Monday, January 31, 2011

உலகக்கிண்ண அணிகள் ஒரு பார்வை (பகுதி 5)இலங்கை
1996 உலகக் கிண்ண போட்டிகள் ஆரம்பிக்கும் வரை இலங்கை கிரிக்கட் அணி ஒரு போட்டியை வென்றால் அது எதிரணியின் அதிர்ச்சி தோல்வியாகவே கணிக்கப்பட்டது, 1996 உலக கோப்பை வெற்றிக்கு பின்னர் அடுத்த இரண்டு ஆண்டுகளில் இலங்கை ஒரு போட்டியில் தோற்றால் அதை 'இலங்கை அதிர்ச்சி தோல்வி' என்று சொல்லும் அளவிற்கு விஸ்வரூப வளர்ச்சியை இலங்கை அடைந்த காலப்பகுதி அது. அர்ஜுன, அரவிந்த, சனத், வாஸ், முரளி என்கின்ற பஞ்ச பாண்டவர்களில் ஒருவர் இல்லை யென்றாலும் இலங்கை கிரிக்கட் அணி தன்னை விஸ்வரூபப்படுத்தி காட்டியிருக்க முடியுமா? என்றால் அதற்க்கு இல்லை என்பதே சரியான பதிலாக இருக்கும். 1996 உலக கிண்ண போட்டிகளின் நாயகர்களான அர்ஜுனவும், அரவிந்தவும் 1999 உலக கிண்ண போட்டிகளில் இலங்கையின் படுதோல்விக்கு பின்னர் கறிவேப்பிலையை போல தூக்கி எறியப்பட்டது வரலாறு, இன்று அந்த வரலாற்றில் வாஸும், சனத்தும் உள்ளடக்கம்.இலங்கை தேர்வுக்குழுவினர் சனத்தை தேர்வு செய்யாததை கூட ஏற்றுக்கொள்ளலாம், ஆனால் சமிந்த வாஸை தேர்வு செய்யாதது ஏற்றுக்கொள்ள கூடியதல்ல. நீண்ட நாட்களாக இலங்கை அணியில் இடம் கிடைக்காத வாஸ் இங்கிலாந்து பிராந்திய அணிகளுக் கிடையிலான போட்டியில் சிறப்பான சகலதுறை ஆட்டத்தினை வெளிப்படுத்தி வெளிநாட்டு வீரர்களில் சிறந்த வீரருக்கான விருதினை வென்று தன்னை வெளிக்காட்டியிருந்தார். தற்போது இலங்கை பிராந்திய அணிகளுக்கிடையில் இடம்பெற்ற ஒருநாள் போட்டிகளில் மிகவும் சிறப்பாக பந்துவீசி எல்லோர் கவனத்தையும் ஈர்த்திருந்தார், ஆனால் இந்த போட்டிகளுக்கு முன்னதாகவே இலங்கை அணி தேர்வு செய்யப்பட்டது வாசினதும் இலங்கை கிரிக்கட் அணியினதும் துரதிஸ்டம். தற்போது மேற்கிந்திய தீவுகள் அணியுடனான போட்டியிலாவது வாசினை அணியில் சேர்த்திருக்கலாம், ஆனால் வாஸ் சிறப்பாக பந்து வீசினால் தமது தேர்வு தவறாகிவிடும் என்கின்ற பயம் தேர்வாளர்களுக்கு.நுவான் குலசேகர, லசித் மலிங்க இருவருக்கும் பதிலாக சமிந்த வாஸை தேர்வு செய்ய முடியாவிட்டாலும் 'டில்ஹார பெர்னாண்டோ'வுக்கு பதிலாக கூடவா சமிந்த வாஸை தேர்வு செய்ய முடியாது? இலங்கை ஆடுகளங்களில் குறிப்பாக பிரேமதாசா ஆடுகளத்தில் வாஸ் அளவிற்கு சிறப்பாக பந்துவீசக் கூடிய பந்து வீச்சாளர் யாருமே சர்வதேச அளவில் இல்லை என்பதுதான் உண்மை. அடுத்து அண்மைக்கால இலங்கையின் நம்பிக்கை சுழல் பந்து வீச்சாளரான 'சுராஜ் ரன்டிப்' நீக்கப்பட்டு 'ரங்கன கேரத்' சேர்க்கப்பட்டது எந்த அடிப்படையில் என்பதை என்னைபோல இன்னமும் பலருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கும் .அதேபோல உலகக் கிண்ண ஸ்பெசலிஸ்ட்டாக அணியில் இணையும் 'சாமர சில்வா' சென்ற உலகக் கிண்ண போட்டிகளில் வெளிப்படுத்திய சிறப்பான ஆட்டத்தை இந்த உலகக் கிண்ண போட்டிகளில் வெளிப்படுத்துவாரா என்பது சந்தேகமே.இப்படி அணியின் தேர்வுக்குழுவின் தேர்வின் மீது திருப்தியில்லா விட்டாலும் இருக்கும் வீரர்களை வைத்து சிறப்பான சவாலை கொடுக்க கூடிய சிறந்த அணியாக இலங்கை உள்ளதையும் மறுக்க இயலாது. கடந்த இரண்டு ஆண்டுகளாக ஆடுகளம், பந்துவீச்சாளர் பேதமில்லாமல் ஓட்டங்களை வேகமாக குவித்து இலங்கை அணிக்கு சிறந்த ஆரம்பத்தை பெற்றுக்கொடுக்கும் டில்ஷான் இலங்கையின் துடுப்பாட்ட வரிசையின் மிகப்பெரும் பலம். அதிலும் ஆசிய ஆடுகளங்களில் டில்ஷானின் அதிரடியை சமாளிப்பது எதிரணி பந்து வீச்சாளர்களுக்கு மிகுந்த சவாலாக இருக்கும். அதே நேரம் டில்ஷானுடன் களமிறங்கும் சக ஆரம்ப துடுப்பாட்ட வீரரான 'உப்புள் தரங்கா'வை ஆரம்பத்தில் வெளியேற்றா விட்டால் தரங்கவினது ஓட்டக்குவிப்பை கட்டுப்படுத்துவது மிகவும் கடினம்.அடுத்து மூன்றாம் இலக்கத்தில் களமிறங்கும் குமார் சங்கக்காராவை அவளவு சீக்கிரத்தில் வெளியேற்ற முடியாது, அட்டைபோல ஆடுகளத்தில் ஒட்டிக்கொண்டிருக்கும் சங்ககார யாரவதொரு ஆரம்ப துடுப்பாட்ட வீரருடன் இணைப்பாட்டத்தை ஏற்ப்படுத்தினால் எதிரணி கதை அம்பேல்தான். தனது விக்கட்டை இழக்காமல் ஓட்டங்களை குவிக்கும் திறமையுடைய சங்ககார ஒருபுறத்தில் விக்கட்டுகள் சரிந்தாலும் மறுமுனையில் தனித்து நின்று கணிசமான ஓட்டங்களை பெற்று போட்டியை பந்து வீச்சாளர்கள் கைகளிலாவது ஒப்படைக்க கூடியவர். ஆரம்ப நாட்களில் மந்தமாக இருந்த ஓட்டக் குவிப்பு வேகம் ஐ.பி.எல் போட்டிகளின் பின்னர் அதிகரித்திருப்பதும் இலங்கைக்கு பலம்.நான்காம் இலக்கத்தில் களமிறங்கும் முன்னாள் அணித் தலைவர் மஹேல ஜெயவர்த்தனவின் போம் சிறப்பாக இருக்கும் பட்சத்தில் (in form) எதிரணிகள் பாடு திண்டாட்டமாகவும்; போம் மோசமாக இருக்கும் பட்சத்தில் (out of form) எதிரணிகள் பாடு கொண்டாட்டமாகவும் இருக்கும். வைத்தால் குடுமி; அடித்தால் மொட்டை ரகத்தை சேர்ந்த மஹேலாவின் ஓட்டக் குவிப்பிற்கு 2003 & 2007 உலககிண்ண போட்டிகள் சான்று. தனி மனிதனாக போட்டிகளின் முடிவை மாற்றக் கூடிய திறமையுடைய மஹேலாவை வந்தவுடன் வெளியேற்றாவிட்டால் பின்னர் வெளியேற்றுவது எதிரணிகளுக்கு சிரமமாக இருக்கும். சுழல் பந்துவீச்சிற்கு மிகவும் சிறப்பாக ஆடும் மஹேலவுடன் இலங்கையின் மத்திய வரிசைக்கு பலம் சேர்க்கும் இன்னுமொரு வீரர் 'திலான் சமரவீரா'.சாமர சில்வா, கப்புகெதர இருவரையும்விட திலான் சமரவீரா ஐந்தாம் இலக்கத்திற்கு மிகவும் பொருத்தமாக இருப்பார். அண்மைக்காலமாக இவரது ஆட்டத்தில் ஏற்ப்பட்ட மிகப்பெரும் மாற்றம் இவரது வேகமான ஓட்டக் குவிப்புத்தான். நல்ல ஆரம்பத்தை பெற்றுக் கொடுக்கும் போட்டிகளை கொண்டு செல்வதற்கு திலான் சமரவீர மிகவும் பொருத்தமாக இருப்பார். ஆறாம் இலக்கத்தில் 'அஞ்சலோ மத்யூஸ்' மற்றும் ஏழாம் இலக்கத்தில் 'திசர பெரேரா' இருவரும் இறுதிநேர அதிரடிக்கு உதவக் கூடியவர்களாயினும் அவர்களில் மத்யூஸ் எதிரணியின் ஓட்டங்களை துரத்தும்போது போட்டியின் தன்மைக்கேற்ப ஆடக் கூடியவர்.பந்து வீச்சை பொறுத்தவரை 2011 உலக கிண்ண போட்டிகளில் மிகவும் சிறந்த பந்துவீச்சு வரிசை என்று இலங்கை அணியை சொல்லலாம். அனைத்து அணிகளுக்கும் சவாலாக இருக்கக் கூடிய 'முரளிதரன்' மற்றும் 'லசித் மலிங்க'வுடன் ஆசிய அணிகள் தவிர்த்து எந்த அணியையும் நிலைகுலைய வைக்கும் திறமையுடைய 'அஜந்த மென்டிஸ்' அணியில் இருப்பது இலங்கைக்கு மிகப் பெரும் பலம். இவர்கள் தவிர கடந்த ஓராண்டுக்கு மேலாக தரவரிசையின் முதல் பத்து இடங்களுக்குள் இருந்து வரும் நுவான் குலகேகரவும்; சகதுரை வீரர்களாக பந்துவீச்சில் அண்மைக்காலமாக பிரகாசிக்கும் அஞ்சலோ மத்யூஸ் மற்றும் திசர பெரேராவும் இலங்கை பந்துவீச்சு வரிசையின் பலம்.இவற்றைவிட சொந்த மண்ணில் முதற் சுற்று ஆட்டங்கள் இடம்பெறுவதும், அடுத்தகட்ட போட்டிகள் இந்திய ஆடுகளங்களில் இடம்பெறுவதும் இலங்கைக்கு சாதகமான விடயங்களே. ஆனாலும் பலமான இந்திய, அவுஸ்திரேலிய, இங்கிலாந்து அணிகளை இலங்கை எதிர்கொள்வது மிகவும் சவாலான விடயமாகத்தான் இருக்கும். 1996 உலக கோப்பை வெற்றியின் பின்னர் 2003 உலகக் கிண்ண போட்டிகளில் அரைஇறுதிக்கும் 2007 உலகக் கிண்ண போட்டிகளில் இறுதிப் போட்டிக்கும் தெரிவான இலங்கை அணி இம்முறை காலிறுதிக்கு நிச்சயம் தகுதிபெறும் ஆயினும் அடுத்த நிலைகளை தாண்டி கிண்ணத்தை மறுபடியும் கைப்பற்றுமா? என்கின்ற கேள்விக்கு கைப்பற்றுவதற்கு தகுதியான அணிதான் என்பது சரியான பதிலாக இருக்கும்.

15 பேர் கொண்ட குழாமிலிருந்து எனது பதினொருவர் தெரிவு

திலகரட்னே டில்ஷான்
உப்புள் தரங்க
குமார் சங்ககார (தலைவர்) & (விக்கட் காப்பாளர்)
மஹேல ஜெயவர்த்தன
திலான் சமரவீர
அஞ்சலோ மத்யூஸ்
திசர பெரேரா
நுவான் குலகேகர
முத்தையா முரளிதரன்
லசித் மலிங்க
அஜந்த மென்டிஸ்

மிகுதி நால்வரும்

சாமர கப்புகெதர
சாமர சில்வா
டில்ஹார பெர்னாண்டோ
ரங்கன ஹேரத்

*--------------------*


முன்னைய பதிவுகள்


உலகக்கிண்ண அணிகள் ஒரு பார்வை (பகுதி 1) -> அவுஸ்திரேலியா

உலகக்கிண்ண அணிகள் ஒரு பார்வை (பகுதி 2)-> பாகிஸ்தான்

உலகக்கிண்ண அணிகள் ஒரு பார்வை (பகுதி 3)-> இங்கிலாந்து & மேற்கிந்திய தீவுகள்

உலகக்கிண்ண அணிகள் ஒர பார்வை பகுதி 4) -> நியூசிலாந்து & தென்னாபிரிக்கா

அடுத்த பதிவு -> இந்தியா


Sunday, January 30, 2011

உலகக்கிண்ண அணிகள் ஒரு பார்வை (பகுதி 4)நியூசிலாந்து
உலகக் கிண்ண வரலாற்றில் பெரிதாக எந்த சாகசங்களையும் இதுவரை நிகழ்த்தாத பழமையான இரு அணிகளில் நியூசிலாந்தும் ஒன்று, மற்றையது தென்னாபிரிக்கா. இதுவரை எந்த இறுதிப் போட்டிக்கும் தகுதி பெறாத நியூசிலாந்து 1975, 1979, 1992,1999, 2007 ஆம் ஆண்டுகளில் இடம்பெற்ற உலகக் கிண்ண போட்டிகளில் அறையிறுதிக்கு தகுதிபெற்ற போதும் அந்த ஐந்து அரையிறுதிப் போட்டிகளிலும் தோல்வியடைந்து இறுதிப் போட்டிக்கு தெரிவாகும் வாய்ப்பை நியூசிலாந்து இழந்துள்ளது.

குறிப்பிட்ட ஐந்து அரையிறுதிப் போட்டிகளில் 1992 இல் பாகிஸ்தானுடனான அறையிருதிப் போட்டியில் 'மாட்டின் க்ரோ' அடித்த அற்புதமான 91 ஓட்டங்களால் நியூசிலாந்திற்கு கிட்டிய வெற்றி வாய்ப்பு யாருமே எதிர்பாராத வகையில் ஜாவிட் மியான்டாட்டின் அனுபவத்தினாலும், அன்றைய இளம் வீரர்களான 'இன்சமாம் உல் ஹாக்' மற்றும் 'மொய்ன் கானின்' அதிரடியாலும் பாகிஸ்தான் கைக்கு மாறியது நியூசிலாந்து ரசிகர்களால் என்றுமே மறக்க முடியாதது. அந்த போட்டித்தொடரில் நியூசிலாந்து தான் விளையாடிய எட்டு போட்டிகளில் தோல்வியடைந்த ஒரே போட்டி இதுதான்.1992 இன் பின்னர் ஸ்டீபன் பிளமிங்கின் தலைமையில் இளம் வீரர்களுடன் சர்வதேச கிரிக்கட்டில் புதிய அணுகு முறையிலான ஆட்டத்தை வெளிப்படுத்திய நியூசிலாந்து அனைத்து முன்னணி அணிகளுக்கும் சவாலான அணியாக கடந்த உலக கிண்ண போட்டிகள்வரை (2007) சிறப்பான ஆட்டத்தினை வெளிப்படுத்தி வந்தது. பிளெமிங் தலைமையில் கென்யாவில் இடம்பெற்ற icc யின் 'மினி வேர்ல்ட் கப்' கிண்ணத்தை நியூசிலாந்து கைப்பற்றியதை நியூசிலாந்தின் ஒருநாள் போட்டிகளின் உச்சக்கட்ட சாதனையாக சொல்லலாம்.

ஆனால் அதன் பின்னர் பிளெமிங், அஸ்டில், மக்மிலன், ஹெயின்ஸ், ஹரிஸ், பொன்ட் என அணியின் முக்கிய வீரர்களின் ஓய்வின் பின்னர் தற்போது நியூசிலாந்து அணி சிறிய அணிகளுடனான போட்டிகளில்கூட தடுமாறும் அணியாகவே உள்ளது. இன்றுள்ள நிலையில் நியூசிலாந்து அணியிலுள்ள பெயர் சொல்லக்கூடிய ஒரு சில வீர்ர்கள் தனி மனித சாகசம் (one man show) நிகழ்த்தினால் தவிர நியூசிலாந்து ஒருநாள் போட்டிகளை வெல்வது சாத்தியமில்லாத விடயமாகியுள்ளது.ஆனாலும் நியூசிலாந்து அணியில் அண்மைக்காலங்களில் தங்கள் தனித் திறமையால் போட்டியை தங்கள் பக்கம் கொண்டுவரக்கூடிய ரோஸ் ரெய்லர், ஜெசி ரெய்டர், பிரெண்டன் மக்கலம் போன்ற தனி மனித சாகசகாரர்களும் (one man army); அனுபவம் வாய்ந்த வீரர்களான ஸ்கொட் ஸ்டைரிஸ், ஜேக்கப் ஓரம் போன்ற சகலதுறை வீரர்களும்; அனுபவமும் மிரட்டக் கூடிய சுழல் பந்துவீச்சு திறமையுமுடைய அணித்தலைவர் டானியல் வெட்டோரியும்; தன் டெக்னிக்கலான வேகப்பந்துவீச்சால் எதிரணிகளை நிலை குலைய வைக்கும் டிம் சௌதியும்; மார்டின் குப்டில், கன் வில்லியம்சன் போன்ற சிறப்பான போமிலிருக்கும் (in form) வீரர்களும் ஒன்றாக இணைந்துள்ள நியூசிலாந்து 2011 உலகக் கிண்ணத்தில் வலுவான அணியாக களமிறங்கும் என்று எதிர்பார்க்கலாம்.

15 பேர் கொண்ட குழாமிலிருந்து எனது பதினொருவர் தெரிவு

பிரெண்டன் மக்கலம் (விக்கட் காப்பாளர்)
ஜெசி ரெய்டர்
மார்டின் குப்டில்
ரோஸ் ரெய்லர்
ஸ்கொட் ஸ்டைரிஸ்
கன் வில்லியம்சன்
ஜேகப் ஓரம்
டானியல் விட்டோரி (தலைவர்)
நாதன் மக்கலம்
கையில் மில்ஸ்
டிம் சௌதி

மிகுதி நால்வரும்

ஜேம்ஸ் பிராங்க்ளின்
லுக் வூட்கோக்
ஜெமி ஹொ
ஹமிஸ் பென்னெட்

*--------------------*


தென்னாபிரிக்கா
உலகக் கிண்ண போட்டிகளில் துரதிஸ்டமான அணிஎன்றால் அது தென்னாபிரிக்காதான், மிகவும் திறமையான வீரர்கள் எப்போதும் அணியில் இருந்தபோதும் இதுவரை தென்னாபிரிக்காவால் ஒரு உலகக் கிண்ண இறுதிப் போட்டிகளுக்கு கூட செல்ல முடியவில்லை. அதிலும் 1999 உலகக் கிண்ண போட்டிகளில் அரையிறுதிப் போட்டியில் குளூஸ்னரும் டொனால்டும் ஓடிய தவறான விக்கட்டுகளுக் கிடையிலான ஓட்டம் (runs between the wicket) தென்னாபிரிக்க ரசிகர்களால் மட்டுமல்ல குறிப்பிட்ட காலப்பகுதியில் கிரிக்கட் போட்டிகளை பார்த்த யாராலும் காலம் முழுவதும் மறக்க முடியாதது.

அதற்க்கு முன்னர் 1992 உலககிண்ண போட்டிகளில் அரையிறுதிப் போட்டியில் இங்கிலாந்துடனான போட்டியில் நான்கு விக்கட்டுகள் மீதமிருக்க 13 பந்துகளில் 22 ஓட்டங்கள் பெறவேண்டியிருந்த நிலையில் மழை குறிக்கிட்டதால் போட்டி தடைப்பட்டு பின்னர் மீண்டும் ஆரம்பிக்கப் பட்டபோது தென்னாபிரிக்காவிற்கு 1 பந்தில் 21 ஓட்டங்கள் இலக்காகக் நிர்ணயிக்கப்பட்டது, இதை தென்னாபிரிக்காவின் மோசமான துரதிஸ்டமாக சொல்லலாம்.அதேபோல 1996 உலக கிண்ண போட்டிகளில் லீக் போட்டிகளில் தான் விளையாடிய ஐந்து போட்டிகளிலும் வெற்றிபெற்ற தென்னாபிரிக்காவிற்கு மேற்கிந்திய தீவுகளுடனான காலிறுதிப் போட்டியில் பிரைன் லாராவின் அதிரடி சதம் தடைக்கல்லாக அமைந்தது. 94 பந்துகளில் 16 பவுண்டரிகள் அடங்கலாக 111 ஓட்டங்களை குவித்த லாரா குறிப்பிட்ட போட்டியை தென்னாபிரிக்காவிடமிருந்து மேற்கிந்திய தீவுகள் அணியின் கைகளுக்கு மாறினார். அதன் பின்னர் 2003 உலகக் கிண்ண போட்டிகளிலும் லீக் போட்டியொன்றில் தென்னாபிரிக்காவுடன் லாரா அடித்த சதம் மேற்கிந்திய தீவுகளுக்கு வெற்றியை பெற்றுக் கொடுத்தது குறிப்பிடத்தக்கது.

அதேபோல 2003 இல் இலங்கையுடனான ஆட்டத்தில் வெற்றிவாய்ப்பு அருகாமையில் இருக்கும்போது (30 பந்துகளில் 40 ஓட்டங்கள்) மழை குறுக்கிட்டதால் போட்டி சமநிலையில் (tie (not draw )) முடிவடைய தென்னாபிரிக்காவின் அடுத்த சுற்றுப் பயணம் தடைப்பட்டது. கடந்த 2007 உலக கிண்ண போட்டிகளில் சிறப்பாக ஆடியபோதும் அவுஸ்திரேலியாவின் பலத்திற்கு முன்னால் தாக்குப் பிடிக்க முடியாமல் அறையிறுதியில் தோல்வியடைந்து வெளியேறிய தென்னாபிரிக்கா இதுவரை 1998 இல் பங்களாதேசில் இடம்பெற்ற 'மினி வேர்ல்ட் கப்' கிண்ணத்தை மட்டுமே icc நடாத்திய போட்டிகளில் வென்றுள்ளது.2011 உலகக் கிண்ணத்தை பொறுத்தவரை தென்னாபிரிக்கா முன்னைய உலகக் கிண்ண போட்டிகளில் கலந்து கொண்டதைப்போல மிகவும் பலமான அணியாக இல்லை என்பதுதான் உண்மை. ஆசிய ஆடுகளங்களில் அனுபவம் குறைவான வீரர்கள் ஆடுவது சாதகமான விடயமல்ல, குறிப்பாக சுழல் பந்துவீச்சை சமாளிப்பதற்கு மிகவும் சிரமப்படவேண்டி இருக்கும், அதிலும் சுழல் பந்து வீச்சாளர்களை சிறப்பாக எதிர்கொள்ளும் மாக் பவுச்சர் அணியில் சேர்த்துக் கொள்ளப்படாமை ஆச்சரியமாக உள்ளது.

இதுவரை இலங்கை, இந்திய மண்ணில் தென்னாபிரிக்கா இதுவரை பெரிதாக எதையும் சாதிக்காவிட்டாலும் (இலங்கையுடன் இலங்கையில் இறுதியாக விளையாடிய 8 போட்டிகளிலும் தோல்வி) இலங்கை, இந்திய ஆடுகளங்களை ஒத்த பங்களாதேஸ் ஆடுகளங்களில் 'மினி வேர்ல்ட் கப்' (mini world cup) கிண்ணத்தை வென்றதையும்; பாகிஸ்தான் மண்ணில் வைத்து 'பாகிஸ்தான் இண்டிப்பெண்டன்ஸ் கப்' (Pakistan independence cup) கிண்ணத்தை வென்றதையும் மறக்கமுடியாது.தென்னாபிரிக்காவின் மிகப்பெரும் பலம் ஹசிம் அம்லாவின் அசுர போம் (form), 2011 உலகக் கிண்ண போட்டிகளில் அதிக ஓட்டங்களை குவிக்கும் வீரர்கள் பட்டியலில் அம்லாவின் பெயர் முன்னணியில் இடம்பிடிக்கும் சாத்தியம் அதிகம். அம்லா தவிர்த்து தென்னாபிரிக்காவின் பலமென்று கூறுவதானால் 'மோனே மோர்க்கல்' மற்றும் 'டேல் ஸ்டெயினின்' வேகத்தை குறிப்பிடலாம், ஆடுகளம் கொஞ்சம் ஒத்துளைத்தாலே போதும் இவர்கள் இருவரும் எதிரணிகளை திணறடித்து விடுவார்கள், அடுத்த தென்னாபிரிக்காவின் பலமென்று ஜோஹன் போத்தாவை குறிப்பிடலாம், இன்றைய தேதியில் உலகின் புத்தி சாதுரியமான சுழல் பந்து வீச்சாளர்களில் ஒருவரான இவர் தனது வேரியேஷனான சுழல் பந்து வீச்சினால் தென்னாபிரிக்காவிற்கு நிச்சயம் பலம் சேர்ப்பார்.

தென்னாபிரிக்காவின் பலவீனம் என்று சொன்னால் அவர்களது துடுப்பாட்ட வரிசைதான்; அம்லா, கலிஸ் தவிர்த்து ஏனைய வீரர்களை எடுத்துக் கொண்டால் ஒன்றில் அவர்களது போம் (form) மோசமாக இருக்கிறது அல்லது ஆசிய ஆடுகளங்களில் (சுழல் பந்து வீச்சிற்கு) ஆடுவதற்கான அனுபவம் குறைவாக இருக்கிறது. உதாரணமாக சொல்வதானால் ஸ்மித், டீ வில்லியஸ் இருவரும் மோசமான போமில் (out of form) இருக்கும் அதே நேரம் சிறந்த போமில் (in form) இருக்கும் டுமினி, டூ ப்லீசிஸ், வான் வைக் போன்றவர்கள் ஆசிய ஆடுகளங்களில் சுழல் பந்துவீச்சிற்கு பரிச்சியம் குறைவானவர்களாக இருக்கின்றார்கள்.இதே அணியில் அல்பி மோர்க்கலும் மார்க் பவுச்சரும் இருந்திருந்தால் தென்னாபிரிக்க அணி இன்னும் சிறப்பான அணியாக இருந்திருக்கும். ஆனாலும் ஸ்மித், டி வில்லியஸ் போமுக்கு (form) திரும்பும் பட்சத்தில் அவர்களுடன் அம்லா மற்றும் கலிஸ் இணைந்து சிறப்பான துடுப்பாட்டத்தினை அணிக்கு வழங்கினால் ஸ்டெயின், மோர்க்கல், போத்தா போன்ற சிறப்பான பந்து வீச்சாளர்கள் துணைக்கொண்டு தென்னாபிரிக்கா உலக கிண்ணத்தில் இதவரை தவறவிட்ட சாதனையை சாதிக்கலாம்.

15 பேர் கொண்ட குழாமிலிருந்து எனது பதினொருவர் தெரிவு

கிராம் ஸ்மித் (தலைவர்)
ஹசிம் அம்லா
மோனே வான் வைக்
ஜக் கலிஸ்
பீ டீ வில்லியஸ் (விக்கட் காப்பாளர்)
ஜே பி டுமினி
பப் டூ ப்லீசிஸ்
ஜோஹன் போத்தா
டேல் ஸ்டெயின்
மோனே மோர்க்கல்
லோன்வபோ சொட்சொபி

மிகுதி நால்வரும்

ராபின் பீட்டர்சன்
வைனே பார்னெல்
இம்ரான் தாகிர்
கொலின் இங்கிரம்

*--------------------*


முன்னைய பதிவுகள்


உலகக்கிண்ண அணிகள் ஒரு பார்வை (பகுதி 1) -> அவுஸ்திரேலியா

உலகக்கிண்ண அணிகள் ஒரு பார்வை (பகுதி 2)-> பாகிஸ்தான்

உலகக்கிண்ண அணிகள் ஒரு பார்வை (பகுதி 3)-> இங்கிலாந்து & மேற்கிந்திய தீவுகள்

அடுத்த பதிவு -> இலங்கை

Friday, January 28, 2011

உலகக்கிண்ண அணிகள் ஒரு பார்வை (பகுதி 3)மேற்கிந்திய தீவுகள்


முதல் மூன்று உலகக் கிண்ண போட்டித் தொடர்களிலும் இறுதிப் போட்டிக்கு தேர்வான மேற்கிந்திய தீவுகள் அணி அவற்றில் முதல் இரண்டு உலக கிண்ண போட்டித்தொடர்களிலும் champion பட்டம் வென்று உலகின் முதல் ஒருநாள் போட்டிகளுக்கான உலக சாம்பியனாக தெரிவாகியமை வரலாறு. ஆனால் அதனை தொடர்ந்து அடுத்தடுத்த உலக கிண்ண போட்டிகளில் சோபை இழந்து வந்த மேற்கிந்திய தீவுகள் அணி கடந்த 3 உலக கிண்ண போட்டித் தொடர்களிலும் மிகவும் பின்தங்கிய நிலையிலேயே இருந்ததுள்ளது . தான் வெற்றி பெற்ற இரண்டு உலகக் கிண்ணம் மற்றும் ஒரு சாம்பியன் கிண்ணம் என அனைத்து icc போட்டித் தொடர்களையும் இங்கிலாந்து மண்ணில் வெற்றிகொண்ட மேற்கிந்திய தீவுகள் அணி இம்முறை ஆசிய மைதானங்களில் சாதிக்குமா என்கின்ற சந்தேகம் பலருக்கும் இல்லாமல் இல்லை.1998 இல் பங்களாதேசில் இடம்பெற்ற 'மினி வேர்ல்ட் கப்' போட்டிகளில் runner-up ஆக வந்த மேற்கிந்திய தீவுகள் அணி 2002/2003 காலப்பகுதியில் இந்தியாவில் இடம்பெற்ற 7 போட்டிகளில் 4:3 என தொடரை வென்றும் தனது முத்திரையை ஆசிய ஆடுகளங்களில் பதித்துள்ளது. ஆனாலும் அன்றிருந்த ஸ்திரமான மேற்கிந்திய தீவுகள் அணியாக இன்றைய மேற்கிந்திய தீவுகள் அணி இல்லை என்பதுதான் உண்மை; எனினும் கிறிஸ் கெயிலின் அபாரமான போம் (form), பிராவோ மற்றும் போலாட்டில் அதிரடியுடன் கூடிய சகலதுறை ஆட்டம், சந்திரப்போல் மற்றும் சர்வானின் அனுபவமான துடுப்பாட்டம், டரின் சாமியின் புதிய தலைமைத்துவ அணுகுமுறை, ரோச்சின் வேகம், டரின் பிராவோவின் (யூனியர் பிராவோ ) துடுப்பாட்டத்தின் மீதான எதிர்பார்ப்பு என அனுபவமும், இளம் இரத்தங்களும், புதிய திறமைகளும் உள்ள மேற்கிந்திய தீவுகள் அணி 2011 உலகக் கிண்ண போட்டிகளில் எதிரணிகளுக்கு சிறந்த சவாலை கொடுக்கும் என்று நம்பலாம்.

15 பேர் கொண்ட குழாமிலிருந்து எனது பதினொருவர் தெரிவு

கிறிஸ் கெயில்
சிவ்நாராயணன் சந்திரபோல்
ராம்நரேஷ் சர்வான்
டரின் பிராவோ
டுவைன் பிராவோ
கிரோன் போலாட்
டரின் சாமி (தலைவர்)
கால்டன் பௌக் (விக்கட் காப்பாளர்)
சுலைமான் பென்
ரவி ராம்போல்
கெமர் ரோச்

மிகுதி நால்வரும்

அட்ரியன் பரத்
நிகிர மில்லர்
அன்ரு ரசல்
டேவன் ஸ்மித்

*--------------------*


இங்கிலாந்து
மூன்று தடவைகள் உலக கிண்ண இறுதிப் போட்டிக்கு தெரிவாகியபோதும் ஒரு தடவையும் உலக கிண்ணத்தை கைப்பற்றாத இங்கிலாந்து அணி இறுதியாக இடம்பெற்ற T/20 உலககிண்ண போட்டிகளில் champion பட்டத்தை வென்று icc நடாத்தும் போட்டிகளுக்கான தனது வெற்றிக் கணக்கை ஆரம்பித்திருந்தது. அது தவிர அவுஸ்திரேலிய மண்ணில் கிடைத்த தற்போதைய ஆஷஸ் வெற்றியும் இங்கிலாந்தை அனைவரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது. தற்போது அவுஸ்திரேலியாவுடன் இடம்பெற்றுவரும் ஒருநாள் போட்டிகளில் சற்று தடுமாறினாலும் அண்டர்சன், ப்ரோட், ஸ்வான் என முன்னணி பந்துவீச்சாளர்கள் உலகக் கிண்ண போட்டிகளுக்கான இங்கிலாந்து அணியுடன் இணைவது அவர்களுக்கு பலமாக அமையும்.ஆசிய ஆடுகளங்களில் அண்மைக்காலங்களில் பெரிதாக இங்கிலாந்து எதையும் சாதிக்காத போதும் இந்தியாவில் 2001/2002 இல் இடம்பெற்ற ஒருநாள் போட்டித்தொடரில் தொடரை 3:3 சமப்படுத்தியதோடு இலங்கையில் 2007/2008 இல் இடம்பெற்ற ஒருநாள் தொடரை கைப்பற்றியுள்ளமை அவர்களால் ஆசிய ஆடுகளங்களில் கிண்ணத்தை வெல்ல முடியுமா? என்கின்ற கேள்விக்கு சரியான பதிலாக இருக்கும். ஸ்வானின் சுழல் இங்கிலாந்திற்கு மிகப்பெரும் பலமாக ஆமையும் அதேநேரம் சுழல் பந்து வீச்சிற்கு சிறப்பாக ஆடக்கூடிய பெல், பீட்டர்சன், கொலிங்வூட் போன்றோர் 2011 உலக கிண்ண போட்டிகளுக்கான இங்கிலாந்து அணியில் இருப்பது இங்கிலாந்தின் 2011 உலகக் கிண்ண கனவை நிஜமாக்கினாலும் ஆச்சரியமில்லை.அண்மைக் காலங்களில் இங்கிலாந்து அணியின் துடுப்பாட்ட வீரர்கள் ஒவ்வொருவரும் தத்தமது பாணியில் சிறப்பான ஆட்டத்தை இங்கிலாந்திற்காக வழங்கி வரும் அதே வேளையில் பந்துவீச்சாளர்களும் தங்களாலான பங்களிப்பை முடிந்தவரை சிறப்பாக ஆற்றி வருகின்றனர். முன்னர் எப்போது மில்லாதவகையில் போராட்டகுணம் இங்கிலாந்திடம் புதிதாக உருவாகியுள்ளமை ஆச்சரியமான மற்றும் இங்கிலாந்திற்கு மிகவும் சாதகமான விடயமாகும். 1992 க்கு பின்னர் அனைத்து துறைகளிலும் சிறப்பான முழுமையான ஒரு இங்கிலாந்து அணி தற்போது உருவாகியுள்ளமை இங்கிலாந்திற்கு முதல் உலகக் கிண்ணத்தை பெற்றுக் கொடுக்குமா என்கின்ற எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது; பொறுத்திருந்து பார்ப்போம்.

15 பேர் கொண்ட குழாமிலிருந்து எனது பதினொருவர் தெரிவு

அன்ட்ரு ஸ்ருவாஸ் (தலைவர்)
மாட் பிரியர் (விக்கட் காப்பாளர்)
ஜொனத்தன் ட்ரோட்
கெவின் பீட்டர்சன்
இயன் பெல்
இயோன் மோகன்
போல் கொலிங்வூட்
கிராம் ஸ்வான்
ஸ்டுவட் ப்ரோட்
டிம் ப்ரெஸ்னன்
ஜேம்ஸ் அண்டர்சன்

மிகுதி நால்வரும்

அஜ்மல் சஹ்சாட்
ஜேம்ஸ் ட்ரேட்வெல்
மிச்சேல் யார்டி
லுக் ரைட்

*--------------------*


அடுத்த பதிவு -> தென்னாபிரிக்கா மற்றும் நியூசிலாந்து


Thursday, January 27, 2011

உலகக்கிண்ண அணிகள் ஒரு பார்வை (பகுதி 2)பாகிஸ்தான்
ஒருநாள் போட்டிகளில் இரு தடவைகள் உலகக் கிண்ண இறுதிப் போட்டிக்கு தெரிவான பாகிஸ்தான் அணி; அவற்றில் 1992 இல் அவுஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் இடம்பெற்ற உலகக்கிண்ண போட்டிகளில் champion ஆகவும், 1999 இல் இங்கிலாந்தில் இடம்பெற்ற உலகக் கிண்ண போட்டிகளில் runner-up ஆகவும் தனது உலகக் கிண்ண முத்திரையை பதித்துள்ளது. அதேபோல T/20 போட்டிகளில் இங்கிலாந்தில் இடம்பெற்ற போட்டிகளில் champion ஆகவும் தென்னாபிரிக்காவில் இடம்பெற்ற போட்டிகளில் runner-up ஆகவும் தன் முத்திரையை பதித்துள்ளது. இந்த தரவுகளில் இருந்து ஒரு விடயத்தை தெரிந்துகொள்ளலாம்; பாகிஸ்தான் இதுவரை இறுதிப் போட்டிக்கு சென்ற நான்கு தடவையும் ஆசிய நாடுகளுக்கு வெளியேதான் தன் முத்திரையை பதித்துள்ளது என்பதுதான் அது.உலகக் கிண்ண போட்டிகளில் ஆசியாவிற்கு வெளியே சாதித்திருந்தாலும்; இலங்கை, இந்திய அணிகளுடன் இலங்கை, இந்திய ஆடுகளங்களில் இடம்பெற்ற ஒருநாள் தொடர்களில் பாகிஸ்தான் அணி சிறப்பான வெற்றிகளை இதற்க்கு முன்னர் பெற்றிருப்பது அவர்களால் இலங்கை இந்திய ஆடுகளங்களில் சிறப்பாக விளையாட முடியும் என்பதற்கு சான்று. ஆனாலும் பாகிஸ்தான் 2009 இல் இருந்து இன்றுவரை தான் விளையாடிய 9 ஒருநாள் போட்டித் தொடர்களில் ஒன்றிலேனும் வெற்றி கொள்ளவில்லை என்பது பாகிஸ்தானை பொறுத்தவரை மனோரீதியாக சாதகமான விடயமல்ல. தற்போது நியூசிலாந்தில் இடம்பெற்றுக் கொண்டிருக்கும் ஒருநாள் போட்டித்தொடரில் அடுத்த 4 போட்டிகளில் 3 போட்டிகளை வென்று தொடரை வெற்றிகொள்ளும் பட்சத்தில் அது பாகிஸ்தான் வீரர்களுக்கு மிகப்பெரும் மனோரீதியான சக்தியை கொடுக்கும்.2001 உலக கிண்ணப் போட்டிகளை பொறுத்தவரை பாகிஸ்தானுக்கு ஆரம்ப போட்டிகள் இலங்கை மைதானங்களில் இடம்பெறுவது சாதகமான விடயமே, இந்திய மைதானங்களில் கிடைக்கும் ரசிகர்களின் ஆதரவைவிட இலங்கை மைதானங்களில் பாகிஸ்தானுக்கு அதிகளவு ரசிகர்களின் ஆதரவு கிடைக்கும் சந்தர்ப்பம் உண்டு. இதைவிட பாகிஸ்தானுக்கு 2011 உலக கிண்ண போட்டிகளில் சாதகமான விடயம் எதுவென தேடினால் பெரிதாக எவையும் புலப்படவில்லை. 2007 உலககிண்ண போட்டிகள் வரை பாகிஸ்தானின் மிகப்பெரும் பலமாக இருந்து வந்த மத்தியவரிசையும் (middle order), 2003 உலக கிண்ண போட்டிகள் வரை அனைத்து துடுப்பாட்ட வீரர்களையும் அச்சுறுத்தி வந்த வேகப்பந்து வீச்சும் தற்போது இல்லாமையும் பாகிஸ்தானுக்கு மிகப்பெரும் பின்னடைவே.யூனிஸ்கான், மிஸ்பா உல் ஹாக் என இரண்டு சிறந்த வீரர்கள் மத்திய வரிசையில் பாகிஸ்தான் அணியில் இடம்பெற்றிருந்தாலும் யூனிஸ்கானின் மோசமான போம் (form) கவலையான விடயமே. முகம்மது யூசப், சொகைப் மாலிக்கை ஆகிய இருவரில் ஒருவரை அல்லது இருவரையும் நடுவரிசைக்கு தெரிவு செய்திருந்தால் பாகிஸ்தானுக்கு மிகப்பெரும் பலமாக இருந்திருக்கும், இருவருமே ஆசிய ஆடுகளங்களில் சிறப்பான பெறுதிகளை கொண்ட வீரர்கள். அவர்களது போம் (form) பிரச்சினை என்றால் தற்போது இடம்பெறும் நியூ சிலாந்து அணியுடனான போட்டிகளில் வாய்ப்பு கொடுத்து பார்த்திருக்கலாம். உமர் அக்மல் சிறந்த வீரர்தான் என்றாலும் அவரது தற்போதைய போம் (form) மற்றும் அனுபவமின்மை போன்றன பாகிஸ்தானின் மத்தியவரிசைக்கு பலம் சேர்க்குமா என்கின்ற சந்தேகத்தை ஏற்ப்படுத்துகின்றன!!சாயிட் அன்வருக்கு பின்னர் இதுவரை நிரந்தரமான ஆரம்ப துடுப்பாட்ட வீரர் கிடைக்காமல் திணறும் பாகிஸ்தானுக்கு 2011 உலகக் கிண்ண போட்டிகளிலும் நிரந்தரமான ஆரம்ப துடுப்பாட்ட வீரர் இல்லை என்பது கவலைக்குரிய விடயமே. கமரன் அக்மல் சிறந்த ஆரம்பத்தை பாகிஸ்தானுக்கு வழங்குவார் என்கின்ற நம்பிக்கை இருந்தாலும் தற்போது அவர் மத்திய வரிசைக்கு மாற்றப்பட்டுள்ளதால் அவருக்குபதி ஆரம்ப வீரராக களமிறங்கும் 'இளம் வீரர்' அஹ்மத் ஷேக்சாட் அனுபம் குறைந்தவராக இருப்பினும் இளங்கன்று என்பதால் அழுத்தங்கள் இல்லாமல் சிறப்பான ஆரம்பத்தை வழங்கும் சந்தர்ப்பமும் உண்டு. அடுத்த ஆரம்ப துடுப்பாட்ட வீரரான ஹபீஸ் சிறந்த போமில் (form) இருப்பதால் இந்த உலகக் கிண்ணத்தில் சிறந்த ஆரம்பத்தை பாகிஸ்தானுக்கு வழங்குவார் என்று நம்பலாம்.அதேநேரம் பாகிஸ்தானின் மத்திய வரிசையின் மிகப்பெரும் பலவீனமாக இருக்கும் சாயிட் அப்ரிடியை ஷேக்சாட்டிற்கு பதிலாக ஆரம்ப துடுப்பாட்ட வீரராகவோ; அல்லது ஷேக்சாட்டும் அப்ரிடியும் ஆரம்பத்துடுப்பாட்ட வீரர்களாக களமிறங்க முஹமட் ஹபீஸ் 3 ஆம் இழக்க துடுப்பாட்ட வீரராகவோ; களமிறக்கினால் அப்ரிடி வேகமான அதிரடியை ஆரம்பத்தில் கொடுக்கும் அதேநேரம், மத்தியவரிசையில் ஆடும்போது கைக்கு வந்த போட்டியை தனது பொறுப்பற்ற ஆட்டத்தால் கெடுக்கும் சந்தப்பமும் குறைவடையும். அப்ரிடி 7 ஆம் இலக்கத்தில் கொடுக்கும் பினிஷிங்கை அப்துல் ரசாக்கால் வழங்கமுடியும் என்பதால் அப்பிடி ஆரம்ப துடுப்பாட்ட வீரராக களமிறங்கினால் அது பாகிஸ்தானுக்கு 'ஆசிய ஆடுகளங்களில்' சாதகமாக இருக்கும் என்பது எனது கணிப்பு.பந்து வீச்சை பொறுத்தவரை சஜித் அஜ்மலதும், அப்ரிடியினதும், ஹபீசினது சுழல் பந்துவீச்சு பாகிஸ்தானுக்கு மிகப்பெரும் பலமாக அமையும், அதே நேரம் வேகப்பந்து வீச்சாளர்களை பற்றி சொல்வதற்கு விசேடமாக ஒன்றுமில்லை. அக்தர் அணியில் இருந்தாலும் அவரது அண்மைய போம் (form) சொல்லிக் கொள்ளும்படி சிறப்பாக இல்லை, அதேநேரம் ஆடுகளங்களும் காலநிலையும் ஒத்துழைக்கும் பட்சத்தில் அப்துல் ரசாக்கின் 'ரிவர்ஸ் ஸ்விங்' எதிரணி மத்திய மற்றும் பின்வரிசை துடுப்பாட்ட வீரர்களுக்கு பெரும் சவாலாக இருக்கும் என்பதிலும் சந்தேகமில்லை. உமர் க(g)ள், சொஹைல் டன்வீர் போன்றோரும் அன்றைய நாள் சிறப்பாக அண்மையும் பட்சத்தில் எதிரணியினருக்கு மிகுந்த சவாலாக அமைவார்கள் என்று நம்பலாம்இதே பாகிஸ்தான் அணியில் சூதாட்ட சர்ச்சையில் சிக்கிய முஹமட் அமீர், சல்மான் பட், முஹமட் அசீவ் ஆகிய மூவரும் இடம்பெற்றிருந்தால் பாகிஸ்தான் அணியின் இன்றைய நிலையே வேறு. ஒருவேளை இவர்களும் அணியில் இருந்து மாலிக், யூசப் போறோரும் பாகிஸ்தான் அணியில் தெரிவு செய்யப்பட்டிருந்தால் 2011 உலக கிண்ணத்தை வெல்லும் அணிகளின் வரிசையில் பாகிஸ்தானை நிச்சயமாக முன்னிறுத்தி கூறியிருக்கலாம். அதேநேரம் பலமில்லாத புதுமுக அணிவீரர்களுடன் களமிறங்கி யாருமே எதிர்பார்க்காத வகையில் T/20 உலகக் கிண்ணத்தை பாகிஸ்தான் கைப்பற்றியதையும் மறக்க கூடாது. அணிக்குள் பிரச்சினை, சூதாட்ட தொடர்பு என்பன இல்லாதவிடத்து எப்போதுமே பாகிஸ்தானின் பலமாக இருக்கும் 'போராட்ட குணத்தினையும்', 'இருக்கும் திறமைகளையும்' வைத்து பாகிஸ்தான் உச்ச வெற்றியை அடைந்தாலும் ஆச்சரியமில்லை.

15 பேர் கொண்ட குழாமிலிருந்து எனது பதினொருவர் தெரிவு

சாஹிட் அப்ரிடி (தலைவர்)
முஹமட் ஹபீஸ்
யூனுஸ் கான்
உமர் அக்மல்
மிஸ்பா உல் ஹாக்
கமரன் அக்மல் (விக்கட் காப்பாளர்)
அப்துல் ரசாக்
உமர் (g)ள்
சொஹைல் டன்வீர்
சொஹைப் அக்தர்
சஜித் அஹ்மட்

மிகுதி நால்வரும்

அஹ்மத் ஷேக்சாட்
அப்துல் ரகுமான்
அஷாட் ஷபீக்
வஹாப் ரியாஸ்உலககிண்ணத்தை இந்த நாடு வென்றால் நன்றாக இருக்கும் என்று நான் நினைக்கும் 3 நாடுகளில் பாகிஸ்தானும் ஒன்று, மற்றைய நாடுகள் மேற்கிந்திய தீவுகள் மற்றும் நியூசிலாந்து (மூன்று நாடுகளுக்கும் சந்தர்ப்பம் மிகவும் குறைவு என்பது நன்றாகவே தெரியும் ஆனாலும் கிரிக்கட்டில் {எந்த game என்றாலும்} ஏதுமே சொல்லிக்கொன்டில்லை )

பாகிஸ்தான் மற்றும் மேற்கிந்தியதீவுகள் அணிகளை இந்த பதிவில் ஒன்றாக அலச நினைத்தாலும் பாகிஸ்தானுக்கே பதிவு பெரிதாகிவிட்டதால் அடுத்த பதிவில் மேற்கிந்தியதீவுகள் அணியை பற்றி விரிவாக அலசுவோம்.

Tuesday, January 25, 2011

நான் யாரு? நான் யாரு?

திரும்பி பார்க்க சொல்லி தொடர்பதிவொன்றிற்கு அழைத்திருந்தார் மதியோடையில் நனைவோமா மதிசுதா, அழைத்தமைக்கு நன்றி சுதா. ரொம்ப நேரம் திரும்பி பார்த்துக்கொண்டிருந்தா கழுத்து வலிக்கும் என்பதால் நான் திரும்பி பார்ப்பதை நீங்க திரும்பிகூட பார்க்காம திரும்பி போகாம பார்த்தேதான் ஆகணும் :-)

அன்று 2009 ஆகஸ்ட் 31 .....
முதலாவது பதிவு எப்பூடி என்கிற பெயரிலே வெளியாகியது, அன்றைய தேதியில் பதிவுலகம் என்று ஒன்று இருக்கின்றது என்றே எனக்கு தெரியாது. நான் இந்த கம்பியூட்டர் பெட்டியை தொட்டுப்பார்த்ததே 2002 ஆம் ஆண்டுதான், 2003 இலே இணையம் எனக்கு அறிமுகமானாலும் சற்றேனும் பரிச்சியமானது 2007 க்கு பின்னர்தான். அதுகூட சினிமா மற்றும் ஸ்போர்ட்ஸ் நியூஸ் பார்ப்பதற்காக கொழும்பில் இருந்த காலப்பகுதியில் நெட் கபே (net cafe) களுக்கு சென்றுதான் ஓரளவென்றாலும் தெரியும். அப்போதெல்லாம் எனக்கு தெரிந்த இணையதளங்கள் thatstamil.com, behindwoods.com, sify.com, cinesouth.com, thamilcinema.com, indiaglitz.com, rajinifans.com, cricinfo.com, envazhi.com, onlysuperstar.com போன்றனதான்.

2009 வரை குறிப்பிட்ட இணையதளங்கள்தான் எப்போதாவது நெட் கபே (net cafe) செல்லும்போது பார்ப்பவை, புதுப்படம் ரிலீசாகிய அன்று விமர்சனங்கள் படிப்பதற்காக இணைய தளங்களை நாடினாலும், google துணையுடன் படத்தின் பெயரை ஆங்கிலத்தில் டைப்புவதால் (தமிழ்லதான் டைப்ப தெரியாதே) ஆங்கில விமர்சனங்கள்தான் பார்க்க கிடைக்கும், இதனால் தமிழ் பதிவுகள் பற்றி எதுவுமே பதிவெழுத ஆரம்பிக்கும் வரை தெரியாது.

பதிவெழுத ஆரம்பித்து 50 நாட்கள்வரை tamilish.com (இன்றைய ta.indli.com), thamilmanam.net , tamil 10.com போன்ற பதிவுகளை பிரபலப்படுத்தும் திரட்டிகள் எவற்றையும் தெரியாது . இன்றுவரை ப்லோக்கரில் எதுவுமே டிசைன் பண்ண தெரியாது (இப்போதான் கொஞ்சம் கொஞ்சம் தெரிய ஆரம்பிச்சிருக்கு) , உண்மையா சொல்லனுமின்னா ms office , photo shop தவிர்த்து எதுவுமே இந்த கணணிப்பெட்டியில தெரியாது.இப்படி பதிவுலகம் என்றொன்று இருப்பதே தெரியாமல் பதிவுலகில் கால்வைத்த முதல் மற்றும் கடைசி ஆளாக நான்தான் இருப்பேன் என்று நினைக்கிறேன். "அப்புறம் எப்பிடிடா நாதாரி ப்ளாக் எழுத ஆரம்பிச்சா" என்று நீங்க திட்டிறது புரிகிறது:-) அதைத்தான் இப்போது சொல்லப்போகிறேன். நான் கொழும்பிலே இருந்த 2 ஆண்டுகளில் முதல் ஆண்டில் வெட்டியான நேரங்களில் (நித்திரையில்லாமல் முழிப்பாக இருக்கும் முழு நேரமும்) சினிமா, கிரிக்கட், அரசியல் பற்றி மட்டுமே நண்பர்களுடன் அரட்டை அடித்துக்கொண்டிருக்கும் எனக்கு ஒரு இணையதளத்தில் எனது எண்ணங்களை பதிவு செய்யவேண்டும் என்பது சிறு விருப்பம். வெட்டியாக வேறு இருந்ததால் எனக்கு ஓரளவுதெரிந்த front page துணைக்கொண்டு 'காண்டீபம்' என்கின்ற பெயரில் ஒரு பக்கத்தை வடிவமைத்திருந்தேன், ஆனாலும் web development என்றால் என்ன என்பதே தெரியாததால் அதை இன்றுவரை அப்படியே பத்திரமாக வைத்திருக்கிறேன்.

நளின் (mnalin) (சக பதிவர்).....
என் தம்பியின் நண்பனாக அறிமுகமாகிய இந்த ஆசாமி மட்டும் இல்லையென்றால் எப்பூடி என்கின்ற இந்த வலைப்பூவே இல்லை. இவரது நண்பர் ஒருவரது டோங்கில் (dongle) துணையுடன் "கூகிளின்னு ஒருத்தான் ஓசியில இடம் தாறான், நாம அதில என்ன வேணுமின்னாலும் எழுதலாம்:-)" என்று முதல்முதலாக blogger என்கிற சொல்லை அறிமுகப்படுத்திய தோடல்லாமல் உடனேயே ஒரு பிளாக் ஒன்றை உருவாக்கி அதற்க்கு என்ன பெயர் வைக்கலாம் என்று கேட்டு (முதல்நாள் பார்த்த பசங்க பட கிளிப்பிங்கால் வந்த பெயர்தான் எப்பூடி...) உடனேயே எப்பூடியை உருவாக்கி; முதல் பதிவை (அறிமுகப்பதிவை) எழுதச்செய்து அதை பப்ளிஷ் செய்து காட்டி என்னை பதிவுலகிற்கு கையை பிடித்து அழைத்துவந்தவர்ன்) நளின்தான். அன்று அவருடன் வந்து பல விடயங்களில் ஒத்தாசை புரிந்த நண்பரான 'நிரோஜ்' அவர்களையும் இவ்விடத்தில் நினைவு கூருகிறேன்.

அதன் பின்னர் திரட்டிகளில் இணைத்து, டெம்ப்ளேட் மாற்றியது, கட்ஜெட்களைகளை சேர்த்தது என அன்று முதல் இன்றுவரை page designing முழுவதும் அண்ணன் பொறுப்புத்தான். இதில்குறிப்பிடத்தக்க முக்கியமான விடயம் என்னவென்றால்; எம் இருவருக்கும் 90% ஆன பொது விடயங்களில் எதிரெதிர் கருத்துத்தான், இருந்தும் தனக்கு பிடித்தவர்களை குறைவாக எழுதும்போதும்சரி அவருக்கு பிடிக்காதவர்களை உயர்த்தி எழுதும்போதும்சரி இன்றுவரை அதுபற்றி வாயே திறக்கவில்லை (இதே இடத்தில நான் இருந்திருந்தா கதையே வேற) ஆரம்பத்தில இருந்து பதிவெழுத சொல்லி வற்புறுத்தியதால் mnalin என்கிற பெயரில் நாலைந்து தொழில் நுட்ப பதிவு எழுதியவரை நண்பர்களில் ஒருவர் 'கூகிள் பதிவர்' என்று கிண்டல் செய்ததாலோ என்னமோ இப்பெல்லாம் வேலைப்பளு என்கிற சாட்டில் எழுத முயற்சிப்பதே இல்லை. கூகிளின் பரம விசிறியான நளினின் அடுத்த கூகிள் (தொழில்நுட்ப) பதிவிற்காக காத்திருக்கிறேன்.

மயூரதன் (சக பதிவர்).....
நான் மேலே குறிப்பிட்ட எனக்கு தெரிந்த சில இணையதளங்களின் பெயர்களை குறிப்பிட்டிருந்தேனே; அந்த இணைய தளங்களை எனக்கு அறிமுகப்படுத்தியவர். படம்பார்க்க வென்றாலும் சரி, இணையதள செய்திகள் பார்க்கவென்றாலும் சரி 2008 வரை இருவரும் ஒன்றாகவே செல்வது வழக்கம் (அதன்பின்னர் அவர் நாடு மாறிடிச்சு ). இருவருக்கும் 90 % ஆன சினிமா, கிரிக்கெட் விடயங்களில் ஒத்த கருத்திருப்பதால் எந்த பிரச்சனையும் இல்லை. நளினை எனக்கு அறிமுகப்படுத்தி வைத்த நளினின் நண்பரான இவர் எனக்கு 4 வருடம் கழித்து பிறந்த தம்பி; ஆனால் update இல் 4 வருடம் மூத்த அண்ணன். ஆரம்பத்தில் பதிவுகள் எழுதிய இவருக்கு இப்பெல்லாம் படம் பார்க்க நேரமிருக்கு, மேட்ச் பார்க்க நேரமிருக்கு ஆனா பதிவெழுத சொன்னா மட்டும் வேலையிருக்கும், எக்ஸாம் இருக்கும்.

ஆரம்பத்தில் திரட்டிகளில் பதிவுகளை இணைப்பதே தெரியாத காலத்தில் தனக்கு தெரிந்த வலைப்பூக்களில் லிங்க் கொடுத்து ஐந்து பத்து வாசகர்களையும் ஓரிரு கமண்டுகளையும் பெற்றுக்கொடுத்தவர் இவர்தான். எமக்கு தெரிந்தவர்கள் (எமது கட்டாயத்தின் பேரில் :-) ) ஒரு சிலர் தவிர்த்து வெளியாட்களின் இட்ட முதல் காமன்டுகளுக்கு இவர்தான் பொறுப்பு. அதிலும் இலங்கையின் முதல்தர வானலை அறிவிப்பாளரான வெற்றி fm லோஷன் (லோஷனின் களம்) அவர்கள் முதல் முதலாக கமன்ட் போட்டு ஆனந்த அதிர்ச்சி கொடுத்ததும் இவரது உபயத்தால்தான். இன்னுமொரு முக்கியமான விடயம்; இணையவேகம் ஆமையைவிட மெதுவாக இருந்த காலத்தில் (இப்போ ஓரளவு ஓகே) நான் எழுதும் பதிவுகளின் எழுத்து பிழையை திருத்தி, புகைப்படங்களை இணைத்து பதிவை முளுமைப்படுத்தியதும் இவர்கள் இருவரும்தான்.நான் எழுதிய ராவணன், எந்திரன் விமர்சனங்களைவிட இவர் எழுதிய ஆதவன், சிங்கம் போன்ற திரைப்படங்களுக்கான விமர்சனம் எழுத்து நடையில் சிறப்பாக இருக்கும், ஆனால் இப்போது ஆடுகளம் படம் பார்த்து ஒருவாரம் ஆகியும் விமர்சனம் வரவில்லை, ஏன் வரல? ஏன் வரல? i want review immediately. எப்பூடியில் அதிக கிட்ஸ் கொடுத்த பதிவான 'இதுதான் அஜித்குமார்' பதிவையும் இன்றுவரை தொடர்ந்து வாசகர்கள் வந்து பார்க்கும் பதிவான 'கல்யாணத்துக்கு அப்புறம் காதல மறந்துடாதீங்க!!!!' பதிவும் எழுதிய இவருக்கு என்னதான் வேலைப்பளு இருந்தாலும் வாரம் ஒரு பதிவு, சரி மாதம் ஒரு பதிவு கூடவா எழுத முடியாதுள்ளது? யாராவது கேளுங்கப்பா :-)

ஜீவதர்ஷன் (டம்மி).....
ஆமாங்க நான்தான்; அதாவது ஸ்கூட்டரை (மோட்டார் பைக்) வாங்கி அதை ஒருத்தர் ஸ்டாட் பண்ணி கொடுக்க, இன்னொருத்தர் ஸ்கூட்டரில வச்சு வீட்டில இருந்து ரோட்டுவரைக்கும் கவனமா கொண்டு வந்து சேர்க்க, அப்புறமும் அவங்க ரெண்டுபேரும் பக்கத்தில கூட துணைக்குவர ஒருத்தன் அந்த ஸ்க்கூட்டரை ஓட்டுவது எப்படி 'டம்மியாக' இருக்குமோ அப்படித்தான் நானும்.

எப்பூடி.... (சும்மா அதிருதெல்ல :-)).....
என்னவென்றே தெரியாத ஒன்றிற்கு வைத்த பெயர்; இன்று யாராவது வேறு தேவைகளுக்காகவேனும் இந்த 'சொல்லை' சொல்லக்கேட்டால் யாரோ என்னை கூப்பிடுவதுபோல இருக்கும் அளவிற்கு என்னோடு ஒன்றிவிட்டது. ஆரம்பத்தில் யாருமே வராத எப்பூடிக்கு பத்துநாள் பதிவெழுதவில்லை என்றாலும் தினமும் 40 க்கு மேற்பட்டவர்கள் நேரடியாக (direct) வருகை தருவதே நான் எப்பூடியின் வெற்றியாக (ஓரளவேனும்) கருதுகிறேன். இந்த 40 ஐ 400 ஆக்குவதுதான் அடுத்த கட்ட திட்டம் (கொஞ்சம் இல்லை ரொம்பவே ஓவர்தான் but காண்பிடன்ட் பாஸ் காண்பிடன்ட் :-))

நிறையபேருக்கு நன்றி சொல்லவேண்டும், சிலபேரிடம் மன்னிப்பு கேட்கவேண்டும், பதிவுலகம் கற்றுக் கொடுத்தவற்றை பகிரவேண்டும், எழுதிய பதிவுகள் பற்றிய சில விடயங்களை குறிப்பிட வேண்டும் என்று நிறைய விடயங்கள் எழுதுவதற்கு இருந்தாலும்; அவற்றையும் எழுதினால் பதிவு ரொம்ப நீண்டுவிடும் (இப்ப மட்டும்) என்பதால் 300 ஆவது பதிவாக மேற் குறிப்பிட்ட விடயங்களை பகிர்ந்து கொள்ளல்லாம் என்கின்ற எண்ணத்துடன் இதுவரை திரும்பி பார்த்ததால் ஏற்ப்பட்ட கழுத்து வலிக்கு தைலம் தடவ கிளம்புகிறேன் :-))

Monday, January 24, 2011

உலகக்கிண்ண அணிகள் ஒரு பார்வை (பகுதி 1)

2011 உலகக் கிண்ண போட்டிகளுக்கான அணிகள் அறிவிக்கப்பட்ட நிலையில் அவற்றில் முக்கியமான அணிகளது அணித்தேர்வையும், குறிப்பிட்ட அணிகளின் உலகக் கிண்ண நிலைப்பாட்டையும் எனது பார்வையில் பகிர்ந்து கொள்கிறேன். சென்ற உலகக் கிண்ணப் போட்டிகளில் எனது பேவரிட் அணியாக (வெறித்தனமான) இருந்த இலங்கை இந்த ஆண்டு எனக்கு பிடிக்காத அணிகள் வரிசையில் முதலிடத்தில்!!!(மாற்றம் என்றொன்றை தவிர மிகுதி எல்லாமே மாறும் என்பதை அனுபவ ரீதியாக உணர்ந்த இடம்). இந்த ஆண்டு குறிப்பிட்ட ஒரு அணிக்கு ஆதரவாகவோ அல்லது எதிராகவோ (இலங்கை உட்பட) உலகக்கிண்ண போட்டிகளை பார்ப்பதில்லை என்பதில் உறுதியாக இருக்கிறேன், இந்த உலகக் கிண்ணப் போட்டிகளில் முதல் முறையாக கிரிக்கட்டை மட்டுமே ரசிப்பதாக முடிவெடுத்துள்ளேன்.

ஆனால் இந்த நிலைப்பாட்டினை கடைப்பிடிப்பது அவளவு சுலபமில்லை; இணையத் தளங்கள், face book நண்பர்கள், வலைப்பதிவுகள், கூட மேட்ச் பார்ப்பவர்கள், கிரிக்கட் பற்றி பேசும் நண்பர்கள் + பழக்கமானவர்கள் போன்றோர் சும்மா இருக்கிறவனை உசுப்பி ஏதாவதொரு அணிக்கு எதிராகவாவது மாறக்கூடும், அவங்க கிட்ட சிக்காமபோனா இந்த உலகக் கிண்ணத் தொடரில் கிரிக்கட்டை மட்டும் ரசிக்கமுடியும் என்று நம்புகின்றேன், பார்ப்போம்!!!!!!

அவுஸ்திரேலியா
ஆங்கில முதலெழுத்துக்கள் என்றாலும் சரி, கடந்தகால உலக கிண்ண பெறுபேறுகள் என்றாலும் சரி முதலாவதாக வரும் பெயர் அவுஸ்திரேலியாதான் என்பதால் முதலில் அவுஸ்திரேலியா பற்றி பார்ப்போம்.

இதுவரை இடம்பெற்ற ஒன்பது உலககிண்ண போட்டித் தொடர்களில் 6 தடவை இறுதிப் போட்டிக்கு தெரிவாகிய அவுஸ்திரேலியா அதில் நான்கு தடவை கிண்ணத்தை கைப்பற்றியுள்ளது. கடந்த மூன்று உலகக் கிண்ண தொடரிலும் தொடர்ந்து சாம்பியன் பட்டத்தை வென்றுள்ள அவுஸ்திரேலிய அணி 2011 உலக கிண்ணப் போட்டிகளுக்கு 'நடப்பு சாம்பியன்' என்கின்ற பெயரோடு களமிறங்கினாலும் கடந்த இரண்டு உலகக் கிண்ண போட்டிகளில் கால்பதிக்கும் போதிருந்த மனோதிடத்துடன் இந்த உலகக் கிண்ண போட்டிகளிலும் கால்பதிக்குமா? என்றால், இல்லை என்பதுதான் பதிலாகவிருக்கும். கடந்த சில மாதங்களாக ஏற்ப்பட்ட தோல்விகளுக்கு மருந்து தடவியதுபோல் இங்கிலாந்துடனான ஒருநாள் போட்டித்தொடர் அவுஸ்திரேலியாவிற்கு சார்பாக அமைந்தாலும் ஆசிய ஆடுகளங்களில் ஆடுவதற்கும் சொந்த மண்ணில் ஆடுவதற்கும் நிறையவே வித்தியாசம் உள்ளது என்பதை அவுஸ்திரேலியர்கள் அறியாதவர்கள் அல்ல.

ஆனாலும் கடந்த காலங்களை புரட்டிப் பார்த்தால் ஆசிய ஆடுகளங்களில் அவுஸ்திரேலியாவின் பலம் என்னவென்பது நன்கு புலப்படும்; இதற்கு முன்னர் ஆசிய நாடுகளில் இடம்பெற்ற இரு உலகக் கிண்ணப் போட்டித் தொடர்களிலும் இறுதியாட்டத்திற்கு தகுதியான அவுஸ்திரேலியா அவற்றில் ஒரு தடவை சாம்பியனாகவும் (1987), ஒரு தடவை Runner-up ஆகவும் (1996) சாதித்துள்ளது. அதேபோல இறுதியாக இந்தியாவில் இடம்பெற்ற சாம்பியன்ஸ் கிண்ண போட்டித் தொடரையும் கைப்பற்றியது அவுஸ்திரேலியாதான். அதேபோல இந்தியாவில் இறுதியாக ஒரு 'ஒருநாள் போட்டியில்' மட்டுமே விளையாடி தொடரை இழந்ததை தவிர இறுதி 15 ஆண்டுகளில் இந்தியாவில் இடம்பெற்ற அனைத்து தொடர்களையும் (முக்கோணத் தொடர்கள் உட்பட) அவுஸ்திரேலியா கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.ஆசிய அணிகளைவிட இந்திய ஆடுகளங்களில் அதிகம் சாதித்தது அவுஸ்திரேலியாதான் என்றாலும் பொண்டிங், கிளார்க் இருவரது போமும் (form); பொண்டிங், ஹசி, டைட் மூவரதும் உபாதையும் அவுஸ்திரேலியாவிற்கு பாதகமான விடயங்கள். அவுஸ்திரேலியா அறிவித்துள்ள 15 பேர் கொண்ட அணியில் இருந்து பதினோரு சிறந்த வீரர்களை கொண்ட அணியை தெரிவுசெய்ய முடியுமாயினும் 'கமரூன் வைட்'டிற்கு பதிலாக சிறப்பான போமிலிருக்கும் (form) ஷோன் மார்ஸ்சை அணியில் சேர்த்திருந்தால் இன்னமும் சிறப்பாக இருந்திருக்கும். இந்திய ஆடுகளங்கள் மற்றும் சுழல்பந்து வீச்சு; இரண்டையும் சிறப்பாக எதிர்கொள்ளக் கூடியவரான மார்ஸ் ஒருவேளை பொண்டிங் அல்லது ஹசி உபாதை காரணமாக விளையாட முடியாமல் போகும் சந்தர்ப்பத்தில் அவர்களில் ஒருவரது இடத்தை நிச்சயம் பூர்த்தி செய்வார்.

பந்துவீச்சை பொறுத்தவரை பிரட் லீயின் போம் (form) மீளக் கிடைக்கப் பெற்றமையும்; பொலிங்கர், டைட், ஹுருக்ஸ், வொட்சன் போன்றவர்களது சிறப்பான பந்து வீச்சு போமும் (form); பகுதிநேர சூழலுக்காக 'ஸ்டீவன் ஸ்மித்' மற்றும் 'டேவிட் ஹசி' அணியில் இருப்பதுவும் அவுஸ்திரேலியாவிற்கு சாதகமான விடயமே, பந்துவீச்சு வரிசை சிறப்பாக இருந்தாலும் ஏதோ ஒன்று குறைவது போன்ற உணர்வு ஏற்படத்தான் செய்கிறது, ஒருவேளை 'கிளன் மக்ரா' இல்லாததன் தாக்கமோ என்னமோ!!!

துடுப்பாட்டத்தை பொறுத்தவரை இந்திய ஆடுகங்களில் சிறப்பாக ஆடக்கூடியவரும் சிறந்த போமில் (form) உள்ளவருமான ஷேன் வொட்சன் மிகப்பெரும் பலம். வொட்சன் தவிர்த்து பார்த்தால் வேறெந்த வீரர்களும் சிறப்பான போமில் (form) இல்லாதமை அவுஸ்திரேலியாவிற்கு மிகவும் பாதகமான விடயம். பொண்டிங், கிளார்க் இருவரும் போமிற்கு (form) திரும்பாத பட்சத்தில் அவுஸ்திரேலியாவிற்கு மிகப்பெரும் பாதகமான காரணியாக அவர்களது துடுப்பாட்ட வரிசை அமையலாம்!! அதேபோல 7 ஆம் இலக்கத்தில் களமிறங்கும் 'ஸ்டீவன் ஸ்மித்' அந்த இடத்திற்கு சரியான தெரிவல்ல.2011 உலகக் கிண்ணத்தை கைப்பற்றக் கூடியளவிற்கு தகுதியான அணியாக அவுஸ்திரேலியா இருந்தாலும் உலகக் கிண்ணத்தை கைப்பற்றும் பேவரிட் அணியாக கூற முடியாது. ஒருவேளை இறுதியாக இந்தியாவில் இடம்பெற்ற சாம்பியன்ஸ் கிண்ணத்திற்கு போடப்பட்ட தரமான பிட்ச் (pitch) போன்று இம்முறையும் தரமான பிட்ச் (pitch) போடப்படும் பட்சத்தில் அவுஸ்திரேலியா ஏனைய அணிகளைவிட சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் என்று நம்பலாம்.

15 பேர் கொண்ட குழாமிலிருந்து எனது பதினொருவர் தெரிவு

ஷேன் வொட்சன்
பிரட் ஹடின் (விக்கட் காப்பாளர்)
ரிக்கி பொண்டிங் (தலைவர்)
மைக்கல் கிளார்க்
டேவிட் ஹசி
மைக்கல் ஹசி
ஸ்டீவன் ஸ்மித்
பிரட் லீ
நதன் ஹுருக்ஸ்
டக் பொலிங்கர்
ஷோன் டைட்

மிகுதி நால்வரும்

மிச்சல் ஜோன்சன்
டிம் பெயின் (விக்கட் காப்பாளர்)
கமரூன் வைட்
ஜோன் ஹஸ்டிங்

அடுத்த பதிவு -> மேற்கிந்தியதீவுகள் மற்றும் பாகிஸ்தான்

Saturday, January 22, 2011

லியோனியும் கடுப்பும்!

எனக்கும் லியோனிக்கும் எந்த வாய்க்கால் சண்டையும் இல்லை என்பதை முன்னரே தெரிவித்துக் கொள்கிறேன்.


அது ஒரு பழைய லியோனியின் பட்டிமன்ற DVD, 1996 காலப்பகுதியில் இடம்பெற்ற பட்டிமன்றம் என்று நினைக்கிறேன், மக்களால் அதிகம் ரசிக்கப்படுபவை புதிய பாடல்களா? இல்லை பழைய பாடல்களா? என்கிற தலைப்பில் ஒரு பட்டிமன்றம். அதன் முன்னுரையில் லியோனி கூறுகிறார் "இதற்க்கு முன்னர் நான் இதே தலைப்பில் இடம்பெற்ற பட்டிமன்றம் ஒன்றில் மக்களால் ரசிக்கப்படுவது பழைய பாடல்கள்தான் என்று கூறிய தீர்ப்பிற்கு புதிய கவிஞர்கள் சிலர் கண்டனம் தெரிவித்தனர்; அதனால் இந்த தடவை புதிய மற்றும் பழைய பாடல்களை பாடிக்காட்டுகிறேன் இறுதியில் நீங்களே தீர்ப்பை கூறிவிடுங்கள்" என்று கூறிவிட்டு பட்டிமன்றத்தை(?) ஆரம்பித்தார்.

பழைய பாடல்களில் தெரிந்தெடுத்த சிறந்த பாடல்களையும், புதிய பாடல்களில் தேர்ந்தெடுத்த மோசமான பாடல்களையும் ஒப்பிட்டு தனது பாணியில் மொக்கை காமடிகள் சகிதம் பேசிக்கொண்டிருந்தார் (பினாத்திக்கொண்டிருந்தார்) அவரால் மோசமாக விமர்சிக்கப்பட்ட பாடல்கள் வரிசையில் 'டெலிபோன் மணிபோல் சிரிப்பவள் இவளா' பாடல் தப்பான புரிதலோடு கிண்டல் செய்யப்பட்டபோதுதான் அவரது விளக்கத்தின் அளவுகோல் புரிந்தது.

குறிப்பாக வைரமுத்துவையும் ரகுமானையும் குறிவைத்து வாரிக்கொன்டிருந்தார், 'முஸ்தப்பா முஸ்தப்பா' பாடலின் முதல் வரியை கிண்டல் செய்தவர் அதற்கடுத்த வரியையும் அதன் சரணத்தின் சிறப்பையும் கண்டு கொள்ளாமல் விட்டமை புதிய பாடலாசிரியர்களை மட்டம் தட்டுவது அவரால் திட்டமிட்டு செய்யப்படும் செயலைபோல் இருந்தது (இளையராஜாவின் ஆரம்பகால பாடல்களும் புதிய பாடல்கள் பிரிவிலேயே இடம்பெற்றிருந்தது)

பழைய பாடல் ஒவ்வொன்றிற்கும் இணையாக புதிய பாடல்களில் மொக்கை பாடலொன்றை உதாரணத்துக்கு இழுத்தவருக்கு புதிய பாடல்களில் எந்த சிறந்த பாடலும் உதாரணமாக கிடைக்கவில்லை; சின்ன ராசாவே, ஓம்காரி பானிபூரி போன்ற புதிய பாடல்களை உதாரணத்திற்கு இழுத்த லியோனிக்கு வாலியும் வைரமுத்துவும் சமகால சக கவிஞர்களும் எழுதிய எத்தனை எத்தனையோ முத்தான பாடல்கள் இருந்தும் அவை எவையும் கண்ணில் படாமல் போயிற்றா ? இல்லை வேண்டுமென்றே கவனிக்கப்படாமல் விடப்பட்டனவா? என்றுதான் புரியவில்லை.

நான் புதிய பாடல்களை பழைய பாடல்களை விட சிறந்தவை என்று கூறவில்லை, அதற்காக 'அம்மா' பாடலாக ஒரு பழைய பாட்டுக்கு இணையாக புதிய பாடல்களில் 'அரபிக் கடலோரம்' (ஹம்ம ஹம்ம ஹம்மா) பாடல் தவிர வேறேதும் உதாரணத்திற்கு கிடைக்கவில்லையா? என்று கேட்கத்தோன்றுகிறது. ரகுமானின் பல பாடல்களின் இசையினை தரக்குறைவாக கிண்டல்செய்த லியோனி இன்னமும் தமிழ் தொலைக்காட்சிகளில் பண்டிகைகளுக்குத்தான் காட்சி தருகிறார்; ஆனால் ரகுமான் இருகைகளிலும் குச்சிமிட்டாயை வைத்திருப்பதுபோல ஆஸ்காருடன் கண்டம்தாண்டி சென்றுவிட்டார்.

பழைய பாடலான 'மாட்டுக்காரவேலா' என்கிற கிராமிய பாடலுக்கு இணையாக புதிய நாட்டுபுற பாடல்களில் 'ஒத்தரூபாய் தாறன்' தவிர வேறேதும் லியோனிக்கு உதாரணத்துக்கு கிடைக்கவில்லை. அதிலும் 'ஆட்டோக்காரன் ஆட்டோக்காரன்' பாடலில் வரும் "பிரசவத்திற்கு இலவசமா வாரேம்மா" வரியை நடைமுறைக்கு ஒவ்வாதது என்றார். இப்படி ஏகப்பட்ட இடங்களில் தனது முன்னைய தீர்ப்பை நியாயப்படுத்துவதற்காக ஒரு பக்க சார்பாகவே நடந்து கொண்டார். புதிய பாடலுக்காக ஆஜராகியவரும் புதிய பாடல்களில் தேர்ந்தெடுத்த மொக்கை பாடல்களை சிறந்த பாடலாக பாடிக்காட்டினார், இப்படி பக்காசார்பாக நடாத்தும் பட்சத்தில் அது எப்படி பட்டி மன்றமாகும்?

இதே காணொளியை 15 வருடத்திற்கு முன்னர் பார்த்தபோது சிறுவயதில் ரசிக்க முடிந்தது, ஆனால் இன்று எரிச்சல்தான் வருகிறது; அப்படியென்றால் லியோனி பட்டிமன்றம் சிறுபிள்ளைகளுக்கானதா ? இல்லை சிறுபிள்ளைத்தனமானதா? என்பதுதான் எனக்கு புரியவில்லை! பதினைந்து வருடத்திற்கு முன்னர் இடம்பெற்ற பட்டி மன்றம்தான், இருந்தாலும் இன்றைக்கு பார்த்தபோது ஏற்ப்பட்ட உணர்வை சொல்லணுமின்னு தோணிச்சு அதனாலத்தான் இந்த பதிவு.

குறிப்பிட்ட இந்த ஒரு பட்டிமன்றத்தை வைத்து ஒட்டு மொத்த லியோனியின் பட்டி மன்றங்களையும் குறைகூற இயலாதுதான்; ஆனால் இந்த பட்டிமன்றத்தை பார்த்த பின்னர் நான் எடுத்த முடிவு "விஜய் படத்தை பார்த்தாலும் பார்ப்பேன்; ஆனால் லியோனி பட்டி மன்றத்தை இனிமேல் பார்ப்பதில்லை" என்பதுதான், இதனால் லியோனிக்கு எந்த நஷ்டமும் இல்லை என்பதையும் இவ்விடத்தில் குறிப்பிட்டாகவேண்டும்:-)

Thursday, January 20, 2011

சினிமா & கிரிக்கெட் (21/1/11)

பத்துநாள் இடைவெளியின் பின்னர் மீண்டும் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி :-) பொங்கல் ரிலீஸ் படங்கள் எவற்றையும் பார்க்கும் சந்தர்ப்பம் அமையவில்லை, அடுத்தடுத்த நாட்களில் ஆடுகளம் பார்க்கலாம் என்றிருக்கிறேன். பதிவுலக விமர்சனங்களை பார்க்கும்போது இந்த பொங்கலுக்கு ரிலீசான மூன்று திரைப்படங்களுமே நன்றாக இருக்கும் போல் தெரிகிறது. 2000 இற்கு பின்னர் ஒரு பண்டிகைக்கு வெளிவந்த முக்கிய நடிகர்களது மூன்று திரைப்படங்கள் இதுவரை வெற்றி பெற்றதில்லை; இம்முறை அது சாத்தியமாகும் சந்தர்ப்பம் அமைந்துள்ளது, பார்க்கலாம் !!!!!விஜய்க்கு ஒரு பிரேக் கிடைப்பதென்றால் அது காவலனில்த்தான் என்று முன்னரே கூறியிருந்தேன், ஆனால் அதற்கும் ஆளும் நல்லவர்கள் வழியில்லாமல் செய்துவிடுவார்கள் போலுள்ளது!! காவலனை விஜய் ரசிகர்களையும் தாண்டி நடுநிலை ரசிகர்களும் ரசிக்கிறார்கள் என்பது காவலனுக்கு பொசிடிவான விடயமே. படம் வணிக ரீதியாக ஜெயிக்கிறதோ இல்லையோ வழமையான விஜய் படம் போலில்லாமல் மாறுதலாக காவலன் வெளிவந்ததே விஜய் ரசிகர்களை பொறுத்தவரை மகிழ்ச்சியான விடயமே; இதே போல கதைக்களத்துக்கு முக்கியம் கொடுக்கும் வேடங்களில் நடிக்கும் பட்சத்தில் விஜய்க்கும் விஜய் ரசிகர்களுக்கும் பல வெற்றிகள் கிட்டும் சந்தர்ப்பம் உண்டு.அதை விடுத்து நாமதான் சூப்பர்ஸ்டார் ரேஞ்சில இருக்கிறமே என்கிற தப்பான பேராசை எண்ணத்தால் மறுபடியும் ஆக்ஷன், பஞ்ச் டயலாக் என்று பழைய டெம்ளேட் படங்களில் விஜய் நடித்தால் விஜைக்காகவும் அவர்தம் ரசிகர்களுக்காகவும் வருத்தப்பட மட்டும்தான் முடியும். ஆனாலும் ஐந்து தொடர் தோல்விப் படங்களுக்கப்புறம் ஒரு நல்லபடம் என்று சொல்லிக்கிற படம் வந்ததுக்கே சில விஜய் ரசிகர்கள் படும் பாட்டை பார்க்கும்போது அந்த ஐந்துமே வெற்றியாகியிருந்தால் எப்படி குதித்திருப்பார்கள் என்று எண்ணத் தோன்றுகிறது; இவர்களை பார்க்கும்போது குதிரையின் குணம் அறிந்துதான் தம்பிரான் கொம்பு கொடுக்கவில்லை என்கிற பழமொழிதான் ஞாபகம் வருகிறது.உலக கிண்ணத்துக்கான அணிகள் ஒவ்வொரு நாடுகளாலும் அறிவிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன, அது பற்றிய விரிவான பார்வையாக ஒரு பதிவிடலாம் என்றிருக்கிறேன். அதற்கு முன்னர் சிறு கொசிறாக இலங்கையின் மாகாண அணிகளுக்கிடையிலான போட்டிகளில் சமிந்த வாஸும், சனத் ஜயசூரியவும் தம்மை தெரிவு செய்யாததற்கான பதிலை நன்றாகவே இலங்கை தேர்வுக்குழுவுக்கு தம் பெறுபேறுகள் மூலம் வழங்கிக்கொண்டிருக்கிறார்கள் என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன் :-) இதுவரை வெளியாகியிருக்கும் அணித்தேர்வுகளின் அடிப்படையில் இந்திய, அவுஸ்திரேலிய அணிகள் பலம் வாய்ந்தவையாக தெரிகின்றன, விபரமாக அடுத்த பதிவில் அலசுவோம்.இந்திய அணிக்கு தென்னாபிரிக்காவில் தொடரை வெல்லும் அருமையான சந்தர்ப்பம் வாய்த்துள்ளது; டோனி தலைமையில் சச்சின், ஷேவாக், கம்பீர் இல்லாத அணி தொடரை கைப்பற்றும் பட்சத்தில் அது இந்திய அணிக்கு உலக கிண்ண போட்டிகளில் விளையாடுவதற்கு மனோரீதியான மிகப்பெரும் பலமாகவும் தென்னாபிரிக்காவிற்கு அது மிகப்பெரும் பின்னடைவாகவும் அமையலாம். இந்த தொடரில் தென்னாபிரிக்காவின் புதிய அறிமுகமான பிரான்கோயிஸ் டு ப்ளேசிஸ் கவனத்தை ஈர்த்தாலும் அவரது சிறப்பான துடுப்பாட்ட வெளிப்பாடு தற்போதைய அவரது போமா (form) இல்லை நிரந்தர திறமையா என்பதை அறிந்துகொள்ள சிலகாலம் காத்திருக்க வேண்டும். இந்த தொடரில் தென்னாபிரிக்காவின் சறுக்கலுக்கான முக்கியகாரணம் 6 துடுப்பாட்ட வீரர்கள், 5 பந்து வீச்சாளர்கள் என்னும் கணக்கில் தெரிவு செய்யப்பட்ட அணித்தேரிவுதான் என்பது எனது கணிப்பு!!!!பாகிஸ்தான் அணி நியூசிலாந்தில் டெஸ்ட் தொடரை வெற்றி கொண்டது பல பிரச்சனைகளுக்கு மத்தியில் பாகிஸ்தான் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான விடயமாக இருந்தாலும் இன்றைய நிலையில் பாடசாலைகள் அணிகளே வெற்றிகொள்ளும் நிலையித்தான் நியூசிலாந்து அணி இருப்பதால் இந்த தொடரை மட்டும் வைத்து பாகிஸ்தான் அணியை ஆரூடம் கூட முடியாது. ஆசிய ஆடுகளங்களில் சாதிக்கும் அளவிற்கு திறமையான இளம் வீரர்கள் பாகிஸ்தான் அணியில் இருப்பினும் அமீரும், அசிவும், சல்மான் பட்டும் இருந்திருந்தால் உலககிண்ணத்திற்கான பேவரிட் அணியாக பாகிஸ்தான் இருந்திருக்கும்; ஆனாலும் இன்னமும் பாகிஸ்தானுக்கு உலக கிண்ணத்தை கைப்பற்றுவதற்கான தகுதி இருப்பினும் சூதாட்ட கும்பல்களிடம் மாட்டாமல் இருக்க வேண்டும்!!!!அவுஸ்திரேலியா இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான முதல் ஒருநாள் போட்டியை பற்றி இரண்டு வரிகளில் சொன்னால்

அவுஸ்திரேலியா - இன்னமும் போராட்டத்திலும் பொசிடிவ் ஆட்டத்திலும் அவுஸ்திரேலியர்களுக்கு இணை யாரும் இல்லை.

வொட்சன் - REAL ONE MAN ARMY