Sunday, August 19, 2018

இவ்ளோதானா ரஜினி, பத்தாதே..!
அனர்த்தங்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்றால்கூட சமூக வலைதள போராளிகளிடம் ஆலோசனை கேட்டு அவர்கள் சொல்லும் தொகையைத்தான் கொடுக்க வேண்டும் என்கிற நினைப்பில் இங்கு வேண்டப்படாத ஒரு மூடத்தனமான கலாச்சாரம் உருவாகி வருகிறது. அந்த கலாச்சாரம் குறிப்பிட்ட ஒருவரை நோக்கியதாக இருப்பதுதான் இங்கு வேடிக்கை.

எந்த சந்தர்ப்பம் கிடைத்தாலும், கிடைக்கா விட்டாலும் ரஜினியை ஏதாவது ஒரு வழியில் தரம் குறைத்து பொது வெளியில் விமர்சிப்பதும் காயப்படுத்துவதும் இங்கு பலருக்கும் அவசியம் ஆகிறது. அது தொழில் ரீதியான சில சக நடிகர்களின் ரசிகர்களுக்கும், அரசியல் ரீதியாக எதிர்த்தே ஆகவேண்டிய கட்டாயத்தில் கிட்டத்தட்ட அனைத்து கட்சி இணையத்தள தொண்டர்களும் கங்கணம் கட்டிக்கொண்டு அலைகிறார்கள்.

ரஜினி ஒன்றும் ஒரே நாளில் சூப்பர் ஸ்டார் ஆகவில்லை. சென்னையில் தங்க இடமின்றி, உண்ண உணவின்றி, பத்து ரூபாய் கூட பாக்கெட்டில் இல்லாமல் அலைந்திருக்கிறார். அவமானங்களும், தோல்விகளும், விரக்தியும், கஷ்டமும், வேதனையுமாக சென்னையில் சுற்றிய சிவாஜி ராவ் இன்று இந்திய சினிமா உச்சத்தை தாண்டி தமிழக அரசியலில் பெரும் சக்தியாக அத்தனை கட்சிக்கும் பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியிருக்கும் நிலை ஒன்றும் சாதாரணமாக நிகழவில்லை.

உடல் மற்றும் மன நலம் பாதிக்கப்படும் அளவுக்கு ஆரம்ப காலங்களில் 18 மணி நேரத்திற்கு மேற்பட்ட தூக்கமில்லாத கடின உழைப்பு, நேரந்தவறாமை, நேர்மை, உண்மை, சக கலைஞர்களை மதித்தல், சீனியர்களுக்கு மரியாதை, நட்புக்கு உயர்வு என ரஜினி 43 வருஷம் ஒரு நடிகனாக ஒவ்வொரு படிக்கட்டையும் கடும் முயற்சியால் வென்று வந்தவர்.

ரஜினியை தமிழக மக்கள் வாழ வைத்தார்கள் என்பது ரஜினி தமிழக மக்களுக்கு தரும் மிகப் பெரிய மரியாதை. ரஜினி போல வேறொருவர் தான் உழைத்த மண்ணின் மக்களை வாழ வைத்ததாக ஒவ்வொரு மேடையிலும் சொல்லி கேள்விப்பட்டதுண்டா?

ரஜினி படம் எனக்கு பிடித்திருந்தது, ரஜினி கரிஷ்மா என்னை கட்டிப் போட்டது, என் ரசனை ரஜினியாக இருந்தது, என் பொழுதுபோக்கு ரஜினி சினிமாவாக இருந்தது, பொழுதுபோக்காளனான ரஜினி என் மனதில் என் குடும்பத்தில் ஒருவர் எனும் எண்ணத்தை மனதில் பசுமரத்து ஆணிபோல் பதிந்ததுவிட்டடார்.

என் மகிழ்ச்சி, எனர்ஜி, கொண்டாட்டமாக ரஜினி இருந்தார்; இருக்கிறார். எனக்கு ரஜினி படம் கொண்டாட்டம், என் கொண்டாட்டத்திற்கு நான் பணம் கொடுத்து படம் பார்க்கிறேன். நான் அல்ல ரஜினி படம் பார்க்கும் அத்தனை பேரும் தம் சந்தோஷத்திற்காகவே பார்க்கிறார்கள். யாரும் ரஜினி பாவம் என்று ரஜினி படம் பார்ப்பதில்லை.

மற்ற நடிகர்கள் படங்களை விட ரஜினி படம் அதிகம் மகிழ்ச்சி கொடுப்பதாக பெரும் எண்ணிக்கையிலான மக்கள் ரஜினி படம் பார்ப்பதால் ரஜினி மார்க்கெட் உச்சத்தை எட்டுகிறது, தன் சினிமா மார்க்கெட்டுக்கு ஏற்ற ஊதியத்தை ரஜினி பெறுகிறார். இதில் எங்கே நாம் ரஜினியை வாழ வைத்தோம்?

ரஜினி உதவி செய்வது அவர் சொந்த விருப்பம். நிகழ்ந்த, நிகழும் அர்த்தங்கள் அனைத்துக்கும் நேரடியாக ரஜினி அரசிடம் தன் பங்குக்கு ஒரு தொகையை கொடுக்கிறார், முட்டாள்கள் பத்தாது என்று கதற தொடங்குவார்கள்.

அரிசின் ஊடாக மட்டும்தான் உதவி செய்ய வேண்டும் என்று இல்லை, அரசுக்கு கொடுக்கும் நிதி என்ன ஆகிறது? சரியாக மக்களுக்கு போய் சேர்கிறதா எனபது பற்றி சிந்தித்து பேசுகிறீர்களா? அரசுக்கு கொடுக்கும் நிதி என்பது ஒரு அடையாளமாக, சமூக பார்வைக்காகவே கொடுக்கப் படுகிறது. அந்த நிதி என்ன ஆகிறது என்பதை பற்றி எவரும் பேசுவதில்லை.

ரஜினி சென்னை மழை வெள்ளத்தில் அரசிற்கு கொடுத்த பணத்தை விட பலமடங்கு நேரடியாக உதவினார், பல ஊடகங்களில் செய்தி வந்தது, ரஜினியை விமர்சிக்கும் எத்தனை பேர் இந்த விடயம் பற்றி பேசி உள்ளீர்கள்? தூத்துக்குடி சய்பவத்தில் ரஜினி நேரடியாக செய்த உதவி பற்றி எத்தனை பேர் பேசினீர்கள்? ரஜினி சொன்னதை திரித்து மணல் கயிறுதானே திரித்தீர்கள்.

இன்னும் ஒரு முக்கியமான விஷயம் அரசியலுக்கு வரும் ரஜினி மக்களுக்கு அள்ளி கொடுக்க வேண்டும் என்று கருத்து கருணாநிதி சொல்கிறார்கள். இந்த எண்ணத்தை ஸ்டாட்டஜியை எம்ஜிஆர் விதைத்திருந்தார். தொடர்ந்த திமுக, அதிமுக திராவிட கட்சிகள் இலவசத்தை வைத்தே தேர்தலை எதிர்கொண்டு தமிழகத்தை சுரண்டி தின்றது.

தனிப்பட்ட உதவி என்பது அவரவர் ஆன்ம திருப்தி சார்ந்தது, கொடுப்பவருக்கு அதன் அளவு தேவை தெரியும். அடுத்தவர் உதவியை "பத்தாது, போதாது" என வெறுவாய் கொண்டு விமர்சிப்பது மனநோய், இந்த மனநோய் இணைய உலகில் பலருக்கும் உண்டு என்பது வருத்தமான விஷயம்.

அரசியல் என்பது தன் பணத்தை செலவு செய்து; அதற்கு பதிலாக மக்கள் பணத்தை கோடிக்கணக்கில் கொள்ளை இடும் வியாபாரம் இல்லை. மக்கள் பணத்தை மக்களுக்கே சரியான முறையில் செலவு செய்யும் பொறிமுறை, இதை சரியாக செய்தாலே போதும், தமிழகம் தழைத்தோங்கும். இதுதான் சரியான அரசியல் தலைமையில் செயல்முறை தேவை.

இதை நிகழ்ந்த உண்மை, நேர்மை, நம்பிக்கை உள்ள இன மத சாதி பாகுபாடில்லாத மக்களையும் தேசத்தையும் மதிக்கும் ஒரு சிறந்த தலைவன் தேவை, ரஜினி தவிர மக்கள் செல்வாக்கு உள்ள வேறு எந்த தலைவர்களும் மேற் சொன்ன தகைமையில் இல்லை என்பதை வரும் சட்ட மன்ற தேர்தலில் உணர்த்தும், அதுவரை பொறு மனமே!