Monday, March 2, 2020

அரசியல்வாதி ஆகுகிறார் ரஜினி....!
"கடைசீல என்னையும் அரசியல்வாதி ஆக்கீட்டீங்கல்ல" என்கிற முதல்வன் வசனம் இப்போது ரஜினிக்கு அளவெடுத்து தைத்த சட்டையாக பொருந்தி நிற்கிறது.

தனித்துவமான, நாகரீகமான, எந்த கட்சியையும் தலைவர்களையும் வசைபாடாத; தன் எண்ணம், திட்டங்களை முன்னிறுத்தி தமிழக அரசியலில் புதிய பரிமாணத்தை, அழகிய நாகரீக கலாச்சாரத்தை அரசியலில் உருவாக்குவதுதான் ரஜினியின் அரசியல் பிரவேசத்தின் முகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால்.. கட்சியை பெயரளவில் மட்டும் அறிவிக்காத; அதேநேரம் உட்கட்டமைப்பை மிகப்பலமாக கட்டமைத்த ரஜினியை நோக்கி ஏவப்பட்ட ஆயுதங்கள் கொஞ்சநஞ்சமல்ல. கடந்த 2017 டிசம்பர் 31 முதல் ரஜினி மீதான திட்டமிட்ட அரசியல் தாக்குதல்கள் இதுவரை எவரும் கண்டிராதது.

முக்கியமாக திமுக சார்ந்த ஊடகங்கள் ரஜினி பேசுவதை எல்லாம் திரித்து, மாற்றி, வேறு அர்த்தம் சொல்லி விசமப் பிரச்சாரத்தை; ஊடக அறத்தை மீறி அப்பட்டமாக அசுரத்தனமாக வெளிக்காட்டின... வெளிக்காட்டுகிறன... வெளிக்காட்டும்.

திமுக ஐடிவிங், 200 ரூபாய் டுவிட்டர் வாசிகள் என திமுகவும்; கிரிக்கெட் உலக கிண்ணப் போட்டிகளில் ஆஸ்திரேலியா, இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு போட்டியாக நேபாள அணி தன்னை நினைத்துக் கொள்வதைப்போல; தமிழக அரசியலின் நேபாள கிரிக்கெட் அணியான சீமான் கட்சியின் தம்பிகளும் 24*7 ரஜினியை தூற்றுவதும், விமர்சிப்பதும் மட்டுமே அரசியல் என்கிற அளவில் அவதூறுகளை பரப்பி வந்தனர்.. வருகின்றனர்... வருவர்.

இவர்கள் மட்டுமல்ல, திமுக எம்பி, எம்.எல்.லே, திமுக கூட்டணிக் கட்சித் தலைவர்கள் முதற்கொண்டு; திமுக ஆதரவு ஊடக நெறியாளர்கள், திமுக ஆதரவு / விலைபோன சினிமா முன்னாள் பிரபலங்கள் என ரஜினி எதிர்ப்பு உச்ச அளவில் திமுக கூடாரத்தால் நிகழ்த்தப்படுகிறது.

வாடகை பாக்கி என கதற ஆரம்பித்தவர்கள் கந்துவட்டி, வரி ஏய்ப்பு என கதறிக்கொண்டே இருக்கிறார்கள். இதில் முக்கிய வேலைத்திட்டமாக ரஜினி பாஜக எனும் சாயத்தை பூச இராப்பகலாக அந்தரப்படுகிறார்கள். ஏன் விஜய் வீட்டுக்கு வருமானத்துறையினர் வந்ததற்கு கூட ரஜினிதான் காரணம் என்பதுபோல பேசும் அளவுக்கு இவர்கள் வரட்சியும் பயமும் இவர்களை பீடித்திருக்கிறது.

இப்படி ரஜினியை கண்மூடித்தனமாக, பேடித்தனமாக தாக்கும்போதும் ரஜினி ஆரம்பத்தில் பெரிதாக கண்டுகொள்ளவில்லை. ஆனால் இவர்கள் செய்யும் அரசியல் ரஜினிக்கு ஒரு புள்ளியில் பதில் 'அரசியல்' செய்யவேண்டிய தேவையை உணரச் செய்தது.

அதுதான் துக்ளக் விழாவுவின் பின்னரான சர்ச்சை. ரஜினி ஜதார்த்தமாக துக்ளக் சோ அவர்களது வளர்ச்சி பற்றி பேசும்போது 1970 களின் ஆரம்பத்தில் 'நிகழ்ந்த' சம்பவத்தை சொல்லிப் பேச; அதற்கான எதிர்வினை மிகப் பெரியளவில் திமுகவால் மேற்கொள்ளப்பட்டது.

முரசொலி படிப்பவர்களை திமுகக்காரர்கள் என்பர்,  துக்ளக் படிப்பவர்களை அறிவாளிகள் என்பர் என ரஜினி சொன்னதை; ரஜினி துக்ளக் வாசகர்களை முட்டாள்கள் என்கிறாரா? என லாஜிக் இல்லாமல் ஆரம்பித்தவர்கள் இரண்டு நாட்கள் கழித்து ரஜினி சொன்ன 'சம்பவத்தில்' பெரியாரை தவறாக சொன்னதாக பெரிய எதிர்ப்பை கையில் எடுத்தனர்.

திகவை சிகண்டியாக்கி திமுக பின்நின்று அம்பெய்தது. பெரியார் என்கிற இமேஜை ரஜினியுடன் மோதவிட்டு ரஜினியை காலி செய்யும் திட்டம். ரஜினி மன்னிப்புக் கேட்கவேண்டும் என்கிற கோசம், போராட்டம் என காய் திட்டமிட்டு அழகாக நகர்த்தப்பட்டது.

இந்த இடத்தில்தான் ரஜினி 'அரசியல்' ஆரம்பிக்கிறது. ஆயிரம் அம்பெய்தவர்களுக்கு பதிலுக்கு முதல் அம்பை ரஜினி எய்கிறார்; "மன்னிப்பு கேட்க முடியாது" என ரஜினி சொல்கிறார். இதை திமுக கூடாரம் சற்றும் எதிர்பார்க்கவில்லை. ரஜினியின் சுபாவத்தை கணித்தவர்கள் ரஜினி இந்த விடயத்தை வளர்க்க விடாமல் "மனதை புண்படுத்தியிருந்தால் மன்னிப்பு கேட்கிறேன்" எனக் கேட்பார் என மலைபோல் நம்பிக் காத்திருந்தனர். அதைவைத்து இது பெரியார் மண், ஆன்மீக அரசியல் ரஜினி மன்னிப்பு கேட்டுச் சரணடைந்தார் என பேச, எழுத பயங்கர ஆர்வமாக இருந்தனர்.

அந்த இடத்தில் ரஜினி வைத்த திருப்புமுனை தான் "மன்னிப்பு கேட்க முடியாது" என்பது. வழமையான ரஜினியாக இருந்தால் இந்த விடயத்தை மௌனமாக கடந்து போயிருப்பார். ஆனால் இது திமுக கூடாரத்தை எரிச்சலின் உச்சத்திற்கு கொண்டு சென்றது. தொடர்ந்து நீதிமன்றம் திகவினர் ரஜினிக்கு எதிராக தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்ய; வேலு பிரபாகரன் போன்றோர் வந்து ரஜினி பெரியார் படம் வெளிவர பணம் கொடுத்த விடயங்களை சொல்லவும் திமுக சார்பில் பெரும் தோல்வியோடு, ரஜினி பக்கம் பெரும் கெத்தாக இந்த விடயம் முடிந்தது.

ரஜினியின் முதல் 'அரசியல்' - "மன்னிப்பு கேட்க முடியாது"

அடுத்த அரசியல் ரஜினியின் இறுதி பத்திரிகையாளர் சந்திப்பு. ரஜினி வழமைபோல விமான நிலையத்தில் பேட்டி கொடுத்திருக்கலாம். வீடு வந்து பின்னர் வீட்டு 'கேற்றை திறந்து" பேட்டி கொடுத்தது பக்கா 'அரசியல்'. ஸ்டாலின் அவர் "கேற்றை திறந்தால் தலைப்பு செய்தி" என விசனப்பட்டதை ரஜினி அறியாமல் இல்லை. தொடர்ந்து "ரஜினி கேற்றை திறந்து வாருங்கள்" என திமுக எம்பிக்கள்,  கூட்டணி கட்சித் தலைவர்கள் முதல்; பல திமுக சார்பான பத்திரிகையாளர்கள் வரை அழைத்ததும் ரஜினி அறியாததில்லை.

ரஜினி விமான நிலையத்தில் பேட்டி கொடுக்காமல்; வீடு வந்து திரும்ப 'கேற்றை திறந்து' பேட்டி கொடுத்தது பக்கா 'அரசியல்'.

அடுத்து ரஜினி CAA யால் இந்திய இஸ்லாமிய மக்களுக்கு பாதிப்பில்லை, அப்படி அவர்கள் பாதிக்கப்பட்டால் முதலாவது ஆளாக குரல் கொடுப்பேன் என்று கூறியிருந்தார். ஆனால் இஸ்லாமியர்கள் போராட்டம் என்கிற பெயரில் அரசியல் கட்சிகளின் தூண்டலால் வன்முறைக்கு ஆளாகியதற்கு "ரஜினி வீதிக்கு வந்து குரல் கொடுங்க"என ரஜினி சொன்னதை புரிந்தும் புரியாமல் திட்டமிட்டே ரஜினியை வம்பிழுத்த திமுக உயர்மட்டம், நடுமட்டம், அல்லக்கை எல்லாம் அலறவே வீட்டு 'கேற்றை திறந்து' விளக்கமளித்தார்.

திமுக இஸ்லாமிய வாக்கை குறிவைத்து போராட்டம் தூண்டுவது மட்டுமில்லாமல்; ரஜினியை இஸ்லாமிய எதிரியாக காண்பிக்க எடுத்த நரித்திட்டத்தை முறியடிக்கவே கடந்த இரண்டு நாட்களாக ரஜினி இஸ்லாமிய மதத் தலைவர்களை சந்தித்து அவர்களுக்கு ஆறுதலாக அக்கறையாக பேசியிருக்கிறார் என்பது கூட 'அரசியல்' தான்.

இத்தனைக்கும் இஸ்லாமிய காவலனாக காண்பிக்கும் திமுகாவில் ஓரு இஸ்லாமிய எம்.பிகூட அனுப்பவில்லை; ஆனால் ரஜினியின் பி.ஏ கூட இஸ்லாமியர்தான். கோவை குண்டு வெடிப்பு நேரம் இஸ்லாமியர்களுக்கு ஆதரவாக குரல்கொடுத்தவர் ரஜினி. இஸ்லாமிய ரசிகர்கள் ரஜினிக்கு மிக அதிகம்.

அப்படியிருக்க ரஜினியை இஸ்லாமிய எதிரியாக காண்பிக்க இருந்த திமுக திட்டத்தில் கரி பூச ரஜினி தயங்கவில்லை. 'அரசியல்' என்பது இதில் இருந்தாலும் இஸ்லாமியர்கள் மீது ரஜினி அளவுக்கு அக்கறையான பாதுகாப்பான, அவர்களை தூண்டாத, வாக்கு அரசியலுக்கு கறிவேப்பிலை ஆக்க விரும்பாத தலைமை ரஜினி தவிர வேறெந்த கட்சியுமில்லை.

இந்த 'அரசியல்' சிஸ்டம் ரஜினி அரசியல் பயணத்தில் அவர் தவிர்க்க நினைத்தது.  மக்களுக்காக நிறையவே சிஸ்டத்தை சீர் செய்ய வேண்டி இருக்கிறது. அதற்கு வெற்றியும் பதவியும் அவசியம், அத்தனை சிஸ்டத்தையும் மாற்ற வேண்டும் என்றால்; இப்போது இருக்கும் இந்த அரசியல் வெற்றிக்கு தேவையான சிஸ்டத்தை முடிந்தளவு நேர்மையாக பயன்படுத்தியே ஆக வேண்டும் என ரஜினி புரிந்துள்ளார்.

கூட்டணி, வேட்பாளர் தெரிவு, மற்ற கட்சி ஆளுமைகளை உள்வாங்கல் என இருக்கும் இந்த அரசியல் வெற்றிக்கான சிஸ்டத்தை பயன்படுத்தித்தான் வெல்ல முடியும், வெல்ல வேண்டும், அப்படியானால்தானே மற்றைய அத்தனை சிஸ்டத்தையும் மாற்றலாம். அதற்கு ரஜினி தயாராகிவிட்டார்.

ரஜினிகிட்டயே 'அரசியலா'? எப்டி எப்டி ரஜினிக்கு அரசியல் தெரியாதா? குழந்தைகளா ரஜினி 'அரசியலை' இனிமேல்தான் பார்க்கப் போகிறீர்கள், அவர் அரசியல் அனுபவம் நெட்டிசன்கள் வயது.

அவர் ஆடும்போது நீங்க வேடிக்கை பார்க்கவே டைம் சரியாக இருக்கும். வேடிக்கை மட்டும் பாருங்க...

- தொடரும்.