Thursday, June 24, 2010

ஐஃபா விழாவும் தாக்கங்களும்

இலங்கையில் இடம்பெற்ற ஐஃபா விழாவிற்கு இந்திய சினிமா நட்சத்திரங்கள் யாரும் பங்கு பெற்றக்கூடாதென்று நாம் தமிழர் அமைப்பு வேண்டுகோள் விடுத்தும் போராட்டம் நடாத்தியும் பெரும்பாலான நட்சத்திரங்களின் இலங்கை விஜயத்தை தடுத்ததும், அதையும் மீறி சல்மான்கான், ஹிர்த்திக்ரோஷன், விவேக்ஓபராய் போன்றோர் பங்குபற்றியதையும், இதனை தொடர்ந்து இவர்களது படங்களுக்கு தென் மாநிலங்களில் தடை விதித்ததும் அனைவரும் அறிந்ததே. அதேபோல தற்போது சூரியாவிற்க்காக விவேக்ஓபராய் நடித்த 'ரத்த சரித்திரா ' திரைப்படத்தை மட்டும் வெளியிட அனுமதிக்கலாம் என்று சீமான் அறிவித்ததும், சூரியா ஐஃபாவிழா செத்துப்போன விவகாரம் என்று அளித்த பேட்டியும் பலவிதமான பார்வையில் பார்க்கப்படுகின்றன.முதலில் சீமானின் நிலைப்பாட்டை பார்த்தால், "தம்பி சூர்யாவுக்காக ரத்த சரித்திராவை வெளியிடலாம்" என்று கூறிய கருத்து முற்றிலும் தவறானது, இது இவர்களது வேண்டுகோளாலோ அல்லது மறைமுக மிரட்டலாலோ விழாவுக்கு செல்லாத அமிதாப், ஐஸ்வர்யா, அபிஷேக்பச்சன், அக்ஷைகுமார் போன்றோருக்கு செய்யும் மோசடியாகவே கணிக்கப்படும். ஒருவேளை ஐஸ்வர்யாராய் ஐஃபா விழாவுக்கு போயிருந்தால் ராவணாவையோ, எந்திரனையோ வெளியிட அனுமத்தித்திருப்பாரா சீமான் ? அதற்காக 'ரத்தசரித்திரரா' திரைப்படத்தை வெளியிட அனுமதிக்க கூடாதென்று கூறவில்லை, அப்படி செய்தால் இவர்களது கோரிக்கையை ஏற்று விழாவில் கலந்து கொள்ளாத சூரியா, ராம்கோபால்வர்மா, படத்தின் தயாரிப்பாளர் போன்றோரது உணர்வுக்கு என்ன மரியாதை? போராட்டத்திற்கு முன்னரே விழாவில் பங்குபற்றும் நடிகர்கள் 'தற்போது நடிக்கும் திரைப்படங்கள் தவிர' இனிவரும் காலங்களில் புதிதாக நடிக்கும் அனைத்துப்படங்களும் தடைசெய்யப்படும் என்று அறிவித்திருக்கலாம். ஆனால் அப்படி அறிவித்திருந்தால் அமிதாப் தனது தலைமைபதவியை தூக்கியெறிந்திருப்பாரா என்பதும் ஐஸ்வர்யாராய் , அபிஷேக்பச்சன் ஆகியோர் விழாவில் கலந்து கொள்ளாமல் இருந்திருப்பார்களா என்பதும் சந்தேகமே.இன்றுவரை போராட்டத்தில் கலந்துகொண்ட நடிகர்களை குறிவைக்கும் போராட்ட குழுவினர் ஐஃபாவிழாவிற்கு இலங்கை அரசுடன் கைகோர்த்த 'எயார்டெல்' நிறுவனத்தினர் மீது போராட்டம் நடாத்தப் போவதாக அறிவித்த பின்னரும் அந்த போராட்டம் எப்படி காணாமல் போனது என்பது பணம் பாதாளம் மட்டும் பாயும் என்பது உண்மையோ என்றும் எண்ணத்தோன்றுகிறது, அதேபோல இலங்கை அதிபரை அழைத்து செங்கம்பள வரவேற்பளித்து இலங்கையுடன் கைகோர்த்த இந்திய அரசை எதிர்த்து எந்தவிதமான போராட்டங்களும் இடம்பெறவில்லை, தற்போது இலங்கையில் இந்தியஅணி ஆசிய கிண்ணத்தில் விளையாட வந்தபோது ஏன் இந்திய கிரிக்கெட் சபைக்கு எதிராக எந்தவிதமான எதிர்ப்பும் காட்டப்படவில்லை என்பதும் தமிழகத்தை சேர்ந்த தெரிவாளர் ஸ்ரீகாந்தையோ தமிழக வீரர்களையோ இலங்கைக்கு செல்லவேண்டாமென்று ஏன் தடுக்கவில்லை என்பதும் கேள்விக்குரியதே.சூரியா கூறியதுபோல இது உண்மையிலேயே செத்துப்போன விடயம்தான், இதைவைத்துக்கொண்டு இன்னும் எத்தனை நாளைக்கு அரசியல் செய்யப்போகிறார்களோ தெரியவில்லை, அசின் காவல்காரன் படக்குழுவினர் தடுத்தபின்னரும் சல்மான்கானுடன் இலங்கை சென்றால் பாதிக்குமேல் முடித்த படத்தை மீண்டும் ஆரம்பத்தில்ருந்து வேறொரு ஹீரோயினை வைத்து எடுக்க முடியுமா? அப்படியே எடுத்தாலும் 75 % படப்ப்பிடிபு முடிவில் அந்த ஹீரோயின் ஹிர்த்திக் ரோஷனுடன் நடிக்க இலங்கைக்கு போனால் படத்தை மீண்டும் முதலிலிருந்து ஆரம்பிப்பதா? இதனால் குறிப்பிட்ட திரைப்படத்தில் ஹீரோயின் தவிர்ந்த மிகுதி அனைத்து கலைஞர்களதும் உழைப்பும் நேரமும் வீணாகப் போகாதா? தயாரிப்பாளரை வீதிக்கு வரச் சொல்கிறார்களா? அவ்வப்போது தங்களுக்கு சாதகமாக சூரியாவுக்கொரு முடிவு, விஜைக்கொரு முடிவென்று எடுக்காமல் அனைவருக்கும் பொதுவான சரியான, யாரும் பாதிக்கப்படாத வகையில் ஒரு முடிவை சங்கங்களோ,அல்லது எதிர்ப்பு இயக்கங்களோ முன்வைக்க வேண்டும். செய்வார்களா?ஐஃபா விழா போராட்டம் வெற்றி , இலங்கைக்கு கோடிக்கணக்கில் இழப்பு என்றெல்லாம் போராட்டக்குளுக்களும் அவற்றின் ஆதரவாளர்களும் ஆர்ப்பரித்தாலும் இந்த ஐஃபா போராட்டத்தின் நிதர்சனமான உண்மை என்ன தெரியுமா? இலங்கையில் அத்தியாவசிய பொருட்களின் விலை ஏற்றம்தான். இலங்கைக்கு ஐஃபா விழா மூலம் கோடிக்கணக்கில் நஷ்டமென்றால் அதை ஈடுகட்ட இன்று ஏற்பட்டிருக்கும் அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றத்தால் ஏற்ப்பட்ட பாதிப்பு நாட்டு மக்களுக்குத்தான், குறிப்பாக முகாம்களில் இருந்து மீளக்குடியமர்த்தப்பட்டு காற்றிலும் வெய்யிலிலும் சிறு குடில்களில் அன்றாட வாழ்வுக்காக தினம்தினம் போராடும் மக்களுக்கும், சொந்த இடங்களுக்கு செல்ல இயலாமல் இன்னமும் வறுமையின் பிடியில் வாடுபவர்களுக்கும் , ஏழை மக்களுக்கும்தான். கோதுமைமாவின் விலை 10 ரூபயாலும் , சீனியின் விலை 15 ரூபாயாலும், 400 க பால்மாவின் விலை 19 ரூபாயாலும் அதிகரிக்கப்பட்டுள்ளது, இதனால் ஏழை மக்களின் ஒன்று அல்லது இரண்டு நேர உணவான பாணின் விலை இறாத்தலுக்கு 6 ரூபாவால் அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

ஐஃபா எதிர்ப்பு போராட்டம் மூலம் இலங்கைக்கு கோடிக்கணக்கில் நஷ்டம் ஏற்ப்படுத்தியது போராட்ட குழுவினருக்கு கிடைத்த வெற்றிதான், பார்க்கப்போனால் இலங்கை அரசுக்கு அது மரியாதை குறைவை மட்டும்தான் ஏற்ப்படுத்தியது , சர்வதேச ரீதியில் எந்ததாக்கத்தையும் இந்த போராட்டம் ஏற்ப்படுத்தவில்லை என்பதே நிதர்சனமான உண்மை, இறுதியில் விலைவாசி ஏற்றம் என்னும் பெயரில் மக்களின் வயிற்றில் அடிவிழுந்துள்ளது என்பதுதான் யதார்த்தமான உண்மை.

Sunday, June 20, 2010

மணிசார் "நீங்க குற்றாலத்துக்கே போயிடுங்க"

மணிசார் நாங்கெல்லாம் இப்ப ரொம்பவுமே ஸ்ரான்டட் ஆகீற்றம், எங்களுக்கு எங்கட கருத்துக்களை சொல்லுறதுக்கு கூகிள்காரன் ப்ரீயா ப்ளாக் என்று ஒன்றை தந்திருக்கிறான், எங்களுக்கு எங்கட ஸ்ரான்டட்டை காட்ட இது போதாதா? முன்பெல்லாம் உங்க படங்களை பார்த்து பிரம்மிச்சு படமிண்ணா இப்பிடி இருக்கனுமின்னு தம்பட்டமடித்து எங்கள் சினிமா ரசனையை வளர்த்துக்கொண்டோம். இல்லை என்று சொல்லவில்லை, ஆனால் இப்பெல்லாம் நாங்க 'ஒலக' சினிமாவை அல்லவா பார்க்கின்றோம், அதனால இப்பெல்லாம் எங்க லெவலே வேற, இப்பபோயி உங்க சினிமாவை நல்ல சினிமான்னா எங்க மருவாதை என்னத்துக்கு ஆகிறது? அதனால இனிமேல் நீங்க என்ன மாதிரி படமெடுத்தாலும் நாங்க உங்க படத்தை ஒரு வளிபண்ணாம விடப்போற்றதில்ல. முன்பெல்லாம் உங்க படங்களை நல்லபடங்கள் என்று சொல்லி எங்களை உயர்வாக காட்டிக்கொண்ட நாங்கள் இப்பெல்லாம் உங்கபடங்களை மோசமாக விமர்சித்தால்தான் எங்களை உயர்வாக காட்டிக்கொள்ள முடியும் என்கிற சூழ்நிலை, தயவுசெய்து எங்களை தப்பா நினைக்காமல் எங்க சூழ்நிலையை புரிந்துகொள்ளுங்க சார்.இப்பெல்லாம் நாங்க படங்களை படங்களாக பார்க்கிறதில்லை, ஒவ்வொரு சீனுக்கும் ஆயிரம் அர்த்தம் கற்பிப்போம். முதலாளித்துவத்துக்கு எங்காவது ஒரு இடத்தில சாதகமா இருந்தாக்கூட உங்க படத்தை "பண முதலைகளை திருப்திப்படுத்த மணிரத்தினம் பாடு படுகிறார்" என்று கடுமையாக அவசர அவசரமாக பதிவெளுதிவிட்டு மறுநாள் மோசமான முதலாளி ஒருவருக்கு செம்புதூக்க போய்விடுவோம். அப்புறம் ஏதாவதொரு சீனை எடுத்து அதில உங்க ஜாதி, அதேதோ பார்ப்பானோ ,பிராமணனோ, எதோ ஒண்ணு அதவைச்சு உங்க ஜாதிப்புத்தியை காட்டிவிட்டீர்கள் என்று எழுதிவிட்டு மறுநாள் கோவில் கும்பாபிசேகத்துக்கு பூசாரிக்கு செம்புதூக்க போய்விடுவோம். அப்புறம் இந்த ஆணாதிக்கம், மேட்டுக்குடி, கீழ்த்தட்டு, வட்டாரவழக்கு பேச்சு (மதுரைத்தமிழ், மெட்ராஸ் தமிழ் ) , லொட்டு லொசக்கிண்ணு எல்லாத்திலையும் மொட்டையில மயிர் புடுங்குவம், ஏன்னா இப்ப நாங்கெல்லாம் ரொம்ப ஸ்ரான்டட் ஆகீற்றம்.அதுமட்டுமில்லை உங்க படங்களில் நடிக்கின்ற ஹீரோவை எங்களுக்கு பிடிக்கவில்லை என்றால்க்கூட படத்தை மோசமாகத்தான் விமர்சிப்போம். நீங்க இனிமேல் எங்களுக்கு படமெடுத்து ஜெயிக்க முடியாது,அதனால் ஹிந்தியில் மட்டும் படமெடுங்களென்றும் உங்களிடம் கூறமுடியாது, அப்புறம் தமிழர்கள் வளர்த்துவிட மணிரத்தினம் ஹிந்திக்காரனுக்கு செம்புதூக்க போய்விட்டார் என்று ஹிந்திப்படம் பார்த்துக்கொண்டே பதிவெளுதுவோம், அதனால இந்த படம் இயக்கிற வேலைய விட்டிட்டு உங்க விருப்பப்படி பேசாம குற்றாலத்தில போயி கோல்ப் விளையாடுங்க, கடசிக்காலமாவது சந்தோசமா கழியும்.நீங்க போனாமட்டும் நாங்க எங்க சேவையை நிறுத்தப்போறதில்ல, இங்க உங்களைத்தவிர பாலா, செல்வராகவன், அமீர், ஜெகநாதன் என்று எங்களுக்கு பெரிய லிஸ்டே இருக்கு. இவங்களையும் இப்பெல்லாம் நாங்க நோண்ட ஆரம்பிச்சாச்சு, இனிமேல் இவங்களும் நம்ம கிட்டயிருந்து தப்பிக்க முடியாது. ஆனாலும் நம்மகிட்ட இருந்து இந்த சங்கரும், கவுதமும் தான் தப்பிச்சிற்றாங்க. சங்கரை எந்திரனிலும் கவுதமை அஜித்தோட அடுத்த படத்திலயும் எப்பிடியும் மடக்கிடுவம். அதுக்கப்புறம் சசிக்குமார், வசந்தபாலன் அப்பிடின்னு அந்த லிஸ்ட் மேலும் வளரும்.இவர்கள் மட்டுமில்லை வேறு யாரவதுகூட புதுசா நல்ல படமெடுத்து பெயர்வாங்கினால் போதும் உடனே அவங்க அடுத்தடுத்த படங்களை ஏதாவதொரு மொழிப்படத்தின் தழுவல் என்பதையும், படத்தினுடைய குறைபாடுகளையும் நுணுக்கமாக பூதக்கண்ணாடி வைத்துப்பார்த்து கண்டுபிடித்து, அந்த கண்டுபிடிப்புக்களுடன் மேட்டுக்குடி, முதலாளித்துவம், ஆணாதிக்கம் , ஜாதி, சமூக அக்கறை என நாங்கள் கடைபிடிக்காத அத்தனையையும் மிக்ஸ்பண்ணி இல்லாமல் செய்துவிட்டு நாங்கெல்லாம் 'ஒலக' சினிமா பார்த்தக்கொண்டே தமிழையும் தமிழ் சினிமாவையும் வளர்ப்போம்.

Thursday, June 17, 2010

ராவணன்- விமர்சனம்இரண்டேகால் மணித்தியாலங்களுக்குள் வேற்று உலகில் சஞ்சரிக்க ஆசையா? முதல்ல ராவணன் திரைப்படத்தை போய்ப்பாருங்க.

இதுதான் 'ராவணன்' கதை என்பது முன்னரே எல்லோருக்கும் தெரியும் என்பதால் திரைக்கதை மீதுதான் எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது, மணிரத்தினம் கிட்டத்தட்ட அந்த எதிர்பார்ப்பை 90 வீதம் பூர்த்தி செய்துள்ளார் என்றுதான் சொல்வேன். அர்ஜுனன் இருக்க கர்ணனை ஹீரோவாக்கி வெற்றிகண்ட மணிரத்தினம் இந்தத்தடவை ராமன் இருக்க ராவணனை ஹீரோவாக்கி இதிலும் ஜெயித்துள்ளார் என்றே கூறுவேன்.

கதை,திரைக்கதை,வசனம் மற்றும் இயக்கம்.விக்ரமின் தங்கை பிரியாமணியின் சாவிற்கு காரணமாக இருந்த போலிஸ்அதிகாரி பிரித்விராஜ்ஜின் மனைவியான ஐஸ்வர்யாராயை விக்ரம் கடத்துகிறார், கடத்திய இடத்தில் விக்ரமிற்கு ஐஸ்வர்யாராய் மீது தாபம் ஏற்படுகிறது. இறுதியாக பிரித்விராஜ் தன் மனைவியை மீட்கிறாரா? விக்ரம் ஐஸ்வர்யா மீது கொண்ட தாபம் என்னவாகிறது? என்பவற்றுக்கான விடையை வெள்ளித்திரையில் காணுங்கள்.ஊருக்கே தெரிந்த கதை, அதை விக்ரம், ஐஸ்வர்யாராய், பிரித்திவிராஜ்,பிரபு என்னும் நான்கு முக்கிய காதாபாத்திரங்களால் இன்றைய காலத்திற்கேற்ப யாரும் இதுவரை அணுகாத வகையில் திரைக்கதை அமைத்துள்ளார் மணிரத்தினம். முதல்ப்பாதி நேரம்போனதே தெரியவில்லை, இரண்டாவதுபாதி முன்பாதியை போல வேகம் அதிகமில்லாவிட்டாலும் எந்த இடத்தலும் அலுப்பை தரவில்லை. மணிரத்தினம் இம்முறை ஆயுத எழுத்தில் விட்ட தவறை விடவில்லை, அதாவது திரைக்கதையில் 'இடியப்பம்' புளியாமல் பாமரனுக்கும் புரியக்கூடியவாறு திரைக்கதையை அமைத்துள்ளார்.வசனங்கள் ஏனைய மணிரத்தினம் படங்களை போலல்லாது அதிகமாகவே பேசப்படுகின்றது. விக்ரம்,பிரபு பேசும் வசன உச்சரிப்பு வழமையான மணி படங்களில் இருந்து வேறுபட்டாலும் ரசிக்க வைக்கிறது. விக்ரமின் தம்பியாக வருபவர் இறந்தபின்னர் வரும் காட்சிகளிலும், அவர் இறந்தவுடன் இடம்பெறும் கலவரத்திலும் அழுத்தம் போதவிலையோ என்று எண்ணத்தோன்றுகிறது. இப்படி ஓரிரு இடங்களை தவிர்த்துப் பார்த்தால் தான்தான் இன்னமும் தமிழ்சினிமாவின் இயக்குனர்களுக்கு 'தளபதி' என்பதை மீண்டுமொருதடவை மணிரத்தினம் நிரூபித்துள்ளார் என்று அடித்துக் கூறலாம்.நடிப்பு

விக்ரம் நடிப்பில் அக்குவேறு ஆணிவேராக பிரித்து மேய்ந்துள்ளார். கோபம், அமைதி, சிரிப்பு, தவிப்பு, தாபம், வெறி, சோகம் என நடிப்பின் அத்தனை பரிமாணத்திலும் கலக்குகிறார். உடல்மொழி , வசன உச்சரிப்பு என்பவற்றில் படத்துக்கு படம் வித்தியாசம் காட்டும் விக்ரம் ராவணனிலும் விட்டு வைக்கவில்லை, அதிகமான ரிஸ்க் எடுக்கும் காட்சிகளிலும் சர்வசாதாரணமாக சாகசம் புரிந்திருக்கிறார். நடிப்பு , அக்ஷன், பாடல்கள் என ராவணனில் விக்ரம் தனது வேலையை நூறு சதவிகிதம் சிறப்பாக செய்துள்ளார் என்பதை விக்ரமை பிடிக்காதவர்களும் ஒத்துக்கொள்வார்கள்.ஐஸ்வர்யாராய் அழகு பற்றி எழுதுவது சின்னப்புள்ளைத்தனமானது என்பதால் படத்தில் அவரது பங்கை பார்த்தால் விக்ரமிற்கு போட்டியாக நடிப்பிலும் விக்ரமைவிட அதிகமாக ரிஸ்க் காட்சிகளிலும் ஐஸ்வர்யாராய் சிறப்பாக நடித்துள்ளார். மணிரத்தினம் படங்களில் நடிப்பதாலோ என்னவோ தெரியவில்லை இன்றைய நடிகைகள் அனைவரையும்விட ஐஸ் அழகையும் தாண்டி சிறப்பானவாராக தெரிகிறார், பிரித்விராஜ்சுடன் 'கள்வரே' பாடலில் நெருக்கமாக நடிக்கும் காட்சிகளில் மட்டும் கொஞ்சம் நெருடலாக இருக்கிறது, காரணம் பொறாமையா? இல்லை ஐஸ் அபிசேக்பச்சனின் மனைவி என்பது படத்தையும் தாண்டி மனதில் பதிந்ததாலோ என்னவோ தெரியவில்லை.பிரபு வெளுத்து வாங்கியிருக்கிறார், டைமிங் காமடியிலும் ஹீரோயிசத்திலும் தூள் கிளப்புகிறார், இப்படியான கதாபாத்திரங்களுக்கு இன்றைய ஒரே தெரிவு பிரபுதான். கார்த்திக்கிற்கு சொல்லிக்கொள்ளும் படியாக காட்சிகள் இல்லாவிட்டாலும் தன்னால் முடிந்தளவிற்கு பங்களித்திருக்கிறார்.பிரித்திவிராஜ் கதாபத்திரத்திற்கு வேறுயாரவது நடித்திருந்தால் இன்னும் நன்றாக வந்திருக்குமோ என்று எண்ணத்தோன்றுகிறது.தனது நடிப்பில் சத்தம் போடாதே, நினைத்தாலே இனிக்கும் படங்களினை இவர் ஞாபகப்படுத்துகிறார். அரவாணியாக வரும் வையாபுரி, விக்ரமின் தம்பியாக வருபவர் தவிர ஏனைய யாரும் மனதில் நிற்கவில்லை. இன்றைய தேதியில் ரஜினியை விட திரையரங்கில் அதிக கைதட்டு வாங்குமளவிற்கு செல்வாக்கான ஒரே ஒருவர் 'நித்தி' புகழ் ரஞ்சிதாதான், இவர் ஓரிரு காட்சிகளில் வந்தாலும் விசில் வானை பிளக்கிறது.இசை, ஒளிப்பதிவு கலை மற்றும் எடிட்டிங்

ரகுமானின் இசையில் பாடல்கள் அனைத்தும் ஏற்கனவே பிரபலமடைந்திருந்தாலும் 'கோடுபோட்டா' தவிர வேறெந்தப்பாடலும் படத்தில் முழுமையாக பயன்படுத்தப்படவில்லை. ஆனாலும் அவை தேவைக்கேற்ப பயன்படுத்தப்பட்டிருக்கின்றன, பாடல்கள் போலவே ரகுமானின் பின்னணி இசையும் படத்திற்கு பக்கபலமாக இருக்கின்றது. இசைபோலவே எடிட்டிங்கில் சேகர் பிரசாத்தும் காட்சிகளை அருமையாக கோர்த்திருக்கிறார், திரைக்கதை வேகத்திற்கு இவருக்கு ஒரு ஒ.. போடலாம். தொங்குபாலமும், காட்டுக்குள் போடப்பட்ட குடில்களும் கலையின் உச்சக்கட்ட சிறப்பு, ஒன்றும் தேவையில்லை கலையை(Art) பற்றி ஒரேவார்த்தையில் சொல்வதேனால் "சார் தேசியவிருதுக்கு தயாராக இருங்க".படத்தின் இன்னுமொரு நாயகன் இல்லையில்லை நாயகர்கள் சந்தோஸ்சிவனும் மணிகண்டனும், யார்யார் எந்தெந்த காட்சிகளை படமாக்கினார்கள் என்று தெரியவில்லை ஆனால் அத்தனை காட்சியளிலும் ஒளிப்பதிவு சூப்பரோ சூப்பர், அண்மைக் காலங்களில் இப்படி ஒரு ஒளிப்பதிவை எந்தத் தமிழ்ப்படத்திலும் பார்த்திருக்க முடியாது. குறிப்பாக ஐஸ்வர்யாராய் மலையிலிருந்து குதிக்கும் காட்சியை விபரிக்க வார்த்தைகளே இல்லை. ஒளிப்பதிவு பிரேமுக்கு பிரேம் அருமை,என்னவென்று சொல்வது? சொல்லப்போனால் ஒளிப்பதிவு நூற்றுக்கு நூற்றிப்பத்து வீதம் சிறப்பாக இருந்ததென்றே சொல்லாம்.

இப்படி எல்லாமே சிறப்பாக இருந்தால் குறைகளே இல்லையா என்று நீங்கள் கேட்கலாம். படத்தில் சில குறைகள் இருக்கலாம், இருக்கலாமென்ன நிச்சயம் இருக்கும், ஆனால் அவற்றை கண்டு பிடிப்பதற்கு நான் இன்னும் குறைந்தது இரண்டு தடவையாவது படத்தை பார்க்கவேண்டும்.

மொத்தத்தில் ராவணன் - வசீகரம்

Wednesday, June 16, 2010

விஜயை கலாய்க்காதீங்க சார்....

எஸ்.ஏ.சி சார்..... "படத்தைப் பார்த்த விஜய் வெளியே வந்ததும், "அப்பா, கலக்கிட்டீங்க... பெருமையா இருக்கு'' என்று என்னை கட்டிப்பிடித்து பாராட்டினார். விஜய் எளிதில் என்னை பாராட்ட மாட்டார்.இதற்கு முன் 'நான் சிகப்பு மனிதன்' படத்தைப் பார்த்து பாராட்டினார். அதன்பிறகு இப்போது என்னை பாராட்டியிருக்கிறார்" என்று நீங்கள் சொன்ன வாசகங்கள் தஞ்சாவூர் கல்வெட்டில் செதுக்கப்படவேண்டிய வாசகங்கள், அத்தனை அற்புதமான காமடியான வரிகள். இப்பிடி நீங்களே விஜயை கலாய்ச்சா நாங்க என்னசார் பண்ணுறது ? எத்தின பேரத்தான் அவர் சமாளிக்கிறது? அண்மைக்காலமாவே நீங்க எங்க மைக் பிடிச்சாலும் அங்கெல்லாம் விஜயை காமடி பீசாக்கீட்டு போறீங்க, எங்கபாடு கொண்டாடம்தான், இல்லைன்னு சொல்லல, அதுக்காக அடிக்கடி கலாய்ச்சா எப்பிடி சார்? நாங்களும் நீங்க கலாய்க்கிறதையே தொடர்ந்து பதிவா எழுதப்போக "இவங்களுக்கு விஜயை பற்றி தப்பா எழுதிறதே வேலையா போச்சு" அப்பிடின்னு உங்க பையனோட ரசிக கண்மணிகள் சொல்ல மாட்டாங்களா? நாங்கெல்லாம் மறந்தாக்கூட அப்பப்ப ஞாபகப்படுத்திறீங்களே! அப்பிடி உங்களுக்கும் விஜய்க்கும் என்னதான் சார் பிரச்சினை? கில்லி, திருப்பாச்சி, சிவகாசின்னு நல்லா போய்கிட்டிருந்த விஜயோட சினிமா கரியர்ல 'ஆதி'ன்னு ஒரு படத்தை தயாரிச்சு வில்லங்கம் பண்ணினீங்க, இப்பகூட 'சுறா' கதையா நீங்கதான் ஓகே சொன்னதா உங்க பையனே சொன்னாரு, இப்ப என்னடான்னா வாரம் ஒருதடவை விஜயைப் பற்றி ஏதாவது ஏடாகூடமா சொல்லி எங்கடான்னு இருக்கிறவங்க வாயில சக்கரைய போடுறீங்க, உங்கள புரிஞ்சுக்க முடியலையே சார். அப்புறம் "இவ்வளவு நல்ல படத்தில் ஒரே ஒரு காட்சியின் நீளத்தை மட்டும் குறைத்து விடலாமே என்று கருத்து தெரிவித்தார்கள். நானும் அதற்கு சம்மதித்ததால், அந்த காட்சியின் நீளம் குறைக்கப்பட்டது." அப்பிடின்னு நீங்க சொன்ன வாசகம் இருக்குப்பாருங்க, ஒரு வாசகமானாலும் அது திருவாசகம் சார். படத்தில 'எடிட்டிங்' அப்பிடின்னு வரும் இடத்தில 'தணிக்கைக்குழு'ன்னு வருமா சார்? இனிமேல் படத்தை ஷூட் பண்ணிட்டு தணிக்கை குழுவுக்கு அனுப்பினாலே போதுமா சார்? அவுங்க எடிட் பண்ணி குடுப்பாங்களா ? நீங்க இப்பிடி சொல்றீங்க ஆனா நம்மாளுங்க சிலபேர் நீங்க எதோ 'ரேப்சீனை' ரொம்ப லெந்தா எடுத்ததால்தான் பெரிய கத்திரி போட்டதா புரளிய கிளப்புரானுங்க, கொஞ்சம் தெளிவா சொன்னாக்கா நல்லாருக்கும் சார். "இப்போதெல்லாம் விநோயோகஸ்தர்கள்,பெரிய நடிகர்களின் படங்களை மட்டுமே அதிக தொகைகொடுத்து வாங்குகிறார்கள். புது நடிகர்கள் நடித்த படங்களை வாங்குவதற்கு யாரும் இல்லை.இந்த சூழ்நிலையில், புதுமுகங்கள் நடித்த வெளுத்துக்கட்டு படத்தை திருப்பூர் சுப்பிரமணியம், மதுரை அன்பு, திருச்சி பிரான்சிஸ், ஆஸ்கார் பிலிம்ஸ் ரவிச்சந்திரன் போன்ற பெரிய விநோயோகஸ்தர்கள் வாங்கியிருக்கிறார்கள்." என்கிற வரிகளில்த்தான் சார் உண்மையிலேயே சந்தோசமான செய்தியை சொல்லியிருக்கிறீர்கள், பெரிய விநோயோகஸ்தர்கள் நஷ்டத்தில இருந்து எப்படியும் மீண்டுவருவாங்க, ஆனா சின்ன விநோயோகஸ்தர்கள் ஒருவேளை உங்கள் படத்தை வாங்கியிருந்தால் அவர்களது நிலை ? நினைத்தாலே பாவமா இருக்கில்ல, உங்க நல்லமனசுக்கு நிச்சயம் ஒருநாள் .............. (ஆமா என்னவா ஆவாரு?)

Monday, June 14, 2010

சூனில் செம்மலி, மன்னிக்கணும் செம்மொழி மாநாடு .படத்தை பெரிதாக்கி 'சூன்' மாதத்தை பாருங்கள்


உலகத்தமிழ் செம்மொழி மாநாட்டுக்கான விளம்பரங்கள் கலைஞரின் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்படுவதை அனைவரும் பார்த்திருப்பீர்கள். அதில் எத்தனையாம் திகதிகளில் மாநாடு இடம்பெறுகின்றது என்ற விளம்பரப்பகுதியை பாருங்கள், அதில் 'சூன் 23 முதல் 27 வரை' என செம்மொழியாம் தமிழ் மொழியில் எழுதியிருப்பதை அவதானிக்கலாம். அதேபோல அவர்களின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில்கூட '2010 சூன் 23 முதல் 27 வரை' என எழுதப்பட்டிருப்பதை காணலாம். இரண்டு இடங்களிலும் 'ஆனி' மாதத்தை 'சூன்' மாதம் என்றே குறிப்பிட்டுள்ளனர், ஒருவேளை தமிழ் செம்மொழியாக மாறும்போது 'ஆனி' மாதத்தை 'சூன்' மாதமென்று மாற்றி விட்டார்களா? இல்லை கவனிக்க தவறிவிட்டார்களா? அப்படியென்றால்க்கூட இதுவரை யாருமே அவதானித்து திருத்தவில்லையா?

தமிழ்ப்படங்களில் நடித்த ஒரே காரணத்துக்காக(நம்புங்க சார் )குஷ்புவை திராவிட முன்னேற்ற கழகத்தில் இணைத்தும், தமிழ்மொழியில் பெயர் வைப்பதால் திரைப்படங்களுக்கு வரிச்சலுகை அளித்தும் தமிழ்மொழியை வளர்க்க (கனிமொழியை அல்ல தமிழ்மொழியை ) அல்லும் பகலும் பாடுபட்டுக்கொண்டிருக்கும் கலைஞர் ஐயாவிற்கு இந்த 'சூன்' விடயம் தெரியுமுன் மாற்றிவிடுங்கள், இல்லாவிட்டால் தைப்பொங்கலை தமிழ் வருடப்பிறப்பாக்கியது போல் 'ஆனி' மாதம் இனி 'சூன்' என்றே அழைக்கப்படுமென்று ஆணையிட்டாலும் ஆச்சரியமில்லை.

வாழ்க தமிழ், வாழ்க தமிழர்கள், வாழ்க செம்மலி, மன்னிக்கணும் செம்மொழி மாநாடு, வாழ்க கலைஞர் ஐயா.

Saturday, June 12, 2010

பாழாய்போன டியூசன் (தனியார் வகுப்புக்கள் ) கல்வி....

இந்தப்பதிவு சாதாரணதர வகுப்புக்கு(பத்தாம் வகுப்பு) உட்பட்ட மாணவர்களுக்கானது. காலை எட்டுமணிக்கு ஆரம்பிக்கும் பாடசாலைக்கு செல்வதற்கு காலை 6 .30 மணியிலிருந்தே தயாராக ஆரம்பிக்கும் மாணவர்கள் மதியம் இரண்டரை மணிக்கு பாடசாலை முடிந்து வீட்டுக்கு வந்ததும் அவசர அவசரமாக சாப்பிட்டுவிட்டு தனியார் கல்வி நிலையங்களின் மூன்றுமணி வகுப்புகளுக்கு சென்று, பின்னர் வகுப்புக்கள் முடிந்த பின்னர் அங்கிருந்து மாலை 6 .30 மணிக்கு வீடு திரும்புகிறாகள். வாரத்தில் ஐந்து நாட்கள்தான் இப்படி என்றால் வார இறுதிநாட்களில் மூச்சு விடக்கூட நேரமில்லாமல் பகல்நேர வகுப்புக்கள். இப்படியே போனால் மாணவர்களது ஏனைய திறன்கள் என்னாவது? பட்டாம்பூச்சிகள் போல சிறகடிக்க வேண்டிய வயதில் இப்படி ஒரு இயந்திரத்தனமான கல்விமுறை தேவைதானா? பாடசாலை கல்வி போதாதா? தனியார் வகுப்புக்கள் தேவைதானா?பாடசாலைகளில் சரியானமுறையில் கல்வி கற்பிக்கவில்லை அல்லது கற்பிப்பது புரியவில்லை என்று வைத்துக்கொண்டாலும் அவ்வாறு புரியாத பாடங்கள் எத்தனை? கணிதம், விஞ்ஞானம், ஆங்கிலம் என்பவைதான் அவ்வாறு புரியாமல் இருக்க சாத்தியமான பாடங்கள். ஏனைய பாடங்களை அரசு இலவசமாக தரும் பாடப்புத்தகங்களை படித்தாலே போதுமானது, அப்படி இருக்க எதற்காக தமிழ், சமயம், வரலாறு, புவியியல் என அனைத்துப்பாடத்திற்கும் தனியார் வகுப்புக்களை நாடவேண்டும்? சகமானவனின் பெயரை குறிப்பிட்டு "அவனெல்லாம் டியூசனுக்கு போறான் நீயும்போ " என தனியார் வகுப்புக்களுக்கு பிள்ளைகளை அனுப்புவதை பெருமையாகக் கொண்ட அறியாமை நிறைந்த பெற்றோர் ஒருபக்கம் என்றால், புரியாத முக்கிய பாடங்களை மட்டும் படிக்க தயாராக இருக்கும் மாணவர்களையும் அனைத்து பாடங்களையும் படித்தால்தான் படிக்க அனுமதிகிடைக்கும் எனக்கூறும் தனியார் கல்விக்கூடங்கள் ஒருபக்கம் என மாணவர்களது பொன்னான நேரங்களை வீணடிப்பதுடன் அவர்களுக்கு மூளைக்களைப்பையும் உண்டாக்குகிறார்கள்.இப்போதெல்லாம் நல்ல காற்றுவீசும் காலநிலை, பட்டமேற்றி விளையாட வேண்டிய வயதில் புத்தக மூட்டையை சுமக்கும் மாணவர்களை பார்க்கும்போது அக்கறை என்னும் பெயரில் அறியாமையால் தவறிழைக்கும் பெற்றோரைவிட பணத்திற்காக மாணவர்களின் இளமைக்காலத்தை வீணடிக்கும் தனியார் கல்வி நிறுவனங்களின் மீதும் அதன் ஆசிரியைகள் மீதும்தான் அதிகமான கோபம் வருகிறது. மாகாண முதலமைச்சர்கள் மாநாட்டில் ஞாயிற்றுக்கிழமைகளில் அனைத்து தனியார் கல்வி நிலையங்களுக்கும் விடுமுறை அளிக்கவேண்டுமென்று சட்டம் அமுலுக்கு கொண்டுவந்ததாக சென்றவார பத்திரிகைகளில் படித்த ஞாபகம், அந்த சட்டத்தை முதலமைச்சர்களற்ற வடக்கிலும் கொண்டுவந்தால் மிகுந்த சந்தோசம், அந்த ஒரு நாளாவது மாணவாகள் வாழ்வில் குதூகலத்தை உண்டாக்கட்டும்.

குறிப்பு : (பதிவோடு சம்பந்தமிலாதது)

இந்த நாலைந்து மேட்டர்களை ஒன்றாக சேர்த்து எழுதுவதற்கு ஏதாவதொரு சாப்பாட்டின் பெயரை வைப்பது பதிவுலகின் எழுதப்படாத விதி, அந்தவகையில் அப்படி ஒரு பதிவை எழுதினால் அதற்க்கு என்ன பெயரை வைக்கலாம்? என்று ஜோசித்தபோது கணப்பொழுதில்தோன்றியதுதான் 'கோழிக்கறியும் முட்டைப்பொரியலும்' என்னும் டைட்டில். நல்லாயிருந்தா சொல்லுங்க, இல்லாக்காட்டி வேற ஏதாச்சும் நல்ல பெயரா சொல்லுங்க, ஆனா கம்பனி எந்த சன்மானமும் வழங்காது :-)

Thursday, June 10, 2010

ராவணன் ஒரு முன்னோட்டம்

மணிரத்னம் இயக்கத்தில் வெளியாகவிருக்கும் ராவணன் இன்னும் ஒருவாரத்தில் திரை காணவிருக்கிறான்.விக்ரம்,ப்ரித்விராஜ், ஐஸ்வர்யா பச்சன்,கார்த்திக்,பிரபு,ப்ரியாமணி நடித்திருக்கும் இப்படத்திற்கு ஒளிப்பதிவு சந்தோஷ்சிவன், இசை ரஹ்மான்.இதெல்லாம் எல்லாருக்கும் தெரிஞ்ச சமாச்சாரம்தான், ராவணன் தொடர்பான எனது எண்ணங்களும் எதிர்பார்ப்புகளுமே இந்தப்பதிவு.

கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் தயாரிப்பிலிருந்து பல தடைக்கற்களையும் தாண்டி வெண்திரை காண்கிறபடம்தான் ராவணா.முதன்முறையாக மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம் நடித்திருக்கும் படம், தமிழில் கதையின் நாயகனாக நடித்திருக்கும் விக்ரம் ஹிந்தியில் அதற்கு எதிரான பாத்திரத்திலும் நடித்திருக்கிறார்,ஒரேபடத்தின் இரண்டு பதிப்புகளில் வேறு வேறு கதாபாத்திரத்தில் நடிப்பது இதுவே முதல்முறை(எனக்குத் தெரிந்து).2005 இலிருந்து 2010வரை விக்ரமின் இரண்டு படங்களே ரிலீசாகியுள்ளது,இரண்டும் சொல்லிக்கொள்ளும்படியாய் அமையவில்லை,விக்ரம் மலைபோல நம்பியிருக்கும் படமிது. அண்மையில் ஒரு பேட்டியில் ராவணன் பற்றிக்குறிப்பிட்ட விக்ரம் ஒருவித மிதப்பில் இருப்பதாக கூறியுள்ளார்,படத்தின் ட்ரெய்லர் பார்த்தவுடன் அதே மிதப்பு அனைவரிடமும் இருக்கத்தான் செய்கிறது.நவீன கர்ணனாக 'தளபதியை' செதுக்கிய மணி ராவணனை எப்படி கையாண்டிருப்பார் என்ற எதிர்பார்ப்பு பட அறிவிப்பிலிருந்து என்னைத் தொற்றிக்கொண்டது. ஏனெனில் ராவணன் கதையும் அனைவரும் அறிந்ததே, ஆனால் அதற்கான திரைக்கதையை மணி எப்படி கையாண்டிருப்பார்? யார் எந்தக் கதாபாத்திரம்? என்பவை இன்னும் எதிர்பார்ப்பை எகிறச்செய்கிறது. எனது சிற்றறிவுக்கு எட்டியபடி ராவணனாக விக்ரம்,ராமனாக ப்ரித்விராஜ்,சீதாவாக ஐஸ்வர்யா,கும்பகர்ணனாக பிரபு,(குருவில் அம்பானிக்கு இரட்டைப் பெண்குழந்தைகள் போல கும்பகர்ணன் கதாபாத்திரம் ராவணனின் அண்ணனாக ஆக்கப்படலாம்)சுக்ரீவன் அல்லது ஹனுமனாக கார்த்திக்,சுர்ப்பனகையாக ப்ரியாமணி, நிச்சயம் மண்டோதரி,விபிஷணன் பாத்திரங்கள் இடம்பெற்றிருக்கும்.யாரென்பது புலப்படவில்லை,மண்டோதரியாக ரஞ்சிதா நடித்திருக்கலாம்.'உசுரே போகுதே' தவிர பாடல்கள் எதுவும் பெரியளவில் இல்லை என்றாலும் காட்டுசிறுக்கி,கோடுபோட்டா என்பவை படம் வந்தபின் பிக்கப் ஆகலாம்.சந்தோஷ்சிவனின் ஒளிப்பதிவிலும் மணிரத்னத்தின் படமாக்கலிலும் பாடல்கள் விஷுவல் ட்ரீட் ஆக அமையலாம்.பாடல்களுக்கு வைரமுத்துவின் வரிகள் பலம்.

"மனசு சொல்லும் நல்லசொல்லை மாய உடம்பு கேக்கல",

"என் கட்டையும் ஒருநாள் சாயலாம் என் கண்ணில உன் முகம் போகுமா"

"செத்தகிழவன் எழுதிவச்ச மொத்த சொத்து வீரம்தான்"

"பாம்புகூட பழகி பால ஊத்தும் சாதி,தப்பு செஞ்சுபாரு அப்ப தெரியும் சேதி"

இவை நான் ரசித்த வரிகள்,கதாபாத்திரத்தின் தன்மையை பாடல்களுக்குள் அடைத்திருக்கிறார் கவிப்பேரரசு.

எனக்கு மிகவும் பிடித்த இயக்குனர்களில் மணிரத்னமும் ஒருவர்,வித்தியாசமான கதைசொல்லும் விதமும்,இவர் தனது நாயகர்களுக்கு கொடுக்கும் முற்போக்குத்தனமான ஹீரோயிசமும் என்னைக் கவர்ந்தவை.கதையில் அர்ஜுனன் இருக்க கர்ணனை நாயகனாக்கவும்,ராமனிருக்க ராவணனை நாயகனாக்கவும் மணியால் மட்டுமே முடிந்தகலை.படம் தொடர்பான சில துளிகள்:

* மணிரத்தினம் ஆய்தஎழுத்துக்குப் பின் நேரடியாக இயக்கும் தமிழ்ப்படம்.

* கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் படத்திற்குப் பின் ஐஸ்வர்யா நடிக்கும் தமிழ் படம்.

* ஐந்து வருடங்களாக ஹிட் கிடைக்காமல் விக்ரம் பெரிதும் நம்பியிருக்கும் படம்

* தமிழ் ஹிந்தி தெலுங்கு மூன்று மொழிகளிலும் ஒரே நேரம் வெளியாகிறது

* விக்ரம் தமிழில் வீரா என்னும் பாத்திரத்திலும் ஹிந்தியில் தேவ் என்னும் பாத்திரத்திலும் நடித்திருக்கிறார்.

* ஓடியோவில் வெளிவராத பாடலை பார்க்கும்போது விக்ரம் இறுதியில் இறந்துபோவது போல காட்சி இருக்கலாமென்று நினைக்கறேன்.

மணிரத்னம் மற்றும் விக்ரமின் கூட்டணியைக் காண இன்னும் ஒரு வாரம் இருக்கிறது,எதிர்பார்ப்பு வீண் போகாது என்ற நம்பிக்கையுடன்....

*மயூரதன்*

Wednesday, June 9, 2010

விஜய், சூர்யா, டீ.ஆர்

இது முழுக்க முழுக்க மொக்கை பதிவு , வாசிச்சிட்டு அப்புறமா திட்டக்கூடாது ஆமா.

விருந்து நிகழ்வொன்றில் ஒரு ஓரமாக தங்களில் யார் உண்மையான தமிழன் என்பதைப்பற்றி விஜையும் சூரியாவும் வாக்குவாதப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள், அதை நீண்டநேரம் கவனித்துக்கொண்டிருந்த டீ ஆர் இடையில் நுழைந்து..............

டீ.ஆர் : தம்பி கடைசியில் உங்க ரெண்டுபேர்ல யாரப்பா உண்மையான தமிழன்?

விஜய் : சார், எவன் அடிச்சா பொறி கலங்கி பூமி அதிர்றது கண்ணில தெரியுதோ அவன்தான் தமிழன்.

சூர்யா : சரக்கடிச்சா கூடத்தான் நீ சொல்ற மாதிரி தெரியும், ஆனா நான் அடிச்சா ஒண்டரை டன் வெயிற்ரிடா, பாக்கிறியா? .

விஜய் : பார்ரா , ஒன்டரையடி இருந்துகிட்டு இவனோட காமடிய , தம்பி நான் அடிச்சா தாங்கமாட்டா நாலு மாசம் தூங்கமாட்டா ?

சூர்யா : நீ நடிக்கிறத பாத்தாக்கூடத்தான் ஆறுமாசம் தூங்க முடியல, அப்புறம் எதுக்கு அடிக்கணும் ? இவ்ளோ தோல்விக்கப்புறமும் இன்னும் நீ நடிச்சுத்தான் ஆகணுமா?

விஜய் : என்னப்பாத்து இந்தக்கேள்வியை கேட்ட கடைசியாள் நீதாண்டா, வாழ்க்கை ஒரு வட்டம் அதில தோக்கிறவன்..............

டீ.ஆர் : நிறுத்து நிறுத்து , இதவிட நான் சொல்றது நல்லாயிருக்கும் ட்ரை பண்ணிப்பாரு " (F)பெஸ்ரு யாரு முன்னாடி போராங்கிறது முக்கியமில்ல லாஸ்டில யாரு முன்னாடி வாராங்கிரதுதான் முக்கியம்"

விஜய் : சார் இது உங்க பையன் டயலாக்காச்சே? இப்ப நீங்க சொந்தமா சிந்திக்கிறதேயில்லையா?

டீ.ஆர் : யார்யார் எதை பேசிறதெங்கிற விவஸ்தையே இல்லாம போச்சு ......! தம்பி இது என்னோட டயலாக்தான், வீராச்சாமிக்காக எழுதி வச்சிருந்தது, கண் அசந்த (G)கப்பில சிம்பு ஆட்டைய போட்டிட்டான்.

விஜய் : உங்க பையன்தானே, இதெல்லாம் வெளிய சொல்லி எதுக்கு அவனோட இமேஜை கெடுக்கிறீங்க , இந்த அப்பாக்களே இப்பிடித்தான் போல!

சூர்யா : ஆமா ஆமா, இல்லாட்டி அரிசி விலையே தெரியாத நீ அரசியலுக்கு வரப்போறதா சொல்லி எதுக்கு உங்கப்பாவே உனக்கு குழிவெட்டனும்? இந்த விசயத்தில எங்கப்பா எவளவோ தேவல.

விஜய் : யாராவது புதுசா நடிக்கவந்தா எங்கப்பா உடனே அவனை வச்சு படமெடுத்து ஆளையே காலி பண்ணிறதில கில்லாடி, ஆனா நீ மட்டும் எப்பிடிடா அந்தாள் படமெடுத்தும் தப்பிச்சாய்?

சூர்யா : யானைக்கே அடி சறுக்கும்போது நரிக்கு சறுக்காதா?

விஜய் : "வங்கக்கடல் எல்லை நான் சிங்கம் பெத்தபிள்ளை" , " சீறுகிற சிங்கத்தோட பிள்ளைடா" அப்பிடின்னு பாட்டு வரிகள்ல எங்கப்பாவ சிம்பாலிக்கா சிங்கமின்னு சொல்லிக்கிட்டு திரியிறன், நீ என்னடான்னா நரிங்கிறா, அப்புறம் எனக்கு கெட்டகோபம் வந்திடும் சொல்லிப்புட்டன்.

டீ.ஆர் : தம்பி கோவப்படாத என்னை கூடத்தான் கரடிங்கிறாங்க!

சூர்யா: (மனதுக்குள் )உங்களை எல்லாம் எல்லாம் நரி, கரடின்னு சொல்லிறது உண்மையான நரி கரடிங்களுக்கு தெரியாதது நல்லதாபோச்சு, இல்லேன்னா அதுகள் எம்புட்டு பீல் பண்ணும்.

டீ.ஆர் : தம்பி உன்னோட 'மைன்ட் வாய்ஸ்' கேக்குது. இத்தோட நிறுத்து, இல்லாட்டி சொல்லுவன் கருத்து, அப்புறம் ஓடுவாய் வெறுத்து.......

சூர்யா: இம்புட்டுநேரமும் நல்லாத்தானே பேசிக்கிட்டிருந்தீங்க ? டென்சனாகாதீங்க சார், கூல்.....

விஜய் : சார் இவனை விடுங்க சின்னப்பயல், நான் கட்சி ஆரம்பிச்சதும் உங்க கட்சியோட கூட்டணி வைச்சிக்கலாமா?

டீ.ஆர் : ...................................(தலை தெறிக்க ஓடுகிறார்)

சூர்யா : பேசிப்பேசி எல்லோரையும் தலைதெறிக்க ஓடவைக்கும் ஆலாலப்பட்ட டீ.ஆரையே உன் பேச்சால் தலைதெறிக்க ஓடச்செய்ததால் நீதான் உண்மையான தமிழன் என்பதை நான் மனப்பூர்வமாக ஒத்துக்கொள்கிறேன்.

விஜய் : சரி சரி எதுக்கு நாம சண்டை போட்டுக்கணும் , நாங்க ரெண்டுபேரும் சேந்து எங்கப்பா இயக்கத்தில ஒரு படம் பண்ணினா என்ன?

சூர்யா : ..................................(டீ.ஆருக்கு பத்தடி முன்னாடி ஓடிக்கிட்டிருக்கிறாரு )

Monday, June 7, 2010

எனக்குத் தெரியாது, உங்களுக்குத் தெரியுமா?

1) "ஒன்னுந்தெரியாத பாப்பா போட்டாளாம் தாப்பா" என்கிற கதையா இதுவரை எதுவுமே நடக்காதமாதிரி பாரதப் பிரதமருக்கு ஒரு மடல் வரைந்துள்ளாராம் தமிழக முதல்வர். அதிலே இந்தியா வரும் இலங்கை அதிபருக்கு அறிவுறுத்தும்படி சில விடயங்களை எழுதியுள்ளாராம். ஆமா இவர் யாரை முட்டாளாக்குகிறார் ? இலங்கை தமிழரையா ? இந்தியத் தமிழரையா ? அல்லது தன்னையா?

2) இலங்கை திரைப்படவிழாவை புறக்கணித்த அமிதாப் குடும்பம் ஐஸ்வர்யாராய் 'ராவணா' மற்றும் 'எந்திரனில்' நடித்திருக்காவிட்டாலும் விழாவை புறக்கணித்திருப்பார்களா ?

3) விஜய் அரசியலுக்கு வருவதை யாராலும் தடுக்க முடியாதென்று S .A .சந்திரசேகர் கூறியது! மப்பிலா? அல்லது புத்தி மாறாட்டத்திலா? அல்லது விஜயுடன் ஏற்பட்ட ஏதாவது மனக்கசப்பிலா?

4) நாளைய தமிழ்க்கூட்டமைப்பு , ஜனாதிபதி சந்திப்பு, நிரந்தர தீர்வுக்கு வழிகோலவா? அல்லது வெளியுலகையும் எம்மையும் ஏமாற்றவா ? அல்லது இந்தியாவின் அழுத்தத்தினாலா?

5) மொண்டிகாலோ, ரோம், மட்ரிட், பிரெஞ்சு என களிமண்தரையில் தொடர்ந்த நடாலின் வெற்றிப்பயணம் விம்பிள்டன் புற்தரையில் முடிவுறுமா? பெடரர் இழந்த தனது முதலிடத்தை மீளப்பெறுவாரா?

6) சிம்பாவேயில் இந்தியாவின் தோல்விக்கு காரணம் பந்து வீச்சாளர்களின் தவறா?அல்லது தவறான பந்து வீச்சாளர்களை தெரிவுசெய்த தெரிவுக்குழுவின் தவறா? அல்லது திறமையான இளம் பந்துவீச்சாளர்கள் இல்லாமையா?

7) ராவணா திரைப்படம் விக்ரமிற்கு ரஜினிக்கொரு 'தளபதி' போலவோ கமலுக்கொரு ' நாயகன்' போலவோ அமையுமா? (இதுக்கு மட்டும் எதிர்க்கேள்வி இல்லை! ஏன்னா அமையும், நம்பிக்கை பாஸ் நம்பிக்கை..)

8) சிங்கத்திற்கு 'மிக்ஸ் ரிப்போட்' விமர்சனம் கிடைத்தாலும் படம் பிச்சுக்கொண்டு போகிறதை பார்க்கும்போது சூரியா விஜய், அஜித், விக்ரம் என தனது போட்டியாளர்கள் மூவரையும் ஓவர்டேக் செய்துள்ளார் என்றே எண்ணத்தோன்றுகிறது. இது உண்மையா? அல்லது இந்த மூவரின் படங்களுடனும் ஒரேநேரத்தில் சூரியாவின் படமொன்று வெளியாகும்போதுதான் உண்மை தெரியுமா?

9) உலககோப்பை (2010 ) கால்ப்பந்தாட்டத்தில் ஜெயிக்கப்போவது யார்? தென்னமெரிக்க நாடா? அல்லது ஐரோப்பிய நாடா? இல்லை வேறு கண்டங்களை சேர்ந்த ஏதாவதொரு நாடா? (எனது ஆதரவு எப்போதுமே ஜேர்மனிக்குத்தான் )

10) இந்த பதிவை பாக்கும்போது சீடியசான பதிவா தெரியுதா? இல்லை எழுத ஒன்றும் கிடைக்காததால் மொக்கை போடுவதுபோல் உள்ளதா? (பயப்படாமல் இரண்டாவது ஒப்சனை சொல்லலாம் :-) ஏன்னா அதுதான் உண்மை )

Friday, June 4, 2010

ஒரே குட்டையில் ஊறிய ஆசிய அணிகள்

இலங்கை, இந்திய, சிம்பாவே அணிகள் பங்குபெறும் முத்தரப்பு ஒருநாள் போட்டித்தொடர் இந்திய , இலங்கை அணிகளின் சிரேஷ்ட வீரர்கள் இல்லாமையால் அதிக முக்கியத்துவம் பெறவில்லை ஆயினும் இந்த தொடரை நன்றாக உற்று நோக்கினால் ஒருவிடயம் நன்றாக புரியும். அதாவது இலங்கை , இந்திய அணிகளின் சிரேஸ்ட வீரர்க்களும்சரி கனிஸ்ட வீரர்களும்சரி ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்தான் என்பதே அந்தவிடயம் . இந்திய சிரேஸ்ட அணியை போலவே கனிஸ்ட இந்திய அணியும் துடுப்பாட்டத்தில் பலமாகவே உள்ளது, அதேபோல பந்துவீச்சிலும் , களத்தடுப்பிலும் இவர்கள் சிரேஸ்ட வீரர்களைபோல பலவீனமாகவே உள்ளனர்.அதேபோல இலங்கையின் கனிஸ்ட வீரர்களும் சிரேஸ்ட வீரர்கள்போல துடுப்பாட்டத்தில் பலவீனமாகவும் பந்துவீச்சு களத்தடுப்பு போன்றவற்றில் பலமானவர்களாகவும் இருக்கின்றனர்.அதேபோல பாகிஸ்தானும் அன்றிலிருந்து இன்றுவரை ஒரு விடயத்தில் ஒற்றுமையாகத்தான் இருக்கிறார்கள், அதாவது பார்ப்பதற்கு அணியின் பதினொருவரும் மிகவும் பலமானவர்கள் போல தோன்றினாலும் இவர்களைப்போல யாரும் சொதப்பமுடியாது, அதுவும் முக்கியமான போட்டிகளில் இவர்கள் சொதப்பும் சொத்தப்பலே தனி, இது அன்றிலிருந்து இன்றுவரை தொடர்கிறது. இன்றைய பங்களாதேஷ்அணி முன்னைய காலத்து பங்களாதேஷ் அணியைவிட சிறப்பாக ஆடினாலும் ஒவ்வொரு போட்டியிலும் ஒவ்வொருத்தர் பிரகாசிப்பது, குறிப்பாக டெஸ்ட் போட்டிகளில் ஒவ்வொரு இனிக்சிலும் ஒருவர் பிரகாசிப்பது, அத்துடன் மூன்றாம் அல்லது நான்காம் இனிங்க்சில் சொதப்புவது, அதாவது ஆரம்பத்தில் நன்றாக ஆடிவிட்டு நடுவரிசையினர் சொதப்புவது, அல்லது ஆரம்பம் மற்றும் நடுவரிசை சொதப்ப பின்வரிசை இறுதிநேரம் வரை போராடி பின்னர் தோற்பதென இவர்களும் அன்றிலிருந்து இன்றுவரை Why blood? same blood தான்.

இந்த ஒரே குட்டையில் ஊறின மட்டைகள் ஓரணியில் இருந்தால் எப்படி இருக்கும்? அதாங்க இந்த "ஷேன் வோண்' எல்லாம் வெட்டியா போடுவாங்களே ஒரு கனவு அணி, அதுமாதிரிதாங்க இதுவும்.

இன்றைய ஆசியாவின் கனிஸ்ட வீர்களின் (25 வயதிற்கு கீழ் ) ஒருநாள் போட்டிக்கான கனவுஅணி ..................................

(1) தினேஷ் கார்த்திக் (Dinesh Karthik) {விக்கட் காப்பாளர்}

(2) சல்மான் பட் (Salman Butt)

(3) விராத் கோளி (Virat Kohli)

(4) உமர் அக்மல் (Umar Akmal)

(5) சுரேஷ் ரெய்னா (Suresh Raina)

(6) ரோஹித் ஷர்மா (Rohit Sharma )

(7) அஞ்சலோ மத்தியூஸ் (Angelo Mathews)

(8) சாகிப் அல் ஹசன் (Shakib Al Hasan) {தலைவர்}

(9) முஹமட் அமீர் (Mohammad Aamer)

(10) சாயிட் ரஸல் (Syed Rasel)

(11) அஜந்தா மென்டிஸ் (Ajantha Mendis)

இப்படி வெட்டியாக ஜோசிக்கும் என்னைப்போன்ற வெட்டிச் சிந்தனைவாதிகளே உங்கள் கருத்துக்களும் மாற்று வீரர்களது பெயர்களும் வரவேற்க்கப்படுகின்றது :-)

Tuesday, June 1, 2010

தமிழிசைக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்திரு இளையராஜா அவர்களுக்கு உளம்கனிந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள். 'இசைஞானி ' , 'மேஸ்ட்ரோ', 'பத்மஸ்ரீ ' ,'பத்மபூசன்', 'டாக்டர்', 'ராகதேவன்','இசை அரசன்' .....இப்படி எந்தப் பட்டத்தை உங்கள் பெயருக்கு முன்னால் போட்டாலும் 'யானைப்பசிக்கு சோளப்பொரி' போலத்தான் இருக்கும் என்பதால் திரு இளையராஜா என்பதே பொருத்தமானதாக இருக்குமென்று நினைக்கிறேன். உங்கள் இசையை விபரிக்க எனக்கு இசையறிவு போதாது,ஆனால் உங்களது பாடல்கள் இல்லாமல் எனது எந்தவொரு நாளும் நிறைவடைந்தது கிடையாது. உங்களை சிலர் குண்டுச்சட்டிக்குள் குதிரை ஓட்டியவர் என்கிறார்கள், ஆது உண்மையாகவே இருக்கட்டும்; அந்த குண்டுச்சட்டிக்குள் நீங்கள் ஓட்டிய குதிரையின் குழம்படியை ரசித்து முடிக்கவே எனக்கு இந்தப்பிறவி நிச்சயம் போதாது.எத்தனை நாள் என் தனிமையை உடைத்து என்னை ஆகாயத்தில் பறக்கவைத்திருப்பீர்கள் என்பது எனக்குத்தான் தெரியும். சிலவருடங்களுக்கு முன்புவரை ரஜினியை திரையிலோ / புகைப்படத்திலோ பார்த்தால் ஒருவித புத்துணர்ச்சி ஏற்படும், ஆனால் இப்போதெல்லாம் உங்களது பாடலையோ குரலையோ கேட்டால் அதே புத்துணர்ச்சி ஏற்ப்படுகிறது. இன்றுகூட அதிகமான வேலைப்பழுவால் ஏற்ப்பட்ட உடற்களைப்பை   வெறும் பத்தே நிமிடத்தில் போக்கியது "கண்ணா வருவாயா மீரா கேட்கிறாள் " மற்றும் "தாலாட்டும் பூங்காற்று நான் அல்லாவா " என்கின்ற தங்களுடைய இரு பாடல்கள்தான். இன்று எனக்குள் ஒன்றாக கலந்துவிட்ட உங்கள் இசைக்கு பரிசாக என்னால் எதை தரமுடியும் ? கண்ணீர்த்துளிகளையும் நன்றி என்ற வார்த்தையையும் தவிர!

காலத்தால் அழியாத இசையை எமக்குத்தந்த உங்களுக்கு நீங்கள் விரும்பும் அமைதியும் நிம்மதியும் சாந்தமும் கிடைக்க எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கின்றேன்.