
நிறைய விசயம் எழுதணுமின்னு தோணுது, எந்த வகையில் வகைப்படுத்தி எழுதுவதென்று தெரியல!! மனதில் உள்ளவற்றை அப்படியே எழுதுவதால் பதிவில் தொடர்ச்சி இருக்காது. குறிப்பிட்ட ஒவ்வொரு விடயங்களையும் பற்றி எழுதும்போது ஆண்டுகள் கிராமமாக வராமல் சுழற்ச்சியில் வரும். இது எனது எண்ணங்களின் பதிவு என்பதால் போரடிக்குமென நினைப்பவர்கள் வேறொரு பதிவில் சந்திக்கலாம். பாலாவின் பக்கங்கள் பாலா கிரிக்கட் தொடரை எழுதுவதுதான் எனது இந்த பதிவின் இன்ஸ்பிரேஷன். இது பெருந்தொடர் என்று என்ன வேண்டாம், ஜஸ்டு 4 அல்லது 5 பதிவுகள்தான், யாராவது இந்த பதிவை தொடரவிரும்பினாலும் தொடரலாம்.
மனிதன்; இது நான்பார்த்த முதல்த் திரைப்படம். அன்று ஆரம்பித்த ரஜினி மற்றும் சினிமா மீதான காதல்(மோகமல்ல) இன்றுவரை தணியவில்லை, இனிமேலும் தணிய வாய்ப்பில்லை :-) 1991 ஆம் ஆண்டுவரை நான் பார்த்த திரைப்படங்களில் 90 சதவீதமானவை ரஜினிகாந்த், மற்றும் விஜயகாந் நடித்த திரைப்படங்கள்தான். இவர்கள் இருவருக்குமடுத்து அன்று கார்த்திக், பிரபு திரைப்படங்களை விரும்பி பார்த்திருக்கிறேன்.
ஏனைய திரைப்படங்களில் சண்டைக்காட்சிகளை மட்டும் பார்த்தவிட்டு மீதி நேரங்களில் முற்றத்தில்; கிரிக்கட் அடித்ததுதான் ஞாபகத்தில் உள்ளது. அன்றைய நாட்களில் என் மனதில் ஹீரோன்னா அது ரஜினிதான்(இன்று வரைக்கும், எப்போதுமே). அன்று எனக்கு கமல், மோகன் இருவருக்குமிடையில் உருவத்தில் பெரிதாக வித்தியாசம் தெரியாது; இருவரையும் அழுகுணி நடிகர்கள் என்று சொல்லி இவர்கள் படங்களை சிறுவயதில் பார்ப்பதில்லை. பின்னாட்களில் மோகனின் திரைப்படங்களை பாடல்களுக்காக தேடித்தேடி பார்த்துள்ளேன்.

90 களில் ஆரம்பத்தில் ஈழப்போர் யாழ்ப்பாணத்தில் உக்கிரமடைந்த நிலையில் புதிய திரைப்படங்களை பார்ப்பது சாத்தியமில்லாமல் போயிற்று, அக்காலப்பகுதியில் வெளிவந்த திரைப்படங்களில் ஓரிரண்டு திரைப்படங்கள்தான் யாழ்ப்பாணத்திற்கு கேசட்டாக வந்தன; அவற்றில் வீரா, வள்ளி, சின்னத்தம்பி, கார்த்திக் நடித்த சீமான், சரத்குமார் பிரபுதேவாவின் 'இந்து' போன்றவை அன்று புதிய திரைப்படங்கள் என்று சொல்லப்பட்ட திரைப்படங்கள். வேறு புதிய திரைப்படங்கள் கேசட்டாக வந்தது ஞாபகத்தில் இல்லை. அக்காலப்பகுதியில் நான் அதிக தடவைகள் பார்த்த திரைப்படங்கள் என்றால் அவை ரஜினியின் சிவா மற்றும் விஜயகாந்தின் ராஜநடை.
ஈழப்போரின் உக்கிரம் அதிகரித்திருந்த நிலையில் இந்த காலப்பகுதியில் அறிமுகமாகிய அஜித், விஜய், பிரஷாந்த் போன்ற நடிகர்களையோ; அவர்களின் திரைப்படம், ஏன் புகைப்படத்தை கூட 1996 வரை பார்க்கும் சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. ஒரு மிகப்பெரும் இடம்பெயர்வின் பின்னர் 1996 இல்தான் அன்றைய புதிய தலைமுறை நடிகர்களின் திரைப்படங்களை முதல் முதலாக பார்க்கும் சந்தர்ப்பம் அமைந்தது. அப்படியாக அடுத்த தலைமுறை நடிகர்களின் திரைப்படங்களில் நான் பார்த்த முதல் திரைப்படம் 'பூவே உனக்காக'.

அன்று என்னை மிகவும் பாத்தித்த, எனக்கு மிகவும் பிடித்த திரைப்படமாக அமைந்தது. அந்த காலப்பகுதியில் மின்சாரம் இல்லாத காரணத்தால் டீவி,டேக்,ஜெனரேட்டர் வாடகைக்கு எடுத்து ஒரேநாளில் நான்கு திரைப்படங்களை மாலை 6 மணி முதல் மறுநாள் காலை வரை போட்டு பார்ப்பது வழக்கம். ஞயிறு இரவு முழுவதும் திரைப்படங்களை பார்த்துவிட்டு காலையில் பாடசாலை சென்ற நாட்களும் உண்டு, சிவராத்திரி என்றால் மாலை 6 மணி முதல் மறுநாள் மாலைவரை 7 அல்லது 8 திரைப்படங்களை தொடர்ந்து பார்த்த சம்பவமும் உண்டு. கடைசியில் எல்லா படமும் ஒன்றோடு ஒன்று மிக்ஸ்ஆகி மண்டையைப் பிச்சுக்கிட்டதும் உண்டு.
ஒரே அயலில், வாரம் ஒரு வீட்டில் இவ்வாறு திரைப்படங்கள் போடப்படுவது வழக்கம்; அவ்வாறு போடப்படும் திரைப்படங்களில் பாட்ஷா, முத்து, இந்தியன், பூவே உனக்காக, காதல் கோட்டை, உள்ளத்தை அள்ளித்தா போன்ற திரைப்படங்கள் அதிகமாக பார்க்கப்படும் திரைப்படங்கள். அப்போது சிலகாலம் வாரம் ஒரு வீட்டில் திரைப்படங்களின் தீபாவளியாக இருந்தது. இப்போது நினைத்தாலும் பசுமையான அழகிய காலமது..............
அன்று (15 ஆண்டுகளுக்கு முன்னர்) யாழ்ப்பாணத்தில் 'காதல் கோட்டை' திரைப்படத்தை முதலில் பார்த்தவர்கள் அஜித் ரசிகர்களாகவும்; 'பூவே உனக்காக' திரைப்படத்தை முதலில் பார்த்தவர்கள் விஜய் ரசிகர்களாகவும் தங்களை வெளிக்காட்டிக் கொண்டார்கள்; இன்றுவரை இங்கு பலர் அஜித்,விஜய் ரசிகர்களாக இருக்க இவ்விரு திரைப்படங்களும்தான் முக்கிய காரணம் (தீனா, கில்லி அப்புறம்தான்). ஒருவேளை அஜித் ரசிகன் 'பூவே உனக்காக'வையும், விஜய் ரசிகன் 'காதல்க் கோட்டை'யையும் முதலில் பார்த்திருந்தால் அஜித் ரசிகர்கள் விஜய் ரசிகர்களாகவும், விஜய் ரசிகர்கள் அஜித் ரசிகர்களாகவும் இருந்திருப்பார்கள்!!!

நான் பூவே உனக்காக முதலில் பார்த்ததால் எனக்கு விஜயை அப்போது பிடித்திருந்தது, சினிமா பற்றி விவாதிப்பவவர்கள் அருகில் இல்லாததால் நல்லவேளை அன்று அஜித்தில் வெறுப்பு ஏற்படவில்லை. விஜயின் அத்தனை திரைப்படங்களையும் அன்று ரசித்துப் பார்ப்பது வழக்கம், விஜயின் அட்டர் பிளாப் திரைப்படங்களையும் ரசித்துள்ளேன்; அதேநேரம் அஜித், பிரஷாந்த் திரைப்படங்களையும் பார்க்கத் தவறியதில்லை. அஜித் திரைப்படங்களில் காதல் கோட்டை, வான்மதி, பவித்திரா, நேசம், ஆசை திரைப்படங்களும் பிரஷாந்தின் மன்னவா, ஆணழகன், திருடா திருடா திரைப்படங்களையும் பல தடவைகள் பார்த்திருக்கிறேன்.
சிலகாலங்களின் பின்னர் இந்தியாவில் படம் வெளியாகி ஒரு வாரத்தினுள் மினி திரையரங்குகளில் திரைப்படங்களை போட்டுவிடுவார்கள், அந்த காலப்பகுதியில் எந்த திரையரங்கும் யாழ்ப்பாணத்தில் இயங்கவில்லை. அதிகமான மினி திரையரங்குகளில் அந்தமாதிரி படங்கள் போடப்படுவதால் அதிகமான பெற்றோர் தம் பிள்ளைகள் மினி திரையரங்கிற்கு செல்ல விரும்புவதில்லை. ஆனால் எனக்கு மினி திரையரங்கில் சென்று படம் பார்க்க வீட்டில் எந்த தடையும் போடவில்லை, வீட்டிற்கு தெரிந்தே நான் திரையரங்கு சென்று பார்த்த முதல் திரைப்படம் நான் பல தடவைகள் மீண்டும் மீண்டும் பார்த்த 'உள்ளத்தை அள்ளித்தா'. 6 வயதில் இரு தடவைகள் (ராஜாதி ராஜா, பணக்காரன்) திரையரங்கிற்கு குடும்பத்துடன் சென்றிருந்தாலும் பெரியதிரை அதிகம் ஞாபகத்தில் இல்லை என்பதால் ஓரளவு பெரியதிரையில் மினியில் படம் பார்ப்பது புதிய அனுபவமாக இருந்தது.

தொடர்ந்து சிலகாலம் மினி திரையரங்கில் புதிய திரைப்படங்கள் எது வந்தாலும் ஆஜராவது வழக்கம், டிக்கட் காசும் 10 ரூபாதான் என்பதால் பைனான்சியல் பிரச்சினைகளும் இருக்கவில்லை :-) அடுத்து மினி திரையரங்கில் நான் பார்த்து ரசித்த திரைப்படம் 'மினி'யாக ஷாலினியும் விஜயும் நடித்த பாசிலின் காதலுக்கு மரியாதை. காதலுக்கு மரியாதைக்கு பின்னர் விஜய் மீது சற்று அதிக ஈடுபாடு உண்டாயிற்று அந்த ஈடுபாடு 'யூத்' திரைப்படம்வரை வரை என்னை விஜய் திரைப்படங்களை தொடர்ந்து ரசிக்க வைத்தது. யூத் திரைப்படம் முதல்முதலாக என்னை விஜய்க்கு எதிராக மாற்றியது. காரணம் என்கூட இருந்த ஒரு விஜய் ரசிகர்!!!
எனக்கு என்னதான் விஜய் மீது அன்று ஈடுபாடு இருந்தாலும் ரஜினி எப்போதுமே என் மன சிம்மாசனத்தில் நிரந்தரமாக உட்கார்ந்திருந்தார். ரஜினியின் பாபா வெளிவரும் நேரத்தில்தான் விஜயின் யூத் திரைப்படமும் வெளிவர இருந்தது.பாபாவுக்கு போட்டியாக யூத்தினை கூட இருந்த குறிப்பிட்ட விஜய் ரசிகர் ஒப்பிட்டு விவாதித்து அந்த நொடியிலேயே விஜய் மீதிருந்த ஈடுபாடு துண்டுதுண்டாக்கியது!! பூவே உனக்காக, காதலுக்கு மரியாதை, துள்ளாத மனமும் துள்ளும், ஷாஜகான் என எனக்கு பிடித்த விஜய் படங்களையே பின்னர் பார்ப்பதற்கு சங்கடமாக இருந்தது(ஆனாலும் இப்போதும் அத்திரைப்படங்களை பார்க்கும்போது ஏதோ ஒன்று ஈர்ப்பது உண்மை). சில விஜய் ரசிகர்கள் என்னதான் விஜயை அன்று ரஜினியுடன் ஒப்பிட்டாலும் விஜய் ரஜினியை 'தலைவர்' என்று வாய்க்குவாய் சொல்லியதால் விஜய் மீது வெறுப்பு ஏற்ப்படவில்லை.

தொடந்து தன் திரைப்படங்களில் ரஜினியின் பெயரையோ, ரஜினி படப்பெயரையோ உபயோகித்து வந்ததாலும். கில்லி வெற்றி விழாவில் ரஜினி காலில் வீழ்ந்து ஆசி பெற்றதாலும்; ரஜினியும் அமிதாப்பும் என் கடவுள்கள் என்று சஞ்சிகை ஒன்றுக்கு பேட்டி கொடுத்ததாலும் சச்சின் திரைப்படம் வெளிவரும்வரை விஜய்மீது வெறுப்பை ஏற்ப்படுத்தவில்லை. ஆனால் சச்சின் திரைப்படத்தை சந்திரமுகியுடன் விஜய் வெளியிட்டதன் நோக்கம் அடிப்படை அறிவுள்ள அனைத்து சினிமா ரசிகர்களுக்குமே நன்கு தெரியும். அந்த நிகழ்வின் பின்னர் எந்த ரஜினி ரசிகனுக்கும் விஜய் மீது வெறுப்பு ஏற்ப்படுவது ஆச்சரியமல்ல!!! ஆனாலும் விழுந்தும் மீசையில் மன் ஒட்டாதவாறு விஜய் சந்திரமுகி வெற்றிவிழாவில் ரஜினியை தலைவா, தலைவா என உருகினாலும் விஜய் மீதிருந்த கோபம் குறையவில்லை.
அந்த கோபம் லயோலாக்கலூரி வாக்கெடுப்பின் பின்னைய சம்பவங்களினால் பலமடங்கு அதிகமாகி இன்று விஜயை பரம எதிரி போல் பார்க்கவைத்து விட்டது. ஆரம்பத்தில் என் மனதிற்கு பிடித்த விஜய் இப்போ ரொம்ப தூரத்தில்!! ஆனாலும் இப்பவும் தொலைக்காட்சியில் 'பூவே உனக்காக' திரைப்படம் போனால் நிச்சயம் பார்ப்பேன், விஜயையும் தாண்டி அதில் ஏதோ ஒரு பீல் கிடைக்கறது............ இந்த விடயங்களை விஜயை சிறுமைப்படுத்தும் நோக்கில் நான் கூறவில்லை; நான் பார்த்த சினிமாவில் எனக்குள் விஜயின் பயணம்தான் நான் மேற்கூறியவை.
அஜித், விக்ரம், சூர்யா, சிம்பு, தனுஷ் பற்றியும், நம்ம ஹீரோயின்ஸ் பற்றியும், இன்னபிற விடயங்களையும் அடுத்தடுத்த பதிவுகளில் பார்க்கலாம் :-)
தொடரும்............