
புத்திமதி, பகுத்தறிவு, கம்மியூநிசம் பேசும் ஆயிரக்கணக்கான அதிபுத்திசாலிகளும் , இவர்களது பேச்சுக்களை கால்தூசிக்கும் மதிக்காத கோடானகோடி அடிமுட்டாள்களும் சம்பந்தப்பட்டதுதான் இந்தப்பதிவு.
மேலுள்ள அதிபுத்திசாலிகள் மேலுள்ள அடிமுட்டாள்களிடம் கேட்கும்/ கூறும் சில கேள்விகள்/ அறிவுரைகள்.
1 ) படங்களை பார்த்து உனக்கு என்ன லாபம் கிடைக்கப்போகிறது ? நேரம்தான் வீணாக போகின்றது, நடிகன் நடித்து விட்டு பணத்துடன் போய்விடுவான், உனக்கு ஒரு நயா பைசா தருவானா ? (இந்தக் கேள்விகள் கிரிக்கெட் மேட்ச் பார்ப்பவர்களுக்கும் அறிவு ஜீவிகளால் மாற்றி கேட்கப்படும் )
2) கட் அவுட்டுக்கு பால் அபிசேகம், கற்பூரதீபம் என நடிகர்களை கொண்டாடும் ரசிகர்களிடம் கேட்கும் முக்கியமான கேள்வி "கட் அவுட்டுக்கு ஊற்றும் பாலை அன்றாடம் உணவுக்கு வழியில்லாமல் கஷ்ரப்படும் ஏழைமக்களுக்கு கொடுத்தால் எவ்வளவு உபயோகப்படும்" என்பதுதான்.
3 )விளையாட்டுவீரர்கள் குறிப்பாக கிரிக்கெட்வீரர்கள் விளையாடிக்கிடைக்கும் பணத்தையோ அலது விளம்பரத்தால் வரும் பணத்தை வைத்து மக்களுக்கு என்ன நல்ல காரியங்கள் செய்திருக்கிறார்கள்? இவர்கள் விளம்பரங்களில் நடிப்பதால்தான் பொருட்களின் விலை அதிகரிக்கிறது என்பதை புரிந்து கொள்ளுங்கள்.
4 ) கடவுளே இல்லாதபோது எதுக்காக கோவில்களுக்கு போகிறீர்கள்? எதுக்கு வீணாக நேரத்தையும் பணத்தையும் வீணடிக்கிறீர்கள் ?
இப்படியான அதிபுத்திசாலிகளின் கேள்விக்கு அடிமுட்டாள்கள் அளிக்கும் பதில்..... "ஒவ்வொரு விசைக்கும் சமனும் எதிருமான மறுதாக்கம் உண்டு" என்னும் நியூட்டனின் மூன்றாம்விதி விஞ்ஞானரீதியாக ஒரு விதியாக இருக்கலாம், ஆனால் உண்மையில் அதுதான் வாழ்க்கைத்தத்துவம். நாம் செய்யும் அனைத்து காரியங்களுக்கும் இரண்டுவிதமான தாக்கங்கள் பலனாக கிடைக்கும், ஒன்று பெறப்படும்போது இன்னொன்று இழக்கப்படுகிறது, அதாவது ஒன்றை இழந்தால்தான் இன்னொன்றை பெறமுடியும்
நான் திரைப்படங்களை அதிகளவில் பார்ப்பதனாலோ அல்லது ஒரு நடிகனின் தீவிர ரசிகனாக இருப்பதனாலோ அல்லது கிரிக்கட் போட்டிகளை பார்ப்பதாலோ எனக்கு என்ன லாபமென்றால் அதிலே எனக்கு கிடைக்கும் மகிழ்ச்சிதான் லாபம். உலகில் எத்தனை கோடி கொடுத்தும் வாங்கமுடியாத நின்மதியை எனக்கு சினிமாவும் , கிரிக்கெட்டும் கொடுக்குமென்றால் இவற்றை நான் கொண்டாடுவதில் என்ன தவறு? அதேபோல எனக்கு வாழ்வில் பிடிப்பை ஏற்படுத்திய, உற்சாகத்தை ஏற்படுத்திய, தன்னம்பிக்கையை ஏற்படுத்திய நடிகனை அல்லது விளையாட்டு வீரனை நான் கொண்டாடுவதில் என்ன தவறு இருக்கிறது? எனது நேரம் மற்றும் பணம் விரயமாகின்றனதான், இல்லை என்று சொல்லவில்லை, ஆனால் அதற்குபதிலாக எல்லோருமே தேடும் கோடி கொடுத்தும் பெறமுடியாத நின்மதியும் சந்தோசமும் கிடைக்கும்போது நான் எதற்க்காக இழக்கும் சொற்ப பணத்தையும் நேரத்தையும் பற்றி கவலைப்படவேண்டும்?
நான் எனக்கு பிடித்த நடிகனின் படம் வெளியாகும்போது என்னால் பிறருக்கு பாதிக்காதவகையில் எவ்வாறெல்லாம் கொண்டாட முடியுமோ அவ்வாறெல்லாம் கொண்டாடுவேன், இதுவரை எனக்கு பாலாபிசேகம் செய்யும் சந்தர்ப்பம் மட்டும் கிடைக்கவில்லை, கிடைத்தால் நிச்சயம் கட் அவுட்டுக்கு பாலூற்றி கொண்டாடுவேன்.கட் அவுட்டுக்கு ஊற்றும் பாலை இல்லாதவர்களாய் பார்த்து கொடுத்தால் அவர்களுக்கு பயன்படுமேயென நீங்கள் கேட்கலாம். உண்மைதான்,நானும் ஒத்துக்கொள்கிறேன்,ஆனால் என்னை கேள்விகேட்கும் நீங்கள் உங்கள் அத்தியாவசிய தேவைகள் தவிர்ந்த வேறெந்த மகிழ்ச்சியான விடயங்களுக்கும் பணத்தை செலவழிக்காமல் உங்களுக்கு தேவையான பணத்தை எடுத்துக்கொண்டு மீதிப்பணத்தை நல்ல காரியங்களுக்கு பயன்படுத்துபவர்களாக இருக்கவேண்டும். அதாவது குடி, புகைத்தல், பொழுதுபோக்கு அம்சங்கள், ஆடம்பர உணவு, அலங்கார பொருட்கள், ஆடம்பர பொருட்கள் என பணத்தை எந்தவிதமான சந்தோசமான காரியங்களுக்கும் விரயமாக்காதவர்களாக இருக்கவேண்டும். அப்படியாராவது இருந்தால் உங்களிடம் கட் அவுட்டுக்கு பால் ஊற்றுவதற்கு மன்னிப்பு கேட்டுக்கிறேன்.
சுயநலம் பொதுநலம் என்பன பேச்சுக்கு சரியே தவிர ஆழ்ந்து பார்த்தால் மனிதனின் அனைத்து செயலுமே சுயநலம்தான்.மற்றவர்களுக்கு உதவுதல்,கொடை,தர்மம் எல்லாமே நல்ல விடயங்கள்தான்.ஆனால் இவற்றால் ஒருவர் அடையப்போகும் மனநிறைவுதான் அவரை இவற்றை செய்யத் தூண்டுகிறது.மன நிறைவு என்னும் சுயநலத்திட்காகவே இவ்விடயங்களை அவர் செய்வாரெனில் அதுவும் சுயநலமே.ஆக சுயநலமில்லாமல் வாழவேண்டுமென ஒருவர் நினைப்பதே சுயநலம்(சத்தியமா சொந்த டயாலாக் இல்ல).எனவே அவரவர் மனதிற்கு சந்தோசம் எதுவோ அதையே அனைவரும் செய்கின்றனர்.அது இன்னொருவரை அல்லது மற்றவர்களின் உணர்வை காயப்படுத்தாதவரை ஆரோக்கியமான விடயமே.

தான் century அடித்தது போல.... மனநிறைவு
இந்த விளையாட்டு மற்றும் சினிமா பிரபலங்கள் நல்ல காரியங்களை செய்கிறார்களா? இல்லை விளபரங்களில் நடிப்பதால் எவ்வளவு பணம் சம்பாதிக்கிறார்கள்? இவர்கள் வாழ்வது எமது வரிப்பணத்தில், போன்ற ஈர வெங்காய விடயங்களை எல்லாம் பிரிச்சு பாக்கிற நிலைமையில் சாதாரண மக்கள் இல்லை, தினமும் வாழ்க்கையோடு போராடுகிறவனுக்கு கிடைக்கும் நேரத்தில் சினிமாவையோ கிரிக்கெட்டையோ (வேறெந்த விளையாட்டானாலும் ) பார்க்கும்போது அவனுக்கு கிடைப்பது மூளைக்கு ஓய்வும், சந்தோசமும்தான். பணத்தின்மேல் புரண்டு படுத்துக்கொண்டு தம்மை அடையாளப்படுத்த கம்யூனிசம் பேசும் அதிபுத்திசாலிகளைபோல பாமரனால் சிந்திக்க முடியாது.உலகமே விளம்பரமயமான நிலையில் நடிகர்களோ அல்லது விளையாட்டு வீரர்களோ விளம்பரத்தில் நடிக்க மறுத்தால் விளம்பரங்கள் இல்லாமல் போய்விடுமா?
இப்படி போலி கம்யூனிசம் பேசி மற்றவனை முட்டாளாக்கி உங்களை அடையாளப்படுத்தி சந்தோசம் காணுவதைவிட எங்களை உங்கள் பார்வையில் முட்டாளாக்கி சினிமாவையும் கிரிக்கெட்டையும் ரசித்து நாங்கள்சந்தோசம் காணுவது எங்களைப்பொறுத்தவரை எவ்வளவோ மேல்.
கடவுள் இல்லை என்பவர்களை தவிர்த்து ஏனையவர்கள் ஏதாவதொரு கடவுளை வழிபடுகின்றனர், கோவில்களுக்கு போகின்றனர், கடவுளுக்காக பணத்தை செலவு செய்கின்றனர், சாமியார்களை நாடிப்போகின்றனர்(நித்தியானந்தா உட்பட ). இதனால் கடவுள் இல்லை என்பவர்களுக்கு என்ன நஷ்டம் வந்திச்சு? ஒருவன் நம்பிக்கையில் வழிபடலாம் , ஒருவன் பயத்தில் வழிபடலாம், ஒருவன் மனத்திருப்திக்காக வழிபடலாம் , சிலர் கடமைக்காக கூட வழிபடலாம். ஆக மொத்தத்தில் கடவுளை வழிபாடும் எல்லோருமே ஏதோ ஒரு காரணத்திற்க்காகத்தானே வழிபடுகிறார்கள்? இதனால் அவர்களுக்கு ஏதோ ஒரு விதத்தில் மனநிறைவு கிடைக்கின்றது என்றால் கடவுள் இல்லை என்று வைத்துக்கொண்டால் கூட அவர்களது வழிபாடு அவர்களுக்கு நேர்மறையான சக்தியை கொடுக்கும். அதை விடுத்து கடவுள் இல்லை எதற்காக இந்த முட்டாள்கள் வழிபடுகிறார்கள் என்று கத்திக்கத்தியே பகுத்தறிவாதிகள் சக்தி வீணடிக்கப்படுகிறது.
சகல துறைகளிலும் குறிப்பாக விளயாட்டுவீரகளில் மிகப் பெரும் பான்மையானோர் இறைநம்பிக்கை உடையவர்களே, இரண்டு அணி வீரர்களுமே வழிபடுகின்றனர் , ஏதோ ஒரு அணிதான் வெல்லப் போகின்றதென்று அவர்களுக்கு தெரியாதா? அல்லது ஒரு போட்டியில் தோற்றாலோ அல்லது பிரகாசிக்க தவறினாலோ பின்னர் இவர்கள் வழிபடுவதில்லையா? திறமையும் தன்னம்பிக்கும் நிறைந்த விளையாட்டு வீரரர்கள் பின்னர் எதற்காக மைதானத்துக்குள் வழிபடவேண்டும்? திறமையால் மட்டும் வெல்லமுடியும் என்று விளையாட்டு வீரர்களும் ஒத்துக்கொள்ள மாட்டார்கள். அதிர்ஷ்டம் கூடவே இருந்தால்தான் வெற்றி கிடைக்கும் என்பது ஏதாவதொரு விளையாட்டில் பங்குபற்றியிருந்தால் யாருமே புரிந்து கொள்ளலாம். என்னதான் திறமை இருந்தாலும் அதிர்ஷ்டம் இல்லாவிட்டால் என்ன செய்யமுடியும்? ஆக அந்த அதிர்ஷ்டத்தை தனக்கு/தமக்கு கிடைக்கச்செய்ய வேண்டுமென்றால் என்ன செய்யமுடியும்? யாரிடம் போய் கேட்பது? அந்த இடத்தில் தோன்றுவதுதான் இறைநம்பிக்கை , இதனால் ஒரு வீரர் விளையாடும்போது பாரத்தை இன்னொருவர்மீது (கடவுள்மீது ) இறக்கிவைத்து விட்டு விளையாடும்போது பாரமற்ற அழுத்தம் குறைவான மனதுடன் விளையாடமுடியும். இங்கு கடவுள் நம்பிக்கையல் என்ன தப்பு இருக்கிறது?
ஆக மொத்தத்தில் இது அவரவர் நம்பிக்கை சம்பந்தப்பட்ட விடயம் என்பதைவிட உணர்வு சம்பந்தப்பட்ட விடயம் எனலாம், ஒவ்வொரு மனிதருக்கும் ஒவ்வொரு சுயம் உண்டு, ஒருவர் கடவுள் இல்லை என்று உணர்ந்திருக்கலாம், அதேபோல இன்னொருவர் கடவுள் இருப்பதை உணர்ந்திருக்கலாம், பலர் இரண்டும் கெட்டான் நிலையில் இருக்கலாம், அதற்காக தங்களைத் கருத்தை திணிப்பதும் ஏற்றுக்கொள்ளாதவனை முட்டாள் என்பதும் மன நோயாளிகளின் செயற்பாடே. ஒருவர் கடவுள் இருக்கின்றார் என்று நம்புவது அவருக்கு ஆரோக்கியமான விடயமாக இருந்தால் அதில் தவறென்ன இருக்கிறது?
இதை தான் எல்ரோரும் எதிபார்கின்றோம் அதற்கான வழியை அவரவர் தேடுகின்றார்கள்
பதிலளித்த அடிமுட்டாளில்களில் நானும் ஒருவன் என்பதை பெருமையுடன் கூறிக்கொள்கிறேன்.
கடைசியா தலைவர் டயலாக் ஒண்ணு....
"அதிபுத்திசாலி நல்லா வாழ்ந்ததுமில்லை, அடிமுட்டாள் கெட்டதுமில்லை"