Tuesday, April 3, 2018

ரஜினிகாந்த் என்னும் நான்......!

(ரஜினி ரசிகர்களுக்கும், ரஜினியை அரசியலில் ஆதரிக்கலாமா என்கின்ற குழப்பத்தில் இருப்பவர்களுக்கும், ஏதோ ஒரு காரணத்தால் ரஜினியை வேண்டாம் என நினைத்தவர்களுக்கும், பொதுவானவர்களுக்குமே இந்தப் பதிவு. ரஜினியை பிடிக்காதவர்கள், மாற்றுக் கட்சிக்காரருக்கு இந்த பதிவு, எரிச்சலை தரலாம்)

தமிழகம் கடந்த 50 ஆண்டுகளின் பின்னர் திராவிடத்திற்கான மாற்று அரசியல் ஒன்றை வரவேற்க தயாராக இருப்பதுபோன்ற தோற்றப்பாட்டை நம்பகமாக விதைத்துக்கொண்டு இருக்கிறது ரஜினியின் ஆன்மீக அரசியல் அறிவிப்பு. ஆன்மீக அரசியல், ரஜினிகாந்த்தால் திட்டமிட்டோ, பேசும்போது எதேச்சையாகவோ 2017 மார்கழி 31 அன்று ரசிகர்கள் மீடியாக்கள் முன்னிலையில் கூறப்பட்ட வார்த்தைதான் இன்று தமிழக அரசியலின் விரும்பியோ விரும்பாமலோ பேசுபொருள். பெரும் கட்சிகள் முதல் சிறு கட்சிகள் வரை ரஜினியை கண்மூடித்தனமாக எதிர்க்கும் காட்சிகளும் கோலங்களும் தினமும் அரங்கேறிக்கொண்டுதான் இருக்கின்றது. குறிப்பாக திராவிடக் கட்சிகள், அதிலும் திமுக தமது இருப்பிற்கு ஆபத்து என கண்மூடித்தனமாக நம்பி; நல்ல போதையில் இருப்பவன் "எனக்கு போதையில்லை" என திரும்ப திரும்ப சொல்வதுபோல திராவிடத்தை யாரும் அழிக்க முடியாது என சொல்லிக்கொண்டே கடும் ரஜினி எதிர்ப்பை நேரடியாகவும் மறைமுகமாகவும் நிகழ்த்த ஆரம்பித்திருக்கிறார்கள்.


திராவிடம் என்பது தோற்கடிக்க முடியாததா? திராவிடம் என்பது தமிழகத்து மக்களால் கொள்கைப்பிடிப்போடு ஏற்றுக்கொள்ளப்பட்ட விடயமா? திராவிடத்தை ஆன்மீக அரசியல் வெற்றிகொள்ள முடியுமா? என்பதை ஆராய முதலில் திராவிடம் தமிழகத்தில் மக்களிடத்தில் எந்த வடிவத்தில் தாக்கத்தை நிகழ்த்த தொடங்கியது, இன்று அதன் தாக்கம் எந்தளவில் உள்ளது என்பதையும் பார்ப்போம். திராவிடம் என்பது ஈவி.ராமசாமி அவர்களால் ஆரம்பிக்கப்படட இயக்கத்தை அண்ணாத்துரை கட்சியாகப் பரிமானித்தார். மத்திய காங்கிரசின் காமராஜரின் தமிழக ஆட்சியை ஆட்டம்காணச் செய்து அண்ணாத்துரை தலைமையாலான திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சியை 1967 இல் கைப்பற்றியது. இது திராவிட கொள்கைக்காக கிடைத்த வெற்றியா? இல்லை. இது எம்.ஜி.ஆர் என்னும் திரைக் கவர்ச்சிக்கு கிடைத்த பெருவெற்றி. சற்று பின்னோக்கி செல்லுங்கள், 1949 இல் அண்ணாதுரையால் ஆரம்பிக்கப்பட்ட திமுக 1957 தேர்தலில் இண்டிபெண்டண்ட்டாக 14 % வாக்குகளை மாத்திரமே பெற்றிருந்தது. அதுகூட சினிமா ஊடகத்தால் அண்ணாத்துரை, கருணாநிதி, என்.எஸ்.கிருஷ்ணன், சிவாஜி, எம்ஜிஆர், கண்ணதாசன் போன்றோர்களால் உண்டாக்கப்பட்டதே.


எம்.ஜி.ஆர் சினிமாக்கள் தாக்கம் மக்களிடம் அதிகரிக்க 1962 தேர்தலில் வாக்கு வீதம் 27 ஆக அதிகரிக்கிறது, திமுகவால் வெற்றிப்பெற முடியவில்லை. 1967 ஆம் ஆண்டு தேர்தல் வருகிறது, இம்முறைதான் திமுக முதல் முதலாக அண்ணாதுரை தலைமையில் வெற்றிபெறுகிறது. இந்த 1962 - 1967 க்கு இடைப்பட்ட காலப்பகுதிகளில் எம்.ஜி.ஆர் தமிழகத்தின் மிகப்பெரும் சினிமா கவர்ச்சியாக மக்களிடம் கொண்டு சேர்க்கப்பட்ட காலம். எம்.ஜி.ஆர் திரை வரலாற்றின் மிகப்பெரும் வெற்றிப் படங்களான; மக்கள் கொண்டாடித்தீர்த்த எங்க வீட்டு பிள்ளை, ஆயிரத்தில் ஒருவன், படகோட்டி, அன்பே வா முதலான பல திரைப்படங்கள் எம்ஜிஆர் எனும் நாயகனை தம் வீட்டில் ஒருவனாக மக்கள் பார்க்கும் அளவுக்கு உயர்த்தியது. அன்றைய திமுகவின் வெற்றிக்கும் எம்.ஜிஆர் என்னும் பெரும் கவர்ச்சியே முக்கிய காரணமாயிற்று.

இதனை தி.மு.கவில் இருந்து பிரிந்து அதிமுகவை தனித்து ஆரம்பித்த முதல் தேர்தல் வெற்றியிலேயே எம்.ஜிஆர் நியாயப்படுத்தி இருப்பார். ஆட்சியில் இருந்த திமுக கூட்டணி வெறும் 48 தொகுதிகளை மாத்திரமே பெற்றது. கடந்தமுறை பெற்ற 52% இல் இருந்து 24% வாக்குகளை மட்டுமே பெறமுடிந்தது. எம்.ஜி.ஆர் இருக்குமட்டும் திமுக மீண்டும் தலையெடுக்கவே முடியவில்லை. ஆனாலும் பின்னாட்களில் காங்கிரஸ் கட்சியின் வீழ்ச்சியால்; உலகின் பொதுவான இரட்டைக்கட்சி போட்டிநிலை கோட்பாட்டில் திமுக, அதிமுக என இரண்டும் இன்றுவரை மாறிமாறி ஆட்சிக்கு வந்தன. இதில் திராவிட கொள்கையின் அஸ்திவாரமாக திமுகவின் வெற்றி என்பது; எம்.ஜி.ஆர் மறைவையடுத்த அதிமுகவின் பிளவின் வெற்றிடத்தில் மீண்டும் உதயமானது. அந்த ஆட்சி டிஸ்மிஸ் ஆகவே அடுத்த தேர்தலில் திராவிர முன்னேற்றக் கழகம்; அதிமுக + காங்கிரஸ் கூட்டணியிடம் படுதோல்வியடைந்தது. மீண்டும் எம்ஜிஆர் + ஜெயலலிதா திரைக்கவர்ச்சியே அங்கு முன்னின்றது.

அதன் பின்னர் 1996 இல் ஜெயலலிதாவின் சொத்துக்குவிப்பு, அராஜக ஆட்சி எதிரொலியும்; ரஜினி மும்மரமாக அரசியலில் ஈடுபட்டு மூப்பனார் கருணாநிதி கூட்டணியில் மக்கள் விழிப்புணர்வும் கொடுத்த வெற்றிதான்; திமுகாவின் மிகப்பெரும் வெற்றியாகவும், இறுதியான மெஜோரட்டி இடங்களை கைப்பற்றிய தேர்தலுமாகவும் இன்றுவரை இருந்து வருகிறது!. இதனடிப்படையில் திராவிடக் கொள்கையின் பின்னால்தான் மக்கள் என்பது; திமுக தம்மை முன்னிறுத்த வைக்கும் வாதமேயன்றி நிஜமல்ல என்பதை இலகுவாக அறிந்து கொள்ளலாம். கருணாநிதி என்கின்ற ஆளுமை இருக்கும் நிலையிலேயே திமுகவின் நிலையான வாக்கு வங்கி 25 % தான் எனும் நிலையில்; இன்று அது இன்னமும் ஆட்டம் காணும் சாத்தியம் அதிகமாகவே உண்டு. நில அபகரிப்பு, மண் கொள்ளை, ஊழல் என மக்களுக்கு பொதுவாகவே திமுகமேல் நல்ல அபிப்பிராயம் இல்லை என்பதை கடந்த எட்டு ஆண்டு தேர்தல் முடிவுகள்; ஆர்கே நகர் இடைத் தேர்தல்வரை எதிரொலித்திருந்தது. கூடவே இப்போது ஸ்திரமில்லாத தலைமையும்!


அடுத்து அதிமுக பற்றி நோக்கினால்; அதிமுக எனும் அசுர சக்தியானது எம்ஜிஆர், ஜெயலலிதா என்கின்ற பெரும் தனிமனித ஆளுமைகளால் கட்டிக்காப்பாற்றப்பட்ட வெற்றி இயக்கம். ஆனால் இன்று அது எடப்பாடி, பன்னீர் கைகளில் குரங்கின் கை பூமாலையை விட மோசமான நிலையில் தத்தளித்துக்கொண்டு இருக்கின்றது. சசிகலா இல்லாத நிலையில் தினகரன் தனது கட்சியை அதிமுகவுடன் இணைத்து ஓர்நாள் தலமைப் பொறுப்புக்கு வரவில்லை என்றால் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் அற்ற கட்சியாக இல்லாமலே போய்விடும். இன்றைய நிலையில் அதிமுக vs திமுக என்று ஒப்பிட்டால் பெரும்பாலும் அதிமுக ஒன்றுமே இல்லைத்தான், அதிமுகாவின் வெற்றிடம் ஸ்டாலின் தலைமையிலான திமுகாவிற்கு பலமான எதிர்காலத்தை கொடுக்கும் என்கின்ற நம்பிக்கை நிலையில்தான் ரஜினியின் அரசியல் ஆரம்பம் ஆகிறது...!ரஜினிகாந்த்....


1996 முதல் 2017 மார்கழி 31 வரை ரஜினியிடம் கேட்கப்பட்ட ஒரே கேள்வி "அரசியலுக்கு வருவீர்களா?" என்பதுதான். அதற்கு ரஜினி சொன்ன பதில் "ஆண்டவன் நினைத்தால் வருவேன்" என்பதாகவே இருந்து வந்தது. ரஜினிமீது ஏகப்பட்ட விமர்சனங்கள் "ஒன்றில் வருவேன் என்று சொல்ல வேண்டும், அல்லது இல்லை என்று சொல்ல வேண்டும்" , "இவர் அரசியலுக்கு வரமாட்டார், தன் சினிமாவை ஓடவைக்க ரசிகர்களை ஏமாற்றுகிறார்" என்பதாகவே இருந்தது. ரஜினியின் மனதில் அரசியலுக்கு வருவது என்பதில் உறுதிப்பாடு இருந்தாலும் அதுபற்றி சரியான நேரத்திற்கு காத்திருந்தார் என்றுதான் சொல்ல வேண்டும், பச்சையாக சொல்ல வேண்டும் என்றால் கருணாநிதியின் காலம் முடியும்வரை காத்திருந்தார் என்றுகூட சொல்லலாம். அதனால்தான் இறுதிவரை அவர் எத்தனை கிண்டல்கள், கேலிகள் வந்தாலும் 'வரமாட்டேன்' என்று ஒருபோதும் கூறவேயில்லை. அதே நேரம் வருவேன் என்றும் கூறவில்லை, தனக்கான சரியான சந்தர்ப்பம் அமையாமல் போகலாம் என்றும் நினைத்திருக்கலாம். ஆனால் இன்று ஏற்பட்டுள்ள அரசியல் தலைமைக்கான வெற்றிடம், தமிழகத்திற்கான மிக அவசரமான, அவசியமான மாற்றத்தின் தேவை, தன்னை வாழவைத்த தமிழகத்திற்கு பதிலுக்கு நன்றி சொல்ல கிடைத்த சந்தர்ப்பம் என ரஜினி நல்ல மாற்ற அரசியல் செய்ய வந்திருக்கிறார். ரஜினிக்கு தேவைக்கு மீறிய அதி உச்சப் புகழ், பணம், பெயர் எல்லாமே போதும் போதுமென்று இருக்கின்றது. அவர் முழுக்க முழுக்க தன்னை வாழவைத்த தமிழகத்திற்கு ஏதாவது செய்யவேண்டும் என்றே 67 வயதிலும் ஆன்மீகம் எனும் அவருக்கு நெருக்கமான பாதை இருந்தும்; அரசியல் என்னும் கொடிய முட்பாதையை தேர்ந்தெடுத்திருக்கிறார்.

ஒரு சிலர் ரஜினி பயந்தவர் என்கிறார்கள், முடிவெடுக்க தெரியாதவர் என்கிறார்கள், இப்படி சொல்லும் பலருக்கு 1990 களின் ரஜினியை தெரியாது, அல்லது வசதியாக மறைத்து/ மறந்து விடுகிறார்கள். ஒரு சம்பவம் '1992 ஆம் ஆண்டு அது ஜெயலலிதாவின் பாசிச ஆட்சிக்காலம், டாக்டர் இராதாக் கிருஷ்ணன் சாலையில் சென்று கொண்டிருந்த வாகனங்கள் பொலிஸ்காரர்களால் நிறுத்தப்பட்டது, ரஜினியும் வாகனமும் அதில் ஒன்று. ஒரு போலீஸ்காரர் ரஜினியின் கார் கதவை தட்டி "சாரி சார் மேடம் இந்த வழியா போறதால ட்ராபிக்க நிறுத்தவேண்டி வந்தச்சு" என்று கூறினார். மேடம் எப்போ இந்த இடத்தை கடந்து போவாங்க என்ற கேள்விக்கு இன்னமும் அரைமணி நேரம் என பதில் கிடைத்தது. அதற்கு ரஜினி "அரைமணிநேரம் கடக்கிற அளவுக்கு பெரிய கார் இருக்கா என்ன? அதற்குள்ளே எங்களை விட்டால் நாங்கள் போய்விடுவோமே"என்று கூறினார். ஆனால் அந்த போலீஸ்காரர் சம்மதிக்கவில்லை.

ரஜினிக்கு கோபம் வந்தது, என்ன செய்வதென்று ஜோசித்தார். தனது எதிர்ப்பை காட்ட நினைத்தவர் சட்டென்று காரில் இருந்து இறங்கி அருகிலிருந்த பெட்டிக்கடைக்கு சென்று ஒரு சிகரட்டை வாங்கி அங்கிருந்த கம்பத்தின் மீது சாய்ந்து ஜாலியாக புகைக்க ஆரம்பித்தார். மெல்லமெல்ல மக்களுக்கு அங்கு நிற்பது சூப்பர் ஸ்டார் என தெரியவந்தது. மக்கள் கூட்டம் அலைமோத தொடங்கியது, இராதாக் கிருஷ்ணன் சாலையே ஸ்தம்பித்து போனது. ஆனால் இதையெல்லாம் பார்க்காதது போல ரஜினி பெட்டிக் கடைக்காரருடன் பேசிக்கொண்டிருந்தார். போக்குவரத்து அதிகாரிக்கு கூட்டத்தை சமாளிக்க முடியவில்லை, ரஜினியிடம் வந்து மன்னிப்பு கேட்டார், ரஜினியை போகும்படி கூறினார். அதற்கு ரஜினி "உங்கள் மேடம் போகட்டும் அப்புறமா போயிக்கிறன், எனக்கொண்ணும் அவசரமில்லை" என்றார், பதறிப்போன அதிகாரி ஒருவழியாக ரஜினியிடம் கெஞ்சி கூத்தாடி ரஜினியை அனுப்பிவைத்தார். இப்படி பலசம்பவங்கள்.

ஜெயலலிதாவை ஒருதடவை புகழ்ந்தார் என்றதும் ரஜினி பயந்துவிட்டார் என்கிறார்கள். தவறு என்றதும் சுட்டிக்காட்டியதும் அதே ரஜினிதான், பாராட்ட தேவையான இடத்தில் பாராட்டவும் தவறாதவர். தவறென்றால் சுட்டிக்காட்டவும் விமர்சிக்கவும் தவறாதவர். ஜெயலலிதா மேடையில் கருணாநியை புகழ்ந்தவர் ரஜினி தவிர வேறு யாரும் உண்டா? கருணாநிதி மேடையில் ஜேவை புகழவும் தயங்கியதில்லை. கலைஞர் மேடையில் "மழை வெள்ளத்தால் மக்கள் பாதிக்க கலைஞரை இங்கே விழாக்களில் நேரத்தை வீணடிக்க கூடாது" என்று நேருக்கு நேர் சொன்னவர். அஜித் மிரட்டுறாங்க என்று சொன்னதும் கருணாநிதிக்கு அருகிலிருந்து எழுந்து கை தட்டியவர் ரஜினி. மறுநாள் கோபாலபுரம் சென்று கருணாநிதியை சந்தித்தபின்னர் பத்திரிகையாளருக்கும் அது தவறு என்று அஜித்திற்கு சார்பாக மீண்டும் சொன்னவர். திமுக ஆட்சியின் முடிவில் நடந்த தேர்தலில் "மாற்றத்துக்கு வாக்களித்தேன்" என்று சொல்லிவிட்டு அன்று இரவே கருணாநிதியுடன் சேர்ந்து பொன்னர்சங்கர் படம் பார்த்தவர் ரஜினி.ரஜினி எதையும் நேரடியாக சொல்பவர், அது நல்லதோ கெட்டதோ. நடிகர் செந்தில் ஒரு தேர்தலில் கருணாநிதியை மிக மோசமாக தரமிறங்கி விமர்சிக்கிறார், தேர்தல் முடிந்த சில நாட்களில் ஒரு மேடையில் ரஜினி அதனை வேதனையுடன் விமர்சித்தார். "தலையை தலை விமர்சிக்கிலாம், அட தலையை வால்கூட விமர்சிக்கலாம், வால்ல இருக்கிற முடியெல்லாம் விமர்சிக்கிறதுதான் வேதனையா இருக்கு" என்று குறிப்பிட்டார். அமரர் நடிகர்திலகம் சிவாஜிகணேஷன் சிலை திறப்பு மேடையில் கருணாநிதி அவர்கள் அமர்ந்திருக்க விஜயகாந்தை அவரது தேர்தல் வெற்றியை குறிப்பிட்டு ஹாட்ஸ் ஓஃப் என்று பாராட்டியவர் ரஜினி. ரஜினி பாராட்டும், விமர்சிக்கும் குணம் மட்டுமல்ல தன்னை விமர்சித்தவர்களையும் மன்னித்து ஏற்கும் குணமுடையவர்.

1996 தேர்தல் நேரம் மனோரமா ஜெயலலிதாவுக்காக தலீவர் என இழுத்து அழைத்து கேவலமான முறையில் ரஜினியை விமர்சிக்கிறார். தேர்தலில் ஜே படுதோல்வியடையவே மனோரமாவுக்கு எவரும் திரைப்படங்களில் சந்தர்ப்பம் கொடுக்கவில்லை. மீண்டும் ரஜினி தன் அருணாச்சலம் திரைப்படத்தில் சந்தர்ப்பம் கொடுக்கிறார். அதற்க்கு மன்னிப்பு மட்டுமல்ல காரணம்; நன்றி உணர்ச்சியும்தான். அதனை மனோரமாவின் 50 ஆம் ஆண்டு விழாவில் ரஜினி சொல்கிறார், " அப்போது சில மனநிலைசார்ந்த பிரச்சனைகளில் இருந்த நேரம், பில்லா திரைப்பட ஷூட்டிங் கூட்டத்தில் ஒருவன் என்னை மெண்டல் என்று அழைக்கிறான், நான் கூனிக்குறுக்கிப் போகவே, எனக்காக மனோரமா கோபமாக சண்டை போடுகிறார், கத்தியவனை அவ்விடம்விட்டு அனுப்பினால்தான் ஷூட்டிங் நடக்கும் என்று உட்கார்ந்துவிடுகிறார்" என்று கூறிய ரஜினி ஒரு வார்த்தை சொன்னார் "அன்றைக்கு அணைச்ச கை, எத்தனை தடவை அடிச்சாலும் தாங்கிப்பேன்" என்று கண் கலங்கினார். இதுதான் ஒரு தலைமைக்கான குணம்; நன்றிமறக்காமை, மன்னிப்பு கொடுத்தல், மன்னிப்பு கேட்டல், பாராட்டுதல், தவறென்றால் விமர்சனம் செய்தல்.

ரஜினி முடிவெடுக்க தெரியாதவர் அல்ல, அவர் முந்திரிக்கொட்டை அல்ல. சரியான நேரத்தில் எடுக்கும் சரியான முடிவுதான் சாதனையாகும். ரஜினி சினிமாவிலும் அரசியலிலும் சரியான நேரத்தில் சரியான முடிவையே எடுத்துள்ளார். 1996 ல்கூட அவர் அரசியல் வராததற்கு சரியான காரணம் கூறியிருப்பார். பொறுமையும் நிதானமும் திட்டமிடலும் பார்வையாளர்களுக்கு சலிப்பைக் கொடுக்கலாம், ஆனால் முடிவு வெற்றிக்கானதாக இருக்கவேண்டும், தன்னால் இயலக்கூடியதாக இருக்கவேண்டும் என்பதில் ரஜினி மிகுந்த கவனமாக இருந்துள்ளார்; இது ரஜினிக்கு ஆன்மிகம் கற்றுக்கொடுத்த பெரும்பாடம். ஆன்மீகத்துக்கு முன்னும் பின்னுமாக ரஜினியின் செயற்பாடுகள் மிகப்பெரும் மாற்றம், ஆன்மீகம் அரசியலிலும் அந்த மாற்றத்தை ரஜினிக்கு கொடுக்கும், ரஜினியின் ஆன்மீக அரசியல் தமிழ் மக்களுக்கு நல்ல மாற்றத்தை கொடுக்கும்.

ஜெயலலிதா எல்லாம் ரஜினிக்கு ஒரு பொருட்டே இல்லை, 1996 வரலாறு தெரிந்த ஒவ்வொருவருக்கும் இந்த உண்மை புரியும். 2000 களுக்கு பிற்பகுதியில் ரஜினி ஜெயலலிதாவுடன் பகைக்காமல் பயணித்தார் தவிர; எதிர்க்கவோ, கட்சி ஆரம்பிக்கவோ எந்த தயக்கமும், பயமும் ரஜினிக்கு அவசியமாக இருக்கவில்லை. ஆம், ரஜினி ஜெயலலிதா இல்லாததால் இன்று அரசியலுக்கு வரவில்லை; கருணாநிதி இல்லாததால்தான் வந்திருக்கிறார் என்பதுதான் உண்மை. கருணாநிதி மீதான நட்பை ரஜினி உயர்வாக எண்ணினார், கருணாநிதி அவர்களும் ரஜினிமீது மிகுந்த மரியாதை வைத்திருந்தார். தன் முக்கிய நிகழ்வுகளுக்கும் ரஜினியை அருகில் வைத்திருந்தார், ரஜினியின் முக்கிய நிகழ்வுகளுக்கு கருணாநிதியும் முன்னுக்கு நின்றிருக்கிறார். ரஜினியின் இளகிய மனதால் கருணாநிதி அவர்களை எதிர்க்க முடியாத ஒரு சூழ்நிலையை தற்செயலாகவோ திட்டமிட்டோ கருணாநிதி அன்பால், நட்பால் பலமாக உருவாக்கியிருந்தார். ரஜினியின் அரசியல் பிற்போடப்பட்டு வந்ததற்கான பிரதான காரணம் இந்த உறவுநிலைதான்.

அடுத்து திமு கழகத்தை பொறுத்தவரை கருணாநிதி திமு கழகத்திற்கு செய்த பெரும் தவறு; தன் காலம் முடியும் இறுதி தருணத்தில்தான் ஸ்டாலினை அடுத்த தலைமையாக முன்னிறுத்தினார். கருணாநிதியின் பொது மேடைகள் எதிலும் ஸ்டாலின் கருணாநிதி அருகில் அமர்த்தப்படவில்லை. பெரும்பாலான மேடைகளில் ரஜினியும் கமலும், அதிலும் மிக முன்னுரிமை ரஜினிக்கே கொடுக்கப்பட்டிருக்கும். கட்சியின் தலைமை தொடர்பாக ஸ்டாலின், அழகிரி இருவருக்குள்ளும் சமரசம் ஏற்படுத்தவோ, பாகம் பிரிக்கவோ, பொறுப்புக் கொடுக்கவோ திடமான முடிவெடுக்க மு.கருணாநிதி அவர்கள் காலம் தாழ்த்தியதுதான் ஸ்டாலினை கருணாநிதி காலத்திலே தனக்கு அடுத்தாக மேடையில் அலங்கரிக்க முடியாமல் போனதற்கு மிக முக்கியமான காரணம். அழகிரி பிரிவும், கருணாநிதி அவர்களின் மூப்பும் ஒருமித்துவர ஸ்டாலின் தனித்தே திமுக தலைவராக செயற்தலைவர் என்னும் அடை மொழியுடன் மக்கள் முன்வருகிறார். ஆனால் அவரது ஆளுமை மீதான நம்பிக்கையை அவர் ஏற்படுத்த தவறியே வருகிறார்.ஜெயலலிதா இறந்த பின்னான சந்தர்ப்பங்களை பயன்படுத்தி ஆட்சிக் கலைப்பு செய்ய முயன்றதாக இருக்கட்டும், தொட்டத்திற்கும் சபையை வெளி நடப்பு செய்வதாக இருக்கட்டும், ஆர்.கே.நகரில் ஏற்பட்ட படுதோல்வியாக இருக்கட்டும், மேடைப் பேச்சுக்களில் வாய் தவறி திரும்ப திரும்ப உளறுவதாக இருக்கட்டும்; ஸ்டாலின் மக்கள் நம்பிக்கையை இழந்துகொண்டுதான் வருகின்றார். ரஜினி மீதான ஸ்டாலினது பயம் அப்பட்டமாக பல இடங்களில் வெளிப்படுகின்றது, முதல்வர்க் கனவு கனவாகவே போய்விடுமோ என்கின்ற அச்சம் அவருக்கு பெரியளவில் இருக்கின்றது, அதற்கான வெளிப்பாடுகளை அவரது பேச்சுக்கள், அவர் சார்ந்தவர்களது ரஜினி மீதான அசிங்கமான பேச்சுக்களில் காணக்கூடியதாக இருக்கிறது.

ஸ்டாலினின் ஒரு நகர்வாகாவே கமல் நோக்கப்படுகின்றார். நடிகர் கமல்ஹாசன் என்னும் மக்கள் மையம் கட்சி நிறுவனர்; திமுகாவின் பினாமி என்றே அரசியல் அவதானிகளால் சந்தேகிக்கப்படுபவர், அதற்கான காரணங்களையும் அவரே விதைத்துள்ளார். அரசியலுக்கு வரவே மாட்டேன் என்று ஆணித்தராக கூறிவந்த கமல்ஹாசன் வைகாசி மாதம் ரஜினி போர் வரும்போது பார்த்துக்கலாம் என அரசியல் சமிக்ஜையை வெளிப்படுத்திய பிற்பாடு திடீரென தன் அரசியல் அச்சாணியை போட ஆரம்பிக்கிறார். 2017மார்கழி 31 அன்று 'ரஜினி அரசியலுக்கு வருவது உறுதி' என்று சொன்ன பிற்பாடு; அவசர அவசரமாக கட்சியை ஆரம்பிக்கிறார், திராவிடக் கொள்கை என்று கூறுகிறார். எந்தவித அடிப்படை கட்டமைப்புக்களும் இல்லாமல் மேம்போக்காக ரஜினியின் அரசியலை நிறுத்த, அல்லது ரஜினி vs ஸ்டாலின் என வர இருப்பதை திசை திருப்பி; ரஜினி vs கமல் என மாற்றவே கமல் பயன்படுத்தப்படுகின்றாரோ என்கின்ற சந்தேகம் நிச்சயம் உண்டு. மேலும் கமல் செய்யும் அரசியல் கவர்ச்சி அரசியலாக மேக்கப் போட்டு நிகழ்த்தும் நாடக அரசியலாகவே தெரிகிறது. பூத்திற்கான உறுப்பினர் எண்ணிக்கையே 50ஆயிரம் தேவை எனும் பட்சத்தில்; 234 தொகுதியிலும் எந்த கட்டமைப்பும் இல்லாமல் கமல் தேர்தலில் போட்டியிடுவது சாத்தியக் குறைவானது. இறுதி நேரத்தில் "ஒரு சில கருத்தியலில் வேறுபாடு இருந்தாலும் திராவிடம் போன்ற முக்கிய விடயங்கள் ஒத்துப்போவதால்" என குழப்பமாக எதையோ சொல்லி திமுகவுடன் கூட்டணி வைக்கவே பெரும் சாத்தியம் உண்டு.

ஏனெனின் கமலிற்கு ஒரு அரசியல் தலைவருக்கான எந்த அஜந்தாவும் இல்லை. பணபலம், படைபலம் .ஏதுமில்லை. கிராமமென்ன நகரத்து ஒருசில மேல்தட்டு மனிதர்கள் தவிர கமலுக்கான வாக்கு வங்கி தமிழகத்தில் 1% கூட இல்லை. டுவிட்டர் கருத்துக்கணிப்பை நம்பி அரசியலுக்கு வந்திருக்கிறார் என்று வைத்துக்கொண்டால்கூட அது சுத்த முட்டாள்த்தனம்; காரணம் அங்கு ரஜினி vs கமல் போல்களில் கமலுக்கு வரும் வாக்குகள் திமுக, அதிமுக, சீமான், ராமதாஸ் கட்சியினர் முதற்கொண்டு விஜய், அஜித், சிம்பு ரசிகர்களில் ரஜினியை பிடிக்காதவர் அனைவரும் அளிக்கும் வாக்குகள். இதற்கும் களத்திற்கும் எந்த சம்பந்தமும் இருக்கப்போவதில்லை. அரசியலில் கால்வைத்த கமல் தெளிவாக இதுவரை கட்சி கொள்கை பற்றி ஏதும் சொல்லவில்லை, முன்னுக்கு பின் முரணாக பேசி குழப்பியே வருகின்றார். மேலே கூறியதுபோல தி முகாவுடன் சில தொகுதிகளில் கூட்டணி அமைக்கும் சாத்தியம் மிக அதிகம்; இல்லாதவிடத்து 234 தொகுதியிலும் டெப்பாசிட் காலியாகும் சம்பவம் தவிர்க்க முடியாதது.

ஆனால் ரஜினியின் அரசியல் என்பது முற்றிலும் வேறானது, அது முழுமையான பக்காவான திட்டமிடல். ரஜினியின் பேச்சுக்கள் முன்பின் முரணாக இருந்ததில்லை, எப்போதும் ஒரு கன்டினியூட்டி இருந்துகொண்டே இருக்கும். அதனால்தான் அரசியலுக்கு வருவது பற்றிய கேள்விக்கு அத்தனை விமர்சனம் வந்தபோதும் மறுக்காமல் மேலே கையை காட்டிவிட்டு புன்சிரிப்புடன் கடந்திருந்தார். ரஜினியின் 1996 ஆம் ஆண்டு காலப்பகுதி டூரதர்ஷன் நேர்காணலை முழுமையாக பார்த்தவர்களுக்கு தெரியும் ரஜினியின் கான்சிஸ்டென்சி. அவர் 1996 இல் சொன்னதைத்தான் பெரும்பாலும் அப்படியே இப்போதுவரை சொல்லியும் செயற்படுத்தியும் உள்ளார் என்பது அந்த வீடியோவை பொறுமையாக முழுவதும் பார்த்தால் புரியும் (வீடியோ இணைப்பு) அடுத்து இன்று அரசியலில் ஈடுபடுவது உறுதி என்று கூறிய ரஜினியின் அரசியல்; தெளிவான குழப்பமில்லாத ஒரு தொடர்ச்சியான முன்னுக்குப்பின் முரணில்லாத நீரோடை போன்ற பாதையில் பயணிப்பதை அவதானித்துப் பார்த்தால் புரிந்துகொள்ளலாம்.

வைகாசி மாதம் ரசிகர்கள் சந்திப்பிலேயே ரஜினி தனது அரசியல் நிலைப்பாடு பற்றி 75% சதவிகிதம் உறுதிப்படுத்துகிறார், போர் வரும் என்றும் ரசிகர்கள் தயாராக இருக்கவேண்டும் என்றும் சொல்கிறார், பணம் காசு பார்க்க நினைப்பவர்களை ஒதுங்கச் சொல்கிறார்கள், இவை ரசிகர்களுக்கு புரிந்தாலும்; வழமைபோல ரஜினி தனது திரைப்பட ப்ரோமோஷனுக்காக இப்படி ஆசை காட்டுவதாக பிற அரசியல் கட்சி தொண்டர்களும் சுய திருப்தி அடைகிறார்கள். மார்கழி இறுதிவாரம் மீண்டும் ரசிகர் சந்திப்பு நிகழ்கிறது, 31 ஆம் திகதி அரசியல் நிலைப்பாட்டை சொல்வதாக 25 ஆம் திகதியே சொல்கிறார். தமிழக ஊடகங்கள் பரபரப்பாகின்றன, ரசிகர்கள் அடுத்தடுத்த தினங்கள் எதிர்பார்ப்பின் உச்சத்திற்கே சென்றுவிடுகிறார்கள், ஊடகங்கள் பலவிதமாக தம் எதிர்பார்ப்பை சொல்கின்றன, ரஜினி அதிகபட்சம் கட்சி என்று அல்லாமல் ஒரு அமைப்பை உருவாக்குவார் என்று ஆரூடம் சொல்கிறார்கள்.


ஆனால் 2017 மார்கழி 31 தமிழக அரசியலில் பெரும் மாற்றம் ஒன்றுக்கான அஸ்திவாரம் போடப்பட்ட பொன்னான நாளாக அமைந்தது. ஆம், "நான் அரசியலுக்கு வருவது உறுதி" என ரஜினி கர்ஜித்தார், ரசிகர்கள் ஆரவாரம் அடங்க சில நிமிடங்கள் ஆனது. தொடர்ந்து பேசிய ரஜினி தெளிவாக தன் ஆரம்ப திட்டங்களை சொன்னார். ரசிகர் மன்றங்களை மாவட்டம் தோறும் மக்கள் மன்றங்களாக விசாலப்படுத்தச் சொன்னார், உறுப்பினர்களை சேர்க்கும் பணியை செவ்வனே செய்யச் சொன்னார், அதுதான் ஒரு கட்சியின் அமைப்பிற்கு ஆணிவேர். கட்சியின் அடித்தளத்தை ஸ்திரமாக்கினால் எத்தனை பெரிய தோல்வி வந்தாலும் கட்சி ஆட்டம் காணாது என்கின்ற அரசியல் சித்தாந்தத்தை ரஜினி செயல்படுத்தச் சொன்னார். இவை அனைத்தும் நிறைவுபெறும்வரை எந்த சமகால அரசியல் நடவடிக்கையிலும் ஈடுபட வேண்டாம், நேரம் வரும் 234 தொகுதியிலும் தனித்து போட்டியிடுவதாக முழங்கினார். தன்னால் செய்யக் கூடியதை முன்னிறுத்தி மக்களிடம் போவோம், மற்றவரை விமர்சிக்கும் அரசியல் எமக்கு வேண்டாம், ஆக்கபூர்வமான செயல் அரசியலை முன்னெடுப்பேன், முடியாவிட்டால் 3 ஆண்டுகளில் ராஜினாமா செய்வேன் என்கிறார், இதைவிட தெளிவாக நம்பிக்கையாக எப்படி ஒரு தலைவன் மக்கள் முன் ஆணை கேட்க முடியும்?

தமிழக அரசியலுக்கு ரஜினி வரமாட்டார் என நம்பிய இரு பெரும் கழகங்களுக்கு, குறிப்பாக அடுத்த ஆட்சி நம்பிக்கையில் இருந்த திமுகவிற்கு இது பெரும் சிக்கலை உருவாக்கியது, மறுநாள் கருணாநிதியை சந்திக்க சென்ற ரஜினியை வரவேற்ற ஸ்டாலின் முகத்திலேயே இந்த பெரும் தாக்கம் தெரிந்துகொள்ள முடிந்தது. 2017 மார்கழி 31 க்கு பின்னர் "எம்மை யாரும் அழிக்க முடியாது, வீழ்த்த முடியாது" என தினமும் யாரவது ஒரு திமுக பிரபலம் எங்காவது பேசிக்கொண்டுதான் இருக்கிறார்கள்; காரணம் அஸ்திவாரம் ஆட்டம் காணப்போகிறது என்கிற எதிர்காலம் மீதான பயமின்றி வேறல்ல. ரஜினி வரமாட்டார் என நம்பிக்கொண்டிருந்த ரஜினியை விரும்பாத தரப்பு இப்போது 'ரஜினி தமிழரல்ல', 'ரஜினி என்ன செய்திருக்கிறார்?', 'வாடகை பாக்கியை கட்ட சொல்லுங்கள்', 'கடனை அடைக்க சொல்லுங்கள்', 'ரஜினி பிஜேபி ஏஜென்ட்' என ரஜினியை கண்மூடித்தனமாக எதிர்க்க ஆரம்பித்துள்ளார்கள்.

இவர்கள் யார் என்று பார்த்தல்; மாநிலத்தின் பெரும் கழகங்கள், பெரும் கட்சிகள், நேற்று ஆரம்பித்த கட்சிகள், லெட்டர்பாட் கட்சிகள் என்று தேசியக் கட்சிகள் தவிர்ந்த அத்தனை கட்சிகளுமே. முதல்முறையாக இத்தனை கட்சிகளும் தொண்டர்களும் ஒற்றுமையாக ஒலிக்கும் குரல் 'ரஜினி எதிர்ப்பு'!. காரணம் சொல்லத் தேவையில்லை; ரஜினி வந்தால் பாலும் தேனுமாக ஓடிக்கொண்டிருக்கும் தமிழகம் கெட்டுவிடும் என்றா? இல்லை. தமக்கான அரசியல் வாழ்க்கை அஸ்தமிக்கும், ஊழல் சுரண்டல் செய்ய முடியாது, பிழைப்பு அடிபட்டுவிடும் என்கிற பயமன்றி வேறேது!! ஏன் ரஜினியை விட நல்லவர்கள் இல்லையா என்கிறார்கள், நல்லகண்ணு, சகாயம் மாற்றம் தரமாட்டாரா என்கிறார்கள் சிலர். ஒரு மாற்றம் அதிலும் தமிழகம் போன்ற பெரும் மக்கள் எண்ணிக்கை கொண்ட மாநிலத்தில் நிகழவேண்டும் என்றால்; அதனை நிகழ்த்த ஒரு பெரும் மக்கள் அபிமான விம்பம் அவசியம் தேவை. அந்த விம்பம் நல்லவராக, வல்லவராக நம்பிக்கைக்கு உரியவராக இருக்குமிடத்து; மக்களுக்கு ஏற்கனவே இருக்கும் கட்சிகளின் வெறுப்பும் சேர அவரை இலகுவாக மாற்றத்தை கொடுக்க வழிசமைத்துவிடும். இந்த பயம்தான் ரஜினிமீது அத்தனை மாநிலக் கட்சிகளுக்கும் உண்டு.

ரஜினி மீது தினம்தினம் ஏதாவதொரு குற்றச்சாட்டு, விமர்சனம் கட்சி தலைவர்களாலும், தொண்டர்களாலும், ஆதரவாளர்களாலும் பொதுவெளியிலும் இணையங்களிலும் வலிந்து பரப்ப அதீத முயற்சி மேற்கொள்ளப்படுகின்றது. ரஜினி அனைத்துப் பிரச்சனைகளுக்கும் குரல் கொடுக்க வேண்டும் என கடுமையான விமர்சனம் செய்வார்கள், ரஜினி குரல் கொடுத்தால் அதனையும் விமர்சனம் செய்வார்கள். தம்மிடம் இருக்கும் ஊடகம், பணபலம் என அத்தனையை வைத்தும் ரஜினியை தோற்கடிக்க வேண்டிய கட்டாயம் கழகங்களுக்கு, குறிப்பாக திமுகவிற்கு! உதாரணமாக ரஜினி இமய மலைக்கு செல்லும்போது கொல்லப்பட்ட இரு பெண்கள் பற்றி மீடியா கருத்து கேட்கிறது, ரஜினி கருத்து சொல்லாமல் வணக்கம் சொல்லிவிட்டு கிளம்புகிறார், இவர்கள் குய்யோ முறையோ என்று கத்துகிறார்கள்.

ஒரு பெண் காதல் பிரச்சனையில் காதலனால் கொல்லப்படுகிறாள், மற்றயவள் ஹெல்மட் இல்லாமல் கணவன் வண்டி ஓடியதால் விரட்டிய காவலர் உதைத்து பைக் விழுந்ததில் மரணம் அடைகிறாள். இதில் ரஜினி என்ன கருத்து சொல்ல எதிர்பார்க்கிறார்கள் என்று சத்தியமாக புரியவில்லை! யாரை குறை சொல்ல எதிர்பார்க்கிறார்கள்? இரண்டுமே தனிப்பட்டவர்கள் நடத்தையால் ஏற்பட்ட தவறு, சட்டப்படி கைது செய்யப்பட்டுவிட்டார்கள். இதில் ரஜினி கருத்து சொல்வதால் என்ன நடந்துவிடப்போகிறது? திரும்ப வந்த ரஜினி மீண்டும் மார்கழி 31 சொன்னதை ஞாபகமூட்டுகிறார், "இப்போது மக்கள் மன்ற பணிகள் நடக்கிறது, 12 மாவட்டங்கள் இன்னமும் கட்டமைத்து முடியவில்லை, அதுவரை நடைமுறை அரசியல்பற்றி பேசுவதில்லை" என்று சொன்னதை ஞாபகமூட்டுகிறார், இதுதான் ரஜினியின் கன்டினியூட்டி அரசியல். தீர்க்கமான முடிவெடுத்து அதன் முடிவை மாற்றாது சரியான வழியில் நிகழ்த்திக்கொண்டு இருக்கிறார், அவர் செயலில் நிகழ்த்தவே விரும்புகிறார்.எல்லா விடயங்களுக்கும் கருத்து மட்டும் சொன்னால் போதுமா? தினமும் ஒரு சம்பவம் நடக்கிறது ஒவ்வொருவரும் கருத்து சொல்லிவிட்டு போகிறார்கள், என்ன தீர்வு? தீர்வுதான் செயல். இயலுமானதை தன்னால் செயல்படுத்த முடியும் என்று ரஜினி நம்புகிறார், வெறும் வெற்றுக் குரலால் ஏதும் ஆகாதென்பதும் அவருக்கு நன்றாகவே தெரியும், அதனால்தான் தினமும் நிகழும் சம்பவங்களுக்கு அரசியல் பேசவேண்டாம், அடித்தளத்தை பலப்படுத்துங்கள் என்று ரசிகர்களை கேட்டுக்கொள்கிறார். ரஜினிமீது 'குரல்தரவில்லை' எனக் கதறுபவர்களுக்கும் அது நன்றாகவே தெரியும், ஆனாலும் ரஜினியை எதிர்க்க வேண்டுமே!! அதனால்தான் "தினப்பிரச்சனைக்கு குரல் கொடுக்காமல் முதல்வர் மட்டும் ஆகவேண்டுமா" என அறச்சீற்ற நாடகம் நிகழ்த்துகிறார்கள்!! ரஜினி மோடியின் ஆள் என்கிறார்கள், ரஜினி நேரடியாகவே மறுத்துவிடுகிறார், ஆனாலும் இன்னமும் ரஜினியையும் பிஜேபியையும் இணைத்தே முடிந்தவரை இணைய பிரச்சாரம் செய்கிறார்கள் எதிர்தரப்பு. ரஜினியின் வாடகை, கடன் விடயங்கள் சம்பந்தப்பட்ட தரப்பால் தெளிவாக விளக்கம் சொல்லியும்; எதிர்க்க வலுவான காரணிகள் இன்றி இதனையே திரும்ப திரும்ப சொல்லிச்சொல்லி பொதுவானவர்களுக்கும் சலிப்பை உண்டாக்குகிறார்கள். ஆம் ரஜினி சொன்னதுபோல கண்மூடித்தனமான எதிர்ப்பை ரஜினிக்கு மூலதனமாக்குகிறார்கள்.

உதவிகள் என்பது சொல்லித்தான் செய்யவேண்டும் என்பது தமிழகத்தின் ஊடக மற்றும் ரஜினியின் எதிர்தரப்பின் மேம்போக்கான நியாயமற்ற வாதம். ராகவேந்திரா திருமண மண்டபம் மக்களுக்காக வழங்கியது தொடக்கம், இலவச திருமணம், தொழிலாளர்களுக்கு வீடு, 1990 களிலேயே 10 லட்சத்திற்கு திருவெண்ணாமலை மின்விளக்கு, இயக்குனர்கள், சக கலைஞர்களுக்கு உதவி என ரஜினியின் உதவிகள் சத்தமில்லாமல் விளம்பரமில்லாமல் நிகழ்ந்துகொண்டுதான் இருக்கின்றன. உதவி பெற்றவர் சொன்னாலன்றி இவை ஏதும் வெளிச்சப்படுவதில்லை, ரஜினி தரப்பும் எதையும் விளம்பரப்படுத்த விரும்பியதில்லை. மழை வெள்ளத்திற்கு கூட ரஜினி 10 லட்சம்தான் தந்தார் என குறை கூறுகிறார்கள், ஆனால் ராகவேந்திரா மண்டபம் 1000 க்கு மேற்பட்ட துப்பரவு தொழிலாளர்களின் உறைவிடமாகவும், உணவு வழங்கிய இடமாகவும் விளக்கியதும், தனிப்பட்ட விதத்தில் ரஜினியால் செய்யப்பட்ட பெரும் நிவாரண உதவிகளும் ரஜினிதரப்பு விளம்பரப்படுத்தல் இல்லாததால் விமர்சனம் செய்பவர்களால் வசதியாக மறைக்கப்பட்டுவிட்டது. கார்கில், சுனாமி, ஈழம் என ரஜினியின் உதவிகள் மற்றய நடிகர்களைவிட அதிகமாகவே இருந்துள்ளது. விளம்பரமின்மையை சாதகமாக்கி எதிர்தரப்பு செய்யும் அரசியல் தற்போது ரஜினியின் காவலர்களால் ஆதாரபூர்வமாக மறுக்கப்பட்டு உதவிகள் பெற்றவர்களது வாக்குமூலங்களை வெளிப்படுத்தி முறியடிப்பு செய்யப்பட்டு வருகிறது!


அடுத்து ரஜினிக்கு எதிரான விமர்சனத்தை கழகங்கள் தமது ஊடக பலத்தின்மூலமும், பண பலத்தாலும் நிகழ்த்த ஆரம்பித்து விட்டார்கள், பாவம் அவர்களும் என்ன செய்ய முடியும், ரஜினியை ஜெயிக்க விடவே கூடாது, விட்டால் ஐம்பது ஆண்டுகால திராவிடக் கொள்ளைக்கு மன்னிக்க கொள்கைக்கு ஆபத்து என்றும், அதற்கு முற்றுப்புள்ளி வந்துவிடும் என்றும் அவர்களுக்கு நன்றாகவே தெரியும். அதன் எதிரொலிதான் திமுக மாநாட்டில் ரஜினி எதிர்ப்பு களைகட்டி இருந்தது. ரஜினி மீதான அவதூறுகள், ரஜினியை குறைத்து பேசுதல் என்பன சில முன்னாள் பிரபலங்கள் மூலம் எதிர்பார்த்தவாறே முன்னெடுக்க ஆரம்பிக்கப்பட்டுவிட்டது. சமூகத்தளங்களிலும் அதிக போலேவேர்ஸ் இருக்கும் கணக்குகள் சில ரஜினி யெதிர்ப்பை முழுநேரத் தொழிலாக செய்ய ஆரம்பித்துள்ளனர். பாரதிராஜா, கரு பழனியப்பன், கௌதமன், அமீர், சேரன் முதலான பீல்ட் அவுட் இயக்குனர்கள்; சத்யராஜ், ராஜேந்தர், ராதாரவி போன்ற சக கலைஞர்கள்; லியோனி போன்ற பேச்சாளர்கள் என கழகங்கள்; குறிப்பாக திமுக மும்மரமாக ரஜினி எதிர்ப்பை அரங்கேற்ற தொடங்கிவிட்டது. சீமான், திருமுருகன் காந்தி போன்றவர்களும் முடிந்தவரை ரஜினிக்கு எதிராக கம்பு சுத்த தொடங்கி விட்டார்கள்; இத்தனைக்கும் ரஜினி இன்னமும் கட்சி பெயர், கொடி, கொள்கைகள் என எதையும் அறிவிக்கவில்லை.


அடுத்து ரஜினிக்கு எதிரான விமர்சனத்தை இன்னொருவகையில் கொண்டு செல்ல அதாவது "நான் ரஜினி ரசிக்கந்தான், ரஜினி நல்லவர்தான் இருந்தாலும்" என ஆரம்பித்து ரஜினி அரசியலுக்கு சரிவரமாட்டார் என முத்திரை குத்த முயல்வது. கரு பழனியப்பன் முதல் டுவிட்டர் பிரளயங்கள்வரை இந்த டெக்னிக்கும் பயன்படுத்தப்படுகிறது. கூடவே சில திமுக சார் (நடுநிலையாம்) கட்டுரையாளர்கள் அடுத்த தமிழக முதல்வர் யாரென கட்டுரை எழுதும்போது ;அனைவரும் சரியில்லைதான் ஆனால் இருப்பவர்களில் ஸ்டாலின் பரவாயில்லை; என்கின்ற முடிவை நோக்கி கட்டுரை வரைந்துகொண்டு இருக்கிறார்கள். இந்த கட்டுரையில் அன்புமணி, கமல்ஹாசன், சீமான் எல்லாம் வந்து போகிறார்கள், ஆனால் பயம் ரஜினியின் நாமமே அங்கிருப்பதில்லை.


அடுத்து ரஜினிக்கு பிஜேபி முத்திரை குத்த நினைக்கும் தந்திரம். இந்த தந்திரம் எடுபடப்போவதில்லை, காரணம் ரஜினி ஏற்கனவே சொன்னதுபோல உச்ச அரசியல் நேரத்தில் தனக்கும் பிஜேபிக்கு எந்த சம்பந்தமும் இல்லை என்பதை இன்னமும் தெளிவாக எடுத்துரைப்பார் என்றே தோன்றுகிறது. சிலர் ரஜினி சுயமாக செயற்படாமல் பிஜேபியால் இயக்கப்படுகிறார், ரஜினிக்கு பின்னால் பிஜேபி இருக்கிறது என்கிறார்கள். பாவம் குழந்தைகள் நரசிம்மராவ் மாநில தலமைப் பொறுப்பை கொடுக்க முற்பட்டபோதே புன்முறுவலுடன் மறுத்தவர் ரஜினி. ரஜினியின் பின்னால்; இல்லையில்லை ரஜினிதான் எல்லாமாக நிற்க 1996 இல் மூப்பனார் கருணாநிதி கூட்டணி அமோக வெற்றியீட்டியது. ரஜினிக்கு எவருக்கு முன்னாலும் பின்னாலும் நிற்க வேண்டிய அவசியம் இல்லை. ரஜினி சிகண்டியுமில்லை, அர்ஜுனனுமில்லை, அவர் பீஷ்மர். ரஜினியின் ஆன்மீக அரசியல் என்னும் பதம் தெளிவாக ' ஜாதி, மத சார்பற்ற ஊழலற்ற வெளிப்படையான மக்கள் ஆட்சியே ஆன்மீக அரசியல்' என ரஜினியால் திரும்ப திரும்ப சொல்லப்பட்டபோதும், மதவாதம் வேறு ஆன்மிகம் வேறு என்று வித்யாசம் புரியவைக்கப்பட்ட போதும்; ரஜினிமீது மதச்சார்பு சாயம் பூச, பிஜேபி சாயம்பூச எதிரணி மிகுந்த முனைப்புக் காட்டுகிறார்கள், ஆனால் ரஜினியின் ஒவ்வொரு மன்றத்திலும் அனைத்து மதத்தினரும் பாகுபாடின்றி உள்வாங்கப்பட்ட வருகின்றார்கள். மக்களுக்கு இது இலகுவில் புரியவைக்கப்பட்டுவிடும்.


திமுக, அதிமுக, பமாக, நாம் தமிழர், கமல் கட்சி தொடக்கம் லெட்டர்பாட் கட்சிகள்வரை அடுத்த தேர்தல் நேரத்தில் 'ரஜினி எதிர்ப்பு என்கின்ற ஒரு விடயத்தில் மிகுந்த அக்கறையோடு ஒருமித்த பார்வையில் வெளிப்படுத்துவார்கள். மேற்சொன்னதுபோல சத்யராஜ், ராஜேந்தர், திருமுருகன் காந்தி, கௌதமன், பாரதிராஜா, அமீர், கரு பழனியப்பன், ராதாரவி, லியோனி என ஒரு கூட்டம் இப்போதே அதனை ஆரம்பித்து விட்டார்கள், இந்த லிஸ்ட் இன்னமும் நீளலாம், நிச்சயம் நீளும். ரஜினியின் ஒவ்வொரு சொல்லும் செயலும் உற்றுநோக்கி அதற்கு தவறான அர்த்தம் கற்பிக்க, ரஜினியின் இமேஜை காலிசெய்ய மேற்சொன்னவர்களும், கட்சி சார் மற்றும் விலைபோகும் ஊடகங்களும், சமூகத்தள 'பெய்ட்' பிரபலங்களும் பெரும் துணை போவார்கள். இதனை எப்படி ரஜினியும், காவலர்களும் எப்படி முறியடிக்கப் போகின்றார்கள் என்பதுதான் ரஜினி தரப்பின் மிகப்பெரும் சவால். காரணம் பெரும்பான்மை மக்கள் மனநிலை குழப்பகரமானது, அதனை குழப்பி குட்டையில் மீன்பிடிப்பதுதான் தமிழக அரசியல். இந்த சாவலை முறியடிக்க ரஜினியின் பேச்சும், பதிலும் மக்களிடம் திரிபு படுத்தாமல் போய் சேர்வதற்கு வலுவான ஊடக பலம் நிச்சயம் தேவை. இந்த விடயத்தில் ரஜினிக்கு பலம் என்னெவென்றால்; ரஜினியே வேண்டாம் என்றாலும் ரஜினி சம்பந்தப்பட்ட அனைத்தையும் வெளிக்காட்டித் தீரவேண்டும் என்கின்ற மீடியாவின் TRP பசி. அது ரஜினியை விரும்பியோ விரும்பாமலோ துரத்தும், விரும்பியோ விரும்பாமலோ ரஜினியின் காணொளிகளை, பேச்சுக்களை வெளியிட்ட தீரும். பல ஊடகப் போட்டி என்பதால் தவறான தலைப்பிட்டாலோ, மாற்றிக் கூறினாலோ மற்றய ஊடகம் காட்டிக் கொடுத்துவிடும்; இந்த இடத்தில்தான் ரஜினியை மீடியா மக்களிடம் இலகுவாக கொண்டு சேர்க்கப்போகிறது.

ரஜினி மிக தெளிவாக இருக்கிறார், அவரது ஒவ்வொரு அடியும் நிதானமாக எடுத்துவைக்கப்படுகிறது. ஒரு அரசியல்க் கட்சி ஆலமரமாக வளர்வதற்கு அதன் அடிப்படைக்கு கட்டமைப்பு மிக மிக அவசியம், அதனை மிகவும் ஸ்திரமாக ஆரம்பத்திலேயே பலப்படுத்த ஆரம்பித்து மிகுந்த வேகமாக நேர்த்தியாக அந்த பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. மாவட்டம், ஒன்றியம், மாநகரம், நகரம் , பூத் கமிட்டி என நிர்வாகிகள் பக்காவாக தேர்ந்தெடுக்கப்பட்டு முப்பது மாவட்டமும், புதுச்சேரியும் அடிப்படைக் கட்டமைப்பு பலப்படுத்தப்பட்டு உறுப்பினர் சேர்க்கை மும்மரமாக வெற்றிகரமாக நிகழ்த்தப்பட்டுக் கொண்டு இருக்கிறது. அனைத்து நிர்வாகிகளும் தெரிவு செய்யப்பட்ட பின்னர் அடுத்த கட்டம் பற்றிய அறிவிப்பு வெளிவரும். அதன் பின்னர் ரஜினி அடித்தாடப்போகும் வேகம் மேம்போக்காக அரசியல் பார்ப்பவர்க்கும், கண்ணைமூடி பால் குடிப்பவர்க்கும் புதிதாக இருக்கும், ஆனால் அரசியல் அவதானிகளுக்கும், ரசிகர்களுக்கும், முக்கியமாக திமு கழக தலைவர்களுக்கும் இப்போதே அதன் வீச்சு எப்படி இருக்குமென்று தெரியும்.

ரஜினி மெதுவாக முடிவெடுக்கிறார், ஆமைவேக இயக்கம் என்போருக்கு ஒரு உதாரணம் சொல்லலாம்; ஒரு கட்டடம் கட்டப்படும்போது வெளியே தெரியாமல் மறைப்பை காட்டுவார்கள், வீதியால் போய் வருபவனுக்கு "என்னடா இது இப்படியே இருக்கு" என்றிருக்கும், ஆனால் உள்ளே வேலை மும்மரமாக நிகழ்ந்துகொண்டிடுக்கும், ஒருநாள் கட்டடம் முழுமையான பின்னர் மறைப்புக்கள் அகற்றப்படும்போதுதான் 'அட' என வாய் பார்ப்பார்கள். ரஜினி தவிர்க்கிறார், ஒதுங்குகிறார், வருவாரா, மேம்போக்கு அரசியலா செய்யப்போகிறார் ? என்பவர்களுக்கு கட்சி அறிவிப்பு நிகழ்ந்த பின்னர் நிறைய விடயங்கள் புரியும். அத்தனை உட்கட்டமைப்பையும் பூர்த்தி செய்த ஒரு முழுமையான கட்சியாகவே ரஜினியின் கட்சி வெளிப்பத்தப்படும். கட்சி பெயர், கொடி, கொள்கைகள், அறிமுகமாகி முதல் மாநாட்டிலேயே ரஜினியின் பேச்சோடு தமிழக அரசியல் ரஜினி பக்கம் சார்ந்துவிடும்.

அதன் பின்னரான ரஜினியின் கொள்கைகள், திட்டமிடல்கள் இளைஞர் சமூகத்தில் இருந்து ரஜினிக்கு பெரும் ஆதரவைக் கொண்டுவரும். பலருக்கு ஆச்சரியமாக இருக்கலாம், ரஜினி பெரியளவில் நீண்ட நாட்களாக அரசியலுக்கான வேலை செய்துகொண்டிடுக்கிறார். ஒவ்வொரு துறையிலும் அது சார்ந்த அறிவுள்ளவர்களிடம் அந்தந்த துறைகளின் குறையும் அதற்கான நிவர்தியையும் கேட்டுக் கொண்டிருக்கிறார். பிரபல வலைப்பதிவர் கிரிராஜ் பிரகாசம் அவர்கள் ஒரு விடயத்தை பகிர்ந்திருந்தார்; 'தமிழருவி மணியன் அவர்களிடம் தான் ஒரு நீரியல் சம்பந்தமான ஒரு திட்டத்தை கொண்டு சென்றதாகவும், அதை பார்த்த பின்னர் அவர் ஏற்கனவே அவர்கள் வைத்திருந்த தமது திட்டங்களை விளக்கியதாகவும், தான் மலைத்துப்போய் விட்டதாகவும் கூறியிருந்தார் (பதிவை படிக்க). சமூக ஆர்வலர் எழுத்தாளர் மரியதாஸ் அவர்களிடம் கூட ரஜினி கல்விசம்பந்தமான பிரச்சனைகள், அவற்றுக்கான தீர்வுகள் பற்றி கேட்டறிந்ததாக பேஸ்புக்கில் நிலைத்தகவலில் (பார்க்க) கூறியுள்ளார், இவை ஓரிரு உதாரணங்கள்தான்.

இப்படி ஒவ்வொரு விடயத்திற்கும் பிரச்சனைகளுக்கும் ரஜினி தீர்வினை சாத்தியமான செயல் வடிவத்தில் தாயாரித்துக் கொண்டிடுக்கிறார். கட்சி அறிவித்த பிற்பாடு ரஜினி எதிர்கொள்ளப்போகும் பத்திரிக்கியாளர் சந்திப்பு மட்டும் போதும் ரஜினி பற்றிய எதிர்மறை எண்ணம் கொண்ட நடுநிலையானவர்களில் கணிசமானவர்களை கவர! பத்திரிக்கையாளர் சந்திப்புக்கள் வேறு லெவலில் ரஜினியால் கையாளப்படும்; அது எம்.எஸ்.டோனி ஸ்டையிலில் கலக்கலாக இருக்கும். இன்று ஒரு நிமிஷம் தலை சுத்திடிச்சு என்று கிண்டல் செய்தவர்களுக்கு தலை நிற்காமல் சுற்றிக்கொண்டுக்கும் நிலை உருவாகும். ரஜினியின் பலமே பொறுமைதான்; கமல், தினகரன் போன்றோர் கட்சி அறிவித்த மறுநாள் அந்த சூடு தந்துவிட்டது. ஆனால் ரஜினி கட்சி அறிவிப்புக்கு பின்னர் தினமும் ரஜினிதான் தலைப்பு செய்தியாக இருப்பார். எந்தெந்த விடயங்களில் ரஜினியை மட்டம் தட்டலாம், குறை சொல்லலாம், காலை வரலாம் என நினைத்திருக்கிறார்களோ; அந்தந்த விடயங்களில்தான் ரஜினி ஸ்கோர் செய்வார். முக்கியமாக காவிரி பிரச்சனை, பிஜேபி சார்பு போன்றனவாகத்தான் இருக்கும். காவிரித்தான் ஹைலைட்டே, விமர்சிக்கலாம் என காத்திருந்த இடத்தில் இருந்துதான் ரஜினி கோல் போட ஆரம்பிப்பார்.அதே நேரம் ரஜினி முன்னர் அறிவித்ததுபோல மிகப்பெரும்பாலும் தன் கட்சியின் கொள்கைகள், திட்டங்களை முன்னிறுத்தியே ரஜினியின் அரசியல் பயணம் இருக்கும், விவசாய பிரச்சனை, நதிநீர், கல்வி, தொழில் முன்னேற்றம், ஊழல் இல்லாத வெளிப்படையான ஆட்சி போன்றன முக்கிய விடயங்களாக இருக்கலாம். ஜாதி மதவாதம் அற்ற நிர்வாகத்திறனான ஆட்சியை கொடுப்பதை முன்னிறுத்தியே ரஜினியின் அரசியல் இருக்கும், வாக்குக்கு பணம் கொடுக்கும் அரசியல் ரஜினி தோற்றுப்போவார் எனும் நிலை வரினும் நிகழாது. முடிந்தளவு நல்லாட்ச்சியைக் கொடுக்க முயற்சி செய்வார். இந்த நம்பிக்கை மக்களிடம் ஏலவே இருந்தாலும்; இந்த நம்பிக்கையை சிதைக்க எதிர்தரப்பு மேற்கொள்ளும் அத்தனை நம்பிக்கையையும் ரஜினியின் பேச்சுத்திறன் இல்லாமல் செய்துவிடும். ரஜினியைப்போல சொல்லவந்த விடயத்தை தெளிவாக, அழகாக, சுவாரசியமாக சொல்லக்கூடிய பேச்சுத்திறன் மிக்கவர்கள் தமிழக அரசியலில் தற்போது எவருமில்லை. எம்.ஜி.ஆர் சிலை திறப்புவிழாவில் ரஜினி பேசிய 35 நிமிடங்களும் ரஜினியை விரும்பாதவர்களையும் ரசிக்க வைத்தது. ஒரு துண்டு சீட்டில்லை, மனப்பாடம் பண்ணவில்லை, திணிக்கப்பட்ட அறிவாளித்தனமில்லை, அடுக்குமொழி பேச்சில்லை; ஆனால் ஒரு கலந்துரையாடல் போல சலனமற்றது பேச்சு ரஜினியின் பேச்சு. தேர்தல் மேடைகளில் ரஜினியின் பேச்சு ரஜினிக்கு மிகப்பெரும் பலமாக இருக்கும், அது தெளிந்த நீரோடைபோல மக்கள் மனங்களை குளிர்விக்கும்.


மற்றய கட்சிகளை, அதன் தலைவர்களை ரஜினி விமர்சிக்கும் சந்தர்ப்பம் மிக மிக்க குறைவே, குறிப்பாக தேசியக் கட்சிகளுடன் நல்லுறவைப் பேணவே ரஜினி விரும்புவார், காரணம் நதிநீர் இணைப்பு என்பது அவரது கனவு, மத்தியை பகைத்து அதை சாத்தியமாக்க முடியாது. நரசிம்மராவுக்கும், மோடிக்கும் அவர் நண்பராகவே இருந்துள்ளார்; மோடிக்கும், ராகுலுக்கும் அவர் நண்பராகவே இருப்பார். தென்னிந்திய மற்றைய மாநிலங்களின் தலைவர்களிடனும் சுமூகமான உறவை ரஜினி பேணிக்கொள்வார். தமிழக தலைவர்களுடனும் சுமூகவானா உறவையே ரஜினி விரும்புவார், அது அவரது இயல்பு, ஆரோக்கியமான இயல்பு. ஆனால் தமிழக தலைவர்கள் ரஜினியுடன் நட்புடன் இருக்க, சேர்ந்து பயணிக்க விரும்புவார்களா என்பது சந்தேகமே; இத்தனைக்கும் இவர்களில் பலர் ரஜினியின் அரசியலுக்கு முன்னர் ரஜினிக்கு நண்பர்கள், ரசிகர்கள்.


ரஜினி ஒருவர் சரி, மிகுதி 233 தொகுதிகளிலும் வேட்பாளர்கள் யார்? ரசிகர்கள் மாத்திரமா? பொதுமக்களில் ஆளுமை மிக்கவர்களுமா? ஜாதி, மதச் சார்பற்று இந்த தெரிவு இருக்குமா? இளைஞர்கள் அதிகளவில் உள்வாங்கப்படுவார்களா? துறைசார் நிபுணர்கள் உள்வாங்கப்படுவார்களா? ஏற்கனவே வேறு காட்சிகளில் இருந்தவர்கள் தாவி வந்தால் அப்படி வந்தவர்களுக்கும் இடமுண்டா? பிரச்சார பேச்சாளர்கள் எப்படி தெரிவாக்கப்போகிறார்கள்? இணைய அறிவு ஜீவிகளும் உள்வாங்கப்படும் சாத்தியம் உண்டா? என ஆயிரம் கேள்விகள் உண்டு. நிச்சயம் இந்தக் கேள்விகளுக்கான பதிலையே ரஜினிகாந்த் ஏற்கனவே தயாரித்து வைத்திருப்பார், காலம் வரும்போது இவற்றுக்கான பதில் சரியானதாக, மக்கள் ஏற்றுக்கொள்ளும்படி இருந்தால்; இதுகூட அவரது அரசியலை அடுத்த தளத்திற்கு கொண்டுசெல்லும்.

ரஜினியால் மாற்றம் கொடுக்க முடியுமா என்று கேட்டால் நிச்சயம் முடியும். ரஜினி மாற்றத்தை கொடுக்க தவறும் நிலை வந்தால் தமிழகத்தை பீடித்த கழகங்களை அகற்ற அடுத்த சந்தர்ப்பம் தற்போதைக்கு சாத்தியமே இல்லை. அதற்குள் தமிழ்நாடு முழுமையாக சுரண்டப்பட்டு விடும். கடவுள் அல்லது இயற்கை நியதிகளுக்கு அமைய இந்த மாற்றம் ஏற்பட்டே ஆகவேண்டும், ஏற்படும் என்று நம்பலாம், ஆனால் அது சாதாரணமாக சாத்தியம் இல்லை. தொழில்நுட்ப வளர்ச்சி அற்ற காலகட்டத்திலே மக்கள் திரையிலும் நிஜத்திலும் பெரும் மதிப்பும் மரியாதையும் வைத்திருந்த எம்ஜியார் போன்ற திரை ஆளுமை; 234 தொகுதியிலும் கூட்டணி கட்சிகளுடன் போட்டியிட்ட போதும்; 33.5 வாக்குகளே அவருக்கு கிடைக்கப்பெற்றது. காங்கிரஸ், அதிமுக, திமுக என மும்முனைப் போட்டியாக அன்றய தேதியில் அந்த தேர்தல் இருந்தது.

ரஜினியை பொறுத்தவரை அடுத்து வரப்போகும் தேர்தல் என்பது பெரும்பாலும் நான்கு முனைப் போட்டியாகவே இருக்கும் என்று எதிர்பார்க்கலாம். திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, தினகரன் அணி என ரஜினிக்கு மூன்று முக்கிய எதிரத்தரப்புக்கள் எதிரே களத்தில் இருக்கும். திமுகவை பொறுத்தவரை காங்கிரஸ் கூட்டணி என்றால் 20 - 30 சதவீத வாக்கு பெரும்பாலும் சாத்தியமாகும்; ரஜினி இல்லாமல் இருந்திருந்தால் இது 45 - 65 ஆக கூட இருந்திருக்கலாம். தினகரனை கணிப்பது கடினம், ஒரு தொகுதியில் பணப்பட்டுவாடா மூலம் ஜெயித்ததை வைத்து ஆரூடம் கூட முடியாது, ஆனாலும் அதிமுக உடையும் வாக்குகள் + பணபலம் சேர்ந்தது 15 -25 சதவிகிதம் வாக்குவங்கியை தினகரனுக்கு உருவாக்கலாம். அதிமுகவை பொறுத்தவரை 10 % வந்தாலே ஆச்சரியம். ஏனையவைகள் அனைவருக்கும் சேர்த்தும் 10 % கடப்பதே சாத்தியமற்றது.

ரஜினிமீதான தனிப்பட்ட வாக்கு வங்கியானது 10 - 20 சதவிகிதத்தினுள் இருக்கலாம் என நம்பப்படுகிறது. அதேநேரம் அதிமுகவின் வாக்கு வங்கியும், பொதுவான வாக்குகளுமே ரஜினிக்கு சாதகமாக அதிகளவில் மாறப்போகும் வாக்குகளாக இருக்கப்போகிறது! அது ரஜினியின் வாக்கு வங்கியை 35 + வரை கொண்டு சென்றால் மாத்திரமே ரஜினி ஆட்சி அமைக்க சாத்தியம் உருவாகும். அப்படியான நிலை உருவாகும் சாத்தியத்தை ரஜினி கட்சி அறிவித்த பின்னான செயற்பாடுகளே தீர்மானிக்கும். அடிப்படைக்கு கட்டமைப்பு, உறுப்பினர்கள் சேர்க்கை, திட்டமிடல் எல்லாம் வைத்துப் பார்த்தால் ரஜினியால் இதனை சாத்தியப்படுத்த முடியும் என்றே தோண்றுகின்றது. அப்படி ரஜினி ஜெயிக்கும் பட்சத்தில் தமிழகத்தின் அரசியல் நிறம் நிச்சயம் முற்றிலுமாக மாறும். நல்லதே நடக்கட்டும்.


***** இந்தப்பதிவு ரஜினி ரசிகர்கள், அரசியல் அவதானிகள் தவிர்த்து பலருக்கும் இப்போது நகைப்பாக இருக்கலாம், ஆனால் கட்சி அறிவித்த பிற்பாடும், தேர்தல் காலகட்டத்திலும், தேர்தல் முடிவின் பின்பும் இது பெரும்பாலும் ஒத்துப்போகலாம். காத்திருப்போம்.******

இப்படித்தான் 2009 ஆம் ஆண்டு எழுதிய பதிவு 2012 இல் மீள்பதிவு செய்யப்பட்டது, இப்போது பெரிதும் ஒத்துப் போகிறது. ரஜினியும் அரசியலும்!!நன்றி வணக்கம்.
32 வாசகர் எண்ணங்கள்:

rajesh said...

சூப்பர் ப்ரோ 🙌👏👏👏🙏🙏🙏

jeyaseelan said...

One of the excellent article... Semma :) :)

Unknown said...

Love Bro 🙏 Konja Neram Kuda Ivalo Peasura Padikirom nu Thonave Ila Kalakitinga

Unknown said...

உண்மை
அருமை

sloga nathan said...

சூப்பர்
அருமை..

valluvan said...

Woww...sema article....ithu kandipaga saathiyam...

கடந்துபோனவை கடந்துபோனவை said...

தெளிவான பதிவு வாழ்த்துகள் நண்பரே!

The Boss said...

Nice article ...it's a must read for TN ppl 😎

siva amudhan said...

👌👌👌

Unknown said...

Super and true

Jai Kumar said...

அருமை

arul said...

super brother

Unknown said...

Superb bro.. After so long years read such a big article with such an intrest. Great points on the past happenings nd good analysis on the future prediction.. 👍

Vijayanand Balu said...

Really clear analysis. Amazing

Vijayanand Balu said...

Excellent analysis ji Thalaivar rocks

vasan pakkam said...

Really amazing article

Peraveen said...

Sema . Awesome bro...

Thiru Murugan said...

Amazing

vksamy ba said...

என்ன ஒரு பதிவு ஆஹா..நிஜம் கண் முன் வந்து போவது போல் உள்ளது.Amazing 👌

Unknown said...

Inthu ponra nermaiyana pathivugal ethavathu oru magazine moolamaga Ella makkalukkum kidaikka pera seiya vendum....intha athivil magavum unmai thalaivarum or media start pannuvathu nallathu....

Vijay Pillai said...

Ithu ponra nermaiyana pathivugal Ella makkalukkum poi Sera vendum...

muthu said...

Amazing bro

சமுத்ரன் said...

Kudoa to the writer. Nailed things to the core... triple applause.


BTW, Why the date of political announcement is written wrongly as 2017 மார்கழி 31? It's Dec 31st.

மெய்யப்பன் பிரசாத் said...

இது வெரும் கட்டுரை அல்ல வருங்காலத்தின் நிதர்சன கணிப்பு.வாழ்த்துக்கள்

கிரி said...

ஜீவதர்சன் தலைவர் சொல்ற மாதிரி.. வந்துட்டேன்னு சொல்லு மாதிரி இருக்கு கட்டுரை :-) கலக்கிட்டீங்க!

"ஒரு கட்டடம் கட்டப்படும்போது வெளியே தெரியாமல் மறைப்பை காட்டுவார்கள், வீதியால் போய் வருபவனுக்கு "என்னடா இது இப்படியே இருக்கு" என்றிருக்கும்,"

இந்த உதாரணம் செம. தலைவர் அறிவிக்கும் நாள் அதிரடியா இருக்கும். இது குறித்து எழுதணும்.. கொஞ்ச நாள் போகட்டும்.

அப்புறம் ராதாகிருஷ்ணா சாலை சம்பவம் உண்மையில் நடக்கவில்லை. தன்னுடைய "அந்த ஐந்து விழாக்கள்" துக்ளக் கட்டுரையில் கூறி இருக்கிறார். இது ஊடகங்களே மிகைப்படுத்தி எழுதி விட்டார்கள் என்று குறிப்பிட்டு இருக்கிறார் ஆனாலும் சுற்றிக்கொண்டே இருக்கிறது.

கடவுள் அல்லது இயற்கை நியதிகளுக்கு அமைய இந்த மாற்றம் ஏற்பட்டே ஆகவேண்டும், ஏற்படும் என்று நம்பலாம்"

இதையே நானும் நம்புகிறேன். சரியாக கூறி இருக்கீங்க.

தலைவர் கலக்குவார். அறிவிப்புக்கு பிறகு எப்படி நடந்து கொள்வார் என்பது தான் என்னுடைய எதிர்பார்ப்பு.

Bala Ji said...

Best analysis.

sri s said...

Dear Friend
The Article was well written..kudos...
The way you have analysed the strength of our own "people leader" stands out...once again my heartful thanks to you.I never used to post any reply in any media.This is the first time ....bcoz of your meaningful article...

அ.ஜீவதர்ஷன் said...

@கிரி

நன்றி ப்ரோ, இராதாகிருஷனன் சாலை சம்பவம் ரஜினி அங்கீகாரத்துடன் பாலச்சந்தர், கமல், கருணாநிதி, விஜயகாந்த்,ஏவிஎம் சரவணன் போன்றோர் முன்னுரையுடன் வெளிவந்த காயத்ரி ஸ்ரீகாந்த் எழுதிய "ரஜினி பேரக் கேட்டாலே" (THE NAME IS RAJNIKANTH) biographyல் உள்ளது ப்ரோ. பக்கம் (144 - 147)

muthu said...

Very nice article,hope everything will come true... kudos

கிரி said...

தலைவர் இப்புத்தகத்தை முழுவதும் படித்தாரா என்று தெரியவில்லை.

அவர் எழுதிய தொடரில்

“போக்குவரத்து நெரிசலில் 30 நிமிடங்கள் காத்திருந்தது உண்மை தான் ஆனால், பத்திரிகைகள் கூறியது போல நான் நடந்தே எல்லாம் வீட்டுக்குச் செல்லவில்லை, காவலர்கள் என்னை மட்டும் போகச்சொல்லி விட்டார்கள் என்பதில் உண்மையில்லை” என்று குறிப்பிட்டு இருக்கிறார்.

இந்த காயத்ரி பிரபலமானதே தலைவரால் தான் ஆனால், லிங்கா படம் முதல் நாளே படத்தை கிண்டலடித்து பதிவிட்டார். ரசிகர்கள் பலர் செம்ம கடுப்பாகி விட்டார்கள்.

இவரெல்லாம் நன்றி மறந்தவர். இவர் பலரிடையே பிரபலமாக தலைவர் புத்தகம் எழுதியதால் தான் ஆனால், அதையெல்லாம் வேலை முடிந்த பிறகு குப்பையில் போட்டு விட்டு சுயநலமாக நடந்து கொண்டார்.

இவரை இனி இவர் புத்தகத்தை எந்த பதிவிலும் குறிப்பிடாதீர்கள். தகுதியே இல்லாதவர்.

arun said...

Good Job Bro. A Very Good Article... worth to read. everyone should read without fail

Sathiya Balan M said...

அருமையான பதிவு.
மிகவும் நன்று ...
Tamil News | Latest Tamil News | Tamil Newspaper | Kollywood News

Post a Comment

"கருத்துக்கள், நிறைகுறைகள், திட்டுக்கள், பாராட்டுக்கள் போன்றவற்றை கூற விரும்புபவர்கள் கீழுள்ள பின்னூட்ட பெட்டியில் பின்னூட்டலாம்; பதிவுகளை வாசிக்காமல் இடப்படும் டெம்பிளேட் பின்னூட்டங்கள் வேண்டாம் நண்பர்களே."

*******************

வடை, வாழைப்பழம், சூப்பர், கலக்கல் என மொய் வைக்க வரும் நண்பர்களுக்கு; நான் யாருக்கும் பதிலுக்கு மொய் வைக்க மாட்டேன்.(இதனால் ஏற்ப்படும் தர்ம சங்கடத்திற்கு வருந்துகின்றேன்)