Friday, July 17, 2020

பாராளுமன்ற தேர்தல் 2020. (யாழ்ப்பாண கிளிநொச்சி மாவட்டம்) பற்றிய என் பார்வை.இதுக்கு முதல் எந்த தேர்தலிலும்  இந்த தடவை போல குழப்பமான மனநிலையில் தமிழ் மக்கள் இருக்கவில்லை.


சில சக்திகள்  குழப்பகரமா  இருந்தாலும்  ஒரு பக்கமாக  60 - 90 விழுக்காடு மக்கள் இருந்திருக்கிறார்கள். ஆனால் இந்தத்தடவை அப்படி ஒரு சூழல் இருக்குமா  என்று  தெரியவில்லை .

 

கடந்த பாராளுமன்ற தேர்தல் அளவுக்கு இந்தமுறை நிச்சயம் வாக்களிப்பு இருக்காது. கொரோனா பெரும் தாக்கம் செலுத்தும், அதைவிட மக்களின் சலிப்பும் கணிசமான தாக்கத்தை குடுக்கும்.

 

ஒரு சிறிய கணிப்பு.. எந்த கணிப்புகளையும் அப்படியே புரட்டிப்போடும் சக்தி மக்களின் வாக்களிப்புக்கு உண்டு. அதை தெரிந்துகொண்டேதான் பலரும் தங்கள் கணிப்பை சொல்கிறார்கள்; அப்படியான ஒரு கணிப்புத்தான் இது... 😄 

 

இந்த தடவை யாழ் - கிளிநொச்சி தேர்தல் மாவட்டத்தில்  வாக்களிக்கும் மக்கள் தொகை 240,000 - 260,000 அளவில் இருக்கலாம். சராசரி 250,000 என வைத்துக்கொண்டால் அதில் 5 சதவிகிதத்துக்கு உட்பட்ட வாக்குகளாக இம்முறை வரப்போகும் ரணில் மற்றும் சஜித் அணிகளின் வாக்குகளாக ஒரு 15,000 வாக்குகளை ( கடந்த தடவை 20,000 பெற்ற  விஜயகலா 10,000 பெற்றாலே பெரிய விடயம், கிருபா லேனஸ் 5000 அதிகம்) கழித்துப் பார்த்தால்  235,000 / 6 = ~ 39,000 வாக்குகள் ஒரு ஆசனத்திற்கு தேவைப்படலாம்.

 

கூட்டமைப்பு...  வழமையான  சமூக  வலைத்தளங்கள், புலம்பெயர் வேற்றுலகவாசிகளை தாண்டி கூட்டமைப்பு மீது  மிகப்பெரியளவில்  அதிருப்தி அலை த்திலும் உருவாகியுள்ளது. இந்த நிலையில் கூட்டமைப்புக்கு 100,000 - 120,000 வாக்குகள் கிடைக்கலாம். கடந்த தடவையை விட இது கிட்டத்தட்ட  அரைவாசி குறைய. விக்னேஸ்வரன், அங்கன், கஜேந்திரகுமார் தவிர கிளிநொச்சியில் சந்திரகுமாரும் கணிசமான வாக்கை உடைக்கும் சாத்தியம் உண்டு.


எப்படி பார்த்தாலும் 39,000*2  =78000 போதும் என்பதால் 2 + 1 (போனஸ்) = 3  ஆசனம் நிச்சயம்மேலதிகமாக பெறப்போகும் வாக்குகளே  நான்காவதை தீர்மானிக்கப்போகின்றது. கடந்த தேர்தலில் 6 வது ஆசனம் மயிரிழையில் தவறியிருந்தது; ஆனால் இந்த தடவை  5 ஆவது ஆசனமே  சாத்தியம் இல்லாத விடயம்.

 

அதற்க்கு பல காரணங்கள், எல்லாருக்கும் அதுபற்றி தெரியும். உள்வீட்டு கேவலமான சண்டை, அதிகாரத்துக்கு போட்டி, வாரிசை  நிலை நிறுத்தல் என பல. இயங்கு  நிலையில் இல்லாமல் மந்தமாக இருந்தாலும்; ஓரணி/ஒற்றுமை போன்ற காரணங்களே கூட்டமைப்பின்  மீதான  மக்களின்  நம்பிக்கையாக இருந்தது; ஆனால் அந்தக்  காரங்கள்  இன்று? மிகப்பெரியளவில் அதிருப்தி அலை உண்டாகியிருக்கிறது, அடுத்த  தேர்தலுக்குள் சரிசெய்யாவிட்டால் தேசியக் ட்சிகள்  அதிகமா  இங்கு  தலை  தூக்குவதை தடுக்க முடியாது.

 

கூட்டமைப்பிற்கு மூன்று ஆசனம் என்றால் பெரும் போட்டி 5 ''S'' களுக்கும் (சுமந்திரன், சேனாதிராஜா, ஸ்ரீதரன், சித்தார்த்தன், சரவணபவன்) இடையில் ஏற்படும் சந்தர்ப்பம் உண்டுசுமந்திரன் பெரும்பாலும் முதலாவதாக பாஸ்கும் சாத்தியம் உண்டு, எதிர் விமர்சனங்கள் வலுவாக இருந்தாலும் சுமந்திரனுக்கான வாக்கு வாங்கியும் வலுவாகவே உள்ளது. அடுத்து சித்தார்த்தனுக்கான (+தர்மலிங்கத்தாருக்கான) வழமையான வாக்குகளும் கைமாறாமல் கிடைக்கும் சாத்தியம் உண்டுமாவையில் வாரிசு அரசியல் அதிருப்தி, ஸ்ரீதரனுக்கு சந்திரகுமாரின் வாக்கு பிரிப்பு எப்படியான வேறுபாட்டை காட்டும் என்று சொல்ல முடியாதுள்ளது. கணிக்க முடியாத நபர் சரவணபவன், மிகப் பெரியளவில் வேலைத்திட்டங்கள் செய்த கூட்டமைப்பின் ஒரே நாடாளுமன்ற உறுப்பினர், இவரது வாக்குகள் மேலுள்ளவர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தாலும் ஆச்சரியமில்லை.

 

அடுத்து டக்ளஸ் தேவானந்தா... தேவையான ~39000  வாக்குகளை விட அதிகமான வாக்குகள் நிச்சயம் கிடைக்கும். 40,000 - 60,000  வாக்குகள் சாத்தியம், அதிகரிக்கவும் சாத்தியம் உண்டு. 20 - 25 ஆயிரத்துக்கு அண்மித்த மேலதிக வாக்குகளே சாத்தியம் அதிகம் என்பதால்  இரண்டாவது சீட்டுக்கள் சாத்தியம்  குறைவாகவே இருக்கும், ஒருவேளை சந்திரகுமார் கூட்டணி அமைத்திருந்தால் இருவரும் செல்லும் சாத்தியம் அதிகமாக இருந்திருக்கும். சந்திரகுமாருக்கான வாக்கு வாங்கி 15,000 - 20,000 தாண்டலாம் என்கிற அதிர்ச்சியான செய்திகள் களத்தில் சொல்லப்படுகிறது.

 

அடுத்து  விக்னேஸ்வரன்... இவர் மீதான நம்பிக்கை ஓரளவு மாற்றத்தை நோக்குபவர்களுக்கு உள்ளதென்பதை மறுக்க முடியாது. ஆனால் அது பெரியளவில் அலையாக எல்லாம் இல்லை. ஆனால் இந்தத்தடவை விக்னேஸ்வரன் பெரும்பாலும் பாராளுமன்றம் செல்லும் சாத்தியம் உள்ளது. அதற்க்கு முக்கிய காரணமாக  தமிழ் தேசிய அரசியலின் கருவேப்பிலையாக தேவைக்கு பயன்படுத்திவிட்டு தூக்கி எறியப்படும் அருந்தவபாலன் இருப்பார்.

 

தென்மராட்சி வாக்குகளில்தான் விக்கியின் வெற்றி தங்கியுள்ளது. கடந்த தடவை 18000+ தென்மராட்சி விருப்பு வாக்குகள் அருந்தவபாலனுக்கு விழுந்தவை; அவை கூட்டமைப்புக்கு விழுந்தவையா அருந்தவபாலனுக்கு விழுந்தவையா என்பதை அடுத்த உள்ளூராட்சி சபை முடிவுகள் அழுத்தமாக அருந்தவபாலனுக்கே என்று சொல்லியிருந்தன. திருமதி ரவிராஜ்சை வைத்து அனுதாப அரசியல் செய்ய கூட்டமைப்பு முயற்சித்தாலும் 10,000 வாக்குகளுக்கு மேல் அருந்தவபாலனால் விக்கிக்கு பெரும் அடித்தளம் கிடைக்கும். இதற்கு அடி போட்டுக்கொடுத்தது சயந்தனை முன்னிறுத்த விரும்பிய சுமந்திரனின் ஈகோ அரசியல், இந்த தேர்தலில் சுமந்திரன் ஜெயித்தாலும், அருந்தவபாலன் தோற்றாலும், விக்கி வெல்வார்; அருந்தவபாலனால், இது சுமந்திரனின் தோல்வியாகவே பார்க்க முடியும்.

 

தவிர  சிவாஜிலிங்கம், அனந்தி, சுரேஷ், ஸ்ரீகாந்தா என ஒவ்வொருவர் மூலமும் கிடைக்கும் வாக்குகளைக் கொண்டு; கூடவே அவருக்கு இருக்கும் கணிசமான நம்பிக்கை வாக்காலும் 30 - 50 ஆயிரம் வாக்குகளை விக்கி எட்டுவதற்காக சாத்தியம் உண்டு. இது விக்கியை பாராளுமன்றம் அனுப்பும் சாத்தியத்தை அதிகமாக்கும்; ஆனால் அருந்தவபாலன்? மீண்டும் ஒருதடவை..! 

 

அடுத்து அங்கஜன்.... கணிக்க முடியாத அடுத்த நபர். கடந்த தேர்தலில் 17,000 என இருந்தவர் உள்ளுராட்சி சபைகளில் அதிகம் ஸ்கோர் பண்ணியவர். மிகப் பெரியளவில் வேலைத்திட்டம், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு நம்பிக்கை என முன்னேறிக்கொண்டிடுப்பவர். வழமையாக டக்ளஸ்தேவானந்தா, கருணா  போன்றவர்களுக்கு கை காட்டப்படும் துரோக முத்திரைகள் எதுவுமின்றி; மிக்க குறைந்த எதிர்ப்பலை + ஒருவிதமான சொப்ட் கோனருடன் நம்பிக்கையுடன் முன்னேறி வருபவர்.  25,000 - 40,000 ஆயிரம் வரை இவரது வாக்குவங்கி அதிகரித்திருக்கலாம்; அப்படியாயின் இவர் இந்த தடவை தேசிய பட்டியலில்லாது பாராளுமன்றம் செல்லும் சாத்தியம் உண்டு. ஜனாதிபதி சொன்ன தோற்றவர்கள் தேசியப்பட்டியலில் வர முடியாது என்பதை கடைப்பிடிக்காவிட்டால்; கை சின்னத்தில் சிறுபான்மை ஒருவர் தேசியப்பட்டியலில் தெரிவாக்குவார் என்கிற டிசைனில் மற்றைய முக்கிய வேட்பாளர்  விண்ணன் பாராளுமன்றம் செல்லவும் ஒரு சாத்தியம் உண்டு.

 

அடுத்து எங்கள் செல்லக்குட்டி கஜேந்திரகுமார்...  கூட்டமைப்பில் இருந்து  முரண்டு பிடித்து வெளியேறியவர்.  கொள்கை, புரட்சி, ஒரு வாழைப்பழம் இரண்டு வாய்ப்பன் என புது அரசியல் பேசினாலும் மக்களால் கண்டு கொள்ளப்படாத 5 சதவிகிதத்தையே வாங்க முடியாமல் திணறியவர். ஆனால் சமூக வலைத்த விடலைப் பசங்களும், புலம்பெயர் வேற்றுக் கிரகவாசிகள் பலரதும் அபிமான தெரிவாக உள்ளவர்; பேஸ்புக்கில்  தேர்தல் வைத்தால் ஏழில் ஐந்து ஆசனங்களைக் கைப்பற்றும் அளவுக்கு சக்தி படைத்தவர்.

 

ஆனால் ஆச்சரியமாக கடந்த உள்ளூராட்சி தேர்தலில் 50,000 க்கும் அதிகமான வாக்குகளை வாங்கி அதிர்ச்சி வைத்தியம் கொடுத்திருந்தவர். அதற்கு முக்கிய காரணம் கூட்டமைப்பின் முதமைச்சராக இருந்த ''நன்றி மிகு'' விக்னேஸ்வரனும்; அருந்தபாலனின் தென்மராட்சி வாக்குகளும், வரமராட்சியில் உள்கட்சி கூட்டமைப்பு விரிசலும் என்பது வெளிப்படையாக தெரிந்ததுதான்.


ஆனால் இந்த தடவை அதே 50,000 என்பது சாத்தியமா என்று தெரியவில்லை; 15,000 இல் இருந்து டபிள் ஆகி 30,000 அடிக்க சாத்தியம் உண்டு. அதற்கு முக்கிய காரணமாக இருக்கப்போவது இவர்கள் இத்தனை நாள் பேசிய தேசியமும் இல்லை, தேசமும் இல்லை (அது எடுபட்டிருந்தால் எப்போதே  கூட்டமாக பாராளுமன்றம் போயிருப்பார்கள்!!), கொரோனா நேரத்துக்  களப்பணி, அதற்கு Hats off. முக்கியமாக மணிவண்ணது அணியின் களப்பணி பெரியளவில் இருந்தது; மணிவண்ணன் கறிவேப்பிலையாகி கஜேந்திரகுமார் புரியாணியாக்கப்படும் சாத்தியம் இம்முறை ஏற்பட்டுள்ளது. ஆனால் கஜேந்திரன் அவுட் ஒப் போக்கஸ் போவது உறுதி; மணி இரண்டாமிடம் வரும் சாத்தியம் அதிகம். அடுத்து சுகாஸ், முன்னணிக்கு வர இருந்த வாக்குகளில் ஒரு 2000 வாக்குகளையாவது நிச்சயம் குறைக்கும் அளவுக்கு நல்ல பெயருள்ள மனிதர். இவர்கள் தவிர பாராளுமன்ற தேர்தலில் ஏன் சீட் கொடுக்கவில்லை என்று பலரும் கேட்ட  மாநகரசபை உறுப்பினர்  பார்த்தீபனின் வேலைத்திட்டம் ஓரளவு  கணிசமான வாக்கை கூட்டலாம், மற்றப்படி மற்ற வேட்பாளர்களை மக்களை போல எனக்கும் தெரியாது.


தனிப்பட்ட முறையில் எனக்கு ஒரு விருப்பம், மணிவண்ணன் கூட்டமைப்பில் 2025 இல் உள்வாங்கப்பட வேண்டும். மற்றப்படி கஜேந்திரகுமார் அவர்கள் பாராளுமன்றம் போனால்தான் எது முடியும் எது முடியாது என்பதை அவரை பெரும் விம்பமாக 'உண்மையிலேயே' நம்பும் 'சுயலாபமற்ற' அப்பாவித் தம்பிகள் புரிந்து கொள்வார்கள்; அதற்கான சாத்தியமும் கிட்டத்தட்ட  ஏற்பட்டுள்ளது. ஆனால் அதற்க்கு 30,000 வாக்குகள் 100 சதவிகிதம் போதுமா என்று தெரியவில்லை; ஒருவேளை கூட்டமைப்பு 120000 கடந்தால் கஸ்டமாகிவிடும், கொஞ்சம் மட்டு மட்டுத்தான். சிலவேளைகளில் 40000 வந்து முழுமையான பாராளுமன்ற உறுப்பினராக போகும் சாத்தியமும் இருக்கலாம்...


6 ஆவதும்  7 ஆவதும் சீற்  கஜேந்திரகுமாரா? இல்லை அங்கஜனா?  இல்லை கூட்டமைப்பின் நான்காவதா? என்பதும்; கூட்டமைப்பின் அந்த 3  அல்லது  4 பேரும் யார் என்பதும்தான் பெரும்பாலும் டுவிஸ்ட்டாக இருக்கும்.


மற்றப்படி இந்த தேர்தல் முடிவுகள் கோட்டா அவர்கள் ஜனாதிபதியாக  இருக்கும் வரை  இலங்கை அரசியலில் ஒரு துரும்பைக்கூட ஆட்டாது; இராணுவ பிரசன்னம் பலமடங்காகலாம்.   இதில் நம்மாளுக நம்பிய இந்தியாவும் சர்வதேசமும் கொரோனாவோட மல்லுக்கட்ட; அவங்க சைட்  சைனா தலையெடுத்திட்டு இருக்கு... செம டிசைன்.... ஆனாலொன்று என்னதான் சொன்னாலும்  ரணில் மைத்திரி காலமே எமக்கான அதிக பட்ச நின்மதியாக சுதந்திரமான காலமாக நினைவில்  இருக்கும்....


எமக்கானது கிடைக்க  நிறைய தூரம் போகணும்... ஆனா எப்போது, எவ்வளவு தூரம் என்று தெரியல, இப்ப அறவே நம்பிக்கை இல்லை, முக்கியமா இப்ப இருக்கிற எவராலும்... 🙏🙏🙏


மாற்றம் ஒன்றே மாறாதது, காலம் மாறும், காட்சி மாறும், ஒருநாள் 'ஏதாவது' கைகூடும்...! இந்த 'ஏதாவதையாவது' எதிர்பார்த்துதான் ரணில், மைத்திரி, கூட்டமைப்பை நம்பியிருந்தோம்...! ஆனால் இப்போதிருக்கும் நிலையில் 'எதாவது' கூட... 🙏🙏🙏


 

0 வாசகர் எண்ணங்கள்:

Post a Comment

"கருத்துக்கள், நிறைகுறைகள், திட்டுக்கள், பாராட்டுக்கள் போன்றவற்றை கூற விரும்புபவர்கள் கீழுள்ள பின்னூட்ட பெட்டியில் பின்னூட்டலாம்; பதிவுகளை வாசிக்காமல் இடப்படும் டெம்பிளேட் பின்னூட்டங்கள் வேண்டாம் நண்பர்களே."

*******************

வடை, வாழைப்பழம், சூப்பர், கலக்கல் என மொய் வைக்க வரும் நண்பர்களுக்கு; நான் யாருக்கும் பதிலுக்கு மொய் வைக்க மாட்டேன்.(இதனால் ஏற்ப்படும் தர்ம சங்கடத்திற்கு வருந்துகின்றேன்)