Saturday, March 23, 2013

காமத்தை கடந்த  சமூகத்தின் பத்தினி!!! (நிஜத்தை தழுவிய கதை)இதை வயது வந்தவருக்கான கதை என்று ஒதுக்க முடியாது, இதை புரியும் பக்குவம் இருக்கும் யாரும் படிக்கலாம்!

தயாபரன்; கருகிய சருமமும் சற்று பருமனான உடலமைப்பும் கொண்ட திருமணம் ஆகாத  முப்பத்தியைந்து வயதுடைய ஒரு தனியார்  நிறுவனத்தின் விற்பனை  பிரதிநிதி, அந்த கிராமத்தின் தீராத விளையாட்டுப்பிள்ளை. அவனுக்கு திருமணத்தில் கொஞ்சமும்  ஈடுபாடில்லை; காரணம், அவனுக்கு ஹோட்டல்  சாப்பாடுதான் பிரியம். அவன் தூண்டிலில் சிக்கும் பெண்களை மட்டுமே அவன் விரும்புவான், விலைபோகும் பெண்களை  அவனுக்குப்  பிடிக்காது. இதில் குறிப்பிட வேண்டிய முக்கிய விடயம் அவன் நாடும் பெண்களில் பெரும்பாலானவர்கள் திருமணமானவர்கள் என்பதுதான். காரணம்கூட  வழமையானதுதான்; வயிற்றில் பாரம் ஏறினாலும் கவலைப்படத் தேவையில்லை. ஆனால் இவன் எந்தப் பெண்ணையும் ஆசைகாட்டி மோசம் செய்ததில்லை; குறிப்பிட்ட பெண்ணிற்கு இவனது தேவை என்ன என்பது  முழுமையாகப்  புரிந்துதான் இவனுடன் செல்கின்றார்கள்!

கவிதா; பார்ப்பதற்கு ஈர்ப்பான  முப்பத்தியாறு வயதிலும் இளமை குறையாத  குடும்பப் பெண்,  இரண்டு பெண் குழந்தைகளுக்கு அம்மா, ஒரு வியாபாரியின் மனைவி. சிரித்துப் பேசினாலும் எப்போதும் எதையோ பறிகொடுத்தது போன்ற முகம், ஒரே வீட்டில் இருப்பினும் இறுதி ஐந்து ஆண்டுகளில் அவள் கணவனிடம் பேசி எவரும் கண்டதில்லை.  ஆறாவதும், நான்காவதும்   படிக்கும் இரு பெண் பிள்ளைகள்தான் அவளது உலகம்.  பிள்ளைகள் தவிர்த்து எப்போதாவாது வந்துவிட்டு செல்லும் சகோதர்களும், ஒருசில நண்பிகளும்தான் இவளுக்கு  பிடித்தமான  உலகம்; கூடவே அப்பப்போ  பக்கத்து வீட்டு தர்சினி அக்காவும்.

விற்பனை வேலையாய் தயாபரன் நகருக்கு வரும் போதெல்லாம் தன் அக்கா தர்சினியின்  வீட்டுக்கு வந்துபோவது வழக்கம்; வாரத்தில்  குறைந்தது மூன்று தடவையேனும்  அக்கா வீட்டிற்கு  வருவது அவனது வழமை. அத்தான் பல ஆண்டுகளாக வெளிநாட்டில் வேலை பார்ப்பதால்; ஆண்  துணையில்லாத வீடு என்று யாரும் எண்ணிவிடக் கூடாதென்பதுதான் அடிக்கடி தயாபரன் அக்கா வீட்டிற்கு வருவதற்கான  பிரதான காரணம். வரும் நேரங்களில் அக்கா வீட்டிற்கு தேவையான உணவுப் பொருட்கள்  முதல் அத்தியாவசியமான அனைத்து பொருட்களையும்  வாங்கிக் கொடுப்பது வழக்கம்; கணக்கு வழக்குகளை அக்கா கேட்பதில்லை என்பதால் சிகரெட், வெற்றிலை போன்ற தனது சில்லறை தேவைகளையும்  அத்தானின் பணத்திலேயே ஈடுகட்டிவிடுவான்.

அக்கா வீட்டுக்கு வரும் சமயங்களில் ஒருசில தடவைகள் அக்காவுடன் பேசிக் கொண்டிருக்கும் கவிதாவை தயாபரன் கண்டிருந்தாலும்; அவள்மீது ஈடுபாடு காட்டவில்லை. காரணம்  தன்னை கண்டதும் குனிந்ததலை நிமிராமல் அக்காவிடம் விடைபெறும் அவளது சுபாவம்; அவனுக்கு அவள் எட்டாக்கனி என்பதை உணர்த்தியிருந்தது. கூடவே  ஏதாவது ஏடாகூடம் பண்ணப்போக அக்காவிற்கு தெரியவந்தால் எனும் முன்னெச்சரிக்கையும் ஒரு காரணம். இந்நிலையில் ஒருநாள் மதிய நேரம் உணவிற்காக  அக்கா வீடிற்கு வந்திருந்தான் தயாபரன். வீடு பூட்டியிருந்தது, அக்கா எங்கு சென்றார் என்பது தெரியாமல் வீட்டு வராந்தாவில் நின்றுகொண்டிருந்த தயாபரனை ஒரு குரல் "இந்தாங்கோ... அக்கா தந்தவ, உங்களிட்டை குடுக்கசொன்னவ; சாப்பாடு மேசைல போட்டு மூடியிருக்காம், உங்களை  சாப்பிடட்டாம், தான் கோயிலால வர லேட்டாகுமாம்" என்று சொல்லி வீட்டுச் சாவியை கொடுத்தது; ஆம், அது கவிதாவேதான். 

தயாபரன் கைகளில் பதட்டத்துடன் தொலைபேசி; அதில் கவிதா கொடுத்த தொலைபேசி எண்ணை அழைப்பை ஏற்படுத்த தயார் நிலையில் வைத்திருந்தான். அவள் அழைப்பை ஏற்படுத்தச் சொன்ன நேரம் கடந்த பின்னரும்; பச்சைநிற அழைப்பு பொத்தானை அழுத்த துணிவில்லாமல் தயங்கியபடி நின்றிருந்தான் தயாபரன். இதுவே வேறு ஒருத்தி என்றால் இந்நேரம் அவனது வார்த்தைகள் ஜாலம் புரிந்துகொண்டிருந்திருக்கும். ஆனால் இவளோ  சாப்பிட்ட பின்னர்  தயாபரன் வீட்டைபூட்டி சாவியை  கொடுக்கும்போது சற்றும் எதிர்பாராமல் தொலைபேசி எண் குறிக்கப்பட்ட  கடதாசியை கொடுத்து "நாளை மாலை 3 மணிக்கு எனக்கு கோல் எடுங்கோ, பிளீஸ் யாரிட்டையும் சொல்லாதீங்கோ, உங்களை நான் நம்பிறன்" என்று சொல்லிவிட்டு தன் வீட்டினுள் சென்றுவிட்டாள்.

ஒருவழியாக தயாபரன் பச்சை நிற பொத்தானை அழுத்தினான், அழைப்பு சென்ற மறுகணமே தொடர்பு இணைக்கப்பட்டது; ஆம், கவிதா பச்சைப்  பொத்தானில்  கைவைத்தபடி  இருபது நிமிடங்களாக அவனுக்காக காத்துக் கொண்டிருந்திருந்தாள். தயங்கியபடி ஹலோ சொன்ன தயாபரனுக்கு அழுத்தமாக ஹலோ சொன்னாள்  கவிதா. பரஸ்பரம் நலம் விசாரித்த பின்னர் தயாபரன் பேச்சை ஆரம்பித்தான்;  "ஏன் திடீரென்று? என்னாச்சு? ஏதாவது உதவி செய்யணுமா?". பதிலுக்கு கவிதா "உதவியெல்லாம் இல்லை, ஏன்னு தெரியல, எதோ உங்ககிட்ட பேசணும்னு  தோணிச்சு. நேற்றல்ல; பல நாட்களாக தோணிச்சு, ஆனா  நேற்றுத்தான் தைரியமா  சொல்ல முடிஞ்சிது" என்றாள். 

அவள் திடீரென தன்னுடன் நெருக்கமாகுவதற்கான காரணத்தை அறிய ஆவல் இருப்பினும்;  அந்த நெருக்கம் கவிதாவை  தனக்கு கிடைக்கச் செய்யும் என்கின்ற  நம்பிக்கை  அவனுக்குள் ஏற்பட்டிருந்ததால் அதைப்பற்றி எதுவும் பேசாமல் அவளது வாயால் அவளது பிரச்சனையை சொல்லும் வரை காத்திருக்க முடிவெடுத்திருந்தான்.  முன்னர் அக்கா வீட்டில் காணும்போது குனிந்ததலை நிமிராமல் நகர்ந்தவள், இப்போது ஆக்கா வீட்டில் தயாபரன் குரல் கேட்கும் போதெல்லாம் ஏதாவதொரு சாக்கு சொல்லி அங்கு வந்து விடுகிறாள். பூமியை பார்த்தபடி தன்னை கடந்துசென்ற அவளது கண்களில் இப்போது சிறு வெட்கமும், உதட்டில் சிறு சிரிப்பையும் ஒவ்வொரு தடவையும்  தயாபரன் அவதானித்தான். 

தயாபரனுக்கு இவளை அடையலாம் என்கின்ற  நம்பிக்கை இப்போது ரொம்பவே அதிகரித்து விட்டது; தன் லீலையை வார்த்தைகளில் ஆரம்பிக்க திட்டிமிட்டிருந்தான் தயாபரன். ஒருநாள் மாலைநேரம் தன் கைபேசியில் இருந்து அழைப்பை ஏற்படுத்தி கவிதாவை தயார்ப்படுத்த தயாரானான்  தயாபரன். கவிதா ஆரம்பித்தாள் "தயாபரன் நான் உங்ககிட்ட இன்றைக்கு மனம் திறந்து சில விசயங்களை சொல்லப் போறேன்". தயாபரனுக்கு ஆர்வம்  முட்டியது, அவளே ஆரம்பிப்பதால் தன் வேலை சுலபமாகும் என்கின்ற எண்ணம் அவனுக்கு. அவர் ஆரம்பித்தாள், 30 நிமிடம் விடாமல் பேசினாள், பேச்சின் முடிவில் விம்மலை அடக்க முடியாமல் தொடர்பையும் துண்டித்தாள். தயாபரனுக்கு  என்ன சொல்வதென்று புரியவில்லை; எனினும் அவள் பேசியதில் இருந்து தனக்கு அவள் கிடைக்கும் நாள் தொலைவில் இல்லை என்பது மட்டும் புரிந்தது. ஆனாலும் அன்றிரவு முழுக்க தயாபரன் மனதில் மீண்டும் மீண்டும் கவிதாவில் பேச்சுத்தான் ஒலித்துக்  கொண்டிருந்தது.

கவிதாவிற்கு இருபத்திமூன்று  வயதில் தனேஷ் என்பவனுடன் திருமணம் நடைபெற்றது, முழுக்க முழுக்க பெற்றோரால் நிச்சயிக்கப்பட்ட திருமணம். வியபாரமானாலும் நல்ல வருமானம், நல்ல சிவப்பான மாப்பிளை, நல்ல குடும்பம் என பலவற்றை சொல்லி தமது சீதனத்துக்கு  கட்டுப்படியாகும் அளவுக்கு  ஒரு மாப்பிளையை பார்த்து கவிதாவிற்கு திருமணத்தை நடத்தியிருந்தனர் அவரது குடும்பத்தினர். பெற்றோர்களை  சகோதரர்களை முழுமையாக  நம்பும்  கவிதாவிற்கும்  இந்த திருமணம் முழுச் சம்மதம். திருமணமான சிலகாலம் குடும்ப வாழ்வு  மகிழ்ச்சியாக கழிந்தது. சில மாதங்கள் செல்லச் செல்ல கவிதாவை தனேஷ் நாடுவது குறைய ஆரம்பித்தது. இரண்டு ஆண்டுகளில் முதல் குழந்தை நித்யாவை பெற்றெடுத்த கவிதாவை ;எப்போதாவது ஒருமுறைதான் தனேஷ் கண்டுகொள்வான், அதுகூட கவிதாவின் ஈடுபாட்டால். 

நித்யா பிறந்து இரண்டாவது ஆண்டில், இரண்டாவது குழந்தை அஸ்வினி பிறந்ததிலிருந்து தனேஷ் கவிதாவின் கட்டிலைகூட  நெருங்குவதில்லை. சிறிய வீடுவேறு என்பதால் ஒரு அறையில் கவிதாவும் இரண்டு குழந்தைகளும்; மறு அறையில் தனேஷும் அவர்  வியாபார ஸ்தலத்தில் வேலை பார்ப்பவரும்  உறங்குவார்கள். அஸ்வினி பிறந்து சில மாதங்களின் பின்னர் கவிதாவே தன்னால் முடிந்தளவிற்கு கீழிறங்கி தனேஷை தன்  கட்டிலில் இணைக்க முயற்சித்தும், அது தோல்வியிலேயே முடிவடைந்தது. இருபத்தியேழு வயதில் அவளது இளமை அவளை வாட்டியது; ஆனாலும்   இரண்டு பிள்ளைகள், அதிலும் இரண்டும் பெண் பிள்ளைகள் என்பதால்தான் இனிமேல் போதுமென அவர் நினைக்கிறார்  என்று  நினைத்து தன்னைத் தானே  கட்டுப்படுத்த ஆரம்பித்தாள்  கவிதா. 

நாட்கள் பல கடந்தோடின, அடிக்கடி  உணரும் காமத்தீயை தன்னுள் போட்டு பொசிக்கிக் கொண்டிருந்தாள் கவிதா. ஒருநாள் இரவு தூக்கம் வரவில்லை, அவளை தனிமை உருக்கிக்கொண்டிருந்தது,  தாகம்  வேறு தொண்டையை வரட்டிக் கொண்டிருந்தது. எழுந்து தண்ணீர் குடித்துவிட்டு ஏக்கத்துடன் கணவனது அறை வாசலை  எட்டிப் பார்த்தாள்; தூக்குவாரிப்போட்டது கவிதாவிற்கு!!! கட்டிலில் கணவனும் அவரிடம் வேலைபார்க்கும் அந்த நடுத்தர வயதுக்காறரும் தம்நிலை அறியாக்  காமத் திருவிழாவை அரங்கேற்றிக் கொண்டிருந்தனர். அனைத்து உடற்க்  கலங்களும் சோர்வடைந்து, கண்களில் நீர் தாரை தாரையாக கொட்ட, பேச்சு வராமல் ஓடிச்சென்று தலையணையில்  தன்னை புதைத்து  அழுதபடி செய்வதறியாது உடைந்திருந்தாள் கவிதா.

செருப்பால் அடிக்கவேண்டும் என்கின்ற அளவுக்கு கோபம், காறித் துப்பவேண்டும் என்கின்ற  அளவுக்கு வெறுப்பு, கணவன் என்னும் பெயரில் இருந்த தனேஷ்; அவளது மனதில்  துரோகியைவிட பலமடங்கு தூரத்தில்  தூக்கி எறியப் பட்டிருந்தான். அன்றிரவு எதுவும் பேசவில்லை, காலையில் தனேஷ் வேலைக்கு கிளம்பும் பொது "எனக்கு உங்க  ரூமில நடக்கிற நாத்தம் எல்லாம் நேற்று  தெரிஞ்சிட்டுது, நீங்க இவளவு கேவலமான ஆளா இருப்பீங்க என்று நான் கனவிலும் நினைச்சுப் பார்க்கல; ஆனாலும் நான் இதை வெளியில் சொல்ல மாட்டன், சொன்னா எனக்கும்தான் கேவலம். ஆனலொன்று இன்னொருக்கா அந்த நாய் இந்த வீட்டுக்குள்ள கால் வச்சா  செருப்பால அடிப்பன், அவனை மட்டுமில்லை" என்று சொல்லிவிட்டு உள்ளே சென்றுவிட்டாள்.

அதிர்ந்து போனான் தனேஷ், வேகவேகமாக பைக்கை எடுத்துக்கொண்டு வீட்டைவிட்டு கிளம்பி விட்டான்; அன்றிரவு லேட்டாகத்தான் வீட்டுக்கு வந்தான். கவிதா முகத்தை பார்க்கும் அளவுக்கு அவனுக்கு தைரியமும், அவன் முகத்தை பார்க்கும் அளவுக்கு  கவிதாவுக்கு விருப்பமும் அறவே இல்லை. காலை வேலைக்கு சென்றால் மீண்டும் இரவு 10 மணிக்குத்தான் வீட்டுக்கு வருவான் தனேஷ். சமைத்து வைத்திருப்பதை போட்டு சாப்பிடுவிட்டு தூங்க போய்விடுவான். வீட்டில் நிற்கும் நேரங்களை பெரும்பாலும் தவிர்த்து வந்தான் அவனால்  கவிதாவை எதிர்கொள்ள முடியவில்லை. கவிதாவுக்கோ அவனை மன்னிக்கவோ அந்த சம்பவத்தை மறக்கவோ இயலவில்லை. இத்தனைக்கும் அந்த வேலையாள்  இன்னமும் தனேஷின் கடையில்தான் வேலை பார்க்கின்றான் என்பது கவிதாவுக்கு நன்கு தெரியும்.

ஆண்டுகள்  சில உருண்டோடி விட்டது; பிள்ளைகளுக்கும்  அம்மாவுக்கும் அப்பாவுக்கும் எதோ பிரச்சனை என்பது தெரியும். அப்பாவின் கவனிப்புக்  குறைவு அவர்களுக்கு  மனத் தாக்கத்தை உண்டாக்க தவறவில்லை, ஆனாலும் கவிதாவின் அன்பு அவர்களுக்கு உற்சாகத்தை கொடுத்தது. குழந்தைகள் பாடசாலை, டியூஷன் என்று செல்வதால்; சமையல்  தவிர்ந்த நேரங்கள் கவிதாவிற்கு தனிமை வாழ்வை வெறுமையாக்க  தொடங்கியது. மனசுவிட்டு பேச யாருமில்லாமல் தனக்குள்ளேயே புளுங்கிக் கொண்டிருந்தவளுக்கு தயாபரனின் மீது எதோ ஒருவித ஈடுபாடும் நம்பிக்கையும் பிறந்திருந்தது. அவனிடம் பேசிப் பழகாவிட்டாலும் எதோ ஒன்று அவனிடம் அவளை ஈர்த்தது. அவனிடம் பேச ஆரம்பித்து தன் மனச்  சுமைகளை இறக்கிவைக்க நினைத்தாள்; அதனை செய்தும் முடித்தாள்.

தயாபரன் மனதில் கவிதாவை  அடையலாம் என்கின்ற எண்ணம் ஆக்கிரமித்திருந்த நிலையில்; ஒருநாள் போதையில்லாமலேயே  போதையில் உள்ளவன்போல  கவிதாவிடம்  பேச்சை ஆரம்பித்தான். அவளது  உடற்பசியை தான் உணர்வதாகவும், அதை தான் போக்குவதாகவும் பேச்சை ஆரம்பித்தான். கவிதாவுக்குள் தணலாக இருந்த காமத்தை தீயாக்க தொடங்கினான், கவிதாவால்  அந்தத் தீயை கட்டுப்படுத்த முடியவில்லை. தயாபரனுடன் உடலாலும்  இணைய அவள் மனம் ஏங்கியது; ஆதனை தயாபரனும் அறிந்திருந்தான். அவள் வீட்டிலோ அக்காவின் வீட் டிலோ சாத்தியமில்லை என்பதால் வெளியில் எங்காவது அழைத்தான் தயாபரன். ஹோட்டல், ரூம் போன்ற பொது  இடங்கள் எவற்றுக்கும் செல்லும்  நிலையில் கவிதா இல்லை என்பதால்;  ஒருவழியாக தன்  நண்பன் ஒருவனின் அறையை பயன்படுத்தலாமென்று சொல்லி அவளை சம்மதிக்க வைத்தான்.

சம்மதம் சொன்னாலும் குழந்தைகள், தன் பிறந்தவீட்டு  குடும்ப கௌரவம், சமூகம் என பலவற்றை போட்டுக் குழப்பிய கவிதா ஒவ்வொரு வாரமும்  "அடுத்த வாரம், அடுத்த வாரம்" என்று சொல்லி தன் ஆசைத்தீயை தள்ளிப் போட்டுக்கொண்டே வந்தாள்; அவள் கேட்ட வாரக்கெடு  ஒருவழியாக குறைந்து நாட்களுக்கு வந்திருந்தது. தயாபரன் இத்தனை நாள் ஒரு பெண்ணுக்காக காத்திருந்ததில்லை!! அவனுக்கு அவனது இச்சைதான்   முதலிடம் என்றாலும்; கவிதாவையும் மகிழ்ச்சிப் படுத்தணும் என்கின்ற எண்ணமும் அவனுக்குள்ளே  இருந்தது. ஒரு வழியாக இருவரும் இணையும் அந்தநாளை உறுதிப்படித்திக் கொண்டாள்  கவிதா, மறுநாள் காலை பத்து மணிக்கு குறிப்பிட்ட  இடத்திலுள்ள குறிப்பிட்ட  வீட்டிற்கு கவிதா வரவேண்டும், அங்கு முன்னரே தயாபரன் காத்திருப்பான், இதை யாரும் சந்தேகிக்காமல் முடித்துக் கொள்ளலாம் என்பதுதான் அவர்களது திட்டம்.

இரவு 10 மணி  ஆயிற்று; வராந்தாவில் இருந்து தயாபரனுக்கு குறுந்தகவல் அனுப்பி தன்  வரவை உறுதிப்படுத்தினாள், மனதையும் திடப்படுத்திக்  கொண்டாள். ஒன்பது ஆண்டுகளாக அடக்கி வைத்திருந்த காமத்தீயை அணைக்கும் அந்த சங்கமத்தை நினைத்துப் பார்க்கவே அவளுக்கு சிலிர்ப்பாக இருந்தது. அதிகாலையில் நேரத்துடன்  எழுந்து சமைத்து முடித்துவிட்டு ஒன்பது மணிக்கெல்லாம் புறப்பட வேண்டும் என்பதால் கவிதா  தூங்கத  தயாரானாள். ஸ்திரமான மனதுடன் தண்ணீர் குடித்துவிட்டு கட்டிலில் கவிதா தலை சாய்க்கவும்; அருகில் படுத்திருந்த நித்யா அடிவயிறை  பிடித்தபடி "அம்மா, அடிவயிறு சரியா வலிக்கிது" என்று அந்தரப்பட்டபடி எழும்பவும் நேரம் சரியாக இருந்தது.

நித்யாவின் பருவ மாற்றம் கவிதாவின்  காமத்தை  அவளுக்குள்ளேயே நிரந்தரமாக புதைத்து விட்டது; தன்னிலையை தயாபரனிடம் விளக்கி தமக்குள்ளே இருந்த தொடர்புகளை முற்றாக துண்டிக்குமாறு கேட்டுக் கொண்டாள். தன்  இச்சை நிறைவேறாத போதும் கவிதாவை நிலையை உணர்ந்து அவளை விலக ஏமாற்றத்துடன் சம்மதித்தான் தயாபரன்; கூடவே அவளை பரிதாபமாக நினைத்து சஞ்சலப் பட்டுக்கொண்டான்  தயாபரன். ஆனால் பாவம்; பல ஆண்டுகளாக 'கூட' கணவன் இல்லாமல் கிட்டத்தட்ட  கவிதாவின்  வயதிலிருக்கும் தன் அக்காவிற்கும் அதே உணர்வும், காமமும் கட்டுப்படுத்த முடியாமல் இருக்கும் என்பதை அவன் நினைக்கவில்லை. யாரும் அறிந்துவிடக் கூடாது  எனப்  பயந்து பயந்து கட்டுக்கடங்கா தன் காமத்தை கரைசேர்க்க சுரேஷ் என்னும் வெளிநாட்டு பணம் மாற்றும் இளைஞனை அவனது அக்கா அப்பப்போ  இரகசிய  துணையாகக்  கொண்டிருப்பதையும் அவன் அறிந்திருக்கவில்லை!!.

முற்றும்......

கவிதாவை நினைத்து சஞ்சலப்படும்  தயாபரன் தன் அக்காவும் அதே போலத்தானே என்று நினைக்கவே இல்லை, காரணம்; தான் பிறந்த  குடும்பத்து  பெண்கள் என்றால் எதையும் தாங்கவேண்டும் / தாங்குவார்கள்  என்கின்ற  அவனையும்  அறியாமல் அவன் ஆழ்மனதில் ஆழ ஊடுருவியிருக்கும் நம்பிக்கை!!! இந்த நம்பிக்கையை உடைத்துவிடக் கூடாது என்பதற்காகத்தான் கவிதா போல பல பெண்கள் இன்னமும் காமத்தை தம்முள் போட்டு புதைத்துக் கொ'ல்'கின்றார்கள். அப்படியும் காமத்தை கட்டுப்படுத்த முடியாத தயாபரனின் அக்கா போன்றவர்கள்  சமூகம் சொல்லும் 'தப்பை' செய்கின்றார்கள்! இதற்கு முழுப் பொறுப்பும் கணவனும்,  திருமணம் செய்துவைத்த இருவரது  குடும்பத்தினரும்தான் என்றாலும்; ஒருநாள் அகப்பாட்டால் பழி என்னவோ பாவப்பட்ட அந்த பெண்ணிற்கு மட்டும்தான்!!!!

7 வாசகர் எண்ணங்கள்:

Anonymous said...

மிகவும் அவசியமான பதிவு, இது இலங்கை மட்டுமில்லை, உலகின் பிற்போக்கு சமூகங்கள் அனைத்தில் உள்ள பிரச்சனை. முதல் விடயம் கட்டாயத் திருமணத்தின் பின் விளைவுகள், பொருந்தா பாலியல் நாட்டமுடையோரை இணைக்கச் செய்யும் கொடுமை. இரண்டு ஒரு பாலின உறவுகளை அங்கீகாரிக்காமையால் எண்ணற்ற பெண்கள், ஆண்களின் வாழ்வு நாசமாய் போய்விடுது, அதனால் இரட்டை வாழ்வு வாழும் பரிதாப நிலை. மூன்று எளிதாக விவாகரத்து பெறவியலாத நிலை, சமூக கவுரவ அழுத்தங்கள், பெண்களுக்கு பொருளாதார சுதந்திரம் இல்லா நிலை, நான்கு திருமணமான பின் பணி நிமித்தமாய் பிரிந்து வாழ்தலால் ஏற்படும் பேரவலம், புவியியல் ரீதியாய் பிரிவதால் உடல் வேட்கையை வேறு நபரூடாக பெற வேண்டிய கட்டாயம். இங்கு யாரையும் குற்றப்படுத்த முடியாது சமூக மூடத்தனத்தால் சூழ்நிலை கைதியாக என்ன கொடுமை இது. :( பண்டைய இந்தியாவில் இருந்த பாலியல் சுதந்திரம், இலகுவான பன்மையான சமூகம் இன்றில்லை . :(

kk said...

அப்படியும் காமத்தை கட்டுப்படுத்த முடியாத தயாபரனின் அக்கா போன்றவர்கள் சமூகம் சொல்லும் 'தப்பை' செய்கின்றார்கள்! இதற்கு முழுப் பொறுப்பும் கணவனும், திருமணம் செய்துவைத்த இருவரது குடும்பத்தினரும்தான் என்றாலும்; ஒருநாள் அகப்பாட்டால் பழி என்னவோ பாவப்பட்ட அந்த பெண்ணிற்கு மட்டும்தான்!!!!/// ம்ம்ம் எதார்த்தம் இதுதான்...

ஓஜஸ் said...

நல்ல சிறுகதை

ஜீவன் சுப்பு said...

அனைவரும் அவசியம் வாசிக்க வேண்டிய பதிவு .

jgmlanka said...

அருமையான பதிவு.. பாராட்டுக்கள் சகோ. தனிமையில் வாடும் பெண்களின் பரிதாபமான நிலையை எழுத்துக்களில் வடித்திருக்கிறீர்கள். இது சமூக விளிப்புணர்ச்சியைத் தூண்டும் பதிவு. ஆண்கள் மட்டுமன்றி பெண்களும் இந்த விடயத்தில் விழிப்போடு இருக்க வேண்டும். கணவனைப் பணத்துக்காக, குடும்ப கஸ்ரத்துக்காக என்று.. பெரிய தியாக மனப்பான்மையோடு வெளிநாட்டுக்கு அனுப்பி வைத்து விட்டு, பின்னர் தான் அதனால் வரும் துன்பங்களைப் பற்றி அறிந்து கொள்கிறார்கள். அப்பொழுது வெள்ளம் தலைக்குமேல் போயிருக்கும். கணவனைத் திரும்ப அழைக்க முடியாத சூழ்நிலை... அது போல் தான், வெளிநாட்டு மாப்பிள்ளை என்றதும் எதுவும் யோசிக்காமல் திருமணத்துக்கு சம்மதித்துவிட்டு, சிங்கப்பூர், மலேசியா (இலங்கையர்கள் இந்தியாவைத் தெரிந்தெடுக்கிறார்கள்) என்று எங்கோ ஒரு நாட்டில் சந்தித்து திருமணம் செய்து கொள்கிறார்கள். குறைந்தது 30 நாட்கள் தாம்பத்தியத்தின் பின் கணாவன் திரும்ப வெளிநாடு போய் விட, பின்னர் விசாவுக்காக பல மாதங்கள், பல வருடங்களாகத் தனிமையில் காத்திருக்கிறார்கள்லிது எவ்வளாவு பெரிய கொடுமை என்பதை அவர்களால் மட்டுமே புரிந்து கொள்ள முடியும். இத்தகைய அருமையான பதிவுக்கு என் பாராட்டுக்களும் நன்றிகளும்...

kaanal said...

நல்ல கருத்து
பெண்கள் சமூகம் தினம் சந்திக்கும் அவலங்களில் இதுவும் ஒன்று தயாபரன் போன்ற வேட்டை நாய்களும் தினேஷ் போன்ற கையாலகாத நாய்களும் சமூகம் பற்றி சிந்திப்பது இல்லை

miruthulyakannan said...

நல்ல கருத்தை சொல்லும் கதை...

Post a Comment

"கருத்துக்கள், நிறைகுறைகள், திட்டுக்கள், பாராட்டுக்கள் போன்றவற்றை கூற விரும்புபவர்கள் கீழுள்ள பின்னூட்ட பெட்டியில் பின்னூட்டலாம்; பதிவுகளை வாசிக்காமல் இடப்படும் டெம்பிளேட் பின்னூட்டங்கள் வேண்டாம் நண்பர்களே."

*******************

வடை, வாழைப்பழம், சூப்பர், கலக்கல் என மொய் வைக்க வரும் நண்பர்களுக்கு; நான் யாருக்கும் பதிலுக்கு மொய் வைக்க மாட்டேன்.(இதனால் ஏற்ப்படும் தர்ம சங்கடத்திற்கு வருந்துகின்றேன்)