Monday, February 20, 2012

தலைப்பு வைக்க தெரியலைங்க....

தனிநபர், குழு, சமூகத்தின்/குறிப்பிட்ட பிரிவின் சிறுபான்மையினர் அல்லது பெரும்பான்மையினர் புரியும் நல்லவை, கெட்டவை இரண்டிற்கும் அந்த சமூகத்தை/குறிப்பிட்ட பிரிவினரை ஒட்டுமொத்தமாக உள்ளடக்குவதுபோல ஊடகங்களில், சமூகத்தளங்களில், குழு விவாதங்களில் அணுகுவது சரியான விடயமா? எனக்கு இந்த விசயத்தை எப்படி எழுத்தில் கொண்டுவருவது என்று சரியாக எந்த ஐடியாவும் வரல; அதனால பேச்சு வழக்கில இருக்கிற சில சொல்லாடல்களை குறிப்பிட்டு விட்டு சொல்ல வந்த விடயத்துக்கு செல்கிறேன்....

*இந்த பொண்ணுங்களே இப்படித்தான்
*யாழ்ப்பாணத்தானுங்க திருந்த மாட்டானுக
*குட்டையா இருக்கிறவனை நம்பாத
*தன் ஜாதிப் புத்தியை காட்டீட்டான்
*சினிமாக்காரங்கன்னாலே ஒரு மாதிரியான ஆளுகதான்
*இந்தக்கால பிள்ளைகளின்ட பழக்க வழக்கம் உதவாது
*ஜெர்மானியர்கள் சோம்பேறிகள்
*மோட்டு சிங்களவங்கள்..
*தீவாற்ற(தீவு) குணம் இதுதானே!!!


இப்படியாக பொதுப்படையாக பேசுவது எம்மவர்களில் சிலருக்கு வழக்கமான ஒரு விடயம். ஒரு/சில/பல பெண்ணின்/ஆணின் மீது விமர்சனம்/கோபம் இருக்கும் பட்சத்தில் அதனை பேச்சிலோ, எழுத்திலோ பொதுவில் ஒட்டுமொத்த ஆண்/பெண் இனை முன்னிறுத்தித்தான் அதிகமானவர்கள் தங்களது எண்ணத்தை வெளிப்படுத்தும் சூழல் இன்று நிலவுகின்றது!!! இதனை குறிப்பாக சமூகத்தளங்களில் அதிகமாக அவதானிக்கலாம்!!! ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட சுயம் இருக்கும்போது எப்படி ஒருவரது/சிலரது/பலரது கேரக்டர்களை ஒட்டு மொத்தமாக அவர்கள் சார்ந்த பாலினத்தவருடன் ஒப்பிடலாம்?

இப்படியாக பொதுப்படையாக பேசுவது எம்மவர்களில் சிலருக்கு வழக்கமான ஒரு விடயம். ஒரு/சில/பல பெண்ணின்/ஆணின் மீது விமர்சனம்/கோபம் இருக்கும் பட்சத்தில் அதனை பேச்சிலோ, எழுத்திலோ பொதுவில் ஒட்டுமொத்த ஆண்/பெண் இனை முன்னிறுத்தித்தான் அதிகமானவர்கள் தங்களது எண்ணத்தை வெளிப்படுத்தும் சூழல் இன்று நிலவுகின்றது!!! இதனை குறிப்பாக சமூகத்தளங்களில் அதிகமாக அவதானிக்கலாம்!!! ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட சுயம் இருக்கும்போது எப்படி ஒருவரது/சிலரது/பலரது கேரக்டர்களை ஒட்டு மொத்தமாக அவர்கள் சார்ந்த பாலினத்தவருடன் ஒப்பிடலாம்?இதை ஊக்குவிக்கும் முக்கிய ஊடக நிகழ்ச்சிகளில் விஜய் டிவியின் 'நீயா நானா' முக்கியமானது!! பெண்களா? ஆண்களா? என்கின்ற தலைப்பில் பத்துக்கும் மேற்ப்பட்ட தலைப்புக்களில் இதுவரை பல விவாதங்கள் இடம்பெற்றுவிட்டன!!! இரு பிரிவிலும் தலா 25 ஆண்/பெண் உறுப்பினர்கள் ஒட்டுமொத்த பெண்/ஆண் வர்க்கத்தின் பிரதிநிதிகள் போல் பேசுவது மகா கொடுமையாக இருக்கும்!!! அதிகமாவனர்கள் தமது பார்வையிலுள்ள ஆண்/பெண் பற்றிய அபிப்பிராயத்தை பொதுவில் வைத்து பேசுவதும், அதற்க்கு அங்கு நடுநிலைமை வகிக்கும் நிகழ்ச்சி தொகுப்பாளர் முகத்திலே ஆயிரம் எக்ஸ்பிரஷன் கொடுத்து அதை உள்வாங்குவதும் எரிச்சலை உண்டுபண்ணுகின்றது.

இந்த விவாதம் ஆண் vs பெண் விவாதங்களில் மட்டுமல்ல, பெண் vs பெண் விவாதங்களிலும் பொதுவில் வைத்தே விவாதிக்கப் படுகின்றது. உதாரணமாக கிராமத்து பெண்களா? நகரத்து பெண்களா? என்கின்ற தலைப்பில்; தலைப்பே மிகப்பெரிய அபத்தம்!!! ஒருவருடைய கேரக்டர் ஒரு இடத்தையும், ஒரு இடம் ஒருவருடைய கேரக்டரையும் எப்படி முடிவுசெய்ய முடியும்!!

சமீபத்தில் பெண் ஒருவரால் வெளிநாட்டு இளைஞா ஒருவன் மோசடி செய்யப்பட்ட சம்பவம் ஒன்றிற்கு நண்பர் ஒருவரால் இடப்பட்ட தலைப்பு என்ன தெரியுமா? "தமிழ் பெண்களின் புது பிசினஸ்" ஒரு பெண் தவறு செய்தால் அந்த தவறுக்கு ஒட்டுமொத்த தமிழ் பெண்களையும் பொதுவில் விழிப்பது எவ்வளவு பெரிய அபத்தம்?? இது ஒரு சிறு உதாரணம்; இதைபோலவே எங்காவது இடம்பெறும் ஒன்றிரண்டு தகாத செயல்களை சுட்டிக்காட்டி ஒட்டுமொத்த சமூகத்தையும் தரக்குறைவாக மதித்து செய்திகளை போடுவது இன்று சாதரணமாகிவிட்டது!! சில புத்திசாலிகள் "இனிமேல் வடலி வளர்த்துத்தான் கள்ளுக் குடிக்கணும்" என்கிற டயலாக்கை இன்றைய பெண்களின் நம்பகத்தன்மை குறித்து சிலேடையாக சொல்கின்றமையையும் ஆங்காங்கே அவதானிக்கலாம்!!

பெருமையான விடயங்களை பொதுவில் கூறும்போது அதனால் ஏற்ப்படும் விளைவுகள் சாதகமானவை; அவற்றால் பாதிப்புக்கள் இல்லை. அதே நேரம் மோசமான விடயங்களை பொதுவில் வைத்து கூறும்போது அது அந்த சமூகத்தின் மீதான மதிப்பையும் எண்ணங்களையும் சிதைக்கப்படுகின்றன என்பது எவ்வளவு பாதகமான விடயம். இச்செயலை தெரியாமல் செய்பவர்களுக்கு எடுத்துக் கூறலாம், புரியவைக்கலாம்; ஆனால் திட்டமிட்டு தன் இனத்தின் மீதே இச்செயலை செய்பவர்களை என்ன செய்யலாம்? இவர்களை மல்லாக்க படுத்து எச்சிலை உமிழும் அற்பபிறவிகள் என்று திட்டுவதை தவிர எம்மால் என்னதான் செய்யமுடியும்!!?

ஒரு இனத்தை, மதத்தை, நாட்டை, பிரதேசத்தை, சமூகத்தை, தோற்றத்தை, தொழிலை முன்னிறுத்தி பொதுவிலே பேச்சு வழக்கில் பல ஏளனமான சொல்லாடல்கள் மேற்குறிப்பிட்டவைபோல சொல்லப்படுவதுண்டு. இவ்வாறான வசனங்கள் கோபமான, ஆத்திரமான மன நிலையில்த்தான் அதிகமானவர்களிடம் இருந்து வெளிப்படுகின்றது; அதாவது ஒருவர்/சிலர்/பலர் மீதிருக்கும் கோபம் வன்மமாகி ஒட்டு மொத்த குழுமத்தின் மீதும் வசைபாடலாக மாறிவிடுகின்றது. கோபம்/ஆத்திரம் தவிர்த்து பெருமைக்காகவும், அகங்காரத்திலும், துவேசத்திலும், வெறுப்பிலும், தோல்விகளாலும் கூட இவ்வாறான பொதுவில் விழித்தல் வெளிப்படுகின்றது!! இவ்வாறான சந்தர்ப்பங்களில் 'சில/சிலர்', 'பல/பலர்' போன்ற சொற்களை சேர்த்து கூறினால்க்கூட ஓரளவிற்கு தாக்கம் குறைவாக இருக்கும்; ஆனால் ஒருவனை திட்டுவதற்க்கே அவன் குடும்பத்தின் மூன்று தலைமுறையை தோண்டி எடுத்து திட்டும் சில எம்மவர்களுக்கு இதெல்லாம் சிந்திக்க அவகாசமிருக்குமா!!!

Tuesday, February 14, 2012

தமிழ் சினிமாவில் காதல்...

காதல் - வரம், சாபம், துரோகம், நேசம், வேஷம், காமம், ஹோர்மோன், இதயம், டைம் பாஸ், இச்சை, வேதம், ஆக்கம், அழிவு, பூ, முள், உற்ச்சாகம், வெற்றி, தோல்வி, பலம், பலவீனம், பிரிவு, துணை, தன்னம்பிக்கை, சுயநலம், பித்து, அனுபவம், பரவசம், வலி, சுகம், இனிமை, கசப்பு, வாழ்க்கை, மரணம்!!!! இவை 'காதல்' பற்றி தமிழ் சினிமா கற்றுக் கொடுத்த பாடங்கள்... 80 வருட தமிழ் சினிமா வராற்றில் காதல் இல்லாத திரைப்படங்களை விரல் விட்டு எண்ணி விடலாம்!! தமிழ் சினிமாவையும் காதலையும் பிரித்து பார்க்க முடியாது.....

இந்த 80 வருட தமிழ் சினிமாவில் பல இயக்குனர்கள் காதலை பல பரிமாணங்களில், பலவிதமான உணர்வுகளில், பல விதமான சந்தர்ப்பங்களில் கையாண்டிருக்கின்றார்கள். இந்த 80 வருட சினிமாவில் என்னை கவர்ந்த காதல் திரைப்படங்களை முடிந்தவரை பட்டியலிடுகின்றேன்......

C.V.ஸ்ரீதர்


தமிழ் சினிமாவில் காதலை மாறுபட்ட கோணங்களில் கையாண்ட முதல் இயக்குனர் ஸ்ரீதர்; 'கல்யாண பரிசு' தொடங்கி 'நினைவெல்லாம் நித்யா' வரை ஸ்ரீதரின் திரைக்காவியங்கள் அனைத்தும் காதலை முன்னிறுத்தித்தான் பின்னப்பட்டிருக்கும், கூடவே நகைச்சுவையும் மிகச்சிறப்பாக இருக்கும்!!! எனக்குப் பிடித்த ஸ்ரீதரின் காதல் காவியங்களில் சில....

கல்யாண பரிசு - ஜெமினி கணேஷன், சரோஜாதேவி, விஜயகுமாரி இடையேயான முக்கோண காதலை சிறப்பான திருப்புமுனை காட்சிகளோடு சொல்லியிருப்பார் ஸ்ரீதர். அக்கா தங்கையான சரோஜாதேவி, விஜயகுமாரி இருவரும் தமது வீட்டில் வாடகைக்கு குடியிருக்கும் ஜெமினியை காதலிக்கிறார்கள்; ஆனால் ஜெமனி சரோஜாதேவியைத்தான் காதலிக்கிறார். தன் அக்காவிற்காக தன் காதலை விட்டுக் கொடுக்கிறார் சரோஜாதேவி, விருப்பமில்லாமல் மணவாழ்க்கையில் நுழைகிறார் ஜெமினி, பின்னர் என்னவாயிற்று என்பதை தனது சுவாரசியமான திரைக்கதையால் சிறப்பாக சொல்லியிருப்பார் ஸ்ரீதர். ஸ்ரீதர் முதல் முதலாக இயக்கிய இந்த திரைப்படம் மிகப்பெரும் வசூலை அள்ளி சாதனை படைத்தது!! இந்த படத்தின் வெற்றிக்கு தங்கவேலுவின் மிகச்சிறப்பான காமடியும் முக்கிய காரணி.......நெஞ்சில் ஓர் ஆலயம் - மற்றுமொரு முக்கோண காதல்க்கதை; கல்யாண குமாரை காதலித்து, பின்னர் முத்துராமனை கைப்பிடிக்கிறார் தேவிகா. முத்துராமனை பாரிய நோய் தாக்குகின்றது, மருத்துவமனையில் சேர்க்கப்படுகின்றார்; அங்கே மருத்துவராக கல்யாணகுமார்!! தன் கணவனை காப்பாற்ற முன்னாள் காதலனை இறைஞ்சும் தேவிகா, தன் உயரை இழந்து காதலியின் கணவனை காப்பாற்றும் கல்யாணகுமார்; என படம் 7 நாட்களுக்குள் நிகழ்வதைபோல படமாக்கியிருப்பார் ஸ்ரீதர். காலத்தால் அழிக்க முடியாத பாடல்கள், மிகச்சிறப்பான ஒளிப்பதிவு, கூடவே நாகேசின் காமடி போன்றவற்றால் வணிக ரீதியிலும் வெற்றி பெற்ற 'நெஞ்சில் ஓர் ஆலயம்' ஸ்ரீதரின் மற்றுமொரு காலத்தை விஞ்சிய காதல் காவியம்!!!


காதலிக்க நேரமில்லை -
ஒரு ஜனரஞ்சகமான படைப்புக்கு உதாரணமாக சொல்லப்படும் திரைப்படம்; காதல், நகைச்சுவை, பாடல்கள், ஒளிப்பதிவு என அத்தனையும் பிரமாதம். முக்கோண காதல் கதையில் முத்திரை பதித்த ஸ்ரீதர்; மூன்று காதல் ஜோடிகளை வைத்து உருவாக்கிய திரைப்படம்தான் காதலிக்க நேரமில்லை. முத்துராமன் - காஞ்சனா, ரவிச்சந்திரன் - ராஜஸ்ரீ, நாகேஷ் - சச்சு ஜோடிகளின் காதலை சிறு தொய்வுமின்றி காமடி கலந்த திரைக்கதையுடன் விறுவிறுப்பாக படமாக்கியவிதம் அருமை. நாகேஷ் - பாலையா காமடி காட்சிகள் என்றென்றும் மறக்க முடியாதவை. வணிக ரீதியில் மிகப்பெரும் சாதனை புரிந்த காதலிக்க நேரமில்லை தமிழ் சினிமாவின் ஒரு மைல்க்கல்.

இளமை ஊஞ்சல் ஆடுகிறது - மற்றுமொரு முக்கோண காதல் கதை; ரஜினி, கமல், ஸ்ரீபிரியா இடையிலான முக்கோண காதலை புதிய கோணத்தில் எதிர்பாராத இறுதிக் காட்சிகளோடு ஸ்ரீதர் படமாக்கியிருப்பார். ரஜினி, கமல் இணைந்து நடித்த திரைப்படங்களில் இருவருக்கும் சம அளவில் ஸ்கோப் உள்ள திரைப்படம் என்றால் அது இதுதான். கமலின் காதலியாகி, ரஜினியின் 'தீண்டா' மனிவியாகி, பின்னர் ரஜினியால் கமலுடன் சேர்த்து வைக்கப்படும் ஸ்ரீபிரியாதான் உண்மையில் இந்த திரைப்படத்தின் முதன்மை நட்ச்சத்திரம்!! இளையராஜாவின் அற்ப்புதமான இசை படத்திற்கு மிகப்பெரும் பலம், "ஒரே நாள் உன்னை நான்" பாடல் அதிகமான ராஜா ரசிகர்களின் one of the favorite song ...

பாரதிராஜா


கிராமத்து மண்வாசனையை அள்ளிக்கொடுத்த இயக்குனர் இமயத்தின் கிராமத்து காதல் கதைகளின் பரிமாணங்கள் தமிழ் சினாமாவின் மைல்க்கற்கள் என்பதில் மாற்றுக்கருத்து இல்லாதவை. பாரதிராஜாவின் ஒவ்வொரு திரைப்படத்திலும் காதல் ஆழமாக சொல்லப்பட்டிருந்தாலும் விசேடமான சில திரைப்படங்களை மட்டும் பார்த்தால்......அலைகள் ஓய்வதில்லை - விடலைப்பருவ காதலை கார்த்திக், ராதா கேரக்டர்கள் மூலம் அழகாக சொல்லியிருப்பார் பாரதிராஜா. பருவக்காதல் படுத்தும் பாட்டை தெளிவான காட்சிகள்மூலம் துல்லியமான திரைக்கதையால் அழகாக கையாண்டிருப்பார் பாரதிராஜா. மதம், அந்தஸ்த்து, பணம் காதலுக்கு தடை இல்லை என்பதுதான் படத்தின் மையக்கரு; அதற்கு காதல், நட்பு, பாசம் போன்றவற்றால் காட்சிகளை பின்னியவிதம் அருமை. கார்த்திக், ராதாவின் சிறப்பான இளமை ததும்பும் நடிப்பும், இளையராஜாவின் மிகச்சிறப்பான இசையும் இந்த திரைப்படத்தை தமிழ் சினிமாவின் காலத்தால் அழியாத திரைப்படங்கள் வரிசையில் சேர்த்துள்ளது என்றால் அது மிகையில்லை!!!!

கடலோரக் கவிதைகள் - ஒரு முரட்டு வாலிபனுக்குள் காதல் வந்தால் அது அவனை என்ன பாடாய் படுத்தும் என்கின்றதுதான் மையக்கரு; ஊரில் பொறுக்கியாக சுற்றிக்கொண்டிருக்கும் சத்யராஜ்சிற்க்கு அந்த ஊருக்கு பாடம் சொல்லிக்கொடுக்க வரும் டீச்சர் மீது காதல் ஏற்ப்படுகின்றது; அதன் பின்பு அவர் என்ன ஆனார்? அவர் காதல் கைகூடியதா என்பதுதான் திரைக்கதை. சத்யராஜ் முரட்டுத்தனம் + அப்பாவித்தனம் என இரண்டு நிலைகளிலும் அதகளப்படுத்தியிருப்பர். கடற்கரையை அண்டிய சூழலை அழகாக படம் பிடித்திருக்கும் பாரதிராஜாவின் திரைக்கதைக்கு மேலும் பலம் சேர்த்தவர் இசைஞானி என்றால் மிகையில்லை. பின்னணி இசை, பாடல்கள் இரண்டுமே படத்திற்கு மிகப்பெரும் பலம்.

முதல் மரியாதை - தமிழ் சினிமாவின் அடையாளங்களான ஒரு சில திரைப்படங்களில் 'முதல் மரியாதை'யும் ஒன்று. வாழ்க்கையில் காதலே இல்லாமல் 50 வயதை தாண்டிய பெரியவருக்கும் திருமணமாகாத இளம் யுவதிக்குமான காதலை சிறப்பாக சொல்லியிருப்பார் பாரதிராஜா. பெரியவராக சிவாஜி கணேசன் அவர்களது நடிப்பை பற்றி சொல்லும் தகுதி எமக்கில்லை!!! அவர் ஒரு நடிப்புலகின் பிதாமகன் என்பதற்கு இந்த திரைப்படம் ஒன்றே சாட்சி சொல்லும்; சிவாஜியின் கழுத்து எலும்பும் நடிக்கும் என நிரூபித்திருப்பார்! இளையராவை பற்றி அறியாத, புரியாதவர்கள் இந்த திரைப்படத்தின் பின்னணி இசையை கேட்டால் இளையராஜா ஒப்பீட்டுக்கு அப்பாற்பட்டவர் என்பதை புரிந்து கொள்ளலாம்!!! பாடல்களும் பிரமாதம். கூடவே ராதாவின் நடிப்பும் மிகச்சிறப்பானது; இப்படியொரு திரைக் காவியத்தை கொடுத்த பாரதிராஜாவை எவ்வளவு பாராட்டினாலும் தகும்!!

காதல் ஓவியம் - கண் தெரியாத சிறப்பான குரல்வளம் உள்ள வாலிபனுக்கும், நடனத்தை நேசிக்கும் யுவதிக்குமான காதலில், இருவரும் ஊரைவிட்டு செல்கிறார்கள்; விதி இருவரையும் பிரிக்கின்றது. காதலன் கண்பார்வை பெறுகின்றான், காதலி வேறொருவரின் மனைவியாக அவன் முன்னே!!! மீதி கதை என்ன என்பதுதான் கிளைமாக்ஸ்... கண்ணன், ராதா இருவரதும் முகபாவங்கள் படம் முழுவதும் அபாரம். இளையராஜாவின் அற்ப்புதமான பின்னணி இசை மற்றும் பாடல்கள் படத்திற்கு மிகப்பெரும் பலம். இசையையும் காதலையும் இணைத்து பார்ப்பவர்களை உருக்கும் திரைக்கதையை அமைத்து அதில் வெற்றி பெற்றிருப்பார் பாரதிராஜா!!!

மணிரத்னம்


எந்தமாதிரி திரைப்படம் எடுத்தாலும் அதிலே காதலுக்கு மிக முக்கியத்துவம் கொடுக்கும் இயக்குனர்களில் மணிரத்தினம் முதன்மையானவர். பகல் நிலவில முரளி - ரேவதி காதல் தொடக்கம் ராவணனில் விக்ரம் - ஐஸ்வர்யாராயின் மோகம் வரை மணிரத்தினத்தின் காதல் காட்சிகளில் இருக்கும் கிறக்கம் வேறெந்த இயக்குனருக்கும் வராதது!!! அத்தனை திரைப்படங்களிலும் காதலை அழகாக சொல்லியிருந்தாலும் ஒரு சில திரைப்படங்கள் மறக்கமுடியாத காதல் திரைப்படங்கள்......மௌனராகம் - கார்த்திக் - ரேவதி; ரேவதி - மோகன் காதல் இடையான காதலை ரசிக்கும்படி கொடுத்திருப்பார் இயக்குனர் மணிரத்னம். கார்த்திக் - ரேவதி காதல் துதுரு என்றால்; மோகன் - ரேவதி காதல் மனதை வருடும் பாசப்பிணைப்பு. சாதாரண கதைக்கு மணிரத்தினத்தின் திரைக்கதையும், வசன உச்சரிப்புக்களும், இளையராஜாவின் மயிர்கூச்செறியும் பின்னணி இசையும், பாடல்களும், P.C.ஸ்ரீராமின் ஒளிப்பதிவும் மௌனராகம் திரைப்படத்தை வேறொரு தரத்துக்கு இட்டுச்சென்றது. இறுதிக்காட்சிகளில் இளையராஜாவின் பின்னணி இசை வார்த்தைகளுக்கு அப்பாற்ப்பட்டது!!!


இதயத்தை திருடாதே -
கீதாஞ்சலி என்னும் பெயரில் தெலுங்கில் வெளிவந்து மிகப்பெரும் வெற்றி பெற்ற திரைப்படத்தின் தமிழ் டப்பிங் பதிப்புத்தான் இதயத்தை திருடாதே!!! புற்றுநோயால் மரணத்தை எதிர்பார்த்திருக்கும் நாகர்ஜுன் நாயகி கிரிஜாவை சந்திக்கின்றார்; அவருக்கும் ஒரு பிரச்சனை இருக்கின்றது; இந்த சந்திப்பு இருவர் வாழ்க்கையினையும் எப்படி மாற்றியமைக்கின்றது என்பதுதான் கதை.... P.C.ஸ்ரீராமின் ஒளிப்பதிவும், இசைஞானியின் பின்னணி இசையும் பார்ப்பவர்களை உருகவைக்கும்.... இளையராஜாவின் மிகச்சிறந்த ஆல்பங்களில் இதுவும் ஒன்று; அத்தனை பாடல்களும் அற்ப்புதம்!!! ஒரு டப்பிங் படமாக வெளிவந்து தமிழில் சக்கை போடுபோட்ட இதயத்தை திருடாதே மணிரத்தினம், இளையராஜா, P.C.ஸ்ரீராமின் கூட்டணியின் ஒரு மிகச்சிறந்த காதல் திரைப்படம்.


அலைபாயுதே -
ஒரு திரைப்படத்தில் காதல் இருக்கும், ஆனால் காதலை மட்டுமே முன்னிறுத்தி ஒரு திரைப்படமாக வெளிவந்த அலைபாயுதே தமிழ் சினிமாவின் அல்ட்டிமேட் காதல் திரைப்படம. கதை என்றெல்லாம் ஒன்றுமில்லை, காதலை மட்டுமே லைனாக வைத்து மணிரத்தினம் அமைத்த திரைக்கதைக்கு ஏ.ஆர்.ரகுமானின் பாடல்களும், P.C.ஸ்ரீராமின் ஒளிப்பதிவும் மிகப்பெரும் பலம். மாதவன், ஷாலினியின் காதல் காட்சிகளில் வரும் வசன உச்சரிப்புக்கள் காதலை வெறுத்தவனையும் ஒருகணம் உருகவைக்கும்.....

பிற இயக்குனர்களின் காதல் திரைப்படங்கள்


மூன்றாம் பிறை - பாலுமகேந்திரா இயக்கத்தில் இளையராஜாவின் அற்ப்புதமான இசையில் கமல்ஹாசன், ஸ்ரீதேவியின் அபாரமான நடிப்பில் பார்த்த அனைவரையும் கண்களை பனிக்க வைத்த திரைப்படம் மூன்றாம் பிறை. 'காதல் கவிஞன்' கண்ணதாசனின் இறுதிப்பாடல் இடம்பெற்ற திரைப்படம் என்கின்ற பெருமையும் 'மூன்றாம் பிறை'க்கு உண்டு. மனநலம் பாதிக்கப்பட்டு விலை மாதுவாக கமல்ஹாசனிடம் அறிமுகமாகும் ஸ்ரீதேவியை கமல் ஆரம்பத்தில் இரக்கப்பட்டு தன்னுடன் சேர்த்தாலும், நாளாக நாளாக காதலால் உருகும் போதும், இறுதியில் மனம் நலம்பெற ஸ்ரீதேவி கமலை யார் என்றே தெரியாமல் தவிக்கவிட்டு செல்லும் இறுதிக் காட்சிகளிலும் கமல்ஹாசனின் நடிப்பு அபாரம்!!! இறுதிக் காட்சிகளை பார்த்து அழாதவர்கள் இருக்க முடியாது, அவர் கல்லினாலான இதயத்தை உடையவராயினும்!!!புன்னகை மன்னன் - கே.பாலச்சந்தரின் இயக்கத்தில் இளையராஜாவின் இசையில் கமல்ஹாசன் நடித்த மற்றுமொரு காதல் திரைப்படம். மலை உச்சியில் இருந்து கமலும், ரேகாவும் தற்கொலைக்கு குதிக்கும் காட்சிகளின் பரபரப்பு இப்போது நினைத்தாலும் மனதில் கனத்தை உண்டுபண்ணும்!!! சாக நினைக்கும்போது வாழச்சொல்லி உதைக்கும் உலகம், வாழ நினைக்கும் போது என்ன சொல்கின்றது? என்கின்றதுதான் கதையின் லைன்; இந்த கதைக்கு கமல்ஹாசன், ரேவதி, ஸ்ரீவித்யா, ரேகா பாத்திரங்களது துணையுடன், இசைஞானியினது சிறப்பான பாடல், மற்றும் பின்னணி இசை கொண்டு பாலச்சந்தர் அமைத்த திரைக்கதை பார்க்கும் அனைவரையும் உருகவைக்கும்..

அந்த ஏழு நாட்கள் - பாக்யராஜ்சின் 'டிப்பிக்கல் லவ் ஸ்டோரி' தான் விரும்பிய காதலனை மணக்க முடியாமல் வேறொருவரை மணக்கும் பெண், தன் கணவரிடம் தன் காதலை கூறி தன்னை விடுவிக்குமாறு கணவனை கெஞ்சி காதலனை அடைய எத்தணிக்கிறாள்; முடிவு என்ன என்பதுதான் கிளைமாக்ஸ். திரைக்கதை பின்னிவதில் இந்தியாவின் நம்பர் வண்ணான பாக்யராஜ்சிற்க்கு இந்த கதைக்கு திரைக்கதை அமைப்பது அல்வா சாப்பிடுவது போன்றது. அலாதியாக ரசிக்கும்படி திரைக்கதை அமைத்து இந்த திரைப்படத்தை வெற்றிப் படமாக்கியிருப்பார் பாக்யராஜ்; காதலனாக - பாக்யராஜ், காதலியாக - அம்பிகா, கணவனாக - ராஜேஷ் நடித்திருப்பார்கள்.....

இதயம் - கதிர் இயக்கத்தில் முரளி, ஹீரா நடித்த முழுமையான காதல் திரைப்படம்; வணிக ரீதியில் பெரும் வெற்றி பெற்ற இதயம் திரைப்படத்தின் வெற்றிக்கு ராஜாவின் இசையும் முக்கிய காரணம். பாடல்கள், பின்னணி இசையில் ராஜா காதலை சொட்டியிருப்பார். காதலை சொல்வதற்கு முரளி படும் பாட்டை படம் முழுக்க பதட்டத்துடன் கையாண்டிருப்பார் கதிர்....

காதல் தேசம் - கதிர் இயக்கிய மற்றுமொரு வித்தியாசமான காதல் திரைப்படம். நண்பர்கள் இருவர் ஒரு பெண்ணை காதலிக்கும் கதைக்கு இளமை, இசை துணைகொண்டு சிறப்பான திரைக்கதை அமைத்து அதில் வெற்றியும் பெற்றிருப்பார் கதிர்; A.R.ரகுமானின் இசையில் பாடல்கள் இந்த திரைப்படத்திற்கு மிகப்பெரும் பலம். ரகுமானின் அல்டிமேட் திரைப்படங்களில் 'காதல் தேசமும்' ஒன்று; வினித், அப்பாஸ் நாயகர்களாகவும் தபு நாயகியாகவும் இளமை சொட்ட சொட்ட நடித்த இந்த திரைப்படத்தின் சிறப்பே அதன் இறுதிக்கட்ட காட்சிதான்......


பூவே உனக்காக -
தான் ஒருதலையாக விரும்பிய காதலிக்காக அவள் விரும்பிய காதலனை அவளுடன் சேர்த்து வைக்கும் சிம்பிளான கதைதான். இந்த கதைக்கு குடும்ப உறவுகளை துணை கொண்டு மிகச்சிறப்பாக திரைக்கதை அமைத்திருப்பார் இயக்குனர் விக்ரமன். மிகப்பெரும் வெற்றி அடைந்த இந்த திரைப்படத்தின் வெற்றிக்கு பாடல்களும் ஒரு காரணம். காதலை இழந்து காதலியை வாழ வைத்துவிட்டு விஜய் எங்கோ செல்வதுபோல அமைந்த இறுதிக்காட்சியில் மனது கனமாவதை தவிர்க்க முடியாது; விஜயின் சிறப்பான திரைப்படங்களில் இதுவும் ஒன்று.......காதல் கோட்டை - பார்க்காத காதலை தமிழ் சினிமாவிற்கு அறிமுகப்படுத்திய முதல் திரைப்படம். கடிதம் மூலம் ஒருவருக்கொருவர் முகம் தெரியாமலே காதலிக்கும் நாயகனும் நாயகியும் சேர்ந்தார்களா? இல்லையா? என்பதை சுவாரசியமாக சொல்லியிருப்பார் இயக்குனர் அகத்தியன். அஜித், தேவயாணி காதலர்களாக நடித்த இந்த திரைப்படத்தில் ஹீராவின் ஒருதலை காதலும் சொல்லப்பட்டிருக்கும்!!! மிகப்பெரும் வெற்றி அடைந்த இந்த திரைப்படத்திற்கு பாடல்கள் மேலும் பலம் சேர்த்தது. இந்த திரைப்படத்தின் மையக்கருவை எடுத்துக்கொண்டு பல திரைப்படங்கள் இதே பாணியில் வெளிவந்தாலும் 'காதல் கோட்டை' போல் வேறெதுவும் வெற்றிபெறவில்லை......


காதலுக்கு மரியாதை -
தங்கள் குடும்பங்களுக்காக தமது காதலை விட்டுக்கொடுக்கும் காதலர்களை மையப்படுத்தி வெளியான திரைப்படம். பாசத்திற்கும் காதலுக்குமிடையிலான போராட்டத்தை தனக்கே உரிய பாணியில் இயக்குனர் பாசில் அருமையாக வெளிக் கொண்டுவந்த திரைப்படமிது!!! இளையராஜாவின் இசையில் பாடல்களும் பின்னணி இசையும் சிறப்பு. விஜய், ஷாலினி ஜோடியும்; விஜய், தாமு, சார்லி நடப்பும் திரைக்கதையில் சிறப்பாக பின்னப்பட்டிருக்கும். காதலா, பாசமா ஜெயித்தது என்பதை சிறப்பான இறுதிக்கட்ட காட்சிகள் மூலம் பாசில் சொல்லியிருப்பார்.....


பாரதி கண்ணம்மா -
ஜாதியை மையப்படுத்தி ஆங்காங்கே காதல்கள் தமிழ் சினிமாவில் வெளிவந்திருந்தாலும், முழுக்க முழுக்க ஒரு திரைப்படத்தை இந்த கான்செப்டில் கொடுத்திருப்பார் இயக்குனர் சேரன்; இந்த திரைப்படத்தின் இன்னுமொரு சிறப்பு அதன் இறுதிக்கட்ட காட்சிகள்தான்; தமிழ் சினிமாவிற்கு அது ஒரு புதுமை!!!! பார்த்தீபன், மீனா இடையிலான காதலையும், அவர்களுக்கு இடைவெளியான ஜாதி என்னும் இடைவெளியையும் சிறப்பாக கையாண்டிருப்பார் இயக்குனர் சேரன். தேவாவின் இசையும் இந்த திரைப்படத்தின் வெற்றிக்கு மிகப்பெரும் காரணம்....

சேது - தமிழ் சினிமாவின் மற்றுமொரு மைல்கல்; இயக்குனர் பாலாவின் முதல் படைப்பு, ஒரு சாதாரண துருதுருவென இருக்கும் இளைஞன் வாழ்க்கையை காதல் எப்படி மாற்றிவிடுகின்றது என்கின்ற கதையை நாயகன் மூலம் உருகி உருகி சொல்லியிருப்பார் பாலா. விக்ரமின் அபார நடிப்பும், இசைஞானியின் அற்ப்புதமான இசையும் இந்த திரைப்படத்தை வேறொரு லெவலுக்கு கொண்டு சென்றது என்றால் அது மிகையில்லை!!! இந்த திரைப்படத்தின் இறுதிக்காட்சிகளை பார்த்து கலங்காத இதயங்ககளை விரல்விட்டு எண்ணிவிடலாம்!!


காதல் கொண்டேன் -
காதலா, இல்லை காமமா, இல்லை நட்பா என்பது தெரியாமல் ஒரு பெண்ணை அடைய எத்தனிக்கும் இளைஞன் அவளை அடைய என்னென்ன செய்கின்றான்? இறுதியில் அவளை அடைந்தானா? இல்லையா? என்பதை புதுமையான திரைக்கதை மூலம் சொல்லியிருப்பார் இயக்குனர் செல்வராகவன். யுவனின் இசையும், அரவிந்த் கிருஷ்ணாவின் ஒளிப்பதிவும், தனுசின் திறமையும், சோனியாவின் இளமையும் 'காதல் கொண்டேன்' திரைப்படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணிகள்.....

காதல் - பாலாஜி சக்திவேலின் இயக்கத்தில் பரத், சந்தியா நடிப்பில் வெளிவந்த காதல் திரைப்பம்தான் 'காதல்'. வசதி படைத்த பள்ளி மாணவியும், மெக்கானிக் இளைஞனும் காதல் கொள்வதும், அதை தொடர்ந்து வரும் பிரச்சனைகளையும் சொல்வதுதான் கதை என்றாலும் பாலாஜி சக்திவேல் அமைத்த திரைக்கதை அபாரம். விஜய் மில்டனின் ஒளிப்பதிவும், ஜோஷ்வா ஸ்ரீதரின் இசையும் இந்த திரைப்படத்திற்கு மிகப்பெரும் பலம். காதலின் ஜதார்த்தத்தை பிரதிபலித்த இந்த திரைப்படத்தின் இறுதிக்காட்சிகள் உருக்கம்.........

பருத்திவீரன் - பாரதிராஜா தொடாத கிராமத்து இளைஞம் மற்றும் யுவதியின் காதல். அமீரின் பாத்திர படைப்புகள்தான் இந்த திரைப்படத்தின் சிறப்பு. கார்த்தி, பிரியாமணி காதல் காட்சிகளில் நடிப்பில் கலக்கியிருப்பார்கள். யுவனின் கிராமத்து இசை படத்திற்கு மிகப்பெரும் பலம். மண் வாசனையுடன் கிராமத்தின் முரட்டுக் காதலை இனிமையாக சொன்ன பருத்திவீரனின் இறுதிக்காட்சிகளை பார்த்து உருகி கண் கலங்காத மனிதர்கள் இருக்க முடியாது.......
விண்ணைத் தாண்டி வருவாயா -
நவீன காதலை நாகரிக இளைஞர், யுவதிகளுக்கு ஏற்ப சிறப்பான திரைக்கதையில் காதல் சொட்ட சொட்ட கௌதம் மேனன் இயக்கிய திரைப்படம்தான் 'விண்ணைத் தாண்டி வருவாயா'. இந்த திரைப்படத்தின் மிகப்பெரும் பலம் A.R.ரகுமானின் பாடல்கள்தான். பாடல்களின் உதவியுடன் சிம்பு, திரிஷா காதலை கௌதம் சொன்னவிதம் பெரும்பான்மை இளைஞர்களை இந்த திரைப்படத்துடன் கட்டிப்போட்டது. ஜெஸிக்காக இளைஞர்களும், கார்த்திக்கிற்காக பெண்களும் ஏங்கும் வண்ணம் சிறப்பான திரைக்கதைமூலம் காதல் ரசம் சொட்டியிருப்பார் கௌதம் மேனன்.

இவை தவிர நினைவெல்லாம் நித்யா, பூக்களைத்தான் பறிக்காதீங்க, பன்னீர் புஷ்பங்கள், கிளிஞ்சல்கள், வைதேகி காத்திருந்தாள், இதயக் கோவில், ரோஜா, காதலன், காதல் மன்னன், பூவேலி, ரட்சகன், மின்னலே, 7G ரெயின்போ காலனி, இயற்க்கை, சம்திங் சம்திங், சுப்ரமணியபுரம், மைனா, மயக்கம் என்ன போன்ற பல திரைப்படங்கள் காதலை மையக்கருவாக சுமந்துவந்து வெற்றிபெற்ற திரைப்படங்கள். காதலை அழகாக சொல்லிய எந்த திரைப்படத்தையும் தமிழ் ரசிகர்கள் கைவிட்டதில்லை!!! தமிழர்கள் உள்ளவரை தமிழ் சினிமா வாழும், கூடவே தமிழ் சினிமாவில் காதலும் வாழும்; புதிய பரிமாணங்களில்!!!!

அனைவருக்கும் காதலர் தின நல்வாழ்த்துக்கள்.......


Thursday, February 9, 2012

யுவராஜ் சிங் - The Fighter

ஒருவரை எமக்கு பிடிக்காமல் இருக்கும்போது அவர் பற்றிய எதிர்மறையான எண்ணங்கள், கருத்துக்கள்தான் எம்மிடமிருந்து வெளிப்படும்; அதே நபருக்கு எதிர்மறையான விடயம் ஒன்று நிகழ்ந்து பொதுப் பார்வையில் இரக்கம் உண்டாகும் போதுதான் அவர் பற்றிய நேர்மறையான எண்ணம் எமக்குள் உருவாகும். இது சாதாரண மனித இயல்பு!!!

அந்த வகையில் இந்தியாவிற்காக யுவராஜ்சிங் ஆடும்போதெல்லாம் அதிகமாக எனக்கு யுவராஜ் சிங்கை பிடித்ததில்லை; காரணம் ஆரம்பத்தில் நான் ஒரு இலங்கை ரசிகன், மற்றும் இந்திய அணியின் எதிரி; அதன் பிற்ப்பாடு நாடுகளை தாண்டி கிரிக்கெட்டை மட்டும் ரசிக்க ஆரம்பித்த காலங்களில் யுவராஜ்சின் மைதான நடத்தைகள் யுவராஜ்மீது அபிப்பிராயத்தை ஏற்ப்படுத்தவில்லை. ஆனால் யுவராஜ்சின் புற்றுநோய் செய்தி கேட்ட பிற்ப்பாடு மனதில் யுவராஜ் சிங் பற்றிய ஏதோ ஒரு இனம்புரியாத உணர்வு மனதை கனக்கச் செய்கின்றது!! இந்நேரத்தில் யுவராஜ் என்னும் இந்திய கிரிக்கட் ஆளுமை பற்றிய சிறு அலசலை பதிவாக எழுத முயற்ச்சிக்கின்றேன்......

யுவராஜ் சிங் - 2000 ஆம் ஆண்டு இடம்பெற்ற 19 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான உலகக்கிண்ண போட்டித் தொடரில்த்தான் யுவராஜ் சிங் முதல் முதலாக தன்னை வெளிக்காட்டி கொண்டார். இலங்கையில் இடம்பெற்ற இந்த தொடரில் இந்திய அணி கிண்ணத்தை கைப்பற்றியதற்கு யுவராஜ்சிங்தான் முக்கிய காரணம். ஆஜானுபாகு தோற்றத்தில், இடதுகை துடுப்பாட்ட வீரராக அறிமுகமான யுவராஜ்சிங் ஆரம்பம் முதலே அதிரடி ஆட்டக்காறராகத்தான் தன்னை வெளிக்காட்டி வந்தார். 19 வயதுக்கு உட்பட்ட அணியில் சிறப்பான வெளிப்பாட்டை காட்டியதன் பலனாக 2000 ஆம் ஆண்டு கென்யாவின் நைரோபியில் இடம்பெற்ற ICC Knock Out தொடரில் கென்யா அணியுடனான போட்டியில் இந்திய தேசிய அணியில் அறிமுகப்படுத்தப்பட்டார்!!!மேற் சொன்ன அதே போட்டியில் யுவராஜ் சிங்குடன் அறிமுகப் படுத்தப்பட்ட மற்றுமொரு பிரபல இந்திய வீரர் சஹீர் ஹான்; மற்றொருவர் விஜய் டாஹியா. இந்த போட்டியில் சஹீர் ஹான் 3 விக்கட்டுகளை வீழ்த்தி தன்னை வெளிக்காட்டினார்; டாகியா விக்கட் காப்பாளராக 2 பிடிகளை பிடித்திருந்தார்; ஆனால் யுவராஜ்சிற்கு துடுப்பாட சந்தர்ப்பம் கிடைக்கவில்லை, 4 ஓவர்கள் பந்து வீசியும் விக்கட்டும் கிடைக்கவில்லை; மொத்தத்தில் முதல் போட்டி யுவராஜ் சிங்கிற்கு சாதகமாக அமையவில்லை என்றே சொல்லலாம்!!!

ஆனால் அடுத்த போட்டியே யுவராஜ்சை "யார் இந்த பையன்?" என அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தது!!! அன்றைய தேதியில் பலம் மிக்க அவுஸ்திரேலியா அணிக்கு எதிராக சச்சின், கங்குலி, டிராவிட் என இந்தியாவின் முக்கிய 3 விக்கட்டுகளும் 90 ஓட்டங்களுக்குள் சரிந்த நிலையில் களமிறங்கிய யுவராஜ்சிங்; 80 பந்துகளை எதிர்கொண்டு 84 ஓட்டங்களை குவித்து ஆஸ்திரேலியாவிற்கு வெற்றி இலக்காக 265 ஓட்டங்களை இந்தியா நிர்ணயிக்க உதவினார். அவுஸ்திரேலியா வெற்றி இலக்கை எட்டாமல் (245 ஓட்டங்கள்) அந்த தொடரில் இருந்து வெளியேறியது; ஆட்ட நாயகனாக யுவராஜ் தெரிவு செய்யப்பட்டார். தான் துடுப்பெடுத்தாடிய முதல் போட்டியிலேயே அரைச்சதமும், ஆட்ட நாயகன் விருதும் வென்றதுடன் அன்றைய உலக சாம்பியனின் கிண்ணக் கனவையும் பொய்யாக்கியிருந்தார் யுவராஜ் சிங்!

அந்த போட்டியின் பின்னர் பல போட்டிகளில் பிரகாசிக்க தவறிய யுவராஜ் அவ்வளவுதானா? என எண்ணிய வேளையில் அன்றைய பலம் மிக்க இலங்கை பந்து வீச்சாளர்களுக்கு எதிராக இலங்கையில் வைத்து யுவராஜ் பெற்ற 98* ஓட்டங்கள் மீண்டும் அவர் மீது நம்பிக்கையை ஏற்ப்படுத்தியது. அதன் பின்னர் தொடர்ச்சியாக பிரகாசிக்காது போனாலும் அப்பப்போ தனது அதிரடியால் அரைச்சதங்களை குவித்து இந்திய அணியின் வெற்றிக்கு துணை புரிந்த யுவராஜ் தனது கன்னி சதத்தை பங்களாதேஷ் அணிக்கு எதிராக பெற்றார். ஆனாலும் அடுத்ததாக சிட்னியில் வைத்து பெறப்பட்ட சதம்தான் யுவராஜ்சின் சதங்களிலேயே சிறப்பான சதமாக அமைந்தது!!! அவுஸ்திரேலியர்களுக்கு எதிராக அவர்களது சொந்த மண்ணில் வைத்து 122 பந்துகளில் யுவராஜ் பெற்ற 139 ஓட்டங்கள்தான் இன்றுவரை யுவராஜ்சின் ஒருநாள் போட்டிகளின் அதிக பட்ச ஓட்டங்கள்.இந்த இரண்டு சதங்களும் பெறப்படுவதற்கு முன்னர் இங்கிலாந்தில் இந்திய அணி ஆடிய முக்கோணத் தொடரின் இறுதி ஆட்டத்தில்; 325 என்னும் கடினமான இலக்கை, 146 ஓட்டங்களுக்குள் மூத்த வீரர்கள் 5 பேரும் சுருண்ட நிலையில் முஹமட் கைப் உடன் இணைந்து எட்டுவதற்கு உதவினார் (கைப்தான் யுவியை விட இந்த போட்டியின் சிறப்பாட்டகாரர்) இறுதிப் போட்டிகளில் தொடர்ச்சியாக தோல்வி அடைந்துகொண்டிருந்த இந்திய அணி கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகளுக்கு பின்னர் வெற்றி பெற்ற இறுதிப் போட்டி இதுதான்!!!

இந்த போட்டியின் பின்னர் இந்திய கிரிக்கட்டின் தவிர்க்க முடியாத வீரராக யுவராஜ் சிங்கிற் கென்றொரு நிலையான இடம் இந்திய அணியிலே ஒதுக்கப்பட்டது !!! அன்று முதல் ஒருநாள் போட்டிகளில் இந்தியாவின் ஆதிக்கத்தில் யுவராஜ்சின் ஆதிக்கமும் சேர்ந்தே வெளிப்பட ஆரம்பித்தது. யுவராஜ்சின் சிறப்பான ஆட்டத்தால் 2008 ஆம் ஆண்டில் டோனி தலைமையிலான இந்திய அணிக்கு உபதலைவராக நியமிக்கப்பட்டார். ஆனால் அந்த காலப்பகுதியில் ஓட்டங்களை குவிக்க முடியாமல் சிரமப்பட்டதால் உபதலைவர் பதவியை இழக்கவேண்டி வந்தது!!

அதன் பின்னர் மீண்டும் சாதாரண வீரராக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய யுவராஜ்சிங் 2011 ஆம் ஆண்டு இடம்பெற்ற உலகக்கிண்ண போட்டித் தொடரில் 4 முறை ஆட்ட நாயகன் விருதையும், தொடரின் நாயகன் விருதையும் வென்று இந்திய அணியின் உலகக்கிண்ண வெற்றியில் முக்கிய பங்காற்றியிருந்தார். குறிப்பாக தொடர்ந்து 3 தடவைகள் தொடர்ச்சியாக உலகச் சாம்பியன் கிண்ணத்தை வென்ற அவுஸ்திரேலியாவை கால் இறுதிப் போட்டியில் தோற்கடிக்க முக்கிய காரணியாக யுவராஜ் விளங்கியிருந்தார். யுவராஜ் பெற்ற இரண்டு விக்கட்டுகள் மற்றும் ஆட்டமிழக்காமல் பெற்ற 57 ஓட்டங்கள் அந்த போட்டியை இந்தியா வசம் பெற்றுக் கொடுத்ததோடு அவுஸ்திரேலியாவின் தொடர் வெற்றிப் பயணத்திற்கு முற்றுப்புள்ளியும் வைத்தது. ஆஸ்திரேலியர்களுக்கு சச்சினுக்கு அடுத்து அதிக குடைச்சல் கொடுத்த இந்தியர் யுவராஜ்தான்!!!ஒருநாள் போட்டிகளில் 274 போட்டிகளில், 37.62 சராசரியில், 87.58 Strike Rate இல், 13 சதங்கள், 49 அரைச் சதங்களுடன், 8051 ஓட்டங்களை குவித்துள்ள யுவராஜ் சிங்; ஒரு 5 விக்கட் அடங்கலாக 109 விக்கட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்; சிறந்த களத்தடுப்பு வீரரான யுவராஜ் 84 பிடிகளையும் பிடித்துள்ளார். 25 தடவைகள் ஆட்ட நாயகன் விருதை வென்றுள்ள யுவராஜ் சிங் 7 தடவைகள் தொடரின் நாயகனாகவும் தெரிவு செய்யப்பட்டுள்ளார். நடுவரிசை வீரராக ஒருநாள் போட்டிகளை பொறுத்தவரை இது ஒரு மிகச் சிறப்பான பெறுதி என்பதில் மாற்றுக்கருத்து இருக்காது என்று நம்பலாம்!!!!

டெஸ்ட் போட்டிகள் - ஒருநாள் போட்டிகளைபோல யுவராஜ் சிங்கால் டெஸ்ட் போட்டிகளில் அதிகம் பிரகாசிக்க முடியவில்லை!! 2003 வரை டெஸ்ட் போட்டிகளில் ஆடும் வாய்ப்பே யுவராஜ்சிற்க்கு கிடைக்கவில்லை. காரணம் 3, 4, 5, 6 ஆம் இலக்கங்களுக்கு டிராவிட், சச்சின், கங்குலி, லக்ஸ்மன் என நான்கு சுவர்களும் ஸ்திரமாகவும், நிலையாகவும் இருந்தமைதான். 2003 ஆம் ஆண்டில் கங்குலிக்கு பதிலாக மொகாலியில் நியூசிலாந்து அணியுடன் தனது கன்னி டெஸ்ட் போட்டியை விளையாடிய யுவராஜ்சிங் 2008 ஆம் ஆண்டு கங்குலி ஓய்வு பெறும்வரை அப்பப்போதான் இந்திய அணியில் இடம் பிடித்தார்.

2008 க்கு பின்னரும் யுவராஜ் தொடர்ச்சியாக ஆட முடியாத அளவிற்கு அவருக்கு உபாதை, Out of Form, புதிய திறமைகளின் வரவு என்பன ஆதிக்கம் செலுத்தின. தொடர்ச்சியாக சில போட்டிகளில் சாதித்திருந்தால் யுவராஜ்சிர்க்கு Test அணியில் நிரந்த இடம் கிடைக்கும் வாய்ப்பு இருந்தாலும் அவரது Game Style க்கு டெஸ்ட் போட்டிகள் சரியாக அமையுமா என்பது கேள்விக்குறிதான்!!!! அது தவிர அடிக்கடி உபாதைக்குள்ளாகும் யுவராஜ் சிங் டெஸ்ட் போட்டிகளை தவிர்ப்பதுதான் சிறப்பான முடிவும்கூட!! டெஸ்ட் போட்டிகளை பொறுத்தவரை 37 போட்டிகளில், 34.80 சராசரியில், 3 சதங்கள், 10௦ அரைச்சதங்களுடன் 1775 ஓட்டங்களை குவித்துள்ள யுவராஜ் சிங் தான் பெற்ற மூன்று சதங்களையும் இந்தியாவின் பரம எதிரி நாடான பாகிஸ்தானுக்கு எதிராக பெற்றது சிறப்பு.


மறக்க முடியாத ஓவர்


T/20 போட்டிகள் - முதலாவது T/20 உலகக்கிண்ணத்தை இந்தியா வெல்வதற்கு யுவராஜ் சிங்கின் துடுப்பாட்டம் மிக்கபெரும் பக்கபலமாக அமைந்தது என்றால் மிகையில்லை. அரையிறுதிப் போட்டியில் அவுஸ்திரேலியாவிற்கு எதிராக 30 பந்துகளில் தலா 5 சிக்ஸர்கள், பவுண்டரிகள் அடங்கலாக யுவராஜ் பெற்ற 70 ஓட்டங்கள் அவுஸ்திரேலியாவை முதல் T/20 போட்டித் தொடரில் இருந்து வெளியேற்றியது ( ICC போட்டித்தொடரில் 3 தடவைகள் யுவராஜ் சிங் அவுஸ்திரேலியாவை வெளியேற்ற காரணமாக அமைந்துள்ளார்)

இதற்கு முன்னதாக இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் 16 பந்துகளில் 58 ஓட்டங்களை பொழிந்ததை அந்த போட்டியை பார்த்த யாராலும் எப்போதும் மறக்க முடியாது!!! அதிலும் இங்கிலாந்து பந்து வீச்சாளர் ஸ்டுவட் புரோட் தன் வாழ்க்கையின் கடைசி நிமிடம் வரை யுவராஜ்சை மறக்கவே மாட்டார் :-) போட்டியின் 19 ஆவது ஓவரில் புரோட் வீசிய 6 பந்துகளையும் சிக்ஸர்களாக மாற்றிய யுவராஜ் ஆறாவது சிக்ஸரை அடித்த போது; ஒரு ஓவரில் பெறப்பட்ட அதிகபட்ச ஓட்டமான 36 ஓட்டங்களையும், குறைந்த பந்துகளில் (12 பந்துகள்) பெறப்பட்ட அரைச்சதத்தையும் உலக சாதனையாக தனது பெயரில் பதிவு செய்தார். 23 T/20 போட்டிகளில் விளையாடியுள்ள யுவராஜ் 31.5 சராசரியில் 151.6 ஸ்ரைக் ரேட்டில் 5 அரைச்சதங்கள் அடங்கலாக 567 ஓட்டங்களை பெற்றுள்ளார்.

அணித்தலைமை - யுவராஜ் சிங்கிற்கு அணித்தலைமை சரியாக இருக்குமா என்பது சந்தேகம்தான்!!! இந்திய அணிக்கு தலைமை தாங்கி வழிநடத்தும் சந்தர்ப்பம் அமையாவிட்டாலும் IPL போட்டிகளில் பஞ்சாப், பூனே அணிகளை தலைமை ஏற்று வழிநடத்தும் பொறுப்பு யுவராஜ்சிற்கு கிடைக்கப்பெற்றது; ஒரு துடுப்பாட்ட வீரராக பிரகாசித்த யுவராஜ் அணித்தலைவராக சிறப்பாக செயற்ப்படவில்லை என்பதுதான் உண்மை!! இந்திய அணிக்கு யுவராஜ் தலைமை ஏற்றால் அவர் ஒரு மோசமான அணித் தலைவராகத்தான் கணிக்கப்படுவார் என்பது எனது தனிப்பட்ட கருத்து! T/20 போட்டிக்களில் பிரகாசித்ததுபோல யுவராஜ் IPL போட்டிகளில் சிறப்பாக பிரகாசிக்கவில்லை என்பதும் மறுக்க முடியாத உண்மை!!

வலுவான புஜவலிமை மிக்க யுவராஜ் பந்தினை வேகமாக எல்லைக்கோட்டுக்கு அப்பால் விரட்டி அடிக்கும் ஆற்றல் உள்ளவர்; அதே நேரம் சிறப்பாக பந்தினை கணித்து (Timing & Placement) நேர்த்தியாக அடிக்கும் ஆற்றலும் உள்ளவர். Deep Mid wicket - Long on இடையிலான Gap, Deep Extra Cover - Long Off இடையிலான Gap என களத்தடுப்பு வகுக்கப்படாத பகுதிகளுக்கு பந்தினை On Drive, Off Drive மூலமும் Hard Hitting மூலமும் ஓட்டங்களை குவிப்பதில் யுவராஜ் கில்லாடி. Full Length Delivery களை Half Volley மூலம் சிக்சர்களாக மாற்றியமைக்கும் தந்திரம் யுவராஜ்சிற்கு தெரியும். துடுப்பாட வந்த முதல் சில ஓவர்களுக்கு சுழல் பந்துக்கு கொஞ்சம் தடுமாறினாலும் பின்னர் சிறப்பாக அடித்தாடக் கூடியவர் யுவராஜ்.ஒருநாள் போட்டிகளை பொறுத்தவரை யுவராஜ் 20 ஓவர்கள் மைதானத்தில் துடுப்பெடுத்தாடினால் எதிரணி போட்டியை மறக்கவேண்டிய நிலைதான் ஏற்ப்படும்!! பந்து வீச்சை பொறுத்தவரை யுவராஜ் சிறப்பான பகுதிநேர பந்து வீச்சாளர் என தன்னை பல தடவைகள் நிரூபித்திருக்கிறார். Turning, slow pitch களில் யுவராஜ் மிக சிறப்பாக பந்து வீசக்கூடியவர். களத்தடுப்பை பொறுத்தவரை யுவராஜ் Short Fielding இல் சிறப்பானவர்; Point, Backward Point, Cover, Cover Point, Extra Cover Position களில் யுவராஜ் மிகச்சிறப்பான களத்தடுப்பாளர்; ஓட்டங்களை கட்டுப்படுத்தியும், கடினமான பிடிகளை பிடித்தும், சிறப்பான Run out மூலமும் பல தடவைகள் இந்தியாவின் வெற்றிக்கு யுவராஜ் தன் களத்தடுப்பால் வெற்றி தேடிக் கொடுத்திருக்கிறார்!!!!

ஏனோ இப்போதெல்லாம் யுவராஜ் இல்லாத இந்திய அணி(ODI) ஒரு முழுமையான அணியாக தெரிவதில்லை; உலகக்கிண்ண இறுதிப் போட்டியின் பின்னர் இந்தியாவிற்காக யுவராஜ் ஒருநாள் போட்டிகளில் இன்னமும் ஆடவில்லை; இங்கிலாந்து, மேற்கிந்திய அணிகளுடன் டெஸ்ட் போட்டிகளில் ஆடினாலும் உபாதை காரணமாக ஒருநாள் போட்டிகளில் ஆடும் சந்தர்ப்பம் அமையவில்லை!!! தற்போது இடம்பெறும் முக்கோணத் தொடரிலும் உபாதை காரணமாக யுவராஜ் பெயர் இடம்பெறவில்லை; இந்நிலையில்த்தான் யுவராஜ் புற்றுநோயால் பீடிக்கப்பட்டிருக்கும் செய்தி வெளியாகியது!!!

புற்றுநோய் ஆரம்ப கட்டத்தில்த்தான் உள்ளதென்பதால் குணமாக்க முடியும் என மருத்துவர்கள் சொன்னதால் பயப்படும்படி இல்லை என்றாலும் மனதில் ஏதோ கனம் இல்லாமல் இல்லை!! மேலே யுவராஜ் பற்றிய தரவுகள் அனைத்தும் யுவராஜ் கிரிக்கட்டுக்கு முற்றுப்புள்ளி வைத்ததாக எண்ணி எழுதப்படவில்லை; ஒரு சிறு ஞாபகப்படுத்தலுக்காக மட்டுமே; கூடிய சீக்கிரமே யுவராஜ் கிரிக்கட்டுக்கு தற்காலிகமாக போட்டுள்ள முற்றுப்புள்ளியை 'கம'வாக மாற்றி அடுத்த இன்னிங்க்சை ஆரம்பிப்பார். யுவராஜ் ஒரு Fighter, நிச்சயமாக அவர் இதிலிருந்து மீண்டு வருவார் என்கின்ற நம்பிக்கை எனக்கு நிறையவே உண்டு. மீண்டும் 12 ஆம் இலக்க இந்திய jersey யில் யுவராஜ்சை காண ஆவலுடன் காத்திருக்கும் கோடிக்கணக்கான கிரிக்கட் ரசிகர்களில் நானும் ஒருவனாக காத்திருக்கிறேன்.......

குறிப்பு :- கடந்த ஆண்டும், இந்த ஆண்டும் நோயினால் பீடிக்கப்பட்டு ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளக்கிய இரு பிரபலங்கள் - ரஜினிகாந்த் மற்றும் யுவராஜ்சிங் # இருவரும் பிறந்தது மார்கழி 12 !!! ஒரு Fighter மீண்டு வந்துள்ளார், மற்றைய Fighter ம் நிச்சயம் மீண்டு வருவார்.......

இது யுவராஜ் வழங்கியுள்ள நம்பிக்கை தரும் செய்தி- "I am a fighter and I will return stronger than ever. Initially, I was angry and confused. I was even repentant and kept thinking I could have done some things in life differently. However, I have a counsellor here who has helped me get over the initial shock of learning that I am suffering from cancer. I have come to terms with it now,"