Tuesday, February 14, 2012

தமிழ் சினிமாவில் காதல்...

காதல் - வரம், சாபம், துரோகம், நேசம், வேஷம், காமம், ஹோர்மோன், இதயம், டைம் பாஸ், இச்சை, வேதம், ஆக்கம், அழிவு, பூ, முள், உற்ச்சாகம், வெற்றி, தோல்வி, பலம், பலவீனம், பிரிவு, துணை, தன்னம்பிக்கை, சுயநலம், பித்து, அனுபவம், பரவசம், வலி, சுகம், இனிமை, கசப்பு, வாழ்க்கை, மரணம்!!!! இவை 'காதல்' பற்றி தமிழ் சினிமா கற்றுக் கொடுத்த பாடங்கள்... 80 வருட தமிழ் சினிமா வராற்றில் காதல் இல்லாத திரைப்படங்களை விரல் விட்டு எண்ணி விடலாம்!! தமிழ் சினிமாவையும் காதலையும் பிரித்து பார்க்க முடியாது.....

இந்த 80 வருட தமிழ் சினிமாவில் பல இயக்குனர்கள் காதலை பல பரிமாணங்களில், பலவிதமான உணர்வுகளில், பல விதமான சந்தர்ப்பங்களில் கையாண்டிருக்கின்றார்கள். இந்த 80 வருட சினிமாவில் என்னை கவர்ந்த காதல் திரைப்படங்களை முடிந்தவரை பட்டியலிடுகின்றேன்......

C.V.ஸ்ரீதர்


தமிழ் சினிமாவில் காதலை மாறுபட்ட கோணங்களில் கையாண்ட முதல் இயக்குனர் ஸ்ரீதர்; 'கல்யாண பரிசு' தொடங்கி 'நினைவெல்லாம் நித்யா' வரை ஸ்ரீதரின் திரைக்காவியங்கள் அனைத்தும் காதலை முன்னிறுத்தித்தான் பின்னப்பட்டிருக்கும், கூடவே நகைச்சுவையும் மிகச்சிறப்பாக இருக்கும்!!! எனக்குப் பிடித்த ஸ்ரீதரின் காதல் காவியங்களில் சில....

கல்யாண பரிசு - ஜெமினி கணேஷன், சரோஜாதேவி, விஜயகுமாரி இடையேயான முக்கோண காதலை சிறப்பான திருப்புமுனை காட்சிகளோடு சொல்லியிருப்பார் ஸ்ரீதர். அக்கா தங்கையான சரோஜாதேவி, விஜயகுமாரி இருவரும் தமது வீட்டில் வாடகைக்கு குடியிருக்கும் ஜெமினியை காதலிக்கிறார்கள்; ஆனால் ஜெமனி சரோஜாதேவியைத்தான் காதலிக்கிறார். தன் அக்காவிற்காக தன் காதலை விட்டுக் கொடுக்கிறார் சரோஜாதேவி, விருப்பமில்லாமல் மணவாழ்க்கையில் நுழைகிறார் ஜெமினி, பின்னர் என்னவாயிற்று என்பதை தனது சுவாரசியமான திரைக்கதையால் சிறப்பாக சொல்லியிருப்பார் ஸ்ரீதர். ஸ்ரீதர் முதல் முதலாக இயக்கிய இந்த திரைப்படம் மிகப்பெரும் வசூலை அள்ளி சாதனை படைத்தது!! இந்த படத்தின் வெற்றிக்கு தங்கவேலுவின் மிகச்சிறப்பான காமடியும் முக்கிய காரணி.......நெஞ்சில் ஓர் ஆலயம் - மற்றுமொரு முக்கோண காதல்க்கதை; கல்யாண குமாரை காதலித்து, பின்னர் முத்துராமனை கைப்பிடிக்கிறார் தேவிகா. முத்துராமனை பாரிய நோய் தாக்குகின்றது, மருத்துவமனையில் சேர்க்கப்படுகின்றார்; அங்கே மருத்துவராக கல்யாணகுமார்!! தன் கணவனை காப்பாற்ற முன்னாள் காதலனை இறைஞ்சும் தேவிகா, தன் உயரை இழந்து காதலியின் கணவனை காப்பாற்றும் கல்யாணகுமார்; என படம் 7 நாட்களுக்குள் நிகழ்வதைபோல படமாக்கியிருப்பார் ஸ்ரீதர். காலத்தால் அழிக்க முடியாத பாடல்கள், மிகச்சிறப்பான ஒளிப்பதிவு, கூடவே நாகேசின் காமடி போன்றவற்றால் வணிக ரீதியிலும் வெற்றி பெற்ற 'நெஞ்சில் ஓர் ஆலயம்' ஸ்ரீதரின் மற்றுமொரு காலத்தை விஞ்சிய காதல் காவியம்!!!


காதலிக்க நேரமில்லை -
ஒரு ஜனரஞ்சகமான படைப்புக்கு உதாரணமாக சொல்லப்படும் திரைப்படம்; காதல், நகைச்சுவை, பாடல்கள், ஒளிப்பதிவு என அத்தனையும் பிரமாதம். முக்கோண காதல் கதையில் முத்திரை பதித்த ஸ்ரீதர்; மூன்று காதல் ஜோடிகளை வைத்து உருவாக்கிய திரைப்படம்தான் காதலிக்க நேரமில்லை. முத்துராமன் - காஞ்சனா, ரவிச்சந்திரன் - ராஜஸ்ரீ, நாகேஷ் - சச்சு ஜோடிகளின் காதலை சிறு தொய்வுமின்றி காமடி கலந்த திரைக்கதையுடன் விறுவிறுப்பாக படமாக்கியவிதம் அருமை. நாகேஷ் - பாலையா காமடி காட்சிகள் என்றென்றும் மறக்க முடியாதவை. வணிக ரீதியில் மிகப்பெரும் சாதனை புரிந்த காதலிக்க நேரமில்லை தமிழ் சினிமாவின் ஒரு மைல்க்கல்.

இளமை ஊஞ்சல் ஆடுகிறது - மற்றுமொரு முக்கோண காதல் கதை; ரஜினி, கமல், ஸ்ரீபிரியா இடையிலான முக்கோண காதலை புதிய கோணத்தில் எதிர்பாராத இறுதிக் காட்சிகளோடு ஸ்ரீதர் படமாக்கியிருப்பார். ரஜினி, கமல் இணைந்து நடித்த திரைப்படங்களில் இருவருக்கும் சம அளவில் ஸ்கோப் உள்ள திரைப்படம் என்றால் அது இதுதான். கமலின் காதலியாகி, ரஜினியின் 'தீண்டா' மனிவியாகி, பின்னர் ரஜினியால் கமலுடன் சேர்த்து வைக்கப்படும் ஸ்ரீபிரியாதான் உண்மையில் இந்த திரைப்படத்தின் முதன்மை நட்ச்சத்திரம்!! இளையராஜாவின் அற்ப்புதமான இசை படத்திற்கு மிகப்பெரும் பலம், "ஒரே நாள் உன்னை நான்" பாடல் அதிகமான ராஜா ரசிகர்களின் one of the favorite song ...

பாரதிராஜா


கிராமத்து மண்வாசனையை அள்ளிக்கொடுத்த இயக்குனர் இமயத்தின் கிராமத்து காதல் கதைகளின் பரிமாணங்கள் தமிழ் சினாமாவின் மைல்க்கற்கள் என்பதில் மாற்றுக்கருத்து இல்லாதவை. பாரதிராஜாவின் ஒவ்வொரு திரைப்படத்திலும் காதல் ஆழமாக சொல்லப்பட்டிருந்தாலும் விசேடமான சில திரைப்படங்களை மட்டும் பார்த்தால்......அலைகள் ஓய்வதில்லை - விடலைப்பருவ காதலை கார்த்திக், ராதா கேரக்டர்கள் மூலம் அழகாக சொல்லியிருப்பார் பாரதிராஜா. பருவக்காதல் படுத்தும் பாட்டை தெளிவான காட்சிகள்மூலம் துல்லியமான திரைக்கதையால் அழகாக கையாண்டிருப்பார் பாரதிராஜா. மதம், அந்தஸ்த்து, பணம் காதலுக்கு தடை இல்லை என்பதுதான் படத்தின் மையக்கரு; அதற்கு காதல், நட்பு, பாசம் போன்றவற்றால் காட்சிகளை பின்னியவிதம் அருமை. கார்த்திக், ராதாவின் சிறப்பான இளமை ததும்பும் நடிப்பும், இளையராஜாவின் மிகச்சிறப்பான இசையும் இந்த திரைப்படத்தை தமிழ் சினிமாவின் காலத்தால் அழியாத திரைப்படங்கள் வரிசையில் சேர்த்துள்ளது என்றால் அது மிகையில்லை!!!!

கடலோரக் கவிதைகள் - ஒரு முரட்டு வாலிபனுக்குள் காதல் வந்தால் அது அவனை என்ன பாடாய் படுத்தும் என்கின்றதுதான் மையக்கரு; ஊரில் பொறுக்கியாக சுற்றிக்கொண்டிருக்கும் சத்யராஜ்சிற்க்கு அந்த ஊருக்கு பாடம் சொல்லிக்கொடுக்க வரும் டீச்சர் மீது காதல் ஏற்ப்படுகின்றது; அதன் பின்பு அவர் என்ன ஆனார்? அவர் காதல் கைகூடியதா என்பதுதான் திரைக்கதை. சத்யராஜ் முரட்டுத்தனம் + அப்பாவித்தனம் என இரண்டு நிலைகளிலும் அதகளப்படுத்தியிருப்பர். கடற்கரையை அண்டிய சூழலை அழகாக படம் பிடித்திருக்கும் பாரதிராஜாவின் திரைக்கதைக்கு மேலும் பலம் சேர்த்தவர் இசைஞானி என்றால் மிகையில்லை. பின்னணி இசை, பாடல்கள் இரண்டுமே படத்திற்கு மிகப்பெரும் பலம்.

முதல் மரியாதை - தமிழ் சினிமாவின் அடையாளங்களான ஒரு சில திரைப்படங்களில் 'முதல் மரியாதை'யும் ஒன்று. வாழ்க்கையில் காதலே இல்லாமல் 50 வயதை தாண்டிய பெரியவருக்கும் திருமணமாகாத இளம் யுவதிக்குமான காதலை சிறப்பாக சொல்லியிருப்பார் பாரதிராஜா. பெரியவராக சிவாஜி கணேசன் அவர்களது நடிப்பை பற்றி சொல்லும் தகுதி எமக்கில்லை!!! அவர் ஒரு நடிப்புலகின் பிதாமகன் என்பதற்கு இந்த திரைப்படம் ஒன்றே சாட்சி சொல்லும்; சிவாஜியின் கழுத்து எலும்பும் நடிக்கும் என நிரூபித்திருப்பார்! இளையராவை பற்றி அறியாத, புரியாதவர்கள் இந்த திரைப்படத்தின் பின்னணி இசையை கேட்டால் இளையராஜா ஒப்பீட்டுக்கு அப்பாற்பட்டவர் என்பதை புரிந்து கொள்ளலாம்!!! பாடல்களும் பிரமாதம். கூடவே ராதாவின் நடிப்பும் மிகச்சிறப்பானது; இப்படியொரு திரைக் காவியத்தை கொடுத்த பாரதிராஜாவை எவ்வளவு பாராட்டினாலும் தகும்!!

காதல் ஓவியம் - கண் தெரியாத சிறப்பான குரல்வளம் உள்ள வாலிபனுக்கும், நடனத்தை நேசிக்கும் யுவதிக்குமான காதலில், இருவரும் ஊரைவிட்டு செல்கிறார்கள்; விதி இருவரையும் பிரிக்கின்றது. காதலன் கண்பார்வை பெறுகின்றான், காதலி வேறொருவரின் மனைவியாக அவன் முன்னே!!! மீதி கதை என்ன என்பதுதான் கிளைமாக்ஸ்... கண்ணன், ராதா இருவரதும் முகபாவங்கள் படம் முழுவதும் அபாரம். இளையராஜாவின் அற்ப்புதமான பின்னணி இசை மற்றும் பாடல்கள் படத்திற்கு மிகப்பெரும் பலம். இசையையும் காதலையும் இணைத்து பார்ப்பவர்களை உருக்கும் திரைக்கதையை அமைத்து அதில் வெற்றி பெற்றிருப்பார் பாரதிராஜா!!!

மணிரத்னம்


எந்தமாதிரி திரைப்படம் எடுத்தாலும் அதிலே காதலுக்கு மிக முக்கியத்துவம் கொடுக்கும் இயக்குனர்களில் மணிரத்தினம் முதன்மையானவர். பகல் நிலவில முரளி - ரேவதி காதல் தொடக்கம் ராவணனில் விக்ரம் - ஐஸ்வர்யாராயின் மோகம் வரை மணிரத்தினத்தின் காதல் காட்சிகளில் இருக்கும் கிறக்கம் வேறெந்த இயக்குனருக்கும் வராதது!!! அத்தனை திரைப்படங்களிலும் காதலை அழகாக சொல்லியிருந்தாலும் ஒரு சில திரைப்படங்கள் மறக்கமுடியாத காதல் திரைப்படங்கள்......மௌனராகம் - கார்த்திக் - ரேவதி; ரேவதி - மோகன் காதல் இடையான காதலை ரசிக்கும்படி கொடுத்திருப்பார் இயக்குனர் மணிரத்னம். கார்த்திக் - ரேவதி காதல் துதுரு என்றால்; மோகன் - ரேவதி காதல் மனதை வருடும் பாசப்பிணைப்பு. சாதாரண கதைக்கு மணிரத்தினத்தின் திரைக்கதையும், வசன உச்சரிப்புக்களும், இளையராஜாவின் மயிர்கூச்செறியும் பின்னணி இசையும், பாடல்களும், P.C.ஸ்ரீராமின் ஒளிப்பதிவும் மௌனராகம் திரைப்படத்தை வேறொரு தரத்துக்கு இட்டுச்சென்றது. இறுதிக்காட்சிகளில் இளையராஜாவின் பின்னணி இசை வார்த்தைகளுக்கு அப்பாற்ப்பட்டது!!!


இதயத்தை திருடாதே -
கீதாஞ்சலி என்னும் பெயரில் தெலுங்கில் வெளிவந்து மிகப்பெரும் வெற்றி பெற்ற திரைப்படத்தின் தமிழ் டப்பிங் பதிப்புத்தான் இதயத்தை திருடாதே!!! புற்றுநோயால் மரணத்தை எதிர்பார்த்திருக்கும் நாகர்ஜுன் நாயகி கிரிஜாவை சந்திக்கின்றார்; அவருக்கும் ஒரு பிரச்சனை இருக்கின்றது; இந்த சந்திப்பு இருவர் வாழ்க்கையினையும் எப்படி மாற்றியமைக்கின்றது என்பதுதான் கதை.... P.C.ஸ்ரீராமின் ஒளிப்பதிவும், இசைஞானியின் பின்னணி இசையும் பார்ப்பவர்களை உருகவைக்கும்.... இளையராஜாவின் மிகச்சிறந்த ஆல்பங்களில் இதுவும் ஒன்று; அத்தனை பாடல்களும் அற்ப்புதம்!!! ஒரு டப்பிங் படமாக வெளிவந்து தமிழில் சக்கை போடுபோட்ட இதயத்தை திருடாதே மணிரத்தினம், இளையராஜா, P.C.ஸ்ரீராமின் கூட்டணியின் ஒரு மிகச்சிறந்த காதல் திரைப்படம்.


அலைபாயுதே -
ஒரு திரைப்படத்தில் காதல் இருக்கும், ஆனால் காதலை மட்டுமே முன்னிறுத்தி ஒரு திரைப்படமாக வெளிவந்த அலைபாயுதே தமிழ் சினிமாவின் அல்ட்டிமேட் காதல் திரைப்படம. கதை என்றெல்லாம் ஒன்றுமில்லை, காதலை மட்டுமே லைனாக வைத்து மணிரத்தினம் அமைத்த திரைக்கதைக்கு ஏ.ஆர்.ரகுமானின் பாடல்களும், P.C.ஸ்ரீராமின் ஒளிப்பதிவும் மிகப்பெரும் பலம். மாதவன், ஷாலினியின் காதல் காட்சிகளில் வரும் வசன உச்சரிப்புக்கள் காதலை வெறுத்தவனையும் ஒருகணம் உருகவைக்கும்.....

பிற இயக்குனர்களின் காதல் திரைப்படங்கள்


மூன்றாம் பிறை - பாலுமகேந்திரா இயக்கத்தில் இளையராஜாவின் அற்ப்புதமான இசையில் கமல்ஹாசன், ஸ்ரீதேவியின் அபாரமான நடிப்பில் பார்த்த அனைவரையும் கண்களை பனிக்க வைத்த திரைப்படம் மூன்றாம் பிறை. 'காதல் கவிஞன்' கண்ணதாசனின் இறுதிப்பாடல் இடம்பெற்ற திரைப்படம் என்கின்ற பெருமையும் 'மூன்றாம் பிறை'க்கு உண்டு. மனநலம் பாதிக்கப்பட்டு விலை மாதுவாக கமல்ஹாசனிடம் அறிமுகமாகும் ஸ்ரீதேவியை கமல் ஆரம்பத்தில் இரக்கப்பட்டு தன்னுடன் சேர்த்தாலும், நாளாக நாளாக காதலால் உருகும் போதும், இறுதியில் மனம் நலம்பெற ஸ்ரீதேவி கமலை யார் என்றே தெரியாமல் தவிக்கவிட்டு செல்லும் இறுதிக் காட்சிகளிலும் கமல்ஹாசனின் நடிப்பு அபாரம்!!! இறுதிக் காட்சிகளை பார்த்து அழாதவர்கள் இருக்க முடியாது, அவர் கல்லினாலான இதயத்தை உடையவராயினும்!!!புன்னகை மன்னன் - கே.பாலச்சந்தரின் இயக்கத்தில் இளையராஜாவின் இசையில் கமல்ஹாசன் நடித்த மற்றுமொரு காதல் திரைப்படம். மலை உச்சியில் இருந்து கமலும், ரேகாவும் தற்கொலைக்கு குதிக்கும் காட்சிகளின் பரபரப்பு இப்போது நினைத்தாலும் மனதில் கனத்தை உண்டுபண்ணும்!!! சாக நினைக்கும்போது வாழச்சொல்லி உதைக்கும் உலகம், வாழ நினைக்கும் போது என்ன சொல்கின்றது? என்கின்றதுதான் கதையின் லைன்; இந்த கதைக்கு கமல்ஹாசன், ரேவதி, ஸ்ரீவித்யா, ரேகா பாத்திரங்களது துணையுடன், இசைஞானியினது சிறப்பான பாடல், மற்றும் பின்னணி இசை கொண்டு பாலச்சந்தர் அமைத்த திரைக்கதை பார்க்கும் அனைவரையும் உருகவைக்கும்..

அந்த ஏழு நாட்கள் - பாக்யராஜ்சின் 'டிப்பிக்கல் லவ் ஸ்டோரி' தான் விரும்பிய காதலனை மணக்க முடியாமல் வேறொருவரை மணக்கும் பெண், தன் கணவரிடம் தன் காதலை கூறி தன்னை விடுவிக்குமாறு கணவனை கெஞ்சி காதலனை அடைய எத்தணிக்கிறாள்; முடிவு என்ன என்பதுதான் கிளைமாக்ஸ். திரைக்கதை பின்னிவதில் இந்தியாவின் நம்பர் வண்ணான பாக்யராஜ்சிற்க்கு இந்த கதைக்கு திரைக்கதை அமைப்பது அல்வா சாப்பிடுவது போன்றது. அலாதியாக ரசிக்கும்படி திரைக்கதை அமைத்து இந்த திரைப்படத்தை வெற்றிப் படமாக்கியிருப்பார் பாக்யராஜ்; காதலனாக - பாக்யராஜ், காதலியாக - அம்பிகா, கணவனாக - ராஜேஷ் நடித்திருப்பார்கள்.....

இதயம் - கதிர் இயக்கத்தில் முரளி, ஹீரா நடித்த முழுமையான காதல் திரைப்படம்; வணிக ரீதியில் பெரும் வெற்றி பெற்ற இதயம் திரைப்படத்தின் வெற்றிக்கு ராஜாவின் இசையும் முக்கிய காரணம். பாடல்கள், பின்னணி இசையில் ராஜா காதலை சொட்டியிருப்பார். காதலை சொல்வதற்கு முரளி படும் பாட்டை படம் முழுக்க பதட்டத்துடன் கையாண்டிருப்பார் கதிர்....

காதல் தேசம் - கதிர் இயக்கிய மற்றுமொரு வித்தியாசமான காதல் திரைப்படம். நண்பர்கள் இருவர் ஒரு பெண்ணை காதலிக்கும் கதைக்கு இளமை, இசை துணைகொண்டு சிறப்பான திரைக்கதை அமைத்து அதில் வெற்றியும் பெற்றிருப்பார் கதிர்; A.R.ரகுமானின் இசையில் பாடல்கள் இந்த திரைப்படத்திற்கு மிகப்பெரும் பலம். ரகுமானின் அல்டிமேட் திரைப்படங்களில் 'காதல் தேசமும்' ஒன்று; வினித், அப்பாஸ் நாயகர்களாகவும் தபு நாயகியாகவும் இளமை சொட்ட சொட்ட நடித்த இந்த திரைப்படத்தின் சிறப்பே அதன் இறுதிக்கட்ட காட்சிதான்......


பூவே உனக்காக -
தான் ஒருதலையாக விரும்பிய காதலிக்காக அவள் விரும்பிய காதலனை அவளுடன் சேர்த்து வைக்கும் சிம்பிளான கதைதான். இந்த கதைக்கு குடும்ப உறவுகளை துணை கொண்டு மிகச்சிறப்பாக திரைக்கதை அமைத்திருப்பார் இயக்குனர் விக்ரமன். மிகப்பெரும் வெற்றி அடைந்த இந்த திரைப்படத்தின் வெற்றிக்கு பாடல்களும் ஒரு காரணம். காதலை இழந்து காதலியை வாழ வைத்துவிட்டு விஜய் எங்கோ செல்வதுபோல அமைந்த இறுதிக்காட்சியில் மனது கனமாவதை தவிர்க்க முடியாது; விஜயின் சிறப்பான திரைப்படங்களில் இதுவும் ஒன்று.......காதல் கோட்டை - பார்க்காத காதலை தமிழ் சினிமாவிற்கு அறிமுகப்படுத்திய முதல் திரைப்படம். கடிதம் மூலம் ஒருவருக்கொருவர் முகம் தெரியாமலே காதலிக்கும் நாயகனும் நாயகியும் சேர்ந்தார்களா? இல்லையா? என்பதை சுவாரசியமாக சொல்லியிருப்பார் இயக்குனர் அகத்தியன். அஜித், தேவயாணி காதலர்களாக நடித்த இந்த திரைப்படத்தில் ஹீராவின் ஒருதலை காதலும் சொல்லப்பட்டிருக்கும்!!! மிகப்பெரும் வெற்றி அடைந்த இந்த திரைப்படத்திற்கு பாடல்கள் மேலும் பலம் சேர்த்தது. இந்த திரைப்படத்தின் மையக்கருவை எடுத்துக்கொண்டு பல திரைப்படங்கள் இதே பாணியில் வெளிவந்தாலும் 'காதல் கோட்டை' போல் வேறெதுவும் வெற்றிபெறவில்லை......


காதலுக்கு மரியாதை -
தங்கள் குடும்பங்களுக்காக தமது காதலை விட்டுக்கொடுக்கும் காதலர்களை மையப்படுத்தி வெளியான திரைப்படம். பாசத்திற்கும் காதலுக்குமிடையிலான போராட்டத்தை தனக்கே உரிய பாணியில் இயக்குனர் பாசில் அருமையாக வெளிக் கொண்டுவந்த திரைப்படமிது!!! இளையராஜாவின் இசையில் பாடல்களும் பின்னணி இசையும் சிறப்பு. விஜய், ஷாலினி ஜோடியும்; விஜய், தாமு, சார்லி நடப்பும் திரைக்கதையில் சிறப்பாக பின்னப்பட்டிருக்கும். காதலா, பாசமா ஜெயித்தது என்பதை சிறப்பான இறுதிக்கட்ட காட்சிகள் மூலம் பாசில் சொல்லியிருப்பார்.....


பாரதி கண்ணம்மா -
ஜாதியை மையப்படுத்தி ஆங்காங்கே காதல்கள் தமிழ் சினிமாவில் வெளிவந்திருந்தாலும், முழுக்க முழுக்க ஒரு திரைப்படத்தை இந்த கான்செப்டில் கொடுத்திருப்பார் இயக்குனர் சேரன்; இந்த திரைப்படத்தின் இன்னுமொரு சிறப்பு அதன் இறுதிக்கட்ட காட்சிகள்தான்; தமிழ் சினிமாவிற்கு அது ஒரு புதுமை!!!! பார்த்தீபன், மீனா இடையிலான காதலையும், அவர்களுக்கு இடைவெளியான ஜாதி என்னும் இடைவெளியையும் சிறப்பாக கையாண்டிருப்பார் இயக்குனர் சேரன். தேவாவின் இசையும் இந்த திரைப்படத்தின் வெற்றிக்கு மிகப்பெரும் காரணம்....

சேது - தமிழ் சினிமாவின் மற்றுமொரு மைல்கல்; இயக்குனர் பாலாவின் முதல் படைப்பு, ஒரு சாதாரண துருதுருவென இருக்கும் இளைஞன் வாழ்க்கையை காதல் எப்படி மாற்றிவிடுகின்றது என்கின்ற கதையை நாயகன் மூலம் உருகி உருகி சொல்லியிருப்பார் பாலா. விக்ரமின் அபார நடிப்பும், இசைஞானியின் அற்ப்புதமான இசையும் இந்த திரைப்படத்தை வேறொரு லெவலுக்கு கொண்டு சென்றது என்றால் அது மிகையில்லை!!! இந்த திரைப்படத்தின் இறுதிக்காட்சிகளை பார்த்து கலங்காத இதயங்ககளை விரல்விட்டு எண்ணிவிடலாம்!!


காதல் கொண்டேன் -
காதலா, இல்லை காமமா, இல்லை நட்பா என்பது தெரியாமல் ஒரு பெண்ணை அடைய எத்தனிக்கும் இளைஞன் அவளை அடைய என்னென்ன செய்கின்றான்? இறுதியில் அவளை அடைந்தானா? இல்லையா? என்பதை புதுமையான திரைக்கதை மூலம் சொல்லியிருப்பார் இயக்குனர் செல்வராகவன். யுவனின் இசையும், அரவிந்த் கிருஷ்ணாவின் ஒளிப்பதிவும், தனுசின் திறமையும், சோனியாவின் இளமையும் 'காதல் கொண்டேன்' திரைப்படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணிகள்.....

காதல் - பாலாஜி சக்திவேலின் இயக்கத்தில் பரத், சந்தியா நடிப்பில் வெளிவந்த காதல் திரைப்பம்தான் 'காதல்'. வசதி படைத்த பள்ளி மாணவியும், மெக்கானிக் இளைஞனும் காதல் கொள்வதும், அதை தொடர்ந்து வரும் பிரச்சனைகளையும் சொல்வதுதான் கதை என்றாலும் பாலாஜி சக்திவேல் அமைத்த திரைக்கதை அபாரம். விஜய் மில்டனின் ஒளிப்பதிவும், ஜோஷ்வா ஸ்ரீதரின் இசையும் இந்த திரைப்படத்திற்கு மிகப்பெரும் பலம். காதலின் ஜதார்த்தத்தை பிரதிபலித்த இந்த திரைப்படத்தின் இறுதிக்காட்சிகள் உருக்கம்.........

பருத்திவீரன் - பாரதிராஜா தொடாத கிராமத்து இளைஞம் மற்றும் யுவதியின் காதல். அமீரின் பாத்திர படைப்புகள்தான் இந்த திரைப்படத்தின் சிறப்பு. கார்த்தி, பிரியாமணி காதல் காட்சிகளில் நடிப்பில் கலக்கியிருப்பார்கள். யுவனின் கிராமத்து இசை படத்திற்கு மிகப்பெரும் பலம். மண் வாசனையுடன் கிராமத்தின் முரட்டுக் காதலை இனிமையாக சொன்ன பருத்திவீரனின் இறுதிக்காட்சிகளை பார்த்து உருகி கண் கலங்காத மனிதர்கள் இருக்க முடியாது.......
விண்ணைத் தாண்டி வருவாயா -
நவீன காதலை நாகரிக இளைஞர், யுவதிகளுக்கு ஏற்ப சிறப்பான திரைக்கதையில் காதல் சொட்ட சொட்ட கௌதம் மேனன் இயக்கிய திரைப்படம்தான் 'விண்ணைத் தாண்டி வருவாயா'. இந்த திரைப்படத்தின் மிகப்பெரும் பலம் A.R.ரகுமானின் பாடல்கள்தான். பாடல்களின் உதவியுடன் சிம்பு, திரிஷா காதலை கௌதம் சொன்னவிதம் பெரும்பான்மை இளைஞர்களை இந்த திரைப்படத்துடன் கட்டிப்போட்டது. ஜெஸிக்காக இளைஞர்களும், கார்த்திக்கிற்காக பெண்களும் ஏங்கும் வண்ணம் சிறப்பான திரைக்கதைமூலம் காதல் ரசம் சொட்டியிருப்பார் கௌதம் மேனன்.

இவை தவிர நினைவெல்லாம் நித்யா, பூக்களைத்தான் பறிக்காதீங்க, பன்னீர் புஷ்பங்கள், கிளிஞ்சல்கள், வைதேகி காத்திருந்தாள், இதயக் கோவில், ரோஜா, காதலன், காதல் மன்னன், பூவேலி, ரட்சகன், மின்னலே, 7G ரெயின்போ காலனி, இயற்க்கை, சம்திங் சம்திங், சுப்ரமணியபுரம், மைனா, மயக்கம் என்ன போன்ற பல திரைப்படங்கள் காதலை மையக்கருவாக சுமந்துவந்து வெற்றிபெற்ற திரைப்படங்கள். காதலை அழகாக சொல்லிய எந்த திரைப்படத்தையும் தமிழ் ரசிகர்கள் கைவிட்டதில்லை!!! தமிழர்கள் உள்ளவரை தமிழ் சினிமா வாழும், கூடவே தமிழ் சினிமாவில் காதலும் வாழும்; புதிய பரிமாணங்களில்!!!!

அனைவருக்கும் காதலர் தின நல்வாழ்த்துக்கள்.......


6 வாசகர் எண்ணங்கள்:

கோவை நேரம் said...

காதலர் தினத்தில் காதல் கொண்ட படங்களின் அணிவகுப்பு அருமை

ஹாலிவுட்ரசிகன் said...

மிக அருமையான தொகுப்பு. அனேகமான படங்கள் இன்னும் நான் பார்க்கவில்லை. கொஞ்சம் கொஞ்சமாக டீவீடீ வாங்கிப் பார்க்கவேண்டும்.

படங்கள் பற்றி சிறுகுறிப்பு நன்றாக இருக்கிறது. நன்றி தர்ஷன்.

shabi said...

இளையராஜாவின் மிகச்சிறந்த அல்பங்களில் ///// அர்த்தமே மாறிப் போய்விடும்... ஆல்பம் என்று இருக்க வேண்டும்.....

எப்பூடி.. said...

shabi

//அர்த்தமே மாறிப் போய்விடும்... ஆல்பம் என்று இருக்க வேண்டும்.....//


அல்ப்பம் என்றால்த்தான் பொருள் மாறும் சகோதரா; எங்க ஊரில அல்பம் என்றுதான் உச்சரிப்போம்!!!!

Jayadev Das said...

ஓஹோ... இது காதலர் தின ஸ்பெஷலா.... ஒ.கே. ஒ.கே. அது சரி, பதிவுகளில் போட்ட எல்லா படங்களையும் சரியா போட்டுட்டு விண்ணைத் தாண்டி வருவாயா படத்துக்கு மட்டும் சம்பந்தமே இல்லாத படத்தை போட்டுட்டீங்களே பாஸ்.... ஏன்.!! ஹா..ஹா..ஹா...

Kettavan said...

விசய் தாய்லி படமெல்லாம் ஒரு படம்னு இந்த லிஸ்ட்ல சேத்துருக்க நீ

Post a Comment

"கருத்துக்கள், நிறைகுறைகள், திட்டுக்கள், பாராட்டுக்கள் போன்றவற்றை கூற விரும்புபவர்கள் கீழுள்ள பின்னூட்ட பெட்டியில் பின்னூட்டலாம்; பதிவுகளை வாசிக்காமல் இடப்படும் டெம்பிளேட் பின்னூட்டங்கள் வேண்டாம் நண்பர்களே."

*******************

வடை, வாழைப்பழம், சூப்பர், கலக்கல் என மொய் வைக்க வரும் நண்பர்களுக்கு; நான் யாருக்கும் பதிலுக்கு மொய் வைக்க மாட்டேன்.(இதனால் ஏற்ப்படும் தர்ம சங்கடத்திற்கு வருந்துகின்றேன்)