Wednesday, December 10, 2014

லிங்கா வெளியீடும் 'தலைவர்' ரஜினிகாந்த் பிறந்த நாளும்!!

(Photo Credit - Behindwoods.com)


12/12/14 -: ரஜினி ரசிகர்களுக்கு இதுவொரு இரட்டிப்பு மகிழ்ச்சிக்குரிய நாள். 4 வருடங்களுக்குப் பின்னர் ஒரு முழுமையான ரஜினி படம் வெளியாகிறது, மற்றும் 40 வருட ரஜினியின் சினிமா வாழ்க்கையில்; முதல் முறையாக ரஜினியின் பிறந்தநாள் அன்று ஒரு ரஜினி படம் வெளியாகின்றது. மேலும் மரணத்தின் வாயில்வரை சென்று மீண்ட ரஜினியின் மறுபிறவியின் முதல் லைவ் ஆக்ஷன் திரைப்படம்.

இது ரசிகர்களுக்கு மிகவும் மகிழ்சிகரமான ஒரு தருணம். உலகம் முழுக்க இந்த நாளை ரஜினி ரசிகர்கள் வெகுவாக கொண்டாடத் திட்டமிட்டுள்ளனர். அந்தவகையில் இலங்கையின் யாழ்ப்பாணத்தில் இந்த நாளைக் கொண்டாட ரசிகர்களாகிய நாம் முடிவெடுத்துள்ளோம். அண்ணளவாக 6 சதுர அடி அளவிலான 15 kg வரையான தலைவர் படம் பொறித்த கேக் ஒன்றினை வெட்டி எமது மகிழ்ச்சியை வெளிக்காட்ட உள்ளோம், கூடவே இனிப்புக்களும் வழங்கப்படும். இது முழுக்க முழுக்க எமது மகிழ்ச்சிக்கான ஒரு கொண்டாட்டம் மட்டுமே.

இந்த இடத்தில் சில விடயங்களைத் தெளிவு படுத்த வேண்டும். காரணம், இங்கு இதை வைத்து பிரச்சாரம்/வியாபாரம்/விளம்பரம்/விமர்சனம் செய்ய பலரும் காத்திருக்கலாம்! அவர்களுக்கான ஒரு முன்னெச்சரிக்கை விளக்கமே இந்தப் பதிவு.


இதுவொரு ஒருநாள் கொண்டாட்டம் மட்டுமே, இந்தக் கொண்ட்டாட்டத்தை எமது சொந்த விருப்பத்தில் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் கொண்டாடுகின்றோம். இந்த கொண்டாட்டத்திற்கு காரணம் என்று ஒன்று இருக்கும் என்றால் அது ஒன்றே ஒன்றுதான்; அது எம்மை நான்கு தசாப்தமாக மகிழ்வித்த, எங்கள் துக்கமான நேரங்களில் தன் திரைப்படங்கள் மூலம் மகிழ்ச்சியையும், புத்துணர்வையும் கொடுத்த ஒரு கலைஞனுக்கு கொடுக்கும் மரியாதை/நன்றி.

ஊடகங்கள் -: மக்கள் மத்தியில் எங்கள் கொண்டாட்டத்திற்கு எதிர்வினை கொடுப்பதில் இவர்களுக்குத்தான் முதலிடம். ஒரு விடயத்தை நாம் இங்கு தெளிவாக தங்களுக்கு சொல்லிக்கொள்ள விரும்புகின்றோம். 99.9 விழுக்காடு ஊடகங்களும் இலாப நோக்கில் இயங்குபவை என்பதை சொல்லித் தெரியவேண்டிய அவசியமில்லை. ஆனால் எமது இந்தக் கொண்டாட்டம் எந்த இலாப நோக்கமும் இல்லாதது. நாம் இங்கு யாரிடமும் பணம் வாங்கிவிட்டு இந்தக் கொண்டாட்டத்தைக் கொண்டாடவில்லை, மற்றும் இந்தக் கொண்டாட்டத்தால் எமக்கு மகிழ்ச்சி தவிர வேறேதும் கிடைக்கப் போவதில்லை. சினிமா விளம்பரம், விமர்சனம், செய்திகளால் கல்லாக் கட்டிவிட்டு தயவு செய்து எம்மை விமர்சிக்க கிளம்பாதீர்கள்!.

அரசியல்வாதிகள் :- சமூகத்தின் மீதான அக்கறை என்கிற முலாம்பூசி, எமது கொண்டாட்டங்களை வாக்காக மாற்ற யாரவது அரசியல் பிரபலம் முயற்சி செய்தால்; எதையாவது எதிர்பார்த்து உங்கள் பின்னால் சுற்றும் தொண்டர்களையும் 'லக்ஸரி' வாகனங்களையும் விட்டுவிட்டு தயவு செய்து தனியாக வாருங்கள் உங்களுக்கான விளக்கத்தை தருகின்றோம்.

சமூக ஆர்வலர்கள் :- மதுபான சாலைகளில் நாளுக்கு பல மில்லியன் ரூபாய் வியாபாரம் சூடு பறக்கிறது, தினமும் மில்லியன் கணக்கில் சிகரட் விற்கப்படுகிறது, ஆடம்பர ஹோட்டல்களில் தினமும் மில்லியன் கணக்கில் வியாபாரம் நடக்கிறது, அரசியல்வாதிகள், தொழிலதிபர்களிடத்தில் கோடிகளில் வாகனங்கள் சர்வசாதாரணமாகிவிட்டது, ஆடம்பர ஆடைகள் தினமும் மில்லியன் அளவில் விற்கப்படுகின்றது!! இவற்றுடன் ஒப்பிடுகையில் எமது இந்த செலவு பாலைவனத்து ஓர் மண் துணிக்கை போன்றது.

மற்றும் இந்தக் கொண்டாட்டங்கள் ஒன்றும் எமக்கு புதிதல்ல, எம்.ஜி.ஆர் காலத்தில் கொண்டாட்டப்பட்ட கொண்டாட்டத்துடன் ஒப்பிடுகையில் இது ஒன்றுமே இல்லை. சமூகத்தில் இன்றிருக்கும் பல எதிர்மறை தாக்கங்களுடன் ஒப்பிடுகையில் எமது இந்தக் கொண்டாட்டங்களால் எந்த விதத்திலும் சமூகத்தின் மதிப்புக் கெட்டுப் போய்விடப் போவதுமில்லை. வேகமாக ஒட்டிக்கொண்டிருக்கும் எமது வாழ்க்கைச் சக்கரத்தில் சற்று இளைப்பாறி, வாழ்க்கையினை அழகாக்கி பாதுகாக்க எமக்கு கிடைக்கும் ஒருசில தருணங்களில் இந்தச் சந்தர்ப்பமும் ஒன்று, அவ்வளவுதான்.

சமூகத்தின் மீதான எமது தேவையும் அவசியமும் எது என்பதையும் நாம் அறிவோம். அவற்றைச் செய்துகொண்டுதான் இருக்கின்றோம். மற்றும் அன்றைய சில மணி நேர கொண்டாட்டத்தின் பின்னர் நாம் எமது வழமையான வாழ்க்கைக்கு திரும்பிவிடுவோம்; ஆனால் எம்மை வைத்து நீங்கள்தான் ஒருசில நாட்களுக்கு சமூக காவலர்கள் போல் வீணான நேரங்களை செலவழிக்கப் போகின்றீர்கள்.

பாலுக்காக எத்தனை குழந்தைகள் காத்திருக்க கட்டவுட்டுக்கு பால் ஊற்றுகின்றனரே என்று சில நூறு ரூபாய் பெறுமதியான பாலுக்காக அங்கலாய்க்கும் சமூக அறிவு; பல கோடி ரூபாய்களுக்கு விற்கப்படும் மது/புகைப் பொருட்களின் பணத்தில் பாலாறே ஒட வைக்கலாம் என சிந்திப்பதில்லை. வருடத்தில் ஓர்நாள் இந்த சில நூறு ரூபாய்களை மகிழ்ச்சிக்காக செலவழிக்கும் நடுத்தட்டு/கீழ்த்தட்டு மக்களிடம் நியாயம் பேசும் இவர்கள்; தினமும் ஆடம்பர வாகனங்களின் பெற்றோலுக்கு மட்டும் ஆயிரங்களில் செலவழிக்கும் மேல்தட்டு மக்களிடம் நியாயம் பேசுவதில்லை.

தலைவர் -: இந்தச் சொல்லிற்கு அர்த்தம் கற்பிக்க சிலர் வருவார்கள். ஒரு நாட்டின் தலைவர் ஜனாதிபதி/பிரதமர் என்றால்; அவர் அந்த நாட்டின் கிரிக்கட் அணி, உதை பந்து அணி, வலைப்பந்து அணி, தடகள அணி, கரப்பந்து அணி என அனைத்துக்கும் தலைவர் அல்ல; தலைவர் என்னும் சொல் களத்துக்கு களம் மாறுபடும். மற்றும் எமக்கு பிடித்தமான, நாம் பின்பற்றும், நாம் கற்றுக்கொண்ட ஒருவரை அன்புடன் விழிக்கவும் தலைவர் என்கின்ற சொல்லைப் பயன்படுத்துகின்றோம். புட்டுக்கும் இடியப்பத்திற்குமான வித்தியாசம் எமக்குத் தெரியும், ஆகவே இந்த விடயத்தில் பாடம் எடுக்கும் எண்ணமிருந்தால் தயவு செய்து கைவிடுங்கள்.

மேலும் ஏதாவது சந்தேகமிருந்தால் கார்கில்ஸ் திரையங்கில் முதற் காட்சி முடிந்ததும் விளக்கமளிக்க தயாராக உள்ளோம்.

இறுதியாக....

12/12/14 தலைவர் மற்றும் லிங்கா விழாவை கொண்டாட விரும்பும் ரசிகர்கள் அனைவரையும் வருக வருக என வரவேற்கின்றோம் :-)

0 வாசகர் எண்ணங்கள்:

Post a Comment

"கருத்துக்கள், நிறைகுறைகள், திட்டுக்கள், பாராட்டுக்கள் போன்றவற்றை கூற விரும்புபவர்கள் கீழுள்ள பின்னூட்ட பெட்டியில் பின்னூட்டலாம்; பதிவுகளை வாசிக்காமல் இடப்படும் டெம்பிளேட் பின்னூட்டங்கள் வேண்டாம் நண்பர்களே."

*******************

வடை, வாழைப்பழம், சூப்பர், கலக்கல் என மொய் வைக்க வரும் நண்பர்களுக்கு; நான் யாருக்கும் பதிலுக்கு மொய் வைக்க மாட்டேன்.(இதனால் ஏற்ப்படும் தர்ம சங்கடத்திற்கு வருந்துகின்றேன்)