Saturday, June 16, 2018

காலாவும் கலெக்ஷனும், தமிழ் சினிமா வியாபாரமும்.ரஜினி ரஞ்சித் கூட்டணியின் இரண்டாவது திரைப்படம், வழக்கமான ரஜினி படங்களுக்குரிய எதிர்பார்ப்பு காலாவுக்கு மிகக் குறைவாக இருந்தது. ப்ரோமோஷன் கபாலியோடு ஒப்பிடுகையில் மலைக்கும் மடுவுக்குமான வித்தியாசமாக இருந்தது. சமூகத் தளங்களில் தூத்துக்குடியில் ரஜினி பேசியதை திரித்து ரஜினிக்கு எதிராக பெரும் பரப்புரை நிகழ்த்தப்பட்டுக் கொண்டிருந்தது. ரஜினி அரசியலுக்கு வருவதாக அறிவித்த பிற்பாடு அரசியல் ரீதியாக ஆளும் கட்சி, எதிர்க்கட்சி, உதிரிக் கட்சி, லெட்டர்பாட் கட்சி என அனைத்துக் கட்சிகளும் பெரும் எதிர்ப்பை வெளிக்காட்டின; காலாவை தோற்கடித்து ரஜினிக்கு மக்களிடம் வரவேற்பில்லை என வெளிக்காட்ட வேண்டிய தேவையும் இருந்தது.

ஆனால் இத்தனையையும் மீறி காலா மக்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது, சிறந்த படமாக முதல்நாள் முதல் வாய்மொழி விமர்சனங்கள் கலாவுக்கு பெரும்பலமாக இருந்தது. சென்னை பாக்ஸ் ஆபீசில் காலா கலெக்ஷனில் அதகளம் பண்ணியிருக்கிறது. ஆஸ்திரேலியாவில் சாதனையை நிகழ்த்திய காலா அமெரிக்காவில் அதிகம் வசூலித்த முதல் நான்கு படங்களில் ஒன்றாக இணைந்துள்ளது (அத்தனையும் ரஜினி படங்கள்) 100 கோடிக்கு உட்பட்ட தயாரிப்பு செலவில் உருவான காலா நேரடியாக வொண்டர்பார், லைக்காவால் வெளியிடப்பட்டதால் இடைத்தரகர்கள் விநியோகிஸ்தர்கள் யாருக்கும் வழங்கப்படவில்லை.

கொமிஷன் பேஸ் அடிப்படையில் வியாபாரம் நிகழ்ந்ததால் தயாரிப்பாளர், திரையரங்கு முதற்கொண்டு கன்டீன்காரர் வரை வழமைபோல ரஜினி படமாக லாபம் கொடுத்துள்ளது. ரமலான் விடுமுறை வாரம் முடிய உலகளவில் 200 கோடிவரை காலா வசூலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதைவிட சேட்டலைட் உரிமை பெருமளவு பணத்திற்கு விற்கப்பட்டு தயாரிப்பாளர் தரப்பு காசுபார்த்துவிட்டார்கள். எப்படிப்பார்த்தாலும் காலாவால் எல்லாருக்கும் பெரும் லாபம்தான்.

ஆனாலும் இணையத்தளங்களில் ஒரு சிலர் காலா பெரியளவில் ஓடவில்லை என ரஜினிக்கு எதிரான பிரச்சாரங்களில் பூனை கண்ணைமூடி பாலைக்குடிப்பதுபோல மேற்கொண்டு இருக்கிறார்கள். இவர்களில் பெரும்விழுக்காடு திமுக, நாம்தமிழர் அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்களும்; சில விஜய் ரசிகர்களும் பெரும் முனைப்போடு ஈடுபட்டுக்கொண்டிடுக்கிறார்கள். முதற் பிரிவுக்கு அரசியல் பயமும், இரண்டாம் பிரிவுக்கு சினிமா முதலிடமும் பிரச்சினை.

தமிழ் சினிமாவின் வியாபார பாதை சிவாஜிக்கு முன்னர், சிவாஜிக்கு பின்னர் என இரண்டாக பிரிக்கலாம். அதாவது திருட்டு வீசீடி பிரச்சனை காரணமாக ஒரு திரைப்படத்தை ஒருவாரம் ஹவுஸ் புல்லாக ஓட்டுவதே பெரும் பிரச்சனையாகிய நிலையில்தான்; சிவாஜி திரைப்படம் அதிக திரையரங்கில் வெளியிடப்பட்டு வசூலை குறுகிய காலத்தில் ஈட்டும் வியாபார யுக்தியை தமிழ் சினிமாவில் வெற்றிகரமாக நிகழ்த்திக் காட்டியது. சிவாஜி 40+ திரையரங்குகளில் சென்னை செங்கல்பட்டு ஏரியாக்களில் வெளியிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து பெரிய ஹீரோக்கள் படங்கள் எல்லாம் அதிக திரையரங்கில் வெளியிடும் யுக்தியை கையாளத் தொடங்கினர்.

அதன் பின்னர் கடந்த இரண்டு மூன்று ஆண்டுகளாக ஏற்பட்டிருக்கும் பெரும் பிரச்சனை இணைய பைரஸி. இதன்மூலம் திரைப்படம் வெளியாகும் அதே நாளில் இணையத்தில் அதே திரைப்படம் வெளியிடப்படுகிறது. இது தமிழ் சினிமாவுக்கு பெரும் சவாலாக இன்றுவரையும் நிகழ்ந்து கொண்டிரு க்கிறது. உலகம் முழுவதும் ஆயிரக்கணக்கான திரையரங்குகளில் ஒரு திரைப்படம் வெளியிடப்படும்போது எங்கோ ஒரு திரையரங்க உரிமையாளரோ, ஊழியரோ இலகுவாக ஒரு திரைப்படத்தை காப்பி பண்ணி கொடுத்துவிடுவது இலகுவான காரியம். இதனை முடக்க தயாரிப்பாளர் சங்கம் எவ்வளவோ முயன்றாலும் இன்றுவரை முடியவில்லை. காலா எல்லாம் வெளியான அன்று மதியமே இலங்கையின் யாழ்ப்பாணத்திலேயே சீடிக்கடைகளில் திருட்டு காப்பி வந்துவிட்டது.

இந்த நிலையில்தான் இப்போதெல்லாம் ஒரு சினிமாவை போட்ட முதலீட்டை கரைசேர்க்க எண்ணி மிகப் பெருமளவு திரையரங்கில் வெளியிடுகிறார்கள், ஒரு வாரத்தில் வந்தால் போதுமென்ற வசூலைக் கூட இப்போது முதல் மூன்று நாட்களில் எடுத்துவிட முனைகிறார்கள். இதனால் என்ன நிகழ்கின்றது என்றால் முதல் மூண்டு நாட்களுக்கு பின்னர் பாதி திரையரங்குகள் காத்து வாங்க ஆரம்பித்து விடுகின்றன. உதாரணமாக சொல்வதென்றால் எங்கள் நகரில் ஒரு திரையில் வெளியிட்ட திரைப்படங்கள்; இப்போது மூன்று தியேட்டர்களில் ஆறு திரைகளில் வெளியிடுகிறார்கள். முதல் மூன்று நாட்களிலேயே பெரும் விழுக்காடு ரசிகர்கள் இவற்றில் பார்த்து விடுகிறார்கள். அதாவது முன்னர் 18 நாட்கள் பார்த்த எண்ணிக்கை இப்போது மூன்று நாட்களில் பார்த்துவிடுகிறார்கள்.

அதற்கு அடுத்த வார நாட்களில் படம் பெரும் விழுக்காடு விழுந்து விடுகிறது, அதன் பின்னர் திரைப்படம் நல்ல விமர்சனத்தை மக்களுக்கு கடத்தி ஆர்வத்தை தூண்டினால் மேற்சொன்ன மூன்று திரையரங்கில் சிறந்த திரையரங்கில் பார்க்கவே முனைவார்கள், இதனால் மற்றய இரு திரையரங்கமும் காற்றுவாங்க ஆரம்பித்துவிடுகிறது. இங்குதான் ஒரு படத்தினை தோல்வியாக்க வேண்டும் என்கின்ற முனைப்பில் இருக்கும் குறிப்பிட்ட திரைப்பட நடிகருக்கு எதிரானவர்கள் மற்றய திரையரங்க போட்டோக்களையும், புக்கிங் ஆகாத ஆன்லைன் ஷீட்டையும் தூக்கிக்கொண்டு படம் ஓடவில்லை என்று திரிகிறார்கள்.

இன்று காலாவுக்காக ஒரு பகுதியினர் இவ்வாறு திரிந்தால்; நாளை அவர்கள் நடிகர்களின் திரைப்படத்திற்கு இன்னும் ஓர் பகுதியினர் இதே போட்டோ, ஸ்க்ரீன் ஷாட்டை தூக்கிக்கொண்டு திரிவார்கள். இனிவரும் காலங்களில் பைரசியை தவிர்த்து; வெளியாகும் திரையரங்கங்களை குறைக்கும்வரை இதை தவிர்க்க முடியாது. இரண்டாம் வாரங்களில் எந்தப் படமாக இருந்தாலும் கணிசமான திரையரங்கை வெற்றிடங்களாக்கி, ஆன்லைன் புக்கிங்கை பச்சை வண்ணத்தில் வைத்திருந்தே தீரும். இது ஒரு திரைப்படம் வரவேற்பை பெறவில்லை என்று முடிவாகாது, அப்படிப் பார்த்தால் எந்தப் படமும் வெற்றியாகாது! அதேநேரம் இந்தமாதிரியான அதிக திரையரங்குகளில் வெளியிடும்போது கொமிஷன்பேஸ் முறையில் வெளியிட்டால் எந்த திரையரங்குகளும் நஷ்டப்பட வாய்ப்பு குறைவு. காலாவில் தயாரிப்பாளராக தனுஷ் இந்த முறையில் வியாபாரம் செய்து எவரையும் நஷடப்படுத்தாமல் எல்லோருமே கணிசமான லாபத்தைப் பார்த்திருக்கிறார்கள்.

அதே நேரம் காலவைவிட மிக அதிகம் வசூலித்த, தமிழ் சினிமாவின் அதிக வசூலைக் கொடுத்த கபாலி திரைப்படம்கூட சில இடங்களில் விநியோகிஸ்தர்களுக்கு நஷ்டத்தை கொடுத்திருக்கிறது. கபாலி மட்டும் இல்லை; ரஜினியின் எந்திரன், விஜயின் கத்தி திரைப்படம்கூட சில விநியோகிஸ்தர்களுக்கு கையைக்கடித்த திரைப்படங்கள்தான். இவை தயாரிப்பாளர் விநியோகிஸ்தர் தரப்பில் வியாபாரத்தில் ஏற்பட்ட தோல்வியே அன்றி ஒரு திரைப்படமாக இவை மூன்றும் மக்களால் பெரும் வரவேற்பு பெற்ற திரைப்படங்கள்தான்.

இதேபோல அண்மையில் பெரும் வெற்றிபெற்ற மெர்சல் திரைப்படம் 40 கோடிவரை தயாரிப்பாளர் தரப்புக்கு நஷ்டம் என்கிற பேச்சு வந்தது; கில்லி, சேது போன்ற பெரும் வெற்றி பெற்ற திரைப்படங்கள் கூட தயாரிப்பாளர்களுக்கு கையைக் கடித்த திரைப்படங்கள்தான். அவை அந்த திரைப்படங்களின் வியாபார எல்லையை தாண்டி அதிகளவில் தயாரிப்பு செலவை ஏற்படுத்திய இயக்குனர்களின் தவறு; இது ஒருபோதும் குறிப்பிட்ட திரைப்படத்தின் தோல்வியாக இருக்க முடியாது. இந்த மூன்று திரைப்படங்களும் மக்கள் கொண்டாடிய பெரும் வெற்றிப்படங்கள்தான் என்பதில் சந்தேகமில்லை.

அடுத்து மூன்று விடயங்களை பற்றி பொதுவான பார்வையில் பார்ப்போம், மூன்றுமே நிகழ்கால தமிழ் சினிமாவின் சாபக்கேடுகள்தான்.

1) பைரஸி

ஒரு திரைப்படத்தை எடுக்க பணம் மட்டுமா செலவாகிறது? மிகப் பெரும் மனித உழைப்பு, இயற்கை செயற்கை வளங்கள், வணிகம் என சினிமா என்பது விசாலமானது. ஆனால் அதனை எங்கோ இருக்கும் ஒரு சிலர் குறுக்குவழியில் சுயலாபத்திற்காக சிதைக்கிறார்கள். இது ஒரு பெரும் கொள்ளை. திரையரங்கில் கட்டணம் அதிகம், அதனால் ஆன்லைனில்/திருட்டு வீசீடியில் பார்க்கிறேன் என்பது; ஆட்டிறைச்சி விலை அதிகம் அதனால் திருடி தின்கிறேன் என்பதற்கு ஒப்பானது. என்னதான் காரணம் சொன்னாலும் பைரசியை ஏற்றுக்கொள்ளவே முடியாது. அட அதை செய்வதில் கூட சிலருக்கு என்னவொரு பெருமை? "படம் பார்க்கும்போது சத்தம் போடாம பாருங்க, கையைக் காலை ஆட்டாதீங்க, சரியா ஆன்லைன்ல தெரியுதில்லை" போன்ற புளிச்சுப்போன ஒரே வசனத்தை பெரும்பாலும் பெரிய திரைப்படங்கள் வரும் ஒவ்வொரு தடவையும் சமூகத் தளங்களில் நிலைத்தகவல்களாக காணலாம். அது பெருமை அல்ல, தாம் செய்கின்ற குற்ற உணர்வை சீர் செய்யும் கோமாளி வேடம்.

ஒரு திரைப்படத்தின் இசையமைப்பாளர், ஒளிப்பதிவாளர் சம்பளம் கோடிக்கணக்கில். எதற்காக இவ்வளவு செலவு செய்கிறார்கள்? ஒளிப்பதிவு, பின்னணி இசையின் துல்லியம், ரசிகர்கள் கொண்டாட்டம் எல்லாம் திரையரங்கு மட்டுமே தரக்கூடியது. விஸ்வரூபம் திரைப்படத்தை கமல் Dth தொழில்நுட்பத்தில் வெளியிட திட்டமிட்ட நேரத்தில் கூட இதே விமர்சனம் முன்வைக்கப்பட்டது. சரி திரையரங்கு செல்ல பணம் பிரச்சனை என்றால்; ஒரிஜினல் வெளியீடு வரும்வரை பொறுத்திருக்கவேண்டும். சினிமா ஒன்றும் பால்மா இல்லை, பிள்ளை அழுகிறது, அதனால் திருடிக் கொடுத்தேன் என சமாதானம் சொல்ல. பெரும் உழைப்பு, முதலீடு, வருமானம் உள்ள துறையை பைரஸி நாசமாக்கிறது.

இதில் நகைப்பான விடயம் என்னவென்றால் தம் ஆஸ்தான நடிகன் ;படம் வரும்போது தமிழ் ராக்கட்சை எதிர்ப்பவர்கள்; தமக்கு பிடிக்காத ஹீரோ படம் வரும்போது தமிழ் ராக்கட்ஸில் பார்ப்பேன் என சொல்வதுதான். எல்லோரும் ஒருமித்து தமிழ் ராக்கட்சை புறக்கணிப்பது என்பது சாத்தியமே இல்லாத விடயம். அதே நேரம் இவர்கள் அழிக்கப்பட வேண்டியது சினிமாவின் எதிர்காலத்துக்கு அவசியமான ஒன்று; விஷால் சொல்லிக்கொண்டே இருக்கிறார், ஆனால் எந்த முன்னேற்றமும் இதுவரை இல்லை; நிச்சயம் இதற்கான முடிவை ஏற்படுத்தியே ஆகவேண்டும்.

2) ரிவியூவெர்ஸ்.

தமிழ் சினிமாவின் நோகாமல் நோம்பு குடிக்கும் இரண்டாம் பகுதி இவர்கள். இவர்களை தங்கள் மொக்கை படத்தின் ப்ரமோஷனுக்காக பணம் கொடுத்து சில இயக்குனர்கள்/தயாரிப்பாளர்கள் ஊக்குவித்ததன் விளைவு; இன்று இவர்களுக்கு பணம் கொடுக்காவிட்டால் நல்ல சினிமாவையும் மிக கேவலமாக விமர்சித்து மக்களிடம் தவறாக கொண்டு சேர்க்கிறார்கள். பணம் கொடுத்துவிட்டால் ஆகா ஓகோ என்று புகழ்ந்து தள்ளுவார்கள். இந்த கான்சர் கட்டிகளை ஒருமித்து அனைத்து சினிமாத் தரப்பும் கை கழுவாவிட்டால் இந்த எச்சைகளுக்கு தீனிபோடுவதும் படத்தின் தயாரிப்பு செலவில் நடக்கவேண்டிய துர்ப்பாக்கிய நிலை தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாமல் போய்விடும். யூடியூப் வியூவால் வரும் பணம் போதாதென்று; இப்படி பணத்துக்காக தவறான விமர்சனம் சொல்லி தங்களை நம்பும் 'சில' அப்பாவி சப்ஸ்க்ரைபேர்ஸையும் ஏமாற்றி வயிறு வளர்க்கிறார்கள் இந்த சினிமா இடைத்தரகர்கள்.

ரசிக மனநிலைதான் இவர்களையும் வளர்த்து விடுகிறது. நீலச்சட்டை போட்ட மாறன் என்பவரைனை சினிமா ஆர்வலர்களான ஆன்லைன் பாவனையாளர்கள் அனைவரும் பெரும்பாலும் அறிந்திருப்பார்கள். அவரைனைப் பற்றிய புரிதல்கூட பெரும்பாலானவர்களுக்கு ஏற்பட்டிருக்கும். அவன் ஒரு கேவலமான மனிதர் என்பதற்கும் அப்பாற்ப்பட்ட ஒருவர் என்பதை உணர்ந்தும் தமக்கு பிடிக்காத நடிகரது படத்தை கழுவி ஊற்றும்போது அதனை ஷேர் செய்து கொண்டாடும் மனநிலைதான் அவரை எல்லாம் வயிறு வளர்க்க வைக்கிறது. இன்று கொண்டாடியவனது ஆஸ்தான நாயகன் படம் வரும்போதும் அவன் கழுவி ஊற்றிக்கொண்டுதான் இருப்பான். அப்படிக் கழுவி ஊற்றும்போது; இன்று கழுவி ஊற்றப்பட்ட நடிகனது ரசிகன் அவன் கக்கிய மலத்தை அள்ளிவைத்து அன்று ஷேர் செய்து கொண்டாடிக் கொண்டிருப்பான்.

இந்த மனநிலைதான் இந்த மலம் கக்கிகளுக்கு வயிறு வளர்க்க உதவுகிறது, இதனை உணர்ந்து அவனை (இவர்களை) புறக்கணிக்கும் வரை இந்த அயோக்கியர்கள் கல்லா கட்டிக்கொண்டே இருப்பார்கள்.

3) ட்ரக்கெர்ஸ்

இதுகூட புது வியாதிதான். டுவிட்டரில் ப்ளூ டிக் வாங்கிவைத்திருக்கும் சில ட்ரக்கெர்ஸ்தான் தமிழ் சினிமாவின் வசூல் கணக்கை தீர்மானிக்கிறார்கள். யார் இவர்கள்? இவர்களுக்கும் சினிமாவுக்கும் என்ன சம்பந்தம்? எந்த அடிப்படையில் இவர்கள் புள்ளி விபரம் சொல்கிறார்கள்? காலையில் உலகம் முழுவதும் ரிலீசான 2000 க்கும் மேற்பட்ட திரையரங்கு வசூலை எப்படி இவர்கள் மாலையில் அறிகிறார்கள்? எதன் மூலம் ட்டாக் பண்ணுகிறார்கள்? அப்படி ஒவ்வொரு திரையரங்க ரீதியாக டீட்டெயிலாக வெளியிடலாமே? அதென்ன ஒரு ட்ரக்கர் சொல்வதும் இன்னொரு ட்ரக்கர் சொல்வதும் வேறுபடுகிறது? எதையும் யாரும் ஆராய்வதில்லை; இவர்கள் சொன்னது தமக்கு சார்பாக இருந்தால் அதனை ஷேர் செய்யத் தொடங்கிவிடுவார்கள் ரசிகர்கள்.

ஒரு படத்தின் பூஜை போட்டது முதல் ட்ரக்கர்ஸ் மூலமும் ப்ரோமோஷன் நிகழும் கலாச்சாரம் இன்று ஆரம்பித்துள்ளது. படத்தின் செய்திகள், புகைப்படங்கள், ஆடியோ ரிலீஸ், விமர்சனம் என இவர்களது ப்ரோமோஷன் ஓரளவுக்கு எடுபடவும் செய்கிறது. படம் வருவதற்கு முன்னரே சென்சார் போட் ரிப்போர் பாசிட்டிவ் என ஆரம்பித்து; விமர்சனம், வசூல் ரிப்போட் என இவர்கள் ஒரு திரைப்படத்தின் ப்ரோமோஷனுக்கு உழைக்கிறார்கள். இவர்களை தயாரிப்பாளர்கள் மட்டுமன்றி நடிகர்கள் கூட தங்கள் மார்க்கெட் பிரச்சாரத்துக்கு பயன்படுத்துகிறார்கள். இவர்கள் ஒரு நடிகரை உயர்த்தியும், அவர் போட்டி நடிகரை தாழ்த்தியும் செயற்படும்போது இவர்கள் கொண்டை தெரிந்துவிடும். ஆனாலும் ரசிக மோதல்களுக்கு ப்ளூ டிக் ட்ரக்கர்ஸ் ஒரு சோஸ் என்னும் கணக்கில் பல ரசிகர்கள் இவர்கள் சொன்னதை தூக்கிப் பிடித்துக்கொள்கிறார்கள்.

சினிமாவை மக்களிடம் கொண்டு செல்ல ப்ரோமோஷன் தேவை என்பதில் மாற்றுக்கருத்தில்லை; ஆனால் அதற்கு இன்று இணைய உலகில் பயன்படுத்தும் விமர்சகர்கள், ட்ரக்கர்ஸை வளைத்துப்போட்டு செய்யும் ப்ரமோஷன் ஆரோக்கியமானதாகப் படவில்லை; அது இவர்களை பயன்படுத்த நினைக்கத்தவர்களது சினிமாவை மோசமாக காட்டி, கட்டாயப்படுத்தி தம் வலையில் விழ வைக்கும் ஆபத்தான பாதையில் கொண்டு சென்றுகொண்டிருக்கிறது.

சரியான வசூல் நிலவரங்களை தயாரிப்பாளர் திரையரங்க ரீதியில் புள்ளிவிபரங்களுடன் வெளியிடும் பட்சத்தில்தான் ஓரளவுக்கு துல்லியமான வசூல் எண்ணிக்கையை இனிமேல் கணிக்க முடியும். மற்றும்படி இவர்கள் எந்த சோஸும் இல்லாமல் சொல்லும் வேறுபட்ட குழப்பமான எண்ணிக்கைதான் இங்கு சுற்றிக்கொண்டிருக்கும். அதிக வசூல் என்று சொன்னதை ரசிகர்களும், நஷ்டம் என்று சொன்னதை எதிர் தரப்பும் காவிக்கொண்டு திரிவார்கள் . சிவாஜி திரைப்படத்திற்கு முன்னர் நாட்கணக்கில் படங்கள் ஓடும்போது வெற்றி தோல்வி தீர்மானிக்கப்பட்டது. அதுகூட பின்னாட்களில் ஒரு திரையரங்கில் வேண்டும் என்கின்ற நாட்களுக்கு ஓட்டிவிட்டு நாட்கணக்கு காட்டும் கலாச்சாரமாக மாறியது. இன்று கலெக்ஷன் அடிப்படையில் சொல்லப்படும் வசூலுக்கு எந்த ஆதாரமும் சோஸும் 50% கூட நம்பகமாக இல்லை. ஒரு குத்துமதிப்பில் பொதுவாக சொல்லிக்கொள்கிறார்கள், அதையும் இன்று இவர்கள்போல சிலர்தான் தீர்மானிக்கிறார்கள்.

தமிழ் சினிமா ஆரோக்கியமாக வளர்வதற்கு இந்த மூன்றும் ஒழிக்கப்பட வேண்டியது அவசியம்.

நன்றி

2 வாசகர் எண்ணங்கள்:

Ramesh Ramar said...

I would highly appreciate if you guide me through this. Thanks for the article…
Nice One...
Tamil News | Latest Tamil News | Tamil Newspaper

கிரி said...

ஜூன் 1 2018 முதல் ஆன்லைன் புக்கிங் Mandatory என்றார்கள் ஆனால், அதற்கான அறிகுறி கூட தெரியவில்லை.

இது சரியாக செயல்படுத்தாத வரை வசூல் பிரச்சனை தொடரும்.

இணையம் வழி முன்பதிவு என்றால், யாரும் ஏமாற்ற முடியாது. எத்தனை பேர் வந்தார்கள் என்பதை கண்டிப்பாக கூறும்.

இது வசூலையும் தெளிவாகக் கூறும். இது செயல்படுத்தப்பட்டால், தயாரிப்பாளர் சங்கமே ஒவ்வொரு தினமும் எந்த படம் எவ்வளவு வசூல் என்பதை அதிகாரப்பூர்வமாக கூறி விடலாம்.

இதன்பிறகு trackers க்கு எல்லாம் வேலையே இல்லை.

விஷால் அறிவித்ததை பார்த்தால், என்னமோ புரட்சி செய்வதை போல இருந்தது.. நான் எதிர்பார்த்தது போல எதுவும் நடக்கவில்லை, எனக்கு ஏமாற்றமில்லை ஆனால் இப்படி மாறாமல் இருக்கிறார்களே என்ற வருத்தம் இருக்கிறது.

தலைவர் பட பிரச்சனை என்னவென்றால், கடந்த 15 - 20 வருடங்களாகவே தயாரிப்பாளர்கள் வரி பிரச்சனைக்காக உண்மையான வசூலை தெரிவிக்க மறுக்கிறார்கள்.

இதனால் கண்டவெனெல்லாம் கேள்வி கேட்கும்படியாகி விடுகிறது.

அதிக வசூலை பெற்றும் இவர்கள் மொத்த வசூலை அதிகாரப்பூர்வமாக தெரிவிக்க மறுப்பதால் பல பிரச்சனைகள் ரசிகர்களுக்கு எழுகிறது.

சில நேரங்களில் அதிக வசூலும் பிரச்சனையாகிறது.. தயாரிப்பாளர்களுக்கு அல்ல.. ரசிகர்களுக்கு.

இனி இது என்றுமே மாறாது. ஜிஸ்டி போன்றவை வந்துள்ளதால், பிற்காலத்தில் ஓரளவு வெளிப்படைத்தன்மை வரும் என்று கருதுகிறேன்.

பார்ப்போம்.

நான் உண்மையிலேயே அனைவரும் நல்ல படம் என்று கூறினால் மட்டுமே திரையரங்கு செல்கிறேன். என்னைப்போல பலர் உள்ளனர். மற்ற செலவுகள் அதிகரித்து விட்டதால், திரையரங்கு செல்லவே அச்சமாக இருக்கிறது.

ஒரு படம் குடும்பத்துடன் சென்று பார்க்க குறைந்தது 1000 ருபாய் ஆகிறது. 4 பேர் 1+1 பாப்கார்ன்

உங்க கட்டுரை செம.. ஈழத்தில் இருந்தாலும் தமிழகத்தை எவ்வளவு உன்னிப்பாக கவனித்து வருகிறீர்கள் என்பதை இதன் மூலம் அறியமுடிகிறது.

உங்களுக்கு தெரியும் விவரங்கள் கூட இங்கே உள்ள பலருக்கு கிடையாது என்பது வருத்தமளிக்கிறது.

Post a Comment

"கருத்துக்கள், நிறைகுறைகள், திட்டுக்கள், பாராட்டுக்கள் போன்றவற்றை கூற விரும்புபவர்கள் கீழுள்ள பின்னூட்ட பெட்டியில் பின்னூட்டலாம்; பதிவுகளை வாசிக்காமல் இடப்படும் டெம்பிளேட் பின்னூட்டங்கள் வேண்டாம் நண்பர்களே."

*******************

வடை, வாழைப்பழம், சூப்பர், கலக்கல் என மொய் வைக்க வரும் நண்பர்களுக்கு; நான் யாருக்கும் பதிலுக்கு மொய் வைக்க மாட்டேன்.(இதனால் ஏற்ப்படும் தர்ம சங்கடத்திற்கு வருந்துகின்றேன்)