Thursday, October 24, 2013

தமிழ் சினிமா ரசிகனும், விமர்சனங்களும்.......உலகம் முழுவதும் உள்ள மக்கள் ரசிக்கும் பொழுதுபோக்கு கலை/தொழில் சினிமா!! சினிமாமீது ஆயிரம் விமர்சனங்கள் இருந்தாலும் சினிமா ஜதார்த்தத்தில் மக்களால் தவிர்க்கப்பட முடியாதது, இன்னும் சொல்லப்போனால் அழிவில்லாத அம்சமது. உலகம் முழுவதும் சினிமாவின் தாக்கம் வியாபித்திருந்தாலும் தமிழ் மக்களைப்   பொறுத்தவரை சினிமாவின்  தாக்கம் சற்று அதிகமாகவே  அன்றாட வாழ்வியலுடன் பின்னிப் பிணைந்துள்ளது. உடல்மொழி, வசனங்கள், உடை என  சினிமாவின் தாக்கம் இங்கு அதிகம்; அரசியல்வரை இந்த தாக்கம் கெட்டியாகப் பீடித்துள்ளது!!!  

பொழுதுபோக்கு  சினிமா, கலைப் படைப்புக்கள், மாறுபட்ட சினிமா என சினிமாவை  பிரித்துச் சொன்னாலும்; எல்லாமே வர்த்தகரீதியில் லாபத்தை நோக்கமாகக் கொண்டு எடுக்கப்படுபவைதான்! மொத்தத்தில் எல்லாமே வணிக சினிமாக்கள்தான். சில இயக்குனர்களும், சில விமர்சகர்களும், சில ரசிகர்களும் சினிமாவை நல்ல சினிமா, மோசமான சினிமா என்று இரு தட்டில் வைத்து நோக்குகின்றார்கள். இது சரியான பார்வையா? நல்ல சினிமா எது? மோசமான சினிமா எது ? என்பது பற்றிய என் எண்ணங்கள்தான் இந்தப் பதிவு!!  

ரசிகர்கள்.....

கதாநாயகர்களது  திரைப்படங்களுக்கு கொடுக்கும் முன்னுரிமையை  தமிழ் சினிமா ரசிகர்கள் மாற்றுச்  சினிமாக்களுக்கு கொடுப்பதில்லை என்கின்ற குற்றச்சாட்டும் உண்டு! கதாநாயக ரசனை என்பது ஒவ்வொருவரதும்  தனிப்பட்ட விருப்பு! இதில் தவறென்று உள்ளது?  அடுத்தவர் விருப்பு வெறுப்பில் கருத்துச்சொல்லும் உரிமை எவருக்கும் இல்லை !!  ஒரு திரையரங்கில் 300 ரூபாயை கொடுத்து எனக்கு பிடித்த சினிமாவைத்தான் நான் பார்க்க முடியும்; இதுதான் மிகப்பெரும்பாலான ரசிகர்களின் மனநிலை. இதைச் சொல்வதால் தமிழ் ரசிகர்கள் மாற்றுச் சினிமாவை ஏற்றுக்கொள்வதில்லை என்று அர்த்தமில்லை; தமிழ் ரசிகர்கள்தான் இதுவரை தமிழ் சினிமா கொடுத்த அத்தனை புதுமைகளையும் கொண்டாடியவர்கள்!

மிகப் பெரும்பாலான தமிழ்  சினிமா ரசிகர்களைப் பொறுத்தவரை  சினிமா என்பது பொழுதுபோக்கு சாதனமாகவே எடுத்துக்கொள்ளப் படுகின்றது! அவர்களைப் பொறுத்தவரை கொடுத்த பணத்திற்கு நிறைவான போகுதுபோக்கு கிடைப்பதுதான் முதற்தேவை!! அதனால்தான் இங்கு பொழுதுபோக்குத் திரைப்படங்களும், கதாநாயகனை முன்னிறுத்தி எடுக்கப்படும் அக்க்ஷன் திரைப்படங்களும் பெரும் வரவேற்பை பெறுகின்றது. மக்களின் இப்படியான போக்கால் தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் படைப்புக்களை துணிந்து எடுக்க முடிவதில்லை, அப்படி எடுக்கும் திரைப்படங்களை மக்கள் வரவேற்பதில்லை என்கின்ற குற்றச்சாட்டு சம்பந்தப்பட்ட திரைப்படத் தரப்புக்களிடமிருந்தும், சில விமர்சகர்களிடமிருந்தும், சில ரசிகர்களிடமிருந்தும் தொடர்ந்தும் வந்தவண்ணம் உள்ளது!! இவர்களது  கூற்று எந்தளவுக்கு உண்மையானது என்பதை அறிய  கடந்தகால தமிழ் சினிமா வரலாற்றை  மீட்டுப்பார்ப்பது அவசியம்! 

பராசக்தி  -: பாடல்கள் மூலம்  கதை சொல்லிக்கொண்டிருந்த சினிமாவை வசனங்களின்பால் ரசிகர்களை ஈர்த்த திரைப்படம்; தமிழ் சினிமாவின் முக்கிய படிக்கல். கலைஞர் கருணாநிதியின் தமிழுடன் சிம்மக்குரலோனின் கம்பீரமான உச்சரிப்பு  இணைந்து  தமிழ் சினிமாவுக்கு கொடுத்த முதல் மாற்றம் இந்த வசன நடை!   இந்தத் திரைப்படத்தை மாபெரும் வரவேற்புக் கொடுத்து வரவேற்றவர்கள் இதே தமிழ் ரசிகர்கள்தான்!! 

இயக்குனர் ஸ்ரீதர் :-  காப்பியங்கள்    புராணங்கள், இதிகாசங்கள், , திராவிடக் கொள்கைகள், நாடகங்கள், சுந்தந்திரப் போராட்டங்கள் என குறுகிய வட்டத்தில் சுற்றிக்கொண்டிருந்த தமிழ் சினிமாவிற்கு; 1959 இல் வெளிவந்த  ஸ்ரீதரின் முக்கோணக் காதல்கதையான  'காதல்ப்பரிசு' ஒரு மாறுபட்ட  சினிமா. காதல்ப் பரிசை மாபெரும் வெற்றியாக்கிய தமிழ் ரசிகர்கள்; ஏழு நாட்களில் மருத்துவமனையில்  நிகழ்வது போன்று ஸ்ரீதர்  இயக்கிய 'நெஞ்சில் ஓர் ஆலயம்' திரைப்படத்தையும் வணிகரீதியில் வெற்றியாக்கினர்.  

அடுத்து 1964 இல் எம்.ஜி.ஆர், சிவாஜி என்னும் இரு நட்சத்திரங்களின் உச்ச காலத்தில் ஜனரஞ்சக சினிமாவின் உச்சம் என சொல்லப்படும் 'காதலிக்க நேரமில்லை' வெளிவந்தது! புதுமுக நாயகனாக   ரவிச்சந்திரன் அறிமுகமாகிய இந்தத் திரைப்படம் அன்றைய தேதியில் மக்களால் மிகப்பெரியளவு வரவேற்பு கொடுக்கப்பட்டு அனைத்து  வசூல்களையும் முறியடித்து சாதனை செய்த திரைப்படம்! 

பாலச்சந்தர் :- 1960 களில்  அற்புதம் நிகழ்த்திய மற்றொரு இயக்குனர்! எம்.ஜி.ஆர், சிவாஜியின் நட்சத்திர  ஆதிக்கம் நிறைந்த இந்தக் காலப்பகுதியில்; அவர்கள் திரைப்படங்களில் காமடியனாக நடித்துவந்த நாகேஷை கதாநாயகனாக்கி பாலச்சந்தர் செய்த காவியங்கள் 'சர்வர் சுந்தரம்', 'நீர்க்குமிழி', 'எதிர் நீச்சல்' போன்றன மக்களால் மிகப்பெரும் வரவேற்புக் கொடுக்கப்பட்ட திரைப்படங்கள்!! 

இளையராஜா :- கர்நாடக சங்கீதத்தை அடிப்படையாகக் கொண்ட தமிழ் சினிமாவின் இசையில் மூழ்கியிருந்த ரசிகர்களை; தமிழ் மணம்  கமழும் நாட்டுப்புற பாடல்கள் மூலமும், மேற்கத்தைய இசையை/ இசைக்கருவிகளை தமிழ் இசையுடன்  இணைத்து ஏற்படுத்திய புரட்சிமூலமும் கட்டிப்போட்ட இளையராஜாவை  அன்னக்கிளியிலேயே வரவேற்று கொண்டாடியவர்கள் இதே தமிழ் ரசிகர்கள்தான்! 

ரஜினிகாந்த் :- வெண்ணிற மேனி, பென்சில் மீசை, அழகிய தலை முடி, கூரிய  கண்கள்,  நீட்டிய வசனம், நாடக நடிப்பு என்றிருந்த கதாநாயக இலக்கணங்களை உடைத்து கரிய மேனி, மிடுக்கான மீசை, பரட்டைத் தலைமுடி, சிறிய கண்கள், விறுவிறு வசன உச்சரிப்பு, இயல்பான நடப்பு என அறிமுகமாகிய ரஜினிகாந்தை  தமிழ் ரசிகர்கள்தான் தலையில் தூக்கிவைத்து கொண்டாடினார்கள், கொண்டாடுகின்றார்கள். 

பாரதிராஜா :- 1977 இல் '16 வயதினிலே' என்றொரு திரைப்படம்! ஸ்டூடியோவுக்குள் சுற்றிக்கொண்டிருந்த கேமராவை கிராமங்களின் பக்கம் திருப்பி  திரையில்  மண்வாசனை கமழும் வண்ணம் வெளிவந்த திரைப்டம். தமிழ் சினிமா கண்டிராத புது முயற்சி! அன்றைய தேதியில் மக்களால் மாபெரும் வரவேற்ப்பு கொடுக்கப்பட்டு 200 நாட்களை கடந்து ஓடிய மாபெரும் வெற்றிச் சித்திரமிது. 

1985  இல் பாரதிராஜா இயக்கத்தில் வெளிவந்த மற்றுமொரு மாறுபட்ட படைப்பு 'முதல் மரியாதை'  நடிகர் திலகத்தின் அற்புத நடிப்பில் வெளிவந்த இந்தத் திரைப்படம்  முதுமைக் காதலை அத்தனை அழகாக சொல்லிவிட்டுச் சென்றது. இந்தத் திரைப்படமும் மக்களால் மிகப் பெரும் வரவேற்பு பெற்று வணிகரீதியில் மாபெரும் வெற்றி பெற்றது!! 

மகேந்திரன் :-  'முள்ளும் மலரும்' - 1978 இல் மகேந்திரன் இயக்கிய திரைப்படம்! தமிழ் சினிமா அதுவரை  கண்டிராத சினிமா அது! மிகவும் இயல்பாக   வாழ்க்கையை படம் பிடித்துக் காட்டிய சினிமா, இன்றுவரை தமிழ் சினிமாவின் சிறப்பான சினிமாக்களில் உதாரணம் காட்டப்படும் சினிமா. அன்று தயாரிப்பாளரால் விளம்பரப்படுத்தப்படாமலேயே; மக்களின் வாய் வழியான பரப்புரையால் வெள்ளிவிழாக் கண்ட திரைப்படம்!!  

தொடர்ந்து மகேந்திரன் இயக்கிய உதிரிப்பூக்கள் மற்றுமொரு தமிழ் சினிமாவின் புதுமை! அதனைத் தொடர்ந்து ஜானி, நெஞ்சத்தை கிள்ளாதே  என மகேந்திரன் கொடுத்த மாறுபட்ட சினிமாக்கள் தமிழ் ரசிகர்களால் வெற்றியாக்கப்பட்டது! 

கே.பாக்யராஜ்  :-  இந்திய சினிமாவின் ஒப்பற்ற திரைக்கதையாளர். இவரது சினிமாக்கள் ஒவ்வொன்றும் அன்றைய நிகழ்கால வாழ்க்கையை தழுவி எடுக்கப்பட்டவை. நகைச்சிவை கலந்த   ஜனரன்சகமாக இவரது சினிமாக்களுக்கு தமிழ் ரசிகர்கள் காதலர்கள்!! 

மணிரத்தினம் :- இன்றுவரை புது இயக்குனர்கள் பலருக்கும் இன்ஸ்பிரேஷன், பல தமிழ் சினிமா ரசிகர்களின் பிடித்தமான இயக்குனர்.  வசன உச்சரிப்பு, நடிகர்களின்  உடல்மொழி, இசை, கேமரா, எடிட்டிங் என அத்தனையும் இவரது சினிமாவில் புதுமையாக காணப்பட்டது; அதுவரை தமிழ் சினிமா கண்டிராத சினிமா இவருடையது!  மணிரத்தினம் இன்று சொதப்பலான திரைப்படங்களை கொடுத்துக் கொண்டிருந்தாலும்; ரசிகர்கள் இன்னும் அவரை எதிர்பார்ப்பது 'நாயகன்', 'மௌனராகம்' போன்ற படங்களை மீண்டும் கொடுக்க மாட்டாரா என்கின்ற எதிர்பார்ப்பில்தான்!! அந்தளவிற்கு மக்கள்  மணிரத்தினத்தின் நல்ல சினிமாக்களை கொண்டாடியிருந்தார்கள் !! 

ஏ.ஆர்.ரஹ்மான்  :-  1992 இல் ரோஜா திரைப்படத்தில் தமிழ் சினிமா கண்டிராத ஒலியுடன் புதிய இசையை அறிமுகப்படுத்திய இளைஞன். முதற் திரைப்படத்திலேயே மக்கள் ரஹ்மானிற்கு அமோக வரவேற்பை கொடுத்தார்கள்!!  அவர் ஆஸ்கார்வரை  வளர்ந்த பின்னரும் அவர் கொடுக்கும் நவீன இசையை வரவேற்பவர்களும் இதே மக்கள்தான்!

பாலா :-  1999 இல் வெளிவந்த  தமிழ் சினிமாவின் மற்றுமொரு முக்கிய திரைப்படம்!  வாங்கி வெளியிட ஆளில்லாமல் காத்துக்கிடந்த சேது திரைப்படத்தை, வெளியிட்ட அனைத்து இடங்களிலும் வசூல் பார்க்க வைத்தவர்கள் தமிழ் சினிமா ரசிகர்கள்தான்! 

சேரனின் 'பாரதி கண்ணம்மா' &; 'ஆட்டோகிராப்' திரைப்படங்களும்,  தங்கர்பச்சானின் 'சொல்ல மறந்த கதை' & 'அழகி' திரைப்படங்களும், செல்வராகவனின் 'காதல்கொண்டேன்', '7G ரெயின்போ காலனி', பாலாஜி  சக்திவேலின் 'காதல்', 'வழக்கு எண் 18/9' திரைப்படங்களும், அமீரின்  'பருத்திவீரன்', சசிக்குமாரின்  'சுப்ரமணியபுரம்', பிரபுசாலமனின்  'மைனா' திரைப்படங்களும் புதிய முயற்சியாக வெளிவந்து தமிழ் ரசிகர்களால் வணிகரீதியில் வெற்றியாக்கப்பட்ட  சில முக்கிய திரைப்படங்கள்!! இவர்கள்தவிர  ஷங்கர், கவுதம் மேனன், சிம்பு தேவன்,  வெற்றிமாறன் என தமிழ் சினிமாவுக்கு புதிய முயற்சிகளைக் கொடுத்தவர்களது தரமான படைப்புக்கள் மக்களால் வரவேற்ப்புக் கொடுக்கப்பட்டவைதான்!  அண்மையில்கூட புது முயற்சிகளாக  வெளிவந்த  'பீட்சா', 'நடுவில கொஞ்சம் பக்கத்தை காணம்', 'சூது கவ்வும்' திரைப்படங்களும் தமிழ் ரசிகர்களால் புறக்கணிக்கப் படபடவில்லை!! 

1950 களின் ஆரம்பம் தொடக்கம், இன்றுவரை தமிழ் சினிமா ரசிகர்கள் புதிய முயற்சிகள், புதிய வடிவங்கள் போன்றவற்றை தொடர்ந்து வரவேற்றுக்கொண்டுதான் இருக்கின்றார்கள்!!  80 ஆண்டுகள் பழமைவாய்ந்த சினிமாவை இன்றுவரை வளர்த்துவிட்டவர்கள் ரசிகர்கள்தான்!! சிவாஜிகணேஷனின்  நடிப்பிற்கும், கமல்ஹாசனின் புதிய முயற்சிகளுக்கும் ஊக்கம் கொடுத்து வரவேற்றவர்கள் தமிழ் ரசிகர்கள்தான்!  

கமல்ஹாசனின்  80% ஆன புதிய முயற்சிகளுக்கு வரவேற்பளித்த ரசிகர்கள் அவரது 20 % ஆன முயற்சிகளை வரவேற்கவில்லை என்றதும் ரசிகனின் ரசனையை குறைசொல்வது அற்பத்தனமான!!! இந்தத் தவறை கமல்ஹாசன் என்றும் செய்ததில்லை; சில அரைகுறைகளின் அறிவுஜீவித்தனமான கருத்துக்கள்தான் இவை.  ஹேராம்  திரைப்படத்தை பல தடவைகள் பார்த்தும் புரியாமல் இருக்கும் கமல் ரசிகர்கள் இருக்கின்றார்கள்!! கையை பிடித்துக் கூட்டிக்கொண்டுபோன கமல்; திடீரென உயரத்தில் சென்று எட்ட முடியாத பள்ளத்தில் இருக்கும் ரசிகனுக்கு மேலே வா என்று கையைக் கொடுத்தால், அது ரசிகனின் தவறல்ல!! அதுதான் ஹேராம்.  

அன்பேசிவம்  ஒரு அழகிய திரைப்படம்தான்; ஆனால் அதில்வரும் முதலாளித்துவ பிரதிநிதியான நாசரின் நெற்றியில் நீறும், அவர் வாயில் "தென்னாடுடைய சிவனே போற்றி"யும் வலிந்து திணிக்கப்பட்டிருந்தது!!  90 சதவீதம் பேரின் நம்பிக்கையை சிதைத்துவிட்டு எப்படி வெற்றியை எதிர்பார்க்க முடியும்? 

அண்மையில் இயக்குனர் வசந்தபாலன் கூட  அதிகளவில் மட்டமான  நகைச்சுவை திரைப்படங்களே இப்போதேல்லாம் வெளிவருவதாக  விசனம் தெரிவித்திருந்தார்!  இந்த இடத்தில்  ஒரு  விடயத்தை நோக்கவேண்டும்; தமிழ் சினிமா ரசிகர்களில் 90 சதவிகிதம் மக்கள் பொழுதுபோக்கை விரும்பும்  பார்வையாளர்கள்தான்!!  அவர்களைப் பொறுத்தவரை கொடுக்கும் காசுக்கு ஏற்படும் மன நிறைவுதான் முதற்தேவை. அதைக் கொடுக்கும் திரைப்படங்களை அவர்கள் ரசிக்கின்றார்கள்; இதில் என்ன ரசனைக்குறைவு? உங்களுக்கு, ஏன் எனக்கும் கூட பிடிக்காத சில திரைப்படங்களை "செம படம்டா" என கொண்டாடும் பலரும் இருக்கத்தான் செய்கின்றார்கள்! அது அவர்களது ரசனை, அவர்களுக்காக எடுக்கப்படும் சினிமாக்களாக அந்த திரைப்படங்கள் இருந்துவிட்டு போகட்டுமே!

வருடத்தில் 100 க்கு மேற்பட்ட சினிமாக்கள் எடுக்கப்படும்போது 90 சதவிகிதம் எதிர்பார்ப்புடைய வணிக சினிமாவுக்கு 90 திரைப்படங்கள் வெளியாகுவதில் என்ன தவறு இருக்கிறது?  (இவை வர்த்தக நோக்கில்  எடுக்கப்பட்டிருந்தாலும் இவற்றில்  9 திரைப்படங்கள் கூட  வெற்றி பெறுவதில்லை)  100 திரைப்படங்களில்  மிகுதி 10 திரைப்படங்களும் மாறுபட்ட சிந்தனையில் இயக்கப்பட்டிருப்பின் அதுவே நல்ல விடயம்தானே!  இப்படியான புது  முயற்சிகள்  வருடாவருடம்   அதிகரித்துக்கொண்டு வருவது கூட ஆரோக்கியமான வளர்ச்சிதானே!  அதே நேரம் புதிய முயற்சிகளில் கூட  ஜனரஞ்சகம் என்பதை தவிர்த்து முழுக்க முழுக்க இயக்குனர் தன்  எண்ணங்களை மட்டும் திணித்துவிட்டு  மக்களை வரவேற்கவில்லை என்று திட்டுவதும் ஏற்புடையதல்ல! 

சித்திரம் பேசுதடி, அஞ்சாதே, யுத்தம் செய்  திரைப்படங்களை வரவேற்ற மக்கள் நந்தலாலாவை வரவேற்கவில்லை என்றால் தவறு மக்களிடமில்லை என்பதை புரிந்துகொள்ளுங்கள்! நந்தலாலா ஒரு டாக்குமென்டரி வகையான திரைப்படமாகவே இருந்தது, அதில் ஜனரஞ்சகம் இல்லாதவிடத்து இன்று அதை ஏற்றுக்கொள்ளும் நிலையில் மக்கள் இல்லை என்பதுதான் ஜதார்த்தம். நந்தலாலாவை ஏற்றுக்கொள்ள இன்னும் சில தசாப்தங்கள் எங்களுக்கு தேவை!   ஜப்பான் திரைப்படம் ஜப்பானுக்கு சரி, அதை உருவி தமிழில் வெளியிட்டுவிட்டு மக்களை குறைசொல்வது அபத்தம். 

"ஈரான், தென்னமெரிக்க திரைப்படங்களை பாருங்கள், எத்தனை அழகாக இருக்கும்" - இது தமிழ் சினிமாவை வேற்றுமொழி சினிமாவோடு  ஒப்பிட்டு மட்டம்தட்டும் வசனம். சினிமா என்பது மொழி, கலாச்சாரம், மக்களின் வாழ்க்கை முறை, வாழ்க்கைத் தரம், மனநிலை, பொருளாதாரம் என பல விடயங்கள் சார்ந்தது!  மேற்சொன்னவற்றில் தமிழ் நாட்டுடன்  ஈரான், தென்னமெரிக்கா எப்படி ஒருங்கிசையாதோ; அதேபோல சினிமாவும் ஒருங்கிசையாது, ஒப்பிட்டுப் பேசுவது முட்டாள்தனம். ஸ்பானிஸ், பிரெஞ்சிலே நிர்வாணம் என்பது திரைப்படங்களில் சாதாரணம், அவற்றை இங்கே திணிக்க முடியுமா? அங்கு பீச்களில் அரை நிர்வாணம் சாதாரணம், இங்கு ஜோடியுடன் சுற்றினாலே பார்வைகள் வேறுவிதமாக இருக்கும்! அங்குள்ள வாழ்கை முறைக்கு. மனநிலைக்கு  அவர்கள் சினிமா ஒத்துப்போகும், இங்கு அந்த சினிமா இன்றைய தேதியில் சாத்தியமில்லாத ஒன்று! (ஹன்சிகா எல்லாம்...... நல்லவேளை அது இதுவரை நடக்கல, இல்லையின்னா நம்ம பசங்க நிலைமை என்னவாகியிருக்கும் :p )

சேரனுக்கு  'ஆட்டோகிராப்', 'பாண்டவர் பூமி', 'பாரதி கண்ணம்மா', 'வெற்றிக்கொடிகட்டு' திரைப்படங்களை வரவேற்றபோது ரசனையாளர்களாக  தெரிந்த மக்கள்; 'தவமாய் தவமிருந்து', 'மாயக்கண்ணாடி' திரைப்படங்களை  ஏற்கவில்லை என்றதும் என்றதும் கோபம்!!! தங்கர் பச்சானுக்கு 'அழகி'யையும், 'சொல்ல மறந்த கதை'யையும்  ஏற்றுக்கொண்டபோது ரசனையாளர்களாக  தெரிந்த மக்கள்; 'தென்றலையும்', '9 ரூபா நோட்டையும்' ஏற்கவில்லை என்றதும் அப்படி ஒரு கோபம்!!  தவறை உங்கள் பக்கம் வைத்துக்கொண்டு மக்களை குறைசொல்லாதீர்கள்! 

நல்ல சினிமா? எது நல்ல சினிமா? என்னை எடுத்துக்கொண்டாலே என்  அப்பாவுக்கு 'எங்க வீட்டுப் பிள்ளை' நல்ல சினிமா, என் அம்மாவுக்கு 'படையப்பா' நல்ல சினிமா, மனைவிக்கு 'போக்கிரி'  நல்ல சினிமா, தங்கச்சிக்கு 'கில்லி' நல்ல சினிமா, தம்பிக்கு 'சேது' நல்ல சினிமா, நண்பனுக்கு 'ஆட்டோகிராப்'  நல்ல சினிமா.  எனக்கு  5 வயதில் ரஜினிகாந்தின் 'மனிதன்' நல்ல சினிமா!, 10 வயதில் 'உழைப்பாளி' நல்ல சினிமா, 15 வயதில் 'பாட்ஷா' நல்ல சினிமா, 20 வயது வரும்போது 'நாயகன்',  'தளபதி' நல்ல சினிமா, 25 வயதில் 'பருத்திவீரன்', 'சுப்ரமணியபுரம்' நல்ல சினிமா, இப்போது "நல்ல சினிமா என்பதெல்லாம் ஒன்றும் இல்லை, மனதுக்கு பிடித்த சினிமாக்கள் எல்லாமே நல்ல சினிமாக்கள்தான்"!!  நாளை இதுகூட மாறலாம்!ஒவ்வொருவருக்கும் அவரவர் பார்வையில் நல்ல சினிமா எனப்படுவது மாறிக்கொண்டே இருக்கும், இங்கு பொதுப்புத்தியில் நல்ல சினிமா என்பது எந்த வரையறைக்குள் உட்பட்டிருக்கும் என்று வரையறுக்க முடியாது!  ரசனை என்பது திறந்த வெளி, அவரவர் அவரவர்க்கு விருப்பமானதை ரசிக்கின்றார், இதில் குறை சொல்லவும், ஏளனப்படுத்தவும், விமர்சிக்கவும், கருத்துச் சொல்லவும் ஒன்றுமில்லை!! 

பேரரசு படங்களை வெற்றியாக்கிய  எம் மக்கள்தான் இன்றுவரை புதுமையை கொண்டுவந்த அத்தனை பேரையும் கொண்டாடியவர்கள்! எத்தனை புதுமைகளை கொடுத்தாலும் ஜனரஞ்சகத்தோடு கொடுத்தால் எந்த சினிமாவையும் மக்கள் வரவேற்பார்கள்! வேற்று மொழி சினிமாக்களை பார்த்துவிட்டு, அவற்றை மனதில் வைத்து கதை பண்ணிவிட்டு, மக்களை குற்றம் சொல்வது ஏற்புடையதல்ல! எம் மக்கள் பொழுதுபோக்கு சினிமாக்குத்தான் முன்னிரிமை கொடுப்பார்கள், காரணம் அவர்களது தேவை அதுதான், ஆனால் நல்ல சினிமாக்களையும் அவர்கள் எப்போதும் வரவேற்பார்கள், இது நடந்துள்ளது, இப்போது அதிகமாக நடக்கின்றது, இனிமேல் இன்னமும் அதிகமாக நடக்கும். நல்ல சினிமா எதுவென்பதை நீங்களே தீர்மானித்தால் எப்படி? நீங்கள் சினிமாவை மக்களிடம் கொண்டு செல்லுங்கள், அது நல்லதா, இல்லையா என்பதை அவர்கள் தீர்மானிப்பார்கள், மக்கள் தீர்ப்பு ஒருபோதும் தவறாக  இருக்காது!!! இயக்குனர்களே; தரமான சினிமாவை ஜனரஞ்சகமாக கொடுத்துவிட்டு மக்கள் முன்னால் நில்லுங்கள், மக்கள் ஒருபோதும் உங்களைக் கைவிடமாட்டார்கள்!      

Saturday, May 4, 2013

(மூட) நம்பிக்கையும் சமூகமும்!! 
நாகரிகம் வளர  வளர பண்டைய மனிதனின் நம்பிக்கைகளும் மாறிக்கொண்டே வர ஆரம்பித்தது; சில நாகரீக மனிதர்களால் பல நம்பிக்கைகள் மூட நம்பிக்கைகள் என்று வரையறுக்கப்படத் தொடங்கின!!  ஆனாலும் பலர் இன்றும் தொடர்ந்தும் அதே நம்பிக்கைகளை  நம்பிக்கையாக பின்பற்றிக் கொண்டுதான் இருக்கின்றார்கள். இங்கு நம்பிக்கைக்கும் மூடநம்பிக்கைக்கும் இடையிலான அளவுகோல் எனப்படுவது பார்ப்பவரது பார்வையில்தான் தீர்மானிக்கப்படுகின்றது!!  சில நம்பிக்கைகள் அரசாங்கங்களால் உத்தியோக பூர்வமாக நிராகரிக்கப்பட்டும், சில நம்பிக்கைகள் அரசாங்கத்தால் உத்தியோக பூர்வமாக ஏற்றுக் கொள்ளப்பட்டும் பின்பற்றப்படுகின்றன!! 

இன்று மூடநம்பிக்கைகள் என்று சொல்லப்படுபவற்றில் பல ஏதோ ஒரு காரணத்துக்காக ஆரம்பிக்கப்பட்டு; பின்னர் தொடர்ச்சியாக கடைப்பிடிக்கப்பட்டு வருபவைதான்!! அவற்றில்  பல  நம்பிக்கைகள்; ஏற்படுத்தப்பட்ட காரணங்களை விடுத்து தவறான புரிதலோடு இன்றுவரை வெவ்வேறு காரியங்களுக்கு பின்பற்றப்பட்டு வருகின்றது. இவற்றின் பாதகத்தன்மை, சாதகத்தன்மை என்பதெல்லாம் அவை கொடுக்கும் பலனில் வைத்து கணிக்கப்பட வேண்டியவை அல்ல!! அவற்றின் தாக்கம் அவற்றால் கிடைக்கப்பெறும் மன/உடற் தாக்கங்களில்தான் தங்கியுள்ளது. அன்றாட  மனிதப் பழக்கவழக்கங்களில் இருந்து மூடநம்பிக்கைகள் என்று சொல்லப்படுபவற்றை விமர்சிப்பது மிகச் சுலபமான காரியங்களில் ஒன்று; அப்படி செய்வதற்குப் பெயர்தான் பகுத்தறிவு என்றால் அது சுத்த முட்டாள்தனம்(என் பார்வையில்)

மேலே சொன்னதுபோல நம்பிக்கைக்கும் மூட நம்பிக்கைக்கும் இடையில்  இருக்கும் வித்தியாசம்  ஒவ்வொருவருக்கும்  மாறுபடுபவை. ஆனால் அந்த நம்பிக்கைகள் கொடுக்கும் தாக்கங்களின் சாதகத்தன்மை, பாதகத்தன்மை பொறுத்தே அவை வேண்டியவையா, வேண்டாதவையா, இருந்திட்டு போகட்டும் வகையறாக்களா என முடிவெடுக்க  முடியும். அதுகூட  அவரவர் வாழும் சமூகம், மொழி, மதம் என கலாச்சாரம் சார்ந்துதான் முடிவெடுக்கமுடியும். சிலருக்கு/ஒரு சமூகத்துக்கு  மூட நம்பிக்கையாக தோன்றும் விடயங்கள் பலருக்கு/இன்னொரு சமூகத்துக்கு அசைக்கமுடியாத நம்பிக்கையாக இருக்கலாம்! இந்த நம்பிக்கை மரபுவழியாக ஏற்பட்ட உளவியல் உறுதி என்றுகூட  சொல்லலாம். இதை விமர்சிப்பதென்பது அறியாமையின் வெளிப்பாடே!! 

சில நம்பிக்கைகள் அடிமைத்தனங்கள், உயிர்பாதிப்பு, உடற்பாதிப்பு, மனப்பாதிப்பு போன்ற பாரிய தாக்கங்களை இயன்றளவிலும் ஏற்படுத்திக் கொண்டுதான் இருக்கின்றது; இது பல சமூகங்களுக்கும் பொருந்தும். அவற்றை  இல்லாமல் செய்ய குரல் கொடுப்பது  நிச்சயம் ஏற்றுக் கொள்ளப்பட வேண்டிய செயல்தான். ஆனால் இங்கு மூடநம்பிக்கையாக சொல்லப்படுபவை; அதை ஒரு நம்பிக்கையாக ஏற்று  செயற்படும்  சமூகத்தில் நிகழ்கின்றது என்னும் பட்சத்தில் அவர்களை கண்டிப்பதோ, கிண்டல் செய்வதோ அவர்களை ஒருபோதும் மாற்றியமைக்காது என்பதை முதலில் புரிந்துகொள்ளவேண்டும். அது அவர்களுக்குள் மேலும் வன்மத்தையும், கோபத்தையும்தான் ஏற்படுத்தும். அவர்களை பொறுத்தவரை அவர்களாக புரிந்து, கலாச்சார மறுமலர்ச்சியால் மீண்டால்தான் அவற்றிலிருந்து விடுபடமுடியும்; புரியவைத்தால் என்பது சாத்தியமான வழியல்ல!! 

எல்லோரும் விமர்சகர்களாக இருக்கத்தான் ஆசைப்படுகின்றோம், அது மனிதனில் ஒன்றிப்போன ஒரு சுபாவம்!!!  ஆனால் மற்றவரை விமர்சிக்கும் நாம் அதே விடயத்தில் உறுதியாக இருக்கின்றோமா என்பதை சுயபரிசோதனை செய்து பார்ப்பதில்லை. உதாரணமாக சொல்வதானால், பர்தா அணியும் முஸ்லிம் சமூகத்துப் பெண்கள்  வெப்பமான காலப்பகுதியில் உடலை முழுமையாக மூடியிருப்பது  உடல் ஆரோக்கியத்திற்கு நல்லதில்லை என்று சொல்லும் கனவான்கள்; அதே  வெப்பமான காலப்பகுதியில் தங்கள் குடும்ப பெண்களை பிகினியில்/நிர்வாணமாக நடமாட விடுவார்களா?  குறைந்த பட்ச நாகரிக உடையை உடுத்துவது எப்படி அவர்களுக்கு அவசியமோ; அதேபோலத்தான் அவர்களது சமூகத்தின் நாகரீகம் அது, அவ்வளவுதான்! அவர்களது மாற்றத்தை அவர்களது நாகரீகம் தீர்மானிக்கட்டும்; அதில் எதற்கும் நாம் சொறிய வேண்டும்? 

மூடநம்பிக்கைகள்  என்று சொல்லப்படும் பல நம்பிக்கைகள் ஏதோ ஒருவகையில் ஆரோக்கியமானவை என்பதில் எனக்கு அசைக்க முடியாத நம்பிக்கை உண்டு!! எல்லோரும் பரந்த சிந்தனையாளர்கள் இல்லை; சிந்தனைத்  திறன் ஒவ்வொருவருக்கும் மாறுபடும். இந்நிலையில் இன்றும் பல நம்பிக்கைகள்தான்  பலருக்கும்  நம்பிக்கையை, தைரியத்தை கொடுக்கிறது; சிலரை தப்புச் செய்யவிடாமல் தடுக்கின்றது.  மூடநம்பிக்கைகள் என்று சில தசாப்தங்களுக்கு முன்னர் சொல்லப்பட்ட பல விடயங்கள்; அடிப்படையில் சுகாதார, மருத்துவ ரீதியில் சரியானவை என சொல்லப்பட்டிருக்கின்றன!!  பலருக்கு பல நம்பிக்கைகள் நிறைவேறும் போது திருப்தியை கொடுக்கின்றன!!  புரட்டாதிச் சனியானால் அம்மா காக்காவுக்கு சாதம் வைக்கும் சம்பவம்  விமர்சிக்கப்படும், காக்காக்கள் பிதுர்கள் இல்லாமல் இருக்கட்டும், அது மூடநம்பிக்கையாக இருக்கட்டும்; ஆனால் காக்காவுக்கு வைக்கும் சோறு அம்மா/அப்பா/தாத்தா/பாட்டியின் நம்பிக்கை, அவர்களுக்கு திருப்தி ஏற்படுத்தும் சம்பவம்!! 361 நாளும் வேளா வேளைக்கு சமைத்துக் கொட்டும் அம்மாவுக்காக 4 நாட்கள் சற்று பிந்தி சாப்பிட்டால் என்ன ஆகிவிடப்போகிறது? 

பல்லி  கத்தும்போது கைவிரலால் சுண்டுவது, பூனை குறுக்கே போனால் தண்ணீர் குடித்துவிட்டு போவது, சாப்பாட்டில் தலைமயிர் இருந்தால் தண்ணீர் தெளிப்பது, காலையில் வெளியே போகும்போது விளக்குமாறு/துடைப்பம் கண்ணில் படாமல் போவது, எங்கே போகின்றாய் என்று கேட்டால் ஓரிரு நிமிடங்கள் தாமதித்து செல்வது, ஊசியை கையில் கொடுப்பதில்லை, வாகன சாவியை கையில் வாங்குவதில்லை போன்று  நூற்றுக்கணக்கான நம்பிக்கைகள்  அன்றாட வாழ்விலும்; ஒவ்வொரு விசேட சம்பவத்தின் போதும் இப்படியான பல நூறுக்கணக்கான நம்பிகள் கடைப்பிடிக்கப்பட்டு வருவதும் வழமை!!  சிலவற்றுக்கு  காரணம் சொல்லப்படும், பலத்துக்கும்  காரணம் தெரியாமல் மரபுவழி பயன்படுத்தப்பட்டுவரும்!! இங்கு கடைப்பிடிக்கப்படும் அனைத்தும் மூடநம்பிக்கைகள் என்று கொண்டாலும்; அவற்றைக் கடைப்பிடிப்பதில் என்ன தவறு? இழப்பு என்று ஏதும் இல்லை, ஆனால் கிடைப்பது திருப்தி!! 

 Facebook இல் கூட  ஒரு கடவுள்  படத்தை போட்டு இதை  Share செய்தால் 7 செக்கனில் நல்லது நடக்கும் என்று போடப்பட்டிருக்கும்; அதை பலர் இன்னமும் share செய்து வருகின்றனர், சிலர் அவர்களை கேவலமாக விமர்சித்தும் வருகின்றனர். நன்மை கிடைக்கிதோ இல்லையோ அதை share செய்பவனுக்கு அதில் ஒரு நம்பிக்கை!! நாம் அரசியல், சினிமா, கிரிக்கட், பொது விடயங்களுக்கு போடும் கோபமான, ஆதங்கமான  விமர்சன Status கள் எல்லாம் சம்பந்தப்பட்ட தரப்பால்  பரிசீலிக்கப்பட்டு பலன் கொடுக்கின்றனவா? ரெண்டுபேரும் ஒரே வேலையைதான்  செய்கின்றோம், ஆனால் வேறு வேறு வழிகளில். இதில் ஒருவரை மட்டும் எப்படி நையாண்டி பண்ணமுடியும்?  

அடுத்தவர்களை விமர்சித்து, பகுத்தறிவு பேசுபவர்களுக்கு; அப்படி செய்வதில்  ஒரு சந்தோசம், மகிழ்ச்சி கிடைக்கும் என்றால் அதில் தவறில்லை! அதேநேரம் அடுத்தவர் நம்பிக்கையை சுரண்டி, அதை காயப்படுத்துவது ஆரோக்கியமான செயலா? சில ஆண்டுகளுக்கு முன்னர் கடவுளை மறுத்து, கடவுளை கேவலப்படுத்தி தன்னை நாத்திகராக காண்பித்த ஒருவர்; தன்  திருமணத்தில் கடவுள் படத்தை வைத்திருந்ததால் விமர்சிக்கப்பட்டார். அவர் தரப்பில் சொல்லப்பட்ட நியாயம், அவர் மனைவியின் குடும்பத்தின் நம்பிக்கை அது என்பதுதான்!!  தனக்கு என்று வந்தால், தன்  உறவென்று வந்தால் நம்பிக்கையை நிறைவேற்றுவதும்; அடுத்தவர்களது நம்பிக்கையை காயப்படுத்துவதும்தான் பகுத்தறிவா? 

தாலியை, கோவில்களை, பூசாரியை, ஜாதகத்தை,பஞ்சாங்கத்தை  கேவலமாக கருத்திடும் ஒவ்வொருவருக்கும் தன்  திருமணத்தை  மேற்சொன்ன எவையும் இல்லாமல் நிகழ்த்த தைரியம் இருக்கா? திருமணம் என்பது தனி நபர்  விருப்பு வெறுப்பல்ல; பெண்ணிற்கு மேற்சொன்ன சம்பிரதாயங்கள் அற்ற  திருமணத்தில்  விருப்பம் இல்லாத பட்சத்தில் இவர்கள் ஆணாதிக்கமாக தங்கள் எண்ணத்தை திணிக்கவேண்டும். தங்கள் பெற்றோரை, பெண்ணின் பெற்றோரை என பலரை காயப்படுத்தவேண்டும். சரி இப்படியான சூழ்நிலையில் பெண்ணுக்கு புரியவைத்து, பெற்றோரை சமாதனப்படுத்தி/காயப்படுத்தியேனும்  சம்பிரதாயம் அற்ற திருமணம் செய்துகொண்டால் விமர்சனம் ஏதுமில்லை. மாறாக பெண்ணின்(வருங்கால மனைவி), பெற்றோரின், மாமனார் குடும்ப  நம்பிக்கைக்காக என்று தங்கள் நாத்திக கொள்கையை இவர்கள் செருப்பைபோல கழட்டிவிட்டால்; இவர்கள் தங்களை செருப்பால் அடிக்க சம்மதிப்பார்களா?  உணர்வு என்பது தன் குடும்பத்திற்கு மட்டும்தான் இருக்குமா? அடுத்தவன் உணர்வை சொறிபவர்கள்; அதே உணர்வை தன்  சுற்றத்திற்காக  விட்டுக் கொடுப்பது மிகக் கேவலமான செயல். இதனால்தான் சொல்கிறேன் இவர்களில் மிகப்பெரும்பான்மை  போலிகள் என்று!!

கமல்ஹாசன்  பக்தியை உங்கள் படுக்கை அறையில் வைக்கச் சொன்னார். அதையேதான் நானும் சொல்கிறேன் உங்கள் நாத்திகம், பகுத்தறிவையும் உங்கள் படுக்கை அறையிலேயே வைத்துவிடுங்கள். மதம் மட்டும் ஆணுறுப்பு போன்றதல்ல, நாத்திகமும் கூட ஆணுறுப்பு போன்றதுதான்; அதை வெளியில் எடுத்துவிட்டு திரியாதீர்கள், குழந்தைகள்மேல் திணிக்காதீர்கள், எல்லாவற்றையும்  அதை வைத்தே சிந்திக்காதீர்கள். இவை எல்லாவற்றையும் தாண்டிய ஒரு உணர்வு பூர்வமான விடயம் இருக்கின்றது, அதுதான் நம்பிக்கை; அதில் கல்லைவிட்டு எறிந்து மற்றவர்களை காயப்படுத்தி உங்களுக்கு அடையாளம் தேடாதீர்கள். என் நண்பன் ஒருவர் சொன்னது 'தன்  நண்பன் ஒருவன் நாத்திகனாம், அவனுக்கு எந்த சம்பிரதாயங்களிலும் நம்பிக்கை இல்லை, சுவாமி அறைக்குள் செருப்போடு போவானாம்', அதை சொல்லும்போது அவனுக்கு அப்படி ஒரு பெருமையாம். பெற்றவர்களது நம்பிக்கையை காயப்படுத்தி தன்  நாத்திகத்தை வெளிப்படுத்தும் இந்த நண்பரின் நண்பர் செய்யும் செயலுக்குப்  பேர்தான் நாத்திகம்/பகுத்தறிவென்றால் அது என் பார்வையில் குப்பை!! 

நம்பிக்கை, மூட நம்பிக்கையை எதுவென்றாலும் அதை ஒவ்வொருவரும் தங்களிடத்தில் வைத்திருத்தல் நல்லது!!  அதே நேரம் அடுத்தவர்களது நம்பிக்கையில் (அது பார்ப்பவர் பார்வையில் மூட நம்பிக்கையாய் இருப்பினும்) சொறியாமல் இருப்பது இன்னமும் நல்லது!!!  

கொசிறு :-

இன்று இணையத்தில் நிறையவே  சமூகத்தள  புரட்சியாளர்கள்  தோன்றியுள்ளனர்; எங்கு அநியாயம் நடந்தாலும் தட்டிக் கேட்பார்கள், பிரபலங்களில் குறை தேடுவார்கள், எதையும்/எவற்றையும் விமர்சிப்பார்கள், பகுத்தறிவு பேசுவார்கள், (மூட) நம்பிக்கைகளை உடைத்தெறிவார்கள். இவர்களது நிஜமுகம் அங்கு தெரியப்போவதில்லை; பொதுவெளியில் முதிர்ச்சி அடைந்த மனநிலையாளர்களாக, சமூகத்தை நெறிப்படுத்தும் முன்னோடிகளாக தங்களை நிரூபிக்கும் ஒருவகை ஹீரோயிச எண்ணம்தான் இப்படியான இணையப் போராளிகளைத் தோற்றுவித்துக் கொண்டிருக்கின்றது!   ஏழை, தாழ்ந்த ஜாதி(அவர்களே சொல்வார்கள்), படிக்காதவன் போன்றோர்  மகா நல்லவர்கள் என்னும் மாயையையும்; பணக்காரன், உயர்ந்த ஜாதி(அவர்களே சொல்வார்கள்), படித்தவன் போன்றோர்  மகா கெட்டவர்கள் போன்ற மாயையையும் இணைய சமூகத்தளங்களில் காணலாம். மனித குணங்கள் என்பது ஒவ்வொரு தனி மனிதனிடமும் இருப்பது என்பதைகூட புரிந்துகொள்ள முடியாத போராளிகள் இவர்கள்!! இவர்களைவிட ஆபத்தானவர்கள் சமூக விடுதலைப் போராளிகள்; இவர்களால் எதிர்க்கருத்துக்கு துரோகிப்பட்டம் கூட இலவசமாக வழங்கப்படும்!!

Saturday, March 23, 2013

காமத்தை கடந்த  சமூகத்தின் பத்தினி!!! (நிஜத்தை தழுவிய கதை)இதை வயது வந்தவருக்கான கதை என்று ஒதுக்க முடியாது, இதை புரியும் பக்குவம் இருக்கும் யாரும் படிக்கலாம்!

தயாபரன்; கருகிய சருமமும் சற்று பருமனான உடலமைப்பும் கொண்ட திருமணம் ஆகாத  முப்பத்தியைந்து வயதுடைய ஒரு தனியார்  நிறுவனத்தின் விற்பனை  பிரதிநிதி, அந்த கிராமத்தின் தீராத விளையாட்டுப்பிள்ளை. அவனுக்கு திருமணத்தில் கொஞ்சமும்  ஈடுபாடில்லை; காரணம், அவனுக்கு ஹோட்டல்  சாப்பாடுதான் பிரியம். அவன் தூண்டிலில் சிக்கும் பெண்களை மட்டுமே அவன் விரும்புவான், விலைபோகும் பெண்களை  அவனுக்குப்  பிடிக்காது. இதில் குறிப்பிட வேண்டிய முக்கிய விடயம் அவன் நாடும் பெண்களில் பெரும்பாலானவர்கள் திருமணமானவர்கள் என்பதுதான். காரணம்கூட  வழமையானதுதான்; வயிற்றில் பாரம் ஏறினாலும் கவலைப்படத் தேவையில்லை. ஆனால் இவன் எந்தப் பெண்ணையும் ஆசைகாட்டி மோசம் செய்ததில்லை; குறிப்பிட்ட பெண்ணிற்கு இவனது தேவை என்ன என்பது  முழுமையாகப்  புரிந்துதான் இவனுடன் செல்கின்றார்கள்!

கவிதா; பார்ப்பதற்கு ஈர்ப்பான  முப்பத்தியாறு வயதிலும் இளமை குறையாத  குடும்பப் பெண்,  இரண்டு பெண் குழந்தைகளுக்கு அம்மா, ஒரு வியாபாரியின் மனைவி. சிரித்துப் பேசினாலும் எப்போதும் எதையோ பறிகொடுத்தது போன்ற முகம், ஒரே வீட்டில் இருப்பினும் இறுதி ஐந்து ஆண்டுகளில் அவள் கணவனிடம் பேசி எவரும் கண்டதில்லை.  ஆறாவதும், நான்காவதும்   படிக்கும் இரு பெண் பிள்ளைகள்தான் அவளது உலகம்.  பிள்ளைகள் தவிர்த்து எப்போதாவாது வந்துவிட்டு செல்லும் சகோதர்களும், ஒருசில நண்பிகளும்தான் இவளுக்கு  பிடித்தமான  உலகம்; கூடவே அப்பப்போ  பக்கத்து வீட்டு தர்சினி அக்காவும்.

விற்பனை வேலையாய் தயாபரன் நகருக்கு வரும் போதெல்லாம் தன் அக்கா தர்சினியின்  வீட்டுக்கு வந்துபோவது வழக்கம்; வாரத்தில்  குறைந்தது மூன்று தடவையேனும்  அக்கா வீட்டிற்கு  வருவது அவனது வழமை. அத்தான் பல ஆண்டுகளாக வெளிநாட்டில் வேலை பார்ப்பதால்; ஆண்  துணையில்லாத வீடு என்று யாரும் எண்ணிவிடக் கூடாதென்பதுதான் அடிக்கடி தயாபரன் அக்கா வீட்டிற்கு வருவதற்கான  பிரதான காரணம். வரும் நேரங்களில் அக்கா வீட்டிற்கு தேவையான உணவுப் பொருட்கள்  முதல் அத்தியாவசியமான அனைத்து பொருட்களையும்  வாங்கிக் கொடுப்பது வழக்கம்; கணக்கு வழக்குகளை அக்கா கேட்பதில்லை என்பதால் சிகரெட், வெற்றிலை போன்ற தனது சில்லறை தேவைகளையும்  அத்தானின் பணத்திலேயே ஈடுகட்டிவிடுவான்.

அக்கா வீட்டுக்கு வரும் சமயங்களில் ஒருசில தடவைகள் அக்காவுடன் பேசிக் கொண்டிருக்கும் கவிதாவை தயாபரன் கண்டிருந்தாலும்; அவள்மீது ஈடுபாடு காட்டவில்லை. காரணம்  தன்னை கண்டதும் குனிந்ததலை நிமிராமல் அக்காவிடம் விடைபெறும் அவளது சுபாவம்; அவனுக்கு அவள் எட்டாக்கனி என்பதை உணர்த்தியிருந்தது. கூடவே  ஏதாவது ஏடாகூடம் பண்ணப்போக அக்காவிற்கு தெரியவந்தால் எனும் முன்னெச்சரிக்கையும் ஒரு காரணம். இந்நிலையில் ஒருநாள் மதிய நேரம் உணவிற்காக  அக்கா வீடிற்கு வந்திருந்தான் தயாபரன். வீடு பூட்டியிருந்தது, அக்கா எங்கு சென்றார் என்பது தெரியாமல் வீட்டு வராந்தாவில் நின்றுகொண்டிருந்த தயாபரனை ஒரு குரல் "இந்தாங்கோ... அக்கா தந்தவ, உங்களிட்டை குடுக்கசொன்னவ; சாப்பாடு மேசைல போட்டு மூடியிருக்காம், உங்களை  சாப்பிடட்டாம், தான் கோயிலால வர லேட்டாகுமாம்" என்று சொல்லி வீட்டுச் சாவியை கொடுத்தது; ஆம், அது கவிதாவேதான். 

தயாபரன் கைகளில் பதட்டத்துடன் தொலைபேசி; அதில் கவிதா கொடுத்த தொலைபேசி எண்ணை அழைப்பை ஏற்படுத்த தயார் நிலையில் வைத்திருந்தான். அவள் அழைப்பை ஏற்படுத்தச் சொன்ன நேரம் கடந்த பின்னரும்; பச்சைநிற அழைப்பு பொத்தானை அழுத்த துணிவில்லாமல் தயங்கியபடி நின்றிருந்தான் தயாபரன். இதுவே வேறு ஒருத்தி என்றால் இந்நேரம் அவனது வார்த்தைகள் ஜாலம் புரிந்துகொண்டிருந்திருக்கும். ஆனால் இவளோ  சாப்பிட்ட பின்னர்  தயாபரன் வீட்டைபூட்டி சாவியை  கொடுக்கும்போது சற்றும் எதிர்பாராமல் தொலைபேசி எண் குறிக்கப்பட்ட  கடதாசியை கொடுத்து "நாளை மாலை 3 மணிக்கு எனக்கு கோல் எடுங்கோ, பிளீஸ் யாரிட்டையும் சொல்லாதீங்கோ, உங்களை நான் நம்பிறன்" என்று சொல்லிவிட்டு தன் வீட்டினுள் சென்றுவிட்டாள்.

ஒருவழியாக தயாபரன் பச்சை நிற பொத்தானை அழுத்தினான், அழைப்பு சென்ற மறுகணமே தொடர்பு இணைக்கப்பட்டது; ஆம், கவிதா பச்சைப்  பொத்தானில்  கைவைத்தபடி  இருபது நிமிடங்களாக அவனுக்காக காத்துக் கொண்டிருந்திருந்தாள். தயங்கியபடி ஹலோ சொன்ன தயாபரனுக்கு அழுத்தமாக ஹலோ சொன்னாள்  கவிதா. பரஸ்பரம் நலம் விசாரித்த பின்னர் தயாபரன் பேச்சை ஆரம்பித்தான்;  "ஏன் திடீரென்று? என்னாச்சு? ஏதாவது உதவி செய்யணுமா?". பதிலுக்கு கவிதா "உதவியெல்லாம் இல்லை, ஏன்னு தெரியல, எதோ உங்ககிட்ட பேசணும்னு  தோணிச்சு. நேற்றல்ல; பல நாட்களாக தோணிச்சு, ஆனா  நேற்றுத்தான் தைரியமா  சொல்ல முடிஞ்சிது" என்றாள். 

அவள் திடீரென தன்னுடன் நெருக்கமாகுவதற்கான காரணத்தை அறிய ஆவல் இருப்பினும்;  அந்த நெருக்கம் கவிதாவை  தனக்கு கிடைக்கச் செய்யும் என்கின்ற  நம்பிக்கை  அவனுக்குள் ஏற்பட்டிருந்ததால் அதைப்பற்றி எதுவும் பேசாமல் அவளது வாயால் அவளது பிரச்சனையை சொல்லும் வரை காத்திருக்க முடிவெடுத்திருந்தான்.  முன்னர் அக்கா வீட்டில் காணும்போது குனிந்ததலை நிமிராமல் நகர்ந்தவள், இப்போது ஆக்கா வீட்டில் தயாபரன் குரல் கேட்கும் போதெல்லாம் ஏதாவதொரு சாக்கு சொல்லி அங்கு வந்து விடுகிறாள். பூமியை பார்த்தபடி தன்னை கடந்துசென்ற அவளது கண்களில் இப்போது சிறு வெட்கமும், உதட்டில் சிறு சிரிப்பையும் ஒவ்வொரு தடவையும்  தயாபரன் அவதானித்தான். 

தயாபரனுக்கு இவளை அடையலாம் என்கின்ற  நம்பிக்கை இப்போது ரொம்பவே அதிகரித்து விட்டது; தன் லீலையை வார்த்தைகளில் ஆரம்பிக்க திட்டிமிட்டிருந்தான் தயாபரன். ஒருநாள் மாலைநேரம் தன் கைபேசியில் இருந்து அழைப்பை ஏற்படுத்தி கவிதாவை தயார்ப்படுத்த தயாரானான்  தயாபரன். கவிதா ஆரம்பித்தாள் "தயாபரன் நான் உங்ககிட்ட இன்றைக்கு மனம் திறந்து சில விசயங்களை சொல்லப் போறேன்". தயாபரனுக்கு ஆர்வம்  முட்டியது, அவளே ஆரம்பிப்பதால் தன் வேலை சுலபமாகும் என்கின்ற எண்ணம் அவனுக்கு. அவர் ஆரம்பித்தாள், 30 நிமிடம் விடாமல் பேசினாள், பேச்சின் முடிவில் விம்மலை அடக்க முடியாமல் தொடர்பையும் துண்டித்தாள். தயாபரனுக்கு  என்ன சொல்வதென்று புரியவில்லை; எனினும் அவள் பேசியதில் இருந்து தனக்கு அவள் கிடைக்கும் நாள் தொலைவில் இல்லை என்பது மட்டும் புரிந்தது. ஆனாலும் அன்றிரவு முழுக்க தயாபரன் மனதில் மீண்டும் மீண்டும் கவிதாவில் பேச்சுத்தான் ஒலித்துக்  கொண்டிருந்தது.

கவிதாவிற்கு இருபத்திமூன்று  வயதில் தனேஷ் என்பவனுடன் திருமணம் நடைபெற்றது, முழுக்க முழுக்க பெற்றோரால் நிச்சயிக்கப்பட்ட திருமணம். வியபாரமானாலும் நல்ல வருமானம், நல்ல சிவப்பான மாப்பிளை, நல்ல குடும்பம் என பலவற்றை சொல்லி தமது சீதனத்துக்கு  கட்டுப்படியாகும் அளவுக்கு  ஒரு மாப்பிளையை பார்த்து கவிதாவிற்கு திருமணத்தை நடத்தியிருந்தனர் அவரது குடும்பத்தினர். பெற்றோர்களை  சகோதரர்களை முழுமையாக  நம்பும்  கவிதாவிற்கும்  இந்த திருமணம் முழுச் சம்மதம். திருமணமான சிலகாலம் குடும்ப வாழ்வு  மகிழ்ச்சியாக கழிந்தது. சில மாதங்கள் செல்லச் செல்ல கவிதாவை தனேஷ் நாடுவது குறைய ஆரம்பித்தது. இரண்டு ஆண்டுகளில் முதல் குழந்தை நித்யாவை பெற்றெடுத்த கவிதாவை ;எப்போதாவது ஒருமுறைதான் தனேஷ் கண்டுகொள்வான், அதுகூட கவிதாவின் ஈடுபாட்டால். 

நித்யா பிறந்து இரண்டாவது ஆண்டில், இரண்டாவது குழந்தை அஸ்வினி பிறந்ததிலிருந்து தனேஷ் கவிதாவின் கட்டிலைகூட  நெருங்குவதில்லை. சிறிய வீடுவேறு என்பதால் ஒரு அறையில் கவிதாவும் இரண்டு குழந்தைகளும்; மறு அறையில் தனேஷும் அவர்  வியாபார ஸ்தலத்தில் வேலை பார்ப்பவரும்  உறங்குவார்கள். அஸ்வினி பிறந்து சில மாதங்களின் பின்னர் கவிதாவே தன்னால் முடிந்தளவிற்கு கீழிறங்கி தனேஷை தன்  கட்டிலில் இணைக்க முயற்சித்தும், அது தோல்வியிலேயே முடிவடைந்தது. இருபத்தியேழு வயதில் அவளது இளமை அவளை வாட்டியது; ஆனாலும்   இரண்டு பிள்ளைகள், அதிலும் இரண்டும் பெண் பிள்ளைகள் என்பதால்தான் இனிமேல் போதுமென அவர் நினைக்கிறார்  என்று  நினைத்து தன்னைத் தானே  கட்டுப்படுத்த ஆரம்பித்தாள்  கவிதா. 

நாட்கள் பல கடந்தோடின, அடிக்கடி  உணரும் காமத்தீயை தன்னுள் போட்டு பொசிக்கிக் கொண்டிருந்தாள் கவிதா. ஒருநாள் இரவு தூக்கம் வரவில்லை, அவளை தனிமை உருக்கிக்கொண்டிருந்தது,  தாகம்  வேறு தொண்டையை வரட்டிக் கொண்டிருந்தது. எழுந்து தண்ணீர் குடித்துவிட்டு ஏக்கத்துடன் கணவனது அறை வாசலை  எட்டிப் பார்த்தாள்; தூக்குவாரிப்போட்டது கவிதாவிற்கு!!! கட்டிலில் கணவனும் அவரிடம் வேலைபார்க்கும் அந்த நடுத்தர வயதுக்காறரும் தம்நிலை அறியாக்  காமத் திருவிழாவை அரங்கேற்றிக் கொண்டிருந்தனர். அனைத்து உடற்க்  கலங்களும் சோர்வடைந்து, கண்களில் நீர் தாரை தாரையாக கொட்ட, பேச்சு வராமல் ஓடிச்சென்று தலையணையில்  தன்னை புதைத்து  அழுதபடி செய்வதறியாது உடைந்திருந்தாள் கவிதா.

செருப்பால் அடிக்கவேண்டும் என்கின்ற அளவுக்கு கோபம், காறித் துப்பவேண்டும் என்கின்ற  அளவுக்கு வெறுப்பு, கணவன் என்னும் பெயரில் இருந்த தனேஷ்; அவளது மனதில்  துரோகியைவிட பலமடங்கு தூரத்தில்  தூக்கி எறியப் பட்டிருந்தான். அன்றிரவு எதுவும் பேசவில்லை, காலையில் தனேஷ் வேலைக்கு கிளம்பும் பொது "எனக்கு உங்க  ரூமில நடக்கிற நாத்தம் எல்லாம் நேற்று  தெரிஞ்சிட்டுது, நீங்க இவளவு கேவலமான ஆளா இருப்பீங்க என்று நான் கனவிலும் நினைச்சுப் பார்க்கல; ஆனாலும் நான் இதை வெளியில் சொல்ல மாட்டன், சொன்னா எனக்கும்தான் கேவலம். ஆனலொன்று இன்னொருக்கா அந்த நாய் இந்த வீட்டுக்குள்ள கால் வச்சா  செருப்பால அடிப்பன், அவனை மட்டுமில்லை" என்று சொல்லிவிட்டு உள்ளே சென்றுவிட்டாள்.

அதிர்ந்து போனான் தனேஷ், வேகவேகமாக பைக்கை எடுத்துக்கொண்டு வீட்டைவிட்டு கிளம்பி விட்டான்; அன்றிரவு லேட்டாகத்தான் வீட்டுக்கு வந்தான். கவிதா முகத்தை பார்க்கும் அளவுக்கு அவனுக்கு தைரியமும், அவன் முகத்தை பார்க்கும் அளவுக்கு  கவிதாவுக்கு விருப்பமும் அறவே இல்லை. காலை வேலைக்கு சென்றால் மீண்டும் இரவு 10 மணிக்குத்தான் வீட்டுக்கு வருவான் தனேஷ். சமைத்து வைத்திருப்பதை போட்டு சாப்பிடுவிட்டு தூங்க போய்விடுவான். வீட்டில் நிற்கும் நேரங்களை பெரும்பாலும் தவிர்த்து வந்தான் அவனால்  கவிதாவை எதிர்கொள்ள முடியவில்லை. கவிதாவுக்கோ அவனை மன்னிக்கவோ அந்த சம்பவத்தை மறக்கவோ இயலவில்லை. இத்தனைக்கும் அந்த வேலையாள்  இன்னமும் தனேஷின் கடையில்தான் வேலை பார்க்கின்றான் என்பது கவிதாவுக்கு நன்கு தெரியும்.

ஆண்டுகள்  சில உருண்டோடி விட்டது; பிள்ளைகளுக்கும்  அம்மாவுக்கும் அப்பாவுக்கும் எதோ பிரச்சனை என்பது தெரியும். அப்பாவின் கவனிப்புக்  குறைவு அவர்களுக்கு  மனத் தாக்கத்தை உண்டாக்க தவறவில்லை, ஆனாலும் கவிதாவின் அன்பு அவர்களுக்கு உற்சாகத்தை கொடுத்தது. குழந்தைகள் பாடசாலை, டியூஷன் என்று செல்வதால்; சமையல்  தவிர்ந்த நேரங்கள் கவிதாவிற்கு தனிமை வாழ்வை வெறுமையாக்க  தொடங்கியது. மனசுவிட்டு பேச யாருமில்லாமல் தனக்குள்ளேயே புளுங்கிக் கொண்டிருந்தவளுக்கு தயாபரனின் மீது எதோ ஒருவித ஈடுபாடும் நம்பிக்கையும் பிறந்திருந்தது. அவனிடம் பேசிப் பழகாவிட்டாலும் எதோ ஒன்று அவனிடம் அவளை ஈர்த்தது. அவனிடம் பேச ஆரம்பித்து தன் மனச்  சுமைகளை இறக்கிவைக்க நினைத்தாள்; அதனை செய்தும் முடித்தாள்.

தயாபரன் மனதில் கவிதாவை  அடையலாம் என்கின்ற எண்ணம் ஆக்கிரமித்திருந்த நிலையில்; ஒருநாள் போதையில்லாமலேயே  போதையில் உள்ளவன்போல  கவிதாவிடம்  பேச்சை ஆரம்பித்தான். அவளது  உடற்பசியை தான் உணர்வதாகவும், அதை தான் போக்குவதாகவும் பேச்சை ஆரம்பித்தான். கவிதாவுக்குள் தணலாக இருந்த காமத்தை தீயாக்க தொடங்கினான், கவிதாவால்  அந்தத் தீயை கட்டுப்படுத்த முடியவில்லை. தயாபரனுடன் உடலாலும்  இணைய அவள் மனம் ஏங்கியது; ஆதனை தயாபரனும் அறிந்திருந்தான். அவள் வீட்டிலோ அக்காவின் வீட் டிலோ சாத்தியமில்லை என்பதால் வெளியில் எங்காவது அழைத்தான் தயாபரன். ஹோட்டல், ரூம் போன்ற பொது  இடங்கள் எவற்றுக்கும் செல்லும்  நிலையில் கவிதா இல்லை என்பதால்;  ஒருவழியாக தன்  நண்பன் ஒருவனின் அறையை பயன்படுத்தலாமென்று சொல்லி அவளை சம்மதிக்க வைத்தான்.

சம்மதம் சொன்னாலும் குழந்தைகள், தன் பிறந்தவீட்டு  குடும்ப கௌரவம், சமூகம் என பலவற்றை போட்டுக் குழப்பிய கவிதா ஒவ்வொரு வாரமும்  "அடுத்த வாரம், அடுத்த வாரம்" என்று சொல்லி தன் ஆசைத்தீயை தள்ளிப் போட்டுக்கொண்டே வந்தாள்; அவள் கேட்ட வாரக்கெடு  ஒருவழியாக குறைந்து நாட்களுக்கு வந்திருந்தது. தயாபரன் இத்தனை நாள் ஒரு பெண்ணுக்காக காத்திருந்ததில்லை!! அவனுக்கு அவனது இச்சைதான்   முதலிடம் என்றாலும்; கவிதாவையும் மகிழ்ச்சிப் படுத்தணும் என்கின்ற எண்ணமும் அவனுக்குள்ளே  இருந்தது. ஒரு வழியாக இருவரும் இணையும் அந்தநாளை உறுதிப்படித்திக் கொண்டாள்  கவிதா, மறுநாள் காலை பத்து மணிக்கு குறிப்பிட்ட  இடத்திலுள்ள குறிப்பிட்ட  வீட்டிற்கு கவிதா வரவேண்டும், அங்கு முன்னரே தயாபரன் காத்திருப்பான், இதை யாரும் சந்தேகிக்காமல் முடித்துக் கொள்ளலாம் என்பதுதான் அவர்களது திட்டம்.

இரவு 10 மணி  ஆயிற்று; வராந்தாவில் இருந்து தயாபரனுக்கு குறுந்தகவல் அனுப்பி தன்  வரவை உறுதிப்படுத்தினாள், மனதையும் திடப்படுத்திக்  கொண்டாள். ஒன்பது ஆண்டுகளாக அடக்கி வைத்திருந்த காமத்தீயை அணைக்கும் அந்த சங்கமத்தை நினைத்துப் பார்க்கவே அவளுக்கு சிலிர்ப்பாக இருந்தது. அதிகாலையில் நேரத்துடன்  எழுந்து சமைத்து முடித்துவிட்டு ஒன்பது மணிக்கெல்லாம் புறப்பட வேண்டும் என்பதால் கவிதா  தூங்கத  தயாரானாள். ஸ்திரமான மனதுடன் தண்ணீர் குடித்துவிட்டு கட்டிலில் கவிதா தலை சாய்க்கவும்; அருகில் படுத்திருந்த நித்யா அடிவயிறை  பிடித்தபடி "அம்மா, அடிவயிறு சரியா வலிக்கிது" என்று அந்தரப்பட்டபடி எழும்பவும் நேரம் சரியாக இருந்தது.

நித்யாவின் பருவ மாற்றம் கவிதாவின்  காமத்தை  அவளுக்குள்ளேயே நிரந்தரமாக புதைத்து விட்டது; தன்னிலையை தயாபரனிடம் விளக்கி தமக்குள்ளே இருந்த தொடர்புகளை முற்றாக துண்டிக்குமாறு கேட்டுக் கொண்டாள். தன்  இச்சை நிறைவேறாத போதும் கவிதாவை நிலையை உணர்ந்து அவளை விலக ஏமாற்றத்துடன் சம்மதித்தான் தயாபரன்; கூடவே அவளை பரிதாபமாக நினைத்து சஞ்சலப் பட்டுக்கொண்டான்  தயாபரன். ஆனால் பாவம்; பல ஆண்டுகளாக 'கூட' கணவன் இல்லாமல் கிட்டத்தட்ட  கவிதாவின்  வயதிலிருக்கும் தன் அக்காவிற்கும் அதே உணர்வும், காமமும் கட்டுப்படுத்த முடியாமல் இருக்கும் என்பதை அவன் நினைக்கவில்லை. யாரும் அறிந்துவிடக் கூடாது  எனப்  பயந்து பயந்து கட்டுக்கடங்கா தன் காமத்தை கரைசேர்க்க சுரேஷ் என்னும் வெளிநாட்டு பணம் மாற்றும் இளைஞனை அவனது அக்கா அப்பப்போ  இரகசிய  துணையாகக்  கொண்டிருப்பதையும் அவன் அறிந்திருக்கவில்லை!!.

முற்றும்......

கவிதாவை நினைத்து சஞ்சலப்படும்  தயாபரன் தன் அக்காவும் அதே போலத்தானே என்று நினைக்கவே இல்லை, காரணம்; தான் பிறந்த  குடும்பத்து  பெண்கள் என்றால் எதையும் தாங்கவேண்டும் / தாங்குவார்கள்  என்கின்ற  அவனையும்  அறியாமல் அவன் ஆழ்மனதில் ஆழ ஊடுருவியிருக்கும் நம்பிக்கை!!! இந்த நம்பிக்கையை உடைத்துவிடக் கூடாது என்பதற்காகத்தான் கவிதா போல பல பெண்கள் இன்னமும் காமத்தை தம்முள் போட்டு புதைத்துக் கொ'ல்'கின்றார்கள். அப்படியும் காமத்தை கட்டுப்படுத்த முடியாத தயாபரனின் அக்கா போன்றவர்கள்  சமூகம் சொல்லும் 'தப்பை' செய்கின்றார்கள்! இதற்கு முழுப் பொறுப்பும் கணவனும்,  திருமணம் செய்துவைத்த இருவரது  குடும்பத்தினரும்தான் என்றாலும்; ஒருநாள் அகப்பாட்டால் பழி என்னவோ பாவப்பட்ட அந்த பெண்ணிற்கு மட்டும்தான்!!!!

Friday, March 15, 2013

நீங்களும் எழுதலாம் வாருங்கள்........என் சாதாரண எழுத்துக்களுக்கு சிறிதளவேனும் அங்கீகாரம் பெற்றுக்கொடுத்தது எப்பூடி... ப்ளாக்தான், அதை தொடரலாமென்று இருக்கின்றேன். "இனிமேல் குடிக்கவே மாட்டேன்" என்று சொல்லும் குடிமகன் போலவே; கடந்த 2 ஆண்டுகளில் இப்படி பல தடவைகள் கூறிவிட்டேன்!!! இருப்பினும் இம்முறை வாரம் குறைந்தது இரு பதிவாவது எழுத முயற்சிக்கின்றேன்!!! # மற்றும் பின்னூட்ட, ஓட்டுப்போடும் அரசியலில் ஈடுபடும் எண்ணம் அறவே இல்லை என்பதையும் தெரிவித்துக் கொள்கின்றேன்!!

எமது எண்ணங்களை, விருப்பு வெறுப்புகளை, கோபத்தை, மகிழ்ச்சியை, ஆதங்கத்தை, சொல்லிப் புரியவைக்க முடியா விடயங்களை அந்தந்தத்  தருணங்களில் எழுத்தில் கொண்டுவருவது சிறப்பு. எமது வாழ்வின் கடந்தகால பக்கங்களையும் அப்போதைய எம் எண்ணங்களையும் நிலையான ஒரு ஆவணமாக சேமித்து; காலங்கள் கடந்த பின்னர் பசுமையான நினைவுகளாய் மீட்டுப் பார்க்க எழுத்துக்களை பதிந்து வைத்தல் சுலபமான மற்றும் எளிமையான வழிமுறை!! சிலருக்கு நாட்குறிப்பு எழுதும் பழக்கம் உண்டு; அனால் அது குறிப்பிட்டவரின் எண்ணமாக மட்டும் இருக்கும். தனிப்பட்ட விடயங்களை எழுதிவைக்க நாட்குறிப்பு மிகச்சரியான வழிமுறை; ஆனால் பொதுவான எண்ணங்களை பொதுவில் முன்வைத்தால்தான் அதன் மாறுபட்ட கோணங்களின் அலசல்களும், தெளிவும் கிடைக்கப்பெறும். அதற்கு இன்றைய இணைய உலகு சமூகத்தளங்கள், வலைப்பூக்கள், இணையதளங்கள் என பலவழிகளை எமக்கு பெற்றுக் கொடுத்திருக்கின்றது!

எழுத்து என்றால் இலக்கியமாகவும் இலக்கணப்பிழை இன்றியும்தான் இருக்கவேண்டும் என்றில்லை என்பது என் அபிப்பிராயம்; எண்ணங்களை பதிவு செய்வதுதான் இங்கு பிரதானம். எழுத்துப் பழக்கம் பழகப்பழக; எங்கெங்கோ கேட்ட/வாசித்த வார்த்தைகள் இயல்பாக எழுத்தில் வெளிப்பட ஆரம்பிக்கும். எழுத எழுத அதிகளவில் தமிழ் சொற்கள் பரிச்சியமாகும், எழுத்து நடை அழகாகும்; ஓரிரு ஆண்டுகளில் ஆரம்பித்த இடத்துடன் ஒப்பிடுகையில் எழுத்தின் தரம் மிகவும் முதிர்ச்சியும் வழர்ச்சியும் அடைந்திருக்கும். மற்றும் எழுத்து என்று சொன்னதும் சிலர் சமூகம் சார்ந்த, அறிவியல், விஞ்ஞானம், இலக்கியம் போன்ற விடயங்களைத்தான் தேவையென முன்னிறுத்திப் பேசுவார்கள். என்னைப் பொறுத்தவரை மேற்சொன்னவைக்கு பொழுதுபோக்கு சார்ந்த எழுத்துக்கள் எந்த விதத்திலும் குறைந்தவை அல்ல!! அது விளையாட்டோ, சினிமாவோ அல்லது வேறு எந்த சுவாரசியமான விடயமாக இருந்தாலும். இங்கு வாசகர்கள்தான் நுகர்வோர்; எது தேவை என்பதை நுகர்வோர்தான் தீர்மானிக்கவேண்டும், விமர்சகர்களில்லை!! அதே நேரம் எழுதுபவரது எழுத்துக்கள் எது சம்பந்தப்பட்டவை என்பது நுகர்வோருக்கு தெளிவாக தெரிந்திருக்க வேண்டியதும் அவசியம், அது அபாசமானவை என சொல்லப்படும் எழுத்துக்களாக இருந்தாற்கூட.


என்னை பொறுத்தவரை பதிவுலகமும் Facebook ம் நிறையக் கற்றுக் கொடுத்திருக்கின்றன; தமிழில் பல புதிய சொற்கள், சொல்லாடல் முறை, வசன அமைப்பு, கட்டுரை வடிவமைப்பு என பல விடயங்களை இணையம் அனுபவம் மூலம் எமக்கு கற்றுக் கொடுத்திருக்கின்றது. கூடவே இங்கு எம்மை ஏகலைவனாக்கிய பல துரோணாச்சாரியார்களும் உள்ளனர்; அவர்கள் வயதில், எழுத்தில், அனுபவத்தில் உச்சம் தொட்டவர்களாக இருக்கவேண்டும் என்பதில்லை. எவரிடமும் இருந்து நல்ல விடயங்களை எடுத்துக்கொள்ளலாம்; ஆனால் எவரையும் முன்மாதிரியாக மட்டும் எடுத்துக்கொள்ளல் கூடாது, அது ஒருவரது சுயத்தை பறித்துவிடும். இசைக்கருவி வாசிப்பவர் ஒருவரை பார்க்கும்போது ஆச்சரியமாக இருக்கும், எப்படி இவரால் இலகுவாக வாசிக்க முடிகின்றது என்று!! அவர் ஒன்றும் முதல் நாளில் வாசித்து ஆச்சரியப்படுத்தவில்லை; பலநாள் வாசித்துப்பழகிய பயிற்சி + அனுபவம்தான் அவரது திறன். தமிழும் அப்படித்தான் எழுத எழுத எம்முள் அதுவாக ஆட்சிசெய்ய ஆரம்பிக்கும், ஆகவே நண்பர்களே நினைப்பதை எழுத ஆரம்பியுங்கள். எழுத ஆரம்பித்த புதிதில், அனுபவ எழுத்துக்களை வாசிக்கும்போது; நிறையவே பின்னுக்கு நிற்பதுபோல தோன்றும். அந்த அனுபவ எழுத்துக்களும் ஒருநாள் ஆரம்பிக்கும்போது மழலைதான் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்; ஆனால் எவரையும் பின்பற்றி மட்டும் எழுத ஆரம்பிக்காதீர்கள்.

தான் நடித்த பழைய திரைப்படங்களை பார்க்கும்போது மோசமான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பதாக தோன்றும் என்று ஒரு செவ்வியில் நடிகர் சூர்யா சொல்லியிருப்பார்; எழுத்துக்களும் அப்படித்தான் கடந்த காலத்து எழுத்துக்களை படிக்கும்போது மிகப் பெரும்பாலான இடங்களில் குறைந்தபட்சம் இன்னும் சிறப்பாக எழுதி இருக்கலாம் என்று தோன்றும்; அதுதான் எமது எழுத்தின் அனுபவ முதிர்ச்சி. அதை நான் உணர்கின்றேன், நான் எழுதிய பதிவுகளில் எனக்கு திருப்தியனவை வெறும் 10 சதவிகிதத்திக்கு உள்ளேதான். எழுத்து நடை, எழுத்துப்பிழை, அணுகிய முறை என நிறைய திருத்தங்களை அவை எமக்கு உணர்த்தும். இன்னும் ஒரு சில ஆண்டுகளில் இப்போது எழுதும் எழுத்துக்களும் இதே மனநிலையை அப்போதும் கொடுக்கலாம். பின்னூட்டல்களில் 'வாக்குவாதம்' உச்சம் பெற்ற நேரங்களில், எனது பொறுமையை இழந்த சமயங்களில் மோசமான வார்த்தைப் பிரயோகங்களை பயன்படுத்தி யிருக்கின்றேன். ஒருவருக்கு ஒன்றை புரியவைக்க முடியாதபோது, எம்மை/எமக்கு பிடித்தவரை மோசமான/தாங்கொணா சொற்கொண்டு சீண்டிப் பார்க்கும்போது; அந்தக் கணத்து கோபம் தகாத வார்த்தையாகி பின்னூட்டல்களில் வெளிப்பட்டிருக்கின்றன. அவற்றை நான் நீக்கவில்லை, அவை எனக்கு ஒரு பாடமாக இருக்கட்டும். அவற்றை பார்க்கும் போதெல்லாம் எனக்கு குற்ற உணர்ச்சி ஏற்படவேண்டும்; அதுதான் என்னை செதுக்கும். ஆனாலும் இன்றுவரை இந்த விடயத்தில் நான் செதுக்கப்படாத கல்லாக இருப்பது வேதனையான உண்மை; இப்போதெல்லாம் முடிந்தளவு முயற்சிக்கின்றேன்!!

இயல்பிலேயே எனக்கு தாழ்வு மனப்பாங்கு அதிகம்; அதிலும் இங்கிலீஷ் மொழி புலமைக்குறைவு எனக்கு மிகப்பெரும் தாழ்வு மனப்பான்மை. சில இங்கிலிஸ் மொழியிலான தவறுகளை குத்திக்காட்டிய (சுட்டிக்காட்டிய அல்ல) பின்னூட்டங்கள் தாழ்வு மனப்பான்மையை இன்னும் எண்ணை  ஊற்றி வழர்த்துவிட்டன. இப்போது மிகப்பெருமளவு மீண்டுவிட்டேன்; முழுமையாக மீளமுடியும் என்கிற நம்பிக்கையும் உண்டு. இதை சொல்ல காரணம் இங்கே பிழை சொல்ல, குறை பிடிக்க, குத்திக்காட்ட பலபேர் இருக்கின்றார்கள், அந்தக்நேரங்களில் அவற்றை நேர்மறையில் அணுகி திருத்திக்கொள்வது புத்திசாலித்தனம்; அதனை என்னைபோன்று தாழ்வு மனப்பான்மையாக்கி புளுங்கிக்கொள்வது அர்த்தமற்றது. மற்றும் ஒரு கருத்தை விவாதத்திற்கு முன்வைக்கும்போது எமக்கு இருக்கும் மிகப்பெரும் பிரச்சனை குறிப்பிட்ட கருத்தை நியாயப்படுத்தாலே அன்றி, அதற்கான சரியான முடிவை பெறுவதல்ல. பலருக்கும் தோற்றுப்போக சம்மதமில்லை, அதனால்தான் ஒருநிலையில் தம்பக்கம் தவறு என்று தெரிந்தாலும்; ஒத்துக்கொள்ளாமல் சமாளிப்பது, விதண்டாவாதம் பேசுவது, சொன்னதையே திரும்ப திரும்ப சொல்வது என அந்த விவாதத்தை சீர்குலைத்து ஒன்றுமில்லாமல் செய்துவிடுகின்றார்கள். இந்தப் பலரில் என்னுடன் சேர்த்து மிகப் பெரும்பான்மையானவர்கள் உள்ளனர் என்பது ஆரோக்கியமற்ற உண்மை!!


ஒருவர் அல்லது ஒரு விடயம் சார்ந்த எண்ணங்கள் எப்போதும் ஒரே மாதிரியாக இருக்கவேண்டும் என்றில்லை. முன்னர் தவறாக கணித்து எழுதியதை இன்று சரியாகவும், முன்னர் சரியாக கணித்து எழுதியதை இன்று தவறாகவும் உணர்ந்தால் தயக்கமின்றி இன்றைய மனநிலையை பதிவு செய்யலாம; அதில் தவறில்லை. ஜதார்த்தத்தில், காலத்திற்கு ஏற்ப, காலம் கொடுக்கும் அனுபவத்திற்கு ஏற்ப சில எண்ணங்கள் மற்றும் முடிவுகள் மாறுபடலாம். ஆரம்பத்தில் நாத்திகம் பேசிய கவியரசர் இறுதியில் 'அர்த்தமுள்ள இந்துமதம்' படைத்ததுபோல!! ஆனால் இதன் பின்னணியில் நேரடியாகவோ மறைமுகமாகவோ எந்தவொரு பக்கச்சார்பு காரணியும் இருக்கக்கூடாது என்பது அவசியம். பக்கச் சார்ப்பில்லாமல் எழுதவது என்பது எம்மை நாமே ஏமாற்றும் செயல்; முடிந்தளவு தவிர்க்கப் பார்க்கலாம். வாசிப்பவருக்கு வெறுப்பு ஏற்படாதவரை பிடித்ததை அல்லது பிடித்தவரை பற்றி எவ்வளவும் உயர்த்தியும் எழுதலாம்; ஆனால் பிடிக்காததை அல்லது பிடிக்காதவரை விமர்சிக்கும்போது சரியான நியாயம் இருக்கவேண்டும்; அதேநேரம் இதை அடிக்கடி செய்வதும் வாசிப்பவருக்கு எரிச்சலை கொடுக்கும். இப்போதெல்லாம் நான் விஜய், கருணாநிதி, சீமான், கௌதம் மேனன் பற்றி எழுதுவதை நன்கு குறைத்துவிட்டேன் :-)

எழுத்துக்கான அங்கீகாரம் கிடைப்பதும், கிடைக்காமல் விடுவதும் எழுதுபவர்களது எழுத்தின் திறமையின் அடிப்படையில் இல்லை என்னும் மாயை இங்குண்டு! இங்கு பலரும் அங்கீகாரம் என நினைப்பது பின்நூட்டல்களையும், ஓட்டுக்களையும், Like களின் எண்ணிக்கையையும்தான். அவற்றை பெறுவதாயின் ஒரு குழு அமைத்து பண்டமாற்று காலம்போல செயற்பட வேண்டும், அப்படி கிடைக்கப்பெறும் எண்ணிக்கைதான் உங்கள் எழுத்தின் அங்கீகாரம் என நினைப்பது தவறு. உங்கள் பதிவுக்கான ஒரு பின்னூட்டமேனும் பதிவு சார்ந்து சொல்லப்பட்டால், விவாதிக்கப்பட்டால், பாரட்டப்பட்டால் அதுதான் எழுத்திற்கான அங்கீகாரம். அதிகளவிலானவர்கள் வாசிக்கும் வண்ணம் சரியான இடங்களில் தொடுப்பை இடுவதன் மூலம் பதிவை விளம்பரப்படுத்தலாம், அதில் தவறில்லை; ஆனால் கருத்துக்களை வலிந்து பெற்றுக்கொள்ளுதல் எழுத்துக்கான அங்கீகாரமல்ல, அவை எழுதுபவருக்கு கொடுக்கப்படும் போலி கௌரவம்.

எழுத்துலக இளைஞர்கள் சிலர் தங்கள் எழுத்துக்கள் கண்டு கொள்ளப்படவில்லை என அங்கலாய்ப்பது தேவையற்றது. நன்றாக எழுதுங்கள், சொல்லவந்த விடயத்தை தெளிவாகவும், கவர்ச்சிகரமாகவும் எழுதிக்கொண்டே வாருங்கள்; உங்களை வாசிப்பவர்கள் ஒருநாள் அதிகரிப்பார்கள், உங்கள் எழுத்து ஒருநாள் விவாதிக்கப்படும். அன்று நீங்கள் உணரும் எழுத்துக்கான அங்கீகாரம் இன்று நீங்கள் எதிர்பார்த்த அங்கீகாரமாக இருக்காது. உங்களை படிக்க சிலர் தயாராக இருகின்றார்கள் என்பதை உங்கள் எழுத்து உங்களுக்கு உணர்த்தினால் போதும்; அதுதான் அங்கீகாரம். ஒரு பதிவை எழுதி முடித்தவுடன்; சொல்லவந்த விடயத்தை வாசிப்பவர்களுக்கு சரியாக, அழகாக, தெளிவாக சொல்லி முடித்துவிட்டோம் என்கிற திருப்தி ஏற்படுமே!! அந்த சுய நம்பிக்கைதான் உங்கள் எழுத்தின் உண்மையான அங்கீகாரமாக இருக்கும். ஆகவே தயக்கமின்றி தொடர்ந்து உங்கள் எண்ணங்களை எழுதுங்கள், எழுதிக்கொண்டே இருங்கள்......

இதை சொல்லும் அளவுக்கு நான் ஒன்றும் சாதிக்கவில்லை; ஆயினும் எனக்கு இப்போது எழுதுவதில் திருப்தி கிடைக்கின்றது, எனது பதிவுகளை ஒரு சிலரேனும் விரும்பி படிப்பார்கள் என்கின்ற நம்பிக்கையும் சந்தோசமும் ஏற்பட்டிருக்கின்றது, பல நல்ல நண்பர்கள் எழுத்தின் மூலம் கிடைத்திருக்கின்றார்கள், சிலவருடங்களாக தொடர்ந்து எழுதிகொண்டிருப்பதால் எழுத்தில் சில முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளதாக தோன்றுகின்றது. அந்த நம்பிக்கையில்தான் மேலே சில விடயங்களை சொன்னேன். இது அறிவுரை அல்ல, எனது அனுபவம்!!!

Monday, January 14, 2013

ஐ.சி.சியால் (ICC) வஞ்சிக்கப்படும் பந்துவீச்சாளர்கள்....சில வாரங்களுக்கு முன்னர் பத்திரிகை ஒன்றிற்காக எழுதியது :-)

டெஸ்ட் கிரிக்கட் போட்டிகள் என்று மட்டுப்படுத்தப்பட்ட ஒருநாள் போட்டிகளுக்கு வழிவிட ஆரம்பித்தனவோ அன்று ஆரம்பித்தது பந்துவீச்சாளர்களுக்கான அழுத்தம்!! இதற்கான அடித்தளம் 1971 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஐந்தாம் திகதி அத்திவாரமிடப்பட்டது!. மெல்பேன் மைதானத்தில் இடம்பெற்ற இங்கிலாந்து மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கிடையிலான டெஸ்ட் போட்டி மூன்று நாட்கள் மழையால் தடைப்பட்டதால் அந்தப் போட்டியின் முடிவை காணும்பொருட்டு ஓவருக்கு 8 பந்துவீச்சுக்களை கொண்ட 40 ஓவர்கொண்ட மட்டுப்படுத்தப்பட்ட போட்டியாக அன்றைய போட்டி மாற்றப்பட்டது; அதுவே முதலாவது மட்டுப்படுத்தப்பட்ட போட்டியாக வரலாற்றில் இடம்பெற்றது; அதில் அவுஸ்திரேலியா வெற்றி பெற்றதும் வரலாறு. இதே மைதானத்தில்தான் 1979 ஆம் ஆண்டு முதன்முதலாக வர்ண உடைகளுடனான ஒருநாள் போட்டி மேற்கிந்திய அணிக்கும் அவுஸ்திரேலிய அணிக்குமிடையில் இடம்பெற்றது!!!

டெஸ்ட் போட்டிகளில் பெரும்பாலும் துடுப்பாட்ட வீரர்கள் தவறான பந்துவீச்சுக்களையே கணித்து ஓட்டங்களை குவிப்பதால்; நேர்த்தியான இடங்களில்(Line & Length) பந்தை பிட்ச் செய்வது, ஸ்விங் கன்ரோல் பண்ணுவது, இடையிடையே வித்தியாசமான பந்துவீச்சு என அழுத்தம் குறைவாக பந்துவீசிக்கொண்டிருந்த பந்துவீச்சாளர்களுக்கு; அன்றைய மைதானங்களும் பெரும்பாலும் நல்ல ஒத்துளைப்பு கொடுத்தன. ஆனால் மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்களைக்கொண்ட போட்டிகளின் அறிமுகத்தின் பின்னர்; துடுப்பாட்டவீரர்களின் ஓட்டப்பசிக்கு பந்துவீச்சாளர்கள் மிகுந்த சவாலை எதிர்கொள்ளவேண்டிய வேண்டிய நிலைக்கு ஆளாகினர். தவறான பந்துகளை மட்டுமே கணித்து ஓட்டங்களை குவித்த துடுப்பாட்டவீரர்கள்; வேகமாகவும், அதிகளவிலும் ஓட்டங்களை குவிக்கவேண்டிய சூழ்நிலையால் மாறுபட்ட உக்திகளை கையாண்டும், விக்கட்டை இழந்தாலும் பரவாயில்லை என்பதுபோன்ற சில துணிவான ஆபத்துமிக்க தொழில்நுட்ப ஆட்டங்களை ஆட ஆரம்பித்ததால்; பந்துவீச்சாளர்களும் அவர்களை சமாளிக்கும் அளவில் புதிய உக்திகளையும், மாறுபட்ட பந்துவீச்சுக்களையும் வீச ஆரம்பித்தனர்; இந்த நேரத்தில் இரண்டுபேருக்கும் அழுத்தம் சமவளவில் அதிகரித்திருந்தது!

அதுவரை துடுப்பாட்டவீரர்களுக்கும் பந்துவீச்சாளர்களுக்கும் சமவளவில் இருந்துவந்த அழுத்தம்; 1992 ஆம் ஆண்டு ஐ.சி.சி கொண்டுவந்த புதிய விதிமுறைகளால் பந்துவீச்சாளர்களுக்கு மேலதிக அழுத்தமாக அதிகரிக்கப்பட்டது. உலககிண்ண போட்டிகளில் அவுஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான போட்டியில் முதற்தடவையாக இந்த புதிய விதிகள் அறிமுகப்படுத்தப்பட்டன. முதல் 15 ஓவர்களுக்கும் 30 யார்ட் (27.4m) சுற்றுவட்டத்திற்கு வெளியே 2 களத்தடுப்பாளர்கள் மட்டுமே களத்தடுப்பில் ஈடுபடுத்தப்பட முடியும் என்கின்ற விதியும்( பவர்ப்ளே ஓவர்கள்), மிகுதி ஓவர்களில் 30 யார்ட் சுற்றுவட்டத்திற்கு வெளியே அதிகபட்சமாக ஐந்து வீரர்கள்தான் களத்தடுப்பில் ஈடுபடமுடியும் என்கின்ற விதியும் உள்வாங்கப்பட்டது. இந்த விதிகளுக்கு உந்துகோலாக சொல்லப்படும் சம்பவம் 1980 களின் முற்பகுதியில் இடம்பெற்றது; இங்கிலாந்து மற்றும் மேற்கிந்திய அணிகளுக்கிடையிலான ஒரு போட்டியில்; இறுதிப்பந்தில் நான்கு ஓட்டங்களை பெற்றால் மேற்கிந்திய அணிக்கு வெற்றி எனும் நிலையில் இங்கிலாந்து அணித்தலைவர் மைக் பிரியார்லி (Mike Brearley) விக்கட்காப்பாளர் உள்ளிட்ட அனைத்து களத்தடுப்பாளர்களையும் எல்லைக்கோட்டில் நிறுத்தி இறுதிப்பந்தை வீசி அணியை வெற்றி பெறச்செய்தார்! இதன் பின்னணியில்தான் 30 யார்ட் சுற்றுவட்டத்திற்கு வெளியே குறிப்பிட்டளவு வீரர்களை நிறுத்தவேண்டும் என்கின்ற எண்ணம் வந்தது!புதியபந்தில் முதல் 15 ஓவர்களுக்கும் 30 யார்ட் சுற்றுவட்டத்திற்கு வெளியே இரண்டு வீரர்கள்தான் நிற்கமுடியும் என்பது பந்துவீச்சாளர்களை பொறுத்தவரை மிகப்பெரும் சவால்!! வேகமாக ஓட்டங்களையும் குவிக்கும் போட்டிகளாக ஒருநாள் போட்டிகளை மாற்றியமைக்கும் ஐ.சி.சியின் திட்டமாக இது அமைந்தாலும்; இதன் தாக்கம் பந்துவீச்சாளர்களை பாதிக்க ஆரம்பித்தது. 1996 வரை இதன் தாக்கம் பெரியளவில் இருக்கவில்லை எனினும் இலங்கையின் சனத் ஜெயசூர்யா ஆரம்ப துடுப்பாட்ட வீரராக களமிறங்கிய 1996 காலப்பகுதியில்தான் பந்துவீச்சாளர்கள் மிகப்பெரும் சவாலை எதிர்கொள்ள வேண்டிய சூழ்நிலை ஆரம்பித்தது!! 'பிஞ்ச் ஹிட்டிங்' என்னும் அதிரடி முறையில் பவர்ப்ளே ஓவர்களில் அடித்தாடும் பாணியை சனத் ஜெயசூரியா ஆரம்பிக்க; அதன்பின்னர் படிப்படியாக ஏனைய அணிகளும் இதனை பின்பற்றி ஆரம்ப ஓவர்களில் ஓட்டங்களை குவிக்க ஆரம்பித்தனர்!! பந்துவீச்சாளர்களுக்கு இது மிகப்பெரும் சவாலாக அமைந்தது, ஒவ்வொரு பந்தையும் அவதானமாக, இறுதி கணம்வரை துடுப்பாட்ட வீரரை கவனித்து வீசவேண்டிய சூழ்நிலை உருவாகியது. ஆடுகளம் பந்துவீச்சுக்கு சாதகமாக அமையாவிட்டால், புதிய பந்தும் துடுப்பாட்டவீரருக்கு சார்பாகவே இருக்கும்; இந்நிலையில் பந்துவீச்சாளர்களை துடுப்பாட்ட வீரர்கள் துவம்சம் செய்ய ஆரம்பித்தனர்.

துடுப்பாட்ட வீரர்களது ஓட்டம் குவிக்கும் விகிதமும் (strike Rate|) பந்துவீச்சாளர்களது ஓட்டம் கொடுக்கும் விகிதமும் (Economy Rate) எகிற ஆரம்பித்தது; தலைசிறந்த பந்துவீச்சாளர்களே சில ஆடுகளங்களில் திணற ஆரம்பித்திருந்தனர். இந்நிலையில் பவர்ப்ளேயில் முதலாவது மாற்றம் 2005 ஆம் ஆண்டு, ஆடி மாதம், 7 ஆம் திகதி இங்கிலாந்து மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான போட்டிமுதல் வழக்கத்திற்கு வந்தது. அதாவது 15 ஓவர்களாக இருந்த பவர்ப்ளே 10 ஓவராக குறைக்கப்பட்டு மேலதிகமாக இரண்டு பவர்ப்ளேக்கள் ஐந்தைந்து ஓவர்களாக இரு தடவைகள் வீசவேண்டும் என்கிற விதி அறிமுகமானது. இதில் இறுதி இரண்டு பவர்ப்ளேகளும் பந்துவீச்சு அணித்தலைவரால் எந்த நேரத்தில் எடுக்கபடும் என்று முடிவுசெய்யப்படும்; அத்துடன் இந்த இரு பவர்ப்ளேகளிலும் 30 யார்ட் சுற்றுவட்டத்திற்கு வெளியே மூன்று வீரர்கள் மாத்திரம் களத்தடுப்பில் ஈடுபடமுடியும். இந்த மாற்றம் பந்துவீச்சாளர்களுக்கு சாதகம், பாதகம் என இரு நிலைகளையும் வேறுவேறு சந்தர்ப்பங்களில் தோற்றுவித்தது.

துடுப்பாடும் அணியின் விக்கட்டுகள் சரியும் நேரங்களில் ஏனைய இரு பவர்ப்ளே ஓவர்களையும் பயன்படுத்தி துடுப்பாடும் அணியினது அழுத்தத்தை பயன்படுத்தலாம் என்பது சாதகமாக இருப்பினும்; 20 ஓவர்கள் பவர்ப்ளே என்பது மிகவும் அதிகம். விக்கட்டுகள் சரியாதவிடத்து பந்துவீச்சாளர்கள்பாடு திண்டாட்டம்தான்!! இந்தக்காலப்பகுதியில்தான் 400 ஓட்டங்களை ஒருநாள் போட்டிகளில் இலகுவாக எட்டும் அளவிற்கு போட்டிகள் ஓட்டக்குவிப்பாக மாற ஆரம்பித்தன. ரசிகர்களை மைதானத்திற்கு அழைத்துவர வேண்டிய வணிக எண்ணம், T /20 போட்டிகளுக்கு இணையாக ஒருநாள் போட்டிகளையும் தொய்வின்றி கொண்டுசெல்லல் போன்ற காரணங்களால் ஓட்டக்குவிப்பு ஒருநாள் போட்டிகளுக்கு அவசியமாகப்போனது; இதனால் மைதானங்களின் தன்மைகளும், துடுப்பட்டவீரர்களுக்கு சார்பாக மாற்றியமைக்கும் திட்டம் ஆரம் பிக்கப்பட்டது. அவுஸ்திரேலியாவின் பெர்த் அணிக்கு இணையாக சொல்லப்படும் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு சார்பான ஜெகனஸ்பேர்க் மைதானத்தில் 12 பங்குனி 2006 ஆம் ஆண்டு அவுஸ்திரேலியா மற்றும் தென்னாபிரிக்கா அணிகளுக்கிடையிலான ஒருநாள் போட்டியொன்றில் 872 ஓட்டங்கள் குவிக்கப்பட்டது கிரிக்கட் ரசிகர்களுக்கு மகிழ்வான நாளாக இருப்பினும், பந்துவீச்சாளர்களுக்கு அதுவொரு கறுப்புதினம்.

இப்படியாக பந்துவீச்சு மைதானங்கள் என்று முத்திரை குத்தப்பட்ட தென்னாபிரிக்கா, நியூசிலாந்து, மேற்கிந்திய ஆடுகளங்களில் பலவும் ஓட்டங்களை குவிக்க ஏதுவாக மாற்றியமைக்க ஆரம்பிக்கப்பட்டன! வணிகமயமாக, ரசிகர்களை குறிவைத்து ஐ.சி.சியின் ஆசீர்வாதத்துடன் கிரிக்கட் தன்னிலையிலிருந்து இறங்கிவர ஆரம்பித்தது; பந்து வீச்சாளர்களுக்கு சாவுமணி அடித்தவண்ணம். இந்நிலையில் அடுத்த சில ஆண்டுகளில் மீண்டும் ஒருமாற்றம் கொண்டுவரப்பட்டது; அதாவது மூன்றாவது பவர்ப்ளேயை துடுப்பாட்ட அணிக்கானது எனவும் (பட்டிங் பவர்ப்ளே); அவர்கள் அதனை விரும்பிய நேரத்தில் பயன்படுத்தமுடியும் எனவும் விதி அறிவிக்கப்பட்டது. இறுதி ஓவர்களில் சாதரணமாகவே அடித்தாடும் துடுப்பாட்டவீரர்கள்; பட்டிங் பவர்ப்ளேயை இறுதி ஓவர்களில் தெரிவுசெய்து பந்துவீச்சாளர்களை சங்காரம் செய்ய ஆரம்பித்தனர்.


துடுப்பாட்டத்திற்கு சார்பான ஆடுகளம், இறுதி ஓவர்களில் பட்டிங் பவர்ப்ளே என அழுத்தத்துடன் பந்துவீச வேண்டிய நிலையிலிருந்த பந்துவீச்சாளர்களுக்கு துணையிருந்தது ரிவேர்ஸ் சுவிங் எனப்படும் பந்துவீச்சு முறைதான்; ஆனால் ரிவேர்ஸ் ஸ்விங் வீசுவதற்கு பந்து பழுதடைந்த நிலையிலிருக்கவேண்டும்; அதற்கும் 2005 இல் ஐ.சி.சி தனது புதியவிதியால் தடை போட்டிருந்தது. அதாவது 36 ஆவது ஓவர் தொடங்கும்போது பந்து மாற்றப்படவேண்டும் என்பதுதான் அந்தவிதி; அதாவது நல்ல நிலையிலுள்ள பாவித்த பந்தினை மாற்றவேண்டும்; இது பந்துவீச்சாளர்களை பொறுத்தவரை மிகவும் பாதகமானவிடயம். 1) வேகப்பந்து வீச்சாளர்களுக்கான ரிவேர்ஸ் ஸ்விங்கை வீசுவது கடினம் 2) சுழல் பந்துவீச்சாளர்களும் அதிக திருப்பத்தை கொடுக்க முடியாது 3) பந்து வேகமாக துடுப்பை நோக்கி வருமென்பதால் துடுப்பாட இலகு, அதிலும் சிறப்பாக ஆடிக்கொண்டிருக்கும் வீரருக்கோ அல்வா சாப்பிடுவது போன்றது. இப்படியாக ஓட்டங்களை துடுப்பாட்டவீரர்கள் குவிப்பதற்கான வாய்ப்புக்களை நேரடியாகவும் மறைமுகமாகவும் ஐ.சி.சி வழங்க ஆரம்பித்தது. அவர்களின் நோக்கம் பணம்; ஆனால் பாதிப்பு பந்துவீச்சாளர்களுக்கு மிகப்பெரும் அழுத்தமாக!!

இந்நிலையில் 1 ஐப்பசி 2011 இல் அடுத்த மாற்றம் கொண்டுவரப்பட்டது; இம்முறை போலிங் மற்றும் பட்டிங் பவர்ப்ளே ஓவர்கள் 16-40 ஓவர்களுக்கிடையில் வீசப்படவேண்டும் என மாற்றம் கொண்டுவரப்பட்டது, இந்த மாற்றம் பந்துவீச்சாளர்களுக்கு ஓரளவுக்கு சார்பாக மாற்றியமைக்கப்பட்டது. இடைப்பட்ட ஓவர்களில் பவர்ப்ளே எடுப்பதால் விக்கட்டுகளை அந்த ஓவர்களில் பறிப்பதன் மூலம் இறுதி ஓவர்களில் துடுப்பாட்ட வீரர்களுக்கு அழுத்தத்தை கொடுக்கும் சந்தர்ப்பம் பந்துவீச்சாளர்களுக்கு கிடைக்கப்பெற்றது. ஆனாலும் இங்கும் பந்துவீச்சாளர்களுக்கு பாதகமான ஒருவிடயம் உள்வாங்கப்பட்டிருந்தது; அதாவது இரு பக்கங்களிலும் புதிய பந்துகள் வீசப்படவேண்டும் என்பதுதான் அந்தவிதி. ஒரு பந்து 50 ஓவர்கள் நிறைவில் 25 ஓவர்கள் வீசப்பட்ட நிலையில்தான் இருக்கும்; ஆரம்ப ஓவர்களில் மைதானம் ஒத்துழைக்கும் பட்சத்தில் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாகவிருக்கும் இந்த புதியவிதி; இறுதி ஓவர்களில் ரிவேர்ஸ் ஸ்சுவிங், சுழல் போன்றவற்றை வீச வேகம், சுழல் என இருவகையான பந்துவீச்சாளர்களுக்கும் மிகவும் சிரமமானது.

அடுத்து 29 ஐப்பசி 2012 கொண்டு வரப்பட்ட இறுதி விதி மாற்றம் ஐ.சி.சியால் பந்து வீச்சாளர்களுக்கு கொடுக்கப்பட்ட மிகப்பெரும் மரண அடி! சாதரணமாக நோக்கினால் புதிய விதிமாற்றம் பந்துவீச்சாளருக்கு சாதகமானது போன்ற மாயையை தோற்றுவிக்கும்; காரணம் ஒரு ஓவருக்கு 2 பவுன்சர்கள் வீசலாம் என்கின்ற விதியும், போலிங் பவர்ப்ளே நீக்கப்பட்ட விதியும். ஆனால் இவை இரண்டையும் ஒன்றுமே இல்லை என சொல்லுமளவுக்கு மூன்றாவது விதி மாற்றம் மிகப்பெரும் தலையிடியை பந்து வீச்சாளர்களுக்கு கொடுத்துள்ளது. பவர்பிளே ஓவர்கள் தவிர்ந்த ஏனைய ஓவர்களில் 30 யார்ட் சுற்றுவட்டத்திற்கு வெளியே ஐந்து வீரர்கள் களத்தடுப்பில் ஈடுபடலாம் என்கின்ற விதியை மாற்றி; நான்கு வீரர்கள் மாத்திரமே 30 யார்ட் சுற்றுவட்டத்திற்கு வெளியே களத்தடுப்பில் ஈடுபடலாம்; என் கொண்டுவரப்பட்ட விதிதான் பந்துவீச்சாளர்களை பொறுத்தவரை மிகவும் பாதகமான விடயமாக நோக்கப்படுகின்றது.


பந்துவீச்சாளரின் பந்துவீசும் திட்டமிடலுக்கமைய 30 யார்ட் சுற்றுவட்டத்திற்கு வெளியே அணித்தலைவரால் தேவையை பொறுத்து 5 களத்தடுப்பாளர்களும் ஓப் திசை, ஓன் திசைகளில் 3:2 அல்லது 4:1 என்னும் விகிதத்தில் களத்தடுப்பில் பயன்படுத்தப்படுவர். துடுப்பாட்டவீரர்களை தாம் திட்டமிட்டு பந்துவீசும் திசையில்(ஓப், ஓன்) ஆடவைத்து ஓட்டத்தை கட்டுப்படுத்த அந்த திசைகளில் மூன்று அல்லது நான்கு வீரர்களை அதிகபட்சமாக பயன்படுத்துவார்கள். தற்போது நான்கு வீரர்கள் மட்டுமே 30 யார்ட் சுற்றுவட்டத்திற்கு வெளியே களத்தடுப்பில் ஈடுபடுத்த முடியும் என்கின்ற விதி மாற்றத்தால் களத்தடுப்பு வியூகங்களை அமைப்பதில் பந்துவீச்சாளரும், அணித்தலைவரும் மிகுந்த சிரமத்தை எதிர்நோக்குகின்றார்கள். எங்கு பந்துவீசினாலும் துடுப்பாட்ட வீரரின் சாமர்த்தியத்தால் ஓட்டங்களை குவிக்ககூடிய Third man, sweeper cover, long off, long on, Midwicket, Square Leg, Fine Leg என ஏழு முக்கியமான எல்லைக்கோட்டு திசைகளில் நான்கை தெரிவு செய்யும்போது மிகுதி மூன்று இடங்களும்; அவை தவிர்த்த வழமையான களத்தடுப்பாளர்களற்ற ஓட்டங்களை குவிக்கும் திசைகளும்; துடுப்பாட்ட வீரர்களுக்கு சாதகமாக இருக்கும். எந்த திசையில், எப்படி பந்து வீசினாலும்; சிறந்த துடுப்பாட்ட வீரர்களுக்கு 30 யார்ட் சுற்றுவட்டத்தை இந்த புதிய விதிமுறையால் இலகுவாக கடந்து ஓட்டங்களை குவிக்கமுடியும்.

இலங்கையின் அணித்தலைவர் மகேல ஜெயவர்த்தன "தான் ஒரு துடுப்பாட்ட வீரராக இருப்பினும் இந்தவிதி பந்துவீச்சாளர்களுக்கு எதிரானது" என கூறியுள்ளார். ஐ.சி.சி இந்தவிதியை மாற்றாதவிடத்து 50 ஓவர்களும் பவர்ப்ளே போன்றே கணிக்கப்படும். எந்த நேரத்திலும் ஓட்டங்களை துடுப்பாட்ட வீரர்களால் குவிக்கமுடியும் என்பதால்; இனிவரும் காலங்களில், சிறியதும் துடுப்பாட்ட வீரர்களுக்கு சாதகமான ஆடுகளங்களில் 500 ஓட்டங்கள்கூட எட்டுவதற்கு சாத்தியமானதே!! இது ஐ.சி.சி, மற்றும் கிரிக்கட் சபைகளுக்கு பணத்தை கொட்டினாலும்; கிரிக்கட்டுக்கும், பந்துவீச்சாளர்களுக்கும் சாவுமணிதான். அதேநேரம் இப்படியாக அடிக்கடி விதிகளை மாற்றி ஒருநாள் போட்டிகளிலும், ஓட்டக்குவிப்பை மட்டுமே நோக்கமாக கொண்ட T/20 போட்டிகளிலும் அழுத்தங்களுக்கிடையில் பந்துவீசி; இப்போதெல்லாம் டெஸ்ட் போட்டிகளுக்கு சிறந்த பந்துவீச்சாளர்களை அடையாளம் காண்பதே அரிதாக உள்ளது, இது துடுப்பாட்ட வீரர்களுக்கும் பொருந்தும். வரலாற்றில் சிறந்த டெஸ்ட் பந்துவீச்சாளர்களை பார்த்த கிரிக்கட் உலகம்; இப்போதுள்ள வீரர்களில் விரல்விட்டு எண்ணும் அளவில்கூட சிறந்த பந்துவீச்சாளர்களை கொண்டிருக்காதது இதற்கான சிறந்த வெளிப்படை உதாரணம்!!

இப்படியே விதி மாற்றங்களை துடுப்பாட்ட வீரர்களுக்கு சார்பாக அடிக்கடி மாற்றி மாற்றி கிரிக்கட்டை வைத்து ஐ.சி.சி பணத்தை பார்க்கும் அதேவேளை; பந்துவீச்சாளர்களுக்கான அடையாளம் தொலைக்கப்பட்டுக் கொண்டிருப்பதையும் தவிர்க்கமுடியாது. வரலாற்றின் மிகச்சிறந்த பந்துவீச்சாளர்களது வரிசையில் இனிவரும் காலங்களிலும் மிகச்சிறந்த பந்துவீச்சாளர்கள் இடம்பெறவேண்டும் என்றால்; நிச்சயம் விதிகளில் மாற்றம் தேவை, ஆனால் இவை ஐ.சி.சியால் நடைமுறைப்படுத்தப்படும் என்கின்ற நம்பிக்கை அறவே இல்லை!

Sunday, January 13, 2013

2012 இல் தமிழ் சினிமா..


ஒரு வாரத்திற்கு முன்னர் பத்திரிக்கை ஒன்றிற்காக எழுதியது :-)

2011 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2012 இல் தமிழ் சினிமா வணிகரீதியாகவும், தரமான படைப்புக்களை கொடுத்த வகையிலும் சற்று முன்னோக்கி இருந்தாலும் வெளியிடப்பட்ட திரைப்படங்களின் எண்ணிக்கையில் வரவேற்பை பெற்ற மிக மிக குறைவான எண்ணிக்கைதான். 2013 பிறந்திருக்கும் இந்த நேரத்தில் கடந்த 2012 ஆம் ஆண்டு தமிழ் சினிமாவில் வெளிவந்த திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள், இயக்குனர்கள், இசையமைப்பாளர்கள் போன்றோரது பங்களிப்புக்கள் பற்றிய அலசல்தான் இந்தக் கட்டுரை.....

திரைப்படங்கள்


* 2012 ஆம் ஆண்டு தை 1 முதல் மார்கழி 31 வரை மொத்தமாக 144 திரைப்படங்கள் திரையிடப்பட்டுள்ளன; இவற்றில் அதிக பட்சமகாக ஆவணி மாதத்தில் 22 திரைப்படங்கள் திரையிடப்பட்டுள்ளன, குறைந்த பட்சமாக ஆடி மாதம் 6 திரைப்படங்கள் திரையிடப்பட்டுள்ளன. தை மாதம் இரு கிழமைகளும், ஆனி மற்றும் ஆடி மாதங்களில் தலா ஒரு கிழமையும் தவிர்த்து மிகுதி அனைத்து கிழமைகளிலும் குறைந்த பட்சம் ஒரு திரைப்படமேனும் 2012 இல் வெளிவந்துள்ளது.

* இந்த ஆண்டின் மிகப்பெரும் வெற்றித் திரைப்படம் துப்பாக்கி'; ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்த 'துப்பாக்கி' 2012 இல் வணிகரீதியில் வெற்றிபெற்ற முதன்மையான திரைப்படம். அதேபோல ராஜமௌலி இயக்கத்தில் வெளிவந்த 'நான் ஈ' திரைப்படம் இந்த ஆண்டின் அதிகப்படியான லாபம் கொடுத்த மற்றுமொரு மிகப்பெரும் வெற்றித் திரைப்படம். இவற்றைவிட ராஜேஷ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்த 'ஒரு கல் ஒரு கண்ணாடி', பிரபாகரன் இயக்கத்தில் சசிக்குமார் நடித்த 'சுந்தரபாண்டியன்', போன்றன வணிகரீதியில் மிகச்சிறந்த வரவேற்பை பெற்ற மற்றைய திரைப்படங்கள். இவற்றுடன் விமர்சன ரீதியில் சிறந்த வரவேற்பை பெற்றுக்கொண்ட 'நண்பன்' மிகப்பெரும் தயாரிப்புச் செலவான 65 கோடிகளுக்கு நஷ்டம் கொடுக்காமல் ஓடி இந்த ஆண்டின் அதிகபட்ச வசூலை குவித்த திரைப்படங்களில் ஒன்று என்கின்ற பெருமையை பெற்றது. இவற்றைவிட கலகலப்பு, காதலில் சொதப்புவது எப்படி, நடுவில கொஞ்சம் பக்கத்தை காணம், பீட்சா போன்ற திரைப்படங்கள் தயாரிப்பு செலவைவிட அதிகம் வசூலித்த திரைப்படங்கள்.

* சிவகார்த்திகேயன் நடிப்பில் பாண்டியராஜ் இயக்கத்தில் வெளிவந்த 'மரினா' மற்றும் எழில் இயக்கத்தில் வெளிவந்த 'மனம் கொத்திப் பறவை', இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி நடிப்பில் வெளிவந்த 'நான்', லிங்குசாமி இயக்கத்தில் ஆரியா மற்றும் மாதவன் நடிப்பில் வெளிவந்த 'வேட்டை', தனுஸ் நடித்த '3', பிரகாஸ்ராஜ் இயக்கி நடித்த 'டோனி' திரைப்படங்கள் முதலுக்கு மோசமில்லாமல் வசூலித்த திரைப்படங்கள் வரிசையில் உள்ளவை.

* இவை தவிர விமர்சனரீதியில் நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படங்களான வழக்கு எண் 18/9, நீர்பறவை, கும்கி, அட்டக்கத்தி போன்ற திரைப்படங்கள் அதிக லாபத்தை கொடுக்காவிட்டாலும் குறிப்பிடத்தக்க வசூலை பெற்ற திரைப்படங்கள். வசூலில் பெரிதாக சாதிக்காவிட்டாலும் விமர்சன ரீதியில் நல்ல வரவேற்பை பெற்ற மொழி மாற்றல் திரைப்படமான ஸ்ரீதேவியின் 'இங்கிலிஷ் விங்கிலிஷ்', மற்றும் அருண்விஜய் நடிப்பில் வெளிவந்த ஜனரஞ்சக திரைப்படம் என்று ஏற்றுக்கொள்ளப்பட்ட 'தடையறத்தாக்கு' திரைப்படங்கள் சொல்லிக்கொள்ளும் படியான ஏனைய முக்கிய திரைப்படங்கள்.

* பில்லா II, மாற்றான், சகுனி, தாண்டவம், அரவான், முகமூடி, நீதானே என் பொன்வசந்தம் போன்ற திரைப்படங்கள் வணிக ரீதியிலும், விமர்சன ரீதியிலும் எதிர்பார்ப்புக்களை ஏமாற்றிய முக்கிய திரைப்படங்கள்.


நடிகர்கள்


* இந்த ஆண்டு தமிழ் சினிமாவின் உச்சங்களான ரஜினி, கமல் இருவரது திரைப்படங்களும் வெளிவரவில்லை; 1975 இல் இருந்து ரஜினி, கமல் இருவரில் குறைந்தபட்சம் ஒருவரது திரைப்படமேனும் வெளிவராத ஆண்டாக 2011 மற்றும் 2012 ஆம் ஆண்டுகள் அமைந்துவிட்டன. கமலின் 'விஸ்வரூபம்' திரைப்படத்தின் டிரெயிலர் மற்றும் பாடல்கள் வெளிவந்தமை, மற்றும் ரஜினியின் 'சிவாஜி' திரைப்படம் 3D யாக வெளிவந்தமை போன்றன ரசிகர்களுக்கு ஓரளவுக்கு ஆறுதலாக அமைந்தன.

* 2012 ஐ பொறுத்தவரை விஜய்க்கு இது ஒரு கனவு ஆண்டு; 2007 'போக்கிரி' வெற்றிக்கு பின்னர் ஸ்திரமான வெற்றியை தேடிக்கொண்டிருந்த விஜய்க்கும் , அவர் ரசிகர்களுக்கும் 'துப்பாக்கி' மிகத்திருப்தியான திரைப்படமாக அமைந்ததுடன் மிகச்சிறப்பான வசூலையும் அள்ளிக் குவித்துள்ளது. தவிர துப்பாக்கி, நண்பன் என 2012 இன் முதல் நான்கு அதிகபட்ச வசூல்களைப் பெற்ற திரைப்படங்களில் இரண்டு திரைப்படங்களின் நாயகன் விஜய். நண்பன் திரைப்படம் விஜயின் மற்றொரு முகத்தை வெளிக்கொண்டுவந்து விஜயை பிடிக்காதவர்களையும் ரசிக்கும்படி செய்த திரைப்படம்.

* இந்த ஆண்டின் மிகப்பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கிய திரைப்படம் என்றால் அது அஜித்தின் 'பில்லா II'; அஜித், விஷ்ணுவர்தன் கூட்டணியில் மிகப்பெரும் வெற்றி பெற்ற பில்லா(2007) திரைப்படத்தின் முதற் பாகமாக எடுக்கப்பட்ட 'பில்லா II' திரைப்படம் மிகப்பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியிருந்தாலும் ரசிகர்களை கவரும் விடயங்கள் திரைப்படத்தில் இல்லாததால் தோல்வியடைந்தது.

* 'கோ' வெற்றியை தொடர்ந்து கேவி.ஆனந்த் இயக்குகிறார் என்பதாலும்; 'அயன்' மிகப்பெரும் வெற்றிக்கு பின்னர் சூர்யாவுடன் கேவி.ஆனந்த் இணைகின்றார் என்பதாலும்; கே.வி.ஆனந்த் சூர்யா கூட்டணியில் உருவாகிய மாற்றான் திரைப்படத்திற்கு மிகப்பெரும் எதிர்பார்ப்பு காணப்பட்டது. ஒட்டிப்பிறந்த இரட்டைகளாக சூர்யா நடிக்கின்றார் என்னும்போது எதிர்பார்ப்பு இன்னமும் அதிகமாயிற்று; ஆனால் அனைத்து எதிர்பார்ப்பையும் மோசமான திரைக்கதை ஏமாற்ற திரைப்படம் தோல்வியடைந்தது.

* விக்ரமிற்கு அந்நியனுக்கு பின்னர் இன்னமும் ஒரு பெரிய ஹிட் கிடைத்தபாடில்லை; 2011 இல் 'தெய்வத்திருமகள்' மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றதோடு கணிசமான வசூலையும் குவித்தது என்றாலும், தொடர்ந்து வெளிவந்த 'ராஜபாட்டை' மிகப்பெரும் தோல்வியடைந்தது. இந்நிலையில் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் விக்ரம் நடித்த 'தாண்டவம்' திரைப்படம் எதிர்பார்ப்புக்களை பூர்த்திசெய்யாமல் தோல்விப்படமாகவே அமைந்தது.

* தனுசிற்கு '3' திரைப்படமும், சிம்புவிற்கு 'போடாபோடி' திரைப்படமும் கலவையான விமர்சனங்களையும், கலவையான வசூலையும் கொடுத்தன; இருவருக்கும் 2012 சிறப்பான ஆண்டாக அமையாவிட்டாலும், மோசமான ஆண்டாகவும் அமையவில்லை. கார்த்தியை பொறுத்தவரை மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்திய 'சகுனி' திரைப்படம் சொல்லிக்கொள்ளும்படியாக அமையவில்லை என்பதால் வெற்றிப்படங்கள் வரிசையில் இணைய முடியாவிட்டாலும், ஓரளவுக்கு சுமாராக வசூலித்தது. ஜீவாவிற்கு 'முகமூடி' , 'நீதானே என் பொன்வசந்தம்' திரைப்படங்கள் கைகொடுக்காவிட்டாலும், 'நண்பன்' நல்ல பெயரை பெற்றுக் கொடுத்தது. ஆர்யாவிற்கு 'வேட்டை' முதலுக்கு மோசத்தை கொடுக்கவில்லை எனினும் 2012 ஆரியாவிற்கு பெரிதாக கை கொடுக்கவில்லை. விஷால், ஜெயம்ரவி, ஜெய் திரைப்படங்கள் எவையும் 2012 இல் வெளிவரவில்லை. பேரரசுவுடன் கைகோர்த்த பரத்தின் 'திருத்தணி' படுதோல்வியடைந்தது.

* சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி இருவருக்கும் இந்த ஆண்டு ஒரு சிறப்பான ஆண்டு! சிவகார்த்திகேயன் நடித்த 'மெரினா' மற்றும் 'மனம் கொத்தி பறவை' திரைப்படங்கள் குறைந்த செலவில் தயாராகி கணிசமான லாபத்தை கொடுத்த அதேவளை '3' திரைப்படத்தில் நகைச்சுவை காட்சிகளில் நடித்ததன் மூலம் சிறந்த வரவேற்பையும் பெற்றிருந்தார். அதேபோல விஜய் சேதுபதி நடித்த பீட்சா, நடுவில கொஞ்சம் பக்கத்தை காணம், சுந்தரபாண்டியன் (குணச்சித்திரம்) திரைப்படங்கள் வெற்றிப்படங்களாக அமைந்து விஜய் சேதுபதியை தமிழ் சினிமாவிற்கு பரிச்சியமாக்கியுள்ளது. களவாணி, வாகைசூடவா என கலக்கிய விமலுக்கு 2012 இல் 'கலகலப்பு' வெற்றிப்படமாக அமைந்தாலும் இஸ்டம், மாட்டுத்தாவணி திரைப்படங்கள் படுதோல்வியாக அமைந்தன.

* அதர்வா நடித்த 'முப்பொழுதும் உன் கற்பனைகள்' திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வசூலில் சாதிக்கவில்லை; தவிர வித்தார்த், ஆதி என அறியப்பட்ட சிறிய நாயகர்களது திரைப்படங்கள் எவையும் சொல்லிக்கொள்ளும்படியாக அமையவில்லை. விஜயகாந்த், சத்யராஜ், சரத்குமார் போன்ற மூத்த நடிகர்கள் கதாநாயகனாக நடித்த திரைப்படங்கள் எவையும் 2012 இல் வெளியாகவில்லை; அர்ஜுன் நடித்த ஒரே படமான 'மாசி' வந்த வேகத்தில் பெட்டிக்கு திரும்பியது. நீண்டகாலங்களுக்குப் பின்னர் வெளிவந்த ராமராஜன் நடித்த 'மேதை' திரைப்படம் வெளிவந்ததே பலருக்கும் தெரிந்திருக்கவில்லை.

நடிகைகள்


* த்ரிஷா, அசின், நயன்தாரா, ஷ்ரேயா, தமன்னா என தமிழ் சினிமாவை சமீபகாலத்திற்கு முன்னர்வரை கலக்கிய ஐவரது திரைப்படங்களில் ஒன்றுகூட 2012 இல் வெளிவரவில்லை. இறுதி 10 ஆண்டுகளில் இந்த ஐவரில் யாரேனும் ஒருவரது திரைப்படம் கூட வெளிவராத ஆண்டாக 2012 ஆம் ஆண்டு இடம்பிடித்துவிட்டது.

* இன்றைய இளைஞர்களின் கனவுக் கன்னிகளில் ஒருவரான காஜல் அகர்வாலுக்கு 2012 ஒரு மிகச்சிறந்த ஆண்டாக அமைந்தது. விஜயுடன் 'துப்பாக்கி', சூர்யாவுடன் 'மாற்றான்' என இரண்டு பெரிய திரைப்படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பு காஜலுக்கு கிடைத்தது. இரு திரைப்படங்களிலும் பாடல்களில்தான் அதிகவேலை என்றாலும் ரசிகர்களின் மனங்களை கொள்ளை கொண்டிருப்பார் காஜல், அடுத்த சில ஆண்டுகளுக்கு தமிழ் சினிமாவின் ஆதிக்க நாயகிகளில் ஒருவராக காஜலை எதிர்பார்க்கலாம்.

* இன்றைய இளைஞர்களின் கனவுக் கன்னியாக, இளைஞர்களை கவர்ந்திருக்கும் நடிகையாக 'நான் ஈ', 'நீதானே என் பொன்வசந்தம்' திரைப்படங்களின் நாயகியாக சமந்தா 2012 இல் மிகப்பெரும் வரவேற்பை பெற்றுள்ளார். இரு திரைப்படங்களிலும் தனது ஆற்றலை வெளிப்படுத்தக்கூடிய சந்தர்ப்பம் அமையவே சமந்தா தனது திறமையை சிறப்பாக வெளிப்படுத்தியிருப்பார். காஜலுக்கு போட்டியாக அடுத்த சில ஆண்டுகளுக்கு தமிழ் சினிமாவில் கோலோச்சப்போகும் நாயகியாக சமந்தாவும் நிச்சயம் இருப்பார்.

* ஹன்சிகா 'ஒரு கல் ஒரு கண்ணாடி' என்று ஒரே ஒரு திரைப்படத்தில் நடித்திருந்தாலும், அந்த திரைப்படத்தின் பெரிய வெற்றி அவருக்கு 2012 ஐ வெற்றி ஆண்டாக அமைத்துக் கொடுத்தது. சுந்தரபாண்டியன், கும்கி திரைப்படங்களின் நாயகி லக்ஷ்மி மேனன் இந்த ஆண்டின் வெற்றிகரமான மற்றைய நாயகி; இரு திரைப்படங்களும் வசூலில் நல்ல தொகையை கொடுத்த அதே நேரம் இரு திரைப்படங்களிலும் சிறப்பான ஆற்றலை லக்ஷ்மி வெளிப்படுத்தியிருந்தார்; இவருக்கும் தமிழ் சினிமாவில் எதிர்காலம் சிறப்பாக அமையும் சாத்தியம் உண்டு. இவர்களை தவிர ஸ்ருதிக்கு '3' திரைப்படம் நல்ல பெயர் வாங்கி கொடுத்தது.

*அமலாபால் 2012 இல் மூன்று முக்கிய திரைப்படங்களில் நடித்திருந்தார்; 'காதலில் சொதப்புவது எப்படி' நல்ல பெயரையும் வசூலையும் கொடுக்க, 'வேட்டை' முதலுக்கு மோசம் செய்யாதிருக்க, 'முப்பொழுதும் உன் கற்பனைகள்' வணிக ரீதியில் காலை வாரியது; மொத்தத்தில் 2012 அமலாபாலிற்கு சராசரியான ஆண்டாக அமைந்தது. 'நண்பன்' இலியானாவை தமிழ் ரசிகர்களுக்கு பிடித்த நாயகிகள் வரிசையில் சேர்த்தது. ஓவியாவிற்கு 'கலகலப்பு', 'மெரினா' ஆகிய இரு திரைப்படங்களும் 2012 ஐ ஓரளவுக்கு பாதுகாத்து கொடுத்துள்ளன.

* அனுஷ்கா ஒரேயொரு திரைப்படமாக 'தாண்டவம்', திரைப்படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக நடித்திருப்பினும், அவருக்கு தாண்டவம் கைகொடுக்கவில்லை; 2012 அனுஷ்காவிற்கு மோசமான ஆண்டாகவே அமைந்தது. அஞ்சலி 'கலகலப்பு' திரைப்படத்தில் மட்டுமே நடித்திருந்தார்; 'கலகலப்பு' வெற்றித் திரைப்படம் ஆயினும், அவருக்கு பெயர் கொடுக்கும் பாத்திரங்கள் எவையும் 2012 இல் அமையவில்லை. சுந்தர் .சி யுடன் 'முரட்டுகாளை' திரைப்படத்தில் நடித்தது மட்டுமே சினேகாவின் 2012 ன் ஒரே திரைப்படம், 'முரட்டுகாளை' படுதோல்வியடைந்த திரைப்படங்களில் ஒன்று.

இயக்குனர்கள்


* 2011 இல் தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனரான மணிரத்தினம் திரைப்படம் எதுவும் வெளிவராத நிலையில், மற்றுமொரு முன்னணி இயக்குனரான ஷங்கர் இயக்கத்தில் 'நண்பன்' திரைப்படம் வெளியாகியது. ராஜ்குமார் ஹிரானியின் இயக்கத்தில் அமீர்கான் நடித்து ஹிந்தியில் மிகப்பெரும் வெற்றி பெற்ற '3 இடியட்ஸ்' திரைப்படத்தின் ரீமேக் வடிவம்தான் 'நண்பன்'. 2012 இல் அதிக தயாரிப்பு செலவில் உருவாகிய 'நண்பன்' விமர்சனரீதியில் மிகச்சிறந்த வரவேற்பை பெற்ற அதேவேளை, வசூலிலும் போட்ட பணத்தை மீட்டுக்கொடுத்தது. மணிரத்தினம் இயக்கிக்கொண்டிருக்கும் 'கடல்' திரைப்படம் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்பட்டபோதும் 2012 இல் பாடல்கள் மாத்திரமே வெளிவந்துள்ளன; ஏ.ஆர்.ரகுமான் இசையில் பாடல்கள் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளன.

* இவர்களுக்கு அடுத்து மிகப்பெரும் எதிர்பார்ப்பை தன்னகத்தே கொண்ட இயக்குனர்கள் வரிசையில் உள்ள முருகதாஸ் மற்றும் கௌதம்மேனன் திரைப்படங்கள் 2012 இல் வெளியாகின; முருகதாஸ் விஜயை வைத்து இயக்கிய 'துப்பாக்கி' திரைப்படம் இந்த ஆண்டின் மிகப்பெரும் வெற்றித் திரைப்படமாக அதிகம் வசூலித்து தமிழ் சினிமாவின் 'எந்திரன்', 'சிவாஜி' திரைப்படங்களுக்கு அடுத்து அதிகபட்ச வசூலை குவித்த 3 ஆவது திரைப்படம் என்கின்ற பெருமையைப் பெற்றது. கௌதம்மேனன் இயக்கத்தில் மிகப்பெரும் எதிர்பார்ப்பை தோற்றுவித்த 'நீதானே என் பொன்வசந்தம்' எதிர்பார்ப்புக்களை முழுமையாக பூர்த்தி செய்யாததால் போதிய வசூலை ஈட்டமுடியவில்லை.

* தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்கள் வரிசையில் இருக்கும் பாலா, செல்வராகவன், அமீர் திரைப்படங்கள் எவையும் 2012 இல் வெளிவரவில்லை. பாலாவின் 'பரதேசி', அமீரின் 'ஆதிபகவன்' திரைப்படங்களின் பாடல்கள் மற்றும் ட்ரெயிலர்கள் வெளிவந்துள்ள நிலையில் 2013 இல் வெளியாகும் மேற்படி திரைப்படங்களுக்கு மிகப்பெரும் எதிர்பார்ப்பு தோன்றியுள்ளது.

* குறும்பட இயக்குனர்களாக இருந்து வெள்ளித்திரையில் இயக்குனர்களாக புதிய பரிமானம்தேடி, அதில் மிகப்பெரும் வரவேற்பைப் பெற்ற இயக்குனர்களாக 'காதலில் சொதப்புவது எப்படி' திரைப்பட இயக்குனர் பாலாஜி மோகன், 'பீட்சா' திரைப்பட இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ், 'நடுவில கொஞ்சம் பக்கத்தை காணம்' இயக்குனர் பாலாஜி தரனீதரன் போன்றோர் தமிழ் சினிமாவால் ஏற்றுக்கொள்ளப்பட்ட முக்கியமான புதிய இயக்குனர்கள்.

* பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் வெளியாகிய 'வழக்கு எண் 18/9' எல்லோராலும் மிகச்சிறந்த படைப்பு என்று கொண்டாடப்பட்ட திரைப்படம். ஐஸ்வர்யா தனுஸ் இயக்கிய '3' திரைப்படம் நல்ல வரவேற்பை விமர்சனரீதியில் பெற்றுக்கொண்டாலும், வசூலில் சராசரியாகவே அமைந்தது. மார்கழி மாதம் வெளியாகிய பிரபு சாலமன் இயக்கிய 'கும்கி' திரைப்படம் விமர்சனரீதியிலும், வசூலிலும் நல்ல நிலையில் உள்ளது. சீனு ராமசாமியின் இயக்கத்தில் வெளிவந்த 'நீர்ப்பறவை' திரைப்படம் சிறந்த விமர்சனத்தையும் சுமாரான வசூலையும் பெற்றுக்கொண்ட திரைப்படமாக அமைந்தது. வசந்தபாலன் இயக்கிய 'அரவான்' திரைப்படம் விமர்சகர்களிடம் கலவையான விமர்சனத்தை பெற்றாலும் வசூலில் மோசமாக அமைந்தது. கனாக்கண்டேன், அயன், கோ, என தொடர்ந்து வெற்றித் திரைப்படங்களை கொடுத்துவந்த கே.வி.ஆனந்த் 'மாற்றான்' திரைப்படத்தில் திரைக்கதை அமைப்பதில் முதற் தடவையாக கோட்டை விட்டிருந்தார்; அதுவே திரைப்படத்தின் தோல்விக்கு காரணமாயிற்று. மதராசப்பட்டினம், தெய்வதிருமகள் திரைப்படங்கள் பெற்றுக்கொடுத்த பெயரை இயக்குனர் ஏ.எல்.விஜய் அவர்கள் 2012 இல் 'தாண்டவம்' திரைப்படத்தின் மூலம் தொலைத்திருக்கின்றார்.

* எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் தெலுங்கிலும், தமிழிலும் ஒரே நேரத்தில் வெளியாகிய 'நான் ஈ' திரைப்படம் இந்த ஆண்டு தயாரிப்புச் செலவின் சதவிகிதத்தில் அதிகளவு லாபம் கொடுத்த திரைப்படங்கள் வரிசையில் முதலிடத்தில் உள்ளது. 'ஈ'யை கதையின் முக்கிய பாத்திரமாகக் கொண்டு ராஜமௌலி அசத்திய திரைக்கதை மக்கள் மத்தியில் மிகப்பெரும் வரவேற்பைப் பெற்றது. அண்மைக்காலங்களில் 'சிவா மனசில சக்தி', 'பாஸ் என்கின்ற பாஸ்கரன்' திரைப்படங்கள் மூலம் சந்தானம் துணை கொண்டு ரசிகர்களை கவர்ந்த இயக்குனர் எம்.ராஜேஷ் இம்முறை ஜெயித்திருப்பது 'ஒரு கல் ஒரு கண்ணாடி' திரைப்படத்தில். உதயநிதி ஸ்டாலினை பெயருக்கு நாயகனாகவும், சந்தானத்தை நிஜ நாயகனாகவும் முன்னிறுத்தி ராஜேஷ் 'ஒரு கல் ஒரு கண்ணாடி'யை மிகப்பெரும் வெற்றித் திரைப்படமாக கொடுத்திருகின்றார். மற்றும் கமர்சியல் சினிமாவின் முன்னணி இயக்குனர்களான சுந்தர்.சியின் 'கலகலப்பு' லாபத்தையும், லிங்குசாமியின் 'வேட்டை' முதலுக்கு மோசமில்லாமலும் அமைந்தன.

* மிஸ்கின் இந்த ஆண்டு சொதப்பிய இயக்குனர்களில் முக்கியமானவர்; இவர் இயக்கிய 'முகமூடி' திரைப்படம் மிகப்பெரும் தோல்வியடைந்தது. 'பசங்க' புகழ் பாண்டியராஜ்சின் 'மெரினா'வும், எழிலின் 'மனம்கொத்திப் பறவை'யும் சிவகார்த்திகேயனால் தப்பிப் பிழைத்தன. பிரகாஸ்ராஜ் 'டோனி'யில் இயக்குனராக சிறப்பாக செயற்பட்டிருந்தாலும் எதிர்பார்த்த அளவுக்கு லாபம் கிடைக்கவில்லை. 'பில்லா II' வை இயக்கிய 'உன்னைப்போல் ஒருவன்' புகழ் சாக்ரி டொலிட்டி மிகப்பெரும் எதிர்பார்ப்பை பொய்யாக்கிய இயக்குனர் என்கின்ற பெயரை பெற்றிருக்கின்றார். தங்கர்பச்சானின் 'அம்மாவின் கைபேசி' திரைப்படம் தங்கருக்கு இம்முறையும் கைகொடுக்கவில்லை.

இசையமைப்பாளர்கள்


*'நீதானே என் பொன்வசந்தம்' பாடல்கள் நீண்ட நாட்களின் பின்னர் இளையராஜாவின் இசைக்கு மிகுந்த வரவேற்பைப் பெற்றுக்கொடுத்தன. தவிர 'டோனி' திரைப்படத்திலும் இளையராஜாவின் இசை சிறப்பான பங்களிப்பைக் கொடுத்திருந்தது.

* A.R.ரஹுமான் இசையில் எந்த திரைப்படங்களும் இவ்வாண்டு வெளிவரவில்லை; ஆனாலும் ரஹுமான் இசையில் வெளிவந்துள்ள 'கடல்' திரைப்படப் பாடல்கள் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளன.

* இந்தாண்டின் இசையமைப்பாளர்களில் அதிகம் பிரகாசித்தவர் ஹாரிஸ் ஜெயராஜ்; நண்பன், ஒரு கல் ஒரு கண்ணாடி, மாற்றான், துப்பாக்கி என ஹாரிஸ் இசையமைத்த நான்கு திரைப்படங்களிலும் பாடல்கள் அனைத்தும் மிகுந்த வரவேற்பைப் பெற்றுக்கொண்டது. 'நண்பன்' அஸ்கு லஸ்கா பாடல் பட்டிதொட்டி எங்கும் பிரபலமான மெலடியாக 2012 இல் அறியப்பெற்றது. அதேபோல் 'ஒரு கல் ஒரு கண்ணாடி'யில் வேணாம் மச்சான் பாடலும் மிகுந்த வரவேற்பைப் பெற்ற பாடலாக அமைந்தது.

* யுவனை பொறுத்தவரை பில்லா II, வேட்டை, கழகு ஆகிய மூன்று திரைப்படங்கள் 2012 இல் வெளிவந்தன; அந்த திரைப்படங்களுக்கு தேவையான இசையை வழங்கியிருந்தாலும் யுவனுக்கு சிறப்பான அல்பம் என்று சொல்லும்படி 2012 இல் எவையும் அமையவில்லை. ஆனாலும் தற்போது வெளியாகியிருக்கும் ஆதிபகவன், ஆதலால் காதல் செய்வீர், மூன்று பேர் மூன்று காதல், சமர் போன்ற திரைப்படங்கள் 2013 இல் யுவனுக்கு நல்ல பெயரை பெற்றுக்கொடுக்கும் என்று நம்பலாம்.

* 2011 இல் கலக்கிய ஜீ.வி.பிரகாஸ்குமார் 2012 இலும் சிறப்பான ஆல்பங்களை கொடுத்திருக்கின்றார். 'முப்பொழுதும் உன் கற்பனைகள்' திரைப்பட பாடல்கள் மிகுந்த வரவேற்பைப் பெற்ற அதே நேரம்; 'தாண்டவம்', 'சகுனி' திரைப்படங்களின் பாடல்களும் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தன. இறுதியாக வெளியாகியிருக்கும் 'பரதேசி' திரைப்படப் பாடல்கள் 2013 இல் கலக்கும் என்று நம்பலாம்.

* 'மைனா'வில் கிறங்கடித்த டி.இமான் இம்முறை 'கும்கி'யில் அசத்தியிருக்கிறார், பாடல்களும் பின்னணி இசையும் மிகச்சிறப்பாக அமைந்துள்ளது. இமானின் 'மனம்கொத்தி பறவை' திரைப்படப் பாடல்கள் 2012 இல் பட்டிதொட்டி எல்லாம் பட்டையை கிளப்பிய பாடல்களில் முதன்மையானவை. விஜய் ஆண்டனி இசையமைத்த 'நான்' திரைப்படப் பாடல்கள் மற்றும் பின்னணி இசை நன்கு பேசப்பட்டது. அறிமுக இசையமைப்பாளரான அனிருத் ரவிச்சந்திரனுக்கு '3' திரைப்படம் மிகப்பெரும் வரவேற்பைப் பெற்றுக் கொடுத்துள்ளது; தற்போது வெளியாகியிருக்கும் அனிருத்தின் 'எதிர்நீச்சல்' திரைப்படப் பாடல்கள் நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில் 2013 இல் ஒரு கலக்கு கலக்கும் என்று நம்பலாம்.

* 'யுத்தம் செய்' புகழ் கே(K) இசையமைத்த முகமூடி திரைப்பட பாடல்களும் இந்தாண்டு நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தன. 'தென்மேற்கு பருவக்காற்று' புகழ் என்.ஆர்.ரகுனந்தனின் சுந்தரபாண்டியன், நீர்ப்பறவை திரைப்படங்கள் பெரியளவு வரவேற்பை பெறவில்லை. தேவி ஸ்ரீ பிரசாத்தின் இசையில் 2012 இல் தமிழ் திரைப்படங்கள் எவையும் வெளிவரவில்லை.

2012 இன் கௌரவம்


சிறந்த நடிகர்- விஜய் (நண்பன்)
சிறப்பு பரிசு - தனுஷ் (3)

சிறந்த நடிகை - சமந்தா (நீதானே என் பொன் வசந்தம்)
சிறப்பு பரிசு - ஸ்ரீதேவி (இங்கிலிஷ் விங்கிலிஷ்)

சிறந்த இயக்குனர் - பாலாஜி சக்திவேல் (வழக்கு எண் 18/9)
சிறப்பு பரிசு - பாலாஜி தரனீதரன் (நடுவில கொஞ்சம் பக்கத்தை காணம்)

சிறந்த திரைப்படம் - வழக்கு எண் 18/9 (திருப்பதி பிறதேர்ஸ்)
சிறப்பு பரிசு - நீர்ப்பறவை (ரெட் ஜெயிண்ட் மூவீஸ்)

சிறந்த தயாரிப்பாளர் - திருப்பதி பிரதேஸ் (கும்கி)
சிறப்பு பரிசு - டூயட் மூவிஸ் (டோனி)

சிறந்த இசையமைப்பாளர் - டி.இமான் (கும்கி)
சிறப்பு பரிசு - அனிருத் ரவிச்சந்திரன் (3)

சிறந்த ஒளிப்பதிவாளர் - சுகுமார் (கும்கி)
சிறப்பு பரிசு - மனோஜ் பரமஹம்சா (நண்பன்)

சிறந்த பட தொகுப்பு - கோட்டகிரி வெங்கடேஸ்வர ராவோ (நான் ஈ)
சிறப்பு பரிசு - ஆர்.கோவிந்தராஜ் (நடுவில கொஞ்சம் பக்கத்தை காணம்)

சிறந்த திரைக்கதை - எஸ்.எஸ்.ராஜமௌலி (நான் ஈ)
சிறப்பு பரிசு - ஏ.ஆர்.முருகதாஸ் (துப்பாக்கி)

சிறந்த வசன கர்த்தா - பிரகாஸ்ராஜ் (டோனி)
சிறப்பு பரிசு - எம்.ராஜேஷ் (ஒருகல் ஒரு கண்ணாடி)

சிறந்த பாடலாசிரியர் - தாமரை (கண்கள் நீயே, முப்பொழுதும் உன் கற்பனைகள்)
சிறப்பு பரிசு - தனுஷ் (போ நீ போ,3)

சிறந்த நகைச்சுவை நடிகர் - சந்தானம் (ஒரு கல் ஒரு கண்ணாடி)
சிறப்பு பரிசு - சூரி (சுந்தரபாண்டியன்)

சிறந்த வில்லன் நடிகர் - சுதீப் (நான் ஈ)
சிறப்பு பரிசு - விட்ஜட் ஜம்வல் (துப்பாக்கி)

சிறந்த குணச்சித்திர நடிகர் - சத்யன் (நண்பன்)
சிறப்பு பரிசு - ராதிகா அப்டே (டோனி)

சிறந்த சண்டை பயிற்சியாளர் - அனல் அரசு (துப்பாக்கி)
சிறப்பு பரிசு - ஸ்டீபன் ரிச்டர் (பில்லா II)

சிறந்த பாடகர் - மோகித் சௌகான் (போ நீ போ, 3)
சிறப்பு பரிசு - விஜய் பிரகாஷ் (அஸ்கு லஸ்கா, நண்பன்)

சிறந்த பாடகி- சித்தாரா (கண்கள் நீயே, முப்பொழுதும் உன் கற்பனைகள்)
சிறப்பு பரிசு- சுனித்தி சௌகான் (முதல்முறை பார்த்த ஞாபகம், நீதானே என் பொன் வசந்தம்)

Saturday, January 12, 2013

ஒருநாள் போட்டிகளின் பிதாமகன் சச்சின்...


இரு வாரங்களுக்கு முன்னர் ஒரு பத்திரிகைக்கு எழுதியது!!!


கிரிக்கட் என்கின்ற சொல்லையும் சச்சின் டெண்டுல்கர் என்கின்ற பெயரையும் பிரித்துப் பார்க்க முடியாது. மேலோட்டமாகவேனும் கிரிக்கெட்டை அறிந்திருக்கும் ஒருவருக்கு சச்சினை தெரியாதிருக்கும் வாய்ப்பு 0% தான்!! அந்தளவிற்கு சச்சினது பெயர் கிரிக்கட் உலகில் அனைவருக்கும் மிகவும் பரிச்சியமான ஒன்று!! மூன்று தலைமுறை கடந்து சச்சினை ரசிக்கின்றார்கள், மூன்று தலைமுறை பந்து வீச்சாளர்களை சச்சின் அடித்து நொருக்கியிருக்கின்றார், சச்சினுடன் ஒன்றாக ஆடியவர்களது பிள்ளைகள் சச்சினுடன் சேர்ந்து ஆடியிருக்கின்றார்கள், சச்சினுடன் ஆடியவர்களில் பலர் இன்று வர்ணனையாளர்கள், சச்சினுக்கு எதிராக ஆடியவர்கள் சச்சின் இருக்கும் அணிக்கு பயிற்சியாளர்கள், சச்சினுடன் ஆடிய வீரர்கள் இன்று சச்சினுக்கு நடுவர்களாக தீர்ப்பளிக்கின்றார்கள். எந்த நாட்டு ரசிகராக இருந்தாலும், தமது நாட்டு அணிக்கு எதிராக ஆடுகின்றார் என்கின்றபோதும் சச்சினது அழகான ஷாட்களுக்கு தம்மை மறந்து கைதட்டி ரசிக்கின்றார்கள். வெறும் 5 அடி 5 அங்குலம் உயரமுடைய சச்சின் மிகவும் உயரமான ஆஜானுபாகு தோற்றமுள்ள பந்துவீச்சாளர்களுக்கு தண்ணிகாட்டும் துடுப்பாட்ட கலையை வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது.

1989 களின் இறுதியில் பாகிஸ்தானுக்கு எதிராக தனது முதல் ஒருநாள் போட்டியை விளையாடிய சச்சின், 23 ஆண்டுகளுக்கு பின்னர் தற்போதுதான் (2012 இறுதியில்) தனது ஒருநாள் போட்டிகளின் நீண்ட பயணத்திற்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். ஆம், அவர் இறுதியாக ஆடியதும் ஆசிய கிண்ணத்தில் பாகிஸ்தானுக்கு எதிராகத்தான். 23 ஆண்டுகள் சர்வதேசப்போட்டிகளில் தொடர்ச்சியாக ஆடுவதென்பது சாதாரண விடயமல்ல! உபாதைகள், மோசமான ஓட்டக்குவிப்பு நிலை, கிரிக்கட்டில் அரசியல் என பல தடைக்கற்களில் சிக்காமல் இருந்தால் மாத்திரமே இது சாத்தியம், இந்த மூன்றும் சச்சினை அவ்வப்போது நெருங்கியிருப்பினும் சச்சின் அவற்றிலிருந்து மீண்டுவந்து தனது ஓட்டக்குவிப்பை அதிகப்படுத்தினாரேயன்றி தளர்ந்துவிடவில்லை. 40 வயது நெருங்கும் நிலையிலும் சச்சினது ஓய்வு பலருக்கும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றுதான், ஆனாலும் என்றோ ஒருநாள் இதை செய்துதானே ஆகவேண்டும்!! அண்மைக் காலங்களாக ஒருநாள் போட்டிகளில் சச்சினுக்கு தொடர்ச்சியான சந்தர்ப்பங்கள் வழங்கப்படவில்லை; உலகக்கிண்ண இறுதிப்போட்டிக்குப் பின்னர் கடந்த 20 மாதங்களில் சச்சின் வெறும் 10 போட்டிகளில் மாத்திரமே ஆடியுள்ளார். முதுமையும், ஓட்டக்குவிப்பின்மையால் வந்த விமர்சனங்களும்தான் அழுத்தமாக மாறி சச்சினை ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வுபெறத் தூண்டியிருப்பினும், அவர் ஓய்வுபெற்ற இத்தருணம் சரியான நேரம்தான்!!

சச்சினது முதல் இரண்டு ஒருநாள் போட்டிகளில் அவர் பெற்ற ஓட்டங்களின் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா? பூச்சியம். முதல் போட்டியே சச்சினுக்கு வித்தியாசமான போட்டிதான், பாகிஸ்தானுக்கு எதிராக பாகிஸ்தானில் நடைபெற்ற 16 ஓவர்களைக் கொண்ட (மழை காரணமாக) போட்டிதான் சச்சினின் முதலாவது ஒருநாள் போட்டி; சுவாரசியம் என்னவென்றால் சச்சினுக்கு அப்போது வயதும் 16 தான். இந்தப்போட்டியில் உலகின் முன்னணி பந்துவீச்சாளர்களில் ஒருவரான வக்கார் யூனிஸின் பந்துவீச்சில் சச்சின் ஆட்டமிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது. சில மாதங்களின் பின்னர் மீண்டும் அவர் ஆடிய நியூசிலாந்துக்கு எதிரான போட்டியிலும் ஓட்டங்கள் எதனையும் அவரால் குவிக்க முடியவில்லை. அதன் பின்னர் சில போட்டிகளில் சச்சின் ஆடியிருப்பினும் சொல்லிக்கொள்ளும்படியான ஓட்டக்குவிப்புக்கள் எவையும் இடம்பெறவில்லை. ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் அதிகூடிய அரைச்சதங்களாக 96 அரைச்சதங்களை குவித்துள்ள சச்சின் தனது ஒன்பதாவது போட்டியில்தான் தனது கன்னி அரைச்சதத்தை இலங்கைக்கு எதிராக பெற்றுக்கொண்டார். அந்தப் போட்டியில் 5 ஆம் இலக்கத்தில் களமிறங்கி 41 பந்துகளில் 53 ஓட்டங்களை பெற்று இந்தியாவின் வெற்றியை உறுதிசெய்த சச்சின், பந்துவீச்சிலும் இரண்டு விக்கட்டுகளை கைப்பற்றியிருந்ததால் ஆட்டநாயகனாகவும் தெரிவுசெய்யப்பட்டார்; ஒருநாள் போட்டிகளில் ஆகக்கூடியதாக 62 ஆட்டநாயகன் விருதுகளை தனது பெயரில் கொண்டுள்ள சச்சினின் முதல் ஒருநாள் போட்டிக்கான ஆட்டநாயகன் விருது இதுதான்.


சாதனை எண்ணிக்கையான 463 ஒருநாள் போட்டிகளில் விளையாடி, ஒருநாள் போட்டிகளின் அதிகபட்சமான யாரும் இலகுவில் எட்டமுடியாத 49 சதங்களை தன்னகத்தே கொண்டிருக்கும் சச்சின் தனது கன்னிச் சதத்தை தனது 79 ஆவது போட்டியில்தான் பெற்றுக்கொண்டார். 1994 ஆம் ஆண்டு இலங்கையில் இடம்பெற்ற 'சிங்கர் வேர்ல்ட் சீரிஸ்' தொடரில் அவுஸ்திரேலியாவுக்கு எதிராக ஆரம்ப துடுப்பாட்ட வீரராக களமிறங்கி 130 பந்துகளை எதிர்கொண்டு சச்சின் குவித்த 110 ஓட்டங்கள் அந்தப்போட்டியில் இந்தியாவிற்கு வெற்றியையும், சச்சினுக்கு ஆட்டநாயகன் விருதையும் பெற்றுக்கொடுத்தது. ஆரம்ப துடுப்பாட்ட வீரராக களமிறங்கி ஒரு வீரர் பெற்றுக்கொண்ட அதிக ஓட்டங்கள் என்னும் சாதனையாக 15310 ஓட்டங்களை குவித்துள்ள சச்சின்; முதன்முதலாக ஆரம்பத் துடுப்பாட்டவீரராக களமிறங்கிய போட்டி நியூசிலாந்துக்கு எதிராக நியூசிலாந்தின் அக்லண்ட் மைதானத்தில் இடம்பெற்ற போட்டிதான். 142 என்னும் இலகுவான ஓட்ட எண்ணிக்கையை எட்டிப்பிடிக்க வேண்டிய இந்தியா சச்சினை முதன் முதலாக ஆரம்ப துடுப்பாட்ட வீரராக களமிறக்கியது; காரணம், இந்தியாவின் ஆரம்ப துடுப்பாட்ட வீரரான நவ்ஜொட் சிங் சித்துவிற்கு ஏற்பட்ட உபாதை. கிடைத்த சந்தர்ப்பத்தை கெட்டியாக பிடித்துக்கொண்ட சச்சின்; யாரும் எதிர்பாராதவகையில் அதிரடியாக ஆடி 15 பவுண்டரிகள் 2 சிக்ஸர்கள் என வெறும் 49 பந்துகளில் 82 ஓட்டங்களை விளாசினார், கூடவே ஆட்டநாயகன் விருதையும் தட்டிக்கொண்டார். அன்றிலிருந்து சச்சின் இந்திய அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரராக மாபெரும் பங்களிப்பை இறுதிவரை கொடுத்துவந்துள்ளார்!!

ஒருநாள் போட்டிகளில் சச்சின் 49 சதங்களை பெற்றிருந்தாலும் 1998 ஆம் ஆண்டு அவுஸ்திரேலியா அணிக்கு எதிராக ஷார்ஜா மைதானத்தில் இறுதிப் போட்டியொன்றில் பெற்றுக்கொண்ட சதம்; சச்சினின் மிகச்சிறந்த சதங்களிலில் ஒன்றாக இன்றும் கருதப்படுகின்றது. அன்றைய காலப்பகுதியில் 272 என்னும் மிகப்பெரிய இலக்கை ஷார்ஜா மைதானத்தில் இரவுநேரம் இரண்டாவதாக துடுப்பெடுத்தாடி பெற்றுக்கொள்வதென்பது இலகுவான காரியமன்று!! பலம் பொருந்திய அவுஸ்திரேலிய பந்துவீச்சை அடித்து நொருக்கி சச்சின் பெற்றுக்கொண்ட அந்த 134 ஓட்டங்கள் இந்தியாவிற்கு கிண்ணத்தையும் சச்சினுக்கு ஆட்டநாயகன் விருதையும் பெற்றுக்கொடுத்தது. சச்சின் சதம் பெற்ற மற்றுமொரு முக்கிய போட்டி 1999 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற உலகக்கிண்ணப் போட்டித் தொடரில் கென்யாவுக்கு எதிராக பெறப்பட்டது; தனது தந்தையின் பிரிவின் மணித்துளிகள் கடக்கும் முன்னர், மனதின் பாரத்தை இறக்கிவைக்கும் அளவுக்கு கால அவகாசம் போதாத நிலையில்; சச்சின் 114 பந்துகளில் பெற்றுக்கொண்ட 140 ஓட்டங்கள் மிகவும் உணர்ச்சி பூர்வமானது. இப்படி சச்சின் பெற்ற சதங்களில் பல சதங்கள் சிறப்பு வாய்ந்தவை எனினும்; 2003 ஆம் ஆண்டு உலகக்கிண்ண போட்டிகளில் 273 என்னும் கடினமான இலக்கை பலமான பாகிஸ்தான் பந்து வீச்சை எதிர்கொண்டு, வெறும் 75 பந்துகளில் சச்சின் பெற்ற 98 ஓட்டங்கள் சச்சினின் மிகவும் முக்கியமான இனிங்ஸ்களில் ஒன்றாக கணிக்கப்படுகின்றது. பரம எதிரி நாடான பாகிஸ்தானுக்கு எதிராக வேகப் பந்துவீச்சாளர்களுக்குச் சாதகமான மைதானத்தில் பலமான பாகிஸ்தான் வேகங்களை சச்சின் அடித்து நொறுக்கிய இனிங்ஸது. அதேபோன்று மற்றுமொரு முக்கியமான இனிங்க்ஸ்; தென்னாபிரிக்காவுக்கு எதிராக 2010 ஆம் ஆண்டு குவாலியோர் மைதானத்தில் சச்சின் பெற்றுக்கொண்ட 200* ஓட்டங்கள்தான், ஒருநாள் போட்டிகளின் முதல் இரட்டை சதம் இதுதான்.

சச்சினை ஒரு துடுப்பாட்ட வீரராக மட்டுமே சாதனைகள் முன்னிறுத்தினாலும் பந்துவீச்சிலும் சச்சின் மறக்க முடியாத சில சம்பவங்களை கிரிக்கட் வரலாற்றில் நிகழ்த்தியுள்ளார். 1991 ஆம் ஆண்டு மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக அவுஸ்திரேலியாவின் பேத் மைதானத்தில் இடம்பெற்ற போட்டியில்; 6 ஓட்டங்களுக்குள் மேற்கிந்திய தீவுகள் அணியை கட்டுப்படுத்தவேண்டிய நிலையில் அன்றைய அணித்தலைவரான அசாருதீன் தனது முக்கிய பந்துவீச்சாளர்கள் நான்கு பேரினதும் 40 ஓவர்களும் நிறைவடைந்த நிலையில் வேறு வழியின்றி சச்சினை பந்து வீச அழைத்தார். ஒரு விக்கட் மீதமிருக்க இறுதி ஓவரில் 6 ஓட்டங்களுக்காக ஆடிய மேற்கிந்திய அணி முதல் 5 பந்துகளிலும் 5 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. போட்டி சமநிலையில் இருக்கும்போது அந்த ஓவரில் இறுதிப்பந்தை வீசிய சச்சின்; 24 ஓட்டங்களைப் பெற்று சிறப்பாக ஆடிக்கொண்டிருந்த கமின்ஸை சிலிப் திசையில் நின்றுகொண்டிருந்த அசாருதீனிடம் பிடி கொடுத்து ஆட்டமிழக்கச் செய்தார், போட்டி சமநிலையில் முடிவடைந்தது. அதேபோல் 1993 ஆம் ஆண்டு 'ஹீரோ கப்' அரையிறுதியில் தென்னாபிரிக்காவுடனான போட்டியில் இறுதி ஓவரில் தென்னாபிரிக்காவிற்கு 6 ஓட்டங்கள் தேவைப்பட்டது. அனுபவம் மிக்க கபில்தேவ், ஸ்ரீநாத், பிரபாகர் ஓவர்கள் மீதமிருக்க இம்முறை சச்சின் மீது நம்பிக்கை வைத்து பந்துவீச அழைத்தார் அசாருதீன். இறுதி ஓவரில் வெறும் 3 ஓட்டங்களை மட்டும் விட்டுக்கொடுத்து 2 ஓட்டங்களால் போட்டியை வெற்றி கொண்டதுடன், இந்தியாவை இறுதிப்போட்டிக்கும் அழைத்துச்சென்றார் சச்சின். இவற்றைவிட 1998 ஆம் ஆண்டு அவுஸ்திரேலியாவுடனும், 2005 ஆம் ஆண்டு பாகிஸ்தானுடனும் 5 இலக்குகளை சாய்த்து போட்டியை இந்தியாவின் கைகளுக்கு வெற்றிக்கனியாக மாற்றியிருக்கின்றார், இந்த இரு போட்டிகளும் இடம்பெற்றது கொச்சி மைதானத்தில் என்பது விசேட அம்சம்.


18426 ஓட்டங்களை உலகசாதனையாக தனது பெயரில் சச்சின் கொண்டிருந்தாலும் அதில் 4 ஓட்டங்கள் மிகவும் சிறப்பு வாய்ந்தவை. ஒரு போட்டியில் அவுஸ்திரேலியாவின் கிளேன் மக்ராத் தான் வீசிய பந்தை கையில் எடுத்து மீண்டும் சச்சினை நோக்கி விட்டெறிந்தார், தன்னை நோக்கிவந்த பந்தை பாதுகாப்பிற்காக தனது மட்டையால் சுழற்றி அடித்தார் சச்சின், அந்த பந்து எல்லைக்கோட்டை கடக்கவே அன்றைய விதிமுறைகளின்படி சச்சினுக்கு 4 ஓட்டங்கள் வழங்கப்பட்டது. 1998 ஆம் ஆண்டு மிகச்சிறந்த இனிங்ஸ் ஒன்று சச்சினால் ஆடப்பட்டபோதும் அந்த இன்னிங்க்ஸ் சர்வதேசப் போட்டிகளில் சேர்க்கபடாததால் எல்லோராலும் கவனிக்கப்படவில்லை. 18 ஆடி 1998 இல் இங்கிலாந்தின் புகழ்பெற்ற லோட்ஸ் மைதானத்தில் MCC அணிக்கும் உலக பதினொருவர் அணிக்கும் இடையில் இடம்பெற்ற போட்டியில் உலக பதினொருவர் அணிக்காக ஆடிய சச்சின் 262 என்னும் இலக்கை எட்டுவதற்கு 4 சிக்சர்கள் 15 பவுண்டரிகள் அடங்கலாக 114 பந்துகளில் 125 ஓட்டங்களை குவித்து தனது பங்களிப்பை கொடுத்திருந்தார். உலகின் முன்னணி பந்துவீச்சாளர்களான மக்ராத், டொனால்ட், ஸ்ரீநாத், கும்ளே அனைவரையும் சச்சின் ஒருகை பார்த்த ஆட்டமது. அன்று சச்சினும் அரவிந்த டீ சில்வாவும் (அரவிந்தா 82 ஓட்டங்கள்) 177 ஓட்டங்களை தங்களுக்குள் இணைப்பாட்டமாக பெற்றமை கிரிக்கட் ரசிகர்களுக்கு மிகப்பெரும் காணற்கரிய விருந்தாக அமைந்தது, சச்சினின் சிறந்த இனிங்கஸ்களில் ஒன்றாக இதையும் சொல்வார்கள்.

சச்சின் 23 வருடங்களாக கிரிக்கட் பயணத்தை வெற்றிகரமாக பயணித்ததில் அழுத்தங்களை அதிகம் எதிர்கொண்டவர்கள் என்னவோ எதிரணி தலைவர்களும் பந்துவீச்சாளர்களும்தான். சச்சினுக்கு வியூகங்கள் அமைப்பதிலும், எப்படி பந்துவீசி ஆட்டமிழக்க செய்வது என்பதிலும் எதிரணியினரின் கவனம் அதிகமாக இருந்தும் அவர்களால் சச்சினை பெரும்பாலும் கட்டுப்படுத்த முடிவதில்லை; சச்சின் அளவுக்கு உலகின் முன்னணி பந்துவீச்சாளர்கள் பலரையும் எதிர்கொண்டு ஓட்டங்களை வஞ்சனையில்லாமல் குவித்த வீரர்களை எங்கும் காணவியலாது; எந்த நாட்டுக்கு எதிராகவோ, எந்த நாட்டில் இடம்பெற்ற போட்டியாயினும் சச்சினின் ஆதிக்கம் பந்துவீச்சாளர்களுக்கு தலையிடிதான்!! சர்வதேச அரங்கில் அதிக விக்கட்டுகளை வீழ்த்திய முதல் 60 பந்துவீச்சாளர்களில் இந்திய பந்துவீச்சாளர்கள் தவிர்த்து மிகுதி அனைவருக்கும் எதிராக சச்சின் ஆடியிருக்கின்றார்; அதிலும் பெரும்பாலானவர்களுக்கு சச்சினின் துடுப்பு தலையிடியை கொடுத்திருகின்றமை வரலாறு. சச்சினுக்கு பந்துவீசிய ஓய்வுபெற்ற முன்னாள் பந்துவீச்சாளர்களில் சிலர்; பயிற்சியாளர்களாக இளம் பந்துவீச்சாளர்களை பயிற்றுவித்து சச்சினுக்கு எதிராக பந்துவீச உதவி செய்தபோதும் சச்சினின் துடுப்பின் பதில் ஓட்டக்குவிப்புத்தான்!! இப்படியாக ஒருநாள் போட்டிகளின்மீது தனது ஆதிக்கத்தை செலுத்திவந்த சச்சினுக்கு கிடைத்த மகுடந்தான் 2011 ஆம் ஆண்டு உலகக்கிண்ணம் வென்ற அணியின் வீரர் என்கின்ற பெருமை. சச்சினுக்காகவேனும் இந்தியா நிச்சயம் உலககிண்ணம் வெல்ல வேண்டும் என்று கூறிவந்த கிரிக்கட் ரசிகர்களின் கனவை மகேந்திர சிங் டோனி தலைமையிலான இந்திய அணி மெய்ப்பித்து சச்சினுக்கு கௌரவம் சேர்த்தது.

சச்சின் சதமடிக்கும் போட்டிகள் தோல்வியில் முடிவடையும் என்பதும், சச்சின் போட்டிகளை இறுதிவரை கொண்டுசென்று முடிப்பதில்லை என்பதும் சச்சின் மீது சொல்லப்படுகின்ற முக்கிய குற்றச்சாட்டுகள். சச்சின் சதமடித்த 49 போட்டிகளில் 33 போட்டிகள் இந்தியாவால் வெற்றி கொள்ளப்பட்டவை; இந்த 33 என்னும் எண்ணிக்கையில் இதுவரை வேறெந்த வீரரும் மொத்தமாகவேனும் சதங்களை எட்டவேயில்லை. வெற்றிபெற்ற போட்டிகளில் அதிக ஓட்டங்களை குவித்தவர்கள் பட்டியலிலும் சச்சின்தான் முதலிடம்; 56.63 என்னும் சராசரியில் 11157 ஓட்டங்களை வெற்றி ஓட்டங்களாக குவித்த சச்சின் 62 தடவைகள் ஆட்டநாயகனாகத் தெரிவு செய்யப்பட்டிருக்கின்றார். சதமடித்த எந்தப்போட்டியிலும் சச்சின் தேவைக்கு குறைவான ஓட்ட வேகத்தில் சுயநலமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதில்லை; தேவைகேற்ப ஆக்ரோஷமான் ஆட்டத்தை வெளிப்படுத்தி சச்சின் சதமடிக்கும் போட்டிகளில் பந்துவீச்சாளர்களும், சக துடுப்பாட்ட வீரர்களும் சொதப்புமிடத்தில் சச்சின் எப்படி அந்த தோல்விகளுக்கு பொறுப்பாக முடியும்? மற்றும் ஒரு ஆரம்ப துடுப்பாட்ட வீரராக தனது பணியை சரியாக செய்யும் சச்சினை 50 ஓவர்களின் இறுதிவரை நின்று போட்டியை முடித்து கொடுக்கவேண்டும் என எதிர்பார்ப்பது எவ்வளவு முட்டாள்தனம்! பின்னர் எதற்கு மத்தியவரிசை வீரர்கள் அணியில் இருக்கின்றார்கள்? இந்தக் குற்றச்சாட்டுக்கள் சச்சின் மீது சொல்லப்படுவது அறியாமையிலும் இயலாமையிலும் தானன்றி வேறில்லை!!


சச்சின் டெண்டுல்கர் - இந்தப் பெயர் கிரிக்கட் என்னும் சொல் நிலைத்திருக்கும் காலமளவுக்கும் நிலைத்திருக்கும். இவரது ஒருநாள் போட்டிகளினது சாதனைகளை இன்னொருவர் தாண்டுவாரா என்பதற்கான பதில் மிகமிக சாத்தியக்குறைவு என்பதுதான். சச்சினை பிடிக்காதவர் இருக்கலாம், சச்சினை விமர்சிக்கலாம், ஆனால் சச்சினை எவராலும் புறக்கணித்து கிரிக்கட்டை நேசிக்க முடியாது! இந்தியாவில் கிரிக்கட் ஒரு மதம், சச்சின் அதன் கடவுள் என்பார்கள்; உண்மைதான், ஒருநாள் போட்டிகளை பொறுத்தவரை துடுப்பாட்டத்தில் சச்சின் நிச்சயமாக பிதாமகன்தான் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. சச்சினின் டெஸ்ட் போட்டிகளின் ஒட்டக்குவிப்பு அண்மைக்காலங்களில் மந்தகதியில் இருப்பினும் சச்சினால் மீண்டு வரமுடியும் என சச்சினும் இந்திய கிரிக்கட் கட்டுப்பாட்டுசபையும் நம்புவதால் சச்சின் மேலும் சில காலம் டெஸ்ட் போட்டிகளில் ஆடுவார். டெஸ்ட் போட்டிகளில் சிறந்த ஓட்டக்குவிப்பு ஒன்றை நிகழ்த்தியவுடன் சச்சின் தனது ஓய்வை முழுமையாக அறிவிப்பார் என்று எதிர்பார்க்கலாம்; ஒருநாள் போட்டிகளில் சச்சின் ஓய்வை அறிவித்திருக்கும் இந்நேரத்தில் அவர் இறுதியாக ஆடிய இரண்டு ஒருநாள் போட்டிகளிலும் சதம் மற்றும் அரைச்சதம் குவித்திருக்கின்றமை குறிப்பிடத்தக்க விடயம். சச்சின் என்னும் ஜாம்பவான் வாழும் காலத்தில் அவர்கூட தாங்கள் விளையாடியதை பல வீரர்கள் பெரும் பாக்கியமாக கருதுகின்றார்கள்; அதேபோல ரசிகர்களாகிய நாம் கிரிக்கட்டை நேசித்து, ரசித்த காலத்தில் சச்சின் என்னும் மீபெரும் துடுப்பாட்ட வீரரை ரசித்தது எமக்கும் பெருமையான, மறக்க முடியாத, பசுமையான நினைவுகளாக எம்முடன் என்றென்றும் பயணிக்கும்......