
கோடம்பாக்கத்தை கலக்கியோர்
2009 கோலிவூட் பகுதி 1 இல் வெளியான திரைப்படங்களைப் பார்த்தோம்,இப்பகுதியில் 2009ஆம் ஆண்டு கோடம்பாக்கத்தை கலக்கியோர் பற்றி பார்ப்போம்.முதலில் டாப்10 நடிகர்கள் பட்டியலிடலாம் என்றபோது எண்ணிக்கை மூன்றைத் தாண்டவில்லை,எனவே பொதுவாக கலக்கியோர் பட்டியலை பார்க்கலாம்.பத்துப்பேர சொல்றன்,தரவரிசைப்படுத்த முடியல,முடிஞ்சா நீங்க சொல்லுங்க.
சந்தானம்
வடிவேல்,விவேக் ஓரிரு படங்களைத்தவிர பெரிதாகப் பேசப்படாத நிலையில் கூடுதலான படங்களில் தோன்றி கலங்கடித்தவர் நம்ம மொக்கைசாமி சந்தானம்தான்.சந்தானம் இருக்கிறாரப்பா என்று நம்பி ஒரு படத்தை பார்க்கக்கூடிய அளவு இவரது வளர்ச்சி இருந்தது என்றால் மிகையல்ல.பலபடங்களில் கலக்கி இருந்தாலும் கந்தக்கோட்டை,கண்டேன் காதலை,மலை மலை என்பன இவரின் பட்டாசு காமடிக்காகவே பார்க்கக்கூடியவை.நம்ம கவுண்டமணி அண்ணனுக்கு பின் லொள்ளுக்கு நம்ம சந்தானந்தானுங்கோ.அவரு சிரிப்பரசர்,எனவே இவருக்கு சிரிப்பிளவரசர் பட்டம் கொடுக்கலாமே.அட்றாசக்க.. அட்றா சக்க... அட்றா சக்க...

பிரபுதேவா, நயன்தாரா, ரம்லத்
இவர்கள் மூவரையும் பிரித்துக்கூற முடியவில்லை.இம்மூவரது பெயரும் சிலகாலம் தலைப்பு செய்திகளை ஆக்கிரமித்திருந்தது.இது மூவரினதும் உணர்வு சம்பந்தப்பட்ட விடயம் ஆதலால் மேலதிகமாக செல்லவில்லை.ஆனாலும் வில்லுவால் ரசிகர்களை விட அதிகம் பாதிக்கப்பட்டது ரம்லத்தான்.
பாண்டிராஜ்
பசங்க மூலம் தமிழ் சினிமாவிற்கு தடம்பதித்த நம்பிக்கைக்குரிய அறிமுகம்.தமிழ்சினிமா அதிகம் கைவைக்காத சிறுவர்களின் உலகை கையில் எடுத்து ஜனரஞ்சகமானதொரு படைப்பு மூலம் அனைவரின் பார்வையையும் தன்பக்கம் திருப்பினார்.(சுப்பர் ஸ்டார் உட்பட).அடுத்த படமும் சசிக்குமாரின் தயாரிப்பில் என்று பேச்சு நிலவுகிறது.வெற்றியடைய வாழ்த்துக்கள்.
தேவி ஸ்ரீ பிரசாத்:
வருட ஆரம்பத்தில் வில்லு,நடுப் பகுதியில் கந்தசாமி,இப்பொழுது குட்டி.இவற்றுள் வில்லு, கந்தசாமி பாடல்கள் பட்டிதொட்டியெங்கும் பட்டையை கிளப்பியவை.படங்கள் பாடல்களுக்கு பெரிதாக கை கொடுக்காவிடினும் இப்படங்களில் பாடல்கள் ஆறுதலான அம்சமாக இருந்தது.குட்டிபடப் பாடல்களும் பிக்கப் ஆகிவருகின்றன.தேவிஸ்ரீயின்இசை கிளாஸ் ரகம் இல்லை எனினும் ஹிட்ரகம். 2010இல் சூர்யாவின் சிங்கத்துக்கும் இவர்தான் இசை.ஹாரிஸ்,விஜய்ஆண்டனி ஆகியோரும் பட்டையைகிளப்பி இருந்தாலும் இவரது பாடல்கள் தான் இவ்வருட ஹாட் லிஸ்டில் இருந்தவை.

சூர்யா:
இரண்டு படங்கள்,ஒன்று வருடத்தின் மிகப்பெரும் வெற்றி.மற்றயது சராசரியாக தப்பினேன் பிழைத்தேன் என்று ஓடியது.சூர்யா தயாரிப்பாளர்களின் நம்பிக்கைக்குரிய நடிகராக மாறி வருகிறார்.ஆனால் சூர்யா என்றால் தரமான படமாக இருக்கும் என்ற ரசிகர்களின் நம்பிக்கை குறைந்து வருவதை கவனத்தில் எடுத்தால் நலம்(அவருக்கும் நமக்கும்.கமலின் அடுத்த வாரிசாக இவரை அடையாளப்படுத்தி வருகிறது ஒருதரப்பு.அதற்கு சூர்யா விக்ரம் செய்ததில் பாதியாவது செய்ய வேண்டும்.கமல் செய்ததில் 10 விகிதமாவது ஒருவர் செய்திருக்கிறார் என்றால் அது விக்ரம்தான்.
தனது மார்க்கட் நிலை குறித்து சிந்திக்காமல் நல்ல கலையம்சம் உள்ள படங்களை கொடுப்பதுதான் கமல் ஸ்டைல்.விக்ரம் போராடி "சேது" மூலம் மறுபிறவி எடுத்தாலும் "தில்" விக்ரமை ஆக்ஷன் ஹீரோவாக அவதாரம் எடுக்கசெய்தபடம்.எந்த ஒரு நாயகனும் தன் அடுத்த படத்தையும் ஆக்ஷன் படமாக நடித்து தன்னை நிலை நிறுத்தவே முயற்சித்திருப்பார்.ஆனால் விக்ரம் தில்லின் பின் நடித்தது காசி.அது தான் விக்ரமை அடுத்த கமல் இவர்தான் என கூறவைத்தது. அதேபோலதான் தூள்,சாமி என்று அதிரடி வெற்றிகளின் பின் வசனங்களே இல்லாமல் பிதாமகனில் நடித்து தேசியவிருதும் பெற்றார்.ஆனால் சூர்யா வேல், அயன், ஆதவன், சிங்கம் என்று தொடர்ந்து கமர்சியல் வகைப்படங்களை தெரிவுசெய்வது அவர் பாதையை மாற்றுகிறாரா என சிந்திக்க வைக்கிறது.சூர்யா தற்சமயம் விக்ரமை விட மார்க்கட்டில் முன்னணியில் இருந்தாலும் நடிப்பில் அடைய வேண்டிய இடம் இன்னும் இருக்கிறது என்பதை மறுக்கமுடியாது.இவரின் நடிகர் கண்டனகூட்ட "ஈனப்பிறவி" பேச்சு மீடியாவுக்கும் இவருக்குமிடையேயான விரிசலுக்கு வழிவகுத்தது.
தமன்னா:
ஒவ்வொரு வருடமும் கனவுக்கன்னி நாற்காலி மாறிமாறி வந்து கொண்டிருக்கும்.இம்முறை இது இருப்பது தமன்னாவசம்.அயன்,படிக்காதவன்,கண்டேன் காதலை,நேற்று இன்று நாளை,ஆனந்த தாண்டவம் என்று இளம்வயதினரின் தூக்கத்தை கெடுத்த பெருமை இவருக்கே.தில்லாலங்கடி,சுறா என அடுத்த வருடமும் இவருக்காக காத்திருக்கிறது .பார்க்கலாம் எத்தனை நாளுக்கு தமன்னா பக்கமே தமிழ்நாடு தவழும் என்று
விஜய் :
இரண்டு படங்கள்,இரண்டுமே புஸ்.இருந்தாலும் காங்கிரசுடன் கூட்டணி,பிரஸ் மீட்டில் ஹேய் சய்லன்ஸ்,எஸ் எம் எஸ் ஜோக்,பதிவர்களுக்கு ஹிட்ஸ் ஈழத்தமிழர்களுக்கு தனிஉண்ணாவிரதம்,"இலங்கையில் போர்நிறுத்தம் உடனடியாக முடிவுக்கு கொண்டுவரப்பட வேண்டும்" என அனல் பறக்கும் பேச்சு.(நண்பர் ஒருவர் கூறினார் போர்நிறுத்தம் முடிவுக்கு வந்ததாலதானே உண்ணாவிரதமே என்று ) என்று மனிதர் கலக்கோ கலக்கு என்று கலக்கினார்.பதிவுலகை பொறுத்தவரை இவர்தான் சூப்பர்ஸ்டார்.தன்னைத் தானே வீணடித்துக் கொண்டிருக்கும் ஒருநபர்.ஏழு தொடர்தோல்விகளின் பின் திருமலை மூலம் வெற்றிகளை ருசிபார்த்த தளபதி மீண்டும் நான்கு தொடர்தோல்விகளுக்கு அதிபதி.சுராவாவது காக்குமா பார்ப்போம்....
கலாநிதி மாறன்.
இந்த வருடம் இவர் தமிழ் சினிமாவிற்கு ஆற்றியசேவை சொல்லில் அடங்காதவை.உலகம் முழுதும் பெயர்பெற்ற ஒரு தொலைக்காட்சியில் ஒரு படத்தின் ஒபெநிங் பற்றி தலைப்பு செய்தி வருமளவிட்கு இவரதுசேவை அமைந்ததென்றால் நீங்களே முடிவு பண்ணிக்கொள்ளுங்கள் இவரின் கலைத்தாகத்தை.வருடஆரம்பம்முதல் இறுதிவரை இவரது தொலைக்காட்சியில் ஏதாவது ஒரு படம் வெற்றிநடை போட்டுக்கொண்டே இருந்தது. 2010இலும் இவரின் சேவை மென்மேலும் வளர வருந்துகிறோம்."சாரி"வாழ்த்துகிறோம்....

கமல்
சினிமாவில் ஐம்பது ஆண்டு.சாதாரண விடயம் அல்ல.ஏதாவது புதிதாக செய்யவேண்டும் என்று இன்னும் வெறியிலே அலையும் தேடல்,இதுதான் உலகநாயகனாய் அவரை உயர்த்தி இருக்கிறது.தசாவதாரம் மூலம் விமர்சனங்களை சந்தித்திருந்த கமல் உன்னைப்போல்ஒருவன் மூலம் தன்னை விமர்சித்தவர்களை ஊமைஆக்கினார்.ஒரு மணி ஐம்பது நிமிடத்தில் ஒரு தமிழ்படம்,கமலின் மூலம் மீண்டும் ஒரு புதுமுயற்சி."கமல் ஐம்பது" நிகழ்ச்சி ரஜினி கமல்நட்பின் உயரத்தை காட்டியது.சாதிக்க இன்னமும் நிறைய இருக்கிறது என்னும் அவரது வேட்கைதான் அடுத்த தலைமுறைக்கு ஒரு எடுத்துக்காட்டு....

சசிக்குமார்
தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாதநபராக மாறிவருகிறார்,இவரு தொட்டதெல்லாம் ஹிட்.இயக்குனராக, தயாரிப்பாளராக, நடிகராக என தனது பரிமாணங்களை மட்டும் அன்றி தமிழ் சினிமாவுக்கும் புதியதொரு பரிமாணம் கொடுத்து கொண்டிருக்கும் மனிதர்.இந்த வருடம் இவரின் இயக்கத்தில் எந்தப் படமும் வெளிவரவில்லை.இவரின் தயாரிப்பில் வெளியாகிய பசங்க,இவரது நடிப்பில் வெளிவந்து சக்கைபோடு போட்ட நாடோடிகள் என்பன இவ்வருடத்தின் ஹிட் வரிசையில் உண்டு.அடுத்த படத்தை இயக்கிக்கொண்டிருக்கிறார்,அநேகம் 2010 இலும் இவரின் அட்டகாசம் தொடரும் என நம்பலாம்.