நண்பர்களுக்கிடயிலான விரிசலால் கைவிடப்பட R.ரவீந்திரன், கார்த்தி கூட்டணியில் ஆயிரத்தில் ஒருவனை செல்வராகவன் இயக்கினார். அதன் பின்னர் மீண்டும் 'மாலை நேரத்து மயக்கம்' திரைப்படத்தில் தனுஷ், ஆண்ட்ரியா நடிக்க 'இரண்டாம் உலகம்' என பெயர் மாற்றி செல்வராகவன் இயக்கப் போவதாக கூறப்பட்டது. மீண்டும் செல்வா, ஆண்ட்ரியா பிணக்கினால் அது கைவிடப்பட; புதிய கதைக்களம், புதிய கூட்டணி என செல்வராகவன் தந்துள்ள திரைப்படம்தான் 'மயக்கம் என்ன'. ('இரண்டாம் உலகம்' ஆரியாவை வைத்து செல்வாவால் இயக்கப்படவுள்ளதாக கூறப்படுகின்றது)

'மயக்கம் என்ன' - எதிர்பார்ப்பை செல்வராகவன் ஏமாற்றவில்லை; எதிர்பார்ப்பை எகிறவைக்கும் இயக்குனர்கள் பட்டியலில் முன்னிலையில் இருக்கும் செல்வராகவன் தன் மீதிருந்த எதிர்பார்ப்பை மிகத் திருப்தியாக பூர்த்திசெய்துள்ளார். மாறுபட்ட கதைக்களம், நேர்த்தியான & குழப்பமில்லாத திரைக்கதை, செல்வாவின் டிப்பிக்கல் டச் என 'மயக்கம் என்ன' செல்வாவின் மற்றுமொரு திரைவிருந்து. திரைப்படத்தில் தனுஸ் கேரக்டரை அவ்வப்போது Genius என்று அழைப்பார்கள், மயக்கம் என்னவை பார்த்த பின்னர் எனக்கு தோன்றியது; செல்வராகவன் - Genius. ஆயிரத்தில் ஒருவனில் குழப்பமான திரைக்கதை மூலம் செல்வராகவன் விட்ட தவறை 'மயக்கம் என்ன'வில் சரிப்படுத்தியுள்ளார். படம் அதிக வேகம் என்று சொல்லமுடியாவிட்டாலும் மெதுவாக நகர்கின்றது என்றும் சொல்ல முடியாது, எந்த இடத்திலும் திரைக்கதையில் தொய்வில்லை.தனக்கு பிடித்த ஒரு துறையிலே தன் எதிர்காலம் அமைய வேண்டும் என ஆசைப்படும் ஒரு இளைஞன் தனது துறையினை எந்தளவிற்கு நேசிக்கின்றான் என்பதை காதல், காமம், துரோகம், நட்பு, தாய்மை, விரக்தி, மகிழ்ச்சி, ஏக்கம், இயலாமை என பல உணர்வுகளின் துணை கொண்டு சிறப்பாக கையாண்டிருக்கும் செல்வராகவனுக்கு மீண்டும் Hats Of. 'மயக்கம் என்ன'வில் நிறைய இடங்களில் செல்வராகவன் பிரமிப்பூட்டுகின்றார்; வசனங்கள் அனைத்தும் யதார்த்தமாகவும், அளவாகவும்; அதே நரம் ஆபாசமில்லாமலும் சில இடங்களில் பிரமிக்கதக்க வகையிலும் அமைந்தது திரைப்படத்திற்கு மேலும் பலம்; காருக்குள் தனுஸின் மனைவியும், தனுஸின் நண்பனும் பேசும் காட்சியும் வசனங்களும் பிரமாதம், அதிலும் "உன்மேல தப்பில்லை ஏன்னா நீ ஆம்பிளை" எனும் இந்த வசனம் எத்தனை உண்மை! உங்கள் திறமையை இன்னொருவன் தன் திறமை என்று சொல்லி பெயர் எடுத்த சம்பவம் உங்கள் வாழ்வில் எப்போதாவது ஏற்ப்பட்டுள்ளதா? அப்படி இருந்தால் அந்த வலியை 'மயக்கம் என்ன'விலும் நீங்கள் உணர்வீர்கள்.

தனுஷ் - படத்தில் கார்த்திக் + Genius கேரக்டரில் அதகளப்படுத்தியுள்ளார், தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத சக்தியாக தனுஸ் மாறிவருவது நன்றாக தெரிகின்றது. ஒவ்வொரு பிரேமிலும் தனுஷ் நடிப்பால் மிரட்டுகிறார்; உடல் மொழி, வசன உச்சரிப்பு, முகபாவம் என நடிப்பின் அத்தனை பரிமாணங்களிலும் வெளுத்து கட்டியிருக்கிறார்; தனுஸ் தவிர்த்து யாராலும் செய்ய முடியாத கேரக்டர் இது. அதென்னமோ தெரியல செல்வராகவன் படங்கள் என்றால் தனுஸ் வழமையைவிட பலமடங்கு அதிகமான output கொடுக்கிறார். தனுசிற்கு ஒரு பணிவான வேண்டுகோள்; தயவு செய்து வேங்கை, மாப்பிள்ளை போன்ற மொக்கை மசாலாப் படங்கள் வேண்டாமே!!!றிச்சா- யாமினி கேரக்டரில் வாழ்ந்திருக்கிறார், தமிழ் சினிமாவில் நடிகைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் இயக்குனர்களில் ஒருவரான செல்வராகவன் படத்தில் றிச்சாவிர்க்கு நடிக்க வாய்ப்பில்லை என்றால்த்தான் ஆச்சரியம்; அற்ப்புதமாக நடித்துள்ளார், சமீப காலங்களில் நடிகை ஒருவருக்கு இந்தளவு ஸ்கோப் உள்ள கேரக்டர் அமைத்ததில்லை; கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி சிறப்பாக நடித்துள்ளார். காதல், காமம், தாய்மை, பொறுப்பு, தைரியம், புரிதல் என பல பரிமாணங்களிலும் தேவைக்கேற்ப அழுத்தமான நடிப்பை கொடுத்துள்ளார். அசப்பில் பார்ப்பதற்கு நயன்தாரா + சோனியா அகர்வால் + பிரியங்கா சோப்ரா போலுள்ளார், தென்னிந்தியாவில் சிறப்பான எதிர்காலம் உண்டு. இவர்கள் இருவர் தவிர்த்து தனுஸின் நண்பர்கள், National Geographic Photographer ஆக வருபவர், நண்பர்களில் ஒருவரின் தந்தை என மிகக்குறைந்த கேரக்டர்களே 'மயக்கம் என்ன'வில் நடித்திருந்தாலும் தனுஷ், றிச்சா இருவரும்தான் படம் முழுவதும் தெரிகிறார்கள்.

தனுஷ் தவிர்த்து 'மயக்கம் என்ன'விர்க்கு இரண்டு கதாநாயகர்கள்; ஒருவர் ராம்ஜி - ஒளிப்பதிவாளர்; மற்றையவர் ஜீ.வி.பிரகாஷ்குமார் - இசையமைப்பாளர். இயக்குனர் அமீரின் ஆஸ்தான ஒளிப்பதிவாளரான ராம்ஜி 'ஆயிரத்தில் ஒருவன்' திரைப்படத்தில் செல்வராகவனுடன் முதல் முதலில் இணைந்தார், இப்போது மீண்டும் 'மயக்கம் என்ன' வில் இணைந்து விஷுவல் விருந்து படைத்திருக்கிறார். அரவிந்த் கிருஷ்ணா இல்லாத வெற்றிடம் செல்வராகவன் திரைப்படத்தில் இல்லவே இல்லை!! ஒரு Photography சம்பந்தமான ஒரு திரைப்படத்தை எவ்வளவு அழகாக படாமாக்க வேண்டுமோ அதைவிட பலமடங்கு சிறப்பாக படமாக்கியிருக்கிறார். லைட்டிங், ஆங்கிள், கமெரா மூவ் என ராம்ஜி சாம்ராட்சியம்தான் 'மயக்கம் என்ன'.சுட்டுக்குடுத்தாரோ, சுடாமல் குடுத்தாரோ ! அண்மைக்காலங்களில் பாடல்களில் ஜி.வி.பிரகாஷ்குமார் ஏமாற்றியதில்லை. மதராசப்பட்டினம், தெய்வ திருமகள் திரைப்படங்களுக்கு பின்னர் மீண்டும் பாடல்கள் அனைத்துமே அற்ப்புதமாக அமைந்துள்ளன. "நான் சொன்னதும் மழை வந்திச்சா", "ஓட ஓட" இரண்டு பாடல்களும் படமாக்கப்பட்டதும் சிறப்பாக உள்ளது. பின்னணி இசை படத்திற்கு மிகப்பெரும் பலம்; பல இடங்களின் மௌனத்தை ஜி.வியின் பின்னணி இசை சிறப்பாக ஈடுகட்டி இருக்கிறது, அதேநேரம் தேவையான இடங்களில் மௌனத்தையும் ஒலித்திருக்கிறது. ஜி.வி.பிரகாஷ் - தமிழ் சினிமாவின் மற்றுமொரு தவிர்க்க முடியாத சக்தி.

படத்தில் குறைகள் இல்லாமல் இல்லை, தனுஸின் நண்பனாக வரும் றிச்சாவின் Boy Friend கேரக்டர்; தனுஸ், றிச்சாவை அடிக்கடி சந்திக்கும் வாய்ப்பை உருவாக்குவது திரைக்கதைக்கு தேவை என்னினும் செயற்கையாக உள்ளது. ஒருவரை பார்த்தவுடன் or ஒருவர் கேரக்டரை புரிந்தவுடன் வரும் காதலுக்கு எதற்க்காக அந்த நண்பனை கொண்டு இருவரையும் தனிமைப்படுத்தியும், தொடுகைக்குட்படுத்தியும் செல்வா காட்சி அமைத்தார் என்று புரியவில்லை!! அந்த இடங்கள் அபத்தமாகவும், அருவருப்பாகவும் உள்ளதை மறுபதற்கில்லை. இதுதவிர ஒருசில குறைகள் ஆங்காங்கே இருந்தாலும் அவை மிகப்படுத்தப்பட வேண்டிய பாரிய தவறுகளோ லாஜிக் மீறல்களோ அல்ல.மாறுபட்ட சினிமாவை, தரமான சினிமாவை கொடுப்பதில் செல்வராகவன் வெற்றி கண்டுள்ளார்; உங்களுக்கும் மாறுபட்ட, தரமான சினிமாவை பார்க்க விருப்பமா? 'மயக்கம் என்ன' நிச்சயம் உங்களை திருப்திப்படுத்தும். "இல்லை நான் மசாலா மட்டும்தான் பார்ப்பேன்" என்பவரா நீங்கள்! தயவுசெய்து திரையரங்கு செல்லாதீர்கள்; அங்கு சென்று படம் பார்ப்பவர்களையும் சத்தம் போட்டு குழப்பாதீர்கள்(இன்றைய அனுபவம்). இது ஏதாவதொரு உலக சினிமாவின் சாயலா! என்றெல்லாம் எனக்கு தெரியாது, அப்படி இருந்தாலும் எனக்கு கவலை இல்லை; 'எனக்கு மயக்கம்' என்ன மிகவும் பிடித்துள்ளது. செல்வாவின் முன்னைய படங்கள் உங்களுக்கு பிடிக்குமென்றால் 'மயக்கம் என்ன'வும் உங்களுக்கு நிச்சயம் பிடிக்கும்.......

மயக்கம் என்ன - உணர்ச்சிக் குவியல்...

Saturday, November 19, 2011

சிவகார்த்திகேயனும் மெரினாவும்.....

சிவகாத்திகேயன்; இந்த பெயரை தெரியாத சின்னத்திரை பார்வையாளர்கள் இருக்க முடியாது. இன்றைய விஜய் TV யின் One Man Army இவர்தான்; ஒரு நிகழ்ச்சியை வெற்றியடைய செய்ய சிவகாத்திகேயனின் stage presence போதும் என்பதை அறிந்துள்ளதாலோ என்னமோ விஜய் TV யின் நிர்வாக இயக்குனர்கள் அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் சிவகார்த்திகேயனை களமிறக்கு கின்றார்கள். சாதாரண மிமிக்கிரி போட்டியாளராக 2008 இல் விஜய் Tv யின் 'கலக்கப்போவது யாரு' நிகழ்ச்சியில் பங்குபற்ற வந்த சிவகார்த்திகேயன் அந்தப்போட்டியின் இறுதியில் முதல்ப்பரிசை வென்று விஜய் Tv பார்வையாளர்களுக்கு நக்கு பரிச்சியமானார்.

அதன் பின்னர் 'ஜோடி நம்பர் வண்' நிகழ்ச்சியில் விஜய் Tv யின் 'லொள்ளுசபா' புகழ் ஜீவாவிற்கும் இயக்குனர்/நடிகர் S.J சூரியாவிற்கும் இடையிலான கருத்து வேறுபாட்டினால் போட்டியின் இடையிலேயே விலகிய ஜீவாவிற்கு பதிலாக களமிறக்கப்பட்டார். அதில் விஜய் TV யின் மற்றொமொரு தொகுப்பாளரான ஐஸ்வர்யாவுடன் ஜோடி சேர்ந்து 3 ஆம் இடத்தை பெற்றுக்கொண்டார். ஆரம்பத்தில் மிகவும் சிரமப்பட்டாலும் பின்னர் சிறப்பாக ஆடக் கற்றுக்கொண்ட சிவகார்த்திகேயன் விஜய் Tv யின் 'ஜோடி நம்பர் வண்'னிற்கு பதிலாக இரண்டு சீசன் நடாத்தப்பட்ட Boys VS Girls நிகழ்ச்சிலும் கலந்துகொண்டு பட்டையை கிளப்பியிருந்தார். அந்த நிகழ்ச்சியில் டான்ஸ் நன்றாக ஆடினாரோ இல்லையோ பாலாஜியுடன் சேர்ந்து இவர் பண்ணிய ரணகளத்தை அந்த சீசனை பார்த்த யாரும் மறந்திருக்க மாட்டார்கள்.அதன் பின்னர் விஜய் Tv சிவகார்த்திகேயனை முன்னிறுத்தி வழங்கிய 'அது இது எது' நிகழ்ச்சி இன்றுவரை மிகச்சிறப்பாக சென்றுகொண்டிருக்கின்றது. சனிக்கிழமை இரவு 7 மணிக்கு ஆரம்பமாகும் இந்நிகழ்ச்சியின் மூன்று சுற்றுக்களுமே சுவாரசியமானவை; அதிலும் சிவகார்த்திகேயனால் மூன்றாவது சுற்றில் கேட்க்கப்படும் 'மாற்றி யோசி' மிகவும் சுவாரசியமாக இருக்கும். இப்படி கொஞ்சம் கொஞ்சமாக விஜய் Tv இனுள் தனக்கென ஒரு இடத்தை ஏற்ப்படுத்திக்கொண்ட சிவகார்த்திகேயன் 'விஜய் அவாட்'சினை கோபிநாத்துடன் இணைந்து தொகுத்து வழங்கியதன் மூலம் விஜய் tv யின் தவிர்க்க முடியாத தொகுப்பாளராக மாறினார். அதன் பின்னர் சூப்பர் சிங்கர் சீனியர் நிகழ்ச்சியில் அவ்வப்போது தொகுப்பாளராக வந்து கலகலப்பூட்டினார். அதன் பின்னர் 'ஜோடி நம்பர் வண்' நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிநார்; ஒரு நடன நிகழ்ச்சியை நகைச்சுவை நிகழ்ச்சியோ என்று சொல்லுமளவிற்கு உடல் மொழியாலும், டைமிங் காமடியாலும் கிச்சு கிச்சு மூட்டினார்.

இறுதியாக நடந்த 'ஜோடி நம்பர் வண்' நிகழ்ச்சியை விட அதிகளவில் ரீச் ஆனதென்னமோ அதன் 'ப்ளு பேஸ்' தொகுப்புத்தான்; நிகழ்ச்சியின் தொடக்கம் முதல் இறுதிவரை இடம்பெற்ற இதுவரை ஒளிபரப்பப்படாத சுவாரசியமான நிகழ்வுகளில் தொகுப்பே இது. ஒரு தொலைக்காட்சியில் சாதாரண போட்டியாளராக நுழைந்து 4 ஆண்டுகளில் அந்த தொலைக்காட்சியின் முதல்த்தர தொகுப்பாளராக மாறியிருக்கின்றார் என்றால் சிவகார்த்திகேயனின் வளர்ச்சி அபரிமிதமானது! நகைச்சுவை உணர்வு (sense of humor), உடல் மொழி (Body Language), Timing sense, Voice Modulation போன்றவைதான் சிவகார்த்திகேயனின் இந்த அசுர வளர்ச்சியின் இரகயியம். சின்னத்திரையில் தொகுப்பாளராக எத்தனையோ பேர் வந்திருந்தாலும் ஒரு சிலரர்தான் மக்கள் மனதில் இடம்பிடித்துள்ளனர். 'பெப்சி' உமா, 'காமடி டைம்' அர்ச்சனா & சிட்டி பாபு, ஆனந்த கண்ணன், விஜயசாரதி, விஜய் ஆதிராஜ், 'நீயா நானா' கோபிநாத்,திவ்யதர்சினி, தேவதர்சினி என ஒரு சிலரே மக்களை அதிகம் ஈர்த்தவர்கள்; அந்த வரிசையில் இப்போது சிவகார்த்திகேயனும்........ஆனால் சிவகார்த்திகேயனுக்கு சின்னத்திரை மட்டுமல்ல; இப்போது வெள்ளித்திரையும் செங்கம்பளம் விரித்துள்ளது. 'பசங்க' புகழ் பாண்டியராஜ் இயக்கம் 'மெரீனா' திரைப்படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகி வெள்ளித்திரைக்கு பிள்ளையார் சுழி போட்டுள்ளார் சிவகார்த்திகேயன். பசங்க, வம்சம் திரைப்படங்களின் வரவேற்ப்பிற்க்கு பின்னர் பாண்டியராஜ்சும், சிவகார்த்திகேயனின் அறிமுகமும் உள்ளதால் மெரினாவிற்கு அதிக எதிர்ப்பார்ப்பு உள்ளது. சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக 'களவாணி' படத்தில் நடித்த ஓவியா நடிக்கிறார்; 1988 இல் மிரா நயிர் (Mira Nair) இயக்கிய 'சலாம் மும்பை' ஹிந்தி திரைப்படத்தின் இன்ஸ்பிரேஷன்தான் மெரீனா என்று சொல்லப்படுகின்றது. இந்த திரைப்படமும் பசங்க திரைப்படத்தை போன்றே குழந்தைகள் சம்மந்தப்பட்ட திரைப்படம்தான், மேரினாவில் சிறுவர்களும் முக்கிய பாத்திரங்களில் நடிக்கிறார்கள். சரியான முறையில் விளம்பரம் செய்யப்படும் பட்சத்தில் மெரீனா மிகப்பெரும் ஓப்பினிங்கை பெறும் சந்தர்ப்பம் உண்டு; மயக்கம் என்னவிர்க்கு அடுத்து நான் அதிகம் எதிர்பார்ப்பது மெரினாவைத்தான்...

மெரீனா தவிர்த்து R. ஐஸ்வர்யா தனுஸ் இயக்கத்தில் தனுஸ், சுருதிஹாசன் நடிக்கும் '3' திரைப்படத்தின் போஸ்டரிலும் தனுஷுடன் சிவகார்த்திகேயன் காணப்படுகின்றார். தனுஷுடன் குணச்சித்திர நடிகராக (Character artist) இல்லாமல் நகைச்சுவை நடிகராக (Comedy artist ) நடித்தால் சிறப்பாக இருக்கும்; இப்போதிருக்கும் தமிழ் சினிமாவின் நகைச்சுவையாளர்களின் வெற்றிடத்தை சிவகார்த்திகேயன் சரியாக பயன்படுத்திக்கொள்ளலாம். அடுத்து எழில் இயக்கம் திரைப்படமொன்றிலும் சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ளதாக சொல்லப்படுகின்றது. ஹீரோவாக வெற்றிபெற்றால் மகிழ்ச்சி, ஒருவேளை அது கைகூடவில்லை என்றால் இருக்கவே இருக்கு நகைச்சுவை; அது சிவகார்த்திகேயனுக்கு கை கொடுக்கும். சின்னத்திரையில் சாதிச்ச சிவகார்த்திகேயன் வெள்ளித்திரையிலும் சாதிப்பாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.......

Thursday, November 10, 2011

நானும் சினிமாவும் பாகம் - 2

முதல் பதிவில் விஜய் பற்றி எழுதியுள்ளதால் இந்த பதிவை அஜித்தில் இருந்து ஆரம்பிக்கிறேன். நான் முன்னர் குறிப்பிட்டது போலவே நாட்டின் போர் காரணமாக 1996 க்கு பின்னர்தான் அடுத்த தலைமுறை நடிகர்களின் முகத்தையே காணும் வாய்ப்பு கிடைத்து. அப்படி அஜித்தை முதல் முதலில் பார்த்தது ஒரு ஒலியும் ஒளியும் பாடலில்த்தான். 1996 இல் பல்கலைக்கலகத்திற்கே யாழ்நகரில் முதல் முறையாக மின்சாரம் வழங்கப்பட்டது (6 ஆண்டுகளின் பின்னர்) அதுகூட மாலை 6 மணி முதல் இரவு 12 மணிவரைதான்! பல்கலைக்கழகத்திற்கு வழங்கப்பட்ட மின்சாரம் அந்த அயலில் உள்ள வீடுகளுக்கும் கிடைத்தது. குறிப்பிட்ட பகுதியில் அண்ணா ஒருவரின் வீடு இருந்ததால் ஒவ்வொரு வெள்ளியும் இரவு தங்குவது அங்குதான்; காரணம் 8 மணிக்கெல்லாம் ஊரடங்குசட்டம், வீதியில் நடமாடமுடியாது.

இரவு 7.30 மணிக்கு ஒலியும் ஒளியும் பார்த்துவிட்டு இரவு 9.30 மணிக்கு டூடடர்சனில் ஒளிபரப்பப்படும் திரைப்படத்தினை 12 மணிவரை பார்ப்போம்; மின்சார நிறுத்தத்தால் படம் அரைகுறையில் தடைப்படும்போது வரும் ஏக்கமும், கோபமும், ஏமாற்றமும் சொல்லில் கூறமுடியாதவை. சில நேரங்களில் 10 நிமிடங்கள் அதிகமாக மின்சாரம் தொடர்ந்திருக்கும், எங்களுக்கும் இன்று மின்சாரம் தொடர்ந்து இருக்குமோ என்று ஒரு நப்பாசை !! அடுத்த கணமே மின்சாரம் தடைப்பட்டு எமக்கு மிகுந்த ஏமாற்றம் கிடைக்கும். அப்படி மின்சாரம் தடைப்படாமல் பார்த்தது இரண்டு திரைப்படங்கள்; திருமலை தென் குமரி, வேலைக்காரன்; இவை இரண்டும்தான் அன்று முழுமையாக பார்த்த இரண்டு திரைப்படங்கள்; வேலைக்காரன் முழுமையாக பார்த்து முடித்தபோது இருந்த மனநிலை சொல்லி புரிய வைக்க முடியாதது!அப்படி அங்கு ஒருநாள் ஒளியும் ஒளியும் பார்க்கும்போது அறிமுகமாகிய நடிகர்தான் அஜித்குமார்; என்ன பாடல் என்று தெரியவில்லை, "யார் இந்த பையன்" என்ற ஒருவரின் கேள்விக்கு "அஜித் என்று ஒரு பையன் புதுசா நடிக்கிறான்" என்பதுதான் நான் அஜித் பெயரையும், அஜித்தின் உருவத்தையும் கேட்ட, பார்த்த கணம். ஆனாலும் எனக்கு எந்த விதமான ஈர்ப்பும் அப்போது ஏற்ப்படவில்லை. அதன் பின்னர் நான் பார்த்த முதல் அஜித் திரைப்படம் 'வான்மதி'; 'பூவே உனக்காக' முன்னமே பார்த்ததாலோ என்னமோ எனக்கு அஜித் மீது அப்போதும் ஈர்ப்பு வரவில்லை. தொடர்ந்து காதல்க்கோட்டை, நேசம், ஆசை என பல அஜித் படங்களை பார்த்திருந்தாலும் அஜித் அன்று எனக்கு பத்தோடு பதினொன்றாகத்தான் தெரிந்தார். மீடியா வசதிகள் எதுக்குமே இல்லாத காரணத்தால் சினிமாவின் தாக்கம் திரைப்படங்களை ரசிப்பதில் மட்டும்தான் அன்றிருந்தது; இன்றுபோல் நடிகர்களுக்காக ரசிகர்கள் நண்பர்களுடன் மோதியதில்லை.

இந்நிலையில் அஜித்தை எனக்கு பிடிக்க ஆரம்பித்த திரைப்படம் சரண் இயக்குனராக அறிமுகமாகி அதகளப்படுத்திய காதல் மன்னன்; இந்த திரைப்படம் நான் பார்க்கும்போது திரைப்படம் வெளியாகி நீண்ட நாட்கள் இருக்குமென்று நினைக்கின்றேன்; ஒரு ரூபாயில் சவால் விடுவது, சொடுக்கு போடுவது, 'மெட்டுத்தேடி தவிக்கிது ஒரு பாட்டு' பாடல் என காதல் மன்னனும்; காதல் மன்னனால் அஜித்தும் பிடித்துப்போயிற்று. அடுத்து அமர்க்களம், தீனா என அஜித் படத்திற்கு படம் என்னை அதிகமாக இம்ப்ரெஸ் செய்ய ஆரம்பித்தார். அந்த காலப்பகுதியில் வெளிவந்த அனைத்து அஜித் திரைப்படங்களையும் பார்த்திருக்கின்றேன்; அந்த நேரத்தில்த்தான் அஜித்தின் 'நான்தான் சூப்பர் ஸ்டார்' ஸ்டேட்டஸ் பத்திரிகைகளில் வெளிவந்தது; அன்றிலிருந்து அஜித்மீதிருந்த ஈர்ப்பு குறைய ஆரம்பித்தது. அடுத்த தலைமுறை நடிகர்களில் விஜய், அஜித் இருவருமே அந்த காலப்பகுதியில் எனக்கு பிடித்தமானவர்கள்தான்; ஆனால் அன்றைய அஜித் மற்றும் விஜய் ரசிகர்கள் ரிரஜினியுடன் இவ்விருவரையும் ஏட்டிக்கு போட்டியாக வைத்து பேசியதுதான் நான் விக்ரமின் தீவிர ரசிகரான மாற காரணமாக அமைந்தது.விக்ரம் பற்றி பின்னர் பார்ப்போம்; தீனா திரைப்படத்தை தொடர்ந்து வெளிவந்த அஜித்தின் திரைப்படங்களில் 'வில்லன்' தவிர்த்து ஆறு திரைப்படங்கள் தோல்வியடைந்தன! இந்த நிலையில் விஜயின் திருமலை, கில்லி வெற்றி விஜய் ரசிகர்களை அஜித்தை கிண்டல் செய்யும் அளவிற்கு வளர்ந்திருந்தன. கில்லி வெற்றியின் பின்னர் கூட இருந்த சில விஜய் ரசிகர்கள் பண்ணிய ரகளைதான் அடுத்து வெளிவந்த அஜித்தின் 'அட்டகாசம்' திரைப்படத்தை மிகுந்த ஆவலுடன் பார்க்க தூண்டியது; அதுவரை அஜித் மீதிருந்த வெறுப்பும் குறைந்திருந்தது, கூடவே அஜித்தும் மிகவும் மாறியிருந்தார். 'அட்டகாசம்' திரைப்படம் பார்த்த பின்னர்தான் மீண்டும் அஜித்தை பிடிக்க ஆரம்பித்தது. தொடர்ந்து 'ஜீ' திரைப்படத்திற்கு முதல்க்காட்சி சென்றாலும் லிங்குசாமி ஏமாற்றியிருந்தார்!

அடுத்து வெளிவந்த பரமசிவன் திரைப்படம்தான் அஜித்மீது மிகப்பெரும் ஈர்ப்பை கொண்டு வந்தது, அது மரியாதை கலந்த ஈர்ப்பு. யாருமே நினைத்துக்கூட பார்க்க முடியாதளவிற்கு தன் உடல் எடையை குறைத்திருந்தார். யாழ்ப்பாணத்தில் குண்டு எறியும் கலாச்சாரம் அதிகமாக இருந்த காரணத்தால் திரையரங்கிற்கு செல்வதில்லை என்றிருந்தோம்; ஆனால் சண் டிவியில் புதிய பாடல்களை ஒளிபரப்பிய அடுத்த 15 நிமிடங்களுக்குள் நாம் திரையரங்கில் நின்றோம்; காரணம் அஜித்தின் தோற்றம்!! வாசு படத்தை சொதப்பினாலும் அஜித் என்னை ஏமாற்றவில்லை! படம் சரியாக போகாவிட்டாலும் கூடவந்த ஆதி, சரவணா திரைப்படங்களைவிட அதிகம் வசூலித்தது. அதற்க்கு அடுத்து வெளிவந்த திருப்பதி திரைப்படத்தை முதல்நாள் முதல் காட்சியில் பார்த்தேன்; ரஜினியை வைத்து பேரரசு படமெடுத்தாலும் திரையரங்கில் போய் பார்ப்பதில்லை என்பது அன்று எடுத்த முடிவுதான்:-)அடுத்து வரலாறு திரைப்படம் நாட்டு பிரச்சனை காரணமாக யாழ்ப்பாணத்தில் வெளியாகவில்லை; அதன் பின்னர் இன்றுவரை எந்த அஜித் திரைப்படத்தையும் திரையரங்கில் பார்க்கும் சந்தர்ப்பம் அமையவில்லை. நேரம், பணம், கூடவரும் நண்பர்கள் என ஈதோ ஒரு காரணத்திற்க்காக ஒவ்வொரு தடவையும் அஜித் படங்களை திரையரங்கில் பார்ப்பதற்கு முட்டுக்கட்டை விழுந்தது. இறுதியாக மங்காத்தா பார்ப்பதற்கு குறைந்தது 4 தடவைகள் திட்டமிட்டிருப்போம், ஆனால் அது கடைசிவரை கைகூடவில்லை; இறுதியில் வழமைபோல DVD தான்!!! இறுதி ஐந்து ஆண்டுகளில் ரஜினி, விக்ரம் திரைப்படங்கள் தவிர்த்து திரையரங்கில் நான் பார்த்த திரைப்படங்கள் என்றால் 5 திரைப்படங்கள்தான்; மொழி, தீபாவளி, நான்கடவுள், பையா, நந்தலாலா என்பவைதான் அந்த ஐந்தும்!!!!

மங்காத்தா எனக்கு மிகவும் பிடித்திருந்தது, இப்போது அஜித்தையும் அதிகமாகவே பிடிக்கின்றது; காரணம் ரஜினியா! இல்லை எமது சமூக தளங்களில் உள்ள விஜய் ரசிகர்களா! அல்லது அஜித்தை புறக்கணிக்கும் ஊடகங்களா! அல்லது அஜித்தின் அண்மைக்கால வெளிப்படையான நடவடிக்கைகளா! காரணம் இவை அனைத்தும் சேர்ந்ததுதான் என்றாலும்; அஜித் இப்போது எனக்கு மிகவும் பிடித்தமானவர்களில் ஒருவர்.

சாவியைபிரித்தல் (Dis Key அதாவது டிஸ்கி )

அடுத்த பதிவுகளில் விக்ரம், சூர்யா, தனுஸ், சிம்பு மற்றும் ஹீரோயின்ஸ் பற்றியும் பார்க்கலாம் :-) பலருக்கும் இந்த பதிவு போரடிக்கும் என்பது புரிகிறது; காரணம் இது எனது சுய சொறிதல், இருந்தும் ஏன் எழுதுகின்றேன் என்றால் பின்னொருநாளில் குறைந்தபட்சம் எனக்காவது படிப்பதற்கு சுயாரசியமாக இருக்கும் என்பதால்த்தான், "அட நாதாரி இதை டயரியில எழுதவேண்டியதுதானே" என்கிற உங்க மைன்ட் வாய்ஸ் கேக்கிது, ஆனா எனக்கு அந்த கெட்ட பழக்கமெல்லாம் இல்லை :-)

முதல் பதிவு -> நானும் சினிமாவும் - பாகம் 1

Thursday, November 3, 2011

தமிழை காப்போம் வாரீர்.......

மும்பை எக்ஸ்பிரஸ் என்றொரு படத்தை கமலஹாசன் வெளியிடும்போது தமிழில் பெயர் வைக்குமாறு தமிழ் உணர்வாளர்கள் என்கின்ற பெயரில் சிலர் கமலை மிரட்டினார்கள். அந்த நேரத்தில் கமலஹான் ஒரு நேர்காணலில் "கல்தோன்றி மண் தோன்றா காலத்து முன்தோன்றிய மூத்த தமிழை கமலஹாசன் அழித்து விடுவான் என்பது வேடிக்கையாக இல்லை" என்று கூறினார். இன்றைக்கு நாம் இருக்கும் நிலையில் எங்கே அது நடந்துவிடுமோ என்றே எண்ணத் தோன்றுகின்றது!!

உலகின் ஆதி மொழிகளில் ஒன்றான காலத்தால் அழிக்க முடியாத தமிழை தம் உதிரத்துடன் கலந்து உள்ளத்தில் சுமந்து தாயைவிட உயர்வாக பேணிய வரலாறு தமிழனுடயது. ஆனால் இன்று தமிழை ஒரு நடிகன் சினிமாவிலும், ஒரு அரசியல்வாதி மேடையிலும் பேசும்போதுதான் எம்மால் உணர முடிகின்றதென்றால் தமிழ் மொழி இன்று கடைகளில் வாங்கும் குளுக்கோஸ் போலாகிவிட்டதா என்றே எண்ணத் தோன்றுகின்றது!!!

திரைப்படங்களில் தமிழ், தமிழன் வரலாற்றை வெளிக்கொண்டு வருவதில் எனக்கு எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. காரணம் 65-70 சதவீதத்தை எழுத்தறிவாக கொண்ட எம்மில் வரலாற்றை பாடமாக படிப்பவர்கள் எத்தனைபேர்? கப்பலோட்டிய தமிழன், வீரபாண்டிய கட்ட பொம்மன், பாரதியார் போன்ற வரலாற்றின் நாயகர்களை பாமர மக்களுக்கு எடுத்து உரைத்தது திரைப்படங்கள்தான். அந்த வரிசையில் போதிதர்மன் வரலாற்றை மக்களிடம் கொண்டு சென்று சேர்த்த முருகதாஸிற்கு மனமார்ந்த நன்றிகள்.அதே நரம் போதிதர்மன் வரலாற்றை இதுவரை தமிழர்கள் அறிந்திராததை குறையாக காட்டியமைக்கு கண்டனங்கள்; போதிதர்மனை மக்கள் அறிந்து கொள்வதாயின் பாடப்புத்தகங்களில் போதிதர்மன் வரலாறு சேர்க்கப்பட்டிருக்க வேண்டும், இல்லை தாத்தா பாட்டி என முன்னோர்கள் கூறிய வரலாற்று கதைகள் மூலம் அறிந்திருக்க வேண்டும். இவ்விரண்டும் இல்லாமல் ஒரு வரலாற்றை எப்படி மக்கள் அறிந்து கொள்வார்கள்? அப்படி அறியாத மக்கள் மீது எப்படி குறைகாண முடியும்?

போதிதர்மன் வரலாறு தவிர்த்து முருகதாஸ் ஈழத்திற்க்கும், தமிழர்களுக்கும் ஆதரவாக எழுதிய வசனங்கள் திணிக்கப்பட்டவையாக இருந்தாலும் பார்ப்பதற்கும் கேட்ப்பதர்க்கும் நன்றாகவே உள்ளது. முருகதாஸ் தமிழை வியாபாரம் செய்து காசு பார்த்ததாக ஒருசாராரும்; முருகதாஸ் தமிழனின் பெருமையை பறை சாற்றியுள்ளார் என்று மற்றொரு சாராரும் சமூகத்தளங்களில் கூறி வருகின்றனர். இந்த இரண்டு விதமான கருத்து மோதலிலும் 'எடுத்தார் கைப்பிள்ளையாக' தமிழ் சிக்கி தவிக்கின்றது. திரைப்படத்தை திரைப்படமாக பார்த்தால் இது ஒரு விடயமே இல்லை; அதே நேரம் 7 ஆம் அறிவில் தமிழ் வியாபாரமா? பெருமையா? என்று விவாதித்தால் முடவு காண்பது முடியாதது; அதன் முடிவு முருகதாஸ் மற்றும் உதயநிதியின் மனச்சாட்சிகளுக்குத்தான் வெளிச்சம்.

எமது மொழியை இன்னுமொருவன் திரைப்படத்திலோ, அரசியல் மேடையிலோ உணர்ச்சி ததும்ப பேசும்போதுதான் எம்மொழியை நாம் உணர்கின்றோமேன்றால் நாம் உண்மையான தமிழர்களா? ஒரு கணம் சிந்தித்து பாருங்கள். அரசியல் மேடைகளிலும், சினிமா திரையரங்குகளிலும் கிடைக்கும் தமிழ் உணர்ச்சிதான் எமக்கு மொழிப்பற்றை உண்டாக்குமானால், இதுவரைநாள் எமது மொழி எது? எம் உள்ளத்தில் தமிழ் எப்போதுமே இரண்டற கலந்திருக்குமானால் எமக்கு இன்னொருவன் தமிழ் உணர்வை தூண்ட வேண்டிய அவசியமில்லை. இதனை பயன்படுத்தித்தான் பல திரைப்பட நடிகர்களும், இயக்குனர்களும் தம் திரைப்படங்களில் மொழிப்பற்றை காசாக்கியுள்ளார்கள், இன்னும் காசாக்குவார்கள். அது அவர்களது வியாபார உக்தி, இதில் அவர்களை குறை சொல்ல முடியாது.அதே நேரம் இதனை நாம் தமிழின், தமிழனின் பெருமையாக நினைத்தால் நம்மை விட அப்பாவிகள் வேறு யாருமில்லை. 7 ஆம் அறிவை மொழிகொண்டு விளம்பரப்படுத்தாமல், விமர்சிக்காமல் அணுகியிருந்தால் அதனை ஒரு சாதாரண திரைப்படமாக விமர்சித்தோ அணுகியோ இருக்கலாம். ஆனால் படத்தின் டிரெயிலர் வெளியீடு முதற்கொண்டு இன்றுவரை படத்திற்கு விளம்பரமே தமிழ்தான்! அப்படி இருக்கும்போது இவர்கள் எப்படி தமிழை வைத்து வியாபாரம் செய்யவில்லை என்றும்; தமிழை பெருமைப்படுத்துகிறார்கள் என்றும் கூறமுடியும்?

ஒரு சில ஆண்டுகளுக்கு முன்னால் தமிழில் பெயர் வைத்தால் வரிச்சலுகை என்றார்கள்; திரைப்படத்துக்கு தமிழில் பெயர் வைத்து வரிச்சலுகை பெற்ற திரைப்படங்களின் 50 சதவீதமானவை ஆங்கில உப தலைப்புக்களை கொண்டவைதான். சுய விருப்பம் இல்லாமல் பணத்தை காட்டி தமிழை டைட்டில்களில் வாங்கிய இந்த கேடுகெட்ட செயலுக்கும் விபச்சாரத்திற்க்கும் என்ன வித்தியாசம்!!! எல்லாவற்றுக்கும் தமிழில் பெயர் வைக்க வேண்டும் என்று கொதித்தெழுந்த டாக்டர் ஒருவர் தன் பட்டப்பெயரையே மருத்துவர் என்று மாற்றி புரட்சி செய்தார்; ஆனால் அவர் பேரப்பிள்ளைகள் கல்வி கற்பது டெல்லியிலுள்ள ஆங்கில மொழி பள்ளியில் ; இப்படியான சில அரசியல் சாணக்கியர்களும், சில சினிமா புரட்சிகளும் தமிழுக்கு அப்போ காவல்காப்பது வேடிக்கையான வினோதம்.

அதேபோல ஒருவன் ஈழத்தை வைத்து வியாபாரம் செய்கின்றான் என்று கூறினால்; "அவன் அதாவது செய்கின்றான் நீ என்ன செய்தாய்?" என்று புத்திசாலித்தனமாக பதிலுக்கு கேள்வி கேட்கின்றார்கள். உன் முகத்தில் ஒருவன் உமிழ்கிறான் என்று கூறும்போது "அவனாவது உமிழ்கிறான் நீ என்ன செய்தாய்" என்பதை போன்றது இவர்களது வினா!! நான் ஈழத்திற்காக எதுவும் செய்யவில்லை என்றே வைத்துக் கொள்ளுங்கள்; அதற்காக என்னை வைத்து ஒருவன் வியாபாரம் செய்கின்றான் என்று தெரிந்த பின்பும் அவனுக்கு 'ஈ'ன்னு பல்லை இளிக்க சொல்கிறார்களா? இப்படியான ஈழ வியாபாரிகளை பார்த்து கேள்விகேட்டால்; அவர்களின் ஆதரவாளர்கள் எமக்கு கேட்காமல் கொடுக்கும் பட்டம் 'துரோகி', கூடவே நாலு தலைமுறையையும் தோண்டி எடுத்து கேவலமாக திட்டுவார்கள்.திரைப்படங்களில், அரசியல் கூட்டங்களில், சினிமா தலைப்புக்களில், பிறமொழி கண்டு பிடிப்புக்களை தமிழ் மொழிமாற்றம் செய்வதில்தான் தமிழ் வாழும், வளரும் என்று நினைத்தால் 'எனது பார்வையில்' அது சுத்த முட்டாள்த்தனம். இசை முதல் இணையம் வரை இன்று உலகில் வியாபித்திருக்கும் தமிழை காலத்தாலும் அழிக்க முடியாது. இன்றைய வெளிநாடுகளில் உள்ள இளைஞர்களிடத்திலும், படித்த இளைஞர்களிடத்திலும் மொழி மீதான பற்று மிகவும் அதிகரித்து காணப்படுவது மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான விடயமே; அதே நேரம் அவர்களில் சிலர் மொழிப்பற்றை ஒரு நாகரீகமாக (Fashion) வெளிக்காட்டுவதற்கு எத்தனிப்பது எந்தளவிற்கு ஆரோக்கியமான விடயம் என்றும் தெரியவில்லை!!!

தமிழை நேசியுங்கள், சுவாசியுங்கள், கற்றுக்கொள்ளுங்கள், கற்றுக்கொடுங்கள்; தமிழன் என்பதில் பெருமை கொள்ளுங்கள், அதேநேரம் நீங்களும் மனிதர்கள்தான் என்பதை ஒருபோதும் மறந்துவிடாதீர்கள். உலகிற்கு அஷ்ட சாஸ்திரங்களையும், திருக்குறளையும் கற்றுக்கொடுத்த தமிழ் மொழியை வைத்து வியாபாரம் மட்டும் செய்யாதீர்கள்; அடுத்தவனையும் வியாபாரம் செய்ய அனுமதிக்காதீர்கள்......