Saturday, June 16, 2018

காலாவும் கலெக்ஷனும், தமிழ் சினிமா வியாபாரமும்.ரஜினி ரஞ்சித் கூட்டணியின் இரண்டாவது திரைப்படம், வழக்கமான ரஜினி படங்களுக்குரிய எதிர்பார்ப்பு காலாவுக்கு மிகக் குறைவாக இருந்தது. ப்ரோமோஷன் கபாலியோடு ஒப்பிடுகையில் மலைக்கும் மடுவுக்குமான வித்தியாசமாக இருந்தது. சமூகத் தளங்களில் தூத்துக்குடியில் ரஜினி பேசியதை திரித்து ரஜினிக்கு எதிராக பெரும் பரப்புரை நிகழ்த்தப்பட்டுக் கொண்டிருந்தது. ரஜினி அரசியலுக்கு வருவதாக அறிவித்த பிற்பாடு அரசியல் ரீதியாக ஆளும் கட்சி, எதிர்க்கட்சி, உதிரிக் கட்சி, லெட்டர்பாட் கட்சி என அனைத்துக் கட்சிகளும் பெரும் எதிர்ப்பை வெளிக்காட்டின; காலாவை தோற்கடித்து ரஜினிக்கு மக்களிடம் வரவேற்பில்லை என வெளிக்காட்ட வேண்டிய தேவையும் இருந்தது.

ஆனால் இத்தனையையும் மீறி காலா மக்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது, சிறந்த படமாக முதல்நாள் முதல் வாய்மொழி விமர்சனங்கள் கலாவுக்கு பெரும்பலமாக இருந்தது. சென்னை பாக்ஸ் ஆபீசில் காலா கலெக்ஷனில் அதகளம் பண்ணியிருக்கிறது. ஆஸ்திரேலியாவில் சாதனையை நிகழ்த்திய காலா அமெரிக்காவில் அதிகம் வசூலித்த முதல் நான்கு படங்களில் ஒன்றாக இணைந்துள்ளது (அத்தனையும் ரஜினி படங்கள்) 100 கோடிக்கு உட்பட்ட தயாரிப்பு செலவில் உருவான காலா நேரடியாக வொண்டர்பார், லைக்காவால் வெளியிடப்பட்டதால் இடைத்தரகர்கள் விநியோகிஸ்தர்கள் யாருக்கும் வழங்கப்படவில்லை.

கொமிஷன் பேஸ் அடிப்படையில் வியாபாரம் நிகழ்ந்ததால் தயாரிப்பாளர், திரையரங்கு முதற்கொண்டு கன்டீன்காரர் வரை வழமைபோல ரஜினி படமாக லாபம் கொடுத்துள்ளது. ரமலான் விடுமுறை வாரம் முடிய உலகளவில் 200 கோடிவரை காலா வசூலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதைவிட சேட்டலைட் உரிமை பெருமளவு பணத்திற்கு விற்கப்பட்டு தயாரிப்பாளர் தரப்பு காசுபார்த்துவிட்டார்கள். எப்படிப்பார்த்தாலும் காலாவால் எல்லாருக்கும் பெரும் லாபம்தான்.

ஆனாலும் இணையத்தளங்களில் ஒரு சிலர் காலா பெரியளவில் ஓடவில்லை என ரஜினிக்கு எதிரான பிரச்சாரங்களில் பூனை கண்ணைமூடி பாலைக்குடிப்பதுபோல மேற்கொண்டு இருக்கிறார்கள். இவர்களில் பெரும்விழுக்காடு திமுக, நாம்தமிழர் அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்களும்; சில விஜய் ரசிகர்களும் பெரும் முனைப்போடு ஈடுபட்டுக்கொண்டிடுக்கிறார்கள். முதற் பிரிவுக்கு அரசியல் பயமும், இரண்டாம் பிரிவுக்கு சினிமா முதலிடமும் பிரச்சினை.

தமிழ் சினிமாவின் வியாபார பாதை சிவாஜிக்கு முன்னர், சிவாஜிக்கு பின்னர் என இரண்டாக பிரிக்கலாம். அதாவது திருட்டு வீசீடி பிரச்சனை காரணமாக ஒரு திரைப்படத்தை ஒருவாரம் ஹவுஸ் புல்லாக ஓட்டுவதே பெரும் பிரச்சனையாகிய நிலையில்தான்; சிவாஜி திரைப்படம் அதிக திரையரங்கில் வெளியிடப்பட்டு வசூலை குறுகிய காலத்தில் ஈட்டும் வியாபார யுக்தியை தமிழ் சினிமாவில் வெற்றிகரமாக நிகழ்த்திக் காட்டியது. சிவாஜி 40+ திரையரங்குகளில் சென்னை செங்கல்பட்டு ஏரியாக்களில் வெளியிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து பெரிய ஹீரோக்கள் படங்கள் எல்லாம் அதிக திரையரங்கில் வெளியிடும் யுக்தியை கையாளத் தொடங்கினர்.

அதன் பின்னர் கடந்த இரண்டு மூன்று ஆண்டுகளாக ஏற்பட்டிருக்கும் பெரும் பிரச்சனை இணைய பைரஸி. இதன்மூலம் திரைப்படம் வெளியாகும் அதே நாளில் இணையத்தில் அதே திரைப்படம் வெளியிடப்படுகிறது. இது தமிழ் சினிமாவுக்கு பெரும் சவாலாக இன்றுவரையும் நிகழ்ந்து கொண்டிரு க்கிறது. உலகம் முழுவதும் ஆயிரக்கணக்கான திரையரங்குகளில் ஒரு திரைப்படம் வெளியிடப்படும்போது எங்கோ ஒரு திரையரங்க உரிமையாளரோ, ஊழியரோ இலகுவாக ஒரு திரைப்படத்தை காப்பி பண்ணி கொடுத்துவிடுவது இலகுவான காரியம். இதனை முடக்க தயாரிப்பாளர் சங்கம் எவ்வளவோ முயன்றாலும் இன்றுவரை முடியவில்லை. காலா எல்லாம் வெளியான அன்று மதியமே இலங்கையின் யாழ்ப்பாணத்திலேயே சீடிக்கடைகளில் திருட்டு காப்பி வந்துவிட்டது.

இந்த நிலையில்தான் இப்போதெல்லாம் ஒரு சினிமாவை போட்ட முதலீட்டை கரைசேர்க்க எண்ணி மிகப் பெருமளவு திரையரங்கில் வெளியிடுகிறார்கள், ஒரு வாரத்தில் வந்தால் போதுமென்ற வசூலைக் கூட இப்போது முதல் மூன்று நாட்களில் எடுத்துவிட முனைகிறார்கள். இதனால் என்ன நிகழ்கின்றது என்றால் முதல் மூண்டு நாட்களுக்கு பின்னர் பாதி திரையரங்குகள் காத்து வாங்க ஆரம்பித்து விடுகின்றன. உதாரணமாக சொல்வதென்றால் எங்கள் நகரில் ஒரு திரையில் வெளியிட்ட திரைப்படங்கள்; இப்போது மூன்று தியேட்டர்களில் ஆறு திரைகளில் வெளியிடுகிறார்கள். முதல் மூன்று நாட்களிலேயே பெரும் விழுக்காடு ரசிகர்கள் இவற்றில் பார்த்து விடுகிறார்கள். அதாவது முன்னர் 18 நாட்கள் பார்த்த எண்ணிக்கை இப்போது மூன்று நாட்களில் பார்த்துவிடுகிறார்கள்.

அதற்கு அடுத்த வார நாட்களில் படம் பெரும் விழுக்காடு விழுந்து விடுகிறது, அதன் பின்னர் திரைப்படம் நல்ல விமர்சனத்தை மக்களுக்கு கடத்தி ஆர்வத்தை தூண்டினால் மேற்சொன்ன மூன்று திரையரங்கில் சிறந்த திரையரங்கில் பார்க்கவே முனைவார்கள், இதனால் மற்றய இரு திரையரங்கமும் காற்றுவாங்க ஆரம்பித்துவிடுகிறது. இங்குதான் ஒரு படத்தினை தோல்வியாக்க வேண்டும் என்கின்ற முனைப்பில் இருக்கும் குறிப்பிட்ட திரைப்பட நடிகருக்கு எதிரானவர்கள் மற்றய திரையரங்க போட்டோக்களையும், புக்கிங் ஆகாத ஆன்லைன் ஷீட்டையும் தூக்கிக்கொண்டு படம் ஓடவில்லை என்று திரிகிறார்கள்.

இன்று காலாவுக்காக ஒரு பகுதியினர் இவ்வாறு திரிந்தால்; நாளை அவர்கள் நடிகர்களின் திரைப்படத்திற்கு இன்னும் ஓர் பகுதியினர் இதே போட்டோ, ஸ்க்ரீன் ஷாட்டை தூக்கிக்கொண்டு திரிவார்கள். இனிவரும் காலங்களில் பைரசியை தவிர்த்து; வெளியாகும் திரையரங்கங்களை குறைக்கும்வரை இதை தவிர்க்க முடியாது. இரண்டாம் வாரங்களில் எந்தப் படமாக இருந்தாலும் கணிசமான திரையரங்கை வெற்றிடங்களாக்கி, ஆன்லைன் புக்கிங்கை பச்சை வண்ணத்தில் வைத்திருந்தே தீரும். இது ஒரு திரைப்படம் வரவேற்பை பெறவில்லை என்று முடிவாகாது, அப்படிப் பார்த்தால் எந்தப் படமும் வெற்றியாகாது! அதேநேரம் இந்தமாதிரியான அதிக திரையரங்குகளில் வெளியிடும்போது கொமிஷன்பேஸ் முறையில் வெளியிட்டால் எந்த திரையரங்குகளும் நஷ்டப்பட வாய்ப்பு குறைவு. காலாவில் தயாரிப்பாளராக தனுஷ் இந்த முறையில் வியாபாரம் செய்து எவரையும் நஷடப்படுத்தாமல் எல்லோருமே கணிசமான லாபத்தைப் பார்த்திருக்கிறார்கள்.

அதே நேரம் காலவைவிட மிக அதிகம் வசூலித்த, தமிழ் சினிமாவின் அதிக வசூலைக் கொடுத்த கபாலி திரைப்படம்கூட சில இடங்களில் விநியோகிஸ்தர்களுக்கு நஷ்டத்தை கொடுத்திருக்கிறது. கபாலி மட்டும் இல்லை; ரஜினியின் எந்திரன், விஜயின் கத்தி திரைப்படம்கூட சில விநியோகிஸ்தர்களுக்கு கையைக்கடித்த திரைப்படங்கள்தான். இவை தயாரிப்பாளர் விநியோகிஸ்தர் தரப்பில் வியாபாரத்தில் ஏற்பட்ட தோல்வியே அன்றி ஒரு திரைப்படமாக இவை மூன்றும் மக்களால் பெரும் வரவேற்பு பெற்ற திரைப்படங்கள்தான்.

இதேபோல அண்மையில் பெரும் வெற்றிபெற்ற மெர்சல் திரைப்படம் 40 கோடிவரை தயாரிப்பாளர் தரப்புக்கு நஷ்டம் என்கிற பேச்சு வந்தது; கில்லி, சேது போன்ற பெரும் வெற்றி பெற்ற திரைப்படங்கள் கூட தயாரிப்பாளர்களுக்கு கையைக் கடித்த திரைப்படங்கள்தான். அவை அந்த திரைப்படங்களின் வியாபார எல்லையை தாண்டி அதிகளவில் தயாரிப்பு செலவை ஏற்படுத்திய இயக்குனர்களின் தவறு; இது ஒருபோதும் குறிப்பிட்ட திரைப்படத்தின் தோல்வியாக இருக்க முடியாது. இந்த மூன்று திரைப்படங்களும் மக்கள் கொண்டாடிய பெரும் வெற்றிப்படங்கள்தான் என்பதில் சந்தேகமில்லை.

அடுத்து மூன்று விடயங்களை பற்றி பொதுவான பார்வையில் பார்ப்போம், மூன்றுமே நிகழ்கால தமிழ் சினிமாவின் சாபக்கேடுகள்தான்.

1) பைரஸி

ஒரு திரைப்படத்தை எடுக்க பணம் மட்டுமா செலவாகிறது? மிகப் பெரும் மனித உழைப்பு, இயற்கை செயற்கை வளங்கள், வணிகம் என சினிமா என்பது விசாலமானது. ஆனால் அதனை எங்கோ இருக்கும் ஒரு சிலர் குறுக்குவழியில் சுயலாபத்திற்காக சிதைக்கிறார்கள். இது ஒரு பெரும் கொள்ளை. திரையரங்கில் கட்டணம் அதிகம், அதனால் ஆன்லைனில்/திருட்டு வீசீடியில் பார்க்கிறேன் என்பது; ஆட்டிறைச்சி விலை அதிகம் அதனால் திருடி தின்கிறேன் என்பதற்கு ஒப்பானது. என்னதான் காரணம் சொன்னாலும் பைரசியை ஏற்றுக்கொள்ளவே முடியாது. அட அதை செய்வதில் கூட சிலருக்கு என்னவொரு பெருமை? "படம் பார்க்கும்போது சத்தம் போடாம பாருங்க, கையைக் காலை ஆட்டாதீங்க, சரியா ஆன்லைன்ல தெரியுதில்லை" போன்ற புளிச்சுப்போன ஒரே வசனத்தை பெரும்பாலும் பெரிய திரைப்படங்கள் வரும் ஒவ்வொரு தடவையும் சமூகத் தளங்களில் நிலைத்தகவல்களாக காணலாம். அது பெருமை அல்ல, தாம் செய்கின்ற குற்ற உணர்வை சீர் செய்யும் கோமாளி வேடம்.

ஒரு திரைப்படத்தின் இசையமைப்பாளர், ஒளிப்பதிவாளர் சம்பளம் கோடிக்கணக்கில். எதற்காக இவ்வளவு செலவு செய்கிறார்கள்? ஒளிப்பதிவு, பின்னணி இசையின் துல்லியம், ரசிகர்கள் கொண்டாட்டம் எல்லாம் திரையரங்கு மட்டுமே தரக்கூடியது. விஸ்வரூபம் திரைப்படத்தை கமல் Dth தொழில்நுட்பத்தில் வெளியிட திட்டமிட்ட நேரத்தில் கூட இதே விமர்சனம் முன்வைக்கப்பட்டது. சரி திரையரங்கு செல்ல பணம் பிரச்சனை என்றால்; ஒரிஜினல் வெளியீடு வரும்வரை பொறுத்திருக்கவேண்டும். சினிமா ஒன்றும் பால்மா இல்லை, பிள்ளை அழுகிறது, அதனால் திருடிக் கொடுத்தேன் என சமாதானம் சொல்ல. பெரும் உழைப்பு, முதலீடு, வருமானம் உள்ள துறையை பைரஸி நாசமாக்கிறது.

இதில் நகைப்பான விடயம் என்னவென்றால் தம் ஆஸ்தான நடிகன் ;படம் வரும்போது தமிழ் ராக்கட்சை எதிர்ப்பவர்கள்; தமக்கு பிடிக்காத ஹீரோ படம் வரும்போது தமிழ் ராக்கட்ஸில் பார்ப்பேன் என சொல்வதுதான். எல்லோரும் ஒருமித்து தமிழ் ராக்கட்சை புறக்கணிப்பது என்பது சாத்தியமே இல்லாத விடயம். அதே நேரம் இவர்கள் அழிக்கப்பட வேண்டியது சினிமாவின் எதிர்காலத்துக்கு அவசியமான ஒன்று; விஷால் சொல்லிக்கொண்டே இருக்கிறார், ஆனால் எந்த முன்னேற்றமும் இதுவரை இல்லை; நிச்சயம் இதற்கான முடிவை ஏற்படுத்தியே ஆகவேண்டும்.

2) ரிவியூவெர்ஸ்.

தமிழ் சினிமாவின் நோகாமல் நோம்பு குடிக்கும் இரண்டாம் பகுதி இவர்கள். இவர்களை தங்கள் மொக்கை படத்தின் ப்ரமோஷனுக்காக பணம் கொடுத்து சில இயக்குனர்கள்/தயாரிப்பாளர்கள் ஊக்குவித்ததன் விளைவு; இன்று இவர்களுக்கு பணம் கொடுக்காவிட்டால் நல்ல சினிமாவையும் மிக கேவலமாக விமர்சித்து மக்களிடம் தவறாக கொண்டு சேர்க்கிறார்கள். பணம் கொடுத்துவிட்டால் ஆகா ஓகோ என்று புகழ்ந்து தள்ளுவார்கள். இந்த கான்சர் கட்டிகளை ஒருமித்து அனைத்து சினிமாத் தரப்பும் கை கழுவாவிட்டால் இந்த எச்சைகளுக்கு தீனிபோடுவதும் படத்தின் தயாரிப்பு செலவில் நடக்கவேண்டிய துர்ப்பாக்கிய நிலை தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாமல் போய்விடும். யூடியூப் வியூவால் வரும் பணம் போதாதென்று; இப்படி பணத்துக்காக தவறான விமர்சனம் சொல்லி தங்களை நம்பும் 'சில' அப்பாவி சப்ஸ்க்ரைபேர்ஸையும் ஏமாற்றி வயிறு வளர்க்கிறார்கள் இந்த சினிமா இடைத்தரகர்கள்.

ரசிக மனநிலைதான் இவர்களையும் வளர்த்து விடுகிறது. நீலச்சட்டை போட்ட மாறன் என்பவரைனை சினிமா ஆர்வலர்களான ஆன்லைன் பாவனையாளர்கள் அனைவரும் பெரும்பாலும் அறிந்திருப்பார்கள். அவரைனைப் பற்றிய புரிதல்கூட பெரும்பாலானவர்களுக்கு ஏற்பட்டிருக்கும். அவன் ஒரு கேவலமான மனிதர் என்பதற்கும் அப்பாற்ப்பட்ட ஒருவர் என்பதை உணர்ந்தும் தமக்கு பிடிக்காத நடிகரது படத்தை கழுவி ஊற்றும்போது அதனை ஷேர் செய்து கொண்டாடும் மனநிலைதான் அவரை எல்லாம் வயிறு வளர்க்க வைக்கிறது. இன்று கொண்டாடியவனது ஆஸ்தான நாயகன் படம் வரும்போதும் அவன் கழுவி ஊற்றிக்கொண்டுதான் இருப்பான். அப்படிக் கழுவி ஊற்றும்போது; இன்று கழுவி ஊற்றப்பட்ட நடிகனது ரசிகன் அவன் கக்கிய மலத்தை அள்ளிவைத்து அன்று ஷேர் செய்து கொண்டாடிக் கொண்டிருப்பான்.

இந்த மனநிலைதான் இந்த மலம் கக்கிகளுக்கு வயிறு வளர்க்க உதவுகிறது, இதனை உணர்ந்து அவனை (இவர்களை) புறக்கணிக்கும் வரை இந்த அயோக்கியர்கள் கல்லா கட்டிக்கொண்டே இருப்பார்கள்.

3) ட்ரக்கெர்ஸ்

இதுகூட புது வியாதிதான். டுவிட்டரில் ப்ளூ டிக் வாங்கிவைத்திருக்கும் சில ட்ரக்கெர்ஸ்தான் தமிழ் சினிமாவின் வசூல் கணக்கை தீர்மானிக்கிறார்கள். யார் இவர்கள்? இவர்களுக்கும் சினிமாவுக்கும் என்ன சம்பந்தம்? எந்த அடிப்படையில் இவர்கள் புள்ளி விபரம் சொல்கிறார்கள்? காலையில் உலகம் முழுவதும் ரிலீசான 2000 க்கும் மேற்பட்ட திரையரங்கு வசூலை எப்படி இவர்கள் மாலையில் அறிகிறார்கள்? எதன் மூலம் ட்டாக் பண்ணுகிறார்கள்? அப்படி ஒவ்வொரு திரையரங்க ரீதியாக டீட்டெயிலாக வெளியிடலாமே? அதென்ன ஒரு ட்ரக்கர் சொல்வதும் இன்னொரு ட்ரக்கர் சொல்வதும் வேறுபடுகிறது? எதையும் யாரும் ஆராய்வதில்லை; இவர்கள் சொன்னது தமக்கு சார்பாக இருந்தால் அதனை ஷேர் செய்யத் தொடங்கிவிடுவார்கள் ரசிகர்கள்.

ஒரு படத்தின் பூஜை போட்டது முதல் ட்ரக்கர்ஸ் மூலமும் ப்ரோமோஷன் நிகழும் கலாச்சாரம் இன்று ஆரம்பித்துள்ளது. படத்தின் செய்திகள், புகைப்படங்கள், ஆடியோ ரிலீஸ், விமர்சனம் என இவர்களது ப்ரோமோஷன் ஓரளவுக்கு எடுபடவும் செய்கிறது. படம் வருவதற்கு முன்னரே சென்சார் போட் ரிப்போர் பாசிட்டிவ் என ஆரம்பித்து; விமர்சனம், வசூல் ரிப்போட் என இவர்கள் ஒரு திரைப்படத்தின் ப்ரோமோஷனுக்கு உழைக்கிறார்கள். இவர்களை தயாரிப்பாளர்கள் மட்டுமன்றி நடிகர்கள் கூட தங்கள் மார்க்கெட் பிரச்சாரத்துக்கு பயன்படுத்துகிறார்கள். இவர்கள் ஒரு நடிகரை உயர்த்தியும், அவர் போட்டி நடிகரை தாழ்த்தியும் செயற்படும்போது இவர்கள் கொண்டை தெரிந்துவிடும். ஆனாலும் ரசிக மோதல்களுக்கு ப்ளூ டிக் ட்ரக்கர்ஸ் ஒரு சோஸ் என்னும் கணக்கில் பல ரசிகர்கள் இவர்கள் சொன்னதை தூக்கிப் பிடித்துக்கொள்கிறார்கள்.

சினிமாவை மக்களிடம் கொண்டு செல்ல ப்ரோமோஷன் தேவை என்பதில் மாற்றுக்கருத்தில்லை; ஆனால் அதற்கு இன்று இணைய உலகில் பயன்படுத்தும் விமர்சகர்கள், ட்ரக்கர்ஸை வளைத்துப்போட்டு செய்யும் ப்ரமோஷன் ஆரோக்கியமானதாகப் படவில்லை; அது இவர்களை பயன்படுத்த நினைக்கத்தவர்களது சினிமாவை மோசமாக காட்டி, கட்டாயப்படுத்தி தம் வலையில் விழ வைக்கும் ஆபத்தான பாதையில் கொண்டு சென்றுகொண்டிருக்கிறது.

சரியான வசூல் நிலவரங்களை தயாரிப்பாளர் திரையரங்க ரீதியில் புள்ளிவிபரங்களுடன் வெளியிடும் பட்சத்தில்தான் ஓரளவுக்கு துல்லியமான வசூல் எண்ணிக்கையை இனிமேல் கணிக்க முடியும். மற்றும்படி இவர்கள் எந்த சோஸும் இல்லாமல் சொல்லும் வேறுபட்ட குழப்பமான எண்ணிக்கைதான் இங்கு சுற்றிக்கொண்டிருக்கும். அதிக வசூல் என்று சொன்னதை ரசிகர்களும், நஷ்டம் என்று சொன்னதை எதிர் தரப்பும் காவிக்கொண்டு திரிவார்கள் . சிவாஜி திரைப்படத்திற்கு முன்னர் நாட்கணக்கில் படங்கள் ஓடும்போது வெற்றி தோல்வி தீர்மானிக்கப்பட்டது. அதுகூட பின்னாட்களில் ஒரு திரையரங்கில் வேண்டும் என்கின்ற நாட்களுக்கு ஓட்டிவிட்டு நாட்கணக்கு காட்டும் கலாச்சாரமாக மாறியது. இன்று கலெக்ஷன் அடிப்படையில் சொல்லப்படும் வசூலுக்கு எந்த ஆதாரமும் சோஸும் 50% கூட நம்பகமாக இல்லை. ஒரு குத்துமதிப்பில் பொதுவாக சொல்லிக்கொள்கிறார்கள், அதையும் இன்று இவர்கள்போல சிலர்தான் தீர்மானிக்கிறார்கள்.

தமிழ் சினிமா ஆரோக்கியமாக வளர்வதற்கு இந்த மூன்றும் ஒழிக்கப்பட வேண்டியது அவசியம்.

நன்றி

Wednesday, June 6, 2018

ரஜினிகாந்த் என்கிற அசுரபயம்...!இந்தப்பதிவில் சமூக வலைத்தளங்களில் ஊடகங்களில் ரஜினிக்கு எதிரான பயத்தை எப்படி வன்மமாக பூனை  *கண்ணை மூடிக்கொண்டு பாலைக் (*கமூபா) குடிப்பதுபோல கொட்டுகிறார்கள் என்பதனைப் பற்றி சற்று விரிவாகப் பாப்போம். 


திமுக, அதிமுக, பாமக, வி.சி, நாம் தமிழர்,மக்கள் நீதி மையம், சமத்துவக் கட்சி, இடதுசாரிகள் முதற்கொண்டு பல லெட்டர்பாட் கட்சிகள் வரை ரஜினி மீதான கண்மூடித்தனமான எதிர்ப்பு என்பது இன்று  வன்மமாக அள்ளிக்கொட்டப்படுகிறது. ரஜினியின் மீதான மக்களின் பார்வையை  அசிங்கப்படுத்திக் காட்ட;  அடிமட்டம்  வரைக்கும் கீழிறங்கி வேலை செய்யவேண்டிய தேவை இந்த அத்தனை எதிர்த் தரப்புக்கும்  இருக்கிறது.. அதிலும் குறிப்பாக திமுகவைப் பொறுத்தவரை ரஜினிக்கு எதிரான அரசியல் என்பதை எந்தளவுக்கு கீழிறங்கி செய்யலாமோ; எந்த வெட்க துக்கத்தையும் பாராமல் அந்தளவுக்கு கீழிறங்கி செய்வது என்பதில் தீவிர முடிவாக உள்ளார்கள். இதன் வெளிப்பாடுதான் நேரடியாகவும் மறைமுகமாகவும் கடந்த ஆறு மாதங்களாக எந்த பிரச்சனைகளாக இருந்தாலும் ஏதோ ஒரு வடிவத்தில் ரஜினி பெயர் சர்ச்சைகளில் விவாதங்களில்  அடிபடாமல் விடுபடுவதில்லை. 

காதல் பிரச்சனையில் காதலியை ஒருவன்  குத்தினாலும், ஒரு போலீஸ்காரன் நிறுத்தாமல் சென்ற மோட்டார் சைக்கிளை விரட்டி சென்றதில் அதில்  இருந்த பெண் விழுந்து மரணமானாலும், காட்டுது தீ பரவினாலும், காவிரிக்கு தீர்ப்பு வந்தாலும், சினிமா சங்கங்கள் ஸ்ட்ரைக் செய்தாலும், தேர்வுத் தோல்வியால் தற்கொலை நிகழ்ந்தாலும் என இந்தப் பிரச்சனையும் ரஜினியை முடிச்சுப் போடாமல், ரஜினி பற்றி விவாதிக்காமல், விமர்சிக்காமல்  முடிந்ததில்லை. திமுகாவின் மாநாடா, திகாவின் மாநாடா அங்கு ரஜினி பற்றிய எதிர்ப்பு பேச்சுதான் முன்னிலைப்படுத்தப்படுகிறது. நாம் தமிழர் கட்சியின் சீமான் இப்போதெல்லாம் மாடு மேய்ப்பதை அரச தொழிலாக்குவேன், ஒவ்வொரு வாகனத்துக்கும் ஒரு ரோட் போடுவேன் என்றெல்லாம் காமடி செய்வதில்லை; ரஜினி எதிர்ப்பை வன்மமாக கொட்டுவது மட்டும்தான் இவருக்கும், இவர் தம்பிகளுக்கு 24*7 வேலை. 

கடந்த தேர்தலுக்கு முதல் சட்டமன்ற தேர்தலில் வடிவேலை வைத்து விஜயகாந்தை சீண்டி அசிங்கப்பட்ட திமுக; நாம் முன்னர் எதிர்பார்த்தது போலவே பெரும் அளவிலான மூன்றாம்தர பிரபலங்களை ரஜினிக்கு எதிராக முன்னிறுத்தியிருக்கிறார்கள். சத்யராஜ், ராதாரவி, லியோனி, அமீர் என இன்னும் பல பெயரறியா மூன்றாம்தரமாக பேசும் முன்னாள் பிரபலங்களின் நான்காம்தர வார்த்தைகள் தலைப்புச்ச் செய்தியாகும்போது; அதில் ரஜினி என்கின்ற வார்த்தை இருந்தே தீரும்!! இல்லாவிட்டால் இவர்களும், இவர்கள் செவ்விகளும் செல்லாக்காசுகள்தான். 

ரஜினி தூத்துக்குடியில் பேசிய வீடியோக்கள் தெளிவாக கிடைக்கக் கூடியதாக இருக்கிறது. அதில் ரஜினி சொன்ன விடயங்கள் அத்தனையும் தெளிவாக உள்ளன. அப்படி இருந்தும் அந்த தூத்துக்குடி ரஜினி பேச்சை எவ்வளவு கேவலமாக தம் அரசியலுக்கு பயன்படுத்துகிறார்கள் இந்த கட்சிகளும், அவர்கள் ஆதரவாளர்களும், ரஜினி எதிர்ப்பாளர்களும்!!

தூத்துக்குடி ஸ்டெர்லைட்  போராட்டம் நிகழ்ந்த ஐம்பதாவது  நாட்களுக்குள்ளேயே அரசை விசனம் தெரிவித்து ரஜினி டுவிட்டரில் கருத்து சொல்கிறார், எந்த எதிர்ப்பாளரும் கண்டுகொள்ளவில்லை. 

துப்பாக்கி சூட்டுக்கு கடும் கண்டனத்தை தமிழக அரசுக்கு சொல்கிறார், அப்போதும் எந்த எதிர்ப்பாளரும் கண்டுகொள்ளவில்லை.

மறுநாள் போலீசிற்கு கடும் கண்டனம் தெரிவித்து வீடியோ பதிவை வெளியிட்டார், அதனையும் கண்டுகொள்ளவில்லை.  

"தூத்துக்குடி போகப் போகிறேன், ஒரு நடிகனாக என்னைக் கண்டால்  மகிழ்வார்கள்" என்று சொல்லிவிட்டு போகிறார்; படத்துக்கு ப்ரமோஷன் என கதற ஆரம்பிக்கிறார்கள். அங்கு ரஜினி நிதியுதவி ஆறுதல் சொல்லிவிட்டு வருகிறார்; இவர்களால் தாங்க முடியாமல் உள்ளது. அப்போது அங்குள்ள ஒருவர் "யார் நீங்கள்?" என ரஜினியை கேட்டதை பெரும் வைரல் ஆக்குகிறார்கள்; ஆனால் அங்குள்ள மிகுதி அதனை பேரும் பெரும் வரவேற்பு கொடுத்ததை, "நீங்கள் முதல்வராகவேண்டும்" என்று சொன்னதை இருட்டடிப்பு செய்துவிடுகிறார்கள். 

அடுத்து அங்கு ரஜினி பத்திரிகையாளர் சந்திப்புக்களை நிகழ்த்துகிறார்; அங்குதான் ரஜினிக்கு எதிரான வன்மத்தில் இருந்தவர்களுக்கு அவல்ப்பொரியாக சில வார்த்தைகள் கிடைக்கின்றது. ரஜினியின் சில வார்த்தைகளை மட்டும் பொறுக்கி வெட்டி ஒட்டி கேவலமான பொருக்கி அரசியலை இப்போதுவரை செய்துகொண்டிடுக்கிறார்கள். ரஜினி தெளிவாக "இந்த மக்கள் போராட்டம் புனிதமானது" எனச்  சொல்கிறார், "சில சமூக விரோதிகள் மக்கள் போராட்டத்தை வன்முறையைத் மாற்றி விட்டார்கள்" என்று சொல்கிறார். இதனை திமுக மற்றும் எதிர்த்தரப்பு தமக்கான ஆயுதமாக பயன்படுத்த தீர்மானிக்கிறது. "ரஜினி போராடிய மக்களை வன்முறையாளர்கள் என்கிறார்" என பூனை *கமூபா குடிப்பதுபோல; ஒரு பொய்யை திரும்ப திரும்ப சொன்னால் உண்மை ஆகிவிடும் என நினைத்துச் சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள். 

ரஜினி "மக்கள்  கூட்டத்தில் இரண்டு கறுப்பாடுகள் புகுந்து கலவரம் பண்ணிவிட்டது" என்று சொன்னால்; இவர்கள் அதனை 'மக்களை  கருப்பு ஆடுகள் என்கிறார் ரஜினி'  என்கிறார்கள்; இதுதான் திராவிட, தமிழ் தேசிய எதிர்ப்பரசியலின் உச்சக்கட்ட வரட்சி என்று சொல்லலாம். 

ரஜினி "எல்லாவற்றுக்குமே போராட்டம் என்று சொல்லிட்டு இருந்தால் யாரும் முதலீடு செய்ய வரமாட்டார்கள், தொழிவளர்ச்சி இருக்காது, விவசாயமும் அழிந்துவரும் நிலையில்; தொழில் துறையும் இல்லாவிட்டால் இளைஞர்கள் பாதிக்கப்படுவார்கள்" என்று சொன்னால் இவர்கள் "ரஜினி போராட்டமே தேவையில்லை என்கிறார். போராடுபவர்கள் சமூகவிரோதிகள் என்கிறார்" என பொருள்பட கதறிக் கதறி *கமூபா குடிக்கிறார்கள். 

'எப்பப்பாரு சாப்பாடு சாப்பாடு என்றால் உடம்பு கெட்டுப்போகும்' என்பது சாப்பிடாதே எனப் பொருள் பட்டால்;

'எப்பப்பாரு விளையாடிக்கொண்டிடுந்தால் உருப்படாமத்தான் போகப்போகிறாய்' என்பது விளையாடவே வேண்டாம் எனப் பொருள் பட்டால்;

'எப்பப்பாரு படிச்சிட்டு இருந்தால் லூசாகிடுவாய்' என்பது படிக்காதே என்பதாக பொருள் பட்டால்;

'எப்பப்பாரு வேலை  வேலைன்னு இருந்தா வாழ்க்கை சலிச்சிடும்' என்பது வேலைக்கே போகாதே எனப் பொருள் பட்டால்;

'எப்பப்பாரு  நித்திரை கொண்டால் சோம்பேறி ஆகிடுவாய்' என்பது நித்திரை கொள்ள வேண்டாம் எனப் பொருள் பட்டால்;

"எப்பப்பாரு  போராட்டம் போராட்டம் என்றிருந்தால் நாடு சுடுகாடாகிடும்" என்பது 'போராடாதே' என ரஜினி சொன்னதாகப் பொருள்படும்.

"இப்ப சொல்லுங்க ரஜினி போராடவே வேண்டாம் என்றா சொன்னார்? ரஜினி மக்களையோ சமூக  விரோதிகள், வன்முறையாளர்கள் என்று சொன்னார்? "


எதிர்த் தரப்பிற்கு ரஜினி பற்றிய எதிர்மறை விம்பத்தைதை மக்களிடம் விதைக்க வேண்டிய அவசியம் உண்டு! இல்லாவிட்டால் பெரும் கொள்ளைக்கார அரசியல்க்  கட்சிகள் மக்கள் பணத்தை ஏப்பமிட்டு இன்னமும் காலம் தள்ள முடியாத நிலை வந்துவிடும், இதனை ஒருபோதும் பணம் தின்னி திராவிட  அரசியல் காட்சிகள் இலகுவில் விட்டுத்தர முன்வராது. சாக்கடைக்குள் புரண்டேனும் ரஜினியை இல்லாமல் செய்யவேண்டிய அவசியம் இவர்கட்கு உள்ளது அவர்கள் பக்கத்து நியாயம். 

அதனால்தான்  எங்காவது ஏதாவது துரும்பு கிட்டதைத்தாலே ஊதிப் பெரிதாக்க கடும் பிரயத்தனம் மேற்கொள்கிறார்கள். ஊடகப்பலம், பணபலம் போன்றவற்றால் ரஜினிமீது அவதூறு பரப்பி மக்கள் மத்தியில் கடும் எதிர்மறை எண்ணத்தை தோற்றுவிக்க முயற்சிக்கிறார்கள். ஆனால் ரஜினி நேற்று முன்தினம் ஹைதராபாத்தில் இருந்து திரும்பி வரும்போது சொன்னதுபோல "இப்போது டெக்னோலஜி வளர்ச்சி அடைந்துள்ளது, மக்களுக்கு யூடியூப், சமூக வலைதள வீடியோக்கள் தாராளமாக கிடைக்கக் கூடியதாக உள்ளது, அவர்களுக்கு உண்மை  புரியும்" என்று சொல்லிவியிருந்தார். 

உண்மைதான் மக்களுக்கு ரஜினி சொன்னது புரிந்தது; அதனால்தான் அனைத்து போல்களிலும் (பத்தாயிரத்துக்கு மேற்பட்டவர்கள் வாக்களித்த) ரஜினி பெருமளவு ஆதரவை அவர் கருத்துக்கு சரியெனப் பெற்றிருந்தார். ஆனாலும் ஒரு ரஜினி ரசிகர் "ரஜினி தன் மீதான திட்டமிட்ட அவதூறுப் பிரச்சாரத்திற்கு பதில் சொல்லாமல்; மக்கள் புரிந்துகொள்வார்கள் என கடந்து செல்வது  தவறோ என எண்ணத்தோன்றுகிறது"  என விசனப்பட்டுக் கொண்டார். ஆனால் ரஜினி மக்களையும், கடவுளையும், உண்மையையும் அசுரத்தனமாக நம்புகிறார், அதனால்தான் தொடர்ந்து தன்மீது நிகழ்த்தப்படும் அவதூறுத் தாக்குதல்களுக்கு அமைதி காக்கிறார்.

எஸ்.வி.சேகர் பற்றிய கேள்விக்கு தனது வீட்டிற்கு முன்னால் நடைபெற்ற பத்திரிக்கையாளர்  சந்திப்பில் ரஜினி கடுமையாக  தனது எதிர்ப்பை வெளிப்படுத்தினார். அப்போது அதனை  கண்டுகொள்ளாதவர்கள்; திரும்பவும் அதே கேள்வியை இன்னுமொரு  இடத்தில் கேட்டபோது 'நோ கமெண்ட்ஸ்' என ரஜினி சொன்னதை வைத்து ரஜினி பாஜக என தொங்கிக்கொண்டு இருக்கிறார்கள். ரஜினி தமிழக  அரசை, போலீசை, ஸ்ரெர்லைட்டை  கண்டித்தபோது கவனிக்காமல் நடந்தவர்கள்; வன்முறையாளர்கள் பற்றி ரஜினி சொன்னதும் ரஜினியை  பாஜக ஆள் ஆக்கிவிடுகிறார்கள். இவர்களுக்கு ரஜினி பாஜக ஆளாக இருக்கவேண்டும் என்பதில் பெரும் அக்கறை, அதைவைத்து அரசியல் செய்யலாம் என்கிற பெரும் எதிர்பார்ப்பு. விட்டால் அவர்களே ரஜினியை கையைப்பிடித்து மோடி கையில் சேர்த்தாலும் சேர்த்து விடுவார்கள் என்கிற அளவில் அவர்களது  எதிர்பார்ப்பு, பேராசை இருக்கிறது.  

அடுத்து சமூக வலைத்தளங்களில்  ரஜினி எதிர்ப்பை பற்றி நோக்கினால் அங்கு இரண்டு விதமாக ரஜினி எதிர்ப்புக்கு கடத்தப்படுகிறது. 

1) திட்டமிட்டு பொய்யாக ரஜினி பற்றி அவதூறு  பரப்புவது/ கடுமையாக விமர்சிப்பது.
2) அதனை நம்பி காவிக்கொண்டு திரிவது. 

இவர்களில் இரண்டாவது பகுதியினரை விட்டுவிடுவோம், அவர்கள் எண்ணிக்கையில் குறைவு, மற்றும் சுய விளக்கம் இல்லாதவர்கள். இந்த முதலாம் வகைதான் பாவம், மேலே குறிப்பிட்ட *கமூபா குடிக்கும் காட்டக்கரி. பாவம் இவர்கள்  சிலகாலம் முன்னர் மட்டும் "வாடகை பாக்கி" எனக் கதறிக்கொண்டிடுந்தார்கள், இப்போது இன்னும் சிலகாலம் "சமூக விரோதிகள்" என்று கத்திக்கொண்டிடுக்கப் போகிறார்கள். 

இந்த முதலாம் வகை என்பது பெரிய நெட்வெர்க். அது மேல் மட்டம் தொடக்கம் பல படிநிலைகளில் இறங்கி கீழ்மட்டம் வரை கீழ்த்தரமாக  இயங்கிக்கொண்டிடுக்கும் ஒரு குழு. அறிவு ஜீவிகள், ஊடகவியலாரார்கள், விமர்சகர்கள் என தங்களை நம்பவைத்தவர்கள் தொடக்கம்; அதிக போலோவர்ஸ் உள்ளவர்கள், பிரபலங்கள் என இந்த லிஸ்ட் பெரியது. இதில் பல கட்சிகளும் நேரடியாக  சம்பந்தப்பட்டிருக்கு. கட்சிக்காகவும், பணத்திற்க்காகவும், பிடிப்பிற்காகவும் என  இவர்கள் கண்மூடித்தனமாக இந்த ரஜினி எதிர்ப்பை வெளிக்காட்டிக்கொண்டிடுக்கிறார்கள். இதன் மூலம் 'ரஜினி கதை சரி' என இவர்கள் தமக்குள்தாமே நினைத்துக் கொள்கிறார்கள். முட்டாள் பசங்க, "ஒருபிடி மணலை  கையில் பிடித்துக்கொண்டு கடற்கரை முழுவதும் கட்டுப்பாட்டில் என நினைக்கும்" முழு முட்டாள்கள். 

 உதாரணமாக சொல்வதானால் ரஜினி பற்றிய ஒரு செய்தி  ஒரு தொலைக்காட்சியின் டுவிட்டர் பக்கத்தில் வருகிறது என வைத்துக்கொண்டால்; அதில் கணிசமான அளவு ரிப்லே ரஜினிக்கு எதிரானதாக இருக்கும். இப்படி பல செய்தி சானல்கள், பிரபலங்கள்/ அதிக போலேவேர்ஸ் உள்ளவர்களது ரஜினி பற்றிய டுவிட்களின்  கீழே ரிப்லே என்கின்ற பெயரில் கடும் தாக்குதல் நிகழ்ந்திருக்கும். ரஜினிக்கு எதிரான டுவீட் இப்பெல்லாம் ஆயிரக்கணக்கில் ரீடுவீட் ஆகத்தொடங்கியிருக்கிறது. இதனை வைத்து பலரும் ரஜினியின் செல்வாக்கு மக்களிடம் குறைந்துக்கொண்டுபோகிறது, ரஜினி அவ்வளவுதான், ரஜினியை காலிபண்ணிவிட்டோம் என *கமூபா குடிக்கிறார்கள். ஆனால் பாருங்க ரஜினி பற்றிய செய்திகளுக்கு 30 ரிப்லே எதிராக வந்திருக்கும், அதே டுவிட்டுக்கு  ஆயிரக்கணக்கில் லைக்ஸ்  இருக்கும்; ஆனால் இந்த முப்பதும் ரஜினியின் எதிப்பை வலுவாக்க காட்டுவதான  தோற்றப்பாட்டை காட்டிக்கொள்ளும்.  

ரஜினி பற்றி எதிராக, கேவலமாக  ரிப்லே செய்தவர் ப்ரோபயிலை போய்ப் பாருங்கள்; அவர் ஏதாவது ஒரு கட்சி சார்ந்தவராகவோ, இன்னுமொரு நடிகரின் ரசிகராக ரஜினியை வெறுப்பவராகவோ; குறைந்தபட்சம் புலம்பெயர் சீமான் ஆதரவாளராகவோ (பேக் ஐடியாக இருப்பினும்) அவரை அறிந்துகொள்ளலாம். அதேபோல பிரபங்கள், டுவிட்டர் பதிவர்களின் ப்ரோபையிலையும் போய்ப்  பார்த்தால் இதே சார்பு நிலை/ ரஜினி எதிர்ப்பு  நிச்சயம் இருக்கும்.

எப்படிக் கூட்டிக்கழித்துப் பார்த்தாலும் இந்த ரிப்லே கோஷ்டியும், ரீடுவீட்  கோஷ்டியும் எண்ணிக்கையில்  5000 பேரைத்  தாண்டாது; இந்த ஐந்தாயிரமும் பொதுப் பார்வையில் உள்ளவர்கள் அல்ல; ஏதோ ஒரு கட்சி, அமைப்பு சார்ந்த/ ஆதரவானவர்கள். ஐந்தாயிரம் எங்கிருக்கு, ஐந்துகோடி வாக்காளர்கள்  எங்கிருக்கு? இவர்கள் ஒன்றும் ஐந்து கோடி மக்களின் பிரதிபலிப்பு அல்ல, ஒரு கட்சியின்/பணத்தின் பிரதிபலிப்பு! அவளவுதான். ஆனால் இவர்கள் பாவம் *கமூபா குடிக்கும் பூனைபோல ஐந்துகோடி மக்களையும்  ஏமாற்றிவிட்டதாக, வசப்படுத்தி விட்டதாகவும் கனவு காண்கிறார்கள். பாவங்கள்!!

இறுதியாக, கண்ணுங்களா எவ்வளவுதான் திரும்ப திரும்ப பொய்யை அழுத்தி கூறினாலும் அது உண்மை ஆகிடாது; அமைதியாக இருப்பதால் உண்மை செத்தும் போகாது; ரஜினி என்கின்ற விம்பம் மீதான பயம் இதையல்ல, இதைவிட இன்னும் பல மடங்கு கீழிறங்கி சாக்கடை வரை உங்களை அலச வைக்கும்; ஆனால் உண்மையே(ரஜினியே) வெல்லும். 

நன்றி.