Wednesday, March 25, 2015

கிரிக்கட்டும் காழ்ப்புணர்வும்!!
ஆங்கில ஏகாதிபத்தியம் வஞ்சகமில்லாமல் தான் அத்துமீறிய அத்தனை நாட்டுக்கும் விட்டு விட்டுப்போன சமத்துவம் கிரிக்கட்!  ஆங்கில ஆதிக்கம் தொடரும், ஆங்கில வம்சாவளிகள் வாழும்  நாடுகளில் கிரிக்கட் இன்னமும் கௌரவமாக பார்க்கப்படுகின்றது, ஆனால் ஆசியாவை பொறுத்தவரை  கௌரவம் என்பதற்கு மேலே போய் உணர்வாக பார்க்கப்படுகின்றது. எதிர் நாட்டுடன் நடக்கும் கிரிக்கட் போட்டியை இரு நாடுகளுக்கிடையிலான யுத்தமாகப் பார்க்கும் மனநிலை பலருக்கும் உண்டு! பலருக்கு தேசப்பற்று எப்பொழுதாவது  ஞாபகப்படுத்தப்படுவது கிரிக்கட்டால்தான். கிரிக்கட்டை பொழுதுபோக்கு, யுத்த மனநிலை, தேசப்பற்று என்பதையும் தாண்டி அதனுள் ஒன்றித்து அதன் அழகியலையும் நுட்பங்களையும் அக்குவேறு ஆணிவேறாக  ரசிக்கும் கிரிக்கட் காதலர்களும் உண்டு! துரதிஸ்ரம் என்னவென்றால்  இன்றைய இணையமும் சமூகத்தளங்களும் கிரிக்கட்டை  யுத்த   மனநிலையில்  சிந்திக்கவும், உறவுகளுக்குள் விரிசல் விழும் அளவுக்கு  கருத்து தெரிவிக்கவும்  வழிகோலியுள்ளன!  இந்த கிரிக்கட் யுத்தம் தவறான வழியில் எதிர்கால ரசிகர்களை  கொண்டு செல்லப்போகின்றது!

ஆசியக் கிரிக்கட் ரசிகர்களை எடுத்துக்கொண்டால்; மூன்று பிரிவாக பிரித்து நோக்கலாம்; 1) கிரிக்கட்டை ஆழமாக நேசித்து ரசிப்பவர்கள்... 2) கிரிக்கட்டை மேம்போக்காக ரசிப்பவர்கள்.... 3) நானும் கிரிக்கட் பார்க்கிறேன் என்று ரசிப்பவர்கள்.  இங்கு முதலாமவர்களில் அவர்களது நேசிப்புக்கான காரணம் கிரிக்கட் மட்டுமே! அவர்களது கிரிக்கட்டின் மீதான பார்வைகள், விருப்பு வெறுப்புகள் கிரிக்கட் சார்ந்துதான் இருக்கும். தங்களுக்கு பிடித்த அணி தான்; பிடிக்காத அணியை இவர்களுக்கு  நிர்ணயிக்கும். ஒரு வெற்றியின் உச்ச மகிழ்ச்சியையும், தோல்வியின் உச்ச கவலையையும் இவர்களால்தான் உணரமுடியும். வேலை, படிப்பு, அலுவல்கள் என கிரிக்கட் போட்டிக்காக தமது அன்றாட வேலைகளை இரண்டாம் பட்சமாக ஒதுக்கிவிட்டு தொலைக்காட்சி/வானொலிக்கு முன்னால்  தவமிருப்பவர்கள் இவர்கள். இந்த வகையிலான ரசிகர்கள் அருகிக்கொண்டு வருகிறார்கள்!  பொழுதுபோக்கிற்கான  தெரிவுகள் இப்போது எக்கச்சக்கமாக உள்ளது; ஒரு பொழுதுபோக்கு விடயத்தில் முழுமையாக ஈடுபடும் அளவிற்கு வாழ்க்கை வேகம் விட்டுக்கொடுக்கும் நிலை இன்றில்லை! இது கிரிக்கட்டுக்கு  மட்டும் என்றில்லை; ஏனைய  விளையாட்டுகளுக்கும், சினிமா, பாடல்கள், கவிதை என சில தசாப்தங்களுக்கு முன்னர் மிகப்பெரும் பொழுது போக்குகளாக, நுண்ணறிவுடன் நோக்கப்பட்ட பல அம்சங்களுக்கும்  பொருந்தும். 

அடுத்து மேம்போக்காக கிரிக்கட் பார்ப்பவர்கள், நேரம் கிடைக்கும்பொழுது கிரிக்கட் பார்க்கும் இவர்கள் பெரிதாக அலட்டிக்கொள்வதில்லை. இவர்களில்  பெரும்பாலானவர்களுக்கு கிரிக்கட்  பொழுதுபோக்கு மட்டும்தான், இவர்கள் தானுண்டு தம் வேலையுண்டு வகையறாக்கள். மூன்றாவது வகையினர்தான் திடீர் கிரிக்கட் ஆர்வலர்கள், இவர்களுக்கு சாதாரண தொடர்கள் எங்கு, எப்போது  நடக்கிறது எதுவுமே தெரிவதில்லை. ஆனால் உலகக் கிண்ணம், சாம்பியன் லீக்,  ஆசியக் கிண்ணம், ஐ.பி.எல் போன்ற பரபரப்பாக பேசப்படும் தொடர்களுக்கு மட்டும் ஆஜராவார்கள். இலங்கை மற்றும் தமிழகத்தைப் பொறுத்தவரை;  குறிப்பாக இலங்கை அணிக்கு  அரசியல் சார்பு எதிர்ப்பை பதிபவர்கள் இவர்கள்தான்.  இவர்களில் பலருக்கு அடிப்படை கிரிக்கட்டே தெரியாது என்பதுதான் உண்மை. தாங்களும் தேசியப்பற்று உள்ளதை வெளிக்காட்டுகிறேன் என்று  கிளம்பும் இந்த அரைகுறைகள் கிரிக்கட்டின் சாபம்! இவர்களுக்கு கிரிக்கட்டும் அரைகுறை, தேசியமும் அரைகுறை!

இவர்களைவிட இன்னுமொரு பிரிவினர் இருக்கின்றார்கள், இவர்கள் ஒப்பீட்டளவில் எண்ணிக்கையில் குறைவாக இருப்பினும்; மிகுந்த ஆபத்தானவர்கள். தமக்குத் தெரிந்த அரைகுறை  கிரிக்கட்டை; எழுத்துமூலம்  மேற்சொன்ன இரண்டாம் மூன்றாம் வகையறா ரசிகர்களுக்குள் திணித்து  தங்கள் காழ்ப்புணர்ச்சிகளை இவர்கள் தீர்த்துக் கொள்கின்றார்கள்!இங்கு ரசிகர்களின் ரசனை என்பது போட்டி என்பதையும் தாண்டி; பொறாமையைக் கடந்து  காழ்ப்புணர்ச்சியாக  வெளிப்படும் சம்பவங்களும், சந்தர்ப்பங்களும் சமூக தளங்களில் அதிகரித்துக் கொண்டிருக்கின்றது. இதற்கு அண்மையில் தமிழகத்தில் இருந்து  எழுதப்பட்ட ஒரு அரைவேக்காட்டுத்தனமான வினையூக்கியின் குப்பை ஒரு உதாரணம். இதனை ஒரு வெறும் பதிவாக எடுத்துக்கொள்ள முடியவில்லை; காரணம், அந்த வக்கிரத்தை ஏற்றுக் கொண்ட பல இந்திய தமிழர்கள்; அதனை பகிர்ந்து தங்கள் காழ்ப்புணர்ச்சியை  இலங்கைக் கிரிக்கட் மீதும், இலங்கை கிரிக்கட் தமிழ் ரசிகர்கள் மீதும்  காட்டியிருந்தனர். (இணைப்பு - வினையூக்கி)இலங்கை அணியையும், அதை ரசிக்கும் இலங்கை தமிழர்களையும் குறிவைத்து புனையப்பட்ட  ஒரு மூன்றாம்தர புனைவுதான் அங்கு வெளிப்பட்டது.  அத்துடன் மேலும் இலங்கை தமிழர்களை பாகம் பிரித்து கேவலம் செய்த பெருமையும் இவர்கட்கு சேரும். இங்குள்ள மக்களின் நிலை,  மனங்கள், அனுபவங்கள், எதிர்பார்ப்புக்கள், எதையும்  அறியாமல், உணராமல்; மேம்போக்கா ஒரு ட்ரீசர் பார்த்து விமர்சனம் சொல்லும் அரைகுறை சினிமா ரசிகனின் மனநிலையில் இவர்களது கருத்துக்கள் இருந்தது! இவர்களைச் சொல்லிக்  குற்றமில்லை, அவர்களை ஒரு வட்டத்துள் வைத்தே  சிந்திக்க வைக்கும்  ஊடகங்களும், அவர்கள் பின்பற்றும்; இலங்கை தமிழரை வைத்து பிழைக்கும் அரசியல் தலைமைகளும்  இருக்கும் மட்டும் அவர்களது சிந்தனை வெளிப்பாடு இப்படித்தானிருக்கும்!!

மனதில் பதிலிருந்தும் அதை வெளிப்படுத்த சந்தர்ப்பம் கிடைக்காத என் சக கிரிக்கட் ரசிகர்களுக்காக அங்கு கொட்டப்பட்ட கருத்துக் குப்பைகளில் சிலவற்றிற்கு பதில் அவசியமானது!. ஜெயவர்த்தன, சங்கக்கார  இருவரும் அதிககாலம் விளையாடியதால்தான் புள்ளிவிபரங்களில் முன்னிற்கின்றார்கள் என்கின்ற அபத்தமான வாதம் நகைப்பிற்குரியது. சச்சின், டிராவிட், கங்குலி, கும்ளே, இன்சமாம், வசீம், அரவிந்த, முரளி, வாஸ், சனத், மக்ரா, பொண்டிங், வோன், கலிஸ், லாரா என ஜாம்பவான்கள் அனைவரும் 36 வயது கடந்து விளையாடியவர்கள்தான். மேற்சொன்னவர்களில் மக்ரா, வோன் தவிர்த்து வேறு எவரும் மகேல, சங்கா போல நல்ல நிலையில் ஆடிக்கொண்டிருக்கும்போது ஓய்வு பெறவில்லை என்பதும் இங்கு கவனிக்கப் படவேண்டிய விடயம். எப்போது ஓய்வு பெறுவார்கள் என்னும் நிலையிலிருந்த  ஜாம்பவான்களை  பார்த்திருப்போம், போ என்றும் போகாமல் ஒட்டிக்கொண்டிருந்த ஜம்பவான்களையும்  பார்த்திருப்போம், ஆனால் அணித்தலைவர் உட்பட  அந்த நாட்டு ரசிகர்களே முட்டிக்காலிட்டு ஓய்வை தள்ளிப்போட சொல்லி  இறைஞ்சிய சம்பவம் சங்காவுக்கு மட்டுமே  நிகழ்ந்தது.  

சங்காவும் மகேலாவும் ஜாம்பவான்கள் என்றால்; எது ஏன்  இவர்களுக்கு எரிகிறது?  சச்சின், டிராவிட், கங்குலி, கும்ளே தவிர்த்து வேறு எவரையும்  ஜாம்பவான்களாக ஏற்றுக்கொள்ளும் அளவுக்கு அவர்களுக்கு மனம் இடம் இடம் கொடுக்கவில்லை; அந்தளவு குறுகிய மனப்பான்மையில், குறுகிய வட்டத்தில் அவர்களை 'மொக்கா மொக்கா' போன்ற ஊடகங்கள் தள்ளிவிட்டிருக்கின்றன!  ஜாம்பவான்கள் என்றால் எந்த வரையறைக்குள் உள்ளடக்கப் படுகின்றார்கள்? குறித்த  நாட்டில் பிறந்தவர்கள்தான் ஜாம்பவான்களாக  இருக்க முடியும் என்றில்லை, அல்லது  பெரிய நாடுகளுக்கு ஆடியவர்கள்தான் ஜாம்பவான்களாக இருக்கவேண்டும் என்றில்லை; ஒரு நாட்டுக் கிரிக்கட்டை  தங்களது திறனால் நீண்டகாலத்துக்கு போராடி  உயர்த்தியவர்கள், தாங்கியவர்கள் அனைவரும் ஜாம்பவான்கள்தான்! அந்தவகையில் சிம்பாவேயின் அன்டி  பிளவரும், ஹீத் ஸ்றீக்கும்  கூடத்தான்  ஜாம்பவான்கள்.  மகேலாவும்  சங்காவும்  ஜாம்பவாங்களா? 100 சதவிகிதம் சந்தேகமே இல்லாமல்.....

மகேலா -  19 வயதில் இலங்கையின் எதிர்காலமாக அணியில்  நுழைந்தவர். அர்ஜுன, அரவிந்த என்கின்ற இரு பெரும் நட்சத்திரங்களும்  இலங்கை அணியினை விட்டு செல்லும்போது அன்றைய இலங்கையின் எதிர்கால நம்பிக்கையாய் இலங்கை ரசிகர்களால் உணரப்பட்டவர். பின்னர் சனத், முரளி, வாஸ் என ஒவ்வொரு ஜாம்பவான்களும் செல்லும்போதும் இலங்கையை  தனது தலைமையிலும், துடுப்பாட்டத்திலும் தாங்கிப்பிடித்தவர். கிரிக்கட் வரலாற்றில் அத்தனை ஷொட்களையும் நேர்த்தியாக, அழகாக ஆடும் மிகச்சில வீரர்களில் ஒருவர். Cover Drive, Late Cut, Inside Out போன்ற மகேலாவின் Trade  mark short கள் இளைஞர்களுக்கான பாடம்!   தொடர்ச்சியான பெறுபேறுகள் மகேலாவிடம் இல்லாவிட்டாலும் முக்கிய போட்டிகளில் பொறுப்பை கையிலெடுத்து இலங்கைக்கு பல வெற்றிகளை  பெற்றுக்கொடுத்தவர். இரு தசாப்தங்களாக இலங்கை ரசிகர்கள் ஒவ்வொருவரும் எதிர்பார்த்த, உச்சரித்த பெயர் மகேலா! (மகெல  பற்றி மேலும் )

சங்கா - இன்றைய இலங்கையின் ஒவ்வொரு இளம் வீரர்களின் கனவு நாயகன்.  23 வயதில்தான் சங்காவுக்கு சர்வதேச அறிமுகம் கிடைத்தது; அன்றிலிருந்து ஓய்வுபெறும் இறுதிப்போட்டிவரை தனது துடுப்பாட்ட திறனை ஆர்முடுகளில் அதிகரிக்க செய்தவர். கிரிக்கட்டின்  கடும் உழைப்பாளி! சச்சின், திராவிட்,  அரவிந்த, மகேல, லாரா, இன்சமாம், பொண்டிங், கலிஸ் போன்ற ஜாம்பவான்களைப் பார்த்திருப்போம், இவர்கள் அனைவரும் Born cricketers!!  ஆனால் சங்கக்கார ஒரு Born cricketer அல்ல! சங்கக்கார தன்னை தனது பயிற்சியினால் தினம் தினம் செதுக்கியவர், ஒவ்வொரு ஆண்டும் தனது திறனை ஆர்முடுக்கியவர்!  தனது முயற்சியால், புத்திசாலித்தனத்தால், கடின உழைப்பால் தன்னை சச்சின், பிரட்மன்  போன்ற உச்ச வீரர்களுடன் ஒப்பீடு செய்யும் அளவுக்கு தன்னை வளர்த்தவர். அந்தவகையில் மேற்சொன்ன பெயர்களைவிட   சங்கக்கார ஒருபடி மேலே உயர்ந்து நிற்கிறார். 14 ஆண்டுகளாக இலங்கையின் வெற்றிக்கு காரணமான, சர்வதேசக் கிரிக்கட்டில் தவிர்க்கமுடியாத மிகப்பெரும் சக்தி சங்கக்கார!   சங்கக்கார, மகெலாவை  ஜாம்பவான் இல்லை என்று ஒருவர் சொன்னால்;  அது சொல்பவரது கிரிக்கட் பற்றிய புரிதலின் பூச்சிய வெளிப்பாடு! 


அடுத்து இலங்கை ரசிகர்களை  சீண்டிய மற்றுமொரு விடயம்; மது, மாதுக்களை வைத்து  இலங்கை டெஸ்ட் அந்தஸ்தை  பெற்றுக்கொண்டது என்பதுதான். கற்பனையான அபத்தத்தின் உச்சம்!  இலங்கைக்கு டெஸ்ட் அந்தஸ்து ஒன்றும் சும்மா கொடுக்கவில்லை. 1979 உலக கிண்ணத்தில் அனைத்துப் போட்டிகளிலும் தோற்ற இந்தியாவை இலங்கையும் தோற்கடித்திருந்தது. அடுத்து இலங்கையில் இங்கிலாந்துடனான  தொடரை சமன் செய்திருந்தது (1:1), பாகிஸ்தானுடன் 3 போட்டிகள் கொண்ட தொடரில் ஒரு போட்டியில் வெற்றி பெற்றிருந்தது. இதையடுத்தே 1982 ஆம் ஆண்டு இலங்கைக்கு டெஸ்ட் அந்தஸ்து கிடைக்கப்பெற்றது, அதேயாண்டு இலங்கை அவுஸ்திரேலிய அணியை ஒருநாள் தொடரில் இலங்கையில் வைத்து  2:0 என வெற்றி  பெற்று தாங்கள் டெஸ்ட் அந்தஸ்துக்கு தகுதியானவர்கள் என நிரூபித்தனர்.  

அடுத்த 3 ஆண்டுகளில் இந்தியா, பாகிஸ்தான் போன்ற சக ஆசிய நாடுகளை டெஸ்ட்  போட்டிகளில்  தோற்கடித்தனர், 12 ஆண்டுகளுக்குள் ஒரு வேகத்தரையில் அன்றைய முன்னணி அணியான நியூசிலாந்தை டெஸ்ட் போட்டி மற்றும் தொடரில் 1:0(2) என வெற்றி பெற்று தங்களை டெஸ்ட் அந்தஸ்துக்கு சரியானவர்கள்  என்று நிரூபித்தனர். அடுத்த 5 ஆண்டுகளுக்குள் இங்கிலாந்தின் ஓவல் டெஸ்ட் வெற்றி மூலம் தங்களை முழுமையான டெஸ்ட் அணியாக நிரூபித்தனர். தொடர்ந்து  நியூசிலாந்து, மேற்கிந்தியா, இங்கிலாந்து போன்ற வேகத் தரைகளிலும் இலங்கை டெஸ்ட்  தொடர்  வெற்றிகளை பதிவுசெய்து கொண்டது. தென்னாபிரிக்காவிலும்  டெஸ்ட் போட்டி வெற்றி  இலங்கையால்  பதிவு செய்யப்பட்டுவிட்டது!  மற்றும் சொந்த மண்ணில் வைத்து அத்தனை நாட்டுடனும் இலங்கை டெஸ்ட் தொடர் வெற்றியை பதிவு செய்துவிட்டது. இன்னமும் இலங்கை டெஸ்ட் அந்தஸ்தை விமர்சிப்பது காழ்ப்புணர்ச்சி அன்றி வேறில்லை. 

சரி அவர்கள் வழியிலே போய் பார்த்தால்; 1932 இல் இந்தியா டெஸ்ட் அந்தஸ்தை பெற்றது! உண்மையில் இதைத்தான் கையைக் காலைப்பிடித்து, அவர்கள்  சொன்னது போன்றவற்றைக் கொடுத்து வாங்கினார்களா என சந்தேகிக்க வேண்டும்!! ஏனெனில் முதல் டெஸ்ட் வெற்றியை பதிவு செய்ய இந்தியா  20 ஆண்டுகள் காத்திருக்க வேண்டி இருந்தது; கிடைத்த முதல் வெற்றி கூட தங்களைவிட பலம் குறைந்த பாகிஸ்தானுடன் பெறப்பட்டதுதான்!. 1932 முதல் 1946 வரை இங்கிலாந்து  டெஸ்ட் அந்தஸ்தை கொடுத்துவிட்டு;   இங்கும் அங்குமாக  மாறிமாறி நல்லாவே வைத்து செய்திருந்தார்கள். முதல் வெளிநாட்டுத் தொடர் வெற்றி   ஒன்றை பெறுவதற்கு  35 ஆண்டுகள் இந்தியா தவமிருந்தது.

ஒருநாள் போட்டிகளைப் பொறுத்தவரை  1980 க்கு முன்னரான இந்திய அணியினதும், அன்றைய இலங்கை அணியினதும்   நிலைமை மோசமானவைதான், இன்னும் சொல்லப்போனால் சந்தித்த ஒரே போட்டியிலும் இந்தியாவுக்கு இலங்கையிடம் தோல்வி! இத்தனைக்கும் அப்போது இந்தியா டெஸ்ட் அந்தஸ்து பெற்று 48 ஆண்டுகள்  ஆகிவிட்டது! இப்போது இன்றைய இந்திய ரசிகர் என்னும் போர்வையிலிருக்கும் சிலர் இலங்கையின் டெஸ்ட் அந்தஸ்து  பற்றி பேசக் கிளம்பியிருப்பது வேடிக்கையாக இருக்கிறது! 


1996 உலகக்கிண்ணத்தில்  மேற்கிந்தியாவும் அவுஸ்திரேலியாவும் இலங்கைக்கு வரவில்லையாம்,  அந்தப்புள்ளிகளால் இந்தியாவுடன் ஒரு போட்டியில் தவறி ஜெயித்ததால் இலங்கை கிண்ணம் பெற்றனராம். இந்த ஒன்று போதும் அவர்களது   அறிவை அறிந்துகொள்ள!. அரை இறுதியில் மட்டுமல்ல, லீக் போட்டிகளிலும் இலங்கை இந்தியாவை புரட்டி எடுத்திருந்தது. லீக் ஆட்டங்களில் சொந்த நாட்டுக்கு வராத அவுஸ்திரேலியாவை; இலங்கை பொது மைதானமான  கராச்சியில் வைத்து இறுதிப் போட்டியில் வெற்றி பெற்று கிண்ணத்தைப்  பெற்றுக்கொண்டது. தொடர்ந்து இலங்கையில்  இடம்பெற்ற  சிங்கர் வேல்ட் சீரிஸின்; லீக் மற்றும் இறுதிப் போட்டி இரண்டிலும் அவுஸ்திரேலியாவை இலங்கை புரட்டிப்  போட்டது. உலகக் கிண்ணத்தில் இலங்கைக்கு வராத மேற்கிந்தியாவுடனான அடுத்த சந்திப்பு  இலங்கைக்கு மேற்கிந்தியாவில்தான்  ஏற்பட்டது, அதிலும் இலங்கைதான் வெற்றி  பெற்றது! 

அடுத்து இந்தியாவை சந்தித்த இடமெல்லாம் சடங்கு செய்தது இலங்கை! சிங்கர் வேல்ட் சீரிஸ், இந்தியா இண்டிபெண்டன்ஸ்  கப், ஆசியக்கிண்ணம், இலங்கையுடனான முக்கோணத் தொடர் என 1996 உலகக் கிண்ணத்தில் இருந்து இந்தியாவுடனான  இடம்பெற்ற 10 போட்டிகளில் இலங்கை 9 போட்டிகளில் வெற்றி பெற்றிருந்தது, அதில் ஒரு தொடர்  தவிர்த்து ஏனைய அனைத்தும்; இலங்கை கிண்ணம் வென்றவைதான். இதில்  இலங்கையின் 1996 வெற்றி குறித்து விமர்சிப்பது நகைப்பிற்குரியது! 

கனவான் தன்மை - கனவான் தன்மை என்கின்ற சொல்லுக்கு 100 சதவிகிதம் பொருத்தமான வீரர்/அணி என்று  எந்த விளையாட்டிலும் யாரும் எங்கும் இருப்பதற்கான சந்தர்ப்பம் இல்லை! ஆனால் கிரிக்கட்டைப்  பொறுத்தவரை சில வீரர்களைக் குறித்து சொல்கின்றார்கள் என்றால்; அதில் ஏனையவர்களை விடுத்து அதிகமான சந்தர்ப்பங்களில் கனவான் தன்மையை அவர்கள் வெளிப்படுத்தி இருப்பதுதான் காரணம். கில்கிரிஸ்ட்  சங்கக்காராவுக்கு இந்தவிடயத்தில் ஏனையவர்களைவிட   முக்கியத்துவம் கிட்டக் காரணம்; தங்களது ஆட்டமிழப்பை  நடுவர் உறுதி செய்யுமுன்னர் களத்தைவிட்டு அகலும் செயற்பாடுதான். இது வேறெந்த ஜாம்பவான்களும் எம் சமகாலத்தில் செய்யாதது.  இது குறித்து பொண்டிங் கூறிய கருத்து வேறுவிதமானது, சில போட்டிகளில் நடுவர்கள் ஆட்டமிழப்பு இல்லாததை ஆட்டமிழந்ததாக அறிவிக்கின்றார்கள்; அதனை ஆட்டமிழப்பு ஒன்றினை  இல்லை என்று நடுவர் கூறும் சந்தர்ப்பம் ஒன்றினால்தான் சமன் செய்ய முடியும், ஆக வீரர்கள் நடுவர் ஆட்டமிழக்கவில்லை என்றால் வெளியேறத் தேவையில்லை என்று கூறியிருந்தார்; இதுகூட சரியான பார்வைதான். ! 

இலங்கையின் இனவெறி, தென்னாபிரிக்காவின்  நிறவெறி பற்றி பேசுவதற்கு தமிழகத்து இந்திய ரசிகர்களுக்கு கூச்சமாக இருக்கவில்லையா? தமிழக வீரர்களது அணித்தேர்வும்; பார்ப்பனமும் பற்றி ஜீவா திரைப்படம் கொடுத்த  செருப்படி அவ்வளவு சீக்கிரம் மறந்துபோச்சா? 1975 உலகக் கிண்ணத்தில் கிரிக்கட்டின் தாய்வீட்டில் (Lords, England)  தமிழகத்தை சேர்ந்த அணித்தலைவர் வெங்கட்ராகவனுக்கு கவாஸ்கர் செய்த அசிங்கம் மறந்துவிட்டதா? இலங்கைத் தமிழரை அடிப்படைப் புரிதலின்றி பாகம் பிரித்து  அபத்தம் செய்த இவர்கள் இனவாதம் பற்றி பேசுவது நகைச்சுவை! 

இந்தப் பதிவு  விரும்பி எழுதப்பட்டதல்ல; திட்டமிட்ட தாக்குதலுக்கான  அவசியமான எதிர்வினையின்  அவசியத்தால் இதை எழுதவேண்டிய சூழ்நிலை! கிரிக்கட்  இதுவரை பல சிறந்த   போட்டிகளையும், வீரர்களையும்,  நினைவுகளையும்  விட்டுச்   சென்றுள்ளது; இது இன்னமும் தொடரும்! அதற்கு ஆரோக்கியமான ரசிகர்கள் அவசியம். கிரிக்கட் வெறும் பொழுதுபோக்கல்ல, இதுவொரு அற்புதமான விளையாட்டு; 5  நாட்கள் 30 மணி நேரமாக  ஒரு விளையாட்டை  பொறுமையாக  ரசிக்க முடிகிறது என்றால்; அதில் எத்தனை நுட்பங்கள் இருக்க வேண்டும். அதனை முழுமையாக ஆத்மார்த்தமாக அனுபவித்து ரசிக்கும் தன்மை சொல்லலில் வடிக்க முடியாதது. இனவாதம், மதவாதம், அரசியல் போன்ற நிறக் கண்ணாடிகள்  போட்டால் கிரிக்கட்  தெரியாது!  கிரிக்கட்டில் போட்டி போடுங்கள், வெற்றியைக் கொண்டாடுங்கள், தோல்வியைக் கிண்டல் செய்யுங்கள்; தயவுசெய்து தங்கள் தனிப்பட்ட விருப்பு வெறுப்பை காழ்ப்புணர்வாக்கி ரசிகர்களை திசைதிருப்பி  விடாதீர்கள்!