Friday, April 27, 2012

கலைஞரே இத்தோட நிறுத்திக்கோங்க, பிளீஸ்!!ஆரம்ப காலங்களில் பதிவுகளில் கலைஞரை கேலி செய்தே அதிக பதிவுகள் எதுதினேன்; சில காலங்களின் பின்னர் அது வேண்டாமென்று தோன்றியதால்  நீண்ட  நாட்களாக கலைஞர் பற்றி எதுவும் எழுதவில்லை. ஒருவரை திட்டிக்கொண்டே இருப்பதால் என்ன வந்துவிடப் போகின்றது என்கின்ற எண்ணம்தான் அதற்கு காரணமன்றி  கலைஞர் மீதான எனது எண்ணங்களின் மாற்றமல்ல!!  பொதுவாக  இலங்கைத் தமிழர்களுக்கு கலைஞர்மீது வெறுப்பும், கோபமும் ஏற்ப்பட காரணம்; அவர் இறுதிநேர யுத்தத்தை நிறுத்தி அப்பாவி மக்களை காப்பாற்ற வழிசெய்யவில்லை என்பதுதான்!! ஆனால் எனக்கு கலைஞர் மீதான வெறுப்புக்கும், ஆத்திரத்திற்கும் அது காரணம் அன்று!!

ஏனெனில் கலைஞரின் கைகளில் அன்று களமுனை மக்களை  காப்பாற்றும் அளவிற்கு சக்தி இருக்கவில்லை என்பதை என்னால் புரிந்துகொள்ள முடிந்தது! கலைஞர் மத்தியில் ஆட்சியில் இருந்து விலகிவிடுவேன் என எச்சரித்து, விலகியிருந்தாலும் ஆளும் காங்கிரஸ் கூட்டணி;  தான் முன்வைத்த காலை பின்வாங்கும் நிலையில் இல்லை  என்பது வெட்டவெளிச்சமாக உணரக்கூடிய  உண்மை! அந்த விடயம் கலைஞருக்கும் தெரியும், ஜெயலலிதாவிற்கும் நன்கு தெரியும்!!  கலைஞர்  காங்கிரஸ் கூட்டணியில் இருந்து விலகாததை வைத்து கலைஞரை தமிழினத்  துரோகி போலவும், தன்னை ஈழத்து காவலாளி போலவும் பிரச்சாரம் செய்த ஜெயலலிதா ஒன்றும் ஈழத்துப் பிடிப்பில் அதை செய்யவில்லை என்பதும்,  அதுவொரு  பக்கா அரசியல் என்பதும்  சிந்திக்கத் தெரிந்தவர்க்கு தெரிந்த உண்மை!!

அந்தவகையில் எனக்கு கலைஞர் காங்கிரசை விட்டு விலகாததுகூட ஆச்சரியமோ, கோபமோ இல்லை; அவர் தனக்கெதிராக தமிழக எதிர்கட்சிகள் கொண்டு நடாத்தும் தமிழினத் துரோகி பட்டத்தை மறைக்க, தனக்கான இமேஜை நிலை நிறுத்த;  தமிழக 'பாமர'மக்களை முட்டாளாக்கத் திட்டமிட்டு  நடத்திய உண்ணாவிரத போராட்ட  நாடகம்தான் இத்தனைநாள்  மாறாத கலைஞர் மீதான கோபத்திற்கு காரணம். அவரது நாடகத்தின் இறுதியில் இலங்கையில் போர்நிறுத்தம் ஏற்ப்பட்டுவிட்டதாக  சொல்லிய பொய்களை இப்போது நினைத்தாலும் மனம் குமுறுகின்றது!!! 'யுத்த நிறுத்தம்'  நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளது என இந்திய செய்திகளில் (தமிழக மற்றும் இந்திய ஆங்கில தொலைக்காட்சிகளில்) அறிவித்த கணம்  கிட்டத்தட்ட ஒட்டுமொத்த இலங்கை தமிழர்களுமே மிகுந்த பூரிப்பும் மகிழ்ச்சியும் அடைந்த தருணம் என்று சொல்லலாம்!!!


பசுமரத்து ஆணிபோல அந்த நாட்கள் இன்னமும் என்நினைவில்; கொழும்பில் ஒரு Food City யில் வேலை பார்த்துக்கொண்டிருந்த எனக்கு அம்மாவின் தொலைபேசி செய்தி மிகுந்த மகிழ்ச்சியை கொடுத்தது; "கலைஞர் எங்களுக்காக உண்ணாவிரதம் இருக்கின்றார்" என்பதுதான் அந்த செய்தி. அடுத்த கணமே கொழும்பு, யாழ்ப்பாணம் என தமிழர்கள் வாழும் அத்தனை இடங்களுக்கும் இந்த செய்தி மிகப்பெரும் மகிழ்ச்சியை கொடுத்தது. நான் மதியம்  சாப்பிட வீட்டிற்கு  வருவதற்குள் உண்ணாவிரதம் 'யுத்த நிறுத்தம்' என்னும் சாதகமான  தீர்வுடன் நிறைவடைந்திருந்தது; எல்லோருக்கும் எல்லையில்லா மகிழ்ச்சி; காரணம் கிட்டத்தட்ட ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் உறவினர்கள், நண்பர்கள், அயலவர்கள் என மிகவும் வேண்டியவர்கள் யுத்த பிரதேசத்தில் மாட்டிக்கொண்டு தத்தளித்த நேரமது!!! அதனால் அனைவருக்கும் தம் உறவுகள் மீண்டு தம் கைகளில் இணைந்ததாக ஒரு பூரிப்பு!

மறுநாளே கலைஞர் செய்தது உண்ணாவிரதம் அல்ல, அதுவொரு பக்கா அரசியல் நாடகம் என அறிந்தபோது ஒடுமொத்த நம்பிக்கைகளும் தூக்குவாரிப் போட்டன!!!  கலைஞர் எம்மை செருப்பால் அடித்ததைபோல உணர்ந்தோம்.  கலைஞர் என்னும் எழுத்தாளர், அரசியத்தலைவர் மீதிருந்த மரியாதை, ஈடுபாடு எல்லாம் அந்த நொடியிலேயே காற்றில் பறந்தது. அதன் பின்னர்கூட  மனதில் ஏதோ ஒரு மூலையில் கடைசி நேரங்களிலாவது கலைஞர் ஏதாவது செய்யமாட்டாரா என்கின்ற நம்பிக்கை இருந்துகொண்டே இருந்தது!.  40,000 பொதுமக்களின் உயிரைவிட தனது அரசியல் வாழ்க்கைதான் முக்கியம் என நினைத்த கலைஞரை எப்படி எமக்கு பிடிக்கும்!!!

அந்த தேர்தல் முடிவுகளின் பின்னர்  பிள்ளைகளின் அமைச்சர் பதவிகளுக்காக  டெல்லிவரை  பேச்சுவார்த்தைக்கு சென்ற கலைஞர் அன்று ஈழத்து மக்களுக்காக கடதாசியும், மின்னஞ்சலும் அனுப்பியதோடு நிறுத்தியிருந்தால்க்கூட எமக்கிந்த கோபமும் ஆத்திரமும் இருந்திருக்காது!! அவரது அந்த ஒருசிலமணிநேர உண்ணாவிரத நாடகம்தான் இலங்கை தமிழ் மக்களுக்கு  இரத்தம் உறையும் அளவிற்கு கோபத்தையும்,. ஆத்திரத்தையும் தூண்டியது!!!  இந்த ஏமாற்றமும், கோபமும், ஆத்திரமும் இறுதி மூச்சிருக்கும்வரை பல இலங்கை தமிழருக்கு தீராத வடுக்கள்!! எதிரியைகூட மன்னிக்கலாம் நம்பிக்கை துரோகியை????


இவை நடந்து மூன்று ஆண்டுகளுக்கு பின்னர் இப்போது மீண்டும் கலைஞருக்கு என்ன ஆச்சு? தேர்தல் காலம் கூட இல்லை, அப்படி இருந்தும் ஏன் இப்போதெல்லாம்  ஈழம், ஈழம் என்று புலம்ப ஆரம்பித்திருக்கின்றார் என்றுதான் புரியவில்லை!!  சனல் 4 இன்  'கொலைக்களம்' பார்த்து கண்ணீர் வடித்ததாக இவர் சொல்லியபோது; இவர் மீதிருந்த கோபமும், ஆத்திரமும் பன்மடங்கு  ரீசாஜ் செய்யப்பட்டது!!! இப்போதெல்லாம் இலங்கை தமிழர்கள்மீது பரிவு உண்டாகி தனி ஈழம் என்றெல்லாம் பேசுகின்றார்; இதை கேட்கும்போது ஆத்திரம் தவிர்த்து வேறெந்த உணர்வும் ஏற்படவில்லை!! இந்த லட்சணத்தில் இவரது விசிறிகள் இலங்கை தமிழர்கள் ஈழம் அமைவதற்கு கருணாநிதியை  கெட்டியாக பிடித்துக்கொள்ள வேண்டுமாம்!! இதை கேட்க்கும்போது நகைப்பை தவிர வேறெந்த உணர்வும் தோன்றவில்லை!!


அன்று ஈழத்து பெண்களை சிங்களம் கற்பழித்தது!!
இன்று ஈழத்து எச்சங்களை தமிழக அரசியல் கற்பழிக்கின்றது!! 

 

தமிழகமே !!!

உங்கள்  அரசியல் சுயலாபத்துக்கு எதற்கு எங்களது  குருதியையும் நின்மதியையும் சுரண்டுகிறீர்கள்! போதும், தயவு செய்து உங்களது  ஈழத்து மீதான காதலின் ஒப்பாரியை நிறுத்திவிடுங்கள்!!! இன்னும் எத்தனை நாளைக்குத்தான் ஈழத்து பெயர் சொல்லி வாக்கு பிச்சை கேட்க்கப்போகின்றீர்கள்!!  போதும்,  தயவு செய்து எங்களை விட்டுவிடுங்கள்!!! கருணாநிதியும், ஜெயலலிதாவும் அடித்த பல்ட்டிகள் போல் சர்க்கஸ் குரங்கு கூட இத்தனை தடவை குட்டிக்கரணம் போட்டிருக்குமா என்பது சந்தேகம்தான்!!  அத்தனை பல்ட்டிகளும் உங்களுக்கு  ஒட்டு, எங்களுக்கோ வேட்டு!!!  உண்மையில் யாராவது தமிழக தலைமைக்கு எம்மீது அக்கறை இருந்தால் தயவுசெய்து இனிமேலாவது எங்களை வைத்து அரசியல் செய்யாமல் விட்டுவிடுங்கள்!! நீங்கள் காட்டும் குறளி வித்தைகள் எம்மை இன்னமும் காயப்படுத்துகின்றது என்பதை தயவுசெய்து புரிந்துகொள்ளுங்கள்!!

* தமிழக மக்களை எந்த இடத்திலும் நான் குற்றம் சொல்லவில்லை, அவர்களால் அதிகபட்ச உணர்வுகள் வெளிக்காட்டப் பட்டிருக்கின்றன, வெளிக்காட்டப் பட்டுக்கொண்டும் இருக்கின்றன; அதற்க்கு பதிலான ஈடுபாட்டை  இலங்கைத் தமிழர்கள்  இதுவரை தமிழகத்தின் எந்த பிரச்சனைக்கும் வெளிக்காட்டியதில்லை, அந்தவகையில் இலங்கை தமிழனாய் நானும் குற்ற உணர்ச்சி உள்ளவன்தான்!! என் கோபம் அத்தனையும் எம்மை பலிக்கடா ஆக்கும் தமிழக அரசியால் சாக்கடைகள் மீதுதான் அன்றி மக்கள் மீதல்ல!!

*.......*

Thursday, April 26, 2012

இரவுநேரங்களில் வீடுகளில் தொலைக்காட்சியை ஆக்கிரமிக்கும் முக்கியமான நிகழ்ச்சிகள்.....ஐ.பி.எல் - ஆசியாவின் மிகப்பெரும்  செல்வந்த குழாமான BCCI ஆல் நடாத்தப்படும் மிகச்சிறந்த பொழுதுபோக்கு நிகழ்ச்சி, வருடத்தில் கிட்டத்தட்ட; 45 நாட்களுக்கு இரவு 8 மணி ஆனதும் கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரையும் போதை வஸ்திற்கு  அடிமை ஆகியவர்களைபோல டிவிக்கு முன்னால் உட்கார வைக்கும் அளவிற்கு வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் வருடாந்த திருவிழா!! சமூக ஆர்வலர்களாலும், கிரிக்கட் விரும்பிகளாலும் விமர்சிக்கப்பட்டாலும்; கிரிக்கட்டை; ஆழமாக ரசிப்பவர்கள் தொடக்கம், கிரிக்கட்டை மேலோட்டமாய் பார்ப்பவர்கள்வரை அனைவரையும் ஐ.பி.எல் ஈர்த்துள்ளது என்பதை மறுக்கமுடியாது!!! ஐ.பி.எல் ஆரோக்கியமானதா? இல்லையா? என்பதெல்லாம் விவாதத்திற்கு வேண்டுமானால் கருப்பொருளாக இருக்கலாம், ஆனால் நிதர்சனத்தில் அது வெறும் வெட்டிப் பேச்சுத்தான்!!! ஐ.பி.எல் பார்ப்பவர்களுக்கு வேண்டியது பொழுதுபோக்கு, அதனை ஐ.பி.எல் 100% திருப்தியாக கொடுக்கின்றது!!

சர்வதேசப் போட்டிகளில் வெவ்வேறு நாடுகள் சார்பாக  முட்டிக்கொண்ட வீரர்கள் நண்பர்களாக ஒருமித்தும்;  ஒன்றாக தாய் நாட்டிற்காக  ஆடிய  வீரர்கள் எதிரெதிர் அணிகளில் ஒருவரை ஒருவர் முட்டிக்கொள்வதும் சுவாரசியம்!!!  40 வயதிலும் கலக்கும் முதிய நட்சத்திரங்கள், முகம் தெரியாமல் அறிமுகமாகி ரசிகர்களை  கவரும் இளைய நட்சத்திரங்கள், சிக்சர் வானவேடிக்கை, பவுண்டரி மழை, துள்ளி எறியும் விக்கட்டுகள், பிரமாதமான கேட்ச்கள்(Catch), உற்சாக  நடன அழகிகள், வான வேடிக்கைகள் என அமர்க்களப்படுத்தும் ஐ.பி.எல் ஒரு பக்கா கமர்சியல் விருந்து என்பதில் சந்தேகமில்லை....

கிறிஸ் கெயிலை கையில் பேட்டுடன்  பார்க்கும் பொது; அந்த எமதர்மராஜனே நேரில் வந்ததுபோல பிரம்மாண்டமாய் இருக்கும்!!  கங்குலியை கேப்டனாக பார்க்கையில் பழைய ஞாபகங்கள் நினைவாக வந்து  ஒருவிதமான மரியாதை கலந்த ஹீரோயிசம் தெரியும்!!! நாம் ரசித்த, இனிமேல்  ரசிக்க முடியாதென்று நினைத்த முரளிதரன், டிராவிட், கங்குலி,  கில்க்ரிஸ்ட் என பல ஜாம்பவான்களை மீண்டும் மைதானத்தில் விளையாடுவதை  பார்ப்பதில்  இனிய, சுகமான அனுபவம் கிடைக்கின்றது!! பணத்தையும்  தாண்டி  ஸ்போட்மன்ஷிப், நட்பு, மரியாதை, விட்டுக்கொடுப்பு, போட்டி, திறமைகள்  என பல நல்ல விடயங்களும் ஐ.பி.எல் லில் உள்ளதை மறுக்க முடியாது!!!நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி -
விஜய் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வியாழன் வரை வாராவாரம்  நடிகர் சூர்யாவினால் நடாத்தப்படும் கேம்ஷோ; உலகம் முழுவதும் பிரபலமாக ஒளிபரப்பப்படும் நிகழ்ச்சியின் தமிழ் வடிவம். SMS மூலம் மக்களின் பணம் அதிகளவில் சுரண்டப்படுகின்றது, மிகவும் இலகுவான கேள்விகள் கேட்கப்படுகின்றது என  பலராலும் பலவிதமாக  விமர்சனம் செய்யப்பட்ட நிகழ்ச்சி!!!   விமர்சனங்கள் என்னதான் எதிர்மறையாகவும், கிண்டலாகவும் சொல்லப்பட்டாலும் 'நீங்களும் வெல்லாலாம் ஒரு கோடி' நிகழ்ச்சி 'மெகா'ஹிட் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை!!!  அதிகமாக ஒவ்வொரு வீட்டிலும் இந்த நிகழ்ச்சியை குடும்பம் குடும்பமாக பார்க்கின்றனர்!!!

எஸ்.எம்.எஸ்சில் பணத்தை அள்ளுகிறார்களா? அதைப்பற்றி எல்லாம் கவலைப்படுகிற நிலையில் அதை அனுப்புபவனும் இல்லை, நிகழ்ச்சியை பார்த்து ரசிப்பவனும் இல்லை!!  காரணம்; அனுப்புபவன் தனக்கு பங்குபற்ற சந்தர்ப்பம் கிடைக்கவேண்டும் என்கிற விருப்பத்தில், எதிர்பார்ப்பில் அனுப்புகிறான். அதை பார்ப்பவனுக்கு அதுபற்றிய எந்த கவலையும் இல்லை, அவனுக்கு வேண்டியது பொழுதுபோக்கு, அது கிடைக்குமிடத்து  அவன் இதெல்லாம் சிந்திக்கப் போவதில்லை!!! சமூக ஆர்வலர்கள் பொங்குவதும், அப்புறம் ஆப் ஆவதும் சகஜம்தானே :-)

விமர்சனங்களை தாண்டி இந்த நிகழ்ச்சியை நோக்கினால் இதுவொரு சிறந்த பொழுதுபோக்கு + பொது அறிவு நிகழ்ச்சி என்பதில் சந்தேகம்  இல்லை. மிக இலகுவான கேள்விகள் கேட்கப்படுவதாக ஒரு குற்றச்சாட்டு உண்டு; போட்டிக்கு தேர்வாகும் எவரும் எந்தக் கேள்விக்குமே  சரியான பதில் சொல்லாமல் திரும்ப செல்லக்கூடாது என்பதற்காகவே அவ்வாறான கேள்விகள் முதல் இரண்டு கேள்விகளுக்குள் கேட்கப்படுகின்றது!!! (அவற்றுக்கு  கூட பதில் தெரியாமல் போன 'படித்த' ஞான சூனியங்களும் உண்டு) 10,0000 உறுதிப்பணம் கடந்த பின்னர் கேள்விகள் வலுக்கத் தொடங்குகின்றன; பலருக்கும்  இலகுவாக தோன்றும் கேள்விகளுக்கு சிலருக்கு பதில் தெரியாமல் இருக்கும்!! பலருக்கும் பதில் தெரியாத கேள்விகள் சிலருக்கு இலகுவாக இருக்கும்!

தமிழ், சமயம், புராணம், விஞ்ஞானம், வரலாறு, புவியியல், மருத்துவம் என ஒவ்வொரு துறையிலும் தெரியாத பல விடயங்களை அறியக்கூடியதாயும், சில மறந்த விடயங்களை ஞாபகப் படுத்த வசதியாகவும் இந்த நிகழ்ச்சி உதவுகின்றது!!  பொதுஅறிவு என்றாலே  ஓடிப்போகும் குழந்தைகளுக்கும் இப்போது பொதுஅறிவில் ஆர்வம் தூண்டப்பட்டிருக்கின்றது!! வெளி உலகமே மறந்து குடும்பத்திகற்காக தேயும் அம்மாக்களுக்கும், தமது கெட்டித்தனத்தை காட்ட துடிக்கும் அப்பாக்களுக்கும், வயது முதிர்ந்த பெரியவர்களுக்கும், தமது பொது அறிவை சுயபரிசோதனை  செய்யும் இளசுகளுக்கும், புதியதை அறிந்துகொள்ளும் சிறுசுகளுக்கும் 'நீங்களும் வெல்லலாம் ஒருகோடி' ஆரோக்கியமான பொழுதுபோக்கு நிகழ்ச்சி!!

இந்த நிகழ்ச்சிக்கு பின்னர் சூர்யாவிற்கு ரசிகர்கள் மிகப்பெருமளவில் அதிகரிக்கவும் சாத்தியம் உண்டு!!!  அதிகமான குடும்பங்களில் சூர்யாவை  குடும்பத்தில் ஒருவராக நினைக்கும் அளவிற்கு சூர்யாவின் அணுகுமுறை சிறப்பாக உள்ளது!!  அத்துடன் ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் வரும் ஆடியன்ஸும் அந்த வார முடிவுகளில்  சூர்யாவுடன்  கை கொடுத்து  பேசுவது சூர்யாவின் மீதான ஈர்ப்பை நேரடியாகவும், தொலைக்காட்சி ஊடாகவும் அதிகரித்துக் கொண்டிருக்கின்றது!!! மற்றும் மனிதர் மிகச் சிறப்பாக நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார், அதிலும் குறிப்பிட்டு சொல்லவேண்டிய விடயம், பந்தா துளியளவும் இல்லை!!  ஒரு நடிகனாக என்னை இம்ப்ரெஸ் செய்யாத சூர்யா ஒரு நிகழ்ச்சி தொகுப்பாளராக  இம்ப்ரஸ் செய்துள்ளார்!!சூப்பர் சிங்கர்  - 
விஜய் தொலைக்காட்சியில் வெள்ளி, சனி, ஞாயிறு தினங்களில் அதிகமான வீடுகளில் பார்க்கப்படும் நிகழ்ச்சி!! பாடலைவிட சிறுசுகள் அடிக்கும் கொட்டமும், கலகலப்புதான் ஹைலைட்!!  துறுதுறுப்பான குழந்தைகள், கலகலப்பான நடுவர்கள், சலசலப்பான தொகுப்பாளர்கள் என வாராவாரம் இசை + பொழுதுபோக்கு நிகழ்ச்சிதான் சூப்பர் சிங்கர். இந்தத் தடவை யார் வெல்வார்கள் என்று ஆரூடம் சொல்லுமளவிற்கு Extra Ordinary யாக எந்த சிறார்களும் தென்படவில்லை என்றாலும் அதிகமான சிறுவர்கள் மிகவும் திறமையானவர்களாக உள்ளமை ஆச்சரியப்பட வைக்கின்றது!!  பாடல் மட்டுமல்ல, நடனம், டைமிங்கான பேச்சு என சிறார்கள் அசத்துகிறார்கள்!!

இசை என்பது பொதுவாக எல்லோருகும்மே பிடித்த ஒரு விடயம், அதனை மழலைகள், சிறுவர்கள் பாடும்போது மனதிற்கு சந்தோசமும், திருப்தியும் ஏற்ப்படுகின்றமை இயல்பான விடயம். அதேநேரம் பாட்டுப் பிடிக்கும் எல்லோருக்கும் பாடலின் ராகம், தளம் தெரிந்திருக்கவேண்டும் என்கின்ற எந்த அவசியமும் இல்லை, சிலரது பாடல்கள் எமக்கு பிடித்திருக்குமானாலும் நடுவர்கள் குறை சொல்வார்கள்; சிலரது பாடல்கள் எம்மை பெரிதாக ஈர்க்காமலிருக்கும், ஆனால் அவற்றை  நடுவர்கள் ஓகோன்னு  சொல்லுவார்கள்!! எமக்கு பிடித்த, நாம் சிறப்பாக பாடுபவர் என நினைத்த போட்டியாளர் போடியிலிருந்து வெளியேற்றப்படும்போது ஏமாற்றமும், கவலையும் உண்டாகும்!!  இப்படியாக சில ஏமாற்றங்களும்  பல சுவாரசியங்களும் கலந்த நிகழ்ச்சிதான் சூப்பர் சிங்கர்.


மெகா சீரியல்கள் -
வார நாட்களில் குடும்ப பெண்களை குறிவைத்து எடுக்கப்படும் ஏதோ ஒன்றுதான் மெகா சீரியல்கள்!!! ஐ.பி.எல், 'நீங்களும் வெல்லலாம் ஒருகோடி'  நிகழ்ச்சிகளுக்கு போட்டியாக தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்படும் மெகாசீரியல்கள்தான் பல வீடுகளில் ஆதிக்கம் செலுத்துகின்றன; விளம்பர இடைவேளைகள்தான் ஏனைய நிகழ்ச்சிகளை பார்வையிட அதிகமான வீடுகளில் வழங்கப்படும் காலக்கெடு!!! அப்படி என்னதான் இருக்கின்றது மெகா சீரியல்களில் என்று நோக்கினால்... நோக்கினால்... நோக்கினால்...... நோக்கிக்கிட்டே இருக்கின்றன் அதில் எந்த விடயம் இந்தளவிற்கு ஈர்ப்பை உண்டாக்கியிருக்கின்றது  என்பது புரியவே இல்லை!! அது பெண்களுக்கு மட்டுமே புரிந்த ரகசியமாககூட இருக்கலாம்!!!

அரைத்தமா, அப்பப்போ தேவைக்கேற்ப  நல்லவராகவும் கெட்டவராகவும் மாற்றப்படும் கேரக்டர்கள், லாஜிக் என்றால் கிலோவிலா? லீட்டரிலா? என கேட்கும் இயக்கம், எக்கச்சக்க வில்லத்தனம், தியாகத்தின் சொப்பனமான நாயகி என வருடக்கணக்காக ஒரே குட்டையில் மிதக்கும் மட்டைகளாக மெகாசீரியல்கள் ஒளிபரப்பப்பட்டாலும் பல பெண்களுக்கு அதுதான் ஆறுதல் என்பதையும் மறுப்பதற்கில்லை!!! ரசனைகள் மாறுபட்டவை.... ஆனாலும் இப்போதெல்லாம் பல டாக்டர்கள்  இரத்த அழுத்தம் உள்ள வயது அதிகமான பெண்களுக்கு மெகா சீரியல்கள் பார்க்க வேண்டாம் என அறிவுரை கூறும் அளவிற்கு மெகாசீரியல்களில் நெகடிவ்வான சம்பவங்கள் அதிகரித்துக்கொண்டு செல்கின்றமை ஆரோக்கியமானதாக படவில்லை!!!மானாட மயிலாட -
ஞாயிற்றுக்கிழமைகளில் கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் இந்நிகழ்ச்சியை  இன்றைக்கும் அதிகமானவர்கள் விரும்பிப் பார்கின்றார்கள்!!! ஆனால் இப்போதெல்லாம் நடனத்தைவிட 'ஆபாசம்' சற்று தூக்கலாக தெரிவது போலுள்ளது! கலா மாஸ்டர், நமீதா, குஸ்புவை கிண்டலடித்தாலும் பலரும் இதையும் தொடர்ந்தும்  பார்க்கத்தான் செய்கின்றனர். எத்தனை நடன நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகினாலும்  மானாட மயிலாட சம்திங் ஸ்பெஷல்!!! 

அது இது எது - விஜய் தொலைக்காட்சியில் அதிகமாவனர்கள் விரும்பி பார்க்கும் நிகழ்ச்சி; பக்கா பொழுதுபோக்கு + நகைச்சுவை நிகழ்ச்சி. சிவகார்த்திகேயனின் டைமிங் மற்றும் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் அழகுதான் ஹைலைட்!!  சிரிக்கவைக்க வருபவர்கள் சில நேரங்களில் கழுத்தறுத்தாலும் பல நேரங்களில் சிரிக்கவும், ரசிக்கவும் வைக்கின்றனர்.


கையில் ஒருகோடி -
சண் தொலைக்காட்சியின் மற்றொரு பல்ப்பு  வாங்கிக்கொண்ட  நிகழ்ச்சி!!! 'நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி'க்கு போட்டியாக ஒளிபரப்பினாலும் இரண்டுக்கும் மக்கள் கொடுத்துள்ள வரவேற்ப்பு மலைக்கும் மடுவுக்கும் நிகரானது!!! புலியை பார்த்து பூனை சூடுபோட்ட நிலைதான் இந்த நிகழ்ச்சியை பொறுத்தவரை சன்னுக்கு!!!

ஜெயா டிவி  - சாரிங்க, எப்ப இந்த சானலை மாத்தினாலும் நியூஸ்தான்  வருது :-)

K TV திரைப்படங்கள் -
முழுமையாக திரைப்படத்தை பார்ப்பது சாத்தியமில்லாவிட்டாலும் இரவு சூப்பர்ஹிட்  காட்சிகளில் அப்பப்போ போடப்படும் சில சுவாரசியமான திரைப்படங்களின் சூப்பர் சீன்கள் விளம்பர இடைவேளைகளில் பார்க்க கிடைக்கின்றது!!

* இவை எவற்றையும் பார்க்காமல்  இசை சானல்கள், காமடி சானல்கள், டிஸ்கவரி, அனிமல் பிளன்ட், BBC , இதர ஆங்கில சானல்கள்,  IPL தவிர்ந்த வேறு SPORTS சானல்கள், செய்தி சானல்கள் என பொழுதை கழிப்பவர்களும் இருக்கத்தான் செய்கின்றார்கள், அனால் அவர்கள் எண்ணிக்கையில் மிக மிக குறைவு!!!
*--------*

Tuesday, April 24, 2012

எதிர்பார்ப்பை எகிறவைக்கும் தமிழ் திரைப்படங்கள் - எனது விருப்பத்தில்....


அடுத்து வரவிருக்கும் திரைப்படங்களில் எனது தனிப்பட்ட விருப்பு வெறுப்பின் அடிப்படையில் நான் எதிர்பார்த்திருக்கும் பத்து திரைப்படங்களை பட்டியல் இடுகின்றேன். இது ஒவ்வொருவருக்கும் மாறுபடும்!! இதை தொடர் பதிவாக எண்ணி தொடர விரும்புபவர்கள் தொடரலாம்....

10 ) பரதேசி


இயக்குனர் பாலாவின் புதிய திரைப்படம்; அதர்வா நாயகனாகவும் வேதிகா நாயகியாகவும் நடிக்க ஜீ.வி.பிரகாஷ் இசையமைக்கின்றார். 'நான் கடவுள்' பலருக்கும் பிடிக்கவில்லை, ஆனால் எனக்கு மிகவும் பிடித்த திரைப்படம்(ரசனைகள் மாறுபட்டவை) எப்படி அத்தனை பேரையும்(Physical Challenges) வைத்து வேலை வாங்கினார் என்பதை இப்போது நினைத்துப் பார்த்தாலும் பாலா மீது மரியாதை கூடுகின்றது!!! அதனை தொடர்ந்து மிகவும் எதிர்பார்த்த 'அவன் இவன்' பெரிய ஏமாற்றம், ஆனால் இம்முறை பாலா ஏமாற்றமாட்டார் என்கின்ற நம்பிக்கை இருக்கின்றது.

மலையாள நாவலான 'எரியும் தணல்' நாவலை தழுவியே இந்த திரைப்படம் உருவாக்கபடுவதாக சொல்கின்றார்கள், அதனால்தான் முதலில் 'எரியும் தணல்' என திரைப்படத்திற்கு பெயரிட்டிருந்தனர். இளையராஜா, யுவன்ஷங்கர்ராஜா தவிர்த்து முதல்முறை பலா படத்திற்கு வேறொரு இசையமைப்பாளர் ஒருவர் இசையமைக்கிறார்; ஜீ.வி.பிரகாஷின் அண்மைக்காலத்து அல்பங்கள் அனைத்துமே மிகச்சிறப்பாக அமைந்துள்ளமைதான் பாலாவின் மாற்றத்திற்கு காரணமாக இருக்கலாம்!!!

எனக்கு பிடித்தமான பாலா, அதர்வா(காரணம் முரளி), ஜீ.வி என பல விடயங்கள் இந்த திரைப்படத்தின் மீது எதிர்பார்ப்பை உண்டாக்கியிருக்கின்றது; பாலா படங்களின் நிறம் எப்படி இருக்கும் என்பது முன்னமே தெரிந்தாலும் இம்முறை சற்றேனும் புதிய களத்தில் பாலா இயக்கினால் சிறப்பாக இருக்கும்!!! 'அவன் இவனில்' இழந்த தனது கிளாசை பாலா 'பரதேசி'யில் மீட்டெடுப்பாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்!!!

9 ) மனம் கொத்திப் பறவை


சிவகார்த்திகேயன் நாயகனாக நடிக்கும் இரண்டாவது திரைப்படம்; விஜய் டிவி பார்வையாளர்களில் சிவகார்த்திகேயனை ரசிக்காதவர்கள் ஒருசிலராவது இருப்பார்களா என்பது சந்தேகமே!! அதிகமானவர்கள் சிவகார்த்திகேயனை வீட்டில்/எம்மில் ஒருவர்போல பார்க்கின்றார்கள். இதுதான் சிவாவின் மிகப்பெரும் பலம். '3' திரைப்படத்தில் சிவகார்த்திகேயனின் ஒவ்வொரு கவுண்டருக்கும் திரையரங்கு கொடுத்த உற்ச்சாகம் அதை உணர்த்தியது. விமர்சகர்களால் மோசமான திரைக்கதை என்று முத்திரை குத்தப்பட்ட 'மெரினா' திரைப்படம் வெற்றிபெற முக்கிய காரணம் சிவகார்த்திகேயன் மீதான எதிர்பார்ப்புத்தான்!!

அந்த வகையில் சிவகார்த்திகேயனின் இரண்டாவது நாயகன் அவதாரம்தான் 'மனம் கொத்திப் பறவை' இயக்குனர் எழில் இயக்குகின்றார். 'துள்ளாதமனமும் துள்ளும்' கொடுத்த வெற்றியால் தமிழ் சினிமா இண்டஸ்ரியில் அப்பப்போ ஏதாவதொரு திரைப்படத்தை இயக்கிக்கொண்டு 'நானும் இயக்குனர்தான்' என அப்பப்போ ஞாபகப்படுத்தும் தோல்விப்பட இயக்குனர்தான் எழில் என்றாலும் எழிலின் திரைப்படங்கள் மோசமானதாக இருந்ததில்லை!!! பூவெல்லாம் உன்வாசம், தீபாவளி போன்றவை வணிக ரீதியாக வெற்றி பெறாவிட்டாலும் பரவாயில்லை ரக திரைப்படங்கள்!!

'மனம் கொத்திப் பறவை' டிரெயிலரை பார்க்கும்போது இதில் காமடிக்கு பஞ்சமிருக்காது என்கிறது புரிகிறது!! அதேநேரம் பல குடும்பங்களும் காட்டப்படுவதால் குடும்ப சென்டிமென்ட்டிற்க்கும் பஞ்சமிருக்காது :p எழில் திரைப்படங்களில் காதல் காட்சிகள் இயல்பாகவே சிறப்பாக இருக்கும்; இந்த திரைப்படத்தின் போஸ்டர்களில் பார்க்கும்போது அது நன்றாகவே புரியும்; மொத்தத்தில் காதல், காமடி,சென்டிமென்ட் என வழமையான மசாலாவை சிவகார்த்திகேயன் என்னும் குதிரையை நம்பி அரைக்க போகின்றார்கள்; இப்படித்தான் திரைப்படம் இருக்கும் என்று தெரிந்தாலும், ஆவலாய் காத்திருக்கின்றேன்!!!

8 ) கலகலப்பு


விமல், சந்தானம், சிவா என ஒரு பிளேட் பாக்ரியையே வைத்து சுந்தர்.C இயக்கும் புதிய திரைப்படம்தான் 'கலகலப்பு'; 'மசாலா கபே' என முதலில் பெயர் வைக்கப்பட்டு பின்னர் தற்போது கலகலப்பு என்று பெயர் மாற்றப்பட்டுள்ளது. 'ஒரு கல் ஒரு கண்ணாடி'யின் பின்னர் சந்தானத்தின் மீது ஏகப்பட்ட எதிர்பார்ப்புக்கள்; சிவா, விமல் இரண்டு பேருமே நக்கல் நாயகர்கள்; இயக்குனர் சுந்தர் .C; இதைவிட இந்த திரைப்படத்திற்கு எதிர்பார்ப்பு வேணுமா என்ன!!

அஞ்சலி, ஓவியா கதாநாயகிகள்; ட்ரெயிலரில் அஞ்சலி கேரக்டர் வழமைபோல லொடலொடதான் என்பது புரிகிறது; ஆனாலும் ரசிக்க வைக்கும் என்றே தோன்றுகின்றது!!! சிவா வழமைபோல வசன உச்சரிப்புக்களில் அசத்துகிறார். சுந்தர்.C க்கு காமடி திரைப்படம் எடுப்பது அல்வா சாப்பிடிறமாதிரி, தயாரிப்பு செலவுவேற பொண்டாட்டி காசு என்பதால் சொதப்ப மாட்டார் என்று நம்பலாம் :-)

7 ) ஆதி பகவன்


எந்த தயாரிப்பாளரும் பணம் போட விரும்பாத வெற்றிப்பட இயக்குனர் அமீர் இயக்கத்தில் 'ஜெயம்' ரவி நடிக்கும் திரைப்படம்தான் 'ஆதி பகவன்'. அமீர் திரைப்படங்கள் திரையரங்கிற்கும், வினியோகிஸ்தர்களுக்கும் லாபம் கொடுப்பவைதான், ஆனால் ஒரு தயாரிப்பாளரின் பணத்தை எத்தனை மாதங்கள்தான் முடக்குவது!!! அமீரை நம்பிய பாவத்திற்கு 'ஜெயம்' ரவி வருடக்கணக்காக வேறுபடங்கள் இல்லாமல் 'ஆதி பகவன்' கெட்டப்பில் தாடியுடன் அலைகின்றார். தயாரிப்பாளர் அன்பழகன் பணத்திற்கு வட்டிக் கணக்கு பார்த்துக் கொண்டிருக்கிறார்; எமக்கு இதில் எந்த நஷ்டமும் இல்லை, நான் எதிர்பார்ப்பது அமீரின் கிளாசை மாத்திரமே!!!

பருத்திவீரனை பார்த்து அசந்துபோன தமிழ் ரசிகர்களுக்கு 'ஆதி பகவன்' மிகுந்த எதிர்பார்ப்புள்ள திரைப்படம்தான், பருத்திவீரனுக்கு பின்னர் அமீரின் இயக்கத்தை தமிழ் ரசிகர்கள் கண்டு 5 வருடங்கள் ஆகின்றது!! ஒரே பாணியில் நடித்துக் கொண்டிருந்த 'ஜெயம்' ரவியை எப்படி அமீர் மாற்றியமைக்கப் போகிறார் என்பதுவும் சுவாரசியமான எதிர்பார்ப்புத்தான். அமீர், யுவனின் கூட்டணியும் எதிராபார்ப்பை கூட்டுகின்றது. 2010 இல் பேசத்தொடங்கிய திரைப்படம் 2012 கடைசிக்குள்ளாவது வந்திவிடும் என்கின்ற நம்பிக்கை உள்ளது, மிகுதி அமீர் கைகளில்.


6 ) இரண்டாம் உலகம்


6 வருடங்களுக்கு முன்னாலேயே செல்வராகவனால் திட்டமிட்ட திரைப்படமிது!!! 2006 இல் 'மாலை நேரத்து மயக்கம்' என்னும் பெயரில் கார்த்தி, சந்தியா நடிப்பதாக இருந்தது!! பின்னர் 2008 இல் தனுஷ், ஆண்ட்ரியா நடிப்பதாக இருந்தது! இதற்கிடையில் செல்வராகவனது 'ஆயிரத்தில் ஒருவன்', 'மயக்கம் என்ன' திரைப்படங்கள் வெளியாகிவிட்டன. இந்நிலையில் ஆர்யா, அனுஷ்காவை வைத்து 'இரண்டாம் உலகம்' என்னும் பெயரில் செல்வராகவன் இப்போது ஆரம்பித்திருக்கின்றார். First look மிரட்டலாக உள்ளது, அதுவே படத்தின் எதிர்பார்ப்பை எகிறவைக்கும் அளவிற்கு உள்ளது!!

செல்வராகவன் படங்கள் எல்லோருக்கும் பிடிப்பதில்லை, ஆனால் அதை ரசிப்பவர்களுக்கு தெரியும் அவற்றின் பெறுமதி; 'மயக்கம் என்ன'வின் தாக்கம் அகலவே ஒரு வாரம் ஆயிற்று!! செல்வராகவன் தவிர்த்து ஒளிப்பதிவாளர் ராம்ஜி, ஆர்யா, அனுஷ்கா என எனக்கு மிகவும் பிடித்தமானவர்கள் இணைந்திருப்பது மேலும் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. இசை மட்டும்தான் ஒரே ஒரு குறை!! யுவன், ஜீ.வி.பிரகாஷ் அளவிற்கு ஹாரிஸ் ஜெயராஜ்சால் உணர்வுக்கு உயிர் கொடுக்க முடியுமா என்பது சந்தேகம்தான்!!!


5 ) கடல்


மணிரத்னம் படம்; அது ஒன்றுபோதும்!!! காப்பி அடிக்கிறாரோ, டிபன் அடிக்கிறாரோ! இதுவரை 'கன்னத்தில் முத்தமிட்டால்' தவிர்த்து எந்த மணி படமும் என்னை ஏமாற்றியதில்லை!!! தளபதி, நாயகன், மௌனராகம், இதயத்தை திருடாதே, குரு எல்லாம் எனக்குள் சினிமாவின் மீதான பிடிப்பை அதிகப்படுத்திய திரைப்படங்கள். அந்த வரிசையில் 'கடல்' திரைப்படமும் அமையும் என்கின்ற நம்பிக்கையும் எதிர்பார்ப்பும் உண்டு!!! நாயகனாக நடிகர் கார்த்திக்கின் மகன் கௌதம் அறிமுகமாகிறார், நாயகியாக இன்றைய எனது பேவரிட் சமந்தா :-)

அது என்ன ராசியோ முரளி பையனுக்கும், கார்த்தி பையனுக்கும் முதல்ப்படமே சமந்தா ஜோடி!!! கார்த்திக் எனக்கு பிடித்த நடிகர்களில் ஒருவர், அவர் பையன் என்பதால் கௌதம் மீதும் எதிர்பார்ப்பு உண்டு; First Look ஐ ரொம்ப எதிர்பார்த்து காத்திருக்கிறேன். கௌதம், சமந்தா தவிர்த்து நீண்ட நாட்களின் பின்னர் அரவிந்தசாமி, மணிரத்னம் படத்தில் முதல்முறையாக அர்ஜுன் என பல சுவாரசியங்கள் உண்டு. இவர்களைத்தவிர ஜெயகாந்தன் எழுத்து, ஏ.ஆர்.ரஹுமான் இசை, ராஜீவ் மேனன் ஒளிப்பதிவு என ஏகப்பட்ட எதிர்பார்ப்புக்கள்!!


4 ) தாண்டவம்


'தில்' திரைப்படம் பார்த்ததில் இருந்து விக்ரமின் ஒவ்வொரு திரைப்படமும் எனக்கு எதிர்பார்ப்பில் உள்ளவைதான்!!! சந்தர்ப்பம் அமையும் அத்தனை தடவையும் முதல்நாள் காட்சிகளை தவறவிட்டதில்லை!!! அருள், அந்நியன், மஜா, பீமா, கந்தசாமி, ராவணன், தெய்வதிருமகள், ராஜபாட்டை என அதிகமான திரைப்படங்கள் முதல்நாள் திரையரங்குகளில் பார்த்தவைதான். அந்தவகையில் 'தாண்டவம்' திரைப்படமும் முதல்நாள் முதல் காட்சிக்கான எதிர்பார்ப்பில்!! பல தடவைகள் விக்ரம் திரைப்படங்கள் என்னை ஏமாற்றி இருந்தாலும் ஒருபோதும் விக்ரமின் Screen Present என்னை ஏமாற்றியதில்லை!

'தாண்டவம்' போஸ்டர்களை பார்க்கும்போது "மறுபடியும் கந்தசாமியா!!!" என்கின்ற சந்தேகம் இல்லாமல் இல்லை; இருப்பினும் ஏதோ ஒரு நம்பிக்கை, அது இயக்குனர் எல்.விஜய் மீதானதாகக் கூட இருக்கலாம். அண்டர்சன் கடை இட்லியை சுவையான அன்னபூர்ணா கடை உப்புமாவாக மாற்றிக் கொடுப்பதில் கில்லாடியான விஜய் இம்முறையும் கனகச்சிதமாக மாற்றிக் கொடுப்பார் என நம்பலாம்!!! கூடவே பீட்டர்சன் கடை நூடில்சை சுவையான பாப்பையா கடை 'இடியப்ப'புரியாணியாக மாற்றிக்கொடுக்கும் ஜீ.வி.பிரகாஷ் வேறு இருக்கிறார்:-)

அப்புறம் அனுஷ்கா, எமி ஜாக்சன், லக்ஸ்மி ராய் என ஒன்னுக்கு மூணு லட்டுக்கள் :-)) நீரவ்ஷா ஒளிப்பதிவு, அன்டனி எடிட்டிங் என்று ஒரு பிரம்மாண்டத்திற்கு ஏற்ற கூட்டணி. ஆனால் உலகம் முழுக்க படப்பிடிப்பு என்று சொல்வதை வைத்து பார்த்தால் 2012 ற்குள் முடித்து விடுவார்களா என்பது சந்தேகம்தான்!!! விக்ரமிற்கு வேறு வயது 50 ஐ நெருங்குகின்றது, ஒவ்வொரு திரைப்படமும் 2 வருடங்களை தின்பது ஆரோக்கியமானதா என்று தெரியவில்லை! விக்ரம், விஜய் கூட்டணியில் மற்றொரு திரை விருந்தாக 'தாண்டவம்' அமையலாம், அமையவேண்டும்!!

3 ) பில்லா II


ஒவ்வொரு மனிதனுக்கும் கடந்தகாலம் இருக்கு, ஒவ்வொரு 'Don' ம் ஒரு வரலாறு; Don 'பில்லா'வின் வரலாறுதான் 'பில்லா II' என்னும் பெயரில் அஜித் நடிக்கும் 'பில்லா'வின் முதற்பாகமாக வெளிவர உள்ளது!!! தமிழ் சினிமாவிற்கு இது புதிய முயற்சி!! அஜித்தின் இறுதி மூன்று நான்கு திரைப்படங்களை திரையரங்கில் சென்று பார்க்கவில்லை, பில்லா, மங்காத்தா கூட திரையரங்கில் பார்க்கவில்லை!! ஆனால் இம்முறை முடிந்தவரை முதல்நாள், முதல் ஷோ பார்ப்பதற்கு திட்டமிட்டிருக்கின்றேன்; காரணம் படத்தின் மிரட்டல் டிரெயிலர்!! ஆர்.டி.ராஜசேகரின் கேமராவில் யுவனின் பின்னணியில் ஸ்டயிலிஷான அஜித்தை கற்பனை பண்ணும்போதே பிரம்மிப்பாக இருக்கின்றது!!

இயக்குனர்மீது சொல்லிக்கொள்ளும்படி பெரிதாக எதிர்பார்ப்பெல்லாம் இல்லை!! காரணம் அவரது 'உன்னைப்போல் ஒருவன்' கமல் படம், நிச்சயம் கமல் தலையீடு இருந்திருக்கும்!! ஆனால் இம்முறை இயக்குனர் முழுக்க முழுக்க தன் சுதந்திரத்தை திரைக்கதையில் கொண்டுவந்திருப்பார் என நம்பலாம். இந்த திரைப்படம்தான் இயக்குனரின் திறமையை முழுமையாய் அறிந்துகொள்ளும் சந்தர்ப்பம், டிரெயிலர் பார்க்கும்போது மனிதர் கலக்கியிருப்பார் என்றே தோன்றுகின்றது. 'பில்லா II' விற்கு மிகப்பெரிய ஓப்பினிங் காத்திருக்கின்றது, படம் கலக்கலாக வந்தால் 'பில்லா II' அஜித்தின் கேரியரில் மிகப்பெரும் வெற்றிப்படமாக அமையும் வாய்ப்புண்டு, பொறுத்திருந்து பார்ப்போம்......


2 ) நீதானே என் பொன் வசந்தம்


இளையராஜா♥ இளையராஜா♥ இளையராஜா♥ இளையராஜா♥ இளையராஜா♥ இளையராஜா♥ - இசைஞானி இல்லாவிட்டால் இந்த திரைப்படத்தின் மீது எனக்கு எதிர்பார்ப்பு சிறிதளவாவது இருந்திருக்குமா என்பது சந்தேகம்தான்!! நான் திரையரங்கில் பார்க்க இருக்கும் முதல் 'கௌதம் மேனன்' திரைப்படம் இதுதான்; ஜீவாவை எனக்கு பிடிக்கும் என்றாலும் இதுவரை திரையரங்கில் எந்த ஜீவா திரைப்படமும் பார்த்ததில்லை, அந்த வகையில் நான் முதல்முதலாக திரையரங்கில் பார்க்கப்போகும் ஜீவாவின் திரைப்படமும் இதுதான்!!! இதுவரை எனக்கு பிடிக்காத கௌதம் மேனனை இப்போது பிடிக்கிறது!!!

சமந்தா - 'பாணா காத்தாடி'ல அழகாக இருந்தாலும் பெரிதாக கவரவில்லை!! ஆனால் 'நீதானே என் பொன் வசந்தம்' ட்ரெயிலரில் 30 செக்கனில் நான் காலி :-) சந்தேகமே இல்லாமல் சமந்தாவுக்காகவும் 'நீதானே என் பொன் வசந்தம்' திரைப்படத்தை எதிர்பார்த்து காத்திருக்கிறேன்!!! இந்த திரைப்படத்தின் ட்ரெயிலரை பார்த்தது போல் வேறெந்த திரைப்படத்தின் ட்ரெயிலரையும் இத்தனை தடவை பார்த்ததில்லை!! 100 தடவைக்குமேல் இரு மொழிகளிலும் பார்த்துவிட்டேன், இன்னமும் சலிக்கவில்லை; காரணம் 'இளையராஜா'. எனக்கிருக்கும் ஒரே சந்தேகம் நம்ம யாழ்ப்பாண தியேட்டர் அண்ணாச்சிங்க இந்த படத்தை எடுத்து ரிலீஸ் பண்ணுவாங்களா என்பதுதான், படத்தின் எதிர்பார்ப்பைவிட இதுவேறு கூடுதல் எதிர்பார்ப்பு !!


1 ) கோச்சடையன்


இரத்தமும் சதையுமாக ரஜினி இதில் நடிக்கப்போவதில்லை என்பதால் வழமையான ரஜினி பட எதிர்பார்ப்பு கொஞ்சமும் இல்லை!! படம் எப்படி வரும் என்பது யாருக்குமே தெரியாத புதிர்!! ஆனாலும் எனக்கு எதிர்பார்ப்பில் கோச்சடையன்தான் உச்சம்!! காரணம் ரஜினி... ரஜினி.... ரஜினி.... இந்த மந்திர சொல்லை அடுத்தவர் படங்களில் சொல்லும்போதே மனதில் சிறகடிக்கும் எமக்கு ரஜினியின் விம்பத்தை முன்னிறுத்தி முழுதாய் ஒரு திரைப்படம் வருகிறதென்றால் எதிர்பார்ப்பு இல்லாமலா இருக்கும்!!!

மோஷன் கிராபிக்ஸ் என்கின்றார்கள், 'அவதார்' பாணி என்கின்றார்கள், 'படையப்பா'போல பக்கா கமர்சியல் என்கின்றார்கள், அரச வம்சத்து கதை என்கின்றார்கள், 'ராணா' திரைப்படம்தான் இதென்கின்றார்கள், 'ராணா' திரைப்படத்திற்க்கான முதல் பாகம் என்கின்றார்கள், மறைந்த நடிகர் நாகேஷை நடிக்க வைக்கின்றார்கள் என்று சொல்கிறார்கள், இன்னும் என்னென்னவோ எல்லாம் சொல்கின்றார்கள். இவர்கள் சொல்வதில் சிலது புரிகிறது, சிலது புரியவே இல்லை!! ரசிகர்களை தாண்டி மக்களிடம் இந்த திரைப்படம் எடுபடுமா? சௌந்தர்யா இயக்குனராக சிறந்த திரைப்படத்தை கொடுப்பாரா? இந்த முயற்சி வெற்றியடையுமா? என பல கேள்விகளும், சந்தேகங்களும் நிறைந்திருந்தாலும் கோச்சடையன் ஒரு ரஜினி படம், அந்த வகையில் கோச்சடையன் எப்படியான திரைப்படமாக இருந்தாலும் அதை வரவேற்க காத்திருக்கின்றோம்!!!

சரத்குமார், ஆதி, தீபிகா படுகோன், ஷோபனா, ருக்மணி, நாசர் என நட்சத்திரங்களும், ஏ.ஆர்.ரஹுமான், ராஜீவ் மேனன், கே.எஸ்.ரவிக்குமார் என முன்னணி தொழில்நுட்ப வல்லுனர்களும் கோச்சடையனில் வேலைசெய்கின்றார்கள். எல்லா கேரக்டர்களுமே கிராபிக்ஸா? இல்லை ரஜினி கேரக்டர் மட்டும் கிராபிக்ஸா? என்பதுவும் குழப்பமான சந்தேகமாக உள்ளது!!! ஒரு திரைப்படம் வெற்றிபெற அவசியமானது திரைக்கதை. கமர்சியலாய் சிறந்த திரைக்கதை அமைப்பதில் கெட்டிக்காரரான கே.எஸ்.ரவிக்குமார் சிறந்த திரைக்கதையை அமைக்கும் பட்சத்தில் 'கோச்சடையன்' சிறப்பாக வரவும் சாத்தியம் உண்டு; ஆனாலும் ரஜினியின் பெயரை சொல்லி தயாரிப்பாளர் + விநியோகிஸ்தர்கள் செய்யப்போகும் வியாபாரம் கோச்சடையனை குதறாமல் இருக்கவேண்டும்!!! எது எப்படியோ தலைவர் படத்திற்கு மிகுந்த  எதிர்பார்ப்புடன்   வெய்ட்டிங்........

* விஸ்வரூபம், மாற்றான் மற்றும் துப்பாக்கி திரைப்படங்கள் மிகப் பெரும் எதிர்பார்ப்பில் உள்ள திரைப்படங்கள்; எனக்கு பிடித்தவை லிஸ்ட் என்பதால் அவற்றை சேர்க்கவில்லை!!!

*--------*

Monday, April 23, 2012

ரஜினியின் 'சிவாஜி'யும், தமிழ் சினிமாவின் சிறந்த ஓப்பினிங்கும்!!!எச்சரிக்கை - பதிவின் நீளத்தை பார்த்துவிட்டு வாசிக்க தொடங்குங்கள்!

ஓப்பினிங்(Opening) - ஓப்பினிங் என்றால் என்ன? ஒரு திரைப்படம் எந்த நாளில் ரிலீஸ் ஆகின்றதோ, அன்றிலிருந்து முதலாவதாக வரும் ஞாயிற்றுக்கிழமை வரையான வசூல்தான் ஆரம்ப வசூல் அதாவது ஓப்பினிங் வசூல் என்று சொல்லப்படுகின்றது!! திங்கட்கிழமை ஒரு திரைப்படம் ரிலீஸ் ஆனாலும், சனிக்கிழமை ஒரு திரைப்படம் ரிலீஸ் ஆனாலும் ஞாயிறு வரையான வசூலையே முதல் வார ஓப்பினிங் வசூலாக எடுத்துக் கொள்கின்றனர்; ஆனால் திங்கள், செவ்வாய் கிழமைகளில் திரைப்படங்கள் பொதுவாக ரிலீஸ் ஆவதில்லை. பண்டிகை நாட்கள், விஷேட நாட்களில் மட்டும் சில நேரங்களில் புதன், வியாழன் ஆகிய நாட்க்களில் திரைப்படங்கள் ரிலீஸ் ஆகின்றன; மிகப்பெரும்பாலான திரைப்படங்கள் வார இறுதிநாளான வெள்ளிக்கிழமை களில்த்தான் வெளியிடப்படுகின்றன, சில தவிர்க்க முடியாத காரணங்களால் சனிக்கிழமைகளிலும் ஒருசில திரைப்படங்கள் வெளியிடப்படும்!!!

அந்த வகையில் பெரும்பாலான திரைப்படங்கள் வெளியிடப்படும் வெள்ளிக்கிழமையை எடுத்துக்கொண்டால்; முதல் மூன்று நாள் வசூல் ஓப்பினிங் வசூலாக கொள்ளப்படும்!! கிட்டத்தட்ட ஒரு திரையரங்கில் 12 - 15 வரையான ஷோக்கள் வார இறுதியில் காண்பிக்கப்படும். ஷோக்களின் எண்ணிக்கை, மக்களின் எண்ணிக்கை, டிக்கட்டின் பெறுமதி, ரிலீஸ் ஆகும் திரையரங்குகளின் எண்ணிக்கை போன்றவற்றை கொண்டே ஒரு திரைப்படத்தின் ஓப்பினிங் கணிக்கப்படுகின்றது!! ஒரு திரைப்படம் 30 திரையரங்குகளில் திரையிடப்பட்டு 360 காட்சிகளில் 90% மக்களின் பார்வையில் பெற்ற வசூலைவிட, 28 திரையரங்குகளில் திரையிட்டு 336 காட்சிகளில் 90% மக்கள் பார்வையில் வேறொரு திரைப்படம் அதிக ஓப்பினிங் வசூலை பெற்றிருக்கலாம்!!! அதற்க்கு காரணம் திரையரங்குகளின் கொள்ளளவு மற்றும் டிக்கட்டின் விலை வித்தியாசங்கள்தான் (மல்டி சென்டர்களில் அதிகம் ரிலீஸ் ஆனால் வசூல் அதிகம்).

ஒரு திரைப்படத்தின் வெற்றியை ஓப்பினிங் இன்றைக்கு எந்தளவிற்கு தீர்மானிக்கின்றது!!! இதை அலசுவதாயின் காலத்தை இரண்டாக பிரிப்பது தவிர்க்க முடியாதது!!! சிவாஜி (SIVAJI 'The Boss') திரைப்படத்திற்கு முன்னர், சிவாஜி திரைப்படத்திற்கு பின்னர் என இரண்டாக பிரித்துப் பார்ப்பது அவசியம்.

சிவாஜிக்கு முன் - ஒரு திரைப்படம் அதன் வெற்றியை தீர்மானிப்பதற்கு குறைந்த பட்சம் 30 நாட்களாவது காத்திருக்கவேண்டும், எத்தனை நாட்கள் அதிகமாக ஓடுகின்றதோ அத்தனை நாட்களை பொறுத்தே வெற்றியின் அளவு கணிக்கப்படும் (ஆளில்லா திரையரங்கில் சுய விளம்பரத்திற்கு ஓட்டப்படுபவை தவிர்த்து). இதற்கு நேர்மாறாக சில திரைப்படங்கள் ஆரம்ப நாட்க்களில் மந்த கதியில் நகர்ந்து தோல்விப்படம் என முத்திரை குத்தப்பட்ட பின்னர்கூட வாய்வழியாக ( Word of Mouth) மற்றும் ஊடகங்களின் விமர்சனங்கள் மூலம் Late pick up ஆகி நாட்கள் போகப்போக கூட்டம் அதிகமாகி வசூலை அள்ளிய வரலாறுகளும் உண்டு; மகேந்திரனின் முள்ளும் மலரும் முதல் மிஸ்கினின் சித்திரம்ம் பேசுதடி வரை பல உதாரணங்கள் ஆங்காங்கே உண்டு!!!


அதேபோல ஆரம்பத்தில் மந்தகதியில் புறப்பட்டு தயாரிப்பாளர்கள், விநியோகிஸ்தர்களின் விளம்பர உக்தியால் பின்னர் சிறந்த வசூலை பெற்றுத்தந்த திரைப்படங்களும் உண்டு, உதாரணமாக சொல்வதானால் எஜமான், வேட்டையாடு விளையாடு திரைப்படங்களை சொல்லலாம்!! முதல்வாரம் கடந்து அடுத்தநாள் (திங்கட்கிழமை) மக்கள் கூடம் திரையரங்கிற்கு வந்தால் "அப்பாடா திரைப்படம் தப்பித்து விட்டது" என ஓரளவிற்கு மனதிற்கு ஆறுதலாக இருக்கும், மக்களுக்கு பிடித்துப்போனால் மாத்திரமே வாய்வழியாக சொல்லப்பட்டு இரண்டாம்வாரம் கூட்டம் வரும் என்பது அன்றைய நிலை!!! இப்படியாக மக்களுக்கு பிடித்த திரைப்படங்கள் 175, 200 நாட்கள் என திரையிடப்பட்டது, அதனால் அன்றைய திரைப்படங்களின் வெற்றி 'நாட்களை' வைத்தே கணிக்கப்பட்டது!!! 100 நாள், 175 நாள் (வெள்ளிவிழா) 200 நாள் ஓடிய திரைப்படங்கள் என வெற்றியின் அளவுகோல் நிர்ணயிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில்த்தான் 90 களின் இறுதியில் தமிழ் சினிமா ஒரு மிகப்பெரும் சவாலை எதிர்கொள்ள வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டது, அதுதான் திருட்டு VCD!!! அதற்க்கு முன்னரான காலப்பகுதியில் VCR Player கள்தான் பாவனையில் இருந்தன, ஆனால் அவை ஒரு தெருவில் ஒன்றிரண்டு வீடுகளில் மட்டும்தான் இருந்தன; அவற்றுக்கு பயன்படுத்தப்படும் கேசட்டுக்கள் பாவனையும் அதிகளவில் இருக்கவில்லை, காரணம் VCD கள்போல இலகுவில் Copy பண்ண முடியாது, மற்றும் செலவும் ஜாஸ்தி!!! ஆனால் VCD கள் தாரளமாக குறைந்த விலையில், இலகுவாக Copy பண்ணப்பட்டு திருட்டுத்தனமாக விற்க ஆரம்பிக்கப்பட்டன. அவற்றுக்கான Player களும் குறைந்த விலை என்பதால் அதிகமான வீடுகளில் பாவனைக்கு வரத்தொடங்கியது!!!

திரைப்படம் வெளிவரும் அடுத்தடுத்த நாட்களில் திருட்டு VCD க்கள் வெளிவர தொடங்கியதும் மக்கள் திரையரங்கிற்கு செல்வது குறைய ஆரம்பித்தது. 100 ரூபா கொடுத்து ஒருவர் திரையரங்கில் பார்ப்பதைவிட, வீடிலிருந்து 30 ரூபாயில் குடும்பமாக VCD யில் பார்த்தால் பணமும், போக்குவரத்தும் விரயமாகாது என பலரும் எண்ணினர்; இதனால் திரையரங்கிற்கு வரும் மக்கள் தொகை திடீரென வீழ்ச்சியடைய ஆரம்பித்தது. முதல் பத்து, பதினைந்து நாட்களுக்கு பின்னர் திரையரங்குகள் காற்று வாங்க ஆரம்பித்தன!! இதனால் தோல்விப்படங்கள் ஆகவேண்டியவை படுதோல்வி ஆயின, வெற்றிப்படங்கள் ஆகவேண்டியவை சராசரி ஆகின, சூப்பர் ஹிட் ஆகவேண்டியவை ஹிட் ஆவதற்கே சிரமப்பட்டன!! தயாரிப்பாளர், விநியோகிஸ்தர்கள், திரையரங்க உரிமையாளர்கள் என அனைவரும் லாபம் பார்க்க சிரமப்பட்டனர்!! இந்நிலையில் 2007 ஆம் ஆண்டு சிவாஜி திரைப்படத்தின் உரிமையை AVM நிறுவனம் விற்க முடிவு செய்தது........

சென்னை நகருக்கான உரிமையை 'அபிராமி' ராமநாதன் கிட்டத்தட்ட 6.2 கோடிகளுக்கு வாங்கினர்; அதுவரை எந்த திரைப்படமும் சென்னையில் வசூலித்திராத தொகை அது!!! அதுவரை அதிக வசூலை சென்னையில் குவித்திருந்த சந்திரமுகிகூட தொடாத தொகை அது!!! எல்லோருக்குமே ஆச்சரியம், ஆனால் ராமநாதன் பயப்படவில்லை; தான் போட்ட காசை பிடிப்பதற்கு அவர் ஒரு புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தினார், அதுதான் அதிக திரையரங்குகளில் திரைப்படத்தை வெளியிடும் திட்டம். சென்னையில் ஒரு பெரிய நடிகரின் திரைப்படம் அதிகபட்சம் 10,15 திரையங்குகளில்த்தான் அப்போதெல்லாம் வெளியப்பட்டு வந்தது; ராமநாதன் 'சிவாஜி'யை கிட்டத்தட்ட 30 திரையரங்குகளில் ரிலீஸ் செய்தார், அத்துடன் இணையம் மூலமாகவும், நேரடியாகவும் முன்பதிவுகளை மேற்கொள்ளும் வசதியம் துணையிருக்க முதல் 10 நாட்க்களுக்கான டிக்கட்டுகள் அதிகமாக முற்பதிவு செய்யப்பட்டன!!


சிவாஜி பற்றிய விமர்சனங்கள் Mix Report ஆக வெளிவந்து கொண்டிருக்கும்போதே முதல் நான்கு நாட்களில் ஓப்பினிங் வசூலாக மிகப்பெரும் தொகையான 1 கோடி 34 இலட்சத்தை சிவாஜி வசூலித்து, மூன்றாம் வாரத்தில் போட்ட பணமான 6.2 கோடியை மீட்டெடுத்த 'அபிராமி' ராமநாதன் கிட்டத்தட்ட மொத்தமாக சென்னையில் 12 கோடியை வசூலாக பெற்றார்; இது அவருக்கு இரட்டிப்பு லாபம்!!! சிவாஜி திரைப்படம் வெளியாகிய ஐந்தாவது வார இறுதியில்(வெள்ளி. சனி, ஞாயிறு) பெற்ற வசூல் 48 இலட்சம்; அதே வாரம் வெளியாகிய அஜித்தின் 'கிரீடம்' வார இறுதியில் பெற்ற வசூல் 31 இலட்சம். அஜித்திற்கு கிடைத்த ஓப்பினிங் 98%, அப்படி இருந்தும் வசூலில் 5 ஆவது வாரத்து சிவாஜியை கிரீடம் நெருங்கவில்லை என்றால் என்ன காரணம்? வெளியாகிய திரையரங்குகளின் எண்ணிக்கைதான்; 5 ஆவது வார இறுதியில் சிவாஜி 243 காட்சிகள் ஓடியது, முதல் வார இறுதியில் கிரீடம் வெறும் 189 காட்சிகள்தான்!!!

இது தவிர்த்து அமேரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளிலும் அதிக திரையரங்குகளில் ரிலீஸ் செய்து ஐங்கரன் நிறுவனமும் புதிய வர்த்தகப்பாதையை தமிழ் சினிமாவுக்கு அறிமுகப்படுத்தியது!! இப்படியாக தமிழ் சினிமாவின் மாக்கேட்டிங் சிவாஜிக்கு பின்னர் புதிய வடிவில் எழுச்சி பெற ஆரம்பித்தது. ஆனாலும் இந்த மாற்றத்தை ஏனைய திரைப்பட விநியோகிஸ்தர்கள் உடனடியாக ஏற்றுக்கொள்ளவில்லை. தொடர்ந்தும் குறைந்த திரையரங்குகளிலேயே திரைப்படங்கள் வெளியிடப்பட்டுவந்தன. சிவாஜிக்கு அடுத்து அதே ஆண்டு மிகப்பெரும் வசூலை குவித்த திரைப்படம் பில்லா; சென்னையில் அதன் ஆரம்ப வசூல் மூன்று நாட்களில் 59 இலட்சம், மொத்தமாக பில்லா சென்னையில் கிட்டத்தட்ட 4.5 கோடிவரை வசூலித்தது; அன்றைய தேதியில் இதுவொரு மிகச்சிறந்த வசூல்!!! ( அதேநேரம் இன்றைய சராசரி படங்களின் வசூலைவிட இது குறைவே!!)

முதல் வார இறுதி வசூலாக விஜயின் 'அழகிய தமிழ்மகன்' நான்கு நாட்களில் 29 இலட்சம், சூர்யாவின் 'வேல்' நான்கு நாட்களில் 28 இலட்சம், தனுஸின் 'பொல்லாதவன்' நான்கு நாட்களில் 27 இலட்சம், விக்ரமின் 'பீமா' நான்கு நாட்களில் 58 இலட்சம், சிம்புவின் 'காளை' நான்கு நாட்களில் 36 இலட்சம், வடிவேலுவின் 'இந்திரலோகத்தில் நா அழகப்பன்' 3 நாட்க்களில் 40 இலட்சம் என 'தசாவதாரம்' வரும்வரை வேறெந்த திரைப்படமும் அதிக வசூலை ஓப்பினிங்காக பெறவில்லை; ஆனால் இவை அனைத்தையும் முதல் வாரத்தில் 90% க்கு அதிகமான மக்கள் பார்வையிட்டிருந்தனர்; அப்படி இருந்தும் ஓப்பினிங் குறைவாக உள்ளதென்றால்(இன்றோடு ஒப்பிடும்போது) அதற்க்கு முழுக்காரணமும் திரையரங்க எண்ணிக்கைதான்.

'சிவாஜி'க்கு பின்னர் கமலின் 'தசாவதாரம்' திரைப்படம் அதிக திரையரங்குகளில் வெளியிடப்பட்டு சிறப்பான வசூலை குவித்தது!! சென்னையில் ஓப்பினிங்காக மூன்று நாட்க்களில் 95 இலட்சம் வசூலித்த தசாவதாரம் மொத்தமாக சென்னையில் கிட்டத்தட்ட 11 கோடிகளை வசூலித்தது!!! வெளிநாடுகளிலும் அதிக திரைகளில் வெளியிடப்பட்டு கணிசமான வசூலை பெற்றது!!! தசாவதாரத்தை தொடர்ந்தும் அதிக திரையரங்கில் வெளியாகி அதிக ஓப்பினிங்கை பெற்ற திரைப்படம் 'குசேலன்', மூன்று நாட்களில் 84 இலட்சம்வரை வசூலித்தது. பின்னர் விக்ரமின் 'கந்தசாமி' திரைப்படத்தை பெரிய பட்ஜெட், எதிர்பார்ப்பு போன்ற காரணத்தால் அதிகளவு திரையில் திரையிட்டார்கள், எதிர்பார்த்ததுபோல மூன்று நாட்க்களில் 93 இலட்சம் வசூலாக கிடைத்தது!! அதனை தொடர்ந்து வேட்டைக்காரன் மூன்று நாட்க்களில் 89 இலட்சம், ராவணன் மூன்று நாட்க்களில் 88 இலட்சம் என சராசரியாக ஒரு நாளுக்கு கிட்டத்தட்ட 30 இலட்சங்களை அதிக திரையரங்குகளில் வெளியிடப்பட்ட திரைப்படங்கள் பெற்றுக்கொடுத்தன!


இந்த நிலையில் 2010 ஆம் ஆண்டு மீண்டும் ரஜினியின் 'எந்திரன்' திரைப்படத்தின் சென்னை உரிமையை கிட்டத்தட்ட 10 கோடிகளுக்கு வாங்கிய 'அபிராமி' ராமநாதன் இம்முறை திரையரங்குகளை இன்னமும் அதிகரித்தார்; 45 க்கும் அதிகமான திரையரங்குகளில் சென்னையில் வெளியாகிய எந்திரன் முதல் மூன்று நாட்க்களில் இரண்டு கோடி (202 இலட்சம்) வசூல் செய்தது; மொத்தமாக 17 கோடிகளை சென்னையில் வசூலித்தது!!! எந்திரனை தொடர்ந்து அதிகமான முன்னணி நடிகர்களது திரைப்படங்கள் அதிக திரையரங்குகளில் வெளியாக ஆரம்பித்தது!!! அஜித்தின் மங்காத்தா ஐந்து நாட்களில் 1 கோடி 80 இலட்சம்வரை வசூலித்தது!! மொத்தமாக 8 கோடிகளுக்குமேல் வசூல்!! மங்காத்தா ரஜினி, கமலுக்கு அடுத்து சென்னையில் 8 கோடியை தொட்ட நடிகர் என்கின்ற பெருமையை அஜித்திற்கு பெற்றுக் கொடுத்தது!.

அதன் பின்னர் சென்னையில் சூர்யாவின் 7 ஆம் அறிவு திரைப்படம் ஓப்பினிங்காக ஐந்து நாட்க்களில் 2 கோடி 20 இலட்சத்தையும், விஜயின் வேலாயுதம் ஐந்து நாட்களில் 1 கோடி 95 இலட்சத்தையும் வசூலித்தன. வேலாயுதம் சென்னையில் 8 கோடி கடந்த முதல் விஜய் படமாகவும்; 7 ஆம் அறிவு ரஜினி, கமலுக்கு அடுத்து 9 கோடியை கடந்த நடிகராக சூர்யாவிற்கு பெருமையை தேடிக்கொடுத்தது. அதன் பின்னர் வெளிவந்த விக்ரமின் 'ராஜபாட்டை' மூன்று நாட்க்களில் 96 இலட்சம், விஜயின் 'நண்பன்' நான்கு நாட்க்களில் 1 கோடி 37 இலட்சம், தனுஸின் 'மயக்கம் என்ன' மூன்று நாட்க்களில் 97 இலட்சம், சிம்புவின் 'ஒஸ்தி' நான்கு நாட்களில் 1 கோடி 33 இலட்சம், தனுஸின் '3' மூன்று நாட்க்களில் 1 கோடி 31 இலட்சமும், உதயநிதியின் 'ஒரு கல் ஒரு கண்ணாடி' மூன்று நாட்க்களில் 1 கோடி 73 இலட்சத்தையும் வசூலித்திருக்கின்றன!!!

இவை அனைத்தும் இரண்டு வாரங்கள் முடிவதற்குள் குறைந்தபட்சம் சென்னையில் மட்டும் 3 கோடியை தொட்ட திரைப்படங்கள், இவற்றில் படு தோல்விப்படங்களான ராஜபாட்டை, ஒஸ்தி போன்றன சென்னையில் மட்டும் 3 கோடிகள் என்றால் தமிழ் நாடு + தெலுங்கு + வெளிநாடு என முதல் மூன்று நாட்க்களில் 20 கோடிகளையாவது வசூலித்திருக்கும்!!! இந்த திரைப்படங்களின் விநியோகம் 40 கோடிகள் என்றால், கிட்டத்தட்ட அரைவாசிப் பணமாவது மீள பெறப்பட்டிருக்கும்!! இதே திரைப்படங்கள் முன்னர் வெளியாகுவதுபோல குறைந்த திரையரங்குகளில் வெளியாகி இருந்தால் 10 கோடிகள் கூட தேறியிருக்காது. பெரிய நடிகர்களது திரைப்படங்கள் இப்பொது அதிக திரையரங்குகளில் வெளியாவதால் எப்படிப்பட்ட மோசமான திரைப்படமாக இருந்தாலும் முன்பதிவு மற்றும் எதிர்பார்ப்பால் முதல் 10 நாட்களுக்குள் (மக்கள் படம் மோசம் என்று புறக்கணிப்பதற்குள்) பாதிப் பணத்தையாவது தேற்றி விடுகின்றார்கள்.

அதே நேரம் திரைப்படம் நன்றாக இருந்தால் மூன்று வாரங்களுக்குள் லாபம் பார்த்துவிடுகின்றார்கள், ஐந்து வாரம் சிறப்பாக ஓடினால் திரைப்படம் மிகப்பெரும் வெற்றியை பெறுகின்றது; முன்னர் 200 நாட்கள் ஓடி பெறப்பட்ட வசூலை இப்போது 40 நாட்களுக்குள் பெற்று விடுகின்றார்கள்!! 2007 ஆம் ஆண்டின் Blockbuster Hit ஆன பில்லாவின் முதல் நான்குநாள் வசூலை இன்று 'ஒரு கல் ஒரு கண்ணாடி' கிட்டத்தட்ட ஒரே நாளில் பெறுகின்றதென்றால் இந்த மாற்றம் சிவாஜியால் (அபிராமி ராமநாதனால்) ஏற்ப்படுத்தப்பட்டது!! சிவாஜியை 'கமர்சியல் குப்பை' என்பவர்களுக்கு சிவாஜி தமிழ் சினிமாவின் வர்த்தகத்தில் ஏற்ப்படுத்திய மாற்றம் புரிந்தாலும் புரியாதது போலத்தான் இருப்பார்கள்!!!


இன்றைய தேதியில் தமிழ் சினிமாவின் சிறந்த ஓப்பினிங் யாருக்கு - ஒரு திரைப்படத்தின் ஓப்பினிங்கில் நடிகர்கள் ஆதிக்கம் செலுத்தினாலும், நடிகர்களால் மட்டும் மிகச்சிறந்த ஒப்பினிங்கை பெற்றுக்கொடுக்க முடியாது. நடிகர்களையும் தாண்டி ஒரு திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்புத்தான் ஓப்பினிங்கை தீர்மானிக்கின்றது; அந்த எதிர்பார்ப்பு பெரும்பாலும் குறிப்பிட்ட ஒரு நடிகரும், குறிப்பிட்ட ஒரு இயக்குனரும் சேரும்போதுதான் அதிகமாக ஏற்ப்படுகின்றது, இயக்குனரும் இசையமைப்பாளரும் இணையும்போது கூட எதிர்பார்ப்புக்கள் அதிகரித்த சந்தர்ப்பங்களும் உண்டு!!! இவைதவிர மிகைப்படுத்தப்பட்ட விளம்பரங்கள், வெற்றிபெற்ற கூட்டணி போன்றனவும் எதிர்பார்ப்பை எகிறவைக்கும் ஏனைய காரணிகள்.

திரைப்படத்தின் எதிர்பார்ப்பு தவிர்த்து; திரைப்படம் வெளியாகும் காலப்பகுதி, திரையரங்குகளின் எண்ணிக்கை போன்றவையும் ஒரு திரைப்படத்தின் ஓப்பினிங்கில் முக்கியத்துவம் செலுத்தும் முக்கிய காரணிகள்.


திரைப்படம் வெளியாகும் காலப்பகுதி - பண்டிகை/விசேட தினங்களில் வெளியிடப்படும் திரைப்படங்களுக்கு பெரும்பாலும் போட்டி இருக்கும்! போட்டிக்கு வேறு எதிர்பார்ப்புள்ள திரைப்படங்களும், சில சிறு திரைப்படங்களும் வெளிவரும் சந்தர்ப்பம் உண்டு; அதனால் அதிகமான திரையரங்குகளில் திரையிட முடியாத நிலை தோன்றலாம், இது நிச்சயம் பாதகமான நிலைதான்!!! ஆனால் பண்டிகை/விசேட தினங்களில் அதிகளவான மக்கள் திரையரங்கை நாடிப்போவதும், பண்டிகை காலமாகையால் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் இலவச விளம்பரங்களாக உதவிசெய்வதும் இந்தக்காலப்பகுதியில் திரைப்படங்களை வெளியிடுவதால் கிடைக்கும் சாதகமான தன்மைகள்.

அத்துடன் இரண்டு பெரிய திரைப்படங்கள் ஒரேநேரத்தில் போட்டிக்கு வெளியாகினால், அவ்விரு திரைப்படங்களில் நடித்த நடிகர்களது ரசிகர்கள் இருபடத்தையும் ஒப்பிடும் நோக்கில் அவ்விரு திரைப்படங்களையும் பெரும்பாலும் பார்வையிடுவார்கள், இதுகூட பண்டிகை காலங்களில் திரைப்படங்களின் ஓப்பினிங்கிற்கு கிடைக்கும் சாதகம்தான். அதே நேரம் பிறிதொருநாளில் தனியாக ஒரு பெரிய திரைப்படம் வெளியிடப்படும்போது மேற்சொன்ன சாதகங்கள் பாதகமாகவும், பாதகங்கள் சாதகமாகவும் அமையும்!!! அனாலும் பலரும் பண்டிகைகாலங்களில் திரைப்படங்களை வெளியிடவே விரும்புகின்றனர்!!! இயக்குனர் ஹரி, சரண் போன்ற கமர்சியல் இயக்குனர்கள் தங்கள் திரைப்படங்களை அதிகமாக பண்டிகை நாட்களில் வெளியிட விரும்புவதே வழக்கம்; காரணம் கமர்சியல் திரைப்படங்கள் Festival mode இல் அதிகமாக மக்களிடம் எடுபடும் என்பதுதான்!!!

திரையரங்குகளின் எண்ணிக்கை - பெரிய திரைப்படங்களை பொறுத்தவரை எவ்வளவுக்கெவ்வளவு அதிக திரையில் வெளியிடுகின்றார்களோ அவ்வளவுக்கவ்வளவு அதிக ஒப்பினிங்கை பெறமுடியும், இது தயாரிப்பாளர், வினியோகிஸ்தர் கைகளில்த்தான் உண்டு. படத்தின் எதிர்பார்ப்பை பொறுத்தே திரையரங்கங்களின் எண்ணிக்கை தீர்மானிக்கப்பட்டாலும், பண்டிகை காலங்களில் பல திரைப்படங்கள் வருவதால் அதிகமான திரையரங்குகள் கிடைப்பதில்லை; அதிகமான மற்றும் சிறந்த திரையரங்கை பெற்றுக்கொள்ளும் புத்திசாலி விநியோகிஸ்தர் அதிக ஓப்பினிங்கை பெற்றுக்கொள்ளுவார்!!


ரஜினிகாந்த் - சிவாஜி வரும்வரை சந்திரமுகியின் ஓப்பினிங்கை எந்த திரைப்படமும் தாண்டவில்லை, எந்திரன் வரும்வரை சிவாஜியின் ஓப்பினிங்கை எந்த திரைப்படமும் தாண்டவில்லை, எந்திரன் வெளிவந்து 2 ஆண்டுகள் ஆகியும் எந்திரனின் ஓப்பினிங்கை எந்த திரைப்படமும் நெருங்கவில்லை, ரஜினியின் முழுநீளத் திரைப்படமல்லாத குசேலன் திரைப்படத்தின் சென்னை ஓப்பினிங் மூன்று நாட்களில் 84 இலட்சம்; அன்றைய தேதியில் இது சிவாஜி, தசாவதாரம் திரைப்படங்களுக்கு அடுத்து மூன்றாவது மிகப்பெரும் ஓப்பினிங்!! ஒவ்வொரு ரஜினியின் திரைப்படத்திற்கும் உள்ள அதிகபட்ச எதிர்பார்ப்புத்தான் ஓவ்வொரு தடவையும் மிகப்பெரிய ஓப்பினிங் அமைய காரணம். எந்திரனது மிகப்பெரும் ஓப்பினிங்கிற்கு ரஜினி தவிர இயக்குனர் ஷங்கர், ரஜினி & ஷங்கர் கூட்டணி, சண் பிக்சர்ஸின் மாக்கெட்டிங், அதிகளவு திரையரங்குகளில் வெளியிடப்பட்டமை போன்றவையும் முக்கிய காரணிகள்.

கமல் - கிட்டத்தட்ட சிவாஜிக்கு இணையான ஓப்பினிங்கை தசாவதாரம் பெற்றாலும் மிகப்பெரும் எதிர்பார்ப்புக்களுடன் வெளியிடப்பட்ட 'மன்மதன் அம்பு' சென்னையில் நான்கு நாட்க்களில் 94 இலட்சங்களை மாத்திரமே வசூலித்தது!!! இரண்டு திரைப்படங்களிலும் கமல்தான் நாயகன், ரவிக்குமார்தான் இயக்குனர், அசினுக்கு பதில் திரிஷா, மாதவன் வேறு நடித்திருந்தார், மற்றும் தசாவதாரத்திற்கு பின்னர் வருவதனால் கூடுதல் எதிர்பார்ப்பு வேறு!! அப்படி இருந்தும் தசாவதாரம் மூன்று நாட்க்களில் பெற்ற வசூலை மன்மதன் அம்பு நான்கு நாட்களில்கூட பெறவில்லை!! அதற்க்குக் காரணம் கமலின் 10 கெட்டப் என்பதால் தசாவதாரத்திற்கு இருந்த மலையளவு எதிர்பார்ப்பு, அந்த எதிர்பார்ப்பு அதன் பின்னரான மற்றைய கமல் படங்களுக்கு அமையவில்லை, விஸ்வரூபத்தில் அமைகிறதா என பார்ப்போம்!!

அஜித் - King of Opining, Gilli Of Kollywood போன்ற சொற்களால் ஆங்கில இலத்திரனியல் ஊடகங்களால் புகழப்படும் நடிகர். மிகக் குறைவான விளம்பரங்களுடன்; தொலைக்காட்சிகளுக்கு பேட்டிகள் கொடுக்காமல்; பெரிய பானர், பெரிய இயக்குனர் என பெரிய கூட்டணி இல்லாமல்; எத்தனை தோல்விகளை தொடர்ந்து கொடுத்தாலும் அடுத்துவரும் ஒவ்வொரு திரைப்படத்திற்கும் ரசிகர்கள் கொடுக்கும் மலையளவு வரவேற்ப்பை வைத்துத்தான் அஜித்திற்கு மேற்சொன்ன பட்டங்கள் அடைமொழியாக கொள்ளப்படுகின்றது!! அஜித்தை பொறுத்தவரை எந்த திரைப்படத்திற்கும் 95 % ஓப்பினிங் ரசிகர்களால் கொடுக்கப்படும்; ஆனாலும் அஜித் திரைப்படங்களில் அஜித்தின் பட்டப் பெயர்களை மெய்ப்பிக்கும் வகையில் அதிகம் ஓப்பினிங் வசூலை கொடுத்த திரைப்படங்கள் 'பில்லா' மற்றும் 'மங்காத்தா' திரைப்படங்கள்தான்; அன்றைய தேதியில் 'பில்லா' சிவாஜிக்கு அடுத்து மிகப்பெரிய ஓப்பினிங், 'மங்காத்தா' எந்திரனுக்கு அடுத்து மிகப்பெரிய ஓப்பினிங் !!!

விக்ரம் - 2005 ஆம் ஆண்டுக்கு பின்னர் சொல்லிக்கொள்ளும்படி பெரிதாக வெற்றித் திரைப்படங்கள் இல்லை, ஆனாலும் விக்ரமின் ஒவ்வொரு திரைப்படத்திற்கும் கிடைக்கும் ஓப்பினிங் மிக அதிகம்!! அதற்க்கு காரணம் விக்ரம் மாத்திரமன்னு!! அந்தந்த திரைப்படங்கள் மீதான அளவுக்கதிகமான எதிர்பார்ப்புக்கள்தான் (அதிகமான திரைப்படங்கள் தோற்க்கவும் அவைதான் காரணம்) அதிக ஓப்பினிங் கிடைக்க முக்கிய காரணம். விக்ரம், சுசிகணேசன் கூட்டணியில் மிகப்பெரும் எதிர்பார்ப்போடு வெளிவந்த கந்தசாமி திரைப்படத்தின் ஓப்பினிங் சென்னையில் மூன்று நாட்களில் 93 இலட்சங்கள்; இந்த தொகையை கடக்க அஜித் மங்காத்தாவரையிலும், விஜய் வேலாயுதம் வரையிலும், சூர்யா 7 ஆம் அறிவிவு வரையிலும் காத்திருக்கவேண்டி வந்தது!!! அதேபோல மணிரத்தினம், விக்ரம் கூட்டணியில் மிகப்பெரும் எதிர்பார்ப்பில் வெளிவந்த ராவணன் சென்னையில் மூன்று நாட்களில் 88 இலட்சங்களை வசூலித்தது!!! தெய்வத்திருமகள், ராஜபாட்டை போன்ற திரைப்படங்களும் மூன்று நாட்க்களில் முறையே 80, 95 இலட்சம்வரை வசூலித்திருந்தது!!விஜய் - வேலாயுதம் திரைப்படம் வரை மிகப்பெரிய ஓப்பினிங் எதுவும் விஜய்க்கு அமையவில்லை! அதற்க்கு முந்தய திரைப்படங்களில் சண் பிக்சர்ஸின் விளம்பர உதவியுடன் 'வேட்டைக்காரன்' மூன்று நாட்களில் எட்டிய 89 இலட்சங்கள்தான் சென்னையில் விஜயின் அதிகபட்ச ஓப்பினிங். வேலாயுதம் விஜய்க்கு மிகப்பெரிய ஓப்பினிங்கை பெற்றுக் கொடுத்தாலும் அதிக திரையரங்குகளில், அதிக எதிர்பார்ப்போடு வெளியாகிய '7 ஆம் அறிவின்' ஓப்பினிங்கை தாண்டமுடியவில்லை!!! ஷங்கர், விஜய் கூட்டணியில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட 'நண்பன்' திரைப்படம் சிறப்பான ஓப்பினிங்கை பெற்றாலும் முன்னைய வேலாயுதத்தை கடக்கவில்லை!!

அதிகளவில் ரசிகர்கள் இருந்தாலும் ஒவ்வொரு காலகட்டத்திலும் போட்டி நடிகர்களைவிட குறைவான ஓப்பினிங்கை விஜய் பெற இரண்டு முக்கிய கரணங்கள் 1) பெரிய பானர், பெரிய இயக்குனர், பெரிய பட்ஜெட் என பொதுவான ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பை தூண்டும் பெரிய பட்ஜெட் திரைப்படங்கள் எதிலும் விஜய் நடிக்காமையும் 2) அதிகளவிலான விஜய் ரசிகர்கள் பெண்களாகவும், குழந்தைகளாகவும் இருப்பதால் முதல் வாரம் திரையரங்கு செல்வதற்கு சாத்தியகுறைவு உள்ளமையும் முக்கிய காரணங்கள். ஆனாலும் விஜய் ரசிகர்களால் கொடுக்கப்படும் ஓப்பினிங் அண்மைக்காலங்களில் முன்னரைவிட கணிசமான அளவு அதிகரித்து வருகின்றது!! முருகதாஸ், விஜய் இணையும் கமர்சியல் கூட்டணி என்பதால் விஜய் படங்களில் அதிகளவு ஓப்பினிங் பெற்ற திரைப்படமாக துப்பாக்கி அமையலாம்!!!

சூர்யா - இதுவரை சூர்யாவிற்கென்று தனிப்பட்ட ரீதியில் பெரியளவு ஓப்பினிங் கிடைக்கவில்லை ஆயினும் சூர்யா சேரும் கூட்டணியை பொறுத்து அவரது ஓப்பினிங் வசூல் மாறுபடும். சூர்யாவின் சிங்கம் திரைப்படத்தின் ஓப்பினிங் சென்னையில் மூன்று நாட்க்களில் 77 இலட்சம்தான், ஆதவனின் மூன்றுநாள் வசூல் சென்னையில் 54 இலட்சம்தான்; ஆனால் 7 ஆம் அறிவின் முதல் ஐந்துநாள் வசூல் 2 கோடி 20 இலட்சம்; இது '7 ஆம் அறிவு' திரைப்படத்தின் மீதான மிகப்பெரும் எதிர்பார்ப்புக்கு கிடைத்த ஓப்பினிங், 'ஒரு கல் ஒரு கண்ணாடி' வரும்வரை இதுதான் மிகப்பெரும் ஓப்பினிங்!!!(எந்திரன் தவிர்த்து) இதேபோல முன்னரும் ஒருதடவை 'வாரணம் ஆயிரம்' வரும்போது சூர்யாவிற்கு மிகப்பெரும் ஓப்பினிங் கிடைத்தது; சென்னையில் மூன்று நாட்க்களில் அன்று 75 இலட்சம்வரை வசூலானது; இது அன்று அஜித், விஜய் எட்டாத தொகை; காரணம் கௌதம் மேனன், சூர்யா கூட்டணிமீதான பெரும் எதிர்பார்ப்பு!!! இந்த தொகையை சூர்யாவின் மிகப்பெரும் வெற்றித் திரைப்படமான அயன்கூட எட்டவில்லை!!!!தனுஷ், சிம்பு - மாறிமாறி இருவரும் தமது சாதனைகளை முறியடித்துக்கொண்டு வருகின்றார்கள்; கௌதம் மேனன், ஏ.ஆர்,ரகுமான் கூட்டணிமீதான எதிர்பார்ப்பால் 'விண்ணைத்தாண்டி வருவாயா' மூன்று நாட்களில் 64 இலட்சங்களை சென்னையில் வசூலித்தது. செல்வராகவன், தனுஸ் கூட்டணி மீதான எதிர்பார்ப்பில் 'மயக்கம் என்ன' மூன்று நாட்க்களில் 97 இலட்சங்களை வசூலித்தது. சிம்புவின் 'ஒஸ்தி' நான்கு நாட்களில் 1 கோடி 33 இலட்சங்களை வசூலித்தது. கொலைவெறி கொடுத்த எதிர்பார்ப்பால் தனுஸின் '3' திரைப்படம் மிகப்பெரும் ஓப்பினிங்கான ஒரு கோடி 31 இலட்சங்களை சென்னையில் வசூலித்திருக்கின்றது!!! இது ஒரு மிகப்பெரிய தொகை!!! இருவருக்கும் ஒவ்வொரு திரைப்படமும் ஏறுமுகத்தில் ஓப்பினிங்கை கொடுத்துக்கொண்டிருப்பது இருவருக்கு ஆரோக்கியமான விடயம்!!

கார்த்தி - முதல் திரைப்படமான பருத்தி வீரனுக்கு எதிராபார்க்காதளவிற்கு மிகப்பெரியளவில் ஓப்பினிங் கிடைத்தது; காரணம் இயக்குனர் அமீரா, சூர்யாவின் தம்பி என்கின்ற கார்த்தி மீதான எதிர்பார்ப்பா என்பது பதில் தெரியாத கேள்வி!! அதனை தொடர்ந்து கார்த்தியின் ஒவ்வொரு திரைப்படத்திற்கும் சிறந்த ஓப்பினிங் கிடைத்துக்கொண்டே இருக்கின்றது!!! கார்த்திக்கு அடுத்து நடிகர்களில் விஷால், ஜீவா, ஆர்யா போன்றோருக்கும் கணிசமான ஓப்பினிங் கிடைக்கின்றது!!!

நடிகர்களை தாண்டியும் ஒரு சில திரைப்படங்களுக்கு எதிர்பார்க்காதளவிற்கு ஓப்பினிங் கிடைத்திருக்கின்றது; அப்படியான இரு சந்தர்ப்பங்கள் சிலவருடங்களுக்குள் நிகழ்ந்துக்கான 1) வடிவேலுவின் 'இந்திரலோகத்தில் நா அழகப்பன்', 2) ராஜேஷ் சந்தானம் எதிர்பார்ப்பில் வெளிவந்த 'ஒரு கல் ஒரு கண்ணாடி'. 'இந்திரலோகத்தில் நா அழகப்பன்' முதல் மூன்று நாட்க்களில் சென்னையில் 40 இலட்சங்கள்வரை வசூலித்தது, இது அன்று எந்த விஜய், சூர்யா திரைப்படங்களும் வசூலிக்காத ஓப்பினிங்!! அதற்க்கு காரணம் 'இம்சை அரசன்' திரைப்படத்தால் வடிவேலுவுக்கு ஏற்ப்பட்ட எதிர்பார்ப்புத்தான்!!

இன்று ஒரு கல் ஒரு கண்ணாடி யாருமே எதிர்பார்க்காத அளவிற்கு முதல் மூன்று நாட்களில் சென்னையில் 1 கோடி 73 இலட்சம்வரை வசூலித்திருக்கின்றது; இது ஒரு மிகபெரும் தொகை!!! அஜித், விஜய், சூர்யா போன்ற மிக அதிகமான ரசிகர்களை கொண்ட நடிகர்களது திரைப்படங்களின் வசூலை அறிமுக நாயகன் உதயநிதியின் திரைப்படம் எப்படி கடந்து சென்றது!!! காரணம் உதயநிதி அல்ல என்பது உதயநிதிக்கும் தெரியும். அப்படிஎன்றால் இந்த ஓப்பினிங் யாருக்கு? சந்தானத்திற்க்கா? இல்லை இயக்குனர் ராஜேஷிற்கா? இருவரும் தனித்தனியாக இல்லை, இருவரும் ஒன்றாக சேர்ந்த கூட்டணிக்குத்தான் இந்த ஓப்பினிங்!!!


சந்தானம் இல்லாமல் ராஜேஷ் ஒரு படத்தை இயக்கினாலோ, ராஜேஷ் இல்லாமல் சந்தானம் வேறு திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்ததாலோ இந்த ஓப்பினிங் நிச்சயமாக சாத்தியமில்லை. இருவரும் சேரும்போது ஏற்ப்பட்ட எதிர்பார்ப்புத்தான் இந்த ஓப்பினிங்கின் இரகசியம்!!! மற்றும் விஷேடதினங்களிலேயே அதிக மக்கள் திரையரங்குவரும் சித்திரை புத்தாண்டு (காரணம் கோடைவிடுமுறை) தினத்தில் போட்டிக்கு வேறெந்த திரைப்படமும் வராமையும் இதன் பலம். டிரெயிலர் மற்றும் தமது முன்னைய திரைப்படங்கள் மூலம் இதுவொரு பக்கா காமடி பொழுதுபோக்கு திரைப்படம் என்பதை படக்குழு தெளிவாக மக்களுக்கு உணர்த்தி இருந்தமையால் எல்லா நடிகர்களின் ரசிகர்களும் இந்த திரைப்படத்தை விரும்பி எதிர்பார்த்திருந்தனர், அதுதான் இந்த திரைப்படம் அதிகளவு ஓப்பினிங் பெற முக்கிய காரணம்!!!

ஒரு ஹீரோதான் ஓப்பினிங்கின் காரணகர்த்தா என்றால் ரஜினிக்கு அடுத்து தமிழ் சினிமாவின் மிகப்பெரிய ஓப்பினிங் உதயநிதிக்குத்தான்!! இதை யாரவது ஒத்துக்கொள்வார்களா? ஓப்பினிங் என்பது ஹீரோவைவிட அந்த திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பில்த்தான் எப்போதும் தங்கி இருக்கின்றது; அதிகமாக ஹீரோக்கள்தான் அந்த எதிர்பார்ப்பிற்கு காரணமாக அமைவதால் ஹீரோக்களை முன்னிறுத்தி ஓப்பினிங் சொல்லப்படுகிறது. ஆனாலும் ஹீரோக்களைதாண்டி எதிர்பார்ப்புக்கள் அதிக ஓப்பினிங்கை பெறுவது அப்பப்போ இடம்பெற்றுக் கொண்டுதான் இருக்கின்றது, இனியும் இடம்பெறும்!!!

குறிப்பு :- 

* ஒரு திரைப்படத்தின் ஓப்பினிங்கிற்கும் அதன் வெற்றிக்கும் சம்பந்தமில்லை.

* பதிவில் சென்னை பாக்ஸ் ஆபீஸ் மட்டுமே பெறுமதிகளில் சொல்லப்பட்டுள்ளது.

* Behindwoods தளம் 2007 ஆம் ஆண்டுமுதல் வாரவாரம் தவறாமல் சென்னை பாக்ஸ் ஆபீஸ் ரிப்போட் கொடுத்துக்கொண்டு இருக்கின்றது, இங்கு சொல்லப்பட்ட விபரங்கள் அதன் அடிப்படையில்த்தான் சொல்லப்பட்டிருக்கின்றது!!! 100 % நம்பகத்தன்மை உண்டென்று சொல்லமுடியாவிட்டாலும் Behindwoods பக்கச்சார்பான தளமில்லை என்பதை அனைத்து நடிகர்களும் Behindwoods உடன் கொண்டிருக்கும் நெருக்கம் உணர்த்துகின்றது!!!

* ஒரு திரைப்படம் வெளியாகியவுடன் சொல்லப்படும் மொத்த, சில்லறை வசூல்கள் எவையும் ஆதாரம் இல்லாமல் குறிப்பிட்ட தரப்புக்களால் சொல்லப்படுபவை என்பதால் அவ்வாறு சொல்லப்பட்ட எந்த இலக்கங்களையும் இந்த பதிவில் சேர்த்துக்கொள்ளவில்லை.

* Official இல்லாவிட்டாலும் கடந்த 5 ஆண்டிகளாக மூன்று இடங்களுக்கு பாக்ஸ் ஆபீஸ் ரிப்போட் வாராவாரம் வெளிவந்துகொண்டிருக்கின்றன; சென்னை, UK, மலேசியா (இவை பக்கச்சார்ப்பில்லாத நம்பகமான தளங்கள்)

* இவ்வளவு தொளில்நுட்பம் வளர்ச்சி அடைந்த நிலையிலும் தமிழ் சினிமாவின் தயாரிப்பாளர், விநியோகிஸ்தர்கள் இதுவரை ஒரு திரைப்படத்தின் உண்மையான வசூலை வாரவாரம் வெளியிடுமளவிற்கு இன்னமும் தயாராகாதது ஏன் என்று புரியவில்லை!!! வருமானவரிக்காகவா ? இல்லை நடிகர்களின் இமேஜை காப்பாற்றவா? Official ஆக வாராவாரம் Box Office இனை அறிவித்தால் எல்லோருக்குமே நல்லது; குறிப்பாக சமூகத்தளங்களில் ரசிகர்களது சண்டையும் நேரமும் அதிகளவில் மிச்சமாகும், அத்துடன் போலியாக ஆளாளுக்கு கணக்கு காட்டி ரசிகர்களை ஏமாற்றி இணையத்தை ஓட்டுவதும் குறைவடையும்!! குறிப்பாக தொலைக்காட்சிகளில் தோன்றி அவ்வளவு வசூல், இவ்வளவு வசூல் என கதை அளந்து மக்களை ஏமாற்றும் படக்குளுவினர்களது நாடகங்களும் உடைபட்டுப் போகும்!!

*--------*

Friday, April 13, 2012

ஒரு கல் ஒரு கண்ணாடி


உதயநிதி ஸ்டாலின் தயாரிப்பாளர் + அறிமுக நாயகனாகவும், ஹன்சிகா கதாநாயகியாகவும், சந்தானம் ஹீரோ + காமடியன் + குணச்சித்திரம் என பல பரிமாணங்களிலும் நடிக்க; ஹாரிஸ் ஜெயராஜ் இசையில், பாலசுப்ரமணியத்த்தின் ஒளிப்பதிவில், M.ராஜேஷ் இயக்கிய திரைப்படம்தான் 'ஒரு கல் ஒரு கண்ணாடி' (ஓகே ஓகே) இவர்களுடன் கௌரவ வேடத்தில் ஆர்யா, சினேகா, ஆண்ரியாவும் முக்கிய வேடத்தில் சரண்யா பொன்வண்ணனும் நடித்துள்ளார். 2012 கோடை விடுமுறை + சித்திரை புது வருடத்திற்கும் தமிழ் சினிமா ரசிகர்களுக்காக வெளிவந்துள்ள அதிகபட்ட பொழுதுபோக்கு திரைப்படம் 'ஒரு கல் ஒரு கண்ணாடி' என்றால் அது மிகையில்லை.

ஹீரோவாக உதயநிதி - சாம் அண்டர்சன், பவர் ஸ்டார் ரேஞ்சிற்கு கலாய்க்கப்படுவார் என எதிர்பார்த்த அனைவருக்கும் மிகுந்த ஏமாற்றமே மிஞ்சியது!!! எனக்கும்தான். மனிதர் அசத்தி இருக்கிறார், ஆகா ஓகோன்னு நடிப்பில் புரட்டி எல்லாம் போடவில்லை, ஆனால் இயக்குனர் கொடுக்க நினைத்ததை உள்வாங்கி சிறப்பான வெளிப்பாட்டை கொடுத்திருக்கிறார். இவர் முதல் திரைப்படத்தில் நடிப்பது போன்ற எண்ணம் காதல் & பாடல் காட்சிகளில் மட்டும் அப்பப்போ தெரிகிறது, சிறிது தயக்கம் உள்ளதுபோன்ற உணர்வு, மற்ற இடங்களில் சிறப்பாக அசத்தி இருக்கிறார். வசன உச்சரிப்பு, உடல்மொழி போன்றவைகூட இந்த திரைப்படத்திற்கு போதுமான அளவில் நன்றாகவே உள்ளது. தனக்கேற்ற கதையை தெரிவு செய்து நடித்தால் தமிழ் சினிமாவில் இவரும் தாக்குப்பிடிக்கலாம்!!!!!

ஹன்சிகா - நன்றாக ஊதிய பலூன் போல் இருக்கிறார், அதிக தசை போட்டதாலோ என்னமோ முகமும் அதைத்ததுபோல உள்ளது, உடைகளும் பெரிதாக பொருந்தவில்லை, பெரிதாக கவரவில்லை, ஒருவேளை சந்தானம் சொன்னதுபோல நைட்டியில் நல்லாயிருப்பாரோ என்னமோ :-)) ஆனாலும் அவருக்கான பாத்திரத்தை குறைவில்லாமல் வெளிப்படுத்தி இருக்கிறார். ஹன்சிகாவிற்கு இப்ப 'உடை' குறைப்பைவிட 'எடை' குறைப்புத்தான் அவசியம் (இதில இவங்க 58 Kg ஆம்:p), இல்லையென்றால் அடுத்தடுத்த ஆண்டுகளில் 'மானாட மயிலாட'வில் நமீதாவுக்கு பக்கத்தில இன்னொரு சீட் போடும் நிலை வரலாம்!!!!!


சந்தானம் - சந்தானம் இல்லையென்றால் 'ஒரு கல் ஒரு கண்ணாடி' இல்லவே இல்லை!!!! அசத்துகிறார், கலக்குகிறார், பின்னுகிறார், ஜமாய்க்கிறார், பிரிச்சு மேய்கிறார்...... இந்தமாதிரி வார்த்தைகள் எத்தனை இருக்கோ அத்தனையையும் சேர்த்துக்கோங்க. என்ன மனுசன்யா இந்தாளு!!!!! எனக்கு தெரிஞ்சு ரஜினி, விஜய், அஜித் திரைப்படங்களுக்கு அடுத்து முதல்க்காட்சி அரங்குநிறைந்த காட்சியாக யாழ்ப்பாணம் ராஜா திரையரங்கில் நான் பார்த்த ஒரே திரைப்படம் இதுதான். புதுவருட விடுமுறை, கோடைவிடுமுறை என பல காரணிகள் இருந்தாலும் அதிகமானவர்களை திரையரங்கிற்கு வரவைத்தது சந்தானம்தான் என்பதில் சந்தேகமே இல்லை; இதை அவரும், அவர் பெயரும் திரையில் அறிமுகமானபோது பறந்த விசில், மற்றும் கரகோஷம் உணர்த்தியது.

என்ன ஒரு உடல் மொழி!!! எத்தனை விதமான வசன உச்சரிப்பு!!! எத்தனை விதமான ரியாக்சன்கள்!! அசத்தலான டைமிங், மொத்தத்தில் மிகச்சிறப்பான Screen present. சந்தானம் - One Of the Best Actor!!! ஒரு முழுத் திரைப்படத்தையே ஒரு காமடியனை நம்பி இயக்கி, அதில் மூன்று தடவைகள் ஒரு இயக்குனர் ஜெயித்திருக்கிறார் என்றால் அவரை காமடியன் என்பதைவிட 'ஹீரோ' என்று சொல்வதே சால பொருந்தும். இந்த்த திரைப்படத்தின் பின்னர் சந்தானத்திற்கு ரசிகர்கள் நிச்சயம் அதிகரிப்பார்கள் என்று அடித்து சொல்லலாம், 'ஒரு கல் ஒரு கண்ணாடி' சந்தானத்தின் கேரியரில் மற்றொரு முத்திரை.

சரண்யா பொன்வண்ணன் - வழமையான அம்மா பாத்திரம், இவங்களைவிட்டா அந்த கேரக்டருக்கு வேறு தேர்வே இல்லை, வழமைபோல கலக்கி இருக்கிறாங்க. ஆர்யா - வழமையாக ராஜேஷ் திரைப்படங்களை முடித்துவைக்க ஒரு ஹீரோ வருவார், 'சிவா மனசில சக்தி'க்கு அப்புறம் மீண்டும் ஆர்யா இரண்டாவது தடவையாக திரைப்படத்தை முடித்து வைக்கிறார். சினேகா - பிரசன்னா குடுத்து வச்சவன்யா!!! ம்ம்ம்... :p ஆண்ட்ரியா - வேஸ்டா சும்மா ஜாலிக்கு வந்திட்டு போனாங்க!!


ஹாரிஸ் ஜெயராச்சின் இசையில் பாடல்கள் எல்லாமே நன்றாக படமாக்கப்பட்டிருக்கின்றன, உதயநிதி சொதப்பாதது ஆச்சரியம்!!! சூப் சாங்கான "வேணாம் மச்சான் வேணாம்" படமாக்கியவிதம் மற்றும் அந்தப் பாடலில் சந்தானத்தின் காஸ்டியூம்ஸ் கலக்கல்! பின்னணி இசையை கவனிக்கவே முடியவில்லை (படம் முழுக்க விசில் & கைதட்டல் சத்தத்தில எப்டி ரீ ரெக்கோடிங் புரியும்!!!) தப்பிச்சீங்க ஹாரிஸ் :-)) பால்சுப்ரமணியத்தின் கமரா அழகியல்; தமிழ் சினிமாவின் கலர்புல் ஒளிப்பதிவாளர்களில் முக்கியமானவரான பாலா ஒளிப்பதிவில் சொத்தப்பினல்த்தான் ஆச்சரியம், வழமைபோலவே கலக்கி இருக்கிறார், கண்ணுக்கு குளிர்ச்சியான ஒளிப்பதிவு!!!! விவேக் ஹர்சன் படத்தொகுப்பு விறுவிறு!!!

M.ராஜேஷ் - அடித்து சொல்லலாம் இது இவரது மூன்றாவது ஹிட் திரைப்படம் என்று!!! மூன்றும் ஒரே பார்முலா, ஆனாலும் ரச்கர்களுக்கு சலிக்கவே சலிக்காது, யாருக்குத்தான் காமடி சலிக்கும்!!! பேரரசு செய்யும் வேலைதான், ஆனால் இங்கே ராஜேஷ் கலர்புல்லா, செம ஜாலியா, சிறந்த டைம்பாஸா, சிறந்த பொழுதுபோக்கா 2.30 மணி நேரமும் நேரம் போனது தெரியாம ஒரு படத்தை இயக்கியிருக்கிறார்; அதுதான் இவரின் வெற்றி ரகசியம்!!! வேகமான, மிகச்சிறந்த டைமிங் காமடியுடனான திரைக்கதை, மிகச்சிறப்பான வசனங்கள், அதிலும் காமடி வசனங்கள் எல்லாமே அடி தூள் ரகம்!!!! இவைதான் ராஜேஷின் சுமாரான இயக்கத்தையும், லாஜிக் மீறல்களையும் மறைத்து நிற்கின்றன. ஒண்ணுமே இல்லாத கதைக்கு சிறப்பான திரைக்கதை + மிகச்சிறப்பான காமடி வசனங்கள் சேர்த்து ரசிகர்களை படம் முழுவது விசில் + கைதட்டல் என அதிர வைத்த ராஜேசுக்கு ஒரு சலூட் போடலாம்!!


கலைப்படைப்புக்களை எடுக்கிறவங்க எடுக்கட்டும், அவங்க தமிழ் சினிமாவை அடுத்த லெவலுக்கு கொண்டு போகட்டும்!! அதே நேரம் ராஜேஷ் போன்ற பக்கா காமடி + பொழுதுபோக்கு திரைப்படங்களை கொடுக்கும் இயக்குனர்களை நிச்சயம் வரவேற்கலாம், இவர்கள் தமிழ் சினிமாவிற்கு முக்கியமில்லாமல் இருக்கலாம், ஆனால் தமிழ் சினிமாவை வாழவைக்கும் ரசிகர்களுக்கு தமிழ் சினிமாவை தொடர்ந்தும் நேசிப்பதற்கு இவர்கள்தான் பூஸ்ட்!!! ஒட்டுமொத்த திரையரங்குமே ஜாலியாக கைதட்டி, விசிலடித்து, கரகோஷம் செய்து ஒரு படத்தை முழுமையாக ரசிக்கிறார்கள் என்றால் இவர்களுக்கு சபாஷ் போடுவதில் தப்பில்லை!!!

படத்தின் மைனஸ் என்றால் - போங்கையா மைனசும் மண்ணாங்கட்டியும்!!! படம் முழுக்க எல்லோரும் எஞ்ஜோய் பண்ணும்போது எதுக்கு அதை தேடிக்கிட்டு!!! இதயநோய், வயிற்றுவலி உள்ளவர்கள், சிரித்தால் நஷ்டம் ஏற்ப்படும் என்று நினைப்பவர்கள் தவிர்த்து மிகுதி அனைவருக்கும் இது ஒரு பக்கா விருந்து....

ஒரு கல் ஒரு கண்ணாடி - சூப்பர், செம, ஜாலி, கலக்கல்!!! Fact... Fact...Fact...Fact...Fact..

Wednesday, April 4, 2012

மானுஷ புத்திரனுக்கு ஒரு மடல்...... 
மானுஷ புத்திரன் அவர்களுக்கு......

எழுத்தாளர்/கவிஞர் என்று தங்களை அடைமொழி வைத்துக் கூப்பிட எனக்கு சம்மதமில்லை, ஒரு சாதாரண எள்ளலையே தாங்கிக்கொள்ள முடியாமல் உறவை துண்டிப்பவரை எப்படி எழுத்தாளன் என்று என்னால் குறிப்பிட முடியும்!! நீங்கள் மட்டுமல்ல தம்மை எழுத்தாளர்கள் என்று சொல்லிக்கொள்ளும் பலரும் இதே செய்கையைத்தான் செய்கின்றார்கள் என்பதுதான் வருத்தமான விடயம். எப்பேற்ப்பட்ட மன்னனையும் தன் கவி வல்லமையால் கட்டிப்போட்ட வரலாறு தமிழ்க் கவிகளுக்கு உண்டு. பரமசிவனைப் பார்த்தே "நெற்றிக்கண்ணை திறந்தாலும் குற்றம் குற்றமே" என்று சொன்னான் நக்கீரன். அப்பேர்ப்பட்ட தமிழ்க் கவிகளின் வழியில் இன்றைய தமிழ்க் கவிகளையும் எண்ணிப் பார்க்கிறேன், நகைப்புத்தான் மிஞ்சுகின்றது!!!!

நான் ஒன்றும் தமிழ் அறிஞனோ எழுத்தாளனோ அல்ல, உண்மையை சொல்லப்போனால் நான் ஒரு சிறந்த வாசகனும் இல்லை, ஆங்காங்கே கிடப்பதை எடுத்துப் படிப்பதுதான் என்னுடைய அதிகபட்ச வாசிப்பு! சினிமா கவிஞர்கள் தவிர்த்து இன்றைய எந்த எழுத்தாளனையும் துளியளவும் வாசித்தது கிடையாது; இதை பெருமையாக சொல்லவில்லை, எனக்கு ஏனோ நாட்டம் வரவில்லை. அதனால் தங்களையும் தங்கள் எழுத்தையும் அறிந்திருக்கும் வாய்ப்பு எனக்கு அமையவில்லை. எழுத்தாளர் ராமகிருஷ்ணன் அவர்களுக்கு தங்கள் அமைப்பு எடுத்த பாராட்டு விழாவிலே ரஜினிகாந்த் பங்கேற்ற போதுதான் தங்களது பெயரை முதல் முதல் அறிந்துகொண்டேன்.

முகப்புத்தகத்தில் தங்களது ஒரு கருத்திற்கு என் நண்பர்களில் யாரோ ஒருவர் இட்ட பதில் கருத்துத்தான் எனக்கு தங்களை அறிமுகப்படுத்தியது. விழா ஏற்பாட்டாளர் என்பதால் ரஜினிகாந்த் பற்றிய தகவல்களை சுடச்சுட பெறலாம் என்றுதான் தங்களிடம் நண்பர் ஆவதற்கான வேண்டுகோளை முகப்புத்தகத்தில் விடுத்தேன்; அது முழுக்க முழுக்க ஒரு அடித்தட்டு ரசிகனின் மனநிலையில் அனுப்பப்பட்டது. தாங்களும் எனது கோரிக்கையை ஏற்று என்னை தங்கள் நண்பர் பட்டியலில் இணைத்தீர்கள். ரஜினியின் ரசிகனாக ராமகிருஷ்ணன் விழாச் செய்திகளை படிக்க உங்களிடம் தொடர்பை ஏற்ப்படுத்திய எனக்கு தங்களது பொதுவான கருத்துக்களும், கிண்டல்களும் பிடித்துப்போகவே தொடர்ந்து உங்கள் கருத்துக்களை ரசித்து படித்து வந்தேன்; நன்றாக ரசித்தால் Like குறியீட்டை அழுத்தியும் இருக்கின்றேன்.

இன்று(3//2012) மும்பாய் அணி, சச்சின், ஹர்பஜன், தலைமைத்துவம் பற்றிய செய்தியையும் அதற்க்கு தங்களது எள்ளலையும் கலந்து ஒரு நையாண்டி கருத்தாக முகப்புத்தகத்தில் இட்டிருந்தீர்கள். தங்களது அந்தக் கருத்திற்கு "சும்மா இருந்துகொண்டு அடுத்தவனை விமர்சிப்பதில்த்தான் எத்தனை சுகம்; தொடரட்டும் தங்கள் பொன்னான பணி:p" என்று பதில் கருத்திட்டேன்; தங்கள் நண்பர்களில் இருவர் அடுத்த நிமிடமே அதனை Like செய்திருந்தனர். ஆனால் அடுத்த சில நிமிடங்களில் எனது நண்பர் ஒருவர் "நீங்கள் இட்ட கருத்தை மானுஷ புத்திரன் பக்கத்தில் காணவில்லை" என்று சொன்னார். நண்பருக்கோ நான் இட்ட கருத்துத்தான் காணாமல் போனது, ஆனால் எனக்கோ தாங்களே காணாமல் போயிருந்தீர்கள்!!! ஆமாம் சார் என்னை தாங்கள் முகப்புத்தகத்தில் தங்களுடனான தொடர்பில் இருந்து மறைத்துவிட்டீர்கள்!!(U Blocked Me)

இப்படியொரு செய்கையை தங்களிடமிருந்து நான் கொஞ்சமும் எதிர்பாக்கவில்லை; "காலையில்த்தான் விவாதம் முடித்துவிட்டு வருகின்றேன்", "நாளைக்கு ஒரு விவாதம் இருக்கின்றது" போன்ற சொல்லாடல்களை தங்கள் முகப்புத்தகத்தில் பார்த்துப் பார்த்து தங்களை ஒரு விவாத கவிஞனாக உணர்ந்த எனக்கு; இந்த சிறு எள்ளல் தங்களை கோழையாக உணரும் நிலைக்கு இட்டுச்செல்லும் என்று நான் சிறிதும் எண்ணவில்லை!! இதற்கு முன்னர் ஒரேயொரு தடவைதான் தங்களுக்கு பதில்க் கருத்து சொல்லியிருக்கிறேன், அது தங்களுக்கு பாதிப்பில்லாமல் சொன்ன கருத்து; ஆனால் இன்றைய எனது கருத்து தங்களை மிகவும் பாதித்துவிட்டது, மன்னிக்கவும்!!!


எனது கருத்தில் தங்களுக்கு சம்மதம் இல்லாவிட்டால் அதற்க்கான பதிலை நேரடியாகவோ அல்லது சிலேடயாகவோ, கிண்டலாகவோ கொடுத்திருக்கலாம்; அதைவிடுத்து தங்களிடமிருந்து என்னை துண்டித்திருக்கிண்றீர்கள் என்றால் நான் என்ன வக்கிரமான, ஆபாசமான, வன்முறையான, இனவெறியான, உணர்வுகளை காயப்படுத்தும் சொற்களையா பயன்படுத்தி இருக்கிறேன்!!! உங்கள் முகப்புத்தகம்; தாங்கள் ஒருவரை அனுமதிப்பதற்கும், மறுப்பதற்கும், இடையிலேயே விலக்குவதற்கும் தங்களுக்கு முழு உரிமை இருக்கின்றது; ஆனால் ஒரு தமிழ்க் கவிஞனாக எழுத்தாளனாக இந்த சிறு எள்ளலை தாங்கிக்கொள்ள முடியாமல் என்னை மறுத்ததுதான் வேதனையானவிடயம்!!!

தங்களுக்காக ஒரு ஒரு வரலாற்று சம்பவம்

சிலம்பி என்னும் பெண்ணிற்கு பாட்டெழுதிய விடயத்தில் ஒளவையாருக்கும் கம்பருக்கும் ஒரு சிறு கருத்துவேறுபாடு; ஒளவையார் மீது கம்பர் கோபத்தில் இருந்தாலும் அதை நேரடியாக வெளிக்காட்ட முடியவில்லை. ஒருநாள் ஒளவையார் வயல் வரப்பிலே காற்று வாங்க நடந்துகொண்டிருந்தார்; அப்படி அவர் செல்லும் வழியில் கம்பரை சந்திக்கவேண்டிய சூழ்நிலை ஏற்ப்பட்டது. சந்தர்ப்பத்தை பயன்படுத்திய கம்பர் ஆரை கீரை ஒன்றை கையால் கிள்ளியபடி கீரைக்கு சொல்வதுபோல ஔவைக்கு சிலேடையாக முடிவிலே 'டீ' வரும்படி "ஒரு காலடீ, நாலிலைப் பந்தலடீ" என படித்தார். பாடலைக்கேட்ட ஔவைக்கு கோபம் வந்தாலும் அதை நேரடியாக வெளிக்காட்டவில்லை; தமிழமுதம் குடித்த தமிழ்க்கிழவி பதிலுக்கு.....

"எட்டேகால் லட்சணமே, எமனேறும் பரியே, மட்டில் பெரியம்மை வாகனமே, முட்டமேற்க் கூரையில்லா வீடே, குலராமன் தூதுவனே, ஆரையடா சொன்னாயது."
எனப் படித்தார்.

தமிழில் ஒவ்வொரு எழுத்திற்கும் மாத்திரை அளவு உள்ளது; (அ - 8, வ -1/4) எட்டேகால் லட்சணமே = அவலட்சணமே, எமனேறும் பரியே = எருமையே; மட்டில் பெரியம்மை வாகனமே = மூதேவியின் வாகனமான கழுதையே, முட்டமேற்க் கூரையில்லா வீடே = குட்டிச்சுவரே, குலராமன் தூதுவனே = குரங்கே; என சிலேடை பேசிய ஔவை இறுதியில் ஆரையடா சொன்னாயது என்பதில் "யாரைப்பார்த்து சொன்னாய்" எனவும் "நீ சொன்னதன் பொருள் ஆரைக் கீரை" எனவும் இருபொருள்பட 'அடா' வை அடைமொழியாக வைத்து கம்பருக்கு பதிலடி கொடுத்தார்.

இது தங்களுக்கு நிச்சயம் தெரிந்திருக்கும், இருந்தும் ஏன் சொல்கின்றேன் என்றால் அதிலுள்ள தமிழின் திமிரையும், கர்வத்தையும் ஞாபகப்படுத்தத்தான். உங்களிடமிருந்தும் இதைத்தான் தங்களை தொடரும், பின்பற்றும் வாசகர்கள் எதிர்பார்ப்பார்கள் என்று நினைக்கிறேன். என்னை தாங்கள் தங்கள் முகப்புத்தகத்தில் இருந்து தடுத்திருப்பதில் எனக்கு எந்த வருத்தமும் இல்லை. ஆனால் "இப்படியான செய்கைகளை நாம் செய்வதை யார் அவதானிக்கப் போகின்றார்கள், இது எப்படி மற்றவர்களுக்கு தெரியப்போகின்றது" என்கின்ற அசட்டையீனத்தில் ஒருவேளை இதை தாங்கள் செய்திருந்தால் இந்தப்பதிவு தங்களுக்கு எதிர்பாராத அதிர்ச்சி, மற்றும் எதிர்வரும் காலங்களில் என்னைப்போல ஒருவரை தூக்கி ஏறிய தாங்கள் சற்றேனும் சிந்திப்பீர்கள், அந்தவகையில் இதை ஒரு பாடமாக கூட எடுத்துக்கொள்ளலாம்!!

உங்கள் தமிழ் அறிவுக்கு முன்னாடி நான் எல்லாம் ஒன்றுமே இல்லை, ஆனாலும் ஏதோ சொல்லணுமின்னு தோணிச்சு, அதனால இதை உங்ககிட்ட சொல்லிக்கிறன், தப்பா இருந்தா மன்னிச்சுக்கோங்க. இப்படிக்கு -: இனியோருதடவை நீங்களாகவே நடப்புக்கு விண்ணப்பம் கோரினாலும் அதை 100 சதவிகிதம் நிராகரிக்கும், தங்கள் முன்னாள் முகப்புத்தக நண்பர்களில் ஒருவன், Arulanantham Jeevatharshan...