Saturday, May 5, 2012

விலையேற்றம்!! அருமையான திட்டங்களை போடும் அரசு!!தனியார் மருத்துவமனைகள் சந்திக்கு சந்தி உருவாக்கி வருகின்றன!!! 25 வயதிலேயே இதயநோய், கொலஸ்ரோல், சக்கரைவியாதி முதற்கொண்டு வாயில் பெயர் நுழைய முடியாத பல வியாதிகளும் இன்று அதிகரித்து வருகின்றது!! மெடிக்கல் செக்கப், டயட் மாத்திரைகள், ஜிம், இலத்திரனியல் எடை குறைப்பு இயந்திரங்கள் என நாளுக்குநாள் செலவுகளும், வீண் விரயங்களும் அதிகரித்து வருகின்றன!! இந்த நிலையை இப்படியே விட்டால் எதிர்வரும் காலங்களில் நிலைமை மோசமாகிவிடும் என்பதை உணர்ந்த அரசாங்கம் புதிதாக கொண்டுவந்துள்ள திட்டம்தான் 'விலை அதிகரிப்பு'!!!

கோதுமை மா -: இன்றைய அதிக நோய்களின் முக்கிய காரண கர்த்தா கோதுமை மா!! இன்றைக்கு அதிகமானவர்களுக்கு குடைச்சலாக இருக்கும் கொலஸ்ரோல் வியாதிக்கு டாக்டர்கள் சொல்லும் முதல் அறிவுரையே கோதுமை மாவின் பாவனையை குறைத்துக் கொள்ளுங்கள் என்பதுதான்!! என்னதான் டாக்டர்கள் சொன்னாலும் எம்மவர்கள் கேட்ப்பதேயில்லை!! இதனை கருத்திற் கொண்டுதான் அரசு செய்த திடீர் மருத்துவ திட்டம் கோதுமை மாவின் விலை அதிகரிப்பு!! 1 kg கோதுமை மாவின் விலை இன்று 88 ரூபா!!! (போஸ்ட் பப்ளிஷ் ஆவதற்கும் விலை இன்னமும் அதிகரித்தால் நான் பொறுப்பல்ல!!)15 ஆண்டுகளிற்கு முன்னர் 15 ரூபா அளவில் விற்கப்பட்ட கோதுமை மா இன்று கிட்டத்தட்ட 6 மடங்கு உயர்வடைந்துள்ளது!! இவ்வாறு கோதுமை மா விலை அதிகரிப்பதால் உள்ளூர் உற்பத்திகளான மரவள்ளி, சோளம் போன்றவற்றை மக்களை உணவிற்கு பயன்படுத்தச் செய்வதும் இதன் மற்றொரு சிறப்பம்சம்!!

பால்மா -: 400 கிராமின் பால்மா 90 களின் நடுப்பகுதியில் 60 ரூபாய்க்கு வாங்கிய ஞாபகம்! இன்று அதன் விலை 60 'ஓவா'வால் அதிகரித்துள்ளது; 1 kg பால்மா 161 'ஓவா'வால் அதிகரித்துள்ளது!! 400 கிராமின் இன்றைய விலை அண்ணளவாக 325 ரூபாவாக உயர்ந்துள்ளது!!! இப்படி ஒரு விலை அதிகரிப்பை இதற்கு முன்னர் இலங்கை மக்கள் எதிர்கொண்டதில்லை!! இதற்கு காரணம் அதிக 'டீ' குடிப்பதால் ஏற்ப்படும் சக்கரைவியாதி மற்றும் கொலஸ்ரோல் போன்ற நோய்களை குறைப்பதுதான் என்றாலும் அதையும் தாண்டி கால்நடைகளை வளர்க்கும் பாரம்பரியமுறை இன்று இல்லாமல் போவதை தடுத்து அதனை மீண்டும் ஊக்கப்படுத்துதலும் முக்கியமானது!!!

பால்மா விலை ஏற்றத்தால் வீடுகளில் கறவை மாடுகளும், மறி ஆடுகளும் வளர்க்க ஆரம்பித்தால் பாலும் கிடைக்கும், கூடவே வீட்டில் மிச்சமாகும் கழிவு உணவுப் பொருட்களும் அவற்றுக்கு உணவாக்குவதால் சுற்றமும் சுகாதாரமும் பேணப்படும்!! இதனால்த்தான் பால்மாவின் விலையை தாறுமாறாக ஏற்றியுள்ளது அரசு!!! பால்மா விலை ஏற்றத்தால் பலர் 'பிளேட் டீ' மட்டும் குடிக்க ஆரம்பிப்பார்கள்; இதனால் தேசிய தேயிலை உற்பத்தியை மக்கள் அதிகளவில் நுகரவும் வாய்ப்புள்ளது!! கூடவே கோப்பியும்!!


சமையல் எரிவாயு :- அப்பப்போ தாறுமாறாக விலையேற்றம் எகிறும், இம்முறை விலை ஏறி இருப்பது ஒரு சிலிண்டருக்கு வெறும்.. வெறும்.. வெறும்... வெறும்.. 350 ரூபாயால்த்தான்!!!! ரொம்ப கம்மியாத்தான் ஏற்றி இருக்கிறாங்க! எரிவாயுவால் ஏற்ப்படும் புகையானது 'பீ'சோன் (ஒசொனுக்கு ஒண்ணுவிட்ட சித்தப்பா) படத்தை தாக்கும் என்பதாலும், அதிகளவில் தேக்கமாகும் பொச்சுமட்டை, தென்னைமட்டை, பனைமட்டை, தென்னோலை, பனையோலை, ஊமல்கொட்டை போன்றவற்றை எரிப்பதால் சூழலில் அவை தேங்குவதால் உருவாகும் நுளம்பு பெருக்கத்தை இல்லாமல் செய்து டெங்கை ஒழிப்பதுதான் இதன் மறைமுக திட்டம்!! அதே நேரம் வீதிகளில் அதிகளவு சிலிண்டர்களை கொண்டுவரும் கண்டெய்னர்களை சிட்டி (வேஷன் 2.௦) போன்ற மோட்டு ரோபோக்கள் பிரட்டினால் உண்டாகும் சேதங்களும் கருத்திற் கொள்ளப்பட்டுள்ளது!! 2008 களில் 800 ரூபாயில் இருந்த சிலிண்டர் இப்போது 2500 க்கும் மேல்!!!


சீமெந்து :- 70 ரூபாவால் அதிகரித்துள்ளது!! வெற்றுக் காணிகளில் கட்டடங்களை கட்டுவதால் பல மரங்கள் தறிக்கப்பட்டு இயற்கையின் சமநிலை குழப்பப்படுகின்றது. மழை குறைவாக கிடைப்பதற்கும் இதுவே ஒரு முக்கிய காரணியாக அமைந்துவிடுகின்றது!! சீமெந்தின் விலையை அதிகரிப்பதால் தேவையற்று கட்டப்படும் கட்டடங்களின் அளவை குறைக்கலாம் என திட்டமிட்டிருக்கின்றார்கள்; மணல் விற்கும் விலைக்கு சீமெந்தின் விலை ஏற்றம் அவ்வளவாக பாதிப்பில்லை என்றே சொல்லவேண்டும்! இருந்தாலும் இந்த விலை ஏற்றங்களால் உண்டாகும் மற்றொரு நன்மை மண்னினாலான வீடுகளை ஊக்குவிப்பது!! எமது நாட்டின் தட்பவெப்ப நிலைக்கு மண்னினாலான வீடுகள் குளிர்மையானவையாக இருக்கும் என்பது குறிப்படதக்க விடயம்! அத்துடன் செங்கல்லின் பாவனையை அதிகப்படுத்தி செங்கல் உற்பத்தியை அதிகரிக்கவும் இவ்விலை ஏற்றம் ஆவன செய்திருக்கின்றது!!

எரிபொருள், வாகனம் - இவற்றின் விலைகள் அதிகளவில் ஏற்றப்பட்டமைக்கான காரணம் சூழல் மாசடைதல், மற்றும் வீதி விபத்துக்கள்தான்!! குறைவான விலைகளில் எரிபொருட்களும் வாகனங்களும் இருக்குமிடத்தில் அவற்றின் பயன்பாடு அதிகரிப்பதால் மேற்சொன்ன காரணங்கள் பாதகமாக அமைந்து விடுகின்றன; எனவே இவற்றை குறைக்கவே இந்த விலை ஏற்றங்கள்!! அத்துடன் இதனால் துவிச்சகரவண்டி, மாட்டுவண்டில் பாவனைகளும் அதிகரிக்கும் சந்தர்ப்பம் உண்டு; இவை உடலுக்கு பயிற்சியாக அமைவதால் உடலின் கொழுப்பு கரைக்கப்படுகின்றது; இதனால் கொலஸ்ரோல் போன்ற கொழுப்பு வியாதிகள் குறைக்கப்படலாம்!! மற்றும் இன்சூரன்ஸ், டக்ஸ், லைசென்ஸ் வழங்கப்படும் இடங்களில் கூட்டமும் நெரிசலும் குறைக்கப்படலாம்; இதனால் அரசுக்கு பணத்தால் நஷ்டம் ஏற்ப்பட்டாலும், மக்களின் நலனே முக்கியம் என்பதால் அரசு நஷ்டத்தை பெரியமனதாக ஏற்றுக்கொள்கின்றது!!

நள்ளிரவு 12 மணிக்கு விலை ஏற்றப்படும் என்கின்ற அறிவிப்பை முதல்நாள் மாலைக்கு முன்னமே அரசு SMS மூலம் அறிவித்து விடுகின்றமை இன்னும் விசேடம்!! மாலை 3 மணிக்கு SMS வருகின்றதென்றால் எமது கடைகளில் குறிப்பிட்ட பொருட்கள் மாலை 3 மணியில் இருந்து மறுநாள் அதிகாலைவரை இருப்பதில்லை!!! எப்படித்தான் ஒட்டுமொத்த கடைகளிலும் தீர்ந்துபோய் விடுகின்றதோ!! (ஒரு சில கடைகள் விதி விலக்காகவும் உண்டு) முன்பெல்லாம் விலையில் ஏற்ற இறக்கம் வரும்போது வியாபாரிகளுக்கு லாப, நஷ்டம் வரும்; இப்போதெல்லாம் விலையேற்றம் மட்டுமே என்பதால் லாபம் மட்டும்தான், அதிலும் அப்பப்போ கொள்ளை லாபம்!!


அத்தியாவசிய பொருட்கள் விலைமட்டும் அப்பப்போ பெரியளவில் எகிறும்போது பியர், சிகரட், சோடா விலைகள் மட்டும் எப்படித்தான் மந்தகதியில் ஏறுகின்றனவோ!!! இவற்றின் விலையை கூட்டினால் மட்டும் குடிக்காமல் இருந்துவிடவா போகிறார்கள்!! அத்தியாவசிய பொருட்கள் பலவற்றின் விலைகள் கடந்த பதினைந்து ஆண்டுகளில் 5 மடங்கிற்கு அதிகமாக அதிகரித்துள்ளபோதும் தொழிலாளர்களின் சம்பளம் மட்டும் நகர கஷ்டப்படுகின்றது!! அரச தனியார் ஊழியர்களுக்கு ஓரளவிற்கு அப்பப்போ சம்பள உயர்வு கிடைத்தாலும் அதிகளவு கடைகள், தொழிற்சாலைகள், தோட்டங்களில் பணி புரிபவர்களுக்குத்தான் சம்பள அதிகரிப்பு வெறும் கனவாகவே இருந்து வருகின்றது!!

1990 களின் நடுப்பகுதியில் 9 ரூபாய் விற்ற பாணின் இன்றயவிலை 58 ரூபா!! பால்மாவின் விலை 60 இல் இருந்து 325 ரூபா!! மண்ணெண்ணெய் 11 ரூபாயில் இருந்து 100 +!!! அடிப்படை தேவைகளான இவையே இப்படியென்றால் தங்கம் 4000 இல் இருந்து இன்று பத்து மடங்கு தாண்டியாகிவிட்டது!! ஆனால் இவர்களின் சம்பளம் மட்டும் மாதத்திற்கு கிட்டத்தட்ட 3000 ரூபாயில் இருந்து 7000 வரைக்கும் தான் உயர்ந்திருக்கின்றது!! 7000 ரூபா சம்பளம் வாங்கி ஒரு குடும்பத்தை நடத்துவது சாத்தியாமா? என்று எந்த முதலாளியும் சிந்திப்பதில்லை!! குடும்ப கஷ்டம், படிப்பறிவின்மை போன்ற காரணங்களால் முதலாளிகளுக்காக தெரிந்தோ, தெரியாமலோ அடிமாடாய் உழைக்கும் பல்லாயிரம் இளைஞர்களுக்குக அரசு குறைந்த பட்சம் நியாயமான ஊதியம், வேலை நேரம் , விடுமுறை போன்றவற்றை நியாயமாக பெற்றுக்கொடுப்பது கட்டாய கடமை!

பல கடைகளில் காலை 5 மணி தொடக்கம் இரவு 10 மணிவரை பெண்ட் எடுக்கப்படும் எத்தனையோ இளைஞர்/சிறுவர்களை காணலாம்; வாரம் ஒருநாள் விடுமுறையே கெஞ்சி வாங்கும் அளவிற்கு கொடூர முதலாளிகள் பலருண்டு!! குறிப்பிட்ட நேரம் தாண்டி வேலை செய்தால் மேலதிக சம்பளம், விடுமுறை தினங்களில் வேலை செய்தால் இரட்டிப்பு சம்பளம், ஞாயிறுகளில் கட்டாய விடுமுறை என பல சட்டங்கள் வர்த்தக சங்கங்களில் உண்டு என்றாலும், முதலாளிகளின் பணத்திற்கு முன்னால் சட்டம் இருட்டறைதான்!! கடைகளிலும், தோட்டங்களிலும், தொழிற்சாலைகளிலும் வாழ்வை தொலைக்கும் இவர்களுக்கு அடிப்படை உரிமை மற்றும் சம்பளத்தை பெற்றுக்கொடுப்பது இன்றியமையாதது!!


சில நாட்களில் வழமைபோல படித்தவன் விலை உயர்வுக்கு போராட்டம் செய்வான்; அரசும் ஒரு சிறுதொகையை ஊதிய உயர்வாய் அறிவிக்கும்; ஆனால் படிக்காத, ஏழ்மையை சமாளிக்க போராடும் ஒவ்வொரு இளைஞனுக்கும்/யுவதிக்கும் வழமைபோல அதே சம்பளம், அதே வேலை!!! தொழிற் சங்கங்கள், மனித உரிமை நிறுவனங்கள் அனைத்தும் A/C கட்டடம் + வாகனங்களில் நேரத்தை விரயமாக்கவே அன்றி ஏழைகளுக்காக அல்ல!! விலை ஏற்றங்கள் இப்படியே தொடர்ந்தால் இவர்களது வாழ்க்கைதரம் எப்படி உயரும்? நாடு எப்படி வளர்ச்சி அடையும்? இதை தமிழர்களுக்காக மட்டும் சொல்லவில்லை, இந்த அவலம் நாடு முழுவதும் உள்ளவைதான்; சகோதர இனத்தவர்களும் சந்திக்கும் பிரச்சனைதான். அன்றெல்லாம் பாண், பருப்பு விலைகளில் பத்து பைசா ஏறினாலே ஆட்சியை மாற்றும் சகோதர இனத்தவர்கள் இன்று இத்தனை பாரிய விலை ஏற்றங்களையும் சகிப்பது/மௌனிப்பது எதனால்!!!!

அரசியல், இனம், மதம் கடந்து சிந்திக்கவேண்டி பிரச்சனைகள் இவை, இப்படியே தொடர்ந்தால் இன்னும் ஓரிரு ஆண்டுகளில் ஒருமாத சம்பளம் ஒருநாள் தீவனத்திற்கே போதாத நிலையை உண்டாக்கிவிடும்!!!!

*-------*