Monday, April 16, 2018

மோடி அர்ஜுனன், ரஜினி சிகண்டியா?ரஜினி அரசியலுக்கு வரப்போகும் அறிவிப்பை தொடர்ந்து மிகப்பெரும் எதிர்ப்பலை ஒன்றை ரஜினிக்கு எதிராக மிகப்பெரும் கட்சிகள் தொடக்கம், லெட்டர் பேட் கட்சிகள் வரை பெரியளவு வேலைத்திட்டத்துடன் செயற்பட்டுத்திக் கொண்டு இருக்கின்றன என்பதை நடுநிலையான எந்த அரசியல் அவதானியும் அறிவார்.

இந்த எதிர்ப்பலையை ரஜினிமீது நிகழ்த்த ஒவ்வொரு முக்கிய நிகழ்வின்போதும்  சில அமைப்புக்களையும்/ஆட்களையும் முன்னிறுத்தி மறைமுகமாக ஒரு பெரும் கட்சியே நிகழ்த்தி வருகிறது என்பது அனுமானம்; பெரும்பாலும் அது உண்மையும் கூட. இவர்கள் முன்னிறுத்திய ரஜினி எதிர்ப்புக்களில் ரஜினி கர்நாடகக்காரர், வாடகை பாக்கி போன்றன மக்களால் கண்டுகொள்ளப்படாத தோல்வியில் முடிவடைந்த கான்சப்டுகள். ரஜினி குரல் கொடுக்கவில்லை என்கின்ற வாதமும் பெரியளவில்  வெற்றி கொடுக்கவில்லை; காரணம் ரஜினி அவசியமான  விடயங்களுக்கு இப்போது பத்திரிகையாளர்களுக்கும் டுவிட்டரிலும் கருத்தையும் விமர்சனத்தையும் முன்வைத்து வருகிறார். ரஜினி மக்களுக்கு எதையும் செய்யவில்லை என்பவர்களுக்கும்  காவலர்கள் ஆதாரத்துடன் தக்க பதிலடி கொடுத்து வருகிறார்கள். 

இவர்கள் தற்போது கையில் வைத்திருக்கும் ஒரேயொரு நாகாஸ்திரம் ரஜினியை மோடி இயக்குகிறார் என்பதுதான். இந்த வாதம் எதன் அடிப்படையில் இவர்களால் நகர்த்தப்படுகிறது? இதன் உண்மைத்தன்மை என்ன? இந்த வாதம் எதிர்தரப்புக்கு வெற்றியை கொடுக்குமா? போன்றவற்றை இந்தப் பதிவின்   ஊடாக விரிவாக நோக்குவோம். 

ரஜினியும் மோடியும் நண்பர்கள் என்பதால் ரஜினி மோடிக்கு ஆதரவா? ரஜினியை மோடி குறைந்தது இரண்டு தடவைகள் சந்தித்திருப்பாரா? அப்படியானால் மோடி ஆதரவாளரா ரஜினி? ரஜினிக்கு மோடியை விட மிகமிக நெருக்கமானவர் பா.சிதம்பரம், இருவீட்டு நிகழ்வுகளுக்கும் இருவரும் கலந்துகொள்ளும் அளவுக்கு நெருக்கம், அப்படியென்றால்  ரஜினி காங்கிரஸ் ஆதரவாளரா? இறுதி திமுக ஆட்சிக்காலத்தில்  கருணாநிதியுடன்   ரஜினி அலங்கரிக்காத மேடையை விரல் விட்டு எண்ணிவிடலாம், ஸ்டாலின் மரியாதை நிமித்தம் என ரஜினியை வீடுதேடி சந்தித்திருக்கிறார், அப்படியென்றால் ரஜினி என்ன திமுகவா? மோடி மட்டுமல்ல முன்னாள் பிரதமர்கள் நரசிம்மராவ், வாஜ்பாய் கூட ரஜினியை சந்தித்திருக்கிறார்கள்.

காரணம் சிம்பிள்; ரஜினி தமிழகத்தின் மக்கள் பலமுள்ள ஒரு பவர்புல் ஐக்கான். ரஜினி  அரசியலுக்கு வரும் பட்சத்தில் தங்கள் மத்திய அரசுக்கு சார்பாக ரஜினியை தமிழகத்தின் பிரதிநியாக நட்புறவுடன் இணைந்து பணியாற்றவே  அனைவரும்  விரும்பினார்கள். இதன்மூலம் எதிர்ப்பு அரசியல் நிகழ்த்தும் தமிழகத்தை தேசிய நீரோட்டத்தில் இணைக்க நினைத்தார்கள். ஆனால் ரஜினி எப்போதும் எவருக்கும் இசையவில்லை. நரசிம்மராவ் தமிழகத்தின் பெரும் இடைவெளியை ரஜினியை கொண்டு நிரப்ப 1996 களில்  முயற்சித்தார், ரஜினி புன்னகையுடன் மூப்பனாரை  கைகாட்டிவிட்டு கடந்துவிட்டார். சிறந்த இந்தியருக்கான விருதை ரஜினிக்கு NDTV விருதுவழங்கும் நிகழ்வில் ரஜினிக்கு கொடுத்தது காங்கிரஸ் மன்மோகன் சிங்தான்; ஜப்பானில் பாராளுமன்றில் ரஜினி பற்றி பேசியதும் அவர்தான்.  வாஜ்பாய், சோ என பலரும் ரஜினியை அரசியலுக்கு உந்தினார்கள், ரஜினி தொடர்ந்து  மௌனமே கடைப்பிடித்தார். 

மோடி வருகிறார், நாடே மோடியின் மீது பெரும் நம்பிக்கையுடன் காத்திருக்கிறது; ஆனால் மோடி பெரும் நம்பிக்கையுடன் ரஜினி வீட்டுக்கே வருகிறார், ரஜினியின் மௌனம் தொடர்கிறது. ரஜினி பிஜேபியின் பினாமியாக அல்லது கூட்டாளியாக கால்பதிக்க நினைத்திருந்தால் மோடி பிரதமர் வேட்பாளராக முன்னின்றபோது செயற்பட்டிருப்பார்; ஆனால் ரஜினி அதை செய்யவில்லை, செய்யவும் மாட்டார், ஏனென்றால் ரஜினிக்கு மக்கள் எண்ண ஓட்டம் நன்றாகவே தெரியும்!! இத்தனை பெரிய ரசிகர் படையை ஏமாற்றி பாஜாக்காவுக்கு முன்னிற்க ரஜினிக்கு எந்த அவசியமும் இல்லை.

ரஜினிமீது ரெய்ட்  பாயும் என்பதெல்லாம் நகைப்புக்குரிய வாதம். 1996 இல்  ஜெயலலிதாவை வீட்டுக்கு அனுப்பிய ரஜினியை மத்திய பாஜாகாவுடன் கூட்டணியில் இருந்த போதே ஜேவால் தொட்டுக்கூட பார்க்க முடியவில்லை; கருணாநிதியை கைது செய்த ஜேவால் ஏன் ரஜினியை ஒப்புக்குகூட ஒரு கேஸ் போட  முடியவில்லை? என்றும் ரஜினியை எந்த ரெய்ட்ம் எதுவும் செய்யமுடியாது, ரஜினி நிறத்தில் வேண்டுமானால்  பிளாக் ஆக இருக்கலாம், ஆனால் அவர் நடத்தையில்  மிஸ்டர் வைட் என்பது எல்லோர்க்கும் தெரியும்.

ஆர்கே நகர் இடைத்தேர்தல் அறிவிக்கப்ப்டுகிறது, பாஜாகா வேட்பாளராக கங்கை அமரன் அறிவிக்கப்படுகிறார், ரஜினி வீட்டுக்கு கங்கை அமரன் வந்து ரஜினியுடன் நிற்கும் புகைப்படம் மீடியாவில்  வெளியாகிறது. ரஜினி கங்கை அமரனுக்கு ஆதரவு எனும் புரளி பரவப்படுகிறது. எந்த புரளிக்கும் பதில் சொல்லாத ரஜினி "இந்த இடைத்தேர்தலில் எந்த கட்சிக்கும் ஆதரவில்லை" என்கின்ற நிலைப்பாட்டை தெரிவிக்கிறார், இத்தனைக்கும் ரஜினி அரசியலுக்கு வரும் எந்த தடயமும் அப்போது இல்லை, பிஜேபி பின்னுக்கு நிற்கிறது என்கிற வாதங்களும் இல்லை; ஆனாலும் ரஜினி மறுத்து விடுகிறார். ரஜினி வழமையான ஏனைய  புரளிகள் போல இதையும் கடந்து சென்றிருக்கலாம், ஆனால் செல்லவில்லை; காரணம் தனக்கும் பிஜேபிக்கும்  எந்த தொடர்பும்  இல்லை என்பதை மக்களுக்கு தெளிவாக அவர் தெரிவிக்கவே விரும்பினார்.  


பிஜேபி கூட்டணியாக மக்கள் நலக் கூட்டணியை நடுநிலையாளர்கள், ஊடகங்கள், பெரும்பாலானஇணைய  ஜீவிகள் நேர்மறையாக நோக்கியபோதுகூட ரஜினி மறைமுகமாகவேனும் வாய்ஸ் கொடுக்கவோ கைகாட்டவோ இல்லை. ஏன் இதுவரை திமுக, அதிமுக முதற்கொண்டு தேமுதிக, மதிமுக, பா.ம.க, விடுதலை  சிறுத்தைகள், கம்யூனிஸ்ட்,  நாம் தமிழர் (2014 பிஜேபி, அதிமுக ஆதரவு பிரச்சாரம்) வரை அத்தனை கட்சிகளும் ஒரு தடவையேனும் இன்று காவி  எனச் சொல்லும்  பிஜேபியுடன் கூட்டணி வைத்து குலாவியவைதான். ஏன் மோடி கருணாநிதியை  சந்தித்தபோது அடுத்த கூட்டணி பிஜேபி கூடவோ என்கிற சந்தேகம் திமுக ஆதரவாளர்களிடம் இருந்தது. ஆனால் ரஜினி இதுவரை ஒரு தடவையேனும் பாஜாக்காவுக்கு ஆதரவாக  கைகூடக் காட்டவில்லை. பிஜேபியுடன்  கூடிக்  குலாவியவர்கள் இன்று சாடுகிறார்கள் ரஜினி பிஜேபியின் கருவியாம், முரண்நகை. 
மோடியின் டெமோன்ஸ்ட்ரேஷன் 500,1000 ரூபாய் பணமுடக்கம் இந்தியா முழுவதும் பெரும் வரவேற்பை பெற்றது. உலகம் முழுவதும் கூட மோடியின் மூவ் மிகத் தைரியமான செயற்பாடாக பாராட்டைப் பெற்றது. இதன் மூலம் பெருமளவு கறுப்புப்பணம் ஒழியும், வரி ஒழுங்காக கட்டுப்படும் என்கின்ற நம்பிக்கை ஏற்பட்டது.  ஊழலை ஒழிக்க நினைக்கும், வருமானவரியை ஒழுங்காக கட்ட நினைக்கும் எவரும் இதை வரவேற்கவே செய்தனர்; ரஜினியும் வரவேற்றார்.  கமல்ஹாசன் கூட வரவேற்றார், ஏன் இன்னும் எத்தனையோ  எத்தனை செலிபிரிட்டீஸ் வரவேற்றனர். 

தைரியமாக இந்த திட்டத்தை அறிவித்த மோடி அவர்கள் அதனை செயற்படுத்தும் விதத்தில் சரியான அணுகுமுறையை செய்யத் தவறியிருந்தார். பெரும் சனத்தொகை உள்ள நாட்டில், ஊழல் பெருகியுள்ள சூழ்நிலையில் முழுமையான  திட்டமிடலுடன் இந்த திட்டத்தை செயற்படுத்த நினைத்திருந்தால்; அது வெளியே கசிவதற்கான சாத்தியம் அதிகமே. இப்படியான பிரச்சனைகள் வரும் என்று தெரிந்திருந்தும் மோடி இதனை செயற்படுத்திய துணிவு பாராட்டத்தக்கதே. அதேநேரம் சாதாரண  பொதுமக்களுக்கு நிறையவே சங்கடங்களை இந்த திட்டம் உண்டாக்கியது. ஏடிஎம்களில் பணமில்லை, மக்கள் கூட்டம் ஏடிஎம் வாசலில் நீண்ட வரிசையில் தவம் கிடக்கவேண்டிய சூழல் என சில நாட்கள் மக்கள்  பெரும் அவதிப்பட்டனர்.  

ஆனால் இந்த நடைமுறை சிக்கல்கள் திட்டம் அறிவித்த பிற்பாடே நிகழ்ந்தது; ஆனால் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் திட்டம் அறிவித்த உடனேயே வழங்கப்பட்டன. இங்கே தமிழ் நாட்டு அரசியல் வரட்ச்சிகளோ எல்லோரையும் விட்டுவிட்டு ரஜினி வழங்கிய காம்ப்ளிமென்ட் டுவிட்டையே இன்னமும் பிடித்து தொங்கிக்கொண்டு இருக்கிறார்கள்; காரணம் இவர்களுக்கு தேவை ரஜினி பிஜேபி பினாமி என ஒரு நிறுவல்; ஆனால் பாருங்க  இங்கு அவர்கள் தேற்றமே தவறு. 

ரஜினி டெமோஸ்டேஷனை வரவேற்றது ரஜினியின் ஊழல், கறுப்புப் பண எதிர்ப்பின் மீதான ஈடுபாடு மட்டுமே; அது பிஜேபி, மோடி ஆதரவு என நினைத்தால் அது அவர்களது முட்டாள்தனம்.  2011 இல் அண்ணா ஹசாரேவின் ஊழலுக்கு எதிரான உண்ணாவிரதப் போரினை முழுமையாக ஆதரித்தவர் ரஜினி. சென்னையில் மூன்று நாட்களுக்கு தனது ராகவேந்திரா கல்யாண மண்டபத்தை  இலவசமாக அண்ணா ஹசாரேவின் குழுக்களுக்கு போராட்டக் களமாக கொடுக்க முன்வந்தவர் ரஜினி. அண்ணா ஹசாரேவின் ஊழல் எதிர்ப்பைத்தான் ரஜினி தீவிரமாக ஆதரித்தார், அண்ணா ஹசாராவையோ, அவர் இயக்கத்தையே இல்லை என்பதை புரிந்துகொள்ளுங்கள். 

ஜல்லிக்கட்டு, காவிரி, ஸ்டெர்லைட், ஐபிஎல் எதிர்ப்பு போராட்டம் என ரஜினி தீவிரமான, தேவையான அனைத்து பிரச்சனைகளுக்கும் தன்   குரலை பதிவு செய்துதான் இருக்கின்றார். அந்த குரல் அனைத்தும் மக்களின் சார்பாக, மக்களின் பாதுகாப்பாக, முன்னெச்சரிக்கையாக, சாத்தியப்பாடாக, தேச நலன் சார்ந்ததாக இருப்பதுதான் இங்கு பலருக்கும் பிரச்சனை.  தீவிர போக்காக, மத்திய அரசாங்கத்தை முழுமையாக எதிர்ப்பதாக இல்லை என்பது இவர்கள் ரஜினி மோடி ஆதரவு என பிரச்சாரம் மேற்கொள்ள உதவுகிறது. 

ஒரு வன்முறை திட்டமிட்டு அரங்கேறுகிறது, அங்கு வன்முறையில் ஈடுபட்டவர்கள் காவலுக்கு நிற்கும் போலீசை கண்மண் தெரியாமல் தாக்குகிறார்கள், ரஜினி இதனை எதிர்த்து பதிவு செய்கிறார். உடனே ரஜினி காவியாகிவிட்டார், பி.ஜே.பி பினாமியாகிவிட்டார். ஏன் இதற்கு முன்னர் போலீஸ் செய்த தவறான சம்பவங்களுக்கு ரஜினி கருத்து வைக்கவில்லை என்று கதறுகிறார்கள், போலீஸ் முன்னர் செய்த அடாவடிகளுக்கு இந்த போலீஸ் மீதான தாக்குதல் சரியென்று வாதாடுகிறார். இந்த முட்டாள்தனமான விவாதத்தின் மூலம்  ரஜினி எதிர்ப்பு  மட்டுமே!

போலீஸ் தவறு செய்யவில்லையா? செய்திருக்கிறார்கள், மாதம் எங்காவது ஒரு தவறு நிகழ்ந்துகொண்டுதான் இருக்கின்றது, இதற்கு ஒவ்வொன்றுக்கும்  எதிராக கருத்து சொல்லிக்கொண்டே இருக்க முடியுமா? என்ன தீர்வு? சிஸ்டம் சரியில்லை, எல்லாவற்றையும் மாதத்தனும். அதை செயலில் செய்யவே அரசியலுக்கு வருகிறார் என்கிறார் ரஜினி. அதே நேரம் போலீஸ் சில இடங்களில் தவறு செய்திருக்கிறார்கள் என்பதற்காக போலீசை கண்மண் தெரியாமல் தாக்குவதை ஏற்றுக்கொள்ள முடியுமா? மக்களின் பாதுகாப்பு நம்பிக்கை ஒருநாள் போலீஸ் நாட்டில் இல்லை என்றால் எப்படி இருக்கும் என்று  தெரியும். போலீசை தாக்குபவர்களுக்கு ஆதரவு கொடுப்பதும், முளையிலேயே கடும் தண்டனை கொடுத்து கிள்ளி எறியாமல் விடுவதும்  மக்களின் பாதுகாப்பு நம்பிக்கையை பாரதூரமாக  கேள்விக்குறியாக்கும். 

இதை அன்றைய கலவர பதட்ட நேரத்தில் சொல்ல எவருக்கும் துணிவு வரவில்லை, ரஜினி மட்டுமே சொல்கிறார். வழமைபோல ரஜினி எதிர்ப்பு மனநிலைகள் கடும் எதிர்ப்பை தெரிவிக்க பல நடு நிலையாளர்களது ஆதரவு ரஜினிக்கே இருக்கிறது. அன்று ரஜினியை கடுமையாக எதிர்த்த சீமான் மூன்று நாட்களுக்கு பின்னர் தம் கட்சியினர் போலீசை  தாக்கவில்லை, யாரென்றாலும்  போலீசை தாக்கியது தவறு, அது  ஏற்றுக் கொள்ள முடியாதது என அந்தர் பல்ட்டி ஸ்டேட்மென்ட் அடித்தார். ஆனால் ரஜினி தான் சொன்ன சொல்லில் இருந்து பின்வாங்கவில்லை, மக்கள் மன்றத்திற்கு மத்திய சென்னை நிர்வாகிகள் தெரிவுக்கு ஆர்வம் காட்ட தொடங்கியிருந்தார். 

இதில் ரஜினியை எப்படியாவது மக்களிடம் எதிர்மறையாக  சிக்க வைக்க வேண்டும் என்கின்ற முனைப்பில் பாரதிராஜா தலைமையில் சில எதிர்பார்க்கப்பட்ட பட்டாளம் ஒன்று கூட்டமாக ரஜினியை நோக்கி வசை  பாடியது. ரஜினியை பாஜாகா இயக்கியிருக்கிறது என வாய்சவாடல் விட்டது. போலீசை தாக்குபவர்களுக்கு எதிராக சட்டம் இயற்றவேண்டும் என ரஜினி சொன்னதுகூட மத்திய அரசு சொல்லித்தான் என அர்த்தம் கற்பிக்கும் அளவுக்கு அரசியால் வரட்சி அவர்களுக்கு! இதை எதற்காக மத்திய அரசு ரஜினியை கொண்டு சொல்லவேண்டும்? ரஜினிசரி  மத்திய அரசு சொன்னால்கூட இதை ஏன் சொல்ல வேண்டும்? முன்னமே சொல்லியிருக்கிறேன், மிஸ்டர் வைட் ரஜினியை ஜேவாலேயே  ஒன்றும் செய்ய முடியவில்லை; தினகரனையே ஒன்றும் பண்ணமுடியாத மோடியின் ரெய்ட் குழு ரஜினியை எதுவும் செய்யமுடியாது. ஆனாலும் இவர்கள் ரஜினி மோடி சொல்லித்தான் டுவிட் போட்டார் என  கதறியே ஆகணும், காரணம் அரசியல் வரட்சி. 


மோடி அல்ல, ராகுல் காந்தி பிரதமாக இருந்தாலும் ரஜினியின் நிலைப்பாடு இதுதான். தமிழக மக்கள் நலன் , மாநில நலன்  எதையும் மத்திய அரசை எதிர்த்து முரண் அரசியலால் நிகழ்த்த முடியாது என்பது ரஜினிக்கு நன்றாகவே தெரியும். அந்த மத்தி என்பது மோடியாக, ராகுலாக,  யாராக இருந்தாலும்!. நதிநீர் இணைப்பு முதற்கொண்டு, நீர் முகாமைத்துவ எழுச்சி,  தொழில் வளர்ச்சி,  ஊழலற்ற நிர்வாகம் என மத்திய அரசின் தேவை ரஜினியின் மாநில அரசுக்கு தேவை. நதிநீர் இணைப்பு, நீர் மேலாண்மையால் மட்டுமே காவிரிப் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வுகாண முடியும், மக்களுக்கு தீங்கு விளைவிக்கும் திட்டங்களை நிறுத்தல், புதிதாக தொடங்காமை, முகாம்களில் உள்ள ஈழத்தமிழர் குடியுரிமை என எதையும் மத்திய அரசின் சார்பு இல்லாமல்  நிகழ்த்த முடியாது. அந்த மத்திய அரசாங்கம்  மோடியோ, ராகுலோ,  எவரோ!

இந்த ரஜினியின் அரசியல் வழியை, தமிழக முன்னேற்ற திட்டங்களை ரஜினி கட்சியை அறிவித்து மக்கள்முன் கொண்டு செல்லும்போது, இளைஞர்கள் புரிந்துகொள்ளும்போது; ரஜினியின் அரசியலை எதிர்க்கும் திருட்டுக்கு கும்பல்களுக்கு உண்மையில் தலை சுற்றத்தான் போகிறது. அந்த சுற்றல் ரஜினி அலை சுத்தி சுத்தி தமிழகம் எங்கும் சுழற்றி  அடித்து கோட்டையில் ரஜினியை கரை சேர்க்கும் வரை நிற்காது. எதிரணியினர்  தம் இருப்பைக் காப்பாற்ற நிறைய சதித்  திட்டங்கள் நிகழ்த்தவேண்டி இருக்கும். செய்தியை திரிக்க ஊடகம், தவறாக ரஜினியை சித்தரிக்க எக்ஸ் பிரபலங்கள் என  நிறைய கதறவேண்டி இருக்கும். ஒரு கட்டத்தில் ரஜினி பிஜேபி வழி  இல்லை என்பது மக்களுக்கு புரியும் நிலை உருவாக்கியே  தீரும், அந்த நேரத்தில் இன்று ரஜினி பீ ஜேபி பினாமி என்பவர்கள் ரஜினியை ஆதரிப்பார்களா என்ன? புடலங்காய், இன்னும் ஏதாவதொரு உப்புச்சப்பில்லாத காரணத்தை தூக்கிக்கொண்டு ரஜினி எதிர்ப்போடு வரட்சி அரசியல் செய்துகொண்டுதான் இருப்பார்கள். 

பிஜேபி எனும் அர்ஜுனன் பின்னின்று அம்பெய்ய; முன்னிற்கும் சிகண்டி அல்ல ரஜினி! துஷ்டர்கள் அத்தனைபேரும் முன்னின்று எதிர்க்க, தனி ஒருவனாக சிம்ம சொப்பனமாக நின்று தேவர்களையும், இந்திரனையும் ஆச்சரியப்படுத்திய அபிமன்யூ!!  எத்தனை சக்கரவியூகம் அமைத்து எதிர்த்தாலும் பொடிப்பொடியாக்கும் அபிமன்யூவாக ரஜினி இருப்பார். மகாபாரதத்தில் அபிமன்யூ சக்கரவியூகம் உடைத்து உட்செல்ல ஜெயத்திரதன் மீண்டும் வியூகத்தை இணைத்து ஏனைய பாண்டவர் படையை உட்செல்ல முடியாமல் செய்திருப்பான்; ஆனாலும் உள்ளே பெரும் பெரும் கௌரவர்படைத்  தலைவர்கள்  ஒருநாள் முழுவதும் வரலாறு காணாத போரை அபிமன்யூவிடம்  கண்டு, தோற்று; பின்னர் அவன் மூர்ச்சையில் இருக்கும்போது அவனைக் கொன்றிருப்பார்கள். ஆனால் இங்கே சக்கர வியூகத்தை தகர்த்து உட்செல்லும் ரஜினிக்கு பின்னிற்கப்போகும் ஒவ்வொரு காவலர்களும் அபிமன்யூக்களே!! உருவாக்கப்படும் வியூகங்கள் உடைக்கப்பட்டுக்கொண்டே இருக்கும், ரஜினியும் காவலர்களும் தமிழக  மக்களின் நலனுக்காக  இலக்கை அடைந்தே தீருவர்...!  

காத்திருந்து பாருங்கள் !!


நன்றி, வணக்கம் 

1 வாசகர் எண்ணங்கள்:

arul said...

super 100% truth nanba

Post a Comment

"கருத்துக்கள், நிறைகுறைகள், திட்டுக்கள், பாராட்டுக்கள் போன்றவற்றை கூற விரும்புபவர்கள் கீழுள்ள பின்னூட்ட பெட்டியில் பின்னூட்டலாம்; பதிவுகளை வாசிக்காமல் இடப்படும் டெம்பிளேட் பின்னூட்டங்கள் வேண்டாம் நண்பர்களே."

*******************

வடை, வாழைப்பழம், சூப்பர், கலக்கல் என மொய் வைக்க வரும் நண்பர்களுக்கு; நான் யாருக்கும் பதிலுக்கு மொய் வைக்க மாட்டேன்.(இதனால் ஏற்ப்படும் தர்ம சங்கடத்திற்கு வருந்துகின்றேன்)