Thursday, September 30, 2010

எந்திரன்-திரைவிமர்சனம்(200 ஆவது பதிவு )
எந்திரன்- இந்த வார்த்தைதான் இன்றைய தேதியில் உலக தமிழர்களால் அதிகமாக உச்சரிக்கப்படும் வார்த்தையாக இருக்குமென்று அடித்து கூறலாம். கடந்த ஒரு வாரத்தில் பெரிசு முதல் சிறுசுவரை, பாமரன் முதல் படித்தவன்வரை, ஏழை முதல் பணக்காரன்வரை, ரஜினியை பிடித்தவர்கள் முதல் பிடிக்காதவர்கள்வரை, உலகின் பெரும்பான்மை தமிழர்களின் பேச்சும் எதிர்பார்ப்பும் எந்திரன்தான் என்றால் அது மிகையில்லை. இப்படியாக பலத்த எதிர்பார்ப்புகளுக்கு இடையில் வெளியாகிய எந்திரன் அதன் மிகை எதிர்பார்ப்பை பூர்த்தி செய்துள்ளதா என்றால் நிச்சயமாக பூர்த்தி செய்துள்ளதென்பதுதான் எனது பதில்(இவன் ரஜினி ரசிகன் என்பதால் இப்படி கூறுகிறான் என்று நீங்கள் நினைத்தால் அதற்க்கு நான் பொறுப்பல்ல, நிச்சயமாக நடுநிலை ரசிகர்களின் பதிலும் இதுவாகத்தான் இருக்கும்)

விஞ்ஞானபடாமாக இருந்தாலும் பக்கா ஜனரஞ்சகமான ஒரு காமர்சியல்படமாகதான் எந்திரன் தெரிகிறது. நிச்சயமாக பொழுதுபோக்கிற்காகவும் மகிழ்ச்சிக்காவும் திரையரங்கிற்கு வருபவர்களை எந்திரன் 100 % திருப்திப்படுத்தும் என்பதில் சந்தேகமேதும் இல்லை. ஒவ்வொரு ரஜினி ரசிகனும் பலதடவைகள் திரையங்குகளில் எந்திரனை தரிசிக்கபோவது உறுதி, இது நடுநிலை ரசிகர்களுக்கும் பொருந்தும்.மூன்று விதமான வேடங்களில் நடித்திருக்கும் ரஜினி மூன்று வேடங்களுக்கும் உடல்மொழி, வசன உச்சரிப்பு,மானரிசம் போன்றவற்றில் சிறப்பானமுறையில் வேறுபாடிகாட்டி கலக்கியுள்ளார். விஞ்ஞானியாக வரும் ரஜினி (வசீகரன்) சீடியஸ் கேரக்டர் என்றால் சிட்டிரோபோ படத்தின் கலகலப்பு கேரக்டர். இறுதியாக மூன்றாவதாக வரும் ரோபோ ரஜினி (படத்தின் ஹீரோ) முதல் இரண்டு ரஜினியையும் தூக்கிச்சாப்பிடுமளவிற்கு தனது நடிப்பால் அசத்தியிருக்கிறார், குறிப்பாக வசீகரனை ரோபோ கூட்டத்தில் தேடும்போது மூன்றாவது ரஜினி நடிக்கும் நடிப்பை ரஜினியை பிடிக்காதவர்களும் ரசிக்காமல் இருக்கமுடியாது.

அப்பப்போ வசீகரனை டென்ஷன் ஆக்கும்போது சிட்டி ரோபோவின் வசன உச்சரிப்பு படு பிரமாதம். இறுதிகாட்சியில் சிட்டியின் நடிப்பும் வசனமும் நிச்சயம் ரசிகர்கள் மனதில் ஒருவித கனத்தை ஏற்படுத்தியிருக்கும் என்பதில் சந்தேகமில்லை. காதல்காட்சிகளில் ஒருவித தயக்கமும் இல்லாமல் இளைஞர்களைபோல கலக்கும் சூப்பர்ஸ்டார் பாடல்காட்சிகளில் வயது திறமைக்கு தடையல்ல என்பதை உணர்த்தியிருக்கிறார். ஐஸ்வர்ய்யாமீது சிட்டிக்கு காதல்வரும்போது ரஜினி கொடுக்கும் உணர்ச்சிகளை விபரிப்பதர்க்கு வார்த்தைகள் இல்லை. சிட்டியும் வசீகரனும் ஒன்றாகவரும் காட்சிகள் அனைத்தும் படு பிரமாதமாக வந்திருக்கிறது. ரஜினியின் நடிப்புக்கு நீண்டநாட்களுக்கு பின்னர் கிடைத்துள்ள தீனிதான் எந்திரன்.

ஐஸ்வர்யாராய் அதிகமான தமிழ்பட நாயகிகள் போலல்லாது படம் முழுவதும் வருகிறார். காதல், கோபம், மகிழ்ச்சி, பயம், கவலை என அனைத்து உணர்வுகளையும் நன்றாக வெளிக்காட்டி சிறப்பான முறையில் தனது பங்களிப்பை ஆற்றியுள்ளார். பாடல்காட்சிகளில் தனது பாணியில் வழமைபோல பட்டையை கிளப்ப்பியிருக்கும் ஐஸிற்கு 37 வயதென்றால் யாராவது நம்புவார்களா? சிட்டியின்நிலையை சிட்டிக்கு புரியவைக்க முயற்ச்சிக்கும் காட்சிகளில்(சிட்டி காதலை வெளிப்படுத்தியவுடன்) தான் ஒரு முதிர்ச்சியான(நடிப்பில்) நடிகை என்பதை எமக்கு உணர்த்துகிறார்.

வில்லனாக நடித்திருக்கும் டானிக்கு பெரிதாக திறமையை வெளிப்படுத்தும் சந்தர்ப்பம் இல்லாவிட்டாலும் கொடுத்ததை சிறப்பாக செய்துமுடித்துள்ளார். சந்தானம், கருணாசின் காமடி சில இடங்களில் ரசிக்கவைத்தாலும் சில இடங்களில் ரசிக்கமுடியவில்லை. ஒருகாட்சியில் வந்தாலும் கலாபவன்மணியும், ஹனிபாவும் மனதில் நிற்கிறார்கள், வேறு எந்த கேரக்டர்களும் மனதில் ஒட்டுமளவிற்கு படத்தில் இல்லை, இதற்கு காரணம் படம் முழுவதும் ரஜினியினதும், ஐஸ்வர்யாவினதும் ஆதிக்கம்தான்.ரஜினி படத்தின் நாயகனாலும் உண்மையான எந்திரனின் நாயகன் ஷங்கர்தான், இதை ஒரு ரஜினி ரசிகனாக சொல்வதில் எனக்கு எந்தவித தயக்கமும் இல்லை, நிச்சயமாக இதுவொரு ஷங்கர் பாடம்தான், தளபதி எப்படி மணிரத்தினால் ரஜினிக்கு எடுக்கப்பட்ட திரைப்படமோ அதேபோல எந்திரன் ஷங்கரால் ரஜினிக்கு எடுக்கப்பட்ட திரைப்படம். இத்தனை பிரம்மாண்டத்தை ஒரு தமிழ்ப்படத்தில் வெறும் 150 கோடியில் கொடுக்கமுடியுமென்றால் அது ஷங்கரால் மட்டும்தான் முடியும். சிந்தித்து பார்க்கமுடியாத கற்பனை, திறமை. இறுதிகாட்சிகளை வாயைபிளந்தது பார்த்ததோடல்லாமல் இது "ஹோலிவூட் படமல்ல அதுக்கும்மேல்" என்பதுதான் பெரும்பாலானவர்களது திரையரங்க கருத்தாக இருந்தது.

ஆரம்பத்தில் காமடியாக நகர்ந்த ஷங்கரின் திரைக்கதை இடைவேளையின் பின்னர் சூடுபிடிக்க தொடக்கி இறுதி காட்சிகளில் சரவெடியாக மாறி படத்திற்கு பெரும்பலமாக அமைந்தது. சுஜாதாவின் கதைக்கு உயிர்கொடுத்த ஷங்கர் சுஜாதாவின் வசங்களுடன் மதன்கார்க்கியின் வசனங்களையும் தனது வசனங்களையும் படத்தின் தேவைக்கேற்றால்போல பயன்படுத்தியுள்ளார். சிட்டி ஐஸ்வர்யாவை விரும்புவதாக கூறுமிடத்தில் சிட்டியும் வசீகரனும் ஐஸ்வர்யாவும் பேசும் வசனங்கள், இறுதியாக சிட்டி பேசும் வசனங்கள்(குறிப்பாக கருணாஸ், சந்தானத்திடம் கூறும் வசனம்), கடைசியில் படம் முடியும்போது "சிந்திக்க தொடங்கியதால்" எனவரும் வசனம் உட்பட வசனங்கள் படத்தின் தரத்தை உயர்த்தியிருக்கின்றதென்றே சொல்லலாம்.

படத்தின் ஸ்பெஷல் எபக்ட் மற்றும் கிராபிக் காட்சிகள் என்பன இதற்க்கு முன்னர் எந்த இந்திய திரைப்படத்திலும் பார்க்காதது மட்டுமல்ல இனிமேலும் இது இந்திய திரைப்படங்களில் சாத்தியமா என்று நினைக்கவைக்கிறது. எவ்வளவு திட்டமிடல் இருந்தால் இது சாத்தியமாகும்? எது செட் எது கிராப்பிக்ஸ் என்று தெரியாத அளவிற்கு படு பிரமாதமாக வந்திருக்கிறது. ஸ்பெஷல் எபக்ட் மற்றும் கிராபிக் காட்சிகளின் உதவி இல்லாவிட்டால் ஷங்கரால் இப்படி ஒரு படத்தை நிச்சயமாக நினைத்துகூட பார்த்திருக்கமுடியாது.

ரஹுமானது இசையில் பாடல்கள் ஏற்கனவே பட்டி தொட்டியெல்லாம் பட்டையை கிளப்பியதால் பாடல்களை விடுத்து பின்னணி இசையை எடுத்துக்கொண்டால் ரஹுமானின் உழைப்பு நிச்சயம் வெற்றிபெற்றுள்ளதென்றே கூறலாம். இறுதிக்காட்சிகளில் ரகுமானின் பின்னணி இசை படத்திற்கு மிகப்பெரும் பலம். அதேபோல அடக்கி வாசிக்கவேண்டிய இடங்களையும் நன்கு உணர்ந்து அதற்கேற்றால்போல சிறப்பாக தனது பங்கை ரஹுமான் செய்துள்ளார்.

படத்தின் இன்னுமொரு மிகப்பெரும் பலம் ஒளிப்பதிவாளர் இரத்தினவேலு, 'கிளிமாஞ்சாரோ', 'காதல் அணுக்கள்' பாடல்களுக்கு கவிதை பேசிய இரத்தினவேலுவின் கமெரா 'அரிமா அரிமா'வில் தாண்டவமாடியுள்ளது, இறுதிக்காட்சிகளில் ஒளிப்பதிவு படத்தின் வேகத்திற்கு ஏற்றால்போல சிறப்பாக உள்ளது. ரஜினி மற்றும் ஐஸ்வர்யாவை இப்படி இளமையாக அழகாக காட்டியதற்கு இரத்தினவேல் அவர்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.

படத்தொகுப்பாளர் அன்டனி ஆரம்பத்தில் சீரானவேகத்தில் சென்று கொண்டிருந்த எந்திரனை இறுதி 30 நிமிடங்களுக்கும் மின்னல்வேகத்தில் நகர்த்தவும் ரசிகர்களை கதிரையின் நுனிவரை கொண்டுவரவும் உதவியிருக்கிறார். ஆனாலும் சிட்டி நுளம்புடன் பேசும் காட்சி, ரயில் சண்டை என்பவற்றில் இன்னும் கொஞ்சம் கத்திரி போட்டால் நன்றாக இருந்திருக்கும்.

அந்நியனுக்கு பின்னர் சிவாஜியில் ஒரு இடைவெளிவிட்டு மீண்டும் சங்கருடன் இணைந்த சாபுசிரில் சங்கரின் பிரம்மாண்டத்திற்கு தனது கைவண்ணத்தால் நியாயம் தேடியுள்ளார். இந்த படத்திற்கு 150 கோடி போதுமா என்கின்ற அளவில் சாபுவின் வேலைகள் படு பிரம்மாண்டமாக வந்துள்ளன. பிரம்மாண்டம் என்பதை வார்த்தையில் சொல்லி விபரிக்கமுடியாத அளவிற்கு சாபுவின் கலை அமைந்துள்ளது. படம் முழுவதும் இவரின் திறமை வியாபித்திருப்பதால் குறிப்பிட்டு இது நன்றாகவிருக்கிறது அது நன்றாகவிருக்கிறதேன்று சொல்லவேண்டிய வேலை எமக்கு இல்லை.பீட்டர் கெயின்- படத்தின் இன்னுமொரு நாயகன், இவரது கைவண்ணத்தில் படத்தின் சண்டைகாட்சிகள் சர்வதேசதரத்துக்கு இணையாக படமாக்கப்பட்டிருக்கின்றன, அனைத்து சண்டைகாட்சிகலுமே சிறப்பாக வந்திருந்தாலும் இறுதிகாட்சிகளை என்னவென்று சொல்வது? அதேபோல நடன பயிற்சியாளர்களும் தங்கள் பங்கிற்கு பாடல்களுக்கு ஏற்றால்போல ரசிக்கும்படியான நடன அசைவுகளை வழங்கியிருக்கிறார்கள்.

இவ்வளவும் சொல்லிவிட்டு தயாரிப்பாளர் பற்றி ஒருவார்த்தை சொல்லவில்லை என்றால் நன்றாக இருக்காது, இப்படியொரு பிரம்மாண்டத்தை தயாரித்துமுடிக்கும்வரை பணத்தால் எந்த தடையும் வராமல் பார்த்துக்கொண்டதற்க்கு திரு.கலாநிதிமாறன் அவர்களுக்கு நன்றிகள்.

அப்படியானால் படத்தில் என்னதான் மைனஸ்?
ஐஸ்வர்யா காரில் இருக்கும்போது கூட இருக்கும் ரோபவை போலீசார் சரமாரியாக சுடுவது, அனைத்து வாகனங்களையும் மிதித்துத்தள்ளும் ரோபோகூட்டம் வசீகரனின் காரை மட்டும் மிதிக்காமல் துரத்துகிறது என ஓரிரு இடங்களில் லாஜிக் மீறல்கள் இருந்தாலும் கமர்சியல் படமொன்றை லாஜிக் மீறல்கள் இல்லாமல் எடுப்பது சாத்தியமில்லை என்பதால் இதுவொரு பெரியகுறையல்ல.

ரஜினி, ஷங்கர், ஐஸ்வர்யாராய், ரகுமான், ரத்தினவேலு, சாபுசிரில், அன்டனி, கலாநிதிமாறன் என பிரம்மாண்டமான இந்த கூட்டணியின் எந்திரன் நிச்சயமாக ஒரு ஜனரஞ்சகமான பக்கா பொழுதுபோக்குத் திரைப்படமென்பதில் எந்தவித சந்தேகமுமில்லை.

மொத்தத்தில் எந்திரன் - சூரியன்

Monday, September 27, 2010

இது கதையல்ல நிஜம்.

அப்போது அந்த சிறுமிக்கு ஐந்து வயதுக்கு உள்ளாகத்தான் இருக்கும், பட்டாம்பூச்சியாக பறக்க வேண்டியவயத்தில் தாய்,தந்தை இரண்டுபேரையும் இழந்து ஒரு கிறிஸ்தவ பாதிரியாரின் அரவணைப்பில் ஒரு 'சிறுவர்கள் இல்லத்தில்' சேர்க்கப்பட்டாள். சொந்தம் என்று சொல்வதற்கு உறவுகளென்று யாருமில்லை, அங்கிருந்தே தனது பாடசாலை கல்வியை பயின்ற அந்த சிறுமி காலத்தின் வேகத்திற்கு இணையாக திருமண வயதை அடைந்தாள். கன்னிப்பருவத்தில் எல்லோருக்கும் வரும் காதல் உணர்வு ஒரு வாலிபன்மீது அவளுக்கு ஏற்படவே தான் விரும்பியவினையே கைப்பிடித்தாள்.

அதுதான் அவளுக்கு வாழ்க்கையில் ஏற்ப்பட்ட முதல்ப்பிடிப்பு, இவர்களது காதலின் அடையாளமாக ஒரு குழந்தையும் பிறந்தது. அன்பான கணவன், புதிதாக மழலை செல்வம், பணவசதி குறைவு என்றாலும் மனநிறைவான தனது இளம் (மழலை, குழந்தை, கன்னி) பருவத்தின் வெறுமையை பூரணப்படுத்தும் விதமாக குடும்பவாழ்க்கை அவளுக்கு மகிழ்ச்சியாக அமைந்தது.

அப்போதுதான் அவளது வாழ்வில் மிகப்பெரும் பூகம்பம் வெடித்தது. சிலநாட்களாக காய்ச்சலால் அவதிப்பட்டுக்கொண்டிருந்த அவளது கணவர் காய்ச்சல் குறையாததால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு ஓரிருநாளில் இவ்வுலகை விட்டு பிரிந்துவிட்டார். அவளால் அந்த துயரத்தை தாங்க முடியவில்லை, கணவன் இறந்து 30 நாட்களுக்குள் தான் தனது கணவரிடம் போய்ச் சேர்ந்துவிடுவேன் அன்று கூறியபடியே அழுதுகொண்டிருந்த அந்த அபாக்கியவதி மூன்றுமுறை தற்கொலை முயற்சி செய்து காப்பாற்றப்பட்டு இறுதியாக ஒருநாள் நள்ளிரவில் நான்காவது தடவையாக தூக்கில் தொங்கி தற்கொலை செய்துவிட்டார். கணவன் பிரிந்து 30 நாட்களில் தன்னை மாய்த்தபோது தான் ஈன்ற மழலைக்கு வயது வெறும் 45 நாள்த்தான் என்பது அவருக்கு தெரியாததல்ல.

ஒருபக்கம் அவருக்காக அனுதாபப்பட்டாலும் அவரது தற்கொலையை சரியென்றும், தவறென்றும் இருவேறு பார்வையில் ஊர்மக்கள் விவாதித்தனர். தற்கொலை என்பது கோழைத்தனம், தனது குழந்தையை அவர் நினைத்து பார்த்திருக்கவேண்டும் என ஒரு பிரிவினரும், அவளும் என்னத்தை செய்வாள்? சிறுவயதில் இருந்து வெறுமையோடு வாழ்ந்தவளுக்கு கிடைத்த முதற்பிடிப்பு சொற்பநாளிலேயே தன்னைவிட்டு போனதை அவளால் எப்படி தாங்கமுடியும்? என்று இன்னொரு தரப்பும் தத்தமது தரப்பில் இருந்து நியாயத்தை பிளந்தாலும் அந்த பெண்ணின் மனநிலை எப்படி இருந்திருக்குமென்பது அவருக்கு மட்டும்தான் தெரியும். எது எப்பிடியோ இன்று அவளது குழந்தைக்கு அவளது நிலைதான், ஆம் பிறந்து 45 நாட்களில் அந்த குழந்தைக்கு கிடைத்த பெயர் அநாதை.

இந்த நிலைக்கு யார் காரணம்?(கடவுளா? இயற்கையா? விதியா?)

இவற்றில் உங்கள் நம்பிக்கைக்கு எது பொருந்துதோ அதை நீங்கள் எடுத்து கொள்ளலாம், ஆனால் இவை எல்லாவற்றிற்கும் மேலாக அவர்களின் கவனக்குறைவுதான் முக்கியகாரணம். அப்படி இவர்கள் கவனக்குறைவாக இருந்தது யாரிடம்?/எதில் ?நுளம்பிடம் (வேடிக்கை அல்ல), ஆம் இவர்கள் கவலையீனமாக இருந்தது டெங்கு நோயை பரப்பும் Aedes albopictus என்கிற நுளம்பிடமும், காய்ச்சல் வந்ததும் உடனடியாக மருத்துவமனையை நாடாமல் தாங்களே மருந்துகளை வாங்கி உட்கொண்டு டெங்குநோய் கிருமிகளை வளரவிட்டதிலும்தான்.

காய்ச்சல் சாதரணமாக காய்ந்தாலே உடனடியாக மருத்துவரை நாடவேண்டும், இரண்டு நாட்களுக்குள் காய்ச்சல் விடாவிட்டால் இரத்த பரிசோதனை செய்யவேண்டும் என்று பலதடவைகள் பத்திரிக்கைகளில் எழுதியும் பலரும் இதை சாட்டை செய்யவில்லை. இதனால் கடந்த 6 மாதத்திற்குள் 25 இக்கும் மேற்பட்டவர்கள் டெங்கால் உயிரிழந்துள்ளனர், 4000 பேருக்குமேல் பாதிக்கப்பட்டுள்ளனர்.

வீடுகளில் வாய்க்கால்களில் நீரை தேங்கவிடவேண்டாம், நீர் தேங்கும் எந்த பொருட்களையும்(தேங்காய் சிரட்டைகள், யோக்கட் கிண்ணங்கள் போன்றன) தேக்கிவைக்கவேண்டாம், குப்பைகளை புதையுங்கள் அல்லது எரியுங்கள், அடர்த்தியான குரோட்டன் செடிகளின் இலைகளை கத்தரியுங்கள், புற்கள் வீட்டு முற்றத்திலோ வீட்டின் வெளிப்பகுதியிலோ இருந்தால் அவற்றை செருக்குங்கள் என சுகாதார உத்தியோகஸ்தர்களும் பொலிசாரும் இணைந்து ஒலிபெருக்கிகளில் வீதிகளில் பிரச்சாரம் செய்தபோது காதில் வாங்கிக்கொள்ளாத நம்மாளுகள் இப்போது சுகாதாரம் குறைவான வீடுகளை திடீரென சோதனைசெய்து அகப்படும் குடும்ப தலைவரை நீதிமன்றில் ஆஜர்செய்து குற்றப்பணம் அறவிடப்படுகின்றது என்றதும் ஓரளவு வீடுகளை சுத்தமாகவைத்திருக்க முயற்சிக்கின்றனர்.

இப்போது மழைகாலம் ஆரம்பித்திருப்பதால் தண்ணீர் தேங்குவதும், புற்கள் முளைப்பதும், குரோட்டன் செடிகள் வளர்வதும் முன்னைவிட அதிகமாக இருப்பதால் நுளம்புகள் அதிகரிக்க தொடங்கிவிட்டன. டெங்கு ஒரு தொற்றுநோய் அல்ல என்பதால் அனைவரும் முடிந்தவரை உங்கள் வீடுகளையும் வீதிகளையும் சுத்தமாக வைத்திருந்தாலே டெங்கை குறைக்கலாம். சாதாரண காய்ச்சல் அறிகுறிகள் ஏற்ப்பட்டாலே மருத்துவமனையை நாடுங்கள், நீங்களே வைத்தியராகாதீர்கள்.

இலங்கையின் வடபகுதியில் இயற்க்கை அழிவுகள் இல்லை, ஆயுதத்தாலான அழிவுகளும் இப்போது இல்லை என்பதால் இயற்கையை சமப்படுத்த ஏதாவதொரு ரூபத்தில் அழிவு வரத்தான் செய்யும். ஒருபக்கம் வீதிவிபத்துக்கள் ஆட்களை பதம் பார்த்தாலும்(இதுபற்றி ஒரு தனிப்பதிவு எழுதவேண்டும்) பெரும்பாலும் நோய்கள் வடிவிலே இயற்கை சமப்படுத்தப்படலாம் என்பதால் முடிந்தவரை துப்பரவாகவும் சுகாதாரமாகவும் இருக்கபாருங்கள்.

(மேலுள்ள சம்பவம் பதிவுக்காக எழுதப்பட்டதல்ல, அது ஒரு உண்மை சம்பவம்.)

Saturday, September 25, 2010

கைமாறிய திரைப்படங்கள்

இணைய இணைப்பு சிக்கல் காரணமாக மூன்று வாரங்கள் பதிவுகள் எதையும் எழுதமுடியவில்லை, இதனால் எந்த குடியும் மூழ்கிவிடாது என்று நீங்கள் முணுமுணுப்பது என் காதில் விழுந்தாலும் சொல்லித்தானே ஆகவேண்டும். இன்னும் எந்திரன் வெளிவருவதற்கு ஐந்து நாட்களே உள்ளநிலையில் எந்திரன், ரஜினி பற்றி படம் வெளிவரும் வரையில் எந்த பதிவும் இடுவதில்லை என்கிற முடிவோடு இருப்பதால் வேறு ஏதாவது எழுதலாமென்றால் அர்ஜுனனுக்கு தெரிந்த கிளியின் கழுத்தைபோல எந்திரன் தவிர வேறெதையும் சிந்திக்க முடியவில்லை:-)

சரி இப்ப மேட்டருக்கு வாறன், இரண்டு வேறுவேறு தமிழ் இணையதளங்களில் இரண்டு செய்திகளை பார்த்தேன்.

1 ) அஜித் நடிக்க கவுதம்மேனன் இயக்குவதாக இருந்து பின்னர் சிலபல காரணங்களுக்காக நிறுத்தப்பட திரைப்படத்தில் அஜித்துக்குபதில் சூரியா நடிக்கப்போகிறாராம்.

2 ) விக்ரம்குமார் இயக்கத்தில் நடிகர் விக்ரம் நடிப்பதாக இருந்து பின்னர் என்ன காரணமென்றே தெரியாமல் கைவிடப்பட்ட '24' திரைப்படத்தில் கதையில் சில மாற்றங்களோடு விஜய் நடிக்க ஏ.எம்.ரத்தினம் தயாரிக்கபோகிறாராம்.

இவை இரண்டும்தான் அந்த செய்திகள். இந்த செய்திகளில் உண்மைத்தன்மை எவ்வளவு இருக்கின்றதென்பது தெரியாது, ஆனால் இதற்கு முன்னர் இதேபோன்று ஒருவர் நடிக்க இருந்த படத்தில் அவருக்கு பதில் வேறொருவர் நடித்ததால் ஏற்ப்பட்ட மிகப்பெரும் மாற்றங்கள் மறக்க முடியாதவை, மறுக்க முடியாதவை. குறிப்பாக அஜித் நடிப்பதாக இருந்து சில காரணங்களுக்காக கைவிடப்பட்டு பின்னர் வேறு நடிகர்கள் நடித்த சில படங்கள் மிகப்பெரும் வெற்றி அடைந்ததோடு தமிழ் சினிமாவுக்கு இரண்டு முக்கிய கதாநாயகர்களை குறிப்பாக இரண்டு சிறந்த நடிகர்களை உருவாக்கியதென்றால் அது மிகையில்லை. அந்த நடிகர்கள் வேறு யாருமல்ல, விக்ரமும் சூரியாவும்தான்.1999 இற்கு முன்னர் பலருக்கும் யாரென்றே தெரியாமல் இருந்த விக்ரமும், 2001 வரை அருண்குமாருக்கு போட்டியாக நடித்துக் கொண்டிருந்த சூரியாவும் இன்று அடைந்திருக்கும் உயரத்துக்கு யார் முக்கியகாரணம் என்று கேட்டால் எல்லோருமே சொல்லும் பதில் இயக்குனர் பாலா என்பதுதான். பாலா போலவே இவ்விருவரதும் வெற்றிக்கு முக்கியமான ஒருவர் மறைமுக காரணியாக இருந்திருக்கின்றாறென்றால் அது அஜித்தான். அஜித் நடிக்காமல் விட்ட படங்கள்தான் இவ்விருவரதும் வளர்ச்சிக்கும் முக்கிய காரணிகளாக அமைந்தது. அஜித்தை பொறுத்தவரை இது துரதிஸ்டவசமாக இருந்தாலும் விக்ரம், சூரியாவை பொறுத்தவரை அஜித் கைவிட்ட படங்கள்தான் அவர்களின் திருப்புமுனை என்றால் அதில் மிகையில்லை.பாலா முதலில் சேது படத்தின் நாயகனாக நடிக்க அணுகியது அஜித்தைத்தான், அஜித் ஏனோ சில காரணங்களுக்காக நடிக்க முடியாமல் போகவே பாலாவின் தெரிவாக விக்ரம் அமைந்தார், அதன் பின்னர் நடந்ததுதான் எல்லோருக்கும் தெரியுமே. அதேபோல விக்ரமிற்கு மாஸ் அந்தஸ்தை ஏற்ப்படுத்திய மிக முக்கியமான படமான 'தில்'லும் அஜித் நடிப்பதாக இருந்து பின்னர் விக்ரமிற்கு கைமாறியது குறிப்பிடத்தக்கது.

அதேபோலவே விக்ரம்குமார் இயக்கத்தில் ஆரம்பத்தில் அஜித் நடிப்பதாக பேசப்பட்டு பின்னர் விக்ரம் நடிப்பதாக முடிவாகிய '24' திரைப்படம் இப்போது விஜய் நடிக்கப்போவதாக கூறப்படுகிறது, ஒருவேளை விஜய் '24' திரைப்படத்தில் நடித்தால் அது அஜித், விக்ரமின் அதிஸ்டமா? துரதிஸ்டமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும். இதற்கு முன்னர் விஜய்க்கு நடிக்க வாய்ப்பு கிடைத்து விஜய் வேண்டாமென்றொதுக்கிய 'தூள்' திரைப்படம் விக்ரமை அந்தக்காலப்பகுதியின் உச்சத்துக்கு கொண்டுசென்றது நினைவிருக்கலாம்.சூரியாவை பொறுத்தவரை ஆரம்பம் முதலே அஜித் நடிக்கமுடியாமல்போன படங்கள் பெருமளவில் கைகொடுத்தத்தை யாராலும் மறுக்க முடியாது. சூரியாவின் முதல்ப்படமான மணிரத்தினத்தின் தயாரிப்பில் வெளிவந்த 'நேருக்குநேர்'திரைப்படமாக இருக்கட்டும், சூர்யாவிற்கு மிகப்பெரும் திருப்புமுனையாக இருந்த 'நந்தா'வாக இருக்கட்டும், பின்னர் சூரியாவின் படங்களின் வியாபாரத்தை வணிகரீதியில் விஸ்தரித்த கஜினியாக இருக்கட்டும்; இவை மூன்றுமே அஜித் நடிப்பதாக இருந்து பின்னர் சூரியாவிற்கு கைமாறிய படங்களே. இப்போது கவுதமின் படமும் அஜித்திடமிருந்து சூரியாவிற்கு கைமாரவுள்ளதாம், சூரியா அந்த படத்தில் நடிக்கும் பட்சத்தில் மீண்டும் அஜித் கைவிட்ட படமொன்று சூரியாவுக்கு கை கொடுக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

சமீபத்தில்கூட அஜித் நடிப்பதாகவிருந்து பின்னர் ஆரியா நடித்த பாலாவின் 'நான்கடவுள்' வணிகரீதியில் வெற்றி பெறாவிட்டாலும் ஆரியாவிர்க்கு திருப்புமுனையாக அமைந்ததேன்பதை மறுக்க முடியாது.

(தயவுசெய்து இந்தப்பதிவால் சமூகத்துக்கு என்னபயன்? என்று கேட்டு உங்கள் சமூகப்பற்றால் என்னை மெய்சிலிர்க்க வைத்துவிடாதீர்கள்)