IPL இல் ரன்ஸ் அடிக்கிறது ஒன்றும் கடினமான விடயமில்லை , அன்றைக்கு நாள் நல்லாயிருந்தால் யார் வேணுமின்னாலும் விளாசலாம் , ஆனால் கிளாசாக கலக்குவதெனால் அது ஒரு சிலர்தான் . அந்தவகையில் இந்தாண்டு ஏற்கனவே சச்சினும் கலிசும் கிளாசோட மாசையும் சேர்த்து கலக்கிவரும் நேரத்தில் மஹேலா கிளாசோட மாசையும் சேர்த்து அக்ஷன் ஹீரோ ரேஞ்சுக்கு பதிலடி கொடுத்திருக்கிறார். முன்னைய போட்டிகளில் பெரிதாக சோபிக்காததால் முதல்ப் போட்டியில் அணியில் இருந்து நீக்கப்பட்ட மஹேலா இறுதி நேரத்தில் காயமடைந்த மார்ஷுக்காக இன்றைய போட்டியில் களமிறங்கி தன்னை அணியிலிருந்து நீக்கியதன் தவறை துடுப்பால் உணர்த்தயுள்ளார்.
இதுவரை IPL இல் பஞ்சாப் சார்பாக போப்பாரா, பிஸ்லா, சங்ககாரா, யுவராஜ், பதான், மார்ஸ் என துடுப்பாட்டவீரர்கள் அனைவரும் ஆரம்பவீரர்களாக முதல் எட்டுப்போட்டிகளிலும் களமிறங்கினாலும் இன்றைய போட்டிக்கு முன்னர் பஞ்சாப் வென்ற ஒரே போட்டியான சென்னையுடனான சுப்பர் ஓவரில் மட்டுமே மஹேலா ஆரம்பத்துடுப்பாட்ட வீரராக களமிறக்கபட்டார், அந்த ஓவரின் முதல்ப்பந்தில் முரளிக்கு அடித்த சிக்ஸ்தான் பஞ்சாப்பின் அந்தப்போட்டியின் வெற்றிக்கு காரணமாக அமைந்தது. அதன்பின்னர் மீண்டும் இன்றுதான் ஆரம்பவீரராக களமிறங்கினார் மஹேலா.
IPL போட்டிகளுக்கு முன்னதாக இலங்கையில் இடம்பெற்ற பிராந்திய அணிகளுக்கிடையிலான போட்டியில் ஆரம்பதுடுப்பாடவீரராக களமிறங்கி நான்கு போட்டிகளில் அரைச்சதமடித்து தான்சார்ந்த வயம்பஅணி இறுதிப்போட்டியில் வெல்வதற்கு முக்கியகாரணமாக இருந்தவர் மஹேலா, இது தெரிந்ததும் முதல் எட்டுப்போட்டியிலும் ஆரம்பதுடுப்பாட்டவீரராக மகாலேவை சங்கா எதற்காக பயன்படுத்தவில்லை என்பதுதான் தெரியாதுள்ளது.
இதற்கு முன்னர் மஹேல ஒருநாள் போட்டியலில் இலங்கை சார்பாக ஆரம்பவீரராக களமிறங்கிய மூன்று போட்டிகளில் இரண்டு போட்டிகளில் சதமடித்துள்ளார். அந்த போட்டிகளின் இறுதியில் சங்ககார " இரண்டு விக்கட்டுகள் விரைவாக வீழ்ந்ததும் அழுத்தங்கள் அதிகமாக இருப்பதால் நடுவரிசையில் ஆடும்போது மஹேலா தனது இயலான ஆட்டத்தை வெளிப்படுத்த முடிவதில்லை, ஆரம்பதுடுப்பாடவீரராக களமிறங்குவதால் அழுத்தங்கள் இல்லாததால் சிறப்பாக ஆடினார் " என்று கூறியது நினைவிருக்கலாம். இருந்தும் இதுவரை சங்கா மகேலாவை ஆரம்பவீராக களமிறக்காமல் விட்டமை பஞ்சாப்பிற்கே இழப்பாகும்.
தன்னை விமசிக்கும் போதும் அணியிலிருந்து நீக்கும் போதும் மீண்டு வருவது மகேலாவிற்கு ஒன்றும் புதிதல்ல, 2003 உலககோப்பை போட்டிகளின் பின்னர் அணியிலிருந்து நீக்கப்பட்ட மஹேலா மீண்டும் அணியல் இடம்பிடிக்க இலங்கை வந்த நியூசிலாந்துடனான பயிற்சிப்போட்டியில் இலங்கை கட்டுப்பாட்டுசபை சார்பாக களமிறக்கப்பட்டார். NCC இல் இடம்பெற்ற அந்தப்போட்டியில் பொண்ட, விட்டோரி, ஓரம் போன்ற முன்னணி பந்து வீச்சாளர்களை எதிர்கொண்டு மஹேல அடித்த சதம் மகேலாவை மீண்டும் அணிக்கு கொண்டுவந்தது, அந்தப்போட்டியில்தான் அணியிலிருந்து நீண்டகாலம் நீக்கப்பட்டிருந்த களுவிதாரணவும் அரைச்சதமடித்து மீண்டும் அணியில் இடம்பிடித்தார், அந்தப் போட்டியை நேரில்பார்க்கும் சந்தர்ப்பம் எனக்கு கிடைத்ததை நினைவுகூர விரும்புகிறேன்.

இதேபோல தலைமை பதவியை ஏற்றவுடன் பங்களாதேஷுடனான ஒருநாள் போட்டி தோல்வி , இலங்கையில் பாகிஸ்தானுடனான டெஸ்ட் மற்றும் ஒருநாள்தொடர் தோல்வி என்பவற்றால் கடும் விமர்சனங்களை சந்தித்த மஹேலா அடுத்த இங்கிலாந்து தொடரில் ஒருநாள் போட்டிகளில் ஆசியஅணிகள் எதுவும் செய்யாத சாதனையை கிளீன் ஸ்வீப்பில் அதாவது 5 -0 என்ற கணக்கில் இங்கிலாந்தை வெற்றிகொண்டு நாடு திரும்பி விமர்சகர்கள் வாயை அடைத்தார், இந்த தொடரில் மஹேலா இரண்டு சத்தங்களை தன்பங்கிற்கு விளாசியிருந்தார். அதேபோல நியூசிலாந்துதொடரில் சோபிக்காத மகேலாவை விமர்சித்தவர்களுக்கு அடுத்து இடம்பெற்ற தென்னாபிரிக்காவுடனான தொடரில் முச்சதமடித்து நடைபெற்ற இருபோட்டிகளிலும் வெற்றிபெற்று இருபோட்டிகளிலும் ஆட்டநாயகனாக தெரிவாகி மீண்டும் தன்னை நிரூபித்தார்.

உலக கோப்பை போட்டிகளுக்கு முன்பதாக மோசமாக விமர்சிக்கப்பட்ட மகேலாவின் போம் உலக கோப்பையில் இரண்டாவது அதிகூடிய ஓட்டங்களை பெற்றவர் பட்டியலில் மகேலாவை கொண்டுவந்ததுடன் இறுதிப்போட்டிவரை இலங்கையை கொண்டுசென்றது. இப்போது கூட இறுதியாக பங்களாதேசில் இடம்பெற்ற போட்டித்தொடரில் காயம் காரணமாக மஹேலா விளையாடாத நேரத்தில் சமரவீர சதமடித்தவுடன் மஹேலா கதை அவ்வளவுதான் என்று விமர்சனங்கள் எழுந்தன,அதே தொடரில் மீண்டும் இணைந்த மஹேலா முதல்ப்போட்டியில் பங்களாதேசுடன் சதமடித்து இறுதிப்போட்டியில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 73 ஓட்டங்களை தனித்துநின்று போராடி கிண்ணத்தை இலங்கைக்கு பெற்றுக்கொடுத்து விமர்சகர்கள் முகத்தல் கரியை பூசியது நினைவிருக்கலாம்.
எது எப்பிடியோ மஹேலா தன்னை மீண்டும் நிரூபித்துவிட்டார், அடுத்தடுத்த போட்டிகளில் தொடர்ந்தும் சாதிக்க வாழ்த்துக்கள். T/20 போட்டிகளில் class வீரர்களான மஹேலா, சச்சின், கலிஸ் , திராவிட் போன்றவர்களாலும் பிரகாசிக்க முடியும் என்றால் "
class is real mass".