Wednesday, October 27, 2010

ஹோலிவூட் ரவுண்ட் - அப் (27/10/10)

காவலன்
இப்போதெல்லாம் விஜயை வைத்து facebook, blog, sms போன்றவற்றில் காமடிபண்ணி பிழைப்பு நடத்துபவர்கள் நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டு வருகிறார்கள் (நான் இதை நிறுத்தி ரொம்ப நாளாச்சு, காரணம்; அண்ணனை வைத்து காமடிபண்ணி எழுதி அலுத்துப்போச்சு :-) ) இதற்கு காரணம். விஜயோட அரசியல் பிரவேசம், டாக்டர் பட்டம், தொடர் தோல்விகள், விஜயைப்பற்றிய எஸ்.ஏ.சியின் தம்பட்டம், அந்த சைலன்ஸ்ஸ்..., லொயாலோ வாக்கெடுப்பு, நெக்ஸ்ட் சூப்பர்ஸ்டார் அலப்பறை என பல விடயங்கள். ஒரு காலத்தில் விஜய்படங்களில் நடித்து தன்னை வெளிக்கொணர்ந்த சூரியா இன்று விஜயைவிட முன்னணியில் இருப்பது நிச்சயம் விஜய் ரசிகர்களுக்கு ஏமாற்றம்தான். 2007 தைமாதம் முதல் (போக்கிரி) 2010 டிசம்பர்வரை (காவலன் வெளியிட திட்டமிட்டிருக்கும் மாதம்) கிட்டத்தட்ட 4 வருடங்களில் அழகிய தமிழ்மகன், குருவி, வில்லு, வேட்டைக்காரன், சுறா என நடித்த அனைத்துமே விஜயை ஏமாற்றிய நிலையில் காவலன் விஜய்க்கு கைகொடுக்குமா?

காவலனில் காமடி நிச்சயம் நன்றாக இருக்கும், சித்திக்கை இந்தவிடயத்தில் நம்பலாம். 'பிரெண்ட்ஸ்' மட்டுமல்ல 'எங்கள் அண்ணா', 'சாது மிரண்டால்' திரைப்படத்திலும் சித்திக் புகுந்து விளையாடியிருப்பார். ஆனால் படத்தில் விஜயின் வழமையான ஆக்ஷன், பஞ்சு டயலாக் போன்ற விஜய் ரசிகர்களை மட்டும் கவரக்கூடிய சமாச்சாரங்கள் இருக்குமா என்பது கேள்விக்குறியாக இருந்தாலும் பொதுவான ரசிகர்கள் விஜயிடம் எதிர்பார்ப்பது இம்மாதிரியான படங்களைத்தான். அதுதவிர விஜயின் தொடர்தோல்விகளால் காவலன் மீதான எதிர்பார்ப்பு ஏனைய விஜய் படங்களுக்கு இருக்கும் எதிர்பார்ப்பைவிட குறைவாக இருப்பது படத்திற்கு மேலும் பலம். ஏனெனில் படம் ஓரளவு நன்றாக வந்தாலே எல்லோரும் "இதைவிட எவளவோ பரவாயில்லை" என விஜயின் முன்னைய படங்களுடன் ஒப்பிட்டு word of mouth மூலம் படத்திற்கு மிகப்பெரும் பலம் சேர்ப்பார்கள். அதுதவிர எப்படியும் அசினுக்கெதிராக தமிழ் உணர்வாளர்கள் (ஹி ஹி) போராட்டம் செய்யத்தான் போகிறார்கள், இம்முறை அது படத்திற்கு பாதகமில்லாமல் சாதகமாக ஒருவித சாப்ட்கானரை நிச்சயம் உருவாக்கும், இதுகூட படத்திற்கு பக்கபலம்தான்.

ஆனால் விஜய் எப்பவாவது இருந்திட்டு வித்தியாசமா எல்லோரும் ரசிக்ககூடியமாதிரி படத்தில நடிச்சா அந்தப்படத்தை தோல்வியாக்கிறதில விஜய் ரசிகர்களை அடிச்சிக்கவே முடியாது. உதாரணமாக வசீகரா மற்றும் சச்சினை சொல்லலாம். இந்தத்தடவை காவலன் என்னைபொருத்தவரை வசீகரா சச்சினை போல விஜய் ரசிகர்கள் அல்லாதவர்களுக்கு பிடிக்கும் படமாக அமையுமென்று நினைக்கிறேன். இந்ததடவை விஜய் ரசிகர்கள் சொதப்பாதவிடத்து விஜய்க்கு காவலன் நீண்ட நாட்களுக்குபின்னர் ஒரு வெற்றிப்படமாக அமையுமென்று நம்பலாம். அப்படி காவலன் வெற்றிபெற்றால் எஸ்.ஏ.சி பண்ணும் அலப்பறை அடுத்த விஜய்படத்துக்கு ஆப்பாக மட்டுமன்றி காமடி பிரியர்களுக்கு ஆட்டுக்கால் சூப்பாகவும் அமையும் என்பதுதான் உண்மை.

மங்காத்தா
ஒருவழியாக மங்காத்தா படப்பிடிப்பு ஆரம்பமாகிவிட்டது; அஜித்தின் ஐம்பதாவதுபடம் என்பதால் சாதாரண அஜித்தின் படங்களைவிட மங்காத்தாவிற்கு கூடுதல் எதிர்பார்ப்பு. அதுதவிர கௌதமுடனான விரிசலின் பின்னர் அஜித் நடிக்கும் படம், வெங்கட்பிரபு முதல்முதலாக பெரிய ஹீரோவை வைத்து இயக்கும் படமென படத்திற்கு இன்னும் எதிர்பார்ப்பு அதிகம். அஜித்தின் பிறந்தநாளான மே 1 வெளியாககூடியவாறு படத்தை முடிக்க திட்டமிட்டிருந்தாலும் அது சாத்தியமாகுமா என்பதை இப்போது சொல்லிவிட முடியாது. எனக்கு தெரிந்து 2000 ஆம் ஆண்டிற்கு பின்னர் அஜித்தின் பிறந்தநாளன்று வெளியான ஒரேபடம் ஜனா; ஆக செண்டிமெண்டாக மே 1 படம் வெளியாகாவிட்டால் தலைக்கு நல்லது :-)

படத்தின் பலமாக அஜித், நாகர்ஜுன், வெங்கட், யுவன், திரிஷா என பெரிய பட்டாளமே இருக்கின்றது. 2007 முதல் 2011 வரை அதாவது பில்லாவில் இருந்து மங்காத்தா வரையான நான்காண்டுகளில் அஜித்திற்கு வெற்றிப்படங்கள் எதுவும் அமையாததால் அஜித்ரசிகர்கள் மங்காத்தாவை பெரிதும் நம்பியிருக்கிறார்கள். வெங்கட்பிரபுவால் அஜித்தைவைத்து ஹிட் கொடுக்கமுடியும் என்றாலும் இப்போது வெங்கட்டை மணிரத்தினம், ஷங்கர், செல்வராகவன், வரிசையில் விமர்சகர்கள் குறைகண்டுபிடிப்பது (அதிலும் ஒலகப்பட காப்பியென்று) மங்காத்தாவை பாதிக்காவிட்டால் சரி. தல மறுபடியும் i am back என ரசிகர்களுக்கு வெற்றிக்களிப்புடன் சொல்கிறதா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

மன்மதன் அம்பு
கமலின் மன்மதன் அம்பு ஆடியோ வெளியீடு சிங்கப்பூரில் வெளியிடப்படுவதாக கூறப்பட்டுள்ளது. இது ஒரு சிலரால் கமல் ரஜினியை காப்பியடிக்கிறார் என கிண்டல் செய்யப்படுகிறது, ரஜினியின் எந்திரன் பாடல் வெளியீட்டு விழாவை மலேசியாவில் வைத்ததால்தான் கமல் ஆடியோ ரிலீசை சிங்கப்பூரில் வைக்கிறார் என்பதால் கமல் ரஜினியை காப்பி அடிக்கிறார் என்பது 'என்னை பொறுத்தவரை' தவறான கூற்று. ரஜினி முதலில் ஒரு விடயத்தை செய்தால் அதை இன்னொருவர் குறிப்பாக கமல் செய்யக்கூடாதென்றில்லை. நல்ல விடயத்தை யாரும் செய்யலாம் (அதற்காக தினம் தினம் பட்டினியால் எத்தனையோ பேர் வாடும்போது மலேசியா சிங்கப்பூரில் அடியோ வெளியீடு தேவையா? என்ற சமுதாய விளிப்புணர்வு பின்னூட்டங்கள் வேண்டாம்) ரஜினி பட நாயகிகளையும், தொழில் நுட்ப கலைஞர்களையும் கமலும்; அதேபோல கமல் பட நாயகிகளையும் தொழில்நுட்ப கலைஞர்களை ரஜினியும் தங்கள் படங்களுக்கு ஒப்பந்தம் செய்வது ஒன்றும் புதிதில்லை. அதேபோலத்தான் இதையும் எடுத்துக்கொள்ள வேண்டும்.

இந்த விடயத்தில் ரஜினி, கமல் என்பதை தாண்டி ஆடியோ ரிலீசை கலாநிதி மாறன் மலேசியாவில் வைத்தால் உதயநிதி ஸ்டாலின் சிங்கப்பூரில் வைக்கவேண்டுமென்கிற தொழில் மற்றும் குடும்ப மரியாதை பிரச்சினையும் இங்கு முக்கியமான இன்னுமொரு காரணி. அதுதவிர உதயநிதிக்கு தனது முந்தயபடங்களான 'குருவியும்' 'ஆதவனும்' வெற்றிவிழா கொண்டாடினாலும் எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட முழுமையான வெற்றிப்படமாக இதுவரை எதுவும் அமையவில்லை என்பதால் 'மன்மதன் அம்பு' முழுமையான வெற்றிபெற வேண்டுமென்பதில் முனைப்பாக இருப்பார், அதனால் படத்தை முடிந்தவரை ப்பிரமோட் பண்ணத்தான் பார்ப்பார்.அதனால் சிங்கப்பூரில் ஆடியோ வெளியிடுவதை கிண்டலாக பார்ப்பது நல்லதல்ல (ஒருசில கமல் ரசிகர்கள் பண்ணிய வயித்தெரிச்சல் சம்பவங்களுக்காக நாமும் இறங்கிப்போனால் அது எமக்கும் தலைவருக்கும் அழகல்ல)

மன்மதன் அம்பு எந்தமாதிரியான திரைப்படமென்பது இதுவரை சஸ்பென்சாக இருந்தாலும் ரவிக்குமார் இயக்கத்தில் கமல் என்பதால் நிச்சயம் காமடிக்கு பஞ்சமிருக்காது. ட்ரெயிலரை பார்த்தபின்னர் இது எந்தமாதிரியான படமென்பதை ஊகிக்கலாமேன்று நினைக்கிறேன். வெற்றிபெற வாழ்த்துக்கள்.

சுல்த்தான் தி வாரியார்
தமிழ் சினிமாவின் வசூல்சாதனை பட்டியலில் முதலிரண்டு இடங்களில் இருக்கும் சிவாஜி, எந்திரன் படங்களைப்போல சுல்த்தானும் வசூலை குவிக்குமா? என்றால் உண்மையில் அதற்க்கு சாத்தியமில்லை என்பதுதான் பதிலாக இருக்கும், அதற்க்கான காரணம் அனைவருக்கும் தெரியும். அனிமேசன் படமாக இருக்குமட்டும் யாரும் சுல்த்தானை பெரிதாக கருதவில்லை. ஆனால் ரஜினி சில காட்சிகளில் நடிக்கிறாரென்பதும் ரவிக்குமார் இயக்குகிறாரென்பதும் சுல்த்தான் மீதான எதிர்பார்ப்பை சற்றே கூட்டியிருக்கிறதென்றே சொல்லலாம். எந்திரன் வெற்றியால் நொந்து நூடில்சானவர்கள் பலருக்கு சுல்த்தான் மீதான எதிர்பார்ப்பு ரஜினியைவிட ரஜினி ரசிகர்களைவிட அதிகமாக இருக்கும்; காரணம் எல்லோருக்கும் தெரிந்ததுதான்.

ஆரம்பத்தில் சுல்த்தானில் ரஜினி சில கட்சிகளில் நடிப்பது எனக்கு பிடிக்கவில்லை, காரணம் இதை முழுமையான ரஜினி படமாக்கி எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி கடைசியில் சொதப்பிவிடுவார்களோ என்கிற பயம்தான். ஆனால் இப்போது சுல்த்தானில் நிறைய நம்பிக்கை வந்திருக்கிறது, அதற்க்குகாரணம் "இது குசேலன் போலத்தான் இருக்கும்", "ரஜினிக்கு பெரிதாக கட்டங்கள் இருக்காது" "பெரிதளவில் எதிர்பார்ப்பு இருக்காது" என்கிற ரசிகர்களது குறிப்பாக ரஜினி ரசிகர்களது word of mouth தான். ரஜினி படங்களை பொறுத்தவரை எதிர்பார்ப்பு எவ்வளவுக்கு எவ்வளவு குறைவாக இருக்கிறதோ அவ்வளவுக்கவளவு படத்தின் வெற்றியின் வீச்சு அதிகரிக்கும். அதேபோல தயாரிப்பாளர் பேராசைப்பட்டு குசேலனைபோல பெரியதொகைக்கு விற்றுவிடாமல் கணிசமான தொகைக்கு விற்றால் அனிமேசன் படமென்றாலும் படம் நன்றாகவிருக்கும் பட்சத்தில் சுல்த்தான் வசூலில் எந்திரன், சிவாஜியை தாண்டாவிட்டாலும் சூப்பர்ஹிட்டாகும் வாய்ப்பு அதிகம். அப்படியானால் எந்திரன் வசூல்? "அதை அடுத்த ரஜினி படம் பார்த்துக்கொள்ளும்".

Sunday, October 24, 2010

உலகப்பட விமர்சனம் - The Way To Bulgaria (1997)

இது எனது முதலாவது உலகப்பட விமர்சனம் என்கிறதால இதில இருக்கிற குறை நிறைகளை நீங்கதான் சுட்டிக்காட்டனும்.

எனக்கு அதிகமாக உலகப்படங்கள் பார்க்கும் சந்தர்ப்பங்கள் அமையவில்லை என்று சொல்வதைவிட நானாக அமைத்துக்கொள்ளவில்லை என்றே சொல்லலாம். மிகவும் பிரபலமான படங்கள் (டைடானிக், அவதார் மாதிரி) மற்றும் தமிழாக்கம் செய்யப்பட்ட சண், விஜய், கலைஞர் டிவிகளில் போடப்படும் படங்களைத்தான் இதுவரை காலமும் பார்த்திருக்கிறேன், அதுகூட திட்டமிட்டு பார்த்ததல்ல.

ஆனால் ஏதாவதொரு தமிழ்ப்படம் நல்லாயிருக்கின்னா உடனே அந்தப்படத்தை ஒரு உலகப்படத்தோட காப்பியின்னு சர்வசாதரணமா சொல்லிகிறாங்க. என்னாமா படமெடுத்திருக்கிறாங்க!! என்று நாங்க வாயை பிளக்கிற படத்தை பார்த்து இதெல்லாம் உலகப்படத்துக்கு கால்தூசிக்கு வருமான்னு சாவகாசமா கேக்கிறாங்க!!! சரி அப்பிடி என்னதான் உலக படங்கள்ல இருக்கின்னு பார்ப்பதற்கான முதல் முயற்ச்சியாக கூகிளாரின் உதவியுடன் நான் 'தேடித் பார்த்த' முதல் திரைப்படம்தான் The Way To Bulgaria (1997)இது ஒரு இத்தாலிய திரைப்படமானாலும் படத்தின் கதை ஹங்கேரியில் (Hungary) இருந்து பல்கேரியா (Bulgaria) வரை பின்னப்பட்டிருக்கிறது. இத்தாலியின் பிரபல இயக்குனர் ஹன்வாரோ (Hanavaro) 1997 இல் இயக்கியிருக்கும் இந்த திரைப்படம் 14 சர்வதேச விருதுகளை வென்றிருக்கிறது. லூகாஸ் (Loogas) நாயகனாகவும் ஜெப்ரி கானர் (Jefri conor) நாயகியாகவும் நடித்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜிம்மி வோகஸ் (Jimy vogos) இசையமைத்துள்ளார். நதிக்கரையில் பச்சைபசேலென கண்ணைக்கவரும் விதமான ஒளிப்பதிவும், கண்ணை உறுத்தாத எடிட்டிங்கும், மனதை வருடும் இசையும், திகட்டாத திரைக்கதையும்தான் இந்தப்படத்தின் சிறப்பு.

1942 ஆம் ஆண்டு ஹிட்லரின் சர்வாதிகாரத்திலிருந்து தங்கள் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள ஹங்கேரியிலிருந்து டான்யூப் (Danube) நதிக்கரையூடாக பயணித்து பல்கேரியாவின் ரூசே (Rousse) பிரதேசத்திற்கு குடிபெயரும் யூதக்குடும்பமொன்றின் சிரமங்கள்தான் The Way To Bulgaria (1997) திரைப்படத்தின் திரைக்கதை. நடுத்தர வயதையுடைய நாயகனும் (லூகாஸ்) நாயகியும் (ஜெப்ரி கானர்) அவர்களது எட்டுவயது பையனும் மூன்றுவயது பொண்ணும்தான் இந்த திரைப்படத்தின் முக்கிய கதாபாத்திரங்கள்.

ஜேர்மன் படைவீரர்கள் ஹங்கேரியின் தலைநகரான புடாபெஸ்ட்டிலிருக்கும் (Budapest) யூதக்குடிகளை இரவோடிரவாக கைதுசெய்து போலாந்திற்கு (poland) அனுப்புவதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டுக்கொண்டிருக்க நகரமே அல்லோலகல்லோலப் பட்டுக்கொண்டிருக்கிறது; அந்தவேளையில் அதே நகரில் (புடாபெஸ்ட்டில்) டான்யூப் நதிக்கரையில் வசிக்கும் நடுத்தர விவசாய வர்க்கத்தை சேர்ந்த லூகாஸின் குடும்பத்தினரும் என்ன செய்வதென்று தெரியாமல் விழிபிதுங்குகிறார்கள் (அவ்வேளையில் பதட்டத்தில் பிள்ளைகளை தன்மாரோடு அணைத்துக்கொண்டு கண்களில் நீர்த்துளிகள் பணிக்க ஜெப்ரிகானர்அழும் காட்சி கல்நெஞ்சங்களையும் கரையவைக்கும்.)பின்னர் ஒருவழியாக கட்டுமரம்போன்ற சிறியகடவை ஒன்றை உருவாக்கி அதில் ஒவ்வொருவராக நதியின் மறுகரைக்கு கொண்டு செல்லும் லூகாஸ் முதலில் தனது எட்டுவயது பையனை மறுகரையில் விட்டுவிட்டு திரும்பிவந்து மனைவியையும் மூன்றுவயது மகளையும் அழைத்துச்செல்வார். அவர் பையனை மறுகரையில் விட்டுவிட்டு மீண்டும் மனைவியையும் மகளையும் அழைக்கவரும் இடைப்பட்ட நேரத்தில் அந்த நடுநிசியில் எட்டுவயது சிறுவனது தனிமையையும், மறுகரையில் ஜெப்ரிகானரின் தவிப்பையும் செதுக்கியிருக்கும் இயக்குனரின் திறமையை வார்த்தைகளால் விபரிக்கமுடியாது.

அங்கிருந்து தப்பிக்கும் லூகாஸின் குடும்பத்தினர் 15 நாட்கள் பகலிரவாக பயணித்து அன்றைய யூகோசிலாவாக்கியா (Yugoslavia) ஊடாக ருமேனியா (romania) எல்லையை கடந்து ஒருவழியாக பல்கேரியாவின் ரூசே பிரதேசத்தை அடைகின்றனர், இதுதான் திரைக்கதை. புடாபெஸ்ட்டின் எல்லையை கடக்கும்வரை ஜெர்மனி வீரர்கள் கண்ணில் படாமல் தப்பித்துபோகும் காட்சிகள் விறுவிறுப்புடன் கூடிய திரில். அதை இயக்குனர் அருமையாக கையாண்டிருப்பார், அதிலும் குறிப்பாக திரிலிங்கிற்கு பாம்பை பயன்படுத்திய இடம் அருமை.

மூன்றாம்நாள் பயணத்தின்போது 3 வயதுசிறுமி பசியால் துடிக்கும் காட்சியும், தன் தங்கை பசியால் துடிப்பதை கண்வெட்டாமல் பார்த்துக்கொண்டிருந்த சிறுவன் கண்களில் நீர்கசிய தந்தையை நிமிர்ந்துபார்க்கும் காட்சியும், அப்போது லூகாஸ் மற்றும் ஜெப்ரிகானரின் முகபாவனையும் எழுத்தில் கூறமுடியாதது!!! பின்னர் ஆற்றில் துணியால் பிடிக்கும் ஒரேயொரு மீனை தன் பிள்ளைகளுக்கு பச்சையாக (சமைக்காமல்) ஊட்டும் ஜெப்ரிகானர் கண்ணீர்மல்க லூகாஸிற்கு நெற்றியில் கொடுக்கும் முத்தம் லூகாஸின் வயிற்றை மட்டுமல்ல படம் பார்ப்பவர்களது வயிற்றையும் நிறைத்தது.அதேபோல யூகோசிலோவாக்கியாவில் தலைநகரான பெல்கிறேட்டில் (Belgrade) காட்டு எடுமைகளிடம் மாட்டிக்கொண்டு தப்பிக்கும் காட்சி, மற்றும் நேசப்படைகளது உளவுப்பிரிவு வீரர்கள் இருவரை ஜெர்மனி வீரர்கள் என நினைத்து ஒளிந்துகொள்ளும் காட்சி, பின்னர் அந்த வீரர்களிடம் அகப்பட்டு தாங்கள் யாரென அவர்களுக்கு புரியவைக்கும் காட்சி என்பன இயக்குனரின் சிறப்பான இயக்கத்துக்கு உதாரணங்கள். அதேபோல நேசப்படை வீரர்கள் இருவரும் தாங்கள் சாப்பிடுவதற்காக வைத்திருந்த இரண்டு பணிசையும் சிறுவர்களுக்கு கொடுக்கும் காட்சியும், அதில் அந்த சிறுவர்களது உணர்ச்சி வெளிப்பாடும் வார்த்தைகளில்லா மவுனங்கள். அந்த இடத்தில் வரும் மென்மையான பின்னணி இசையை விபரிக்கக்கூடியளவிற்கு என்னிடம் வார்த்தைகளில்லை.

The Way To Bulgaria (1997) -> மனதை கனக்க வைக்கும் ஓவியம்.
.
.
.
.
.
.
.
.
.


முக்கிய குறிப்பு

முறைக்க கூடாது, திட்டக்கூடாது, அடிக்ககூடாது --> நாடுகளதும் இடங்களதும் பெயர்களைத்தவிர படத்தின் பெயர், கதை, திரைக்கதை, காட்சிகள், அதிலுள்ள ஆட்களின் பெயர்கள் எல்லாமே கற்பனையானவை. என்னை ஏதாவது பண்ணனுமின்னு தோணினா மேற்படி கதையின் சாயலில் பலபடங்கள் வந்திருக்கலாம், அவற்றில் ஏதாவதொன்றின் லிங்கை தாருங்கள்; நாங்களும் உலகபடம் பாக்கனுமில்ல :-) அப்பதானே மணிரத்தினம், ஷங்கர், பாலா, அமீர், செல்வராகவன் போன்றவர்களை உண்டு இல்லையென்றாக்கலாம் :-)

Friday, October 22, 2010

ஞானிக்கு ஒரு பாராட்டு.......

உரையாடல்


ஞானி : டாக்டர் என்னால முடியல, வயிறெல்லாம் எரியிது, தலை சுத்துது, கண்ணெல்லாம் இருட்டுது, ஏதாவது பண்ணுங்க டாக்டர்.

கவுண்டர் : நீயென்ன லூசா? எதுக்கு எங்கிட்ட வந்து புலம்பிக்கிட்டிருக்கிறா(ய்)

ஞானி : நீயா? நீயெப்ப டாக்டரானா(ய்)?

கவுண்டர் : ஏண்டா நீயெல்லாம் விமர்சகர் ஆகேக்க நான் டாக்டர் அகேலாதா? இது ஹாஸ்பிட்டல் இல்லைடா மண்டையா இது சினிமா செட்டு, நீ எங்கடாயிருந்து இப்படி பேதி புடுங்க ஓடி வாறா(ய்) ?

ஞானி : பக்கத்தில இருக்கிற என்.டி.டிவி செட்டில இருந்துதான் வாறன், முதல்ல எனக்கு முதலுதவியா ஏதாவது பண்ணு!!!!!

கவுண்டர் : டேய் இங்கயொரு அரைடிக்கட்டு வந்திருக்கு அந்த மருந்துபாட்டில எடுத்திட்டுவாடா மண்டையா?

செந்தில் : இந்தாங்கண்ணே பாட்டிலு, ஆமாண்ணே யாரிந்த ஓல்ட் மான்(old man)?

கவுண்டர் : (செந்திலின் காதருகில்)ஆள்தான் ஓல்டு அறிவு இன்னமும் எல்.கே.ஜி தான்.

கவுண்டர் : எதோ ஜெலுசிலாம், இப்பெல்லாம் நிறையபேர் வயித்தெரிச்சல்ல சுத்திகிட்டு திரியிறதால இதை இலவசமா ரஜினி ரசிகர் மன்றங்கள்ல இருந்து கொடுக்கிறாங்க, வாறவழியில குடுத்துகிட்டு இருந்தாங்க, இங்கயாருக்காவது உதவுமின்னு நாலு பாட்டில வாங்கீற்றுவந்தா உனக்கே பத்தாதுபோல இருக்கே!!!!! இந்தா இதை அப்பிடியே சாப்பிட்டு.....

செந்தில் : அண்ணே எதோ நாத்தம் குடல புடுங்குது, இங்க ஏதாவது ஆகிச்சாண்ணே ?

கவுண்டர் : டேய் இவன்தான் ஆயிப்போட்டான் போல இருக்கு, முதல்ல இவன பக்கத்தில எருமைமாட்டை குளிப்பாட்டிற செட்டுக்கு அனுப்பி வாஷ்அவுட் பண்ணிட்டுவா?

செந்தில் : எப்பா வயசானவரே; இதை பக்கமா போனா அங்க நாலு எருமைமாட்டை குளிப்பாட்டிகிட்டிருப்பாங்க, போயி நாலோட அஞ்சா நல்லா சுத்தம்பண்ணீட்டுவா, நாத்தம் தாங்கமுடியல!!!!!!

செந்தில் : யாரிண்ணே இந்தாளு? உங்க சொந்தக்காரரா?

கவுண்டர் : எதுக்கு கேக்கிறா(ய்)?

செந்தில் : பாக்க பிச்சைகாரன் போல இருக்கார் அதுதான்ன கேட்டன்.

கவுண்டர் : வடவா ராஸ்கல் பிச்சுபுடுவன் பிச்சு, அதொரு விமர்சகர் என்கிற பேர்ல சுத்திகிட்டு திரியிற பெப்பரப்பே, அதைபோயி பிச்சைக்காரங்களோட கம்பார்(compare) பண்ணி பிச்சைகாரங்களோட மருவாதையையே கெடுத்திட்டியேடா பாவி!!!!

செந்தில் : சாரிண்ணே கோவிச்சுகாதீங்க; விமர்சகரின்னா எப்பிடி?

கவுண்டர் : அடேய்... எல்லாருமே ஒருவிசயத்தை நல்லாயிருக்கின்னா இது அதை நல்லாயில்லையின்னு சொல்லும், அதையே எல்லோரும் நல்லாயில்லையின்னா இது நல்லாயிருக்கின்னு சொல்லும், அப்புறம் யாராவது பிரபலங்களை தாக்கி அப்பப்ப ஏதாவது விமர்சனம் பண்ணும். மொத்தத்தில ப்பப்ளிசிட்டிக்கு அலையிற ஒரு டக்கால்டிடா இது.

செந்தில் : புரிஞ்ச மாதிரியுமிருக்கு புரியாத மாதிரியுமிருக்கு , கொஞ்சம் தெளிவா சொல்லுங்கண்ணே.

கவுண்டர் : உனக்கு எப்பிடி புரியவைக்கிறது?.......ஆ.... டேய் மண்டையா நீ நம்ம இயக்குனர் பேரரசு படம் பாத்திருக்கிறியா? அதுமாதிரி நம்ம கரடிப்பயல் ரீ.ஆர் இன்ரவியூ (interview) பாத்திருக்கிறியா? அப்புறம் நம்ம மன்சூர் அலிக்கான் பண்ணிற பப்ளிசிட்டி பாத்திருக்கிறியா? அந்தமாதிரி இருக்கும்டா இவனோட விமர்சனம்.

செந்தில் : அப்பிடின்னா இவரு காமடி பீசாண்ணே?

கவுண்டர் : டேய் சத்தமா பேசாத, இவனெல்லாம் காமடிபீசின்னு சொல்றத காமடி பீசுங்க கேட்டிட்டா தங்களை அவமானப்படுத்தினதுக்காக உன்னை மொத்துமொத்தென்னு மொத்தீடுவாங்க ஜாக்கிரதை.

செந்தில் : அண்ணே அந்தாளு வர்ராண்ணே!!!!!

ஞானி : இப்ப ஓக்கேப்பா? மருந்துக்கு நன்றிப்பா, தலைதான் லேசா சுத்திரமாதிரி இருக்கு, இங்க கொஞ்சம் இருந்திட்டு போகலாமா?

கவுண்டர் : இருந்து தொலை ஷாட்டுக்குவேற நேரமிருக்கு, எங்களுக்கும் பொழுது போகணுமில்ல. அதுசரி எதுக்கிப்பிடி டென்ஷனாகி ஓடிவந்தா(ய்)?

ஞானி : என்.டி.டிவிகாரங்க ரஜினி பற்றி எதோ விவாதம் வர்றீங்களான்னு கூப்பிட்டாங்க, அங்கதான் போயிட்டுவாறன்.

கவுண்டர் : நீ ஓசில டீ குடுத்தாலே வாலை ஆட்டிட்டு போவா(ய்), AC ரூமில கோக்(cock) குடுத்தா வேணாமின்னா சொல்லுவா(ய்)? மேல சொல்லு.

ஞானி : அங்க நான் நிறைய பொய்களை அள்ளியள்ளி வீசினான், ஆனா நேற்றுப்பெய்த மழைக்கு இன்னிக்கு முளைச்ச காளான் மாதிரி சின்மயிங்கிற சின்னப்பொண்ணு என்னோட பொய்களை எல்லாம் வெளிச்சம்போட்டு காட்டீட்டுது. என்கூட துணைக்குவந்த 'கேப்மாரி' சுதாங்கனோட பினாத்தல்களை சமாளிக்கிறதா? இல்லை என்னோட பொய்களை மெய்ன்டேன்(maintain) பண்ணிறதாங்கிற குழப்பத்தில ஆடியன்சில இருந்து குறுக்குக்கேள்வி கேட்டவங்களுக்கு சரியா பதில்சொல்லமுடியாம ஏதேதோ பினாத்தவேண்டியதா போச்சு. கடைசீல அந்த டீவிக்காரன்வேற என்னோட மூக்கை உடைக்கிற மாதிரி தீர்ப்பை மாத்திசொல்லீட்டான்.

கவுண்டர் : மாத்தி சொல்லீட்டானா? இல்லை சரியா சொல்லீட்டானா?

ஞானி : தத..தப.... அதுவா இப்ப முக்கியம் நானே எந்திரன் வெற்றி, ரஜினியோட அசுர வளர்ச்சி, இன்னைக்கு விவாதத்தில சின்னப்பொண்ணுகூட தோல்வின்னு வயத்தெரிச்சலால நின்மதியில்லாம புலம்பிக்கிட்டிருக்கிறன்; நீ என்னடான்னா என்னைபோயி கலாய்ச்சுகிட்டிருக்கிறா(ய்) , உன்கூட பேசிகிட்டிருந்தா எனக்கின்னும் பேது புடுங்கிக்கும், நான் கிளம்பிறன்.

கவுண்டர் : பாத்தீங்களா மகா ஜனங்களே!!!!! அடுத்தவன் வளர்ச்சியை பாத்து வயிறு எரிஞ்சாலோ, இல்லை யாரையாவது வீண்வம்புக்கிழுத்து விமர்சனமென்கிறபேர்ல தங்களை பிரபலப்படுத்த நினைச்சாலோ என்ன நடக்குமென்னு பாத்தீங்களா? இவனமாதிரி யாரும் கேவலமா தொழில் பண்ணாதீங்க; அப்பிடி பண்ணினீங்கன்னா உங்களுக்கும் இதே நிலைமைதான்; பேதி புடுங்கிக்கும், இல்லையில்ல புடுங்கிக்க வைப்பானுங்க!!!!!!!!!

விளம்பரம்
1) யாராவது சூப்பர் ஸ்டார் ஆகவேண்டுமா? நீங்கள் மூன்று கோடி ரூபாய் வைத்திருந்தால் விமர்சகர்ப்புழு sorry விமர்சகர்ப்புலி ஞானியை தொடர்ர்பு கொள்ளவும்; அவர் உங்களை சூப்பர்ஸ்டார் ஆக்கிவிடுவார், இதை அவரே தனது திருவாயால் கூறியிருக்கிறார். தொடர்புக்கு->gnaani@heavystomachpain.com

2 ) சர்வதேசமே; உனக்கு இன்னுமொரு ராமானுஜர் வேண்டுமா? 1972 -1917 = 62 என்னும் புதிய தேற்றத்தை நிறுவியுள்ள கணித மாமேதை ஞானியை தொடர்புகொள். தொடர்புக்கு 1972 -1917 =62 என டைப் செய்து 9 என்னும் இலக்கத்துக்கு sms செய்யுங்கள்.

நேயர் கேள்வி


சந்திர மண்டலத்திலிருந்து 'டவுட்டு கணேசன்' என்பவர் ஞானியை கேட்டிருக்கிறார்.

1) பாகவதர், எம்.ஜி.ஆர் காலத்தில் கார்ப்பரேட் நிறுவனங்கள் இல்லாமல் விளம்பரம் இல்லாமல் அவர்களது படங்கள் ஓடியதாக கூறு கிறீர்களே; அவர்கள் காலத்திலும் இன்றுபோல மூன்றாம் நாளே திருட்டு vcd வெளியாகி, இப்போதுள்ளதுபோல வீட்டுக்குவீடு தொலைக்காட்சி, cd/dvd ப்ளேயர், கம்பியூட்டர் என்பன இருந்திருந்து, படம் திரையிட்டு அடுத்த மூன்று நாட்களில் இணையத்தில் படம் வெளியாகியிருந்தால் அவர்கள் படம் விளம்பரம் இல்லாவிட்டால் என்னவாகியிருக்கும்?

2) அன்று திரையரங்கில் சினிமா பார்ப்பதுதான் 90 வீதமானவர்களது ஒரே பொழுதுபோக்கு, கரணம் வீதிக்கொரு டிவி கூட இல்லை, அப்படியே இருந்தாலும் புதுப்படத்திற்கான திருட்டு vcd இல்லை. ஆனால் இன்று பொழுதுபோக்கிற்கு வீட்டிலேயே டிவி அதில் நூற்றுக்கணக்கில் சானல்கள் குறிப்பாக சினிமா மற்றும் விளையாட்டு சானல்கள், கம்பியூட்டர், இணையம், ஸ்போர்ட்ஸ், சுற்றுலா வசதிகள்; இவைதாண்டி இயந்திரத்தனமான வாழ்க்கை. இப்படியாக இன்றைய இதேநிலை அன்றிருந்திருந்தால் பாகவதரும் எம்.ஜி.ஆரும் என்ன செய்திருப்பார்கள்?

3 ) ரஜினி தான் படத்தில பேசிற வசனம் எல்லாம் இயக்குனர்கள் எழுதிக்கொடுத்ததுதான் அப்படின்னு குசேலன்ல அவரே சொன்னதா சொல்றீங்க; அதுகூட குசேலன் இயக்குனர் p.வாசு எழுதிக்குடுத்ததுதானே? அதெப்படி அவரோட சொந்த வசனமாகும்?

பைனல் பஞ்ச்
பாகவதர், எம்.ஜி.ஆர், ரஜினி மூவரும் தத்தமது காலத்தில் கொடிகட்டிப் பறந்தவர்கள், இம்மூவரையும் ஒருவரோடொருவரை ஒப்பிடுவது தவறானது; ஏனெனில் சமூக, தொழில்நுட்ப, வணிக, அறிவியல் காரணிகள் மூவரது காலங்களிலும் வெவ்வேறானவை. பாகவதர், எம்.ஜி.ஆர் எப்படி காலத்தால் அழியாத நட்சத்திரங்களோ அதேபோல சந்தேகமில்லாமல் ரஜினியும் காலத்தால் அழியாத அவர்களுக்கு இணையான நட்சத்திரம்தான். அனால் வேற்று மொழிக்காரர்களையும் வேற்று நாட்டுக்காரர்களையும் கவர்ந்தவகையில் ரஜினி முதலிருவரையும்விட ஒருபடி உசத்தி என்றே சொல்லலாம்.

Wednesday, October 20, 2010

இந்தவார இருவர் (20/10 /10)கவுண்டமணி (நடிகர்)எனக்கு கவுண்டமணியை பிடிக்குமென்று சொன்னால் அதுவொரு பொதுவான வார்த்தை, கவுண்டரை பிடிக்காதவங்க யாராவது இருக்கிறாங்கின்னா அவங்க நிச்சயமா நகைச்சுவை உணர்வு இல்லாதவங்களா இருக்கணும், இல்லை மேலோட்டமாக நகைச்சுவைகளை ரசிப்பவர்களாக இருக்கணும். நகைச்சுவை நடிகர்களிலேயே கவுண்டர் அளவுக்கு மாஸ் அந்தஸ்துள்ள நடிகர் வேறுயாருமே இல்லை. அதுதான் ஏனைய நகைச்சுவை நடிகர்களுக்கும் கவுண்டமணிக்குமிடையிலுள்ள மிகப்பெரும் வித்தியாசம். உதாரணத்துக்கு சொல்லனுமின்னா கவுண்டரால் கலாய்க்கப்படாத நடிகர்களே இல்லையென்று சொல்லலாம். ஆலாலப்பட்ட சூப்பர் ஸ்டாரையே மன்னனிலும் பாபாவிலும் கவுண்டர் கலாய்த்திருப்பார்; அதேபோல கமலை சிங்காரவேலனிலும் சத்தியராஜ், சரத்குமார், அர்ஜுன் போன்றவர்களை அவர்களுடன் நடித்த பெரும்பாலான படங்களிலும் கவுண்டர் கலாய்த்திருப்பார். கவுண்டர் தவிர யார் இதை செய்தாலும் குறிப்பிட்ட நப்டிகர்களின் ரசிகர்கள் ஏற்றுக்கொண்டிருக்க மாட்டார்கள்; இதுதான் கவுண்டரின் மாஸ்.

பார்ப்பதற்கு கவுண்டர் பெரிய அழகோ கலரோ இல்லை; ஆனால் திரைப்படங்களில் வரும் ஏனைய கேரக்டர்களின் உருவத்தையும் குறிப்பாக கலரையும் கவுண்டர் கிண்டல் பண்ணுவதை எம்மால் ஏற்றுக்கொள்ள முடிகிறது. இதையே கவுண்டரை தெரியாத யாரவது பார்த்தால் "இந்தாளு தன்னோட திறத்தில அடுத்தவனை கிண்டல் பண்ணுது" அப்பிடின்னுதான் கமன்ட் அடிப்பாங்க, இதுதான் கவுண்டரின் மிகப்பெரும் பலம். 80களில் ரஜினி, கமல், விஜயகாந்த் படங்கள் தவிர்ந்த ஏனைய நடிகர்களது படங்கள் இரண்டு விடயங்களால்த்தான் கல்லாவை நிரப்பின என்றால் அது மிகையில்லை. ஒன்று இசைஞானியின் இசை, அடுத்தது கவுண்டமணி+செந்தில் காமடி. கவுண்டர் இல்லாவிட்டால் தங்கள் திரைவாழ்க்கை எப்படி இருந்திருக்குமென்று சத்தியராஜ், சரத்குமார், அர்ஜுன் போன்றவர்களது மனச்சாட்சிகளுக்கு நன்கு தெரியும்.கவுண்டமணி தனியாக வரும்போது ரசிப்பதைவிட செந்திலோடு கூட வரும்போதுதான் அதிகமான மக்கள் ரசிக்கிறார்கள், இதில் செந்திலின் பங்கு அபரிமிதமானது. (செந்திலைப்பற்றி இன்னுமொருநாள் சாவகாசமாக பார்க்கலாம்) இருவரும் ஒன்றாக நடிக்கும் காட்சிகளில் இருவரதும் டைமிங்கிற்கும் எக்ஸ்பிறசனுக்கும் இணையாக வேறெந்த ஜோடியும் எனது அறிவுக்கு எட்டவில்லை, இதற்கு R.சுந்தர்ராஜன் அவர்களுக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும். கவுண்டரிடம் செந்தில் எப்போதும் அடிவாங்கினாலும் செந்தில் அடிவாங்குவதற்கு முன்னர் செய்திருக்கும் சேட்டைகளும் அடிவாங்கியபின்னர் காட்டும் ரியாக்சனும் கவுண்டர்மேல் ஆத்திரம் வராமல் அந்த காட்சிகளை ரசிக்கவைக்கின்றன. கவுண்டர் செந்திலை போட்டுத்தாக்கினாலும் கவுண்டரைவிட செந்திலுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கும் காட்சிகளில் நடிப்பதற்கு கவுண்டமணி ஒருபோதும் தயங்கியதில்லை என்பதற்கு ராஜகுமாரன் படத்தில் வரும் வடிவேலுவின் தங்கையை திருமணம் செய்ய இருவரும் போட்டிபோடும்காட்சி சான்று.

பதினாறு வயதினிலே முதல் தன்னுடைய கேரக்டருக்கு முக்கியத்துவம் இருக்கும் படங்களில் மாத்திரம் நடித்துவந்த கவுண்டர் தன்னை ஒருபோதும் விட்டுக்கொடுத்ததில்லை. இன்றுகூட கவுண்டர் தன்னோட சம்பளத்தை குறைத்து இறங்கிவந்தால் நிறைய படங்களில் நடிக்கலாம். பத்துப்படங்களில் நடித்து கொஞ்சம் கொஞ்சமாக பணத்தை சேர்த்துக்கொள்வதைவிட தனக்கிருக்கும் அந்தஸ்தை படங்களில்லாவிட்டாலும் தக்கவைத்திருக்கவேண்டுமென்று நினைப்பது தலைக்கணமில்லை, அது அவருடைய சுயமரியாதை. ஒருவகையில் இசைஞானியும் கவுண்டரும் ஒரேவகைதான், இருவரும் இறங்கிவந்தால் இன்றைக்கும் ராஜாக்கள்தான், ஆனால் இருவருக்கும் பணத்தையும் புகழையும்விட தத்தமது சுயமரியாதைதான் முக்கியம்.மன்மதன் படத்தில் நடித்ததால் அந்த விடலை பையனோட கேனத்தனமான பேச்சுகளை கவுண்டரும் நாமும் கேட்கவேண்டிவந்ததுதான் வருத்தமான விடயம். "கவுண்டமணிக்கு எப்ப பாத்தாலும் கத்திறதுதான் வேலை" என்கிற கமண்டுதான் கவுண்டருக்கெதிராக வைக்கப்படும் ஒரே குற்றச்சாட்டு. பல இடங்களில் ஏற்ற இறக்கமாக பேசுவதில் கில்லாடியான கவுண்டர் அதிகமான காட்சிகளில் கத்தி பேசுவதற்கு காரணம் முழுமையாக அவரது வார்த்தைகள் மக்களைப்போய் சேரவேண்டுமென்பதுதான். தனக்கென்றேயுரிய தனித்துவமான உடல்மொழி, வசன உச்சரிப்பு, மானரிசம், எக்ஸ்பிரஷன், நடன அசைவுகள் என கவுண்டரின் நகைச்சுவை சம்ராட்சியத்தை யாருமே அவளவு சீக்கிரம் நெருங்கமுடியாது.

கவுண்டர் பேசும் ஒரு வசனம்

செந்தில் : அண்ண உங்க பொண்டாட்டி உங்களவுக்கு இல்ல!!
கவுண்டர் : ஆமா உசரம் கொஞ்சம் கம்மி அதுக்கென்னயிப்போ?

கவுண்டரின் பிரபலமான வசனங்களை முழுவதும் எழுதினால் பதிவை முடிக்கமுடியாது என்பதால் உங்களுக்கு பிடித்த வசனங்களை பின்னூட்டலில் கூறலாம்.

கிறிஸ் கெயின்ஸ் (கிரிக்கெட்)எனக்கு மிகவும் பிடித்த நியூசிலாந்தின் முன்னாள் சகலதுறை வீரர். சாதாரணமாக சகலதுரைவீரர் என்றால் ஒன்றில் Batting All-rounder அல்லது Bowling All-rounder ஆகத்தான் இருப்பார்கள். துடுப்பாட்டம்(Batting) பந்துவீச்சு(Bowling) என இரண்டிலும் சமவளவில் பிரகாசிக்கும் சகலதுறை வீரர்களை விரல்விட்டு எண்ணலாம். கெயின்ஸ்சிற்கு முன்னர் இயன் பொட்டமும்(Ian Botham) கெயின்ஸ்சிற்கு பின்னர் அன்ரு ப்ளிண்டோப்பும்(Andrew Flintoff) டிவேயின் பிராவோவும்தான் (Dwayne Bravo) துடுப்பாட்டம், பந்துவீச்சு இரண்டிலும் சமமாக பிரகாசிக்கும் சகலதுரைவீரர்கள்.

ஆஜானபாகு தோற்றமுடைய கெயின்சின் துடுப்பாட்டமும் பந்துவீச்சும் தனித்துவமானவை. டெஸ்ட் போட்டிகளில் சாவகாசமாக சிக்சர் அடிப்பதில் கெயின்சை மிஞ்ச ஆளில்லை, அதற்காக அப்ரிடி(afridi)போல் கண்டபாட்டுக்கெல்லாம் அடித்து விளையாடும் நபரல்ல கெயின்ஸ். நேர்த்தியாக கணித்து பந்துகளுக்கு ஏற்றால்போல அடித்துவிளையாடும் கெயின்ஸ் 62 டெஸ்ட் போட்டிகளில் 87 சிக்சர்களை விளாசியிருக்கிறார். இவரைவிட அதிகமாக கில்கிறிஸ்ட்(96 போட்டிகளில் 100) மற்றும் லாரா(131 போட்டிகளில் 88) அதிக சிக்சர்கள் அடித்திருந்தாலும் அவர்கள் விளையாடிய போட்டிகள் அதிகம். ஆரம்பகாலங்களில் தனது வேகத்தால் மிரட்டிவந்த பிரட்லிக்கு முதல்முதலாக டெஸ்ட் போட்டிகளில் சர்வசாதாரணமாக சிச்சர்களை விளாசியது கெயின்ஸ்தான், அதேபோல ஷேன் வோனையும் கெயின்ஸ் விட்டுவைப்பதில்லை. 193 ஒருநாள் இனிங்க்ஸ்களில் 153 சிக்சர்களை விளாசியிருக்கும் கெயின்சின் சராசரி போட்டியொன்றிற்கு 0.79 சிக்சர், இது 100சிச்சருக்கு மேல் அடித்தவர்களது பட்டியலில் இரண்டாவது கூடிய சராசரி, முதலாவது இடத்தில் அப்ரிடி போட்டியொன்றிற்கு 0.91 சிக்சர்.ஒருநாள் போட்டிகளில் நியூசிலாந்தின் நடுவரிசை துடுப்பாட்டமும் இறுதி ஓவர்களில் பினிஷிங்கும், இக்கட்டான தருணங்களில் சேஷிங்கும் கெயின்சை நம்பித்தான். நியூசிலாந்தின் முதலாவது சர்வதேக கிண்ணம் இந்தியாவின் கைகளிலிருந்து நியூசிலாந்தின் கைகளுக்கு மாறியது கெயின்ஸ் என்கின்ற தனிமனிதனின் சாதனையினால்த்தான் என்பதை 2000 ஆம் ஆண்டு நைரோபியில் இடம்பெற்ற மினிவேல்ட்கப் இறுதியாட்டத்தை பார்த்த அனைவருக்கும் தெரிந்திருக்கும். அந்த போட்டியில்தான் காலில் உபாதையுடன் short runup இல் சிறப்பாக பந்துவீசிய கெயின்ஸ் பவுன்சர்பந்துகள்தான் கங்குலியின் ஓட்டக்குவிப்பை கட்டுப்படுத்தும் உக்தியென்பதை கண்டுபிடித்து கங்குலியின் கிரிக்கட் வாழ்க்கையையே சோதனைக்குள்ளாக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த போட்டியைபோன்றே ஆஸ்திரேலியாவில் இடம்பெற்ற முக்கோண ஒருநாள் தொடரின் முக்கியமான போட்டி ஒன்றில் தென்னாபிரிக்காவிற்கெதிராக கெயின்ஸ் அடித்த வெற்றிச்சதம் முதல்முதலாக ஆஸ்திரேலியாவை சொந்தநாட்டில் இறுதிப் போட்டிக்கு வரவிடாமல் தடுத்ததென்பது வரலாறு.பந்துவீச்சை பொறுத்தவரை ஒருநாள் போட்டிகளில் வேகத்தை குறைத்து லைன் அண்ட் லெந்தில் (Line & Length) பந்துவீசும் கெயின்ஸ் ஒவ்வொரு பந்துக்கும் வேகத்திலும் ஸ்விங்கிலும் லைன் அண்ட் லெந்திலும் வேறுபாடு (variation) காட்டுவதில் கில்லாடி. ஒருநாள் போட்டிகளில் மிடில் ஓவர்களில் பந்துவீசும் கெயின்ஸ் டெஸ்ட் போட்டிகளில் ஆரம்ப பந்து வீச்சாளராகத்தான் பயன்படுத்தப்பட்டார். அதற்க்கு காரணம் அவரது ஸ்விங் கன்ரோல்(swing control) மற்றும் பந்துவீசும் வேகம் என்பனதான். ஒருநாள் போட்டிகளை போலல்லாது டெஸ்ட் போட்டிகளில் வேகமாக பந்துவீசும் கெயின்சின் bowling action பார்ப்பதற்கு அருமையாக இருக்கும். ஆரம்ப ஓவர்களில் குறிப்பாக வேகப்பந்துவீச்சுக்கு ஓரளவேனும் சாதகமான ஆடுகளங்களில் கெயின்சின் இன்ஸ்விங் பந்துகள் பற்றி விபரிக்க வார்த்தைகளே இல்லை. களத்தடுப்பிலும் சிறப்பாக செயற்ப்படும் கெயின்ஸ் மைதானத்தில் மிகவும் கூலாக(cool) இருக்கும் விரல்விட்டு எண்ணக்கூடிய வீரர்களில் ஒருவர். அனாலும் குடுபத்துடன் விடுமுறையை கழிக்க அடிக்கடி செல்வதால் இவரை தொடர்ந்து நியூசிலாந்து அணியில் காண்பது கொஞ்சம் கடினம்.

ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் 240 சிக்சர்கள் அடங்கலாக 8000 த்திற்கு அதிகமான ஓட்டங்களையும் 400 க்கு அதிகமான விக்கட்டுகளையும் தன்னகத்தே வைத்திருக்கும் கெயின்சின் இடத்தை நிரப்புமளவிற்கு ஒருவீரர்ர் இனிவரும் காலங்களில் நியூசிலாந்துக்க்கு கிடைப்பாரா என்றால் அது சந்தேகமே.

Monday, October 18, 2010

மணமகன் தேவை

யாழ் .........(மதம்), உயர் .........(ஜாதி), வயது 24 , ........ ராசி, ........ நட்சத்திரம், மெல்லிய வெள்ளை மிகஅழகான் பெண்ணுக்கு மணமகன் தேவை, வெளிநாட்டு மணமகன் மட்டும் தொடர்பு கொள்க(மத்திய கிழக்கு நாடுகள் அல்ல),.........பெயர், ..........தொலைபேசி இலக்கம்)

19/9/2010 அன்று இலங்கையின் முன்னணி பத்திரிக்கை ஒன்றில் மணமகன் தேவையென ஒருவர் கொடுத்திருந்த விளம்பரம்தான் மேலுள்ளது. இந்த விளம்பரத்தை கொடுத்தவர் ஒரு டாக்டர்(எந்த டாக்டரின்னு தெரியல)

இலங்கையில் குறிப்பாக தமிழ் பெற்றோர்களில் பெரும்பான்மையானவர்களது மணமகன்தெரிவு மேற்க்கத்தைய நாடுகளில் வசிக்கும் இளைஞர்கள்தான். கடந்த இரு தசாப்தங்களாக தங்கள் பிள்ளைகளை வெளிநாட்டில் கட்டிக்கொடுக்கவே பெரும்பான்மையான இலங்கைத் தமிழ்ப்பெற்றோர்கள் விரும்புகிறார்கள். இதற்கு பல காரணங்கள் இருந்தாலும் முக்கியமாக இரண்டு காரணங்களை சொல்லலாம்.

1) குடும்பநிலை/வறுமை

குறிப்பாக இரண்டு மூன்று பெண்களை வீட்டில் வைத்திருப்பவர்களுக்கு தங்கள் பிள்ளைகளின் திருமணத்திற்கு சீதனம் கொடுக்க வசதியிருக்காது. வெளிநாட்டு மாப்பிள்ளை என்றால் சீதனம் அதிகமாக தேவையில்லை, அதுதவிர பெண்ணின் அண்ணன் தம்பிகளில் யாரையாவது ஒருவரை மாப்பிளையின் உதவியுடன் வெளிநாட்டுக்கு அனுப்பி குடும்ப கஷ்டங்களை தீர்க்கலாமேன்கிற நம்பிக்கை. இப்படி பலவிடயங்களில் கீழ்த்தட்டு மற்றும் நடுத்தட்டு பெற்றோர்களுக்கு வெளிநாட்டு மாப்பிளைகள் தேவைப்படுகிறார்கள்.

2) பாதுகாப்பு

நாட்டின் பாதுகாப்பற்ற சூழ்நிலை, எந்த நேரம் எது நடக்குமோ என்கிற அச்சம், இன்றைக்கிருக்கும் நிலைமை நாளைக்கு இருக்காதென்பதால் இடம்பெயர்வொன்று வந்துவிட்டால் அதனால் ஏற்ப்படும் சிரமம், மற்றும் வேறு சில முக்கியமான பாதுகாப்பற்ற காரணிகள் என பலவிடயங்களில் பாதுகாப்பற்ற சூழ்நிலை இங்கு நிலவுவதால் தங்கள் பிள்ளைகளை வெளிநாடுகளில் கட்டிக்கொடுத்தால் அங்கு அவர்கள் பாதுகாப்பாக இருப்பார்கள் என்கிற நம்பிக்கையில் வெளிநாட்டு மாப்பிளைகளை அதிகமான பெற்றோர் விரும்புகிறார்கள்.இவற்றைவிட வசதிவாய்ப்பு, கௌரவமென வேறுபல காரணங்களுக்காகவும் வெளிநாட்டு மாப்பிளைகளை பல பெற்றோகள் விரும்புகின்றனர். தமது உறவுகளை விலகி, சொந்த மண்ணினை நீங்கி பல்லாயிரம் மைல்களுக்கப்பால் இருக்கும் இளைஞர்களுக்கு வாழ்க்கைத்துணையாக தங்கள் பெண்ணை கட்டிக்கொடுப்பது ஒன்றும் தவறான விடயமில்லை, அது அவரவர் குடும்ப்பநிலை மற்றும் மனம் சார்ந்தது. இது அவர்களது சொந்தப் பிரச்சனை, ஆனால் அதில் யார்மனதும் புண்படக்கூடாதென்பதை அவர்கள் புரிந்து கொண்டால் நல்லது. மேலுள்ள விளம்பரத்தில் குறிப்பிட்ட அந்த பெண்ணிற்கு வெளிநாட்டு மாப்பிளையை பார்ப்பதற்கு அவருக்கு உரிமை இருக்கிறது அனால் அதிலே வெளிநாட்டு மணமகன் மட்டும் என்கிறதும், மத்தியகிழக்கு நாடுகள் அல்ல என்கின்றதும் நிச்சயமாக சம்பந்தபட்ட தரப்பினரை காயப்படுத்தும் வரிகளே.

உள்நாட்டில் இருப்பவர்களையும், மத்தியகிழக்கு நாடுகளை சேர்ந்தவர்களையும், ஆசிய நாடுகளில் வசிப்பவர்களையும் இரண்டாம் தரமாக பார்க்கும் புதிய கலாச்சாரம் இப்போது உருவாக ஆரம்பித்திருக்கிறது. இந்த விளம்பரத்திலே இன்னுமொரு கவலையான விடயமென்னவென்றால் பையன் எப்படி இருக்கவேண்டும் என்பதை பற்றிய எதிர்பார்ப்பைவிட எங்கு இருக்கவேண்டும் என்கிற எதிர்பார்ப்புத்தான் முக்கியமாக இருக்கிறது. உதாரணமாக தன் பெண்ணின் வயது, அழகு, குலம், கோத்திரம், ராசி , நட்சத்திரம் என எல்லாவற்றையும் பத்திரிகையில் வெளியிட்டவருக்கு மணமகன் வெளிநாட்டவராக மட்டும் இருக்கவேண்டுமென்பதுதான் முக்கியமாக படுகிறது.

இந்த விளம்பரம் ஒரு புதிய வியாதியின் அறிமுகம்தான். இது ஒரு உதாரணம்தான், ஆனால் கல்யாண தரகர்களிடம் இதுபோன்ற கோரிக்கைகள்(வெளிநாடுகள் மட்டும்; மத்தியகிழக்கு,ஆசிய நாடுகை அல்ல) இப்போது சில பெற்றோர்களால் முன்வைக்கப்படுவது அதிகரித்துக்கொண்டு வருகிறது. இது ஆரம்பம்தான், ஆனால் போகப்போக இந்த வியாதி முற்றிப் போவதற்க்கான சந்தர்ப்பங்களும் உண்டு. முன்பெல்லாம் தங்கள் பொண்ணு காதலில் விழுந்தால் குடும்பமானம் என்னவாகுமென பயந்த காலம்போய் இன்று சில பெற்றோர்கள் தங்கள் பொண்ணு காதலில் விழுந்தால் வெளிநாட்டு மாப்பிளைக்கு அரோகரா ஆகிவிடுமோ என்றுதான் பயப்பிடுகிறார்கள், உண்மையில் இதுதான் இன்றைய யதார்த்தம்.

Sunday, October 17, 2010

பாட்ஷா- திரைவிமர்சனம் (லேட்டானாலும் லேட்டஸ்ட் )நன்றி - சண் டிவி
எந்தவொரு சூப்பர்கிட்டான படத்தையும் பார்க்கும்போது நான் இந்த ரோலில நடிச்சா சூப்பரா பண்ணியிருக்கலாமே! இந்தபடத்தை மிஸ் பண்ணீட்டனே! என்று சகநடிகர்கள் நினைப்பது வழக்கம், அதை பல சந்தர்ப்பங்களில் வெளிப்படையாக கூறிய நடிகர்களும் உண்டு. அனால் யாருமே "இந்தப்படத்தில் நான் நடித்தால் எப்படியிருக்கும்?" என்று கற்பனைபண்ணிக்கூட பார்க்கமுடியாத படமென்றொன்று இருக்கிறதென்றால் அது பாட்ஷாதான். ரஜினியை தவிர வேறுயாரையும் பாட்ஷாவாகவோ மாணிக்கமாகவோ கற்பனைபண்ணிக்கூட பார்க்கமுடியாது. ஒருவேளை யாரவது பாட்ஷாவை ஏதாவதொரு காலகட்டத்தில் ரீமேக்செய்தால் அதுதான் ரஜினிபடங்களின் கடைசி ரீமேக்படமாக இருக்கும்.முன்பெல்லாம் ரஜினியின் நடிப்பிற்கு சான்றாக முள்ளும் மலரும், ஆறிலிருந்து அறுபதுவரை, நெற்றிக்கண், ஸ்ரீராகவேந்திரா, ஜானி, தளபதி போன்ற படங்களைத்தான் நினைத்திருந்தேன். ஆனால் இவை அனைத்திற்கும் எந்தவிதத்திலும் குறைவில்லாமல் ரஜினி பாட்ஷாவில் நடிப்பில் கலக்கியிருக்கிறார் என்பதை இன்றுதான் என்னால் உணரமுடிந்தது. ரஜினியின் தம்பிகேரக்டர் ரஜினியை போலிஸ் உயரதிகாரி பார்க்கவேண்டும் என்று கூறியதும் வரும் காட்சியில் ரஜினியின் performance; சான்சே இல்லை. அதேபோல தங்கையின் திருமணத்திற்காக மாப்பிளையின் அப்பாகேரக்டரிடம் பேசும் காட்சியும் A கிளாஸ். படம் முழுவதும் ஒவ்வொரு காட்சியிலும் ரஜினி ஆதிக்கம் செலுத்தியிருப்பார். மாணிக்கத்திற்கும் பாட்ஷாவிற்குமிடையில் வசன உச்சரிப்பிலும், உடல் மொழியிலும், மானரிசத்திலும் ரஜினி காட்டியிருக்கும் வேறுபாடு ரஜினி வெறும் மாஸ்ஹீரோ மட்டுமல்ல அவர் கிளாஸ்ஹீரோவும்தான் என்பதற்கு இன்னுமொரு சான்று, மனிதர் இரண்டு கேரக்டர்களுக்குமிடையில் அப்பிடியொரு அற்புதமான வேறுபாட்டை காட்டியிருப்பார்.நக்மா; அன்றைய இளைஞர்களின் கனவுநாயகி(அப்ப நாங்க குழந்தைகள்), இப்போ பாஷாவை பார்க்கும் இளைஞர்களுக்கும் கனவுநாயகிதான்:-) நடிப்பதற்கு பெரிதாக வேலை இல்லாவிட்டாலும் தனக்கு கொடுத்ததை சிறப்பாக செய்திருப்பார், ஆரம்பத்தில் ஆட்டோவில் ரஜினியுடன் பேசும்காட்சி செமதூள். ரஜினி நக்மா தவிர ரகுவரன், ஜனகராஜ், தங்கையாக யுவராணி, தந்தையாக விஜயகுமார், தாயாக சாரதாப்பிரியா, தாதாவாக ஆனந்தராஜ், அன்வராக சரண்ராஜ், தேவன் என பலகேரக்டர்கள் இருந்தும் அனைவரும் மனதில்பதிவது ஆச்சரியமான உண்மை.

ஜனகராஜ் ரஜினியுடன் இணையும் படங்களில் இருவருக்குமிடையில் நல்ல கெமிஸ்ரி எப்போதும் இருக்கும். படிக்காதவன், ராஜாதிராஜா, பணக்காரன், அண்ணாமலை, பாஷா, அருணாச்சலம் என ரஜினி,ஜனகராஜ் கூட்டணி எப்போதுமே ஜெயிக்கும் கூட்டணிதான். அடுத்த ரஜினி படத்தில் ஜனகராஜ் இருந்தால் மிகவும்சிறப்பாக இருக்கும், அதேபோல செந்திலும் ஓகே.ரகுவரன் பற்றி சொல்லனுமின்னா; ரஜினி தவிர வேறுயாராலும் எப்பிடி பாட்ஷா கேரக்டருக்கும் மாணிக்கம் கேரக்டருக்கும் உயிர்தந்திருக்க முடியாதோ, அதேபோல ரகுவரன்தவிர வேறுயாராலும் அன்டனிகேரக்டருக்கு உயிர் தந்திருக்கமுடியாது. அதுவும் இறுதிகாட்சிகளில் தேவன் வீட்டில் தாடியுடன் கழுத்தை சரித்து ஒரு பார்வை பார்ப்பாரே!!!!!!!!!!! ரகுவரன்சார் "உங்களை மிஞ்ச மறுபடியும் நீங்கதான்சார் பிறந்து வரணும்" ரஜினியை குழைந்தை, சின்னபொடியன் போன்ற வசனங்களால் அழைப்பது ரகுவரனால் மட்டும்தான் முடியும், அதுதான் ரகுவரனின் மாஸ். ரகுவரனின் இழப்பு ஈடு இணையில்லாதது என்பதை யாரும் மறுக்கமுடியாது.தேவாவின் இசை படத்திற்கு மிகப்பெரும் பக்கபலம், படத்திற்கு ஏற்றமாதிரியான பாடல்களை வழங்கிய தேவாவின் பின்னணி இசை எங்கிருந்து எடுக்கப்பட்டாலும் படத்திற்கு மிகப்பெரும் பலம். அதேபோல ஒளிப்பதிவு, படத்தொகுப்பு, கலை என அனைத்தும் படத்திற்கு எந்தவிதத்திலும் குறைவைக்கவில்லை. வைரமுத்து தன் பங்கிற்கு பாடல்வரிகளில் பட்டையை கிளப்பியிருக்கிறார். பாட்ஷாவின் வெற்றிக்கு காரணமான இன்னுமொரு முக்கியமான நபர் பாலகுமாரன்; வசனங்களைபற்றி சொல்லித் தெரியவேண்டியதில்லை யென்றாலும் 'உன் வாழ்க்கை உன் கையில்' என்பதனால் கடவுள் நம்பிக்கை இல்லையா? என்பதற்கு பாலகுமாரன் தரும் பதில் அக்மார்க் பாலகுமாரன் டச். படம் முழுவதும் பாலகுமாரன் எம் கூடவே பயணிக்கிறார். பாட்ஷா 2 எடுக்கப்படுமானால் வசனத்திற்கு பாலகுமாரனை கவனத்தில் கொள்வது சிறப்பாக இருக்குமென்பது எனது தனிப்பட்டகருத்து.இயக்குனர் சுரேஷ்கிருஷ்ணாவுக்கு ஒரு ராயல்சலூட், மனிதர் பின்னியெடுத்திருக்கிறார். இதற்கு முன்னர் இப்படியொரு திரைக்கதை தமிழ்சினிமாவில் வந்ததில்லை. மாணிக்கத்திற்கு பாட்ஷாவின் பிளாஷ்பாக், பின்னர் பாஷாவுக்கு அன்வரின் பிளாஷ்பாக் என பிளாஷ்பாக்கில் பிளாஷ்பாக்கை வைத்திருக்கும் சுரேஷ்கிருஷ்ணா திரைக்கதையில் எந்த இடத்திலும் தொய்வை ஏற்ப்படுத்தாதது ஆச்சரியம்! ஜனகராஜ், தளபதி தினேஷ், மகாநதி சங்கர் என மும்பாயில் இருந்த சகாக்களை சென்னையில் பயன்படுத்தியது, தேவனை மும்பையில் இருந்து சென்னைவரை கொண்டுவந்து இறுதிவரை அவர் கேரக்டரை மாற்றாமல் திரைக்கதையை பின்னியவிதம் அழகு.அண்ணாமலை, பாட்ஷா என ரஜினியின் மணிமகுடத்தில் இரண்டு முக்கிய திரைப்படங்களை கொடுத்த சுரேஷ்கிருஷ்ணாதானா ஆளவந்தான், பாபா, கஜேந்திரா, பரட்டை என்கிற அழகு சுந்தரம், ஆறுமுகம் போன்ற படங்களை இயக்கினாரா? என்கிற சந்தேகம் எல்லோருக்கும் இருக்கும். உண்மையில் இவற்றில் பாபாவும் ஆளவந்தானும் ரஜினி, கமலின் கதைகளுக்கும் அவர்களின் தலையீடுகளுக்கும் மத்தியில் இயக்கப்பட்டது; அதேபோல கஜேந்திராவும் 'பரட்டை என்கிற அழகுசுந்தரமும்' ரீமேக் படங்கள், அவற்றை எந்த பெரிய இயக்குனரும் தமிழில் இயக்கியிருந்தால் இதேநிலைதான். இவற்றில் சுரேஷ்கிருஷ்ணாவின் தவறென்று சொன்னால் அது ஆறுமுகம் மட்டும்தான், நிச்சயமாக ஆறுமுகம் திரைப்படத்தில் சுரேஷ்கிருஷ்ணாவின் ஈடுபாடு 100% இருந்திருக்காதேன்றே தோன்றுகிறது.பாட்ஷாவிலும்சரி அண்ணாமலையிலும்சரி ரஜினியின் மாஸை 100% சரியாக பயன்படுத்திய சுரேஷ்கிருஷ்ணா இன்றைய காலகட்டத்துக்கு ஏற்றமாதிரியான திரைக்கதையை தொழில்நுட்பங்களோடு இணைத்து இயக்குவாறென்றால் பாஷா 2 விற்கு நிச்சயமாக சுரேஷ்கிருஷ்ணாற்கு சந்தர்ப்பம் கொடுக்கலாம். பூரண சுதந்திரம் வழங்கப்பட்டால் சுரேஷ்கிருஷ்ணாவால் நிச்சயமாக பாஷா 2 வை சிறப்பாக இயக்கமுடியும் என்கிற நம்பிக்கை எனக்குண்டு; இது இன்று பாட்ஷாவை முழுமையாக பார்த்தவர்களுக்கு நன்கு புரியும். புரியாதவர்கள் மீண்டுமொருதடவை பாட்ஷாவை பாருங்க.

மொத்தத்தில் பாட்ஷா - இன்றைக்கல்ல என்றைக்கும் தமிழ் சினிமாவின் உச்ச கமர்சியல் மாஸ் மசாலா.

Friday, October 15, 2010

பாட்ஷா (2) வை இயக்குகிறார் பேரரசுஇது முழுக்க முழுக்க மொக்கை
சத்தியா மூவிஸ் தயாரிக்க சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் புதிய திரைப்படமான பாட்ஷா (2) விற்கான கதை திரைக்கதை பற்றி ரஜினியிடம் விவாதிக்கும் பேரரசு

பேரரசு : வணக்கம் சார்? எப்பிடி இருக்கிறீங்க?

ரஜினி : இது வரைக்கும் ஓகே ! உங்க கதையை கேட்டதுக்கப்புறம் எப்பிடிங்கிறதை அப்புறமா பாக்கலாம்!!!!! இப்ப கதையை சொல்லுங்க.

பேரரசு : என்னசார் பெரிய கதை? என்னோட எல்லா படத்திலயும் கதை ஒன்லைன்தான் சார்; திரைக்கதைதான் படத்தோட பலமே. திரைக்கதையில செண்டிமன்ட், அக்ஷன், காமடி மசாலா தூக்கலா இருக்கும்.

ரஜினி : அப்ப கதை இல்லையின்னு சொல்லுறீங்க, ஓகே திரைக்கதையில என்னதான் புதுமை வச்சிருக்கிறீங்க?

பேரரசு : ஹீரோ, ஹீரோயின், இசையமைப்பாளர், ஒளிப்பதிவாளர் என எல்லாருமே என்னோட முந்தய படங்களிலிருந்து வித்தியாசம்தான் சார்.

ரஜினி : நான் அதை கேக்கல; திரைக்கதையில என்ன புதுசா இருக்கு?

பேரரசு : அதுவா சார்; முதல்ல முழுசா கதையை கேளுங்க, அப்புறமா நீங்களே என்ன புதுமைன்னு சொல்லுவீங்க.

ரஜினி : சரி சொல்லுங்க!!!!

பேரரசு : முதல் ஷாட்டு; பத்து பதினைந்து ரவுடிபசங்க ஒரு காலேஜ் பொண்ணை துரத்திகிட்டு வாராங்க, கொஞ்சநேர ஷேசிங்கிற்கப்புறம் ஒரு காட்டுக்குள்ள ஷாட்டை வைக்கிறம், காட்டுக்குள் இருக்கும் ஒரு குகைக்குள்ள அந்த பொண்ணை ரவுடிகள் மடக்கி ரவுண்டு கட்டுறாங்க, அதில் ஒருத்தன் அந்த பொண்ணோட தாவணியில் கைவைக்க போகும்போது....

ரஜினி : காலேஜ் பொண்ணு தாவணியோடயா?

பேரரசு : அன்னிக்கு காலேஜில கல்ச்சரஸ் புரோகிராம் சார் (அப்பாடா ....)

ரஜினி : ஓகே ஓகே; மேல சொல்லுங்க (தலையெழுத்து)

பேரரசு : ரவுடி தாவணிகிட்ட கையை கொண்டுபோக............. பலமான காற்றுவீசுகிறது, மரக்கிளைகள் பயங்கரமாக ஆடுகின்றன, நிலத்திலுள்ள குப்பைகள் எல்லாம் பறக்கின்றன, யானைகள் பிளிர்கின்றன, சிங்கங்கள் கர்ஜிக்கின்றன, பறவைகள் இறக்கையை அடித்து அங்குமிங்கும் பறக்கின்றன, நரிகள் ஊளையிடுகின்றன அப்போது தாரை, தப்பட்டைகள் இசை முழங்க குகையின் மேற்பகுதியை உடைத்துக்கொண்டு உள்ளே நுழைந்து தாவணியை தொடவந்த ரவுடியின் மார்பில் ஓங்கி ஒரு மிதிமிதிக்க அத்தனை ரவுடிகளும் ஒன்றாக குகைக்கு வெளியே பறக்க அறிமுககாட்சி வருகிறது. காலிலிருந்து மெதுமெதுவாக முகத்துக்கு கமெரா அசைக்கப்பட்டு இறுதியில் முகத்தை காட்டும்போது......

ரஜினி : அப்போ என்னோட காஸ்டியூம் என்ன?

பேரரசு : சார் நான் இப்ப சொன்னது என்னூட அறிமுகம்; அந்த இடத்திலதான் கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள், இசை, இயக்கம் பேரரசு என்கிற டைட்டில் வரும்சார்.

ரஜினி : (கூல்டவுன் ரஜினி கூல்டவுன் ) சரி அதென்ன இசை?

பேரரசு : ரகுமான் இசையமைச்சா ராஜாரசிகர்கள் அதிருப்தி தெரிவிக்கிறாங்க, ராஜாசார்கிட்ட நானெல்லாம் போயி கதை சொல்லமுடியுமா? அப்புறம் ஹரிஸ்,யுவன் என்று போனால் ரகுமான் ரசிகர்கள் திருப்திப்படமாட்டாங்க அதனால எல்லோரையும் திருப்திபடுத்தும் விதமா நானே இசையமைக்கலாம் என்றிருக்கிறேன். ஏன்னா என்னோட இசைக்குத்தான் போட்டியே இல்லையே?

ரஜினி : (அது இசையின்னாதானே யாரவாது போட்டிபோட) அத அப்புறம் பாத்துக்கலாம் கதையை சொல்லுங்க.

பேரரசு : ஒரு பொண்ணு சைக்கிள்ள பாட்டு பாடிகிட்டே வாராங்க, திடீரின்னு சைக்கிள் பஞ்சர் ஆகிது, அப்போ பஞ்சர் ஒட்ட அருகிலிருக்கிற ஒரு சைக்கிள் கடைக்கு போறாங்க; அங்கதான் சார் நீங்க அறிமுகமாகிறீங்க, அமாசார் நீங்கதான் அந்த கடையோட ஓனர்.

ரஜினி : அப்ப அந்த பொண்ணு?

பேரரசு : நீங்க நினைக்கிறது சரிசார்; அதுதான் ஹீரோயின் தீபிகா பாடகன்.

ரஜினி : அது பாடகனில்லை படுகோன்

பேரரசு : சரி சரி அதவிடுங்க; அப்புறம் தீபிகா அடிக்கடி உங்க கடைக்கு பஞ்சர் ஒட்ட வாராங்க, அப்பப்ப காமடி பண்ணுவாங்க, உங்கமேல அவங்களுக்கு ஒரு இது. திடீரென்று ஒருநாள் அவங்க முறைமாமன் பாகிஸ்தானில இருந்து வாறாரு, அவருக்கும் தனக்கும் நடக்கும் நிச்சயதார்த்தத்தை நிறுத்த உங்களை கூப்பிடுறாங்க. அவங்க போனில கூப்பிட்டதால வீடுதெரியாம வீட்டை கண்டு பிடிக்க உங்க நண்பர்கள் சத்தியன், சிட்டிபாபு, எம்.எஸ்.பாஸ்கர் சகிதம் குப்பை லாரியில பாடிகிட்டே போறீங்க. பொண்ணுவீட்ட சிலபல காமடிகள் பண்ணினதுக்கப்புறம் ஒரு பைட்டு பண்ணிட்டு தீபிகாவை கூட்டிற்று வாறீங்க. அப்ப ஒரு டுயட்சாங் வருது, சாங்கை இலங்கையில வைக்கிறம்.

ரஜினி : எதுக்கு இலங்கையில?

பேரரசு : அப்பதானேசார் "தடை பண்ணுவம்" அப்பிடி இப்பிடின்னு நம்ம சங்கங்கள் கூச்சல்போட செம பளிசிட்டியாகும். அதெல்லாம் சரிவரும்சார், இப்ப நீங்க பாட்டை பாருங்க சார்; "உங்கக்கா என் மச்சாள் என்தங்கை உன் கொழுந்தி" அப்பிடின்னு உறவுகளை சொல்லும் பாடலாக அந்த பாட்டை எழுதியிருக்கிறன் சார்.

ரஜினி : கதையை மட்டும் சொல்லுங்க!!!!!

பேரரசு : அப்புறமென்ன; ஊருக்க இருக்கிற பணக்கார வில்லன் ஏழைகளோட நிலத்தில் தொழிற்சாலை கட்ட ஆரம்பிக்கிறார், கூடவே உங்களால பாதிக்கப்பட்ட வேறு மூன்று வில்லன்களும் சேர்ந்துகிறாங்க. தொழிற்சாலை கட்டுறதை தடுத்து எப்பிடி மக்களையும் ஊரையும் காப்பாத்திறீங்க என்கிறதுதான் மிகுதிகதை சார். அப்பப்ப பாட்டும், பைட்டும், கூடவே (சிட்டிபாபு,சத்தியன்,பாஸ்கர்)காமடிகளும் வரும்சார். கடைசியா நீங்க முகத்தில திருநீறு பூசிகிட்டு மாறுவேசத்தில வில்லன்களை புரட்டிஎடுப்பது மாதிரி கிளைமாக்ஸ் வைச்சிருக்கிறன் சார்.

ரஜினி : படத்தோட பேரு பாட்ஷா(2) வா இல்லை திருப்பதி/திருப்பாச்சி/சிவகாசி(2) வா? சரி அதெல்லாம்விடுங்க; கதையில ஏதோ வித்தியாசம் இருக்கின்னீங்களே அது எது?

பேரரசு : சார் பாத்தீங்கின்னா தமிழ் சினிமாவில முறைமாமன்கள் வழக்கமா அமெரிக்காவில இருந்து வாறமாதிரித்தான் காட்டுவாங்க, நான் அவர் பாகிஸ்தானில இருந்து வாற மாதிரி வச்சிருக்கிறன். அப்புறம் அந்த குப்பை லாரியில போறது, கிளைமாச்சில திருநீறு பூசிட்டு பைட்பன்னுறது என்னு எல்லாமே தமிழ் சினிமாக்கு புதுசுதானே?

ரஜினி : சரி பேரரசு நீங்க போகலாம், நான் ஜோசிச்சிட்டு முடிவை அப்புறமா போன்பண்ணி சொல்லுறன்.

பேரரசு : சீக்கிரமா சொல்லுங்க நான் அடுத்தவாரம் ஜாக்கிசானுக்கு கதை சொல்லல சப்பான் போகணும்.

ரஜினி : எனக்கு பொறுமை அதிகம்தான்; ஆனா அதுக்கின்னு ஒரு எல்லை இருக்கு, பத்து எண்ணிறதுக்க இந்த ஏரியாவிலேயே இருக்க கூடாது.

பேரரசு : பிடிக்கலையின்ன விடுங்க, நீங்க இல்லாட்டி என்ன? நான் ஜாக்கிசானை இல்லை டொம் குரூஸை வைச்சு இதேகதையை உலக அளவில் எடுத்துக்காட்டிறன்.

ரஜினி : 1..2...3...4..

பேரரசு : >>>>>>>R>>>U>>>N>>>>>>>>>>>>>>>>

ரஜினி : என்ன கொடுமை சரவணன் இது !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

Tuesday, October 12, 2010

ரஜினிக்கு உதவுமா திரையுலகம்?

* பத்திரிகை ஒன்றிற்கு சஞ்சய்தத் "ரஜினி மீது தீவிரவாதவழக்கு போடமுடியுமா? அப்படி போட்டால் தென்னிந்தியத் திரையுலகமே ரஜினிக்கு ஆதரவாகத் திரளும்" என்று கூறியிருக்கிறார். உண்மையிலேயே ரஜினிமீது அப்படி ஒருவழக்கு போட்டால் தென்னிந்திய திரையுலகம் என்னதான் செய்யும்?

சிலர் "அப்பாடா" என பெருமூச்சு விடுவார்கள், சிலரோ ஆடு வெட்டி விருந்து வைப்பார்கள், இன்னும் சிலர் "who is rajinikanth?" என்பார்கள், மிகச்சிலர் வருந்துவார்கள், ஓரிருவர் மட்டும் சாடைமாடையாக ஆதரித்து அறிக்கை விடுவார்கள், ஆனால் ஒருபயலும் நேரடியாக உதவிக்கு வரமாட்டாங்க. நடிகர்சங்கம் முதற்கொண்டு அதிகமானவர்களுக்கு தங்கள் தேவைகளுக்கு ரஜினி வேண்டும், ஆனால் ரஜினிக்கு ஒரு பிரச்சினையென்றால் யாரும் உதவ முன்வரமாட்டார்கள், ரஜினி விடயத்தில் இதுதான் வரலாறு சொல்லும் உண்மை, ஒருவேளை ரஜினியே எல்லாவற்றையும் one man Army யாக முடித்துவிடுவார் என்று நினைக்கிறார்களோ என்னமோ.

சஞ்சய்தத் ரஜினியை கொண்டாடுவதை மட்டும் வைத்து அவ்வாறு கூறியுள்ளார், ரஜினியை தாக்க ஒரு சந்தர்ப்பம் கிடைத்தால் அத்தனைபேரும் சர்க்கஸ் துப்பாக்கிபோல எப்படி திரும்பி தாக்குவார்கள் என்பதை பாவம் அவர் அறியவில்லை போலும்.* ரஜினியின் சுல்த்தான் திரைப்படத்தை ஜெமினிலேப் வாங்கி சவுந்தர்யாவிற்கு பதில் கே.எஸ்.ரவிக்குமாரை வைத்து இயக்கப்போவதாகவும், வெறும் அனிமேசன் படமென்றில்லாது உண்மையான ரஜினியையும் சில காட்சிகளில் நடிக்க வைக்க போவதாகவும் செய்தி வெளியாகியுள்ளது. இதன் உண்மைத்தன்மை தெரியாவிட்டாலும் இதில் எனக்கு உடன்பாடே இல்லை. வெறும் அனிமேசனாக வந்தால் கூட பரவாயில்லை, சிலகாட்சிகளில் ரஜினி நடித்தாலே அதை முழுமையான ரஜினிபடமாக்கி அதற்க்கு எதிர்மறையான விமர்சனங்களை எழுதி அதை தோற்கடிக்க முயற்ச்சிப்பார்கள். ஒருவேளை முயற்சி வெற்றிபெற்றால் சிவாஜியின் வெற்றியால் வந்த வயித்தெரிச்சலை போக்க அவர்கள் குசேலனை பயன்படுத்தியதைபோல எந்திரனின் மாபெரும் வெற்றியால் வந்த வயித்தெரிச்சலை போக்க சுல்த்தானை பயன்படுத்துவார்கள்.

கே.எஸ். ரவிக்குமாரோ, ஹரியோ, ஜெமினி லாப்போ, சத்தியா மூவிசோ, 'பாட்ஷா 2' வோ எதுவானாலும் படம் முழுவதும் ரஜினி நடிக்கும் ஒரு முழுமையான ரஜினிபடமாக அந்த திரைப்படம் இருக்கவேண்டுமென்பதே எனது விருப்பம். அதேபோல சுல்த்தானை சவுந்தர்யாவோ இல்லை ரவிக்குமாரோ யாரு வேணுமென்றாலும் இயகட்டும், ஆனால் அதில் ரஜினி ஒரு சீனிலும் நிஜமாக நடிக்காமல் முழுக்க முழுக்க அதுவொரு அனிமேசன் படமாகவிருந்தால் சிறப்பாக இருக்கும்.* போதுமென்கிற அளவுக்கு விமர்சனங்கள்,செய்திகள், புகைப்படங்கள் என கடந்த இரண்டு மாதமாக வியாபித்திருந்த எந்திரன் காய்ச்சல் இப்போது ஓரளவு தனிய தொடங்கியுள்ளது. எந்திரனை புறக்கணிக்க சொல்லி மக்களை 'வின'வியவர்களுக்கும், சமூகத்தை சீர் திருத்துவதற்காக எந்திரனை எதிர்த்த 'தோழர்களுக்கும்', படத்தை விமர்சனம் பண்ணுகிறேன் பேர்வழியென்று தமது சொந்த வக்கிரங்களை 'கருந்தேளை'போல கொட்டிய காமடி பீசுகளுக்கும் எந்திரனால் ஏற்ப்பட்ட தோல்வியை ஜீரணிக்க குறைந்தது இன்னும் சில வாரங்கள் ஆகலாம். இவர்களுக்கு அடுத்த ரஜினி படம் வரும்போதுதான் மீண்டும் சமூகத்தின் மீது ஆர்வம் வருமென்பதால் அதற்கிடையில் வரும் படங்களுக்கு இந்த நபர்களாலோ/குழுக்களாலோ ஆபத்தோ/இடைஞ்சலோ ஏற்படலாமென்று கவலைகொள்ளத் தேவையில்லை.

அடுத்த ரஜினிபடம் வெளியாகும் நேரத்தில் ரஜினி தன்னுடைய பேரனது பிறந்தநாளுக்கு ரசிகர்களை அழைக்காததை பற்றியும், ரஜினியின் அடுத்த படத்தை எதற்காக புறக்கணிக்க வேண்டுமென்பது பற்றியும் இவர்கள் எழுதி தங்களது வயத்தெரிச்சலை கொட்டுவதை பார்த்து ரசிப்பதற்கும்; படம்வெளியாகி ஜெயித்தபின்னர் அண்ணாச்சிகள் படும் பாட்டை கண்டும் கேட்டும் வாசித்தும் ரசிப்பதற்கென்றாலும் ரஜினி அடுத்த படம் நடிக்கவேண்டும். ரஜினி படம் ஜெயிப்பதால் உண்டாகும் மகிழ்ச்சியைவிட இந்த வயித்தெரிச்சல் பாட்டிகளது மூக்கு உடையும்போது ஏற்படும் மகிழ்ச்சிதான் அதிகமாக இருக்கிறது:-)

Sunday, October 10, 2010

இந்தவார இருவர் (10 /10 /10)

ஒவ்வொரு வாரமும் நான் ரசித்த, எனக்கு பிடித்த, எனக்கு பிடிக்காவிட்டாலும் நான் வியந்த, ஒரு சினிமா நட்சத்திரம் மற்றும் ஒரு விளையாட்டு வீரரை பற்றிய எனது பார்வையை எழுதாலாமேன்று தீர்மானித்துள்ளேன். இதனால் நாட்டுக்கு என்ன பலன்? இதனால் சமூகம் முன்னேறுமா? நீங்கள் திருந்தவே மாட்டீர்களா? போன்ற சமூக கேள்விகளை கேட்கும் அன்பர்களே இது உங்களுக்கான பதிவல்ல.நதியா (நடிகை)

என்னோட ஆல் டைம் பேவரிட் நடிகை என்றால் நிச்சயமாக அது நதியாதான். நடிகர்களில் மாஸ்ன்னா எப்பிடி தலைவர் பேரை சொல்கிறோமோ அதேபோல நடிகைகளில் மாஸ்ன்னா என்னோட தெரிவு நதியாதான். சராசரி நடிகைகளுக்குரிய உயரமில்லை, பசங்க எதிர்பாக்கிற body structure இல்லை, நிறம்கூட அவரேஜ்தான், நடிப்பென்று பார்த்தால்கூட உயிரை கொடுத்து மாங்கு மாங்கென்று நடித்ததில்லை, ஆனாலும் எதோ ஒரு வசீகரம். அது அவரது குடும்பப பாங்கான திரைத்தோற்றத்திற்காக இருக்கலாம், இல்லை பக்கத்து வீட்டுபொண்ணு போலிருக்கிற இமேஜிற்காக இருக்கலாம். இதையும்தாண்டி அவரது தேவைக்கேற்ற அளவான நடிப்பு, சிறு நடன அசைவானாலும் அதிலுள்ள வசீகரம், அவரது உடை மற்றும் ஆபரணங்களின் தெரிவு என்பனவும் நதியாவை உச்சத்திற்கு கொண்டு சென்றன என்று சொல்லலாம்.ஒரு காலத்தில் நதியா ஸ்கேட், நதியா ப்ளவுஸ், நதியா கொண்டை, நதியா ரிப்பன், நதியா கிளிப் என எல்லாமே நதியா மயம்தான். இத்தனைக்கும் எந்தவொரு திரைப்படத்திலும் எந்தவொரு காட்சியிலும் அவர் ஆபாசமான உடை அணிந்து நான் பார்த்ததில்லை.நெருக்கமான காட்சிகளில் நாயகனோடு நடித்தும் பார்த்ததில்லை. அன்றைய உச்ச நட்சத்திரங்களான ரஜினி, கமலுடன் இவர் எத்தனை படங்களில் சேர்ந்து நடித்துள்ளாறென்றால்; ரஜினியுடன் ஒன்று கமலுடன் ஒன்றுமில்லை என்பதே விடையாகும். உச்ச நட்சத்திரங்களுடன் நடித்து மக்கள் மனதில் இடம்பிடிக்கும் நடிகைகள் மத்தியில் நதியா உச்ச நட்சத்திரங்களை விலத்தி நின்றும் மக்கள் மனதில் இடம்பிடித்த நடிகை என்பதை மறுக்க முடியாது.நதியா நடித்த படங்களிலேயே எனக்கு மிகவும் பிடித்தபடம் என்பதைவிட என்னை மிகவும் பாதித்த திரைப்படம் என்றால் அது 'பூவே பூச்சூடவாதான்', என்னுடைய முதல் பத்து ஆல் டைம் பேவரிட் திரைப்படங்களில் இதுவும் ஒன்று (படத்தோட இயக்குனர் பாசிலை பற்றி பிறிதொருநாள் சாவகாசமாக பார்ப்போம்). சினிமாத்தனமில்லாத ஜதார்த்தமான நடிப்பால் பார்வையாளர்களை ஆரம்பத்தில் கலகலப்பாகவும் உச்சகட்டகாட்சியில் கண்கலங்கவும் வைத்திருப்பார், 'சின்னக்குயில் பாடும் பாடல்' எத்தனை தடவை பார்த்தாலும் திகட்டுவதில்லை. அதேபோல அன்புள்ள அப்பா, பூக்களை பறிக்காதீர்கள் என்பனவும் நதியாவின் சிறந்த திரைப்படங்கள்.

ஸ்டீவ் வோ (கிரிக்கெட்)எனக்கு பிடித்த கிரிக்கெட் வீரர்களில் ஒருவர். 1987 ஆம் ஆண்டு இந்திய, பாகிஸ்தான் மண்ணிலே வைத்து அலன்போடர் தலைமையிலான ஆஸ்திரேலிய அணியினர் உலககிண்ணத்தை கைப்பற்றியபோது அன்றைய இளம்வீரரான ஸ்டீவ் வோவின் பங்களிப்பு அணிக்கு மிகவும் பக்கபலமாக இருந்தது, அந்த உலககிண்ண சுற்றில் 167 ஓட்டங்களை 55.66 சராசரியில் பெற்ற ஸ்டீவ் 26.18 சராசரியில் 11 விக்கட்டுகளையும் வீழ்த்தியிருந்தார். 1987 இல் அலன் போடரின் செல்லப்பிள்ளையாக இருந்த ஸ்டீவ் வோ பத்து ஆண்டுகள் கழித்து (1997 )ஆஸ்திரேலியாவின் தலைவராக தன்னை வளர்த்துக்கொண்டார்.

மார்க் டெய்லருக்கு பின்னர் அணித்தலைமை ஷேன் வோனுக்கா? இல்லை ஸ்டீவ் வோவிற்கா? என்ற இழுபறி நிலையில் முதலில் ஒருநாள் அணிக்கு தலைவராக நியமிக்கப்பட்ட ஸ்டீவ் வோ 1999 உலக கோப்பை வெற்றியின் பின்னர் சர்வதேச அரங்கில் ஆஸ்திரேலியாவை ஒருநாள் மற்று டெஸ்ட் போட்டிகளில் எப்படி வழிநடத்தினார் என்பதை சொல்லித்தெரிய வேண்டியதில்லை. ஒரு அணியாக சேர்ந்து சாதிக்ககூடிய சாதனைகளில் அதிகமானவை(ஒரு போட்டியில் சாதிப்பவை தவிர்த்து) ஸ்டீவ் தலைமையில் தகர்க்கப்பட்டது.மொத்தமாக 195 ஒருநாள் விக்கட்டுகளை அள்ளியுள்ள ஸ்டீவ் வோ அணிக்கு தலைமை ஏற்க்குமுன்னர் 172 விக்கட்டுகளை வீழ்த்தியிருந்தார். தனது தலைமையில் 106 போட்டிகளில் சொற்ப ஓவர்களை மட்டுமே வீசிய ஸ்டீவ் 23 விக்கட்டுகளை மட்டுமே வீழ்த்தியிருந்தார். மேலதிகமாக ஐந்து விக்கட்டுகள் மட்டுமே 200 விக்கட்டுகளுக்கு தேவையாக இருந்தபோதிலும், அதனை வீழ்த்துவதற்கான சந்தர்ப்பங்கள் போதியளவு இருந்தும் ஸ்டீவ் தனது சாதனைக்காக முயற்ச்சிக்கவில்லை. மாட்டின், மார்க் வோ, லீமன், பெவன் என பல பகுதிநேரப் பந்துவீச்சாளர்களாக பயன்படுத்திய ஸ்டீவ் நினைத்திருந்தால் அந்த 5 விக்கட்டுகளை வீழ்த்துவது கடினமான விடயமே இல்லை. இதை எதற்காக சொல்கிறேனென்றால் சர்வதேசச கிரிக்கட்டில் உள்ள விரல்விட்டு எண்ணக்கூடிய செல்பிஷ் கேம் விளையாடாத வீரர்களில் ஸ்டீவ் முக்கியமானவர் என்பதை குறிப்பிடுவதற்காகவே.ஸ்டீவ் வோ ஒரு book style batsman இல்லை என்றாலும் ஒரு சிறந்த துடுப்பாட்ட வீரருக்குரிய அனைத்து ஷாட்களும் அத்துப்படி. ஸ்டீவ் வோவின் பலம் அவரது ஸ்வீப்ஷாட் (sweep shod), குறிப்பாக ஸ்லாக் ஸ்வீப் (slog sweep) , அதிலும் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு ஸ்லாக் ஸ்வீப் அடிப்பதில் ஸ்டீவ் கில்லாடி. இந்தியாவில் வைத்து ஸ்ரீநாத்திற்கு(எந்த போட்டியென்று நினைவில்லை) straight ஆக அடித்த ஸ்லாக் எப்போதும் மறக்க முடியாதது. ஸ்லாக் தவிர square cut ஸ்டீவின் இன்னுமொரு பலமான ஷாட் ஆகும். ஸ்டீவின் பலவீனமென்று பார்த்தால் அது பவுன்சர் பந்துகள்தான், இதை நன்கறிந்த அம்புரூசும் வோல்சும் ஸ்டீவிற்கு மேற்கிந்தியாவில் வைத்து மிகுந்த நெருக்கடியை கொடுப்பது வழக்கம், சிலதடவை அம்புரூசும் ஸ்டீவும் வாய்த்தகராறின் உச்சத்துக்கு சென்றதுவும் உண்டு, ஆனாலும் மேற்கிந்தியாவில் ஒரு இரட்டை சதம் உட்பட 14 போட்டிகளில் 4 சத்தமும் 4 அரைச்சதமும் அடித்த ஸ்டீவின் சராசரி 68.5.தலைமைத்துவத்தை பொறுத்தவரை ஸ்டீவை ஒரு ideal skipper என்றோ, caption cool என்றோ கூறமுடியாவிட்டாலும் சிறந்த தலைவர் என்று கூறலாம். தன்னிடமிருந்த சகல வளங்களையும் தேவைக்கு ஏற்றால்போல பயன்படுத்திய ஸ்டீவை அதிகமாக சிந்திக்க அவரது அணிவீரர்கள் அனுமதிக்கவில்லையென்றே சொல்லலாம். ஆனால் ஸ்டீவ் வோ சிறந்த பண்புமிக்க வீரரா என்று கேட்டால் நிச்சயமாக ஆம் என்று பதில் சொல்லமுடியாது என்பதுதான் நிதர்சனமான உண்மை, ஆனால் கிரிக்கெட்டை பொறுத்தவரை அதுவொன்றும் பாரதூரமான குற்றமில்லை.

நிச்சயாமாக கிரிக்கட் உலகில் ஸ்டீவ்வோவின் பெயர் மறக்கப்பட/மறுக்கப்பட முடியாதது.

தெரிந்தவர்கள் சொல்லலாம்

இன்றைக்கு 10:10:10:10:10:10 அப்பிடின்னு எதில/எங்க/எப்ப வரும்?

Thursday, October 7, 2010

நான் முதல் மற்றும் அதிகதடவை பார்த்த திரைப்படங்கள்.

பாலாவின் பக்கத்தில் தனது பதிவிலே பாலா தான் பார்த்த முதல்படம் 'மனிதன்' என்று குறிப்பிட்டிருந்தார். அப்போது எனக்கு வந்த ப்ளாஷ்பாக்தான் இந்த பதிவு.

நான்பார்த்த முதல்படம் - மனிதன்

அப்போ எனக்கு ஒரு ஐந்து அல்லது ஆறு வயதிருக்கும், முதலாம் வகுப்பு படித்து கொண்டிருந்திருப்பேன் என்று நினைக்கிறேன் (இப்ப மட்டும் அவளவுதானே படித்திருக்கிறாய் என்கிற உங்க மைன்ட் வாய்ஸ் கேக்குது). யாழ்ப்பாணத்தில் மின்சாரம் இருந்த காலமது(1990 இல் இல்லாமல் போன மின்சாரம் மீண்டும் கிடைத்தது 1996 இல்தான்), ஆனால் அதிகமான வீடுகளில் தொலைக்காட்சிகள் இல்லை, அப்படி தொலைக்காட்சிகள் இருந்தாலும் டெக்(VCR) இருந்த வீடுகள் மிக மிக குறைவு. அப்படி ஒரு வீட்டில் டிவி,டெக் இருந்தால் அயலவர்கள் அனைவரும் அந்த வீட்டில்தான் படம் பார்ப்பது வழக்கம்.

எனது பெரியம்மாவின் வீட்டில் டிவி, டெக் வசதி இருந்ததால் அங்குதான் எம் அயலவர்கள் எல்லோரும் படம்பார்ப்பது வழக்கம், வீடியோ கேசட் வாடகைக்கு எடுப்பது மட்டும்தான் செலவு என்பதால் வாரம் மூன்று படங்களாவது போடுவது வழக்கம். அங்குதான் எனது முதல் திரைப்படத்தை (மனிதன்) பார்த்ததாக ஞாபகம். படத்திலே குற்றவாளியான ரஜினியும் (மறைந்திருப்பார்) அவரைதேடும் பொலிசாரும் ரஜினியின் அக்கா வீட்டிலே (அக்காவின் கணவர் போலிஸ்) அவரின் குழந்தையின் பிறந்த நாள் விழாவில் இருப்பார்கள், அந்த காட்சியில் எங்கே ரஜினி போலீசிடம் பிடிபட்டு விடுவாரோ என்கிற பயத்தில் காதுகளை பொத்தியபடி கதிரையின் பின்புறத்தில் மறைந்திருந்தது இன்னும் என் நினைவில் பசுமையாக உள்ளது. வேறெந்த காட்சிகளும் ஞாபகத்தில் இல்லாவிட்டாலும் இந்த ஒரு காட்சிதான் எனது மனதில் பதிந்த முத்தை சினிமா காட்சி.திரையரங்கில் பார்த்த முதல்ப்படம் - ராஜாதிராஜா

யுத்தம் காரணமாக திரையரங்குகள் மூடப்படுவதற்கு சொற்பநாட்களுக்கு முன்னால் (1990) இரண்டு திரைப்படங்களை திரையரங்கில் பார்த்த ஞாபகம் உள்ளது, முதலாவது திரைப்படம் 'ராஜாதிராஜா' மற்றையது 'பணக்காரன்' . இன்று எந்திரனால் கல்லாவை நிரப்பும் ராஜாதிரையரங்கில்தான் அன்று நான் முதல்முதலாக 'ராஜாதிராஜா' திரைப்படத்தை பார்த்தேன். என்கிட்ட மோதாதே, மாமா பொண்ணைகொடு, மீனம்மா மீனம்மா பாடல்களும்; ரஜினி தோளிலே பழமில்லாத வாழைத்தண்டை அழுதபடி நதியாவிடம் கொண்டுவரும் காட்சியும்; இறுதியில் ஒரு ரஜினி தூக்குகயிற்றில் மாட்ட தயாராக இருக்க மற்றைய ரஜினி காப்பாற்றவரும் காட்சியும் 1996 இற்கு பின்னர் மீண்டும் 'ராஜாதிராஜா' திரைப்படத்தை பார்க்கும்வரை நினைவில் நின்றவை.

மீண்டும் 1998 இல் திரையரங்கு (ராஜா) யாழ்ப்பாணத்தில் திறக்கப்பட்டபோது நான்பார்த்த முதல் திரைப்படம் 'முத்து', ஆனால் அதற்க்கு முன்னர் பலதடவைகள் வீடியோ கேசட்டில் முத்து திரைப்படத்தை பார்த்திருந்தேன்.அதிகமாக பார்த்த திரைப்படம் - சிவா

முன்னர் நான் குறிப்பிட்டதுபோல 1990 முதல் 1996 வரையான காலப்பகுதியல் யாழ்ப்பாணத்தில் மின்சாரம் இல்லை. அந்த காலப்பகுதியில் பெரியம்மா வீட்டில் ஒரு ஜெனரேட்டர் வைத்திருந்தார்கள். முழுக்க முழுக்க மண்ணெண்ணையில் ஓடுமாறு அந்த ஜெனரேட்டர் மாற்றியமைக்க பட்டிருந்தது, ஒரு படம்பார்க்க ஒரு லீட்டர் மண்ணெண்ணெய் தேவை, அங்கு வாரம் ஒரு திரைப்படம் பார்ப்பது வழக்கம். கொழும்பில் 10 ரூபாய் விற்ற மண்ணெண்ணையின் விலை யாழில் ரூபா 30 (இலங்கை பெறுமதி), வீடியோகேசட் வாடை 30, ஆக மொத்தம் எங்களுக்கு (சிறுசுகளுக்கு) ஒரு ரஜினி படம் பார்க்க 60 ரூபாய் தேவை. வாரம் 30 ரூபாயை அப்பாவிடம் கொஞ்சம் கொஞ்சமாக வாங்கியாவது சேர்த்துவிடுவோம், இருந்தாலும் 30 ரூபாய் குறைவாகவே இருக்கும், அந்த நேரங்களில் எங்களுக்கு கைகொடுத்ததுதான் ரஜினியின் 'சிவா' திரைப்படத்தின் கேசட்.

பெரியம்மா வீட்டிலே சொந்தமாக இருந்த 'சிவா' கேசட்தான் எங்கள் நச்சரிப்பால் பகல்ப்பொழுதென்றாலும் வாரம் ஒரு முறை போட்டுக்காட்டப்படும். இப்படியாக சிவா திரைப்படத்தை எத்தனை தடவை பார்த்தோமென்பதை எண்ணிக்கையில் சொல்லமுடியாது. அதன் பின்னர்கூட 1996 இல் மின்சாரம் மீண்டும் கிடைத்தபோது தூடதர்ஷனில் ஒலிபரப்பியே மூன்று நான்கு தடவைகள் சிவா திரைப்படத்தை பார்த்திருப்பேன். ஒருநாள் சிவா திரைப்படம் வெற்றி பெறவில்லை என்ற செய்தியை அறிந்தபோது என்னால் அதை நம்ப முடியவில்லை. மிகுந்த ஏமாற்றமாக இருந்தது, இப்போதும் ஏமாற்றமாக இருக்கிறது. ஆனாலும் இன்னும் 'சிவா' திரைப்படத்தை ஏதாவதொரு டிவியில் ஒளிபரப்பினால் நிச்சயம் முழுவதும் பார்ப்பேன். சிவா திரைப்படத்தை திரைப்படம் என்பதையும் தாண்டி எனது பசுமையான (யுத்தகாலத்தில்கூட) நினைவாகவே கருதுகிறேன்.

அந்த காலப்பகுதியில் நான் பார்த்த மறக்கமுடியாத இன்னுமொரு திரைப்படம் விஜயகாந்தின் 'ராஜதுரை', இதனது கேசட்டும் வீட்டில் சொந்தமாக இருந்தது, அனாலும் சிவாவோடு ஒப்பிடுகையில் ராஜதுரையை பத்தில் ஒருதடவைதான் பார்த்திருப்பேன்.

நான்பார்த்த விஜய் மற்றும் அஜித்தின் முதல் திரைப்படங்கள் இன்னுமொரு பதிவில்......

Monday, October 4, 2010

எந்திரன் சென்னை வசூல், ரசிகர்களுக்கு ஏமாற்றமா?

எந்திரன் சென்னை வசூல்.

எந்திரன் முதலாவது உத்தியோகபூர்வமான சென்னை பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் வெளியிடப்பட்டுள்ளது. கடந்த வார இறுதிநாட்களில் மூன்று நாட்களிலும் எந்திரன் வசூலித்த தொகை 202 இலட்ச ரூபாய், இது ஒரு இமாலய சாதனையாகும். முதல் மூன்று நாட்களிலும் திரையிடப்பட்ட 894 காட்சிகளில் சராசரியாக 99 வீதமான மக்கள் வருகையுடன் எந்திரன் இந்த வசூலை அள்ளியிருக்கிறது. ஒரு நாளைக்கு சராசரியாக 67 இலட்சரூபாயை எந்திரன் அள்ளியுள்ளது, இதற்கு முந்தய சாதனையான சிவாஜியின் ஓப்பினிங்கை வசூலைவிட இது கிட்டத்தட்ட இரு மடங்காகும். முதல் நான்கு நாட்களில் சிவாஜியின் வசூல் 134 இலட்ச ரூபாய். ஒருநாளைக்கு சராசரியாக 33.5 இலட்சம் ரூபாயை சிவாஜி வசூலித்திருந்தது.சிவாஜிக்கும் எந்திரனுக்கும் 99 வீதமான ஓப்பினிங் இருந்தபோதிலும் எந்திரன் சிவாஜியைவிட கிட்டத்தட்ட இருமடங்கு அதிக வசூலை பெற்றிருக்கின்றதென்றால் அதற்க்கு காரணம் சிவாஜி திரையிட்ட திரையரங்குகளின் எண்ணிக்கையைவிட எந்திரன் திரையிட்ட திரையரங்குககளின் எண்ணிக்கை இருமடங்கு அதிகம் என்பதுதான். கிட்டத்தட்ட இருபது திரையரங்குகளில் சிவாஜியும் 40 திரையரங்குகளில் எந்திரனும் வெளியாகியிருந்தன. சிவாஜிக்கு பின்னர் வேறு சில திரைப்படங்களும் 20 திரையரங்குகளில் வெளியிட்டிருந்தாலும் எந்த திரைப்படத்தாலும் 99 வீத ஓப்பினிங்கை பெற முடியவில்லை. 20 திரையரங்கென்றாலும்சரி 40 திரையரங்கென்றாலும்சரி இனிவரும்காலங்களி 60 திரையரங்கென்றாலும்சரி 99 வீதமான ஓப்பினிங்கை பெற சூப்பர்ஸ்டார் ஒருவரால் மட்டும்தான் முடியும்.

இதுவரை அதிக ஒப்பினிங்கை பெற்ற திரைப்படங்கள் (80 இலட்சத்திற்கு மேல்)

1 ) எந்திரன் - 202 இலட்சம் - 3 நாட்கள் - சராசரி 67 இலட்சம்

2 ) சிவாஜி - 134 இலட்சம் - 4 நாட்கள் - சராசரி 33.5 இலட்சம்

3 ) தசாவதாரம் - 95 இலட்சம் - 3 நாட்கள் - சராசரி 31.7 இலட்சம்

4 )கந்தசாமி - 93 இலட்சம் - 3 நாட்கள் - சராசரி 31 இலட்சம்

5 ) ஏகன் - 91 இலட்சம் - 5 நாட்கள் - சராசரி 18.2 இலட்சம்

6 ) வேட்டைக்காரன் - 89 இலட்சம் - 3 நாட்கள் - சராசரி 29.7 இலட்சம்

6 ) இராவணன் - 88 இலட்சம் - 3 நாட்கள் - சராசரி 29.3 இலட்சம்

7 ) குசேலன் - 84 இலட்சம் - 3 நாட்கள் - சராசரி 28 இலட்சம்

அதேபோல இதுவரை சென்னை நகரத்தில் அதிகளவு வசூலித்த திரைப்படம் சிவாஜிதான், அது 11.5 முதல் 12 கோடிவரை வசூலித்திருந்தது. அதற்கடுத்த இடத்தில் தசாவதாரம் 10.5 முதல் 11 கோடிவரை வசூலித்திருந்தது. இந்த வசூல் சாதனைகளை எல்லாம் அடுத்த மூன்று வாரத்திற்குள் எந்திரன் எட்டிவிடுமேன்பது எனது கணிப்பு. இது சென்னை நகரத்து ரிப்போட் மட்டும்தான். சென்னையைத்தாண்டி தமிழகம், தென்னிந்தியா, இந்தியா, உலகம் என எந்திரன் அனைத்து இடங்களிலும் வசூல் பட்டையை கிளப்பும் என்திரனது மொத்தவசூல் எவ்வளவாக இருக்குமென்பது இப்போது கணிக்க முடியாது, உலகெங்கிலும் எந்திரன் மொத்தவசூல் குறைந்தபட்சம் 500 கோடிகளை தாண்டுமென்பது எனது நம்பிக்கை.ரஜினி ரசிகர்கள் ஏமாற்றமா?

எந்திரனில் ரஜினியின் அறிமுக காட்சி இல்லை, ஆரம்ப பாடல் இல்லை, ஸ்டையில் இல்லை, பன்ஞ் வசனங்கள் இல்லை என்பதால் "எந்திரன் ரஜினி ரசிகர்களுக்கு ஏமாற்றம்" என்கின்றார்கள் எந்திரன் பார்த்து நொந்து நூடில்சான சில ஆசாமிகள். இவர்களுக்கு ஒன்றை சொல்லிக்கொள்ள விரும்புகிறேன், நீங்கள் சொல்லும் ரஜினி ரசிகர்கள் நாங்கள்தான், எங்களுக்கு முழுத்திருப்தி இல்லாமலா எந்திரன் உலகெங்கும் சக்கைபோடு போடுகிறது? எந்திரனில் ரஜினி ஸ்டையில் இல்லை என நீங்கள் நினைத்தால் அது உங்களது அறியாமை, சிட்டியின் இரண்டு பரிமாணங்களுமே எத்தனை ஸ்டைலானது என்பது ரசிகர்களுக்கு தெரியும். பன்ஞ் வசனங்கள் இல்லைத்தான், ஆனால் இப்போது dot என்கிற குறியீடும் ம்மே..ம்மே என்கிற ஒலியும் பன்ஞ் டயலாக்குகளுக்கு இணையாக ரசிகர்களிடையே பிரபலமாகியுள்ளது. ரஜினியின் இறுதி 30 நிமிட Screen present A,B,C என அனைத்து சென்டர் ரசிகர்களையும் திருப்திப்படுத்த போதுமானது.

சிலரோ A,B சென்டர்களில் ஓகே ஆனால் c சென்டர் ரசிகர்களுக்கு படம் புரியாது என்கின்றனர், என்னோடு சேர்ந்து படம்பார்த்த நண்பர்களில் அதிகமானவர்கள் c சென்டர் ரசிகர்கள்தான்(என்னையும் சேர்த்துத்தான்). எங்களுக்கு படம் புரிந்தது மட்டுமல்லாமல் ரொம்பரொம்ப பிடித்திருக்கிறது, எனவே இனிமேலும் எங்களுக்காக நீலிக்கண்ணீர் வடிக்காதீர்கள். அப்புறம் விமர்சகர்களே c சென்டரை கேவலமாக நினைத்து விடாதீர்கள்; இன்றைக்கு தமிழ் சினிமாவையே புரட்டிப்போட்ட இயக்குனர்கள் பாலா, அமீர் இருவரும் ஆரம்பகாலங்களில் c சென்டரில் படம் பார்த்தவர்கள்தான் என்பதை நினைவில் வைத்திருங்கள்.