
முனியப்பர் கோவில்
யாழ்ப்பாணம் முனியப்பர் கோவிலுக்கு ஒரு மிகப்பெரும் சிறப்பு உண்டு , இந்த கோவில் யாழ்ப்பாணம் கோட்டையின் கிழக்கு எல்லையில் அமைந்துள்ளது, கோட்டைக்கும் முனியப்பர் கோவிலுக்கும் இடையில் ஒரு அகழிதான் பாலமாக உள்ளது. 1988 முதல் 1992 வரை இடம்பெற்ற கடுமையான மோதல்களில் கோட்டைக்குள் இருந்த 30 இற்கும் குறைவான ராணுவத்தை பாதுகாப்பதற்காக பலாலி ராணுவமும் , தம்மை பாதுகாக்க கோட்டை ராணுவமும் அந்த காலப்பகுதியில் அடித்த 'செல்கள்' எண்ணில் அடங்காதவை, அதுதவிர அன்றைய இராணுவ விமானங்களாகிய பொம்பர், அவ்ரோ என்பன போட்ட குண்டுகளும் எண்ணில் அடங்காதவை.

யாழ்ப்பாணக்கோட்டை [அகழியும் கோட்டைமதிலும் ]
இதனால் கிட்டத்தட்ட கோட்டைக்கு 300 மீற்றர் தொலைவிலுள்ள யாழ்நகரே முற்றாக நாசமாகியது, அருகிலிருந்த மத்தியகல்லூரி, பொதுநூலகம் , துரையப்பா விளையாட்டரங்கு, பூங்கா என அனைத்தும் மிகவும் சேதமாகியபோதும் கோட்டைக்கு மிகமிக அருகாமையில் அமைந்திருந்த முனியப்பர் கோவிலில் சிறு கீறல்கூட விழாதது ஆச்சரியமான உண்மை, இது கடவுளின் செயலா இல்லையா என்பதல்ல விவாதம், இப்பேற்பட்ட அதிசயமான கோவிலின் இன்றைய நிலைதான் கவலைக்கிடமாக உள்ளது.

விறகு பொறுக்கும் வயதானவர்
இன்று கொழும்பிலிருந்து வரும் ஆயிரக்கணக்கான சிங்கள சுற்றுலா(?) வாசிகள் சமைத்து சாப்பிடுவது இந்த முனியப்பர் கோவிலின் முன்னிலையில்தான் , அதுவும் மாமிச உணவுகளை, அது தவிர கோவிலின் அக்கம் பக்கங்களில் அசிங்கம் வேறு செய்த்துவிட்டு போகிறார்கள்.இதை தட்டிக்கேட்கும் தைரியம் யாருக்கும் இல்லை. இதனால் நாளுக்குநாள் இவர்கள் கோவிலின் சுற்றுப்புறங்களை நாசமாக்குவது தொடர்ந்தவண்ணம்தான் இருக்கிறது. இந்நிலையில் கோவிலின் பின்புறத்தில் அகழியின் உள்ளே இறங்கி கோட்டைக்குள் விறகு பொறுக்கும் வயதான பாட்டி (படத்தில் உள்ளவர் ) கூறியதாவது "இத்தனை நாளும் ஒரு பிரச்சினை இல்லாமல் விறகு பொறுக்கினம், இப்ப கால் வைக்க முடியாதபடி இதுகள் அசிங்கம் பண்ணீற்று போகுதுகள் (இவர்கள் செருப்பு போடுவதில்லை) இதால நாங்கள் இந்த அசிங்கங்களை மிதிச்சுக்கொண்டுதான் விறகு பொறுக்கவேண்டி இருக்கிறது " என்றார்.

கோவிலுக்கு முன் சமைக்கும் மக்கள்
இன்று யாழ்ப்பாணத்திற்கு வரும் சிங்கள சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்த வண்ணம் உள்ளது, வெள்ளிக்கிழமை ஆனால் ஆயிரக்கணக்கில் பஸ்களில் வரும் இவர்கள் தங்குவதற்கு எந்த ஒழுகும் இல்லாமல் வருவதால் யாழில் உள்ள ஓரிரு விடுதிகளில் தங்குபவர்கள் போக மீதமுள்ளோர் நகர்ப்புறங்களில் உள்ள பொது இடங்களில்தான் தங்குகின்றனர், அங்கேயே சமைத்து சாப்பிட்டுவிட்டு அங்கேயே ......போகும் இவர்களால் இன்று யாழ்ப்பான மக்களுக்கு கிடைத்திருப்பது நோயைதவிர வேறொன்றுமில்லை.

பொது இடத்தில் உணவு உட்கொள்ளும் சுற்றுலாவாசிகள்
இவர்களின் வருகையை வேண்டாமென்று சொல்லவில்லை,தாராளமாக வரட்டும், இவர்களது வருகை எமக்கு மகிழ்ச்சிதான், ஆனால் வருபவர்கள் தங்குமிடத்திற்கு ஆயத்தமில்லாமல் வருவதை ஏற்றுக்கொள்ள முடியாது, இதேபோல தமிழ்மக்கள் ஆயிரம் பஸ்வண்டிகளில் கொழும்புக்கு சென்று பொது இடங்கில் சமைத்து சாப்பிட்டுவிட்டு பொது இடங்களில் ....செய்ய கொழும்பு மாநகரசபை அனுமதிக்குமா ? இதை தட்டிக்கேட்க வேண்டியவர்கள் மாநகரசபை உறுப்பினர்களும் அரசஅதிபருமே , ஆனால் இவர்கள் இருவரும் இதுவரை வாயே திறக்கவில்லை.இப்படியே போனால் சிறிது காலத்துக்குள் யாழ்நகரில் கொலரா, வாந்திபேதி, டெங்கு என்பன பலமடங்கு அதிகரிப்பதை யாராலும் தடுக்கமுடியாது, உடனடியாக மாநகரசபை அல்லது அரசஅதிபர் இதற்கொரு முடிவெடுக்கவேண்டும்.

சுற்றுலா வாசிகள்
இதுதவிர முக்கிய கோவில்கள் , பீச்சுகள் என்பவற்றுக்கு செல்வதற்கு தமிழ்மக்களை விட சிங்களமக்களுக்கே ராணுவத்தினர் முன்னுரிமை அளிப்பதாகவும் மக்கள் கூறுகின்றனர். அதேபோல முன்னர் நடைபாதை கடைகள் வைத்திருக்கும் ஓரிரு தமிழ் வியாபாரிகள் பொலிசாரால் விரட்டப்பட்டு வந்தனர் , ஆனால் இன்று கொழும்பிலிருந்தும் வெளிமாவட்டங்களில் இருந்தும் வந்த வியாபாரிகளால் நல்லூரில் திருவிழா காலங்களில் உள்ளதைவிட அதிகமான நடைபாதை கடைகளை உள்ளன, யாழ் நகரின் பிரதான வீதிகள் அனைத்திலும் அதிகமான நடைபாதை கடைகள், ஆனால் இன்று இவர்கள் யாரையும் போலீசார் ஏன் என்றும் கேட்பதில்லை.

நடைபாதை வியாபாரிகள்
ஆரம்பத்தில் பாதை திறக்கப்பட்டபோது பொருட்களின் வரவால் விலைவாசி குறைந்திருந்த யாழ்ப்பாணம் இன்று அதே பொருட்களால் குப்பைமேடாக ஆகிவிட்டது, அனைத்து பொருட்களும் யாழ்ப்பாணத்திற்கு கொண்டுவந்து மலிவு விலையில் தள்ளப்படுகிறது, வெளிநாட்டுக்காசு அதிகமாக புழங்கும் யாழ்ப்பாணத்தவரும் தரத்தை பார்க்காமல் கிடைக்கும் அனைத்தையும் அவாவில் வாங்கிக்கொள்கிறார்கள், இதனால் வெளிமாவட்ட வியாபாரிகள் வருகை நாளுக்குநாள் அதிகரித்தவண்ணம் உள்ளது , இவர்கள் பொருட்களை வீதிகளில் போட்டு விற்பதால் கடைவாடை, மின்சாரசெலவு, வரி , தொழிலாளர் சம்பளம் என்பன இல்லாமையால் குறைந்தவிலைக்கு பொருட்களை கொடுக்கக்கூடியவாறு உள்ளது, இதனால் காலம் காலமாக யுத்தகாலத்திலும் மக்களோடு இருந்துவந்த யாழ்ப்பாண வியாபாரிகள் (கடைக்காரர்கள்) எல்லாம் வியாபாரம் இல்லாமல் காய்ந்து கிடக்கின்றார்கள். இதற்கு போலீசோ , அரசஅதிபரோ உடனயாக சரியான தீர்வை எடுக்காவிட்டால் பல கடைகள் இழுத்துமூடும் நிலைக்கு ஆளாகலாம்.

இது மட்டும் இணையத்தில் சுட்டது
மதிப்பிற்குரிய அரசஅதிபர் கணேஷ் அய்யா அவர்களே இந்த பிரச்சினைகளுக்கு உடனடி தேர்வு காணவேண்டும் என்பது யாழ்ப்பான வாசிகளின் சார்பாக எனது கோரிக்கையாகும்.
நன்றி.