Thursday, August 23, 2012

பகிஸ்கரிப்பும், பல்கலைக்கழகமும், பாடசாலையும், அரசும், கல்வியும் - எனது பிதற்றலும்!!!பல்கலைக்கழகங்கள் விரிவுரையாளர்கள் பகிஸ்கரிப்பில்!! பாடசாலைகள் ஆசிரியர்களின் பகிஸ்கரிப்பை எதிர்நோக்கி; இதுதான் இலங்கை கல்வியின் இன்றையநிலை!! விரிவுரையாளர்களின் பகிஸ்கரிப்பு இரண்டாவது மாதத்தை நெருங்கிக் கொண்டிருக்கின்றது!!! இது இலங்கை வரலாற்றில் மிகப்பெரும் எதிர்மறையான சாதனை!! காரணம் கேட்டால் 8 அம்சக் கோரிக்கை, 16 அம்சக் கோரிக்கை என்று நிறைய அம்சங்களை சொல்கின்றார்கள்! அரசாங்கமோ இவற்றை கணக்கில்கூட எடுத்துக்கொள்வதாக தெரியவில்லை!!! எத்தனை அம்ச கோரிக்கைகள் முன்வைத்தாலும் இவர்களது முக்கிய அம்சகோரிக்கை என்னவோ ஊதிய உயர்வுதான்!!

இந்த நெடிய பணிப்பகிஸ்கரிப்பு எந்தமாதிரியான எதிர்மறை மனநிலையை மாணவர்களுக்கு ஏற்படுத்தும் என்பதை பகிஸ்கரிப்போரும், அரசாங்கமும் கண்டு கொள்ளாததுதான் மிகப்பெரும் வேதனை!!! இதுதான் வாழ்க்கை, இதனால்த்தான் வாழ்க்கை என கல்வியை நம்பி கல்விமீது நம்பிக்கைவைத்த அத்தனை மாணவர்களுக்கும் அரசும், முன்னாள் பல்கலைக்கழக பட்டதாரி மாணவர்களும் சேர்ந்து கொடுத்திருக்கும் பரிசுதான் மன அழுத்தமும் வெறுப்பும்!! ஆனால் இதைப்பற்றி அவர்கள் துளியளவும் கண்டு கொண்டதாக தெரியவில்லை!!! வரட்டுக் கௌரவத்தை விட்டுக்கொடுக்காமல் அரசும், விரிவுரையாளர்களும் ஒருவருக்கொருவர் சளைக்காமல் மாணவர்கள் வாழ்க்கையில் விளையாடிய வண்ணம் உள்ளனர்!!

சிலருக்கு இதில் உடன்பாடில்லாமல் இருக்கலாம், ஆனால் எனக்கு மனதில் பட்டது என்னவெனில்; ஏன் அரசும் பகிஸ்கரிப்பாளர்களும் இணைந்து இலவச உயர்கல்வியை தனியார் மயப்படுத்தி காசு பார்க்க இந்த பகிஸ்கரிப்பை நாடகமாக செய்திருக்கக் கூடாது என்பதுதான்!!! தனியார் உயர்கல்வியை எதிர்ப்பது போன்ற கோரிக்கைகளை முன்வைத்துவிட்டு மறைமுகமாக மாணவர்கள் மத்தியில் "ஏன் நாம் தனியாரை நாடக்கூடாது?" என்கின்ற கேள்வியை எழுப்பும் ராஜதந்திரமாககூட இதை நோக்கலாம்; அப்படி எல்லாம் இருக்ககூடாது என்பதுதான் என் விருப்பமும்!!! காரணம் இன்னமும் கல்வியை மட்டுமே நம்பி வாழ்க்கையில் சாதிக்கணும் என்று நினைக்கும் ஏழை மாணவர்கள் ஆயிரக்கணக்கில் இந்த இலவச கல்வியை நம்பித்தான் தம் வாழ்வை புடம்போட காத்திருக்கின்றார்கள்!! தெற்காசியாவில் ஏனைய நாடுகளுடன் ஒப்பிடுகையில் இலங்கையின் கல்வியின் ஸ்திரதன்மைக்கு காரணமே இலவச கல்விதான், அதில் கைவைக்கும் எண்ணம் இருந்தால் தயவு செய்து விட்டுவிடுங்கள்!!(எவனும் கேக்கமட்டான்னு தெரிந்தாலும் சொல்வது நம்ம கடமை!!!)

அடுத்து ஊதிய உயர்வு; இதுதான் பகிஸ்கரிப்பாளர்களின் முழுமுதல் நோக்கம் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி. இதை மறுப்பவர் யாராக இருப்பினும் மறுப்பவருக்கான பதில் அவரது மனசாட்சி மட்டும்தான்! ஊதிய உயர்வு கேட்கும் அளவிற்கு அப்படி இவர்களுக்கு என்ன ஊதிய குறைச்சல் என்றுதான் புரியவில்லை!!! குறைந்த பட்சம் பல்கலைகழக விரிவுரையாளர்கள் 40,000 ரூபாவில் இருந்து லட்சங்கள் வரை ஊதியம் பெறுகின்றார்கள்; வேலையோ வாரத்தில் நான்குநாள், அதிலும் பாதிநேரம்!!! மனசாட்சியை தொட்டு சொல்லுங்கள் நீங்கள் செய்யும் வேலைக்கு இந்த ஊதியம் போதாது என்று!!! சரி நீங்கள் கேட்கும் ஊதிய உயர்வு வழங்கப்படுகின்றது என்றே வைத்துக்கொள்வோம்!! அடுத்த கட்டம் அரசு செய்யும் வேலை என்ன? விட்டதை பிடிக்க ஏதோ ஒன்றில் விலையை அல்லது கட்டணத்தை அதிகப்படுத்துவதுதான்!!


விலை/கட்டண உயர்வை தொடர்ந்து அடுத்து மருத்துவர்களும், ஏனைய அரசாங்க உத்தியோகஸ்தர்களும் ஊதிய உயர்வுக்கு போராட கிளம்புவார்கள்; அவர்களுக்கும் போராட்டம் வெற்றியளிக்கலாம்!!! கூடவே போட்டிக்கு தனியார் நிறுவனங்கள், வங்கிகளும் ஊதியத்தை ஊதித்தள்ளும்!!! உங்களால் ஏற்றப்படும் விலைவாசியை நீங்கள் சமாளித்துக்கொள்வீர்கள்; ஆனால் அன்றாடம் கூலிக்கு மாரடிக்கும் இலட்சக்கணக்கான குடும்பங்களின் நிலை என்ன? பீடி சுற்றுவதிலும், தேயிலை/இறப்பர் தோட்டங்களிலும், பெட்டிக்கடைகளிலும், தையல் கடைகளிலும், புடவைக்கடைகளிலும், சிறு தொழிற்சாலைகளிலும், பலசரக்கு கடைகளிலும், பார்மசிகளிலும், உணவகங்களிலும் 5,000 - 10,000 மாத சம்பளத்திற்கும் வேலை பார்த்து குடும்பத்தை காப்பாற்றும் கீழ்த்தட்டு, நடுத்தட்டு படிப்பறறிவு இல்லாத இலட்சக்கணக்கானவர்களை பற்றி கொஞ்சமேனும் இவர்கள் சிந்திக்கின்றார்களா? விவசாயிகளும், தோட்டக்காரர்களும் பூச்சி மருந்தையா குடிப்பது?

விரிவுரையாளர்களுக்கு பகிஸ்கரிப்பால் கிடைக்கும் ஊதிய உயர்வை ஈடு செய்ய அரசு ஏற்றும் விலை/கட்டண ஏற்றங்களை சமாளிக்க இந்த மாத/தின கூலிகளுக்கும், அன்றாடம் காய்ச்சிகளுக்கும் இயலுமா? எல்லாமே எங்குமே சுயநலம்!!! ஒரு சூதாட்ட வெறியனாக பணத்திற்காக எதையும் செய்யும் கேரக்டரில் மங்காத்தாவில் அஜித் சொன்ன money money money வசன உச்சரிப்பிற்க்கும்; இவர்களது 'ஊதிய உயர்வென்ற' கௌரவ சொல்லாடலுக்கும் எனக்கு பெரிதாக வித்தியாசம் தெரியவில்லை!! சரி அவர்களை விடுங்கள் உங்களை நம்பி தங்களை உங்களிடம் ஒப்படைத்த மாணவர்களின் எதிர்காலம், மனநிலை பற்றித்தான் சிந்திக்கின்றீர்களா? இன்றைய இலங்கை அரசிடம் தீர்வு ஒன்று கிட்டும் என நம்பி மாணவர்களது படிப்பை பகடைக்காய் ஆக்குவதென்பது முழு முட்டாள்தனமன்றி வேறில்லை!!

விரிவுரையாளர்கள் வாரக்கணக்கில் பகிஸ்கரிப்பு என அலறியது இத்தனை நாட்களாக கேட்காமல் இரண்டு நாட்களுக்கு முன்னர் நித்திரையில் இருந்த இலங்கை அரசு திடீரென கண் விளித்து அறிவித்த அறிவிப்புத்தான் காலவரையற்ற பல்கலைக்கழக மூடுவிழா!!! இந்த அதிர்ச்சி தீருமுன்னம் இன்று வெளியாகி இருக்கும் செய்தி பாடசாலை ஆசிரியர்கள் சங்கம் 13 அம்ச கோரிக்கைகள் என்னும் பெயரில் ஊதிய உயர்வு கேட்டு பணிப்பகிஸ்கரிப்பை மேற்கொள்ள போகிறார்களாம்!!! வருடத்தில் 3 மாதம் பாடசாலை விடுமுறை, வாரத்தில் இரண்டு நாட்கள் விடுமுறை, வேலை நேரமோ காலை 8 தொடங்கி மதியம் 2 மணிவரை; இவர்களுக்கான ஊதியம் ஆரம்ப சம்பளம் 20,000 இல் இருந்து 60,000 வரை!! இந்த வேலைக்கு இது இவர்களுக்கு போதவில்லையா? அப்படி போதாவிட்டால் மாலை நேரங்களில் தோட்டம் செய்து, கூலிவேலை செய்து பணத்தை சேருங்கள், பணத்திற்காக இளம் சமுதாயத்தின் கல்விமீது தயவு செய்து விளையாடாதீர்கள்!!

ஏற்கனவே பாடசாலைகளில் சிலபஸ் முடிப்பதில்லை என்கின்ற காரணத்தை காட்டி பல தனியார் டியூசன்கள் கல்லா நிரப்பிக்கொண்டிருக்கும் வேளையில் இந்த செய்தி தனியார் டியூசன்களுக்கும், ஆசிரியர்களுக்கும் வாயில் சக்கரை போட்டதை போலிருக்கும்!! இது எங்கு சென்று முடியப்போகின்றதோ தெரியவில்லை!!! இலங்கை அரசுக்கு இவர்களது பகிஸ்கரிப்பு செய்தி செவிடன் காதில் ஊதிய சங்கு!! இன்னும் எத்தனை நாளைக்கு இவர்களும் சங்கை ஊதாப்போகின்றார்கள்!! அவர்களும் எவ்வளவு நாட்களுக்கு கேளாதவனாக இருக்கப்போகின்றார்கள்!! இதனால் எத்தனை மாணவர்கள் மனரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் பாதிக்கப்படப் போகின்றார்கள்!! என்பதற்கு காலம்தான் பதில் சொல்லணும்!!


மற்றும்....


ஆசிரியர்கள் சம்பந்தமான பதிவு என்பதால் மேலும் சிலவற்றை சொல்லலாம் என்று நினைக்கின்றேன்!! ஆசிரியர்கள் என்றதும் பொதுப்பார்வையில் அவர்களை பற்றி சொல்லும் வார்த்தைகள்; ஆசான், குரு, வழிகாட்டி, தெய்வம்...... இப்படி பல புகழ்ச்சி சொற்கள்!! இப்படிப்பட்ட புகழ்களுக்கு சொந்தக்காரர்களாக பல ஆசிரியர்கள் முன்னரும் சில ஆசிரியர்களை இன்னமும் சமுதாயத்தை வாழவைத்துக்கொண்டு இருக்கத்தான் செய்கின்றார்கள்!! பலருடைய வாழ்க்கையே தலைகீழாக புரட்டிப்போட்ட மகான்களாகவும் ஆசிரியர்கள் இருந்திருக்கின்றார்கள், இருக்கின்றார்கள்!!! அவர்களைப்பற்றி மிக அதிகமாகவே எழுதியும், காட்சிப்படுத்தியும் சுட்டிக்காட்டிவிட்டார்கள்; இந்த பதிவில் சில ஆசிரியர்களின் மறுபக்கங்களை பகிரலாமென்று நினைக்கின்றேன்!!

* பழிவாங்கல் - இந்த நடவடிக்கையில் அதிகமான ஆசிரியர்கள் ஈடுபடுவதை யாரும் மறுக்க முடியாது!! தங்களுக்கு ஏதாவதொரு வகையில் குடைச்சல் கொடுக்கும் மாணவர்களை; அதாவது பதிலுக்கு தங்களுக்கு எதிராக பதிலுக்கு வாதிடுபவர்கள், கவுண்டர் கொடுப்பவர்கள், தங்களை மதிக்காதவர்கள், கண்டுகொள்ளாதவர்கள் என இவர்கள்தான் இந்த லிஸ்டில் முக்கியமானவர்கள்; இவர்களை தவிர சில மாணவர்களை பார்த்தாலே சில ஆசிரியர்களுக்கு பிடிப்பதில்லை!!! இப்படிப் பிடிக்காத மாணவர்கள் பல வழிகளில் ஆசிரியர்கள் சிலரால் சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் பழிவாங்கப் படுகின்றார்கள். இவற்றுக்கெல்லாம் முக்கிய காரணம் 'கௌரவம்' என்னும் தங்கள் இமேஜ் டேமேஜ் ஆவதுதான்!!! அது தவிர்த்து வேலைப்பளுவினால் வந்த வெறுப்பு கூட காரணமாக இருக்கலாம். ஆனால் 18 வயதுக்கு குறைவான சிறுவர்களிடம் ஏட்டிக்கு போட்டியாக நின்று தமது அதிகாரம் மூலம் அந்த சிறுவர்களை பழிவாங்கும் சம்பவங்கள் ஆசிரியர்களுக்கு ஆரோக்கியமானதா?

18 வயது கடந்தால்தான் மேஜர் அந்தஸ்து கிடைக்கின்றது, அதற்க்கு குறைந்த வயதில் எதையும் திட்டமிடும் அளவிற்கோ, சுயமாக சிந்திக்கும் அளவிற்கோ எல்லா மாணவர்களும் முதிர்ச்சி அடைவதில்லை; இதை புரியாமல் மூத்த ஆசிரியர்களும் குறும்புக்கார மாணவர்களை பழிவாங்குவது வேதனையான விடயம்; முடிந்தளவு எடுத்து சொல்லலாம், இல்லையா தண்டிக்கலாம்; ஆனால் மனதில் வைத்து சிறுவர்களை ஆசிரியர்கள் பழிவாங்குவதென்பது கேவலமான செயல்!!

* பாகுபாடு - இந்த செயற்ப்பட்டால் பலரும் பாதிக்கப்பட்டிருப்பார்கள்; கல்வியில் முன்னிலையில் இருப்பவர்களை, தங்களை மதிப்பதில் முன்னிற்பவர்களை (காக்கா பிடிப்பதில்), தங்களுக்கு பிடித்தமானவர்களை, தங்களுக்கு தெரிந்தவர்களது பிள்ளைகளை அதிகளவில் கவனிக்கும் ஆசிரியர்கள் சிலரும் இருக்கத்தான் செய்கின்றார்கள்!! இதனால் ஏனைய மாணவர்கள் மனதளவில் பாதிக்கப்படுவதை இவர்கள் புரிந்துகொள்வதில்லை; புள்ளிகளை வழங்குவதிலும் இந்த பாகுபாட்டை வெளிப்படுத்தும் ஆசிரியர்களும் எம் சமூகத்தில் இருக்கத்தான் செய்கின்றார்கள்!!! இந்த நிலை நிச்சயம் மாறியாக வேண்டும், மாணவர்கள் எல்லோரும் சமம் என்பதற்கு சீருடை மட்டும் போதாது, செயற்ப்பாட்டிலும் நிச்சயம் தேவை; இந்த பாகுபாடுகளை நிச்சயம் களைந்தாக வேண்டும், இது மாணவர்களது உளவியல் சார்ந்த பிரச்சனை; படிப்பில் மட்டுமல்ல விளையாட்டிலும் இது காணப்படுவது வேதனையான விடயம்!!!* தவறான தண்டனைகள் - இன்று ஆசிரியர்களாக இருக்கும் 'சிலர்' தாம் எப்படி ஆசிரியர் தொழிலுக்கு வந்தோம் என்பதை மறந்துவிட்டு மாணவர்களது புள்ளிகள் குறைவுக்கு கொடுக்கும் தண்டனைகள் கேலிக்குரியதும் கண்டிக்கத்தக்கதுமாகும்!!! தாம் ஏதோ அதிக புள்ளிகளை பெற்று கிடைத்த டாக்டர், எஞ்சினியர், வக்கீல் படிப்புக்களை துறந்துவிட்டு சேவை செய்ய ஆசிரியர் தொழிலுக்கு வந்தது போன்றது இவர்களது இந்த புள்ளிகளுக்கு கண்டிக்கும் செயற்பாடு. ஒவ்வொரு மாணவனுக்கும் இருக்கும் கொள்ளளவு என்பது வேறுபட்டது; அவனால் முடிந்தளவுதான் படித்ததை வெளிப்படுத்த முடியும்; அனைவரையும் 80/100 புள்ளிகளை எடுக்காவிட்டால் தண்டிப்பதென்பது மிகவும் முட்டாள்தனமான செயற்ப்பாடு!! புள்ளிகளை வைத்து தண்டிக்கும் தண்டனைகளைவிட மோசமானது பலரும் பார்க்க பொதுவில் மாணவர்களை தண்டிப்பது; குறிப்பாக வெய்யிலில் அனைவரும் பார்க்க மணிக்கணக்கில் முட்டுக்காலில் நிற்க வைப்பது; இங்குதான் தாழ்வு மனப்பான்மைகள் வெளிப்பட ஆரம்பிக்கின்றன!!!

சட்டத்தில் 18 வயதுக்கு குறைவானவர்கள் கொலையே செய்தாலும் தண்டிக்க இடமில்லை; சீர்திருத்தப் பள்ளி என்று ஒன்றிற்கு அனுப்பி வைக்கின்றார்கள் (அதுகூட மனரீதியான தாழ்வு சிக்கலை கொடுக்கும்) ஆனால் இங்கே என்னடான்னா படிப்பு வரவில்லை என்பதற்கு கடுமையாக தண்டிக்கின்றார்கள்!! அதிலும் மாணவர்கள் செய்யும் எந்த தவறுக்கும், கல்வி உட்பட மாணவர்களை அடிப்பதென்பது படிப்பின் மீதும், பாடசாலை மீதும் வெறுப்பை மட்டுமே உண்டாக்கும்!!! இவற்றுக்கான மாற்றுத்தீர்வை நிச்சயமாக ஆராயவேண்டும், தண்டனைகள் இவற்றுக்கான தீர்வில்லை என்பது மட்டும் உண்மை!!

* தவறான பாட அணுகுமுறை - இன்றைக்கு புதிதாக கிளம்பியிருக்கும் பாடத்திட்ட அங்கம் ஒப்படை!!! ஒரு விளையாட்டு வீரரை பற்றி A4 காகிதத்தில் Print எடுத்துவரும்படி ஒரு மாணவனுக்கு ஒப்படை கொடுக்கப்படுகின்றது!! அவனது தந்தை Internet Cafe க்கு சென்று, அங்கு Download செய்து Print எடுத்து பையனிடம் கொடுக்கின்றார்; பையன் அதை பாடசாலையில் கொடுத்து புள்ளிகளை பெறுகின்றான். Internet Cafe க்கு கொடுக்கும் பணம் மற்றும் தந்தை/தாயின் நேரவிரயம்தான் இங்கு செலவிடப்படுகின்றது; இதனால் மாணவர்களுக்கு என்ன லாபம்? கைப்பட எழுதினால்கூட அதில் ஏதோ அர்த்தம் இருப்பதாக எடுத்துக்கொள்ளலாம். எனக்கு இதன் நன்மை புரியவில்லை; புரிந்தவர்கள் புரிய வையுங்கள்!!!

*முக்கிய குறிப்பு

கல்வி சம்பந்தமாக பேச எனக்கு தகுதி இல்லை என்பது எனக்கு புரிகின்றது; ஆனாலும் மனதில் தோன்றிய ஆதங்களை வெளிக்கொண்டுவர இந்த பதிவை தவிர வேறு வழி தெரியவில்லை; அதனால்த்தான் இந்த பிதற்றல். எனக்கு தெரியாத சப்ஜெட்டை எழுதியதால் பல தவறுகள் இந்த பதிவில் இருக்கலாம்; இருக்கும் தவறுகளை தவறாமல் தவறுதான் என சுட்டிக்காட்டுங்கள்!!!!

நன்றி!!!