Monday, April 9, 2018

சத்யராஜ் எனும் .......!

ஒவ்வொரு குழுமத்திலும் சில தீவிர போக்குடையவர்களுக்கு ஒரு பொதுக் குணம் இருக்கும், அது தன்னைச் சார்ந்தவன் ஒருவன் எத்தனை கேவலமான செயற்பாடு செய்தாலும்; அவனை நியாயப்படுத்துதல். கஞ்சா கடத்தினவன், திருட்டு மரம் வெட்டியவன், பட்டப்பகலில் ஆணவக்கொலை செய்தவன் என நியாயப்படுத்தல்களும் முட்டுக்கொடுத்தல்களும் உலக நியதிக்கமைய எம்மவர்க்கும் குறைவில்லை.

அப்படித்தான் சில தமிழ் பற்றாளர்கள் என்று சொல்லிக்கொள்ளும் சிலரது சத்யராஜ் மீதான தமிழன் பாசம் மெய்சிலிர்க்க வைத்தது. இங்கு சத்யராஜ் பாசத்தில் உறைந்துபோய் கிடக்கும் உறை பனிகளுக்கு தமிழ்ப்பற்று எல்லாம் வெறும் முகமூடி; அர்ஜுனனுக்கு தெரிந்த கிளியின் கழுத்தை போல ரஜினி எதிர்ப்புத்தான் ஒரே நோக்கம். இப்படியான நம் எளிய தமிழ்ப் பிள்ளைகளின் அன்புக்கும் பாசத்துக்கும் உரிய சத்யராஜ் அவர்களது தமிழ்த் தொண்டு என்ன? அது எப்படி எளிய தமிழ்ப் பிள்ளைகளை பாதித்தது?

சத்யராஜ் ஆற்றும் தமிழ்த் தொண்டு என்பது ரஜினியை எதிர்ப்பது மட்டும்தான். இரண்டு தடவைகள் ரஜினி இருக்கும் கர்நாடகத்துக்கு எதிரான மேடையில் ரஜினியை மறைமுகமாக தாக்கிப் பேசிவிட்டாராம்; இது போதாதா; ஒரு திடீர் தமிழ் பற்றாளனை எம் எளிய தமிழ் பிள்ளைகள் தூக்கிவைத்துக் கொண்டாட!! சத்யராஜ் இரண்டு தடவைகள் ரஜினி இருக்கும் மேடையில் வயிற்றெரிச்சலை கொட்டி தீர்த்தது தவிர வேறேதும் சத்யராஜ் அறச்சீற்ற வீடியோக்களும் எவரும் கண்டதில்லை. ஏனென்றால் சத்யராஜ் அவர்களுக்கு அறச்சீற்றமும் தமிழ் மக்கள்பால் பேரன்பும் என்பது; ரஜினியின் முகத்தை கண்டபின் வரும் வயிற்று ஏரிவினால் ஏற்படும் ஒரு இரசாயன மாற்றம், அவ்வளவுதான்! ஆம் ரஜினியே சத்யராஜ்சின் தமிழ் உணர்வின் மூலதனம்.

ஒகேனக்கல் பிரச்சினையில் சத்யராஜ்சின் கோர முகத்தை அத்தனை ரஜினி ரசிகர்களும், நடுநிலையானவர்களும் இலகுவில் கண்டறிந்துவிட்டார்கள். அன்று முதல்தான் பல ரஜினி எதிர்ப்பாளர்கள் எளிய தமிழ் பிள்ளை வேஷம் போட்டு சத்யராஜ்சை தமிழ்ப் போராளியாக்கி சுய இன்பம் காண்கிறார்கள். அன்றைய தினம் ரஜினி வரும்போது மக்கள் கொடுத்த உற்சாகமான வரவேற்பும், சக கலைஞர்கள் கொடுத்த வரவேற்பும் தாங்கொணா வயிற்றெரிச்சலை உண்டாக்கவே கண்மண் தெரியாமல் கதறினார் சத்யராஜ் என்கின்ற மானத்தமிழன்.

"எங்கு யார் பேரைச் சொன்னால் கைதட்டல் வரும் என்று தெரியும் என்று தெரியும், ஆனால் அவர் பெயரை சொல்லி கை தட்டல் வாங்குவதற்கு நாக்கை புடுங்கிட்டு சாகலாம்" என்று சொல்லும்போதே சத்யராஜ் அவர்களுக்கு ரஜினியின் மீதான மற்றவர்களது பிடிப்பு எத்தனைதூரம் எரிச்சலைக் கொடுத்திருந்தது என்பதை உள்ளங்கை நெல்லிக்கனியாக அறியலாம். தொடர்ந்து கர்நாடகாவை விமர்சிப்பதுபோல ரஜினியை வலிந்து சீண்டி மிகப்பெரும் சுய இன்பம் கண்டு தன் உள்ளிருந்த அத்தனை எரிச்சலையும் வார்த்தைகளில் நெருப்பாக்கி கொட்டினார்.

தொடர்ந்து பேசிய ரஜினியின் அன்றைய பேச்சில் சத்யராஜ்சின் பாதிப்பு தெரிந்தது, நிறையவே ரஜினி கோபமாகியிருந்தார், அது ரஜினியின் வார்த்தைகளில் தெரிந்தது. பதிலுக்கு அடுத்த சில நாட்களில் வெளிவந்த குசேலன் திரைப்படத்திற்கு எதிராக கர்நாடகாவில் பல கன்னட அமைப்புக்கள் கடும் போராட்டம் செய்தன. ரஜினி கன்னட திரைப்பட சேம்பருக்கு திரைப்படத்தை பிரச்சனை இன்றி வெளிவர உதவும்படி கடிதம் எழுதினார். பின்னர் கன்னட தனியார் தொலைகாட்சிக்கு ரஜினி அளித்த நேர்காணலில் கன்னட மொழியில் பேசினார். தான் உதைக்க வேண்டும் என்று பேசியது பஸ்களை உடைத்து வன்முறையில் ஈடுபட்டவர்களைத்தான், ஒட்டுமொத்த மக்களையும் இல்லை, இனிமேல் பேசும்போது வார்த்தைகளில் கவனமாக இருப்பதாகவும் கூறினார்.

எந்த இடத்திலும் மன்னிப்பு, வருத்தம் என்கின்ற வார்த்தை வெளிவரவே இல்லை. ஆனால் அன்றைய தேதியில் எப்போதாவது ரஜினி அரசியலுக்கு வந்து விடுவாரோ என 1996 முதல் பயக் கலக்கத்தில் இருந்துவரும் தமிழகத்தின் அரசியல் கட்சிகள்சார் ஊடகங்களில் ரஜினி மன்னிப்பு கேட்டார் என்கின்ற அளவில் மக்களுக்கு இந்த விடயம் எடுத்துச் செல்லப்பட்டது. ரஜினி ரசிகர்கள் மாத்திரமே தமது இயலுமான இணைய ஊடகங்கள் மூலம் வீடியோ ஆதாரத்துடன் உண்மையை சொல்லி மறுத்து வந்தன.

ஆனால் பாருங்கள் கர்மா என்பது பிரபஞ்ச உண்மை..! 2008 ஆம் ஆண்டிற்கான கர்மா சத்யராஜ்சை 2017 இல் தாக்கியது. 2008 ம் ஆண்டு வாய் நிறைய வீராப்பு பேசிய சத்யராஜ் தான் துணை நடிகராக நடித்த தெலுங்கு படம் ஒன்றின் வெளியீட்டிற்காக அதே கன்னட மக்களிடம் வீடியோவில் வருத்தம் தெரிவித்தார். ஆனால் ரஜினி மன்னிப்போ, வருத்தமோ தெரிவிக்கவில்லை. இத்தனைக்கும் ரஜினிக்கு ஆதரவாகவோ, சத்யராஜ்சை கண்டித்தோ, ரஜினியை எதிர்க்கும் கன்னட அமைப்பை எதிர்த்தோ எப்போதும் நடிகர் சங்கம் நின்றதில்லை. ஆனால் சங்கத்தின் வளர்ச்சிக்கும், சங்கத்தின், தனிப்பட்டவர்களின் அத்தனை பிரச்சினைக்கும் ரஜினி முன்னிற்க தயங்கியதில்லை.
சரி சத்யராஜ்சிற்கு ரஜினிமீது எப்போது இத்தனை எரிச்சல், வெறுப்பு வந்தது என்று குறிப்பிடும் சம்பவம் ஏதும் இல்லை. ரஜினியால் சத்யராஜ் எந்த வகையிலும் பாதிக்கப்படவும், அவமானப்படுத்தவும், காயப்படவும் இல்லை. பின்னர் ஏன் இத்தனை எரிச்சல்?

1990 களில் சத்யராஜ் ஓரிரு வெற்றிப்படங்களைக் கொடுக்க ரஜினிக்கு தீவிர எதிரான எழுத்தாளர் ஞானி சத்யராஜ்சை அடுத்த சூப்பர்ஸ்டார் இவர்தான் என சொன்னதாக சொல்லக் கேட்டிருக்கிறேன்; ஒருவேளை சத்யராஜ்சும் அதனை உண்மை என்று நம்பி பின்னர் முடியாமல் போனதால் ஏற்பட்ட தோல்வியடைந்த மனநிலையின் தாக்கமா?

இல்லையெனில் 2004 இல் மகாநடிகன் வெற்றியின் பின்னர்; பாபாவுக்கு பின் ரஜினி இல்லாத தமிழ் சினிமாவில் ரஜினியை முந்திவிட்டோம் என தப்புக்கணக்கு போட்டு தோற்ற ஏமாற்றமா?

தன் மகனை விட ரஜினியின் மருமகன் ஜெயிக்க முடியாத உயரத்திற்கு சென்றுவிட்டான் என்கின்ற எரிச்சலா?

இல்லை நானும் வில்லனாக இருந்து கதாநாயகனாக வளர்ந்தவன், ரஜினியும் அப்படித்தான் என்கின்ற ஏதேனும் போட்டி மனப்பான்மையின் தோல்வியா? (இத்தனைக்கும் ஆரம்பத்தில் சத்யராஜ் வில்லனுக்கு அடியாள், ரஜினி முழுமையான நெகட்டிவ் ரோல்)

இதெல்லாம் தாண்டி எம்.ஜி.ஆர் தீவிர ரசிக மனநிலையா? அதாவது ஒரு ரஜினி ரசிகருக்கு விஜய்யும், விஜய் ரசிகருக்கு சிவாவும் தம் நாயகர்களை முந்திப்போகக்கூடாது என்கின்ற ரசிக நிலைபோல. எம்.ஜி.ஆர் இருந்த முதலமைச்சர் நாற்காலிலயில் ரஜினி இருந்துவிடக்கூடாதென்கின்ற மனநிலையா?

ரஜினியின் வளர்ச்சி, பணம், புகழ், மரியாதை, ஊடக முன்னுரிமை, மக்கள் அபரிமித வரவேற்பில் காழ்ப்புணர்ச்சியா?

இல்லை; இது தமிழன், தமிழ் மக்கள் மேலுள்ள பற்று என்று தயவுசெய்து ரஜினி எதிர்ப்பாளர்கள் வராதீர்கள். ஈமு கோழி விளம்பரத்தில் மக்களை முட்டாள் ஆக்கிய பின்பும், இன்னமும் கிடைக்கும் அத்தனை விளம்பரங்களிலும் காசு பார்க்கும் சத்யராஜ்; மக்களுக்காக தன் சொந்த தாக்கத்தை செலுத்தக் கூடாது என விளம்பரங்களில் நடிக்காமல் கோடிக்கணக்கான வருமானத்தை உதறிய ரஜினியை விடவா மக்கள் அக்கறையாளன்? எதிர்ப்பாளர்கள் இப்படிச் சொல்லாதீர்கள், யாரும் நம்ப மாட்டார்கள், வேண்டுமானால் அப்படி சொல்லி சுய இன்பம் கண்டுகொள்ளுங்கள்.

சரி இந்த ரஜினி எதிர்ப்பு எப்போதிருந்து சத்யராஜ்சால் முன்வைக்கப்படுகிறது? சரியாக தெரியாது, ஆனால் மகாநடிகன் திரைப்படத்திற்கும் அதன் வெற்றியை தொடந்தும் சத்யராஜ் இலைமறை காயாகவும் நேரடியாகவும் ரஜினி எதிர்ப்பை அரங்கேற்றிக் கொண்டுதான் இருக்கிறார். சக்தி சிதம்பரத்துடன் சேர்ந்து மல்லாக்க படுத்து எச்சில் உமிழும் சில படங்களை; நடிகன் ரஜினியை கிண்டல் செய்வதாக எண்ணி தன்னையும் சேர்த்து அனைத்து நடிகர்களையும் சேறு பூசி நடித்திருப்பார். அவற்றில் குறிப்பாக ரஜினியை டாக்கட் பண்ணியே முக்கிய காட்சிகள், வசனங்கள் இருந்திருந்தன.

தொடர்ந்து திடீர் விஜய் ரசிகராகினார் சத்யராஜ். விஜயின் முன்னைய எந்த விழாக்களிலும் காணவே கிடைக்காத சத்யராஜ் தனது சினிமா வாழ்க்கை முடிந்தது எனும் தருவாயில், ரஜினியின் குசேலன் தோல்வியை அடுத்து ஏற்பட்ட சிறு இடைவெளியில் தீவிர விஜய் ரசிகராக புது அரிதாரம் இட்டார். ரஜினி ரசிகராக இருந்து வந்த விஜயின் செயற்பாட்டில் எம்.ஜி.ஆர் எனும் மாற்றத்தைக் கொண்டுவந்ததன் பின்னணியில் சத்யராஜ்சின் விஜய் மீதான திடீர் ஈடுபாடு பெரும் தாக்கம் செலுத்தியிருந்தது.

குசேலன் தோல்வியை அடுத்து வெளிவந்த விஜய் படமான வில்லு திரைப்படத்தில் 'வாழ்ந்தவர் கோடி மறைந்தவர் கோடி' எனும் எம்.ஜி.ஆர் பாடலை பின்னணியில் ஒலிக்கவிட்டே டைட்டில் காட்டுடன் திரைப்படம் ஆரம்பமானது. திரைப்படத்திலும் எம்.ஜிஆருக்கு அடுத்தது விஜய் போன்ற காட்சிகளும் இடம்பெற்றன. அந்த நேரத்து சத்யராஜ்சின் நேர்காணல்களில் குழந்தைகளுக்கு எம்ஜிஆருக்கு பின்னர் பிடித்த ஹீரோ, மக்கள் மனதை எம்ஜிஆருக்கு பின்னர் ஆக்கிரமித்த ஹீரோ என விஜய் முன்னிறுத்தல்கள்; வலிந்து ரஜினியை ஒதுக்கியே நிகழ்த்தப்பட்டிருக்கும்.

விஜயின் மக்கள் இயக்கம் கொடி வெளியீட்டு நிகழ்வுவரை சத்யராஜ் விஜய்க்கு பின் பக்கபலமாக இருந்தார். இன்று கமல் கட்சி தொடங்கினால் ரஜினி கட்சி தொடங்க மாட்டார் என சிலர் தப்புக்கணக்கு போட்டது போல; விஜய் அரசியலுக்கு வந்தால் ரஜினி வரமாட்டார் என்கின்ற எண்ணத்தின் வெளிப்பாடாகவே அன்று அது நோக்கப்பட்டது. தன்னால் முடியாததை விஜயின் முதுகுக்கு பின்னால் நின்று நிகழ்த்த சத்யராஜ் விரும்பினார், ஆரம்பத்தில் விஜய் சற்று சத்யராஜ் பக்கம் சாய்ந்தாலும்; சுதாகரித்து மீண்டுவிட்டார். சத்யராஜ்சின் ரஜினி விம்பத்தை உடைத்தல், அரசியலில் வெற்றிபெற்ற விடக்கூடாது போன்ற மாஸ்டர் பிளான்கள் தோல்வியில் முடிந்தது; இனிமேலும் அப்படித்தான்.

அடுத்து இயக்குனர் ஷங்கர் அவர்கள் சிவாஜி திரைப்படத்தில் வில்லன் பாத்திரத்திற்கு பெரும் தொகைக்கு நடிக்கக் கேட்டபோது; பதிலுக்கு ரஜினி என் படத்தில் வில்லனாக நடிப்பாரா? என கேட்டவர்தான் சத்யராஜ். இத்தனைக்கும் ரஜினியின் மார்க்கெட்டில் நூற்றில் ஒன்றுகூட இல்லாத சத்யராஜ்; அதன் பின்னர் வில்லன், குணச்சித்திரம் என்று வேறு திரைப்படங்களில் மொழி வேறுபாடில்லாமல் நடித்திருந்தார். அத்தனை ரோசக்காற கதாநாயகன் சத்யராஜ்தான் பாகுபலியில் தன்னைவிட வயதில் மிகவும் குறைந்த பிரபாஸின் காலை தன் தலையில் தூக்கி வைத்து நடித்திருந்தார். சினிமாவுக்காகத்தானே என்று கடந்து விடாதீர்கள், சிவாஜியில் நடிக்கவும் ஷங்கர் சினிமாவுக்காகத்தான் கேட்டார்கள். ஜோசித்து பாருங்கள் சுமன் இடத்தில் சத்யராஜ் இருந்திருந்தால் இன்னமும் எவ்வளவு பவர்புல்லா அந்த பாத்திரம் இருந்திருக்கும்? சத்யராஜ்சால் முடியவில்லை; ஈகோ, எரிச்சல், பொறாமை!!

அண்மையில்கூட "நடிகர்களுக்கு எல்லாம் தெரியும் என்று நினைக்கக்கூடாது" என்று எங்கோ மைக்கை கண்டதும் சொன்னார், இதை சொன்ன சத்யராஜ்கூட நடிகர்தான், ஆக அவர் சொன்னதைக்கூட நடிகர் ஒன்றும் தெரியாமல் சொன்னதாக விட்டுவிடலாம் என பலரும் கடந்துவிட்டார்கள். சிலர் உங்கள் குரு எம்.ஜி.யார்கூட நடிகர்தான் என கவுண்டர் அடித்தனர். இறுதியாக நேற்று காவேரி மௌன போராட்டத்தில் ரஜினிமீது இருந்த எரிச்சல், கோபம், ரஜினி அங்கு வந்ததும் கிடைத்த வரவேற்பு என்பன மௌன போராட்டத்திலும் சத்யராஜ் வயிற்றை கிண்டியே விட்டது. ஆற்றாக் கொடுமையில் மைக்கை புடுங்கி சம்பந்தம் சம்பந்தமில்லாமல் கார்கிலில் சிவனேன்னு நிற்கும் ராணுவத்துக்கே சவால் விட்டு விட்டார்.

ஆனால் அவரால் மீண்டும் ஒரு ஒகேனக்கல் போராட்ட சர்ச்சையை போல துளியளவேனும் உருவாக்க முடியவில்லை. தன் அழுத்தத்தை எரிச்சலை வேண்டுமானால் போக்கியிருக்கலாம். அந்த கதறல் அவரது எரிச்சலை மட்டுமல்ல சில ரஜினி எதிர்ப்பாளர்களுக்கு ஜெலுசிலாக அமைந்தது. புள் மீல்ஸ் இல்லாவிட்டாலும் ஒரு டிபன் என்கிற அளவில் சாணியை தொட்டு நக்கி வருகிறார்கள் சில ரஜினி பேரை கேட்டாலே வயிறு வாய்க்கால் எரிந்து கருகுவோர் மற்றும் அரசியல் எதிரிகள்.

சந்திரனை பார்த்து நாய் குரைத்தாலே ஒன்றும் ஆகப்போறதில்லை; இது நாய் வாலில் இருக்கும் உண்ணி, இது கதறியா சந்திரன் தேயப்போகிறது? சென்ற பதிவில் குறிப்பிட்டது போல ரஜினி அரசியலுக்கு எதிராக பிரச்சாரத்திற்கு எதிர்க்கட்ச்சிகள் நிச்சயம் சத்யராஜ் அவர்களை பயன்படுத்திக் கொள்ளும், அவரும் முடிந்தளவு நேரடியான எதிர் கருத்துக்களை அள்ளியள்ளி வீசுவார், அதனால் ரஜினிக்கு கணிசமான மேலதிக வாக்குகள் நடுநிலையாளர்களிடம் இருந்து கிடைக்கும். எதிர்ப்பே மூலதனம், தலைவர் வாக்கு பொய்க்காது.

நன்றி, வணக்கம்1 வாசகர் எண்ணங்கள்:

அ.ஜீவதர்ஷன் said...

கிரி has left a new comment on your post " சத்யராஜ் எனும் .......! ":
செமையா எழுதி இருக்கீங்க.. பல சம்பவங்கள் குறிப்பிட்டு இருக்கீங்க.. நல்லவேளை இவையெல்லாம் எனக்கும் நினைவு இருக்கு :-)
சத்யராஜ் இது போல செய்ய காரணம் பொறாமை, வயித்தெரிச்சல் மட்டுமே இருக்க முடியும்.
வேறு ஒன்றும் தெரியவில்லை.


Posted by கிரி to எப்பூடி..... at April 12, 2018 at 3:49 PM

.........

தவறுதலாக டிலீட் ஆகிவிட்டது, ஆதலால் மெயிலில் இருந்து கொப்பி பண்ணி போடுகிறேன், மன்னிக்கவும் @கிரி ப்ரோ 🙏🙏🙏🙏

Post a Comment

"கருத்துக்கள், நிறைகுறைகள், திட்டுக்கள், பாராட்டுக்கள் போன்றவற்றை கூற விரும்புபவர்கள் கீழுள்ள பின்னூட்ட பெட்டியில் பின்னூட்டலாம்; பதிவுகளை வாசிக்காமல் இடப்படும் டெம்பிளேட் பின்னூட்டங்கள் வேண்டாம் நண்பர்களே."

*******************

வடை, வாழைப்பழம், சூப்பர், கலக்கல் என மொய் வைக்க வரும் நண்பர்களுக்கு; நான் யாருக்கும் பதிலுக்கு மொய் வைக்க மாட்டேன்.(இதனால் ஏற்ப்படும் தர்ம சங்கடத்திற்கு வருந்துகின்றேன்)