Wednesday, December 28, 2011

2011 இல் எனக்குப் பிடித்த திரைப்படங்கள் & திரையிசைப் பாடல்கள்

இந்தாண்டு வெளிவந்த திரைப்படங்களில் நான் பார்த்ததில் எனக்கு மிகவும் பிடித்த திரைப்படங்களை வரிசைப்படுத்தியுள்ளேன். வசூல், படத்தின் தரம் இவை எதையும் கவனத்தில் கொண்டு இந்த வரிசைப்படுத்தல் இடம்பெறவில்லை; முழுக்க முழுக்க எனக்கு பிடித்த திரைப்படங்களின் வரிசைதான் இது. அதேபோல இந்த ஆண்டு வெளிவந்த பாடல்களில் என்னை அதிகம் ஈர்த்த பாடல்களில் பத்து பாடல்களை பகிர்கின்றேன். ஒவ்வொருவருக்கும் ரசனை மாறுபடலாம்; உங்கள் இரசனைகளை பகிர நினைப்பவர்கள் கீழுள்ள கமன்ட் பெட்டியில் தங்களுக்கு பிடித்த வரிசையை பகிர்ந்து கொள்ளுங்கள் :p

2011 இல் பிடித்த 10 திரைப்படங்கள்


(10) டூ
இதுவொரு லோ பட்ஜெட் திரைப்படம்; 'பொட்டலம்' கார்த்தி சொல்லியிருக்காவிட்டால் நிச்சயம் இந்த திரைப்படத்தை பார்த்திருக்க மாட்டேன். DVD இல்த்தான் பார்த்தேன், பெரிதாக புதுமை என்றெல்லாம் ஒன்றுமில்லை, வழமையான கதைதான்; ஆனால் சுவாரசியமான திரைக்கதை, அலட்டல் இல்லாத இயல்பான நடிப்பு, மிகச்சிறப்பான வசனங்கள் என நிறைவான திரைப்படம், பொழுதுபோக்கிற்கு திரைப்படம் பார்க்க நினைப்பவர்களுக்கு 'டூ' திரைப்படம் நிச்சயம் பிடிக்கும்.....

(9) குள்ளநரிக் கூட்டம்
'விழிகளிலே விழிகளிலே' பாடலுக்காக பார்த்த திரைப்படம், முதல்ப்பாதி விறுவிறுப்பு, இரண்டாம்பாது சுமாராக இருந்தாலும் சலிப்பை ஏற்ப்படுத்தவில்லை. விஸ்ணு மற்றும் ரம்யாவின் காதல்க் காட்சிகள் யாதார்த்தம் கலந்த கவிதை. அன்றாட வாழ்வின் நாம் சந்திக்கும் சில விடயங்களை சுவாரசியமாக திரைக்கதையில் நுளைத்திருப்பார் அறிமுக இயக்குனர் ஸ்ரீபால்ராஜ்.....

(8) காவலன்
2005 க்கு அப்புறம் எனக்கு எப்படி ஒரு விஜய் படம் பிடித்தது என்பது சத்தியமாக தெரியாது:p கிளைமாக்ஸ் தவிர்த்து மிகுதி எல்லாமே மிகவும் பிடித்திருந்தது. விஜயக்குள் இருக்கும் நடிகனை யாராவது எப்போதாவதுதான் தட்டி எழுப்புவார்கள் (விஜய்க்கு நடிக்கத் தெரியாது என்பதை நான் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டேன்) இந்தத்தடவை சித்திக்கின் முறை, விஜயை சரியாக பயன்படுத்தியிருந்தார். வடிவேல் - விஜய் காமடி பட்டாசு; அசினின் முகம் முதுமையினை தொட்டாலும் நடிப்பில் முதிர்ச்சி நன்றாக தெரிந்தது; விஜயை பிடிக்காதவர்களுக்கும் காவலன் நிச்சயம் பிடிக்கும்!!

(7) மங்காத்தா
'தலை' ஆடிய மங்காத்தா, 'தலை'யால் மட்டுமே ஆடக்கூடிய மங்காத்தா பிடிக்காமல் போயிருந்தால்த்தான் ஆச்சரியம்; மங்காத்தா - முழுக்க முழுக்க அஜித் ஆடிய 'ONE MAN SHOW'. நெகட்டிவ் ரோலுக்கு ரஜினிக்கு அப்புறம் அஜித்தான் என்பதை மீண்டுமொருதடவை மங்காத்தா உணர்த்தியது. லாஜிக் மறந்து பார்த்தால் மங்காத்தா ஒரு பக்கா கமர்சியல் விருந்து........

(6) கோ
கம்யூனிசம், ஈரவெங்காயம் என்று வெறுவாய் மெல்பவர்களை தவிர்த்து இந்தப்படம் யாருக்காவது பிடிக்காமல் போயிருந்தால்த்தான் ஆச்சரியம்!! மிகமிக நேர்த்தியான திரைக்கதை, ஜீவாவின் சிறந்த on Screen Present, பாடல்கள், ஒளிப்பதிவு, இயக்கம் என அனைத்தும் சிறப்பாக அமைந்த திரைப்படம். கே.வி.ஆனந்த் தன்னை ஒரு சிறந்த கமர்சியல் இயக்குனராக இரண்டாவது தடவையாக நிரூபித்திருக்கின்றார்......

(5) வானம்
விண்ணைத்தாண்டி வருவாயா சிம்புவைவிட வானம் சிம்பு என்னை அதிகமாக ஈர்த்துள்ளார்; ஐந்து கதைகளை குழப்பமில்லாமல் நேர்த்தியான திரைக்கதைமூலம் ஒன்று சேர்த்த இயக்குனர் க்ரிஷ் அடுத்த திரைப்படத்திற்க்கான எதிர்பார்ப்பை கூட்டியுள்ளார். சந்தானம் அப்பாவித்தன கேரக்டரில் சிம்புவுடன் சேர்ந்து காமடியில் கலக்கியிருப்பார்; சிம்புவிற்கு ஜோடியாக நடித்த ஜாஸ்மின் பாஸினிற்கு கொடுக்கப்பட்ட குரலில் வசன உச்சரிப்பு நன்றாக இருக்கும்.....

(4) பயணம்
ராதாமோகன்; எனக்கு பிடித்தமான இயக்குனர்களில் ஒருவர். விமர்சனங்கள் நேர்மறையாக வந்ததால் பார்க்கும் ஆர்வம் அதிகமாகி 'பயணம்' திரைப்படத்தை பார்த்தேன்; மிகவும் பிடித்துப்போனது. தன் திரைப்படத்தில் வரும் ஒவ்வொரு கேரக்டர்களுக்கும் தீனி போடுவதில் ராதாமோகனை அடிச்சிக்க முடியாது; பயணத்திலும் அதை நீங்கள் உணரலாம், வழமைபோலவே ஷார்ப்பான வசனங்கள், கதையுடன் இழையோடும் நகைச்சுவை என 'பயணம்' ஒரு வித்தியாசமான அனுபவம்......

(3) தெய்வத்திருமகள்
தெய்வதிருமகள் I Am Sam திரைப்படத்தின் copy என்பது எனக்கு படம் பார்த்துவிட்டு வெளியே வரும்போதெல்லாம் தெரியாது; ஒரு நாவலை சுவாரசியமாக படித்த திருப்தியை கொடுத்த தெய்வத்திருமகள் COPY ஆக இருந்தாலும் இப்போதும் எனக்கு பிடித்த திரைப்படம்தான். விக்ரம் ஒரிஜினலை இமிடேட் செய்ததாக கூறினார்கள்; எனக்கு விக்ரம் நடிப்பு ரொம்ப ரொம்ப பிடித்திருந்தது; சந்தானத்தின் காமடியும் செம டைமிங்; அப்புறம் 'நிலா'வாக பேபி சாரா, 'நிலா' கொள்ளை கொள்ளாத மனமேது? கிளைமாக்ஸ்சில் விக்ரம், சாராவின் எக்ஸ்பிறசனும், ஜி.வி.பிரகாஷ்குமாரின் பின்னணி இசையும் எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பை ஏற்ப்படுத்தாதவை......

(2) மயக்கம் என்ன
மயக்கம் என்ன; பக்கா செல்வராகவன் திரைப்படம், படம் பார்த்துவிட்டு திரையரங்கை விட்டு முழுத் திருப்தியோடு வீடு திரும்பிய திரைப்படம். செல்வராகவன்மீது எனக்கு மிக அதிக எதிர்பார்ப்பு எப்போதும் இருக்கும், அதை செல்வா 'மயக்கம் என்ன'வில் முழுமையாக நிவர்த்தி செய்திருந்தார். தனுஷ், ரிச்சா இருவரும் ஒருவருக்கொருவர் சளைக்காமல் நடிப்பில் திறமையை வெளிக்காடினார்கள் என்றால்; ஜி.வி.பிரகாஷும் ராம்ஜியும் இசையிலும் ஒளிப்பதிவிலும் மிகச்சிறந்த உழைப்பை கொட்டியிருந்தார்கள். வழமையான செல்வா படங்களைப்போல எதிர்மறை முடிவில்லாமல் நேர்மறை கிளைமாக்ஸ் இருந்தமை 'மயக்கம் என்ன'வின் சிறப்பு......

(1) ஆடுகளம்
ராதாமோகன் வரிசையில் எனக்கு பிடித்த மற்றுமொரு இயக்குனர் வெற்றிமாறனின் இயக்கத்தில் 'ஆடுகளம்' முழுத் திருப்தியை கொடுத்தது. தேசிய விருதுகளை அள்ளிக்கொட்டிய 'ஆடுகளம்'; விருதிற்கு முழுத் தகுதியானதே!!! படம் முழுவதும் வெற்றிமாறன் டச்; தனுஷ் - ஆண்டுக்கு ஆண்டு நடிப்பில் ஏற்ப்படும் வளர்ச்சி Power Play யில் ஷேவாக் அடிக்கும்போது இருக்கும் Run Rate Graph போன்றது, அசுர வளர்ச்சி!!! பாடல்கள், ஒளிப்பதிவு, பின்னணி இசை என அமர்க்களப்படுத்திய ஆடுகளத்தின் Interval Blog படு பிரமாதமாக இருக்கும். என்னை மிகவும் கவர்ந்த ஆடுகளத்தால் தமிழ் சினிமாவிற்கு பெருமை என்பது மகிழ்ச்சியே.

*---------------------*


2011 இல் பிடித்த பத்து பாடல்கள்


10) கன்னித்தீவு பொண்ணா
மிஸ்கின் திரைப்படங்களில் ஒரு பாட்டு (ஒரே பாணியில்த்தான்) எப்பவுமே அமர்க்களமாக நடன வடிவமைப்பு செய்யப்படுவது வழக்கம்; இம்முறையும் 'கன்னித்தீவு பொண்ணா' பாடலுக்கு அருமையான நடன வடிமைப்பை கொடுத்திருக்கிறார்கள்; இசையமைப்பாளர் யாரென்று தேடினால் வெறும் கே(K) என்றுதான் வருகிறது; பல குறும்படங்கள், டாக்குமெண்டரிகளுக்கு இசையமைத்தவராம், அவரது பெப்பியான இசையும் M.L.R.கார்த்த்கேயனின் குரலும் இந்த பாடலை முதல்த்தடவை கேட்டதுமுதல் முனுமுனுக்க வைத்தது......

(9) நங்காய் நிலாவின் தங்காய்
இந்த பாடலில் இசையையும் தாண்டி வெளிநாட்டு நடன கலைஞர்களின் நடனம் அட போட வைத்தது; இரண்டாவது சரணத்திற்கு ஜெயம் ரவி நடனமாடாமல் அதற்கும் வெளிநாட்டு கலைஞர்கள் ஆடியிருந்தால் இன்னமும் சிறப்பாக இருந்திருக்கும்; அப்புறம் ஹென்சிகா........

(8) என்னமோ ஏதோ
ஹாரிஸின் அட்டகாசமான மெலடி; ஜீவா, கார்த்திகா, ஒளிப்பதிவு, சிம்பிளான நடன அசைவு என இந்தப் பாடல் பிடித்ததற்கு பல காரணங்கள்.....

(7) ஆரிரோ ஆராரிரோ
சுமாரான பாடலையும் தன குரலால் சூப்பராக மாற்றும் தந்திரம் தெரிந்த பாடகர் வரிசையில் ஹரிச்சரனுக்கும் இடமுண்டு; இந்த பாடலின் மெட்டு அருமை, அதை தன குரலால் ஹரிச்சரண் இன்னமும் சிறப்பாகியிருக்கிறார். ஹரிச்சரனின் குரல், நா.முத்துக்குமாரின் பாடல் வரிகள், ஜி,வி.பிரகாஷ்குமாரின் இசை, விக்ரம் மற்றும் சாராவின் பெர்போமன்ஸ் போன்ற காரணங்களால் இந்த பாடல் மிகவும் பிடிக்கும்.

(6) பிறை தேடும் இரவிலே
ஜி.வி.பிரகாஷ்குமாரின் கரியரில் மிகச்சிறந்த படல்களின் வரிசையில் இந்தப்பாடல் எப்போது இடம்பெற்றிருக்கும்; அருமையான மெட்டுக்கு சைந்தவியின் குரல் பலாச்சுளை மேல் தேனிட்டது போல தித்திப்பாக இருக்கும். காட்சிகளின் பின்னணியில் இசைக்கும் இந்தப்பாடலுக்கு; தகுந்த காட்சிகளை சரியான முறையில் தேர்ந்து கோர்த்திருப்பார்கள்......

(5) உன் பெயரே தெரியாது
இந்த பாடலில் மதுசிறியின் குரல் சிறப்பாக இருக்கும்; எனக்கு மதுசிறியை பிடிக்கா விட்டாலும் (காரணம் சாதனா குரலை இமிட்டேட் செய்வதால்) இந்த பாடலில் அவர் குரலில் தோ ஒரு கிறக்கம் ஏற்ப்பட்டத்தை தவிர்க்க முடியவில்லை. அனன்யாவும், பின்னணியில் இசைத்த பாடலுக்கு அமைக்கப்பட்ட காட்சி அமைப்பும் இந்த பாடலுக்கு கூடுதல் பலம்.

(4) ஹையையோ நெஞ்சு....
ஆயிரம் கைகள் மறைத்தாலும் ஆதவன் மறைவதில்லை; எத்தனை பாடகர்கள் வந்தாலும் எஸ்.பி.பி எஸ்.பி.பிதான். தன் மகன் சரணுடன் இணைந்து எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடிய இந்த பாடலின் பலமே அவரது கொஞ்சலான குரல்தான். இந்த பாடல் ஆரம்பிக்குமுன் வரும் இசை பிரமாதம்; கட்டிப்போடும் இசை, மயக்கும் குரல் என தித்திப்பாட பாடலை வழங்கிய ஜி.வி.பிரகாஷ்குமாருக்கு Hats Off.......

(3) யாத்தே யாத்தே
ஆடுகளத்தில் இருந்து இரண்டாவது தெரிவிது; "உன்னை வெள்ளாவி வச்சித்தான் வெளுத்தாங்களா? இல்லை வெயிலுக்கு காட்டாம வளர்த்தாங்களா" வரிகளால் ஏற்ப்பட்ட ஈர்ப்பு, திரும்ப திரும்ப கேட்க்க கேட்க்க இசைமீதும் பிடிப்பை ஏற்ப்படுத்தியது; திரைப்படம் வந்த பின்னர் காட்சியமைப்பு பாடலுக்கு மேலும் பலத்தை உண்டாக்கியது; தனுசின் பெர்போமான்ஸ், வேல்றாஜ்சின் ஒளிப்பதிவு, அழகுப்பதுமையாய் தப்சி என இந்த பாடல் விஷுவலாகவும் கொள்ளை கொண்டது.......

(2) விழிகளிலே விழிகளிலே
'விழிகளிலே விழிகளிலே' பாடல் குள்ளநரிக்கூட்டம் திரைப்படத்தின் வெற்றிக்கான முக்கிய காரணிகளில் ஒன்று; கார்த்திக், சின்மயி குரல்களில் V.செல்வகணேஷ் இசையில் சிறப்பான மெலடியாக 2011 இல் எனக்கு மிகவும் பிடித்த பாடலிதுதான். நாயகன் விஷ்ணு மற்றும் நாயகி ரம்யா இருவரின் பங்களிப்பில் விஷுவல் கூட யதார்த்தமாக இயல்பாக அமைந்திருக்கும்.

(1) சர சர சாரகாத்து


ஒரு பாடலை அதிகதடவை you tube இல் பார்த்திருப்பேன் என்றால் அது நிச்சயம் 'சரசர' பாடல்தான். கரணம் ஒளிப்பதவு, இசை, குரல், செட் (கலை), காஸ்டியூம், லொகேஷன் மற்றும் இனியா; இனியா கண்களால் கொடுக்கும் எக்ஸ்பிரஷன்..... சான்சே இல்லை, இன்றைய தேதியில் என்னோட பேவரிட் ஹீரோயின் "சர சர" பாடல் காட்சி 'இனியா'தான். சின்மயியின் குரலும் கேட்ப்பதற்கு மிகவும் இனிமையாக இருக்கும்....(1*) கொலைவெறி


இந்தப் பாடலுக்குரிய திரைப்படம் இந்தாண்டு வெளிவரவில்லை, ஆனால் படக்குழுவினர் பாடலை உருவாக்குவது போன்று வெளியிடப்பட்ட இந்த பாடலின் வீடியோ உலகம் முழுவதும் அடைந்த பிரபலமும்; YouTube இல் பெற்ற நினைத்திக்கூட பார்க்கமுடியாத 'ஹிட்சும்', இந்த பாடலை தழுவி YouTube இல் வெளிவந்த ஏராளமான வேஷன்களும் அனைவரும் அறிந்ததே. இந்த வெற்றியால் தனுஷ் ரத்தன் டாடா, அமிதாப் வீடுகளில் விருந்திற்கு அழைக்கப்பட்டதும்; ஹிர்த்திக், அபிஷேக்கிற்கு கதை சொன்னதாகவும் கூறப்பட்டதும், இப்போது பிரதமர் வீட்டிலேயே விருந்திற்கு அழைக்கப்பட்டிருப்பதாக வரும் செய்தியும் இந்தப்பாடலால் தனுசிற்கு கிடைத்த மிகப்பெரிய லாட்ரி என்றே சொல்லலாம் :-))

பாடல் வரிகள், தனுசின் குரல் என்பவற்றையும் தாண்டி Making Of The Song - Video உண்மையிலேயே ரசிக்கும்படியாக உள்ளது; அனைத்தையும் தாண்டி இசையும் சிறப்பாக அமைந்தது இந்த பாடலின் வெற்றிக்கு முக்கிய காரணம், எல்லோருக்கும் (விதிவிலக்குகளைவிட) பிடித்த 'கொலைவெறி' எனக்கு பிடித்ததில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை :pMonday, December 26, 2011

2011 இல் தமிழ் சினிமா..

2010 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2011 இல் தமிழ் சினிமா வணிகரீதியாகவும், தரமான படைப்புக்களை கொடுத்த வகையிலும் சற்றே பின்தங்கி இருந்தாலும் 2011 இலும் பல தரமான மற்றும் வணிகரீதியான வெற்றிகள் தமிழ் சினிமாவில் கிடைக்கப் பெற்றதை மறுக்க முடியாது. 2012 இல் காலடி எடுத்துவைக்கும் இந்த நேரத்தில் இந்த ஆண்டு தமிழ் சினிமாவில் வெளிவந்த திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள், இயக்குனர்கள், இசையமைப்பாளர்கள் போன்றோரது பங்களிப்புக்கள் பற்றிய ஒரு சிறு அலசல்தான் இப்பதிவு........

* 2010 ஆம் ஆண்டிற்காக இவ்வாண்டின் ஆரம்பத்தில் 13 தேசிய விருதுகள் கிடைக்கப்பெற்றது மிகப்பெரும் சாதனை; இந்த சாதனை எதிர்காலத்திலும் தொடரும் என நம்பலாம்!!!

திரைப்படங்கள்
* 2011ஆம் ஆண்டு தை 1 முதல் தற்போதுவரை (மார்கழி 25 வரை) மொத்தமாக 126 திரைப்படங்கள் திரையிடப்பட்டுள்ளன; இவற்றில் அதிக பட்சமகாக ஆவணி மாதத்தில் 15 திரைப்படங்கள் திரையிடப்பட்டுள்ளன, குறைந்த பட்சமாக கார்த்திகை மாதம் 8 திரைப்படங்கள் திரையிடப்பட்டுள்ளன. தை, சித்திரை, புரட்டாதி, ஐப்பசி, கார்த்திகை மாதங்களில் தலா ஒரு கிழமை தவிர்த்து மிகுதி அனைத்து கிழமைகளிலும் குறைந்தது ஒரு திரைப்படமேனும் வெளிவந்தது.

* இந்த ஆண்டின் மிகப்பெரும் வெற்றித் திரைப்படம் 'மங்காத்தா'; வெங்கட் பிரபு இயக்கத்தில் அஜித்குமார் நடித்த 'மங்காத்தா' 2011 இல் வணிகரீதியில் வெற்றிபெற்ற முதன்மையான திரைப்படம். அதேபோல கே.வி.ஆனந்த் இயக்கத்தில் ஜீவா நடித்த 'கோ' திரைப்படம் இந்த ஆண்டின் அதிகப்படியான லாபம் கொடுத்த மற்றுமொரு மிகப்பெரிய வெற்றித் திரைப்படம். இவற்றுடன் கார்த்தியின் 'சிறுத்தை', லாரன்ஸ் இயக்கி நடித்த 'காஞ்சனா' இரண்டும் வணிகரீதியில் மிகச்சிறந்த வரவேற்ப்பை பெற்ற மற்றைய திரைப்படங்கள். இவை தவிர விமர்சன ரீதியில் சிறந்த வரவேற்ப்பை பெற்றுக்கொண்ட 'எங்கேயும் எப்போதும்' திரைப்படம் வணிகரீதியில் மிகச்சிறந்த வசூலை அள்ளிய முக்கிய திரைப்படம்.

* சூர்யாவின் 'ஏழாம் அறிவு', விஜயின் 'வேலாயுதம்' திரைப்படங்கள் விமர்சனரீதியிலும், வணிக ரீதியிலும் மிக்ஸ் ரிப்போட்டை கொடுத்தாலும் அந்ததந்த தரப்புக்களால் மட்டும் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்ட திரைப்படங்கள்; இவை இரண்டும் குறைந்தபட்சம் போட்ட பணத்தையும், விநியோகிஸ்தர்களது பணத்தையும் மீட்டுக்கொடுத்திருக்கும் என்று நம்பலாம்.

* இவை தவிர விமர்சனரீதியில் நல்ல வரவேற்ப்பை பெற்ற திரைப்படங்களான ஆடுகளம், தெய்வத்திருமகள், காவலன், வானம், மயக்கம் என்ன, பயணம், குள்ள நரிக் கூட்டம், யுத்தம் செய் போன்றவையும் அதிக லாபத்தை கொடுக்காவிட்டாலும் குறிப்பிடத்தக்க வசூலை பெற்ற திரைப்படங்கள். மற்றும் விமர்சன ரீதியில் நல்ல வரவேற்ப்பு பெற்ற 'ஆரண்ய காண்டம்', 'வாகை சூடவா' திரைப்படங்கள் வணிகரீதியில் வரவேற்ப்பை பெறாத திரைப்படங்கள்...

* நடுநிசி நாய்கள், அவன் இவன், ஒஸ்தி, ராஜபாட்டை, வேங்கை, மாப்பிள்ளை, வெடி, எங்கேயும் காதல் போன்ற திரைப்படங்கள் வணிக ரீதியிலும், விமர்சன ரீதியிலும் எதிர்பார்ப்புக்களை ஏமாற்றிய முக்கிய திரைப்படங்கள். (ராஜபாட்டை, ஒஸ்தி இரண்டும் தற்போது ஓட்டிக்கொண்டிருந்தாலும் எதிர்மறை விமர்சனங்களை வைத்தே இரண்டும் வணிக ரீதியில் ஏமாற்றியதாக குறிப்பிடப்பட்டுள்ளது)

நடிகர்கள்
* இந்த ஆண்டு தமிழ் சினிமாவின் உச்சங்களான ரஜினி, கமல் இருவரது திரைப்படங்களும் வெளிவரவில்லை; 1975 இல் இருந்து ரஜினி, கமல் இருவரில் குறைந்தபட்சம் ஒருவரது திரைப்படமேனும் வெளிவராத ஆண்டாக 2011 அமைந்துவிட்டது.

* 2011 ஐ பொறுத்தவரை அஜித்திற்கு இது ஒரு கனவு ஆண்டு; 2007 பில்லாவிற்கு பின்னர் ஸ்திரமான வெற்றியை தேடிக்கொண்டிருந்த அஜித்திற்கும், அவர் ரசிகர்களுக்கும் 'மங்காத்தா' மிகத்திருப்தியான திரைப்படமாக அமைந்ததுடன் மிகச்சிறப்பான வசூலையும் அள்ளிக் குவித்துள்ளது.

* விஜயை பொறுத்தவரை இதற்கு முன்னைய 3 ஆண்டுகளைவிட 2011 சிறப்பான ஆண்டாகவே அமைந்துள்ளது; காவலன் திரைப்படம் வழமைக்கு மாறான விஜய் திரைப்படமாக வெளிவந்து சுமாரான வசூலை பெற்றது; அடுத்து தீபாவளிக்கு வெளிவந்த வேலாயுதம் மிக்ஸ் ரிப்போட்டை பெற்றாலும் முதலுக்கும், விநியோகிச்தர்களுக்கும் மோசம் செய்திருக்காது என்று நம்பலாம் !!

* சூர்யாவிற்கு 7ஆம் அறிவு மட்டும்தான் 2011 இல் வெளிவந்த ஒரே திரைப்படம்; ஈழத்தமிழர் விடயத்தை கையிலெடுத்த விவகாரத்தால் சர்ச்சைகளும், மிக்ஸ் ரிப்போட் விமர்சனங்களும் 7ஆம் அறிவிற்கு எதிராக இருந்தாலும்; 7ஆம் அறிவு கணிசமான வசூலை வசூலித்தது; அதிகமான விலைக்கு விற்கப்பட்டதால் முதலை மீட்க்கும் அளவிற்கு வசூல் கிடைத்ததா என்பது கேள்விக்குறிதான்!! ஆனாலும் சென்னை பாக்ஸ் ஆபீசில் எந்திரன், சிவாஜி, தசாவதாரம் திரைப்படங்களுக்கு அடுத்து 9 கோடி இலக்கை தாண்டிய நான்காவது திரைப்படமாக 7ஆம் அறிவு தன்னை முன்னிறுத்தியுள்ளது.

* விக்ரமிற்கு அந்நியனுக்கு பின்னர் இன்னமும் ஒரு பெரிய ஹிட் கிடைத்தபாடில்லை; இருந்தாலும் விக்ரமிற்கு இந்தாண்டு ஓரளவு ஆறுதலாக 'தெய்வத்திருமகள்' மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்ப்பை பெற்றதோடு கணிசமான வசூலையும் குவித்தது. ஆனாலும் தற்போது வெளியாகி இருக்கும் 'ராஜபாட்டை' வெற்றி பெறவோ, கணிசமான வசூலை குவிக்கவோ சாத்தியம் மிகமிக குறைவே!!!!

* தனுசிற்கு இந்தாண்டு சிறப்பான ஆண்டு; ஆடுகளத்திற்கு தேசியவிருது (2010) கிடைத்தது ஒரு சிறப்பென்றால்; தனுஸ் எழுதிப் படிய 'கொலைவெறி' பாடல் உலகம் முழுவதும் ரீச் ஆகி இந்தியா இதுவரை காணாத வெற்றியை பெற்றது மிகப்பெரும் சாதனை. கூடவே 'மயக்கம் என்ன' திரைப்படத்தில் எல்லோராலும் பாராட்டப்பட்ட சிறப்பான நடிப்பும் தனுசிற்கு நல்ல பெயரை பெற்றுக் கொடுத்தது. ஆனாலும் வேங்கை, மாப்பிள்ளை என இரண்டு கமர்சியல் திரைப்படங்களும் தனுசிற்கு தோல்வியையே கொடுத்தன.

* 'கோ' என்னும் மிகப்பெரும் வெற்றித் திரைப்படத்தை கொடுத்த 'ஜீவா' இந்தாண்டு சிங்கம்புலி, வந்தான் வென்றான், ரௌத்திரம் என மூன்று தோல்விகளையும் கொடுத்துள்ளார்.

* 'வானம்' திரைப்படத்தில் கிடைத்த பெயரை 'ஒஸ்தி' திரைப்படத்தில் சிம்பு கோட்டைவிட்டிருந்தார்.

* 2006 ஆம் ஆண்டிற்கு பின்னர் இந்தாண்டு பிரஷாந்த் நடித்த 'பொன்னர் ஷங்கர்' மற்றும் 'மம்பட்டியான்' என இரு திரைப்படங்களும் ஓரளவு பெரும் பட்ஜெட்டிலேயே எடுக்கப்பட்டது; பொன்னர் ஷங்கர் புஸ்வானமாக போனாலும் மம்பட்டியான ஓரளவு சுமாராக போகின்றது......

* விஷாலுக்கு அவன் இவன், வெடி என நடித்த இரு திரைப்படங்களும் காலை வாரினாலும், அவன் இவனில் விஷாலின் நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டது.

* ஆரியா, ஜெயம்ரவி, பரத், விமல் போன்றோருக்கு 2011 கைகொடுக்கவில்லை; 2010 இல் அதிக திரைப்படங்களில் சொதப்பிய ஜெய் 2011 இல் நடித்த ஒரே திரைப்படமான எங்கேயும் எப்போதும் அவருக்கு நல்ல பெயரையும் வசூலையும் கொடுத்தது.

* விஜயகாந்த், சத்யராஜ், சரத்குமார், அர்ஜுன் போன்ற மூத்த நடிகர்களது திரைப்படங்கள் எவையும் (கதாநாயகர்களாக) வெளியாகவில்லை; நீண்ட நாட்களுக்கு பின்னர் பார்த்தீபன் நடித்த 'வித்தகன்' அவருக்கு கை கொடுக்கவில்லை.

நடிகைகள்
* திரிஷாக்கு ஒன்னே ஒன்னு கண்ணே கண்ணென்று 2011 இல் 'மங்காத்தா'மட்டும்தான்; படத்தில் திரிஷாவிற்கு அதிகம் வேலையில்லாவிட்டாலும் கிடைத்ததை நிறைவாக செய்திருந்தார்.

* அசின் நீண்ட இடைவெளிக்கு பின்னர் காவலனில் சிறப்பாக தனது திறமையை வெளிக்காட்டியிருப்பார்; ஆனாலும் அவரது முகத்தில் முதுமை இழையோடியது அதிகமானவர்கள் குறிப்பிட்ட விடயம்.

* அனுஷ்கா இந்தாண்டு நடித்த இரண்டு திரைப்படங்களும் அவருக்கு நல்ல பெயரை பெற்றுக் கொடுத்தது; 'வானம்' மற்றும் 'தெய்வதிருமகள்' திரைப்படங்கள்தான் அந்த இரு திரைப்படங்களும்.

* தமன்னாக்கு இந்தாண்டு நடித்த இரண்டு திரைப்படங்களில் சிறுத்தை ஹிட்டாகவும் வேங்கை பிளப்பாகவும் அமைந்தாலும் இரண்டிலும் அவருக்கு முக்கியத்துவம் குறைவே!!

* மூன்று நான்கு படங்களில் அஞ்சலி நடித்திருந்தாலும் 'எங்கேயும் எப்போதும்' இந்தாண்டின் சிறந்த நடிகைக்கான விருதை 'அஞ்சலிக்கு' ஆங்காங்கே பெற்றுக் கொடுக்கலாம்!!!

* 2011 இல் அதிகமான தமிழ் நெஞ்சங்களை கொள்ளை கொண்ட நாயகி பேபி 'சாரா', தெய்வதிருமகளில் நிலாவாக ஆண், பெண் பேதமில்லாமல் அனைவரையும் பித்துப் பிடிக்கவைத்த 'சாரா' இந்த ஆண்டுக்கான தேசியவிருதுப் பட்டியலில் நிச்சயம் இடம் பிடிப்பார்.

* ஹன்சிகா இந்தாண்டு அறிமுகமாகி 'அழகால்' மட்டும் இளசுகளை கொள்ளை கொண்டு உச்சத்தை அடைந்தவர்; எங்கேயும் காதல், மாப்பிள்ளை, வேலாயுதம் திரைப்படங்களில் நடித்த ஹன்சிகா அடுத்த ஆண்டு அதிக திரைப்படங்களில் நடிகர்களால் ரெக்கமன்ட் செய்யப்படலாம் :-))

* இவர் தவிர 'மயக்கமென்ன' வில் கலக்கிய ரிச்சா, 'வாகைசூடவா' இனியா, '7 ஆம் அறிவு' ஸ்ருதிஹாசன், 'கோ' கார்த்திகா, ஆடுகளம் 'தப்சி' என இந்தாண்டு இளசுகளை கொள்ளைகொண்ட புதிய அறிமுகங்கள் அதிகம்.

இயக்குனர்கள்
* 2011 இல் தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களான மணிரத்தினம், ஷங்கர் படங்கள் எவையும் வெளிவரவில்லை.

* இவர்களுக்கு அடுத்து மிகப்பெரும் எதிர்பார்ப்பை தன்னகத்தே கொண்ட இயக்குனர் பாலாவின் 'அவன் இவன்' திரைப்படம் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கிடையே வெளியாகினாலும் சரியாக போகாவில்லை.

* மற்றுமொரு முன்னணி இயக்குனர் A. R.முருகதாஸ் '7 ஆம் அறிவு' திரைப்படத்தை இயக்கியிருந்தார்; நிச்சயமாக அவர் எதிர்பார்ப்பை பூர்த்துசெயயவில்லை ஆயினும் திரைப்படம் தப்பித்துக்கொண்டது.

* ஆயிரத்தில் ஒருவன் சறுக்கலுக்கு பின்னர் செல்வராகவன் இயக்கிய மயக்கம் என்ன மிக்ஸ் ரிப்போட்டை விமர்சன ரீதியாக எதிர்கொண்டாலும் இளைஞர்களின் வரவேற்ப்பை பெற்றது; வசூலிலும் பரவாயில்லை ரகம்.

* வெங்கட்பிரபு, வெற்றிமாறன், கே.வி.ஆனந்த், லாரன்ஸ் நால்வரும் இந்தாண்டு முத்திரையை பதித்த முக்கிய இயக்குனர்கள்.

* இந்தாண்டு புதிய இயக்குனர்கள் அதிகம் ஆதிக்கம் செலுத்தவில்லை எனினும் 'எங்கேயும் எப்போதும்' திரைப்பட இயக்குனர் M.சரவணன் மிகச்சிறந்த புதிய இயக்குனராக அறியப்பட்டுள்ளார். தெலுங்கில் இரண்டு திரைப்படங்களை இயக்கியிருந்தாலும் தமிழில் முதல்முதலாக 'வானம்' திரைப்படத்தை இயக்கிய கிரிஷும் கவனிக்கத்தக்கவர்.

* சித்திக், ராதாமோகன், மிஸ்க்கின் ஆகியோர் தமக்கே யுரிய பாணியில் சிறப்பாக இயக்கியிருந்த அதே நேரம்; பழமையான இயக்குனர்களான எஸ்.எ.சந்திரசேகர், P.வாசு இருவரும் இயக்கத்தில் சொதப்பியிருந்தனர்.

* கமர்சியல் சினிமாவின் முன்னணி இயக்குனர்களான தரணி, ஹரி போன்றோருக்கு இந்தாண்டு சரியாக அமையவில்லை.

* அதேபோல இந்தாண்டின் மிகப்பெரும் சொதப்பல்கள் சுசீந்திரன் (ராஜபாட்டை) & கௌதம் மேனன் (நடுநிசி நாய்கள்)

* கே.எஸ்.ரவிக்குமார் திரைப்படங்கள் எவையும் வெளிவரவில்லை; 1990 இல் இயக்குனராக அறிமுகமாகியது தொடக்கம் 2011, 2007, 2005 ஆம் ஆண்டுகளில் மட்டும்தான் ரவிக்குமார் படங்கள் வெளிவரவில்லை.

* பிரபுதேவா இயக்கிய எங்கேயும் காதல், வெடி இரு திரைப்படங்களும் வணிக ரீதியாக தோல்வியை தழுவிய திரைப்படங்கள்

* அதிகம் விமர்சனத்தை சந்தித்த இயக்குனர் விஜய்; தெய்வத்திருமகனை I AM SAM திரைப்படத்தில் இருந்து ஆட்டையை போட்டதாக இவர்மீது சரமாரி தாக்குதல் இடம்பெற்றது குறிப்பிட்டது.

இசையமைப்பாளர்கள்
* A.R.ரஹுமான் இசையில் எந்த திரைப்படங்களும் இவ்வாண்டு வெளிவரவில்லை.

* இந்தாண்டின் இசையமைப்பாளர்களில் அதிகம் பிரகாசித்தவர் ஜீ.வி.பிராகாஷ்குமார்; 'ஆடுகளம்', 'தெய்வதிருமகள்', 'மயக்கம் என்ன' என இசையமைத்த மூன்று திரைப்படங்களிலும் பாடல்க்களும் சரி பின்னணி இசையும் சரி குறிப்பிட்ட திரைப்படங்களுக்கு மிகப்பெரும் பலம் சேர்த்தது.

* ஹாரிஸ் ஜெயராஜ் 'எங்கேயும் காதல்', 'கோ', '7 ஆம் அறிவு' என மூன்று திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார்; இவற்றில் அதிகமான பாடல்கள் பெரிதும் ரசிக்கப்பட்டவை; கோ திரைப்படத்தில் இடம்பெற்ற 'என்னமோ ஏதோ' இவ்வாண்டில் அதிகம் ரசிக்கப்பட்ட பாடல்களில் ஒன்று.

* யுவன்ஷங்கர் ராஜா வானம், அவன் இவன், மங்காத்தா, ஆரண்ய காண்டம், ராஜபாட்டை என ஐந்து திரைப்படங்களுக்கு 2011 இல் இசையமைத்திருந்தாலும் வழமையான யுவன் 2011 இல் மிஸ்ஸிங்.

* காவலன், சிறுத்தை, இளைஞன், சதுரங்கம் திரைப்படங்களுக்கு இச்யமைத்த வித்யாசாகர் இன்னமும் அவுட் ஒப் போம்தான்; இவற்றில் சதுரங்கம் பாடல்கள் 2006 இல் நல்ல வரவேற்ப்பை பெற்றபோதும் படம் வெளியாகியபோது கண்டுகொள்ளப்படவில்லை.

* வேலாயுதம் திரைப்படம் விஜய் ஆண்டனிக்கு ஹிட் பாடல்களை கொடுத்தாலும் யுவன்யுவதி, சட்டப்படி குற்றம் திரைப்படங்கள் கண்டுகொள்ளப்படவில்லை

* புதிய அறிமுகங்களான 'எங்கேயும் எப்போதும்' சத்யா, 'வாகை சூடவா' முகமட் கிப்ரான் இருவரும் சிறப்பான பாடல்களையும் பின்னணி இசையையும் வழங்கியிருந்தனர்.

'வெண்ணிலா கபடிக்குழு' திரைப்படத்திற்கு இசையமைத்த V.செல்வகணேஷ் 'குள்ளநரிக்கூட்டம்' திரைப்படத்திற்கும் சிறப்பான இசையை வழங்கியிருந்தார்

* மணிஷர்மா, தேவி ஸ்ரீ பிரசாத், ஸ்ரீகாந்த் தேவா, தினா, சுந்தர்.C .பாபு என பலரும் இந்தாண்டு இசையமைத்திருந்தாலும் பெரிதாக எடுபடவில்லை.

2011 இன் கௌரவம்
சிறந்த நடிகர்- தனுஷ் (ஆடுகளம் & மயக்கம் என்ன)
சிறப்பு பரிசு - ஜீவா (கோ)

சிறந்த நடிகை - சாரா (தெய்வத்திருமகள்)
சிறப்பு பரிசு - அஞ்சலி (எங்கேயும் எப்போதும்)

சிறந்த இயக்குனர் - வெற்றிமாறன் (ஆடுகளம்)
சிறப்பு பரிசு - ராதாமோகன் (பயணம்)

சிறந்த திரைப்படம் - எங்கேயும் எப்போதும் ( M.சரவணன்)
சிறப்பு பரிசு - வாகை சூடவா (A.சற்குணம்)

சிறந்த தயாரிப்பாளர் - A.R.முருகதாஸ் (எங்கேயும் எப்போதும்)
சிறப்பு பரிசு - எஸ்.பி.சரண் (ஆரண்யகாண்டம் )

சிறந்த இசையமைப்பாளர் - ஜீ.வி.பிராகாஷ் (மயக்கம் என்ன)
சிறப்பு பரிசு - எங்கேயும் எப்போதும் (C.சத்யா)

சிறந்த ஒளிப்பதிவாளர் - ஓம் பிரகாஷ் (வாகை சூடவா)
சிறப்பு பரிசு - ராம்ஜி (மயக்கம் என்ன)

சிறந்த பட தொகுப்பு - அந்தோணி கொன்சால்வேஸ் (வானம்)
சிறப்பு பரிசு - கிஷோர் (எங்கேயும் எப்போதும், ஆடுகளம் & பயணம் )

சிறந்த திரைக்கதை - கே.வி.ஆனந்த் (கோ)
சிறப்பு பரிசு - தியாகராஜன் குமாரராஜா (ஆரண்யகாண்டம் )

சிறந்த வசன கர்த்தா - ராதாமோகன் (பயணம்)
சிறப்பு பரிசு - எங்கேயும் எப்போதும் ( M.சரவணன்)

சிறந்த பாடலாசிரியர் - நா. முத்துக்குமார் ( ஆரிரோ ஆராரிரோ, தெய்வத்திருமகள்)
சிறப்பு பரிசு - சினேகன் (யாத்தே யாத்தே, ஆடுகளம்)

சிறந்த நகைச்சுவை நடிகர் - சந்தானம் (தெய்வதிருமகள், வானம்)
சிறப்பு பரிசு - சாம் (பயணம்)

சிறந்த வில்லன் நடிகர் - Johnny Tri Nguyen (7 ஆம் அறிவு )
சிறப்பு பரிசு - அஜ்மல் (கோ)

சிறந்த குணச்சித்திர நடிகர் - V. I. S. ஜெயபாலன் (ஆடுகளம்)
சிறப்பு பரிசு - கோவை சரளா (காஞ்சனா)

சிறந்த சண்டை பயிற்சியாளர் - பீட்டர் ஹெயின் (7 ஆம் அறிவு)
சிறப்பு பரிசு - சூப்பர் சுப்பிராயன் (அவன் இவன்)

சிறந்த பாடகர் - கார்த்திக் (விழிகளிலே விழிகளிலே, குள்ளநரி கூட்டம்)
சிறப்பு பரிசு - M.L.R.கார்த்திகேயன் (கன்னித்தீவு பெண்ணா, யுத்தம் செய்)

சிறந்த பாடகி- சின்மயி (சர சர சாரகாத்து, வாகை சூடவா)
சிறப்பு பரிசு- சைந்தவி (பிறை தேடும், மயக்கம் என்ன)

* சென்ற ஆண்டு எழுதிய 2010 க்கான அதே டெம்லேட்டை மாற்றி எழுதியதால் ஐந்து மணி நேரத்தில் எழுதி முடித்திட்டேன் :p

பிற்ச்சேர்க்கை


ஆண்டின் இறுதியில் வெளியாகிய 'மௌனகுரு' திரைப்படம் சிறந்த வரவேற்ப்பை பெற்று; விமர்சன ரீதியிலும் வணிகரீதியிலும் மிகப்பெரும் வெற்றியடைந்துள்ளது.....